New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மெட்ராசின் கதை -பார்த்திபன் (Parthiban)


Guru

Status: Offline
Posts: 24601
Date:
மெட்ராசின் கதை -பார்த்திபன் (Parthiban)
Permalink  
 


 

மெட்ராசின் கதை

 
இன்று நாம் சென்னை என்று அழைக்கும் இந்த நகரம், சுமார் 375 ஆண்டுகளுக்கு முன் வங்கக் கடலோரம் ஒரு சின்னஞ்சிறிய கிராமமாக இருந்தது. கடற்கரை அருகில் குட்டி குட்டி மீனவக் குப்பங்கள் இருந்தன. தங்களின் கம்பெனிக்காக இடம் தேடி அலைந்த கிழக்கிந்திய கம்பெனியின் பிரதிநிதியான பிரான்சிஸ் டேவின் கண்ணில் இந்த பகுதி தென்பட்டதில் இருந்துதான் மெட்ராஸ் என்ற பிரம்மாண்ட நகரத்தின் கதை தொடங்குகிறது.
Fort+Map-1673.jpg
1673இல் ஜார்ஜ் கோட்டையின் வரைபடம்
 
இந்த பகுதியை ஆண்ட நாயக்க மன்னரின் பிரதிநிதியிடம் இருந்து வியாபாரம் செய்ய அனுமதி பெற்ற கிழக்கிந்திய கம்பெனிக்காரர்கள், கடற்கரையோரம் கோட்டை கட்டி குடியேறினர். 1639இல் கட்டப்பட்ட அந்த கோட்டைதான் மெட்ராசின் வளர்ச்சிக்கு அஸ்திவாரம் போட்டது. கோட்டைக்குள் ஆங்கிலேய குடியிருப்புகள் வந்ததும், கோட்டையைச் சுற்றி ஒரு சிறிய பட்டணமும் உருவானது. ஆங்கிலேயர்களுக்குத் தேவையான பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்கும் உள்ளூர் மக்கள் இங்கு குடியேறினர்.
 
கிழக்கிந்திய கம்பெனிக்காரர்கள் வியாபாரம் செய்வதற்காகத்தான் இங்கு வந்தனர் என்பதால் அவர்களோடு வாணிபம் செய்ய நிறைய உள்ளூர் வியாபாரிகள் கோட்டையை சுற்றிச்சுற்றி வந்தனர். இதனால் கோட்டைக்கு உள்ளும், புறமும் நடமாட்டம் அதிகரித்தது. 1646இல் எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பின்படி, அப்போதைய மெட்ராசின் ஜனத்தொகை சுமார் 19 ஆயிரமாக இருந்தது.
 
Chennai+Esplanade-1920.jpg
அந்தக்கால எஸ்பிளனேட் பகுதி
 
கம்பெனியின் வியாபாரம் வேகமாகப் பெருக, அதற்கேற்ப ஆட்களின் போக்குவரத்தும் அதிகரித்தது. எனவே கோட்டையின் எல்லையை விஸ்தரிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமானது. கோட்டைக்கு உள்ளேயும், வெளியேயும் வெள்ளையர் நகரம், கருப்பர் நகரம் என இரண்டு நகரங்கள் உருவாயின.
 
கம்பெனியின் வியாபாரம் பெரும்பாலும் துணி சார்ந்ததாக இருந்ததால், அதற்கு தேவையான ஆட்களை மெட்ராசில் குடியேற்றம் செய்யும் பணிகள் தொடங்கின. நெசவாளர்களை ஊக்குவிப்பதற்காக கம்பெனி செலவிலேயே வீடு கட்டிக் கொடுக்கப்பட்டு, அங்கேயே பரம்பரை பரம்பரையாக வாழ அனுமதியும் வழங்கப்பட்டது. இதனால் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் நெசவாளர்கள் மெட்ராஸ் நோக்கி படையெடுத்தனர். இப்படித்தான் வண்ணாரப்பேட்டை, சிந்தாதிரிப்பேட்டை, காலடிப்பேட்டை போன்ற புதிய பகுதிகள் உருவாகின.
 
ஏற்கனவே இருந்த எழும்பூர், திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், தண்டையார்பேட்டை, திருவொற்றியூர் போன்ற கிராமங்கள் காலப்போக்கில் சென்னையுடன் இணைக்கப்பட்டன. மெட்ராஸ் மெல்ல ஒரு நகரமாக உருமாற ஆரம்பித்ததும், துணி வியாபாரத்தை தாண்டி மற்ற வியாபாரங்களும் சூடிபிடித்தன. கப்பல் போக்குவரத்து அதிகரித்ததால் துறைமுகம் கட்டப்பட்டது. உலகின் மற்ற பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட தொலைபேசி, ரயில், சினிமா போன்ற விஷயங்கள் அடுத்த சில ஆண்டுகளிலேயே மெட்ராசிற்கு அறிமுகமாயின. மே 7, 1895இல் சென்னை நகர வீதிகளில் முதன்முறையாக எலெக்ட்ரிக் டிராம்கள் ஓடின. இந்தியாவிலேயே எலெக்ட்ரிக் டிராம் ஓடுவது அதுதான் முதல்முறை. அந்த சமயத்தில் லண்டன் போன்ற மாநகரங்களில் கூட எலெக்ட்ரிக் டிராம்கள் அறிமுகமாகவில்லை.
Chennai+Old+Mount+Road+Anna+salai-1905.j
1905இல் அண்ணாசாலை
 
மெட்ராசை ஆண்ட தாமஸ் மன்றோ போன்ற ஆளுநர்கள், இங்கு வந்து குடியேறிய தாமஸ் பாரி, பெட்ரூஸ் உஸ்கான் போன்ற பெரு வணிகர்கள், பச்சையப்ப முதலியார், சர் பிட்டி தியாகராயர் போன்ற உள்ளூர் பெரிய மனிதர்கள் முதல் சென்னைக்கென பிரத்யேகமான மெட்ராஸ் பாஷையை அறிமுகப்படுத்திய சாதாரண ரிக்ஷாக்காரர்கள் வரை எத்தனையோ பேர் சேர்ந்து செதுக்கியதுதான் இன்றைய சென்னை. இந்த நகரம் திட்டமிட்டு உருவாக்கப்பட்டதல்ல. காலத்தின் தேவை கருதி தன்னைத்தானே விஸ்தரித்துக் கொண்டது.
 
மெட்ராசின் பழமையைப் பறைசாற்றியபடி நூற்றாண்டுகள் கடந்து நின்றுகொண்டிருக்கும் ஒவ்வொரு இந்தோ சராசனிக் பாணி கட்டடத்திற்கு பின்னும் ஒரு சுவாரஸ்யமான கதை இருக்கிறது. ஒவ்வொரு சாலைக்கு அடியிலும் ஒரு வரலாறு நிலத்தடி நீராய் ஈரம் மாறாமல் ஓடிக் கொண்டிருக்கிறது. கால ஓட்டத்தில் எத்தனையோ மாற்றங்களை உள்வாங்கிக் கொண்டு இன்றும் இளமை மாறாமல் அதே துடிப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் சென்னை நகரத்திடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள நிறைய இருக்கின்றன.
 
மொத்தத்தில் மூன்று நூற்றாண்டுகளைக் கடந்த இந்த மாநகரத்தின் கதை, அனைவருக்குமான ஒரு சிறந்த வாழ்வியல் பாடம்.
 
நன்றி - தினத்தந்தி
 
கடந்து வந்த பாதை
 
* 1640 - புனித ஜார்ஜ் கோட்டை கட்டி முடிக்கப்பட்டது
* 1688 - மெட்ராஸ் மாநகராட்சி உதயமானது
* 1693 - எழும்பூர், புரசைவாக்கம், தண்டையார்பேட்டை ஆகிய ஊர்கள் மெட்ராசுடன் இணைக்கப்பட்டன
* 1746 - மெட்ராஸ் பிரெஞ்சுக்காரர்கள் வசம் சென்றது
* 1749 - மீண்டும் ஆங்கிலேயர்களிடம் ஒப்படைக்கப்பட்டது
* 1768 - ஆற்காடு நவாப் சேப்பாக்கம் அரண்மனையைக் கட்டினார்
* 1772 - நகரத்தின் முதல் குடிநீர் திட்டமான ஏழுகிணறு திட்டம் ஆரம்பமானது
* 1785 - முதல் தபால் நிலையம் செயல்படத் தொடங்கியது
* 1841 - ஐஸ்கட்டிகளை சேமித்து வைப்பதற்காக ஐஸ் ஹவுஸ் கட்டப்பட்டது
* 1856 - முதல் ரயில் ராயபுரத்தில் கிளம்பி ஆற்காடு சென்றது
* 1882 - சென்னையில் முதல் டெலிபோன் ஒலித்தது
* 1889 - உயர்நீதிமன்ற கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது
* 1895 - மெட்ராசில் டிராம் வண்டிகள் ஓடத் தொடங்கின
* 1910 - மெட்ராஸ் வானில் முதல் விமானம் பறந்தது

* 1947 - புனித ஜார்ஜ் கோட்டையில் இந்திய தேசியக் கொடி ஏறியது
http://bodhiparthi.blogspot.in/search/label/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D..%20%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%20%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Thursday, September 16, 2010

மதராசப்பட்டினம்

 


தருமமிகு சென்னையாக இருந்து தற்போது சிங்காரச் சென்னையாக மாற முயற்சித்து வரும் இந்த மாநகரின் பெயர், பல நூற்றாண்டுகளாக மெட்ராஸ்தான். இதனை மெட்ராஸ்பட்னம், மதராபட்னம், மத்ராஸ்படான், மதராஸ்படம், மதரேஸ்பட்னம், மத்தராஸ், மதராஸ், மதரேஸ்படான், மதராஸாபடான், மாத்ரிஸ்பட்னம், மதேராஸ், மதிராஸ் என ஆங்கிலேயர்களும், பிரெஞ்சுக்காரர்களும், டச்சுக்காரர்களும், போர்த்துகீசியர்களும் அவரவர் வசதிக்கேற்ப அழைத்திருக்கிறார்கள். இந்த மெட்ராஸ் அல்லது மதராஸ் என்ற பெயர் எப்படி வந்தது என்பதற்கு நிறைய கதைகள் இருக்கின்றன.

1639ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் தேதி, பிரான்சிஸ் டே என்ற கிழக்கிந்திய கம்பெனி ஏஜெண்ட் சோழமண்டலக் கடற்கரையில் ஒரு துண்டு பொட்டல் நிலத்தை வாங்கினார். ஓராண்டுக்கு பின்னர் பிரிட்டீஷார் அந்த இடத்தில் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையை கட்டினர். கோட்டையை சுற்றி மெல்ல வளர்ந்து விரிவடைந்ததுதான் இன்றைய சென்னை மாநகரம். இதுதான் சென்னையின் 'சுருக்' வரலாறு.

பிரான்சிஸ் டே வாங்கிய நிலம், சில மீனவக் குடும்பங்களும், இரு பிரெஞ்சு பாதிரியார்களும் வசித்த சிறிய கிராமத்திற்கு தெற்கே இருந்தது. அந்த கிராமத்தின் ரோமன் கத்தோலிக்க தலையாரியின் பெயர் மாதராஸன் என்றும், எனவே அந்த கிராமம் மாதராஸ்பட்னம் என்றும் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தலையாரியின் வாழைத் தோட்டத்தை, தொழிற்சாலை அமைப்பதற்காக டே வாங்கினார். நிலத்தை கொடுக்க அவர் முரண்டு பிடித்ததால், அங்கு அமையவிருக்கும் தொழிற்சாலைக்கு மாதராஸன்பட்னம் எனப் பெயரிடுவதாக வாக்களித்து, டே நிலத்தை வாங்கினாராம்.

மதராஸ் என பெயர் வந்ததற்கு வேறு ஒரு சுவையான காரணமும் கூறப்படுகிறது. ஆங்கிலேயர்களுக்கு முன்பே சாந்தோம் பகுதியில் போர்த்துகீசியர்கள் வசித்து வந்தனர். இங்கு பிரான்சிஸ் டேவிற்கு ஒரு காதலி இருந்தார். அவருக்கு அருகிலேயே வசிக்க வேண்டும் என்பதாலேயே டே அந்த துண்டு நிலத்தை தேர்வு செய்தார் என்று ஒரு கதை உள்ளது. டேவின் காதலி சாந்தோமில் அந்நாட்களில் செல்வாக்குடன் வாழ்ந்துவந்த மாத்ரா குடும்பத்தை சேர்ந்தவர். கடற்கரை ஓரத்தில் இருந்த நிறைய குப்பங்கள் அவர்களுக்கு சொந்தமாக இருந்தன. எனவே, டே தனது காதலியின் குடும்பப் பெயரை சூட்டியிருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

எக்மோர் ஆற்றுக்கும் கூவம் ஆற்றுக்கும் இடையில் இருந்த நிலம், சந்திரகிரி ராஜாவிற்கு சொந்தமானது. அதனை வாங்க அவரது உள்ளூர் நாயக்குகளான தாமர்லா சகோதரர்களிடம் பிரான்சிஸ் டே பேரம் பேசினார். அவர்கள் தங்கள் தந்தை சென்னப்ப நாயக்கரின் பெயரை, புதிதாக அமையவிருக்கும் குடியிருப்புக்கு சூட்ட வேண்டும் என்ற கோரிக்கையுடன் அந்நிலத்தை கிழக்கிந்திய கம்பெனிக்கு பட்டா எழுதிக் கொடுத்தனர். இதனால் அந்த பகுதிக்கு சென்னப்பட்டினம் எனப் பெயர் சூட்டப்பட்டது. மதராஸபட்டினம் வடக்கிலும், சென்னப்பட்டினம் தெற்கிலும் இருந்த இருவேறு பகுதிகள். பின்னர் காலப்போக்கில் இரண்டையும் ஒருங்கிணைத்து மதராஸ் என ஆங்கிலேயர்கள் அழைக்கத் தொடங்கினர்.

பிரபலமான இந்த பெயர் காரணங்கள் தவிர வேறு பல காரணங்களும் கூறப்படுகின்றன. சோழமண்டல கடற்கரையில் வரும் இப்பகுதி, சோழப் பேரரசின் சிற்றரசர்களான முத்தரையர்கள்வசம் கொஞ்ச காலம் இருந்ததால், இது முத்தராசபட்டினம் என்று அக்காலத்தில் அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது முத்தராசா, முத்ராஸ், மத்ராஸ் என மருவியிருக்கலாம் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.

ஆற்காடு நவாப்புகள் மதராஸ்பட்டினத்தில் இருந்த மதராஸா எனும் சமயப் பள்ளிகளுக்கு பல தலைமுறைகளாக காப்பாளர்களாக இருந்து வந்திருக்கிறார்கள். மதராஸா என்றால் சமயப்பள்ளி என்று பொருள். அதனால் மதராஸா என்ற சொல்லிலிருந்துதான் மதராஸ் எனும் பெயர் வந்ததாகவும் சொல்கிறார்கள்.

இதேபோன்று சென்னை பெயருக்கு பின்னாலும் பல காரணங்கள் கூறப்படுகின்றன. ஒருகாலத்தில் சென்னையைச் சுற்றியுள்ள நிலப்பகுதிகள் செம்மை நிறத்தில் காணப்பட்டன. அதனால் அந்தப் பகுதிக்கு செம்மை என்று பெயர் வைக்கப்பட்டது. நாளடைவில் செம்மை என்பது சென்னையாக மாறிப்போனது என்பது ஒரு கருத்து.

செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக்கு மிக அருகிலேயே காளிகாம்பாள் கோயில் இருந்ததால் பக்தர்களுக்கு பல சிரமங்கள் ஏற்பட்டன. அதனால் தம்பு செட்டித் தெருவில் ஒரு புதிய கோயிலைக் கட்டி அம்மனை அங்கு மாற்றினார்கள். ஏற்கனவேகோட்டைப் பகுதிக்குள் கோயில் இருந்ததால் கோட்டையம்மன் என்ற பெயரும் அதற்கு உண்டு. இந்தக் காளிகாம்பாள் அம்மனுக்கு செந்தூரம் பூசி வழிபட்டார்கள். எனவே அம்மனை சென்னம்மன்’ என்று அழைத்தார்கள். சென்னம்மன்’ குடியிருக்கும் அந்த இடம் படிப்படியாக வளர்ச்சி கண்டது. நாளடைவில் சென்னம்மன் சென்னையாக மாறியதாக ஒரு தரப்பினர் சொல்கின்றனர். சென்னம்மன் என்பதை செம் அன்னை என்றும் சிலர் அழைத்தனர். இந்தச் செம் அன்னை தான் சென்னை என மாறியதாக கூறப்படுகிறது.

சென்னைப் பகுதியில் சென்னக் கேசவப் பெருமாள் கோயில் எனும் பெயரில் ஒரு கோயில் இருந்தது. இப்போதும் இருக்கிறது. இந்தக் கோயில் நகரத்தின் முதன்முகப்பில் இருந்ததால்,இக்கோயில் இருந்த நகரத்திற்கு சென்னை என்ற பெயர் வந்ததாகச் சிலர் கூறுகின்றனர். சென்னக் கேசவப் பெருமாள் என்பது சரியா, இல்லை சின்னக் கேசவப் பெருமாள் என்பது சரியா எனத் தெரியவில்லை. சின்ன’ என்ற சொல் சென்ன’ என்று மாறிப் போனதாகவும் செய்திகள் உள்ளன.

இப்படி தனது பெயருக்கு பின்னால் ஏராளமான மர்மங்களை ஒளித்து வைத்தபடி, ஆங்கிலத்தில் மெட்ராஸ் என்றும், தமிழில் சென்னை என்றும் அழைக்கப்பட்டு வந்த இந்நகரம், இனி அனைத்து மொழிகளிலும் சென்னை என்றே அழைக்கப்படும் என 1996ஆல் தமிழக அரசு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து மதராஸ் அதிகாரப்பூர்வமாக சென்னை என்று புதுப்பொலிவு பெற்றது.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Saturday, July 6, 2013

ஒய்.எம்.சி.ஏ

 
பிரபல விளையாட்டு மைதானங்களுக்கு நிகராக எப்போதும் பிசியாக இருக்கும் மைதானம் ஒன்று சென்னையில் உள்ளதென்றால் அது ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானமாகத்தான் இருக்க முடியும். அரசியல் விழாக்களுக்கும், பொருட்காட்சி நிகழ்வுகளுக்கும் ஏற்ற இடமாகத் திகழும் இந்த மைதானத்திற்கு பின்னே ஒரு நீண்ட நெடிய வரலாறு இருக்கிறது.
ymca+building.jpg
ஒய்.எம்.சி.ஏ கட்டடம்
 
மெட்ராஸ் ஒய்.எம்.சி.ஏ., டேவிட் (Mr.David McConaughy) என்பவரால் 1890ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் ஒய்.எம்.சி.ஏ இயக்கம் அதற்கும் 50 ஆண்டுகளுக்கு முன்பே இங்கிலாந்தில் உதயமாகிவிட்டது. தொழிற்புரட்சிக்கு பிந்தைய இங்கிலாந்தில், துணி விற்பனை நிறுவனம் ஒன்றில் உதவியாளராக இருந்த 21 வயதான ஜார்ஜ் வில்லியம் என்பவரின் முயற்சியால் உருவானதுதான் இந்த இயக்கம். இவர் தன்னுடன் வேலை செய்யும் 12 ஊழியர்களை சேர்த்துக் கொண்டு 1844இல் லண்டனில் பைபிள் வகுப்புகளைத் தொடங்கினார். இளம் கிறிஸ்தவர்களிடையே நல்லொழுக்கங்களை போதிப்பதே இந்த வகுப்பின் நோக்கமாக இருந்தது. தற்போது 125க்கும் மேற்பட்ட நாடுகளில் சுமார் நாலரை கோடி உறுப்பினர்களை கொண்டிருக்கும் ஒய்.எம்.சி.ஏ (YMCA - Young Men’s Christian Association) இப்படிதான் கருவாகி உருவானது.
 
இந்தியாவில் ஒய்.எம்.சி.ஏ இயக்கம் 1857இல் கல்கத்தாவில்தான் காலூன்றியது. இதைத் தொடர்ந்து கொழும்பு, திருவனந்தபுரம், பம்பாய், மெட்ராஸ் என ஆசியாவின் பல பகுதிகளிலும் ஒய்.எம்.சி.ஏ ஆரம்பிக்கப்பட்டது. அந்த வரிசையில் 1890இல் மெட்ராஸ் வந்த டேவிட் என்ற இளம் அமெரிக்கர், இங்கு ஒய்.எம்.சி.ஏ இயக்கத்தை தொடங்கினார். அடுத்த ஆண்டு இவர் மேற்கொண்ட முயற்சியால் இந்தியாவில் உள்ள ஒய்.எம்.சி.ஏ அமைப்புகளின் கூட்டம் சென்னையில் கூடியது. ஒய்.எம்.சி.ஏ.வின் தேசிய கவுன்சிலை உருவாக்குவது என இதில் முடிவெடுக்கப்பட்டது. அதன்படி இந்த கவுன்சிலின் தலைமையகம் முதல் ஓராண்டு காலம் மெட்ராசில் இருந்து செயல்பட்டது. பின்னர் இது கல்கத்தாவிற்கு மாற்றப்பட்டது.
 
மெட்ராஸ் ஒய்.எம்.சி.ஏ.விற்கென பாரிமுனையின் எஸ்பிளனேட் பகுதியில் 1895இல் ஒரு பிரம்மாண்ட கட்டடம் கட்டும் பணி தொடங்கியது. ஜெய்ப்பூர் அரண்மனை பாணியில் கட்டப்பட்டுள்ள இந்த கண்கவர் கட்டடத்தை ஹார்டிங் (G.S.T Harding) என்பவர் வடிவமைத்துக் கொடுத்தார். இதன் கட்டுமானப் பணிக்காக ஜான் வானாமேக்கர் என்பவர் அந்த காலத்திலேயே 40,000 டாலர் நன்கொடை அளித்தார். இந்த ஜான், அப்போது அமெரிக்காவின் போஸ்ட் மாஸ்டர் ஜெனரலாக இருந்தார்.
 
பைபிள் வகுப்புகள், பிரசங்கங்கள் என கிறிஸ்தவ செயல்பாடுகளில் மட்டும் ஒய்.எம்.சி.ஏ கவனம் செலுத்தி வந்த நிலையில், 1919இல் மெட்ராஸ் வந்து சேர்ந்தார் ஹாரி க்ரோ பக் (Harry Crowe Buck). அடுத்த ஆண்டே எஸ்பிளனேட் கட்டடத்தில் இவர் ஒரு உடற்பயிற்சி பள்ளியை ஆரம்பித்தார். ஆரம்பிக்கப்பட்ட புதிதில் இந்த பள்ளியில் வெறும் 5 மாணவர்கள் மட்டுமே பயின்றனர். அந்த மாணவர்களுக்கு பக் அளித்த சிறப்பான பயிற்சிகளைப் பார்த்த மெட்ராஸ் அரசு, அவரை அரசின் உடற்கல்வி ஆலோசகராக 1922இல் நியமித்தது.
 
1924இல் இந்தியாவில் இருந்து ஒலிம்பிக்கில் பங்கேற்கச் சென்ற அணியில், ஒய்.எம்.சி.ஏ பள்ளியின் மாணவர்களும் இடம்பிடித்தனர். பாரீஸ் நகரில் நடைபெற்ற இந்த ஒலிம்பிக் போட்டியில் பக் தான் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்தார். பள்ளி வேகமாக வளரத் தொடங்கியதால் எஸ்பிளனேட் இடம் போதுமானதாக இல்லை. எனவே 1928இல் ராயப்பேட்டையில் உள்ள வெஸ்லி பள்ளி மைதானத்திற்கு உடற்பயிற்சிக் கல்லூரி இடம்மாறியது. காலப்போக்கில் அந்த இடமும் போதுமானதாக இல்லாததால், அடையாறு ஆற்றங்கரையில் சைதாப்பேட்டையில் ஒரு பரந்து விரிந்த இடத்தை பக் தேர்வு செய்தார். இப்படித்தான் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ உடற்பயிற்சிக் கல்லூரி உருவானது.
 
65 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த இடத்திலேயே பக்கும் குடும்பத்துடன் குடியேறி விட்டார். ஆரம்ப நாட்களில் வெறும் கீற்றுக் கொட்டகைகளில் வகுப்புகள் நடத்தப்பட்டன. பின்னர் 1933இல் அப்போதைய மெட்ராஸ் ஆளுநர் சர் ஜார்ஜ் ஸ்டான்லி அடிக்கல் நாட்ட, கட்டடங்கள் கட்டும் பணி தொடங்கியது. காலப்போக்கில் இந்த உடற்பயிற்சிக் கல்லூரியில் பெண்களும் சேர ஆரம்பித்தனர். ஆசியாவின் பழமையான இந்த உடற்பயிற்சிக் கல்லூரியை வளர்ப்பதற்காக தனது உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்ப்பணித்த ஹாரி க்ரோ பக் 1943, ஜூலை 24 அன்று தனது கடைசி மூச்சு வரை இந்த வளாகத்தில்தான் இருந்தார். அவரது நினைவிடம் இன்றும் நந்தனம் வளாகத்தில் இருக்கிறது.
 
ஒய்.எம்.சி.ஏ.வைப் போலவே பெண்களுக்கென தொடங்கப்பட்ட ஒய்.டபிள்யூ.சி.ஏ (YWCA - Young Women's Christian Association) ஆரம்ப நாட்களில் மெட்ராஸ் கிறிஸ்தவ மகளிர் அமைப்பு என அழைக்கப்பட்டது. இங்கு பெண்களுக்கான பைபிள் வகுப்புகள், தையல் பயிற்சிகள், தேநீர் விருந்துகள் நடைபெற்றன. இதே காலகட்டத்தில் மன்னரின் மகள்கள் (King's Daughters) என்ற அமைப்பும் மெட்ராசில் செயல்பட்டது. மெட்ராஸ் ஒய்.எம்.சி.ஏ.வைத் தொடங்கிய டேவிட்டின் மனைவி லில்லி இந்த அமைப்பை ஏற்படுத்தினார். பின்னர் இந்த இரு அமைப்புகளும் 1892இல் ஒருங்கிணைக்கப்பட்டு ஒய்.டபிள்யூ.சி.ஏ உருவானது.
ywca.jpg
ஒய்.டபிள்யூ.சி.ஏ
 
ஒய்.எம்.சி.ஏ, ஒய்.டபிள்யூ.சி.ஏ ஆகிய இரண்டும் கிறிஸ்தவ இளம்தலைமுறையினருக்காக ஆரம்பிக்கப்பட்டாலும், பின்னாட்களில் அனைவரும் பயன்பெறத்தக்க வகையில் பல்வேறு சமூக மேம்பாட்டு செயல்களில் முத்திரை பதித்தன. மொத்தத்தில் மெட்ராஸ் வரலாற்றின் சில பயனுள்ள பக்கங்களை ஒய்.எம்.சி.ஏ தனது சேவையால் நிரப்பி இருக்கிறது என்பதே நிஜம்.
 
நன்றி - தினத்தந்தி
 
* மாற்றுத்திறனாளி மாணவர்களின் விளையாட்டுத் திறன்களை மேம்படுத்த, முதன்முதலில் நடவடிக்கை எடுத்த கல்லூரிகளில் ஒய்.எம்.சி.ஏ உடற்பயிற்சிக் கல்லூரி மிக முக்கியமானது.
 
* பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ரம்மியமான சூழலில் அமைந்துள்ள கிளைவ் இல்லத்தில்தான் ஒய்.டபிள்யூ.சி.ஏ தற்போது செயல்பட்டு வருகிறது.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Sunday, June 30, 2013

மெட்ராஸ் சாலைகள்

 
எந்த ஒரு நகரின் வளர்ச்சிக்கும் அங்கிருக்கும் சாலைகள் மிக முக்கிய காரணமாக இருக்கின்றன. மெட்ராசும் இதற்கு விதிவிலக்கல்ல. மெட்ராசில் ஆங்கிலேயர்கள் காலடி வைத்து சுமார் 200 ஆண்டுகளுக்குப் பிறகுதான் சாலைகள் முறையாக அமைக்கப்பட்டன. அதுவரை மனிதர்கள் நடந்து செல்லவும், மாட்டு வண்டிகளில் செல்லவும் போதுமான அளவில்தான் சாலைகளின் அகலமும், தரமும் இருந்தன.
 
இன்று வாகனங்கள் மின்னல் வேகத்தில் விரையும் மவுண்ட் ரோடு எனப்படும் அண்ணா சாலையும், பூந்தமல்லி நெடுஞ்சாலையும் ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன்பிருந்தே மக்கள் பயன்பாட்டில் இருந்தன. மெட்ராஸ் என்ற நிலப்பகுதியை சுற்றியிருந்த திருவொற்றியூர், மயிலாப்பூர், திருவல்லிக்கேணி போன்ற கிராமங்கள் பல நூற்றாண்டுகளாக இருக்கின்றன என்பதற்கு இங்குள்ள புராதன கோவில்களே சாட்சி. இங்குள்ள மக்கள் செங்கல்பட்டு, பூந்தமல்லி உள்பட தொண்டை மண்டலத்தின் பிற பகுதிகளுக்கு செல்ல இந்த சாலைகளைத் தான் பயன்படுத்தினர். இருந்தாலும் சாதாரண புறவழிச்சாலையாக இருந்த இவை, மாநகரின் முக்கிய சாலைகளாக பரிணாம வளர்ச்சி அடைந்தது ஆங்கிலேயர்களின் வருகைக்கு பிறகுதான்.
Chennai+Old+Mount+Road+Anna+salai-1905.j
மவுண்ட் ரோடு 1905இல்
 
1856இல் பொதுப்பணித்துறை வேலைகளை கவனிக்க ஒரு கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த கமிஷனின் அறிக்கை அப்போதைய மெட்ராஸ் சாலைகளின் நிலை எப்படி இருந்தது என்பதை தெளிவாகக் கூறுகின்றன.
 
'இங்கிலாந்தைவிட இரண்டரை மடங்கு அதிக நிலப்பரப்பும், மக்கள்தொகையும் கொண்ட இந்த ராஜதானிக்கு, 3400 மைல்களுக்குத்தான் தெருக்கள் இருக்கின்றன. அவை கூட உண்மையில் சரியாக அமைக்கப்பட்ட வீதிகள் அல்ல. வெறும் கை வண்டி அல்லது மாட்டு வண்டிகள் செல்லக்கூடிய வழிகள்தான். கோடைகாலத்தில் தரை கெட்டியாக இருக்கும்போது மட்டும்தான் அவற்றை பயன்படுத்த முடியும். பாலங்களும் சரியாக கட்டப்படவில்லை. இவை அனைத்துமே மராமத்து பார்க்க வேண்டியவை' என்று அந்த கமிஷன் தெரிவித்திருக்கிறது.
 
இந்த கமிஷன் வருவதற்கு முன்பே மவுண்ட் ரோடு வந்துவிட்டது. ஜார்ஜ் கோட்டையில் இருந்து செயிண்ட் தாமஸ் மவுண்ட் வரை சுமார் 15 கிலோ மீட்டர்களுக்கு நீ......ண்டு கிடக்கும் இந்த சாலை காலப்போக்கில் அசுர வளர்ச்சி அடைந்தது. ஏசுநாதரின் 12 சீடர்களில் ஒருவரான புனித தோமையார், கிபி 72இல் செயிண்ட் தாமஸ் மவுண்டில்தான் கொல்லப்பட்டார். இதனையடுத்து கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகளாக இந்த மலை வழிபாட்டுத் தலமாக இருந்து வருகிறது. எனவே மெட்ராஸ் வந்த ஆங்கிலேயர்களும் கூட்டம் கூட்டமாக இங்கு வந்து வழிபடத் தொடங்கினர்.
Chennai+Old+Mount+Road+Anna+salai.jpg
போக்குவரத்து நெரிசல் இல்லாத மவுண்ட் ரோடு
 
இதனிடையே 17ஆம் நூற்றாண்டின் இறுதியில் மெட்ராஸ் ஆளுநர்கள் கிண்டியில் உள்ள அரசினர் இல்லத்தில் அடிக்கடி வந்து தங்க ஆரம்பித்ததால், இந்த பகுதியில் போக்குவரத்து அதிகரித்தது. எனவே சிறப்பு கவனம் செலுத்தி உடனடியாக மவுண்ட் ரோடு சீரமைக்கப்பட்டது. அரசு மட்டுமின்றி சில தனி நபர்களும் மவுண்ட் ரோட்டின் வளர்ச்சிக்கு பங்காற்றியுள்ளனர்.
 
மெட்ராசில் அக்காலத்தில் புகழ்பெற்று விளங்கிய ஆர்மீனிய வணிகரான பெட்ரூஸ் உஸ்கான், செயிண்ட் தாமஸ் தேவாலயத்திற்கு வருபவர்களின் வசதிக்காக தனது சொந்த செலவில் அடையாற்றின் குறுக்கே 1726இல் ஒரு பாலத்தை கட்டிக் கொடுத்தார். அதுதான் அடையாறு மர்மலாங் பாலம். பின்னர் இந்த பாலம் சேதமடைந்துவிட்டதால் 1950-களில் இதன் அருகிலேயே தற்போது இருக்கும் மறைமலை அடிகள் பாலம் கட்டப்பட்டது.
 
இந்தியாவின் தற்போதைய வரைபடத்திற்கு ஆணிவேராக இருந்ததே மவுண்ட் ரோடுதான். காரணம், இந்தியாவின் நீள அகலத்தை அளப்பதற்காக 1802ஆம் ஆண்டு தொடங்கிய 'இந்தியாவின் பெரும் முக்கோணவியல் அளவீடு' (The Great Trigonometrical Survey of India) பணிக்கு மவுண்ட் ரோட்டில்தான் பிள்ளையார் சுழி போடப்பட்டது. ஜார்ஜ் கோட்டையை செயிண்ட் தாமஸ் மவுண்டுடன் இணைக்கும் 7 மைல் நீளம் கொண்ட நேர்க் கோட்டை அடிப்படையாகக் கொண்டுதான் இந்த வேலை ஆரம்பமானது.
 
மெட்ராசின் மற்றொரு முக்கிய சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை. சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களின் வருகைக்கு பிறகு இந்த சாலையின் பயன்பாடு அதிகரித்தது. சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வந்திறங்கும் பயணிகள் தங்குவதற்காக ராஜா சர் ராமஸ்வாமி முதலியார் சத்திரம், அப்துல் ஹகீம் சாகிப் சத்திரம் (சித்திக் செராய்) ஆகியவை இங்கு கட்டப்பட்டன. இந்த இரண்டு சத்திரங்களும் இன்று வணிக வளாகமாக உருமாறி இருக்கின்றன. சித்திக் செராயில் ஒரு பெரிய மசூதி இருக்கிறது.
Chennai+Parrys+Corner-1890+(1).jpg
பாரிமுனை 1890இல்
 
இவை மட்டுமின்றி விக்டோரியா ஹால், மூர் மார்க்கெட், ரிப்பன் மாளிகை, அரசு பொது மருத்துவமனை, தினத்தந்தி அலுவலகம், பச்சையப்பன் கல்லூரி, ஆண்ட்ரூஸ் தேவாலயம், ஆங்கிலோ-இந்தியன் பள்ளி என பல முக்கிய கட்டடங்கள் இந்த சாலையின் பயன்பாட்டை அதிகரித்தன.
 
ஆரம்ப நாட்களில் கோட்டைக்குள்ளேயே இருந்து மூச்சு முட்டிய ஆங்கிலேயர்கள், பின்னர் மெல்ல வெளியில் வந்து பெரிய பெரிய தோட்ட வீடுகளைக் கட்டி குடியேற ஆரம்பித்தனர். தேனாம்பேட்டை, வேப்பேரி, புரசைவாக்கம், சேத்துபட்டு என அவர்கள் வீடு கட்டிய இடங்களில் எல்லாம் சாலைகள் முளைத்தன. இப்படித்தான் இன்றைய சென்னையின் பல சாலைகள் உருப்பெற்றன.
 
அறிஞர்களின் சிலைகள் வரிசை கட்டி நிற்கும் பிரம்மாண்டமான கடற்கரைச் சாலையில் தொடங்கி சென்னையின் சின்ன சின்ன தெருக்கள் வரை ஒவ்வொன்றின் பின்னாலும் ஒரு சுவாரஸ்யமான கதை இருக்கிறது. இந்த கதைகளை சுமந்தபடி மாட்டு வண்டிகளும், குதிரை வண்டிகளும் ஓடிக் கொண்டிருந்த சாலைகளில், டிராம்கள் அறிமுகமாகி ஓடி ஓய்ந்துவிட்டன. அடுத்து சாலைகளை ஊடறுத்து ஓட மெட்ரோ ரெயில்கள் தயாராக இருக்கின்றன. மொத்தத்தில் கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் இணைத்தபடி, வரலாறுகளால் நிறைந்து கிடக்கின்றன மெட்ராஸ் சாலைகள்.
 
நன்றி - தினத்தந்தி
 
* எழும்பூர் பாந்தியன் சாலையை உள்ளடக்கிய 43 ஏக்கர் நிலம்
1778இல் ஹால் பிளம்மர் என்பவருக்கு மெட்ராஸ் அளுநரால் வழங்கப்பட்டது.
 
* நுங்கம்பாக்கத்தில் ஒருகாலத்தில் மாட்டு வண்டிகள் பயணிக்கும் ஒற்றையடி பாதையாக இருந்ததுதான் ஸ்டெர்லிங் ரோடு. சாதாரண சிப்பாயாக இருந்து, படிப்படியாக முன்னேறி செஷன்ஸ் நீதிபதியாகிவிட்ட ஸ்டெர்லிங்கின் (L. K. Sterling) நினைவாக இந்த பெயர் சூட்டப்பட்டது. இப்படி பல ஆங்கிலேயர்களின் நினைவுகளைத் தாங்கியபடி நிறைய சாலைகள் இன்றும் இருக்கின்றன.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Sunday, June 23, 2013

கந்தசாமி கோயில்

 
போக்குவரத்து நெரிசல்மிக்க இன்றைய சென்னையிலும் அமைதி தவழும் சில இடங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றில் முக்கியமானது பாரிமுனையில் உள்ள கந்தகோட்டம் எனப்படும் கந்தசாமிக் கோயில்.
kandasamy+temple.jpg
கந்தசாமி கோயில்
 
பாரிமுனை ராசப்ப செட்டித் தெருவில் அமைந்துள்ள இந்த கோயில் சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. வேலூர் மாரி செட்டியார் என்பவர்தான் இந்த கோயில் உருவாகக் காரணமானவர். கிழக்கிந்திய கம்பெனியின் வர்த்தகராக இருந்த மாரி செட்டியார், ஒரு தீவிர முருக பக்தர். அவர் திருப்போரூரில் உள்ள முருகனை அடிக்கடி சென்று வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். குறிப்பாக கிருத்திகை நாளில் கண்டிப்பாக திருப்போரூரில் இருப்பாராம்.
 
அப்படி ஒருமுறை அவர் தனது நண்பர் கந்தப்பா ஆசாரியுடன் திருப்போரூர் சென்றபோது, ஒரு இடத்தில் ஓய்வெடுத்தாராம். அப்போது தெய்வத்தின் அருளால் அவர்களுக்கு அங்கிருந்த வேப்ப மரத்தின் அடியில் இருந்த புற்றுக்குள் இருந்து ஒரு முருகன் சிலை கிடைத்ததாக கூறப்படுகிறது. அவர்கள் அந்த சிலையை எடுத்துவந்து ஏற்கனவே முத்தையால்பேட்டையில் பிள்ளையார் கோயில் இருந்த இடத்தில் பிரதிஷ்டை செய்தனர். இந்த சம்பவம் 1673ஆம் ஆண்டு நடைபெற்றதாக ஆங்கிலேயே குறிப்புகளில் காணப்படுகிறது.
 
இதனிடையே இந்த கோயில் இங்கு எப்படி வந்தது என்பதற்கு கிட்டத்தட்ட இதேபோல ஒரு தல வரலாறு கூறப்படுகிறது. அதன்படி, இந்த பகுதியில் வசித்த சிவாச்சாரியார் ஒருவர் அருகிலுள்ள திருப்போரூர் தலத்திற்கு சென்றுவிட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தாராம்அவருடன் சில ஆச்சார்யார்களும் வந்து கொண்டிருந்தனர்வழியில் பலத்த மழைபெய்துவெள்ளம் பெருக்கெடுத்ததால் அவர்களால் ஊருக்கு திரும்ப முடியவில்லைஎனவே, வழியில் ஓர் மடத்தில் தங்கினர்
kandasamy+temple+idol.jpg
முத்துக்குமார சுவாமி
 
அன்றிரவு சிவாச்சாரியாரின் கனவில் காட்சிதந்த முருகன்தான் அருகிலுள்ள புற்றில் குடிகொண்டிருப்பதாகவும், தனக்கு கோயில் கட்டும்படியும் கூறினாராம். கண்விழித்த சிவாச்சாரியார் அங்கிருந்த புற்றில் முருகன், சிலை வடிவில் இருந்ததைக் கண்டார். அந்த சிலையை எடுத்துக் கொண்டுஊருக்கு புறப்பட்டார்வழியில் ஓரிடத்தில் சிலையை வைத்துவிட்டு சிறிதுநேரம் ஓய்வெடுத்தனர்பின் சிலையை எடுக்க முயன்றபோது முடியவில்லைஎனவேஅந்த இடத்திலேயே முருகனுக்கு கோயில் கட்டப்பட்டது. சுவாமி இந்த இடத்தில் தானாக விரும்பி நின்றவர் என்பதால் பீடம் இல்லாமல் தனித்துதரையில் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார் என்கிறார்கள்இதற்கான வரலாற்று ஆதாரங்கள் எதுவும் இல்லை.
 
சரி, மீண்டும் மாரி செட்டியாரிடம் வருவோம். தான் கொண்டு வந்த சிலையை வைப்பதற்காக மாரி செட்டியார் ஒரு சிறிய கோயிலைக் கட்டினார். இதற்காக அவர் தனது மனைவியின் நகைகளை அடகு வைத்துக் கடன் வாங்கியதாகக் கூறப்படுகிறது. கோயிலுக்கான இடம் மட்டும் முத்தையாலு நாயக்கரால் கொடுக்கப்பட்டதாம்.
 
சுமார் 100 ஆண்டுகள் கடந்த பின்னர் 1780ஆம் ஆண்டில் இந்த கோயில் பதினெண் செட்டியார்களால் திருத்தி அமைக்கப்பட்டது. இன்னும் 100 ஆண்டுகள் கடந்த பிறகு, 1860இல்தான் இந்த கோயில் நன்கு விஸ்தரிக்கப்பட்டு கற்கோயிலாக மாற்றப்பட்டது. அதுவரை ஏறத்தாழ இரண்டு நூற்றாண்டுகள், இது சாதாரண செங்கற் கோயிலாகத்தான் இருந்தது. 1869ஆம் ஆண்டு வையாபுரி செட்டியார் என்பவர் இந்த கோயிலுக்கு ரூ66,000 நன்கொடையாக வழங்கினார். அவர் இந்த கோயிலுக்காக ஒரு தேரும் செய்ய வைத்ததாக நரசய்யா தனது மதராசபட்டினம் நூலில் குறிப்பிட்டிருக்கிறார்.
 
1880ஆம் ஆண்டு அக்கம்மாபேட்டை கோவிந்த செட்டியார் என்பவர் நாராயண செட்டியாருடன் இணைந்து கோயிலின் அருகில் இருந்த நிலத்தை கோயிலுக்காக அளித்தார். அந்த நிலத்தில் தான் வசந்த மண்டபம் கட்டப்பட்டுள்ளது. பின்னர் 1901ஆம் ஆண்டு காளி ரத்தின செட்டியார் என்பவர் ரூ.50,000 நன்கொடை கொடுத்திருக்கிறார். அந்த காசில்தான் கோயிலின் ராஜகோபுரம் கட்டப்பட்டது. இதுமட்டுமின்றி கோயிலுக்காக காளி ரத்தினம் செட்டியார் ஒரு கிண்ணம் நிறைய வைரங்களும், விலை உயர்ந்த கற்களும் கொடுத்தாராம்.
 
இந்த கோயிலுக்கும் வள்ளலாருக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. வள்ளலார் சென்னையில் வசித்த போது தமிழ் கற்பதற்காக இந்த கோயிலுக்கு அருகில் உள்ள சபாபதி முதலியார் வீட்டுக்கு வருவார். பல நேரங்களில் தமிழ் கற்கப் போகாமல் முருகனைத் தரிசிக்கக் கோயிலிலேயே தங்கிவிடுவாராம். மன முருகிப் பாடலும் பாடுவார்.
 
திருவருட்பாவில் இடம்பெற்றுள்ள ஒருமையுடன் நினது திரு மலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும்’ என்ற பாடலில் கந்த கோட்ட முருகனைப் புகழ்ந்து பாடியுள்ளார் வள்ளலார். தருமமிகு சென்னையில் கந்த கோட்டத்துள் வளர் தலமோங்கு கந்தவேளே’ என்று கந்த கோட்டத்து முருகனை புகழ்ந்து பாமாலை சூட்டியுள்ளார். வள்ளலாரைப் போன்றே சிதம்பரசாமிபாம்பன் குமரகுருபரதாச சுவாமிகள்தண்டபாணி சுவாமிகள் போன்றோரும் இங்கு வந்து பாடியுள்ளனர்.
 
இந்த கோயிலில் நடைபெறும் தைப்பூசத் திருவிழாவில் பங்கேற்பதற்காக, முறையான போக்குவரத்து வசதிகள் இல்லாத அந்த காலத்திலேயே மெட்ராசின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் கூட்டம் கூட்டமாக வருவார்களாம். கந்த சஷ்டிவைகாசி வசந்த உற்சவம்ஆடிக் கிருத்திகை,பங்குனி உத்திரம் போன்றவையும் இங்கு மிக விசேஷமாகக் கொண்டாடப்படுகின்றன.
kandasamy+temple+pond.jpg
கோயில் குளம்
 
ஏக்கர் பரப்பளவில் விரிந்திருக்கும் இந்த கோயிலில் சரவண பொய்கை என்ற பெயரில் ஒரு அழகிய குளம் இருக்கிறது. இது கட்டப்பட்ட காலத்தில் இருந்து இதில் உள்ள நீரின் அளவு கூடாமல், குறையாமல் அப்படியே இருப்பதாக சொல்கிறார்கள். இந்த குளத்தில் கை நிறைய பொறியை அள்ளி வீசினால், மீன்கள் கூட்டம் கூட்டமாக வந்து பொறியை கவ்விக் கொண்டு மின்னல் வேகத்தில் நீருக்குள் மறைகின்றன. இங்கு ஒவ்வொரு முறை வரும்போதும், அந்தக் கால மெட்ராஸ் பற்றிய எனது நினைவுகளும் இந்த மீன்களைப் போலவே மூளை நியூரான்களில் ஒன்றை ஒன்று முந்திக் கொண்டு ஒரே நேரத்தில் பாயும் பரவசத்தை அனுபவிக்க முடிகிறது.
 
நன்றி - தினத்தந்தி
 
* உற்சவர் முத்துக்குமார சுவாமி தனிக்கொடிமரத்துடன் உள்ளார்இவர் முகத்தில் புள்ளிகளுடன் மிகவும் அழகு பொருந்தியவராக காட்சி தருகிறார்விசேஷ காலங்களில் இவருக்கே பிரதான பூஜை நடத்தப்படுகிறது
 
* தோல் நோய் மற்றும் கட்டிகளால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த சரவணப் பொய்கையில் வெல்லம் கரைக்கின்றனர்


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Friday, June 14, 2013

ராயபுரம் நெருப்புக் கோவில்

 
தனிமனிதத் தேவைகள் காரணமாக எழும் சில விஷயங்கள் வரலாற்றில் நின்று நிலைத்து விடுகின்றன. அப்படி மெட்ராசில் பார்சி இனத்தவரின் அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்வதுதான் ராயபுரத்தில் இருக்கும் நெருப்புக் கோவில்.
royapuram+fire+temple.jpg
ராயபுரம் நெருப்புக் கோவில்
 
உலகின் பழமையான இனங்களில் பார்சி இனம் முக்கியமானது. கி.மு.1200க்கு முன்பே இந்த இனம் தோன்றியதாகக் கூறப்படுகிறது. பாரசீகத்தை (தற்போதைய ஈரான், ஈராக்) பூர்வீகமாகக் கொண்ட இவர்கள், ஜொராஷ்டிரர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதியில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகளை அடுத்து, இவர்கள் உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் புலம்பெயரத் தொடங்கினர்.
 
அந்த வகையில் 1795ஆம் ஆண்டில் மெட்ராஸ் மண்ணில் பார்சிகள் முதன்முதலில் காலடி எடுத்து வைத்தனர். விரல்விட்டு எண்ணக் கூடிய அளவில் சிறு குழுவாக இருந்த அவர்கள், ராயபுரத்தில் தேவாலயத்திற்கு எதிரில் இடம் வாங்கி, வீடு கட்டிக் குடியேறினர். அவர்களைத் தொடர்ந்து மேலும் சில பார்சிகள் மெட்ராஸ் வந்தனர். அவர்களில் ரஸ்தோம்ஜி, நவ்ரோஜி ஆகிய இருவரும் சேர்ந்து ஒரு நிறுவனத்தை தொடங்கினர். அதற்காக அப்போதைய ஜார்ஜ் கோட்டை ஆளுநரிடம் இருந்து ராயபுரம் பகுதியில் 24 கிரவுண்ட் நிலத்தை 99 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்தனர்.
 
மெட்ராசில் இப்படி மெல்ல காலூன்றிய பார்சிகள், 1876இல் தங்களுக்கென பார்சி பஞ்சாயத்து என்ற பெயரில் ஒரு அமைப்பை ஏற்படுத்தினர். இதன் முதல் கூட்டத்தில் 11 பேர் கலந்துகொண்டதாக ஆவணங்கள் கூறுகின்றன. பார்சி இன மக்கள்நெருப்பை கடவுளாக வழிபடுபவர்கள். ஆனால் இவர்கள் வழிபாடு நடத்துவதற்காகஅப்போது மெட்ராசில் எந்த கோவிலும் இல்லை. எனவே பார்சிகளுக்கென ஒரு கோவில் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை மெல்ல வலுப்பெறத் தொடங்கியது.
 
இதற்காக நிதி வசூலிக்கும் வேலையும் ஆரம்பமானது. பார்சிகளின் கோரிக்கையை ஏற்று பூனாவில் இருந்த சர் தின்ஷா பெட்டிட் என்பவர் 1896இல் ரூ3600 நன்கொடையாக அளித்தார். அந்த காலத்தில் இவ்வளவு பெரிய தொகை கிடைத்ததும் கோவில் கட்டும் முயற்சி தீவிரமடைந்தது. பார்சி பஞ்சாயத்தின் அப்போதைய தலைவராக இருந்த சொராப்ஜி பிராம்ஜி தன் பங்கிற்கு ரூ1000 நன்கொடையாக அளித்ததும், அதுவரை சேர்ந்த பணத்தைக் கொண்டு ராயபுரத்தில் கோவிலுக்கென ஒரு இடம் வாங்கப்பட்டது.
 
ஆனாலும் கோவில் கட்டும் பணி இழுத்துக் கொண்டே போனது. இந்நிலையில் பிரோஜ் கிளப்வாலா என்பவரின் 13 வயது மகன் ஜல், 1906ஆம் ஆண்டு திடீரென மரணமடைந்தான். பார்சிகள் இறுதிச் சடங்கை நெருப்புக் கோவிலில் செய்வது வழக்கம். ஆனால் ஜல்லின் இறுதிச் சடங்குகளை செய்ய, முறையான பூசாரியோ, கோவிலோ அப்போது மெட்ராசில் இல்லை. இதனால் மனமுடைந்துபோன பிரோஜ் கிளப்வாலா, தனக்கு ஏற்பட்ட நிலை இனி யாருக்கும் வரக் கூடாது எனக் கருதி நெருப்புக் கோவில் கட்டும் பணியை துரிதப்படுத்தினார். இதனையடுத்து அடுத்த ஆண்டே ராயபுரத்தில் நெருப்புக் கோவில் ஒன்றை கட்டிக் கொடுத்ததுடன், பூசாரியை நியமிப்பதற்கென தனியாக ரூ2000 நன்கொடையும் வழங்கினார்.
 
1909ஆம் ஆண்டு பிப்ரவரி 9ந் தேதி இந்த கோவிலுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. பார்சி பஞ்சாயத்தின் அப்போதைய தலைவர் நவ்ரோஜி ஒரு சிவில் என்ஜினியர் என்பதால், அவரே கோவிலுக்கான வரைபடத்தை தயாரித்துக் கொடுத்தார். இதனையடுத்து 1910ம் ஆண்டு மத்தியில் கட்டி முடிக்கப்பட்ட நெருப்புக் கோவிலுக்கு ஜல் பிரோஜ் கிளப்வாலா தர்-இ-மெகர் என்று பெயரிடப்பட்டது. எர்வாட் தோசாபாய் பாவ்ரி என்பவர் இந்த கோவிலின் முதல் பூசாரியாக பணியாற்றினார். அவருக்கு மாதந்தோறும் ரூ40 சம்பளமாக வழங்கப்பட்டது.
parsis-fire+temple.jpg
ஜல் பிரோஜ் கிளப்வாலா தர்-இ-மெகர்
 
இந்தக் கோவில் பிறகு பார்சி சமூகத்தவர்கள் சந்திப்பதற்கான இடமாகவும் மாறியது. இந்த நெருப்புக் கோயிலில் 100 ஆண்டுகளைக் கடந்தும் நெருப்பு அணையாமல் தொடர்ந்து எரிந்து கொண்டே இருக்கிறது. இங்கு ஒரு நாளைக்கு ஐந்து முறை விளக்கு ஏற்றுகிறார்கள்.
 
முதல் உலகப் போரின்போது ஜெர்மானிய போர்க்கப்பலான எம்டன், மெட்ராஸ் மீது குண்டுகளை வீசியது. எம்டன் மீண்டும் தாக்குதல் நடத்தலாம் என்ற பீதி காரணமாக மெட்ராசில் இருந்து ஏராளமானோர் அவசர அவசரமாக வெளியேறினர். அத்தகைய இக்கட்டான நிலையிலும் இந்த கோவிலின் பூசாரியாக இருந்த பெஷோதான் என்பவர் வெளியேற மறுத்துவிட்டாராம். கோவிலில் இருக்கும் நெருப்பு அணையாமல் தொடர வேண்டும் என்பதற்காக தனது உயிரையும் பணயம் வைத்து கோவிலிலேயே இருந்தாராம்.
parsis-fire.jpg
அணையாத நெருப்பு
 
இப்படி பலரும் போற்றிப் பாதுகாத்த அந்த நெருப்பு இன்றும் அணையாமல் தொடர்ந்து எரிந்துகொண்டே இருக்கிறது. சற்று கூர்ந்து பார்த்தால், மெட்ராசின் வர்த்தக வளர்ச்சியில் கணிசமான பங்களிப்பை அளித்த பார்சிகளின் நினைவும் அந்த நெருப்பில் சுடர்விடுவதை உணர முடிகிறது.
 
நன்றி - தினத்தந்தி
 
* தமிழ்நாட்டில் உள்ள ஒரே நெருப்புக் கோயில் இதுதான். மும்பையில் 55நெருப்புக் கோவில்கள் இருக்கின்றன. ஒட்டுமொத்தமாக இந்தியாவில் 100நெருப்புக் கோவில்கள் உள்ளன.

* சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற தாதாபாய் நௌரோஜி முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் கணவர் ஃபெரோஸ் காந்திரத்தன் டாடா ஆகியோர் பார்சி இனத்தைச் சேர்ந்தவர்கள். 


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Saturday, June 8, 2013

காயிதே மில்லத் கல்லூரி

 
சென்னையின் மிக உயரமான கட்டடம் எது என்று கேட்டால், கேள்வி முடியும் முன்பே எல்ஐசி என்று பதில் வந்துவிடும். ஆனால் எல்ஐசி வருவதற்கு முன் சென்னையின் உயரமான கட்டடமாக இருந்தது எது? அது எங்கிருக்கிறது தெரியுமா? அதைத் தேடி நீங்கள் வெகு தூரம் செல்ல வேண்டாம்அதுவும் எல்ஐசிக்கு மிக அருகில்தான் இருக்கிறது.
 
