தொடக்கப்புள்ளிகள்
பிரிட்டிஷ் காலனியாதிக்கத்துக்கு எதிராக இந்தியா போராடத் தொடங்கியது. 1930க்கு பிறகு இந்திய விடுதலைப் போராட்டம் முக்கியமான திருப்பத்தைச் சந்தித்தது. மத வேறுபாடு பாராட்டாமல், எல்லோரும் இந்தியர்களாக இணைந்து பிரிட்டிஷாரிடமிருந்து விடுதலை பெறவேண்டும் என்பது மிகுதியான மக்களின் எண்ணம். பெரும்பான்மையினராக இருக்கும் இந்துக்கள், முஸ்லிம்கள்மீது அதிகாரம் செலுத்துவார்கள் என்ற வாதத்தை முன் வைத்தது ஜின்னா தலைமையில் இயங்கிய இந்திய முஸ்லிம் லீக். இந்த வாதத்துக்குள் இருக்கும் சந்தேகம் சில அரசியல் தலைவர்களிடமும் இருந்தது. அதாவது ஆட்சி அதிகாரம் என்று வரும்போது இந்து அரசியல் தலைவர்கள் தங்கள் நலன்களை உதாசீனம் செய்வார்கள்; தங்களை ஒதுக்கிவிடுவார்கள் என்று அவர்கள் எண்ணினார்கள். இந்தச் சந்தேகத்தையும் அச்சத்தையும் முஸ்லிம் மக்களின் முன்பே இவர்கள் வைத்தார்கள். இப்போது அது மக்கள் பிரச்னை ஆகிவிட்டது.
இந்தியர்களே இந்தியாவை ஆளும் அனுபவத்தை அப்போது வாழ்ந்த யாரும் நேரடியாகக் கண்டிருக்கவில்லை. ஜனநாயக ஆட்சியாக இருந்தாலும் அது எப்படி இருக்கும் என்பது சரியாக யாருக்கும் தெரியாது. படிப்பறிவில்லாத பொது மக்களைப் பற்றிக் கேட்கவேவேண்டாம். விடுதலை என்று சொல்லும்போதெல்லாம் ஒரு சாராருக்கு அச்சம் அதிகமான சமயம் அது. வெள்ளையர்களே ஆட்சியைத் தொடரட்டும் என்று கூடச் சிலர் கருதினர். தமிழகத்திலும் அப்படிப்பட்ட குரல்கள் எழுந்தன. பெரிய அரசியல் அமைப்பான இந்திய தேசிய காங்கிரஸ் வட நாட்டவர் பிடியில் உள்ளது. அதுவும் உயர் சாதியினரே அதை நடத்துகிறார்கள். வெள்ளையரிடமிருந்து விடுதலை கிடைக்கும். ஆனால் இவர்களிடமிருந்து மற்றவர்களுக்கு விடுதலை கிடைக்குமா என்று அவர்கள் கேள்வி எழுப்பினார்கள். தலைவர்களுக்கே இப்படிப்பட்ட அச்சங்கள் எழும்போது பாமர மக்களுக்கு எழாமல் இருக்குமா? முஸ்லிம் லீக் கட்சி இதை மேலும் ஊதிப் பெரிதாக்கியது.
1942ம் ஆண்டு இரண்டாம் உலகப்போர் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது இந்தியாவின் முழு ஒத்துழைப்பு பிரிட்டிஷ் அரசாங்கத்துக்குத் தேவைப்பட்டது. ஜப்பான் படை இந்தியாவின் எல்லைகளைத் தொடும் வேளையில் இந்தியாவில் எந்தவிதமான பெரிய கிளர்ச்சியையும் அரசு விரும்பவில்லை. அதனால் 1942 மார்ச் மாதம் ஒரு தூதுக்குழு இந்தியாவுக்கு அனுப்பப்பட்டது. சர் ஸ்டாஃபோர்ட் கிரிப்ஸ் அக்குழுவுக்குத் தலைமை தாங்கினார். அவர் அப்போது வின்ஸ்டன் சர்ச்சிலின் போர்க்கால மந்திரி சபையில் இருந்தார். இந்திய அரசியல் தலைவர்களைச் சந்தித்து தான் கொண்டு வந்த திட்டத்தை விளக்கினார். மாகாணங்களுக்கு டொமினியன் அந்தஸ்து; அவை தனியாக செயல்படுவதற்கு அதிகாரம்; ஒரு பொது அரசமைப்பு சட்டத்தை உருவாக்குவது போன்ற அம்சங்களைக் கொண்டது கிரிப்ஸ் திட்டம். அந்தப் பொது அரசமைப்பு சட்டத்தை அப்படியே பிரிட்டிஷ் அரசங்கம் ஏற்றுக்கொள்ளும் என்பதற்கு உத்தரவாதமில்லை என்ற நிபந்தனையும் அதில் அடங்கியிருந்தது. அதனால் அதை இந்திய அரசியல் தலைவர்கள் ஏற்கவில்லை. திவாலான வங்கியின் ‘பின் தேதியிட்ட காசோலை’ என்று அதை அவர்கள் வர்ணித்தார்கள். எனவே கிரிப்ஸ் தூதுக்குழுவின் முயற்சி தோல்வியில் முடிந்தது. அதைத் தொடர்ந்து 1942 ஆகஸ்ட் 8 ஆம் தேதி காங்கிரஸ் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை அறிவித்தது. விடுதலையை நோக்கி ஒருமுகப்படுத்தபட்ட நாட்டை காந்தி, கப்பலை இயக்கும் கேப்டனைப் போல வழி நடத்தினார்.
இந்தச் சமயத்தில்தான் ஜின்னாவும் அவருடன் இருந்தவர்களும், முஸ்லிம்களுக்கு தனி நாடு அவசியம் என்று தெளிவாக அறிவித்தார்கள். தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி பிரிட்டிஷாருக்கு மட்டுமல்ல காங்கிரஸுக்கும் அழுத்தம் கொடுத்தார்கள். விடுதலை கைக்கு எட்டும் தொலைவில் இருப்பதை உணர்ந்த ஜின்னா பேரம் சீக்கிரம் முடிய வேண்டும் என்று விரும்பினார். 1946 இல் எல்லாம் முற்றிய நிலையில் ஜின்னா இதற்கு மேல் நாங்கள் பொறுக்க முடியாது என்று அனைவருக்கும் காட்ட முடிவெடுத்தார்.
1946 இல் நடைபெற்ற மாகாணத்தேர்தல்களுக்குப் பிறகு வங்காளத்தில் முஸ்லிம் லீக்கின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதே ஆண்டில் பிரிட்டிஷ் அரசின் கேபினட் மிஷன் பிரிட்டிஷ் ஆட்சியின் அதிகாரங்களை இந்தியாவுக்கு மாற்றும் பெரும் பணியில் ஈடுபட்டது. அது இந்தியாவை தற்போதுள்ள பாகிஸ்தான், வங்க தேசம் சேர்த்து விடுதலை பெற்ற டொமினியனாக அறிவிக்க முடிவு செய்தது. அதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றது முஸ்லிம் லீக். அது இந்தியாவும், பாகிஸ்தானும் விடுதலை பெற்ற இரண்டு தனி டொமினியன்களாக அறிவிக்கப்பட வேண்டும் என்றது. ஆனால் முஸ்லிம் லீக் கோரிக்கையை காங்கிரஸ் ஏற்க மறுத்தது. அந்த நிகழ்வுகளின் தொடர்ச்சியாக 1946 ஜூலை 27 ஆம் தேதி முஸ்லிம் லீக் பம்பாயில் கூடியது. பிரிட்டிஷ் அரசின் கேபினட் மிஷன் முடிவை அது நிராகரித்தது. மேலும் 1946 ஆகஸ்ட் 16 ஆம் தேதி மிகப்பெரிய நாடு தழுவிய ஹர்த்தாலை நடத்தப் போவதாக அறிவித்தது. அந்த தினத்துக்கு ‘நேரடி நடவடிக்கை நாள்’என்று பெயரிட்டது.
ஹர்த்தால் என்பது மகாத்மா காந்தியால் அறிமுகப்படுத்தப்பட்டது. ஹர்த்தால் என்பது கடையடைப்பு, வேலை நிறுத்தம் போன்றவற்றைக் குறிக்கும் ஒரு குஜராத்திச் சொல். தென்னாப்பிரிக்காவில் இருந்த கறுப்புச் சட்டத்தை எதிர்க்க அங்கிருந்த இந்தியர்களைத் திரட்டி 1906 ஆம் ஆண்டு உலகின் முதல் ஹர்த்தாலை நடத்திக் காட்டினார் காந்தி. முதல் உலகப் போரில் (1914-18) இந்தியா, பிரிட்டிஷ் அரசுக்கு உதவியது. காந்தி முழு ஒத்துழைப்பு நல்கினார். ராணுவத்தில் இந்தியர்களைச் சேர்ப்பதற்கும் உதவினார். களப்பணியாற்றினார். போருக்குப் பிறகு பிரிட்டிஷ் அரசு இந்திய மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் என்று பலருடன் சேர்ந்து அவரும் நம்பினார்.
1919 இல் ரௌலட் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி சந்தேகத்துக்குள்ளான நபர்களை விசாரணையின்றி இரண்டு வருடங்கள் சிறையில் அடைக்கலாம். அது போன்ற இன்னும் பல அடக்குமுறைகளைச் செயல்படுத்த அந்தச் சட்டம் உதவியது. விடுதலைப் போராட்டக்காரர்களைக் குறி வைத்தே அது கொண்டு வரப்பட்டது. அதனால் காந்தி உள்பட அனைவரும் அந்தச் சட்டத்தை எதிர்த்தனர். 1919 மார்ச் 6 ஆம் தேதி நாடு தழுவிய ஹர்த்தால் நடைபெற்றது. அப்போது இந்தியர்கள் அனைவரும் தங்கள் பணிகளை ஒரு நாள் நிறுத்தி உண்ணாவிரதம் இருக்கவேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டார்கள். அதுவே இந்தியாவில் காந்தியால் வெற்றிகரமாக நடத்தப்பட்ட முதல் ஹர்த்தால். அது நாட்டின் விடுதலைக்காக சுகபோக வாழ்வையும், நிம்மதியையும் இழக்கத் தயாராக இருந்த பல தரப்பட்ட மக்களால் நிகழ்த்திக்காட்டப்பட்டது. அத்தகைய ஹர்த்தாலை நேரடி நடவடிக்கை நாளன்று நடத்துவதற்குத்தான் இஸ்லாமியர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. கூட்டம் எவ்வளவு கூடினாலும் முந்தைய ஹர்த்தாலின் அனுபவம் இருப்பதால் மக்களைக் கட்டுப்படுத்துவது எளிதாகத்தான் இருக்கும் என்று பொதுவாக பலரும் நினைத்தார்கள். ஆனால் நடந்தது வேறு.
அப்போது ஒன்றுபட்ட வங்காளத்தின் மொத்த மக்கள்தொகையில் இஸ்லாமியர்கள் 56% பேரும், இந்துக்கள் 42% பேரும் இருந்தார்கள். இஸ்லாமியர்கள் மிகுதியாக கிழக்குப் பகுதியில் தான் வசித்தார்கள். கல்கத்தாவை எடுத்துக்கொண்டால் அதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 63%; இஸ்லாமியர்கள் 33%. ஜின்னா ஆகஸ்ட் 16 ஆம் தேதியை நேரடி நடவடிக்கை நாளாக அறிவித்தவுடன் வங்காளத்தின் முதலமைச்சர் (பிரீமியர்) உசைன் சாகித் சுகர்வாடி துடிப்புடன் செயல்பட்டார். அவர் வங்காளத்தின் தலைமைச் செயலாளர் ஆர்.எல். வாக்கரின் அறிவுரைப்படி, ஆகஸ்ட் 16 ஆம் தேதி பொது விடுமுறை என்று அறிவிக்கும்படி வங்காளத்தின் கவர்னர் சர் ஃப்ரெடரிக் பரோசைக் கேட்டுக்கொண்டார். அன்று அரசாங்க அலுவலகங்கள், வியாபார மையங்கள், கடைகள் எல்லாம் மூடப்படவேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. காங்கிரஸ் இந்த அறிவிப்பைக் கடுமையாக எதிர்த்தது. இது இஸ்லாமியர்கள் மிகுதியாக இல்லாத இடங்களிலும் மக்கள் மீது ஹர்த்தாலைத் திணிக்கிறது என்று கூறியது.
வங்காள சட்டசபை காங்கிரஸ் கட்சித் தலைவர் பிரஃபுல்ல சந்திர கோஷ் ஆகஸ்ட் 14 ஆம் தேதி பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது அவர் இந்துக்கள் ஹர்த்தாலில் கலந்து கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். முஸ்லிம் லீக் ஹர்த்தாலை நடத்துவதில் தீவிரம் காட்டியது. முஸ்லிம் நாளிதழ் ‘ஸ்டார் இண்டியா’ நேரடி நடவடிக்கை தினத்தின் நிகழ்ச்சி நிரலை வெளியிட்டது. அதன்படி அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் சேவைகளைத் தவிர மற்ற எல்லாம் நிறுத்தப்படும். அரசு அலுவலகங்களும் தொழிற்சாலைகளும் மூடப்படும். ஊர்வலங்கள் கல்கத்தா, ஹௌரா, ஹூக்ளி, மெட்டியா புரூஸ், 24 பர்கானாக்கள் ஆகிய இடங்களில் இருந்து புறப்பட்டு ஆக்டெர்லோனி நினைவிடத்தில் வந்து சேர வேண்டும். அங்கே முதலமைச்சர் முன்னிலையில் ஒரு பேரணி நடைபெறும்.
நேரடி நடவடிக்கை நாளான ஆகஸ்ட் 16 ஆம் தேதி எல்லாம் திட்டமிட்டபடி நடந்தன. இந்தியாவின் பல பகுதிகளில் நேரடி நடவடிக்கை நாள் பிரச்னை ஏதுமின்றி கடந்து போனது. ஆனால் அது கல்கத்தாவை உலுக்கி எடுத்தது. பகல் 12 மணிக்கு கல்கத்தாவில் பேரணி நடந்தது. நண்பகல் 2 மணிக்குப் பொதுக்கூட்டம் தொடங்கியது. அதற்கு முன்னரே நண்பகல் தொழுகை முடிந்தபின் பல பகுதிகளிலிருந்து முஸ்லிம் மக்கள் அங்கு வந்து குவியத் தொடங்கிவிட்டார்கள். கவாஜா நாசிமுதினும், முதலமைச்சர் சாகித் சுகர்வாடியும் முக்கியப் பேச்சாளர்கள். கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் அங்கே கூடியிருந்தார்கள். பெரும்பாலானவர்கள் இரும்புத் தடிகளையும் கம்புகளையும் வைத்திருந்தார்கள். மத்தியப் புலனாய்வு அதிகாரிகள் கொடுத்த தகவல்கள் அங்கு நடந்தவை பற்றித் தெரிந்துகொள்ள நமக்கு உதவுகின்றன.
நாசிமுதின் அமைதியைப் போதித்து தன் பேச்சை ஆரம்பித்தாலும் அதன் பின் அன்று காலையில் கல்கத்தாவில் தொடங்கிய மதக்கலவரத்தைப் பற்றிப் பேசலானார். காலை 11 மணி வரை அடிபட்டவர்கள் இஸ்லாமியர்கள்தாம் என்றார். மேலும் இஸ்லாமியர்கள் தற்காப்பு நடவடிக்கையாகச் சில செயல்களைச் செய்யவேண்டியிருந்தது என்று கூறினார். உண்மை நிலவரம் அதுவல்ல. லால் பஜார் போலீஸ் தலைமையகம் காலை பத்து மணிக்கு முன்னதாகவே கலவரம் தொடங்கிவிட்டதாகத் தெரிவித்தது. கடைகளைத் திறந்து வைத்திருந்தவர்களைச் சிலர் மிரட்டி மூட வைத்தார்கள். சண்டைகள், கத்திக்குத்து, கல்வீச்சு அனைத்தும் நடந்தன.
அடுத்த 72 மணி நேரத்தில் கல்கத்தாவில் 4,000 பேர் கொல்லப்பட்டார்கள். ஒரு லட்சம் பேர் தங்கள் வீடுகளை இழந்தார்கள். ஆறு நாள்களுக்கு மதக்கலவரம் தொடர்ந்தது. 21 ஆம் தேதி வங்காளம் வைஸ்ராயின் நேரடி ஆளுமையின் கீழ் வந்தது. அங்கு என்னதான் நடந்தது என்பதைச் சொல்ல வேண்டிய பொறுப்பு கவர்னருக்கு உள்ளது. ராணுவ அதிகாரிகளால் நியமிக்கப்பட்ட மத்தியப் புலனாய்வு அதிகாரி ஒருவர் பொதுக்கூட்டம் நடந்த இடத்தில் இருந்தார். அவருடைய தகவல் நம்பகத்தன்மை வாய்ந்தது என்று கவர்னர் பரோஸ் கருதினார். முதலமைச்சர் சாகித் சுகர்வாடி லட்சக்கணக்கானோர் கூடியிருந்த பொதுக் கூட்டத்தில் பேசிய வரி ஒன்றைப் புலனாய்வு அதிகாரியின் குறிப்பில் கண்டு கவர்னர் உள்பட அதிகாரிகள் பலரும் அதிர்ச்சி அடைந்திருக்க வேண்டும். ‘போலிஸும் ராணுவமும் குறுக்கிடாதபடி நான் பார்த்துக் கொள்கிறேன்.’
இதன்மூலமாக ராணுவத்தையும் போலிஸையும் செயல்படவிடாமல் தன்னால் கட்டுப்படுத்தமுடியும் என்பதையே அவர் தெரிவிக்கிறார். அவர் வேறு ஏதேனும் சொல்ல முற்பட்டிருந்தாலும், அங்கிருந்த கூட்டம் ஒன்றைப் புரிந்துக்கொண்டது. கலகம் செய்வதற்கு வெளிப்படையான அறிவிப்பு வந்துவிட்டது. அங்கிருந்து புறப்பட்டவர்கள் நிகழ்த்தி அனைத்தும் அதை நிரூபிப்பதாகவே இருந்தன. அவற்றைத் தொடர்ந்து ஆயுதம் தாங்கிய குண்டர்கள் டிரக்குகளில் வந்து கல்கத்தாவின் ஹாரிசன் ரோட்டில் இறங்கினார்கள். இந்துக்களின் கடைகளைத் துவம்சம் செய்தார்கள்.
பாதிக்கப்பட்ட இந்துக்களும், சீக்கியர்களும் எதிர் தாக்குதல் நடத்த ஆரம்பித்தவுடன் கலவரம் உச்சக் கட்டத்தை அடைந்தது. எதிர்ப் பிரிவு கும்பலிடம் சிக்கும் மனிதர்கள் துண்டு துண்டாக வெட்டிக் கொல்லப்பட்டார்கள். நேரடி நடவடிக்கை நாளான ஆகஸ்ட் 16 ஆம் தேதி தொடங்கி, ஏழு நாள்களுக்கு வன்முறை வெறியாட்டங்கள் நடைபெற்றன. அதனால்தான் அந்த வாரத்திற்கு ‘நீண்ட கத்திகளின் வாரம்’ என்ற பெயர் கொடுக்கப்பட்டது. ஆரம்பத்தில் இந்துக்களும் சீக்கியர்களும் முஸ்லிம்களுக்கு இணையாக கொலைவெறித் தாண்டவம் ஆடினார்கள்.இந்து வன்முறைக் கும்பல், கண்களில் அகப்படும் இஸ்லாமியர்கள் அனைவரையும் வெட்டிக் கொன்றது. கல்வி நிறுவனங்களில் இருந்த மாணவர்களும் வன்முறையில் இருந்து தப்ப முடியவில்லை. வீடுகளுக்குள் இருந்தவர்களும், கல்விச்சாலையில் இருந்தவர்களும் வெளியே இழுத்து வரப்பட்டு வெட்டிக் கொல்லப்பட்டார்கள்.
தாக்குதல் முற்றிய நிலையில் கல்கத்தாவைவிட்டு முஸ்லிம்கள் பலர், அவர்கள் மிகுதியாக இருக்கும் கிழக்கு வங்காளத்துக்கு இடம் பெயர்ந்தார்கள்.
நேரடி நடவடிக்கை நாளுக்கு அடுத்த நாளான ஆகஸ்ட் 17 ஆம் தேதி மேலும் கொடுமையான தினமாக அமைந்தது. கல்கத்தாவுக்கு அருகில் இருக்கும் தொழிற்சாலைகள் மிகுந்த இடம் மெட்டியா புரூஸ். அப்போது கார்டன் ரீச் துணியாலை ஊழியர் சங்கத்தின் தலைவராக இருந்தவர் அப்துல்லா ஃபரூக்கி. இவர் எலியன் மிஸ்திரி என்ற கொடிய இஸ்லாமிய வன்முறையாளரை அழைத்துக்கொண்டு ஒரு கும்பலோடு பிர்லாவின் கேசோராம் பஞ்சாலைக்குள் நுழைந்தார். ஆலைத் தொழிலாளர்கள் பலர் உள்ளே இருந்தார்கள். அவர்களுள் ஒரிசாவைச் சேர்ந்த பலர் இருந்தனர். ஃபரூக்கியின் தூண்டுதலின் பேரில் அங்கிருந்த இந்துத் தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். இறந்தவர்களின் எண்ணிக்கை 500 முதல் 800 வரை இருக்கும். சில முஸ்லிம் தொழிலாளர்களும் அந்தத் தாக்குதலில் இறந்துபோனார்கள்.
முதலமைச்சர் சாகித் சுகர்வாடி சீல்டா ராணுவ ஓய்வு முகாமில் இருக்கும் ராணுவத்தினரை வரவழைக்குமாறு பிரிட்டிஷ் அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார். அவர்கள் சற்று மெதுவாகவே செயல்பட்டார்கள். 16ஆம் தேதி இரவு 1.45 மணிக்கு பிறகுதான் ராணுவத்தினர் அனுப்பி வைக்கப்பட்டார்கள்.
ஒரு கட்டத்தில் மக்கள் கல்கத்தாவைவிட்டு உயிருக்குப் பயந்து ஓட ஆரம்பித்தார்கள். ஹௌரா பாலத்தில் மக்கள் கூட்டம் நிரம்பியது. ஹௌரா ரயில் நிலையத்தை அடைந்து, கல்கத்தாவைவிட்டுப் போவதற்காக மக்கள் பாலத்தைக் கடந்தார்கள். ஆனால் கல்கத்தாவைவிட்டு வெளியேறினாலும் மரணம் அவர்களைத் துரத்தி வந்தது.
சத்தியப் பிடிவாதம் கொண்ட அகிம்சாவாதியான காந்தியை மதக்கலவரம் கடுமையான கவலைக்குள்ளாக்கியது.பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று வந்த காந்தி மனம் உடைந்து போனார். அதனால்தான் வேவல் பிரபு காந்தி தன்னிடம் இப்படி ஒரு கருத்தைக் தெரிவித்தார் என்றார். ‘இந்தியா ரத்தத்தில் நீராட விரும்பினால் அப்படியே ஆகட்டும்.’