சங்கத் தமிழ் இலக்கிய நூல்களில் பகவத் கீதையின் கருத்துக்கள் மிகவும் பரவலாகக் காணப்படுகின்றன. மேலும் இவைகளை சம்ஸ்கிருதம் கற்று, பகவத் கீதையை நன்கு படித்து, மனதில் ஏற்றி வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பாடியுள்ளனர் என்றே சொல்லவேண்டியுள்ளது.
கீதையின் கருத்துக்கள் திருக்குறளில் எண்ணற்ற இடங்களில் வருவதை கணக்கற்ற தமிழ் அறிஞர்கள் எழுதிவிட்டார்கள். ஆனால் சங்கத் தமிழ் நூல்களை அவர்கள் மேற்கோள் காட்டவில்லை.
பத்ரம், புஷ்பம், பலம், தோயம்………
கீதையில் கண்ணன் கூறுகிறான்: எவன் எனக்கு பக்தியுடன் பச்சிலையோ பூவோ, பழமோ, நீரோ கொடுக்கிறானோ அதை நான் சாப்பிடுகிறேன்(9-26)
கபிலர் (புறம் 106);
நல்லவும் தீயவும் அல்ல குவி இணர்ப் புல் இலை எருக்கம் ஆயினும்,உடையவை கடவுள் பேணேம் என்னா; ஆங்கு, மடவர் மெல்லியர் செல்லினும் கடவன் பாரி கை வண்மையே
அதாவது நல்லதாயினும் தீயதாயினும் அல்லாத, குவிந்த பூங்கொத்தும் புல்லிய இலையும் உடைய எருக்கம் பூவாயினும், ஒருவன் உள்ளன்புடன் சூட்டினால் அதனைத் தெய்வங்கள் விரும்பி ஏற்குமேயன்றி, யாம் அவற்றை விரும்பேம் என்று கூறா…………..
இது கீதையின் தூய மொழிபெயர்ப்பு!! இதில் மேலும் இரண்டு விஷயங்களும் உள்ளன. கபிலர் என்பது பிள்ளையாரின் மற்றொரு பெயர். பிள்ளையாருக்குப் பிடித்தது எருக்கம் பூ. சங்க காலத்தில் விநாயகர் வழிபாடு பெரிய அளவுக்கு நடைபெறவில்லை. ஆயினும் கபிலர் விநாயகரை நினைத்தே பாடினாரோ?
மற்றொரு விஷயம் “நல்லவும் தீயவும்”– இதை வட மொழியில் “த்வந்த்வம்”(இரட்டைகள்) என்று சொல்லுவர். கீதை முழுவதும் இது போல நூற்றுக் கணக்காண “இரட்டைகளை”க் காணலாம். நல்லவர்களைக் காக்கவும் தீயவர்களை அழிக்கவும் யுகம் தோறும் அவதரிப்பேன், மற்றும் சுக,துக்க, சீத உஷ்ண—இப்படி கீதை முழுவதும் இரட்டைகள் வரும். கபிலரின் பாடல் கீதையின் மொழிபெயர்ப்பு என்பதற்கு இந்த த்வந்த்வங்களும் சான்று. இதோ மேலும் ஒரு எடுத்துக் காட்டு:
நன் பகல் அமையமும் இரவும் போல (பாகை சாத்தன் பூதனார்)
அறம், பொருள், இன்பம்
வள்ளுவரும், தொல்காப்பியரும் (சூத்திரம் 1038), புறநானூற்றுப் புலவர்களும் வடமொழியைக் கரைத்துக் குடித்தவர்கள்!! வேத, இதிஹாச, புராணங்களில் வரக்கூடிய “தானம் தவம்” என்ற சொற்களை அப்படியே கொஞ்சமும் கூசாமல் வடமொழியிலேயே பாடல்களில் பயன்படுத்துகின்றனர். இதே போல தர்ம, அர்த்த, காம, மோக்ஷ என்பதையும் வரிசை மாறாமல் அப்படியே பயன்படுத்துகின்றனர். இதில் வள்ளுவர் எல்லோரையும் மிஞ்சிவிட்டார். முப்பால் என்பதே அறம்,பொருள் இன்பம் (தர்மார்த்தகாம).
கண்ணன் கீதையில் தர்ம (அறம்),அர்த்த (பொருள்), காம (இன்பம்) கூறிய இடங்கள்:18-34.
மேலும் சில: தொல்காப்பியம் 1038, கலி.141, திருவள்ளுவ மாலையில் 5 இடங்கள்.
உ.வே.சாமிநாத அய்யர் புறநானூறு பாடல் முறைவைப்பு அறம்,பொருள், இன்பம் என்ற தலைப்பில் பகுக்கப்பட்டுள்ளதாகக் கருதுகிறார். ஒரு நூல் பிரதியில் அறநிலை என்ற குறிப்பு இருந்ததை வைத்து இன் நூல் அற நிலை, பொருள் நிலை, இன்ப நிலை என முப்பெரும் பகுதியுடையதாக ஊகிக்கலாம் என உ.வே சாமிநதைய்யர் குறித்துள்ளார். (பக்கம் 4, புறநானூறு, எஸ்.ராஜம் வெளியீடு)
புறநானூற்றில் 358 (வால்மீகியார்),362 (சிறு வெண்டேரையார்) – சுவர்க்கம் செல்ல தானம்
திருக்குறளில் தானம், தவம்;19, 295
கீதோபதேசம்
வல்லார் ஆயினும் வல்லுநர் ஆயினும் புகழ்தல் உற்றோர்க்கு மாயோன் அன்ன உரைசால் சிறப்பின் புகழ்சார் மாற! (புறம் 57, காவிரிப் பூம்பட்டினத்து காரிக்கண்ணனார்)
இந்த வரிகள் பகவத் கீதை உபதேசம் செய்ததைக் குறிப்பதாகப் பல பெரியோர்கள் உரை எழுதியுள்ளனர். இதன் பொருள்: வல்லவர் ஆனாலும் அல்லாதவர் ஆனாலும் நின்னைப் புகழ்ந்து போற்றியவர்க்கு மாயோனைப் போல துணை நின்று அருளிக் காக்கும் புகழ் அமைந்தவனே! மாறனே!….
பரித்ராணாய சாதூனாம்…….
கீதையில் கண்ணன் கூறுகிறான்(4-8): நல்லோரைக் காப்பதற்கும் தீயோரை அழிப்பதற்கும் யுகம் தோறும் அவதரிப்பேன்
கீதையில் கண்ணன் கூறுகிறான் (18-61):இயந்திரத்தில் ஏற்றிவைக்கப்பட்ட பொம்மைகள் போல எல்லாப் பிராணிகளையும் கடவுள் ஆட்டிவைக்கிறான்.
இதையே முதுகண்ணன் சாத்தனாரும் கூறுகிறார்: விழாவிலே ஆடும் கூத்தரைப் போல வகை வகையாக ஆடிக் கழிவதுதான் இவ்வுலக வாழ்வு. நாடகமே உலகம் என்பதை ஷேக்ஸ்பியரும் மாக்பெத் நாடகத்தில் கூறுகிறார்.
கோடியர் நீர்மை போல முறை முறை ஆடுநர் கழியும் இவ்வுலகத்து, கூடிய நகைப்புறன் ஆக நின் சுற்றம்! (புறம் 29, முதுகண்ணன் சாத்தனார்) கீதை 18-61,குறள் 332,விவேக சூடாமணி 292
க்லைப்யம் மஸ்மகம (பேடித்தனத்தை கைவிடு)
கீதையில் கண்ணன் கூறுகிறான்(2-3): எதிரிகளை எரிப்பவனே, அர்ஜுனா! பேடித்தனத்தைக் கை விடு. உன்னிடத்தில் இது சிறிதும் பொருந்தாது.
இதற்கு முந்திய ஸ்லோகத்தில் வானவர் நாட்டிற்கான வழியை அடைக்கும் பழிக்கிடமான மனக் குழப்பம் உனக்கு எப்படி வந்தது என்று கேட்கிறான் கண்ணன்.
கோவூர் கிழாரும் கண்ணன் கூறியதையே கூறுகிறார்: அறத்தை உடையவனாக இருந்தால் இது உன் கோட்டைதான் என்று திறந்து விடு. வீரம் உடையவனாக இருந்தால் போர் செய்வதற்காக கதவைத் திறந்து வெளியே வா. இரண்டும் செய்யாது மதிற் கதவுகளை அடைத்து உள்ளே உட்கார்ந்து இருப்பது வெட்கக் கேடு.
கீதையில் கண்ணன் கூறுகிறான் (3-5, 3-8) : எவனும் ஒரு வினாடி கூட கருமம் செய்யாமல் இருக்க முடியாது. நீ விதிக்கப்பட்ட கடமையைச் செய். கருமம் செய்யாமையினும் கருமம் செய்தல் சிறந்தது அன்றோ! கருமம் செய்வதற்கே உனக்கு அதிகாரம். அதன் பற்றில் அல்ல (2-47)
பாலை பாடிய பெருங் கடுங்கோ (குறு.135) கூறுகிறார்: தொழில்தான் ஆண் மக்களுக்கு உயிர். இல்லத்தில் வாழும் பெண்களுக்கு கணவனே உயிர்.
வினையே ஆடவர்க்கு உயிரே வாணுதல் மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிரே அகம் 33: வினை நன்றாதல் வெறுப்பக் காட்டி
மேலும் சில: குறள் 615
செல்வத்தின் பயனே ஈதல்
கீதையில் கண்ணன் கூறுகிறான் (3-13): எவர்கள் தமக்கெனவே சமைக்கிறார்களோ அவர்கள் பாவிகள். அவர்கள் பாவத்தையே உண்கிறார்கள்.
(புறம் 189 நக்கீரனார்): உண்பது நாழி: உடுப்பவை இரண்டே; பிறவும் எல்லாம் ஓரொக்கும்மே; அதனால் செல்வத்துப் பயனே ஈதல்
புறம் 182( இளம்பெருவழுதி) இந்திரர் அமிழ்தம் இயைவது ஆயினும், இனிது எனத் தமியர் உண்டலும் இலரே
சாஸ்வத்ஸ்ய சுகஸ்ய (கீதை 14-27): யாண்டும் இடும்பை இல (குறள்) தொல்காப்பியரும் "எல்லா உயிர்க்கும் இன்பம்" என்று கூறுகிறார்.
ஐங்குறுநூற்றில் ஓரம் போகியார் :(இவர் வேத, உபநிஷத மந்திரங்களை அப்படியே மொழி பெயர்த்துள்ளார். இந்தக் கருத்து கீதையில் பல இடங்களில் வருகிறது)
நெற்பல பொலிக பொன்பெரிது சிறக்க விளைக வயலே வருக இரவலர் பால் பல ஊறுக பகடு பல சிறக்க பகைவர் புல் ஆர்க பார்ப்பார் ஓதுக பசியில்லாகுக பிணிகேண் நீங்குக வேந்து பகை தணிக யாண்டு பல நந்துக அறநனி சிறக்க அல்லது கெடுக அரசு முறை செய்க களவில்லாகுக நன்று பெரிது சிறக்க தீதில்லாகுக மாரி வாய்க்க வள நனி சிறக்க
பிராமணர்கள் எங்கே பூஜை செய்தாலும் முடிவில்– ஸ்வஸ்தி ப்ரஜாப்ய பரிபாலயந்தாம்– என்ற மந்திரத்தையும், — காலே வர்ஷது பர்ஜன்ய: –என்ற மந்திரத்தையும்– ஸர்வேஷாம் சாந்திர் பவது/ மங்களம் பவது –என்ற மந்திரத்தையும் சொல்லி வாழ்த்துவார்கள். இதை –வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்– என்ற பாடலாக ஞான சம்பந்தரும் மொழி பெயர்த்துள்ளார். சைவர்கள் இதையே –வான்முகில் வளாது பெய்க—என்ற பாடலில் கூறுவார்கள். ஆனால் ஒரம் போகியார் பல மந்திரங்களைத் தொகுத்து அழகாக சுருங்கச் சொல்லி விளங்கவைத்து விட்டார்.
புறம் 214 (கோப்பெருஞ் சோழன்): யானை வேட்டைக்குப் போகிறவன் வெல்வான். குறும்பூழ் வேட்டைக்குப் போவோன் அது இல்லாமலும் திரும்புவான். உயர்ந்த குறிக்கோளுடன் கூடிய உயர்ந்தோனாக விளங்குக. இமயம் போல் புகழ் அடைக.
யானை வேட்டுவன் யானையும் பெறுமே குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே அதனால், உயர்ந்த வேட்டத்து உயர்ந்திசினோர்க்கு …………. இமயத்துக் கோடுயந்தென்ன தம்மிசை நட்டு
புறம் 190 (நல்லுருத்திரன்): எலி, திருடிச் சேமித்துத் தின்னும். புலி இடப் பக்கம் விழுந்த பன்றியை விட்டு வலப்பக்கத்து விழுந்த யானையையே சாப்பிடும். அப்படிப்பட்ட உயர்ந்த நோக்கம் கொண்டோருடன் சேர்வாயாக.
கடல் நிரம்பாத அதிசயம் (கீதை 2-70)
கீதையில் கண்ணன் கூறுகிறான்: எங்கும் நிரம்பியதும் நிலை குலையாததுமான கடலில் நதிகள் போய் சங்கமிப்பது போல ஆசைகள் எல்லாம் எவனை அடைகின்றனவோ அவன் அமைதியை அடைவான். ஆசையைத் தொடர்பவனுக்கு அமைதி இல்லை. பரணர் கூறுகிறார்: கடல்களில் எவ்வளவோ நதிகள் கலந்தாலும் அது நிரம்பி வழிவதில்லை. கடலிலிருந்து எவ்வளவு மேகங்கள் நீரை உறிஞ்சினாலும் அது வற்றுவதில்லை.
மழைகொள்ளக் குறையாது.. புனல் புக நிறையாது விலங்கு வளி கடவும் துளங்கிருங் கமஞ்சூள் –(பதிற்றுப் பத்து 45)
உவமை
பிறர்க்கு உவமம்தான் அல்லது தனக்கு உவமம்பிறர் இல் (உலோச்சனார், 377)
உரவோர் எண்ணினும் மடவோர் எண்ணினும் பிறர்க்கு நீ வாயின் அல்லது நினக்குப் பிறர் உவமம் ஆகா (ப. பத்து, அரிசில் கிழார்)
கீதையில் கண்ணன் கூறுகிறான் (கீதை 6-32:) எவன் எங்கும் சுகமாயினும் துக்கமாயினும் தன்னை உபமானமாகக் கொண்டு சமமாகப் பார்க்கிறானோ அந்த யோகிதான் சிறந்தவன் என்பது என் முடிவு
உவமை, உவமேயம் ஆகியன சம்ஸ்கிருத சொற்கள். ஆயினும் சங்கப் புலவர்களோ தொல்காப்பியரோ அவைகளை அப்படியே பயன் படுத்த அஞ்சியதில்லை!
பொருள்: எல்லா ஊர்களும் எம் ஊரே, எல்லாரும் எம் உறவினரே. தீமையும் நன்மையும் யாரும் தருவதில்லை. நம்மால்தான் வருகிறது. இறப்பது புதிய செய்தி அல்ல.வாழ்வதால் மகிழ்ச்சியோ அல்லது அதை வெறுப்பதோ இல்லை பெரியாற்று வெள்ளத்தில் மிதவை அடித்துச் செலவது போல எல்லா உயிர்களும் முறையாகக் கரை சேரும் என்பது துறவியர் கண்ட உண்மை. ஆகையால் பெரியோரை மதிக்கவும் சிறியோரை இகழவும் தேவை இல்லை. அவரவர் ஒழுக்கத்தையே கருத்திற் கொள்வோம் (ஒன்றாகக் காண்பதே காட்சி என்பதை அழகாகச் சொல்லிவிட்டார்)
நன்கணியார் (194) கூறுகிறார்:
என்ன உலகம் இது? ஒரு வீட்டில் சாவுக் கொட்டு. மற்றொரு வீட்டில் திருமண மேளம். ஒரு வீட்டில் மகளிர் அழுகை. இன்னொரு வீட்டில் மகளிர் பூச்சூடல். இவ்வாறு இன்பமும் துன்பமும் சேர படைத்துவிட்டானே கருணையே இல்லாத பிரம்மா! இதை உணர்ந்து அல்லாதவற்றை ஒதுக்கி இனியவற்றை மட்டும் கண்டு மகிழுங்கள் ("இன்னாது அம்ம இவ் உலகம்; இனிய காண்க, இதன் இயல்புணர்ந்தோரே")
(190 முதல் 198 வரை எல்லாம் தத்துவப் பாடல்கள்)
போரின் கொடுமைகள்
போரின் கொடுமைகள் பற்றி புறம் 62ல் கழாத்தலையார் பாடுகிறார். இதையே கீதையின் முதல் அத்தியாயத்தில் அர்ஜுனனும் கூறுகிறான்.
ஆணின் ஆறு பண்புகள்
நற்றிணை 160: நீதி, நட்பு, இழிசெயலைக் கண்டு நாணுதல், பிறர்க்கு பயன்படல், (பரோபகாரம்), நற்குணங்கள், பிறை தன்னை அறிந்து ஒழுகும் பாங்கு ஆகிய 6 பண்புகளை நான் கடைபிடிக்கிறேன்.
அகம் 173 பாடலில் முள்ளியூர் பூதியாரும் அறநெறியில் ஒழுக வேண்டும், பிறர் துன்பத்தைத் துடைக்க வேண்டும் என்று கூறுகிறார். கீதையின் 12ம் அத்தியாயத்தில் கண்ணன் பல நற்பண்புகளை விவரிக்கிறார். கீதை முழுதுமே நூற்றுக் கணக்கான இடங்களில் இத்தகைய கருத்துக்கள் வருகின்றன.
இம்மை, மறுமை—அற நிலை வணிகன்
கீதையில் கண்ணன் கூறுகிறான் (2-42/43): வேதத்தின் பெயரால் சொற்சிலம்பம் ஆடுவோர் அழகான வார்த்தைகளால் சுவர்க்கத்தை மனதிற் கொண்டு காரியம் செய்வார்கள்.
மேலும் சில: கீதை 2-49; 17-20,21,22
ஆய் பற்றி முடமோசியார் (புறம் 134)
இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் எனும் அறநிலை வணிகன் ஆய் அல்லன்
கீதையிலும் தமிழ் இலக்கியத்திலும் நூற்றுக் கணக்கான இடங்களில் வருவதால் இனியும் கூறத் தேவையில்லை
இன்னும் பல தலைப்புகளில் ஒற்றுமை உள்ளது. அவைகளை எல்லாம் GREAT MEN THINK ALIKE என்று விட்டுவிடலாம். ஆனால் ஒன்று மட்டும் உண்மை. இந்திய சிந்தனையில் ஆரிய திராவிட என்ற பிரிவினைவாதத்துக்கு இடமே இல்லை. இமயம் முதல் குமரி வரை அற்புதமான ஒரே சிந்தனை!! அதிசயமான ஒரே அணுகுமுறை. படிக்கப் படிக்கத் தெவிட்டாது!!