உலகப் பொதுமறைகளில் ஒன்று திருக்குறள். திருக்குறளின் பெருமைகளை அறியாதவர் இவ்வுலகில் யாருமில்லை. திருக்குறளின் பெருமைகளையும் திருவள்ளுவரின் பெருமைகளையும் விளக்கிச் சான்றோர்கள் பாடிய பாக்களின் தொகுப்பே "திருவள்ளுவ மாலை". இக்குறள் வெண்பாவைக் கண்டாலே குறளின் பெருமை விளங்கும்.
அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்
குறுகத் தறித்த குறள்
என்று ஒளவையாரும்,
எல்லாப் பொருளும் இதன்பால்உள இதன்பால்
இல்லாத எப்பொருளும் இல்லையால்
என மதுரைத் தமிழ்நாகனாரும், திருக்குறளைச் சிறப்பித்துப் பாடியுள்ளார்கள். இங்ஙனம் சிறப்பித்த திருக்குறளின் மூலம் அரசாங்கங்கள் எவ்வகை முறைகளில் எல்லாம் வருவாய்கள் பெற்றன என்பதைப் பற்றிய செய்திகளைக் காண்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
வருவாய் பெறக் கூடிய வழிமுறைகள்
அரசுகள் வருவாய் பெறக்கூடிய வழிமுறைகள் மூன்று எனப் பழங்காலத்து நூல்கள் தெரிவிக்கின்றன. அவையாவன,
1. மக்களிடமிருந்து பெறும் வரி
2. வாணிகப் பொருட்களுக்கான சுங்கவரி
3. சிற்றரசர்களிடமிருந்து பெறும் திறை
இவ்வடிப்படையில் அரசுகள் வருவாய் பெற்றுவந்தன.
மக்களை நீதி முறை செய்து காப்பதற்காகவும் பகைவரிடமிருந்து நாட்டைக் காப்பதற்காகவும் மக்கள் தங்கள் வருவாயில் இருந்து ஒரு பங்கையும், உழவர்கள் விளைச்சலில் ஆறில் ஒரு பங்கையும் அரசுக்கு வரியாகச் செலுத்தி வந்தார்கள். மன்னருக்கு மக்கள் வரி செலுத்துகின்ற முறை இருந்தது என்பதை "உறுபொருளும்" என்ற சொல் மூலம் அறிய முடிகிறது.
உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த்
தெறுபொருளும் வேந்தன் பொருள்- - - (குறள் 756)
என்ற இக்குறள் மூலம் அரசு ஏற்றுமதி இறக்குமதி வரிகளோடு உள்நாட்டுச் சுங்க வரிகள் மூலமும் வருவாய் சேகரித்து வந்தது என அறிகிறோம். இதற்கு,
அணர்ச் செவிக் கழுதைச் சாத்தோடு வழங்கும்
உல்குடைப் பெருவழி- - - (80-81)
எனப் பெரும்பாணாற்றுப்படை சான்று அளிக்கிறது.
அரசுகள் பெற்றுவந்த மூன்றாவது வருவாய் முறை திறையாகும். பகை நாட்டார் இடத்தும், சிற்றரசர்களிடமிருந்தும் அரசு வருவாய்களைச் சேகரித்து வந்தது. மேலும் வள்ளுவர் கூறும் பொருளியல் இலக்கணமாய்,
"இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும்" என்பதைப் பற்றிப் பரிமேலழகர் வழங்கிய பொருளை நாம் அறிந்தாலும் இவைதான் Public Revenue, Public Expenditure, Public Distribution என அறிகின்றபோது எவ்வளவு புத்துணர்ச்சி தோன்றுகிறது. இத்தொடரிலே பொருளியலின் மையக் கருத்துகளான Production, consumption and distribution என்பவற்றைக் காண்பாரும் உண்டு என தி. முருகரத்தினம் குறிப்பிடுகிறார்.
இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது அரசு- - - (குறள் 385)
ஓர் அரசானது பொருள் வரும் வழிகளை மேன்மேலும் உருவாக்குதலும், வந்தவற்றைத் தொகுத்தலும், தொகுத்தவற்றைப் பிறர் கொள்ளாமல் காத்தலும், காத்தவற்றை அறம், பொருள், இன்பங்களின் பொருட்டுக் கொடுத்துத் தன் கடமையைச் செய்யவல்லது என்று கூறுகிறார். அரசு இம்முறையில் செயற்பட்டால்தான் நாடு தன்னிறைவு அடையும், தன்னிறைவு பெற்றால்தான் உலக நாடுகளுடன் போட்டிபோட முடியும். போட்டிபோட வேண்டும் எனில் நாடு செல்வ நிலையில் செழித்து இருக்க வேண்டும்.
அரசு எப்போதும் செல்வ நிலையில் வலிமை பெற்றுத் திகழ வேண்டும். செல்வ நிலையில் வலிமை பெற்றால்தான் உலக நாடுகள் மத்தியில் நிலைத்திருக்க முடியும். இன்று படை பலத்திலும் செல்வ நிலையிலும் வலிமை பெற்ற நாடுகள் தாம் வல்லரசுகளாய் மதிக்கப்படுகின்றன. வல்லரசு ஆவதற்கு நாட்டின் பொருளாதாரம் முன்னேற வேண்டும். நாட்டின் முன்னேற்றத்துக்கு முதல்படியே செல்வம்தான். அதனால்தான் வள்ளுவமும் செல்வத்தை வலியுறுத்துகிறது,
பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்
எண்ணிய தேயத்துச் சென்று- - - (குறள் 753)
என்ற குறளின் கருத்து நோக்கத்தக்கது.
அல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பு- - - (752)
என்ற கருத்தும் நோக்கத்தக்கது. அதனால் இவ்வுலகில் நிலைத்திருக்கச் செல்வம் இன்றியமையாதது என வள்ளுவர் குறிப்பிடுகிறார்.
உற்பத்தியைப் பெருக்கி நாட்டின் ஏற்றுமதியை உயர்த்தக் கூடிய வணிகவியலாரின் கருத்தினையே வள்ளுவமும் கூறுகிறது.
செய்க பொருளைச் செறுநர் செருக்குஅறுக்கும்
எஃகுஅதனிற் கூறியது இல்- - - (குறள் 759)
என்ற குறளின் கருத்து நோக்கத்தக்கது. எந்த ஒரு நாடும் பிற நாட்டைத் தன்னுடைய தேவைகளுக்காகச் சார்ந்திருக்கக் கூடாது. அப்படி இருந்தால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி தடைப்படும் என்கிறார். உணவு உற்பத்தியில் நாடு தன்னிறைவு அடையவேண்டும். அப்போதுதான் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடையும். வருவாயும் ஈட்ட முடியும்.
வள்ளுவர் கருத்து அன்றும் இன்றும்
அரசு வணிகத்திற்கும் உழவுக்கும் உறுதுணையாய் இருந்தாலும், அவற்றின் பெரும்பணி நாட்டைக் காவல் செய்வதிலே சென்றுவிடுகிறது. எனவே அரசின் ஆறு அங்கங்களைக் குறிப்பிடும்போது வள்ளுவர் படையை முதலில் வைத்தார். காவற்பணியோடு மக்கள் நல அரசுகளாகவும் செயற்பட அவசியம் தோன்றியுள்ளது. எனவே பழமையிலும் அறியாமையிலும் மூழ்கிக் கிடக்கும் சமுதாயத்தை மாற்றியமைத்தல், பொருளாதார நடவடிக்கைகளில் தொழில் முனைவோராய்ச் செயற்படுதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளிலும் செயல்பட வேண்டியிருக்கிறது. மக்களின் வறுமையை அகற்றி, வருமான ஏற்றத்தாழ்வை நீக்குவதற்கு வரிக்கொள்கையையும், பணக் கொள்கையையும் அரசு நம்பியிருக்க வேண்டியிருக்கிறது. இதனால் அரசாங்கம் மக்களிடமிருந்து வரிப் பணங்களைப் பெறவேண்டியுள்ளது.
மக்களிடமிருந்து வரிபெறும் போது மக்களின் வருமானத்திற்கு ஏற்றவாறும் அவர்களின் ஆற்றலுக்கு ஏற்றவாறும் வரிகளை வசூலிக்க வேண்டும். மக்களும் மனமுவந்து அரசுக்கு வரிகளைச் செலுத்த வேண்டும். அரசும் அவ்வருவாய் மூலம் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து நாட்டின் பொருளாதார வளர்ச்சி பெற்று உலகத்துக்கு முன்மாதிரியாக விளங்க வேண்டும்.
துணை நூல்கள்
1. தி. முருகரத்னம், வள்ளுவர் வகுத்த பொருளியல் (கருத்தரங்க கட்டுரைகள்), மதுரைப் பல்கலைக்கழகம், 1975.
2. ச.வே. சுப்பிரமணியன், தமிழ் இலக்கிய வரலாறு, மணிவாசகர் பதிப்பகம், 2002.