எல்ஐசிக்கும், ஸ்பென்சருக்கும் இடையில் உள்ள சிக்னலில் காத்திருக்கும்போது, நடுவில் சிவப்பு வண்ணத்தில் நின்று கொண்டிருக்கும் சிறிய அரண்மனை போன்ற புராதன கட்டடத்தை நிச்சயம் பார்த்திருப்பீர்கள். அகர்சந்த் மேன்சன் (Agurchand Mansion) என்று தற்போது அறியப்படும் அந்த 100 அடி உயர கட்டடம்தான் ஒருகாலத்தில் சென்னையின் உயரமான கட்டடமாக இருந்தது.
agurchand+mansion1.jpg
அகர்சந்த் மேன்சன்
 
இந்த கட்டடத்தின் வரலாற்றை புரட்டிக் கொண்டே போனால் அது கர்நாடக கடைசி நவாப்பின் வீட்டு வாசலில் போய் நிற்கிறது. நவாப் குலாம் முகமது கவுஸின் மனைவி, பேகம் அஸீம் உ நிசா. நவாப் தனது மனைவிக்கு நிறைய சொத்துகளை விட்டுச் சென்றிருந்தார். அவற்றில் முக்கியமானது தற்போது அகர்சந்த் மேன்சனும் எதிரில் காயிதே மில்லத் கல்லூரியும் உள்ள இடங்கள்.
 
காயிதே மில்லத் கல்லூரி இருக்கும் இடத்தில் தான் பேகம் அஸீம் உ நிசா தங்கியிருந்தார். அவர் தங்கியிருந்த மாளிகை உம்தா பாக் (Umda Bagh) என்று அழைக்கப்பட்டது. ஆரம்பத்தில் இந்த நிலம் கோல சிங்கண்ண செட்டிக்கு சொந்தமாக இருந்தது. 1816இல் வெளியான மெட்ராஸ் வரைபடத்தில் இந்த நிலம் சிங்கண்ண செட்டியின் நிலம் என்றுதான் குறிக்கப்பட்டிருக்கிறது. பின்னர் 19ஆம் நூற்றாண்டில்தான் இது பேகம் அஸீம் உ நிசா வசம் வந்தது (அவர் வாடகைக்குதான் இருந்தார் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது). இவர் செய்த தான தர்மங்கள் காரணமாக பேகமின் பெயர் அன்றைய மெட்ராசில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்கியது. நவாப் வாலாஜாவால் சேப்பாக்கம் அரண்மனை வளாகத்தில் தொடங்கப்பட்ட இஸ்லாமிய பள்ளி, பேகம் காலத்தில் அவரது உம்தா பாக் மாளிகைக்கு மாற்றப்பட்டது. அதுதான் இன்றும் மவுன்ட் ரோட்டில் இயங்கி வரும் மதராஸா-இ-ஆஸாம் பள்ளி.
madrasa+i+azam.jpg
மதராஸா இ ஆஸாம் பள்ளி
 
1901இல் மெட்ராசில் நடைபெற்ற அனைத்திந்திய இஸ்லாமிய கல்வி மாநாட்டில், இந்த இடத்தை அரசு வாங்கி ஒரு சிறந்த கல்வி நிலையத்தை நிறுவ வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. அரசும் இதனை ஏற்று அப்போது இந்த நிலத்தின் உரிமையாளராக இருந்த திவான் பகதூர் கோவிந்த்தாஸ் முகன்தாஸிடம் இருந்து ஒரு லட்சம் ரூபாய்க்கு நிலத்தை வாங்கியது.
 
பின்னர் இந்த பள்ளி தரம் உயர்த்தப்பட்டதுடன், அருகில் ஒரு பள்ளிவாசலும் கட்டப்பட்டது. பள்ளியின் அருகிலேயே கட்டப்பட்ட தங்கும் விடுதிக்கு உம்தா பாக் என்றே பெயரிடப்பட்டது. 1918இல் இங்கு ஒரு கல்லூரியும் தொடங்கப்பட்டது. 1934இல் இந்த கல்லூரிக்கென தனிக்கட்டடம் கட்டப்பட்டது. அப்போதைய மெட்ராஸ் ஆளுநர் லார்ட் எர்ஸ்கின் இதனைத் திறந்து வைத்தார். ஆரம்ப நாட்களில் இஸ்லாமிய மாணவர்கள் மட்டுமே இங்கு அனுமதிக்கப்பட்டனர். 1938ஆம் ஆண்டிற்கு பிறகு 25% இஸ்லாமியர் அல்லாத மாணவர்களும் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.
 
சுதந்திரத்திற்கு பிறகு 1948இல் இது அரசு கலைக் கல்லூரி எனப் பெயர் மாற்றப்பட்டு, அனைத்து சமூக மாணவர்களும் சேரலாம் என அறிவிக்கப்பட்டது. பின்னர் பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் 1974இல் தமிழக அரசு இதனை பெண்கள் கல்லூரியாக மாற்றி, காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரி எனப் பெயரிட்டது. ஆனால் கல்லூரி விடுதியின் பெயர் மட்டும் இன்றும் உம்தா பாக் என்றே இருக்கிறது.
last+carnatic+nawab.jpg
கடைசி கர்நாடக நவாப்
 
சரி, இப்போது சாலைக்கு எதிர்புறம் இருக்கும் அகர்சந்த் மேன்சனின் கதைக்கு வருவோம். பேகம் நிசா இந்த சொத்தை 1910இல் அகா முகமது கலீலி சிராஸி என்ற வணிகருக்கு விற்றுவிட்டார். ஈரானில் இருந்து வந்திருந்த இந்த பணக்கார வணிகர், பல வியாபாரங்களில் ஈடுபட்டு வந்தார். குறிப்பாக கட்டுமானத் துறையில் சிறந்து விளங்கினார். எனவே பேகத்திடம் வாங்கிய இடத்தில் மெட்ராசிற்கு சிறப்பு சேர்க்கும் வகையில் 1925இல் ஒரு வானளாவிய அழகிய கட்டடத்தை கட்டி வாடகைக்கு விட்டார். 100 அடி உயரத்தில் கம்பீரமாக நின்ற அந்த கட்டடம் கலீலி மேன்சன் என்று அழைக்கப்பட்டது.
 
கடைசி காலத்தில் கலீலி தனது இரண்டு மகன்களுக்கு சொத்துகளை பிரித்துக் கொடுக்கும்போது, மூத்த மகன் அப்பாஸ் கலீலிக்கு இந்த கட்டடம் கிடைத்தது. இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது அப்பாஸ் பாகிஸ்தான் செல்ல முடிவெடுத்ததால், இடம்பெயர்ந்தோர் சொத்து சட்டப்படி அரசு இந்த கட்டடத்தை ஏலம் விட்டது. அப்போது இதனை ஏலத்தில் எடுத்தவர்தான் அகர்சந்த் என்ற வியாபாரி. அப்படித்தான் கலீலி மேன்சன் அகர்சந்த் மேன்சனாக அவதாரம் எடுத்தது. இந்தோ - சராசனிக் பாணியில் இரண்டு தளங்களோடு நின்று கொண்டிருக்கும் இந்த கட்டடத்தில் இன்றும் பல வணிக நிறுவனங்கள் சுறுசுறுப்பாக இயங்கி வருகின்றன.
 
அந்திசாயும் நேரத்தில், அகர்சந்த் மேன்சனின் நீண்ட வராந்தாவில் நின்றபடி எதிரில் தெரியும் காயிதே மில்லத் கல்லூரியைப் பார்க்கும்போது, கர்நாடக நவாப் குடும்பத்தாரும், ஆங்கிலேய அதிகாரிகளும் அரூபமாய் அங்கே தொடர்ந்து நடமாடிக் கொண்டிருப்பதைப் போலவே தோன்றுகிறது.
 
நன்றி - தினத்தந்தி
 
* நிறைய இஸ்லாமிய பிரபலங்கள் உம்தா பாக்கில் தங்கிச் சென்றுள்ளனர். அலிகார் பல்கலைக்கழகத்தின் நிறுவனரான செய்யது அகமது கான், மெட்ராஸ் வந்தபோது இங்குதான் தங்கினார்.
* கண்ணியம் மிக்க காயிதே மில்லத்தின் மணிமண்டபம் மகளிர் கல்லூரிக்கு பின்புறம் அமைந்துள்ளது.

* 2012ஆம் ஆண்டு அகர்சந்த் மேன்சனின் முதல் தளத்தில் உள்ள புத்தக கடையில் தீ பிடித்தது. ஆனால் இதனால் கட்டடத்திற்கு எந்த சேதமும் ஏற்படவில்லை.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Saturday, June 1, 2013

மெட்ராஸ் போர்

 
தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டியது போல... என்ற பழமொழியை மெட்ராஸ் 1746இல் அனுபவரீதியாக உணர்ந்தது. எங்கோ ஐரோப்பாவில் பிரிட்டீஷாருக்கும், பிரெஞ்சுக்காரர்களுக்கும் இடையில் வெடித்த யுத்தத்தின் அதிர்வுகள் மெட்ராசில் உணரப்பட்டன.
 
1746ஆம் ஆண்டு ஐரோப்பாவின் முக்கிய நாடுகள் மோதிக் கொண்டன. வரலாற்றில் 'ஆஸ்ட்ரியன் சக்சஷன் போர்' (War of Austrian succession) என்று அழைக்கப்படும் இந்த யுத்தத்தில் பிரிட்டனுக்கு எதிராக ஃபிரான்ஸ் களமிறங்கியதுதான் மெட்ராஸ் போரைத் (Battle of Madras) தொடங்கி வைத்தது.
 
1720களில் இருந்தே பிரிட்டீஷாருக்கும், பிரெஞ்சுக்காரர்களுக்கும் இடையே வாய்க்கால் தகராறு இருந்தது. இந்நிலையில் ஆஸ்ட்ரியன் போரில் ஃபிரான்ஸ் களமிறங்கியதும், பிரிட்டீஷ் கப்பற்படை இந்தியாவில் இருந்த பிரெஞ்சு குடியிருப்புகளை அடித்து நொறுக்கத் தொடங்கியது. இதைப் பார்த்துக் கொண்டு பிரெஞ்சுக்காரர்கள் சும்மா இருப்பார்களா, அவர்களும் களத்தில் குதிக்க வங்கக்கடல் குஸ்திக்களமானது.
Prise_de_battle+of+Madras.jpg
மெட்ராசின் யுத்தகளக் காட்சி
 
இருநாட்டு கப்பற்படைகளும் கடலில் கட்டிப் புரண்டதில் இருபுறமும் சில பல சேதங்கள் ஏற்பட்டன. சண்டையில் கிழிந்த சட்டையை தைக்க பிரெஞ்சு படைகள் தங்கள் தளமான பாண்டிச்சேரியை அடைந்தனர். பிரிட்டீஷார் தங்கள் சேதத்தை சரி செய்ய இலங்கைப் பகுதிக்குச் சென்றனர். இதனால் சென்னை கரையோரப் பகுதி மொட்டை மாடி வத்தல் போல போதிய பாதுகாப்பின்றி இருந்தது.

இந்த தருணத்தை பயன்படுத்தி மெட்ராஸை பிடித்துவிட பிரெஞ்சு கவர்னர் ஜோசப் பிரான்கோயிஸ் டுப்லிக்ஸ் (Dupleix) விரும்பினார். இதற்கு அப்போதைய கர்நாடக நவாப் தடையாக இருக்கக் கூடாதென, பிரிட்டீஷாரை வென்று அவர்கள் கொட்டத்தை அடக்கியதும், மெட்ராசை நவாப்பிடம் ஒப்படைப்பதாக டுப்லிக்ஸ் உறுதியளித்தார்.
dupliex.jpg
பிரெஞ்சு கவர்னர் டுப்லிக்ஸ்
 
1746ஆம் ஆண்டு செப்டம்பர் 7ஆம் தேதி காலையில் பிரெஞ்சு கடற்படை மெட்ராஸ் கடற்பகுதியில் நின்று கொண்டிருந்ததுகோட்டையை நோக்கி தாக்குதல் ஆரம்பமானது. ஆனால் முதலில் பிரெஞ்சுகாரர்களின் தாக்குதல் இலக்கை சென்று அடையவில்லை. பிரிட்டீஷாரின் பதில் தாக்குதல் சும்மா பெயரளவுக்கு இருந்தாலும், பிரெஞ்சுக்காரர்கள் சரியாக குறி பார்த்து தாக்குவதற்குள் இரவாகி விட்டது. அடுத்தநாள் காலை, பிரெஞ்சுப் படை கரையிலும் இறங்கிவிட்டது. கடலில் இருந்தும், கரையில் இருந்தும் கோட்டையை சரமாரியாக தாக்கினார்கள். பிரிட்டீஷாரின் பதில் தாக்குதல் பெரிதாக எடுபடவில்லை. பிரெஞ்சுப் படை வென்றுவிட்டது.

பிரெஞ்சு கடற்படைக்கு தலைமையேற்ற லா பௌர்டான்னைஸ் (la bourdannais ) கொஞ்சம் பெருந்தன்மையோடு நடந்து கொண்டார். கோட்டையையும்பண்டக சாலையையும் மட்டும் எங்களுக்கு கொடுத்துவிட்டு மெட்ராசின் ஆளுமையை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்றார். இது தொடர்பாக ஒரு ஒப்பந்தத்தையும் போட்டுவிட்டார். ஆனால் டுப்லிக்ஸிற்கு இது பிடிக்கவில்லை. மெட்ராஸை முழுவதுமாக கட்டுக்குள் கொண்டு வர விரும்பினார். விதியும் அதைத் தான் விரும்பியது போல.
 
அக்டோபர் மாதம் வங்கக்கடலில் ஒரு புயல் வலுவடைந்ததால், கடற்படையைபாதுகாப்பதற்காக லா பௌர்டான்னைஸ் பாண்டிச்சேரி புறப்பட்டார்இப்போது டுப்லிக்ஸ் தனது வேலையைக் காட்டத் தொடங்கினார். ஒப்பந்தத்தை தூக்கி தூர வைத்துவிட்டு, பிரிட்டிஷ் படைகளையும், மெட்ராஸ் மக்களையும் தாக்கினார்பலரை சிறை வைத்தார் அவர்களில் அப்போது எழுத்தராக இருந்த ராபர்ட் கிளைவும் ஒருவர். ஆனால் கிளைவ் வேறு சிலரையும் சேர்த்துக் கொண்டு நைசாக சிறையில் இருந்து நழுவிவிட்டார். பின்னர் 3 நாட்கள் இரவில் மட்டும் பயணித்து, கடலூரில் உள்ள செயிண்ட் டேவிட் கோட்டைக்கு சென்று, மெட்ராசில் நடந்தவற்றை விளக்கினார். இந்த நிகழ்ச்சிதான் ராபர்ட் கிளைவ் என்ற இளைஞனின் வாழ்க்கையையே மாற்றியது.
 
இதனிடையே டுப்லிக்ஸ் கர்நாடக நவாப்பிற்கு அளித்த வாக்குறுதியைக் காப்பாற்றவில்லை. இதனால் கடுப்பான கர்நாடக நவாப் அன்வருதீன், 10 ஆயிரம் பேர் கொண்ட பெரும் படையை தனது மகன் மஃபூஸ் கான் தலைமையில் மெட்ராஸ் நோக்கி அனுப்பி வைத்தார். கர்நாடக இளவரசரை எதிர்த்து இரண்டு பீரங்கிகளும் 400 வீரர்களும் கொண்ட பிரெஞ்சுப் படை களமிறங்கியது. நவீன பீரங்கிகளின் முன் நவாப்பின் வீரர்களால் ஒருநாள் கூட தாக்குப் பிடிக்க முடியவில்லை.  
 
மெட்ராசில் அடி வாங்கிவிட்டு திரும்பிக் கொண்டிருந்த கர்நாடக இளவரசர், எதிரில் மற்றொரு சிறு பிரெஞ்சுப் படை பாண்டிச்சேரியில் இருந்து மெட்ராஸ் நோக்கி வருவதைக் கேள்விப்பட்டு அவர்களைத் தாக்கலாம் என்று சாந்தோமில் காத்திருந்தார். நவாப்பின் படை அடையாறு ஆற்றின் கரையோரத்தில் அணிவகுத்து நின்றிருந்தது. கோட்டை அருகே நடந்த போரில் பெரிய உயிர்ச்சேதம் இல்லை என்பதால் அந்த படையில் ஏறத்தாழ 10 ஆயிரம் பேர் அப்படியே இருந்தனர். ஆனால் எதிர்தரப்பில் 250 பிரெஞ்சு வீரர்களும், 700 இந்திய வீரர்களும் தான் இருந்தனர். சிறிய படையாக இருந்தாலும் நவீன ஆயுதங்கள் இருந்ததால் இதுவும் நவாப்பின் படையை அடித்து துவைத்து அடையாறு ஆற்றங்கரையில் காயப் போட்டது.
 
இந்த அடையாறு போர் வரலாற்றில் முக்கியமானதாக கருதப்படுகிறது. காரணம், இந்திய வீரர்களுக்கு முறையாக பயிற்சியளித்து நவீன ஆயுதங்களைக் கொடுத்து களமிறக்கிவிட்டால் பெரிய படையைக்கூட வெல்ல முடியும் என்பதை இந்த போர் நிரூபித்துக் காட்டியது. 3 நாட்களில் இரண்டு தோல்விகளோடு கர்நாடக நவாப்பின் படை ஆற்காட்டிற்கே திரும்பிச் சென்றுவிட்டது.
 
இப்படியே இரண்டு ஆண்டுகாலம் மெட்ராஸ் பிரெஞ்சுக்காரர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. பின்னர் இது எல்லாவற்றிற்கும் காரணமான War of Austrian Succession 1748இல் முடிவுக்கு வந்தது. இதனையொட்டி ஆக்ஸ்-லா-சாப்பல் (Treaty of Aix-la-Chapelle ) என்றொரு ஒப்பந்தம் போடப்பட்டது. இதன்படி, வடக்கு அமெரிக்காவில் உள்ள லூயிஸ்பர்க் என்ற இடத்தை பிரெஞ்க்காரர்களிடம் கொடுத்துவிட்டு, பிரிட்டீஷார் மெட்ராசை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்று முடிவானது. மீண்டும் மெட்ராஸ் பிரிட்டீஷ் வசம் வந்தது.
 
நன்றி - தினத்தந்தி
 
* 1758இல் பிரெஞ்சுப்படைகள் மீண்டும் ஒருமுறை மெட்ராஸை கைப்பற்ற முயன்றன. ஆனால் 3 மாதங்கள் கோட்டையை முற்றுகையிட்டுப் பார்த்தும் அவர்களின் முயற்சி பலன் அளிக்கவில்லை.
 

* மெட்ராஸ் போர்தான் செயிண்ட் ஜார்ஜ் கோட்டை எவ்வளவு பலவீனமாக இருக்கிறது என்பதை ஆங்கிலேயர்களுக்கு புரிய வைத்தது. பின்னர்தான் கோட்டையை பலப்படுத்தும் பணி மும்முரமாக நடைபெற்றது.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Wednesday, May 29, 2013

உட்லண்ட்ஸ் ஹோட்டல்

 
உழைப்பு ஒரு மனிதனை எந்தளவுக்கு உயர்த்தும் என்பதற்கு உதாரணம்தான் சென்னையில் இருக்கும் உட்லண்ட்ஸ் ஹோட்டல். அடுத்த வேளை சோற்றுக்கு வழியில்லாமல் இருந்த ஒரு மனிதரின் வியர்வுத் துளிகள் விஸ்வரூபம் எடுத்த கதை ரொம்பவே விறுவிறுப்பானது.
krishna+rao.jpg
கிருஷ்ணா ராவ்
 
கிருஷ்ணா ராவ்... கர்நாடகாவின் உடுப்பி பகுதியைச் சேர்ந்த கடந்தலெ என்ற சிறிய கிராமத்தில் ஏழை அர்ச்சகர் வீட்டில் பிறந்ததால், பசி இவருக்கு இளமையிலேயே அறிமுகம் ஆகிவிட்டது. 1898இல் பிறந்த கிருஷ்ணா ராவ் சிறு வயதிலேயே உடுப்பி பகுதியில் ஒரு மடத்தில் வேலைக்கு சேர்ந்தார். இது அதிக காலம் நீடிக்கவில்லை. பின்னர் ஒரு கிராமப்புற உணவகத்தில் உதவியாளர் பணி. தண்ணீர் இறைப்பது, பாத்திரம் கழுவுவது, இட்லிக்கு மாவாட்டுவது... இவை தான் வேலை. இதற்கு மாசம் ரூ.3 சம்பளம்.
 
இந்த சமயத்தில்தான் சென்னையில் இருந்த இவரது அக்கா வீட்டுக்காரர், கிருஷ்ணா ராவின் பட்டணப் பிரவேசத்திற்கு அழைப்பு விடுத்தார். ஊர் தெரியாது, மொழி தெரியாது. இருந்தாலும் முன்னேற வேண்டும் என்ற உத்வேத்தில் 1920களில் சென்னைப் பட்டணத்தில் வந்திறங்கினார் கிருஷ்ணா ராவ். ஐந்து ரூபாய் சம்பளத்துக்கு ஒரு வீட்டில் சமையல்காரராகச் சேர்ந்தார். பிறகுதம்பு செட்டித் தெருவில் உள்ள உணவகத்தில் எட்டு ரூபாய் சம்பளத்திற்கு வேலை கிடைத்தது.
 
சில மாதங்கள் கழித்து அருகில் உள்ள போஸ்ட் ஆபிஸ் தெருவில் வெங்கடராமய்யர் என்பவரின் ஹோட்டலில் இருபது ரூபாய் சம்பளத்தில் வேலை. அது வேலை மட்டுமல்ல, ஒரு புதிய விடியலுக்கான வாசல் என்பது கிருஷ்ணா ராவிற்கு அப்போது தெரியாது. இருந்தாலும் அவர் எப்போதும் போல் பம்பரமாக சுற்றிச் சுழன்றார். அவரது சுறுசுறுப்பும், கடமை உணர்ச்சியும் வெங்கடராமய்யரைக் கவர்ந்தன.
 
வெங்கடராமய்யருக்கு ஜார்ஜ் டவுனின் ஆசாரப்பன் தெருவில் இன்னொரு சிறிய ஹோட்டல் இருந்தது. இதை சரியாக பார்த்துக் கொள்ள ஆள் இல்லாததால் அங்கு வியாபாரம் சற்று டல்லடித்தது. எனவே இந்த ஹோட்டலை ரூ.700க்கு கிருஷ்ணா ராவிற்கு விற்க வெங்கடராமய்யர் முன்வந்தார். அதையும் ரூ.50 என்ற மாதத் தவணையில் செலுத்தினால் போதும் என்றார். மாதம் ரூ.20 சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த கிருஷ்ணா ராவ், மாதம் ரூ.50 தவணை செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் முதலாளி ஆனார்.
 
அந்த சிறிய ஹோட்டலில் முதலாளிசர்வர்சரக்கு மாஸ்டர் எல்லாம் கிருஷ்ணா தான். அவரது அயராத உழைப்பிற்கு பலன் கிடைத்தது. வியாபாரம் மெல்ல சூடு பிடிக்க ஆரம்பித்தது. அடுத்ததாக மக்கள் நடமாட்டம் அதிகம் இருந்த மவுண்ட் ரோடுக்கு மாறுவது என கிருஷ்ணா முடிவெடுத்தார். 1926-ல் ஒருவரோடு கூட்டு சேர்ந்து சென்னை மவுண்ட் ரோடில் உடுப்பி ஹோட்டல் ஒன்றைத் தொடங்கினார். சென்னையின் முதல் நவீன சைவ உணவகமான உடுப்பி ஸ்ரீ கிருஷ்ண விலாஸ் உதயமானது. மாதம் நூற்று அறுபது ரூபாய் வாடகை. அதிலும் நல்ல வியாபாரம்.
 
பிறகு 1933இல் கூட்டாளிகள் பிரிந்தபோது, கிருஷ்ணா ராவ் உடுப்பி ஹோட்டலையும், கூட்டாளிகள் ஸ்ரீ கிருஷ்ண விலாஸையும் வைத்துக் கொண்டனர். ஏழு வருடங்கள் கழித்து உடுப்பி ஸ்ரீ கிருஷ்ண விலாஸ் அவருக்கே மீண்டும் கிடைத்தது. இதனிடையே அடுத்த கட்டத்திற்கு நகர நினைத்த கிருஷ்ணா, பயணிகள் விடுதி ஒன்றைத் தொடங்குவது என முடிவு செய்தார்.
 
அந்த சமயத்தில் ராயப்பேட்டையில் ராமநாதபுரம் ராஜா ஷண்முக ராஜேஸ்வர நாகநாத சேதுபதிக்கு சொந்தமான பங்களா ஒன்றை முனிவெங்கடப்பா என்பவர் வாங்கி இருந்தார். அதை ஹோட்டலாக மாற்ற நினைத்த வெங்கடப்பா, அந்த கட்டடத்தை ஐந்நூறு ரூபாய் வாடகையில் கிருஷ்ணா ராவிற்கு 10 ஆண்டு குத்தகைக்கு கொடுத்தார். 1938-ல்இப்படி தொடங்கப்பட்டதுதான் ராயப்பேட்டை உட்லண்ட்ஸ் ஹோட்டல். மரங்கள் சூழ்ந்த கட்டடம் என்பதால்  'உட்லண்ட்ஸ்’ என்று பெயர் வைத்துவிட்டார்.
 
45 அறைகள் கொண்ட ராமநாதபுரம் ராஜாவின் அரண்மனை பயணியர் விடுதியாக மாறியது. இரட்டைக் கட்டில் போடப்பட்ட அறைக்கு ஒரு நாள் வாடகையாக ரூ.5 வசூலிக்கப்பட்டது. மக்கள் மத்தியில் இதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. இந்நிலையில் 10 ஆண்டுகள் முடிந்ததும் வெங்கடப்பா குத்தகையை புதுப்பிக்க மறுத்துவிட்டார். எனவே நகரின் வேறு பகுதியில் இடம் தேடினார் கிருஷ்ணா ராவ். அப்போது மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் இருந்த ஏ.எம்.எம். முருகப்பா குடும்பத்தின் 4 ஏக்கர் மாளிகை விலைக்கு வந்தது. இதை அந்த காலத்திலேயே ரூ.2.5 லட்சம் கொடுத்து வாங்கினார் கிருஷ்ணா ராவ்.
woodlands+drive+in.jpg
 
ஒரு கல்யாண மண்டபம், அதை அடுத்து ஒரு கோவில், கூட்டங்கள் நடத்த தனி அரங்கு, குடும்பங்கள் தங்குவதற்காக சிறிய காட்டேஜ்கள் என இந்த மாளிகையை தனது எண்ணங்களுக்கு ஏற்ப மாற்றினார். ரம்மியமான சூழல், சுத்தமான உணவு, தரமான சேவை போன்ற காரணங்களால் நியூ உட்லண்ட்ஸ் ஹோட்டலை மெட்ராஸ்வாசிகள் இருகரம் நீட்டி ஏற்றுக் கொண்டனர்.
 
இதனிடையே மற்ற நாடுகளில் ஹோட்டல்கள் எப்படி இயங்குகின்றன எனத் தெரிந்துகொள்வதற்காக லண்டன்ஜெர்மனிபாரிஸ்ரோம்நியூயார்க் என ஒரு சுற்றுசுற்றிவிட்டு வந்தார் கிருஷ்ணா. அந்த உலகப் பயணத்தின் பலன்தான்1962இல் சென்னை வேளாண் விவசாய வாரியத்தின் தோட்டத்தில் விளைந்த சென்னையின் முதல் டிரைவ் இன் ஹோட்டல். பின்னர் நியூயார்க், சிங்கப்பூர் என உலகின் பல இடங்களில் உட்லண்ட்ஸ் ஹோட்டல்கள் திறக்கப்பட்டன.
 
இதுதான் கர்நாடக கிராமம் ஒன்றில் கல்லில் மாவாட்டிக் கொண்டிருந்த ஒரு இளைஞனின் கனவுகள், அயராத உழைப்பினால் உயிர்ப்பெற்ற கதை.
 
- பார்த்திபன்
 
* 1947இல் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, ராஜாஜி ராயப்பேட்டை உட்லண்ட்ஸ் ஹோட்டலில் தேநீர் விருந்து கொடுத்திருக்கிறார்.
 

* டிசம்பர் கச்சேரிகளில் காண்டீன்கள் முக்கிய பங்கு வகிக்கும் போக்கை தொடங்கி வைத்ததில் கிருஷ்ணா ராவிற்கு பெரும் பங்கு இருக்கிறது


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

கூவம்... நதிமூலம்....

 




அக்மார்க் சென்னைவாசியான நான் சிறுவயதில் இருந்து கூவம் ஆற்றைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். எவ்வளவு தான் அழுக்கோடும்,துர்நாற்றத்தோடும்ஓடிக்கொண்டிருந்தாலும் அல்லது தேங்கி நின்றுகொண்டிருந்தாலும் அதன் மீது எனக்கு எப்போதுமே ஓர் பிரமிப்பு உண்டு. சென்னையில் பெரும்பாலும் எங்குசென்றாலும் திடீரென குறுக்கிட்டு ஹாய் சொல்லும் இந்த பிரம்மாண்ட ஆறு? (சாக்கடை!) எங்கிருந்து வருகிறது என பல சமயங்களில் யோசித்ததுண்டு. ஆனால் இதற்காக ஒருநாள் நீண்ட பயணம் மேற்கொள்ள வேண்டி வரும் என்று அப்போது நிச்சயமாக கற்பனை கூட செய்ததில்லை.

சென்னையின் வரலாற்றை கூவத்தை தவிர்த்துவிட்டு எழுத முடியாது என்பதுபுரிந்தவுடன்கூவம் தொடங்கும் இடத்தை நேரில் சென்று பார்த்துவிடுவது என்று முடிவெடுத்தேன். ஒரு சனிக்கிழமை காலை நண்பர் ஒருவரை அழைத்துக்கொண்டு எனது மோட்டார் சைக்கிளில் கூவத்தின் ஊற்றுக்கண்ணைத் தேடிப்புறப்பட்டேன். அதற்கு முன்னர் அது பற்றி சில தகவல்களை சேகரித்தேன். கூவம்ஆறு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கூவம் என்ற கிராமத்தில் தனது பயணத்தை தொடங்குகிறது. இந்த கிராமத்தில் பழமையான சிவன் கோவில் ஒன்று உள்ளது. இங்குள்ள சிவனுக்கு பல நூற்றாண்டுகளாக கூவம் ஆற்றில் இருந்து கொண்டு வரப்படும் நீரில் தான் அபிஷேகம் செய்யப்படுகிறது. அந்த அளவுக்கு கூவம் ஆறுஇவ்விடத்தில் தூய்மையாக இருக்கும். இவைதான் நான் சேகரித்த தகவல்கள்.

கூவம் கிராமத்திற்கு எப்படி செல்வது என நண்பர்கள் சிலரிடம் விசாரித்தேன். திருவள்ளூரில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் செல்லும் வழியில் டெல்ஃபை டிவிஎஸ் நிறுவனம் தாண்டியதும் வரும் சந்திப்பில் வலதுபுறம் திரும்பி சில கிலோமீட்டர்கள் பயணித்தால் மப்பேடு என்ற இடம் வரும்அங்கிருந்து சுமார் கி.மீ சென்றால் கூவம் கிராமம் வந்துவிடும் என்றார்கள். அதேவழியைப் பின்பற்றி மப்பேடு பகுதியை நெருங்கும்போதே சாலையோரத்தில் ஒரு புராதன கோவில் கண்களில்பட்டது. கூவம் கோவில் இவ்வளவு சீக்கிரம் வந்துவிட்டதா என்ற சந்தேகத்துடன் அந்த கோவிலுக்குள் சென்றோம். ஆனால் அது மப்பேட்டில் உள்ள சிங்கீஸ்வரர் ஆலயம் என்றார் கோவில் சிவாச்சாரியார். ராஜராஜ சோழனின் தமையன் ஆதித்த கரிகாலன் கிபி 967இல் கட்டிய கோவில். பொன்னியின் செல்வனில் மர்மமான முறையில் கொலை செய்யப்படுவாரே அதே ஆதித்த கரிகாலன்தான். கோவிலை சுற்றிப் பார்த்துவிட்டு கூவம் நோக்கி வண்டியை விரட்டினோம்.

கூவம் எல்லையில் நெடுஞ்சாலையில் இருந்து ஒரு கிளைச் சாலை பிரிந்துஊருக்குள் செல்கிறது. வழி நெடுகிலும் பசுமையான வயல்கள் எங்களைதலைசாய்த்து வரவேற்றன. ஒருவழியாக கூவம் திருபுராந்தக சுவாமி கோவிலை மதியம் 12 மணியளவில் சென்றடைந்தோம். கோவில் சிவாச்சாரியார் இப்போதுதான் நடையை சார்த்திவிட்டு கிளம்பினார் என்றார்கள். இந்த கோவிலில் உள்ள திருபுராந்தகசுவாமியை அர்ச்சகர்கள் கூட தொட்டு பூஜை செய்வது கிடையாது. எனவே அவர் தீண்டாத் திருமேனி ஆண்டவர் என்று வழங்கப்படுகிறார் என்றும்இந்த லிங்கம் காலநிலைக்கு ஏற்ப நிறம் மாறும் தன்மையுடையது என்றும் கேள்விப்பட்டிருந்தேன். எனவே திருபுராந்தகரை பார்க்க வேண்டும் என ஆவலுடன் சென்றிருந்தேன்.தீண்டாத் திருமேனி ஆண்டவரை காணும் வாய்ப்பு கிடைக்காவிட்டாலும்,கோவிலை சுற்றிப் பார்க்கலாம் என்றது சற்று ஆறுதலாக இருந்தது.

சுற்றி வரும் போது கண்ணில்பட்ட கிணறும்அபிஷேக நீர் குடிக்காதீர்கள்என்ற அறிவிப்பும் லேசாக உறுத்தியது. சுவாமிக்கு கூவம் ஆற்றில் இருந்துவரும் நீரில்தான் அபிஷேகம் நடைபெறுவதாக கேள்விப்பட்டேனே என்று உள்ளூர்வாசி ஒருவரிடம் என் சந்தேகத்தை வெளிப்படுத்தினேன்.'அதெல்லாம் ஒருகாலத்தில அப்படி இருந்ததுங்கஇப்ப ஆத்துல தண்ணியே கெடையாது. அப்படி இருந்தாலும் கிலோ மீட்டர் போய் தண்ணி எடுத்துவர ஆள் இல்லை. அதான் கோவில் கிணத்து தண்ணியையே பயன்படுத்துறோம்'என்றார். விசேஷ காலங்களில் மட்டும் ஆற்றில் மணலைத் தோண்டி ஊற்றெடுக்கும் தண்ணீரை எடுத்து வருவோம் என்றார். சோழர்களால்கட்டப்பட்ட இந்த கோவில் எந்த ஆண்டு கட்டப்பட்டது என்பது குறித்து எந்தகுறிப்பும் இல்லை. இது திருஞானசம்பந்தரால் பாடல்பெற்ற ஸ்தலம்.

கோவிலுக்கு அருகில் ஒரு சிறிய அழகிய குளம் இருக்கிறது. இந்த குளத்தில்தவளைகள் இருக்காது என்பது இதன் சிறப்பம்சம் என்றார்கள். நானும் சிறிதுநேரம் தவளைகளை தேடிப் பார்த்தேன். ஆனால் ஒன்று கூட கண்ணில்படவில்லை. தவளைகளை கணக்கெடுப்பதை விட்டுவிட்டு வந்த வேலையைப் பார்ப்போம் என்று கூவம் ஆற்றைப் பார்க்கப் புறப்பட்டோம். வழியில் ஒருவரிடம் கூவம் ஆறு எங்கு புறப்படுகிறதுஅதன் தோற்றத்தை பார்க்க எங்கு செல்ல வேண்டும் என்று கேட்டோம்.

கூவம் ஏரியில் இருந்து தான் கூவம் ஆறு புறப்படுகிறது. ஆனால் பலஆண்டுகளாக ஏரியில் தண்ணீர் கிடையாது. நரசிங்கபுரம் என்ற ஊருக்கு போனால் அந்த ஏரியைப் பார்க்கலாம் என்றார். உடனே அங்கிருந்து சுமார் 2கிலோமீட்டர் தொலைவில் உள்ள நரசிங்கபுரம் கிராமத்திற்கு போனோம். அங்கிருந்த சிலரிடம் கூவம் ஆறு இங்கிருந்துதான் தொடங்குகிறதா என்று கேட்டால் அதெல்லாம் தெரியாதுஇங்க ஒரு ஏரி இருக்கு அவ்வளவுதான் என்று கூறிவிட்டு வேலையைப் பார்க்கப் போய்விட்டார்கள். நாங்கள் ஏரியைப் பார்க்கப் போனோம். மிகப் பரந்த ஒரு பொட்டல்வெளி எங்களை வரவேற்றது. கூவம் ஏரிக்குள் தமிழ்நாடு மின்சார வாரியம் வரிசையாக கம்பங்களை நட்டுவைத்திருக்கிறது. ஆடுமாடுகள் மேய்கின்றன. எப்போதோ நிறைந்து கிடந்த பழைய நினைவுகளை அசைபோட்டபடி கூவம் ஏரி அமைதியாக எங்களைப் பார்த்து லேசாகப் புன்னகைத்தது. அதில் இருந்தவேதனை உள்ளுக்குள் என்னவோ செய்தது. நான் தேடி வந்த தூய்மையான கூவத்தின் பிறப்பிடம் இதுதான் என்று மனது நம்ப மறுத்தது.

கனத்த மனதுடன் வெளியில் வந்தபோது எதிர்ப்பட்ட சிலரிடம் கூவம் ஆறுஎங்கிருந்து தொடங்குகிறது என்று மீண்டும் அதே கேள்வியைக் கேட்டேன். ஆனால் இம்முறை வேறு ஒரு புதிய பதில் வந்தது. இங்கிருந்து சுமார் 8கிலோமீட்டர் தொலைவு போனால் கேசவரம் அணைக்கட்டு வரும்,அங்குதான் கொற்றலை எனப்படும் குசஸ்தலை ஆறும்கூவம் ஆறும் பிரிகிறது. அதுதான் கூவத்தின் பிறப்பிடம் என்றார்கள். கூவத்தின் ஊடாகவே பயணிக்க வேண்டுமென்றால் இங்கிருந்து மாரிமங்கலம் போய்,அனக்கட்டாபுத்தூர் வழியாக உறியூர் என்ற ஊருக்கு போங்கள். அங்குதான் அந்த அணை இருக்கிறது என்றார் ஒரு பெரியவர்.

மனந்தளராத விக்கிரமாதித்தனைப் போல கூவத்தின் பிறப்பிடத்தை பார்க்காமல் ஊர் திரும்புவதில்லை என்ற உறுதியுடன் பயணத்தை தொடர்ந்தோம். வறண்டு பாலைவனமாகக் கிடக்கும் கூவம் ஆற்றின் கூடவே பயணித்தோம். ஆங்காங்கே ஆழ்துளைகளைப் போட்டு தண்ணீரை உறிஞ்சிக் கொண்டிருக்கிறார்கள். அப்படியே பயணித்து மாரிமங்கலத்திற்குள் நுழையும்போது காஞ்சிபுரம் மாவட்டத்திற்குள் வந்துவிட்டதாக பெயர்ப் பலகைகள் அறிவித்தன. அடுத்து உறியூரைக் குறிவைத்து முன்னேறினோம். ஒரு இடத்தில் ஆற்றில் இறங்கி ஏறியதும் உறியூர் வந்துவிட்டது. அது வேலூர் மாவட்டம் என்றது அங்கிருந்த பெயர்ப் பலகை. மரத்தடியில் அமர்ந்திருந்த சிலரிடம் கூவம் இங்கிருந்துதான் புறப்படுகிறதா என்று கேட்டோம். 'ஐயையோஅது கூவம் கிராமத்தில இருந்துல்ல வருதுஎன்றுஎங்களை பரிதாபமாகப் பார்த்தார்கள். 'சரிங்ககேசவரம் அணை எங்கிருக்கு?'என்று கேட்டோம். இன்னும் கிலோமீட்டர் போங்க என்றார்கள். உறியூரில்இருந்தும் கிலோ மீட்டராவெயில் மண்டையைப் பிளந்ததுநாக்கு தள்ளியது. இருப்பினும் தொடர்ந்து முன்னேறினோம்.

கடைசியில் ஒருவழியாக கேசவரம் அணைக்கட்டை அடைந்துவிட்டோம். ஆனால் இங்கும் ஒரு சொட்டு நீரைக் கூடப் பார்க்க முடியவில்லை. மழைக்காலங்களில் குசஸ்தலை ஆற்றில் இருந்து வரும் தண்ணீர் இங்கு இரண்டாகப் பிரித்துவிடப்படுகிறது. ஒன்று புழல் நீர்த்தேக்கத்திற்கும்,மற்றொன்று பூண்டி நீர்த்தேக்கத்திற்கும் செல்கிறது. இதில் பூண்டிக்கு செல்லும் ஆறுகூவம் கிராமத்திற்கு அருகில் வரும்போது கூவம் ஏரியில் இருந்து திறந்துவிடப்படும் உபரி நீருடன் சேர்ந்து கூவம் ஆறாக உருவாகி சென்னையை நோக்கி நகர்கிறது. கூவம் ஆறு என்பது கூவம் கிராமத்தில் தொடங்குகிறது என்றாலும்அதற்கான பிள்ளையார் சுழி கேசவரம் அணைக்கட்டில் போடப்படுகிறது என்பதுதான் அரசு ஆவணங்களிலும் கூறப்பட்டுள்ள தகவல். மொத்தத்தில்கூவத்தின் தொடக்கமாக கூறப்படும் இரண்டு இடங்களையும் பார்த்துவிட்டோம்.

திரும்பும் வழியில் தாகத்தை தணிக்க தண்ணீர் பாக்கெட் வாங்கிக் குடித்தபோதுபல நூற்றாண்டுகளாக ஓடிக் கொண்டிருந்த ஒரு ஆற்றைத் தேடி வந்து தண்ணீரையே பார்க்காமல் திரும்பும் அவலம் முகத்தில் அறைந்தது.

 

நன்றி: புதிய தலைமுறை



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Saturday, May 25, 2013

சென்னைப் பல்கலைக்கழகம்

 

மெட்ராசில் உயர்கல்வி பற்றி 19ஆம் நூற்றாண்டில் அதிகளவில் விவாதிக்கப்பட்டது. அதன் விளைவாகப் பிறந்ததுதான், 150 ஆண்டுகளைக் கடந்து இன்றும் கம்பீரமாக நின்று கொண்டிருக்கும் சென்னைப் பல்கலைக்கழகம்.
 
ஆங்கிலேயர்கள், மெட்ராஸ், பம்பாய், கல்கத்தா என இந்தியாவின் மூன்று துறைமுக நகரங்களில் கோலோச்சிக் கொண்டிருந்தனர். அதனால் இந்த மூன்று நகரங்களிலும் அவர்களின் எண்ணிக்கை அதிகளவில் இருந்தது. இந்நகரங்களில் குடும்பத்துடன் வசித்து வந்த அவர்கள், தங்களின் பிள்ளைகளுக்கு உயர்கல்வி கிடைக்க வகை செய்ய வேண்டும் என எண்ணினர். இதுபற்றிய விவாதங்களும் அடிக்கடி நடைபெற்றன. இதன் தொடர்ச்சியாக, 1854ம் ஆண்டு சார்லஸ் உட் என்பவர் கல்வி தொடர்பாக அரசுக்கு ஒரு குறிப்பு எழுதினார். அதன் பயனாக, 1855ம் ஆண்டு மதராஸ் அரசு ஒரு தனியார் கல்வித்துறையை உருவாக்கியது.
MadrasUniversityPrizeWinners1865.jpg
பட்டம் வென்ற மாணவர்கள்
 
அப்போது இந்தியாவில் இருந்த கல்விச்சூழல் கிழக்கிந்திய கம்பெனியை மையமாகக் கொண்டே அமைந்திருந்தது. திறமையான கிளார்க்குகளை உருவாக்க ஆங்கிலேயர்களுக்கு ஒரு கல்விமுறை தேவைப்பட்டது. இந்தியர்கள் தாங்கள் சொல்வதை புரிந்துகொண்டு பணியாற்ற வேண்டும் என்பது மட்டுமே இந்த கல்வியின் நோக்கமாக இருந்தது. அதற்கேற்ப பாடத்திட்டங்களை உருவாக்கி, அதற்கு உயர்கல்வி என்று பெயரிட்டார்கள்.
 
அதற்கு முன்பு வரைஇந்தியாவில் வீட்டிலேயே கற்றுக் கொள்ளும் திண்ணைக்கல்விகுருகுலத்திற்கு சென்று குருவிற்கு பணிவிடை செய்து கற்றுக் கொள்ளும் குருகுலக்கல்விஇதையும் விட்டால் சான்றிதழ் கல்வி ஆகியவைதான் நடைமுறையில் இருந்தன. கிழக்கிந்தியக் கம்பெனி நுழைந்தவுடன் தங்களுக்கான வேலையாட்களை தயார் செய்ய உயர்கல்வி(!) முறையை அறிமுகம் செய்தனர்.
 
இந்த கல்விக்கான பாடத்திட்டங்களை மெக்காலே என்பவர் தயாரித்தார். இவர் அளித்த குறிப்புகளின் அடிப்படையில்தான் கிழக்கிந்தியக் கம்பெனி பள்ளிகளில் பாடங்கள் நடத்த உத்தரவிட்டது. அதன்படி ஐரோப்பிய இலக்கியம்அடிப்படை அறிவியல் போன்ற பாடங்கள் கற்பிக்கப்பட்டன. குறிப்பாக இந்த பள்ளிகளில் ஆங்கிலத்தை கற்றுக் கொண்டதால்தான், இந்தியர்களால் அன்றைக்கு ஆங்கில அரசில் வேலை செய்ய முடிந்தது. நீதிமன்றங்களில் ஆங்கிலத்தில்தான் வாதாட வேண்டும் என்ற சட்டமும் அந்த காலகட்டத்தில்தான் (1837 ஆம் ஆண்டு) கொண்டு வரப்பட்டது.
 
இந்த ஆங்கிலக் கல்வி கூடங்களில் படித்த இந்தியர்களின் எண்ணிக்கை மெல்ல உயரத் தொடங்கியது. இந்தியர்கள் ஆங்கிலத்தை சிறப்பாக படிப்பதைப் பார்த்து வியந்து போன கிழக்கிந்தியக் கம்பெனி, அவர்களுக்கு உயர்பதவிகளை வழங்க முன்வந்தது. இதற்கான ஆணையை 1849ஆம் ஆண்டில் ஹார்டிங் பிரபு பிறப்பித்தார். இந்தியர்களில் சிலர் இப்படி உயர் பதவி பெற்று வளமாக வாழ்வதைக் கண்ட மற்றவர்களுக்கும் தாங்களும் அதுபோல் ஆக வேண்டும் என்ற ஆசை பிறந்தது. ஆங்கில கல்வி உயர்ந்தது என்ற மனநிலை வேகமாகப் பரவ ஆரம்பித்தது.
senate_house.jpg
செனட் இல்லம்
 
இப்படிப்பட்ட ஒரு சூழலில்தான், 1854ஆம் ஆண்டு ஜுலை 19ஆம் தேதி, அப்போதைய இந்திய கல்வி கட்டுப்பாட்டு வாரிய தலைவராக இருந்த சார்லஸ் உட், அந்த கல்விக் குறிப்பை எழுதினார். அதற்கு முன்னரே, மெட்ராஸ் மாகாணத்தில் ஒரு உயர்கல்வி நிறுவனம் தேவை என வலியுறுத்தி 70 ஆயிரம் பேர் கையெழுத்திட்ட ஒரு மனு, அப்போதைய ஆளுநர் லார்ட் எல்பின்ஸ்டோனிடம் 1839இல் ஒப்படைக்கப்பட்டது.இதனையடுத்து அப்போதைய அட்வகேட் ஜெனரல் ஜார்ஜ் நார்டனை தலைவராகக் கொண்டு, 1840ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பல்கலைக்கழக போர்டு ஒன்று அமைக்கப்பட்டது.
 
இதனிடையே 1857ஆம் ஆண்டில் மெட்ராஸ்கல்கத்தாபாம்பே ஆகிய பல்கலைக்கழகங்கள் தோற்றுவிக்கப்பட்டன. அந்நாட்களில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் உயர்கல்வி தென்னிந்தியா முழுவதும் பரவியிருந்தது. சென்னைப் பல்கலைக்கழகத்தில் படிப்பது மிகுந்த கவுரமான விஷயமாக பார்க்கப்பட்டது. 1858ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத்தின் முதல் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 1956ஆம் ஆண்டு சென்னை தனி மாநிலமாக உருவாகும் வரை தென்னிந்தியா முழுவதிலும் சென்னைப் பல்கலைக்கழகத்தின் உயர்கல்வி அதிகாரம் பரவியிருந்தது.
 
பின்னாட்களில் பல்கலைக்கழகம் பல்கிப் பெருகியதும், இதிலிருந்து மைசூர் பல்கலை(1916), உசுமானியா பல்கலை(1918), ஆந்திர பல்கலை(1926),அண்ணாமலை பல்கலை(1929) என பல பல்கலைக்கழகங்கள்சேய் பல்கலைக்கழகங்களாக உருவெடுத்தன.
 
பல்கலைக்கழகத்தில் இருக்கும் பாரம்பரியமிக்க செனட் இல்லம் (Senate House ) எனப்படும் ஆட்சிப் பேரவை மன்றக் கட்டடம் இந்தியாவின் சிறந்த இந்தோ-சராசனிக் பாணி கட்டடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. மெட்ராஸ் அரசாங்கம் இந்த கட்டடத்தை கட்டுவதற்கு முன், இதனை சிறப்பாக வடிவமைக்க விரும்பி 1864இல் பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்திருக்கிறது. நிறைய பேர் தங்களின் கட்டட வரைபடங்களை அனுப்பி வைக்க, இறுதியில் இந்தோ-சராசனிக் பாணியில் கைதேர்ந்த ராபர்ட் சிஸ்ஹோம் (அருகில் உள்ள மாநிலக் கல்லூரியும் இவர் கட்டியதுதான்) என்ற பொறியாளரின் வரைபடம் தான் தேர்வு செய்யப்பட்டது.
 
இந்த கட்டடத்திற்கான பணிகள் 1874ஆம் ஆண்டு தொடங்கி 1879ஆம் ஆண்டு நிறைவுபெற்றது. காலத்தின் கோலத்தால் சிதிலமடைந்துபோன செனட் இல்லம் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் பயன்படுத்தப்படாமல் இருந்தது. பின்னர் புதுப்பிக்கப்பட்டு தற்போது புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது. பட்டமளிப்பு விழாக்கள்சர்வதேச மாநாடுகள்இரண்டாம் எலிசபெத் ராணிக்கு வரவேற்புமிகச்சிறந்த இசைக் கச்சேரிகள் என பல நிகழ்ச்சிகளை இந்த கட்டடம் பார்த்திருக்கிறது.
 
இந்தியாவின் கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு சென்னைப் பல்கலைக்கழகம் அரும்பெரும் தொண்டாற்றி வருகிறது. அரசியல் மேதைகள்திரைக் கலைஞர்கள், தொழிலதிபர்கள்துணைவேந்தர்கள்,தமிழறிஞர்கள்பேராசிரியர்கள் என பலதரப்பட்ட பெருமக்களை இந்த பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ளது.
 
சென்னைப் பல்கலைக்கழகம் இதுவரை ஏறத்தாழ மூன்று கோடிக்கும் அதிகமான மாணவமாணவியரை உலகிற்கு அளித்திருக்கிறது. மொத்தத்தில், எதிர்புறம் உள்ள வங்கக் கடலுக்கு போட்டியாக இந்த கல்விக் கடலும் 150 ஆண்டுகளைக் கடந்தும் இன்றும் இளமை மாறாமல் இயங்கிக் கொண்டே இருக்கிறது.
 
நன்றி - தினத்தந்தி
 
* 1937ஆம் ஆண்டு மெட்ராஸ் மாகாண சட்டப்பேரவைக் கூட்டம் செனட் இல்லத்தில்தான் நடைபெற்றது.
 
1957ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. அச்சமயம் சென்னைப் பல்கலைக்கழகத்துடன் 128கல்லூரிகள் இணைக்கப்பட்டிருந்தன.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 Saturday, May 18, 2013

மன்னர் ஐந்தாம் ஜார்ஜ்

 

சென்னை பூக்கடை திருப்பத்தில், தலையில் கிரீடத்தோடும், கையில் செங்கோலோடும் ஆளுயர நின்று கொண்டிருக்கும் மன்னர் ஐந்தாம் ஜார்ஜின் சிலையைப் பார்க்கும்போதெல்லாம் இந்தியா அடிமைப்பட்டுக் கிடந்ததை நினைவுபடுத்தும் இந்த சிலையை ஏன் இன்னும் விட்டு வைத்திருக்கிறார்கள் என்று தோன்றும். இதுகுறித்து ஆராய்ந்தபோது நிறைய சுவாரஸ்யமான விஷயங்கள் கிடைத்தன.
King+George+statue.jpg
பூக்கடை பகுதியில் சிலையாக..
 
கிழக்கிந்திய கம்பெனியிடம் இருந்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி, அடிமை இந்தியாவின் முதல் பேரரசியான இங்கிலாந்து ராணியின் பேரன்தான் ஐந்தாம் ஜார்ஜ். இவரது தந்தையான ஏழாம் எட்வர்ட் 1910இல் பரலோகம் போய்ச் சேர்ந்ததும், இங்கிலாந்தின் மன்னரானார் ஜந்தாம் ஜார்ஜ். அப்போது இந்தியாவும் இங்கிலாந்தின் கட்டுப்பாட்டில் இருந்ததால், தனது பதவி ஏற்பு விழாவை இந்தியாவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஜார்ஜ் விரும்பினார். காரணம், அவருக்கு இந்தியாவின் மீது எப்போதுமே ஒரு ஈர்ப்பு இருந்தது.
 
ஜார்ஜ், இளவரசனாக இருந்தபோதே இந்தியாவிற்கு வந்திருக்கிறார்.இளவரசர் ஜார்ஜ் 1909ஆம் ஆண்டில் மெட்ராஸ் வந்தபோது, அவரது வருகையை கொண்டாடும் விதமாக ஒரு பிரம்மாண்ட கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் ஒலியுடன் கூடிய குறும்படங்கள் திரையிடப்பட்டன. இதற்காக 'க்ரோன்-மெகாபோன்என்ற கருவி பயன்படுத்தப்பட்டது. இது கிராமபோன் பொருத்தப்பட்ட படப் புரொஜக்டர். திரையில் படம் ஓடும்போதுஅதற்கேற்ப ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட ஒலி கிராமபோனில் ஒலிக்கும். இப்படித்தான் மெட்ராஸ்வாசிகளுக்கு ஜார்ஜின் புண்ணியத்தில் முதல் ஒலி, ஒளி சினிமாவைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இளவரசர் ஐந்தாம் ஜார்ஜ் வருகை தந்ததன் நினைவாகத்தான் இன்றைய பூக்கடை பகுதி ஜார்ஜ் டவுன் எனப் பெயர் மாற்றப்பட்டது.
 
ஐந்தாம் ஜார்ஜ், வேல்ஸ் இளவரசராக சென்னைக்கு வந்திருந்த போது, பிரபல ஓவியர் ராஜா ரவிவர்மாவைப் பார்க்க விரும்பினாராம். இதனையடுத்து அப்போதைய மெட்ராஸ் ஆளுநர் கேரளாவில் இருந்த ரவிவர்மாவை சென்னை வருமாறு அழைப்பு விடுத்தார். அந்த சமயத்தில், ரவிவர்மாவின் மகன் ராமவர்மா பெரியம்மை வந்து அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். இருப்பினும் அரசின் அழைப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து ரவிவர்மா சென்னைக்கு வந்தார். மெட்ராஸ் கவர்னரையும், இளவரசரையும் தனக்கே உரிய பாணியில் தத்ரூபமாக வரைந்து கொடுத்தார். 
 
இரண்டு ஆண்டுகள் கழித்து 1911இல் ஐந்தாம் ஜார்ஜ், லண்டன் அரண்மனையில் மன்னராக பதவி ஏற்றுக் கொண்டார். பின்னர் அவரது விருப்பப்படியே இந்தியாவிலும் ஒரு பதவி ஏற்பு விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் பங்கேற்பதற்காக 40 நாள் பயணமாக மன்னரும், ராணியாரும் இந்தியா வந்தனர். இந்த விழாவில்தான் இந்தியாவின் தலைநகர் கல்கத்தாவில் இருந்து புதுடெல்லிக்கு மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்திய இளவரசர்கள், மாகாண கவர்னர்கள் எனப் பல பெருந்தலைகள் பங்கேற்ற அந்த நிகழ்ச்சி, 1911ஆம் ஆண்டு டிசம்பர் 12ந் தேதி வெகு தடபுடலாக நடைபெற்றது.
Indian+princes+in+delhi+durbar.jpg
விழாவிற்கு வந்த இந்திய இளவரசர்கள்
 
மன்னரின் இந்த முடிசூட்டு விழா இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டது. ராஜவிசுவாசத்தை காட்டும் வகையில், மெட்ராஸ் மாகாணத்தில் இதையொட்டி பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முத்தையால்பேட்டை சபா, மன்னரைப் போற்றிப் பாடும் பாட்டுப் போட்டி ஒன்றை அறிவித்தது. இதற்கு பல இடங்களில் இருந்தும் பாடல்கள் வந்து குவிந்தன. இறுதியில் ராமநாதபுரம் 'பூச்சி' ஸ்ரீனிவாச ஐயங்கார் என்பவர் தோடி ராகத்தில் எழுதிய பாடல் முதல் பரிசைத் தட்டிச் சென்றது.
 
இப்படி எல்லாம் கோலாகலமாக முடிசூட்டிக் கொண்டு லண்டன் திரும்பிய மன்னர் ஐந்தாம் ஜார்ஜிற்கு, அந்த மகிழ்ச்சி அதிக காலம் நீடிக்கவில்லை. 1914இல் முதல் உலக யுத்தம் ஆரம்பித்து மன்னரின் மகிழ்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தது. நான்கு ஆண்டுகள் நீடித்த யுத்தத்தில் இறுதியில் இங்கிலாந்து வெற்றி பெற்றாலும் இதனால் ஏற்பட்ட உடல் சோர்வும், மன உளைச்சலும் மன்னர் ஜார்ஜை வாட்டி எடுத்தன.
King_George_V_1911.jpg
மன்னர் ஐந்தாம் ஜார்ஜ்
 
1915இல் பிரான்சில் படைப்பிரிவுகளை பார்வையிட்டுக் கொண்டிருக்கும்போது, மன்னர் ஜார்ஜ் அமர்ந்திருந்த குதிரை திடீரென அவரை கீழே தள்ளியது. அப்போது விழுந்தவர்தான், பின்னர் அவர் முழுமையாக குணமடைந்து எழவே இல்லை. அவருக்கு புகைப்பழக்கமும் இருந்ததால் சுவாசப் பிரச்னையால் அவதிப்பட்டார். 1918இல் உலகப் போர் முடிந்தாலும், நோயுடனான மன்னரின் போராட்டம் முடியவில்லை.
 
நுரையீரல் சவ்வு அழற்சியும் ஜார்ஜை வாட்டி எடுத்தது. இதுபோதாதென்று ரத்தமே நஞ்சாக மாறும் septicaemia என்ற நோயும் அவருக்கு இருந்தது. இவ்வளவு நோய்கள் இருந்தாலும் அவர் மன்னர் என்பதால் பெரும் பொருட்செலவில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக அவரின் உயிரை மருத்துவர்கள் இழுத்துப் பிடித்தனர். ஆனால் எதற்கும் ஒரு முடிவு இருக்கிறது அல்லவா. அந்த முடிவு 1936, ஜனவரி 20 அன்று வந்தது. மன்னர் இறந்துவிட்டார் என இரவு 11.55 மணிக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
 
மன்னரின் மரணம் குறித்து அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் குழுவின் தலைவர் டாசன் தமது டைரியில் எழுதி வைத்திருந்தார். அந்த டைரிக் குறிப்பு 1986இல் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. காரணம், மன்னரின் இறப்பு செய்தி, காலைப் பத்திரிகைகளில் வரவேண்டும் என்பதற்காகவும், முக்கியத்துவம் குறைந்த மாலைப் பத்திரிகைகளில் அச்செய்தி முதலில் வெளியானால் மன்னர் குடும்பத்திற்கு மரியாதையாக இருக்காது என்பதாலும், மன்னரின் மரணத்தை இரவுக்குள் வேகப்படுத்த தாம் சில ஊசிகளைப் போட்டதாக டாசன் அதில் தெரிவித்திருந்ததார்.
 
இப்படி இருபதாண்டுகளுக்கும் மேலாக நோய்வாய்ப்பட்டு இறுதியிலும் சர்ச்சைகளை விதைத்துவிட்டு உயிரை விட்ட
மன்னர் ஐந்தாம் ஜார்ஜ்தான் இன்றும் பூக்கடை பகுதியில் சிலையாக நின்று கொண்டிருக்கிறார். செங்கோலுடன் நெஞ்சு நிமிர்த்தி நிற்கும் ஜார்ஜைப் பார்க்கும்போதெல்லாம், வாழ்வின் மாயக் கைகள் சூரியன் அஸ்தமிக்காத இங்கிலாந்து ஏகாதிபத்தியத்தின் அரசனையும் விட்டுவைக்கவில்லை என்ற யதார்த்தம் முகத்தில் அறைகிறது.
 
நன்றி - தினத்தந்தி
 
* துறைமுகம் பகுதியில் இருந்த மன்னர் ஜார்ஜின் சிலை, பின்னாட்களில் அகற்றப்பட்டு விட்டது. பனகல் பார்க்கில் இருந்த ஜார்ஜின் மார்பளவு சிலை திடீரென காணாமல் போய்விட்டது. ஜார்ஜின் தகப்பனாரான ஏழாம் எட்வர்டிற்கும் அண்ணா சாலையில் ஒரு சிலை இருந்தது. ஆனால் அது ஒருநாள் திடீரென அகற்றப்பட்டு அருங்காட்சியகத்திற்கு அனுப்பப்பட்டு விட்டது.
 
* வேட்டைப் பிரியரான மன்னர் ஜார்ஜ், இந்தியா வந்திருந்த போது அருகில் உள்ள நேபாளக் காடுகளில் வேட்டையாடினார். அப்போது 10 நாட்களில் அவர் 21 புலிகள், 8 காண்டாமிருகங்கள் மற்றும் ஒரு கரடி ஆகியவற்றைக் கொன்றதாக ஒரு குறிப்பு உள்ளது.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Sunday, May 12, 2013

மெமோரியல் ஹால்

 

நடந்து முடிந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வை நினைவு கூர்வதற்காக நினைவுத் தூண்களும், கட்டடங்களும் கட்டப்படுவதைத்தான் வரலாறு இதுவரை பார்த்திருக்கிறது. ஆனால் இதற்கு நேர் எதிராக, நடைபெறாத ஒரு விஷயத்தை நினைவுகூர மக்கள் கைக்காசைப் போட்டு கட்டடம் கட்டியது அநேகமாக மெட்ராசில் மட்டும்தான் இருக்க முடியும். அப்படி உருவானதுதான் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அருகில் இருக்கும் மெமோரியல் ஹால்.
memorial+hall.JPG
மெமோரியல் ஹால்
 
இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்டம் என்று வர்ணிக்கப்படும் சிப்பாய் கலகம், கிழக்கிந்தியக் கம்பெனியின் இந்திய சிப்பாய்களால் 1857ஆம் ஆண்டு, மே 10ந் தேதி, மீரட் நகரில் தொடங்கியது. ஒரு மூலையில் பற்றிய தீ மளமளவென மற்ற இடங்களுக்கும் பரவுவது போல, மீரட்டையும் மீறி பிற நகரங்களையும் இந்த கலகம் கபளீகரம் செய்தது. குறிப்பாக இந்தியாவின் மத்திய மலைப் பகுதிகளில் பரவிய கலகத்தில் சிப்பாய்கள் மட்டுமின்றி பொதுமக்கள் பலரும் பங்கெடுத்துக் கொண்டனர்.
 
முக்கிய கிளர்ச்சி இன்றைய உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், வடக்கு மத்தியப் பிரதேசம், டெல்லி, குர்காவுன் ஆகிய இடங்களை மையம் கொண்டிருந்ததுகிளர்ச்சியாளர்கள் கிழக்கிந்திய படையினருக்கு பெரும் சவாலாக விளங்கினர்ஓராண்டு கடும் போராட்டத்திற்கு பிறகு ஜூன் 20, 1858இல்தான் கலகத்தை முழுவதுமாக முடிவுக்கு கொண்டு வர முடிந்தது 
 
இந்த கலகம் முடிவுக்கு வந்ததும், இதனை நினைவுகூறும் வகையில் லக்னோ, கான்பூர், டெல்லி போன்ற இடங்களில் நினைவகங்கள் அமைக்கப்பட்டன. காரணம், இந்த நகரங்கள் சிப்பாய் கலகத்தின் தாக்கத்தை நேரடியாக உணர்ந்தன. இந்நகரத் தெருக்களில் கலகத்தின்போது ரத்த ஆறு ஓடியது. மக்கள் பதற்றத்துடனும், பயத்துடனும் ஆங்காங்கே பதுங்கிக் கிடந்தனர். ஆனால் இந்த கலகத்தால் மெட்ராஸ் எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை.
sepoy+mutiny.jpg
கலகம் செய்த சிப்பாய் களுக்கான தண்டனை
 
திருவல்லிக்கேணி, ஜார்ஜ் டவுன் போன்ற ஒரு சில இடங்களில் மட்டுமே லேசான கலவரங்கள் வெடித்தன. அதுவும் உடனடியாக அடக்கப்பட்டு விட்டன. எனவே மெட்ராஸ் ராஜ்தானியில் சிப்பாய் கலகத்தால் ஒரு ஆங்கிலேய உயிர்கூட பறிபோகவில்லை. இதற்காக நிச்சயம் ஆண்டவருக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று சென்னையில் கூடிய ஒரு ஆங்கிலேய கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இதனையடுத்து மெட்ராசில் ஒரு நினைவகம் கட்டுவது என தீர்மானிக்கப்பட்டு, அதற்காக மெட்ராசில் வசித்த ஆங்கிலேயர்களிடம் நிதி வசூலிக்கப்பட்டது.
 
அண்ணா பல்கலைக்கழகத்தில் இருக்கும் பொறியியல் கல்லூரியின் அன்றைய முதல்வர் கர்னல் ஜார்ஜ் வின்ஸ்காம் (Col.George Winscom) இதற்கென ஒரு அழகிய கட்டடத்தை வடிவமைத்துக் கொடுத்தார். இதனையடுத்து கட்டுமானப் பணி 1858ஆம் ஆண்டு தொடங்கியது. ஆனால் மக்களிடம் பணம் வசூலித்து கட்ட வேண்டியிருந்ததால், பணி மெல்ல ஆமை வேகத்தில் நடைபெற்றது. இதனிடையே கர்னல் ஹார்ஸ்லி என்பவர் வின்ஸ்காமின் வடிவமைப்பில் சில பல மாற்றங்களை செய்ய, ஒருவழியாக 1860களின் தொடக்கத்தில் இந்த பணி நிறைவடைந்தது.
 
இப்படித்தான் மெட்ராசிற்கு மெமோரியல் ஹால் என்ற அழகிய கட்டடம் கிடைத்தது. உயரமான மேடை, அதன் மீது ஐயானிக் பாணியில் பிரம்மாண்ட தூண்களுடன் கூடிய போர்ட்டிக்கோ என மிக நேர்த்தியாக கட்டப்பட்ட மெமோரியல் ஹால், மெட்ராசின் அழகிய கட்டடங்களுள் முக்கியமானதாக கருதப்படுகிறது. கட்டடத்தின் முகப்பில், ஆண்டவருக்கு நன்றி சொல்லும் வகையில் “The Lord has been Mindful of us: He will bless us.”என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்டன.
 
ஆரம்ப நாட்களில் இந்த கட்டடம் பைபிள் பிரசங்கங்கள், கிறிஸ்துவக் கூட்டங்கள் போன்றவற்றிற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டது. மெட்ராசின் பைபிள் சொசைட்டி இந்த கூட்டங்களை ஏற்பாடு செய்தது. பின்னர் காலப்போக்கில் இந்த அரங்கு, ஆடைகள் விற்பனைக் கண்காட்சி, கைவினைப் பொருள் கண்காட்சி என பல்வேறு பயன்பாடுகளுக்காக வாடகைக்கு விடப்பட்டது.
 
இதன் எதிரில் அரங்கேறும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் காரணமாக, 150 ஆண்டுகளைக் கடந்தும் இன்றும் இந்த ஹால் தினமும் செய்திகளில் அடிபடுகிறது. இந்தியர்களிடையே எழுந்த ஒரு பெரிய புரட்சியால் பாதிக்கப்படவில்லை என்பதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கட்டப்பட்ட கட்டடம், இன்று தினமும் புரட்சி முழக்கங்களை கண் எதிரில் பார்த்துக் கொண்டிருக்கிறது. வரலாறு விசித்திரமானது என்பதற்கு இதைவிட வேறு என்ன சாட்சியம் வேண்டும்?
 
நன்றி - தினத்தந்தி
 
* மெமோரியல் ஹால் வளாகத்தில் அருகிலேயே பாரம்பரிய பாணியில் ஒரு கட்டடம் கட்டப்பட்டது. இதுதான் கிறிஸ்துவ இலக்கிய சங்கத்தின் தலைமையகமாக இருந்தது. இந்த பழைய கட்டடம் சில ஆண்டுகளுக்கு முன் இடிக்கப்பட்டு தற்போது அங்கு ஒரு புதிய கட்டடம் முளைத்திருக்கிறது.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Saturday, October 6, 2012

வள்ளலார் இல்லம்

 

ஆயுள் முழுவதும் அன்பை போதித்த வள்ளல் பெருமானை உருவாக்கியதில் தருமமிகு சென்னைக்கு மிக முக்கியமான பங்கு இருக்கிறது. சென்னை ஏழுகிணறுப் பகுதியில் வீராசாமித் தெருவில் உள்ள ஒரு ஒண்டிக் குடித்தன வீட்டில் தான் அந்த மாமனிதர் சுமார் 33 ஆண்டுகள் வசித்து வந்தார்.
 
கடலூர் மாவட்டம் மருதூரில் 1823இல் ராமலிங்கம் பிறந்தார். அவர் பிறந்த சில மாதங்களிலேயே தந்தையை பறிகொடுத்தார். எனவே தாயார் சின்னம்மை தனது 5 குழந்தைகளுடன் சொந்த ஊரான சின்னக் காவனத்திற்குச் வந்து விட்டார். தற்போதைய திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரிக்கு அருகில் இருக்கிறது இந்த கிராமம். சென்னைக்கு சென்று விட்டால் வாழ்க்கை வளப்படும் என ராமலிங்கத்தின் பெரிய அண்ணன் சபாபதி கருதியதால் குடும்பம் ஏழு கிணறு பகுதிக்கு இடம்பெயர்ந்தது. இப்படித்தான் இரண்டு வயது சிறுவனாக வீராசாமி தெருவில் உள்ள 31ம் நம்பர் வீட்டின் மொட்டை மாடிக்கு வந்து சேர்ந்தார் ராமலிங்கம். சிறிது காலத்தில் தாயார் சின்னம்மை காலமான பின்னர், சுமார் 33 ஆண்டுகள் அவர் இந்த வீட்டில் தான் தனது அண்ணனோடும், அண்ணியோடும் தங்கி இருந்தார்.
 
ramalingar+house3.jpg
வீராசாமி தெருவில் வள்ளலார் வீடு
ராமலிங்கம் முறையாக பள்ளிக்குப் போகவில்லை. தமிழ் ஆசிரியர் ஒருவரிடமும், பின்னர் சொற்பொழிவாளராக இருந்த அண்ணன் சபாபதியிடமுமே பாடம் பயின்று வந்தார். மற்ற நேரங்களில் அருகில் உள்ள கந்தசாமிக் கோவிலுக்கு சென்று தியானத்தில் ஆழ்ந்துவிடுவார். ஒருமுறை அவர் சரியாகப் படிக்கவில்லை என கோபித்துக் கொண்டு, வீட்டை விட்டு வெளியே அனுப்பி விட்டார் சபாபதி. அப்போதும் ராமலிங்கம் தஞ்சமடைந்த இடம் இந்த கோவில்தான். பின்னாட்களில் வள்ளலாராக உயர்ந்த ராமலிங்க அடிகள் திருவருட்பா பாடியதும் இந்த தலத்தில்தான்.
 
ராமலிங்கம் திருவொற்றியூர் வடிவுடையம்மன் மீதும் அதீத பக்தி கொண்டிருந்தார். ஏழு கிணறு பகுதியிலிருந்து திருவொற்றியூருக்குத் தினமும் நடந்தே சென்று வழிபட்டு வருவது அவர் வழக்கம். ஒரு முறை நீண்ட நேரம் கோவிலில் மெய்மறந்து இருந்துவிட்டு, இரவு தாமதமாக வீட்டுக்கு வந்தார் ராமலிங்கம். கதவு மூடியிருந்ததால் வெளியில் உள்ள திண்ணையிலேயே படுத்துக் கொண்டார். அப்போது அவருக்கு அம்பிகையே அண்ணியின் உருவில் வந்து உணவு பரிமாறியதாக கூறப்படுகிறது.
 
ஒரு நாள் ராமலிங்கம் மாடியறையில் தீவிர முருக வழிபாட்டில் ஈடுபட்டபோது, சுவரிலிருந்த கண்ணாடியில் திருத்தணி முருகன் காட்சியளித்ததாகவும் சொல்லப்படுகிறது. வீராசாமி தெரு வீட்டில் வள்ளலார் வசித்தபோது இப்படி பல அற்புதங்கள் நிகழ்ந்ததாக அவரது வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

VALLALAR-house.jpg
வள்ளலாரின் மாடி அறை
 
புராணச் சொற்பொழிவு செய்யும் அண்ணன் சபாபதிக்குஒருமுறை உடல்நலம் குன்றியதால் சொற்பொழிவுக்குச் செல்ல முடியவில்லை. எனவேராமலிங்கத்தை அனுப்பி வைத்தார். அன்றைய தினம் சொற்பொழிவைக் கேட்க ஏராளமானோர் கூடியிருந்தனர். அண்ணன் சொன்ன படியே சில பாடல்களை மனமுருகப் பாடினார் ராமலிங்கம். பின்னர் அருமையான ஒரு சொற்பொழிவையும் நிகழ்த்தினார். இப்படி வள்ளலாரின் முதல் சொற்பொழிவு அரங்கேறியதும் சென்னையில்தான்.
 
வள்ளலாரின் பாடல்களை அவரது மாணவர்கள் அருட்பா
என்று அழைத்தனர். அதுவரை தேவார, திருவாசகத்தை மட்டுமே அவ்வாறு அழைத்து வந்தனர். இதனால் ஆறுமுக நாவலர் என்பவர் அருட்பா என்று அழைப்பது தவறென நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில் வள்ளலாரே தனக்காக வாதாடினார், வழக்கில் வெற்றியும் பெற்றார்.

இதனிடையே பலரது வற்புறுத்தலுக்கு இணங்கராமலிங்கம் இருபத்தேழாவது வயதில் தனது சகோதரியின் மகளை திருமணம் செய்துகொண்டார். ராமலிங்கம் அமைதியை நாடியவர். கடவுள் என்றால் என்ன என்று அறிய விரும்பியவர். எனவே, 1858ஆம் ஆண்டு சென்னையிலிருந்து புறப்பட்டுப் பல தலங்களைத் தரிசித்து சிதம்பரத்தை அடைந்தார்.

பின்னர் அவர் வடலூரில் சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலையை நிறுவி பசிப் பிணி போக்கியது எல்லாம் வரலாறு. இறுதியில் வள்ளலார்,1874ல் தை மாதம் 19ம் தேதி வடலூருக்கு அருகே உள்ள மேட்டுக்குப்பத்தில் இருக்கும் சித்திவளாக மாளிகை அறைக்குள் புகுந்தார். அவரது விருப்பப்படி,அவரது பிரதம சீடர்கள் மூடப்பட்ட அறையின் வெளிப்புறத்தைப் பூட்டினார்கள். அன்று முதல் வள்ளலார் உருவத்தை துறந்து அருவமாக மாறி விட்டதாக சொல்லப்படுகிறது.
 
மொத்தத்தில் தனது 51 ஆண்டு கால வாழ்வில், பெரும்பகுதியை அவர் சென்னையில்தான் கழித்திருக்கிறார். பாரிமுனை, ஏழு கிணறு, திருவொற்றியூர் என நகரின் பல இடங்களிலும் அந்த வள்ளல் பெருமான் வலம் வந்திருக்கிறார். இறைத் தேடலில் அவருக்கு கிடைத்த பல்வேறு அனுபவங்களை வீராசாமித் தெரு வீடு பார்த்திருக்கிறது. ஆனால் இந்த நினைவுகளை எல்லாம் நெஞ்சில் சுமந்தபடி அந்த வீட்டிற்கு இன்று போனால், ஏமாற்றமே மிஞ்சுகிறது.
 
சுமார் 187 ஆண்டுகளைக் கடந்த பின்னும், சென்னையின் மத்திய தர குடும்பங்கள் வசிக்கும் ஒரு சாதாரண ஒண்டிக்குடித்தனமாகத் தான் இன்றும் அந்த வீடு இருக்கிறது. தண்ணீர் பிடிப்பது, வேலைக்கு கிளம்புவது என பக்கத்து போர்ஷன்காரர்கள் அன்றாட அலுவல்களில் மும்முரமாக இருக்கிறார்கள். மாடியில் வசித்த மாமனிதரை நினைப்பதெற்கெல்லாம் அவர்களுக்கு நேரம் இருப்பதாகத் தெரியவில்லை.
 
இந்த வீடு தற்போது தனியார் வசம் இருந்தாலும், உள்ளே சென்று பார்க்க அனுமதிக்கப்படுகிறது. ஆனால் ஒரு மாபெரும் மனிதர் வாழ்ந்த வீடு என்பதற்கான அடையாளங்கள் எதுவும் இல்லை. வள்ளலாரின் நினைவாகத் தான் அந்த பகுதியே இன்று வள்ளலார் நகர் என்று அழைக்கப்படுகிறது. ஆனால் அவர் வாழ்ந்த வீட்டை முறையாகப் பராமரிக்கத்தான் ஆள் இல்லை. வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலாரின் வீட்டைப் பார்க்கும்போது நம் மனம் வாடித்தான் போகிறது.
 
நன்றி - தினத்தந்தி


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Friday, November 23, 2012

காளிகாம்பாள் கோவில்

 

சென்னை பாரிமுனைப் பகுதியின் பழைய அடையாளங்களில் ஒன்று காளிகாம்பாள் கோவில். நெரிசல் மிகுந்த தம்புசெட்டித் தெருவில் தற்போது வசிக்கும் காளிகாம்பாள் ஆரம்ப நாட்களில் கடற்கரையோரமாக காற்று வாங்கிக் கொண்டு நிம்மதியாக குடியிருந்தாள்.
 
ஆங்கிலேயர்களின் வருகைக்கு முன் வங்கக் கடலை ஒட்டி ஒரு சிறிய மீனவ கிராமம்தான் இருந்தது. இந்த கிராமத்தினரின் கடவுளாக இருந்த காளிகாம்பாளுக்கு அவர்கள் செந்தூரம் சாத்தி வழிபட்டு வந்தனர். இதனால் சென்னியம்மன் என அழைக்கப்பட்டாள். சென்னியம்மன் குப்பம் என்ற பெயரே பின்னர் சென்னை என்று மருவியது என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.
 
விஸ்வகர்மா சமூகத்தினர் நாயக்கர் காலகட்டத்தில் பார்த்தசாரதிப் பெருமாள் கோயில் திருப்பணிகளுக்காக சென்னையில் குடியேறியபோது திருவண்ணாமலையில் இருந்து கல் எடுத்து வந்து கட்டிய ஆலயம் இது என்று கூறப்படுகிறது. பின்னர் 1640இல் ஆங்கிலேயர்கள் இந்த பகுதியில் புனித ஜார்ஜ் கோட்டையை கட்டியபோது, கோவில் கோட்டைக்குள் வந்துவிட்டது. இப்படி கோட்டைக்குள் வைத்து வழிபட்டதால் கோட்டையம்மன் என்றும் ஒரு பெயர் வழங்கப்பட்டிருக்கிறது.
Kaligambal-Temple-chennai-View.jpg
காளிகாம்பாள் கோவில்
 
ஆங்கிலேய வணிகர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில் கோட்டைக்கு வெளியே தம்புசெட்டித் தெருவிற்கு இடம்மாறினாள் இந்த அம்மன். தம்புசெட்டித் தெருவில் உள்ள கோவிலை முத்துமாரி ஆச்சாரி என்பவர் நிர்மாணித்தார். இடம் மாறியதே தவிர பக்தர்களின் எண்ணிக்கை மாறவில்லை. அம்மனை வழிபட ஏராளமான பக்தர்கள் தினந்தோறும் வந்துகொண்டே இருந்தனர். அப்படி வந்த ஒரு விஐபி பக்தர்தான் சத்ரபதி சிவாஜி.
 
1677இல் சென்னையை நோக்கி படையெடுத்து வந்தார் சத்ரபதி சிவாஜி. அப்போது சென்னையின் ஆளுநராக இருந்தவர் ஸ்ட்ரெயின்ஷாம் மாஸ்டர் (Streynsham Master). இவர் ஏற்கனவே சிவாஜியின் வீரத்தைப் பார்த்திருக்கிறார். 1670இல் சிவாஜி சூரத் நகரில் இருந்த கிழக்கிந்திய கம்பெனியின் கோட்டையைத் தாக்கியபோது அதனை எதிர்கொண்டவர் இதே ஸ்ட்ரெயின்ஷாம் மாஸ்டர்தான்.
 
தனது தென்னகப் படையெடுப்பால் வேலூர், செஞ்சி, ஆற்காடு ஆகியப் பகுதிகளை கைப்பற்றிய சிவாஜியின் அடுத்த குறி சென்னைதான் என்று பரபரப்பாக பேசப்பட்டது. இதனால் மெட்ராஸ்வாசிகள் அடுத்து என்ன எனத் தெரியாமல் அச்சத்தில் உறைந்து போயிருந்தனர். இப்படி நிமிடங்கள் திக்..திக்.. என கடந்து கொண்டிருந்த நிலையில், 1677, மே 14ஆம் தேதி சிவாஜியின் தூதர் ஒருவர் புனித ஜார்ஜ் கோட்டைக்கு வந்தார்.
sivaji.jpg
கோவிலுக்கு வந்த சிவாஜி
 
சத்ரபதி சிவாஜி சில விலை உயர்ந்த கற்களையும், விஷமுறிவு மருந்துகளையும் கேட்பதாகவும், அதற்குரிய பணத்தை அளித்து விடுவதாகவும் அந்த தூதர் தெரிவித்தார். ஆனால் ஆங்கிலேயர்கள் பணம் எதையும் பெறாமல் சிவாஜி கேட்ட பொருட்களை அனுப்பி வைத்தனர். சிவாஜி சென்னையைத் தாக்காமல் இருக்க என்ன விலையையும் கொடுக்க அவர்கள் தயாராக இருந்தனர்.
 
சில நாட்கள் கழித்து மீண்டும் சில கோரிக்கைகளோடு திரும்பி வந்தார் சிவாஜியின் தூதர். இம்முறை வாங்கும் பொருட்களுக்கு உரிய விலையை கண்டிப்பாக கொடுக்கும்படி சிவாஜி வலியுறுத்தியதாக கூறினார். ஆனால் இரண்டாம் முறையும் விலையில்லா பொருட்களே அவருக்கு வழங்கப்பட்டன. மூன்றாவது முறையாக மீண்டும் வந்த தூதர், இம்முறை சில ஆங்கிலேய பொறியாளர்களை சிவாஜி அழைத்து வரச் சொன்னதாகத் தெரிவித்தார். ஆனால் இந்த கோரிக்கையை ஏற்க முடியாதென மிகவும் பணிவாக மறுத்துவிட்டார்கள் ஆங்கிலேயர்கள். இதனால் ஆத்திரமுற்று சிவாஜி சென்னை மீது படையெடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடைபெறவில்லை. இதனிடையே சில அரசியல் மாற்றங்கள் காரணமாக சிவாஜி மீண்டும் தனது ராஜ்ஜியத்திற்கு திரும்பிச் செல்ல வேண்டி இருந்தது.
 
இந்த இடத்தில்தான் வரலாற்றில் ஒரு புதிர் அவிழ்க்கப்படாமல் நூற்றாண்டுகளாகத் தொடர்கிறது. சிவாஜி சென்னைக்குள்ளேயே வரவில்லை என்கிறார்கள் சில வரலாற்று ஆய்வாளர்கள். ஆனால் காளியின் பக்தரான சிவாஜி, யாருக்கும் தெரியாமல் மாறுவேடத்தில் வந்து தம்புசெட்டித் தெருவில் உள்ள காளிகாம்பாளை தரிசித்துவிட்டுச் சென்றார் என்கிறார்கள் சிலர். அக்டோபர் 3, 1677இல் சிவாஜி காளிகாம்பாள் கோவிலுக்கு வந்தார் என கோவிலில் ஒரு குறிப்பு வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இதற்கு உறுதியான வரலாற்று ஆவணங்கள் எதுவும் இல்லை.
 
மகாகவி பாரதியார் சுதேசமித்திரனில்பணியாற்றிக் கொண்டிருந்தபோது பிராட்வேயில் தங்கியிருந்தார். அப்போது அடிக்கடி இந்த கோவிலுக்கு வழிபட வருவாராம். ‘‘யாதுமாகி நின்றாய் காளி’’ என்ற அவரது பாடலில் வருவது காளிகாம்பாள்தான்.
 
சத்ரபதி சிவாஜி, பாரதியார் தொடங்கி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வரை பலரையும் ஆசிர்வதித்த காளிகாம்பாள், 3 நூற்றாண்டுகள் கடந்தும் இன்றும் தனது அன்பால் சென்னையை அரவணைத்துக் கொண்டிருக்கிறாள்.
 
நன்றி - தினத்தந்தி
 
* கடற்கரைக் கோவிலில் காளி உருவம் உக்கிரமாக இருந்ததாகவும், தம்புசெட்டித் தெருவிற்கு மாறியபோது காளியின் உருவம் சாந்த சொரூபியாக மாற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
 
* கோவிலின் வாசலில் இருக்கும் கிழக்கு ராஜகோபுரம் 1983இல் கட்டப்பட்டது. 


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Sunday, November 18, 2012

மெட்ராசின் பறக்கும் டாக்டர்

 

பறந்து பறந்து வேலை செய்வது என்று பேச்சு வழக்கில் சொல்வதுண்டு. ஆனால் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பே மெட்ராசில் ஒரு டாக்டர் உண்மையிலேயே பறந்து பறந்து மருத்துவம் பார்த்திருக்கிறார். இதனால் அவரை மெட்ராஸ்வாசிகள் 'பறக்கும் டாக்டர்' என்றே அழைத்திருக்கிறார்கள்.
 
பின்னாட்களில் பறக்கும் டாக்டர் எனப் பெயரெடுத்த ரங்காச்சாரி கும்பகோணம் அருகே சருக்கை என்ற கிராமத்தில் 1882ஆம் ஆண்டு பிறந்தார். இவருடைய தந்தை கிருஷ்ணமாச்சாரி ஒரு பொறியாளர். சென்னையில் உள்ள நேப்பியர் பாலம் மற்றும் சென்ட்ரலுக்கு எதிரில் இருக்கும் அரசு பொதுமருத்துவமனை ஆகியவற்றை கட்டியதில் இவரின் பங்களிப்பும் உள்ளது.
 
ரங்காச்சாரியின் மாமா கோபாலாச்சாரி, ஒரு வழக்கறிஞர். திருவாங்கூர் சமஸ்தானத்தின் திவானாக பணியாற்றியவர். இப்படி கல்வியின் மேன்மை அறிந்த குடும்பத்தில் பிறந்ததால் ரங்காச்சாரிக்கும் இயல்பிலேயே படிப்பின் மீது அதீத ஆர்வம் இருந்தது. கும்பகோணம் டவுன் ஐ ஸ்கூலில் படிப்பை முடித்ததும், கல்லூரியில் சேர்வதற்காக சென்னை வந்தார்.
dr+rangachari.JPG
சிலையாக ரங்காச்சாரி
 
மெட்ராஸ் கிறிஸ்துவக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த ரங்காச்சாரியை மருத்துவம் படிக்கும்படி இரண்டு ஐரோப்பிய அறுவை சிகிச்சை நிபுணர்கள் ஊக்கப்படுத்தினர். அவர்கள் அளித்த உற்சாகத்தால் மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த ரங்காச்சாரி, 1904ஆம் ஆண்டு மருத்துவப் படிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்தார். இரண்டே ஆண்டுகளில் துணை அறுவை சிகிச்சை மருத்துவராக அரசு பணியில் சேர்ந்தவர் எழும்பூர், ஐதராபாத், மாயவரம், தஞ்சாவூர், நாகப்பட்டினம், கும்பகோணம், பெர்ஹாம்பூர் என பல ஊர்களிலும் மாறி மாறி பணியாற்றினார்.
 
திறமையான மருத்துவர் எனப் பெயரெடுத்த ரங்காச்சாரி, எழும்பூரில் உள்ள மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையின் துணை கண்காணிப்பாளராக 1917இல் நியமிக்கப்பட்டார். இதன் மூலம் இந்த பதவியை அடைந்த முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றார். 1919இல் அறுவை சிகிச்சை நிபுணராக பதவி உயர்வு பெற்ற அவர், 1922 வரை அரசு பணியில் இருந்தார். பின்னர் ராஜினாமா செய்துவிட்டு பூந்தமல்லி நெடுஞ்சாலையில் தனியாக மருத்துவம் பார்க்கத் தொடங்கினார்.
 
சிறந்த மருத்துவராகத் திகழ்ந்த ரங்காச்சாரி மிகச்சிறந்த மனிதராகவும் இருந்தார். ஒரு நாளில் கிட்டத்தட்ட 18 மணி நேரம் மருத்துவம் பார்ப்பார். அதிகாலை 4 மணி தொடங்கி 11 மணி வரை அறுவை சிகிச்சைகளை மேற்கொள்வார். அதன் பின்னர் தனது கிளினிக்கிற்கு வந்திருக்கும் நோயாளிகளை கவனிப்பார். இதனிடையே நடக்க முடியாத நோயாளிகளின் வீட்டிற்கும் சென்று மருத்துவம் பார்ப்பார். அதிக பணம் சம்பாதிப்பதற்காக நிறைய நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்திருப்பார் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு.
 
வறுமையால் வாடும் நோயாளிகளுக்கு ரங்காச்சாரி வழக்கமாக இலவசமாகத் தான் மருத்துவம் செய்வார். சிலருக்கு மருத்துவமும் பார்த்து ஆரோக்கியமான உணவுகளை வாங்கி சாப்பிடச் சொல்லி பணமும் கொடுத்து அனுப்புவாராம். ஆரம்ப நாட்களில் ரங்காச்சாரி ஒரு சைக்கிள் வைத்திருந்தார். அதில் தான் மருத்துவமனைக்கு சென்று வருவார். பின்னர் மோட்டார் பைக்கிற்கு மாறிய அவர், 1920களின் பிற்பகுதியில் அந்த காலத்திலேயே ரூ.52,000 கொடுத்து ரோல்ஸ் ராய்ஸ் சொகுசுக் கார் ஒன்றை வாங்கினார். அடிக்கடி பயணிக்க வேண்டி இருந்ததால், பல சமயங்களில் அந்த காரே அவரின் வீடாக மாறிவிட்டது. நேரம் இல்லாததால் மதிய உணவை காரில் செல்லும்போதே சாப்பிட்டுவிடுவாராம்.
 
இப்படி மாய்ந்து மாய்ந்து மருத்துவம் பார்த்தும் ரங்காச்சாரிக்கு மனத்திருப்தி ஏற்படவில்லை. இன்னும் நிறைய பேருக்கு மருத்துவம் பார்க்க என்ன செய்யலாம் என்று தீவிரமாக யோசித்தபோது அவருக்கு அந்த எண்ணம் தோன்றியது. யாருமே நினைத்துப் பார்க்காத வகையில், ஒரு சிறிய விமானத்தை விலைக்கு வாங்கினார் ரங்காச்சாரி. அந்நாட்களில் பறந்து விரிந்திருந்த சென்னை மாகாணம் முழுவதும் பறந்து சென்று மருத்துவம் பார்க்க இது அவருக்கு பெரிதும் உதவியது. இப்படித் தான் சென்னைக்கு ஒரு பறக்கும் டாக்டர் கிடைத்தார்.
 
ரங்காச்சாரி இவ்வாறு மருத்துவத்தில் சாதனை புரிந்து கொண்டிருந்த நிலையில், திடீரென ஒரு நாள் டைபாய்டு நோயால் பாதிக்கப்பட்டார். எவ்வளவு முயன்றும் நோயில் இருந்து மீள முடியாமல் 1934ஆம் ஆண்டு தமது 52வது வயதில் இயற்கை எய்தினார். மனிதநேயமிக்க அந்த மருத்துவரை இழந்த சென்னைவாசிகள் மீளாத்துயரில் ஆழ்ந்தனர். அவரை கௌரவிக்கும் வகையில் 1939ஆம் ஆண்டு சென்னை அரசு பொதுமருத்துவமனை வாயிலில் ஒரு சிலை வைத்தனர். அந்த சிலையின் பீடத்தில் இவ்வாறு எழுதப்பட்டிருக்கிறது, 'அவரின் சிறந்த மருத்துவ ஆற்றலையும், எல்லையற்ற மனிதநேயத்தையும் கௌரவிக்கும் வகையில் இந்த சிலை நிறுவப்பட்டுள்ளது'.
 
தந்தை கட்டிய மருத்துவமனையின் வாயிலில் மகன் சிலையாக நின்று கொண்டிருக்கிறார். 'மருத்துவம் தொழில் அல்ல சேவை' என சிலையாக நிற்கும் ரங்காச்சாரி உரக்க சொல்லிக் கொண்டிருப்பது போலவே தோன்றுகிறது. ஆனால் எத்தனை மருத்துவர்களுக்கு இது காதில் விழுகிறது என்பதுதான் தெரியவில்லை.
 
நன்றி - தினத்தந்தி
 
* டாக்டர் ரங்காச்சாரி மேல்படிப்பிற்காக இங்கிலாந்து செல்ல ஆசைப்பட்டார். ஆனால் ஆச்சாரமான இந்துகள் கடல் கடந்து செல்லக் கூடாது என்று சொல்லி குடும்பத்தார் அவரது ஆசைக்கு தடை போட்டுவிட்டனர்.
 
* மருந்து, மாத்திரைகளே இல்லாமல் வெறும் ஆலோசனைகள் மூலமே நிறைய பேரின் மருத்துவப் பிரச்னைகளை டாக்டர் ரங்காச்சாரி தீர்த்திருக்கிறார்.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Saturday, November 10, 2012

மெட்ராஸை மிரட்டிய எம்டன்

 

சினிமாவை மிஞ்சும் காட்சிகள் சில நேரங்களில் நிஜ வாழ்விலும் அரங்கேறி விடுகின்றன. 1914ஆம் ஆண்டு செப்டம்பர் 22ந் தேதி இரவு சென்னைவாசிகள் அப்படி ஒரு காட்சியைத்தான் மிரண்டு போய் பார்த்தார்கள். முதல் உலகப் போரால் பல நாடுகளும் அல்லோகலப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் நவராத்திரி கொண்டாட்டங்களில் மூழ்கியிருந்த மெட்ராஸ்வாசிகளை அச்சத்தில் உறைய வைத்தது அந்த காட்சி.
 
1914, செப்டம்பர் 22, இரவு 9.30 மணி... சென்னை துறைமுகத்திற்கு மிக அருகில் திடீரென காட்சி கொடுத்தது ஜெர்மானிய போர்க்கப்பலான எம்டன். பிரிட்டீஷ் கப்பற்படையின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு துறைமுகத்தை நெருங்கிய அந்த கப்பல், சென்னை மாநகரை நோக்கி குண்டு மழை பொழியத் தொடங்கியது. துறைமுகத்திற்குள் இருந்த பர்மா ஆயில் கம்பெனியின் எண்ணெய் கிடங்குகள் கொழுந்துவிட்டு எரிந்தன.
Bombardment_of_Madras_by_S.S._Emden_1914
எம்டனால் எரியும் எண்ணெய் கிடங்குகள் 
எண்ணெய் டாங்குகளை கபளீகரம் செய்த எம்டன் அடுத்தபடியாக துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த சிறிய வணிகக் கப்பல் ஒன்றை சுட்டு வீழ்த்தியது. கப்பலில் இருந்த 3 பணியாளர்கள் உயிரிழந்தனர், 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். பிரிட்டன் படைகள் சுதாரித்து எதிர்தாக்குதல் நடத்த அரை மணி நேரம் ஆகிவிட்டது. அதற்குள் மேலும் சில குண்டுகளை சென்னைக்கு பரிசளித்துவிட்டு எம்டன் பத்திரமாக வங்கக் கடலில் விரைந்து மறைந்துவிட்டது.
 
அடுத்தநாள் காலை, சென்னையில் காட்சிகள் வேகமாக மாறின. எம்டன் வீசிச் சென்ற குண்டுகள் உயர்நீதிமன்றம், பூந்தமல்லி நெடுஞ்சாலை, சூலை, நுங்கம்பாக்கம் என பல கிலோ மீட்டர் தூரம் சிதறிக் கிடந்தன. மக்கள் இதனை பீதியுடன் பார்த்தனர். எம்டன் பற்றிய செய்தி காட்டுத்தீயாய் பரவியது. மீண்டும் எம்டன் தாக்கலாம் என்ற வதந்தி இறக்கை கட்டிப் பறந்தது. அச்சத்தில் உறைந்த மக்கள் அவசர அவசரமாக நகரை விட்டு வெளியேறத் தொடங்கினர். தினமும் சுமார் 20 ஆயிரம் பேர் நகரை காலி செய்துவிட்டு கிளம்பியதாக அன்றைய செய்தித்தாள்கள் தெரிவிக்கின்றன. ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதியதால் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டனர்.
 
ரயில்களில் இடம் கிடைக்காதோர் சாலை மார்க்கமாக பயணித்தனர். எங்கு பார்த்தாலும் மூட்டை முடிச்சுகளோடு மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று கொண்டிருந்தனர். கடைகள் அடைக்கப்பட்டன. திறந்திருந்த ஒரு சில கடைகளில் விலைகள் திடீரென விண்ணில் பறந்தன. அடுத்து என்ன எனத் தெரியாத ஒரு குழப்ப மேகம் நகரை சூழ்ந்திருந்தது. வதந்தி கிளப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்தும் எந்த பயனும் இல்லை. வதந்திகள் பரவிக் கொண்டே இருந்தன, மக்கள் வெளியேறிக் கொண்டே இருந்தார்கள்.
 
அப்போதைய மெட்ராஸ் ஆளுநரான லார்ட் பெண்ட்லாண்ட் எம்டன் தாக்குதல் நடத்தியபோது ஊட்டியில் இருந்தார். தகவல் கிடைத்த பிறகும் அவர் உடனே சென்னைக்கு வரவில்லை. பொறுமையாக செப்டம்பர் 25ந் தேதி வந்து தாக்குதல் நடந்த இடங்களைப் பார்வையிட்டார். 'எம்டன் திரும்பி வராது, பயப்படாதீர்கள்' என்று நம்பிக்கை அளித்துவிட்டு, மீண்டும் ஊட்டிக்குத் திரும்பிவிட்டார். 'எம்டன் வராது என்றால் ஆளுநர் இங்கேயே இருக்க வேண்டியதுதானே, ஏன் நகரில் இருப்பதை தவிர்க்கிறார்?' என்று பொதுமக்கள் கேட்டார்கள். ஆனால் பதில் சொல்லத்தான் யாரும் இல்லை.
 
அந்த காலத்தில் பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்தின் மகுடமாகக் கருதப்பட்ட இந்தியாவில், அதுவும் அவர்கள் முதன்முதலாக காலடி வைத்த சென்னைக்கே வந்து ஒரு எதிரி தாக்கிவிட்டு பத்திரமாகத் திரும்பியது ஆங்கிலேயப் படைக்கு மிகப் பெரிய அவமானமாக கருதப்பட்டது. இந்த ஒரு காரணத்திற்காக இந்திய மக்கள் எம்டனை ஹீரோவாகப் போற்றினார்கள். அதன்பின்னர் அசகாய சூரர்களை எம்டன் என்று தமிழக மக்கள் அழைக்கத் தொடங்கினர்.
 
ஆங்கிலேயர்களுக்கு சிம்மசொப்பனமாகத் திகழ்ந்த எம்டன், தனது பணிக் காலத்தில் 31 கப்பல்களை மூழ்கடித்திருக்கிறது. தனது வசீகரத் தோற்றத்தால் 'கிழக்கின் அன்னப்பறவை' என எதிரிப் படைகளாலும் வர்ணப்பட்ட பெருமை எம்டனுக்கு உண்டு. ஜெர்மானிய கப்பற்படையில் முக்கிய அங்கம் வகித்த இந்த கப்பலுக்கு, 1913ஆம் ஆண்டு வான் முல்லர் (Karl Von Muller) கேப்டனாக பொறுப்பேற்றார்.
Emden+001.jpg
கம்பீரமான எம்டன்
அந்த காலத்தில் இந்துமா சமுத்திரம் முழுவதும் பிரிட்டீஷ் கப்பல்கள் நிறைந்திருக்கும். ஒட்டுமொத்த சமுத்திரத்திலும் தாங்களே ஆதிக்கம் செலுத்தியதால் இந்துமா சமுத்திரத்தை 'பிரிட்டனின் ஏரி' என்று ஆங்கிலேயர்கள் கர்வத்துடன் அழைத்துக் கொண்டிருந்தனர். இந்த கர்வத்திற்குதான் மரண அடி கொடுத்தார் முல்லர். எம்டன் கப்பலில் இருந்த செண்பகராமன் என்ற விடுதலைப் போராட்ட வீரரின் கோரிக்கையை ஏற்றே சென்னை மீது முல்லர் தாக்குதல் நடத்தியதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் இதுபற்றி உறுதியான ஆவணங்கள் எதுவும் இல்லை.
wreck+of+emden.jpg
ஜலசமாதியாகும் எம்டன்
எம்டனை வீழ்த்த பல நாட்டு கப்பல்களும் எவ்வளவோ முயற்சித்தன. ஆனால் முடியவில்லை. இறுதியில், வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பதை நிரூபிக்கும் வகையில் எம்டனுக்கு போட்டியாக ஒரு கப்பல் களமிறங்கியது. முதல் உலகப் போர் உச்சத்தில் இருந்த போது, ஆஸ்திரேலியாவின் சிட்னி என்ற நவீன போர்க்கப்பலுடன் எம்டன் மோதியது. கடுமையான சண்டைக்குப் பிறகு எம்டன் சுட்டு வீழ்த்தப்பட்டது. கேப்டன் முல்லர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். கடலில் பல வெற்றிகளை நிலைநாட்டிய எம்டன், அதே கடலில் அமைதியாக ஜலசமாதியானது.
 
நன்றி - தினத்தந்தி
 
* முதல் உலகப் போரின்போது இந்தியாவில் தாக்குதலுக்கு உள்ளான ஒரே நகரம் சென்னை தான்.
 
* எம்டன் தாக்கியதில் உயர்நீதிமன்ற சுற்றுசுவரின் ஒரு பகுதி மட்டும் சேதமடைந்தது. இதன் நினைவாக நீதிமன்றத்தில் இன்றும் ஒரு கல்வெட்டு இருக்கிறது.
 
* ஜெர்மனியின் எம்ஸ் நதிக்கரையில் உள்ள எம்டன் நகரின் நினைவாக இந்த கப்பலுக்கு எம்டன் எனப் பெயரிடப்பட்டது.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Saturday, November 3, 2012

கொள்ளைக்காரன் ராபர்ட் கிளைவ்

 

வரலாறு வெற்றியாளர்களாக பதிவு செய்திருக்கும் சிலர் சொந்த வாழ்க்கையில் படுதோல்வியடைந்து பரிதாபத்திற்குரியவர்களாக இருந்திருக்கிறார்கள். இந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனி ஆழமாக காலூன்ற மிக முக்கியக் காரணகர்த்தா என்று ஆங்கிலேயர்களால் கொண்டாடப்பட்ட ராபர்ட் கிளைவ் அப்படிப்பட்ட ஒருவர்தான். மிக இளம் வயதிலேயே வாழ்வின் உச்சங்களைத் தொட்ட கிளைவ், திடீரென ஒரு நாள் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டதே இதற்கு சாட்சி.
clive+portrait.jpg
ராபர்ட் கிளைவ்
இங்கிலாந்தின் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த ராபர்ட் கிளைவ், 17 வயதில் கிளர்க் வேலைக்காக பாய்மரக் கப்பல் ஒன்றில் இந்தியாவுக்கு பயணமானார். பயணத்தின் போது, குடித்துவிட்டு கலாட்டா செய்த கிளைவ் சொந்த ஊரில் இருந்தபோதும் கிட்டத்தட்ட அதையேதான் செய்து கொண்டிருந்தார். எனவேதான் அவரது தந்தை ரிச்சர்ட் கிளைவ் பையன் கொஞ்சம் உருப்படட்டுமே என்ற எண்ணத்தில் இந்தியாவிற்கு அனுப்பி வைத்தார். ஆனால் கிளைவ் இந்தியாவை உருப்பட விடாமல் செய்யப் போகிறார் என்பது அந்த தந்தைக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை.
 
துடுக்குத்தனத்தைப் போலவே இளைஞர் கிளைவிடம் நிறையவே புத்திசாலித்தனமும் இருந்தது. லத்தீனும் ஆங்கிலமும் கற்றிருந்த கிளைவ்,புயலால் சேதமடைந்து கப்பல் சில மாதங்கள் பிரேசில் நாட்டின் ரியோடி ஜெனிரோ நகரில் நின்றபோது, போர்த்துக்கீசிய மொழியையும் கற்றுக் கொண்டார். அதுமெட்ராஸில் அவருக்கு பெரிதும் கை கொடுத்தது.
 
18 மாத நீண்ட பயணத்திற்கு பிறகு, ஒரு வழியாக 1744இல் மெட்ராஸில் காலடி வைத்த கிளைவ், குறுகிய காலத்திலேயே இந்திய வரலாற்றிலும் அழுத்தமாக கால் பதித்தார். வாழ்வில் முன்னேற குறுக்கு வழிதான் சுலபமானது என முடிவெடுத்த கிளைவ், அந்த வழியில் மிக வேகமாக தனது பயணத்தை தொடர்ந்தார். கொடுக்க வேண்டியதைக் கொடுத்து காரியங்களை சாதித்தார். இதன் மூலம் கிளர்க் வேலையில் இருந்து ராணுவப் பணிக்கு மாறிய கிளைவ், பதவிப் படிகளில் கிடுகிடுவென ஏறினார். 1749இல் பிரெஞ்சுப் படையினரைத் தோற்கடித்து ஆற்காடு பகுதியைக் கைப்பற்றினார். அடுத்தடுத்து போர்களை நடத்தி தென்னிந்தியாவின் பல பகுதிகளை ஆங்கிலேய வசமாக்கினார் ராபர்ட் கிளைவ்.
 
வெற்றிகளைக் குவித்த கிளைவ், சொந்த வாழ்வில் அடுத்த கட்டத்திற்கு செல்ல முடிவெடுத்தார். தனது நண்பரின் சகோதரியான மார்க்ரெட்டைக் கரம் பிடித்தார். வரலாற்று சிறப்புமிக்க அந்த திருமணம் 1753-ம் ஆண்டு சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள தேவாலயத்தில் நடைபெற்றது.
 
திருமணம் ஆனதும் மனைவியுடன் கிளைவ் தாயகம் திரும்பினார். ஆனால் அவரால் அங்கே அதிக காலம் இருக்க முடியவில்லை. இதனிடையே வங்காளத்தில் ஆட்சியைக் கைப்பற்ற பிரெஞ்சுப் படைகளுடனான போரில் வெற்று பெற ஒரு திறமையான தளபதி வேண்டும் என்று நினைத்த ஆங்கிலேயர்கள் கிளைவிற்கு அழைப்பு விடுத்தனர். இதனை ஏற்ற கிளைவ் 1756இல் மீண்டும் இந்தியா வந்தார்.
 
மெட்ராசில் இருந்து படை திரட்டிக் கொண்டு கல்கத்தா சென்றார். அங்கே யுத்தக் கைதியாகப் பிடிபட்ட கிளைவ், லஞ்சம் கொடுத்து சிறையில் இருந்து தப்பினார். பணத்தின் பலத்தை நன்றாகப் புரிந்துகொண்ட கிளைவ், பலரையும் 'கவனித்து' சரித்திரப் புகழ்பெற்ற பிளாசி யுத்தத்தில் வெற்றியை 'வாங்கினார்'. இந்த வெற்றிதான் அடுத்த இரண்டு நூற்றாண்டுகளுக்கு இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சியை நிலைநிறுத்த உதவியது.
clive+war.jpg
பிளாசி யுத்தம்
வளமான வங்காளத்தின் ஆளுநரான கிளைவ், தனிப்பட்ட முறையிலும் எக்கச்சக்கமான செல்வத்தைக் குவித்தார். இப்படி முப்பது வயதுக்குள் கிழக்கிந்திய கம்பெனியின் பெரும் பதவிகளை வகித்துலட்சக்கணக்கில் பணத்தையும் வைரங்களையும் குவித்த கிளைவ் 1760இல் பெரும் செல்வந்தராக நாடு திரும்பினார். இருக்கும் பணத்தைக் கொண்டு பல தோட்ட வீடுகளை வாங்கிய கிளைவ் இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினராகி பேரும் புகழும் அடைந்தார். ஆனால் இதுவும் நீடிக்கவில்லை. 1764இல் காலம் மீண்டும் கிளைவை இந்தியாவிற்கு அனுப்பியது.
 
மூன்றாவது பயணத்திலும் முடிந்த வரை கொள்ளையடித்தார் கிளைவ். பெரும் செல்வத்துடன் நாடு திரும்பிய கிளைவிற்கு அங்கு ஒரு சோதனை காத்திருந்தது. அதிகாரத்தைப் பயன்படுத்தி மோசடிகளில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் இங்கிலாந்து நாடாளுமன்றம் அவர் மீது விசாரணை நடத்தியது. அன்றைய வங்காளத்தின் மொத்த வருமானம் கோடியே 30லட்சத்து 66,761 ரூபாய். செலவு லட்சத்து 27,609 ரூபாய். இதில் ராபர்ட் கிளைவ் அடைந்த ஆதாயம் 2 லட்சத்து 50,000 ரூபாய் என்று அந்த குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மகத்தான ஊழல் விசாரணையில் தப்பித்துவிட்டாலும், அவரால் மனசாட்சியிடம் இருந்து தப்பிக்க முடியவில்லை.
 
கிளைவின் உடல்நலம் நலிவடையத் தொடங்கியது. ரத்தக் கொதிப்பால் தூக்கமின்றி அவதிப்பட்ட கிளைவிற்கு பித்தப்பை கோளாறும் இருந்தது. தூக்கம் வருவதற்காக தினமும் போதை ஊசி போட்டுக் கொண்டதால் நரம்புத் தளர்ச்சி அதிகமானது. வலியாலும் வேதனையாலும் அழுது கதறிய கிளைவ், தன்னைக் கொன்று விடும்படி மன்றாடினார். இறுதியில் 1774-ம் ஆண்டு 49-ம் வயதில் தனது பகட்டான பண்ணை வீடு ஒன்றில் கழுத்தை அறுத்துக் கொண்டு ரத்தம் சொட்டச் சொட்ட பரிதாபமாக செத்துப் போனார் ராபர்ட் கிளைவ்.
 
படுக்கையில் சிந்திக் கிடந்த ரத்தத்தில், கிளைவ் இந்தியாவில் செய்த பாவங்கள் அமைதியாக பிரதிபலித்துக் கொண்டிருந்தன.
 
நன்றி - தினத்தந்தி
 
* கிளைவ் முதன்முறையாக இந்தியா வந்தபோது, கப்பலில் இருந்து கடலில் விழுந்துவிட்டார். உடன் இருந்தவர்கள் அவரைக் காப்பாற்றியதால் உயிர் பிழைத்தார்.
 
* கிளைவ் இந்தியாவில் இருந்து கொண்டு சென்ற அரிய கலைப் பொக்கிஷங்கள் இங்கிலாந்தில் உள்ள கிளைவ் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
 
* சுமார் 260 ஆண்டுகளுக்கு முன் கிளைவ் தனது மனைவியுடன் வசித்த வீடு, புனித ஜார்ஜ் கோட்டைக்குள் 'கிளைவ் இல்லம்' என்ற பெயரில் இன்றும் இருக்கிறது.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Saturday, December 29, 2012

மெட்ராஸ் - பெயர் வந்த கதை

 

நீங்கள் மெட்ராஸ்காரரா, சென்னைக்காரரா என யாராவது கேட்டால் அவர்களை ஏற இறங்கத்தான் பார்க்கத் தோன்றும். ஆனால் மெட்ராஸ், சென்னை ஆகியவை இரண்டு தனித்தனிப் பகுதிகள் என்பதுதான் உண்மை. இந்த இரண்டின் பெயருக்குப் பின்னாலும் ஏராளமான கதைகள் இருக்கின்றன.
 
மெட்ராசை மெட்ராஸ்பட்னம்மதராபட்னம்மத்ராஸ்படான்மதராஸ்படம்,மதரேஸ்பட்னம்மத்தராஸ்மதராஸ்மதரேஸ்படான்மதராஸாபடான்,மாத்ரிஸ்பட்னம்மதேராஸ்மதிராஸ் என ஆங்கிலேயர்களும்,பிரெஞ்சுக்காரர்களும்டச்சுக்காரர்களும்போர்த்துகீசியர்களும் அவரவர் வசதிக்கேற்ப அழைத்திருக்கிறார்கள்.
 
1639ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் தேதிபிரான்சிஸ் டே என்ற கிழக்கிந்திய கம்பெனி ஏஜெண்ட் சோழமண்டலக் கடற்கரையில் ஒரு துண்டு பொட்டல் நிலத்தை வாங்கினார். பிரிட்டீஷார் அந்த இடத்தில் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையை கட்டினர். கோட்டையை சுற்றி மெல்ல வளர்ந்து விரிவடைந்ததுதான் இன்றைய சென்னை மாநகரம். இதுதான் சென்னையின்'சுருக்வரலாறு.
Chennai+Old+Mount+Road+Anna+salai.jpg
அந்தக்கால மெட்ராஸ்
 
பிரான்சிஸ் டே வாங்கிய நிலம்சில மீனவக் குடும்பங்களும்இரு பிரெஞ்சு பாதிரியார்களும் வசித்த சிறிய கிராமத்திற்கு தெற்கே இருந்தது. அந்த கிராமத்தின் ரோமன் கத்தோலிக்க தலையாரியின் பெயர் மாதராஸன் என்றும்எனவே அந்த கிராமம் மாதராஸ்பட்னம் என்றும் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தலையாரியின் வாழைத் தோட்டத்தைதொழிற்சாலை அமைப்பதற்காக டே வாங்கினார். நிலத்தை கொடுக்க அவர் முரண்டு பிடித்ததால்அங்கு அமையவிருக்கும் தொழிற்சாலைக்கு மாதராஸன்பட்னம் எனப் பெயரிடுவதாக வாக்களித்துடே நிலத்தை வாங்கியதாக சொல்லப்படுகிறது.
 
மதராஸ் என பெயர் வந்ததற்கு வேறு ஒரு சுவையான காரணமும் கூறப்படுகிறது. ஆங்கிலேயர்களுக்கு முன்பே சாந்தோம் பகுதியில் போர்த்துகீசியர்கள் வசித்து வந்தனர். இங்கு பிரான்சிஸ் டேவிற்கு ஒரு காதலி இருந்தார். காதலிக்கு அருகிலேயே வசிக்க வேண்டும் என்பதாலேயே டே அந்த துண்டு நிலத்தை தேர்வு செய்தார் என்று ஒரு கதை உள்ளது. டேவின் காதலி சாந்தோமில் அந்நாட்களில் செல்வாக்குடன் வாழ்ந்துவந்த மாத்ரா குடும்பத்தை சேர்ந்தவர். கடற்கரை ஓரத்தில் இருந்த நிறைய குப்பங்கள் அவர்களுக்கு சொந்தமாக இருந்தன. எனவேடே தனது காதலியின் குடும்பப் பெயரை இந்நகருக்கு சூட்டியிருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
 

Chennai+City+Map-1909.jpg
1909இல் மெட்ராஸ் வரைபடம்
 
எக்மோர் ஆற்றுக்கும் கூவம் ஆற்றுக்கும் இடையில் இருந்த நிலம்சந்திரகிரி ராஜாவிற்கு சொந்தமானது. அதனை வாங்க அவரது உள்ளூர் நாயக்குகளான தாமர்லா சகோதரர்களிடம் பிரான்சிஸ் டே பேரம் பேசினார். அவர்கள் தங்கள் தந்தை சென்னப்ப நாயக்கரின் பெயரைபுதிதாக அமையவிருக்கும் குடியிருப்புக்கு சூட்ட வேண்டும் என்ற கோரிக்கையுடன் நிலத்தை கிழக்கிந்திய கம்பெனிக்கு பட்டா எழுதிக் கொடுத்ததாகவும், அதனால் அந்த பகுதிக்கு சென்னப்பட்டினம் எனப் பெயர் வந்ததாகவும் சொல்லப்படுகிறது. ஆக, மதராஸபட்டினம் வடக்கிலும்சென்னப்பட்டினம் தெற்கிலும் இருந்த இருவேறு பகுதிகள். பின்னர் காலப்போக்கில் இரண்டையும் ஒருங்கிணைத்து மதராஸ் என ஆங்கிலேயர்கள் அழைக்கத் தொடங்கினர்.
 
இவை தவிர வேறு சில காரணங்களும் கூறப்படுகின்றன. சோழமண்டல கடற்கரையில் வரும் இப்பகுதிசோழப் பேரரசின் சிற்றரசர்களான முத்தரையர்கள்வசம் கொஞ்ச காலம் இருந்ததால்இது முத்தராசபட்டினம் என்று அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது முத்தராசாமுத்ராஸ்,மத்ராஸ் என மருவியிருக்கலாம் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.
ஆற்காடு நவாப்புகள் மதராஸ்பட்டினத்தில் இருந்த மதராஸா எனும் சமயப் பள்ளிகளுக்கு பல தலைமுறைகளாக காப்பாளர்களாக இருந்து வந்திருக்கிறார்கள். மதராஸா என்றால் சமயப்பள்ளி என்று பொருள். அதனால் மதராஸா என்ற சொல்லில் இருந்துதான் மதராஸ் எனும் பெயர் வந்ததாகவும் சொல்கிறார்கள்.
 
இதேபோன்று சென்னை பெயருக்கு பின்னாலும் பல காரணங்கள் கூறப்படுகின்றன. ஒருகாலத்தில் சென்னையைச் சுற்றியுள்ள நிலப்பகுதிகள் செம்மை நிறத்தில் காணப்பட்டன. அதனால் அந்தப் பகுதிக்கு செம்மை என்று பெயர் வைக்கப்பட்டது. நாளடைவில் செம்மை என்பது சென்னையாக மாறிப்போனது என்பது ஒரு கருத்து.
 
ஆரம்ப நாட்களில் ஜார்ஜ் கோட்டைக்குள்தான் காளிகாம்பாள் கோயில் இருந்தது. பின்னர்தான் தம்பு செட்டித் தெருவிற்கு அம்மன் இடம் மாறினாள். ஏற்கனவேகோட்டைப் பகுதிக்குள் இருந்ததால் கோட்டையம்மன் என்ற பெயரும் அவளுக்கு உண்டு. இந்த காளிகாம்பாளுக்கு பக்தர்கள் செந்தூரம் பூசி வழிபட்டதால், சென்னம்மன்’ என்று அழைத்தார்கள். ‘சென்னம்மன்’ குடியிருக்கும் இடம் படிப்படியாக வளர்ச்சி கண்டது. நாளடைவில் சென்னம்மன் சென்னையாக மாறியதாக ஒரு தரப்பினர் சொல்கின்றனர். சென்னம்மன் என்பதை 'செம் அன்னை' என்றும் சிலர் அழைத்தனர். இந்தச் செம் அன்னை தான் சென்னை என மாறியதாகவும் கூறப்படுகிறது.
 
சென்னைப் பகுதியில் சென்னக் கேசவப் பெருமாள் கோயில் எனும் பெயரில் ஒரு கோயில் இருந்தது. இப்போதும் இருக்கிறது. இந்தக் கோயில் நகரத்தின் முதன்முகப்பில் இருந்ததால், இக்கோயில் இருந்த நகரத்திற்கு சென்னை என்ற பெயர் வந்ததாகச் சிலர் கூறுகின்றனர். சென்னக் கேசவப் பெருமாள் என்பது சரியாசின்னக் கேசவப் பெருமாள் என்பது சரியா எனத் தெரியவில்லை. ‘சின்ன’ என்ற சொல் ‘சென்ன’ என்று மாறிப் போனதாகவும் செய்திகள் உள்ளன.
 
இப்படி தனது பெயருக்கு பின்னால் ஏராளமான மர்மங்களை ஒளித்து வைத்தபடிஆங்கிலத்தில் மெட்ராஸ் என்றும்தமிழில் சென்னை என்றும் அழைக்கப்பட்டு வந்த இந்நகரம்இனி அனைத்து மொழிகளிலும் சென்னை என்றே அழைக்கப்படும் என 1996ஆல் தமிழக அரசு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து மெட்ராஸ் அதிகாரப்பூர்வமாக சென்னை என்று பெயர் மாற்றம் பெற்றது.
 
நன்றி - தினத்தந்தி
 
* மசூலிப்பட்டணத்து ஆங்கிலேயர்கள் 1639ஆம் ஆண்டு சூரத்திற்கு எழுதிய கடிதத்தில் 'மதராசபட்டம் என்ற ஒரு இடம் செயின்ட் தோமுக்கு அருகில் இருக்கிறது' எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
 
* அமெரிக்காவின் ஒரெகான் மாகாணத்தில் 'மெட்ராஸ்' என்று ஒரு ஊர் இருக்கிறது. நமது மெட்ராசில் இருந்து அங்கு சென்ற துணிகளில் அச்சடிக்கப்பட்டிருந்த சொல்லில் இருந்துதான், 1903இல் அந்த ஊருக்கு இந்த பெயர் வந்தது.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Sunday, December 23, 2012

பாவப்பட்ட பிகட்

 

ஒருமுறை கதாநாயகன் வேடம் போட்டுவிட்டு அதே நாடகத்தில் மறுமுறை வில்லன் வேடம் கிடைத்தால் எப்படி இருக்கும்? அப்படி ஒரு வாழ்க்கையோடு போராடியவர்தான் சென்னையின் ஆளுநராக இருந்த ஜார்ஜ் பிகட் (George Pigot).
pigot.jpg
ஜார்ஜ் பிகட்
 
ஜார்ஜ் கோட்டைக்குள் இருக்கும் புனித மேரி தேவாலயத்தின் முன்புறம் ஏராளமான கல்லறைக் கற்கள் இருக்கின்றன. மெட்ராசில் வாழ்ந்து மறைந்த பல முக்கியப் பிரமுகர்களின் பரலோக விசிட்டிங் கார்டுகளைப் போல இருக்கும் இந்த கற்களின் பின்னால் ஒரு கதை இருக்கிறது.
 
1758-59இல் பிரெஞ்சுப் படைகள் சென்னையை முற்றுகையிட்ட போது, இன்றைய சட்டக்கல்லூரி இருக்கும் இடம் சுடுகாடாக இருந்தது. எனவே இங்கிருந்த கல்லறை மேடைகளை பீரங்கி நிறுத்தவும், கல்லறை ஸ்தூபிகளை மறைந்துகொண்டு சுடவும் பிரெஞ்சுப் படையினர் பயன்படுத்தினர். இதனால் கடுப்பான கம்பெனியினர், போர் ஓய்ந்ததும் இந்த கற்களை அகற்றி புனித மேரி தேவாலயத்தின் முற்றத்தில் பதித்துவிட்டனர். மற்றபடி தேவாலய வளாகத்திற்குள் புதைக்கப்பட்டவர்கள் வெகு சிலரே. அப்படி தேவாலயத்திற்குள்ளேயே புதைக்கப்பட்ட முதல் நபர் ஜார்ஜ் பிகட்தான்.
 
பதினேழு வயது சிறுவனாக எழுத்தர் வேலை பார்ப்பதற்காக இங்கிலாந்தில் இருந்து மெட்ராசிற்கு வந்தவர்தான் பிகட். கடின உழைப்பு அவரை 36 வயதில் மெட்ராசின் ஆளுநர் ஆக்கியது. இவர் ஆளுநராக இருந்தபோதுதான் பிரெஞ்சுப் படைகள் தளபதி லாலி தலைமையில் ஜார்ஜ் கோட்டையை முற்றுகையிட்டன. 65 நாட்கள் நீடித்த இந்த முற்றுகையை பிகட் திறமையாக சமாளித்தார்.
 
போர் முடிந்ததும் மெட்ராசின் வளர்ச்சிப் பணிகளிலும் பிகட் மும்முரமாக ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் இங்கிலாந்து திரும்ப முடிவெடுத்த அவர், தமது 45வது வயதில் பதவியைத் துறந்துவிட்டு தாயகத்திற்கு கப்பல் ஏறினார். அவரின் சேவையைப் பாராட்டி, அயர்லாந்தின் பிரபுப் பட்டம் வழங்கப்பட்டது. இந்தியாவில் சேர்த்த 45 லட்சம் ரூபாய் பணத்தைக் கொண்டு, அயர்லாந்தில் சொகுசான எஸ்டேட்டில் கடைசி காலத்தில் ஹாயாக ஓய்வெடுக்கலாம் என்று பிகட் நினைத்தார். ஆனால் விதி வேறுவிதமாக நினைத்தது.
 
12 ஆண்டுகள் கழித்து இந்தியாவில் இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடுவதற்கு அவருக்கு அழைப்பு வந்தது. இந்த அழைப்பின் பின்னால் இருக்கும் ஆபத்து தெரியாமல் பிகட் இதனை ஏற்றுக் கொண்டார். மீண்டும் ஆளுநராக பதவி ஏற்பதற்காக மெட்ராஸ் வந்து இறங்கினார். ஆனால் மெட்ராஸ் வெகுவாக மாறியிருந்தது. இங்கிருந்த அரசியல் சூழலும் அதற்கேற்ப பல்வேறு மாற்றங்களை சந்தித்திருந்தது.
 
இந்த மாற்றங்களை ஏற்க மறுத்ததுதான் பிகட்டின் ஏமாற்றங்களுக்கான தொடக்கமாக அமைந்தது. முதல் முறை ஆளுநராக இருந்தபோது பிகட்டிற்கு உதவி செய்ய, உறுதுணையாக நிற்க நிறைய நண்பர்கள் இருந்தார்கள். அவர்கள் எல்லோரும் பிகட்டோடு சேர்ந்து வாழ்க்கையைத் தொடங்கியவர்கள், சம வயதுக்காரர்கள். ஆனால் இம்முறை பிகட் தனி மரமாக நின்றார். வயோதிகம் அவரை சற்று சிடுசிடுப்பு மிக்கவராகவும் மாற்றியிருந்தது.
 
வந்த உடனேயே இங்கிருந்த கவுன்சிலர்களோடு மோதினார். விளைவு சில மாதங்களிலேயே பலரின் பகையை சம்பாதித்துக் கொண்டார். முதல்முறை ஆளுநராக இருந்தபோது தனது உத்தரவுகளை நிறைவேற்ற ஆட்கள் அடித்துப் பிடித்து ஓடுவதைப் போல இப்போதும் நடக்கும் என பிகட் எதிர்பார்த்தார். ஆனால் அவரவர் தங்கள் அதிகாரங்களை நிலைநிறுத்துவதிலும், இந்திய ராஜாக்களின் சண்டையில் எப்படி ஆதாயம் அடையலாம் என கணக்குப் போடுவதிலும் மும்முரமாக இருந்ததால் இவரது ஆணைகளை காது கொடுத்துக் கூட கேட்கவில்லை.
 
கடுப்பாகிப் போக பிகட் ஒருகட்டத்தில் சில கவுன்சிலர்களை கைது செய்ய உத்தரவிட்டார். ஒருமுறை கோபத்தின் உச்சிக்கு போய் கோட்டையின் தளபதியையே கைது செய்யச் சொன்னார். ஆனால் கவுன்சிலர்கள் ஒன்றுகூடி முடிவெடுத்து பிகட்டை கைது செய்துவிட்டனர். இரவு விருந்து ஒன்றில் கலந்துகொள்வதற்காக குதிரை வண்டியில் சென்றுகொண்டிருந்த பிகட்டை திடீரென சிலர் வழிமறித்தனர். என்ன நடக்கிறது என சுதாரிப்பதற்குள் செயின்ட் தாமஸ் மலையில் உள்ள வீடு ஒன்றிற்கு அழைத்துச் சென்று சிறை வைத்துவிட்டனர்.
arrest+of+pigot.jpg
கைது செய்யப்படும் பிகட்
 
சுமார் ஒன்பது மாதங்கள் அந்த வீட்டுச் சிறையில் இருந்த பிகட் உடல்நலம் குன்றியதால் அரசு இல்லத்திற்கு மாற்றப்பட்டார். ஆனாலும் உடல்நலனில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் 1777ஆம் ஆண்டு ஒருநாள் திடீரென உயிரை விட்டார். பிகட்டின் உடலை சிறப்பு (!) மரியாதைகளுடன் புனித மேரி தேவாலயத்திற்குள் புதைத்துவிட்டனர்.
 
இதனிடையே பிகட்டை சிறை வைத்தது குறித்த விசாரணை இங்கிலாந்தில் நடைபெற்றது. இறுதியில் பிகட்டை சிறை வைத்த 7 கவுன்சிலர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர். நான்கு பேருக்கு தலா ஆயிரம் பவுண்ட் அபராதம் விதிக்கப்பட்டது. பிகட்டிற்கு மீண்டும் ஆளுநர் பதவி அளிக்க வேண்டும், அதனை அவரே ராஜினாமா செய்வார் என்று உத்தரவிடப்பட்டது. ஆனால் இந்த உத்தரவு ஊரெல்லாம் சுற்றிக் கொண்டு இந்தியா வருவதற்குள் பிகட் உலகை விட்டே போய்விட்டார்.
 
இறுதியில், என்னதான் திறமைசாலியாக இருந்தாலும் மாற்றங்களை ஏற்க மறுத்தால் ஒருவனின் நிலை என்னவாகும் என்பதற்கு உதாரணமாகிவிட்டார் லார்ட் பிகட்.
 
நன்றி - தினத்தந்தி
 
* பிகட் திருமணம் செய்துகொள்ளவில்லை. இருந்தாலும் அவருக்கு நிறைய குழந்தைகள் இருந்தனர்.
 
* பிகட்டிடம் ஒரு விசேஷமான வைரம் இருந்தது. அது அந்த காலத்தில் பிகட் வைரம் என்றே அழைக்கப்பட்டது.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Saturday, December 15, 2012

மெட்ராஸ் பாஷை

 

இன்னாபா... ஷோக்கா கீறியா?... நாஸ்டா துன்னுக்கினியா? என்று யாராவது விசாரித்தால் மெர்சலாகிவிடாதீர்கள்.. அதாவது மிரண்டு விடாதீர்கள். அக்மார்க் மெட்ராஸ்வாசிகளின் அன்பின் வெளிப்பாடாக கரைபுரண்டு வரும் வார்த்தை வெள்ளத்தின் நட்புத்துளிகள்தான் அவை. மூன்றரை நூற்றாண்டுகளைக் கடந்துவிட்ட மெட்ராஸ் மாநகரின் அடையாளங்களில் மிகவும் முக்கியமானது இந்த மெட்ராஸ் பாஷை.
 
மெட்ராஸ் பாஷையின் அழகே அதன் வேகமும், எளிமையும்தான். ஆங்கிலம், தெலுங்கு, உருது என இந்த பகுதியில் புழங்கிய அனைத்து மொழிகளிலும் கொஞ்சம் கொஞ்சம் பிய்த்து எடுத்து தமிழோடு பிசைந்து உருவாக்கிய கூட்டாஞ்சோறு மொழிதான் மெட்ராஸ் பாஷை. எவ்வளவு பெரிய சொற்றொடரையும் அப்படியே நசுக்கி பிசுக்கி ஒற்றைச் சொல்லாய் வார்த்து எடுக்கிற வார்த்தைச் சித்தர்களால் உருவானதுதான் இந்த அழகிய மொழி.
old+madras1.jpg
மெட்ராஸ் பாஷையின் வாத்தியார்கள்
உதாரணத்திற்கு, 'இங்கே அழைத்துக் கொண்டு வந்து விடு' என்பதை மெட்ராஸ் பாஷையில் ரத்தினச் சுருக்கமாக 'இட்டாந்துடு' என்று சொல்லிவிடலாம். அதேசமயம் 'இட்டுக்குனு வா' என்பதற்கும் 'இஸ்துகுனு வா' என்பதற்கும் கடலளவு வித்தியாசம் இருக்கிறது. முன்னது அழைத்துக் கொண்டு வருவது, பின்னது இழுத்துக் கொண்டு வருவது. இந்த வார்த்தை விளையாட்டுகள் தமிழோடு நின்றுவிடுவதில்லை. ஆங்கிலத்தின் பங்களிப்பும் இதில் பெருமளவு இருக்கிறது.
 
அந்தக் காலத்தில் ஆங்கிலேயர்களோடு அதிகம் பழகிய ரிக்ஷாக்காரர்கள்தான் மெட்ராஸ் பாஷையின் வாத்தியார்கள். உன்னோட படா பேஜாரா பூட்ச்சுபா... என அலுத்துக் கொள்பவர்கள் அதற்குள் ஒரு ஆங்கிலச் சொல் இருக்கிறது என்பதை அறிந்திருக்க வாய்ப்பில்லை. அந்தக் காலத்தில் இங்கிலாந்தில் இருந்து கப்பலில் வந்திறங்கும் ஆங்கிலேயர்களை, இன்று வெளியூர்வாசிகளை ஆட்டோக்காரர்கள் கையைப் பிடித்து இழுப்பதைப் போல, ரிக்ஷாக்காரர்கள் அன்புத் தொல்லையில் பிய்த்தெடுத்திருக்கிறார்கள். இதனால் கடுப்பாகும் சில ஆங்கிலேயர்கள் dont badger me (என்னை நச்சரிக்காதே) என்று சொல்லி தவிர்த்திருக்கிறார்கள். வெள்ளைக்காரன் சொன்ன அந்த badger-ஐ, நம்ம ரிக்ஷாக்காரர்கள் அப்படியே தங்களின் குப்பத்திற்கு எடுத்துச் சென்று பேஜார் ஆக்கிவிட்டார்கள். இவை போக பக்கெட்டு (BUCKET), பாமாயிலு (PALM OIL), பிஸ்கோத்து (BISCUIT), என நிறைய சொற்களை அப்படியே ஆங்கிலத்தில் இருந்தும் எடுத்தாண்டு கொண்டு இருக்கிறார்கள்.
 
ஆங்கிலம் மட்டுமின்றி மற்ற மொழிகளும் மெட்ராஸ் பாஷையில் கலந்திருக்கின்றன. 'பஜாரி' என்ற சொல் உருது மொழியில் இருந்து உருவானது. உருதுவில் பஜார் என்றால் சந்தை என்று அர்த்தம். இதனால் சந்தைக்கடையில் நின்று சத்தம் போடுபவள் பஜாரி ஆகிவிட்டாள். ஆனால் பஜாரன் என்று ஒரு சொல் இல்லை. ஆக இதிலும் ஆணாதிக்கம் இருந்திருக்கிறது என்பதை கவனிக்கவும். பேக்கு என்பது கூட உருதுவில் இருந்து வந்ததுதான். பேவ்கூஃப் என்றால் உருது மொழியில் முட்டாள் என்று அர்த்தம். சென்னைவாசிகள் இந்த பேவ்கூஃபைத் தான் சுருக்கி பேக்கு என்று ஆக்கிவிட்டார்கள். இப்படி ஒவ்வொரு சொல்லுக்கு பின்னும் ஒரு மொழியியல் வரலாறே இருக்கிறது.
 
சென்னையின் ஒரு பகுதியில் மட்டும் புழங்கிக் கொண்டிருந்த இந்த பாஷையை நாடறியச் செய்த பெருமை தமிழ் திரையுலகிற்கு உண்டு. எம்.ஆர். ராதா, சந்திரபாபு, தேங்காய் சீனிவாசன் தொடங்கி லூஸ் மோகன், கமலஹாசன் வரை பலரும் இந்த பாஷையைப் பேசி இதன் பெருமையை பறைசாற்றி இருக்கிறார்கள். 'வா வா வாத்யாரே ஊட்டாண்ட..' என்ற மெட்ராஸ் பாஷை பாடல் தமிழகம் முழுவதும் பட்டிதொட்டி எங்கும் அலறியது.
 
ஜெயகாந்தன் போன்றவர்கள் இதே பணியை எழுத்து மூலம் செய்திருக்கிறார்கள். ஜெயகாந்தனின் 'சினிமாவுக்கு போன சித்தாளு' பேசிய பல சொற்கள் இன்று வழக்கத்தில் இருந்து மறைந்துவிட்டன. ஆனால் இன்றும் அந்த சித்தாள் நமது நினைவுகளில் நிழலாடிக் கொண்டிருக்கிறாள்.
 
தமிழகத்தின் பிற பகுதியினராலும் மெட்ராஸ் பாஷை ரசிக்கப்படுவதற்கு முக்கியக் காரணம் அதில் இருக்கும் வேகமும், ஒலிநயமும்தான். 'அடக் படக் டிமிக் அடிக்கிற டோலு மையா டப்ஸா' போன்ற சொற்களுக்கு எந்த அர்த்தமும் இல்லாவிட்டாலும் அந்த ஓசைநயம் கேட்பவர்களை திக்குமுக்காட வைத்துவிடுகிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. அதேபோல எவ்வளவு அரிய கருத்தையும் பாமரனுக்கும் புரியும் வகையில் பந்தி வைக்கவும் இந்த மெட்ராஸ் பாஷையால் முடிகிறது என்பது இதன் கூடுதல் பலம்.
 
ஆரம்ப நாட்களில் பேசப்பட்ட மெட்ராஸ் பாஷைக்கும் இன்று பேசப்படும் பாஷைக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. அன்று புழக்கத்தில் இருந்த பல சொற்கள் மறைந்து தற்போது அந்த இடத்தில் ஃபீல் பண்ணி, செக் பண்ணி, டிபன் பண்ணி என நிறைய பண்ணிவிட்டார்கள். ஆனாலும் புதுப்புது சொற்களை அப்படியே அல்லது சற்று நமது வசதிக்கேற்ப உருமாற்றி பயன்படுத்துவது என்ற பாரம்பரியம் மட்டும் இன்றளவும் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. அதனால்தான் மெட்ராஸ் பாஷை ஷோக்கா கீதுபா!
 
நன்றி - தினத்தந்தி
 
 
மெட்ராஸ் பாஷை அகராதியில் சில...
 
கில்லி - திறமையான ஆள்
ஜல்பு - ஜலதோஷம்
மட்டை - போதையில் மயங்கி விழுவது
மால் - கமிஷன்
பீட்டர் - பெருமைக்காக ஆங்கிலம் பேசுபவர்
பீலா - பொய் சொல்வது
கலீஜ் - அசுத்தம்


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

ஆனந்தரங்கப் பிள்ளை

 

நமது தாத்தாவின் டைரி திடீரென நமக்கு கிடைத்தால் எப்படி இருக்கும்? நூறு ஆண்டுகளுக்கு முன் ஒவ்வொரு நாளும் என்ன நடந்தது? மக்கள் அன்றாடம் என்ன செய்தார்கள்? அரசியல், பொருளாதார, சமூக சூழல் எப்படி இருந்தது என்பதெல்லாம் ஒரு கதை மாதிரி அதில் எழுதப்பட்டிருந்தால் எவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கும்? அப்படி ஒரு அனுபவத்தை தேடுபவர்கள் ஆனந்தரங்கப் பிள்ளையின் டைரிக் குறிப்புகளை படிக்கலாம்.
 
ஆனந்தரங்கப் பிள்ளை சென்னையைச் சேர்ந்த பெரம்பூரில்சர்வதாரி ஆண்டு பங்குனித் திங்கள் 21-ஆம் நாள் சனிக்கிழமை (கி. பி. 1709) பிறந்தார். அவரது தந்தை திருவேங்கடப் பிள்ளை சிறிது காலத்துக்குப் பின் புதுச்சேரியில் குடியேறி அங்கேயே தங்கிவிட்டார். புதுச்சேரியில் இந்து சம்பிரதாயங்களுக்கு ஏற்பட்ட இடையூறுகளை எதிர்த்து போராடியதால் மக்கள் மத்தியில் கதாநாயகனாகத் திகழ்ந்த அவரை பிரெஞ்சுக்காரர்கள் உதவித் தரகராக நியமனம் செய்தனர்.
 
சிறிது காலத்திற்குப் பின் அவர் திவானாக உயர்ந்தார். ஆனால் சில ஆண்டுகளிலேயே திருவேங்கடப் பிள்ளை காலமானதால் அவருக்குப் பதிலாகக் கனகராய முதலியார் என்பவர் திவான் ஆனார். அவரும் கி.பி.1746-ஆம் ஆண்டில் இறந்துவிடவேஅடுத்து திருவேங்கடப் பிள்ளையின் மகன் ஆனந்தரங்கப் பிள்ளை அந்த பதவியில் நியமிக்கப்பட்டார். திருவேங்கடம் திவானாய் இருந்தபோது ஆனந்தரங்கம் கூடவே இருந்து அவருக்கு வேண்டிய உதவிகளை செய்து வந்ததால் நன்றாக தொழில் கற்று வைத்திருந்தார். இதுவேஅவருக்குத் திவான் பதவி கிடைக்கக் காரணமாயிற்று.
 
புதுச்சேரியை ஆண்டுவந்த பிரெஞ்சு கவர்னர் துய்ப்ளேயின் (Marquis Joseph-Francois Dupleix) துபாஷியாக இருந்த ஆனந்தரங்கப் பிள்ளைபிரதம மந்திரியாகவும்இராணுவ ஆலோசகராகவும்பிரெஞ்சுக்காரர்களின் வியாபாரப் பங்காளியாகவும் மெல்ல மெல்ல உயர்ந்தார். இந்த காலகட்டத்தில் 1736 முதல் 1761-ல் தான் இறக்கும்வரை அவர் நாட்குறிப்புகளை எழுதிவைத்தார். இதற்கு  'தினப்படிச் செய்திக்குறிப்பு,சொஸ்த லிகிதம்' என்று பெயரிட்டிருந்தார்.  அன்றைய அரசியல் அரங்கை அறிந்துகொள்ள இந்த குறிப்புகள் மிகவும் உதவியாக இருக்கின்றன.
anandarangam+pillai.jpg
 
நாள்தோறும் காலையில் கவர்னர் துய்ப்ளேக்ஸ் சிற்றுண்டி அருந்தியதும் ஆனந்தரங்கப் பிள்ளையைத் தமது அவைக்கு வரவழைத்துநாட்டு நடப்புகளைப் பற்றிய செய்திகளையும் யோசனைகளையும் கேட்பதை வழக்கமாக வைத்திருந்தார். சென்னைப் பட்டணத்தின் மீது பிரெஞ்சு துருப்புகள் படையெடுத்த போது, அதனை துயிப்ளே ஆனந்தரங்கப்பிள்ளையிடம் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கிறார். "பூந்தமல்லி சீமை வகையிராமயிலாப்பூர் உள்பட பரங்கிமலை பெரிய மலைசின்ன மலை வகையிரா கொள்ளையிட்டார்கள். கொள்ளையிட்டவர்களுக்கு விஸ்தாரமாய் தினுசுகள்தானியங்கள்மாடுகள் வகையிரா அகப்பட்டதெல்லாம் அங்கங்கே தானே சரிப்போனபடிக்கெல்லாம் வித்துப் போடுகிறார்களாம். ஆனால் நம்முடவர்களுக்கு கொள்ளை நன்றாய் வாய்க்குது. ஒவ்வொருத்தன் கூலிக்காறன் கூட ஆஸ்திக்காறனாக சுகப்பட்டார்கள்".
 
இதன் விளைவாகக் குடிமக்கள் அங்குமிங்கும் இடம்பெயர்வதை, "தாமரை யிலையிலே யிருக்கிற செலம் மூலைக்கி மூலை ஆதரவன்றி யிலே ஓடி தளும்புகிறாப் போலே செனங்களும் அலையுறார்கள்" என்று ஆனந்தரங்கப்பிள்ளை கூறியிருக்கிறார். அவரின் நாட்குறிப்புகளின் பெரும்பகுதி வணிகச் செய்திகளையே விவரிக்கின்றன. நீதி வழங்கல்,தண்டனை அளித்தல் ஆகிய செய்திகளும் இதில் இடம்பெற்றுள்ளன.
 
1748ஆம் ஆண்டு செப்டம்பரில் புதுச்சேரி நகரை சென்னையிலிருந்து வந்த ஆங்கிலப்படை முற்றுகையிட்டுப் பீரங்கிகளால் தாக்கியது. இதுபற்றி 1748செப்டம்பர் 9ம் நாள் எழுதிய நாட்குறிப்பில் ஆனந்தரங்கம் பின்வருமாறு பதிவு செய்துள்ளார்.
"மற்றபடி அவன் (இங்கிலீஷ்காரன்) போட்ட தீக்குடுக்கைகள் எல்லாம் நாற்பதுக்கும் உண்டு. இந்த தீக்குடுக்கை 1-க்கு சிறிது நூற்றைம்பது ராத்தல் முதல் இருநூத்தி பத்துபதினைந்து மட்டுக்குமிருக்கிறது. இது வரும்போது ஒரு சோதி போல புறப்படுகிற வேடிக்கையும்அப்பாலே மெள்ள அசைந்து அசைந்து கொண்டு அப்பாலே விழுந்தவுடனே வெடிக்கிற வேடிக்கையும்,பார்க்கிறதற்கு ஒரு வேடிக்கையாகத் தானே இருந்தது. இத்தனை தீக்குடுக்கை விழுந்தும் ஒரு மனுஷருக்குச் சேதமில்லை. ஒருத்தருக்கும் காயம் பட்டதுமில்லை. சுட்டதும் ஒரு சப்தம்புறப்படும்போது ஒரு சூரியன் தோன்றுகிறதென்று வருகிறாப் போலே வருகிறது. வருகிறது வெகு சப்தத்துடனே வருகிறதுமல்லாமல் வெகு தொந்தியுள்ளவன் நடக்க மாட்டாமல் மெள்ள வருவானே அப்படி வருகிறபடியினாலே சமீபத்திலே வரும்போது மனுஷர் தப்பித்துக்கொள்ள விலகிப் போகலாமென்று வெகு பேருக்கெல்லாம் தைரியமுண்டாகி தீக்குடுக்கையென்றால் அதை சட்டை பண்ணி அது வருகிறதோ போகிறதா என்கிறதுகூட கேழ்க்கிறதுகூட விட்டுவிட்டார்கள். ஆனாலின்றையதினம் பயந்தவர்களுக்குள்ளே வெள்ளைக்காரர் வெள்ளைக்கார்ச்சிகளுக்கு நம்முடைய தமிழர்கள் வெகு தைரியவான்களென்று நூறு தரம் சொல்லலாம்." இவ்வாறு சுவையான பல்வேறு செய்திகள் ஆனந்தரங்கத்தின் நாட்குறிப்பில் இடம்பெற்றுள்ளன.
 
தமிழ்தெலுங்குமலையாளம்பிரெஞ்சுசம்ஸ்கிருதம்போர்ச்சுகீசு எனப் பல மொழிகளை அறிந்து வைத்திருந்த ஆனந்தரங்கப் பிள்ளை, தஞ்சை மராட்டிய மன்னர் பிரதாப சிம்ம மகாராஜாவுக்கு கடன் கொடுக்கும் அளவுக்கு பெரும் பணக்காரராகத் திகழ்ந்தார். தென்னிந்திய அரசியலில் சாணக்கியராகத் திகழ்ந்த அவர் "ஆனந்த புரவி" என சொந்தமாக கப்பல் ஒன்றையும் வைத்திருந்தார். கலைஞர்களை ஆதரித்த ஆனந்தரங்கப் பிள்ளையைப் புகழ்ந்து நிறைய பாடல்களும் எழுதப்பட்டிருக்கின்றன.
 
ஆனந்தரங்கப் பிள்ளையின் நாட்குறிப்புகளை 1846-ல் கலுவா-மொம்பிரேன் (Gallois-Montbrun) என்ற வருவாய் அதிகாரிதான் முதலில் கண்டெடுத்து பிரதியெடுத்தார். இப்படித்தான் இந்த அரிய வரலாற்றுப் பொக்கிஷம் வெளி உலகிற்கு தெரியவந்தது. ஆனந்தரங்கப் பிள்ளையின் நாட்குறிப்பைப் படிக்கும்போது, 18ஆம் நூற்றாண்டு ஆங்கிலேய - பிரெஞ்சு இந்தியா அப்படியே ஒரு திரைப்படம் போல கருப்பு வெள்ளையில் நம் கண்முன் ஓடுகிறது.

நன்றி - தினத்தந்தி

* பல்லக்கில் மேள வாத்தியத்தோடு கவர்னர் மாளிகையினுள் போகவும்,தங்கப் பிடியிட்ட கைத்தடி வைத்திருக்கவும்பாதரட்சை அணிந்து கவர்னரின் அலுவலகத்திற்குச் செல்லவும் ஆனந்தரங்கப் பிள்ளைக்கு சிறப்பு உரிமை அளிக்கப்பட்டிருந்தது.
 
* ஆனந்தரங்கப் பிள்ளையின் சுவாரஸ்யமான வாழ்க்கை வரலாறு ரா.தேசிகன் என்பவரால் எழுதப்பட்டு 1941-ல் பதிப்பிக்கப்பட்டுள்ளது. 


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

திருவல்லிக்கேணி பெரிய தெரு

 

வெள்ளைச்சாமி என்ற பெயருடன் பளீரென சிரிக்கும் கருப்பு பெரியப்பா மாதிரி தான் இருக்கிறது திருவல்லிக்கேணி பெரிய தெரு. பேருக்கும் தெருவின் அகலத்திற்கும் சம்பந்தமே இல்லை. இந்த தெருவின் உண்மையான பெயர் வீரராகவ முதலி தெரு. ஆனால் இந்தப் பெயர் இப்போது பெரும்பாலானோருக்கு தெரியாது என்றே தோன்றுகிறது. இங்குள்ள பெயர்ப்பலகை கூட BIG STREET (பெரிய தெரு) என்றுதான் இருக்கிறது.
 
big+street.jpg
திருவல்லிக்கேணி பெரிய தெரு
 
திருவல்லிக்கேணியின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் இந்த தெருவில் பெரும்பாலும் மேன்ஷன்கள்தான் இருக்கின்றன. எனவே தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து வேலை தேடி சென்னைக்கு வரும் இளைஞர்களின் சரணாலயமாக இருக்கிறது இந்த தெரு. ஒருவேளை இப்படி பெரிய மனதுடன் பலருக்கும் அடைக்கலம் தருவதால் இதற்கு பெரிய தெரு என்று பெயர் வைத்துவிட்டார்களோ என்னவோ.
 
பெரிய தெருவின் மிக முக்கிய அடையாளம் இங்கிருக்கும் இந்து மேல்நிலைப் பள்ளி. திருவல்லிக்கேணி என்ற ஊர் ஆரம்ப நாட்களில் இருந்தே கல்விக்கு முக்கியத்துவம் அளித்துவரும் பகுதியாகவே இருந்திருக்கிறது. எனவே 17ஆம் நூற்றாண்டிலேயே இந்த பகுதியில் முறையான பள்ளி வேண்டும் என்ற கோரிக்கை வலுக்கத் தொடங்கியது. விளைவு இரண்டு பள்ளிகள் தொடங்கப்பட்டன.
 
தமிழ் பையன்கள் படிப்பதற்காக 'திராவிட பாடசாலை' என்று ஒன்றும், தெலுங்கு பையன்களுக்காக 'இந்து ஆந்திர பாலரு பாடசாலையும்' ஆரம்பிக்கப்பட்டன. 1852ஆம் ஆண்டு ஆவணங்களின்படி இவை இரண்டும் தனித்தனி நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வந்தன. தமிழ் பள்ளியில் குறள், நைடதம், நன்னூல் கண்டிகை, நிகண்டு, வரலாறு, புவியியல், கணக்கு ஆகிய பாடங்கள் கற்றுத்தரப்பட்டன. விருப்பமுள்ள மாணவர்கள் மட்டும் ஆங்கிலம் படிக்கலாம். ஆண்டு இறுதியில் பொதுத்தேர்வு மூலம் மாணவர்கள் அடுத்த வகுப்பிற்கு தேர்வு செய்யப்பட்டார்கள்.
 
இந்த இரண்டு பள்ளிகளுமே மக்கள் அளித்த நிதியில்தான் ஓடிக் கொண்டிருந்தன. எனவே ஆசிரியர்களுக்கு மிகக்குறைந்த ஊதியமே வழங்க முடிந்தது. இருந்தாலும் அவர்கள் கல்வியை சேவையாகக் கருதி கண்ணும் கருத்துமாக கற்பித்திருக்கிறார்கள். தமிழ் பள்ளிக்கு ஆரம்ப நாட்களில் அரசும், பச்சையப்பர் அறக்கட்டளையும் நிதி உதவி அளித்து வந்தன. ஒருகட்டத்தில் இரண்டு பள்ளிகளுக்கும் நிதி அளிக்க பொதுமக்கள் சிரமப்பட்டதால் இரண்டு பள்ளிகளையும் ஒன்றாக்கிவிட்டால் என்ன என்று ஆலோசிக்கப்பட்டது. இப்படித்தான் 'திருவல்லிக்கேணி ஆந்திர திராவிட பாலரு பாடசாலை' உருவானது. 1864ஆம் ஆண்டு இதே நிர்வாகத்தின் கீழ் பெண்கள் பள்ளி ஒன்றும் தொடங்கப்பட்டது.
 
1897இல் இது இந்து உயர்நிலைப் பள்ளியாக உயர்ந்து தற்போதைய கட்டடத்தை வந்தடைந்தது. செக்கச்செவேலென இந்தோ - கோதிக் (Indo Gothic style) பாணியில் கட்டப்பட்டிருக்கும் இந்த மூன்று மாடிக் கட்டடத்தை ஹென்றி இர்வின் என்ற ஆங்கிலேய கட்டடக் கலைஞர் வடிவமைத்துக் கொடுத்தார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், அரசு அருங்காட்சியகம் போன்ற பல முக்கிய கட்டடங்களை வடிவமைத்தவர் இவர். இவரது வடிவமைப்பில் 40 ஆயிரம் சதுர அடியில் நம்பெருமாள் செட்டியால் கட்டப்பட்டது தான் இன்று பெரிய தெருவில் கம்பீரமாக நின்று கொண்டிருக்கும் இந்து மேல்நிலைப் பள்ளி.
 
hindu+high+school.jpg
இந்து மேல்நிலைப் பள்ளி
இந்தியாவின் ஆரம்பகால கூட்டுறவு சங்கங்களில் முக்கியமானதாக கருதப்படும், திருவல்லிக்கேணி நகர்ப்புற கூட்டுறவு சங்கம் (TUCS) இந்த தெருவில்தான் உதயமானது. ஸ்ரீனிவாச சாஸ்திரி, சிங்காரவேலர் உள்ளிட்டோர் சேர்ந்து 1904ஆம் ஆண்டு இந்த சங்கத்தை தொடங்கினர். பல்பொருள் அங்காடி முதல் நியாய விலைக் கடை வரை மக்களுக்கு குறைந்த விலையில் பொருட்கள் கிடைக்க வகை செய்த இந்த கூட்டுறவு சங்கத்திற்கு பெரிய தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நிலங்கள் இருக்கின்றன.
 
பல்துறை கலைஞர்களுக்கும் பெரிய தெரு முகவரியாக விளங்கி இருக்கிறது. ஆண்கள் மட்டுமே ஹரிகதாகாலட்சேபம் செய்து வந்த காலத்தில் பொது இடத்தில் தைரியமாக களமிறங்கிய முதல் பெண் பாகவதரான சரஸ்வதி பாய் இந்த தெருவில்தான் வசித்து வந்தார். டிகேஎஸ் சகோதரர்களும் இங்கு வசித்திருக்கிறார்கள். அதேபோல 1940களில் இசை மேதை எம்.எஸ். சுப்புலட்சுமி தமது கணவர் சதாசிவத்துடன் இங்கிருந்த வீடு ஒன்றில் வாழ்ந்திருக்கிறார். இசைபட வாழ்தல் என்பார்கள், ஆனால் இசையே வாழ்ந்த தெரு இது.
 
இப்படி இந்த தெருவைப் பற்றிய வரலாறு இந்த தெருவின் நீளத்தை விட பல மடங்கு அதிகம். இவை அனைத்தையும் விட சிறந்தது இந்த தெருவின் பன்முகத்தன்மைதான். பல்வேறு மதம் மற்றும் கலாச்சாரங்களை சார்ந்தவர்களை பல ஆண்டுகளாக ஒன்றிணைத்து தன்னகத்தே வைத்திருக்கும் இந்த தெரு உண்மையில் 'பெரிய தெரு' தான்.
 
நன்றி - தினத்தந்தி
 
* நோபல் பரிசு பெற்ற எஸ். சந்திரசேகர் முதல் உலக நாயகன் கமலஹாசன் வரை பல சாதனையாளர்களை இந்த பள்ளி உருவாக்கித் தந்திருக்கிறது.
 
* பாரதியின் தன்னுடைய ஞானரதத்தில்-

"கண்ணை விழித்துப் பார்த்தேன். மறுபடி மண்ணுலகத்திலே,
திருவல்லிக்கேணி
வீரராகவ முதலி தெருவில்கிழக்கு முகமுள்ள வீட்டு மேன்மாடத்தில்,நானும்
என் பக்கத்தில் சில வர்த்தமானப் பத்திரிகைகள்எழுதுகோல்,வெற்றிலைபாக்கு
முதலிய என்னுடைய பரிவாரங்களும் இருப்பது கண்டேன்.'' என்று எழுதி இருக்கிறார்.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Saturday, January 26, 2013

மெட்ராஸ் உயிரியல் பூங்கா

 

'நான் ஒருத்தன் பெருசா என்ன பண்ணிட முடியும்?' என அங்கலாய்ப்பவர்கள் ஒருமுறை வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு சென்று வாருங்கள். ஆயிரக்கணக்கான விலங்குகளுடன் ஏக்கர் கணக்கில் பரந்துவிரிந்திருக்கும் இந்த பிரம்மாண்ட பூங்காவிற்கு அடித்தளம், ஒரு தனிநபரின் முயற்சி என்பதை கேட்கும்போது நம்புவதற்கு சற்று கடினமாகத்தான் இருக்கும். இதுபோன்று மேலும் பல அரிய பெரிய விஷயங்களை சத்தமில்லாமல் செய்துவிட்டுப் போன சாதனை மனிதர்தான் எட்வர்ட் கிரீன் பால்ஃபர் (Edward Green Balfour).
Edward+Balfour.jpg
எட்வர்ட் பால்ஃபர்
எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்பை முடித்த பால்ஃபருக்கு, குடும்ப நண்பர் மூலம் மெட்ராசில் துணை சர்ஜன் வேலை கிடைத்தது. இதற்காக 1834இல் மெட்ராஸ் புறப்பட்ட பால்ஃபர், வழியில் மொரீஷியஸ் சென்றார். இந்த பயணம் அவரது வாழ்வை மட்டுமின்றி மெட்ராசின் வாழ்வையும் மாற்றப் போகிறது என்பது அப்போது அவருக்குத் தெரியாது. அங்கு மரங்கள் வெட்டப்பட்டு சுற்றுச்சூழல் களையிழந்து கிடந்தது பால்ஃபரின் ஆழ்மனதில் அழுத்தமாகப் பதிந்துவிட்டது.
 
1836இல் இந்தியாவில் கால்பதித்த பால்ஃபர், மருத்துவராக நாடு முழுவதும் சுற்றினார். இந்த பயணத்தின்போது இந்தி, பாரசீகம் உள்ளிட்ட மொழிகளை ஆர்வமாக கற்றுக் கொண்டார். இதனால் உள்ளூர் மக்களுடன் பேசிப் பழக வசதியாக இருக்கும் எனக் கருதி, இவரை சிறிய கிராமப் பகுதிகளில் பணியாற்ற அனுப்பினர். இதுமட்டுமின்றி அரசுக்கு மொழிபெயர்ப்பாளராகவும் அடிக்கடி பால்ஃபர் பயன்பட்டு வந்தார்.
 
இந்த பணிக்கு இடையில், பால்ஃபர் இந்தியா குறித்த பல்வேறு புள்ளிவிவரங்களைத் திரட்டினார். இவற்றைக் கொண்டு, வெவ்வேறு தட்பவெட்ப நிலையில் படையினரின் உடல்நலனைப் பேணுவது எப்படி? பருவ மாற்றத்தில் மரங்களின் பங்கு என்ன? என்பது போன்ற கட்டுரைகளை வெளியிட்டார். அவர் ஒரு மருத்துவராகவும் இருந்ததால், பருவநிலை மாற்றம் உடலில் ஏற்படுத்தக் கூடிய தாக்கங்கள் குறித்து விஞ்ஞான ரீதியில் விரிவாக விளக்க முடிந்தது.
 
இதுமட்டுமின்றி மொரீஷியசில் பார்த்ததை வைத்து, மரங்கள் அழிக்கப்பட்டால் அது பஞ்சத்திற்கு வழிவகுக்கும் என்பதையும் அவர் அரசுக்கு தெரியப்படுத்தினார். ஏற்கனவே பல பஞ்சங்களைப் பார்த்து பதறிப் போயிருந்த கிழக்கிந்திய கம்பெனி, பால்ஃபரின் பரிந்துரையை உடனடியாக ஏற்றுக் கொண்டது. இப்படித்தான் மெட்ராஸ் வனத்துறை என்ற ஒன்று தொடங்கப்பட்டது.
 
சென்னை அருங்காட்சியகத்தின் பொறுப்பாளராக இருந்த பால்ஃபர், ஒரு புலி, ஒரு சிறுத்தை என இரண்டு விலங்குகளை அதே வளாகத்தில் கூண்டில் பார்வைக்கு வைத்தார். இந்த விலங்குகளைப் பார்க்க வெகு தொலைவில் இருந்தெல்லாம் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்தனர். இன்னும் சில விலங்குகளை பார்வைக்கு வைத்ததும், கூட்டம் அதிகரித்தது. விலங்குகளின் எண்ணிக்கை அதிகம் இருக்கும்போது, அருங்காட்சியகத்திற்கு வரும் கூட்டமும் அதிகரிக்கிறது என்பதை கணக்கெடுப்புகள் மூலம் உறுதிப்படுத்திக் கொண்ட பால்ஃபர், மெட்ராசில் உயிரியல் பூங்கா ஒன்று வேண்டும் என்று அரசுக்கு பரிந்துரைத்தார். இப்படித்தான் 1855இல் 'மெட்ராஸ் உயிரியல் பூங்கா' தொடங்கப்பட்டது. இதுதான் இந்தியாவின் முதல் வனவிலங்கு பூங்கா என்பது குறிப்பிடத்தக்கது. 
 
கர்நாடகத்தின் கடைசி நவாப்பான குலாம் கவுஸ் கானுடன் (Nawab Ghulam Ghouse Khan) பால்ஃபருக்கு நல்ல நட்பு இருந்தது. இதைப் பயன்படுத்தி நவாப்பிடம் இருந்த காட்டு விலங்குகளை அருங்காட்சியகத்துக்கு அனுப்புமாறு கேட்டுக்கொண்டார். நவாப்பும் அனுப்பி வைக்க, 1856ஆம் ஆண்டு இந்த அருங்காட்சியகத்தில் 360 விலங்குகள் இருந்தன. மிகப்பெரிய நீர்வாழ்விலங்குகள் காட்சியகம் (Aquarium) ஒன்றும் அரசு அருங்காட்சியகத்தில் இருந்தது.
 
பின்னர் மாநகர சபை விலங்கினக் காட்சிசாலைக்கு பொறுப்பேற்றதும், 1861ஆம் ஆண்டு, தற்போது சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையம் இருக்கும் இடத்திற்கு மெட்ராஸ் உயிரியல் பூங்கா இடம்மாறியது. அப்போது இங்கு 116 ஏக்கரில் பீப்பிள்ஸ் பார்க் இருந்தது. இதன் ஒருபகுதியைத் தான் விலங்கியல் காட்சியகமாக மாற்றினர். சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேலாக உயிரியல் பூங்கா இங்குதான் இருந்தது. மூர் மார்க்கெட்டுக்கு வருபவர்கள் இந்த விலங்குகளையும் சுற்றிப் பார்த்துவிட்டு செல்வர், கட்டணமெல்லாம் கிடையாது.
Birds_Enclosure_in_Vandaloor_Zoo.JPG
வண்டலூர் பூங்காவில் உள்ள பறவைகள்
1975இல் பூங்காவும் வளர்ந்துவிட்டது, மெட்ராசும் நன்கு வளர்ச்சி பெற்றுவிட்டது. எனவே பூங்காவை விரிவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. ஆனால் நகரின் மையப் பகுதியில் இதற்கு மேல் இடம் ஒதுக்க முடியாததால், இங்கிருந்த வனவிலங்குகள் எல்லோரும் மெகா ஊர்வலமாகப் புறப்பட்டு புறநகர் பகுதியான வண்டலூருக்கு சென்றனர். 1985 ஜூலை 24ஆம் தேதி அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவை முறைப்படி திறந்துவைத்தார்.
 
இப்படித்தான் பால்ஃபர் என்ற ஒற்றை மனிதர் போட்ட விதை, இன்று 1200 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்ட விருட்சமாக வளர்ந்து நிற்கிறது. அதன் நிழலில் ஆயிரக்கணக்கான விலங்குகள் அமைதியாக இளைப்பாறிக் கொண்டிருக்கின்றன.
 
நன்றி - தினத்தந்தி
 
* வண்டலூர் ஆரம்பத்தில் புதர்க்காடாகத்தான் இருந்தது. உயிரியல் பூங்கா அதிகாரிகளும், அக்கம்பக்கத்து கிராமத்தினரும் சேர்ந்து நிறைய மரக்கன்றுகளை நட்டு, பெரிய மரங்கள் ஓங்கி நிற்கும் வனமாக மாற்றி இருக்கின்றனர்.
* உள்ளூர் மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த பால்ஃபர், ஆங்கில மருத்துவத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் கற்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
* பால்ஃபரின் நினைவுப் போற்றும் வகையில் இன்றும் சென்னையில் ஒரு தெரு அவரது பெயரைத் தாங்கி நிற்கிறது.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Sunday, January 20, 2013

பிரபல தெருக்களின் பிதாமகன்கள்

 

சமுதாயத்திற்காக உழைத்து மக்கள் மனதில் நின்றவர்களை வருங்கால சந்ததியினர் மறக்காமல் இருப்பதற்காக அவர்களின் பெயர்களை தெருக்களுக்கு சூட்டுவது வழக்கம். ஆனால் சென்னையில் பல பிரபல தெருக்கள் இன்றும் நாம் கேள்விப்படாத ஆங்கிலேயர்களின் பெயர்களைத் தாங்கி நிற்கின்றன. உண்மையில், இவர்கள் யார்? சமூகத்திற்கு என்ன செய்தார்கள்? என்று தேடியபோது நிறைய சுவாரஸ்யத் தகவல்கள் கிடைத்தன.
 
அவற்றை ஆராய்வதற்கு முன் நாம் ஒரு விஷயத்தை தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். கிழக்கிந்திய கம்பெனி இருந்த காலத்தில், சென்னையில் இவ்வளவு பேர் இல்லை. எனவே ஆங்கிலேயர்கள் மிகப்பெரும் நிலப்பரப்புகளில் தோட்ட வீடுகள் அமைத்து வசதியாக வாழ்ந்திருக்கிறார்கள். காலப்போக்கில் அங்கு மற்றவர்களும் குடியேறும்போது, அப்பகுதி அந்த தோட்ட வீட்டுக்காரரின் பெயரில் அழைக்கப்பட்டு அப்படியே நிலைத்துவிடுகிறது.
 
இதற்கு சிறந்த உதாரணம் போயஸ் கார்டன். போ (poe) என்பவர் கதீட்ரல் சாலைக்கு தென்புறம் ஒரு பெரிய தோட்ட வீட்டில் வாழ்ந்திருக்கிறார். இதனால் அது போவின் தோட்டம் (poe's garden) என்று அழைக்கப்பட்டது. இது காலப்போக்கில் அப்படியே தமிழில் உச்சரிக்கப்பட்டு 'போயஸ் கார்டன்' ஆகிவிட்டது. ஜான் சைமன் என்ற ஆங்கிலேயர் 1833ஆம் ஆண்டு எழுதிய டைரிக் குறிப்பில், இதுபற்றி குறிப்பிட்டிருக்கிறார். சைமன் தனது குறிப்பில் மேலும் சில ஆங்கில கனவான்களின் இருப்பிடங்கள் பற்றிய தகவல்களையும் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.
 
சென்னையின் பிரபல சாலைகளான ஹாடோஸ் ரோடும், ஹாரிங்டன் ரோடும் இரண்டு அரசு ஊழியர்களின் பெயர்களைத் தாங்கி நிற்கின்றன. ஜார்ஜ் ஜான் ஹாடோ (George John Haddow) 1805ஆம் ஆண்டு முதல் கிழக்கிந்திய கம்பெனியில் பணியாற்றியவர், 1827ஆம் ஆண்டுவாக்கில் இவர் வசித்த தெருதான் தற்போது ஹாடோஸ் ரோடு என அழைக்கப்படுகிறது. அதேபோல, 1784இல் கிழக்கிந்திய கம்பெனியில் இணைந்த வில்லியம் ஹாரிங்டனுக்கு (William Harrington) 1796இல் சேத்துப்பட்டில் 10 ஏக்கர் நிலம் தானமாக வழங்கப்பட்டது. அந்த நிலத்தில்தான் பயணிக்கிறது இன்றைய ஹாரிங்டன் ரோடு. ஹால்ஸ் ரோடு, ஹாரிஸ் சாலை, சேமியர் சாலை, டெய்லர்ஸ் ரோடு என பல சாலைகளின் கதையும் கிட்டத்தட்ட இதேதான்.
sterling+road.jpg
 
நுங்கம்பாக்கத்தின் பிரதான சாலையான ஸ்டெர்லிங் ரோடு ஒருகாலத்தில் மாட்டு வண்டிகள் பயணிக்கும் ஒற்றையடி பாதையாக இருந்தது. 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், இந்த பகுதியில் ஒரு இடத்தை வாங்கினார் ஸ்டெர்லிங் (L. K. Sterling). ஆங்கிலேயப் படையில் சாதாரண சிப்பாயாக சேர்ந்த இவர், படிப்படியாக முன்னேறி செஷன்ஸ் நீதிபதியாகிவிட்டார். அந்த நீதிமானின் நினைவாகத் தான் இன்றும் நீண்டு கிடக்கிறது ஸ்டெர்லிங் சாலை.
 
ராயப்பேட்டை மணிக்கூண்டிற்கு அருகில் தொடங்குகிறது வைட்ஸ் சாலை (Whites Road). சுதந்திரத்திற்கு பிறகும் ஏன் இன்னும் இந்த வெள்ளைக்கார சாலை இருக்கிறது என்று விசாரித்ததில், வைட் (J. D. White) என்ற ஆங்கிலேயர், கம்பெனி தனக்கு அளித்த நிலத்தில் இங்கு வீடு கட்டி குடியிருந்தது தெரியவந்தது. இந்த வைட் சாலையை அண்ணா சாலையுடன் இணைக்கிறது பட்டூலாஸ் சாலை. இதற்கு காரணகர்த்தா ஆங்கிலப் படையில் கேப்டனாக இருந்த எர்ஸ்கின் பட்டூலா (Archibald Erskine Patullo).இவரும் இந்த பகுதிவாசிதான்.
 
இதேபகுதியில் இருக்கிறது வுட்ஸ் ரோடு (Wood's Road). ஆங்கிலேய அரசின் தலைமைச் செயலாளராக இருந்த எட்வர்ட் வுட்டின் வீடு இங்கு இருந்ததே இதற்கு காரணம். 1822இல் எட்வர்ட் இந்த வீட்டில் தங்கி இருந்தார். பின்னர் அந்த வீடு கேஸ்டல் ஹோட்டலாக (Castle Hotel) மாறிவிட்டது. ஸ்பென்சர் பிளாசாவுக்கு அருகில், பின்னி நிறுவனத்தின் ஜான் பின்னி வாழ்ந்த வீடு இருந்த தெரு, இன்றும் பின்னி சாலை என்றுதான் அழைக்கப்படுகிறது. இப்படி முக்கியப் புள்ளிகள் வசித்த தெருக்களுக்கு எல்லாம் அவர்களின் பெயர்களை வஞ்சனை இல்லாமல் வைத்துவிட்டார்கள் ஆங்கிலேயர்கள்.
woods+road.jpg
 
சென்னையில் ஒரு சிலரின் பதவி கூட தெருப் பெயராக மாறி இருக்கிறது. இதற்கு நல்ல உதாரணம், எழும்பூரில் இருக்கும் கமாண்டர் இன் சீஃப் (Commander-in-Chief) சாலை. 19ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் இங்கிருந்த ஒரு வீட்டில், ஒரு பெயர் தெரியாத கமாண்டர் இன் சீஃப் வாழ்ந்து, இந்த பெயருக்கு காரணமாகிவிட்டார். இந்த வீடு பின்னர் விக்டோரியா ஹோட்டலாக மாறிவிட்டது.
 
ஒருகாலத்தில் சென்னையில் அனைத்து தெருக்களுமே ஆங்கிலேயர்களின் பெயர்களுடன்தான் இருந்தன. பின்னர் இவற்றில் பலவற்றை மாற்றி தமிழ் அறிஞர்கள், கலைஞர்கள் மற்றும் சமூகப் போராளிகளின் பெயர்களை வைத்தனர். இருப்பினும் இதில் தப்பிப் பிழைத்து இன்றும் தாக்குப் பிடிக்கிறார்கள் சில ஆங்கிலக் கனவான்கள். கொஞ்சம் நின்று நிதானித்துப் பார்த்தால், இதுபோன்ற ஒவ்வொரு பெயர்ப் பலகைக்கு பின்னும் ஒரு கதை கருப்பு வெள்ளையில் ஓடிக் கொண்டிருப்பது தெரியும்.
 
நன்றி - தினத்தந்தி
 
* ஹென்ரி சுலைவன் கிரீம் என்ற அரசு ஊழியர் வாழ்ந்த சாலைதான் கிரீம்ஸ் ரோடு. கிரீமின் சாலை (Graeme's Road) என்பதுதான் இப்படி மருவிவிட்டது.
 
* சாந்தோம் பகுதியில் இருந்த ஹாமில்டன் பாலம் (Hamilton Bridge)நம்மாட்கள் வாயில் நுழையாததால் அம்பட்டன் வாராவதி ஆகிவிட்டது.பின்னர் இது மீண்டும் மொழிமாற்றப்பட்டு பார்பர்ஸ் பிரிட்ஜ் (Barbers Bridge) ஆனது தனிக்கதை.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Sunday, January 13, 2013

நேப்பியர் பாலம்

 

வாழ்க்கை மிகவும் விசித்திரமானது. அது சில நேரங்களில் எதிரெதிரான இரண்டு விஷயங்களை ஒன்றாக கட்டிப் போட்டுவிடுகிறது. அப்படி ஒரு விநோத விளையாட்டின் சாட்சிதான் நேப்பியர் பாலம். மெட்ராசில் முதன்முதலில் கட்டப்பட்ட பாலங்களில் இன்றும் நிலைத்து நிற்கும் இந்த பாலத்தின் கதை மிகவும் சுவாரஸ்யமானது.
Chennai+Napier+Bridge-1895.jpg
நேப்பியர் பாலம் 1895இல்
1819இல் ஸ்காட்லாந்தில் ஒரு பிரபுக் குடும்பத்தில் பிறந்த ஃபிரான்சிஸ் நேப்பியர், இங்கிலாந்தில் உள்ள டிரினிடி கல்லூரியில் சேர்ந்தார். பெற்றோர் சேர்த்துவிட்டார்களே தவிர அவரால் படிப்பை தொடர முடியாததால் பாதியிலேயே வெளியேறிவிட்டார். ஆனால் தனியாக ஆசிரியரை அமர்த்தி சில வெளிநாட்டு மொழிகளை கற்றுக் கொண்டார். அதுதான் அவருக்கு பிற்காலத்தில் பெரிதும் கை கொடுத்தது.
 
வெளிநாட்டு மொழிகள் அறிந்தவர் என்பதால் இங்கிலாந்தின் தூதராக அவர் பல நாடுகளுக்கு அனுப்பப்பட்டார். வியன்னா,  இத்தாலி, அமெரிக்கா, ரஷ்யா என உலகமெல்லாம் சுற்றிக் கொண்டிருந்தவரை இங்கிலாந்து அரசு கடைசியில் மெட்ராசிற்கு அனுப்பியது. 1866இல் மெட்ராஸ் ஆளுநராக நியமிக்கப்பட்டார் லார்ட் நேப்பியர்.
 
நேப்பியர் பதவி ஏற்ற சிறிது காலத்திலேயே அவர் ஒரு மிகப்பெரிய பஞ்சத்தை எதிர்கொள்ள வேண்டி இருந்தது. இன்றைய ஒரிசாவில் உள்ள கஞ்சம் (Ganjam) மாவட்டத்தில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. அன்றைய மெட்ராஸ் மாகாணத்திற்கு உட்பட்ட பகுதி என்பதால், பஞ்சத்தால் தவித்த கஞ்சம் மக்களை காப்பாற்ற வேண்டிய கடமை நேப்பியர் தலையில் விழுந்தது. ஆனால் நேப்பியர் இதனை திறமையாகவே சமாளித்தார்.
 
உலகம் முழுவதும் சுற்றிப் பெற்ற அனுபவமும், நட்பும் அவருக்கு கை கொடுத்தது. கிரீமிய யுத்தத்தில் காயமடைந்த வீரர்களுக்கு சிகிச்சை அளித்ததன் மூலம் கை விளக்கேந்திய காரிகை என வரலாற்றில் போற்றப்படும் பிரபல செவிலியர் பிளாரன்ஸ் நைட்டிங்கேல், நேப்பியரின் நெருங்கிய நண்பர். மக்கள் பஞ்சத்தால் மடிந்தபோது, அவருக்கு கடிதம் எழுதி ஆலோசனை கேட்டார் நேப்பியர். நைட்டிங்கேலின் ஆலோசனைகளை உடனே செயல்படுத்தவும் செய்தார். இது பஞ்சத்தை எதிர்கொள்ள மிகவும் உதவியது.
napier+museum.jpg
நேப்பியர் அருங்காட்சியகம்
பென்னாறு அணை நேப்பியர் காலத்தில்தான் கட்டப்பட்டது. இதேபோல விவசாயத்தை வளப்படுத்த நிறைய பாசனத் திட்டங்களை நேப்பியர் செயல்படுத்தினார். 1872இல் இந்தியாவின் வைஸ்ராயாக இருந்த ரிச்சர்ட் பூர்ட், அந்தமானில் கொல்லப்பட்ட பிறகு சிறிது காலம் தற்காலிக வைஸ்ராயாக நேப்பியர் நியமிக்கப்பட்டார். பின்னர் ஒரு புதிய வைஸ்ராய் கிடைத்ததும், நேப்பியர் இந்திய சேவைகளை முடித்துக் கொண்டு தாயகம் திரும்பிவிட்டார்.
 
இதனிடையே நேப்பியர் மெட்ராஸ் ஆளுநராக இருந்தபோது, 1869இல் கட்டப்பட்டதுதான் நேப்பியர் பாலம். அந்த காலத்தில் இதனை இரும்புப் பாலம் என்று அழைத்தனர். மெரினாவையும், புனித ஜார்ஜ் கோட்டையையும் இணைக்கும் வகையில், 149 மீட்டர் நீளத்தில், 6 வளைவுகளுடன் பிரம்மாண்டமாக இந்த பாலம் கட்டப்பட்டது. அதெல்லாம் சரி, எதற்காக இப்படி ஒரு பாலத்தை கட்டினார்கள் என்ற கேள்விக்கு விடை தேடிய போது ஒரு சுவாரஸ்யமான தகவல் கிடைத்தது.
 
இப்போது நேப்பியர் பாலம் இருக்கிற இடத்துக்கு அருகே அந்த காலத்தில் நரிமேடு என்று ஒரு குன்று இருந்தது. ஜோக் ஹில் என்று அழைக்கப்பட்ட அந்தக் குன்றில் பீரங்கியை நிறுத்தி குறி வைத்தால் கோட்டையைத் தரைமட்டம் ஆக்கிவிட முடியும்.
எனவே கோட்டைக்கு அருகில் இப்படியொரு ஆபத்து வேண்டாம் என நினைத்த வெள்ளையர், குன்றை அகற்றுவது என முடிவெடுத்தனர். எனவே அந்தக் குன்றின் மண்ணை மாட்டு வண்டிகளில் எடுத்துச் சென்று ஒரு இடத்தில் கொட்டினர். அப்படி மண் அடிக்கப்பட்ட பகுதிதான் இன்று மண்ணடி என்று அழைக்கப்படுகிறது. 

இப்படி குன்று காணாமல் போன பிறகுதான் அங்கு நேப்பியர் பாலம் முளைத்தது. மெட்ராசில் உள்ள அழுக்குகளை எல்லாம் சுமந்துகொண்டு, தள்ளாடி அசைந்துவரும் கூவம் ஆறு, இந்த பாலத்திற்கு அடியில் நுழைந்துதான் வங்கக் கடலோடு கலக்கிறது. லார்ட் நேப்பியர் சுத்தத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தவர். நகர சுகாதாரம் பற்றி சிறப்பு பயிற்சி பெறுவதற்காக அதிகாரிகள் சிலரை இங்கிலாந்திற்கு அனுப்பியவர். இப்படி சுத்தம், சுகாதாரம் என வாழ்ந்தவரின் நினைவாக நிற்கும் நேப்பியர் பாலம், கூவத்தின் கருப்புத் திரவம் கருநீல வங்கக் கடலில் கலக்கும் கண்கொள்ளா காட்சியை இன்று அமைதியாக பார்த்துக் கொண்டிருக்கிறது. ஆம், வாழ்க்கை விசித்திரமானதுதான்.
 
நன்றி - தினத்தந்தி
 
* நேப்பியர் பாலம் 1999ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டது.
* சிந்தாதிரிப்பேட்டையில் நேப்பியரின் நினைவாக தொடங்கப்பட்ட நேப்பியர் பூங்கா தான், இன்றைய மே தினப் பூங்கா.
* நேப்பியர் பெயரில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ஒரு அருங்காட்சியகம் இருக்கிறது. 


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

தி.நகர் தந்த பிட்டி. தியாகராயர்

 

சென்னையில் ஷாப்பிங் போக வேண்டும் என்றதுமே நினைவுக்கு வருவது தி.நகர்தான். ஆனால் எந்நேரமும் தி.நகரிலேயே தவம் கிடப்பவர்களுக்கு கூட தியாகராய நகர் என்ற பெயருக்கு காரணமான அந்த தியாகராயர் பற்றி அதிகம் தெரிவதில்லை. உண்மையில் தியாகராயரும் ஒரு நடமாடும் தி.நகர் சிறப்பு அங்காடியாகத்தான் இருந்திருக்கிறார். காரணம், பல அரிய பண்புகளை அந்த அற்புத மனிதரின் வாழ்வில் இருந்து நாம் ஷாப்பிங் செய்துகொள்ள முடிகிறது.
thiyagarayar1.jpg
பிட்டி. தியாகராயர்
சென்னை கொருக்குப்பேட்டையில் ஒரு பணக்கார வணிகக் குடும்பத்தில் 1852ஆம் ஆண்டு ஏப்ரல் 27ந் தேதி தியாகராயர் பிறந்தார். சென்னை மாநிலக் கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்ற அவர், காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து தீவிரமாக பணியாற்றினார். இந்திய தேசிய காங்கிரசின் இரண்டாவது மாநாடு சென்னையில் நடைபெற்றபோது, அவர்தான் அதனை முன்னின்று நடத்தினார்.
 
நெசவு மற்றும் தோல் பதனிடும் தொழிலில் அவரது குடும்பம் ஈடுபட்டிருந்தது. இது தவிர வேறு பல தொழில்களும் அவர்களுக்கு இருந்தன. பிட்டி நெசவு ஆலை என்ற பெயரில் சுமார் நூறு தறிகளைக் கொண்ட நெசவாலையை ஏற்படுத்திய தியாகராயர், கைத்தறி நெசவில் குஞ்சம் இழுத்து நெய்யும் முறையை அறிமுகப்படுத்தினார். அதற்கு முன்பெல்லாம் நாடாவை கைகளில் தள்ளிதான் நெய்தார்கள்.  இங்கு தயாரிக்கப்பட்ட பிட்டி மார்க் கைக்குட்டைகள் உலகப் புகழ் பெற்றவையாக விளங்கின.
 
காந்தியடிகள் சென்னைக்கு வந்தபோது பிட்டி நெசவாலைக்கு வருகை தந்து பார்வையிட்டார். ஒரு தறியில் அமர்ந்து நெய்தும் பார்த்தார். இந்த நவீன உத்திகளைக் கற்றுக் கொள்வதற்காகத் தன்னுடைய மகன்கள் மணிலால்,மதன்லால் ஆகிய இருவரையும் ஆறு மாத பயிற்சிக்காகவும் தியாகராயரிடம் அனுப்பி வைத்தார்.
 
காந்தியிடம் மிகுந்த மரியாதை இருந்தாலும், அவரது பல கொள்கைகளில் இருந்து தியாகராயர் முரண்பட்டார். ஒருகட்டத்தில் இனிமேல் காங்கிரசில் இருக்க முடியாது என முடிவெடுத்து வெளியேறினார். 'தென் இந்தியர் நல உரிமைச் சங்கம்' என்ற பெயரில் ஒரு அமைப்பைத் தொடங்கினார். இதன் சார்பில் 'நீதி' (Justice) என்ற பெயரில் ஒரு இதழையும் நடத்தினார். இதனால் அந்த அமைப்பையே நீதிக்கட்சி (Justice Party) என்று மக்கள் அழைக்கத் தொடங்கினர்.
Justice_Party_1920s.jpg
நீதிக்கட்சி பிரமுகர்களுடன் தியாகராயர்
சர்.பி. தியாகராயரின் தன்னலமற்ற விடாமுயற்சியால், 1921ஆம் ஆண்டு நடைபெற்ற சென்னை மாநில சட்டமன்றத் தேர்தலில் நீதிக்கட்சி அறுதிப் பெரும்பான்மைப் பெற்றது. அப்போதைய ஆளுநர் வெலிங்டன் பிரபு,நீதிக்கட்சியின் தலைவரான தியாகராயரை ஆட்சி அமைக்க வருமாறு அழைப்பு விடுத்தார். ஆனால்முதலமைச்சர் பதவியை ஏற்க விரும்பவில்லை என்று கூறிகடலூர் வழக்கறிஞர் சுப்பராயலு ரெட்டியாரை முதலமைச்சராக பொறுப்பேற்கச் செய்தார், தியாகராயர்.
 
இவர் 1892 முதல் 1925 வரை சென்னை மாநகராட்சி மன்ற உறுப்பினராகப் பணி ஆற்றினார்.  1920 ஆம் ஆண்டு உள்ளாட்சி மன்ற சட்டப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர் தியாகராயர்தான்.  தொடர்ந்து 1922 வரை மூன்று முறை சென்னை மேயராகப் பதவி வகித்த தியாகராயரைப் போற்றும் வகையில் ரிப்பன் மாளிகையின் வாயிலில் இவருக்கு சிலை வைக்கப்பட்டிருக்கிறது. 1959-ஆம்  திராவிட முன்னேற்றக் கழகம் சென்னை மாநகராட்சியின் நிர்வாகப் பொறுப்பை முதன்முதலில் ஏற்றபோது, பேரறிஞர் அண்ணாவின் ஆணைப்படி இவரது சிலைக்கு மரியாதை செலுத்திவிட்டுதான் திமுக உறுப்பினர்கள் மாமன்றத்தினுள் நுழைந்தனர்.
 
மாநகராட்சி சார்பில் ஏராளமான பள்ளிகளைத் தொடங்கிய தியாகராயர், அங்கு பயிலும் மாணவர்களுக்கு இலவச மதிய உணவு, இலவச பாடப் புத்தகங்கள் ஆகியவற்றை வழங்கி இன்றைய அரசுகளின் பல நல்ல திட்டங்களுக்கு முன்னோடியாக விளங்கினார். தமது சொந்தப் பணத்தில் பல பள்ளிகளையும் கல்லூரிகளையும் நிறுவினார். வடசென்னையில் உள்ள தியாகராயர் கல்லூரி இவர் தொடங்கியதே. 
 
சென்னை மற்றும் ஆந்திரா பல்கலைக் கழகங்களை நிறுவவும் பெரும் தொண்டாற்றினார். செட்டிநாடு அரசர் அண்ணாமலைசெட்டியாருடன் இணைந்து அண்ணாமலை பல்கலைக் கழகம் உருவாக உறுதுணையாக இருந்தார். பாடசாலைகளைப் போலவே தொழில்நுட்பப் பயிற்சி பள்ளிகளையும் தொடங்கினார். 
 
சுயமரியாதைக் கொள்கையில் ஈடுபாடு கொண்டிருந்தாலும் தியாகராயர், கடவுள் திருப்பணிகளிலும் நிகரற்று விளங்கினார்.  மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்தை பத்தாயிரம் ரூபாய்  செலவு செய்து திருப்பணி செய்து குடமுழுக்கிற்கு ஏற்பாடு செய்தார். பார்த்தசாரதி கோவிலுக்கும் திருப்பணி செய்வித்தார்.  வண்ணாரப்பேட்டையில் உள்ள ஸ்ரீஇராமலிங்க சவுடேஸ்வரி கோயிலின் உற்சவ சிம்ம வாகனத்தின் கண்களில் பதிப்பதற்காக இரண்டு கண்ணாடி கண் விழிகளை லண்டனிலிருந்து வரவழைத்தார். 
 
எப்போதும் வெள்ளை உடையில் பளிச்சென காட்சியளிக்கும் தியாகராயர், 'வெள்ளுடை வேந்தர்' என அன்புடன் அழைக்கப்பட்டார். 1905ஆம் ஆண்டு இங்கிலாந்து இளவரசர் 5ஆம் ஜார்ஜ் சென்னை வந்தபோதுமாநகராட்சி மேயராக இருந்த சர். பிட்டி. தியாகராயர்அதே வெள்ளுடையில் இளவரசரை வரவேற்க அப்போதைய கவர்னர் ஒப்புதல் அளித்தார். ஆங்கிலேய ஆட்சியில் ஒரு தமிழருக்கு இந்த அனுமதி கிடைப்பது அரிதான விஷயமாக இருந்தது.
 
 
1925இல் தியாகராயர் இறந்தபோது இவரது நினைவாக சென்னையில் புதிதாக உருவாக்கப்பட்ட நகருக்கு தியாகராய நகர் (தி.நகர்) எனப் பெயர் சூட்டப்பட்டது. பிட்டி தியாகராயர் அரங்கம் எனும் பெயரில் தி.நகரில் அரங்கம் ஒன்றும் இருக்கிறது. பெங்களூரிலும் இவரது நினைவாக தியாகராய நகர் என ஒரு நகர் இருக்கிறது.
 
 நன்றி - தினத்தந்தி
 
* இந்திய அரசு தியாகராயரைப் போற்றும் வகையில் தபால் தலை வெளியிட்டிருக்கிறது. தபால் தலையின் பின்னணியில் தறி நெய்யும் நெசவாளியின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.
 
* யஞ்யராமன் என்ற பிராமணர் தாழ்த்தப்பட்டவர்களுக்காகத் தொண்டு செய்ய சேரிப் பகுதியில் போய் தங்கியதால்சாதி நீக்கம் செய்யப்பட்டு வேலையையும் இழந்தார். தியாகராயர் அவரைப் பச்சையப்பன் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணி நியமனம் செய்தார்.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Saturday, February 23, 2013

ஆங்கிலேயர் கட்டிய பெருமாள் கோவில்

 

பக்தர்கள்தான் கடவுளைத் தேடிச் செல்வது வழக்கம். ஆனால் பக்தனைத் தேடி தெய்வம் வருவது அதிசயமாக சில நேரங்களில் நிகழ்ந்துவிடுகிறது. புராணக் காலத்தில் அப்படி எல்லாம் நடந்திருக்கலாம், இப்போது சாத்தியமில்லை என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. இது போன்றதொரு ஆச்சர்யம் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் சென்னையிலேயே நடந்திருக்கிறது.
joseph+Collet1.jpg
ஜோசப் கோலட்
 
1717இல் ஜோசப் கோலட் (Joseph Collett) என்பவர் மெட்ராசின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். அப்போது அவருக்கு உள்ளூர் நிர்வாகத்தில் உதவி செய்வதற்காக வீரராகவர் என்ற பிராமணர் எழுத்தராக பணியமர்த்தப்பட்டார். அலுவல் காரணமாக இருவரும் மணிக்கணக்கில் விவாதிக்க வேண்டி இருந்தது. பல்வேறு விஷயங்களில் இருவரும் ஒத்த கருத்துடையவர்களாக இருந்ததால் காலப்போக்கில் கோலட்டும், வீரராகவரும் நெருங்கிய நண்பர்களாகிவிட்டனர். ஆனாலும் வீரராகவரிடம் கோலட்டிற்கு ஒரு பிரச்னை இருந்தது.
 
வீரராகவர் தீவிர பெருமாள் பக்தர். காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாளை தரிசிப்பதற்காக அடிக்கடி சென்றுவிடுவார். இதனால் பல சமயங்களில் அலுவலகத்திற்கு தாமதமாக வருவார். இது கோலட்டை மிகவும் எரிச்சல்படுத்தியது. வீரராகவரின் கடவுள் பக்தி முட்டாள்தனமானது என்று நினைத்த கோலட், இதனை வீரராகவரும் உணரும்படி செய்ய வேண்டும் என முடிவெடுத்தார். ஆனால் அவர் ஒன்று நினைக்க விதி ஒன்று நினைத்தது.
 
ஒருமுறை வீரராகவரை அழைத்த கோலட், நீங்கள் பெருமாளுக்காக இப்படி உருகுகிறீர்களே, இந்த நிமிடம் காஞ்சிபுரத்தில் உங்கள் பெருமாள் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று சொல்ல முடியுமா? என்று கேட்டார். ஒருநிமிடம் கண்களை மூடிய வீரராகவர், பெருமாள் தற்போது தேரில் உலா வந்து கொண்டிருப்பதாகவும், இந்த நொடியில் அவரது தேர்ச் சக்கரம் சேற்றில் சிக்கிக் கொண்டதால் அதனை மீட்கும் முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
 
வீரராகவர் சொன்ன தகவல்கள் சரியா என கோலட் காஞ்சிபுரத்தில் இருந்த அதிகாரிகளை தொடர்புகொண்டு கேட்டார். அவர்கள் சொன்ன பதில் கோலட்டை வாயடைத்துப் போகச் செய்தது. உண்மையிலேயே வீரராகவர் சொன்ன அந்த தருணத்தில் பெருமாளின் தேரை சேற்றில் இருந்து மீட்கும் முயற்சி தான் நடந்திருக்கிறது. சிலிர்த்துப் போன கோலட், வீரராகவரின் பக்திக்கு மரியாதை செலுத்தும்விதமாக அவரது வீட்டிற்கு அருகிலேயே ஒரு பெருமாள் கோவிலைக் கட்டிக் கொடுத்தார். அதுதான் திருவொற்றியூருக்கு அருகே காலடிப்பேட்டையில் இருக்கும் கல்யாண வரதராஜபெருமாள் கோவில். இங்குள்ள மூலவர் காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் இருக்கும் மூலவரைப் போல அச்சுஅசலாக செய்யப்பட்டிருக்கிறார்.
Kaladipet_Kalyana_Varadraja_Temple.JPG
கல்யாண வரதராஜ பெருமாள் கோவில்
 
காலடிப்பேட்டை என்ற இந்த ஊரே ஜோசப் கோலட்டால் உருவாக்கப்பட்டதுதான். கிழக்கிந்திய கம்பெனியின் பிராதன தொழில் இங்கிருந்து துணிகளை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதுதான். இந்த பணியை மேற்கொள்வதற்காக நிறைய நெசவாளர்களும், சாயம் தோய்ப்பவர்களும் தேவைப்பட்டனர். எனவே மெட்ராஸ் மாகாணம் முழுவதும் பரவிக் கிடந்த அவர்களை ஒன்று திரட்டி கோட்டைக்கு அருகில் சில இடங்களில் குடியமர்த்தினர். அந்த வகையில் கோலட், தான் திரட்டியவர்களை இந்த பகுதியில் குடியேறச் செய்தார். 1719ஆம் ஆண்டு டிசம்பர் 28ந் தேதி கோலட் தனது அதிகாரிகளுக்கு அளித்த அறிக்கை ஒன்றில், இந்த பகுதியில் 104 வீடுகளும், 10 கடைகளும், ஒரு கோவிலும், மொத்தமாக 489 ஆட்களும் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
 
இந்த அறிக்கை அனுப்பிய கையோடு கோலட் பணியில் இருந்து ஓய்வுபெற்று இங்கிலாந்து திரும்ப விரும்பினார். போவதற்கு முன், தான் ஏற்படுத்திய குடியிருப்புக்கு தனது பெயரையே வைக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் விரும்புவதாக (?) ஜார்ஜ் கோட்டையில் உள்ள கவுன்சிலுக்கு தெரிவித்தார். இதனை ஏற்று அந்த பகுதிக்கு கோலட்பெட் (COLLETPET) என்று பெயரிடப்பட்டது. ஆனால் இது காலப்போக்கில் மருவி காலடிப்பேட்டை என்றாகிவிட்டது.
 
கோலட் ஆளுநராக இருந்தபோது, நிலவரி மற்றும் அடிமைகளுக்கான வரி ஆகியவற்றில் சில திருத்தங்களை செய்தார். அதேபோல கறுப்பர் நகரத்தில் இருக்கும் வீடுகள் மற்றும் தோட்டங்கள் அனைத்தையும் கண்டிப்பாக அரசாங்கத்திடம் பதிவு செய்ய வேண்டும் என்றும் சட்டம் இயற்றினார். ஆனால் இதற்கான பதிவுக் கட்டணத்தை தங்களால் செலுத்த இயலாது என சில வறியவர்கள் ஆளுநரிடம் முறையிட்டனர். இதனைப் பொறுமையாகக் கேட்ட கோலட், 50 பகோடாக்களுக்கும் (அந்தக்கால நாணயம்) குறைவான மதிப்புடைய சொத்துகளை பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை என சட்டத்திருத்தம் கொண்டு வந்தார். இப்படி ஏழைகளிடம் அவர் காட்டிய பரிவும், மக்கள் அவரது பெயரை தங்களின் பகுதிக்கு வைக்க வேண்டும் எனக் கேட்டதற்கு காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
 
இப்படி பல்வேறு நிர்வாக சீர்திருத்தங்களை மேற்கொண்ட கோலட், 1720ஆம் ஆண்டு ஜனவரியில் தாயகம் திரும்பினார். கோலட் போய் கிட்டத்தட்ட 300 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் அவரது பெயர் இன்றும் வடசென்னை வரலாற்றில் நிலைத்து நிற்கிறது.
 
நன்றி - தினத்தந்தி
 
*  கர்நாடக சங்கீத ஜாம்பவான் டைகர் வரதாச்சாரி காலடிப்பேட்டையில்தான் பிறந்தார்.
 
* இராமலிங்க அடிகளார் இந்த பகுதியில் உலா வந்ததால், அவரது 'காலடி பட்ட பேட்டை' என்ற வகையில் காலடிப்பேட்டை என்ற பெயர் பொருத்தமானதுதான் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 Sunday, February 17, 2013

பழவேற்காடு கோட்டை

 

ஒருகாலத்தில் மிகப் பெரிய விஷயமாக இருந்தவை கூட, காலப்போக்கில் மெல்ல மறைந்து, இருந்ததற்கான சுவடே இல்லாமல் போய்விடும்.அப்படி காலக்கரையானால் அரிக்கப்பட்டு நின்று கொண்டிருக்கிறது பழவேற்காடு கோட்டையின் சில கடைசி கற்கள்.
geldria+fort.jpg
கோட்டையின் வரைபடம்
 
பிரிட்டீஷார் மெட்ராசில் கால்பதித்து புனித ஜார்ஜ் கோட்டையைக் கட்டியதில் இருந்துதான் சென்னையின் கதை தொடங்குகிறது. ஆனால் அவர்களின் வருகைக்கு முன்பே இந்த பகுதியில் மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள். அதேபோல பிரிட்டீஷாருக்கு முன்பே இங்கு வந்து குடியேறிய வெளிநாட்டினரும் இருக்கிறார்கள். பல விஷயங்களில் அவர்களின் வழியைத்தான் பிற்காலத்தில் பிரிட்டீஷார் அப்படியே பின்பற்றினர்.
 
1498இல் வாஸ்கோடகாமா இந்தியாவிற்கான கடல்வழியைக் கண்டுபிடித்து கோழிக்கோட்டை அடைந்ததில் ஆரம்பிக்கிறது இந்தக் கதை. இந்தியாவிற்கு வரும் வழி தெரிந்ததையடுத்து 1522இல் போர்த்துகீசியர்கள் பழவேற்காட்டில் குடியேறினர். அந்தக் காலத்தில் பழவேற்காடு மிகப் பிரபலமான துறைமுக நகராக விளங்கியது. இங்கிருந்து துணிகள், வாசனைப் பொருட்கள் போன்றவை பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டன. இப்படி செல்வச் செழிப்போடு இருந்ததே போர்த்துகீசியர்கள் இங்கு வந்ததற்குக் காரணம்.
 
அவர்களைத் தொடர்ந்து 1607இல் டச்சுக்காரர்கள் வந்தனர்.  அப்போது இந்த பகுதியை ஆண்ட நாயக்க மன்னர் இரண்டாம் வேங்கடரின் மனைவி இறைவியிடம் அனுமதி பெற்று அவர்கள் ஒரு தொழிற்சாலையைத் தொடங்கினர். இது ஏற்கனவே இங்கு தொழில் செய்துவரும் போர்த்துகீசியர்களை எரிச்சல்படுத்தியது. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், டச்சுக்காரர்களின் தொழிற்சாலையைத் தாக்கினர். அப்போதுதான் ஒரு கோட்டையின் அவசியம் டச்சுக்காரர்களுக்குப் புரிந்தது.
 
இதன் விளைவாக 1613இல் உருவானதுதான் ஜெல்டிரியா கோட்டை (FORT GELDRIA). இந்த ஜெல்டிரியா கோட்டையைப் பார்த்துதான் ஆங்கிலேயர்கள் புனித ஜார்ஜ் கோட்டையை (1639) கட்டினர். ஜெல்டிரியா என்பது நெதர்லாந்தில் உள்ள ஒரு மாகாணத்தின் பெயர். இந்த கோட்டையின் முதல் டைரக்டர் ஜெனரலான வெம்மர் (Wemmer van Berchem) தனது சொந்த ஊரின் பெயரையே கோட்டைக்கு வைத்துவிட்டார். கட்டி முடிக்கப்பட்ட முதல் மாதத்திலேயே கோட்டை ஒரு தாக்குதலை எதிர்கொண்டது. உள்ளூர் தலைவரான எத்திராஜா என்பவர் சிறுபடையைக் கொண்டு கோட்டையைத் தாக்கினார். ஆனால் டச்சுக்காரர்கள் இதனை முறியடித்துவிட்டனர். அடுத்ததாக தொழில் போட்டியாளர்களான போர்த்துகீசியர்கள் தரை மற்றும் கடல்வழியாக இருமுனைத்தாக்குதல் நடத்தினர். அதையும் வெற்றிகரமாக எதிர்கொள்ளும் அளவுக்கு கோட்டை மிகப் பலமாக கட்டப்பட்டிருந்தது. 90 வீரர்கள் எந்நேரமும் கோட்டையைக் காவல் காத்ததாக ஒரு குறிப்பு சொல்கிறது.
 
கோட்டையைச் சுற்றி நான்குபுறமும் ஆழமான அகழிகள், மதில் சுவற்றில் அனைத்து பக்கங்களிலும் பீரங்கிகள் என பல அடுக்கு பாதுகாப்புடன் விளங்கியது ஜெல்டிரியா கோட்டை. இந்தியாவில் டச்சுக்காரர்களுக்கு இருந்த ஒரே கோட்டை என்பதால் இதனைப் போற்றிப் பாதுகாத்தனர். கடலைப் பார்த்தபடி இருக்கும் கோட்டையின் தென்கிழக்கு வாசலில் மிகப்பெரிய கொடி பறக்க விடப்பட்டிருக்கிறது. கப்பல்கள் தூரத்தில் இருந்தே அடையாளம் காண வேண்டும் என்பதற்காக இந்த ஏற்பாடு.
 
கோட்டைக்குள் ஒரு பெரிய வெடிமருந்துத் தொழிற்சாலை இருந்தது. கிழக்கு கடற்கரையோரம் இருந்த டச்சு குடியேற்றப் பகுதிகள் முழுவதற்கும் இங்கிருந்துதான் வெடிமருந்து சப்ளை செய்யப்பட்டது. உள்ளேயே ஒரு நாணய வார்ப்புசாலையும் செயல்பட்டிருக்கிறது. மிக அதிக அளவிலான சரக்குப் போக்குவரத்து இருந்ததால், இந்த நாணயச் சாலை அவசியமானதாக இருந்தது. இங்கு தயாரான நாணயங்கள் பழவேற்காடு நாணயங்கள் என அறியப்பட்டன.
coins.jpg
பழவேற்காடு நாணயங்கள்
 
கோட்டைக்குள்ளே வசிக்கும் மக்களின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக உள்ளேயே பல கிணறுகள் தோண்டப்பட்டன. இந்த கோட்டை குறித்த வரைபடம் ஒன்றில் கோட்டைக்குள் மூன்று கிணறுகள் இருப்பது குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படி சகல வசதிகளுடன் இருந்த ஜெல்டிரியா கோட்டையை, மைசூர் போரின்போது ஹைதர் அலி அழித்தார். 1806இல் ஹாலந்து, பிரெஞ்சுப் பேரரசுடன் இணைக்கப்பட்டுவிட்டது என்பது தெரியவந்ததும், பிரிட்டீஷார் இந்தக் கோட்டையை இடித்து தரைமட்டமாக்கிவிட்டனர்.
 
இன்று கோட்டை இருந்த இடத்தில் ஒரு பெரிய முட்புதர் காடுதான் எஞ்சியிருக்கிறது. சிரமப்பட்டு உள்ளே சென்று பார்த்தால், ஒருகாலத்தில் கோட்டை மதிலில் ஒய்யாரமாக உட்கார்ந்து கொண்டிருந்த சில கற்கள் சாயம் போன கனவுகளாய் காலில் மிதிபடுகின்றன. அந்த முட்புதர் காடு முழுவதும் 16ஆம் நூற்றாண்டு டச்சுக்காரர்கள் கண்ணுக்குத் தெரியாமல் அரூபமாய் அலைந்து கொண்டிருப்பது போலவே இருக்கிறது.
 
 
நன்றி - தினத்தந்தி
 
* 1522இல் கிருஷ்ணதேவ ராயர்தான் பழவேற்காடு என்று பெயர் வைத்தார். அதற்கு முன் இந்த பகுதி, புலியூர் கோட்டம், பையர் கோட்டம், அனந்தராயன் பட்டினம் எனப் பல பெயர்களில் அழைக்கப்பட்டது.
 
* கோட்டை இருந்த பகுதிக்கு எதிரில் டச்சுக்காரர்களின் கல்லறை ஒன்று இருக்கிறது. இங்கிருக்கும் சமாதிக் கற்கள் கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Sunday, February 10, 2013

மெட்ராஸ் கிறிஸ்துவக் கல்லூரி

 

மெட்ராசை ஆண்ட காலத்தில் ஆங்கிலேயர்கள் செய்த உருப்படியான விஷயங்களில் முக்கியமானது அவர்கள் தொடங்கிய கல்வி நிலையங்கள். கிறிஸ்துவ மதத்தை பரப்பவே இந்த முயற்சி என்று ஒரு கருத்து முன்வைக்கப்பட்டாலும், ஒட்டுமொத்த சமூக வளர்ச்சிக்கும் இந்த கல்வி நிலையங்கள் பெரிதும் பயன்பட்டிருக்கின்றன. அந்த வகையில் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு சென்னைக்கு கிடைத்த ஒரு அரும் பொக்கிஷம்தான் மெட்ராஸ் கிறிஸ்துவக் கல்லூரி.
 
ஆசியாவின் மிகப் பழமையான கல்லூரிகளில் ஒன்றாகக் கருதப்படும் மெட்ராஸ் கிறிஸ்துவக் கல்லூரி 1837ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆனால் 1835ஆம் ஆண்டே இதற்கான விதை விதைக்கப்பட்டுவிட்டது. மெட்ராசில் இருந்த ஸ்காட்லாந்து தேவாலயத்தின் மதகுருமார்களான ரெவ்ரண்ட் ஜார்ஜ் லாரியும், ரெவ்ரண்ட் மேத்யூ போவியும் (Rev George James Laurie & Rev Matthew Bowie) இணைந்து எழும்பூரில் செயிண்ட் ஆண்ட்ரூ என்ற சிறிய பள்ளியைத் தொடங்கினர்.
 
இவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க இந்த பள்ளியை நிர்வகிப்பதற்காக, ஸ்காட்லாந்து தேவாலயம் சமயப் பிரச்சாரகர் ஒருவரை இந்தியாவிற்கு அனுப்பியது. இப்படி வந்து சேர்ந்த ரெவ்ரண்ட் ஜான் ஆண்டர்சன் என்ற பிரச்சாரகர், பாரிமுனையின் ஆர்மீனியன் தெருவில் 'தி ஜெனரல் அசெம்ப்ளி ஸ்கூல்' என்ற பெயரில் ஒரு பள்ளியைத் தொடங்கினார். அப்போது ஒரு தலைமை ஆசிரியர் மற்றும் 59 சிறுவர்களுடன் எழும்பூரில் இயங்கிக் கொண்டிருந்த செயிண்ட் ஆண்ட்ரூ பள்ளி, இந்த வளாகத்திற்கு இடம்மாறியது.
miller+of+christian+college.jpg
டாக்டர் வில்லியம் மில்லர்
 
இந்து மாணவர்களுக்கு பைபிளில் உள்ள கருத்துகளை எடுத்துக் கூறுவதன் மூலம் கிறிஸ்துவத்தின் மகத்துவத்தை பரப்புவதே இந்த பள்ளியின் நோக்கமாக இருந்தது. டாக்டர். வில்லியம் மில்லர் என்பவர்தான் தமது அயராத உழைப்பால், இந்த பள்ளியை கல்லூரியாக மாற்றியவர். மெட்ராஸ் கிறிஸ்துவக் கல்லூரி என்ற பெயரும் இவர் வைத்ததுதான்.
 
காலப்போக்கில் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கவே, கல்லூரியை சென்னைக்கு வெளியே மாற்றுவது எனத் தீர்மானிக்கப்பட்டது. இதனையடுத்து 1919ஆம் ஆண்டுதான் தாம்பரத்திற்கு இடம்மாறுவது பற்றி ஆலோசிக்கப்பட்டது. அப்போது நகர வளர்ச்சித் துறை செயலாளராக இருந்த ரெவ்ரண்ட் கார்டன் மேத்யூ, அரசுடன் பேச்சு நடத்தி தாம்பரத்தில் உள்ள சேலையூர் காட்டுப் பகுதியில் கல்லூரிக்கென 390 ஏக்கர் நிலத்தைப் பெற்றுத் தந்தார்.
 
தாம்பரத்திற்கு செல்வது என முடிவானதும், எட்வர்ட் பேர்னஸ் என்ற பேராசிரியர் தமது முயற்சியால் ஏராளமான அரிய வகை மரக்கன்றுகளை இந்த பகுதியில் நட ஆரம்பித்தார். இன்று மெட்ராஸ் கிறிஸ்துவக் கல்லூரியில் நாம் நின்று இளைப்பாறும் பல மரங்கள் இவரது வியர்வையால் வளர்ந்தவை. அதேபோல இங்கு கட்டப்பட்ட கட்டடங்களை ஹென்றி (Henry Schaetti) என்ற சுவிட்ஸர்லாந்து கட்டடக் கலைஞர் வடிவமைத்துக் கொடுத்தார். இப்படி கல்லூரிக்கான வேலைகள் முடிந்த பிறகு, 100 ஆண்டுகள் சென்னையின் மையப் பகுதியில் இயங்கிய கிறிஸ்துவக் கல்லூரி, 1937ஆம் ஆண்டு அமைதியான தாம்பரம் காட்டுப் பகுதிக்கு இடம்மாறியது.
madras+christian+college+Campus+-+1937.j
1937இல் கிறிஸ்துவக் கல்லூரி
 
1937ஆம் ஆண்டு ஜனவரி 30ந் தேதி, அப்போதைய மெட்ராஸ் ஆளுநர் லார்ட் ஜான் எர்ஸ்கின், புதிய கல்லூரி வளாகத்தை அதிகாரப்பூர்வமாகத் திறந்துவைத்தார். அதுவரை மாணவர்கள் மட்டுமே வலம் வந்துகொண்டிருந்த கல்லூரியில், 1939ஆம் ஆண்டு முதல் மாணவிகளும் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். ஆங்கிலேயர்களால் தொடங்கப்பட்டு, ஆங்கிலேய முதல்வர்களையே பார்த்துப் பழகிய கல்லூரியின் முதல் இந்திய பிரின்ஸிபால் என்ற பெருமையைப் பெற்றவர் டாக்டர் சந்திரன் தேவநேசன்.
 
1962 முதல் 1972 வரை கல்லூரி முதல்வராக இருந்த டாக்டர் சந்திரன் தேவநேசன், ஒரு காந்தியவாதி. எனவே கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களை, தாம்பரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு சமூக சேவைகளில் அவர் ஈடுபடுத்தினார். இது போன்ற சமூகப் பணிகளால் அவர் இன்றும் அப்பகுதி மக்களால் அன்புடன் நினைவுகூரப்படுகிறார். அவர் முதல்வராக இருந்த 10 ஆண்டுகாலத்தை 'தேவநேசன் தசாப்தம்' (The Devanesan Decade) என்றே பழைய மாணவர்கள் பெருமையோடு குறிப்பிடுகின்றனர்.
Opening-Ceremony---1937.jpg
கல்லூரியின் தொடக்க விழா..
 
இங்கு பணியாற்றிய பல முதல்வர்கள் பின்னர் இந்தியாவின் பல்வேறு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களாக உயர்ந்திருக்கின்றனர். இவர்களுக்கு போட்டியாக இங்கு பயின்ற மாணவர்களும் பல்வேறு துறைகளில் முதன்மையாக விளங்கினர், விளங்கிக் கொண்டிருக்கின்றனர். முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் முதல் பெப்சி நிறுவனத்தின் இந்திரா நூயி வரை இந்த கல்லூரியின் பெருமைக்குரிய மாணவர்களின் பட்டியல் மிக மிக நீளமானது.
 
மொத்தத்தில், இப்படியொரு நீண்ட நெடிய பாரம்பரியத்துடன் 200ஆம் ஆண்டை நோக்கி கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது, சென்னை கிறிஸ்துவக் கல்லூரி.
 
நன்றி - தினத்தந்தி
 
* பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி முகமது சஹாபுதீன் கிறிஸ்துவக் கல்லூரியின் மாணவர்.
 
* இந்தியாவில் முதன்முதலில் தன்னாட்சி பெற்ற கல்லூரிகளில் கிறிஸ்துவக் கல்லூரியும் ஒன்று. இது 1978ஆம் ஆண்டு தன்னாட்சி பெற்றது.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Sunday, February 3, 2013

சாந்தோம் தேவாலயம்

 

மெட்ராஸ் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பே சர்வதேச அளவில் புகழ்பெற்ற நகரமாக விளங்கியது. இதற்கு முக்கியக் காரணம் இங்கிருந்த ஒரு சிறிய தேவாலயம். இதனை தரிசிப்பதற்காக உலகின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தொடர்ந்து வந்துகொண்டே இருந்தனர், இன்னும் வந்து கொண்டிருக்கின்றனர். இப்படி உலகையே திரும்பிப் பார்க்க வைத்த அதுதான் சாந்தோம் தேவாலயம்.
 
இயேசு கிறிஸ்துவின் 12 சீடர்களில் ஒருவரான புனித தோமையார் கிபி 52இல் கேரளாவிற்கு வந்தார். அங்கு தீவிர மதப்பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர், பின்னர் மெட்ராசிற்கு வருகை தந்தார். இங்கும் மதப்பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர், கிபி 72இல் இன்றைய புனித தோமையார் மலையில் ஈட்டியால் குத்திக் கொல்லப்பட்டார். அவரது சமாதியின் மீது எழுப்பப்பட்டதுதான் சாந்தோம் தேவாலயம்.
thomas.jpg
புனித தாமஸ்
 
பண்டைய கிறிஸ்தவ ஆசிரியர்களின் குறிப்புகள்படிதோமையார் இறந்ததும் அவரது உடல் அவரே கட்டியிருந்த சிறு கோவிலில் அடக்கம் செய்யப்பட்டது. கி.பி. 10ஆம் நூற்றாண்டில் தோமா அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் கிறிஸ்தவர்கள் சற்று பெரிதாக ஒரு கோவில் கட்டினார்கள்.1292இல் மயிலாப்பூருக்கு வருகை தந்த இத்தாலிய பயணி மார்க்கோ போலோ, புனித தோமாவின் கோவில் மற்றும் கல்லறை பற்றி எழுதி இருக்கிறார்.
 
பின்னர் 16ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் மெட்ராசிற்கு வந்த போர்த்துகீசியர்கள், தோமா கோவில் பாழடைந்து கிடந்ததாகவும், "பெத் தூமா" ("தோமாவின் வீடு") என்று அழைக்கப்பட்ட ஒரு சிற்றாலயம் மட்டும் தோமாவின் கல்லறையை அடையாளம் காட்டியது என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள். இதனையடுத்து 1523இல் போர்த்துகீசியர் தோமா கல்லறைமீது பெரிய அளவில் ஒரு கோவிலைக் கட்டினார்கள். அதோடு தங்கள் குடியிருப்பைப் பாதுகாக்க ஒரு கோட்டையையும் கட்டினார்கள். ஆனால் அது பின்னாட்களில் டச்சுக்காரர்களால் தகர்க்கப்பட்டது.
old+santhome+church.jpg
பழைய சாந்தோம் தேவாலயம்
 
சுமார் 300 ஆண்டுகள் இந்த கோவில் கடலின் உப்புக் காற்றை தாங்கி நின்றதால் மெல்ல பழுதடையத் தொடங்கியது. எனவே பழைய கோவில் இடிக்கப்பட்டு, 1893ஆம் ஆண்டு புதிய கோவில் வேலை தொடங்கியது. மயிலாப்பூரில் தங்கியிருந்த கேப்டன் பவர் (Captain J.A. Power) என்ற ஆங்கிலேய பொறியியல் வல்லுநர், புதிய கோவிலுக்கு வடிவம் கொடுத்தார். அவர் 'புதிய கோத்திக்' என்னும் கட்டடப் பாணியில் உயர்ந்த கோபுரங்களை எழுப்பி பிரம்மாண்டமான ஒரு கோவிலை வடிவமைத்தார்.
 
இந்த தேவாலய ஜன்னல்களில் கிறிஸ்தவ சமயம் தொடர்பான காட்சிகள் அடங்கிய அழகிய வண்ணக் கண்ணாடிகள் (stained glass) பொருத்தப்பட்டுள்ளன. இவை ஜெர்மனியில் இருந்து வரவழைக்கப்பட்டவை. இதுமட்டுமின்றி விசாலமான வழிபாட்டு அரங்கம், உயரமான மேற்கூரை என பார்த்துப் பார்த்து கட்டிய புதிய கோவில், 1896ஆம் ஆண்டு திறந்துவைக்கப்பட்டது.
 
இந்த தேவாலயத்தில் மேரி மாதாவின் பழைய மரச்சிற்பம் ஒன்று உள்ளது.மயிலை மாதா என அழைக்கப்படும் இந்த மூன்றடி சிற்பத்தை பல முக்கியப் பிரமுகர்கள் வழிபட்டுள்ளனர். உலகப் புகழ்பெற்ற புனித பிரான்சிஸ் சேவியர், 1545இல் இங்கு வந்தபோது, மேரி மாதா முன்பு மணிக்கணக்கில் பிரார்த்தனையில் ஈடுபடுவாராம்.
 
தேவாலய வளாகத்தில் புனித தோமையாரின் கல்லறைக்கு மேல் ஒரு சிறிய வழிபாட்டுத் தலம் அமைக்கப்பட்டுள்ளது. அமைதி நிறைந்த இந்த இடத்தில் ஏராளமானோர் நெஞ்சுருகப் பிரார்த்தித்து இறைஅனுபவம் பெற்றுச் செல்கின்றனர். இந்த கல்லறை இதுவரை நான்கு முறை திறக்கப்பட்டுள்ளது. தோமையார் அற்புதங்கள் நிகழ்த்தும் புனிதராக கருதப்பட்டதால் அவரது உடல் புதைக்கப்பட்ட மண் கூட சக்திவாய்ந்ததாக கருதப்பட்டது. எனவே அப்போது மயிலாப்பூர் பகுதியை ஆண்ட மகாதேவன் என்ற அரசரின் மகன் உடல்நலம் பெறுவதற்காக தோமையாரின் கல்லறையில் இருந்து மண் எடுக்கப்பட்டது.
 
கிபி 222க்கும் கிபி 235க்கும் இடைப்பட்ட காலத்தில் மீண்டும் ஒருமுறை கல்லறையைத் திறந்து புனித தோமையாரின் உடல் எச்சங்களை எடுத்து இத்தாலியில் உள்ள ஒர்த் தோனா என்ற இடத்திற்கு அனுப்பி வைத்தனர். இன்றும் இத்தாலியில் அவை பாதுகாக்கப்படுகின்றன. 1523இல் போர்த்துகீசியர்கள் கோவிலை புனரமைத்தபோது, கல்லறை மூன்றாவது முறையாகத் திறக்கப்பட்டது. கடைசியாக 1729ஆம் ஆண்டு கல்லறையை திறந்து மண் எடுத்து பக்தர்களுக்கு விநியோகித்தனர்.
weapon.jpg
தாமஸை கொன்ற ஈட்டி முனை
 
கிறிஸ்தவர்களின் புனிதத்தலமாக விளங்கும் இந்த தேவாலயத்தில், ஓர் அருங்காட்சியகமும் உள்ளது. புனித தோமையார் காலத்தில் பயன்படுத்தப்பட்ட பல பொருட்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. தோமையாரை குத்திக் கொன்ற ஈட்டியின் தலைப் பகுதியும், அவரின் எலும்புகளும் இங்கு பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
 
அமைதியான ஒரு மதிய நேரத்தில் இந்த அருங்காட்சியகத்தில் தனியாக நிற்கும்போது, திடீரென காலம் நம்மை 2000 ஆண்டுகளுக்கு முன்பு தூக்கி வீசியதைப் போல இருக்கிறது. உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களால் கடவுளாக வழிபடப்படும் ஏசுநாதருடன் பேசிப் பழகிய, அவரது நேரடி சீடர் ஒருவரின் எலும்புகளை பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்ற உணர்வே சிலிர்க்க வைக்கிறது. வெளியில் வந்த பிறகும் நீண்ட நேரம் அந்த இனிய அதிர்வுகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
 
நன்றி - தினத்தந்தி
 
* ஏசுவின் மூன்று சீடர்களின் கல்லறைகள் மீதுதான் தேவாலயங்கள் எழுப்பப்பட்டுள்ளன. ஒன்று ரோமில் உள்ள புனித ராயப்பர் பேராலயம், இரண்டாவது ஸ்பெயினில் உள்ள புனித யாகப்பர் பேராலயம். மூன்றாவது சாந்தோம் பேராலயம்.
* தேவாலயத்திற்கு பின்புறம் கடற்கரைக்கு செல்லும் வழியில் தோமாவின் கம்பம் ஒன்று உள்ளது. கடல்நீர் உட்புகுந்து மனித உயிர்களைப் பறிப்பதை தடுக்க புனித தோமா இதை நிறுவியதாக ஒரு பாரம்பரிய கதை உள்ளது.
* இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையால், 2006ஆம் ஆண்டு இது தேசிய வழிபாட்டுத்தலமாக அறிவிக்கப்பட்டது.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Sunday, March 31, 2013

செயின்ட் ஜார்ஜ் கதீட்ரல்

 

பார்த்தவுடன் பரவசப்படுத்தி நம்மை பல நூற்றாண்டுகள் பின்னோக்கி அழைத்துச் செல்லும் ஆற்றல் சில கட்டடங்களுக்கு உண்டு. சென்னைக்குள் இந்த வாக்கியத்தை சோதித்துப் பார்க்க விரும்புகிறவர்கள், அமெரிக்க துணைத்தூதரகத்திற்கு அருகில் அமைந்திருக்கும் செயின்ட் ஜார்ஜ் கதீட்ரலுக்கு ஒருமுறை சென்று வாருங்கள்.
 
சுமார் 200 ஆண்டுகள் பழமையான இந்த தேவாலயம், கிமு 500களில் கிரேக்கர்கள் பயன்படுத்திய ஐயானிக் பாணியில் வடிவமைக்கப்பட்டுள்ளது. முக்கோண கூரையும் அதனைத் தாங்கும் வேலைப்பாடுகள் நிறைந்த உயரமான தூண்களும்தான் ஐயானிக் பாணியின் அடையாளங்கள். கிரேக்கர்களால் மிகவும் ஸ்டைலான மாடலாக கருதப்பட்ட இந்த வடிவமைப்பை செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்திற்காக தேர்ந்தெடுத்தவர், கிழக்கிந்திய கம்பெனியின் மூத்த பொறியாளரான கர்னல் கால்ட்வெல்.
st+George's+Cathedral.jpg
செயிண்ட் ஜார்ஜ் தேவாலயம்
 
கிரேக்கக் கலையோடு, ஐரோப்பிய கட்டடக் கலையையும் கலந்து உயரமான கோபுரத்துடன், ஒரு பிரம்மாண்டமான தேவாலயத்தை அவர் வடிவமைத்துக் கொடுக்க, அதனை கட்டி முடித்தார் அவரது உதவியாளரான கேப்டன் டி.ஹாவிலேண்ட். இந்த மெகா தேவாலயத்தை 1815இல் கட்டி முடிக்க ரூ.2 லட்சத்து 7000 செலவானதாம். இந்த மொத்தத் தொகையையும் மக்களே திரட்டி அளித்ததாக கூறப்படுகிறது. இவ்வளவு செலவு செய்து கட்டப்பட்ட இந்த ஆலயம், லண்டனுக்கு வெளியே அமைந்துள்ள மிக நேர்த்தியான ஆங்க்லிகன் தேவாலயமாக அந்நாட்களில் போற்றப்பட்டது.
 
அதெல்லாம் சரி, இப்படி கலைநயமிக்க ஒரு தேவாலயத்தை இங்கு அமைக்க வேண்டியதன் அவசியம் என்ன என்ற கேள்விக்கு விடை தேடியபோது, மெட்ராசின் வரைபடத்தையே மாற்றிய ஒரு கதை கிடைத்தது. ஒருகாலத்தில், தீவுத்திடலில் இருந்து செனடாப் ரோடு வரை மவுண்ட் ரோட்டின் இருபுறமும் வெறும் மைதானமாகத்தான் இருந்தது. பெரிய சத்திரச் சமவெளி என இந்த பகுதி அழைக்கப்பட்டது.
 
கிழக்கிந்திய கம்பெனி இந்த பகுதியை வாங்கிய பிறகு, மெட்ராசில் மேயராக இருந்த ஜார்ஜ் மெக்கே என்பவர் 1785இல் இங்கு ஒரு பெரிய தோட்ட வீட்டைக் கட்டினார். ஆயிரம் விளக்கு மசூதிக்கு அருகில் இருக்கும் இந்த பகுதி இன்றும் மெக்கேஸ் கார்டன் என அழைக்கப்பட்டு வருகிறது. கோட்டைக்குள் சிறிய வீடுகளில் குடியிருந்த ஆங்கிலேயர்கள், இப்படி பரந்துவிரிந்த தோட்ட வீடுகளுக்கு இடம்பெயர்வதை விரும்பினர். விளைவு மெக்கேவைத் தொடர்ந்து நிறைய பேர் இந்த பகுதியில் குடியேறத் தொடங்கினர்.
 
இப்படி பல்கிப் பெருகிய ஆங்கிலேயர்களின் வசதிக்காகத்தான் இந்த பகுதியில் புனித ஜார்ஜ் கதீட்ரல் கட்டப்பட்டது. இந்த பகுதியின் அடையாளமாகவே இந்த தேவாலயம் விளங்கியதால், இந்த சாலையே கதீட்ரல் சாலை என அழைக்கப்பட்டது. இந்த கட்டடம் மட்டுமின்றி இங்கு நடைபெற்ற நிறைய காரியங்களும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை.
 
அவற்றில் சிலவற்றை என்னோடு பகிர்ந்துகொண்டார், இந்த தேவாலயத்தின் அருட்தந்தை இம்மானுவேல் தேவகடாட்சம். தென்னிந்திய திருச்சபை என அழைக்கப்படும் சிஎஸ்ஐ பிரிவு, 1947ஆம் ஆண்டு இந்த தேவாலயத்தில்தான் நிறுவப்பட்டது. நீண்ட நெடிய முயற்சிகளுக்கு பிறகு, கிறிஸ்துவத்தின் பல்வேறு பிரிவுகளை ஒருங்கிணைத்த இந்த நிகழ்வு வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
 
இங்குள்ள சுவர்களில் பளிங்குச் சிலைகளாகவும், பத்திரங்களாகவும் நிறைய நினைவுக் குறிப்புகள் இடம்பிடித்திருக்கின்றன. அவை ஒவ்வொன்றுக்கு பின்னாலும் ஒரு கண்ணீர் கதை இருக்கிறது. இந்த தேவாலயத்தின் மற்றொரு முக்கியமான அம்சம், இங்கிருக்கும் சித்திர வேலைப்பாடு நிறைந்த கண்ணாடிகள். கருவறையின் இருபுறமும் ஏசுபிரானின் வாழ்வைச் சொல்லும் வண்ணக் கண்ணாடிகளின் வழியே சூரிய ஒளி தேவாலயத்திற்குள் ஊடுருவதைப் பார்ப்பதே பரவச அனுபவமாக இருக்கிறது.
stained+glass.jpg
சித்திரக் கண்ணாடி
 
தேவாலயத்திற்கு அருகிலேயே ஒரு கல்லறைத் தோட்டம் இருக்கிறது. தேவாலயத்தை கட்டிய கேப்டன் டி.ஹாவிலேண்டின் மனைவிதான் இங்கு புதைக்கப்பட்ட முதல் நபர். அவரைத் தொடர்ந்து அந்தக்கால சென்னையின் பல முக்கியப் பிரமுகர்கள் இங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ளனர். கல்லறைத் தோட்டத்தைச் சுற்றி உள்ள வேலியை உருவாக்க பயன்பட்ட நூற்றுக்கணக்கான துப்பாக்கிகள் ஸ்ரீரங்கப்பட்டினத்தில் இருந்து கைப்பற்றப்பட்டவையாக இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. இப்படி வேலியில் தொடங்கி உள்ளிருக்கும் கல்லறைகள் வரை சென்னையின் 200 ஆண்டுகால சரித்திரம் இங்கு உறைந்து கிடக்கிறது.
pipe+organ.jpg
விநோத இசைக்கருவி
 
பாரம்பரியமிக்க கோபுரக் கடிகாரம், ராட்சத மணிகள், காற்றுக்கு இனிமை சேர்க்கும் குழலிசைக் கருவி என வரலாறு பேசும் பல்வேறு பொருட்கள் இங்கு நிறைந்துகிடக்கின்றன. இவ்வளவு சிறப்புகளோடு அமைதியாக நிற்கும் இந்த தேவாலயத்தை ஒவ்வொருமுறை பார்க்கும்போதும், நமது தாத்தா பாட்டிகள் பாசமுடன் அளிக்கும் பரிசுப் பொருட்களால் ஏற்படும் மகிழ்ச்சியும், நெகிழ்ச்சியும் ஒருசேர உற்பத்தியாகிறது.
 
நன்றி - தினத்தந்தி
 
* நான்காம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் வாழ்ந்த ஜார்ஜ் என்ற புனிதரின் நினைவாகத்தான், இந்த தேவாலயத்திற்கு செயின்ட் ஜார்ஜ் கதீட்ரல் எனப்பெயர் வைக்கப்பட்டுள்ளது.
* கிரேக்கத்தின் ஏதென்ஸ் நகரில் உள்ள ஏதெனா கோவில் ஐயானிக் பாணி கட்டடத்திற்கு சிறந்த உதாரணம். அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையின் வடக்கு வாசலும் ஐயானிக் பாணியில் கட்டப்பட்டதுதான்.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Saturday, March 23, 2013

டச்சுக் கல்லறைகள்

 

வரலாறு மிகவும் விசித்திரமானது. அது இலக்கியமாகவும், கல்வெட்டாகவும், பழம்பொருட்களாகவும் மட்டும் அடுத்த தலைமுறைக்கு கிடைப்பதில்லை. கல்லறைக் கற்களாகவும் வரலாறு உலகம் முழுவதும் ஆங்காங்கே அமைதியாக புதையுண்டு கிடக்கிறது. சில கல்லறைகள் புதையுண்ட அந்த மனிதரையும் தாண்டி, அந்த நிலப்பரப்பின் ஒட்டுமொத்த வரலாற்றிற்கும் கதவு திறந்துவிடுகின்றன. அப்படிப்பட்ட பொக்கிஷக் கல்லறைகள் சில, சென்னைக்கு அருகில் இருக்கின்றன.
entrance.jpg
டச்சுக்கல்லறை வாயிலில்..
 
ஆங்கிலேயர்கள் வருவதற்கு சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பே போர்த்துகீசியர்கள் சோழமண்டலக் கரையோரத்தில் குடியேறிவிட்டனர். அவர்கள் சென்னைக்கு அருகில் உள்ள பழவேற்காட்டை தங்கள் இருப்பிடமாக்கிக் கொண்டனர். அப்போது சென்னை என்ற பகுதி வெறும் பொட்டல் மணல்வெளியாக  இருந்ததால் இந்தப் பக்கம் வரவில்லை. அதையும் தாண்டி சாந்தோமில் கால்பதித்தது தனிக்கதை. அவர்களைத் தொடர்ந்து 1607இல் டச்சுக்காரர்களும் வந்துவிட்டனர்.
 
வணிகத்திற்காக வந்த டச்சுக்காரர்கள் பின்னர் பாதுகாப்பு கருதி பழவேற்காட்டில் ஒரு கோட்டையைக் கட்டினர். இன்று கோட்டைக்கான எந்த சுவடும் அந்த பகுதியில் இல்லை. ஆனால் அங்கு ஒரு பலமான கோட்டை இருந்தது என்பதற்கு ஆதாரமாய் இன்றும் இருந்துகொண்டிருக்கிறது ஒரு கல்லறை. ஒருகாலத்தில் கோட்டை இருந்த பகுதிக்கு எதிரில் அமைந்திருக்கிறது இந்த கல்லறைத் தோட்டம்.
 
புதிய கல்லறைத் தோட்டம் (New Cemetery) என்று அழைக்கப்படும் இந்த பகுதி தற்போது இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. ''பாதுகாக்கப்பட்ட பகுதி, எனவே இதனை சேதப்படுத்துபவர்களுக்கு மூன்று மாதங்கள் சிறைத் தண்டனையோ, ரூ.5 ஆயிரம் அபராதமோ அல்லது இரண்டும் சேர்த்தோ வழங்கப்படும்'' என எச்சரிக்கிறது இங்கிருக்கும் ஒரு துருப்பிடித்த அறிவிப்புப் பலகை. ஆனால் அருகிலேயே ஒட்டப்பட்டிருக்கும் 'மூலம்' சிகிச்சைக்கான சுவரொட்டிகள் மூலம், மக்கள் இதனை எந்தளவு மதிக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது.
skeleton.jpg
வாயில்காப்போன்..
 
இரண்டு எலும்புக் கூடுகள் வரவேற்கும் வாசல் வழியாக சென்றால் நம் கண்முன் விரிகிறது 17ஆம் நூற்றாண்டு. குதிரைகள் புடைசூழ ஒய்யாரமாக வலம் வந்த தளபதிகள் முதல் சமையல் அறைகளில் இருந்தபடியே சரித்திரத்தின் பக்கங்களில் ஆதிக்கம் செலுத்திய பெண்மணிகள் வரை அனைவரும் இங்கு அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்த கல்லறைத் தோட்டத்தில் மொத்தம் 77 சமாதிகள் இருக்கின்றன. 1656ஆம் ஆண்டுக்கு பிறகு இறந்த முக்கியப் பிரமுகர்களின் உடல்கள் இங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ளன. 1606 முதல் 1656 வரை உயிரிழந்தவர்களின் உடல்கள் சற்று தொலைவில் உள்ள பழைய கல்லறையில் புதைக்கப்பட்டுள்ளன. ஆனால் பழைய கல்லறை இன்று மிகவும் சிதலமடைந்துவிட்டது.
cemetrys.jpg
17ஆம் நூற்றாண்டு கல்லறைகள்..
 
புதிய கல்லறையில் இருக்கும் ஒவ்வொரு சமாதியும் பல வரலாற்றுத் தகவல்களைத் தாங்கி நிற்கின்றன. இந்த நினைவுக் கற்களின் மீதுள்ள எழுத்துகள் டச்சு மொழியில் பொறிக்கப்பட்டுள்ளன. இவை ஹாலந்து நாட்டிலேயே எழுதப்பட்டு கப்பலில் எடுத்துவரப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இங்குள்ள 77 சமாதிகளில் பெரும்பாலானவை டச்சுக்காரர்களுடையவை. இவற்றில் 5 சமாதிகளின் மீது சிறிய மாடம் போன்ற அமைப்புகள் கட்டப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக மூன்று சமாதிகள், வேலைப்பாடுகள் நிறைந்த வளைவுகளுடன் காட்சியளிக்கின்றன. மீதமுள்ள இரண்டு சமாதிகள் சதுர ஸ்தூபிகளாக (Obelisk) உயர்ந்து நிற்கின்றன. இவற்றில் உயரமாக இருக்கும் ஸ்தூபிக்கு பின் ஒரு அழகான காதல் கதை இருக்கிறது.
 
இங்குள்ள அனைத்து சமாதிகளின் மீதும் டச்சு மொழியில் நிறைய எழுதப்பட்டுள்ளன. இவை அந்த மனிதரைப் பற்றியும், அவரது வாழ்க்கை சார்ந்த நிறைய தகவல்களையும் தெரிவிக்கின்றன. உதாரணத்திற்கு, இங்குள்ள 20 கல்லறைகளின் தகவல்கள் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. இதில் 11 கல்லறைகள் பெண்களுடையவை, 9 ஆண்களுடையவை. இறந்தவர்களில் பெண்களின் சராசரி வயது 30ஆகவும், ஆண்களின் சராசரி வயது 48ஆகவும் இருக்கிறது.
fort.jpg
கல்லறையில் கோட்டையின் வரைபடம்
 
இந்த சமாதிக் கற்களின் மூலம்தான் இங்கு ஜெல்டிரியா என்ற கோட்டை இருந்த விவரம் உறுதிப்படுத்தப்படுகிறது. அந்த கோட்டை எப்படி இருந்தது என்ற வரைபடம் கூட ஒரு சமாதியில் இடம்பெற்றிருக்கிறது. மற்றொரு நினைவிடத்தில் பழவேற்காடு 17ஆம் நூற்றாண்டில் எப்படி இருந்தது என காலத்திற்கும் அழியாத வகையில் கல்லில் பொறித்திருக்கிறார்கள். டச்சுக்காரர்கள் வரைபடம் வரைவதில் சிறந்தவர்கள் என்பதை இந்தக் கற்கள் உறுதிப்படுத்துகின்றன.
 
நினைவுக் கற்களின் ஓரங்களை அலங்கரிக்கும் விதவிதமான பூ வேலைப்பாடுகள், மத்தியில் காட்சியளிக்கும் பிரதான சித்திரங்கள், அவற்றின் அழகியல் என ஒவ்வொரு கல்லும் சிற்பக் காவியமாகவே காட்சியளிக்கின்றன. இவற்றை ரசித்தபடியே, ஆளரவமற்ற இந்த மயான பூமியில் அமைதியாக கண்களை மூடி நிற்கும்போது வாழ்வின் நிலையாமை அழுத்தமாக முகத்தில் அறைகிறது.  
 
----
 
கடலில் கரைந்த கனவு
 
obelisk.jpg
காதலின் சின்னம்
 
டச்சு கல்லறைத் தோட்டத்தில் அனைத்தையும் விட உயர்ந்து நிற்கும் ஒரு சதுர ஸ்தூபிக்கும் ஜப்பானுக்கும் தொடர்பு இருக்கிறது. கப்பலில் இருந்து ஓடிவந்த ஹிக்கின்போதம் (MynHeer Von Higginbottom) என்ற வணிகர் பழவேற்காட்டில் தஞ்சமடைந்தார். பின்னாட்களில் சிறந்த வணிகராக பெயரெடுத்த அவர், இங்கிருந்தபடியே சிங்கப்பூர், ஜப்பான் போன்ற நாடுகளுடன் வணிகம் செய்தார். வணிகத்தோடு நிறுத்தாமல் அவர் காதலும் செய்தார்.
 
ஜப்பானின் அரச கருவூலத்தை கவனிக்கும் உயரதிகாரியின் மகளை இந்த வணிகர் காதலித்தார். அவரையே கரம்பிடித்து பழவேற்காட்டிற்கு அழைத்து வந்துவிட்டார். அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான். இப்படி சந்தோஷமாக போய்க்கொண்டிருந்த வாழ்க்கையில் ஒருநாள் புயல் வீசியது. கடலில் சிறிய படகில் சென்று கொண்டிருந்த அவரது 18 வயது மகன் அலையின் சீற்றத்திற்கு இரையாகிவிட்டான். தங்கள் அருமை மகனைப் புதைத்து, அதன் மேல் அந்த காதல் தம்பதி எழுப்பிய ஸ்தூபி, இன்றும் அவர்களின் ஆறாத சோகத்தை சொல்லிக் கொண்டே இருக்கிறது.
 
நன்றி - தினத்தந்தி


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Saturday, March 9, 2013

சிந்தாதிரிப்பேட்டை

 

மெட்ராஸ் நன்கு திட்டமிட்டு உருவாக்கப்பட்ட நகரம் அல்ல. காலத்தின் தேவை கருதி, தொடர்ந்து தன்னை விரிவுபடுத்திக் கொண்டதுதான், ஒருகாலத்தில் சிறிய மணல்வெளியாக இருந்த மெட்ராஸை, இன்று மாபெரும் நகரங்களின் பட்டியலில் சேர்த்திருக்கிறது. அப்படி இந்த மாநகரம் தனது தேவை கருதி உருவாக்கிய ஒரு பகுதிதான் சிந்தாதிரிப்பேட்டை.
 
சிந்தாதிரிப்பேட்டை உருவானதற்கு பின்னணியில் ஒரு சுவாரஸ்யமான அரசியல் கதையும் இருக்கிறது. ஆட்சியாளர்களின் அதிருப்திக்கு ஆளானால் என்ன ஆகும் என்பதை அந்தக் கதை இன்றும் நினைவுபடுத்திக் கொண்டிருக்கிறது. புனித ஜார்ஜ் கோட்டைக்கு அருகில், கூவம் நதியின் வளைவில் குளுகுளுவென இருந்ததால் இந்த இடத்தில் தோட்ட வீடு கட்டி குடியேறினார் சுங்குராமா.
chintadripet+bridge.jpg
கூவத்தின் மேல் சிந்தாதிரிப்பேட்டை பாலம்
 
18ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் மெட்ராஸில் மிகுந்த செல்வாக்குடன் வாழ்ந்தவர்தான் இந்த சுங்குராமா. ஆங்கிலேயர்களுக்கு மொழிபெயர்ப்பாளராக (துபாஷ்) இருந்த அவர், 1711இல் தலைமை வணிகராக உயர்ந்தார். 1717இல் திருவொற்றியூர், சாத்தன்காடு, எண்ணூர், வியாசர்பாடி, நுங்கம்பாக்கம் ஆகிய கிராமங்களை ஆண்டுக்கு 1200 பகோடாக்கள் கொடுத்து 12 ஆண்டுகளுக்கு வாடகைக்கு எடுக்கும் அளவுக்கு பணமும், செல்வாக்கும் அவருக்கு இருந்தது.
 
புனித ஜார்ஜ் கோட்டைக்குள்ளேயே வீடு கட்டிக் கொள்ளும் உரிமையும் அவருக்கு வழங்கப்பட்டிருந்தது. அவர் அந்த வீட்டை ஏற்றுமதிக்கான துணிகளை வைக்கும் குடோனாக பயன்படுத்தி வந்தார். பதவி வரும்போது பணிவும் வரவேண்டும் என்பார்கள். ஆனால் சுங்குராமாவிற்கு அது வரவில்லை. ஐரோப்பிய வணிகர்களிடம் அவர் நடந்துகொண்ட விதம் பலருக்கும் அவர் மீது கசப்புணர்வை ஏற்படுத்தத் தொடங்கியது. விளைவு, சுங்குராமாவிற்கான கெட்ட காலம் தொடங்கியது. ஆட்சி மாறியதும், காட்சியும் மாறியது.
 
மெட்ராஸின் புதிய ஆளுநராக மார்டன் பிட் (Morton Pitt) பதவியேற்றார். இவருக்கும் சுங்குராமாவிற்கும் அவ்வளவாக ஒத்துப்போகவில்லை. அந்த சமயத்தில் ஏற்றுமதிக்காக தரமான துணிகள் கிடைப்பதும் சற்று சிரமமாக இருந்தது. கிழக்கிந்திய கம்பெனியின் பிரதான தொழிலே மெட்ராசில் இருந்து மேலைநாடுகளுக்கு துணி ஏற்றுமதி செய்வதுதான். இதற்காகத்தான் முன்னர் ஆளுநராக இருந்த கோலட், தனது பெயரில் (காலடிப்பேட்டை) தண்டையார்பேட்டை அருகில் ஒரு புதிய குடியிருப்பை உருவாக்கி இருந்தார். அதேபோன்றதொரு தேவை ஆளுநர் பிட்டுக்கும் எழுந்தது.
 
ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க விரும்பிய பிட், இந்த புதிய குடியிருப்பை சுங்குராமாவின் பரந்துவிரிந்த தோட்டத்தில் அமைப்பது என முடிவெடுத்தார். கூவத்தின் வளைவில் மரங்கள் நிறைந்திருந்த அந்த பகுதி நெசவாளர்கள் நிழலில் அமர்ந்து வேலை செய்யவும், கூவம் ஆற்றின் நீர் துணிகளை அலசவும் ஏற்றதாக இருக்கும் எனக் காரணம் சொல்லப்பட்டது. இது அராஜகம் என சுங்குராமா கூக்குரலிட்டுப் பார்த்தார். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. இதனிடையே சுங்குராமா தலைமை வணிகர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டுவிட்டதால் அவரால் பெரிதாக ஒன்றும் செய்ய முடியவில்லை.
 
மெட்ராஸ் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நூற்பவர், நெசவாளர், சாயம் தோய்ப்போர் உள்ளிட்டோர் இந்த பகுதியில் குடியேற்றப்பட்டனர். இப்படித்தான் 1734இல் 'சின்ன தறிப் பேட்டை' உருவாகி காலப்போக்கில் சிந்தாதிரிப்பேட்டை என்றானது. 1737இல் இந்த பகுதியில் 230 நெசவாளர்கள் இருந்ததாக ஒரு ஆங்கிலேய குறிப்பு சொல்கிறது.
AAEDIKESAVA_PERUMAL.jpg
ஆதிகேசவ பெருமாள் கோவில்
 
பிட் இந்த குடியிருப்பை உருவாக்க ஆதியப்ப நாராயண செட்டி, சின்னதம்பி முதலியார் ஆகிய இரண்டு வணிகர்களைப் பயன்படுத்திக் கொண்டார். நெசவாளர்களை இங்கு அழைத்து வருவது, அவர்களுக்கு வீடு கட்டிக்கொள்ள குறிப்பிட்ட காலம் வரை வட்டியில்லாமல் கடன் வழங்குவது போன்ற பணிகளை இவர்கள் மேற்கொண்டனர். இதற்கு பதிலாக இங்கு உற்பத்தி செய்யப்படும் துணிகளை மொத்தமாக வாங்கி கணிசமான லாபத்திற்கு கம்பெனிக்கு விற்கும் உரிமை இவர்களுக்கு வழங்கப்பட்டது.
 
கிழக்கிந்திய கம்பெனி எதிர்பார்த்தது போலவே துணி வியாபாரத்திற்கு சிந்தாதிரிப்பேட்டை மிகவும் பயனுள்ளதாக இருந்தது. எனவே பிட்டிற்கு பிறகு ஆளுநரான ரிச்சர்ட் பென்யானும் இந்த பகுதியை வளர்ப்பதில் ஆர்வம் காட்டினார். ஆற்காடு நவாப்பிடம் இருந்து ஆற்காடு நாணயங்களை கம்பெனியே அச்சடித்துக் கொள்ளும் உரிமையைப் பெற்ற பென்யான், அதற்கான நாணயச் சாலையை சிந்தாதிரிப்பேட்டையில் அமைத்தார். அதை நிர்வகிக்கும் உரிமை லிங்கிச் செட்டி என்ற வணிகருக்கு வழங்கப்பட்டது.
 
ஒருபக்கம் பறக்கும் ரயில், மற்றொரு பக்கம் அண்ணாசாலையை நோக்கி விரையும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் என சிந்தாதிரிப்பேட்டையின் முகம் இன்று வெகுவாக மாறிவிட்டது. ஆனால் ஒவ்வொருமுறையும் மாலை மயங்கும் நேரத்தில் கூவம் ஆற்றுப் பாலத்தில் நடக்கும்போது, 300 ஆண்டுகளுக்கு முந்தைய சிந்தாதிரிப்பேட்டையின் முகம், கறுப்பு கூவத்தில் கலங்கலாய் தெரிவது போலவே இருக்கிறது.
 
நன்றி - தினத்தந்தி
 
 
* சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள ஆதிகேசவ பெருமாள் கோவில், ஆதியப்ப நாராயண செட்டி கட்டியதுதான். இவர் இந்த பகுதியில் ஒரு மசூதியையும் கட்டிக் கொடுத்தார். இப்பகுதியில் 1847இல் கட்டப்பட்ட ஒரு சர்ச்சும் இருக்கிறது.
 
* புனித ஜார்ஜ் கோட்டையை முற்றுகையிட்டபோது, பிரெஞ்சுப் படைகள் சிந்தாதிரிப்பேட்டையில்தான் முகாமிட்டு தங்கின.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Sunday, March 3, 2013

மெட்ராசின் ஜட்கா வண்டி

 

மக்களின் வாழ்வோடு இரண்டறக் கலந்து விளங்கும் சில விஷயங்கள், காலப்போக்கில் மெல்ல மங்கி மறைந்து விடுகின்றன. அப்படி ஒரு காலத்தில் மெட்ராசில் இறக்கைகட்டிப் பறந்துகொண்டிருந்த ஜட்கா வண்டிகள், நவீன வாகனங்களின் வருகைக்கு பின் காணாமலே போய்விட்டன.
 
ஆங்கிலேயர்கள் சென்னையில் குடியேறிய புதிதில் தங்களின் போக்குவரத்திற்கு பல்லக்கு, மாட்டு வண்டி, குதிரை, குதிரை வண்டி போன்றவற்றையே பயன்படுத்தினர். ஆனால் பொதுமக்களில் வசதி படைத்தோருக்கு மட்டுமே இந்த சொகுசு சாத்தியமாக இருந்தது. மற்றவர்கள் தன் காலே தனக்கு உதவி என்று பல மைல் தூரம் நடந்துதான் சென்றனர்.
 
சென்னை மாகாணத்தில் உள்ள முக்கிய நகரங்களுக்கு இடையில் சாலைகள் போடப்பட்ட பின்னர், போக்குவரத்து அதிகரிக்கத் தொடங்கியது. ரயில் கண்டுபிடிக்கப்பட்டு ராயபுரம், சென்ட்ரல் ரயில் நிலையங்கள் எல்லாம் வந்த பிறகு, வெளியூர்களில் இருந்து மெட்ராஸ் வருபவர்களின் எண்ணிக்கை பெருகியது. ரயில் நிலையங்களில் வந்திறங்கும் அவர்களுக்கு வரப்பிரசாதமாக வந்தவைதான் ஜட்கா வண்டிகள்.
jatka1.jpg
 
ஒற்றை குதிரை பூட்டிய ஒரு சிறிய கூண்டு வண்டிதான் ஜட்கா வண்டி என்று அழைக்கப்பட்டது. மாடு பூட்டிய சில ஜட்கா வண்டிகளும் ஆரம்பத்தில் இருந்தன. ஆனால் குதிரைகளின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாததால் இவை சீக்கிரமே வழக்கொழிந்துவிட்டன. அந்தக்கால மெட்ராஸ் City Of Magnificent distances என்று அழைக்கப்பட்டது. காரணம் ஒரு இடத்திற்கும் இன்னொரு இடத்திற்கும் இடையில் அவ்வளவு தூரம் இருந்தது. இந்த தூரத்தை கடக்க ஜட்கா வண்டிகள்தான் உதவின.
 
சென்ட்ரல் ஸ்டேஷனுக்கெதிரில் ராஜா ராமசாமி முதலியார் சத்திரம் என்று ஒன்றிருந்தது. அதேபோல எழும்பூர் ஸ்டேஷனுக்கருகில் கண்ணன் செட்டியார் சத்திரம் இருந்தது. இப்படி இன்னும் சில சத்திரங்கள் நகரில் ஆங்காங்கே இருந்தன. இவற்றின் வாசல்களில் ஜட்கா வண்டிகள் வரிசைகட்டி நின்றன. நான்கு பேர் அமர்ந்து செல்லக்கூடியது என்று சொல்லப்படும் இந்த ஜட்கா வண்டிகளைப் பற்றி அந்தக்காலத்தில் ஒருவர் 'அனுபவித்து' எழுதியது இது..
 
சென்னப் பட்டணத்தில் காணப்படுகிற  ஜட்கா மாதிரி அங்கே (லண்டனில்) தேடித் தேடியலைந்தாலும் கிடைக்காது. அந்த ஜட்கா  சென்னப் பட்டணத்திற்கென்று விசேஷமாயல்லவோ ஏற்பட்டிருக்கிறது. பிரமனுடைய சிருஷ்டிகளில் எதைத்தான்  அதற்குச் சமானமாய்ச் சொல்லலாம்பம்பாய்க்குப் போனால்தான் என்னகல்கத்தாவுக்குப் போனால்தான் என்னஅங்கே இதுமாதிரிஒடுக்கமாய் ஒடிந்தும் நெரிந்துமிருக்கிற மரப் பெட்டிகளை வெகு காலத்திற்கு முன் வர்ணம் பூசப்பட்ட அடையாளத்துடன் இரண்டு சக்கரங்களின் மேலேற்றிதேக சவுக்கியமுள்ள ஒரு மனிதனுடைய சரீரத்திற்கு உள்ளே இடம் இல்லாதபொழுது, `நாலு பேர் சவாரி செய்ய`என்று எழுதிய ஒரு தகடுஞ் சேர்த்துள்ள வண்டிகள் கிடைத்தல் அருமையினுமருமை. லண்டனில் அதனினும் அருமை. அந்தப் பாக்கியமெல்லாம் சென்னைக்கே இருக்கட்டும்.

-
ஜி.பரமேஸ்வரம் பிள்ளை
`
லண்டன் பாரீஸ் நகரங்களின் வினோத சரித்திரம்` 1899.
jatka2.jpg
 
இதுமட்டுமின்றி, இப்போது சில ஆட்டோக்காரர்கள் செய்யும் அதே வேலைகளை அப்போதைய ஜட்காகாரர்களும் செய்திருக்கின்றனர். அதிக பணம் கேட்டு அடாவடி செய்வது, வேறு இடத்தில் இறக்கிவிட்டுச் செல்வது போன்ற விஷயங்கள் எல்லாம் அப்போதே இருந்திருக்கிறது. இது பற்றிய செய்திகள் அந்தக்கால பத்திரிகைகளில் ஆதங்கத்தோடும், ஆவேசத்தோடும் இடம்பெற்றிருக்கின்றன.
 
வண்டிக்குள் சொற்பவிடத்திலே நான்கு பேராய் உட்கார்ந்து அதிக நெருக்கத்தால் செம்மையாய் உட்காரக் கூடாமல் கால்நோவும்,இடுப்புநோவுமாய்ப் பிரயாணிகள்  வருந்திக் கொண்டு போவது மாத்திரமேயல்லாமல்அவ்வண்டிகள்  ஆடுகிற ஆட்டத்தில் தேகத்தில் பூட்டுக்குப்  பூட்டு நோவெடுத்து எப்பொழுது இவ்வண்டியைவிட்டு இறங்கப் போகிறோம் என்று  எண்ணும்படியாகிறது.
 
மேலும் அவ்வண்டிக்காரர்களுள் அநேகர் துர்மார்க்கர்களாய்த் திருஅல்லிக்கேணிக்கு என்று பேசி வண்டி ஏறிப்போனால்,திருவல்லிக்கேணிக் கடைத் தெருவிலே கொண்டுபோய் நிறுத்திஇதுதான் திருவல்லிக்கேணி  இறங்குங்கள் என்கிறார்கள். பின்பு பிரயாணிகள் என்ன நியாயம் எடுத்துரைத்தாலும் அவர்கள் கேட்பதில்லை. நடுவே சற்றிறங்கி ஒருவரோடு ஒரு பேச்சு பேசி வருகிறோம் என்றால் அவர்கள் சம்மதிப்பதில்லை.
இவ்விதமான பல காரணங்களால் சச்சரவு உண்டாகி  இப்பட்டணத்தில் ஜட்கா வண்டி வியவகாரம்  போலீசுக்குப் போகாத நாளில்லை.
 
இதென்ன வீண்தொல்லையாயிருக்கிறது என்று இவ்வகையான துர்மார்க்கச் செயல்கள் மறுப்பதற்காகவே நாளது வருஷத்தில் போலீசு அதிகாரிகள்ஜட்கா வண்டிகளுக்கு  இவ்வளவு தூரத்திற்கு இவ்வளவு கூலி கொடுக்க வேண்டுமென்றும்நடுவே  நிற்க வேண்டுமானால் அந்தக் காலத்திற்குத் தக்கபடி கூலி கட்டிக்கொடுக்க வேண்டுமென்றும்பிரயாணிகள் எந்த இடத்திற்கு வண்டி பேசுகிறார்களோ அங்கே  அவர்கள் இறங்கவேண்டிய இடத்திலேயே வண்டியைவிட வேண்டுமென்றும் ஒரு விதி ஏற்படுத்தியிருக்கிறார்களாம். ஆயினும் அந்த வருத்தங்கள் மட்டும் அதிகமாய் ஒழியவில்லை.

`ஜநவிநோதினி`
டிசம்பர் 1879
இல.12. புஸ்த.10
பக்கம் 269 – 272
 
இந்த ஜட்காகாரர்கள் மகாத்மா காந்தியைக் கூட விட்டுவைக்கவில்லை. கோட்டு சூட்டு போட்டுக்கொண்டிருந்த காலத்தில் ஒருமுறை சென்னை வந்த காந்தி, தம்புசெட்டித் தெருவில் இருந்த எழுத்தாளும் பதிப்பாளருமான ஜி.ஏ.நடேசன் வீட்டிற்கு செல்ல ஒரு ஜட்காவில் ஏறினாராம். அந்த ஜட்காகாரர் ஊரெல்லாம் சுற்றிவிட்டு தம்புச்செட்டித் தெருவில் காந்தியை இறக்கிவிட்டு அதிக காசு பிடுங்கிவிட்டாராம்.
 
இப்படி சண்டை சச்சரவுகள் இருந்தாலும் மக்கள் தொடர்ந்து ஜட்கா வண்டிகளை பயன்படுத்தி வந்தனர். அரசு பொதுமருத்துவமனையில் இருந்து பிணங்களை எடுத்துச் செல்லவும் ஜட்கா வண்டிகள்தான் பயன்பட்டிருக்கின்றன.
 
1877இல் மெட்ராஸ்வாசிகளுக்கு டிராம் வண்டி அறிமுகமானது. அப்போதெல்லாம் குதிரை இழுத்துச் செல்லும் டிராம் வண்டிதான் இருந்தது. இதிலும் கட்டணம் குறைவாக இருந்ததால் மக்கள் ஜட்காவை கழற்றிவிட்டுவிட்டு டிராமிற்கு மாறினார்கள். அதற்குள் மே 7, 1895இல் எலெக்ட்ரிக் டிராம்கள் ஓடத் தொடங்கி விட்டன. அதோடு ரிக்ஷா வண்டிகளும் அதிகமாகிவிட்டதால், இவற்றை எல்லாம் தாக்குப் பிடிக்க முடியாமல், ஜட்கா வண்டிகள் இந்த பட்டணத்தின் தெருக்களில் இருந்து ஒரேயடியாக மறைந்துவிட்டன.
 
நன்றி - தினத்தந்தி
 
* இந்தியாவிலேயே மெட்ராசில்தான் எலெக்ட்ரிக் டிராம் முதன்முறையாக ஓடியது. அந்த சமயத்தில் லண்டன் போன்ற மாநகரங்களில் கூட எலெக்ட்ரிக் டிராம் அறிமுகமாகவில்லை.
 
* பொதுவாக ஜட்கா வண்டியை இழுக்க தட்டுவாணிக் குதிரை அல்லது நாட்டுத் தட்டு குதிரைகள்தான் பயன்படுத்தப்பட்டன.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Sunday, April 28, 2013

மசூதி கட்டிய இந்து

 

ஒரு பெரிய அல்லது வித்தியாசமான விஷயத்தை முதன்முதலில் செய்பவர் சரித்திரத்தில் நினைவு கூரப்படுவார். இதற்காக பல ஆண்டுகள் பாடுபடுபவர்களுக்கு மத்தியில், போகிற போக்கில் நிறைய முதல் விஷயங்களை தெரிந்தோ, தெரியாமலோ செய்து 'முதல்'வனாக இடம்பிடித்து விடுபவர்களும் உண்டு. அப்படிப்பட்ட ஒருவர்தான், 17ஆம் நூற்றாண்டில் மெட்ராசில் வாழ்ந்த காசி வீரண்ணா என்ற வணிகர்.
 
கிழக்கிந்திய கம்பெனிக்கு மெட்ராஸ் என்ற நிலப்பகுதியை பேரம் பேசி வாங்கித் தந்தவர் பேரி திம்மண்ணா என்ற வணிகர். இதன் மூலம் ஏற்பட்ட நெருக்கம் காரணமாக பேரி திம்மண்ணா கிழக்கிந்திய கம்பெனியின் தலைமை வணிகராகத் திகழ்ந்தார். இந்த திம்மண்ணாவின் பார்ட்னர்தான் காசி வீரண்ணா.
black+town.jpg
அந்தக்கால மெட்ராஸ்
 
காசி வீரண்ணா அந்த காலத்தில் கோல்கொண்டா சுல்தான்களிடம் மிகவும் நெருக்கமாக இருந்தார். வணிகரீதியில் ஏற்பட்ட நட்பு பின்னர் பலப்பட்டுவிட்டதால், கோல்கொண்டா சுல்தான்கள் காசி வீரண்ணாவையும் ஒரு முஸ்லீமாகவே பார்க்கத் தொடங்கிவிட்டனர். அவருக்கு ஹசன் கான் என்று பெயரும் வைத்துவிட்டனர். வீரண்ணாவும் முஸ்லீம்களுடன் மிகவும் பாசமுடனும், அன்புடனும் பழகினார். அந்த ஆழமான அன்பின் வெளிப்பாடுதான் தனது முஸ்லீம் சகோதரர்களுக்காக அவர் பாரிமுனையின் மூர் தெருவில் கட்டித்தந்த மசூதி. காசி வீரண்ணா என்ற இந்துவால் கட்டப்பட்ட அந்த மசூதிதான் மெட்ராசின் முதல் மசூதி. ஆனால் அந்த வரலாற்று சிறப்புமிக்க மசூதி இப்போது இல்லை.
 
வீரண்ணா மற்றொரு விஷயத்தையும் மெட்ராசில் முதன்முதலாக செய்து காட்டினார். அதுதான் அவர் தொடங்கிய "காசி வீரண்ணா அண்ட் கோ" என்ற கம்பெனி. இதனை காசா வெரோனா அண்ட் கோ (Cassa Verona & Co.,) என்று ஆங்கிலேயர்கள் தங்கள் ஆவணங்களில் குறிப்பிட்டிருக்கிறார்கள். அந்த காலத்தில் இந்தியர் ஒருவருக்கு சொந்தமான முதல் ஜாயிண்ட் ஸ்டாக் கம்பெனி இதுதான்.
 
போர்த்துகீசியர்கள் சென்ற பிறகு சாந்தோமை வாடகைக்கு எடுக்கும் அளவுக்கு வீரண்ணா செல்வாக்கு மிக்க வணிகராக இருந்தார். டிசம்பர் 12, 1678 என தேதியிடப்பட்ட ஒரு ஆங்கிலேயக் குறிப்பில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 'வெரோனாவுக்கு கோல்கொண்டாவில் இருந்து நவாப் முகம்மது இப்ராஹிம் நேற்று ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். வெரோனாவுக்கு 1300 பகோடாக்களுக்கு சாந்தோம் வாடகைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் 2500 பகோடாக்கள் தர மற்றொருவர் தயாராக இருக்கிறார். எனவே வெரோனாவிடம் இருந்து சாந்தோமை திரும்பப் பெற்று அவருக்கு வாடகைக்கு விடலாம் என அந்த கடிதத்தில் இருந்தது. ஆனால் சூரிய சந்திரர் உள்ள வரை இந்த ஊர் ஒரு ஃபிர்மான் மூலம் தனக்கு தரப்பட்டுள்ளதாக வெரோனா பதில் எழுதியிருக்கிறார். தவிரவும் பணத்தின் மகிமையை அறிந்திருந்த வெரோனா, பேசுபவர்களின் வாயை மூட 500 பகோடாக்கள் லஞ்சமாகக் கொடுத்தார்' என்று அந்த குறிப்பு சொல்கிறது. இப்படி வியாபாரத்தில் கெட்டியாக இருந்த வீரண்ணா, தொழிலுக்கு ஏற்ப கறார் பேர்வழியாகவும் இருந்தார்.
sir+edward+winter.jpg
சர் எட்வர்ட் விண்டர்
 
1678இல் பூந்தமல்லியின் கவர்னராக இருந்த லிங்கப்ப நாயக், கிழக்கிந்திய கம்பெனியிடம் இருந்து ஒரு பெரும் தொகையை கேட்டார். கம்பெனியின் வணிகராக இருந்த வீரண்ணா, அதெல்லாம் தர முடியாது என்று கறாராக சொல்லிவிட்டார். இதனிடையே வீரண்ணாவின் மனைவி இறந்துவிட்டார். இதற்காக துக்கம் விசாரிக்க வந்த லிங்கப்ப நாயக், ஏன் தன்னை யாரும் வந்து முறையாக வரவேற்கவில்லை என்று கேட்டார். மனைவியைப் பறிகொடுத்த சோகத்தில் இருந்த வீரண்ணா, லிங்கப்ப நாயக்கை வார்த்தைகளால் வறுத்தெடுத்துவிட்டார்.
 
ஏற்கனவே வீரண்ணா மீது கடுப்புடன் இருந்த லிங்கப்ப நாயக் இந்த பதிலால் கொதித்து கொந்தளித்துப் போனார். இதனை மனதிலேயே வைத்துக் கொண்டிருந்த லிங்கப்பா, 1680இல் வீரண்ணா உயிரிழந்தவுடன், மெட்ராசை கிழக்கிந்திய கம்பெனியிடம் இருந்து பறித்துக் கொள்ளும் முயற்சியில் இறங்கினார். ஆனால் அது பலிக்கவில்லை. எனவே மெட்ராஸை லிங்கப்பா முற்றுகையிட்டார்.
 
மெட்ராசிற்குள் உணவுப் பொருட்களும், மற்ற அத்தியாவசியப் பண்டங்களும் வருவது தடைபட்டது. மெட்ராஸ் மக்களுக்கு மெல்ல மூச்சுமுட்ட ஆரம்பித்தது. இந்த முற்றுகையை விலக்கிக் கொள்ள ஆங்கிலேயர்கள் ஆண்டுதோறும் 2000 பகோடா பணம் தர வேண்டும் என லிங்கப்பா நிபந்தனை விதித்தார். ஒருகட்டத்தில் பிரச்னை முற்றியதால், கம்பெனியையே மெட்ராசில் இருந்து செஞ்சிக்கு மாற்றிவிடலாமா என்று கூட ஆலோசிக்கப்பட்டது. வீரண்ணாவின் கோபம் இப்படி மெட்ராசின் இருப்பிற்கே ஆப்பு வைக்கப் பார்த்தது. இதனை சரி செய்ய அப்போது வீரண்ணாவும் உயிருடன் இல்லை. ஆனால் கிழக்கிந்திய கம்பெனிக்காரர்கள் தொடர் பேச்சுவார்த்தையின் மூலம் இப்பிரச்னைக்கு தீர்வு கண்டனர்.
 
காசி வீரண்ணா தமது காலத்தில் கிழக்கிந்திய கம்பெனிக்காரர்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்குடன் வாழ்ந்தார். அவர் உயிரிழந்தபோது, அவருக்கு கம்பெனி சார்பில் 30 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. வீரண்ணா காலத்திலும் மெட்ராசில் உடன்கட்டை ஏறும் பழக்கம் இருந்தது. வீரண்ணாவின் மறைவைத் தொடர்ந்து அவரது மனைவி (இரண்டாவது மனைவி) உடன்கட்டை ஏற முயன்றார். ஆனால் அப்போதைய மெட்ராஸ் ஆளுநர் அதனை அனுமதிக்கவில்லை. மெட்ராசில் 'சதி' (Sathi) எனப்படும் உடன்கட்டை ஏறுதல் அதிகாரப்பூர்வமாக தடை செய்யப்பட்ட முதல் நிகழ்வாக இது வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இப்படி வாழும்போது மட்டுமின்றி மரணத்திலும் வரலாறு படைத்த வீரண்ணாவை மெட்ராஸ் இன்றும் நினைவில் வைத்திருக்கிறது. அதற்கு அத்தாட்சிதான் பாரிமுனை பகுதியில் இருக்கும் காசி வீரண்ண செட்டித் தெரு.
 
நன்றி - தினத்தந்தி
 
* 1661 முதல் 1665 வரை கம்பெனியின் ஏஜெண்டாக இருந்த சர் எட்வர்ட் விண்டர், மெட்ராசில் குற்றங்களை விசாரித்து நீதி வழங்கும் பொறுப்பை பேரி திம்மண்ணா மற்றும் காசி வீரண்ணா ஆகியோரிடம் ஒப்படைத்திருந்தார். ஆனால் அடுத்து வந்தவர் இந்த பொறுப்பை இவர்களிடம் இருந்து பறித்துவிட்டார்.
 
* 1679ஆம் ஆண்டு லிங்கப்பா, வீரண்ணாவிற்கு 1500 பகோடாக்கள் கொடுத்து சாந்தோமை தமதாக்கிக் கொண்டார்.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Sunday, April 21, 2013

பேரி திம்மப்பா

 

பிற்காலத்தில் மிகப்பிரமாண்டமாக விஸ்வரூபம் எடுக்கும் பல விஷயங்கள் மிகச்சிறியதாகத் தான் தொடங்குகின்றன. அதற்கு தொடக்கப்புள்ளி வைப்பவர்களும் சாதாரண எளிய மனிதர்களாகத்தான் இருக்கிறார்கள். மெட்ராஸ் என்ற மாநகரமும் அப்படி சில சாதாரண மனிதர்களால்தான் உருவானது. அவர்களில் முக்கியமான ஒருவர்தான் பேரி திம்மப்பா என்கிற பேரி திம்மண்ணா.
 
ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினம் அருகே துணி வியாபாரம் செய்து கொண்டிருந்தவர்தான் இந்த பேரி திம்மப்பா. கிழக்கிந்திய கம்பெனி தனது முதல் தொழிற்சாலையை மசூலிப்பட்டினத்தில்தான் அமைத்தது. ஆனால் அங்கு டச்சு மற்றும் போர்த்துகீசியர்களின் தொல்லை அதிகமானதால் கம்பெனிக்கு வேறு இடம்பார்க்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. ஆண்ட்ரூ கோகன் தலைமையில் ஃபிரான்சிஸ் டே என்பவர் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டார்.
 
பேரி திம்மப்பா நன்றாக ஆங்கிலம் பேசும் திறனுடையவராக இருந்ததால், ஃபிரான்சிஸ் டே அவரை தமது துபாஷாக (மொழிபெயர்ப்பாளராக) பணியமர்த்திக் கொண்டார். ஆங்கிலம் மட்டுமே அறிந்திருந்த கிழக்கிந்திய கம்பெனிக்காரர்களுக்கு உள்ளூர் மன்னர்கள் மற்றும் பெரு வணிகர்களோடு வர்த்தகம் செய்ய மொழிபெயர்ப்பாளர்கள் அவசியமாக இருந்தனர். இதனால் அன்றைய காலத்தில் துபாஷிகள் பெரும் செல்வாக்குடன் வலம் வந்தனர்.
 
கம்பெனிக்காக இடம்தேடி அலைந்த ஃபிரான்சிஸ் டே, சாந்தோமிற்கு அருகே ஒரு பொட்டல் மணல்வெளியை தேர்ந்தெடுத்தார். அப்போது அங்கு சில மீனவ குப்பங்களைத் தவிர வேறு எதுவும் இல்லை. ஆண்ட்ரூ கோகனும் இந்த இடத்தை ஓ.கே செய்ய, நிலத்திற்கு சொந்தக்காரரான நாயக்க மன்னரின் உள்ளூர் நிர்வாகிகளிடம் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது பேரி திம்மப்பாதான் மொழிபெயர்ப்பாளராகவும், திறமையான தரகராகவும் செயல்பட்டு கிழக்கிந்திய கம்பெனிக்கு இந்த நிலப்பரப்பை குறைந்த விலைக்கு பெற்றுத் தந்தார். இதற்கு பிரதிபலனாக ஆங்கிலேயர்கள் பேரி திம்மப்பாவிற்கு ஒரு பெரிய நிலப்பரப்பை அன்பளிப்பாக அளித்தனர்.
 
புதிய நிலப்பரப்பில் கிழக்கிந்திய கம்பெனிக்காரர்கள் கோட்டை கட்டிக் கொள்ள, கோட்டைக்கு வெளியே தமக்கு அளிக்கப்பட்ட நிலத்தில் குடும்பத்தோடு குடியேறினார் பேரி திம்மப்பா. பின்னர் அவரின் குடும்பத்தினர் பல ஆண்டுகள் ஆங்கிலேயரின் தலைமை வணிகர்களாக விளங்கினர். இதனிடையே பேரி திம்மப்பா கோட்டைக்கு வெளியே ஒரு சிறிய நகரத்தையே உருவாக்கினார். நெல்லூர், மசூலிப்பட்டினம் ஆகிய இடங்களில் இருந்து நெசவாளர்கள், சாயம் தோய்ப்போர் என நெசவுத் தொழிலோடு தொடர்புடைய பலரையும் அழைத்து வந்து குடியேற்றினார். இப்படி கோட்டைக்கு வெளியே உள்ளூர் மக்களால் உருவான நகரை ஆங்கிலேயர்கள் 'கருப்பர் நகரம்' என்று அழைத்தனர். அந்த கருப்பர் நகரத்தின் தந்தை பேரி திம்மப்பாதான்.
 
பேரி திம்மப்பாவின் அடியொற்றி ஆந்திர மண்ணில் இருந்து நிறைய பேர் இங்கு இடம்பெயர்ந்ததால்தான், அந்த காலத்தில் மெட்ராசில் தெலுங்கு பேசும் மக்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. இது அப்படியே பல்கிப் பெருகி சுதந்திர இந்தியாவில் மொழிவாரி மாநிலங்களைப் பிரிக்கும்போது, 'மதராஸ் மனதே' என்று தெலுங்குகாரர்கள் உரிமை கொண்டாடியதற்கு ஒரு வகையில் பேரி திம்மப்பாவும் காரணமாக கருதப்படுகிறார்.
 
உள்ளூர் மக்களுக்காக பேரி திம்மப்பா ஒரு பெரிய கோயிலையும் கட்டினார். தற்போது உயர்நீதிமன்றம் இருக்கும் இடத்தில் அந்த கோயில் இருந்தது. அதுதான் பட்டனம் பெருமாள் கோயில் என்று அழைக்கப்பட்ட சென்னக்கேசவப் பெருமாள் கோயில். பின்னர் பிரெஞ்சுப் படைகளுடனான போரின்போது இந்த கோயில் இடிக்கப்பட்டு, சற்று தள்ளி இப்போதைய பூக்கடை பகுதியில் மீண்டும் கட்டப்பட்டது தனிக்கதை.
chennakesava+perumal_jpg.jpg
சென்ன கேசவ பெருமாள் கோவில்
 
தாம் கட்டிய பெருமாள் கோயிலை பேரி திம்மப்பா, நாராயணப்ப அய்யர் என்பவருக்கு தானமாக அளித்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி 1648இல் எழுதப்பட்ட ஒரு சாசனம் கிடைத்திருக்கிறது. அதில் 'நான் கட்டிய சென்னகேசவப் பெருமாள் கோயில், அதன் மானியம், அதனைச் சார்ந்த நிலங்களை, இதன் மூலம் உங்கள் பெயருக்கு மாற்றித் தருகிறேன். சூரிய, சந்திரர் உள்ள வரை உங்கள் வம்சாவளிக்கு அதன் போக உரிமை இருக்கும். அவர்கள் இந்த கோயிலில் எல்லா பூஜைகளையும் முறைப்படி செய்து வர வேண்டும். தவறினால், கங்கைக் கரையில் கரும்பசுவைக் கொன்ற பாவத்திற்கு ஆளாவார்கள். இது நாராயணப்பையருக்கு பேரி திம்மண்ணாவால் கொடுக்கப்பட்டது' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
thimappa+bashyam+naidu+and+narayanappah+
திம்மப்பா பாஷ்யம் நாயுடு, நாராயணப்ப நாயுடு
பேரி திம்மப்பாவிற்கு மகன்கள் யாரும் இல்லை, ஒரே ஒரு மகள்தான். அவரது வழியாக பேரியின் குடும்பம் வளர்ந்தது. பேரி திம்மப்பாவின் கொள்ளு கொள்ளுப் பேரர்களான திம்மப்பா பாஷ்யம் நாயுடு, நாராயணப்ப நாயுடு ஆகியோர் மெட்ராஸ் நகரின் மேம்பாட்டிற்க்காக நிறைய நிதி அளித்திருக்கின்றனர். அவர்களின் நினைவாகத்தான் கீழ்ப்பாக்கம் பகுதியில் பாஷ்யம் நாயுடு பூங்காவும், அப்பா கார்டன் தெருவும் இன்றும் இருக்கின்றன. இவர்கள் மட்டுமின்றி பேரி திம்மப்பாவின் குடும்பத்தில் வந்த பலரது பெயர்களும் சென்னையின் பல தெருக்களுக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் மெட்ராஸ் என்ற மாநகரை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றிய பேரி திம்மப்பாவிற்கு, ஏனோ யாரும் ஒரு சிலை கூட வைக்கவில்லை.
 
நன்றி - தினத்தந்தி
 
* சென்னகேசவப் பெருமாள் கோவிலை நாகபட்டன் என்பவர் 1646இல் நாராயணப்பையருக்கு சாசனமாக அளித்தாகவும் ஒரு ஆவணம் கிடைத்திருக்கிறது. இந்த நாகபட்டன் என்பவர் ஆங்கிலேயர்களுக்கு வெடிமருந்துப் பொடி தயாரித்துக் கொடுப்பவராக இருந்தார்.
 
* பேரி திம்மப்பாவின் சகோதரரான பேரி சின்ன வெங்கடாத்ரி கிண்டியில் ஒரு பெரிய லாட்ஜ் வைத்திருந்தார். கிண்டி லாட்ஜ் என்று அழைக்கப்பட்ட அந்த கட்டடம் தான் தற்போது தமிழக ஆளுநர் வசிக்கும் ராஜ் பவன்


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Saturday, April 13, 2013

காணாமல் போன கார்ன்வாலிஸ்

 

புனித ஜார்ஜ் கோட்டைக்குள் இருக்கும் தலைமைச் செயலகத்திற்கு செல்லும்போதெல்லாம் அருகில் இருக்கும் ஒரு பழமையான கூண்டு கண்ணில்படும். வேலைப்பாடு நிறைந்த பிரமாண்டமான அந்த நினைவுக் கூண்டிற்குள் இன்று எந்த சிலையும் இல்லை. ஒருகாலத்தில் இங்கு சிலையாக நின்ற கனவான் யார்? அவர் காணாமல் போனதன் காரணம் என்ன? என்று தேடியபோது ஊரெல்லாம் சுற்றித் திரிந்த ஒரு சிலையின் கதை கிடைத்தது.
 
கிழக்கிந்தியாவின் படைத்தளபதி மற்றும் கவர்னர் ஜெனரல் என்ற இரட்டைப் பதவியோடு 1786இல் இந்தியா வந்தார் சார்லஸ் கார்ன்வாலிஸ். அவர் மெட்ராஸ் துறைமுகத்தில் வந்திறங்கிய  நேரம் இந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனியின் நிர்வாகம் சீர்குலைந்து போயிருந்தது. கம்பெனி நஷ்டத்தில் ஓடிக் கொண்டிருந்தது. உண்மையில் அதனை சீர்படுத்தத்தான் கார்ன்வாலிஸை அனுப்பி வைத்திருந்தார்கள்.
Lord_Cornwallis.jpg
கார்ன்வாலிஸ்
 
மெட்ராசில் இருந்து வங்காளம் சென்ற கார்ன்வாலிஸ், சீர்திருத்த சாட்டையை சொடுக்கினார். நிர்வாக மற்றும் சட்டத்துறைகளில் அவர் மேற்கொண்ட சீர்திருத்தங்கள் இந்தியாவின் ஆட்சி முறையில் பெரும் மாற்றங்களைக் கொண்டுவந்தன. இப்படி வேகமாக செயல்பட்டுக் கொண்டிருந்த கார்ன்வாலிஸூக்கு சிம்மசொப்பனமாக விளங்கினார் மைசூரின் திப்பு சுல்தான்.
 
திப்பு சுல்தானை ஒழித்துக்கட்ட கார்ன்வாலிஸ் பல திட்டங்களைத் தீட்டினார். மெட்ராஸ் நோக்கி பெரும் படையோடு நீண்ட நெடும் பயணங்களை மேற்கொண்டார். ஆனால் எதற்கும் சலைக்காத திப்பு, கார்ன்வாலிஸூக்கு கண்ணாமூச்சி காட்டிக் கொண்டிருந்தார். ஒருவழியாக 1792இல் பல சதிகளின் பின் திப்புவை வளைத்துப் பிடித்தார் கார்ன்வாலிஸ். இதனையடுத்து கிழக்கிந்திய கம்பெனிக்கு ஒரு பெரும் தொகையை தருவதாக திப்பு ஒப்புக் கொண்டார். அது வரை அவரது இரண்டு மகன்களை கார்ன்வாலிஸிடம் பணயமாக ஒப்படைத்தார். இப்படி திப்புவின் பின்னால் அலைந்து கொண்டிருந்ததால், சோர்ந்து போன கார்ன்வாலிஸ், அடுத்த ஆண்டே தாயகம் திரும்பிவிட்டார். பின்னர் சிறிது இடைவெளி விட்டு, 1805இல் அவர் மீண்டும் கவர்னர் ஜெனரலாக இந்தியாவிற்கு வந்தது தனிக்கதை. வந்த சில மாதங்களிலேயே கடுமையான காய்ச்சலால் காசிப்பூர் என்ற இடத்தில் மரணத்தை தழுவிய கார்ன்வாலிஸை அங்கேயே கங்கைக் கரையோரமாக புதைத்துவிட்டார்கள்.
Surrender_of_Tipu_Sultan.jpg
பணயமாக ஒப்படைக்கப்படும் திப்புவின் மகன்கள்
இப்படி இந்திய வரலாற்றில் நிலைத்துவிட்ட லார்ட் கார்ன்வாலிசுக்கு 1799ஆம் ஆண்டு மெட்ராசில் செனடாப் (Cenotaph - எங்கோ புதைக்கப்பட்ட மனிதரின் நினைவாலயம்) ரோட்டில் ஒரு சிலை வைக்கப்பட்டது. கார்ன்வாலிஸ் கடும் வெயில், மழையில் சிக்கி சின்னாபின்னமாகக் கூடாது என்று நினைத்தோ என்னவோ அவரது சிலையை ஒரு கூண்டு வடிவ நினைவுக் கட்டடத்திற்குள் வைத்தனர். ஒரு பெரிய பீடத்தின் மீது அமைக்கப்பட்ட அந்த 14 1/2 அடி உயர சிலையை தாமஸ் பாங்ஸ் என்பவர் வடித்திருந்தார்.
cornwallis+statue-old+photo.jpg
கூண்டுக்குள் இருந்த சிலை
 
சிலையின் பீடத்தில் திப்பு சுல்தானின் இரண்டு மகன்கள் கார்ன்வாலிசிடம் பணயமாக ஒப்படைக்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு வடிக்கப்பட்டிருந்தது. இந்த சிலை அமைக்கப்பட்டிருந்த செனடாப் சாலை அக்காலத்தில் மக்கள் மாலை நேரங்களில் ஓய்வாக நடைபயிலும் இடமாக இருந்தது. அப்போது மெரினா கடற்கரை இப்போதுபோல சீரமைக்கப்பட்டிருக்கவில்லை என்பதால் ஆங்கிலேயர்களுக்கு வாக்கிங் போகும் இடமாக செனடாப் சாலைதான் விளங்கியது. மெரினாவில் நடைபாதை வந்தபிறகு செனடாப்பின் மவுசு குறைந்தது.
 
இதனிடையே ஒரு நூற்றாண்டு கடந்து செனடாப் சாலையில் காட்சி கொடுத்துக் கொண்டிருந்த கார்ன்வாலிஸை, 1906இல் கோட்டைக்கு இடம்மாற்றினார்கள். இதற்கான காரணம் திட்டவட்டமாகத் தெரியவில்லை. கோட்டையில் உள்ள பரேட் மைதானத்திற்கு எதிரில் இந்த சிலை வைக்கப்பட்டது. அங்கும் கார்ன்வாலிஸால் நிலையாக கால்பதிக்க முடியவில்லை.
 
1925ஆம் ஆண்டு கார்ன்வாலிஸ் கடற்கரை சாலைக்கு இடம் மாற்றப்பட்டார். வடக்கு கடற்கரைச் சாலையில் இருந்த பெண்டிக் கட்டடத்திற்கு முன்பு அவரது சிலை வைக்கப்பட்டது. ஆனால் உப்புக் காற்றால் சிலை பாதிக்கப்படுவதாகக் கூறி மூன்றே ஆண்டுகளில் அங்கிருந்து தூக்கிவிட்டார்கள். அடுத்ததாக கன்னிமரா நூலகத்திற்கு போனார் கார்ன்வாலிஸ், ஆனால் அதுவும் நிலைக்கவில்லை.
 
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, கார்ன்வாலிஸ் இறுதியாக புனித ஜார்ஜ் கோட்டையில் இருக்கும் அருங்காட்சியகத்திற்குள் சென்றுவிட்டார். அவர் நின்று கொண்டிருந்த பிரமாண்ட கூண்டு அருங்காட்சியகத்திற்கு வெளியில் நின்றுவிட்டது. அந்த கூண்டினால் ஏற்பட்ட செனடாப் என்ற பெயர் மட்டும், அந்த வீதியில் இன்றும் சுற்றித் திரிந்துகொண்டிருக்கிறது, கால ஓட்டத்தில் குடும்பத்தை பிரிந்த குட்டிமகனாய்.
 
நன்றி - தினத்தந்தி
 
* அமெரிக்க சுதந்திரப் போரை ஒடுக்குவதற்காக, 1776இல் இங்கிலாந்தால் அனுப்பி வைக்கப்பட்ட கார்ன்வாலிஸ் இறுதியில் தோல்வியையே தழுவினார். இந்த தோல்விக்கு பிறகுதான் அவர் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டார்.
* கார்ன்வாலிஸால் பணயமாக பிடித்து வைக்கப்பட்ட திப்பு சுல்தானின் மகன்கள், மெட்ராசில்தான் வைக்கப்பட்டிருந்தனர்.  அவர்கள் இன்றைய மகளிர் கிறிஸ்தவக் கல்லூரி இருக்கும்  டவுட்டன் இல்லத்தில்தான் தங்க வைக்கப்பட்டதாக ஒரு தகவல் சொல்கிறது.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Saturday, April 6, 2013

மெட்ராசை மிரட்டிய தாவூத் கான்

 

காலம் மாறினாலும், சில விஷயங்கள் மட்டும் மாறுவதே இல்லை. லஞ்சம், ஊழல் போன்றவை அவற்றில் முக்கியமானவை. பலருக்கும் லஞ்சம் கொடுத்துதான் ஆங்கிலேயர்கள் மெட்ராசில் கால்வைத்தனர். பின்னர் தங்களின் அதிகாரத்தை நிலைநிறுத்தவும் இதே ஆயுதத்தையே அவர்கள் பலமுறை பிரயோகித்தனர்.
 
இந்த வாய்ப்பை பயன்படுத்தி கிழக்கிந்திய கம்பெனியிடம் இருந்து பணம் பறித்தவர்கள் நிறைய பேர். அவர்களில் ஆங்கிலேயர்களை தொடர்ந்து மிரட்டி மிரட்டியே ஏராளமாக பொன்னும், பொருளும் பெற்றவர்தான் தாவூத் கான். முகலாய மன்னர் அவுரங்கசீப், தனது ஆளுகைக்குட்பட்ட கர்நாடக பகுதிகளை பார்த்துக் கொள்வதற்காக நவாப் என்ற பதவியை உருவாக்கினார். அப்படி நியமிக்கப்பட்ட முதல் நவாப் ஜூல்பிகர் அலி கான். இந்த ஜூல்பிகரின் உதவியாளராக இருந்தவர்தான் தாவூத் கான்.
 
ஒருமுறை தாவூத் கான் மெட்ராஸ் நகரை சுற்றிப் பார்க்க வர இருப்பதாக ஜூல்பிகர் அலி கான், அப்போதைய கவர்னரான பிட்டுக்கு கடிதம் எழுதினார். அவுரங்கசீப்பின் படையில் முக்கியத் தளபதியாக இருந்த தாவூத் வருகிறார் என்றால் அதன் பின்னணியில் நிச்சயம் ஏதேனும் சதி இருக்கும் என்று சந்தேகப்பட்ட பிட், ஒருபுறம் வரவேற்பு ஏற்பாடுகளை செய்து கொண்டே, மறுபுறம் நகரின் பாதுகாப்பை அதிகரித்தார்.
 
1699ஆம் ஆண்டு ஏப்ரல் 28ஆம் தேதி மெட்ராஸ் வந்த தாவூத், திருவல்லிக்கேணியில் ஸ்டைல்மேட் என்ற தோட்ட மாளிகையில் தங்க வைக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவர் ஒருவாரம் சாந்தோமிலும் தங்கியிருந்தார். சாந்தோம் அவருக்கு மிகவும் பிடித்துவிட்டதால், அதனை ஒரு பெரிய நகரமாக உருவாக்க வேண்டும் என்று நினைத்தார். ஆனால் அவரது கனவை ஆங்கிலேயர்கள் பலிக்கவிடவில்லை.
 
ஜூல்பிகர் அலி கானைத் தொடர்ந்து 1703ஆம் ஆண்டு நவாப்பான தாவூத் கான், ஆங்கிலேயர்களின் கண்களில் விரலைவிட்டு ஆட்டத் தொடங்கினார். அவரை பகைத்துக் கொள்ள வேண்டாம் என நினைத்த கிழக்கிந்திய கம்பெனிக்காரர்கள், தாவூத் ஆற்காடு வந்திருந்த போது அவரை சந்திப்பதற்காக நிக்காலோ மானுச் என்ற வெனிஸ் நகரத்து வணிகரை நிறைய பரிசுப் பொருட்களுடன் அனுப்பினர். நிக்காலோ மானுச் அதற்கு பல ஆண்டுகள் முன்பே மெட்ராசில் வந்து தங்கிவிட்டவர். அவருக்கு பாரசீக மொழி நன்றாகத் தெரியும் என்பதாலும், அவர் ஒரு மரியாதைக்குரிய நபராக கருதப்பட்டதாலும் அவரை தூதராக அனுப்பினர்.
daud's+siege+of+Fort_St._George.jpg
தாவூத் ஜார்ஜ் கோட்டையை முற்றுகையிட்டபோது
 
நிக்காலோ மானுச் இரண்டு பித்தளை துப்பாக்கிகள், கண்ணாடிகள், 50 பாட்டில் ஃபிரெஞ்சு பிராந்தி, உயர் ரக துணிகள், ரூ.5 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்ட பரிசுப் பொருட்களை தாவூத்திற்கு வழங்கியதாக குறிப்புகள் சொல்கின்றன. ஆனால் இதெல்லாம் ஒரு பரிசா என்ற ரீதியில் அலட்சியமாக வாங்கி வைத்துக்கொண்ட தாவூத், மெட்ராசிற்கு புதிய கவர்னரை நியமிக்கலாமா என்று யோசிப்பதாகக் கூறி ஆங்கிலேயர்களுக்கு கிலி ஏற்படுத்தினார்.
 
சொன்னதோடு நிறுத்திக்கொள்ளாமல் சில மாதங்கள் கழித்து ஒரு சிறிய படையோடு சாந்தோமுக்கு மீண்டும் வந்தார். அப்போதும் கிழக்கிந்திய கம்பெனியார் சில பரிசுகளை அவருக்கு அனுப்பி தாஜா செய்ய முயற்சித்தனர். ஆனால் தாவூத் இதனை நிராகரித்துவிட்டார். இதனால் கடுப்பாகிப்போன ஆளுநர் பிட், போருக்கு தயார் என்ற ரீதியில் கானுக்கு ஒரு கடிதம் அனுப்பினார். இதனை சற்றும் எதிர்பாராத கான், கம்பெனியின் பரிசுகளை ஏற்றுக்கொள்வதாகவும், அவர்கள் அளிக்கும் விருந்தில் கலந்துகொள்வதாகவும் சொல்லி சமரசத்திற்கு முன்வந்தார். இதனைத் தொடர்ந்து ஒரு தடபுடல் விருந்துக்கு ஏற்பாடானது.
 
சாந்தோமில் இருந்து ஜார்ஜ் கோட்டை வரை வீரர்கள் வரிசைகட்டி கானை வரவேற்றனர். பாண்டு வாத்தியம் முழங்க, 21 குண்டு மரியாதையும் அளிக்கப்பட்டது. 600 வகை பதார்த்தங்கள் இடம்பெற்றிருந்த விருந்தை வெகுவாக ரசித்த கான், மாலை 6 மணிக்கு கோட்டையில் இருந்து புறப்பட்டுச் சென்றார். அடுத்தநாள் ஒரு கப்பலை சுற்றிப்பார்க்க தாவூத் விரும்பினார். அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. ஆனால் கப்பலைவிட, கான் அதிக தண்ணியில் இருந்ததால் அவரை கிளப்பி அழைத்துவர முடியவில்லை. இப்படி எல்லாம் கம்பெனிக்காரர்கள் அவரை மதுவிலேயே நீராட்டி ஊருக்கு அனுப்பி வைத்தனர்.
 
ஆனால் போதை நன்கு தெளிந்ததும் எட்டு மாதங்கள் கழித்து மீண்டும் ஒரு படையோடு கோட்டை நோக்கி வந்துவிட்டார் தாவூத். இந்த முறை சில பரிசுப்பொருட்களை கேட்டார் கான். ஆனால் கம்பெனி அதனை கொடுக்க மறுத்துவிட்டது. ஆத்திரமடைந்த கான் கோட்டையை முற்றுகையிட்டார். மதராசபட்டினத்திற்கான கடல்வழிப் பொருள் வருகையை தடுத்து நிறுத்தினார். இந்த பகுதியில் கடற்கொள்ளையர்கள் அதிகமாகிவிட்டதால், பாதுகாப்பு கருதி இந்நடவடிக்கையை எடுத்ததாக அறிவித்தார். 1702, பிப்ரவரி 6ஆம் தேதி வெளியான இந்த ஆணையால் மதராசபட்டினத்தின் வணிகம் முடங்கிப் போனது.
 
இதுபோதாதென்று எழும்பூர், புரசைவாக்கம், திருவல்லிக்கேணி ஆகிய பகுதிகளில் கானின் ஆட்கள் கொள்ளை அடிப்பதாக ஒரு தகவல் மெட்ராஸ் முழுவதும் பரவி பீதியை அதிகரித்தது. மக்கள் அங்கும் இங்கும் ஓடி ஒளிய ஆரம்பித்தனர். கருப்பர் நகரத்தையும், தங்கசாலையையும் எடுத்துக்கொள்ளப் போவதாகவும் கான் அதிரடியாக அறிவித்தார். இதுபோன்ற அதிரடிகளால் நிலைகுலைந்து போன கிழக்கிந்திய கம்பெனி, கானுடன் சமரசமாகப்போக முடிவெடுத்தது. இதற்கு கான் ரூ.30 ஆயிரத்தை விலையாகக் கேட்டார். அப்புறம் ஒருவழியாக பேரம் பேசி ரூ.25 ஆயிரத்தைக் கொடுத்து பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்கள். ஆனால் அது முற்றுப்புள்ளி அல்ல, என்பது சில ஆண்டுகளில் நிரூபணமாகிவிட்டது.
 
பேராசை பிடித்த கான் 1706இல் மீண்டும் சாந்தோமுக்கு வந்து தேவையானவற்றை கேட்டு வாங்கிக் கொண்டார். இப்படி ஆங்கிலேயர்களை தொடர்ந்து அச்சத்திலேயே வைத்திருந்த தாவூத் கான் 1710ஆம் ஆண்டு கூடுதல் பொறுப்புகள் கொடுத்து டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பின்னர் மராட்டியர்களுக்கு எதிரான ஒரு போர்க்களத்தில் அவர் இறந்து, அவரது உடலை ஒரு யானையின் வாலில் கட்டி நகர் முழுவதும் இழுத்துச் சென்றார்கள் என்ற தகவலை கேட்டதும்தான் ஆங்கிலேயர்கள் உண்மையிலேயே நிம்மதிப் பெருமூச்சுவிட்டனர்.
 
நன்றி - தினத்தந்தி
 
* தாவூத் கான் இரண்டு நாய்களை செல்லமாக வளர்த்துவந்தார். குற்றவாளிகள் மீது இந்த நாய்களை ஏவிவிட்டு கொடூர தண்டனை கொடுத்ததாக நேரில் பார்த்தவர்கள் பதைபதைப்புடன் வரலாற்றில் பதிவு செய்திருக்கிறார்கள்.
 
* தாவூத் ஒரு குரங்கையும் பாசத்துடன் வளர்த்தார். அது இறந்துபோனதை தாங்க முடியாமல், அதன் பாதுகாவலர்களாக இருந்த இரண்டு பேருக்கு மரண தண்டனை வழங்கினார். அந்த குரங்கின் நினைவாக ஒரு படமும் வரையச் செய்தார்.
daud's+monkey.jpg
தாவூத் வளர்த்த குரங்கின் ஓவியம்
* திருவொற்றியூர், நுங்கம்பாக்கம், வியாசர்பாடி, கத்திவாக்கம், சாத்தங்காடு ஆகிய 5 கிராமங்களை 1708ஆம் ஆண்டு தாவூத், ஆங்கிலேயர்களுக்கு வழங்கினார்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Thursday, April 4, 2013

மெட்ராஸ் அச்சகங்கள்

 

உலகில் இன்று நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் பல்வேறு தொழில்நுட்பங்கள் அறிமுகமான சில நாட்களிலேயே மெட்ராஸ் மாநகருக்குள் நுழைந்திருக்கின்றன. எலெக்ட்ரிக் டிராம் போன்ற சில விஷயங்கள் லண்டனில் அறிமுகமாவதற்கு முன்பே மெட்ராசில் பயன்பாட்டிற்கு வந்திருக்கிறது. ஆனால் சில விஷயங்களை மெட்ராஸ் கோட்டைவிட்ட வரலாறும் இருக்கிறது. அவற்றில் முக்கியமானது அச்சுத் தொழில். பின்னர்கூட தற்செயலாகத்தான் அச்சுத் தொழில் மெட்ராசிற்குள் நுழைந்தது.
 
இதில் விசித்திரம் என்னவென்றால், இந்தியாவிலேயே முதன்முதலாக அச்சில் ஏற்றப்பட்ட மொழி தமிழ்தான். ஆனால் அந்த நிகழ்வு உள்நாட்டில் அரங்கேறவில்லை. போர்ச்சுகல் நாட்டின் லிஸ்பனில் தமிழ் எழுத்துருக்கள் தயாரிக்கப்பட்டு, 'கார்ட்டிலா' (The 1554 Cartilha in Roman Script) என்ற நூல் அச்சடிக்கப்பட்டது. இங்கிருந்த சிலரை மதமாற்றம் செய்து லிஸ்பனுக்கு அழைத்துச் சென்று கிறிஸ்தவ பாதிரிமார்கள் இந்த முயற்சியை செய்தனர். இதனையடுத்து 1578இல் 'டாக்ட்ரினா கிறிஸ்தியானா' என்ற 16 பக்க நூல் 'தம்பிரான் வணக்கம்' என்ற பெயரில் தமிழில் அச்சடிக்கப்பட்டிருக்கிறது.
FIRST_BOOK_IN__TAMIL_1578.jpg
டாக்ட்ரினா கிறிஸ்தியானா
 
வெளிநாடுகளில் அச்சடிக்கப்பட்டு வந்த தமிழை, இந்தியாவிற்குள் கொண்டுவந்தவர் சீகன்பால்க் (Ziegenbalg). மதமாற்ற முயற்சிகளுக்காக தரங்கம்பாடிக்கு வந்த சீகன்பால்க், 1715இல் பைபிளைத் தமிழில் மொழிபெயர்த்து அச்சடித்தார். இதுதான் இந்திய மொழியில் தயாரான முதல் பைபிள்.
Ziegenbalg.png
சீகன்பால்க்
 
அச்சுத்தமிழ் இப்படி அலைந்து திரிந்த பிறகு, ஒருவழியாக 1761இல்தான் மெட்ராசிற்கு வந்தது. சென்னையில் முதன்முதலாக அமைந்த அச்சகம்,கொள்ளையடித்துக் கொண்டு வரப்பட்டது என்று சொன்னால் நம்புவதற்கு சற்று கடினமாகத்தான் இருக்கும். 1761-இல் புதுச்சேரியைக் கைப்பற்றிய கிழக்கிந்தியக் கம்பெனி தளபதி ஐர்கூட், அங்கு சூறையாடிய பொருட்களை மெட்ராசுக்குக் கொண்டு வந்தார். அவற்றில் ஒரு அச்சகத்திற்கு தேவையான கருவிகளும், முக்கியமாகத் தமிழ் எழுத்துருக்களும் இருந்தன. ஆனால் அப்போது மெட்ராசில் யாருக்கும் இதனை எப்படிப் பயன்படுத்துவது எனத் தெரியவில்லை.
 
எனவே அந்த பொருட்கள் புனித ஜார்ஜ் கோட்டையில் ஒரு மூலையில் முடங்கிப் போயின. பின்னர் அவற்றை தமிழ் மொழியை அறிந்திருந்த ஃபெப்ரீஷியஸ் என்பவரிடம் கிழக்கிந்தியக் கம்பெனி ஒப்படைத்தது. அப்படித்தான் மெட்ராசின் முதல் அச்சகமான எஸ்.பி.சி.கே பிரஸ் வேப்பேரியில் தொடங்கப்பட்டது. இதுதான் தற்போது சி.எல்.எஸ் பிரஸ் என்று அறியப்படுகிறது. கம்பெனியின் விருப்பப்படியே ஃபெப்ரீஷியஸ் அந்த அச்சகத்தைக் கிறிஸ்தவ மதப் பிரச்சாரப் பிரசுரங்களுக்கு மட்டுமே பயன்படுத்தி வந்தார்.
 
அந்நாட்களில் மெட்ராசில் கிறிஸ்தவத்தை பரப்பும் முயற்சிகள் மும்முரமாக நடைபெற்று வந்தன. மிஷனரிகளின் இந்த மதமாற்ற முயற்சிக்கு, புதிய தொழில்நுட்பமான அச்சடித்தல் மிகவும் உறுதுணையாக இருந்தது. எனவே தரங்கம்பாடியில் இருந்து ஒரு அச்சு இயந்திரத்தை வாங்கி வந்தனர். இதனைக் கொண்டு 1772இல் 'மலபார் புதிய ஏற்பாடு' என்ற நூலைத் தயாரித்தனர். கம்பெனி அதிகாரிகளின் தேவைக்காக 1779, 1786ஆம்ஆண்டுகளில் அகராதிகளையும் ஃபெப்ரீஷியஸ் அச்சடித்துக் கொடுத்தார். இப்படித்தான் அச்சு மெட்ராசில் காலூன்றியது. 
 
ஆரம்ப நாட்களில் துண்டுப் பிரசுரங்கள் மட்டுமே அச்சடிக்கப்பட்டு வந்தன. காலப்போக்கில் அவை செய்தித்தாளாக பரிணாம வளர்ச்சி அடைந்தன. சென்னையில் முதன்முதலாக செய்தித் தாளைத் தொடங்கியவர் ஆங்கில அரசாங்கத்தில் வேலைபார்த்த ரிச்சர்டு ஜான்ஸன் என்பவர். மெட்ராஸ் கூரியர்’ என்ற பெயரில் 1785இல் அவர் தொடங்கிய ஆங்கிலப் பத்திரிகை,நான்கு பக்கங்கள் கொண்டதாக இருந்தது. அரசின் ஆதரவோடு நடந்த அந்தப் பத்திரிகைக்கு அரசு விளம்பரங்கள் குவிந்ததால் விரைவில் பக்கங்கள் ஆறாக அதிகரித்தன.
TAMIL+PRINT.jpg
அச்சுத்தமிழ்
 
மெட்ராஸ் கூரியருக்கு ஆசிரியராக இருந்த ஹக் பாயிட், பின்னர் சொந்தமாக ஹிர்காரா’ என்ற பெயரில் ஒரு பத்திரிகையை 1791இல் தொடங்கினார். ஹிர்காரா’ என்றால் தூதுவன் அல்லது ஒற்றன் என்று அர்த்தமாம். ஆனால் ஒற்றன் அதிக நாள் ஓடவில்லை. 1794இல் ஹக் காலமாகிவிடஅவர் தொடங்கிய பத்திரிகையும் சேர்த்து புதைக்கப்பட்டுவிட்டது.
 
அடுத்ததாக 1795இல் ராபர்ட் வில்லியம் என்பவர் ஒரு அச்சகத்தை நிறுவி, கம்பெனியின் அச்சு வேலைகளைப் பெறுவதில் ஜான்ஸனோடு போட்டியிட்டார். அத்தோடு நிற்காமல், மெட்ராஸ் கூரியருக்குப் போட்டியாகமெட்ராஸ் கெஸட்’ என்ற பத்திரிகையையும் ஆரம்பித்தார். அரசு தனது வேலைகளை இருவருக்கும் பகிர்ந்தளித்து வந்தது.  இதற்கிடையில் ஜான் கோல்டிங்ஹாம் என்பவரும் கம்பெனி அரசுக்காக அதிகாரபூர்வமாக மெட்ராஸ் அரசாங்க கெஸட்டைத் தொடங்கிவிட்டார். 
 
இதெல்லாம் போதாது என்று மெட்ராஸ் அரசாங்கமே 1800இல் ஒரு அச்சகத்தை நிறுவியது. அதில் இருந்து ‘மெட்ராஸ் அஸைலம் ஆல்மனாக்என்ற பெயரில் ஓர் இதழ் வெளிவரத் தொடங்கியது. இந்தச் சமயத்தில் அரசின் ஒப்புதலைப் பெறாமலேயே இந்தியன் ஹெரால்டு’ என்கிற பத்திரிகையை ஜி. ஹம்ப்ரீஸ் என்ற ஆங்கிலேயர் ஆரம்பித்தார். ஆனால் இதுசற்றே வித்தியாசமான பத்திரிகை. மற்ற பத்திரிகைகள் எல்லாம் அரசின் விளம்பரங்களை வாங்கிக் கொண்டு ஜால்ரா அடித்துக் கொண்டிருந்த காலத்தில், இதுமட்டும் கம்பனி அரசை கடுமையாக விமர்சித்தது. அதற்காக ஹம்ப்ரீஸ் கைது செய்யப்பட்டு நாட்டைவிட்டே வெளியேற்றப்பட்டார்!
 
ஒரு குறிப்பிட்ட காலம்வரை ஆங்கிலேயர்களே பத்திரிகைகளை நடத்திக் கொண்டிருந்த நிலையில், காஜுலு லக்ஷ்ம நரசு என்ற தெலுங்கு வணிகர் இந்த போட்டியில் களமிறங்கினார். ஹிந்துக்களின் உரிமைகளை வலியுறுத்தும் நோக்கத்துடன் க்ரெசன்ட்’ என்ற பெயரில் 1844இல் ஒரு பத்திரிகையைத் தொடங்கினார். 1868இல் லக்ஷ்ம நரசு இறந்துவிடஅவரது பத்திரிகையும் நின்று போனது. இதனைத் தொடர்ந்து மெட்ராஸ் டைம்ஸ், தி மெட்ராஸ் மெயில், ஸ்பெக்டேடர், தி ஹிந்து, சுதேசமித்திரன் என பல பத்திரிகைகள் தொடங்கப்பட்டு அச்சுத்தொழில் மெட்ராசில் அரியணை போட்டு அமர்ந்துகொண்டது.
 
மொத்தத்தில் எதேச்சையாக மெட்ராசிற்குள் நுழைந்த அச்சுத் தொழில் இன்று விஸ்வரூபம் எடுத்து விண்ணில் விரிந்து நிற்கிறது. ஆரம்பத்தில் கொஞ்சம் கோட்டை விட்டாலும் பின்னர் சுதாரித்துக் கொண்டதால் மெட்ராஸ் இந்திய அச்சு வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்துவிட்டது.
 
நன்றி - தினத்தந்தி
 
* அச்சில் ஏறிய முதல் தமிழ் அகராதியை தயாரித்தவர் ராபர்ட் டி நோபிளி என்ற இத்தாலிக்காரர். இவரை தத்துவ போத சுவாமி என தமிழர்கள் அன்புடன் அழைத்தனர்.
* நமசிவாய முதலியார் என்பவர் அச்சு எழுத்துகள் தயாரிக்கும் முறையை சீரமைத்தார். அவர் உருவாக்கிய புதிய எழுத்துருக்கள் 'நமசிவாய எழுத்து வரிசை' என்றே அழைக்கப்பட்டன.
* நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள் பர்மாவிலிருந்தும், தாய்லாந்தில் இருந்தும் தமிழகம் திரும்பிய பிறகு, அவர்களில் சிலர் அச்சகங்களையும், பதிப்பகங்களையும் தொடங்கினர்.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Saturday, May 4, 2013

மெட்ராஸ் பரதேசிகள்

 

மெட்ராஸ் மண்ணில் இருந்து பல்வேறு நாடுகளுக்கும் பரதேசியாய், அடிமையாய் கப்பல்களில் கொத்து கொத்தாக அடைத்து அனுப்பப்பட்ட எளிய மனிதர்களின் கதை நம்மில் பலரும் அறியாதது. மெட்ராஸ் மாநகரின் வரலாறு அவர்களின் வலி நிறைந்த வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்து கிடக்கிறது.
 
இந்தியாவில் ஆங்கிலேயர்களின் வருகைக்கு முன்பிருந்தே அடிமை முறை இருந்திருக்கிறது. ஆனால் வேலைக்காக அடிமையை வாங்குவது, கொத்தடிமையாக வெளிநாடுகளுக்கு அனுப்புவது போன்ற பழக்கமெல்லாம் ஐரோப்பியர்கள் வந்த பிறகுதான் தொடங்கியது. ஆங்கிலேயர்கள், போர்த்துகீசியர்கள், டச்சுக்காரர்கள், பிரெஞ்சுக்காரர்கள் என அனைவரும் இந்த அடிமை வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தனர்.
 
ஆரம்ப நாட்களில் கிழக்கிந்திய கம்பெனியினர் ஆப்ரிக்க நாடுகளில் அடிமைகளை வாங்கி கீழை நாடுகளில் தோட்ட வேலைக்காக அனுப்பி வைத்தனர். அந்நாட்களில் ஆப்ரிக்காவில் இருந்து புறப்படும் அனைத்து கப்பல்களிலும் வணிகப் பொருட்களோடு சேர்த்து அடிமைகளும் ஏற்றப்பட்டனர். கிழக்கிந்திய கம்பெனிக்காரர்கள் மெட்ராசில் கோட்டை கட்டி குடியேறியதும், ஆப்ரிக்காவில் செய்த வேலையை இங்கும் செய்யத் தொடங்கினர்.
 
ஜனவரி 5, 1641இல் மைக்கேல் என்ற கப்பலில் 14 மலபார் (தமிழ்) நாட்டு மனிதர்களை அடிமைகளாக அழைத்துச் சென்றதாக ஒரு குறிப்பு சொல்கிறது. இதுபோன்று அடிமைகளாக செல்பவர்களின் கூலி, அவர்கள் செல்லும் நாட்டில் உள்ள உள்நாட்டுத் தொழிலாளர்களின் கூலியை விட மூன்று மடங்கு குறைவானதாக இருந்தது.
famine3.jpg
பஞ்சத்தால் பாதிக்கப்பட்டவர்கள்
 
இந்தியாவின் தென்பகுதியில் மெட்ராஸ் துறைமுகத்தில்தான் அடிமை வணிகம் அமோகமாக நடைபெற்றது. மெட்ராஸில் அடிமை வணிகத்திற்கு நிறைய சலுகைகள் அளிக்கப்பட்டதே இதற்குக் காரணம். அடிமைகளுக்கான சுங்க வரி மற்ற துறைமுகங்களை விட மெட்ராசில் குறைவு. 1711ஆம் ஆண்டு நிலவரப்படி, ஒரு அடிமைக்கு 6 ஷில்லிங்கு, 9 பென்ஸ் அதாவது இந்திய மதிப்பில் 8 அணா, சுங்க வரியாக வசூலிக்கப்பட்டிருக்கிறது. இந்த பணம் கிழக்கிந்திய கம்பெனி, நீதிபதி மற்றும் வேலையாட்கள் இடையே பகிர்ந்து கொள்ளப்பட்டது.
 
இந்த குறைவான சுங்க வரி காரணமாக ஆங்கிலேயர்கள் மட்டுமின்றி டச்சுக்காரர்கள் கூட மெட்ராஸ் துறைமுகம் வழியாகவே தங்களின் அடிமை வியாபாரத்தை நடத்தினர். அடிமைகளைப் பிடிப்பதற்காக அவர்கள் மெட்ராஸில் தனியாக புரோக்கர்களை வைத்திருந்தனர். அதெல்லாம் சரி, இவர்களிடம் அடிமைகளாக, முன்பின் தெரியாத நாட்டிற்கு செல்ல உள்நாட்டு மக்கள் எப்படி சம்மதித்தார்கள் என்று ஒரு கேள்வி எழுகிறது.
 
மெட்ராசில் ஏற்பட்ட கடுமையான பஞ்சங்கள் தான் இதற்கு பதில். 1646இல் ஒரு பயங்கரப் பஞ்சம் மெட்ராஸை பந்தாடியது. சொந்த மண்ணில் சோற்றுக்கு இல்லாமல் சாவதைவிட, எங்கோ சென்று அடிமையாக உயிரைத் தக்கவைத்துக் கொள்வதே மேல் என மக்கள் முடிவுக்கு வந்தனர். அப்படி பஞ்சத்தால் நொந்துபோன மக்களை, இந்தோனேஷியா போன்ற நாடுகளுக்கு ஆங்கிலேயர்கள் அடிமைகளாக அனுப்பி வைத்து காசு பார்த்தனர்.
 
பஞ்சம் போன பிறகும் மெட்ராசில் அடிமை வியாபாரம் தொடர்ந்தது. அடிமைகள் கிடைக்காதபோது, குழந்தைகளையும், பெண்களையும் திருடி விற்கும் அயோக்கியத்தனங்கள் அரங்கேறின. மெட்ராசில் தங்கியிருந்த வெனிஸ் நகரத்து வியாபாரியான நிகோலஸ் மானுச்சி தமது நூலில் இதுபற்றி குறிப்பிட்டிருக்கிறார். 'ஒரு இத்தாலிய கிறிஸ்துவ மத போதகர், தரங்கம்பாடியில், மதுரை வாழ் இந்தியக் கிறிஸ்துவரை ஏமாற்றி அவரது மனைவியையும், நான்கு மகன்களையும் 30 பகோடாக்களுக்கு விற்றுவிட்டார்' என்று அவர் தமது நூலில் பதிவு செய்திருக்கிறார்.
 
அடிமை வியாபாரத்திற்கு ஆங்கிலேயர்கள் மத்தியிலேயே எதிர்ப்பு கிளம்பியபோதும், இதன் மூலம் நிறைய பணம் கிடைத்ததால், கிழக்கிந்திய கம்பெனி இதனை கண்டும்காணாமல் இருந்தது. அடிமை வியாபாரத்தில் ஈடுபட்டதாக யாராவது பிடிபட்டால் பெயரளவில் ஒரு சிறிய தண்டனையை கொடுத்து பிரச்னையை அதோடு முடிக்கப் பார்த்தது.
 
1682இல் தான் அடிமை வியாபாரத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என கம்பெனி உண்மையிலேயே யோசிக்க ஆரம்பித்தது. இதற்காக ஆங்கிலம், போர்ச்சுகீஸ், தமிழ், தெலுங்கு ஆகிய நான்கு மொழிகளில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதன்படி இனிமேல் யாரேனும் அடிமை வியாபாரத்தில் ஈடுபட்டால் 50 பகோடாக்கள் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இப்படி வசூலிக்கப்படும் பணத்தில் மூன்றில் ஒரு பங்கு, இதுகுறித்து துப்பு கொடுத்தவருக்கு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
 
ஆனால் இந்த அறிவிப்பு வெளியான ஐந்தாவது ஆண்டு (1687இல்) மெட்ராசில் மீண்டும் பஞ்சம் வந்தது. கம்பெனியின் தடையையும் மீறி மீண்டும் அடிமை வியாபாரம் களைகட்டத் தொடங்கியது. இதைத் தடுக்க முடியாது என்பதை உணர்ந்துகொண்ட கம்பெனி, ஏற்றுமதி செய்யப்பட்ட ஒவ்வொரு அடிமைக்கும் ஒரு பகோடா சுங்கம் வசூலித்து கஜானாவை நிரப்பிக் கொண்டது.
slaves+in+ship.jpg
கப்பலில் செல்லும் அடிமைகள்
 
பஞ்சத்தின் கொடுமை சற்று தீர்ந்ததும், 1688இல் அடிமை வணிகத்திற்கு மீண்டும் தடை விதிக்கப்பட்டது. ஆனால் ஏற்கனவே அடிமைகளை வாங்கி இருப்பு வைத்துக் கொண்டிருந்தவர்கள் கடுப்பு காட்டியதால், அடிமைத் தடுப்புச் சட்டம் சற்றே தளர்த்தப்பட்டது. அடிமைகளை ஏற்றுமதி செய்யும்முன் நீதிபதியிடம் உத்தரவு பெற வேண்டும், தவறான முறையில் அடிமைகளை கொண்டு வரவில்லை என்றும், அவர்களுக்கு வேறு யாரும் சொந்தம் கொண்டாடவில்லை என்றும் தெரிந்த பிறகுதான் ஏற்றுமதி செய்ய வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது. இவ்வளவு கட்டுப்பாடுகள் இருந்தாலும் அடிமை வியாபாரம் கனஜோராக நடைபெற்றது. காரணம், இதில் புழங்கிய அபரிமிதமான காசு.
 
பின்னர் மக்கள் மத்தியில் கம்பெனிக்கு இதனால் கெட்டப் பெயர் ஏற்படுகிறது என்பது தொடர்ந்து வலியுறுத்தப்பட்டதால் அடிமை வியாபாரத்தை ஒரேயடியாக ஒழிக்க முடிவெடுக்கப்பட்டது. அதன்படி அடிமை வியாபாரத்திற்கு முதலில் முடிவு கட்டிய பெருமையும் மெட்ராஸையே சாரும். மெட்ராஸ் துறைமுகத்தில் அடிமை வியாபாரம் அடியோடு தடை செய்யப்பட்ட பிறகும், இந்தியாவில் இருந்த டச்சு, ஃபிரெஞ்சு மற்றும் போர்த்துகீசியத் துறைமுகங்களில் இந்த வணிகம் தொடர்ந்தது.
 
நன்றி - தினத்தந்தி
 
* அடிமைகளாக சென்ற தமிழர்கள்தான் சுமத்ரா, ஜாவா ஆகிய நாடுகளில் நெல் சாகுபடியை அறிமுகப்படுத்தினர்.
 
* டெய்லர் என்பவர் நீதிபதியாக இருந்தபோது, கப்பலில் கடத்தப்பட இருந்த 20 பையன்களையும், 21 பெண் குழந்தைகளையும் மீட்டார். அவர்கள் கிழக்கிந்திய கம்பெனியால் இரண்டரை ஆண்டுகள் பராமரிக்கப்பட்டனர்.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Sunday, October 28, 2012

சென்னையின் சர்ச்சை சிலை

 

வரலாறு மிகவும் விசித்திரமானது. அது சிலரை உயர உயரத் தூக்கி கடைசியில் அதல பாதாளத்தில் வீசி எறியும். அப்படி வீசி எறியப்பட்ட ஒருவர் தான் கர்னல் ஜேம்ஸ் நீல். நகரின் பிரதான சாலையில் கம்பீரமாக நின்று கொண்டிருந்த நீலின் சிலை அருங்காட்சியகத்தில் அடைபட்டுப் போன கதை மிகவும் சுவாரஸ்யமானது.
 
'அலகாபாத் கசாப்புக்காரன்' என்று பிற்காலத்தில் பெயர் எடுத்த ஜேம்ஸ் நீல், ஸ்காட்லாந்தில் ஒரு சிறிய கிராமத்தில் 1810இல் பிறந்தார். கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற நீல், கிழக்கிந்திய கம்பெனியின் மெட்ராஸ் ஃபுசிலியர்ஸ் ரெஜிமண்ட் படைப் பிரிவில் சேர்ந்தார். இரண்டாவது பர்மியப் போரில் சூறைக் காற்றாய் சுழன்றடித்த நீலுக்கு லெப்டினன்ட் கர்னலாக பதவி உயர்வு அளிக்கப்பட்டது.
 
கிழக்கிந்திய படையின் துடிப்பான அதிகாரி எனப் பெயர் பெற்ற நீல், 1857ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வந்தார். தனது பெயர் இந்திய சரித்திரத்தின் கருப்புப் பக்கத்தில் இடம்பெறப் போகிறது என்பதை நீல் அப்போது அறிந்திருக்கவில்லை. அவர் இந்தியா வந்த சமயம் கிழக்கிந்திய படையில் இருந்த சில இந்திய வீரர்கள் தலைமைக்கு எதிராக கொந்தளிக்கத் தொடங்கி இருந்தனர். விளைவு, இந்தியத் துணைக்கண்டத்தில் நிகழ்ந்த வெள்ளையர் எதிர்ப்புகளிலேயே அளவிலும் பங்கேற்பிலும் பெரியதாக கருதப்படும் சிப்பாய் கலகம் வெடித்தது.
The_93rd_Sutherland_Highlanders_November
சிப்பாய் கலகம்
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முதல் மாபெரும் கிளர்ச்சியான இந்த கலகம் கிழக்கிந்திய படையை கலக்கமடையச் செய்தது. வட மாநிலங்களில் வேகமாகப் பரவிய கலகத்தை ஒடுக்க திறமையான அதிகாரிகள் உடனடியாக கலவரப் பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவ்வாறு பனாரஸ் நகருக்கு அனுப்பப்பட்டவர்தான் நீல்.
 
ஜூன் 4ந் தேதி பனாரஸ் சென்றடைந்த நீலின் படை, ஒரே இரவில் ஏராளமான கிளர்ச்சியாளர்களை கொன்று குவித்தது. பின்னர் அலகாபாத்திலும் நீல் இதே வெறியாட்டத்தை வெளிப்படுத்தி கிளர்ச்சியை அடக்கி ஒடுக்கினார். நீலின் இந்த படுபாதக செயல்தான் அவருக்கு 'அலகாபாத் கசாப்புக்காரன்' என்ற அடைமொழியைப் பெற்றுத் தந்தது.
 
இப்படிப்பட்ட நீலுக்குத் தான் கிழக்கிந்திய கம்பெனி மவுண்ட் ரோடில் சிலை வைத்து அழகு பார்த்தது. 1861 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24ஆம் தேதி நீலனின் வெண்கலச் சிலையை ஆளுநரின் ஆலோசனைக்குழு உறுப்பினர் எட்வர்டு மால்ட்பி திறந்து வைத்துநீலனை வானளாவப் புகழ்ந்தார். இன்றைய ஸ்பென்சர் பிளாசாவுக்கு எதிரில் கம்பீரமாக நின்று கொண்டிருந்த நீலின் 10 அடி உயர பிரம்மாண்ட சிலை, தேச பக்தர்களை கொந்தளிக்கச் செய்தது. இதனை அகற்றக் கோரி ஆரம்பித்ததுதான் நீலன் சிலை சத்தியாகிரகம்.
neil+statue+at+spencers-corner.jpg
மவுண்ட் ரோடில் இருந்த நீல் சிலை
இந்த அறவழிப் போராட்டம் 1927இல் நடத்தப்பட்டது. சென்னை மகாஜன சபையும்இந்திய தேசிய காங்கிரசின் சென்னை மாகாணக் குழுவும் நீல் சிலையை அகற்றக் கோரி தீர்மானங்கள் இயற்றின. பின் அதற்காகத் தொடர் போராட்டங்களிலும் ஈடுபட்டன. திருநெல்வேலியைச் சேர்ந்த சோமையாஜூலு இதற்கு தலைமை வகித்தார். சென்னை மாகாணம் முழுவதிலும் இருந்து வந்த போராட்டக்காரர்கள் இதில் பங்கேற்றனர். அவர்களில் பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களுக்கு சில வாரங்கள் முதல் ஒரு வருடம் வரை சிறை தண்டனைகள் வழங்கப்பட்டன.
 
சோமையாஜுலு, சாமிநாத முதலியார் போன்ற முன்னணித் தலைவர்கள் கைது செய்யப்பட்ட பின், செப்டம்பர் 1927இல் காமராஜர் களத்தில் இறங்கினார். அந்த சமயம் சென்னை வந்திருந்த மகாத்மா காந்தியை சந்தித்து இதற்கான அனுமதியையும் பெற்றார். சிலை அகற்றலுக்கு ஆதரவாக சென்னை சட்டமன்றத்திலும் தீர்மானங்கள் இயற்றப்பட்டன. ஆனாலும் நீலை அங்கிருந்து அசைக்க முடியவில்லை.
 
அந்த சமயத்தில் சைமன் குழு புறக்கணிப்புப் போராட்டம் வலுப்பெறத் தொடங்கியதால், இது உரிய கவனம் பெறாமல் போய்விட்டது. நீல் பல ஆண்டுகள் மவுண்ட் சாலையில் மவுனமாக நின்று கொண்டிருந்தார். பின்னர் சில ஆண்டுகள் கழித்து நீலை இடம்மாற்றி ரிப்பன் கட்டிட வளாகத்தில் வைத்தனர்.
 
பின்னர் 1937இல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ராஜாஜி சென்னை மாகாண முதல்வரானதும் முதல் வேலையாக நீல் சிலையை அகற்றத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து நீல் சிலையை அகற்றி சென்னை அருங்காட்சியகத்தில் வைக்க உத்தரவிடப்பட்டது. ஆனாலும் 1952ஆம் ஆண்டுதான் நீலின் சிலை முறைப்படி அருங்காட்சியகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
 
ஒரு வீரனின் சிலை என்று ஆங்கிலேயர்களால் வியந்து பார்க்கப்பட்ட ஒன்று, இந்தியர்களால் அவமானச் சின்னமாகப் பார்க்கப்பட்டது. விளைவு, காலம் அந்த காலனை தற்போது அருங்காட்சியகத்தின் மானுடவியல் பிரிவில் நிற்க வைத்திருக்கிறது.
 
நன்றி - தினத்தந்தி
 
* லக்னோ நகரில் குதிரை மீது அமர்ந்தபடி களத்தில் கட்டளையிட்டுக் கொண்டிருந்த நீல்இந்தியச் சிப்பாய்களின் பீரங்கித் தாக்குதலுக்கு இரையாகி செத்து விழுந்தார்.
 
* நீலின் சிலையை லண்டனைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற சிற்பி எம் நோபிள் வடித்துக் கொடுத்தார்.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 Saturday, October 27, 2012

மேப் போட்ட மெட்ராஸ்

 

மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடும் நிகழ்வுகள் சில நேரங்களில் அதிசயமாக வரலாற்றுப் பக்கங்களில் இடம்பிடித்து விடுகின்றன. எவரெஸ்ட் தான் உலகின் உயரமான சிகரம் என்ற கண்டுபிடிப்புக்கான விதை மெட்ராசில் விதைக்கப்பட்டதும் அப்படி ஒரு நிகழ்வுதான்.
 
ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்குள் நுழைந்தபோது இந்த தேசம் பல்வேறு ராஜ்ஜியங்களாக பிரிந்து கிடந்தது. எனவே இதற்கு முறையான வரைபடங்கள் எதுவும் கிடையாது. இதனை மெல்ல தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த ஆங்கிலேயர்கள், இதன் நிலப்பரப்பு குறித்த துல்லியமான தகவல்கள் இருந்தால் பயனுள்ளதாக இருக்கும் எனக் கருதினர். இந்த கருத்தின் அடிப்படையில் தொடங்கப்பட்டது தான் 'இந்தியாவின் பெரும் முக்கோணவியல் அளவீடு' (The Great Trigonometrical Survey of India). நிலத்தை முக்கோணங்களாக பிரித்து அளந்ததால், இந்த பெயர் கொடுக்கப்பட்டது.
colonel+lambton.jpg
கர்னல் லாம்ப்டன்
1802ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதி இந்த பெரும் பணி தொடங்கியது. இந்தியாவின் நீள அகலத்தையே அளக்கப் போகும் இந்த மெகா திட்டம் தொடங்கிய இடம் மெட்ராஸ். புனித ஜார்ஜ் கோட்டையை பரங்கி மலையுடன் இணைக்கும் 7 மைல் நீளம் கொண்ட நேர்க் கோட்டை அடிப்படையாகக் கொண்டு இந்த வேலை ஆரம்பமானது. ஆனால் சென்னையைப் பொறுத்தவரை இதற்கு முன்னரே சில வரைபடங்கள் தயாரிக்கப்பட்டிருந்தன. 1673-லேயே குத்துமதிப்பாக ஒரு வரைபடம் இருந்தது. இருந்தாலும் 1710இல் ஆளுநர் தாமஸ் பிட்டின் முயற்சியால் உருவான வரைபடமே நகரின் நம்பகமான முதல் வரைபடமாக கருதப்படுகிறது.
 
இந்தியாவின் பெரும் முக்கோணவியல் அளவீடு தொடங்கிய போது, இந்த பணியை முடிக்க 5 ஆண்டுகள் ஆகலாம் என்று நினைத்தனர். ஆனால் இந்த பணி 60 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கப் போகிறது என்பது அப்போது யாருக்கும் தெரியவில்லை. காரணம் இந்த பணியை அவ்வளவு துல்லியமாக மேற்கொண்டனர். ஒரு நிலத்தின் பரப்பை அளக்கும் போது, இயற்கை உட்பட எந்தெந்த காரணங்களால், எந்தெந்த அளவு தவறுகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்று கணக்கிட்டு அதற்கேற்ப அளவீடு சீர் செய்யப்பட்டது.
 
நூற்றுக்கணக்கான ஆங்கிலேய அதிகாரிகளும், ஆயிரக்கணக்கான இந்தியத் தொழிலாளர்களும் இரவு பகலாக இந்த பணியில் ஈடுபட்டனர். அப்போது விஷப் பூச்சிகள் கடித்தும், மலேரியா போன்ற நோய்கள் தாக்கியும் பலர் உயிரிழந்தனர். இருப்பினும் பணி தொடர்ந்து கொண்டே இருந்தது. இந்த திட்டத்தின் மேற்பார்வையாளராக லாம்ப்டன் என்பவர் நியமிக்கப்பட்டதும் வேலை இன்னும் சூடு பிடித்தது. 'எத்தகைய சோதனை வந்தாலும் தொடர்ந்து முன்னே தான் செல்ல வேண்டும்' என்ற விதியை லாம்ப்டன் வகுத்தார். அதாவது மலை, ஆறு என எது குறுக்கிட்டாலும் அதில் ஏறி அல்லது நீந்தி முன்னே சென்று அளக்க வேண்டும். இதற்காக கோணங்களை அளக்க வசதியாக லாம்ப்டன் 'தியோடலைட்’  (Theodolite) என்ற புதிய கருவியுடன் களம் இறங்கினார்.
theodolite.jpg
தியோடலைட்
இந்த கருவி இங்கிலாந்தில் இருந்து கப்பலில் கொண்டு வரப்பட்டது.ஒருமுறை தஞ்சாவூரில் ஒரு கோவிலின் கோபுர உச்சிக்கு கொண்டு சென்றபோது, இந்த கருவி கீழே விழுந்து சேதமடைந்தது. பின்னர் இது சரி செய்யப்படும் வரை பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன. இதனிடையே 1818இல் ஜார்ஜ் எவரெஸ்ட் என்ற பொறியாளர் நியமிக்கப்பட்டார். இவரும் லாம்ப்டனுக்கு சளைக்காமல் பணியில் பின்னி எடுத்தார்.
 
மத்திய இந்தியா வரை நில அளவைப் பணி விறுவிறுப்பாக நடந்து முடிந்திருந்தபோதுஓய்வில்லாமல் உழைத்து வந்த தாமஸ் லாம்டன், தனது 70வது வயதில் நிரந்தரமாக ஓய்வெடுத்துக் கொண்டார். அதன்பிறகுமுழுப் பொறுப்பும் எவரெஸ்ட்டிடம் அளிக்கப்பட்டது. அவர்இங்கிலாந்துக்குச் சென்று புதிய கருவிகளைக் கொண்டு வந்துமிக துல்லியமான நில அளவைப் பணியை மேற்கொள்ளத் துவங்கினார்.
 
இப்படி அளந்துகொண்டே எவரெஸ்ட், இமயமலை வரை சென்று விட்டார். இமய மலையில் உள்ள சிகரங்களை கடும் சிரமங்களுக்கு மத்தியில் அளவிட்டார். ஆனாலும்அவற்றின் உயரத்தை அவரால் துல்லியமாக அறிய முடியவில்லை. இந்நிலையில் 1843-ம் ஆண்டு அவர் ஓய்வு பெற்று இங்கிலாந்து திரும்பினார்.
 
அதன்பிறகுஆண்ட்ரு ஸ்காட் வாக் என்ற அதிகாரி நில அளவையின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். அவரது வழிகாட்டுதலில் இமயமலையின் சிகரங்கள் அளவிடப்பட்டன. பல்வேறு இன்னல்களுக்கு இடையில் தியோடலைட் கருவிகளைஇமயமலை மீது தூக்கிச் சென்று அதன் சிகரங்களை கணக்கெடுக்கத் துவங்கினார். அப்போதுதான்கஞ்சன் ஜங்கா சிகரம் கண்டுபிடிக்கப்​பட்டது.
 
ஜார்ஜ் எவரெஸ்ட்டின் பணிக் காலத்தில் ராதா நாத் சிக்தார் என்ற வங்காள இளைஞர் இந்த பணியில் சேர்ந்தார். கணிதத் திறமையும் துடிப்பும் நிறைந்த அந்த இளைஞர் நில அளவையைத் துல்லியமாகக் கணக்கிட தானே ஒரு புதிய முறையை உருவாக்கினார். டார்ஜிலிங்கில் இருந்து இமயமலையின் சிகரங்களை ஆறு கோணங்களில் துல்லியமாக அளந்துமுடிவில் 1852-ம் ஆண்டுராதாநாத் சிக்தார் இந்தியாவின் மிக உயரமான சிகரமாக இமயமலையின் 15-வது சிகரம் உள்ளது என்பதைக் கண்டறிந்தார். அப்படி,அவர் கண்டுபிடித்த சிகரம் 29,002 அடி உயரம் இருந்தது. தனக்கு முந்தைய சர்வேயர் ஜெனரலின் நினைவாக ஆண்ட்ரு ஸ்காட் வாக்உலகின் மிக உயரமான அந்த சிகரத்துக்கு 'ஜார்ஜ் எவரெஸ்ட்டின் பெயரைச் சூட்டினார்.
george+everest.jpg
ஜியார்ஜ் எவரெஸ்ட்
ஆனால் இதைஎவரெஸ்ட்டே ஏற்க மறுத்தார். தனது பெயரை இந்தியர்களால் முறையாக உச்சரிக்க முடியாது என்பதே எவரெஸ்டின் எதிர்ப்புக்கு காரணம். ஆனால் ஆண்ட்ரு ஸ்காட் விடாப்பிடியாக உலகின் மிக உயரமான சிகரத்துக்கு எவரெஸ்ட் என்றே பெயர் சூட்டினார். இதைராயல் ஜியாகிரஃபி சொசைட்டி 1857-ல் அங்கீகரித்தது. இதுதான் மெட்ராசில் தொடங்கிய பணி எவரெஸ்ட் வரை நீண்ட கதை.
 
60 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்த இந்த பணியால் இந்திய நிலவியல் துறை பயனடைந்ததைப் போல, இதில் ஈடுபட்ட சர்வேயர்களும் பயனடைந்தனர். ஆன்ட்ரூ சாம்ரெட் (Andrew Chamrette), அவரைத் தொடர்ந்து அவரது மகன், பின்னர் அவரது மகன் என ஆன்ட்ரூ குடும்பத்தினர் மூன்று தலைமுறையாக இந்த பணியில் ஈடுபட்டனர். இவர்கள் மூவரும் சேர்ந்து மகராஷ்டிர மாநிலத்தில் 1800 ஏக்கருக்கும் அதிகமாக வளைத்துப் போட்டனர். இதேபோல ஜார்ஜ் எவரெஸ்ட் அவர் பங்குக்கு டேராடூனில் 600 ஏக்கர் வாங்கிப் போட்டார். இப்படி இந்தியாவை அளந்தவர்கள் தனியாக தங்களுக்கென சில பல ஏக்கர்களை ஒதுக்கியது தனிக்கதை.
 
நன்றி - தினத்தந்தி
 
* நில அளவைக் குழு வைத்திருந்த டெலஸ்கோப் மூலம் பார்த்தால் பெண்கள் நிர்வாணமாகத் தெரிவார்கள் என்று யாரோ சொன்னதை நம்பி,ஒரு வணிகன் அவற்றைப் பிடுங்கி சோதித்துப் பார்த்த சம்பவமும் அரங்கேறி இருக்கிறது.
 
* பூமிக்கடியில் உள்ள புதையல்களைக் கண்டுபிடிக்க இந்த கருவி உதவும் என நினைத்து திருட்டுக் கும்பல் ஒன்று நில அளவைப் பணி​யாளர்களை மடக்கி வாரக்கணக்கில் பூமியைத் தோண்டச் செய்து இருக்கிறார்கள். புதையல் கிடைக்கவில்லை என்றவுடன் கருவிகளை உடைத்ததோடு,பணியாளர்களின் கை கால்களையும் முறித்திருக்கிறார்கள்.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Saturday, October 13, 2012

கவர்னர் ஜெனரலான காதல் மன்னன்

 

சாதாரண பேட்டையில் இருந்து அதிகார கோட்டைக்கு போகும் சாகசக் கதாநாயகனின் கதையை போன்று விறுவிறுப்பானது, இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலான வாரன் ஹேஸ்டிங்சின் வாழ்க்கை. சுமார் 300 ஆண்டுகால ஆங்கிலேய ஆட்சியில் ராபர்ட் கிளைவுக்கு அடுத்தபடியாக பெரிதும் பேசப்பட்டவர் வாரன் ஹேஸ்டிங்ஸ். இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சிக்கு அவர் போட்ட பலமான அஸ்திவாரமே இதற்கு காரணம்.
 
வாழ்ந்து கெட்ட ஒரு அரச குடும்பத்தில் 1732இல் பிறந்தார் வாரன் ஹேஸ்டிங்ஸ். எனவே இந்தியாவிற்கு சென்றால் பிழைத்துக் கொள்ளலாம் என கப்பல் ஏறிய அந்தக்கால இங்கிலாந்து இளைஞர்களைப் போல, 18வது வயதில் தனது பயணத்தை தொடங்கினார் ஹேஸ்டிங்ஸ். கிழக்கிந்திய கம்பெனியின் சாதாரண எழுத்தராக அவர் வந்திறங்கியது முதலில் கல்கத்தாவில் என்றாலும், வாழ்வில் அனைத்து விதமான ஆட்டங்களையும் ஆடிப் பார்த்தது மெட்ராசில்தான்.
 
1750ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கல்கத்தா வந்த வாரன் ஹேஸ்டிங்ஸ், தனது கடின உழைப்பால் விரைவில் நல்ல பெயர் எடுத்தார். இந்தியாவைப் பற்றி தெரிந்து கொள்வதிலும், உருது, பாரசீகம் ஆகிய மொழிகளைக் கற்பதிலும் ஓய்வு நேரத்தை செலவிட்டார். இதனிடையே சில பல பதவி உயர்வுகளைப் பெற்று வாழ்க்கையில் சற்று மேலே போனாலும் கல்கத்தாவில் அன்று நிலவிய அரசியல் குழப்பங்கள் ஹேஸ்டிங்ஸை மன உளைச்சலுக்கு உள்ளாக்கின. எனவே 1764ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பதவியை உதறிவிட்டு இங்கிலாந்திற்கு திரும்பிவிட்டார்.
 
தனது மற்ற சகாக்களைப் போல தாயகம் திரும்பும்போது பெரும் செல்வத்தை அவர் சேர்த்துக் கொண்டு செல்லவில்லை. அவர் சேர்த்த சிறிதளவு பணமும் விரைவிலேயே கரைந்துவிட கடனாளியான ஹேஸ்டிங்ஸ், வட போச்சே என்று வருந்தினார். அப்போதுதான் மீண்டும் இந்தியா செல்வது என முடிவு எடுத்தார். அந்த முடிவு அவரது வாழ்வை மட்டுமின்றி இந்தியாவின் எதிர்காலத்தையே மாற்றி அமைத்தது.
 
இந்த முறை அவருக்கு மெட்ராசில் வேலை கிடைத்தது. இதற்காக 1769இல் ட்யூக் ஆஃப் கிராஃப்டன் என்ற கப்பலில் ஏறிய போதுதான் அவரது வாழ்வில் வசந்தம் வீசத் தொடங்கியது. அதே கப்பலில் இம்ஹோஃப் என்பவர் தனது மனைவியுடன் பயணம் செய்தார். பிரபு குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் வசதியில் குறைந்த இம்ஹோஃப் நன்றாக ஓவியம் வரைவார். எனவே சென்னையில் ஓய்வு நேரத்தில் ஆங்கிலேய அதிகாரிகளை படம் வரைந்து நன்றாக சம்பாதிக்கலாம் என்ற நினைப்போடு, சிபாரிசு மூலம் ராணுவத்தில் பயிற்சியாளர் வேலை பெற்று, கனவுகளோடு கப்பலில் வந்துகொண்டிருந்தார்.
 
நீண்ட கப்பல் பயணத்தில் வாரன் ஹேஸ்டிங்ஸும், இம்ஹோஃபின் மனைவி மரியாவும் நெருங்கிய நண்பர்களானார்கள். கடல் பயணம் ஒத்துக் கொள்ளாமல் ஹேஸ்டிங்ஸ் நோய்வாய்ப்பட்டபோது, மரியா மருந்துகளோடு சேர்த்து அன்பையும் கொடுத்து அரவணைத்தார். ஏற்கனவே மனைவியை இழந்திருந்த ஹேஸ்டிங்ஸுக்கு மரியாவின் துணை பெரும் ஆறுதலாக இருந்தது. சென்னையில் வந்து இறங்குவதற்கு முன்பே இவர்களின் நட்பு காதலாக பரிணாம வளர்ச்சி அடைந்துவிட்டது.
Warren_Hastings_by_Joshua_Reynolds.jpg
வாரன் ஹேஸ்டிங்ஸ்
 
சென்னைக்கு வந்ததும் வாரன் ஹேஸ்டிங்ஸ் அடிக்கடி மரியாவின் வீட்டிற்கு சென்று வந்தார். 1771இல் மரியா தனது கணவருடன் கல்கத்தா செல்லும் வரை இது நீடித்தது. ஹேஸ்டிங்ஸ் தனக்கு ஆளுநர் பதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சென்னையிலேயே தங்கி இருந்தார். ஆனால் விதி அவரையும் கல்கத்தாவிற்கு இழுத்துச் சென்றது. அவருக்கு கல்கத்தாவின் ஆளுநர் பதவி கொடுக்கப்பட்டிருப்பதாக செய்தி வந்தது. மச்சக்கார ஹேஸ்டிங்ஸிற்கு அவர் விரும்பிய ஆளுநர் பதவி மரியா வசிக்கும் நகரிலேயே கிடைத்துவிட்டது.
 
ஹேஸ்டிங்ஸ் கல்கத்தா சென்றதும் மீண்டும் உறவு தொடர்ந்தது. அந்நாட்களில் கல்கத்தா முழுவதும் இதுதான் பேச்சாக இருந்தது. இதனிடையே ஹேஸ்டிங்ஸ் தனது நிர்வாகப் பணிகளையும் சிறப்பாக செய்துவந்தார். அந்தக் காலத்தில் நிலவிய பல்வேறு அரசியல் சிக்கல்களையும் திறம்பட சமாளித்தார். எனவே 1773இல் இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார். அதுநாள் வரை மெட்ராஸ், பம்பாய், கல்கத்தா ஆகிய மூன்று மாகாணங்களுக்கும் தனித்தனி ஆளுநர்கள்தான் இருந்து வந்தனர். ஹேஸ்டிங்ஸின் முயற்சியால்தான் இந்த மூன்றையும் ஒருங்கிணைத்து கவர்னர் ஜெனரல் என்ற பதவி உருவாக்கப்பட்டது.
 
இதனிடையே கணவனை விவாகரத்து செய்துவிட்டு வந்த மரியாவை 1777இல் முறைப்படி திருமணம் செய்துகொண்டார் வாரன் ஹேஸ்டிங்ஸ். பின்னர் இவர்களின் இல்வாழ்க்கை கடைசி வரை இனிமையாகத் தொடர்ந்தது. மரியாவின் மனதில் இடம் பிடித்துவிட்டால் கவர்னர் ஜெனரலிடம் காரியம் சாதித்துக் கொள்ளலாம் என சிறு குழந்தைக்கு கூட தெரிந்திருந்தது. இதனால் அதிகார துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளுக்கு ஆளானார் ஹேஸ்டிங்ஸ்.
Memorial_to_Warren_Hastings.jpg
வாரன் ஹேஸ்டிங்ஸ் நினைவிடம்
 
இந்த சூழலில்தான் 'பெங்கால் கெஜெட்' என்ற இந்தியாவின் முதல் செய்தித்தாளைத் தொடங்கினார் ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி. ஹிக்கியின் பத்திரிகை ஹேஸ்டிங்ஸையும், மரியாவையும் சரமாரியாக கிழித்தது. இப்படித்தான் இந்தியாவின் முதல் பத்திரிகை கிசுகிசு சூடு பிடித்தது. கவர்னர் ஜெனரல் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி ஹிக்கியை சிறையில் அடைத்தார். அப்போதும் அடங்காமல் அவர் அவதூறுகளைப் பிரசுரித்துக் கொண்டே இருந்தார். இதனால் அவரது அச்சகத்தையும் அரசு அபகரித்துக் கொண்டது. இறுதியில் தனது போரில் ஹிக்கி தோற்றார்.
 
ஹிக்கியின் பத்திரிகைக்கு தீனி போடுவதைப் போல ஹேஸ்டிங்சும் நிறைய அதிகார துஷ்பிரயோகங்களிலும், ஊழல்களிலும் ஈடுபட்டார். ஓர் எழுத்தராக ஐந்து பவுண்ட் பணத்துடன் வந்த வாரன் ஹேஸ்டிங்இந்தியாவில் கொள்ளை அடித்த பணத்தின் மதிப்பு குறைந்தபட்சம் 20 மில்லியன் பவுண்ட் என்கிறார்கள். இது போன்ற குற்றச்சாட்டுகளைப் பற்றி இங்கிலாந்தின் காமன் சபையில் விசாரிக்கப்பட்டது. ஏழு ஆண்டுகள் நடைபெற்ற இந்த வழக்கின் முடிவில்வாரன் ஹேஸ்டிங் குற்றமற்றவர் என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. தீர்ப்பை விலைக்கு வாங்கினார் வாரன் என்றும் சொல்லப்படுகிறது.
 
எது எப்படியோ ஓட்டாண்டியாய் இந்தியா வந்து ஓஹோவென வாழ்ந்து, பெரும் செல்வத்துடன் ஓட்டம் பிடித்த ஆங்கிலேயர்கள் வரிசையில் வாரன் ஹேஸ்டிங்ஸும் இடம்பிடித்துவிட்டார்.
 
நன்றி - தினத்தந்தி
 
* பகவத் கீதையால் கவரப்பட்ட வாரன் ஹேஸ்டிங்ஸ் அதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கச் செய்தார்.
 
* மெட்ராசிற்கு ஒரு துறைமுகம் தேவை என்ற கருத்தை முதன்முதலில் வலியுறுத்தியவர் வாரன் ஹேஸ்டிங்ஸ்தான்.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Saturday, December 31, 2011

மவுண்ட் ரோடு

 

ஞாயிற்றுக்கிழமை மத்தியான நேரத்தில் வழக்கத்திற்கு மாறாக அமைதியாக காட்சியளிக்கும் மவுண்ட் ரோடு எனப்படும் அண்ணா சாலையைப் பார்க்கும்போது, மனம் மெல்ல பின்னோக்கிச் செல்கிறது. இது சுமார் 400 ஆண்டுகால ஃபிளாஷ்பேக். ஆம், சென்னையின் இந்த முக்கியமான சாலை 370 ஆண்டுகளாக மக்கள் பயன்பாட்டில் இருக்கிறது.

20ஆம் நூற்றாண்டின் ஆரம்பம் முதல் இன்று வரை மவுண்ட் ரோட்டின் மாறுபட்ட காட்சிகளை நாம் திரைப்படங்களில் பார்த்திருப்போம், தொடர்ந்து பார்த்தும் வருகிறோம். இன்று நவீன ரக கார்களும், சொகுசுப் பேருந்துகளும் ஓடும் இந்த சாலையில் ஒரு காலத்தில் மாட்டு வண்டிகளும், குதிரை வண்டிகளும், டிராம் வண்டிகளும் பரபரப்பாக ஓடிக் கொண்டிருந்தன.

கிழக்கிந்திய கம்பெனியார் சென்னை நகரில் கோட்டை கட்டிக் குடியேறிய உடனே உருவான வெகு சில விஷயங்களில் இந்த சாலையும் ஒன்று. ஜார்ஜ் கோட்டைக்கு தெற்கே கூவம் ஆற்றிற்கு அருகில் தொடங்கி பரங்கிமலை வரை சுமார் 15 கி.மீ நீளத்திற்கு இந்த சாலை அமைக்கப்பட்டது. கிழக்கிந்திய கம்பெனி அதிகாரிகள் புனித தோமையார் மலையில் சென்று வழிபாடு நடத்துவதற்கு வசதியாக இந்த அகன்ற சாலை அமைக்கப்பட்டது. 1781-1785 காலகட்டத்தில் சார்லஸ் மெக்கார்டினி (Charles MaCartney) என்பவர் மெட்ராஸ் ஆளுநராக இருந்தபோதுதான், மவுண்ட் ரோடு இன்றைய வடிவத்தைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து இந்த சாலையின் இருபுறமும் வணிக மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கட்டடங்கள் முளைக்கத் தொடங்கின. இந்து பத்திரிகை அலுவலகம், ஹிக்கின்பாதம்ஸ், ஆயிரம் விளக்கு மசூதி, பிரிட்டீஷ் கவுன்சில், அண்ணா அறிவாலயம் என இந்த பட்டியல் மிக நீளமானது. சென்னையின் முதல் 14 மாடிக் கட்டடமான எல்ஐசியும் இந்த சாலையில் தான் இருக்கிறது.

ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட சில கட்டடங்கள் கடந்துபோன காலத்தை நினைவுபடுத்தியபடியே இன்றும் நின்று கொண்டிருக்கின்றன. 'தி மெயில்' பத்திரிகை அலுவலகம், சிதிலமடைந்து காணப்படும் பாரத் இன்ஷூரன்ஸ் கட்டடம் ஆகியவை அவற்றில் சில. இங்கிருக்கும் பி.ஆர் அண்டு சன்ஸ் கடிகார கம்பெனி இன்றும் தனது புராதனக் கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது.

மவுண்ட் ரோட்டின் மற்றொரு கவனிக்கத்தக்க அம்சம், இங்கிருக்கும் சிலைகள். சாலையின் ஆரம்பத்திலேயே இருக்கிறது மேஜர் ஜெனரல் சர் தாமஸ் மன்றோவின் சிலை. 1820 - 1827இல் சென்னையின் ஆளுநராக இருந்தவர் மன்றோ. லண்டனின் எஃப் சான்ட்ரீ என்பவர் 1838இல் உருவாக்கிய இந்த சிலைக்கு ஒரு சிறப்பம்சம் உண்டு. அதாவது, பண்டைய ரோம சிற்ப சாஸ்திர அடிப்படையில் இந்த சிலை உருவாக்கப்பட்டிருக்கிறது.

மன்றோவைத் தொடர்ந்து காமராஜர், பெரியார், அண்ணா, எம்ஜிஆர், முத்துராமலிங்கத் தேவர், ராமசாமிப் படையாச்சி, தீரன் சின்னமலை, நேரு என மக்கள் மனதில் நின்ற தலைவர்கள் இந்த சாலை நெடுகிலும் சிலைகளாக நின்று கொண்டிருக்கிறார்கள். இந்த சாலையில் இருக்கும் ஜெமினி மேம்பாலம்தான் சென்னையின் முதல் மேம்பாலம்.

அண்ணா, சாந்தி, தேவி என சினிமா ரசிகர்களுக்கும் இந்த சாலை விருந்து படைக்கிறது. அருகில் இருக்கும் காஸினோ திரையரங்கில் அந்தக் காலத்தில் படம் பார்க்க டிக்கெட் கிடைக்காதவர்கள் பக்கத்து சந்துகளில் நின்றுகொண்டு படத்தின் வசனங்களையும், பாடல்களையும் கேட்பார்களாம். இதற்கு அருகில் இருந்த சென்னையின் பழமையான கெயிட்டி திரையரங்கு இன்று இடிக்கப்பட்டு விட்டது. இதேபோன்று ஆனந்த், குளோப், வெலிங்டன், சஃபயர் காம்பிளக்ஸ் போன்ற திரையரங்குகளும் மவுண்ட் ரோட்டில் இருந்து மறைந்துவிட்டன.

ஒருகாலத்தில் மவுண்ட் ரோட்டில் இரவில் ரிக்ஷாவில் போனால் பிசாசு பின்தொடரும் என்ற பயம் இருந்ததாம். அருகில் இருக்கும் பெரிய கிறிஸ்தவ இடுகாடு, கவர்ன்மென்ட் எஸ்டேட்டில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டவர்கள் ஆகியவை இந்த பயத்தின் பின்னணியாக இருக்கலாம் என தன்னுடைய கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார் அசோகமித்திரன்.

இப்படி மவுண்ட் ரோடாக உருவாகி இன்று அண்ணா சாலையாக மாற்றம் பெற்றிருக்கும் இந்த சாலையைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் இன்னும் நிறைய இருக்கின்றன. அவற்றை எல்லாம் பட்டியலிட்டால் அது முடிவுறாமல் நீண்டு கொண்டே செல்லும்.

நன்றி - தினத்தந்தி

* மெட்ரோ பணிகள் நடைபெறுவதையொட்டி இந்த சாலையில் விரைவில் ரயில்களும் பயணிக்க இருக்கின்றன.

* இந்த சாலையில் இருந்த ஜேம்ஸ் ஜார்ஜ் ஸ்மித் நீல் என்பவரின் சிலை மக்கள் போராட்டம் காரணமாக 1937இல் நீக்கப்பட்டுவிட்டது.

அண்ணாசாலை தபால் நிலையத்தில் தற்போது சிறப்புத் தபால் தலைகள் காப்பிடமாக இயங்கும் கட்டடத்தில்தான் நூறாண்டுகள் முன்பு எலெக்ட்ரிக் தியேட்டர்’ இருந்தது. தமிழகத்தின் முறையான’ முதல் சினிமாக் கொட்டகை இதுதான்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Saturday, December 24, 2011

கருப்பர் நகரம்

 

மெட்ராஸ் ஆரம்ப நாட்களில், வெள்ளையர் நகரம், கருப்பர் நகரம் என இரண்டு நகரங்களாகத்தான் இருந்தது. ஜார்ஜ் கோட்டைக்குள் இருந்தது வெள்ளையர் நகரம்,கோட்டைக்கு வெளியில் கருப்பர் நகரம். கிழக்கிந்திய கம்பெனிக்காரர்கள் சென்னையில் கோட்டை கட்டி குடியேறியவுடனேயே கோட்டைக்கு வெளியில் வெள்ளையர் அல்லாதவர்கள் தங்குவதற்கென ஒரு நகரம் உருவானது. இப்படித்தான் சென்னை என்ற மாபெரும் நகரம், கோட்டைக்கு வெளியில் முதல் அடி எடுத்து வைத்தது.

ஆரம்பத்தில் தமிழர்களும், தெலுங்கர்களுமே அதிகளவில் குடியேறியதால், இது கருப்பர் நகரம் என்று அழைக்கப்பட்டது. இவர்களில் பெரும்பாலானோர் நெசவாளர்கள். இவர்கள் மட்டுமின்றி ஆர்மீனியர்கள், போர்த்துகீசியர்கள், இஸ்லாமியர்கள் என அனைத்து தரப்பினரும் இங்கு வசித்து வந்தார்கள். இதன் தாக்கத்தை இங்குள்ள தெருக்கள் இன்றும் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன. கோவிந்தப்ப நாயக்கன், அங்கப்ப நாயக்கன், லிங்கி செட்டி, தம்பு செட்டி என தெலுங்கு பெயர்களைத் தாங்கி நிற்கும் தெருக்களுக்கு அருகிலேயே இஸ்லாமியர்களின் மூர் தெருவும், ஆர்மீனியர்களை நினைவூட்டும் ஆர்மீனியன் தெரு எனப்படும் அரண்மனைக்காரத் தெருவும் இருக்கின்றன.

ஆங்கில-பிரெஞ்சு யுத்தங்களுக்குப் பிறகு, 18-ம் நூற்றாண்டில் இந்தியர்கள் வசிக்கும் பகுதி அதிகரித்தது. முத்தயால்பேட்டைபெத்தநாயக்கன் பேட்டை என இரு புதுப் பகுதிகள் உருவாகின. பின்னர் மெல்ல மெல்ல கருப்பர் நகரம் விரிவடையத் தொடங்கியது. ராஜஸ்தான், குஜராத், மகராஷ்டிரா ஆகிய வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் வசிக்கும் இன்றைய சௌகார்பேட்டையும் அன்றைய கருப்பர் நகரத்தின் ஒரு அங்கமாகத்தான் இருந்தது. பூக்கடை, ஏழுகிணறு, மண்ணடி, பாரீஸ் கார்னர், பிராட்வே என சென்னை மாநகரின் இதயப் பகுதி முழுவதும் கருப்பர் நகரத்திற்குள் அடக்கம்.

கோட்டைக்கு மிக அருகில் இருந்ததால், சுமார் 850 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த இடம் முக்கியமான வியாபார மையமாக மாறியது. கோட்டைக்குள் இருந்த கிழக்கிந்தியக் கம்பெனியருடன் வணிகம் செய்த வணிகர்கள் அனைவரும் கருப்பர் நகரத்தில்தான் வசித்தார்கள். ஒரு காலத்தில் இங்கு பவள வியாபாரம் கொடி கட்டிப் பறந்ததை இங்கிருக்கும் பவளக்காரத் தெரு இன்றும் நினைவுபடுத்துகிறது.

1746இல் பிரஞ்சுக்காரர்கள் ஜார்ஜ் கோட்டையைக் கைப்பற்றியபோது, கருப்பர் நகரத்தை அழித்தார்கள். 3 ஆண்டுகளுக்குப் பின்னர் கோட்டை மீண்டும் ஆங்கிலேயர் கைக்கு வந்தது. பிரஞ்சுக்காரர்கள் திட்டமிட்டு அழித்த கருப்பர் நகரத்தை மீண்டும் புதிதாக உருவாக்குவது என தீர்மானிக்கப்பட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காக முந்தைய நகரத்திற்கு சற்று தள்ளி ஒரு புதிய கருப்பர் நகரம் உதயமானது.

இந்த புதிய கருப்பர் நகரத்தை பாதுகாப்பதற்காக ஒரு மதில் சுவர் கட்டுவது எனவும் முடிவு செய்யப்பட்டது. ஆனால் வேலை மட்டும் வேகமாக நடைபெறவில்லை. இந்த நிலையில் 1758இல் ஜார்ஜ் கோட்டை பிரஞ்சுப் படையினரால் முற்றுகையிடப்பட்டது, சில வருடங்கள் கழித்து திப்பு சுல்தான் மெட்ராஸ் மீது படையெடுத்தார். இதை எல்லாம் பார்த்த பிறகுதான் கருப்பர் நகரத்திற்கு மதில் சுவர் அத்தியாவசியம் என்பது ஆங்கிலேயர்களுக்கு உரைத்தது.

இதனையடுத்து ஒரு வருட உழைப்பில் ஒருவழியாக புதிய மதில் சுவர் கட்டப்பட்டது. கருப்பர் நகரத்தை சுற்றிலும் 17 அடி அகலத்திற்கு பீரங்கி வைக்கும் வகையில் இந்த பாதுகாப்புச் சுவர் உருவாக்கப்பட்டது. ஆனால் எதிரிகளிடம் இருந்து தங்களை பாதுகாக்க உதவும் இந்த சுவற்றுக்கான செலவை பொதுமக்களே ஏற்க வேண்டும் என கிழக்கிந்திய கம்பெனி நிர்வாகிகள் கூறினர். சென்ட்ரல் ரயில் நிலையத்தை ஒட்டி செல்லும் சாலைக்கு வால் டாக்ஸ் சாலை (WALL TAX ROAD) என பெயர் வந்ததன் பின்னணி இதுதான். காரணம், இந்த சாலையை ஒட்டித்தான் கருப்பர் நகரத்தின் மேற்கு பக்கத்து சுவர் அமைந்தது. ஆனால் மக்கள் இந்த வரி விதிப்பை கடுமையாக எதிர்த்ததால், இறுதி வரை அவர்களிடம் இருந்து வரி வசூலிக்கப்படவில்லை. மேற்கே வால் டாக்ஸ் சாலை, கிழக்கே வங்கக்கடல், வடக்கில் நகர எல்லையில் எஞ்சியிருந்த ஒரு இடிந்த சுவர், தெற்கே எஸ்பிளனேடு... இதுதான் புதிய கருப்பர் நகரத்தின் நான்கு எல்லைகளாக இருந்தன.

இங்கிலாந்தின் ஐந்தாம் ஜார்ஜ் இளவரசராக இருந்தபோது (1910இல் மன்னரானார்), 1906இல் மெட்ராசிற்கு வருகை தந்தார். அவரின் நினைவாகத்தான் இந்தப் பகுதி ஜார்ஜ் டவுன் என பெயர் மாற்றப்பட்டது. கருப்பர் நகரம் என்ற பெயரை மாற்றிய ஐந்தாம் ஜார்ஜ், இன்றும் பூக்கடை திருப்பத்தில் ஆளுயர சிலையாக நின்று கொண்டிருக்கிறார்.

 

நன்றி - தினத்தந்தி

---------------

* கருப்பர் நகரில் நிறைய பாரம்பரியக் கட்டடங்கள் இன்றும் இருக்கின்றன. சென்னை உயர்நீதிமன்றம், சட்டக் கல்லூரி, பாரியின் டேர் ஹவுஸ், ரிசர்வ் வங்கிபொது தபால் நிலையம் ஆகியவை அவற்றில் சில.

* கோட்டைக்குள் இருந்தவர்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக கருப்பர் நகரத்தின் பெத்தநாயக்கன்பேட்டைக்கு வடக்கில் ஏழு கிணறுகள் தோண்டப்பட்டன. அதுதான் ஏழு கிணறு பகுதி.

* இங்கிருக்கும் மின்ட் சாலை சுமார் 4 கி.மீ நீளம் கொண்டது. உலகின் மிக நீளமான சாலைகளில் இதுவும் ஒன்று.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Saturday, December 17, 2011

மெரீனா கடற்கரை

 

காலையில் கடல் காற்றில் வாக்கிங் போனது...மாலையில் சூடான தேங்காய், மாங்காய், பட்டாணி சுண்டலுடன் கடலின் அழகில் மனதைப் பறிகொடுத்தது.. என சென்னைவாசிகள் அனைவரிடமும் மெரீனா பற்றிய இனிய நினைவுகள் நிறைந்திருக்கும். மெரீனாவில் வாக்கிங் போகும் வயோதிகர்கள் முதல்... காதலியுடன் கரை ஒதுங்கும் வாலிபர்கள் வரை அனைவரும் நன்றி சொல்ல வேண்டிய ஒருநபர் இருக்கிறார். அவர்தான் மவுண்ட்ஸ்டூவர்ட் எல்பின்ஸ்டோன் கிராண்ட் டஃப் (Mountstuart Elphinstone Grant Duff).

காரணம் இவர்தான் மெரீனாவுக்கு பேரும் வைத்து, சோறும் வைத்தவர். ஆமாம், இவர்தான் ஜார்ஜ் கோட்டைக்கும் வங்கக் கடலுக்கும் இடையில் வெறும் மணல்வெளியாக இருந்த பகுதியை அழகிய கடற்கரையாக மாற்றியவர். 1881இல் சென்னை துறைமுகம் கட்டப்படும் வரை, இன்றைக்கு காமராஜர் சாலை இருக்கும் இடம்வரைக்கும் கடல் இருந்தது. கடலை ஒட்டி வெறும் சேறும்சகதியும்தான் நிறைந்து கிடந்தது.

1881இல் இருந்து 1886 வரை சென்னையின் ஆளுநராக இருந்தவர்தான் நம்ம கிராண்ட் டஃப். இவருக்கு வங்கக் கடலையும், அதன் கரையையும் பார்க்கும் போது, மண்டைக்குள் மணியடித்ததன் விளைவு, சென்னைக்கு ஒரு அழகிய கடற்கரை கிடைத்தது. 1884இல் நடைபாதை எல்லாம் அமைத்து மெட்ராஸ்வாசிகளுக்கு ஒரு ஒழுங்கான கடற்கரையை உருவாக்கிக் கொடுத்தார் கிராண்ட் டஃப். அதற்கு 'மெட்ராஸ் மெரீனா' என்றும் பெயர் வைத்தார்.

இத்தாலியில் இருக்கும் சிசிலித் தீவின் நினைவாக இந்தப் பெயரை வைத்ததாக கிராண்ட் டஃப் ஒரு கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். மெரீனா (Marine-கடல்) என்றால் "கடலில் இருந்து" என்று அர்த்தம். டஃப் அமைத்துக் கொடுத்த இந்த கடற்கரை அன்றைய மெட்ராஸ்வாசிகளுக்கு ஒரு சொர்க்கபுரியாகவே திகழ்ந்தது.

கோட்டையின் தெற்குப் பகுதியில் இருந்து சாந்தோம் வரை நீண்டு கிடக்கும் இந்த கடற்கரையில் காலாற நடப்பதே ஒரு இனிய அனுபவமாக இருந்தது. அன்னி பெசண்ட் அம்மையார் கூட, தாம் நடத்தி வந்த 'நியூ இந்தியா' பத்திரிகையில் மெரீனாவின் அழகைப் பற்றி விவரித்திருக்கிறார். 1914இல் வெளியான ஒரு கட்டுரையில், 'மெரீனாவைப் போல நீண்ட, அழகிய கடற்கரை இந்தியாவில் வேறு எங்கும் கிடையாது. மெட்ராஸின் தவிர்க்க முடியாத அழகு மெரீனா' என்று எழுதியிருக்கிறார்.

சுமார் 13 கி.மீ தூரம் நீளும் இந்த கடற்கரை உலகின் இரண்டாவது மிக நீளமான கடற்கரையாக கருதப்படுகிறது. கடற்கரையில் சிலை வைக்கும் கலாச்சாரம் முதலில் 1959ஆம் ஆண்டுதான் உதித்தது. அந்த ஆண்டு குடியரசு தினத்தன்று மெரீனா கடற்கரையில் புகழ்மிக்க உழைப்பாளர் சிலை நிறுவப்பட்டது. அதனைத் தொடர்ந்து திருவள்ளுவர், நேதாஜி, சுப்பிரமணிய பாரதி, ஔவையார், கண்ணகி என நிறைய பேர் வந்துவிட்டார்கள். இதில் கண்ணகி மட்டும் சில நாட்கள் விடுமுறையில் அரசு அருங்காட்சியகம் போய் வந்தார். தலைவர்கள் வரிசையில் ஜி.யூ.போப், கான்ஸ்டான்சோ பெஸ்கி எனப்படும் வீரமா முனிவர் என வெளிநாட்டு அறிஞர்களுக்கும் இடம்கொடுத்து கௌரவித்துக் கொண்டிருக்கிறது மெரீனா.

சுமார் 30 ஆண்டு காலம் மெரீனாவில் குடியிருந்த பிறகு, விடைபெற்றுப் போனது சீரணி அரங்கம். 1970இல் கட்டப்பட்ட திறந்தவெளி அரங்கமான இதில் நின்றபடி எத்தனையோ தலைவர்கள் ஏராளமான அரசியல் மற்றும் சமூக உரைகளை ஆற்றி இருக்கிறார்கள். அனல் பறக்கும் அந்த உரைகளால் மாலை நேரக் குளிர்காற்றில் வெப்பநிலையை அதிகரித்துக் கொண்டிருந்த சீரணி அரங்கம், கடற்கரையை நவீனப்படுத்த வசதியாக 2003இல் இடித்துத் தள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து 2008ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி, மெரீனாவை இன்னும் கொஞ்சம் மெருகூட்டியது.

மெரீனாவிற்கு வரும் அனைவரும் கடலுக்கு அடுத்தபடியாக கால் பதிக்கும் இடம், பேரறிஞர் அண்ணா மற்றும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் ஆகியோரின் நினைவிடங்கள்தான். கடற்கரைக்கு எதிர்புறம் சேப்பாக்கம் மைதானம், சென்னைப் பல்கலைக்கழகம், பிரசிடென்சி கல்லூரி, விவேகானந்தர் இல்லம், குயின் மேரீஸ் கல்லூரி, ஆல் இந்தியா ரேடியோ என பழமையும், புதுமையும் கைகோத்து நிற்கும் சென்னையின் முக்கியக் கட்டடங்கள் வரிசைகட்டி நிற்கின்றன.

ஒருபுறம் ஆர்ப்பரிக்கும் கடல், மறுபுறம் கண்ணைப் பறிக்கும் கலைநயமிக்க கட்டடங்கள் என இயற்கையின் பிரம்மாண்டத்தையும், உழைப்பின் உன்னதத்தையும் ஒருசேர நினைவூட்டியபடி அமைதியாக நின்று கொண்டிருக்கிறது மெரீனா கடற்கரை.

 

தினத்தந்தி - பார்த்திபன்

* விடுமுறை நாட்களில் தினமும் சுமார் 50 ஆயிரம் பேர் மெரீனாவிற்கு வருகிறார்கள்.

* சென்னையின் கலங்கரை விளக்கம் தற்போது மெரீனாவில்தான் இருக்கிறது.

* 2004ஆம் ஆண்டு சுனாமியின்போது மெரீனா கடற்கரை கடுமையாக பாதிக்கப்பட்டது.

* பாதுகாப்பு கருதி மெரீனாவில் குளிப்பது சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Saturday, December 10, 2011

சென்னை உயர்நீதிமன்றம்

 

சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் தனது 150ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடியது. ஆனால் இதன் விதையும், அதற்கான கதையும் சுமார் 400 ஆண்டுகள் பழமையானது. கிழக்கிந்திய கம்பெனியார் சென்னையில் கால்பதித்து 1640இல் ஜார்ஜ் கோட்டையை கட்டிய உடனே, நீதிமன்றமும் வந்துவிட்டது. சிறிய வழக்குகளை விசாரிப்பதற்காக 'சத்திரம் நீதிமன்றம்' எனத் தொடங்கப்பட்ட அதில், சிவில், கிரிமினல் என இருவகை வழக்குகளும் விசாரிக்கப்பட்டன.

பின்னர் மேயர் கோர்ட் (1688), கட்சேரி கோர்ட் (1793), ரிக்கார்டர் கோர்ட் (1798) என சென்னை பல நீதிமன்றங்களைக் கண்டது. இவற்றின் உச்சம்தான், 1801இல் உருவான மெட்ராஸ் உச்சநீதிமன்றம். இது சுமார் 60 ஆண்டுகள் செயல்பட்டது. பின்னர் 1861ஆம் ஆண்டு விக்டோரியா மகாராணியின் ஆணையின்பேரில், மெட்ராஸ், கல்கத்தா மற்றும் பம்பாய் உயர்நீதிமன்றங்கள் உருவாகின.

1862, ஆகஸ்ட் 15ந் தேதி மெட்ராஸ் உயர்நீதிமன்றம் முறையாக தொடங்கி வைக்கப்பட்டது. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு சரியாக 85 ஆண்டுகளுக்கு முன்பே, ஆகஸ்ட் 15ல் நீதி வெல்லும் என்பதை சொல்லாமல் சொன்னதுபோல இது அமைந்திருந்தது.

மெட்ராஸ் உயர்நீதிமன்றம் ஆரம்ப நாட்களில் ராஜாஜி சாலையில் இருக்கும் சிங்கார வேலர் மாளிகையில் அமைந்திருந்தது. பின்னர் 1888இல் உயர்நீதிமன்றத்திற்கென ஒரு அழகான கட்டடம் கட்டும் பணி தொடங்கியது. சுமார் 4 ஆண்டுகால உழைப்பில், ஜே.டபிள்யூ. பிரசிங்டன் (J.W. Brassington) தயாரித்த வடிவமைப்பில், ஹென்றி இர்வின், ஜே.எச். ஸ்டீபன்ஸ் போன்ற கலைஞர்களின் கைவண்ணத்தில், இந்தோ - சாராசனிக் பாணியில் இன்றைய உயர்நீதிமன்றக் கட்டடம் வானளாவ உருவானது. இதற்காக அந்த காலத்திலேயே ரூ.12 லட்சம் செலவானது.

இந்த கட்டடத்தின் அழகில் மயங்கி செஞ்சி ஏகாம்பர முதலியார் என்ற கவிஞர், 'ஐகோர்ட்டின் அலங்காரச்சிந்து' என்ற பெயரில் ஒரு புத்தகமே போட்டிருக்கிறார். அதில் இந்தோ - சாராசனிக் பாணி உயர்நீதிமன்ற கட்டடத்தை பற்றிய அவரின் விவரிப்பில் சில வரிகள்...

'அண்டா போல் ஒரு கூண்டு சண்டமாக கட்டி

அடுத்தசுத்திலும் பெருங் கொடத்தை போல வெகுகூட்டி

கண்டவர் பிரம்மிக்க கலசமதிலே மாட்டி

கண்கள் சிதரும்படி தங்ககிலுட்டுவூட்டி...'

இப்படி பார்ப்பவரை பரவசத்தில் ஆழ்த்திய சென்னை உயர்நீதிமன்ற கட்டடம், பய நிமிடங்களை சந்தித்த சம்பவங்களும் இருக்கின்றன. முதல் உலகப் போரின்போது, 1914, செப்டம்பர் 22ஆம் தேதி இரவு அது நிகழ்ந்தது. எம்டன் என்ற ஜெர்மானியக் கப்பல் சென்னை உயர்நீதிமன்றத்தின் மீது குண்டு வீசியது. இதில் நீதிமன்ற சுற்றுசுவரின் ஒரு பகுதி மட்டும் சேதமடைந்தது. இதன் நினைவாக நீதிமன்றத்தில் இன்றும் ஒரு கல்வெட்டு இருக்கிறது.

இரண்டாம் உலகப் போரையும் பார்த்தது இந்த கட்டடம். 1942இல் போர் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, வழக்கத்திற்கு மாறாக முன்னதாகவே நீதிமன்ற விடுமுறை அறிவிக்கப்பட்டு, முக்கிய கோப்புகள் அனைத்தும் கோவைக்கும், அனந்தபூருக்கும் கொண்டு செல்லப்பட்டன. விடுமுறைக் கால நீதிமன்றம் கோவையிலேயே செயல்பட்டது. கொஞ்சம் பதற்றம் தணிந்த பிறகு சென்னை திரும்பினாலும், தி.நகரில் இருந்த ஆங்கிலோ இந்தியப் பள்ளி ஒன்றில்தான் உயர்நீதிமன்றம் சில காலம் செயல்பட்டது.

வெறும் கட்டடங்களால் மட்டுமின்றி இங்கு பணிபுரிந்த தலைசிறந்த நீதிபதிகளாலும், வழக்கறிஞர்களாலும் பல பெருமைகளைப் பெற்றிருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம். அப்படிப்பட்டவர்களில் முக்கியமானவர் நீதிமன்ற வளாகத்தில் இன்று சிலையாக நின்றுகொண்டிருக்கும் நீதிபதி சர் டி. முத்துசாமி ஐயர். ஏழைக் குடும்பத்தில் பிறந்து தெருவிளக்கில் படித்த திருவாரூர் முத்துசாமி ஐயர், 1878இல் மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் நீதிபதியானார். இதன் மூலம் முதல் இந்திய நீதிபதியை அளித்த பெருமை மெட்ராஸ் உயர்நீதிமன்றத்திற்கு கிடைத்தது.

மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் முதல் இந்திய தலைமை நீதிபதி என்ற பெருமைக்குரியவர் டாக்டர் ராஜமன்னார். இவர் 1948இல் இருந்து 1961 வரை சுமார் 13 ஆண்டுகள் தலைமை நீதிபதியாக இருந்தார். இப்படிப் பல்வேறு மரியாதைக்குரிய நீதி அரசர்களின் கால் தடங்களுடன், 150 ஆண்டுகளைக் கடந்து நீதியின் பாதையில் தொடர்ந்து கம்பீரமாகப் பயணிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்.

நன்றி - தினத்தந்தி

 

* சென்னையின் முதல் கலங்கரை விளக்கம் இங்குதான் இருந்தது. நீதிமன்றம் கட்டி முடிக்கப்பட்ட பிறகு இரண்டாவது கலங்கரை விளக்கம் இதன் உச்சியில் அமைக்கப்பட்டது.

* வ.உ.சிதம்பரனாருக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வாலிஸ் இரட்டை ஆயுள்தண்டனை வழங்கினார். பின்னாளில் அவரே தண்டனையைக் குறைக்க உதவியதுடன், வ.உ.சி.யின் வழக்கறிஞர் பட்டத்தையும் மீட்டெடுக்க உதவினார். இதனால் தனது கடைசி மகனுக்கு வாலேஸ்வரன் என்று பெயரிட்டார் செக்கிழுத்த செம்மல் வ.உ.சி

* இது உலகின் இரண்டாவது பெரிய நீதிமன்ற வளாகமாகக் கருதப்படுகிறது.

* 2004இல் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை தொடங்கப்பட்டது.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Sunday, December 4, 2011

பச்சையப்பன் கல்லூரி

 

பச்சையப்பன் கல்லூரி... பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மரங்களுக்கு இடையில் மறைந்திருக்கும் இந்த கல்வி நிலையத்திற்கு ஒரு நீண்ட நெடிய வரலாறு இருக்கிறது. இன்றிலிருந்து சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு, 1800களில் தொடங்குகிறது இதன் கதை.

தென்னிந்தியாவிலேயே ஆங்கிலேயரின் நிதி உதவி இல்லாமல் தொடங்கப்பட்ட முதல் கல்வி நிலையம் என்ற பெருமை இந்த கல்லூரிக்கு உண்டு. அந்தக் காலத்தில் ஆங்கிலேயர்களே கல்வி நிலையங்களைத் தொடங்கி நடத்தி வந்த நிலையில், 1842ஆம் ஆண்டு இந்து மாணவர்களுக்காக தொடங்கப்பட்டதுதான் பச்சையப்பன் கல்லூரி.

கருப்பர் நகரம் என்று அழைக்கப்பட்ட அன்றைய பிராட்வேயில் முதலில் ஒரு பள்ளிக் கூடமாகத் தொடங்கப்பட்ட இது, பச்சையப்பா மத்தியக் கழகம் என்ற பெயரில் இயங்கி வந்தது. பின்னர் 1850இல் இப்போதைய கல்லூரி இருக்கும் இடத்திற்கு மாறியது. அப்போதைய மெட்ராஸ் ஆளுநர் சர் ஹென்றி பொட்டிங்கர் இதனைத் தொடங்கிவைத்தார். ஏராளமான இந்திய மற்றும் ஐரோப்பிய பிரமுகர்கள் கலந்துகொள்ள, இதன் தொடக்க விழா மிகப் பிரம்மாண்டமாக அமைந்திருந்தது.

ஆனால் பச்சையப்பர் என்ற ஏழைதான் இவ்வளவு பிரம்மாண்டமான கல்லூரிக்கு அடித்தளம் அமைத்தவர் என்று சொன்னால் நம்புவதற்கு சற்று கடினமாகத் தான் இருக்கும். வறுமையில் பிறந்த பச்சையப்பன், தமது கடின உழைப்பாலும், அறிவுத் திறனாலும் வள்ளல் பச்சையப்பராக விஸ்வரூபம் எடுத்த கதை, நாம் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய மிகப் பெரிய பாடம்.

காஞ்சிபுரத்தில் விசுவநாத முதலியாருக்கும் பூச்சியம்மாளுக்கும் மூன்றாவது குழந்தையாகப் பிறந்தவர் பச்சையப்பர். இவர் கருவில் இருந்தபொழுதே,விசுவநாத முதலியார் இறந்துவிட்டார். அவருடைய நண்பர் ரெட்டிராயர் என்பவர்சென்னைக்கு அருகில் உள்ள பெரியபாளையத்தில் செல்வாக்குடன் வாழ்ந்து வந்தார். எனவே அவருடைய ஆதரவை நாடிபச்சையப்பரை வயிற்றில் சுமந்தபடி பெரியபாளையம் போனார் பூச்சியம்மாள். 1754 இல் பச்சையப்பர் அங்கு தான் பிறந்தார்.

ஆர்க்காடு சுபேதாரின் காரியக்காரராக இருந்த ரெட்டிராயரிடம் ஐந்து வயது வரை வளர்ந்தார். இராயர் மரணமடைந்தவுடன் பூச்சியம்மாள் பச்சையப்பரையும்இரண்டு பெண் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு, சென்னைக் கோட்டைக்கு மேற்கே ஒற்றைவாடை சாமி மேஸ்திரி தெருவில் உள்ள ஒரு சிறு சந்து வீட்டில் குடியேறினார்.

அடுத்து பூச்சியம்மாள் நெய்தவாயல் பெளனி நாராயண பிள்ளை என்பவரிடம் ஆதரவு கேட்டார். மொழிபெயர்ப்பாளரான அவரிடம் ஆங்கிலம் கற்ற பச்சையப்பர், பீங்கான் கடையில் வேலைக்குச் சேர்ந்து பொருள் வாங்க வரும் ஐரோப்பியர்களுக்கு மொழிபெயர்ப்பாளரானார். பின்னர் நிக்கல்ஸ் என்ற ஆங்கில அதிகாரியிடம் மொழிபெயர்ப்பாளராக இருந்து அப்படியே கிழக்கிந்தியக் கம்பெனியின் மொழிபெயர்பாளராக தம்மை உயர்த்திக் கொண்டார். அதுமட்டுமின்றி திறமையாக பலவகை வணிகத்திலும் ஈடுபட்டார்.

தொழிலுக்கு வசதியாக சென்னையில் சிந்தாதிரிப்பேட்டை,கோமளேஸ்வரன்பேட்டை ஆகிய இடங்களிலும்தஞ்சாவூரிலும் பச்சையப்பர் குடியிருந்தார். அக்கா மகளை மணந்துகொண்டார். குழந்தை இல்லாததால் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அங்குதான் விதி விளையாடியது. இரண்டு மனைவிகளுக்கும் இடையில் ஓயாத சண்டை. விளைவு, நிம்மதியைத் தொலைத்தார் பச்சையப்பர். உடல் நலம் கெட்டது.1794 மார்ச் 31 இல் திருவையாறில் இறந்தார்.

மரணம் வரப் போவதை அறிந்தோ, அறியாமலோ, இறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு உயில் எழுதினார் பச்சையப்பர். தன் குடும்பத்தினருக்கு எழுதிவைத்த சொத்துப் போகமீதியை அறக்காரியங்களுக்கு ஒதுக்கிஅதை நாராயணப்பிள்ளை நிர்வகிக்க வேண்டும் என உயிலில் குறிப்பிட்டிருந்தார். பச்சையப்பருக்கு வாரிசு இல்லை என்பதால் உறவினர்கள் சொத்துக்கு உரிமை கோரி நீதிமன்றத்திற்கு போனார்கள்.

பச்சையப்பர் இறக்கும்போது, அவரது சொத்து சுமார் ஒரு லட்சம் பகோடாக்கள், அதாவது சுமார் ரூ.3 1/2 லட்சம். சொத்துச் சண்டை காரணமாக நீதிமன்றத்தில் 47 ஆண்டுகள் இருந்த இந்தப் பணம் பின்னர் சுமார் 8 லட்சம் ரூபாயாக உயர்ந்தது. பச்சையப்பர் உயில்படி இதில் மூன்றரை லட்சம் ரூபாய் கோவில் மற்றும் தர்ம பணிக்களுக்கென ஒதுக்கப்பட, மீதித் தொகையை கல்வி வளர்ச்சிக்கு செலவிட வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னைகாஞ்சிசிதம்பரம் ஆகிய இடங்களில் முதலில் உயர்நிலைப் பள்ளிகள் தோன்றின. சென்னையில் இருந்த பள்ளி, 1880 இல் கல்லூரியாக உயர்ந்தது. இப்படித்தான் பச்சையப்பர் பெயரில் கல்வி நிலையங்கள் உருவாகின.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலின் கிழக்கு நுழைவாயில் அருகே பச்சையப்பர் கல்வி நிறுவனங்கள் பற்றிய கல்வெட்டு ஒன்று இருக்கிறது.'மேற்படி லட்சம் வராகன் போக மற்ற மிகுதிப் பணத்துக்கு வரப்பட்ட வட்டியில் அனுகூலமாகும்போது மேற்படி இடத்தில் இந்துப் பிள்ளைகளுக்கு இந்த தேசத்தில் வழங்கா நின்ற விவகார சாஸ்திரங்கள் கற்பிக்கிறதற்கு மாதம் ஒன்றுக்கு 10 வராகன் சம்பளத்தில் ஒரு பண்டிதரையும்இங்கிலீஸ் பாஷை கற்பிக்கிறதற்கு வராகன் சம்பளத்தில் ஒரு உபாத்தியாயரையும் நியமித்து வித்தியாசாலை ஏற்படுத்தப்படும்என்கிறது அந்த கல்வெட்டு.

 

வறுமையில் பிறந்ததற்காக வாடி நிற்காமல், கடின உழைப்பால் தம்மையும் உயர்த்திக் கொண்டு, கல்வி நிலையங்கள் அமைத்து லட்சக்கணக்கானோரின் வாழ்வையும் உயர்த்திய உயர்ந்த மனிதரை இன்றும் நினைவுபடுத்தியபடியே நிற்கிறது பச்சையப்பன் கல்லூரி.

 

 

நன்றி - தினத்தந்தி

* சீனுவாச ராமானுஜம், பம்மல் சம்பந்த முதலியார், அறிஞர் அண்ணா என இந்தக் கல்லூரியின் மாண்புமிகு மாணவர்கள் பட்டியல் மிக மிக நீளமானது.

 

* 1947ஆம் ஆண்டு வரை இங்கு இந்து மாணவர்கள் மட்டுமே சேர்க்கப்பட்டனர்.

 

பச்சையப்பர் தினமும் காலையில் கூவத்தில் (அப்போ கூவம் நல்லா இருந்தது) குளித்துவிட்டு அருகில் உள்ள கோவிலில் வழிபட்டதாக அவருடைய டைரிக் குறிப்பு சொல்கிறது.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Saturday, November 26, 2011

ஸ்பென்சர் பிளாசா

 

சென்னைக்கு பழசு, புதுசு என நிறைய அடையாளங்கள் உண்டு. அப்படி புதிய தலைமுறையின் அடையாளமாக காணப்படும் ஒரு கட்டடம், உண்மையில் பழமையின் பிரதிநிதி என்றால் நம்ப முடிகிறதா. அதுதான் சென்னையின் நவீன அடையாளச் சின்னங்களில் ஒன்றாகத் திகழும் ஸ்பென்சர் பிளாசா.

இளசுகள் உல்லாசமாக சுற்றித் திரிந்து கொண்டிருக்கும் இந்த ஷாப்பிங் மால், உண்மையில் சுமார் 150 ஆண்டுகால வரலாற்றைக் கொண்டது. புதிய ரக கார்களிலும், பைக்குகளிலும் இளைஞர்கள் படையெடுக்கும் இந்த ஷாப்பிங் மால், மவுண்ட் ரோட்டில் மாட்டு வண்டிகளும், குதிரை வண்டிகளும் ஓடிய காலத்தில் இருந்து இருக்கிறது. ஆமாம், இந்தியத் துணை கண்டத்தின் (அக்காலத்தில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் இலங்கையை உள்ளடக்கியது) முதல் ஷாப்பிங் மால் என்ற பெருமை ஸ்பென்சர் பிளாசாவிற்கு உண்டு.

மெட்ராஸ் ஆங்கிலேயர் ஆதிக்கத்தின் கீழ் இருந்தபோது, 1863ஆம் ஆண்டு சென்னையில் ஒரு பெரிய டிபார்ட்மெண்டல் ஸ்டோர் தொடங்கப்பட்டது. சார்லஸ் டுரண்டு மற்றும் ஜே.டபிள்யூ. ஸ்பென்சர் (Charles Durant and J. W. Spencerஆகிய இருவர் இணைந்து இந்த மெகா கடையை ஆரம்பித்தனர். அனைத்துப் பொருட்களும் ஒரே இடத்தில் கிடைத்தால் எப்படி இருக்கும் என்று இவர்கள் சிந்தித்ததன் விளைவுதான் ஸ்பென்சர் பிளாசா.

இதற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு இருந்ததால், கடையை விரிவுபடுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது. எனவே சில ஆண்டுகள் கழித்து அந்த காலத்தில் மிகவும் பிரபலமாக இருந்த இந்தோ - சாராசனிக் பாணியில் ஒரு அழகிய கட்டடம் கட்டப்பட்டு, ஸ்பென்சர் பிளாசா அங்கு குடியேறியது. அதுதான் மவுண்ட் ரோட்டில் இன்று ஸ்பென்சர் இருக்கும் இடம். ஆனால் அங்கிருப்பது அதே பழைய ஸ்பென்சர் இல்லை. காரணம், 1985ஆம் ஆண்டு நிகழ்ந்த ஒரு பயங்கரத் தீ விபத்து அந்த அழகிய கட்டடத்தை தின்று தீர்த்துவிட்டது.

அதன் பின்னர் அங்கு எழுந்ததுதான் இன்று நாம் பார்க்கும் ஸ்பென்சர் பிளாசா. ஸ்பென்சரில் ஃபேஸ் 1,2,3 என மொத்தம் மூன்று கட்டடங்கள் இருக்கின்றன. இதில் ஃபேஸ் 3 எனப்படும் மூன்றாவது கட்டடத்தின் உள்புறத்தை பழைய ஸ்பென்சரை நினைவூட்டும் வகையில், அதே பாணியில் மீண்டும் உருவாக்கியிருக்கிறார்கள். மேல்தளத்தில் நின்றபடி இதைப் பார்க்கும்போது, நம்மையும் அறியாமல் மெல்ல நினைவுகள் கருப்பு, வெள்ளை காலத்திற்கு நழுவிவிடுகின்றன.

அந்தக் காலத்தில் மெட்ராஸ் ராஜ்தானியில் வேறு எங்கும் கிடைக்காத பொருட்கள் கூட ஸ்பென்சர் பிளாசாவில் கிடைக்குமாம். மாம்பலம், திருவல்லிக்கேணி கொசுக்களை சமாளிக்க கொசு வலை முதல் வெயிலுக்கு ஐஸ்கிரீம் வரை மெட்ராசின் சவால்களை சந்திக்க ஆங்கிலேயர்கள் இங்குதான் தஞ்சம் அடைந்திருக்கிறார்கள். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களும் இங்கு கிடைக்குமாம்.

பொருட்கள் வாங்குவது மட்டுமின்றி வெறுமனே சுற்றிப் பார்த்து பொழுதுபோக்கவும் ஸ்பென்சர் சிறந்த இடமாகத் திகழ்ந்திருக்கிறது. அந்த வகையில் அன்றைய மெட்ராஸ்வாசிகளின் பொழுதுபோக்கு மையங்களில் மெரினாவிற்கு அடுத்த இடத்தில் ஸ்பென்சர் இருந்ததுஇரண்டு இடங்களிலும் பாக்கெட்டில் காசே இல்லாமல் வலம் வரலாம். காலம் மாறிவிட்டாலும் ஸ்பென்சரின் இந்த குணம் மட்டும் இன்றும் அப்படியே தொடர்கிறது. பாக்கெட் நிறைய பணத்துடன் வருபவரையும், பாக்கெட்டே இல்லாமல் வருபவரையும் இன்றும் ஒரே மாதிரி வரவேற்கிறது, இந்தியாவின் முதல் ஷாப்பிங் மால்.

நன்றி - தினத்தந்தி

 

* போக்சன் (W. N. Pogson) என்பவர்தான் இந்த கட்டடத்தை வடிவமைத்தவர்

* ஸ்பென்சர் பிளாசா மொத்தம் 2,50,000 சதுர பரப்பளவு கொண்டது.

* கடைகள் மட்டுமின்றி பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களில் அலுவலகங்களும் இங்கு செயல்பட்டு வருகின்றன.



__________________
1 2 3  >  Last»  | Page of 3  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard