"டாக்டர் .பி .ஆர் . அம்பேத்கர் .
எனது "காந்தியின் தீண்டாமை" நூலில் நான் எழுதியுள்ள முன்னுரை ........
இடஒதுக்கீட்டில் இடம்பெற்று, சென்னை மருத்துவக் கல்லூரியில் படிக்கத் தொடங்குவதற்கு முன்புவரை, எத்தனையோ முறை விண்ணப்பப் படிவங்களில் 18% இடஒதுக்கீட்டில், இடம்பெற விண்ணப்பித்திருக்கின்றேன். இடமும் பெற்றேன், ஆனால் அதுவரை கூட, இந்த இடஒதுக்கீடு கிடைக்க, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இதற்கான சட்டத்தை எனக்கும், என் சமூகத்திற்கும் பெற்றுக் கொடுத்த, இந்த மாபெரும் புரட்சியாளரைப் பற்றி அறியாதிருந்தேன். என் போலவே, அன்றும் இன்றும் கோடிக்கணக்கான தலித்துகள் இருக்கின்றார்கள் என்றால் அதற்குக் காரணம் நான், என் பெற்றோர், என் சமூகத்தலைவர்கள் மட்டுமல்ல. நான் பயிற்றுவிக்கப்பட்ட கல்வி என்பது இப்படியாகத்தான் அன்று இருந்தது. இன்றும், இன்னமும் அப்படியே தான் இருக்கின்றது. சகோதரர் கே.ஆர்.எம். ஆதிதிராவிடர் அவர்கள் பாபா சாகேப் டாக்டர். பி.ஆர். அம்பேத்கர் பற்றி அவருக்குத் தெரிந்த செய்திகளையும், அவரின் சமூகவாழ்வு பற்றியும், அவருடைய கருத்துகளை மற்றவர்களுக்குச் சொல்ல வேண்டிய தேவையையும் அடிக்கடி சொல்வார். அதுமட்டுமல்ல, எனக்குள் அதுவரை இருந்துவந்த ‘காந்தி என்ற மாய பிம்பத்தையும்’ முதன்முதலாக உடைத்தவரும் அவர்தான். ‘காந்தி நம் மக்களின் அரசியல் சமூக விடுதலையைக் கெடுத்த மோசமான பிற்போக்குவாதி, இம்மக்களுக்காக பாபா சாகேப் டாக்டர். பி.ஆர். அம்பேத்கர் போராடியதையும், ஸ்ரீமான் காந்தி அதற்கு நேர் எதிர் விதமாகச் செயல்பட்ட வரலாற்றுச் சம்பவங்களையும்’ சந்திக்கும் போதெல்லாம் எடுத்துரைப்பார்.
இதன் விளைவுகளாகத்தான் நான் பாபா சாகேப் டாக்டர். பி.ஆர். அம்பேத்கர் நூல்களைத் தொடர்ந்து படிக்க ஆரம்பித்தேன். ஜோதிபாய் பூலே, அயோத்திதாசப்பண்டிதர், தாத்தா இரட்டைமலை சீனுவாசன் போன்றவர்களின் நூல்களைப் படித்த போதும், சுபாஷ்சந்திரபோஸ், பகத்சிங், ஊத்தம்சிங் மற்றும் இந்திய சுதந்திர போராட்ட வரலாறுகளாலும், தந்தை பெரியார் காந்தியுடன் முரண்படும் இடங்களாலும், காந்தி மீது நான் அன்று கெண்டிருந்த எண்ணங்கள் கொஞ்சம்கொஞ்சமாகச் சரியத் தொடங்கின. ஜவகர்லால் நேரு, எம்.ஓ.மத்தாய் மற்றும் ‘Freedom at Midnight’ எழுதிய லேப்பியர் & காலின்ஸ் போன்றவர்களின் கருத்துக்களும் மாறுபட்டிருந்தன.
1934-ல் வியன்னாவில் இருந்து, சுபாஷ்சந்திரபோஸ் எழுதி, இந்தியாவில் தடை செய்யப்பட்ட நூலான ‘இந்தியப்போர்’ என்ற நூலைப் படித்தபோதுதான், காந்தியின் சுதந்திரப் போராட்டமே கேள்விக்குரியதாக இருந்தது. காந்தியைப் பற்றிக் குறிப்பிடும்போது, “இந்தியர்களைக் கிரகிக்கும் ஓர் அபூர்வ சக்தி காந்திஜீயிடமிருக்கிறது. பிறிதொருநாட்டில் அவர் ஜனித்திருந்தால் அந்நாட்டில் அவர் முற்றுந்தகுதியற்றவராகவே இருந்திருப்பார். அங்கு அவரது சாத்வீகம் அவருக்கு ஆபத்துண்டாக்கியிருக்கும் அல்லது பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு அனுப்பியிருக்கும். ஆனால் அது இந்தியாவில் வேறுவிதம்...” (இந்தியப்போர் - பக்கம் 169) இந்தியாவின் ஒப்பற்ற விடுதலை வீரர் சுபாஷ் சந்திர போஸ் காந்தியைப் பற்றி, இவ்வாறு குறிப்பிட்டது, காந்தியைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியத்தை என்னுள் ஏற்படுத்தியது. காந்தி அவர்களின் சுயசரிதையைப் படிக்கும்போது தான், தலித் மக்களின் சமூக விடுதலையில் இவரின் பங்கு என்னவாக இருந்தது என்பதை முழுமையாக அறிய முடிந்தது. காந்தியும் காங்கிரசும் தீண்டத்தகாத மக்களுக்குச் செய்தது என்ன? (What Gandhi and Congress have done to the untouchables) என்ற பாபா சாகேப் டாக்டர். பி.ஆர். அம்பேத்கர் எழுதிய அந்நூலில் உள்ள ஒவ்வொரு வரியும் மறுக்க முடியாத வரலாற்று ஆவணங்கள்.
ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு முறைக்கு மேல் காந்தி குறித்த கருத்தரங்குகள் எங்கேயும், எப்போதும் நடைபெறுவதில்லை. அப்படி நடக்கும் கூட்டங்களில் எல்லாம், பெரிய பேச்சாளர் என்று அழைக்கப்படுபவர்கள் அனைவருமே அதிக நேரம் பேசும் பகுதி, தீண்டாமை ஒழிப்பில் காந்தியின் பங்களிப்பு பற்றியது தான். காந்தி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அரிஜனங்கள் என பெயரிட்டு அவர்களையெல்லாம் கடவுளின் குழந்தைகளாக மாற்றினார். தீண்டாத மக்கள் இன்று கல்வியறிவு, அரசுப் பதவிகள் பெற்றுள்ளதற்கெல்லாம் காந்தியின் உழைப்புதான் காரணம். ஆங்கிலேய அரசாங்கத்தை எதிர்த்து சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு கிடைக்கப் போராடினார். அவர்களின் பேச்சுகளில் அத்தனையும் வரலாற்றுப் பொய்களாகவும், அலங்கார வார்த்தைகளுமாகத்தான் இருக்கும்.
புதுக்கோட்டையில் சில ஆண்டுகளுக்கு முன்பு வர்த்தக சங்கத்தினர் காந்தி பிறந்த நாளில் ‘அன்னியப்பொருட்களைப் புறக்கணிப்போம்’ என்ற தலைப்பில் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தனர். தவறுதலாக, என்னையும் அங்கு பேச அழைத்திருந்தார்கள். காலை வேளை மருந்துவப்பணிகளை முடித்துக்கொண்டு;, இரண்டு மணியளவில் பேசுவதற்காகச் சென்றேன். தலைவருக்குத் துணையாக நான்கு பேர்கள் துணைக்கிருந்தனர். திரைப்படப்பாடல்கள் ஒலித்துக்கொண்டிருந்தது. தலைவர் என் காதுக்கருகில் மெதுவாக, இப்போது உணவு இடைவேளை மாலை நான்கு மணியளவில் வந்து பேச முடியுமா? என்றார். நானும் சரி என்று விடைபெற்று மீண்டும் நான்கு மணியளவில் பேசச் சென்றேன் அப்போது என்னுடன் சமநீதி எழுத்தாளர் ஏ.பி.வள்ளிநாயகமும் உடன் வந்திருந்தார். அப்போது பேசிக் கொண்டிருந்தவர், அந்நியப் பொருட்கள் புறக்கணிப்பு பற்றி ஏதும் பேசாமல் காந்தியின் பெருமைகளைப் பற்றியும், தீண்டாமை ஒழிப்பு குறித்தும் பேசிக் கொண்டிருந்தார். அடுத்ததாக நான் பேச அழைக்கப்பட்டேன். ஒரு சில தகவல்களை மட்டும் மேலோட்டமாகக் கூறினேன். தலைவரைத் தவிர மற்றவர்கள் கையைப் பிசைய ஆரம்பித்து விட்டனர். மதிய உணவு அருந்திவிட்டு உண்ணாவிரதப் பந்தலில் ஓய்வெடுத்தவர்களின் உறக்கம் கலைந்துவிட்டது. நான் பேச்சை முடித்துக் கொண்டால் போதும் என்ற அளவிற்கு சலசலப்பு ஏற்பட்டது. பேச்சை முடித்து விட்டேன்.
மருத்துவமனைக்குத் திரும்பும் வழியில் அண்ணாச்சி வள்ளிநாயகம், “தீண்டாமையை காந்தி ஒழித்தார், காந்தி ஒழித்தார்” என்றே பேசுகிறார்களே, ‘நீங்கள் ஏன் தீண்டாமை ஒழிப்பு என்ற பெயரில் காந்தியின் சூழ்ச்சிகளைப் பற்றி ஒரு நூல் எழுதக்கூடாது என்றார். இந்தத் தலைப்பில் நூல் எழுதவேண்டும் என்று என்னை முதன் முதலில் உற்சாகப்படுத்தியவர் அண்ணாச்சிதான். நானும் யோசித்துப் பார்த்தேன். நான் படித்த காந்திநகர் பள்ளியில் ஆண்டுதோறும் நடைபெறும் இலக்கியமன்ற விழாப் பேச்சுப் போட்டிகளில் கலந்து கொண்டு, ‘தீண்டாமையை ஒழிக்கக் காந்தி பாடுபட்டார்,’
‘தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அரிசனங்கள் எனப் பெயரிட்டு மகிழ்ந்தார்,’ ‘தீண்டத்தகாதவர்களின் சமூக முன்னேற்றத்திற்காகத் தன் வாழ்க்கையை அர்ப்பணித்தார்’ என்றெல்லாம் அன்று பேசி முதல் பரிசு பெற்றதெல்லாம் எனக்குள் வேடிக்கையாகத் தோன்றியது. அன்று நான் பேசி முதல் பரிசு பெற்றதற்கும், இன்று இவர்கள் பேசுவதற்கும் எனக்கு எந்த வித்தியாசமும் தோன்றவில்லை, இரண்டும் ஒன்று தான்.
நான் தெளிவு பெற எனக்குள் ஒரு சமூகத் தேவை இருந்தது. காந்தியை விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவராக வைத்துக்கொள்ள வேண்டுமென்பவர்கள் மெத்தப்படித்தவர்களாகத்தான் இருக்கின்றார்கள். இந்து மதத்தைப் புனிதப்படுத்த வேண்டுமென்பதற்காத் தீண்டத்தகாத மக்களுக்கெதிராகக காந்தி நடத்திய சூழ்ச்சிகளையும், நயவஞ்சகங்களையும், துரோகத்தனத்தையும் எந்தவித சமரசமுமின்றி அம்பலப்படுத்த வேண்டும். தீண்டாமையை ஒழிப்பதாகக் கூறிக் கொண்டு தீண்டத்தகாதவர்களைத் தான் ஒழித்துக்கட்டினார் என்ற உண்மைகளையெல்லாம் இந்தத் தலைமுறையினருக்குத் தெரிவிக்க வேண்டும்.
அரசாங்கத்தின் மேல்மட்ட அதிகாரிகள் இன்றும் கூட மனிதநேய வார விழாக்களும், தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியும் எடுத்துக்கொண்டு, தீண்டாமையை காந்தி ஒழித்தார் என பொதுமக்கள் கூடுகின்ற இடங்களில் பேசுகின்றனர். பேசுகிறவர்களுக்கு வெட்கமில்லை கேட்கின்றவர்களுக்கு வரலாறு தெரியவில்லை. இந்த அதிகார வர்க்கங்களுக்கு டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கரையும் தெரியாது. காந்தியையும் தெரியாது. மிச்சசொச்சம் உள்ள இந்தத் தலைமுறைக்குக் காந்தியின் உண்மை முகத்தைக் காண்பிக்க வேண்டும் என எண்ணியிருந்த வேளையில், 2005-06ம் ஆண்டில், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்ற மதுரை, தமிழ்நாடு இறையியல் கல்லூரியில், டாக்டர்.அம்பேத்கர் முதுகலைப் பட்டயப்படிப்பில்(P.G.DAS) சேர்ந்து, ‘காந்தி – தலித் விடுதலையின் விரோதி’ என்ற தலைப்பில் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்துப் பட்டமும் பெற்றேன். இந்தக் கட்டுரையை இன்னும் விரிவாக்கம் செய்து நூலாக வெளியிட்டால் என்ன என்று தோன்றியது.
அவர்கள் கேட்டதற்கும், நான் இசைந்ததற்கும் ஆயிரமாயிரம் காரணங்கள் தெளிவுபட உள்ளன.
இறந்து 59 ஆண்டுகள் முடிந்த பிறகும் கூட எதற்காக அவர் விவாதிக்கப்பட வேண்டும்? இறந்ததற்குப் பிறகு புகழ் பாடுவது அல்லது அவர்களது நல்ல கருத்துகளை எடுத்துச் சொல்வது என்பது மரபாக இருந்தும் கூட, ஏன் இந்த முயற்சி? ஒரு சிறு பிரிவு மக்களைத் தவிர இந்தியாவின் அனைத்துப் பிரிவு மக்களும் காந்தி என்ற பெயரை புனிதமானதாக எண்ணிப் போற்றிக் கொண்டிருக்கின்றனர். அவரே மகான், அவரே மகாத்மா என்றும், புத்தர், ஏசு வரிசையில் அவரைச் சேர்த்து, அவரை அருள் பாலிப்பவராக மாற்ற வேண்டும் என்பதற்காக, அவர்கள் வரிசையில் இவரைச் சேர்த்து, அவர்களை மறைமுகமாகக் கீழிறக்கியதை மட்டும் சாதித்து வரும் இவருடைய அடிவருடிகளுக்கு இடையில், இதை ஒருபணியாகச் செய்ய வேண்டியதன் அவசியம் என்ன? உலக அரங்கில் இவரே அனைத்தும் என்றும், மார்க்ஸ்முல்லர் போன்ற ஜெர்மானிய எழுத்தாளர்கள் ‘இந்து மதம்’ உன்னதமானது என்று வரைந்துதள்ளியது போல், காந்தியும் மகாபுருஷன் என்று அளந்து விடப்பட்டார். சமீபத்திய, ஆகஸ்ட் 2009 தேதியிட்ட ‘தீராநதி’ என்ற தமிழ் சஞ்சிகையில் வந்த ஒரு செய்தி என்னை அதிர வைத்ததும் கூட இந்த வெளீயிட்டைக் கொண்டுவரக் காரணமாயிருந்தது. அதாவது, யுனெஸ்கோ நிறுவனம் ‘1947’-ல் வெளியிட்டிருக்கும்’ கல்வி குறித்த சிந்தனையாளர்கள் (THINKERS OF EDUCATION) புத்தகத் தொகைப்பில், உலகின் பெரும் புகழ்பெற்ற சிறந்த கல்வியாளர்கள் நூறு பேருடைய அர்ப்பணிப்புகள் பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது. சீனாவின் கன்புய+சியஸ், கிரேக்கத்தின் பிளேட்டோ, ஆஸ்திரியாவின் பிராய்டு, இத்தாலியின் கிராம்ஸி போன்றவர்களோடு இந்தியாவின் பிரதிநிதியாக இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றிருப்பவர்கள் காந்தி, தாகூர், அரவிந்தர், ஜே.கிருஷ்ணமூர்த்தி மற்றும் டாக்டர் மால்கம் ஆதிசேஷையா.
டாக்டர். மால்கம் ஆதிசேஷையா, தாகூர் தவிர மற்ற மூவருக்கும் கல்விக்கும் என்ன தொடர்பு? மற்ற மூவரும் ஆன்மிகவாதிகள். பிளேட்டோ, பிராய்டு வரிசையில் வருமளவிற்கு காந்தி கல்வியாளரா? இந்தியாவில் கல்வியாளர்களுக்கு இவ்வளவு கடும் வறட்சியா? அல்லது கன்பூசியஸ், கிராம்ஸி அளவிற்குக் காந்தி கல்விச் சிந்தனையாளரா? எதுவுமே இல்லாத ஒருவரை உயர்த்துவதற்கு என்ன காரணம்?
அந்தக் காலங்களில் இந்தியாவில் கல்வி என்பது ஒரு சாதியினருக்குச் சொந்தமானதாக இருந்தது. மற்றவர்கள் அந்தக் கல்வியைக் கற்கத் தடை விதிக்கப்பட்டிருந்தனர். ஒரு பிரிவினரைத் தவிர மற்றவர்கள் படிப்பது தண்டனைக்குரிய குற்றமாகவே இருந்து வந்தது. அதையும் கடந்து கல்வி கற்க வந்தவர்கள் கொடுமைகளுக்குள்ளாக்கப்பட்டார்கள். காந்தி பிறந்த போர்பந்தருக்கு அருகில் உள்ள ‘கவித்தா’ என்ற கிராமத்துத் தாழ்த்தப்பட்ட மக்களின் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பியதால், அவர்களின் குடிநீர்க் கிணற்றில் பலமுறை மண்ணெண்ணெய் ஊற்றிக் குடிநீரை விஷமாக்கினார்கள். இறுதியில் அந்த மக்கள் ஊரைவிட்டு நாடோடிகளாக விரட்டப்பட்டனர். இதுவும் காந்தியின் கண்முன்னே, அவரின் ஆசீர்வாதத்தோடு தான் நடந்தது. சாதிக்கு ஒரு கல்வி, சாதிக்கு ஒரு நீதி, சாதிக்கு ஒரு தொழில் என்று வர்ணம் இன்றும் கோலோச்சுகிற காலத்தில், கல்வி கற்பதனாலும், அதன் மூலம் சமூகப் பொருளாதாரம் உயர்வதனால் மட்டும்தான் நடந்தது. சாதிக்கு ஒரு கல்வி, சாதிக்கு ஒரு நீதி, சாதிக்கு ஒரு தொழில் என்று வர்ணம் இன்றும் கோலோச்சுகிற காலத்தில், கல்வி கற்பதனாலும், அதன் மூலம் சமூகப் பொருளாதாரம் உயர்வதனால் மட்டும்தான் தீண்டாமையை ஒழிக்க முடியும் என்பது பொது நியதியாகவும், மாற்றாகவும் கற்றவர்களால் கணக்கிடப்படுகின்றது. ஆதிக்க சாதியினரைத் தவிர மற்ற தீண்டாதவர்கள் (அன்று 6 கோடி) கல்வி கற்பதற்குத் தடையாயிருந்த தத்துவம் வர்ணம். வர்ணம் தான் அனைத்து இழிவுகளுக்கும், வன்கொடுமைக்கும் காரணமாயிருந்தது, இருக்கின்றது. வர்ணம் ஒழியாத வரை தீண்டாமை ஒழியாது. அந்த வருணம் குறித்து காந்தியின் செயல்திட்டம் என்ன?
வருணத்தை ஒழித்து, அனைவருக்கும் கல்வி கிடைக்க காந்தி என்ன செய்தார்? காந்தி கல்வியாளர் என்றால் அனைவரும் கல்வி கற்கத் தடையாயிருக்கும் வர்ணம் ஒழிக்கப்பட வேண்டும். ஆனால் ஸ்ரீமான் காந்தி வருணத்தைப் போற்றிப் பாதுகாக்கின்றார் எப்படி? ‘வர்ணம் விதித்ததுதான் நியதி. அது மாற்றமில்லாதது. ஆகர்ஷண விதியை நியூட்டன் கண்டுபிடிப்பதற்கு முன்பே அந்த விதி இருந்தது போல் வர்ணமும் என்றென்றும் இருந்து கொண்டும் இயங்கிக் கொண்டுமிருக்கின்றது. வர்ண விதியை நாம் பின்பற்றி நடக்காததனால் தான், பொருளாதார அழிவுக்குக் காரணமாக உள்ளது. மேலும், மக்களின் வேலையில்லாத் திண்டாட்டத்திற்கும் வறுமைக்கும் காரணமாயிருக்கின்றது’ என்று எச்சரிக்கின்றார். மேலும் ‘அந்த வர்ண விதிகளுக்கு மாறாக நடப்பதால், அவர் தனக்குத்தானே கேடு விளைவித்துக் கொண்டு, இழிநிலையை அடைகிறார். மேலும் பதராகி விடுகின்றார்’ என்று விவரிக்கின்றார். வர்ணம் ஒரு மனிதருக்கு – என்ன தொழிலை விதித்துள்ளதோ அந்தத் தொழிலைத்தான் அவர் எடுத்துக் கொள்ள வேண்டும். நூறு ஆண்டுகளுக்கு முன் ஒரு மரத் தச்சரின் மகன் தான் ஒரு வக்கீலாக வேண்டும் என்று ஒரு போதும் விரும்பியதில்லை.ஆனால் இன்று ஒரு தச்சரின் மகன் வக்கீலாக வேண்டும் என்று விரும்புகிறார். ஏனெனில், பணம் திருடுவதற்கு, அந்தத் தொழில்தான் மிக்க எளிதான வழி என்பதை அவர் அறிந்து கொண்டிருக்கின்றார். (மகாத்மா காந்தி நூல்கள் தொகுப்பு -7, பக்கம்89,90,91)
வர்ணம் விதித்த தொழில்களுக்கு ஏற்ப ஒருவன் தன் குலத்தொழிலைத்தான் செய்ய வேண்டும். தச்சனின் மகன் நூறு ஆண்டுகளுக்கு முன் தச்சனாக இருந்தது போல் இன்னும் தச்சனாகவே இருக்க வேண்டும். வர்ணம் நிர்ணயித்த அந்தக் குலத்தொழிலை விட்டு, இன்று வக்கீலாக வேண்டும் என்று ஒருவன் விருப்பப்பட்டால், அவன் பணம் திருடுவதற்கு இந்தத் தொழிலை மாற்றிக்கொள்கின்றான், என்கிறார்.
மருத்துவனாக மாற விரும்பினால் அவனைத் திருடன் என்கிறார்! பொருளாதாரத்தில் பின் தங்கிய ஒரு தேசத்தைக் கல்வி தானே சீர்படுத்தும்! லெனின் ஆட்சியதிகாரத்திற்கு வந்தபோது சோவியத் ரஷ்யாவில் படித்தவர்கள் எண்ணிக்கை 2%. தோழர் அந்தன் மொகரங்கோவிடம், கல்வி பயிற்றுவிக்கும் பொறுப்பினைக் கொடுத்தபோது, லெனின் வேண்டிக் கொண்டது ஒன்றே ஒன்றுதான். ரஷ்யாவில் உள்ள மக்கள் நூறு சதவீதம் கல்வி கற்றவர்களாக மாற்றப்பட வேண்டும் என்பது தான். பத்தே ஆண்டுகளில் 2 சதவீதமாக இருந்த படித்தவர்களின் எண்ணிக்கையை 98 சதவீதமாக மாற்றிக் காண்பித்தாரே! லெனின் கல்வியாளர். ஆனால் இவர் குலத்தொழிலை விட்டுவிட்டால் பொருளாதாரம் சீர்குலைந்து விடும் என்கிறார்!
இவரைப்போய் உலகில் தோன்றிய கல்வியாளர்கள் பட்டியலில் இடம் பெயரச் செய்துள்ளனரே! இந்தியாவில் கல்வியாளர்களுக்கு இவ்வளவு கடும் வறட்சியா? ராஜாஜியின் குலக்கல்வித் திட்டத்திற்கு காந்தி தான் குரு, குலக்கல்வித் திட்டம்தான் இந்தியாவைச் சமூகப் பொருளாதார அழிவிலிருந்து காப்பாற்றும் என்றும் கூறுபவர் கல்விமானா?
அவர் வாழ்ந்த காலத்தில் மட்டுமல்ல, இறந்து இத்தனை ஆண்டுகளான பின்பும் கூட ‘மகாத்மா’ என்ற புளித்த ஏப்பம் விடுவதையே, வாழ்நாள் பணியாக மேற்கொண்டுள்ளவர்கள் மத்தியில் எனது தேடல் வேறுவிதமாக இருந்தது. காந்தியின் ‘அரசியல்’ பற்றிய விமர்சனங்கள், அவர் அரசியல் நடத்திக் கொண்டிருந்த காலத்திலேயே, பகத்சிங் மரணத்தில் ‘வஞ்சக நாடகமாடியது’ தொடர்பாக வந்த விமர்சனங்களே இன்று வரைக்கும் ஆவணமாக உள்ளது. அதற்குள் போகத் தேவையில்லை. பொருளாதாரம் குறித்த அவரது பார்வையில் அவர் காலத்தில் வாழ்ந்த 35 கோடி இந்தியர்களுக்குமான எந்தச் செயல் திட்டமும் இல்லை. 35கோடி 110 கோடியாக உயர்ந்தால் என்ன செய்ய வேண்டும் என்று கூறுமளவிற்கு அவரிடம் பொருளாதார ஞானமும் பொருளாதாரம் குறித்த அடிப்படைச் சிந்தனையும் இல்லை. தொலைநோக்கு அறிவும் இல்லை. அடுத்ததாக ‘இந்தியாவின் தொழுநோயான’ தீண்டாமையைப் போக்குவதற்குப் பதிலாக, சாதியக் கொடுங்கோன்மையைத் தூக்கிப் பிடித்த காந்தியின் கோர முகத்திரையை பாபா சா கேப் டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர் ‘காந்தியும், காங்கிரஸ_ம் தீண்டத்தகாத மக்களுக்குச் செய்தது என்ன?’ (What Gandhi and Congress have done to the untouchables?) என்ற நூலில் கிழித்துக் காண்பித்துள்ளார்).
இந்திய அரசியல்வாதிகளும், வரலாற்றுப் புரட்டர்களும் அவரைக் கடவுள் நிலைக்குக் கூட உயர்த்திப் பிடித்துக் கொள்ளட்டும். ஆனால் நான் அவர்களிடமிருந்து வேறுபடுகின்றேன். மற்றவர்களுக்கு அவர் மகாத்மாவாக இருந்துவிட்டுப் போகட்டும். இந்தியாவில் அன்று 6 கோடியாக இருந்த தலித் மக்கள் இன்று 30 கோடிக்கு மேலாக உள்ள இவர்களின், சமூக, பொருளாதார வாழ்நிலை என்பது இந்து மதத்தில் உள்ள நான்கு வருணத்தாரால் முடக்கப்பட்டு இருக்கின்றது என்பதை நன்கு அறிந்தவர் காந்தி. அம்மக்களின் அரசியல் சமூக விடுதலைக்காக, பாபா சாகேப் டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர் போராடிப் பெற்ற உரிமைகளைக் ‘கீழ்த்தரமான சாகசத்தின்’ மூலம் அம்மக்களுக்குச் சென்றடையவிடாமல் தடுத்தவரை நான் எப்படி மகாத்மாவாக ஏற்றுக் கொள்ள முடியும்? நல்லவர் என்பவர் அனைவருக்கும் நல்லவராக இருக்க வேண்டும். மற்றவர்களுக்கு ஆதாயம் தேடிக் கொடுத்ததால், நல்லவர் என்று அவர்களால் போற்றப்படலாம். ஆனால் எனக்கும், என் சமூகத்திற்கும் கேடு விளைவித்த, வஞ்சகர் ஒருவரை எப்படி நான் மகானாக ஏற்க முடியும்? என் உயிரின் வாதையை என்னால் தான் உணர முடியும். என் மீது திணிக்கப்பட்ட அவமானத்தின் அருவருப்பை என்னால் தான் அறிய முடியும்! எனக்கும் என் சமூகத்திற்கும் திட்டமிட்டுத் தீங்கிழைத்தவர்களை நான் எப்படி சக மனிதனாகப் பார்க்க முடியும்?
இன்னமும் கூட, இந்தியாவில் தலித் மக்கள் வாழ்கின்ற பெரும்பான்மைக்குடியிருப்புப் பகுதிகளுக்குப் பெயர் ‘காந்தி நகர்!’ - இது அவமானப் பெயர் அல்லவா? எம் மக்களின் அறியாமையைப் பயன்படுத்திக் கொண்டு எழுப்பப்பட்ட பெயரல்லவா? “நல்ல நிலம் உருவாக வேண்டுமெனில், அங்குள்ள தேவையற்ற முட்புதர்களை அழித்தாக வேண்டும” என்று கூறிய உலகின் முதல் அழித்தொழிப்பாளரான புத்தரை, பாபா சாகேப் டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர் சற்றுக் காலதாமதமாக (24.9.1932 – க்குப்பின்) உள் வாங்கிவிட்டார் என்று எண்ணத் தோன்றுகிறது.