New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பிராமண நிலையை அடைந்த மன்னன் வீதஹவ்யன்!


Guru

Status: Offline
Posts: 24778
Date:
பிராமண நிலையை அடைந்த மன்னன் வீதஹவ்யன்!
Permalink  
 


பிராமண நிலையை அடைந்த மன்னன் வீதஹவ்யன்! - அநுசாஸனபர்வம் பகுதி – 30

 

Brahmanahood attained by King Vitahavya! | Anusasana-Parva-Section-30 | Mahabharata In Tamil

(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 30)

https://mahabharatham.arasan.info/2019/03/Mahabharatha-Anusasana-Parva-Section-30.html?fbclid=IwAR2omRQlPetIOtS5KCuYJbJ_RjHLeY1e4dSOGe86MFRudI-rR9w8TufIRP0
பதிவின் சுருக்கம் : வத்ஸ நாட்டு மன்னன் வீதஹவ்யன் பிராமண நிலை அடைந்த வரலாறு; வத்ஸ நாட்டு வீதஹவ்யனின் முன்னோர்கள்; காசி நாட்டு பிரதர்த்தனனின் முன்னோர்கள்; இரு நாட்டுக்கும் இருந்த பகை; வத்ஸர்களால் பீடிக்கப்பட்ட காசி; வீதஹவ்யனை வீழ்த்திய பிரதர்த்தனன்; பிருகுவிடம் தஞ்சமடைந்த வீதஹவ்யன்; அவனைத் தேடி வந்த பிரதர்த்தனன்; வீதஹவ்யன் பிராமணனான பிறகு அவனுக்கு உண்டான வழித்தோன்றல்களின் பட்டியல்...


%25E0%25AE%25AE%25E0%25AE%25A9%25E0%25AF
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! குரு குலத்தைத் தழைக்கச் செய்பவரே, இந்தக் கதையை நான் கேட்டிருக்கிறேன். ஓ! நாநயமிக்க மனிதர்களில் முதன்மையானவரே, பிராமண நிலையானது அடைவதற்கு மிக அரிதானது என்று நீர் சொல்கிறீர்.(1) எனினும், பழங்காலத்தில் விஷ்வாமித்திரரால் பிராமண நிலை அடையப்பட்டதாகக் கேள்விப்படுகிறோம். எனினும், ஓ! மனிதர்களில் சிறந்தவரே, அந்நிலை அடையப்பட இயலாதது என எங்களுக்கு நீர் சொல்கிறீர்.(2) பழங்காலத்தில் மன்னன் வீதஹவ்யன்பிராமண நிலையை அடைவதில் வென்றான் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஓ! பலமிக்கவரே, ஓ! கங்கையின் மைந்தரே, மன்னன் வீதஹவ்யன் மேன்மையடைந்த கதையை நான் கேட்க விரும்புகிறேன்.(3) அந்த மன்னர்களில் சிறந்தவன், பிராமண நிலை அடைவதில் எந்தச் செயல்களின் மூலம் வென்றான்? (பெரும்பலம் கொண்ட எவரிடம் இருந்தாவது அடையப்பட்ட) ஏதாவது வரத்தின் மூலமோ, தவ அறத்தின் மூலமோ அது நடந்ததா? அனைத்தையும் எனக்குச் சொல்வதே உமக்குத் தகும்" என்று கேட்டான்.(4)
 


பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! ஏகாதிபதி, பெரும் புகழைக் கொண்ட அரசமுனி வீதஹவ்யன், அடைதற்கரிதானதும், உலகில் உள்ள அனைவராலும் உயர்வாக மதிக்கப்படுவதுமான பிராமண நிலையை அடைவதில் பழங்காலத்தில் வென்றான்.(5) பழங்காலத்தில் உயர் ஆன்ம மனு தன் குடிமக்களை நீதியுடன் ஆண்டுக் கொண்டிருந்த போது, அறம் சார்ந்த ஆன்மா கொண்டவனும், சர்யாதி என்ற பெயரில் கொண்டாடப்பட்டவனுமான ஒரு மகனை அடைந்தார்.(6) ஓ! ஏகாதிபதி அந்தச் சர்யாதியின் குலத்தில் ஹைஹயன் மற்றும் தாலஜங்கன் என்ற இரு மன்னர்கள் பிறந்தனர். ஓ! வெற்றிமிக்க மன்னர்களில் முதன்மையானவனே, அந்த இருவரும் வத்ஸ மகன்களாக {வத்ஸ நாட்டைச் சார்ந்தவர்களாக} இருந்தனர்[1]. ஓ! ஏகாதிபதி ஹைஹயனுக்குப் பத்து மனைவியர் இருந்தனர். ஓ! பாரதா, அவன் புறமுதுகிடாத வீரர்களான நூறு மகன்களை அவர்களிடம் {தன் மனைவிகளிடம்} பெற்றான்.(8) அவர்கள் அனைவரும் குணத்திலும் ஆற்றலிலும் ஒத்தவர்களாக இருந்தனர். அவர்கள் அனைவரும் பெரும்பலம் கொண்டவர்களாகவும், போரில் பெருந்திறம் பெற்றவர்களாகவும் இருந்தனர். அவர்கள் அனைவரும் வேதங்களையும், ஆயுத அறிவியலையும் முற்றாகக் கற்றனர்.(9)
 
[1] கும்பகோணம் பதிப்பில், "ப்ரஜைகளைத் தர்மமாகரக்ஷித்த மஹாத்மாவான மனுவுக்குச் சர்யாதியென்று பெயர் பெற்றவனும் தர்மத்தில் ஊக்கமுள்ளவனுமான ஒரு புத்ரன் இருந்தான். ஜயிப்பவரிற்சிறந்த அரசனே, அவன் வம்சத்தில் ஹைஹயன் தாலஜங்கனென்னும் இரண்டு அரசர்கள் வத்ஸ தேசத்திலிருந்தனர்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போன்றே இருக்கிறது.
 
ஓ! ஏகாதிபதி, காசியில் திவோதாசனின் பாட்டனான ஒரு மன்னன் இருந்தான். வெற்றிமிக்க மனிதர்களில் முதன்மையான அவன் ஹர்யஸ்வன் என்ற பெயரால் அறியப்பட்டான்[2]. ஓ! மனிதர்களின் தலைவா (வீதஹவ்யன் என்ற வேறு பெயரிலும் அறியப்பட்டிருந்த) மன்னன் ஹைஹயன், காசி நாட்டிற்கு எதிராகப் படையெடுத்து, கங்கை மற்றும் யமுனை ஆறுகளுக்கிடையில் கிடக்கும் அந்நாட்டிற்குச் சென்று மன்னன் ஹர்யஸ்வனுடன் போரிட்டு அவனைக் கொன்றான்.(11) இவ்வழியில் மன்னன் ஹர்யஸ்வனைக் கொன்ற பிறகு, பெரும் தேர்வீரர்களான ஹைஹயனின் மகன்கள் வத்சர்களின் நாட்டில் உள்ள இனிமையான தங்கள் நகரத்திற்கு அச்சமில்லாமல் திரும்பிச் சென்றனர்.(12) அதே வேளையில், காந்தியில் தேவனைப் போலத் தெரிபவனும், இரண்டாம் நீதிதேவன் போல இருந்தவனும், ஹர்யஸ்வதனின் மகனுமான சுதேவன், காசியின் அரியணையில் அதன் ஆட்சியாளனாக நிறுவப்பட்டான்.(13) காசிக்கு மகிழ்ச்சியை அளிப்பவனான அந்த அற ஆன்மா கொண்ட இளவரசன் தன் நாட்டைச் சில காலம் ஆண்டு வந்தான். அப்போது வீதஹவ்யனின் நூறு மகன்களும் மீண்டும் அவனது ஆட்சிப்பகுதிக்குள் படையெடுத்து வந்து, போரில் அவனை வீழ்த்தினார்கள்.(14)
 
[2] உத்யோக பர்வத்தின் 115ம் பகுதியில் ஹர்யஸ்வன் என்ற மன்னன் குறிப்பிடப்படுகிறான். இவன் அயோத்தியின் மன்னன் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறான். இந்தப் பகுதியில் குறிப்பிடப்படுபவனும், உத்யோக பர்வத்தில் குறிப்பிடப்படுபவனும் வெவ்வேறு நபர்களாக இருக்க வேண்டும். அதே போல உத்யோக பர்வம் 117ம் பகுதியில் திவோதாசன் என்ற மன்னன் குறிப்பிடப்படுகிறான். அவன் காசியின் மன்னனாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறான். எனவே இந்தப் பகுதியில் குறிப்பிடப்படும் திவோதாசனும், உத்யோக பர்வத்தில் குறிப்பிடப்படும் திவோதாசனும் ஒருவராகவே இருக்க வேண்டும்.
 
இவ்வாறு மன்னன் சுதேவனை வென்ற வெற்றியாளர்கள் தங்கள் சொந்த நகரத்திற்குத் திரும்பிச் சென்றனர். அதன் பிறகு, சுதேவனின் மகனான திவோதாசன் காசியின் அரியணையில் அதன் ஆட்சியாளனாக நிறுவப்பட்டான்.(15) வீதஹவ்யனின் மகன்களான அந்த உயர் ஆன்ம இளவரசர்களின் ஆற்றலை உணர்ந்தவனும், பெரும் சக்தி கொண்டவனுமான திவோதாசன், இந்திரனின் ஆணையின் பேரில் வாராணசி நகரத்தை மீண்டும் கட்டுமானம் செய்து அரணமைத்தான்[3].(16) திவோதாசனுடைய நாட்டின் எல்லைகளில் பிராமணர்களும், க்ஷத்திரியர்களும், வைசியர்களும், சூத்திரர்களும் நிறைந்திருந்தனர். அனைத்து வகைப் பொருட்களும், தனிவகைப் பொருட்களும் அங்கு நிறைந்திருந்தன. செழிப்பில் பெருகும் கடைகள் மற்றும் கடைவீதிகளால் அஃது அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஓ! மன்னர்களில் சிறந்தவனே, அந்த எல்லைகள் கங்கைக்கரையின் வடக்குப்புறத்தில் இருந்து கோமதியாற்றின் தென்கரை வரை பரந்திருந்தது. அது {அந்த வாராணஸி நகரமானது} (இந்திரனின் நகரமான அமராவதியைப் போல) இரண்டாம் அமராவதிக்கு {இரண்டாம் அமராவதி என்று சொல்வதற்கு} ஒப்பாக இருந்தது.(17,18) ஓ! பாரதா, அந்த மன்னர்களில் புலி {திவோதாசன்} தன் நாட்டை ஆண்டுக் கொண்டிருந்தபோது, மீண்டும் ஹைஹயர்கள் தாக்கினார்கள்.(19) வலிமைமிக்க மன்னனான திவோதாசன், தன் தலைநகரைவிட்டு வெளியே வந்து அவர்களுடன் போரிட்டான். பழங்காலத்தின் தேவாசுரப் போரைப் போல இரு தரப்புகளுக்குமிடையே நடந்த அந்தப் போர் மிகக் கடுமையானதாக இருந்தது.(20)
 
[3] பிரதர்த்தனன் பிறப்பு ஏற்கனவே உத்யோக பர்வம் பகுதி 117ல் சொல்லப்பட்டுள்ளது.
 
எதிரியுடன் ஆயிரம் நாட்கள் போரிட்ட மன்னன் திவோதாசன், இறுதியில் பெரும் எண்ணிக்கையிலான படைவீரர்களும், விலங்குகளும் கொல்லப்பட்ட பிறகு மிகவும் துன்பமடைந்தான்(21) ஓ! ஏகாதிபதி, தன் படையை இழந்த மன்னன் திவோதாசன், தன் கருவூலம் தீர்ந்துவிட்டதைக் கண்டு தன் தலைநகரைவிட்டுத் தப்பிச் சென்றான்.(22) ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே, அந்த மன்னன், பெரும் ஞானியான பரத்வாஜரின் இனிய ஆசிரமத்திற்குச் சென்று, தன் கரங்களை மதிப்புடன் கூப்பிக் கொண்டு அம்முனிவரின் பாதுகாப்பை நாடினான்.(23)
 
பிருஹஸ்பதியின் மூத்த மகனும், ஒழுக்கச் சிறப்பைக் கொண்டவரும், மன்னன் திவோதாசனின் புரோகிதருமான பரத்வாஜர், தம் முன் இருக்கும் அந்த ஏகாதிபதியைக் கண்டு, அவனிடம்,(24) "நீ இங்கு வந்திருக்கும் காரணம் என்ன? ஓ! மன்னா, அனைத்தையும் எனக்குச் சொல்வாயாக. எந்தத் தயக்கமுமின்றி உனக்கு ஏற்புடையதை நான் செய்வேன்" என்றார்.(25)
 
மன்னன் {திவோதாசன்}, "ஓ! புனிதமானவரே, வீதஹவ்யனின் மகன்கள் என் வீட்டில் உள்ள பிள்ளைகள் மற்றும் மனிதர்கள் அனைவரையும் கொன்றுவிட்டனர். எதிரியால் முற்றிலும் உருக்குலைக்கப்பட்ட நான் மட்டுமே உயிரோடு தப்பி வந்தேன். நான் உமது பாதுகாப்பை நாடுகிறேன்.(26) ஓ! புனிதமானவரே, ஒரு சீடனைக் காப்பதைப் போல என்னைப் பாதுகாப்பதே உமக்குத் தகும். பாவச் செயல்களைச் செய்யும் அந்த இளவரசர்கள், என்னை மட்டுமே உயிருடன் விட்டுவிட்டு, என் குலம் மொத்தத்தையும் கொன்றுவிட்டனர்" என்றான்".(27)
 
பீஷ்மர் தொடர்ந்தார், "பெருஞ்சக்தியைக் கொண்ட பரத்வாஜர், தம்மிடம் பரிதாபகரமாக இரைஞ்சிக் கொண்டிருந்த அவனிடம் {திவோதாசனிடம்}, "அஞ்சாதே, ஓ! சுதேவன் மகனே, உன் அச்சங்கள் அகலட்டும். நீ ஆஞ்சாதே.(28) ஓ! ஏகாதிபதி, வீதஹவ்யன் தரப்பினரை ஆயிரமாயிரமாகத் தாக்கவல்ல ஒரு மகனை நீ பெறும் வகையில் நான் ஒரு வேள்வியைச் செய்யப் போகிறேன்" என்றார்.(29)
 
அதன்பிறகு திவோதாசனுக்கு ஒரு மகனைப் பெறும் நோக்கத்தில் அம்முனிவரால் ஒரு வேள்வி நடத்தப்பட்டது. அதன் விளைவாகத் திவோதாசனுக்குப் பிரதர்த்தனன் என்ற பெயரில் ஒரு மகன் பிறந்தான்[4].(30) அவன் பிறந்த உடனேயே பதிமூன்று வயது பாலகனாக வளர்ந்து, வேதங்களிலும், மொத்த ஆயுத அறிவியலிலும் விரைவாகத் திறம்பெற்றான்.(31) பெரும் நுண்ணறிவைக் கொண்ட பரத்வாஜர் தமது யோக சக்திகளின் துணையுடன் அந்த இளவரசனுக்குள் {பிரதர்த்தனனுக்குள்} நுழைந்தார். உண்மையில் பரத்வாஜர், அண்டத்தில் உள்ள பொருட்களின் சக்திகள் அனைத்தையும் திரட்டி அவற்றை, இளவரசன் பிரதர்த்தனனின் உடலுக்குள் நுழையச் செய்தார்.(32) ஒளிரும் கவசத்தைத் தன் மேனியில் பூட்டிக் கொண்டும், வில்லைத் தரித்துக் கொண்டும், வந்திகள் மற்றும் தெய்வீக முனிவர்களால் புகழப்பட்டும், உதிக்கும் சூரியனைப் போலப் பிரகாசமாக ஒளிர்ந்தான் பிரதர்த்தனன்.(33) கச்சையில் வாளைக் கட்டிக் கொண்டு தன் தேரில் ஏறிய அவன், சுடர்மிக்க நெருப்பைப் போல ஒளிர்ந்தான். வாள் மற்றும் கேடயத்துடனும், தன் கேடயத்தைச் சுழற்றிக் கொண்டும் அவன் தன் தந்தையிடம் {திவோதாசனிடம்} சென்றான்.(34) சுதேவனின் மகனான மன்னன் திவோதாசன், இளவரசனைக் கண்டு மகிழ்ச்சியால் நிறைந்தான். உண்மையில் அந்த முதிர்ந்த மன்னன், தன் எதிரியான வீதஹவ்யன் ஏற்கனவே இறந்துவிட்டதாக நினைத்தான்.(34)
 
[4] ஆதிபர்வம் பகுதி 92ல் யயாதியின் மகள் வயிற்றுப் பேரனாகக் குறிப்பிடப்படும் பிரதர்த்தனன் இவனே.
 
திவோதாசன் தன் மகன் பிரதர்த்தனனை யுவராஜனாக நிறுவி, வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டதாகக் கருதி பெரிதும் மகிழ்ச்சியடைந்தான்.(36) அதன் பிறகு அந்த முதிர்ந்த மன்னன், எதிரிகளைத் தண்டிப்பவனான இளவரசன் பிரதர்த்தனனிடம், வீதஹவ்யனின் மகன்களை எதிர்த்துச் சென்று போரில் அவர்களைக் கொல்லுமாறு ஆணையிட்டான்.(37) பேராற்றல்வாய்ந்தவனும், பகை நகரங்களை அடக்குபவனுமான பிரதர்த்தனன் தன் தேரில் கங்கையைக் கடந்து, வீதஹவ்யர்களின் நகரத்தை எதிர்த்துச் சென்றான்.(38) வீதஹவ்யனின் மகன்கள், அவனது தேரின் சக்கரங்கள் உண்டாக்கிய சடசடப்பொலியைக் கேட்டு, அரணமைக்கப்பட்ட மாளிகைகளைப் போலத் தெரிந்தவையும், பகை வாகனங்களை அழிக்கவல்லவையுமான தங்கள் தேர்களைச் செலுத்திக் கொண்டு, தங்கள் நகரத்தைவிட்டு வெளியே வந்தனர்.(39) மனிதர்களில் புலிகளும், கவசம்பூண்ட திறமிக்கப் போர்வீரர்களுமான வீதஹவ்யனின் மகன்கள் யாவரும், உயர்த்தப்பட்ட ஆயுதங்களுடன் பிரதர்த்தனனை நோக்கி விரைந்து, தங்கள் கணை மாரியால் அவனை மறைத்தனர்.(40)
 
ஓ! யுதிஷ்டிரா, எண்ணற்ற தேர்களில் சென்று பிரதர்த்தனனைச் சூழ்ந்து கொண்ட வீதஹவ்யர்கள், இமயச் சாரலில் மழைத்தாரையைப் பொழியும் மேகங்களைப் போலப் பல்வேறு ஆயுதங்களின் மழையை அவன் மீது பொழிந்தனர்.(41) வலிமையும், சக்தியும் கொண்ட பிரதர்த்தனன், அவர்களுடைய ஆயுதங்களைத் தனதால் கலங்கடித்து, இந்திரனின் இடிநெருப்புக்கு ஒப்பான கணைகளால் அவர்கள் அனைவரையும் கொன்றான்.(42) நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான அகன்ற தலைக் கணைகளால் {அர்த்தச்சந்திர பாணங்களால்} தலை துண்டிக்கப்பட்ட வீதஹவ்யனனின் போர்வீரர்கள், கோடரிகளுடன் கூடிய மரவெட்டிகளால் அனைத்துப் பக்கங்களிலும் வெட்டி வீழ்த்தப்படும் கின்சுக {பலாச} மலர்களைப் போலக் குருதியால் நனைந்த உடல்களுடன் கீழே விழுந்தனர்.(43) மன்னன் வீதஹவ்யன், தனது போர்வீரர்களும், மகன்கள் அனைவரும் போரில் வீழ்ந்த பிறகு, தன் தலைநகரில் இருந்து பிருகுவின் ஆசிரமத்திற்குத் தப்பிச் சென்றான்.(44) உண்மையில், அங்கே வந்த அந்த அரச அகதி, பிருகுவின் பாதுகாப்பை நாடினான். ஓ! ஏகாதிபதி, தோல்வியடைந்த மன்னனின் பாதுகாப்பை முனிவர் பிருகு உறுதி செய்தார்.(45)
 
பிரதர்த்தனன், வீதஹவ்யனின் பாதச்சுவடுகளைப் பின்தொடர்ந்து வந்தான். முனிவரின் ஆசிரமத்திற்கு வந்த திவோதாசன் மகன் {பிரதர்த்தனன்} உரத்த குரலில்,(46) "ஹோ... உள்ளே இருக்கும் உயர் ஆன்ம பிருகவின் சீடர்களே கேட்பீராக. நான் அந்த முனிவரைக் காண விரும்புகிறேன். அவரிடம் சென்று இதைத் தெரிவிப்பீராக" என்றான்.(47)
 
வந்திருப்பது பிரதர்த்தன் என்பதை அறிந்து கொண்ட முனிவர் பிருகு, தமது ஆசிரமத்தில் இருந்து வெளியே வந்து அந்த மன்னர்களில் சிறந்தவனை உரிய சடங்குகளுடன் வழிபட்டார்.(48) அவனிடம் பேசிய முனிவர், "ஓ! மன்னா, என்ன காரியம் என்று எனக்குச் சொல்வாயாக" என்று கேட்டார். இதனால் தான் வந்த காரணத்தை முனிவரிடம் சொன்னான் மன்னன்.(49)
 
மன்னன் (பிரதர்த்தனன்), "ஓ! பிராமணரே, மன்னன் வீதஹவ்யன் இங்கே வந்திருக்கிறான். அவனை என்னிடம் கொடுப்பீராக. ஓ! பிராமணரே, அவனது மகன்கள் என் குலத்தையே அழித்திருக்கின்றனர்.(50) காசியின் எல்லைகளும், செல்வமும் அவர்களால் வீணடிக்கப்பட்டன {அழிக்கப்பட்டன / அபகரிக்கப்பட்டன}. எனினும் வலிமையில் செருக்குற்றிருந்த இந்த மன்னனின் நூறு பிள்ளைகளும் என்னால் கொல்லப்பட்டனர்.(51) இந்த மன்னனை {வீதஹவ்யனைக்} கொல்வதன் மூலம் நான் என் தந்தைக்குப் பட்ட கடனை அடைத்தவனாவேன்" என்றான்.
 
நீதிமிக்க மனிதர்களில் முதன்மையானவரான முனிவர் பிருகு, கருணை கொண்டவராக அவனிடம்,(52) "இந்த ஆசிரமத்தில் எந்த க்ஷத்திரியனும் இல்லை. இங்கே இருப்பவர்கள் அனைவரும் பிராமணர்களே" என்றார்.
 
பிருகுவின் சொற்களைக் கேட்ட பிரதர்த்தனன்,(53) அஃதை உண்மையென்றெண்ணி, முனிவரின் பாதங்களைத் தொட்டு, மகிழ்ச்சியால் நிறைந்து, மெதுவாக மெதுவாக, "ஓ! புனிதமானவரே, என் ஆற்றலின் விளைவால் இந்த மன்னன் தன் பிறவி வகையையே இழந்திருப்பதனால் நான் வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டேன் என்பதில் ஐயமில்லை. ஓ!பிராமணரே, நான் விடைபெற்றுச் செல்ல அனுமதிப்பீராக, எனக்கான நன்மையை நான் உம்மிடம் வேண்டுகிறேன்.(55) ஓ! உமது பெயரால் ஒரு குலத்தை நிறுவியவரே, என் வலிமையால் இந்த மன்னன் தன் பிறவி வகையை இழந்திருக்கிறான்" என்றான்[5].
 
[5] கும்பகோணம் பதிப்பில், "ப்ருகுவின் இந்த உண்மையான சொல்லைக் கேட்டு ப்ரதர்த்தனன், ஸந்தோஷம் அடைந்து அவர் பாதங்களைப் பிடித்துக் கொண்டு மெதுவாக, ’பகவானே, இப்படிச் செய்து யான் க்ருதார்த்தனானேன்; ஸந்தேஹமில்லை. ஏனெனில், நான் என் பராக்ரமத்தினால், இந்த வீதஹவ்யராஜனைத் தன் ஜாதியை விடும்படி செய்தேன். ப்ராம்மணரே, எனக்கு விடைகொடும். எனக்கு க்ஷேமமுண்டாகும்படி நினைக்கடவீர். ப்ருகுவம்சத்தலைவரே, இவ்வரசன் தன் ஜாதியை என்னால் விடுவிக்கப்பட்டானல்லனோ?’ என்றான்" என்றிருக்கிறது.
 
முனிவர் பிருகுவால் விடைகொடுத்து அனுப்பப்பட்ட மன்னன் பிரதர்த்தனன் அந்த ஆசிரமத்தில் இருந்து வெளியேறி,(56) நஞ்சைக் கக்கும் பாம்பைப் போல நான் சொன்னது போலவே சொல்நஞ்சைக் கக்கிவிட்டு, தனது இடத்திற்குத் திரும்பிச் சென்றான். அதே வேளையில், மன்னன் வீதஹவ்யன், பிருகுவின் அறத்தகுதியால் மட்டுமே, மறுபிறப்பாள தவசி என்ற நிலையை அடைந்தான்.(57) மேலும், அதே காரணத்தின் மூலம் வேதங்கள் அனைத்தையும் முற்றாக அறிந்த நிலையையும் அடைந்தான்[6]கிருத்சமதன் என்ற பெயரில் இரண்டாம் இந்திரனைப் போன்ற அழகுடன் வீதஹவ்யனுக்கு ஒரு மகன் இருந்தான்.(58) ஒரு காலத்தில் அவனே இந்திரன் என்று நினைத்த தைத்தியர்களால் அவன் பீடிக்கப்பட்டான். அந்த உயர் ஆன்ம முனியை {கிருத்சமதனைப்} பொறுத்தவரையில், "ஓ! பிராமணரே, எங்கே கிருத்சமதர் இருக்கிறாரோ, அங்கே உள்ள மறுபிறப்பாள மனிதர்கள் அனைவராலும் அவர் உயர்வாக மதிக்கப்பட்டார்" என்று ஸ்ருதிகளில் முதன்மையான ரிக்கில் {ரிக் வேதத்தில்} இருக்கிறது. பெரும் நுண்ணறிவைக் கொண்டவரான கிருத்சமதன் பிரம்மச்சரிய நோன்பை நோற்கும் மறுபிறப்பாள முனிவரானான்.(60)
 
[6] கும்பகோணம் பதிப்பில், "ப்ருகுவினால் விடைகொடுக்கப்பட்ட ப்ரதர்த்தனராஜன் விஷத்தைவிட்டுவிட்ட ஸர்ப்பம் போல வந்த வழியே சென்றான். மஹாராஜனே, அந்த வீதஹவ்யன், ப்ருகுவின் அந்தச் சொல் மாத்திரத்தினாலேயே ப்ரம்ம ரிஷியும் ப்ரம்மஜ்ஞானியுமானான்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "அவரது அனுமதியைப் பெற்றுக்கொண்ட மன்னன் பிரதர்த்தனன் நஞ்சகன்ற ஒரு பாம்பைப் போல, தான் எங்கிருந்து வந்தானோ அங்கேயே சென்றான். ஓ! பெரும் மன்னா, பிருகுவின் அந்தச் சொற்களால் மட்டுமே, வீதஹவ்யன் ஒரு பிரம்மரிஷியாகவும், பிரம்மத்தை அறிந்து கொள்ளக்கூடியவனாகவும் ஆனான்" என்றிருக்கிறது.
 
கிருத்சமதனுக்குச் சுதேஜஸ் {ஸாவைநஸன்} என்ற பெயரில் ஒரு மகன் இருந்தான். சுதேஜஸுக்கு வர்ச்சஸ் {விதஸ்த்யன்} என்ற பெயரில் ஒரு மகன் இருந்தான். வர்ச்சஸின் மகன் விஹவ்யன் {சிவஸ்தன்} என்ற பெயரில் அறியப்பட்டான்.(61) விஹவ்யன் தன் மடியில் பிறந்த மகனாக விதத்யன் என்ற பெயரில் ஒருவனைக் கொண்டிருந்தான். விதத்யன் சத்யன் என்ற பெயரில் மகனைக் கொண்டிருந்தான். சத்யன் சந்தன் என்ற பெயரில் ஒரு மகனைக் கொண்டிருந்தான். சந்தன் முனிவர் சிரவஸைமகனாகக் கொண்டிருந்தான். சிரவஸுக்கு தமன் {தமஸ்} என்ற பெயரில் ஒரு மகன் இருந்தான். தமன், மிக மேன்மையான பிராமணனும், பிரகாசன் என்ற பெயரைக் கொண்டவனுமான ஒரு மகனைக் கொண்டிருந்தான்.(63) பிரகாசன், புனித மந்திரங்களை அமைதியாகச் சொல்பவர்கள் அனைவரிலும் முதன்மையானவனும், வாகிந்திரன் என்ற பெயரைக் கொண்டவனுமான ஒரு மகனைக் கொண்டிருந்தான். வாகிந்திரன், வேதங்கள் மற்றும் அதன் அங்கங்கள் அனைத்திலும் முற்றிலும் திறன் பெற்றிருந்தவனும், பிரமதிஎன்ற பெயரைக் கொண்டவனுமான ஒரு மகனைப் பெற்றிருந்தான். பிரமதி, அப்சரஸ் கிருதாசியிடம் ருரு என்ற பெயரில் ஒரு மகனைப் பெற்றான். ருரு தன் மனைவியான பிரம்மத்வரையிடம் ஒரு மகனைப் பெற்றான்[7]. அந்த மகன் மறுபிறப்பாள முனிவரான சுனகராவார். சுனகர், சௌனகர் என்ற பெயரில் ஒரு மகனைப் பெற்றார்.(65) ஓ! ஏகாதிபதிகளில் முதன்மையானவனே, இவ்வாறே, க்ஷத்திரியர்களின் தலைவா, மன்னன் வீதஹவ்யன் தன் பிறப்பின் வகையால் {வர்ணத்தால்} ஒரு க்ஷத்திரியனாக இருந்தாலும், பிருகுவுடைய அருளின் மூலம் பிராமண நிலையை அடைந்தான்.(66) அவனது மகனான கிருத்சமதனிடம் இருந்து உதித்த குலத்தின் பரம்பரைப் பட்டியலையும் நான் உனக்குச் சொல்லிவிட்டேன். வேறென்ன கேட்கப் போகிறாய்?"[8] என்றார் {பீஷ்மர்}.(67)
 
[7] ருரு பிரம்மத்வரை கதை ஆதிபர்வம் பகுதி 8ல் ஏற்கனவே சொல்லப்பட்டுள்ளது.
 
[8] இந்தப் பட்டியலில் சௌனகருடைய பெயரும் வருகிறது. மஹாபாரதம் நடந்து முடிந்து, நாலாம் தலைமுறையில் அர்ஜுனனுடைய பேரனின் மகன் ஜனமேஜயனின் காலத்தில் வாழ்பவர் இந்தச் சௌனகர். நாம் இன்று படித்துவரும் இந்த மஹாபாரதம் இங்கே குறிப்பிடப்படும் சௌனகருக்கே சூத முனிவரான சௌதியினால் சொல்லப்பட்டது. சௌனகரின் பெயர் இங்கே குறிப்பிடப்படுவதால் இந்தப் பகுதியில் 61 முதல் 67ம் ஸ்லோகம் வரையுள்ள பகுதி வைசம்பாயனராலோ, சௌதியினாலோ சொல்லப்பட்டிருக்க வேண்டும்


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

வணக்கத்திற்குரியோர்! - அநுசாஸனபர்வம் பகுதி – 31

 

Men worthy of reverent homage! | Anusasana-Parva-Section-31 | Mahabharata In Tamill

(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 31)


பதிவின் சுருக்கம் : வணக்கத்திற்கும், வழிபாட்டிற்கும் உரியவர்கள் யாவர் என்பது குறித்து கிருஷ்ணனுக்கு நாரதர் சொன்னதை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...


%25E0%25AE%2595%25E0%25AE%25BF%25E0%25AE
யுதிஷ்டிரன், "ஓ பாரதக் குலத்தின் தலைவரே, மூவுலகிலும் மதிக்கத்தக்க வணக்கத்திற்குத் தகுந்த மனிதர்கள் யாவர்? உண்மையில் இக்காரியங்களைக் குறித்து நீர் பேசுவதைக் கேட்டு நான் ஒருபோதும் தணிவடைவதில்லை, இது குறித்து எனக்கு விரிவாகச் சொல்வீராக" என்று கேட்டான்.(1)

பீஷ்மர், "இது தொடர்பாக நாரதருக்கும், வாசுதேவனுக்கும் {கிருஷ்ணனுக்கும்}இடையில் நடந்த உரையாடல் பழங்கதையில் தென்படுகிறது.(2) ஒரு சந்தர்ப்பத்தில் நாரதர் பிராமணர்களில் முதன்மையானோர் பலரை வழிபடுவதைக் கண்ட கேசவன், அவரிடம்,(3) "யாரை நீர் வழிபடுகிறீர். ஓ! புனிதமானவரே, இந்தப் பிராமணர்களுக்கு மத்தியில், பெருமதிப்புடன் நீர் யாரை வழிபடுகிறீர்? இஃது என்னால் கேட்கத்தக்கது என்றால் அதை நான் கேட்க விரும்புகிறேன். ஓ!அறவோரில் முதன்மையானவரே, இதை எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.(4)
 


நாரதர் {கிருஷ்ணனிடம்}, "ஓ! கோவிந்தா, ஓ! எதிரிகளைக் கலங்கடிப்பவனே, நான் யாரை வழிபடுகிறேன் என்பதைக் கேட்பாயாக. இவ்வுலகில் இதைக் கேட்கத் தகுந்தவன் வேறு யார் இருக்கிறான்?(5) ஓ! பலமிக்கவனே, வருணன், வாயு, ஆதித்தியன், பர்ஜன்யன் {மழை தேவனான இந்திரன்}, நெருப்பின் தேவன் {அக்நி}, ஸ்தாணு {சிவன்}, ஸ்கந்தன் {முருகன்}, லக்ஷ்மி, விஷ்ணு, பிராமணர்கள் {பிரம்மன்}, வாக்கின் தேவன் {வசஸ்பதி / பிருஹஸ்பதி}, சந்திரமாஸ் {சந்திரன்}, நீர், பூமி மற்றும் சரஸ்வதி தேவி ஆகியோரைத் தொடர்ந்து வழிபடுபவர்களை நான் வழிபட்டு வருகிறேன்.(6,7) ஓ! விருஷ்ணி குலத்துப் புலியே, தவங்களுடன் கூடியவர்களும், வேதங்களை அறிந்தவர்களும், வேத கல்வியில் எப்போதும் அர்ப்பணிப்புடையவர்களும், உயர்ந்த தகுதியைக் கொண்டவர்களுமான பிராமணர்களை எப்போதும் நான் வழிபடுகிறேன்.(8) ஓ! பலமிக்கவனே, தற்பெருமையில் இருந்து விடுபட்டவர்களும், தேவர்களை மதிக்கும் சடங்குகளை வெறும் வயிற்றுடன் வழிபாடு செய்பவர்களும், தாங்கள் கொண்டுள்ளதில் எப்போதும் நிறைவுடன் இருப்பவர்களும், மன்னிக்கும் தன்மையுடன் {பொறுமையுடன்} கூடியவர்களுமான மனிதர்களுக்கு நான் தலைவணங்குகிறேன்.(9) ஓ! யாதவா, வேள்விகளைச்செய்பவர்களும், மன்னிக்கும் மனோ நிலையைக் கொண்டவர்களும், தற்கட்டுப்பாடு கொண்டவர்களும், புலன்களை ஆள்பவர்களும், வாய்மை மற்றும் அறத்தை வழிபடுபவர்களும், நல்ல பிராமணர்களுக்கு நிலத்தையும், பசுக்களையும் கொடையளிப்பவர்களுமான மனிதர்களை நான் வழிபடுகிறேன்.(10)
 
ஓ! யாதவா, தவநோற்பில் அர்ப்பணிப்புள்ளவர்களும், காடுகளில் வசிப்பவர்களும், கனி மற்றும் கிழங்குகளை உண்டு வாழ்பவர்களும், நாளைக்கென ஒருபோதும் எதையும் சேமிக்காதவர்களும், சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள செயல்கள் மற்றும் சடங்குகள் அனைத்தையும் செய்பவர்களுமான மனிதர்களை நான் வணங்குகிறேன்.(11) ஓ! யாதவா, தங்கள் பணியாட்களுக்கு உணவூட்டிப் பேணி வளர்ப்பவர்களும், விருந்தாளிகளை எப்போதும் விருந்தோம்பலுடன் கவனிப்பவர்களும், தேவர்களுக்குக் காணிக்கையளிக்கப்பட்ட மிச்சங்களை மட்டுமே உண்பவர்களுமான மனிதர்களை நான் வணங்குகிறேன்.(12) வேத கல்வயின் மூலம் தடுக்கப்பட முடியாதவர்களானவர்களும், சாத்திரங்களை உரையாடுவதில் நாநயமிக்கவர்களும், பிரம்மச்சரிய நோன்பை நோற்பவர்களும், பிறருக்கு வேள்விகளைச் செய்து கொடுப்பது மற்றும் சீடர்களுக்குப் போதிப்பது ஆகிய கடமைகளில் எப்போதும் அர்ப்பணிப்புடன் இருப்பவர்களுமான மனிதர்களை நான் வழிபடுகிறேன்.(13) அனைத்து உயிரினங்களிடமும் கருணையுடன் நடந்து கொள்பவர்கும், சூரியன் முதுகைச் சுடும்வரை வேத கல்வியில் ஈடுபடுபவர்களுமான மனிதர்களை நான் வழிபடுகிறேன்.(14) ஓ! யாதவா, தங்கள் ஆசான்களின் அருளை அடைய முனைபவர்களும், வேதங்களை அடைய உழைப்பவர்களும், நோன்புகள் நோற்பதில் உறுதியாக இருப்பவர்களும், ஆசான்கள் மற்றும் பெரியோர்களிடம் கடமையுணர்வுடன் பணி செய்பவர்களும், வன்மம் மற்றும் பொறாமையில் இருந்து விடுபட்டவர்களுமான மனிதர்களை நான் வணங்குகிறேன்.(15)
 
ஓ! யாதவா, சிறந்த நோன்புகளை நோற்பவர்களும், எண்ணங்களை வெளியிடாமல் பேசாநோன்பு நோற்பவர்களும், பிரம்மஞானம் கொண்டவர்களும், வாய்மையில் உறுதியாக இருப்பவர்களும், தெளிந்த நெய் ஆகுதிகளை {ஹவ்யங்களை} காணிக்கையளிப்பவர்களும், இறைச்சியை {கவ்யங்களை} படையல் செய்பவர்களுமான[1] மனிதர்களை நான் வணங்குகிறேன்.(16) ஓ! யாதவா, பிச்சையெடுத்து உண்டு வாழ்பவர்களும், போதுமான உணவும் பானமும் இல்லாமல் மெலிந்திருப்பவர்களும், தங்கள் ஆசான்களின் வசிப்பிடங்களில் வாழ்பவர்களும், இன்பங்களை வெறுப்பவர்களும், பூமி சார்ந்த பொருட்களை வறியவர்களுமானவர்கள் நான் வணங்குகிறேன்.(17) ஓ!யாதவா, பூமியில் உள்ள பொருட்களில் எந்தப் பற்றும் இல்லாதவர்களும், பிறரிடம் சச்சரவு செய்யாதவர்களும், ஆடை அணியாதவர்களும், எந்தத் தேவையுமற்றவர்களும்,வேதங்களை அடைந்து தடுக்கப்பட முடியாதவர்களாக ஆனவர்களும், அறத்தை விளக்குவதில் நாநயமிக்கவர்களும், பிரம்மத்தைச் சொல்பவர்களுமான மனிதர்களை நான் வணங்குகிறேன்.(18) அனைத்து உயிரினங்களிடம் கருணை என்ற கடமையைப் பயில்வதில் அர்ப்பணிப்புடன் உள்ளவர்களும், வாய்மை பயில்வதில் உறுதியாக இருப்பவர்களும், தற்கட்டுப்பாட்டை உடையவர்களும், நடத்தையில் அமைதி நிறைந்தவர்களுமான மனிதர்களை நான் வணங்குகிறேன்.(19) ஓ! யாதவா, தேவர்கள் மற்றும் விருந்தினர்களை வழிபடுவதில் அர்ப்பணிப்புடன் உள்ளவர்களும், இல்லற வாழ்வை நோற்பவர்களும், வாழ்வுக்கான காரியத்தில் புறாக்களின் நடைமுறையைப்பின்பற்றுபவர்களுமான மனிதர்களை நான் வணங்குகிறேன்[2].(20)
 
[1] கும்பகோணம் பதிப்பில், "சொன்ன சொல் தவறாதவரும், ஹவ்யகவ்யங்களை எப்போதும் நடத்துகிறவருமான பிராம்மணர்களை நமஸ்கரிக்கிறேன்" என்றிருக்கிறது. பிபேக் திப்ராயின் பதிப்பில், "வாய்மையில் அர்ப்பணிப்புடன் இருந்து ஹவ்யகவ்யங்களைக் காணிக்கை அளிப்பவர்கள்" என்றிருக்கிறது.
 
[2] "புறாக்கள் சிதறிக் கிடக்கும் தானியங்களை உண்டு வாழும், நாளைக்கென எதையும் சேர்த்து வைக்காது. சீலம் மற்றும் பிற நோன்புகளில், பயிர்களுக்குச் சொந்தக்காரர்கள் உழவுக்களங்களை விட்டு அகன்ற பிறகு அவர்கள் விட்டுச் சென்றவையும், சிதறிக் கிடப்பவையுமான தானியங்களை எடுப்பது வயிற்றை நிரப்பிக் கொள்ளும் வழிமுறையாகச் சொல்லப்பட்டுள்ளது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
 
தங்கள் செயல்கள் எதனிலும் பலவீனப்படாமல் முத்தொகையை[3] {அறம், பொருள், இன்பம் ஆகியவற்றைச்} செய்பவர்களும், வாய்மை பயின்று அறமொழுகுபவர்களுமான மனிதர்களை நான் எப்போதும் வணங்குகிறேன்.(21) ஓ! கேசவா, பிரம்மத்தை அறிந்தவர்களும், வேதங்களின் அறிவைக் கொண்டவர்களும், {அறம், பொருள், இன்பம் என்ற} முத்தொகையில் கவனமாக இருப்பவர்களும், பேராசையில் இருந்து விடுபட்டவர்களும், நடத்தையில் நீதியுடன் செயல்படுபவர்களுமான மனிதர்களை நான் வணங்குகிறேன்.(22) ஓ! மாதவா, நீரை மட்டுமே உண்டு வாழ்பவர்கள், அல்லது காற்றை மட்டுமே உண்டு வாழ்பவர்கள், அல்லது, தேவர்களுக்கும், விருந்தினர்களுக்கும் காணிக்கையளிப்பட்ட உணவில் மிஞ்சியதை உண்டு வாழ்பவர்கள் பல்வேறு வகைச் சிறந்த நோன்புகளை நோற்பவர்கள் ஆகியோரை நான் வணங்குகிறேன்.(23) (தாங்கள் நோற்கும் மணம்செய்யா நோன்பின் விளைவால்) மனைவிகளற்றவர்களையும், (தாங்கள் வாழும் இல்லற வாழ்வின் விளைவால்) இல்லற நெருப்பையும், மனைவிகளையும் கொண்டவர்களையும், வேதங்களின் புகலிடமாக இருப்பவர்களையும், (தாங்கள் உணரும் கருணையின் விளைவால்) அண்டத்தில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் புகலிடமாக இருப்பவர்களையும் எப்போதும் நான் வணங்குகிறேன்.(24) ஓ! கிருஷ்ணா, அண்டத்தைப் படைப்பவர்களும், அண்டத்தின் பெரியோர்களும், ஒரு குலம் அல்லது குடும்பத்தில் உள்ள மூத்தோரும், அறியாமை எனும் இருளை அகற்றுபவர்களும், (அறவொழுக்கம் மற்றும் சாத்திரஞானம் ஆகியவற்றுக்காக) அண்டத்தில் உள்ள மனிதர்கள் அனைவரிலும் சிறந்தவர்களாகக் கருதப்படுபவர்களுமான முனிவர்களை நான் எப்போதும் வணங்குகிறேன்.(25)
 
[3] "இங்கே முத்தொகை என்று குறிப்பிடப்படுவது, அறம், பொருள் மற்றும் இன்பமாகும் {தர்மார்த்தகாமமாகும்}. தாங்கள் செய்யும் அனைத்துக் காரியங்களிலும் இந்த மூன்றின் மேல் ஒரு கண்ணை வைத்துக் கொள்ளும் மனிதர்கள், தங்கள் செயல்கள் அனைத்திலும் இந்த முத்தொகையைக் கொண்டவர்களாகச் சொல்லப்படுகிறார்கள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
 
ஓ! விருஷ்ணி குலத்தின் கொழுந்தே, இந்தக் காரணங்களுக்காக, நான் சொல்லும் இந்த மறுபிறப்பாளர்களை நாள்தோறும் நீயும் வழிபடுவாயாக. மதிப்புடன் வழிபடத்தகுந்த அவர்கள், ஓ! பாவமற்றவனே, வழிபடப்படும்போது, உனக்கு மகிழ்ச்சியை அளிப்பார்கள்.(26) நான் சொல்லும் மனிதர்கள் இம்மையிலும், மறுமையிலும் எப்போதும் மகிழ்ச்சியை அளிப்பவர்கள் ஆவர். அனைவராலும் மதிக்கப்பட்டு இவ்வுலகில் திரியும் அவர்கள், உன்னால் வழிபடப்பட்டால் நிச்சயம் உனக்கு மகிழ்ச்சியை வழங்குவார்கள்.(27) தம்மிடம் விருந்தினர்களாக வரும் மனிதர்கள் அனைவரையும் விருந்தோம்பலுடன் கவனிப்பவர்களும், பிராமணர்கள், பசுக்கள் மற்றும் (பேச்சு, ஒழுக்கத்தில்) வாய்மை ஆகியவற்றில் எப்போதும் அர்ப்பணிப்புடன் இருப்பவர்களும் துன்பங்கள் மற்றும் தடைகள் அனைத்தையும் கடப்பதில் வெல்வார்கள்.(28) அமைதியான நடத்தையில் எப்போதும் அர்ப்பணிப்புள்ளவர்களும், வன்மம் மற்றும் பொறாமையில் இருந்து விடுபட்டவர்களும், வேத கல்வியில் எப்போதும் கவனமாக இருப்பவர்களும், துன்பங்கள் மற்றும் தடைகள் அனைத்தையும் கடப்பதில் வெல்வார்கள்.(29) (எவரையும் முதன்மையாகக் கொள்ளாமல், சகிப்பை நிரூபிக்கும் வகையில்) தேவர்கள் அனைவரையும் வணங்குபவர்களும், வேதங்களில் ஒன்றைத் தங்கள் புகலிடமாகக் கொள்பவர்களும், நம்பிக்கை கொண்டவர்களும், தற்கட்டுப்பாட்டைக் கொண்டவர்களுமான மனிதர்கள், துன்பங்கள் மற்றும் தடைகள் அனைத்தையும் கடப்பதில் வெல்வார்கள்.(30)
 
பிராமணர்களில் முதன்மையானோரை மதிப்புடன் வழிபட்டு, சிறந்த நோன்பை நோற்பதிலும், ஈகையறம் பயில்வதிலும் உறுதியாக இருப்போர், துன்பங்கள் மற்றும் தடைகள் அனைத்தையும் கடப்பதில் வெல்வார்கள்.(31) தவப்பயிற்சியில் ஈடுபடுபவர்கள், மணம்செய்யா நோன்பை எப்போதும் நோற்பவர்கள், தவங்களால் ஆன்மத் தூய்மை அடைந்தவர்கள் ஆகியோர் துன்பங்கள் மற்றும் தடைகள் அனைத்தையும் கடப்பதில் வெல்வார்கள்.(32) தேவர்கள், விருந்தினர்கள், சார்ந்தோர், பித்ருக்கள் ஆகியோரின் வழிபாட்டில் அர்ப்பணிப்புடன் இருப்பவர்கள், தேவர்கள், பித்ருக்கள், விருந்தினர்கள், சார்ந்தோர் ஆகியோருக்கு உணவளித்த பிறகு எஞ்சியதை உண்போர் ஆகியோர், துன்பங்கள் மற்றும் தடைகள் அனைத்தையும் கடப்பதில் வெல்வார்கள்.(33) இல்லற நெருப்பை மூட்டி, அதைத் தொடர்ந்து எரியச் செய்து, மதிப்புடன் அதை வழிபடுபவர்களும், சோம வேள்விகளில் (தேவர்களுக்கு) ஆகுதிகளை முறையாக ஊற்றியவர்களும் துன்பங்கள் மற்றும் தடைகள் அனைத்தையும் கடப்பதில் வெல்வார்கள்.(34) நீ நடந்து கொள்வது போலவே, தங்கள் தாய்மார், தந்தைமார், ஆசான்கள் மற்றும் பெரியோர்களிடம் நடந்து கொள்பவர்கள் (துன்பங்கள் மற்றும் தடைகள் அனைத்தையும் கடப்பதில் வெல்வார்கள்)" என்றார் {நாரதர்}. இவ்வார்த்தைகளைச் சொல்லிவிட்டுப் பேசுவதை நிறுத்தினார் அந்தத் தெய்வீக முனிவர்
".(35)
 
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, இந்தக் காரணங்களுக்காக, உன் மாளிகையில் தேவர்களையும், பித்ருக்களையும், பிராமணர்களையும், விருந்தினர்களையும் எப்போதும் வழிபடுவாயாக. இத்தகைய நடத்தையின் விளைவால் நிச்சயம் நீ விரும்பிய கதியை அடைவாய்".(36)

அநுசாஸனபர்வம் பகுதி – 31ல் உள்ள சுலோகங்கள் : 36


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

மன்னன் சிபி! - அநுசாஸனபர்வம் பகுதி – 32

 

King Sibi! | Anusasana-Parva-Section-32 | Mahabharata In Tamil

(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 32)


பதிவின் சுருக்கம் : பாதுகாப்பை நாடி வருவோரைப் பாதுகாப்பதால் கிட்டும் பயன் குறித்துச் சொல்ல மன்னன் சிபியின் கதையை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...


King%2BCibi%2B%25E0%25AE%25AE%25E0%25AE%
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாட்டா, ஓ! பெரும் ஞானியே, ஓ! ஞானத்தின் அனைத்துக் கிளைகளையும் அறிந்தவரே, கடமை மற்றும் அறம் தொடர்பான காரியங்கள் குறித்து நான் உம்மிடம் இருந்து கேட்க விரும்புகிறேன்.(1) ஓ!பாரதக் குலத்தின் தலைவா, நான்கு வகை உயிரினங்களில் பாதுகாப்பை வேண்டுவோருக்குப் பாதுகாப்பை அளிக்கும் மனிதர்கள் அடையும் பயனென்ன?" என்று கேட்டான்.(2)
 


பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! பெரும் ஞானமும், பரந்த புகழும் கொண்ட தர்மத்தின் மகனே {தர்மபுத்ரா}, பணிவுடன் பாதுகாப்பு நாடப்படும்போது, பிறருக்குப் பாதுகாப்பை அளிப்பதால் உண்டாகும் பெரும்பலன் குறித்த இந்தப் பழைய வரலாற்றைக் கேட்பாயாக.(3) ஒரு காலத்தில் ஒரு பருந்தால் விரட்டப்பட்ட ஓர் அழகிய புறாவானது, வானத்தில் இருந்து விழுந்து, உயர்ந்த அருளைக் கொண்டவனான மன்னன் விருஷதர்பனின்பாதுகாப்பை நாடியது.(4) தூய ஆன்மாவைக் கொண்ட அந்த ஏகாதிபதி, அச்சத்தால் தன் மடியில் தஞ்சமடைந்த புறாவைக் கண்டு, அதற்கு ஆறுதலளித்து, "ஓ! பறவையே, ஆறுதலடைவாயாக. உனக்கு அச்சம் ஏதும் கிடையாது.(5) இத்தகைய பேரச்சம் உனக்கு எங்கிருந்து வந்தது? நீ என்ன செய்தாய்? எங்கே செய்தாய்? எதன் விளைவாக நீ அச்சத்தால் புலன்களை இழந்து இறந்தவன் போலிருக்கிறாய்?(6) ஓ! அழகிய பறவையே, உன் நிறமானது, நீல வகையைச் சார்ந்ததும், புதிதாக மலர்ந்ததுமான கருநெய்தல் மலருக்கு ஒப்பாக இருக்கிறது. உன் கண்கள் அசோக மலர், அல்லது மாதுளையின் வண்ணத்தில் இருக்கிறது. அஞ்சாதே, ஆறுதலடைவாயாக.(7) நீ எனது பாதுகாப்பை நாடியிருக்கும்போது, உன்னைப் பாதுகாக்க இத்தகைய பாதுகாவலன் இருக்கும்போது, எவனும் உன்னைப் பிடிக்கவும் துணியமாட்டன் என்பதை அறிவாயாக.(8) உனக்காக நான் இன்று காசி நாட்டையே கொடுப்பேன், தேவைப்பட்டால் என் உயிரையும் கொடுப்பேன். எனவே, ஓ! புறாவே, அச்சம் உனதாக வேண்டாம், ஆறுதலைவாயாக" என்றான் {விருஷதர்பன்}.(9)
 
பருந்து {மன்னன் விருஷதர்பனிடம்}, "இந்தப் பறவை {புறா} என் உணவாக விதிக்கப்பட்டிருக்கிறது. ஓ! மன்னா, நீ இவனை என்னிடம் இருந்து பாதுகாப்பது உனக்குத் தகாது. நான் இந்தப் பறவையை விரட்டி வந்து பிடித்திருக்கிறேன். உண்மையில், பெரும் முயற்சி செய்த பிறகு இறுதியாகவே நான் இவனை அடைந்திருக்கிறேன்.(10) இவனது இறைச்சி, குருதி, மஜ்ஜை, கொழுப்பு ஆகியவை எனக்கும் பெரும் உணவாக இருக்கும். இந்தப் பறவை என்னைப் பெரிதும் நிறைவடையச் செய்யும் வாழ்வாதாரமாக இருக்கும். ஓ! மன்னா, எனக்கும் இவனுக்கும் இடையில் இவ்வழியில் நீ குறுக்கே நிற்காதே.(11) என்னைப் பீடிக்கும் தாகம் கடுமையானதாக இருக்கிறது. பசி என் வயிற்றை எரிக்கிறது. இந்தப் பறவையை விடுவித்து, அவனைக் கைவிடுவாயாக. இனியும் என்னால் பசிக்கொடுமையைப் பொறுத்துக் கொள்ள முடியாது.(12) இவனை என் இரையாகவே விரட்டி வந்தேன். என் சிறகுகளாலும், அலகுகளாலும் இவனது உடல்கள் கிழிக்கப்பட்டுக் காயமடைந்திருப்பதைக் காண்பாயாக. இவனது மூச்சும் பலவீனமடைவதைக் காண்பாயாக. ஓ! மன்னா, இவனை என்னிடம் இருந்து பாதுகாப்பது உனக்குத் தகாது.(13) உனக்குரிய அதிகாரத்தின்படி, பிற மனிதர்களின் மூலம் அழிவை அடையும் போது உன் பாதுகாப்பை நாடும் மனிதர்களை நீ காக்கலாம். எனினும், தாகத்தால் பீடிக்கப்பட்டிருக்கும் ஒரு வானுலாவி பறவையிடம் உனக்கு எந்த அதிகாரமும் கிடையாது.(14) உன் எதிரிகள், உன் பணியாட்கள், உறவினர்கள் உன் குடிமக்களுக்கிடையில் நடைபெறும் சச்சரவுகள் ஆகியவற்றின் மீது உனக்கு அதிகாரம் பரவலாம். உண்மையில், உன் ஆட்சிப்பகுதியின் ஒவ்வொரு பகுதிக்கும் அது பரவலாம், உன் புலன்களுக்கும் பரவலாம். எனினும், உன் அதிகாரம் ஆகாயம் வரை பரந்திருப்பதல்ல.(15) உன் விருப்பங்களுக்கு எதிராகச் செயல்படும் எதிரிகளிடம் உன் ஆற்றலை வெளிப்படுத்தி, அவர்கள் மீது உன் ஆட்சி அதிகாரத்தை நிறுவலாம். எனினும், உன் ஆட்சி, வானத்தில் பறக்கும் பறவைகள் வரை பரந்திருக்கவில்லை. உண்மையில், (இந்தப் புறாவைப் பாதுகாப்பதன் மூலம்) நீ தகுதியை ஈட்ட விரும்பினால், என்னைப் பார்ப்பதும் (என் பசியைத் தணிக்க முறையானதைச் செய்து, என் உயிரைக் காப்பதும்) உன் கடமையே" என்றது {பருந்து}".(16)
 
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம} தொடர்ந்தார், "பருந்தின் இவ்வார்த்தைகளைக் கேட்ட அந்த அரசமுனி ஆச்சரியத்தால் நிறைந்தான். அவனது {பருந்தின்} இந்தச் சொற்களை அலட்சியம் செய்யாத மன்னன், அவனது {பருந்தின்} வசதிகளையும் கவனிக்க விரும்பி, பின்வரும் சொற்களில் அவனுக்கு மறுமொழி கூறினான்.(17)
 
மன்னன் {விருஷதர்பன்}, "ஒரு காளையோ, பன்றியோ, மானோ, எருமையோ இன்று உனக்காக உரிக்கப்படட்டும். இன்று அத்தகைய உணவை உட்கொண்டு உன் பசியைத் தணித்துக் கொள்வாயாக.(18) என் பாதுகாப்பை நாடிய எவரையும் ஒருபோதும் கைவிடக்கூடாது என்பது என் உறுதியான நோன்பாகும். ஓ! பறவையே, இந்தப் பறவை என் மடியை விட்டு அகலாமல் இருப்பதைக் காண்பாயாக" என்றான்.(19)
 
பருந்து, "ஓ! ஏகாதிபதி, பன்றி, எருது அல்லது பல்வேறு வகையிலான எந்த நீர்க்கோழியின் இறைச்சையையும் நான் உண்ண மாட்டேன். இந்த வகை, அல்லது அந்த வகை உணவில் எனக்கென்ன தேவையிருக்கிறது? என் வகை உயிரினங்களுக்காக நித்தியமாக விதிக்கப்பட்டிருக்கும் உணவைக் குறித்துத் தான் என் காரியம் இருக்க முடியும்? பருந்துகள் புறாக்களை உண்பது நித்திய விதியாகும்.(20,21) ஓ! பாவமற்ற உசீநரா, இந்தப் புறாவிடம் நீ இவ்வளவு பற்றை உணர்வாயெனில், இந்தப் புறாவின் எடைக்கு இணையாக உன் உடல் சதையில் இருந்து எனக்கு இறைச்சியை அளிப்பாயாக" என்றது.(22)
 
மன்னன், "நீ இந்த வகையில் என்னிடம் பேசியதன் மூலம் நீ இன்று எனக்குப் பேருதவி செய்திருக்கிறாய். ஆம், நீ சொன்னதை நான் செய்வேன்" என்றான். இதைச் சொன்ன அந்த ஏகாதிபதிகளில் சிறந்தவன்,(23) தன் சதையை அறுத்துத் தராசில் புறாவுக்கு எதிராக எடை நிறுத்தினான். அதே வேளையில் அரண்மனையின் அந்தப்புரத்தில் இருந்தவர்களும், ரத்தினங்கள் மற்றும் நகைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தவர்களுமான மன்னனின் மனைவிகள்,(24) நடைபெறும் காரியத்தைக் கேள்விப்பட்டு, துன்பத்தால் பீடிக்கப்பட்டு, சோகத்துடன் அலறியபடியே வெளியே வந்தனர்.(25) பெண்கள், அமைச்சர்கள் மற்றும் பணியாட்கள் இவ்வாறு அலறியதன் விளைவால் உண்டான ஆழ்ந்த இரைச்சல் அந்த அரண்மனையில் மேக முழக்கமென எழுந்தது. மிகத் தெளிவாக இருந்த வானம், அனைத்துப் புறங்களிலும் அடர்த்தியான மேகங்களால் சூழப்பட்டது.(26) அந்த ஏகாதிபதியின் வாய்மைக்கு இணக்கமான செயலின் விளைவால் பூமி நடுங்கத் தொடங்கினாள். மன்னன் தன் விலாப்புறங்கள், தோள்கள் மற்றும் தொடைகளில் இருந்து சதை அறுக்கத் தொடங்கி,(27) அந்தப் புறாவுக்கு எதிராக எடைபார்ப்பதற்காகத் தராசில் விரைவாக நிரப்பினான். அவ்வளவும் செய்து புறாவானது தொடர்ந்து எடை அதிகமாகவே இருந்தது.(28)
 
இறுதியாக மன்னன் சதைகளேதுமற்று குருதியால் மறைக்கப்பட்ட வெறும் எலும்புக்கூடாக ஆன பிறகு, தன் மொத்த உடலையே கைவிட விரும்பி, ஏற்கனவே தான் அறுத்த சதைகளை வைத்திருந்த தராசில் ஏறினான்.(29) அந்நேரத்தில், இந்திரனின் தலைமையிலான மூவுலகத்தாரும் அவனைக் காண அந்த இடத்திற்கு வந்தனர். ஆகாயத்தில் இருந்த கண்ணுக்குப்புலப்படாத பூதங்களின் மூலம் தெய்வீகப் பேரிகைகளும், துந்துபிகளும் முழக்கப்பட்டன.(30) மன்னன் விருஷதர்பன், தன் மீது பொழியப்பட்ட அமுத மழையில் நீராடினான். இனிய நறுமணமும், தீண்டலும் கொண்ட தெய்வீக மலர்களும் அவன் மீது மீண்டும் மீண்டும் அபரிமிதமாகப் பொழியப்பட்டன.(31) தேவர்களும், பெரும் எண்ணிக்கையிலான கந்தர்வர்கள், அப்சரஸ்கள் ஆகியோரும், பெரும்பாட்டனான பிரம்மனைச் சுற்றி ஆடிப் பாடுவதைப் போல இவனை {இம்மன்னனைச்} சுற்றி ஆடவும் பாடவும் தொடங்கினர்.(32) அப்போது அந்த மன்னன், (அழகிலும், மகிமையிலும்) முற்றாகத் தங்கத்தாலான மாதும், தங்கம் மற்றும் ரத்தினங்களாலான வளைவுகளைக் கொண்டதும், வைடூரியங்களாலான தூண்களால் அலங்கரிக்கப்பட்டதுமான ஒரு மாளிகையைவிட விஞ்சி மிளிர்ந்து கொண்டிருந்த ஒரு தெய்வீகத் தேரில் ஏறினான்.(33) அரசமுனியான அந்தச் சிபி[1] தன் செயற்தகுதியின் மூலம் நித்தியமான சொர்க்கத்திற்குச் சென்றான். ஓ! யுதிஷ்டிரா, நீயும் உன்னிடம் பாதுகாப்பை நாடி வருவோரிடம் இதே வழியில் நடப்பாயாக.(34)
 
[1] சிபியின் கதை வனபர்வம் பகுதி 196லும், உத்யோக பர்வம் பகுதி 118லும் மற்றும் துரோண பர்வம் பகுதி 58லும் என ஏற்கனவே சொல்லப்பட்டிருக்கிறது.
 
தன்னிடம் அர்ப்பணிப்பு கொண்டோரையும், தன்னைச் சார்ந்திருப்பவர்களையும், அனைத்து உயிரினங்களிடமும் கருணை கொண்டவர்களையும் காப்பாற்றும் ஒருவன் மறுமையில் பேரின்பத்தை அடைவதில் வெல்கிறான்.(35) நீதியும், ஒழுக்கமும் கொண்டவனும், நேர்மை மற்றும் ஒருமைப்பாட்டுடன் கூடியவனுமான ஒருவன் தன் நேர்மையான செயல்களின் மூலம் மதிப்புமிக்க வெகுமதிகள் அனைத்தையும் அடைவதில் வெல்கிறான்.(36) தூய ஆன்மா கொண்டவனும், பெரும் ஞானியும், கலங்கா ஆற்றல் கொண்டவனும், காசிகளின் ஆட்சியாளனும், அரச முனியுமான சிபி, நீதிமிக்கத் தன் செயல்களுக்காக மூன்று உலகங்களாலும் கொண்டாடப்பட்டான்.(37) ஓ! பாரதர்களில் சிறந்தவனே, பாதுகாப்பு நாடி வருவோரை (சிபியைப் போலவே) பாதுகாக்க முனையும் எவரும் அதே மகிழ்ச்சியான கதியையே அடைவார்கள்.(38) அரச முனியான விருஷதர்பனின் இந்த வரலாற்றை உரைப்பவன், நிச்சயம் அனைத்துப் பாவங்களில் இருந்தும் தூய்மையடைவான், இந்த வரலாற்றை மற்றொருவர் சொல்லி கேட்கும் மனிதனும் நிச்சயம் அதே கதியையே அடைவான்" என்றார் {பீஷ்மர்}.(39)


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

 பிராமண மேன்மை! - அநுசாஸனபர்வம் பகுதி – 33

 

The superiority of Brahmanas! | Anusasana-Parva-Section-33 | Mahabharata In Tamil

(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 33)


பதிவின் சுருக்கம் : ஒரு மன்னனின் முக்கியக் கடமை பிராமணர்களை வழிபடுவது என்பதையும், பிராமணர்களின் மேன்மையையும் யுதிஷ்டிரனுக்கு விளக்கிச் சொன்ன பீஷ்மர்...


%25E0%25AE%2595%25E0%25AE%25A3%25E0%25AF
யுதிஷ்டிரன், "ஓ பாட்டா, ஒரு மன்னனுக்காக விதிக்கப்பட்ட செயல்கள் அனைத்திலும் முதன்மையான செயல் எது? எந்தச் செயலைச் செய்வதன் மூலம் ஒரு மன்னன் இம்மை, மறுமை மற்றொரு இரண்டிலும் இன்புறுவதில் வெல்கிறான்?" எனக் கேட்டான்.(1)
 


பீஷ்மர், "ஓ பாரதா, முறையாக அரியணையில் நிறுவப்பட்ட ஒரு மன்னன் பெரும் மகிழ்ச்சியை அடைய விரும்பினால், செயல்கள் அனைத்திலும் பிராமணர்களை வழிபடுவதே அவனுக்கு முதன்மையானதாக விதிக்கப்பட்டிருக்கிறது.(2) முதன்மையான மன்னர்கள் அனைவரும் இதையே செய்ய வேண்டும். ஓ பாரதக் குலத்தின் தலைவா, இதை நன்கறிவாயாக. வேத கல்வி பெற்றவர்களும், நீதிமிக்கவர்களுமான பிராமணர்கள் அனைவரும் ஒரு மன்னன் எப்போதும் மதிப்புடன் வழிபட வேண்டும்.(3)
 
ஒரு மன்னன், விற்கள், ஆறுதலளிக்கும் பேச்சுகள் மற்றும் இன்பநுகர் பொருட்கள் அனைத்தையும் கொடையாகக் கொடுத்து, தன் நகரம் அல்லது மாகாணங்களில் வசிக்கக்கூடியவர்களும், பெருங்கல்வியைக் கொண்டவர்களுமான பிராமணர்கள் அனைவரையும் வழிபட வேண்டும்.(4) இதுவே மன்னர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள செயல்கள் அனைத்திலும் முதன்மையானதாகும். உண்மையில், ஒரு மன்னன் எப்போதும் தன் கண்களை இதில் நிலைநிறுத்தியிருக்க வண்டும். அவன், தன்னையும், தன் சொந்த பிள்ளைகளrயும் பாதுகாப்பதைப் போல அவர்கள் பேணிப் பாதுகாக்க வேண்டும்.(5) (கல்வி மற்றும் புனிதத்தன்மையில் தாங்கள் பெற்றிருக்கும் மேன்மைக்காக) பிராமணர்களுக்கு மத்தியில் பெரும் மதிப்புக்குத் தகுந்தவர்களாக இருப்பவர்களை மன்னன் வழிபட வேண்டும். அத்தகைய மனிதர்கள் கவலையில் இருந்து விடுபடும்போது, மொத்த நாடும் அழகில் சுடர்விடுகிறது.(6)
 
அத்தகைய நபர்கள் துதிக்கப்படத்தக்கவராவர். மன்னன் அத்தகையோருக்குத் தலைவணங்க வேண்டும். உண்மையில் ஒருவன் தன் தந்தைமாரையோ, பாட்டன்மாரையோ எவ்வாறு மதிப்பானோ அதே வகையில் அவர்களை மதிக்க வேண்டும். உயிரினங்கள் அனைத்தின் இருப்பும் வாசவனைச் சார்ந்திருப்பதைப் போலவே மனிதர்கள் பின்பற்றும் ஒழுக்க வழிகள் அவர்களையே சார்ந்திருக்கின்றன.(7) கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலையும், பெரும் சக்தியையும் கொண்ட அத்தகைய மனிதர்கள் சீற்றமடைந்தால், தங்கள் விருப்பத்தால் மட்டுமே, அல்லது மந்திரங்களைச் சொல்வதால் மட்டுமே, அல்லது (தவச் சக்தியின் மூலம் பெறப்பட்ட) பிற வழிமுறைகளின் மூலம் மொத்த நாட்டையும் எரித்து விட வல்லவர்களாக இருப்பார்கள்.(8) அவர்களை அழித்துவிடக்கூடிய ஏதொன்றையும் நான் காணவில்லை. அவர்களது சக்தி அண்டத்தின் இறுதி எல்லையையும் அடையவல்ல நிலையில் கட்டுப்படுத்தப்பட முடியாததாக இருக்கிறது. கோபத்தில் இருக்கும்போது, காட்டின் மீது விழும் சுடர்மிக்கத் தழலைப் போலவே மனிதர்கள் மற்றும் பொருட்களின் மீது அவர்களது பார்வைகள் விழும்.(9)
 
பெரும் துணிவுமிக்க மனிதர்களும் அவர்களது பெயரைக் கேட்டாலே அச்சத்தால் பீடிக்கப்படுவார்கள். அவர்களது குணங்களும், சக்திகளும் அளக்கமுடியாதனவும், இயல்புக்கு மீறியனவுமாகும். அவர்களில் சிலர், புற்கள் மற்றும் கொடிகளால் மைக்கப்பட்ட வாய்களைக் கொண்ட கிணறுகள் மற்றும் குழிகளைப் போலவும், அதே வேளையில் வேறு சிலர், மேகங்களும் இருளும் அற்ற தெளிந்த வானம் போலவும் இருக்கிறார்கள்.(10) அவர்களில் (துர்வாசர் முதலியவர்களைப் போன்ற) சிலர் கடும் மனோநிலையைக் கொண்டவர்கள் இருக்கின்றனர். அவர்களில் (கௌதமர் மற்றும் பிறரைப் போன்ற) சிலர் மென்மையான மனநிலை கொண்டவர்களும் இருக்கின்றனர். அவர்களில் (அசுரர் வாதாபியை விழுங்கிய அகஸ்தியரைப் போன்ற) சிலர் பெரும் தந்திரக்காரர்களாக இருக்கிறார்கள். அவர்களில் சிலர் தவப்பயிற்சிகளில் அர்ப்பணிப்புமிக்கோராக இருக்கிறார்கள்.(11) அவர்களில் (உத்தாலகரின் ஆசானைப் போல) உழவுப் பணிகளில் ஈடுபடுபவர்களாகவும் இருக்கின்றனர். அவர்களில் சிலர் (ஆசானிடம் பணி செய்த உபமன்யுவைப் போல) பசுப் பராமரிப்பில் ஈடுபடுகின்றனர். அவர்களில் சிலர் பிச்சையெடுத்து வாழ்கின்றனர். அவர்களில் சிலர் (ஆதிகாலத்து வால்மீகி போலவும், பஞ்ச கால விஷ்வாமித்திரரைப் போலவும்) கள்வராகவும் இருக்கிறார்கள். அவர்களில் சிலர் (நாரதரைப் போல) சச்சரவுகளை உண்டாக்குவதிலும், அவற்றில் ஈடுபடுவதிலும் விருப்பமுள்ளவர்களாக இருக்கிறார்கள். மேலும் சிலர், (பரதரைப் போல) நடிகர்களாகவும், நடனக் கலைஞர்களாகவும் இருக்கின்றனர்.(12)
 
அவர்களில் சிலர், (உள்ளங்கை நிறைய உள்ள நீரைப் போல மொத்த கடல்நீரையும் பருகிய அகஸ்தியரைப் போல) இயல்புக்குமீறிய செயல்கள் மற்றும் சாதாரணச் செயல்கள் அனைத்தையும் செய்யத்தகுந்தவர்களாவர். ஓ பாரதக் குலத்தின் தலைவா, பிராமணர்கள் பல்வேறு இயல்புகளையும், நடத்தைகளையும் கொண்டவர்களாவர்.(13) கடமைகள் அனைத்தையும் அறிந்தவர்களும், அழமொழுகுபவர்களும், பல்வேறு செயல்களில் அர்ப்பணிப்புள்ளவர்களும், பல்வேறு வகைத் தொழில்களில் ஈடுபட்டுத் தங்கள் வாழ்வாதாரத்தை அடைபவர்களுமான பிராமணர்களை எப்போதும் ஒருவன் புகழவே வேண்டும்.(14) ஓ மனிதர்களின் ஆட்சியாளா, பித்ருக்கள், தேவர்கள் மற்றும் (மூன்று வகை) மனிதர்கள், பாம்புகள், ராட்சசர்கள் ஆகியோரைவிட முதிய பிராமணர்கள் உயர்ந்த அருளைப் பெற்றவர்களாவர்.(15)
 
தேவர்களாலோ, பித்ருக்களாலோ, கந்தர்வர்களாலோ, ராட்சசர்களாலோ, அசுரர்களாலோ, பிசாசங்களாலோ இந்த மறுபிறப்பாளர்களை வெல்ல முடியாது.(16) பிராமணர்கள், தேவனல்லாத ஒருவனையும் தேவனாக்கவல்லவர்களாவர். மேலும் தேவ நிலையில் உள்ளோரை அந்நிலையற்றவர்களாக்கவும் அவர்களால் இயலும். அவர்கள் எவனை மன்னனாக்க விரும்புவார்களோ அவனே மன்னனாவான். மறுபுறம், அவர்களால் விரும்பப்படாதவர்கள் {அனைத்தையும் தோற்று மீண்டும்} சுவற்றுக்கே செல்ல வேண்டும்.(17) ஓ மன்னா, நான் உனக்கு உண்மையாகவே சொல்கிறேன், பிராமணர்களை இகழ்ந்து, அவர்களை நிந்திக்கும் மூடர்கள் நிச்சயம் அழிவையே அடைவார்கள்.(18)
 
ஓ மன்னா, புகழ்வதிலும், இகழ்வதிலும் திறம் கொண்டவர்களும், பிறரின் புகழ் மற்றும் இழிவுக்குக் காரணம் அல்லது மூலமாக இருப்பவர்களுமான பிராமணர்கள், தங்களுக்குத் தீங்கிழைக்க முனைவோரிடம் எப்போதும் கோபம் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.(19) பிராமணர்கள் எந்த மனிதனைப் புகழ்கிறார்களோ, அவன் செழிப்பில் வளர்வான். பிராமணர்களால் நிந்திக்கப்பட்டுக் கைவிடப்படும் மனிதன் விரைவில் தோல்வியையும் ஏமாற்றத்தையும் அடைகிறான்.(20) சகர்கள், யவனர்கள், காம்போஜர்களில் பிராமணர்கள் இல்லாததன் விளைவால் க்ஷத்திரிய இனக்குழுக்களும் இழிந்த சூத்திர நிலையை அடைந்து வீழ்ச்சியடைந்தன.(21)
 
திரவிடர்கள், களிங்கர்கள், புலிந்தர்கள், உசீநரர்கள், கோலிஸர்ப்பர்கள், மாஹிஷர்கள் மற்றும் பிற க்ஷத்திரியர்களுக்கு(22) மத்தியில் பிராமணர்கள் இல்லாததால், அவர்கள் சூத்திரர்களாக இழிநிலையை அடைந்தனர். ஓ வெற்றிமிக்க மனிதர்களில் முதன்மையானவனே, அவர்களை {பிராமணர்களை} வெல்வதை விட அவர்களிடம் தோற்பதே ஏற்புடையது.(23) இவ்வுலகில் உள்ள உயிரினங்கள் அனைத்தையும் கொல்லும் எவனும், ஒற்றைப் பிராமணனைக் கொன்றதைப் போன்ற கொடிய பாவத்தை ஈட்டுவதில்லை.(24)
 
ஒரு பிராமணனை இழித்தோ, பழித்தோ எவனும் ஒருபோதும் பேசக்கூடாது. எங்கே பிராமணர்கள் இகழப்படுகிறார்களோ, அங்கே (அதைச் சொல்பவனையும், அவனது வார்த்தைகளையும் தவிர்க்கும் வகையில்) ஒருவன் தன் தலையைத் தொங்கப் போட்டு அமர வேண்டும், அல்லது அந்த இடத்தைவிட்டு அகன்று செல்ல வேண்டும்.(25) எந்த மனிதன் பிராமணர்களோடு சச்சரவு செய்வானோ, அவன் இவ்வுலகில் இன்னும் பிறக்கவில்லை, அல்லது பிறந்தால் மகிழ்ச்சியாகத் தன் வாழ்நாளைக் கடத்துவதில்லை.(26) காற்றை எவனும் தன் கையால் பிடிக்க முடியாது. நிலவை எவனும் தன் கரத்தால் தீண்ட முடியாது. பூமியை எவனும் தன் கரங்களில் தாங்கிக் கொள்ள முடியாது. அதே போலவே, ஓ மன்னா, எவனாலும் இவ்வுலகில் பிராமணர்களை வெல்ல முடியாது" என்றார் {பீஷ்மர்}.(27)


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard