New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திருக்குறளில் சூழலியல் சிந்தனைகள் முனைவர் அ.ஜான் பீட்டர்


Guru

Status: Offline
Posts: 23904
Date:
திருக்குறளில் சூழலியல் சிந்தனைகள் முனைவர் அ.ஜான் பீட்டர்
Permalink  
 


திருக்குறளில் சூழலியல் சிந்தனைகள்

                              திருக்குறளில் சூழலியல் சிந்தனைகள்
 
முனைவர் அ.ஜான் பீட்டர்
 
இணைப் பேராசிரியர், தமிழ்த்துறை, திரு.வி.க.அரசு கலைக் கல்லூரி,திருவாரூர் – 610 001
 
261.jpg
 
இவ்வுலகம் மனிதன் உயிர் வாழ மட்டும் உருவானதன்று; மரம்செடிகள், பூச்சிகள் பறவைகள் முதல் நீருயிரிகள், வனவிலங்குகள் வரை அனைத்தும் மனிதனோடு உலகத்தைப் பகிர்ந்து கொள்கின்றன. பல்லுயிர்களும் அவ்வவற்றின் இயல்புகளோடும் உரிமைகளோடும் வாழ்வதற்கென்று அமைந்திருப்பதே இவ்வுலகம் ஆகும்.
155.jpg
 
நிலமும் நீரும் காற்றும் இவ்வுலகத்தின் அனைத்து வளங்களும் அனைவருக்கும் உரிமையுடையன என்ற நிலையை மறந்து, நாளைய மனிதர்களுக்கும், ஏன் தமது வழித் தோன்றல்களுக்கும் கூட அதனை விட்டு வைக்க நினையாமல் மனிதன் தனக்கே தனக்கென்று இவ்வுலகத்தை உரிமையாக்கிக் கொண்டு உலகின் வளங்களனைத்தையும் கைப்பற்றும் போதும் பிற உயிர்களின் உரிமைகளைக் கைக்கொள்ளும் போதும்தான் உயிரினச் சமநிலை பெரிதும் பாதிக்கப்படுகின்றது. இன்று உலகெங்கும் இதுகுறித்தான விழிப்புணர்வுதான் பேசு பொருளாகியிருக்கிறது.
எக்காலத்தையும் எந்நாட்டையும் சேர்ந்த அறிஞர்களும் சான்றோர்களும்  பல்லுயிர்களின் நலமும் இன்றியமையாதது என்பதை வலியுறுத்தியே வந்திருக்கிறார்கள்; இயற்கையின் வளங்கள் எந்நாளுக்குமாகக் காக்கப்பட வேண்டியன என்பதை உணர்த்தியிருக்கிறார்கள். ஐம்பூதங்கள் என நிலம் நீர் காற்று வான் தீ ஆகியவற்றை வகைபடுத்தி அவை நம்மால் கட்டுப்படுத்த இயலாதன ; கட்டுப்படுத்தப்படக் கூடாதன என்று அவர்கள் கருதினர்.
இயற்கையோடு இயைந்த வாழ்வை நடாத்தியவனாகத் தமிழன் வாழ்ந்தான் என்பதற்குச் சங்க இலக்கியங்கள் சான்று பகர்கின்றன. அன்பின் ஐந்திணையாக இருப்பினும் சரி, புறத்திணையாக இருப்பினும் சரி, அதற்குக் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, வெட்சி, வஞ்சி, கரந்தை, வாகை, உழிஞை, என மலர்த் தாவரங்களின் பெயரைச் சூட்டி மகிழ்ந்தமையும் ஐந்திணைக்கான நிலப்பாகுபாடும் அவற்றிற்கான உயிரினங்கள் உள்ளிட்ட கருப்பொருள்களை வகுத்தமையும் இயற்கையின் மீதான ஆதித் தமிழனது ஈடுபாட்டினைக் காட்டி நிற்கின்றன.
சூழலியல் என்ற சொல் அய்காஸ் (eicos) என்ற கிரேக்கச் சொல்லை மூலமாகக் கொண்டு தோன்றியது ஆகும். மனிதன் தன் உறைவிடத்தையும் உறைவிடத்தின் பண்புகளையும் சிறப்புக் கூறுகளையும் அறிந்து தெரிந்து கொள்ளும் சிந்தனை முறையே சுற்றுப்புறச் சூழல் சிந்தனை என்று ஏர்னெஸ்ட் ஹெகல் குறிப்பிடுகிறார்.
தமிழில் சூழலியல் குறித்த கருத்துகளை நேரிடையாக வலியுறுத்தும் அறிவுசார் நூல்களைப் பழந்தமிழர்கள் இயற்றி வைக்க வில்லையே தவிர, அக்கருத்துகள் இயல்பூக்கமாக அவர்களிடம் குடிகொண்டிருந்தன என்பதை அவர்கள் படைத்த படைப்பிலக்கியங்களில்,  தம் உள்ளக் கருத்துகளை ஆங்காங்கே அவர்கள் விதைத்துச் சென்றிருப்பதைக் கொண்டு, நம்மால் உணர முடிகிறது.
உலகத்தின் பொதுமறையாகக் கருதப்படும் திருக்குறளில் சூழலியல் பற்றிய கருத்துக்கள் விரவியுள்ளன என்பதை நாம் கண்டறியலாம். தமிழ்நாட்டிற்கும் தமிழினத்திற்கும் மட்டும் என்றில்லாமல் அனைத்து இனத்தையும் சார்ந்த அனைவருக்கும் அறக்கருத்துகளை வலியுறுத்தும் நூலான திருக்குறளில், ‘எல்லாக் கருத்துக்களும் இதன்பாலுள் உள’ என்று கூறுவார் கூற்றை மெய்ப்பிப்பதைப் போன்று, இன்றைய சூழல் குறித்த விழிப்புணவர்வு கருத்துக்களையும் திருவள்ளுவர் வழங்கியிருக்கிறார்.
பரத்தமையும், புலால் நுகர்வும் கள்ளுண்ணுதலும் தவறன்று என்று கருதப்பட்ட சங்ககாலத்தைத் தொடர்ந்து முதன்முதலாக அவை விலக்கப்பட வேண்டுவன என்று புரட்சிகரமாக எழுதியவர் திருவள்ளுவர். மனிதனின் வாழ்வியல் சூழலைப் பாதிக்கக் கூடியவற்றைத் தவறாது கடிந்து பேசத் தயங்காத திருவள்ளுவர், சுற்றுச் சூழலைப் பாதிக்கக் கூடியனவற்றைக் கடியாது போயிருப்பாரா?
பல்லுயிர் ஓம்புதல்
உலகில் காணும் அனைத்து உயிர்களுக்குமானது இவ்வுலகம் என்று கருதுவது சுற்றுச்சூழல் சார்ந்த சிந்தனையாகும். இக்கருத்தை மிக நுட்பமாகத் திருவள்ளுவர் தம் திருக்குறட்பாக்கள் பலவற்றில்  குறிப்பிட்டிருக்கிறார்.
‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்..’ (972)
‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்..’ (322)
என்ற இரண்டு குறட்பாக்களில் அவர் பயன் படுத்திய உயிர் என்ற சொல்லாட்சி கருதத் தக்கது. திருவள்ளுவர் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற குறட்பாவில் மனிதர்களின் ஏற்றத்தாழ்வு - சாதி மறுப்பினை மட்டும் கூறவில்லை. மாறாக அதனையும் தாண்டி, ஓரறிவுடைய உயிர் முதல் ஆறறிவுயிர் மனிதன் உட்பட அனைத்து உயிர்களும் பிறப்பால் ஒத்தன என்று வலியுறுத்த முற்படுகிறார். இதன்பொருட்டே உயிர் என்ற சொல்லை அவர் உணர்ந்து கையாண்டிருக்கிறார் என்பது அறிந்தின்புறத்தக்கதாகும்.
208.png
 
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள்ளுள் எல்லாம் தலை’ (322) என்ற குறட்பாவிலும் கூட மனிதநேயத்தைத் தாண்டிய திருவள்ளுவரின் பல்லுயிர் நேயம் வெளிப்படுகிறது. பல உயிர்களோடு நாம் பகிர்ந்துண்போம்; அதுவே தலையாய அறமாகும் என்ற அவரது கருத்து போற்றத்தக்கது.
            இதன் தொடர்ச்சியாக,
‘அறிவினான் ஆகுவதுண்டோ பிறிதின் நோய்
தன்நோய் போல் போற்றாக் கடை’ (315)
என்ற குறட்பாவின் கருத்தும் அமைகிறது. பிறரின் நோய் என உயர்திணையில் குறிப்பிடாமல் பிறிதின் நோய் என்ற சொல்லாட்சியை அவர் கொண்டதன் விளைவாக அனைத்துயிர்களையும் கருதி இக்குறட் கருத்து கூறப்பட்டிருப்பதை நாம் உணரலாம். தன்னுயிர் போல் பிற உயிர்களையும் எண்ணிக் கருணை கொண்டு ஒழுகுபவன் எஞ்ஞான்றும் துன்பம் உறுதலில்லை என்பதை,
‘மன்னுயிர் ஓம்பி அருளாள்வாற்கு இல்லென்ப
தன்னுயிர் அஞ்சும் வினை ‘(244)
என்ற மற்றொரு குறட்பாவின் வழியாக அவர் வலியுறுத்துகிறார்.  
எவ்வுயிராயினும் அவற்றைத் தம் நலம் கருதி துன்புறுத்தாமல் வாழ்வதும் அவை பிற காரணிகளால் துன்பமுறும் போது தம் துன்பம் போல் கருதி இடர்நீக்க முற்படுவதும் தாம் பெற்ற அறிவின் இயல்பாக இருக்க வேண்டும் என்பது வள்ளுவர் கருத்தாகும்.
உயிர்க்கு உறுகண் செய்யாமை அற்றே தவத்திற்கு உரு’ (261)
என்றவாறு கொல்லாமை, தவம், புலால் மறுத்தல் போன்ற அதிகாரங்களில் உயிர்களைக் கொல்லாதிருக்கும் அறம் பேசப்படுகிறது.  
இவ்வாறான குறட்பாக்களால் உயிரினம் அனைத்தும் ஒன்றே என்ற கருத்தைத் திருவள்ளுவர் கொண்டிருந்தார் என்பதை நாம் அறியலாம்.
 
நீரின்றி அமையாது உலகு
நீர் உணவுப்பொருளை உற்பத்தி செய்யப் பயன்படுகிறது. அது மட்டுமின்றித் தானும் ஒரு உணவாகப் பயன்படுகிறது என்கிறார் வள்ளுவர்.
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை (12)
என்ற  குறட்பா மேற்காணும் கருத்தினை நமக்கு வழங்குகிறது. இஃதொரு ஆழமான சிந்தனையாகும். துப்பாயதூஉம் - உணவாதலாவது தண்ணீராய் உண்ணப்படுதல் என்கிறார் பரிமேலழகர்.
            


__________________


Guru

Status: Offline
Posts: 23904
Date:
RE: திருக்குறளில் சூழலியல் சிந்தனைகள் முனைவர் அ.ஜான் பீட்டர்
Permalink  
 


உணவு தாவர உணவாக இருப்பினும் புலால் உணவாக இருப்பினும் அவற்றை உற்பத்தி செய்ய நீரும் ஒரு உள்ளீடு பொருளாகிறது என்பது சூழலியலார் சிந்தனை முறையாகும். உள்ளீட்டுப் பொருள் என்ற கருத்தாக்கம் என்னவெனில், ஒரு உணவுப்பொருள் உற்பத்தி ஆவதற்குப்  பயன்பட்ட மொத்த நீரின் அளவானது எவ்வளவு என்று கருதுவதாகும்.
அதாவது, ஒரு கிலோ கோதுமையை விளைவிக்க ஆயிரம் லிட்டர் தண்ணீர் உள்ளீட்டுப் பொருளாகிறது; ஆனால் அதே நிறை மாட்டிறைச்சி உற்பத்திக்கோ பதினாறாயிரம் லிட்டர் தண்ணீர் உள்ளீட்டுப் பொருளாகிறது.
உலகம் வேகமாகப் புலால் உணவுப் பயன்பாட்டிற்கு, விரைவு உணவு கலாச்சாரத்தின் வழி மாறிக் கொண்டிருப்பதால் மிகமிக அதிகமாகத் தண்ணீர் பயன்பாடு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இன்றைக்கு எந்த உணவுப் பொருளின் விலையுடனும் அதன் உள்ளுறை நீர் (embedded water) மதிப்பு கணக்கிடப் படுவதில்லை; அவை கணக்கிடப்பட வேண்டும் என்கின்றனர் சூழலியல் வல்லுனர்கள். பயன்படும் நீரின் விலை கணக்கிடப்பட்டு அது அவ்வுணவின் உற்பத்தி மதிப்போடு சேர்க்கப்படவேண்டும் என்பது அக்கருத்தாகும். ஒரு கிலோ கிராம் மாட்டிறைச்சி என்பது 36.4 கிலோகிராம் கரியமிலவாயு காற்றுமண்டலத்தில் வெளியிடப்படுவதற்குச் சமம் என்பது விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பாகும். மேலும் காற்று மண்டலச் சூடேற்றம், நீரின் அமிலத்தன்மையேற்றம் மற்றும் நீர்நிலைகளின் சாவு (eutrophication) ஆகிய சூழலியல் நிகழ்வுகளில் மாட்டிறைச்சி உற்பத்தி விலை கணக்கிடப்படுமானால் அதன் சூழலியல் விலை இன்னும் அதிகமாகும். இவ்வளவு சூழல் மதிப்பை இழந்து புலால் உணவு உண்பதை விட வள்ளுவர் கூறியதுபோல புலாலை மறுத்து வாழ்வது சுற்றுச்சூழலைக் காக்கும்  நல்வாழ்வாக அமைந்து விடுமன்றோ? வள்ளுவர் புலால் உண்ணாமை பாடியதும் சூழல் காக்கத்தானோ?
நாம் உற்பத்தி செய்யும் ஒவ்வொரு பொருளிலும் இந்த இயற்கை – நம் முன்னோர்களின் பார்வையில் பஞ்ச பூதங்கள் - உள்ளுறைகின்றன. அவற்றை நாம் நம் பொருளாதாரச் சமன்பாடுகளில் கண்டு கொள்வதே இல்லை.  விலை மதிப்பற்ற இவ்வியற்கையைத்  நாம் தொடர்ந்த நம் சந்ததியினருக்கு விட்டுச்செல்ல வேண்டாமா?
மழைநீரைச் சேமிப்பதோ, ஆறு குளத்தைப் பராமரிப்பதோ இன்றைய பொருளாதார மையமிட்ட உலகில் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வர எதிர்கால நிலை அச்சம் தருவதாக மாறிவிட்டது. இப் பின்னணியில்தான் வள்ளுவர் கூறிய, நீரின்றி அமையாது உலகு (20)  என்ற கூற்றும்,  துப்பாயதூஉம் மழை  என்ற கூற்றும் எந்தளவிற்குத் தொலைநோக்குச் சிந்தனையாக அமைந்துள்ளது என்பது வெளிப்படும்.
மேலும் ‘மாரிமாட்டு என்ன கைம்மாறு ஆற்றும் கொல்லோ உலகு’ (211) என்றும் ‘நெடுங்கடலும் தன் நீர்மை குன்றும் தடிந்தெழிலி தான் நல்காதாகி விடின்’ (17) என்றும் மழையின் இன்றியமையாத் தன்மையை வள்ளுவர் பல பாக்களில் குறிப்பிடுகிறார். ஏனெனில், உற்பத்தியாகும் உணவு, மழை மற்றும் நிலத்தின் பயனும் மனித உழைப்பின் கனியுமாகும். ‘உணவு எனப்படுவது நிலத்தொடு நீரே’ என்று புறநானூறும் குறிப்பிடுகிறது. திருவள்ளுவர் வான்சிறப்பு, உழவு என்ற தலைப்புகளில் தனித்தனி அதிகாரங்கள் படைத்திருக்கிறார்.  அதிலும் வான் சிறப்பு அதிகாரம் முறை வைப்பில் கடவுள் வாழ்த்தின் பின்னர் வைக்கப்பட்டிருப்பது  எண்ணத் தக்கதாகும்.
மழை நீர் உலகத்தார்க்கு அமிழ்தம் என்பது வள்ளுவரின் கருத்தாகும்.
‘வான் நின்று உலகம் வழங்கி வருதலால்
 தாம் அமிழ்தம் என்று உணரற்பாற்று’  (11)
என உலகத்தை வாழ்விப்பது நீரே என்று வலியுறுத்தும்  வள்ளுவர்
‘விசும்பின் துளிவீழின் அல்லால் மற்றாங்கே
 பசும்புல் தலை காண்பது அரிது’  (16)
என்றும் ‘நீரின்றி அமையாது உலகு’ என்றும் நீரின் இன்றியமையாத் தன்மை பற்றி அறைகிறார்.
உழவு அதிகாரத்தில் உழவின் மேன்மையைக் கூறுதலோடு மட்டும் அமையாமல் , தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும் வேண்டாது சாலப்படும்  (1037) என நிலம் , நீர், காற்று, வான், தீ ஆகிய பூதங்களின் பங்களிப்பு உணவு உற்பத்தியில் இருப்பதையும் சுட்டிக்காட்டுகிறார்.
 
earth4.jpg

 

 
திருவள்ளுவரின் கூர்நோக்கு
சுற்றுச்சூழலின்  ஓர் அங்கம் எனத் திகழ்வன உயிரினங்கள். நிலத்தினும் நீரினும் வாழும் பல்வேறுபட்ட உயிரினங்களின் தன்மையை அறிந்து அவற்றைத் தக்கவாறு பயன்படுத்தியும் விலக்கி வைத்தும்,  ஆபத்தை விளைவிக்கக் கூடியன எனக்கண்டறிந்த உயிரினங்களைத் தகுந்த முறையில் விட்டொதுங்கியும் மனித இனம் வாழ்வதாயிற்று.
‘உயிரினங்களுக்கும் அவற்றின் சூழலுக்கும் இடையிலுள்ள தொடர்புகளைப் பற்றிய அறிவியலே சூழலியல் எனப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட பரப்பளவில் உள்ள ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்த உயரினங்கள் அவற்றின் இயற்பியல் சூழல்  அவற்றின் இடையிலான தொடர்புகள்  ஆகியவை சூழல் மண்டலம் (Eco System) எனப்படுகின்றன. பறவைகள், விலங்குகள், வண்டுகள், பூச்சிகள் என அனைத்து உயிரினங்களையும் கொண்ட நற்சூழல் மனித வாழ்விற்கு அடிப்படையாகும்’. எவ்வாறெனில்,  நாம் உண்ணும் தாவர உணவு உற்பத்திக்கு அடிப்படையான மகரந்தச் சேர்க்கை பூச்சியினங்களால் தான் அமைகிறது. பயிர்களை பாழ்படுத்தும் வெட்டுக் கிளிகளைப் பறவைகளும் எலிகளைப் பாம்புகளும் கட்டுப் படுத்துகின்றன. திருக்குறளில் மனிதனின் சூழல் மண்டலத்தில் அவனோடு இணைந்து வாழ்ந்த பல உயிரினங்கள் பற்றிய பதிவுகள் காணப்படுகின்றன.
            திருவள்ளுவர், பயிரினங்கள், நில உயிரிகள், நீர்வாழ் உயிரிகள் விலங்குகள் என தமிழ்நாட்டுச் சூழலில் வாழ்ந்த உயிரினங்கள் பலவற்றைத் தம் நூற்கருத்திற்கு விளக்கம் தருவதற்காகப்  பயன் படுத்தியிருக்கிறார்.
புல், பயிர், கொடி, கொம்பு, மரம், மலர், காய், கனி, கருக்காய், வித்து, முளை, முகை, மொக்கு எனத் தாவரங்களின் பல நிலைகள் வள்ளுவரின் குறட்பாக்களில் எடுத்தாளப் பட்டுள்ளன. மேலும் தினை பனை ஆகியவற்றைச் சிறுமை - பெருமை பற்றிக் குறிப்பிடப் பயன்படுத்துகிறார். மேலும் கரும்பு, மூங்கில், தாமரை, குவளை, நெருஞ்சி ஆகிய தாவரங்களைக் குறிப்பிடும் வள்ளுவர் அனிச்சம் என்ற தாவரத்தை மென்மைக்கு எடுத்துக்காட்டாய்க் கூறுகிறார்.மருந்தாகித் தப்பா மரத்தற்றால் (217) பயன் மரம் உள்ளூர் பழுத்தற்றால் (216)என மரத்தின் மேன்மை திருக்குறளில் வள்ளுவரால் பேசப்படுகிறது.
‘முதலை நெடும்புனலுள் வெல்லும் ; அடும்புனலின் நீங்கின் அதனைப் பிற வெல்லும்’ (495) என்று முதலையின் இயல்பு பதிவாகியுள்ளது.  ‘பரியது , கூர்ங்கோட்டது ஆயினும் யானை வெரூஉம் புலித் தாக்குறின் ‘ (599); ‘புதையம்பின் பட்டுப்பாடூன்றும் களிறு’(597) என  யானையின் இரு மாறுபட்ட இயல்புகளை வள்ளுவர் இரண்டு குறட்பாக்களில் குறிப்பிடுகிறார். பழகிய யானையைக் கொண்டு யானையைப் பிடித்தலைப் பற்றி, ‘நனை கவுள் யானையால் யானை யாத்தற்று’ (678) என ஒரு குறள் குறிப்பிடுகிறது.  பகல் வெல்லும் கூகையைக் காக்கை’ (481)என்று காக்கை - கூகையின் இயல்பும்  ‘ஒருமையில் ஐந்தடக்கல்’ (126) என ஆமையின் இயல்பும், கூம்பியிருந்து மீனை கொத்தும் கொக்கின் இயல்பும்(490) கரவாக் கரைந்துண்ணும் காக்கை இயல்பும் (527) ‘கால் ஆழ் களரில் நரி அடும்’(500) என நரியின் இயல்பும் வள்ளுவரால் சுட்டப் படுகின்றன. மேலும் கவரி மான்-பிணை  பசு-காளை, சிங்கம் , புலி,  யானை, குதிரை,  முயல், நரி ஆகிய விலங்கினங்களையும் அன்னம், மயில் ஆகிய புள்ளினங்களையும்  என்பிலதனை வெயில் போல (77) என முதுகெலும்பற்ற உயிரினங்களையும் பாம்பு, எலி ஆகிய ஊர்வனவற்றையும் மீன் போன்ற நீர்வாழ் உயிரினத்தையும் திருவள்ளுவர் பிற இடங்களில் தாம் கூறப்புகுந்த அறக்கருத்திற்கு அரண் சேர்க்கக் குறிப்பிடுகிறார்.
மேலும் ‘இளையதாய் முள்மரம் கொல்க’ 879 என்று முட்புதர்களை அழிக்க வேண்டுமாயின் அது இளையாதாக இருக்கும் போதே வெட்டவேண்டும்; முதிர்ந்து வளர்ந்த நிலையில் வெட்டுபவர் கையைத் துன்புறுத்தும் என முட்செடியின் இயல்பைப் பதிவு செய்கிறார். வன்பாற்கண் வற்றல் மரம் தளிர்க்காது (78), வெள்ளத்து அனைய மலர் நீட்டம் (595) , நீரின்றி வாடிய வள்ளிக்கொடி(1304) முகை மொக்குள் உள்ளது நாற்றம் (1274) இணர் ஊழ்த்தும் நாறா மலர் (650) எனத் தாவரங்களின் இயல்பும் வள்ளுவரால் கூறப்படுகின்றன.
இவ்வாறு திருவள்ளுவர் முப்பதிற்கும் மேற்பட்ட உயிரினங்களைக் குறித்து அவற்றின் இயல்புகளை மனித இயல்புகளுக்கு ஒப்பிட்டுக் கூறுவது இன்புறத்தக்கது.  தம்மோடு வாழும் உயிரினங்களின் இயல்புகளை நுட்பமாக அறிந்து அதனை மனிதன் பின்பற்றத் தகுந்த அறங்களைக் கூறும் போது பயன்படுத்த எண்ணிய அவரது மனவியல்பு பாராட்டத்தக்கது. இங்கு திருவள்ளுவரின் சூழல் கூர்நோக்கும் புலனாகிறது.
ஐம்பூதங்களின் இயல்பு
அகல்வாரைத் தாங்கும் நிலம்(151) என நிலத்தின் தன்மையை வள்ளுவர் சுட்டுகிறார். ஏரினும் நன்றால் எருவிடுதல் நீரினும் நன்றதன் காப்பு (1038) என்றும் பைங்கூழ் களை கட்டுது  (550) வளர்வதன் பாத்தியுள் நீர் சொரிதல் (718)என்றும் நிலத்தை உழவுக்காகப் பண்படுத்துதல்  பற்றிப் பேசுகிறார்.  களர் அனையர் கல்லாதவர் (406) என வளமற்ற நிலத்தையும் அவர் குறிப்பிடத் தவற வில்லை. அரண் அதிகாரத்தில் ‘மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழல் காடும்’ (742) நாட்டின் பாதுகாப்பான அரண் ஆக இயற்கை விளங்கியமை குறிப்பிடப்படுகிறது. ‘இருபுனலும் வாயந்த மலையும் வருபுனலும் வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு’ (737) என்ற குறட்பாவில் ஆற்றுநீர், ஊற்றுநீர், மழைநீர் ஆகிய நீர்ஆதாரங்களைப் பற்றியும் மலை பற்றியும் வள்ளுவர் கூறுகிறார் தீயினும் அஞ்சப்படுதல் (202), நெருப்பின் உள் துஞ்சலும் ஆகும் (1049) என்ற குறட்பாவில் தீ  குறிப்பிடப்படுகிறது. கடலன்ன காமம்(1137), கடலைச்செறாய் (1200) ஆழி நீத்தல் அரிது (8),பெருங்கடல்(10),விரிநீர்(13) நெடுங்கடல் எனக்  கடலின் பரந்துபட்ட இயல்பைப் பெருமைக்கு எடுத்துக்காட்டாய்த் திருவள்ளுவர் குறிப்பிடுகிறார். ‘வளி வழங்கு மல்லல் ஞாலம்’ (245)எனக் காற்றின் இன்றியமையாமை குறிப்பிடப் படுகிறது. மதி, மீன்(1116,1117,1118) வையகமும் வானகமும்,(101) வானம் அகல் விசும்பு (25) வான் நோக்கி வாழும் குடி(542) என வான் பல இடங்களில் வள்ளுவரால் குறிப்பிடப்படுகிறது.
மனிதன் வாழும் சூழலான இவ்வைந்து இயற்கையையும் பற்றிக் குறள் பரக்கப் பேசினாலும் பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும் (271) என ஐம்பூதங்கள் என்ற சொல்லாட்சி கொண்டு வள்ளுவர் குறிப்பிடுவது பொறிவாயில்களான ஐம்புலன்களையே ஆகும். இயற்கையைக் காட்டிலும்  மனிதனை அவன் நடத்தையே கட்டுப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தை வள்ளுவர் கொண்டிருந்தார் என்பதையே இது காட்டுகிறது.
இவ்வாறாக அறம்பேச எழுந்த நூலொன்றுள், அதுவும் ஈரடியில் சுருக்கமாக – சுருங்கச் சொல்லி விளங்க வைக்க வேண்டிய கட்டுப்பாடு மிகுந்த பாவினால் எழுந்த நூலொன்றில் எந்த அளவிற்கு நிலம் நீர் காற்று வானம் தீ போன்ற பஞ்சபூதத்து இயற்கையையும்  நிலத்து வாழும் பல்லுயிர்களின் தன்மை பற்றிய பதிவையும் அதனை ஒட்டிய தம் உள்ளக் கிடக்கையையும் கூற முடியுமோ அந்தளவிற்கு மிகச் சிறப்பாகவே திருவள்ளுவர் கூறியிருக்கிறார்  என்பது அறிந்து மகிழத் தக்கதாகும். அவ்வகையில் எல்லாக் கருத்தும் இதன் பால் உள என்னும் திருக்குறளைப் பற்றிய புகழ்க்கூற்றும் மெய்ப்பிக்கப்  பட்டிருக்கிறது.
                                                @@@@@@@@@@
 
 
 

 

திருவாரூர், திரு.வி.க அரசு கலைக்கல்லூரியில், ‘செம்மொழி இலக்கியங்களில் சூழலியல் சிந்தனைகள்’ என்ற மையக்கருத்தில் நடைபெற்ற மூன்று நாள் கருத்தரங்கில் , 02.02.2012 அன்று வழங்கப் பட்ட கட்டுரை.


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard