ராபர்ட் க்ளைவ் - நல்லவர்; ஜெனரல் டயர் - மிக மிக நல்லவர்:
புரிந்து கொள்ளுங்கள்.
எப்டின்னு கேக்குறீங்களா ...
அதுக்கு முன்னால் ஒரு வார்த்தை:
என்னடா .. இந்தப் பதிவில் அங்கங்கே சில நீல எழுத்துக்கள் தலை நீட்டுகிறதே என்று நீங்கள் கேட்கலாம். ஒன்றும் பெரிய விஷயமில்லை. அவைகள் எல்லாமே “கடன் வாங்கிய எழுத்துக்கள்”. அதனால், இப்பதிவை வாசிப்பதற்கு முன் இன்னும் இரு பதிவுகளையும் அதன் பின்னூட்டங்களையும் வாசித்தால் இன்னும் நலம் !
ராபர்ட் க்ளைவ் தன் 19-ம் வயதிலேயே ஒரு குமாஸ்தாவாக இந்தியாவுக்கு வந்தார். ஆனாலும் அவர் ரொம்ப ஒழுங்கானவர்; மிகுந்த புத்திசாலி. இவர் ரொம்ப மண்டூவாக இருந்ததால்தான் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டார் என்று சில வரலாற்று ஆசிரியர்கள் தவறான ஒரு செய்தியை நம்மிடம் பரப்பி விட்டனர். இதுபோல்தான் //நம்முடைய வரலாற்றுப் பாட நூல்களில் எத்தனையோ பொய்களை அரங்கேற்றி இன்று வரை மாணவர்களுக்கு போதித்து வருகிறார்கள். // பல இந்தியர்கள் ஆங்கிலேயர்கள் //மேல் வெறுப்பை உமிழ காரணம் இளம் வயதில் படித்த இத்தகைய வரலாற்று பாட நூல்களே! இதை நாமும் நம்பி விடுகிறோம்.//
ஆனால் க்ளைவ் அப்படிப்பட்டவரல்ல. பார்த்த குமாஸ்தா வேலையில் இருக்கும்போதே பிரஞ்ச், டச் நாட்டுக்காரர்கள் இந்தியாவில் இல்லாமல் ஆக்கி விட வேண்டுமென்று பாடுபட்டார். இந்தியாவின் வரலாற்றை இப்படி உருவாக்கியவர்தான் க்ளைவ். இது இப்போதைய இந்தியர்களுக்குத் தெரியுமா?
விவிலியத்தில் ரோமானியர்களுக்கு உரியதை ரோமானியர்களுக்கும், செசேரியனுக்குரியதை செசேரியனுக்கும் கொடுத்துவிடு என்று ஏசு கூறியிருக்கிறார். அதே போல் க்ளைவ் பாண்டிச்சேரி போர்க்களத்திலும் சண்டையிட்டு நவாபுக்கு துணை நின்று அவரை பிரஞ்சு படையிடமிருந்து காப்பாற்றினார். நல்ல வேளை - இப்படி ஒன்று நடக்காவிடில் நம் நாட்டின் அன்றைய நிலை எப்படியெப்படியோ மாறிப்போயிருந்திருக்கும். 1613-லிருந்து 1947 வரை எப்படிப்பட்ட பொற்காலம். இத்துணை காலம் அவர்கள் இங்கு ஒரு நல்ல காலனியாதிக்கத்தை வைத்திருந்தார்கள் என்றால் //மேலோட்டமாக சொல்லாமல் ஆதாரத்தோடு அதை வரலாற்றாசிரியர்கள் விளக்கி இருக்க வேண்டுமே! // அதுவுமின்றி ஏறத்தாழ மூன்று நூற்றாண்டுகள் அவர்கள் இங்கு நம்மை ஆண்டிருக்கிறார்கள். இதற்கு //முன் இந்தியாவை ஆண்டவர்களின் ஆட்சியை விட இவர்களின் ஆட்சி நிம்மதியாக இருந்ததால்தான் 350வருடம் இந்தியாவை அவர்களால்ஆள முடிந்தது.//
அதைவிடவும் இவர் இந்தியாவிலிருந்து தாய்நாடு திரும்பியதும் அவர் வைத்திருந்த செல்வத்தைப் பார்த்து பொறாமை கொண்ட மக்கள் அவர் மீது பல குற்றச்சாட்டுகளை வைத்து அவர் மேல் வழக்கு தொடுத்தனர். அவர் குற்றமற்றவர் என்பது நிருபணம் ஆனது. இன்று அவர் நம்மோடு நம் நாட்டில் இருந்திருந்தால் இந்திரா காந்தியின் நகர்வாலா கொலை வழக்கு நடக்க விட்டிருப்பாரா? ராஜீவி காந்தியின் போபர்ஸ் வழக்கு நடக்க விட்டிருப்பாரா? இல்லை ...இன்று ஆ.ராசா மாதிரி ஆட்கள் வந்திருக்க முடியுமா? இந்த வரலாற்று உண்மைகளா ஆய்ந்து பார்க்க வேண்டாமா? நல்ல ஒரு கிறித்துவராக, பண்பாளராக இருந்ததால்தான் அவர் மேலிட்ட வழக்கில் அவர் நல்லவர் என்று நிரூபணம் ஆனது.
ஆனாலும் மிகுந்த நல்லவரான க்ளைவ் வழக்கில் வெற்றி பெற்றாலும் ’தன்மேல் இப்படி ஒரு பழியா?” என்ற நல்ல மனிதனுக்குரிய உயர்ந்த மனதால், மிகவும் மனக்கஷ்டப்பட்டு தன் 49-வது வயதில் தற்கொலை செய்து கொண்டு மோட்சம் ஏகினார்.
இந்த அளவு நல்ல உள்ளம் கொண்ட க்ளைவ் இந்தியாவில் செய்த அளப்பரிய நல்ல காரியங்களுக்காக William Pitt the Elder என்ற வரலாற்றாசிரியர் க்ளைவ் அவர்களை இந்தியாவிற்கான, இங்கிலாந்திற்கான 'heaven sent general' என்று அழைத்தார். எவ்வளவு உயர்வான மனிதர் க்ளைவ்!!!
--------------
Brigadier-General Reginald Edward HarryDyer
க்ளைவ் நம் நாட்டில் ஆங்கிலேயர் காலடி வைக்கத்தான் போராடி, அதன் மூலம் பல சின்னச் சின்ன பகுதிகளாக சிதறுண்டு கிடந்த நம் நாட்டை ஒன்றாக்கும் முதல் முயற்சியை எடுத்தார். அப்படி ஒன்று சேர்ந்த பிறகு அந்நாடு அந்த கட்டுக்கோப்போடு இருக்க வேண்டுமா இல்லையா? அதற்காக பெரும்பாடுபட்டவர் ஜெனரல் டயர். ஜாலியன்வாலா பாக் உங்களுக்கு நினைவுக்கு வரவேண்டுமே! அன்று இருபதாயிரம் பேர் கூடி இருந்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக கோஷம் போட துணிந்தனர். நாட்டை ஒன்றாக்கி நல்லாட்சி செய்யும் எந்த அரசும் என்ன செய்ய வேண்டும்? முதலில், நாட்டைக் காக்க வேண்டும். அதைத்தானே டயர் செய்தார் !
அதோடு அவர் ஒரு பெரும் படையின் தலைவர். அவருக்கு வந்த கட்டளை அந்தக் கூட்டத்தைத் தடுக்க வேண்டும்; கலைக்க வேண்டும். அதற்கான உத்தரவும் வந்தது. பின் ஒரு நல்ல தலைவன் என்ன செய்வான்? சுடச் சொல்வான். அவனது சிப்பாய்கள் - அதில் மிகப் பலர் இந்தியர்களே - சுட்டார்கள். இதில் டயர் மீது என்ன தவறு. கட்டளையைப் புறக்கணிக்காமல் தன் கடமையைத்தானே செய்தார். ஆளுமைக்குப் பயந்து நட என்று விவிலியத்தில் சொல்லவில்லையா? பின் டயர் மீது என்ன தவறு?
20,000 மக்களை நோக்கி அவர் என்ன பீரங்கி குண்டுகளையா போட்டார்? வெறும் துப்பாக்கி மூலம் 1600 ரவுண்டுகளைப் பயன்படுத்தினார். Mishra Planeswalker என்ற வரலாற்றாசிரியர் மக்களைக் கொல்ல வேண்டுமென்பதற்காக சுட்டிருந்தால் இன்னும் பல குண்டுகளை அல்லவா செலவழித்திருக்க வேண்டும் என்ற ஒரு அழகான ஒரு கேள்வியை நம்முன் வைக்கிறார். துவேஷத்தில் இருக்கும் இந்தியர்கள் இதை நினைத்துப் பார்க்க வேண்டும்.
அதோடு, ஜாலியன்வாலா பாக் நிகழ்ச்சிக்குச் சில நாட்களுக்கு முன் அமிர்தசரஸில் Miss Marcella Sherwood என்ற ஆங்கிலேய இளம்பெண்ணை இந்தியர்கள் சிலர் தாக்கியுள்ளார்கள். சில இந்தியர்களே அவளை பின் காப்பாற்றியுள்ளார்கள். இருந்தும், ஒரு பெண்ணை அடித்துத் துன்புறுத்தியவர்கள் என்பதால் டயர் அதிக சினம் கொண்டிருந்தார். குற்றம் செய்யாதவர்கள் முதல் கல்லை இந்தப் பெண்ணின் மேல் எறியுங்கள் என்றாரே விவிலியத்தில். எதற்காக? ஒரு பெண்ணைக் காப்பாற்ற. அதே போல் இங்கும் டயர் ஒரு பெண்ணை அடித்தவர்களைத் தண்டிக்க எண்ணி ஜாலியன்வாலா பாக் நிகழ்ச்சியில் நியாயமான ஒரு கோபத்தோடு, தவறு செய்தவர்களைத் தண்டிக்க வேண்டுமென்ற தன்மான தைரியத்தோடு நடந்து கொண்டுள்ளார்.
அதோடு டயர் வேறு நேரங்களில் தவறாக நடந்து கொண்டதாக எக்குறிப்பும் இல்லை. //அப்படியே கொடுமை படுத்தியிருந்தாலும் அவை வரலாறுகளில் பதியப் பட்டிருக்குமே! மேலோட்டமாக சொல்லாமல் ஆதாரத்தோடு அதை வரலாற்றாசிரியர்கள் விளக்கி இருக்க வேண்டுமே! //
இந்த நல்ல காரணங்களுக்காகத் தான் அவர் இங்கிலாந்து சென்றதும் அவருக்கு அந்தக் காலத்திலேயே இப்போது Daily Telegraph என்றழைக்கப்படும் அன்றைய Morning Post என்ற தினசரி நாளிதழால் 26,000 பவுண்டுகள் பரிசாகக் கொடுக்கப்பட்டது. பெண்களின் காவலனாக இருந்ததால் 13 பெண்கள் அணியினர் அவருக்கு "the Saviour of the Punjab” என்ற பட்டம் கொடுத்து அவருக்கு ஒரு வாளும் பண்மும் பரிசாகக் கொடுத்தார்கள்.
எவ்வளவு உயர்வான மனிதர் டயர் !!!
----------
துண்டுச் செய்தி: //'சதி'யை நிறுத்தியவர்// William Bentinck என்ற ஆங்கிலேய அதிகாரி. //ஆதரவற்ற துர்பாக்கியவதியான ஒரு பெண்ணை 'சதி' (உடன்கட்டை ஏறுதல்) உயிருடன் எரிக்க முயன்றனர். அதை ஆடசித் தலைமை//யில் இருந்த அந்த அதிகாரி, ராஜாராம் மோகன்ராய் போன்ற நம் நாட்டுத் தலைவர்கள் மூலம் விதவை மறுமணம், சத்தி, துகி என்று சொல்லப்படும் காளிக்கு அளிக்கப்பட்டு வந்த மனிதப் பலிகள் போன்றவற்றை சட்டப்படி நிறுத்தினார்.
இந்த வரலாற்று உண்மைகளை மறைத்து விட்டதால் நம் இந்தியர்கள் க்ளைவ், டயர் போன்றவர்களையும், மற்ற ஆங்கிலேயர்களையும் புரிந்து கொள்ளாமல், இங்கிலாந்து //அரசைக் கவிழ்க்க சதி செய்தனர்.// அவர்களை //...விரோதி என பொய்களைப் புனைந்துரைத்தனர்.//
இன்று நாம் சென்னை என்று அழைக்கும் இந்த நகரம், சுமார் 375 ஆண்டுகளுக்கு முன் வங்கக் கடலோரம் ஒரு சின்னஞ்சிறிய கிராமமாக இருந்தது. கடற்கரை அருகில் குட்டி குட்டி மீனவக் குப்பங்கள் இருந்தன. தங்களின் கம்பெனிக்காக இடம் தேடி அலைந்த கிழக்கிந்திய கம்பெனியின் பிரதிநிதியான பிரான்சிஸ் டேவின் கண்ணில் இந்த பகுதி தென்பட்டதில் இருந்துதான் மெட்ராஸ் என்ற பிரம்மாண்ட நகரத்தின் கதை தொடங்குகிறது.
1673இல் ஜார்ஜ் கோட்டையின் வரைபடம்
இந்த பகுதியை ஆண்ட நாயக்க மன்னரின் பிரதிநிதியிடம் இருந்து வியாபாரம் செய்ய அனுமதி பெற்ற கிழக்கிந்திய கம்பெனிக்காரர்கள், கடற்கரையோரம் கோட்டை கட்டி குடியேறினர். 1639இல் கட்டப்பட்ட அந்த கோட்டைதான் மெட்ராசின் வளர்ச்சிக்கு அஸ்திவாரம் போட்டது. கோட்டைக்குள் ஆங்கிலேய குடியிருப்புகள் வந்ததும், கோட்டையைச் சுற்றி ஒரு சிறிய பட்டணமும் உருவானது. ஆங்கிலேயர்களுக்குத் தேவையான பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்கும் உள்ளூர் மக்கள் இங்கு குடியேறினர்.
கிழக்கிந்திய கம்பெனிக்காரர்கள் வியாபாரம் செய்வதற்காகத்தான் இங்கு வந்தனர் என்பதால் அவர்களோடு வாணிபம் செய்ய நிறைய உள்ளூர் வியாபாரிகள் கோட்டையை சுற்றிச்சுற்றி வந்தனர். இதனால் கோட்டைக்கு உள்ளும், புறமும் நடமாட்டம் அதிகரித்தது. 1646இல் எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பின்படி, அப்போதைய மெட்ராசின் ஜனத்தொகை சுமார் 19 ஆயிரமாக இருந்தது.
அந்தக்கால எஸ்பிளனேட் பகுதி
கம்பெனியின் வியாபாரம் வேகமாகப் பெருக, அதற்கேற்ப ஆட்களின் போக்குவரத்தும் அதிகரித்தது. எனவே கோட்டையின் எல்லையை விஸ்தரிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமானது. கோட்டைக்கு உள்ளேயும், வெளியேயும் வெள்ளையர் நகரம், கருப்பர் நகரம் என இரண்டு நகரங்கள் உருவாயின.
கம்பெனியின் வியாபாரம் பெரும்பாலும் துணி சார்ந்ததாக இருந்ததால், அதற்கு தேவையான ஆட்களை மெட்ராசில் குடியேற்றம் செய்யும் பணிகள் தொடங்கின. நெசவாளர்களை ஊக்குவிப்பதற்காக கம்பெனி செலவிலேயே வீடு கட்டிக் கொடுக்கப்பட்டு, அங்கேயே பரம்பரை பரம்பரையாக வாழ அனுமதியும் வழங்கப்பட்டது. இதனால் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் நெசவாளர்கள் மெட்ராஸ் நோக்கி படையெடுத்தனர். இப்படித்தான் வண்ணாரப்பேட்டை, சிந்தாதிரிப்பேட்டை, காலடிப்பேட்டை போன்ற புதிய பகுதிகள் உருவாகின.
ஏற்கனவே இருந்த எழும்பூர், திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், தண்டையார்பேட்டை, திருவொற்றியூர் போன்ற கிராமங்கள் காலப்போக்கில் சென்னையுடன் இணைக்கப்பட்டன. மெட்ராஸ் மெல்ல ஒரு நகரமாக உருமாற ஆரம்பித்ததும், துணி வியாபாரத்தை தாண்டி மற்ற வியாபாரங்களும் சூடிபிடித்தன. கப்பல் போக்குவரத்து அதிகரித்ததால் துறைமுகம் கட்டப்பட்டது. உலகின் மற்ற பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட தொலைபேசி, ரயில், சினிமா போன்ற விஷயங்கள் அடுத்த சில ஆண்டுகளிலேயே மெட்ராசிற்கு அறிமுகமாயின. மே 7, 1895இல் சென்னை நகர வீதிகளில் முதன்முறையாக எலெக்ட்ரிக் டிராம்கள் ஓடின. இந்தியாவிலேயே எலெக்ட்ரிக் டிராம் ஓடுவது அதுதான் முதல்முறை. அந்த சமயத்தில் லண்டன் போன்ற மாநகரங்களில் கூட எலெக்ட்ரிக் டிராம்கள் அறிமுகமாகவில்லை.
1905இல் அண்ணாசாலை
மெட்ராசை ஆண்ட தாமஸ் மன்றோ போன்ற ஆளுநர்கள், இங்கு வந்து குடியேறிய தாமஸ் பாரி, பெட்ரூஸ் உஸ்கான் போன்ற பெரு வணிகர்கள், பச்சையப்ப முதலியார், சர் பிட்டி தியாகராயர் போன்ற உள்ளூர் பெரிய மனிதர்கள் முதல் சென்னைக்கென பிரத்யேகமான மெட்ராஸ் பாஷையை அறிமுகப்படுத்திய சாதாரண ரிக்ஷாக்காரர்கள் வரை எத்தனையோ பேர் சேர்ந்து செதுக்கியதுதான் இன்றைய சென்னை. இந்த நகரம் திட்டமிட்டு உருவாக்கப்பட்டதல்ல. காலத்தின் தேவை கருதி தன்னைத்தானே விஸ்தரித்துக் கொண்டது.
மெட்ராசின் பழமையைப் பறைசாற்றியபடி நூற்றாண்டுகள் கடந்து நின்றுகொண்டிருக்கும் ஒவ்வொரு இந்தோ சராசனிக் பாணி கட்டடத்திற்கு பின்னும் ஒரு சுவாரஸ்யமான கதை இருக்கிறது. ஒவ்வொரு சாலைக்கு அடியிலும் ஒரு வரலாறு நிலத்தடி நீராய் ஈரம் மாறாமல் ஓடிக் கொண்டிருக்கிறது. கால ஓட்டத்தில் எத்தனையோ மாற்றங்களை உள்வாங்கிக் கொண்டு இன்றும் இளமை மாறாமல் அதே துடிப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் சென்னை நகரத்திடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள நிறைய இருக்கின்றன.
மொத்தத்தில் மூன்று நூற்றாண்டுகளைக் கடந்த இந்த மாநகரத்தின் கதை, அனைவருக்குமான ஒரு சிறந்த வாழ்வியல் பாடம்.
நன்றி - தினத்தந்தி
கடந்து வந்த பாதை
* 1640 - புனித ஜார்ஜ் கோட்டை கட்டி முடிக்கப்பட்டது
* 1688 - மெட்ராஸ் மாநகராட்சி உதயமானது
* 1693 - எழும்பூர், புரசைவாக்கம், தண்டையார்பேட்டை ஆகிய ஊர்கள் மெட்ராசுடன் இணைக்கப்பட்டன
* 1746 - மெட்ராஸ் பிரெஞ்சுக்காரர்கள் வசம் சென்றது
* 1749 - மீண்டும் ஆங்கிலேயர்களிடம் ஒப்படைக்கப்பட்டது
* 1768 - ஆற்காடு நவாப் சேப்பாக்கம் அரண்மனையைக் கட்டினார்
* 1772 - நகரத்தின் முதல் குடிநீர் திட்டமான ஏழுகிணறு திட்டம் ஆரம்பமானது
* 1785 - முதல் தபால் நிலையம் செயல்படத் தொடங்கியது
* 1841 - ஐஸ்கட்டிகளை சேமித்து வைப்பதற்காக ஐஸ் ஹவுஸ் கட்டப்பட்டது
* 1856 - முதல் ரயில் ராயபுரத்தில் கிளம்பி ஆற்காடு சென்றது
உலகத்தில் அத்தனைபேர் எண்ணமும் ஒரே போல இருப்பதில்லை. சிலருக்கு ஒரு விசயம் பிடித்தால் பலருக்கு அது பிடிக்காது. வில்லத்தனமும் இதற்கு விதிவிலக்கல்ல. ஒரு சாரருக்கு வில்லனாகப் படும் ஒரு ஆள் இன்னொரு சாரருக்கு நாயகனாகத் தென்படுவார். ஒரு நாட்டையே கொள்ளையடித்துக் கைப்பற்றியவரை, அவரது நாட்டுக்காரர்கள் தேசத்தொண்டனாகப் பார்ப்பதும், கைப்பற்றப்பட்ட நாட்டுக்காரர்கள் பக்கா வில்லனாகப் பார்ப்பதும் சகஜம். இந்தியாவையே எடுத்துக் கொண்டால் இங்கு படையெடுத்து வந்து நமது வரலாற்றுப் புத்தகங்களில் கொள்ளைக்காரர்களாகவும் கொடுங்கோலர்களாகவும் நாம் படித்துக் கொண்டிருக்கும் பலர், அவரவர் நாடுகளில் தேசநாயகன்களாக போற்றப்படுகின்றனர். இவ்வரிசையில் நடுநாயகமாக வீற்றிருப்பவர் ராபர்ட் கிளைவ். இந்தியத் துணைக்கண்டம் ஆங்கிலேயர் வசமாவதற்கு முக்கிய காரணகர்த்தாவாகக் கருதப்படுபவர். அவரே இந்த வாரம் (நமக்கு) வில்லன்.
பதினெட்டாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஒளரங்கசீப்பின் மரணத்துக்குப் பின்னால் முகலாயர் ஆட்சி வலுவிழக்கத் தோன்றியது. முகலாய அரசின் சிற்றரசர்களும் பிராந்திய ஆளுனர்களும், ஆளுக்கொரு மாநிலத்தை பிரித்தெடுத்துக் கொண்டு அங்கு ஆதிக்கம் செலுத்தலாயினர். முகலாயர்களின் இந்த வீழ்ச்சியால் இந்தியாவில் ஒரு அதிகார வெற்றிடச்சூழல் உருவாகியது. இக்காலத்தில் தலைதூக்கிய மராத்தியப் பேரரசும் இதை நீக்க முயன்று தோற்றது. யார் அடுத்து இந்தியாவை ஆளப்போகிறார்கள் என்ற கேள்வி எழுந்த இக்காலகட்டத்தில் ஐரோப்பியர்கள் இந்தியாவை வணிக நோக்குடன் பார்த்துவந்தனர். வர்த்தகமும் லாபமுமே பல்வேறு ஐரோப்பிய கிழக்கிந்தியக் கம்பனிகளின் குறிக்கோள்களாக இருந்து வந்தன. அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டுமென்று முதலில் அவர்கள் நினைக்கவில்லை. ஆனால் முகலாயர்களுக்குப் பின்னால் இந்தியாவில் பலமான ஒரு அரசு அமையாதது ஆட்சியைக் கைப்பற்ற அவர்களுக்கு அழைப்பு விடுத்தது. அப்போது கூட பேரரசை அமைப்பது அவர்களது குறிக்கோளாக இல்லை, அதிகாரத்தால் அதிகமாக சம்பாதிப்பதே அவர்களது ஒரே நோக்கமாக இருந்தது. பிரெஞ்சு, டச்சு, போர்த்துகீசிய, டானிய என பல கிழக்கிந்தியக் கம்பனிகள் அப்போது இந்தியாவில் இருந்தாலும், இந்தச் சூழலை நன்கு பயன்படுத்திக் கொண்டு இந்தியாவை வளைத்துப் போடும் ரேசில் ஜெயித்தது பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பனி தான். இதற்கு முதற் காரணம் ராபர்ட் கிளைவ்.
கிளைவ் பெரிய குடும்பத்தில் பிறந்தவர் கிடையாது. சாதாரண நடுத்தர குடும்பம் தான். இங்கிலாந்து நடுத்தர இளைஞர்கள் பணம் சம்பாதித்து செட்டில் ஆக வேண்டுமென்றால் கிழக்கிந்தியக் கம்பனியில் சேர்ந்து இந்தியாவில் சில காலம் பணிபுரிவது வழக்கமாக இருந்தது. இவ்வழக்கப்படி கிளைவும் தனது பதினெட்டாவது வயதில் கம்பனியில் ஒரு எழுத்தராகச் சேர்ந்து இந்தியாவுக்குக் கிளம்பினார். அவர் இந்தியா வந்த காலத்தில், பிரெஞ்சுக்காரர்களுக்கும் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பனிக்கும் தென்னிந்தியாவில் யார் தாதா ஆவதென்று பலப்பரீட்சை நடந்து கொண்டிருந்தது. இந்த காலத்தில் தான் ஐரோப்பாவில் இரு நாடுகளுக்குமிடையே அடிக்கடி சண்டை நடந்து கொண்டிருந்தது. அங்கு போர் மூளும்போதெல்லாம், அதைக் காரணம் காட்டி இந்தியாவிலும் இரு தரப்பினரும் மோதிக் கொண்டிருந்தனர். அப்போது தென்னிந்தியாவில் சென்னையின் புனித ஜார்ஜ் கோட்டை தான் பிரிட்டிஷாரின் தலைமையிடமாக இருந்தது. கிளைவ் சென்னைக்கு வந்து எழுத்தராக வேலை பார்க்கத் தொடங்கி சில நாட்களுக்கெல்லாம் பிரெஞ்சுக்காரர்கள் சென்னையைத் தாக்கினர். பாண்டிச்சேரி ஆளுனர் டூப்ளே தலைமையிலான பிரெஞ்சுப் படை சென்னையைக் கைப்பற்றி கிளைவ் உட்பட பல கம்பனி ஊழியர்களைப் பிணைக்கைதிகளாகப் பிடித்துக் கொண்டது. சென்னையை மீட்க கம்பனிகாரர்களோடு பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருந்த போதே கிளைவ் தன் சக ஊழியர்களோடு சென்னையிலிருந்து தப்பினார். சாதாராண குமாஸ்தாவான இளைஞன் ஒருவன் தந்திரமாக பிரெஞ்சுப் பிடியிலிருந்து தப்பியது கம்பனி அதிகாரிகளுக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது. அவர்கள் கம்பனி படையில் அதிகாரியாக கிளைவை நியமித்தார்கள்.
ஆனால் வெகு சீக்கிரம் பிரெஞ்சுக்காரர்களோடு அமைதி உடன்பாடு கையெழுத்தானதால், கிளைவ் மீண்டும் பழைய எழுத்தர் வேலைக்கே போக நேரிட்டது. ஆனால் சென்னையிலிருந்து தப்பியபோது கிடைத்த சந்தோஷத்தை கிளைவ் மறக்கவே இல்லை. அவருக்கு எழுத்தர் வாழ்க்கை சலித்துப் போனது. பிரெஞ்சுக்காரர்களோடு நிகழ்ந்த அடுத்த கட்ட மோதலில் தானாக முன்வந்து படைகளில் மீண்டும் சேர்ந்தார். டூப்ளேவும், கம்பனியும் கர்னாடகப் பகுதியை (தற்கால ஆந்திரா, தமிழகம்) யார் கட்டுப்படுத்துவது என்று பலப்பரீட்சை நடத்திக் கொண்டிருந்தனர். கம்பனி முகமது வாலாஜாவையும், டூப்ளே சந்தா சாகிபையும் ஆதரித்தனர். 1751ல் சந்தா சாகிபின் பெரும்படையொன்று பிரிட்டிஷ் கட்டுப்பாட்டிலிருந்த ஆற்காட்டை முற்றுகையிட்ட போது, ஆற்காட்டுப் படைகளுக்குத் தலைமையேற்ற கிளைவ் திறமையாகச் செயல்பட்டு முற்றுகையைத் தோற்கடித்தார். இதனால் அவரது புகழ் கம்பனி வட்டாரங்களில் பரவத்தொடங்கியது. சிறிது காலம் இங்கிலாந்தில் இருந்துவிட்டு மீண்டும் இந்தியாவுக்கு வந்த கிளைவ், இம்முறை வங்காளத்துக்கு அனுப்பப்பட்டார்.
தென்னாட்டைப் போலவே வங்காளத்திலும் கடும் அதிகாரப் போட்டி நடந்து கொண்டிருந்தது. அங்கும் உள்ளூர் அரசியலில் கம்பனிக்காரர்கள் தலையிட்டு கட்டப் பஞ்சாயத்து வேலைகளைச் செய்து கொண்டிருந்தனர். இது பிடிக்காத வங்காளத்தின் நவாப் சிராஜ் உத்-தாலா கம்பனித் தலைமையிடமான கல்கத்தா மீது படையெடுத்து அதனைக் கைப்பற்றினார். கல்கத்தாவை சிராஜ் உத்-தாலாவிடமிருந்து மீட்க ஒரு திறமையான ஆள் கம்பனிக்குத் தேவைப்பட்டது. ஆற்காடு முற்றுகையை திறம்பட சமாளித்த கிளைவின் தலைமையில் ஒரு சிறுபடையை கல்கத்தாவுக்கு அனுப்பினர். நவாபின் பலமோ அளப்பரியது, படைபலமும் பணபலமும் பெரியது. கிளைவிடம் இருந்ததோ சிறு படை. நேரடியாக நவாபுடன் மோதினால் அழிவு நிச்சயம் என்பதை உணர்ந்த கிளைவ் அதிரடித் தாக்குதல் உத்திகளைக் கையாண்டார். விரைவில் கல்கத்தாவை நவாபிடமிருந்து மீட்டார். அடுத்து நவாபை ஒழித்துக் கட்ட திட்டம் தீட்டினார். நவாபின் ஆட்களுள் அவர் மீது அதிருப்தியடைந்த சிலர் நவாப் ஆட்சியைக் கவிழ்க்க சதித்திட்டம் தீட்டி வந்தனர். இந்த செய்தி கிளைவின் காதுகளை எட்டியவுடன் உடனடியாக சதிகாரர்களை சந்தித்தார். நவாபின் படைத்தளபதி மீர் ஜாஃபர் தான் இந்த சதிகாரர்களின் தலைவர். மீர் ஜாஃபரின் பதவி ஆசையைப் பயன்படுத்திக் கொண்ட கிளைவ், சிராஜ் உத்-தாலாவைக் காட்டிக் கொடுத்தால் ஜாஃபரை அடுத்த நவாபாக்கி விடுவதாக ஆசைகாட்டி தன் கைக்குள் போட்டுக் கொண்டார்.
ஜாஃபருக்கும் கிளைவுக்கும் இடையே உடன்பாடு ஏற்பட முக்கிய காரணமாக இருந்தவர் உமிச்சந்த் என்ற வங்காள வர்த்தகர். சதிகார கும்பலுக்கும் கம்பனிக்குமிடையே தூதராக செயல்பட்டு வந்தார். தனது சேவைகளுக்கு பதிலாக அதிக பணம் வேண்டுமென்று கிளைவை நச்சரித்து வந்தார். நவாபுக்கு துரோகமிழைக்க ஜாஃபரைத் தூண்டிவிட்டுக் கொண்டிருந்த அதே சமயம் உமிச்சந்துக்கு ஒரு துரோகத்தைச் செய்தார் கிளைவ். சிராஜ் உத்-தாலாவைக் காட்டிக் கொடுக்க உதவினால் மூன்று லடசம் பவுண்டுகள் தருவதாக ஒப்புக்கொண்டு அதற்கேற்றார் போல ஒரு போலிப் பத்திரத்தைத் தயார் செய்து உமிச்சந்திடம் காட்டினார். அதனை நம்பி ஏமாந்த உமிச்சந்தும் மீர் ஜாஃபர்-கிளைவிடையே தூது போய் வந்தார். ஜாஃபரைக் கைக்குள் போட்டுக் கொண்டவுடன் சிராஜ் உத்-தாலாவை சண்டைக்கு இழுத்தார். 1757ல் வங்காளத்தில் பலாஷி என்ற இடத்தில் (ஆங்கிலத்தில் பிளாசி என்றானது) இரு தரப்பும் மோதிக்கொண்டன. பிளாசி சண்டை (Battle of Plassey) என்று தற்போது வரலாற்றாளர்களால் அறியப்படும் இந்த சண்டை தான் இந்தியாவின் வரலாற்றை மாற்றி அமைத்தது. சிராஜ் உத்-தாலாவின் படைகள் கம்பனிப் படைகளை விட எண்ணிக்கையில் பல மடங்கு அதிகம். ஆனால் அவற்றில் ஒரு பகுதி மீர் ஜாஃபரின் கட்டுப்பாட்டில் இருந்தது. சண்டை நடந்து கொண்டிருக்கும் போதே மீர் ஜாஃபாரின் படைப்பிரிவு போரிலிருந்து விலகிக் கொண்டது. ஜாஃபரின் துரோகம் தந்த அதிர்ச்சியிலிருந்து சிராஜ் உத்-தாலா மீள்வதற்குள் கிளைவின் படைகள் அவரது படைகளைத் தோற்கடித்துவிட்டன. சிராஜ் உத்-தாலா உயிர் பிழைக்க போர்க்களத்திலிருந்து தப்பி ஓடினார். ஆனால் ஜாஃபரின் சக சதிகாரர்கள் அவரைக் கைதுசெய்து கொலை செய்துவிட்டனர். ஜாஃபர் வங்காளத்தின் புதிய நவாப் ஆனார், இந்தியாவில் பிரிட்டிஷ ஆதிக்க காலம் தொடங்கியது. (கிளைவ் ஆரம்பித்து வைத்த துரோக சூழ்ச்சி உத்திகளை சில ஆண்டுகளில் ஜாஃபர் மீதே பிரயோகித்தனர் பிரிடிஷ்காரர்கள் – அவரை நவாப் பதவியில் இருந்து தூக்கி விட்டு அவரது மருமகன் மீர் காசிமை நவாப் ஆக்கிவிட்டனர்.)
தன்னை நவாப் ஆக்கியதற்கு நன்றிக்கடனாக கிளைவுக்கு பணத்தை அள்ளி வீசினார் மீர் ஜாஃபர். கம்பனி கணக்கிலும், படை வீரர்கள் கணக்கிலும் எழுதியது போக லட்சக்கணக்கில் சொந்த செலவுக்காகவும் வங்காள அரசிடமிருந்து பணம் பெற்றுக் கொண்டார் கிளைவ். இப்படி உள்ளூர் ஆட்சியாளர்களிடமிருந்து நேரடியாக கையூட்டு வாங்கும் பழக்கத்தைக் கிழக்கிந்திய கம்பனிக்கு பெரிய அளவில் அறிமுகப்படுத்திய பெருமை கிளைவையே சேரும். சம்பாதிக்க நினைத்ததை விட பல மடங்கு ஈட்டியபின்னர் இங்கிலாந்து திரும்பி அங்கு சில ஆண்டுகள் வாழ்ந்தார். பின்னர் மூன்றாவது முறையாக 1765ல் மீண்டும் இந்தியா திரும்பினார். இம்முறை சூழ்ச்சிகளில் ஈடுபடாமல் நேரடியாக முகலாயப் பேரரசரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இந்தியாவின் பல பகுதிகளை கம்பனியின் நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தார். இதன் மூலம் கிழக்கிந்தியக் கம்பனி இந்தியாவில் ஒரு ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆட்சியாளராகிவிட்டது. அடுத்த அரை நூற்றாண்டில் இந்தியாவின் பெரும்பான்மையான பகுதிகள் கம்பனியின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டன.
நன்றாக சம்பாதித்து செட்டில் ஆன பின்னால் கிளைவ் கம்பனியின் நிருவாகத்தில் சீர்திருத்தங்களைக் கொண்டுவர முயன்றார். ஆனால் அவர் ஆரம்பித்து வைத்த லஞ்சக் கலாசாரம் கம்பனியின் கீழ்மட்டம் வரை பரவியதால் அவரது சீர்திருத்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை. கம்பனி பொறுப்புகளில் இருந்து ஓய்வு பெற்று இங்கிலாந்து திரும்பிய கிளைவ் சில வருடங்களுக்குப் பின் தற்கொலை செய்து கொண்டார். அவர் இந்தியாவில் செய்த காரியங்களால் மனம் வருந்தி தற்கொலை செய்து கொண்டார் என்று ஒரு கருத்தும், தீராத நோயினால் அவதிப்பட்டதால் தற்கொலை செய்து கொண்டார் என்று இன்னொரு கருத்தும் நிலவுகின்றன. இந்தியாவில் சம்பாதித்த பணத்தை அவரால் அனுபவிக்க முடியவில்லையென்றாலும், பிரிட்டிஷ் பேரரசின் வரலாற்றில் அழியாத இடத்தைப் பெற்றுவிட்டார். அவர் ஆரம்பித்து வைத்த வேலையை, வாரன் ஹாஸ்டிங்க்ஸ், ஆர்தர் வெல்லஸ்லி, தல்ஹாய்சி ஆகியோர் முடித்து வைத்தனர். இந்தியத் துணைக்கணடம் முழுவதும் அடுத்த நூற்றைம்பதாண்டுகளுக்கு பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில் இருந்தது. இப்போது இந்தியர்களால் நாட்டைக் கொள்ளையடித்த வில்லனாகவும், பிரிட்டிஷ்காரர்களால் சிலைவைத்துப் போற்றப்படும் நாயகனாகவும் விளங்குகிறார் கிளைவ்.
தனம் நாடி, திரவியம் தேடி, தோணி ஏறி, கடல் கடந்து, நாடு பிடித்து, மக்களை மடக்கிப்போட்டு, சாம்ராஜ்யம் நடத்திய ஆங்கிலேய பிரபுக்களும்,மமதாதிகாரிகளும் இரண்டுங்கெட்டான்களும், பனாதைகளும், கயவர்களும் வணிகம் செய்ய வந்தோம் என்று மெய்யையும், பொய்யையும் சரி சமமாகக் கலந்து, சாம தான பேத தண்டோபாயங்களையும் பிரயோகித்து, பஞ்ச மா பாதகங்களில் ஒன்றைக்கூட விடாமல், காலத்துக்கேற்ப சில நற்பண்புகளையும் அரிதாக உள்புகுத்தி, ராசாங்கம் நடத்திய கிழக்கிந்திய கம்பெனியால், முதல் முதலாக, தருமமிகு சென்னையிலே, ஏப்ரல் 23,1640ம் தேதி ‘முரசொலித்து’ எழுப்பிய கோட்டையும் நானே! கொத்தளமும் நானே. முரசொலியும் நானே. அந்த கலோனிய அரசின் வாரிசுகளும், கரணம் தப்பாமல், (எப்பவாவது சான்றோர் ஆட்சி உண்டு என்பதையும் நான் கண்டு களித்தது உண்டு.) மெய்யையும், பொய்யையும் சரி சமமாகக் கலந்து, பஞ்ச மா பாதகங்களில் ஒன்றைக்கூட விடாமல், நற்பண்புகளை அறவே மறக்காமல், ஆட்சி பீடத்திலமர்ந்து, மறந்தும் செங்கோலை சுமக்காமல், வெண்குடை ஒழித்து, வானவில்லினும் மிகுந்த நிறங்கள் தைத்த ஜிகினா குடையின் கீழே நின்று கொண்டு ராசாங்கம் செய்ததும் என் விலாசத்தில் தான்.
கதை கேளும். பிடித்தால் சொல்லும்; பிடிக்காவிட்டாலும் சொல்லும்.
தமிழ்நாட்டு அரசின் இணையதளம், நான் வணிகத்துக்கு இருப்பிடம் என்பதால், வரலாற்றுச்சிறப்பு உள்ள உப்பரிகைகள் இல்லை என்று சொல்வதை வன்மையாக மறுக்கிறேன். ஏரிகளை குப்பை கூளங்களால் நிரப்பி, கோயில் சொத்தில் கை வைத்து,நஞ்சை, புஞ்சை எல்லாம் பினாமி வீடு கட்டி, ரங்கநாதன் தெரு இலக்கணம் பேசும் மக்கள், வரலாற்றுச்சிறப்பு உள்ள உப்பரிகைகளை விட்டு வைக்கவில்லை என்பதே என் ஆதங்கம். ஐயம் இருப்போர் சென்னை வரலாற்றுப் பதிவாளர் முத்தையா அவர்களையும், அவருடைய சகபாடியும், எமது நண்பருமான கே.ஆர்.என்.நரசய்யா அவர்களையும் அணுகலாம்.
தடுக்கி விழுந்தால், குட்டியூர் சமஸ்தானங்கள், ராசாக்குஞ்சுகள், ஜமீந்தார், ஜாகீர்தார், மிராசுதார்கள் தூங்கி வழிந்த அந்தக்காலத்தில், சந்திரகிரி சமஸ்தானாதிபதி தாமர்லா வெங்கட்டப்ப நாயக்கரிடம், ‘கூவம் நதிக்கும், வங்காள விரிகுடாவுக்கும் நடுவில் உள்ள உள்ளங்கை நிலத்திலே எங்களுக்கு ஒரு அமைப்பு ( பாக்டரி) வேணும்.’ என்று கூழைக்கும்பிடு போட்ட பரங்கி (ஆங்கிலேயன்), வாசாலகமாக பேசி, நைச்சியம் பல பகர்ந்து, ஒரு கோட்டை, கொத்தளமும் கட்டிக்கொண்டான், அது தான் நான். நாற்பது வருடம் கழித்து,அக்டோபர் 28, 1680 அன்று எழும்பியது இந்தியாவின் முதல் ஆங்ளிகன் மாதாகோயில்: சைண்ட் மேரிஸ் சர்ச், இந்த வளாகத்துக்குள்ளெ. அங்கே தான் ராபர்ட் க்ளைவ் என்ற கயவனாக வந்து பிரபுவாகி, பனாதை ஆகிவிட்ட வரலாறு புடைத்தவனுக்கு, மார்கெரெச் மாஸ்கலீனுடன் திருமணம், ஃபெப்ரவரி 18, 1753 அன்று, பதிவானது. சொல்லப்போனால், திறந்த சிலநாட்களிலே எலிஹு யேல் என்ற கவர்னருக்கும்,கேத்தரீன் ஹிம்மர்ஸ்ஸுக்கும் நவம்பர் 4, 1680 அன்று திருமணம் பதிவானது. எலிஹூ அடித்த கொள்ளை சொல்லி மாளாது. பரவாயில்லை. அமெரிக்க யேல் பல்கலைகழகம், அவனுடைய நன்கொடையில் வளர்ந்தது.
சுற்றுப்படையில்லாத கோட்டையா, நான்? ஊஹூம். கவர்னரின் உப்பரிகை நடுவில். அதை சுற்றி ஆங்கிலேயர்களின் இல்லங்கள். இன்றைய காலகட்டத்தில், இந்தியாவில் தான், கை பிடிக்க, கால் பிடிக்க ஆட்கள். இங்கிலாந்தில் இஸ்திரி போடக்கூட ஆள் கிடைப்பதில்லை. கூலியும் கட்டுப்படியாகாது. ஆனால், அக்காலத்து கலோனிய அதிகாரவர்க்கத்துக்கு, கை பிடிக்க ஒரு ஆள், கால் பிடிக்க ஒரு ஆள். மாமியின் தாதிகள், கணக்கில் அடங்கா. அதனாலே, நெசவாளிகளும்,சலவையாளிகளும், குசினிக்காரர்களும், பட்லர்களும் வாழ்வதற்கு, வடக்கில் சென்னப்பட்டணம். பெரி திம்மப்பா தான் ஸ்தாபகர். காலம் போகிறப்போக்கில் உப்பரிகைகள் குப்புறக்கவிழ்ந்தன. அதாவது இடிந்து போயின. ஃப்ரென்ச்க்காரன் வேறு 1746ல் போரில், பாதி ஊரை அழித்து விட்டான். அந்தக்காலத்தில் பண்ட/நிதி பரிமாற்ற மையமாக இருந்தவிடத்தில் தான் கோட்டை ம்யூசியம் உளது. ஆக மொத்தம், சென்னையின் பழைமை கட்டிடம்: அந்த 1680ம் வருட மாதா கோயில். எதற்கும், லஜ் மாதாகோயிலுக்கும் (Luz Church) (தேவகி ஆஸ்பத்திரி பக்கம்) ஒரு நடை போய் வருக.