New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: காஷ்மீர் 1947-48 சில உண்மைகள் பி.ஏ. கிருஷ்ணன்


Guru

Status: Offline
Posts: 24601
Date:
காஷ்மீர் 1947-48 சில உண்மைகள் பி.ஏ. கிருஷ்ணன்
Permalink  
 


காஷ்மீர் 1947-48 சில உண்மைகள்   பி.ஏ. கிருஷ்ணன் 

42_1.jpg

நான் சிறுவனாக இருந்தபோது எங்கள் தெருவில் மிகப் பெரிய அரசியல் அறிஞர்கள் இருந்தார்கள். சிலர் வழக்கையே பார்த்திராத வழக்கறிஞர்கள். சிலர் கிராமத்திலிருந்து வரும் நெல்லைக் குதிருக்குள் போட்டு அது காலியாகிற வரை காவல் காத்துக்கொண்டிருப்பவர்கள். இடையிடையே உலக அரசியலைப்பற்றிப் பேசுவார்கள். அவர்கள் கஷ்டங்களைச் சொறிந்துகொண்டு  ‘இந்த நேரு பார்த்த பார்வைதான் காஷ்மீர்ல இந்த நிலமை இருக்கு. அவன் படேல்ட பிரச்சினையை விட்டுருந்தான்னா இன்னிக்கு பாகிஸ்தானே இருந்திருக்காது’ என்று சொன்னது எனக்கு இன்றுவரை நினைவில் இருக்கிறது. பல இந்திய வலதுசாரிகளின் வரலாற்று அறிவு சன்னிதித் தெருத் திண்ணை அறிஞர்களின்அளவில்தான் இருக்கிறது என்பது இன்றைய வலதுசாரிப் பெரும் புள்ளிகளின் பேச்சுகளையும் பதிவுகளையும் பார்த்தால் தெரியவரும்.

 

உதாரணமாக இது சோவின் கேள்வி- & பதில் பகுதியிலிருந்து:

 

* காஷ்மீர் பிரச்சினைக்கு மறைந்த பிரதமர் நேருவே காரணம். அவர் இந்த விவகாரத்தில் மிகப் பெரிய தவறு செய்துவிட்டார் என்று பாஜக தலைவர் அமித்ஷா குற்றம் சாட்டியுள்ளாரே?

 

* அமித்ஷா கூறியிருப்பது புதிய குற்றச்சாட்டு அல்ல. குற்றச்சாட்டும் சரி, அதில் உள்ள உண்மையும் சரி, ஊரறிந்தவை. காஷ்மீர் பிரச்சினையைக் குழப்பியதில் முதல் இடம் வகித்தவர் நேருதான் என்பது நம் நாட்டின் அரசியல் சரித்திரம் நன்கு அறிந்த விஷயம்.

 

1947-48ஆம் வருடங்களில் என்ன நடந்தது, பிரச்சினை என்ன, இதற்கு வேறுவிதமான தீர்வு கிடைத்திருக்குமா என்ற கேள்விகள் இந்தப் பதிலைப் படித்ததும்
எழுகின்றன. இவற்றிற்கு விடை காண்பதற்கு முன்னால் காஷ்மீரின் வரலாற்றைப்பற்றிக் கொஞ்சம் சொல்ல வேண்டும்.

 

விடுதலைக்கு முந்திய காஷ்மீர்

 

14ஆம் நூற்றாண்டுவரை காஷ்மீரத்தில் இந்துக்களும் பௌத்தர்களும் ஆண்டுகொண்டிருந்தனர். அந்த நூற்றாண்டின் மத்தியில் அது இஸ்லாமியர் கைக்குள் வந்தது. 1587ஆம் ஆண்டு அக்பர் காஷ்மீர்மீது படையெடுத்து அதைக் கைப்பற்றினார். மொகலாயர்களின் கோடை விடுமுறைத் தலமாக இருந்த நாடு, முகலாய சாம்ராஜ்யம் ஆட்டம் கண்டதும் ஆப்கனிஸ்தானிலிருந்து வந்த பதான்கள் கையில் வந்தது. 1819ஆம் ஆண்டு சீக்கிய அரசன் மகராஜா ரஞ்சித்சிங் காஷ்மீரை வென்று அதைத் தனது ஆளுகையின்கீழ் கொண்டுவந்தார். அவரது இறப்பிற்குப் பிறகு நடைபெற்ற குழப்பத்தில் சீக்கியர்கள் வெள்ளையர்களால் முறியடிக்கப்பட்டனர். அந்த காலகட்டத்தில்தான், குலாப்சிங்க்டோக்ரா என்ற ராஜபுத்திர இனத்தைச் சார்ந்த தளபதி வெள்ளையர்களுக்கும் சீக்கியர்களுக்கும் இடையே உடன்பாடு ஏற்பட உதவியாக இருந்தார். உடன்பாட்டின் முடிவில் பஞ்சாப் வெள்ளையர் கைக்குள் வந்தது. சிந்து நதிக்குக் கிழக்கேயும் ராவி நதிக்கு மேற்கேயும் உள்ள மலைப்பிரதேசத்தை வெள்ளையர்கள் குலாப்சிங்கிற்கு 75 லட்சம் ரூபாய்க்கு விற்றனர். குலாப்சிங் 1846ஆம் ஆண்டு இறுதியில் ஜம்மு-காஷ்மீர் மகராஜாவாகப் பதவியேற்றார். ஆங்கிலேயருக்கு அவர் வருடத்திற்கு ஒரு குதிரை, பன்னிரண்டு கம்பளி ஆடுகள், ஆறு சால்வைகள் கப்பம் கட்டச் சம்மதித்தார். இதுவே அதிகக் கப்பம் என்று பின்னால் வருடக்கப்பம் இரண்டு சால்வைகள், மூன்று கைக்குட்டைகள் என்று மாற்றப்பட்டது.

 

இந்தியா விடுதலை ஆன சமயத்தில், 1925ஆம் ஆண்டு பட்டத்திற்கு வந்த மகராஜா ஹரிசிங் ஆண்டுகொண்டிருந்தார். மக்கள்தொகையில் பெரும்பாலானவர்கள் முஸ்லிம்களாக இருந்தாலும், அரசு அலுவல்களிலும் ராணுவத்திலும் இந்துக்களே மிக அதிகமாக இருந்தார்கள். 1932ஆம் ஆண்டு ஷேக் அப்துல்லா தலைமையில் முஸ்லிம் கான்ஃப்ரன்ஸ் நிறுவப்பட்டது. இந்திய விடுதலை இயக்கத்தினாலும் அதன் மதச்சார்பற்ற தன்மையினாலும் ஈர்க்கப்பட்ட ஷேக் அப்துல்லா 1939ஆம் ஆண்டு ‘தேசியகான்ஃப்ரன்ஸ்’ என்ற கட்சியைத் தொடங்கினார். பலமுறை மக்களுக்காகச் சிறைசென்று மிகுந்த செல்வாக்குமிக்க தலைவராக அவர் உருப்பெற்றார். 1946ஆம் ஆண்டு ‘காஷ்மீரை விட்டு வெளியேறு’ என்ற இயக்கத்தை மகராஜாவிற்கு எதிராக நடத்தி மறுபடியும் சிறையில் அடைக்கப்பட்டார்.

 

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

இந்தியப் பிரிவினையின்போது

 

இந்தியாவில் இருந்த சமஸ்தானங்கள் அனைத்தும் பிரிவினைக்குப் பின்னால் இந்தியாவுடனோ பாகிஸ்தானுடனோ அதிகப் பிரச்சினைகள் இன்றி இணைந்தன; மூன்று சமஸ்தானங்களைத் தவிர.
முதலாவது, ஜுனாகத்.

 

அது குஜராத்தில் இருந்த ஒரு சிறிய சமஸ்தானம். அதன் குடிமக்களில் பெரும்பாலானவர்கள் இந்துக்கள். ஆனால் ஆண்டுகொண்டிருந்தவர் முஸ்லிம். அவர் பாகிஸ்தானோடு இணைகிறேன் என்று அறிவித்தார். பல நிகழ்வுகளுக்குப் பிறகு அவர் பாகிஸ்தானுக்கு ஓட நேர்ந்தது. இந்தியா நடத்திய பொது வாக்கெடுப்பில் இரண்டு லட்சம்பேர் வாக்களித்தனர். அவர்களில் 91 பேர் மட்டும் பாகிஸ்தானுடன் சேர்வதற்கு ஆதரவு தெரிவித்தனர்.

 

இரண்டாவது, ஹைதராபாத்.

 

இதன் நிஜாம் தனியாக ஆட்சி செய்ய பல முயற்சிகள் செய்து கடைசியில் மக்களின் கடுமையான எதிர்ப்பு காரணமாக இந்தியாவுடன் தனது சமஸ்தானத்தை இணைத்தார். ரஜாக்கர்கள் என்ற இஸ்லாமிய மதவெறியர்களை அடக்க இந்திய ராணுவம் உள்ளே நுழைந்த பிறகுதான் இது சாத்தியமாகியது.

 

மூன்றாவது, காஷ்மீர். இதன் கதை முற்றிலும் மாறானது.

 

அதன் அரசர் ஹரிசிங் ஒரு கொடுங்கோலர். மக்களுக்கும் அவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. மக்களின் தலைவராக ஷேக் அப்துல்லா இருந்தார். இவர் மதச்சார்பற்ற இந்திய அரசையே விரும்பினார். பாகிஸ்தான் பக்கமே அவர் செல்லத் தயாராக இல்லை. காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்த இஸ்லாமியர் இவர் சொல்லைத் தட்டமாட்டார்கள் என்றாலும். மேற்குப் பகுதியில் பாகிஸ்தானை ஒட்டியிருந்த இடங்களில் (இன்று பாகிஸ்தான் கைவசம் இருக்கும் காஷ்மீர் பகுதி) பாகிஸ்தானுக்கு ஆதரவு அதிகம் இருந்தது. மகராஜாவின் பிரச்சினையைப் பற்றி வி.பி. மேனன் இவ்வாறு கூறுகிறார் - மேனன் மத்திய அரசின் செயலராக இருந்து சர்தாரின் வலதுகரமாகச் செயல்பட்டு சமஸ்தானங்களை இந்தியாவுடன் இணைக்க அயராது பாடுபட்டவர்:

 

“மகராஜாவின் பிரச்சினை எளிதானது அல்ல. அவர் பாகிஸ்தானுடன் இணைவதை முஸ்லிம் அல்லாதவர்களும் ஷேக் அப்துல்லாவின் தேசிய கான்ஃப்ரன்ஸை ஆதரிக்கும் பள்ளத்தாக்கு முஸ்லிம்களும் விரும்பவில்லை. இந்தியாவுடன் இணைவதை கில்கிட் பகுதி, பாகிஸ்தானோடு ஒட்டியிருக்கும் பகுதியில் இருப்பவர்கள் விரும்பவில்லை. மேலும் இந்தியாவுடன் இணைக்கும் சாலைகள் அன்று இல்லை. சாலைகள் எல்லாம் பாகிஸ்தான் பக்கம் இருந்தன. அவரது நாட்டின் முக்கிய வருவாயை ஈட்டித் தரும் மரவியாபாரமே பாகிஸ்தான்பகுதியில் ஓடும் நதிகளோடு இணைந்து இருந்தது.”
(சுருக்கப்பட்டது)

 

இது இந்திய அரசிற்கும் தெரிந்திருந்தது. குறிப்பாக சர்தார் படேலுக்குத் தெரிந்திருந்தது. காஷ்மீரைப் பற்றி அவர் 13 செப்டம்பர் 1947ஆம் ஆண்டு அன்றைய பாதுகாப்பு அமைச்சராக இருந்த சர்தார் பல்தேவ்சிங்கிற்கு எழுதிய கடிதத்தில் காஷ்மீர் பாகிஸ்தானோடு இணைந்தால் அதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிடுகிறார். இதற்கு முன்னாலேயே ஜூன் மாதம் ஹரிசிங்கைச் சந்தித்த மவுன்ட் பேட்டன், “பாகிஸ்தானுடன் சேர காஷ்மீர் முடிவெடுத்தால் இந்திய அரசு அந்த முடிவைத் தவறாக எடுத்துக் கொள்ளாது. நான் சர்தார்படேலின் உறுதியான வாக்குறுதியைப் பெற்றிருக்கிறேன்” என்று சொன்னார். ஆனால் “மக்களின் கருத்தை அறிய வேண்டும். அதன்படித்தான் நடக்க வேண்டும்” என்றும் சொன்னார். மகராஜா முடிவு ஏதும் எடுக்கவில்லை. காஷ்மீர் தனியாகச் செயல்பட முடியும் என்று அவருக்கு ஆலோசனை சொல்பவர்களும் இருந்தார்கள். ஆனால் அது நடைமுறைக்கு ஒவ்வாதது என்று அன்றைய காஷ்மீரத்தில் நினைத்தவர்கள்தான் அதிகம். எனவே, மகராஜா ‘அப்படியே நிற்கும்’ ஒப்பந்தங்களை (Standstill Agreement) பாகிஸ்தான் அரசுடன் கையெழுத்திட்டார். இந்தியாவோடும் ஒப்பந்தம் செய்துகொள்ள விருப்பம் தெரிவித்திருந்தாலும், இந்திய அரசு அவசரம் காட்டவில்லை. வி.பி. மேனன் சொல்கிறார்:

 

“நாங்கள் காஷ்மீரை இந்தியாவுடன் இணையச் சொல்லவில்லை. எங்களுக்குக் கைநிறைய வேலை. உண்மையைச் சொல்லப்போனால் காஷ்மீரைப்பற்றி நினைக்கவே எனக்கு நேரம் இல்லை.”

 

எனவே ஆகஸ்டு 15, 1947க்குப் பிறகும் காஷ்மீர் பாகிஸ்தானோடு இணைந்திருந்தால், இந்தியா அதை எதிர்த்திருக்காது என்பது தெளிவு. காஷ்மீர் மக்கள் எதிர்த்திருந்தால் கதை வேறு மாதிரி திரும்பியிருக்கும். அதற்கு வாய்ப்புகள் இருந்தன. ஷேக் அப்துல்லா அன்றைய காலகட்டத்தில் பாகிஸ்தானோடு இணையத் தயாராக இல்லை. நேருவும் இதைத்தான் சொன்னார். செப்டம்பர் மாதம் அன்றைய காஷ்மீரின் முதலமைச்சராக இருந்த மகாஜன், நேருவையும் படேலையும் சந்தித்து காஷ்மீர் இந்தியாவோடு இணைய விரும்புவதாகவும் ஆனால் மகராஜா அரசியல் சீர்திருத்தங்கள் எதையும் அப்போது விரும்பவில்லை என்றும் தெரிவித்தார். நேரு முதலில் சிறையில் இருக்கும் ஷேக் அப்துல்லாவை விடுதலை செய்து மக்கள் விரும்பும் ஆட்சி ஒன்றை அமைக்கச் சொன்னார். பின்னர் இந்தியாவோடு இணையலாம் என்றார். படேலுக்கு ஷேக் அப்துல்லாவை அவ்வளவாகப் பிடிக்காது என்றாலும், அப்துல்லாவும் மகராஜாவும் இணைந்து செயல்பட வேண்டும் என்ற கருத்தோடு அவரும் ஒத்துப்போனார்.

 

பாகிஸ்தானின் படையெடுப்பு

 

காஷ்மீர் தன்னோடுதான் இணையும் என்று பாகிஸ்தான் எதிர்பார்த்தது. ஜின்னா ‘பழுத்த பழம்போல அது நமது மடியில் விழும்’ என்று சொன்னார். ஆனால் பழம் இந்தியாவின் மடியில் விழத்தான் அதிக வாய்ப்பு இருக்கிறது என்பது தெரியவந்ததும் அவர் மிகுந்த கோபம் அடைந்தார். இதற்கிடையில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பூஞ்ச்மீர்பூர் பகுதியில் இருக்கும் முஸ்லிம்கள் மகராஜாவிற்கு எதிராக எழுந்தனர். மிகுந்த ஆட்சேதத்துடன் அந்த எழுச்சி முறியடிக்கப்பட்டது. ஜம்மு பகுதியில் இந்து அதிகமாக இருக்கும் பகுதியில் முஸ்லிம்களும் முஸ்லிம் அதிகம் இருக்கும் பகுதியில் இந்துக்களும் படுகொலை செய்யப்பட்டனர். பாகிஸ்தான் காத்திருக்க விரும்பவில்லை. காஷ்மீர்மீது படையெடுக்க அது முடிவெடுத்தது. ஆனால் தனது படையை அனுப்பினால் இந்தியாவோடு பெரிய போர் மூளும் அபாயம் நேரும் என்பதையும் அது உணர்ந்திருந்தது. வடமேற்குப் பகுதியில் இருக்கும் பழங்குடி மக்களை அனுப்பி அதற்குவேண்டிய எல்லா உதவிகளையும் பாகிஸ்தான் ராணுவம் செய்தது. அக்டோபர் 22ஆம் தேதி காஷ்மீர் ராணுவத்தின் நான்காவது காலாட் படையின் முஸ்லிம்கள் தங்களது அதிகாரியான லெப்டினன்ட் கர்னல் நாராயண்சிங்கைக் கொன்றுவிட்டு பாகிஸ்தானியருடன் சேர்ந்துகொண்டனர். எதிர்ப்பு அதிகம் இல்லாததால் படை வேகமாக முன்னேறி பாரமுல்லாவை அடைந்தது. அங்கு கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்றவற்றில் நேரத்தை வீணாக்கியதன் ஒரு விளைவு ஸ்ரீநகர் பேரழிவிலிருந்து தப்பித்தது. காஷ்மீரில் அன்று மதச்சார்பற்ற தலைவர்கள் பலர் இருந்தார்கள் என்பதற்கு உதாரணம் பாரமுல்லாவில் இருந்த மீர்மக்பூல் ஷேர்வானி என்ற தேசிய கான்ஃப்ரன்ஸ் தலைவர். அவர் படையெடுப்பைக் கடுமையாக எதிர்த்தார். மிகவும் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார்.

 

மகராஜாவிற்கு வேறு வழியில்லை. அக்டோபர் 26ஆம் தேதி (சில வரலாற்றாசிரியர்கள் 27 என்று சொல்கிறார்கள்) இந்தியாவோடு இணையும் பத்திரத்தில் கையெழுத்திட்டார். வி.பி. மேனன் நேரடியாகச் சென்று பெற்றுக்கொண்டார்.

 

காஷ்மீர் இணைந்தது!

 

காஷ்மீர் இணைந்ததும் இந்தியா தனது படையை காஷ்மீருக்கு அனுப்ப முடிவு செய்தது. சாலை வசதிகள் இல்லாததால் விமானத்தில் அனுப்ப முடிவுசெய்தது. நேரு தயங்கினார். படேல்தான் ராணுவத்தை அனுப்ப முடிவு எடுத்தார் என்று சிலர் கூசாமல் பொய் சொல்கிறார்கள். அவர்கள் அவ்வாறு சொல்வதற்கு ஆதாரம் ஃபீல்டுமார்ஷல் மனெக்ஷா 1994ஆம் ஆண்டு கொடுத்த பேட்டி. அந்தப் பேட்டியில் அவர் படையை அனுப்ப மிகவும் தயங்கினார் என்றும் படேல் அவரிடம் கடிந்துகொண்டார் என்றும் உடனே ராணுவத்தை அனுப்பத் தன்னிடம் ஆணையிட்டதாகவும் கூறுகிறார். முதலாவதாக, அவர் 47 ஆண்டுகள் கழித்துப் பேட்டி கொடுத்திருக்கிறார். இரண்டாவதாக, அவர் அன்று பெரிய அதிகாரி அல்ல. அவருக்குமேல் பல இராணுவ அதிகாரிகள் இருந்தார்கள். இந்திய ராணுவத்தின் தலைவர் அன்று ஒரு வெள்ளைக்காரர். எனவே, படேல் இவரிடம் படையை அனுப்பச் சொல்லியிருப்பார் என்பது நம்ப முடியாததாக இருக்கிறது.

 

மாறாக, நிகழ்வுகளின் மையத்தில் இருந்த வி.பி. மேனன் என்ன சொல்கிறார் என்பதைப் பார்ப்போம்:

 

“மகராஜா கையெழுத்திட்ட பத்திரத்தோடு நான் தில்லி திரும்பினேன். விமான நிலையத்தில் சர்தார்படேல் காத்திருந்தார். இருவரும் அன்று கூட்டப்பட்டிருந்த பாதுகாப்புக் குழு அமர்விற்குச் சென்றோம். பலத்த விவாதங்களுக்குப் பிறகு காஷ்மீர் இந்தியாவுடன் இணைவது ஆமோதிக்கப்பட்டது. நிலை சீரடைந்தவுடன் மக்கள் வாக்கெடுப்பு நடத்தப்படும் என்பதும் ஆமோதிக்கப்பட்டது. மறுநாள் விமானம் மூலம் ஒரு பட்டாலியன் அனுப்பப்படும் என்ற முடிவும் எடுக்கப்பட்டது. ஷேக் அப்துல்லா இதற்கு முழு ஒப்புதலை அளித்தார். அவர் படையெடுப்பைத் தடுக்க இந்திய ராணுவம் அனுப்பப்பட வேண்டும் என்பதை வலியுறுத்திக்கொண்டிருந்தார்.

 

இதற்குப் பிறகும் மவுண்ட்பேட்டனும் முப்படைத் தளபதிகளும் ராணுவத்தை அனுப்புவதினால் ஏற்படக் கூடிய பின்விளைவுகளைப் பற்றிச் சிந்திக்க வேண்டும் என்று சொன்னார்கள். ஆனால் நேரு, “ராணுவத்தை அனுப்பாவிட்டால் ஸ்ரீநகரில் படுகொலைகள்
நிகழும். அதன் விளைவாக இந்தியாவில் மிகப்பெரிய மதக்கலவரம் நிகழும் அபாயம் இருக்கிறது” என்றும் சொன்னார்.

 

எனவே, நேருவிற்கு ராணுவத்தை அனுப்புவதில் எந்தத் தயக்கமும் இருக்கவில்லை என்பது தெளிவு. போர் நடக்கும்போது படேலுக்கும் அவருக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்தன. படேலும் அன்றைய பாதுகாப்பு அமைச்சராக இருந்த சர்தார் பல்தேவ்சிங்கும் பலத்த பதிலடி கொடுக்க வேண்டும், பாகிஸ்தான் ஆக்கிரமித்த பகுதிகளில் குண்டுமாரி பொழிய வேண்டும் என்று விரும்பினார்கள். நேரு அதை ஏற்கவில்லை. அதனால் பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படும் என்றார். எங்கே எதிரிகள் குழுமியிருக்கிறார்களோ அங்கு மட்டும் குண்டு போடலாம் என்றார். ராணுவ அதிகாரிகளும் நேரு சொல்வதே ‘சரி’ என்றார்கள்.

 

இந்தியா ஏன் ஐநா சபைக்குச் சென்றது?

 

சர்தார் படேல் இந்தியா ஐநா சபைக்குச் செல்வதை விரும்பவில்லை என்பது உண்மை. ஆனால் இந்த முடிவை எடுத்திருக்காவிட்டால் வேறு என்ன செய்திருக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது.

 

என்ன செய்திருக்கலாம்?

 

பாகிஸ்தானுடன் பேசித் தீர்த்துக்கொண்டிருக்கலாம் என்று ஒருதரப்பினர் சொல்கிறார்கள். பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து அக்டோபர் 1947ஆம் ஆண்டிலிருந்து போர் நிறுத்தம் அமுலுக்கு வந்த 31 டிசம்பர் 1948 வரை தொடர்ந்து நடந்தது. காஷ்மீரைப் பிரிப்பதிலிருந்து அதைத் தனிநாடாக அறிவிப்பதுவரை எல்லா வழிமுறைகளும் அலசப்பட்டன. வேறு வழியே இல்லாததால்தான் ஐநா சபைக்குச் செல்ல நேர்ந்தது. ஐநா சபையின் முடிவு இந்தியாவிற்குச் சாதகமாகவே அமைந்தது என்பதையும் இங்கு சொல்ல வேண்டும்.

 

42_2.jpg

பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பை விரட்டி அடித்திருக்கலாம் என்று இன்னொரு தரப்பினர் கூறுகிறார்கள். இது இந்திய ராணுவத்தின் அன்றைய நிலையை அறியாதவர்கள் பேசும் பேச்சு. காஷ்மீர் அன்று மிகத் தொலைவில் இருந்தது. இந்தியாவிலிருந்து தளவாடங்களையும் ராணுவத்திற்குத் தேவையான பொருள்களையும் அனுப்புவது மிகவும் கடினமாகவும் அதிகச் செலவெடுப்பதாகவும் இருந்தது. மேலும் அந்தக் காலகட்டத்தில் இந்திய ராணுவத்திற்கும் பாகிஸ்தானிய ராணுவத்திற்கும் படைபலத்தைப் பொறுத்தவரை அதிக வித்தியாசம் இல்லை. போர்த்தளவாடங்கள் குறைவு. எல்லாவற்றிற்கும் மேற்கத்திய நாடுகளை, குறிப்பாக பிரிட்டனை நம்பியிருக்க வேண்டிய கட்டாயம். இரு படைகளை வெள்ளைக்காரர்களே தலைமை தாங்கி நடத்திக்கொண்டிருந்தார்கள். மேலும் காஷ்மீரின் மேற்குப்புறத்தில் மீர்பூர், கில்கிட் போன்ற பகுதிகளில் இருந்தவர்கள் பாகிஸ்தானை முழுவதுமாக ஆதரித்துக்கொண்டிருந்தார்கள். அங்குள்ள மக்கள் மத்தியில் இந்திய ராணுவம் இயங்குவது கடினமான காரியம். சர்தார் படேல் ஜூன் 1948ஆம் ஆண்டு எழுதிய கடிதம் ஒன்றில் சொல்கிறார்:

 

நமது ராணுவத்தின் கையிருப்புகள் அடிமட்டத்திற்கு வந்துவிட்டன. எவ்வளவு நாட்கள் தாக்குப்பிடிக்க முடியும் என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது.

 

மேலும், நவம்பர் 1948இல் ராணுவத் தலைமையகம் இந்தப் பிரச்சினையை ராணுவத்தால் தீர்க்க முடியாது என்ற முடிவிற்கு வந்துவிட்டது. எதனால் என்பதை விளக்கும் ஆவணம் ஒன்றை அன்றைய ராணுவத் தலைவரான ஜெனரல் புசர் தயாரித்தார். நேரு இந்தியாவில் இல்லாததால் துணைப்பிரதமருக்கு அதை அனுப்பினார். அதில் ராணுவமுறைத் தீர்விற்கு ஒரே வழி பாகிஸ்தானைத் தாக்குவதுதான்; ஆனால் அது போரை அடுத்த தளத்திற்கு எடுத்துச் செல்லும் என்பதால் அந்த வழியைப் பரிந்துரைக்கவில்லை என்று குறிப்பிட்டிருந்தார். படேல் அவரோடு ஒத்துப்போனார்.

 

இதற்கிடையில், ஹைதராபாத்திற்கு இந்திய ராணுவத்தை அனுப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

 

எல்லாவற்றிற்கும் மேலாக, பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர் பகுதியில் இருந்தவர்கள் இந்தியாவுடன் இணைய விரும்பினார்களா என்பதே கேள்விக்குறியாக இருந்தது. ஐநா தலையீட்டினால்தான் போர் முடிவிற்கு வந்தது; இல்லையென்றால் இடைவிடாத போர் இந்தியாவின் பொருளாதார நிலைமையை வெகுவாகப் பாதித்திருக்கும். பாகிஸ்தான், போர்நிறுத்தம் ஏற்படவில்லையென்றால் தொடர்ந்துபோர் செய்யத் தயாராக இருந்தது.

 

ஐநா தீர்மானம் என்ன சொல்கிறது?

 

இந்தத் தீர்மானம் 21 ஏப்ரல் 1948ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது.

 

தீர்மானத்தின் முக்கியமான பகுதிகள் இவை:

 

முதலாவதாக, இந்தியாவுடன் சேர்வதா அல்லது பாகிஸ்தானுடன் சேர்வதா என்பதைத் தீர்மானிக்க ஜம்மு காஷ்மீரில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.

 

இரண்டாவதாக, வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னால் பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள பகுதியிலிருந்து தனது படையையும் மற்றவர்களையும் அகற்றிக்கொள்ள வேண்டும்.

 

மூன்றாவதாக, பாகிஸ்தான் பகுதியிலிருந்து படை அகற்றப்பட்டுவிட்டது என்பது உறுதி செய்யப்பட்டதும், இந்தியாவும் தனது படையை விலக்கிக்கொள்ள வேண்டும்; ஆனால் சட்டம், ஒழுங்கு காப்பாற்றப்படுவதற்காக எவ்வளவு படைவீரர்கள் தேவைப்படுகிறார்களோ அவ்வளவு வீரர்களை வைத்துக்கொள்ளலாம்.

 

நாலாவதாக, வாக்கெடுப்பு இந்தியாவின் மேற்பார்வையில் நடத்தப்படும்.

 

இந்தத் தீர்மானம் தெளிவாக பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீரை விட்டு வெளியேறிய பிறகுதான் வாக்கெடுப்பு நடைபெறும் என்று சொல்கிறது. இன்றுவரை பாகிஸ்தான் தான் ஆக்கிரமித்த பகுதியிலிருந்து வெளியேறவில்லை. எனவே, வாக்கெடுப்பும் நடைபெறவில்லை.


இந்தப் பிரச்சினையில் நேருவைக் குறை கூறுபவர்கள் இரண்டு விஷயங்களை மறைத்துவிடுகிறார்கள்.

 

ஒன்று, காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்ததை ஆமோதிக்கும்போதே இந்திய அரசு வாக்கெடுப்பையும் ஆமோதித்துவிட்டது. இது நேரு எடுத்த முடிவல்ல; எல்லோரும் கூடி எடுத்த முடிவு.

 

இரண்டு, முஸ்லிம் அரசர் ஒருவர் ஆண்டுகொண்டிருந்த இந்துப் பெரும்பான்மை சமஸ்தானத்தை (ஜுனாகத்) இந்தியாவோடு இணைத்தபோது அங்கு வாக்கெடுப்பு நடத்தி மக்கள் கருத்து கேட்கப்பட்டது. காஷ்மீரைப் பொறுத்தவரையில் இந்து மகராஜா முஸ்லிம் பெரும் பான்மை சமஸ்தானத்தை இந்தியாவோடு இணைத்ததால் அங்குள்ள மக்களின் கருத்தைக் கேட்பதுதான் ஜனநாயகமுறை. வாக்கெடுப்பு நடத்தப்படும் என்ற வாக்குறுதியின் அடிப்படையில்தான் மக்கள் தலைவரான ஷேக் அப்துல்லா இந்தியா பக்கம் வந்தார்.

 

ஆனால், ஐநா தீர்மானத்திற்கு முடிவு நாளே கிடையாதா என்ற கேள்வி எழுகிறது. அது நிறைவேற்றப்பட்டு 68 ஆண்டுகள் ஆகியும் பாகிஸ்தான் தனது ஆக்கிரமிப்பை விட்டுக்கொடுக்கவில்லை. எனவே, தீர்மானம் தனது வலுவை முழுவதுமாக இழந்துவிட்டது. நடைமுறைச் சாத்தியம் என்பது இரு தரப்பினரும் பேசித் தீர்த்துக் கொள்வதுதான்.

 

மக்களில் சிலர் காஷ்மீர் தனிநாடாக இயங்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். இதுவும் நடைமுறையில் சாத்தியம் என்று எனக்குத் தோன்றவில்லை. ஆனால் தொடர்புடையவர்கள் அனைவரையும் அழைத்துப்பேசி ஒரு முடிவுக்கு நிச்சயம் வரலாம்.

அரசியல் அமைப்புச் சட்டம் பிரிவு 370

இந்தப் பிரிவை அரசியல் அமைப்புச் சட்டத்தில் கொண்டுவந்து காஷ்மீருக்குத் தனிச்சலுகை கொடுத்ததற்காக நேருவை வலதுசாரிகள் கடுமையாகச் சாடுகிறார்கள். ஆனால் முக்கியமான உண்மை ஒன்றை மறைத்துவிடுகிறார்கள். காஷ்மீர், இந்தியாவோடு இணைந்தது நிபந்தனை இல்லாமல் அல்ல. வேறு எந்த சமஸ்தானத்திற்கும் அளிக்கப்படாத சலுகை அதற்கு அளிக்கப்பட்டது. தகவல்தொடர்பு, பாதுகாப்பு, வெளிநாட்டு உறவு இந்த மூன்று துறைகளில் மட்டுமே இந்திய அரசிற்கு அதிகாரங்கள் இருக்கும் என்று இணைப்புப் பத்திரம் தெளிவாகக் கூறியது. எனவே, காஷ்மீரைப் பற்றி தனிப்பிரிவு ஒன்றை நமது அரசியல் அமைப்புச்சட்டத்தில் கொண்டு வரவேண்டிய கட்டாயம் நமது அரசியல் சாசனத்தை அமைத்தவர்களுக்கு இருந்தது. அதன் வடிவமே அரசியல் சட்டப்பிரிவு 370. மக்களாட்சி முறைகளில் நம்பிக்கை வைத்திருக்கும் எவரும் அரசியல் சட்டப்பிரிவு 370ஐ குறை கூற முடியாது.

 

இன்னொன்றும் இங்கு சொல்லியாக வேண்டும்.

 

காஷ்மீருக்கும் தனியாக அரசியல் அமைப்புச் சட்டம் இருக்கிறது. 1956ம் ஆண்டு காஷ்மீர் சட்டசபையால் நிறைவேற்றப்பட்டது. அது இந்தியச் சட்டங்களை அனேகமாக முழுவதையும் (அடிப்படை உரிமைகள் உட்பட) தனதாக ஏற்றுக்கொள்கிறது. இந்தியாவின் இணைபிரியாத அங்கம் காஷ்மீர் என்பதையும் அது மாற்ற முடியாத பிரிவு என்பதையும் அது தெளிவாகச் சொல்கிறது.

 

இவை எல்லாம் நடந்தது, நேருவின் தொலைநோக்குப் பார்வையாலும் அவருக்கு ஜனநாயகத்தின் மீது இருந்த அசைக்க முடியாத நம்பிக்கையாலும்தான். சர்தார் படேலுக்கும் நேருவிற்கும் கருத்து வேறுபாடுகள் இருந்தன. ஆனால் நாட்டு நலன்குறித்த எல்லா முடிவுகளையும் இருவரும் சேர்ந்து ஆலோசித்தே எடுத்தார்கள். சர்தாருக்கு முழுவதும் பிடிக்காத எந்த முடிவையும் நேரு சுயேச்சையாக எடுத்ததாக எனக்குத் தெரியவில்லை. நேருவின் எந்த முடிவும் சுயநலனுக்காக எடுக்கப்பட்டது அல்ல.

வரலாறு தெரியாதவர்கள்தான் நேருவைக் குறை கூறுவார்கள்.

 

கட்டுரையை எழுத உதவிய சிலநூல்கள்:

 

War and Peace in Modern India - Srinath Raghavan, Permanent Black, 2015.
Sardar Patel - Rajmohan Gandhi, Navajivan Publishing House, 1991.
The Story of the Integration of Indian States - V P Menon, Orient Longmans, 1955.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 

காஷ்மீரும் பி.ஏ.கிருஷ்ணனும்


 
index
 

பெருமதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு ,

வணக்கம்.

தற்போது காஷ்மீரில் நடந்து வரும் வன்முறை நிகழ்வுகள் தங்கள் அறிந்ததே.50 நாட்களுக்கு மேலாக ‘ஊரடங்கு சட்டமும்’,70 பேருக்கு மேலாக உயிரிழப்பும் நடந்துள்ளது.மத்தியில் உள்ள மோதி அரசும்,மாநிலத்தில் உள்ள மெஹ்பூபா கூட்டணி அரசும் எவ்வளவு முயற்சித்தும் ‘கல்லெறி’ சம்பவங்களை தடுக்க முடியவில்லை. பிரிவினைவாதி குழுக்கள் கலவரத்தை மேலும் தூண்டுவதும்,பாகிஸ்தானுடனான பேச்சு வார்த்தையும் முறிந்து அந்தரத்தில் நிற்கிறது.இந்நிலையில் நேருவும்,காங்கிரஸும்தான் இந்த அவல நிலைக்கு காரணம் என்ற கூக்குரல் வழக்கம் போல் எழுந்துள்ளது.இந்நிலையில் இந்த மாத ‘காலச்சுவடு‘ இதழில் தங்களின் மதிப்பிற்குரிய திரு.பி .ஏ.கிருஷ்ணன் “காஷ்மீர் 1947-48 சில உண்மைகள்

என்ற கட்டுரையில் நேருவின் காஷ்மீர் பற்றிய நிலைப்பாடுகளை தெளிவாக எழுதியுள்ளார்.இது பற்றி தங்களுக்கு வேறேதும் மாற்று கருத்துக்கள் உள்ளதா?

அன்புடன்,

அ .சேஷகிரி.

***

அன்புள்ள சேஷகிரி,

வலதுசாரி இடதுசாரி ‘மப்பு’கள் ஏதுமில்லாமல் தெளிந்த மண்டையுடன் எழுதப்பட்ட தகவல்பூர்வமான கட்டுரை.

மேலதிகமாக இரண்டு விஷயங்களை மட்டுமே சேர்த்துக்கொள்ள விரும்புவேன். ஒன்று, சிகந்தர் புட்சிகான் ஆட்சிக்காலத்தில் காஷ்மீரின் இந்துப்பண்பாடு மற்றும் பௌத்தப்பண்பாடு மீது தொடுக்கப்பட்ட நிகரில்லாத வன்முறை. உலக அற்புதங்களில் ஒன்றான மார்த்தாண்டர் ஆலயம் உட்பட காஷ்மீரின் அத்தனை பேராலயங்களும் அழிக்கப்பட்டன. பல்லாயிரக்கணக்கானவர்கள் கொன்றழிக்கப்பட்டனர். கட்டாயமதமாற்றம் செய்யப்பட்டனர். காஷ்மீரின் ஷா மீரி வம்சத்தின் இரண்டாவது சுல்தான்[ 1389–1413] இவர் ‘சிலையுடைப்பு சிக்கர்ந்தர்’ என்றே வரலாற்றில் அழைக்கப்படுகிறார். [ (“Sikandar the Iconoclast”] மதகுருவான மீர் முகமது ஹமதானி என்பவரின் ஆணைப்படி அவர் இதைச்செய்தார்.இது அவர்களாலேயே முறையாகப்பதிவுசெய்யப்பட்ட வரலாறு.

இன்றும் அங்குள்ள சுன்னிகள் ஹமதானியை மாபெரும் ஆன்மிக ஞானியாகக் கொண்டாடுகிறார்கள். சிக்கந்தரை நவீன காஷ்மீரின் பிதா என்கிறார்கள். அருந்ததி ராய் போன்ற முற்போக்காளர்கள் ஹமதானியின் சமாதிக்குச் சென்று வீரவணக்கம் செலுத்துகிறார்கள்.இந்த ஒருசெயலே காஷ்மீரின் சுன்னி இஸ்லாமியப் பெரும்பான்மையின் பிரிவினைவாத அரசியல் கட்சிகளை ஒரு நவீன தேசியமாக அங்கீகரிப்பதற்கான அடிப்படைத்தகுதியை இல்லாமலாக்கிவிடுகிறது. அது ஐ.எஸ்.எஸ் போன்ற ஒரு மானுடவிரோத மதவெறிக்கும்பல் அன்றிவேறல்ல.அன்று இந்துக்களுக்கு நடந்தது, இன்று ஷியாக்கள் அதே அழித்தொழிப்பின் விளிம்பில் வாழ்கிறார்கள் அங்கு.

இரண்டாவதாக காஷ்மீரின் நிலம் மூன்றுபகுதிகளால் ஆனது. இந்துக்கள் ஜம்முவிலும் பௌத்தர்கள் லடாக்கிலும் பெரும்பான்மை. சீக்கியர் கணிசமான அளவு அங்குள்ளனர். சுயநிர்ணயம் என்னும்பேரால் காஷ்மீர் சமவெளியில் மட்டும் பெருமளவில் உள்ள சுன்னிகளிடம் ஒட்டுமொத்த காஷ்மீரையும் அளிக்கமுடியுமா என்ன?

காஷ்மீரி சுன்னிகள் தங்கள் பெரும்பான்மையை பயன்படுத்தி அந்நிலத்தை தங்கள் தேசமாக அடைந்தால் அங்குள்ள சிறுபான்மையினர் கதி என்ன என்னும் கேள்விக்கு விடை இல்லாமல் இந்த விஷயத்தைப்பற்றி எவர் பேசினாலும் அது கயமை என்பது மட்டுமே என் எண்ணம்.

காஷ்மீரில் மத அடிப்படையிலான ஒரு தேசியத்தை ஒப்புக்கொள்வதென்பது சுன்னிகள், முஸ்லீம்கள் தனித்தேசியம் என்பதை ஏற்பதற்குச் சமம். அந்தக்கோரிக்கை இந்தியா முழுக்க எழும். சென்ற முப்பதாண்டுக்காலத்தில் தெற்கு அஸாமில் வங்கத்திலிருந்து சட்டவிரோதமாகக் குடியேறி காங்கிரஸின் மோசடியால் குடியுரிமைபெற்ற வங்கமுஸ்லீம்கள் கூட அங்கே பிரிவினைக்கோரிக்கையை போஸ்டர் அடித்து ஒட்டியிருப்பதை நான் பார்த்தேன். அப்பகுதி வங்கதேசத்துடன் சேரவேண்டுமென அவர்கள் கோருகிறார்கள். இந்தியாவின் ஒடுக்குமுறை ஒழிக என கூவுகிறார்கள்.

மத அடிப்படையிலான தேசப்பிரிவினை என்னும் எண்ணமே இந்தியா என்னும் இந்த அமைப்பையே சிதறடித்துக் குருதிப்பெருக்கை உருவாக்குவது. நம் குழந்தைகளின் எதிர்காலத்தை முழுமையாக அழிப்பது. அதைப்பேசுபவர்கள் ஒன்று இந்ததேசம் உடைந்து சிதறி உருவாகும் அகதிப்பெருக்கில் தங்கள் அதிகாரத்தைக் கண்டடையமுடியுமென நினைக்கும் சுயநலக்கூட்டம். இன்னொன்று அவர்களை நம்பும் மூடர்கூட்டம்.

மதவெறியை தேசியமென அங்கீகரிக்கும் நாடு எதுவாக இருந்தாலும், அது தற்கொலைசெய்துகொள்கிறது. நாம் ரஷ்யாவையும் சீனாவையும் பார்த்து மதவெறியை எதிர்கொள்வது எப்படி என கற்றுக்கொள்ளவேண்டும்

ஜெ



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard