திருக்குறளில் சூழலியல் சிந்தனைகள்
முனைவர் அ.ஜான் பீட்டர்
இணைப் பேராசிரியர், தமிழ்த்துறை, திரு.வி.க.அரசு கலைக் கல்லூரி,திருவாரூர் – 610 001
இவ்வுலகம் மனிதன் உயிர் வாழ மட்டும் உருவானதன்று; மரம்செடிகள், பூச்சிகள் பறவைகள் முதல் நீருயிரிகள், வனவிலங்குகள் வரை அனைத்தும் மனிதனோடு உலகத்தைப் பகிர்ந்து கொள்கின்றன. பல்லுயிர்களும் அவ்வவற்றின் இயல்புகளோடும் உரிமைகளோடும் வாழ்வதற்கென்று அமைந்திருப்பதே இவ்வுலகம் ஆகும்.
நிலமும் நீரும் காற்றும் இவ்வுலகத்தின் அனைத்து வளங்களும் அனைவருக்கும் உரிமையுடையன என்ற நிலையை மறந்து, நாளைய மனிதர்களுக்கும், ஏன் தமது வழித் தோன்றல்களுக்கும் கூட அதனை விட்டு வைக்க நினையாமல் மனிதன் தனக்கே தனக்கென்று இவ்வுலகத்தை உரிமையாக்கிக் கொண்டு உலகின் வளங்களனைத்தையும் கைப்பற்றும் போதும் பிற உயிர்களின் உரிமைகளைக் கைக்கொள்ளும் போதும்தான் உயிரினச் சமநிலை பெரிதும் பாதிக்கப்படுகின்றது. இன்று உலகெங்கும் இதுகுறித்தான விழிப்புணர்வுதான் பேசு பொருளாகியிருக்கிறது.
எக்காலத்தையும் எந்நாட்டையும் சேர்ந்த அறிஞர்களும் சான்றோர்களும் பல்லுயிர்களின் நலமும் இன்றியமையாதது என்பதை வலியுறுத்தியே வந்திருக்கிறார்கள்; இயற்கையின் வளங்கள் எந்நாளுக்குமாகக் காக்கப்பட வேண்டியன என்பதை உணர்த்தியிருக்கிறார்கள். ஐம்பூதங்கள் என நிலம் நீர் காற்று வான் தீ ஆகியவற்றை வகைபடுத்தி அவை நம்மால் கட்டுப்படுத்த இயலாதன ; கட்டுப்படுத்தப்படக் கூடாதன என்று அவர்கள் கருதினர்.
இயற்கையோடு இயைந்த வாழ்வை நடாத்தியவனாகத் தமிழன் வாழ்ந்தான் என்பதற்குச் சங்க இலக்கியங்கள் சான்று பகர்கின்றன. அன்பின் ஐந்திணையாக இருப்பினும் சரி, புறத்திணையாக இருப்பினும் சரி, அதற்குக் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, வெட்சி, வஞ்சி, கரந்தை, வாகை, உழிஞை, என மலர்த் தாவரங்களின் பெயரைச் சூட்டி மகிழ்ந்தமையும் ஐந்திணைக்கான நிலப்பாகுபாடும் அவற்றிற்கான உயிரினங்கள் உள்ளிட்ட கருப்பொருள்களை வகுத்தமையும் இயற்கையின் மீதான ஆதித் தமிழனது ஈடுபாட்டினைக் காட்டி நிற்கின்றன.
சூழலியல் என்ற சொல் அய்காஸ் (eicos) என்ற கிரேக்கச் சொல்லை மூலமாகக் கொண்டு தோன்றியது ஆகும். மனிதன் தன் உறைவிடத்தையும் உறைவிடத்தின் பண்புகளையும் சிறப்புக் கூறுகளையும் அறிந்து தெரிந்து கொள்ளும் சிந்தனை முறையே சுற்றுப்புறச் சூழல் சிந்தனை என்று ஏர்னெஸ்ட் ஹெகல் குறிப்பிடுகிறார்.
தமிழில் சூழலியல் குறித்த கருத்துகளை நேரிடையாக வலியுறுத்தும் அறிவுசார் நூல்களைப் பழந்தமிழர்கள் இயற்றி வைக்க வில்லையே தவிர, அக்கருத்துகள் இயல்பூக்கமாக அவர்களிடம் குடிகொண்டிருந்தன என்பதை அவர்கள் படைத்த படைப்பிலக்கியங்களில், தம் உள்ளக் கருத்துகளை ஆங்காங்கே அவர்கள் விதைத்துச் சென்றிருப்பதைக் கொண்டு, நம்மால் உணர முடிகிறது.
உலகத்தின் பொதுமறையாகக் கருதப்படும் திருக்குறளில் சூழலியல் பற்றிய கருத்துக்கள் விரவியுள்ளன என்பதை நாம் கண்டறியலாம். தமிழ்நாட்டிற்கும் தமிழினத்திற்கும் மட்டும் என்றில்லாமல் அனைத்து இனத்தையும் சார்ந்த அனைவருக்கும் அறக்கருத்துகளை வலியுறுத்தும் நூலான திருக்குறளில், ‘எல்லாக் கருத்துக்களும் இதன்பாலுள் உள’ என்று கூறுவார் கூற்றை மெய்ப்பிப்பதைப் போன்று, இன்றைய சூழல் குறித்த விழிப்புணவர்வு கருத்துக்களையும் திருவள்ளுவர் வழங்கியிருக்கிறார்.
பரத்தமையும், புலால் நுகர்வும் கள்ளுண்ணுதலும் தவறன்று என்று கருதப்பட்ட சங்ககாலத்தைத் தொடர்ந்து முதன்முதலாக அவை விலக்கப்பட வேண்டுவன என்று புரட்சிகரமாக எழுதியவர் திருவள்ளுவர். மனிதனின் வாழ்வியல் சூழலைப் பாதிக்கக் கூடியவற்றைத் தவறாது கடிந்து பேசத் தயங்காத திருவள்ளுவர், சுற்றுச் சூழலைப் பாதிக்கக் கூடியனவற்றைக் கடியாது போயிருப்பாரா?
பல்லுயிர் ஓம்புதல்
உலகில் காணும் அனைத்து உயிர்களுக்குமானது இவ்வுலகம் என்று கருதுவது சுற்றுச்சூழல் சார்ந்த சிந்தனையாகும். இக்கருத்தை மிக நுட்பமாகத் திருவள்ளுவர் தம் திருக்குறட்பாக்கள் பலவற்றில் குறிப்பிட்டிருக்கிறார்.
‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்..’ (972)
‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்..’ (322)
என்ற இரண்டு குறட்பாக்களில் அவர் பயன் படுத்திய உயிர் என்ற சொல்லாட்சி கருதத் தக்கது. திருவள்ளுவர் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற குறட்பாவில் மனிதர்களின் ஏற்றத்தாழ்வு - சாதி மறுப்பினை மட்டும் கூறவில்லை. மாறாக அதனையும் தாண்டி, ஓரறிவுடைய உயிர் முதல் ஆறறிவுயிர் மனிதன் உட்பட அனைத்து உயிர்களும் பிறப்பால் ஒத்தன என்று வலியுறுத்த முற்படுகிறார். இதன்பொருட்டே உயிர் என்ற சொல்லை அவர் உணர்ந்து கையாண்டிருக்கிறார் என்பது அறிந்தின்புறத்தக்கதாகும்.
‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள்ளுள் எல்லாம் தலை’ (322) என்ற குறட்பாவிலும் கூட மனிதநேயத்தைத் தாண்டிய திருவள்ளுவரின் பல்லுயிர் நேயம் வெளிப்படுகிறது. பல உயிர்களோடு நாம் பகிர்ந்துண்போம்; அதுவே தலையாய அறமாகும் என்ற அவரது கருத்து போற்றத்தக்கது.
இதன் தொடர்ச்சியாக,
‘அறிவினான் ஆகுவதுண்டோ பிறிதின் நோய்
தன்நோய் போல் போற்றாக் கடை’ (315)
என்ற குறட்பாவின் கருத்தும் அமைகிறது. பிறரின் நோய் என உயர்திணையில் குறிப்பிடாமல் பிறிதின் நோய் என்ற சொல்லாட்சியை அவர் கொண்டதன் விளைவாக அனைத்துயிர்களையும் கருதி இக்குறட் கருத்து கூறப்பட்டிருப்பதை நாம் உணரலாம். தன்னுயிர் போல் பிற உயிர்களையும் எண்ணிக் கருணை கொண்டு ஒழுகுபவன் எஞ்ஞான்றும் துன்பம் உறுதலில்லை என்பதை,
‘மன்னுயிர் ஓம்பி அருளாள்வாற்கு இல்லென்ப
தன்னுயிர் அஞ்சும் வினை ‘(244)
என்ற மற்றொரு குறட்பாவின் வழியாக அவர் வலியுறுத்துகிறார்.
எவ்வுயிராயினும் அவற்றைத் தம் நலம் கருதி துன்புறுத்தாமல் வாழ்வதும் அவை பிற காரணிகளால் துன்பமுறும் போது தம் துன்பம் போல் கருதி இடர்நீக்க முற்படுவதும் தாம் பெற்ற அறிவின் இயல்பாக இருக்க வேண்டும் என்பது வள்ளுவர் கருத்தாகும்.
‘உயிர்க்கு உறுகண் செய்யாமை அற்றே தவத்திற்கு உரு’ (261)
என்றவாறு கொல்லாமை, தவம், புலால் மறுத்தல் போன்ற அதிகாரங்களில் உயிர்களைக் கொல்லாதிருக்கும் அறம் பேசப்படுகிறது.
இவ்வாறான குறட்பாக்களால் உயிரினம் அனைத்தும் ஒன்றே என்ற கருத்தைத் திருவள்ளுவர் கொண்டிருந்தார் என்பதை நாம் அறியலாம்.
நீரின்றி அமையாது உலகு
நீர் உணவுப்பொருளை உற்பத்தி செய்யப் பயன்படுகிறது. அது மட்டுமின்றித் தானும் ஒரு உணவாகப் பயன்படுகிறது என்கிறார் வள்ளுவர்.
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை (12)
என்ற குறட்பா மேற்காணும் கருத்தினை நமக்கு வழங்குகிறது. இஃதொரு ஆழமான சிந்தனையாகும். துப்பாயதூஉம் - உணவாதலாவது தண்ணீராய் உண்ணப்படுதல் என்கிறார் பரிமேலழகர்.