நான் பிறந்த 1954ஆம் வருடத்தில் பிறப்பிக்கப்பட்ட ஒரு சட்டத்தை நீக்கக் கோரி இந்த வாரம் சென்னை உயர் நீதிமன்றத்தில் நான் ஒரு வழக்கு தொடுத்திருக்கிறேன். நாடகங்களை அரசு முன்தணிக்கை செய்த பின்னர் தான் நடத்த முடியும் என்ற நிலையை ஏற்படுத்தியிருக்கும் சட்டம் இது.சுமார் 32 வருடங்களாகவே பலமுறை இந்தச் சட்டத்தை விமர்சித்து எழுதியும் பேசியும் வந்திருக்கிறேன். நாடகத் துறையில் இருக்கும் பல நண்பர்களுடன் இதை எதிர்த்து வழக்கு தொடுப்பது பற்றிப் பேசியதுண்டு. இப்போதுதான் முடிந்திருக்கிறது. சென்னையில் நாடகம் போடுவதற்கு ஏற்ற பல அரங்கங்கள் உள்ளன. மியூசியம் தியேட்டர், மியூசிக் அகாதமி, நாரத கான சபா, கிருஷ்ண கான சபா, ஆர்.ஆர்.சபா, மைலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ், வாணி மஹால், தட்சிணாமூர்த்தி ஹால், ஆர்.கே. சுவாமி அரங்கு, ராணி சீதை அரங்கு, சிவகாமி பெத்தாச்சி அரங்கு என்று வகை வகையாக உள்ளன. ஆனால், இவை எதில் நாடகம் நடத்த அரங்கை வாடகைக்கு எடுப்பதாயிருந்தாலும், அரங்கின் நிர்வாகி முதலில் கேட்கும் கேள்வி போலீஸ் அனுமதி வாங்கிவிட்டீர்களா, லைசன்ஸ் நம்பர் என்ன என்பதுதான்.டிராமாடிக் பர்ஃபார்மன்சஸ் ஆக்ஸ்ட் 1954ன் படி இந்த லைசன்ஸ் தரப்படுவதாகக் கருதப்படுகிறது. லைசன்சுக்கு விண்ணப்பிக்க, நாடகம் நடத்தப்போகும் நாளுக்கு 21 நாட்கள் முன்பாக முழு நாடகத்தின் இரண்டு பிரதிகளை சென்னை நகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அதற்குரிய கட்டணத்துடன் தரவேண்டும். நாடகத்தை காவல்துறையின் ஓர் ஆய்வாளரோ, துணை ஆய்வாளரோ படித்துப் பார்த்து அதில் ஆட்சேபகரமான எதுவும் இல்லை என்று ஒவ்வொரு பக்கத்திலும் சீல் அடித்துக் கையெழுத்திட்டுக் கொடுத்தால்தான் நாடகத்தை அரங்கில் நடத்த முடியும்.
சென்னைக்கு வெளியே மாவட்டங்களில் இந்த அதிகாரம் கலெக்டருடையது. சென்னையில் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டரும் இதர ஊர்களில் கலெக்டர் அலுவலக குமாஸ்தாவும்தான் நாடகத்தைப் படித்துப் பார்த்து மதிப்பிடும் கலையறிவுக்குச் சொந்தக்காரர்கள்.
இதில் விசித்திரம் என்னவென்றால் சட்டத்தின் எந்த இடத்திலும் முன்கூட்டியே நாடகப் பிரதியைக் கேட்டு வாங்கி தணிக்கை செய்ய வேண்டுமென்று சொல்லப்படவே இல்லை. ஒரு நாடகம் ஆட்சேபத்துக்குரியது என்று போலீஸ் கமிஷனருக்கோ கலெக்டருக்கோ தெரியவந்தால், அப்போது அதன் பிரதியைக் கேட்டுப் பெற்று ஆய்வு செயலாமென்றுதான் சட்டத்தில் இருக்கிறது. முன்தணிக்கை செய்யும்படி சொல்லவில்லை. ஆனால் நடைமுறையில் எல்லா நாடகங்களுக்கும் முன் தணிக்கை செய்து முன் அனுமதி, லைசன்ஸ் எண் பெறவில்லையென்றால் அரங்க நிர்வாகிகள் அனுமதிக்கமாட்டார்கள்.
போலீஸ் சொல்லும் வெட்டுகளை ஏற்றுக் கொண்டால்தான் லைசன்ஸ் கிடைக்கும். மறைந்த நாடகாசிரியரும் என் நண்பருமான கோமல் சுவாமிநாதனின் புகழ் பெற்ற நாடகமான ‘தண்ணீர் தண்ணீர்’ நாடகத்தில் பல இடங்கள் வெட்டப்பட்டன. அப்போது நான் எங்கள் பரீக்ஷா குழுவை நடத்த ஆரம்பித்து சுமார் மூன்று வருடங்கள் ஆகியிருந்தன. தணிக்கைச் சட்டத்தை எதிர்த்து வழக்கு போடும்படி கோமலை நான் கேட்டுக்கொண்டேன். சில நடைமுறை சிக்கல்களினால் அவரால் அதைச் செய்யமுடியாமல் போயிற்று. ‘தண்ணீர் தண்ணீர்’ நாடகத்துக்கு சுமார் 30 சபாக்களில் தேதிகள் ஒதுக்கப்பட்டிருந்தன. லைசன்ஸ் பிரச்னையில் வழக்கு போட்டால், அந்தத் தேதிகள் எல்லாம் ரத்தாகி மாற்றப்பட வேண்டிவரும்.எனவே கோமல் போலீசார் தெரிவித்த வெட்டுகளை அவர்களுடன் விவாதித்து சில வெட்டுகளை ஏற்றுக்கொண்டு லைசன்ஸ் பெற்றார். அப்போது திருப்பத்தூர், வாணியம்பாடி பகுதிகளில் போலீசார் நக்சல் பாரி வேட்டைகளில் ஈடுபட்டிருந்தனர். நாடகத்தில் திருப்பத்தூர் பெயர், அதனருகே ஒரு கிராமம் என்றிருந்ததை மாற்றச் சொன்னார்கள். அப்படித்தான் அது தென்மாவட்ட கிராமமாக நாடகத்தில் மாறியது.அதே சமயம் எங்கள் பரீக்ஷா குழு என் ‘பலூன்’ நாடகத்தை நடத்த இருந்தது. அதற்கும் பல வெட்டுகள் விழலாம் என்று எதிர்பார்த்து நாடக தினத்தன்றே புத்தகத்தை வெளியிட ஏற்பாடு செய்திருந்தோம் (இன்னும் இந்தியாவில் புத்தகங்களுக்கு முன்தணிக்கை வரவில்லை).‘பலூன்’ நாடகத்துக்கு தணிக்கைப் பிரச்னைகள் வரவில்லை. ஆனால் நாடகம் முடிந்ததும் நாடகத்துக்கு வந்திருந்த காவல்துறை உளவுப் பிரிவின் அறிக்கை அடிப்படையில் நாடக அரங்கின் நிர்வாகி காவல் ஆணையர் அலுவலகத்துக்கு அழைத்து விசாரிக்கப்பட்டார். அதையடுத்து எங்கள் அடுத்த நாடகம் ‘கமலா’வுக்குச் சிக்கல் தரப்பட்டது. மராத்தி நாடகாசிரியர் விஜய் டெண்டுல்கர் எழுதியதன் தமிழ் வடிவம் கமலா. ராணி சீதை அரங்கினை நாடகத்துக்கு வாடகைக்கு எடுத்திருந்தோம். லைசன்ஸ் வராமல் நாடகம் நடத்த அனுமதிக்கமாட்டேன் என்று அரங்க நிர்வாகி சொல்லியிருந்தார். 21 நாட்கள் முன்பு விண்ணப்பித்திருந்தும் லைசன்ஸ் வரவில்லை. முன்தினம் கேட்டபோது நாடக தினத்தன்று காலை வரச்சொன்னார்கள். காலையில் சென்றபோது மதியம் வரச் சொன்னார்கள். மாலை 6.45க்கு நாடகம் தொடங்கவேண்டும்.
நான் கமிஷனர் அலுவலகத்துக்குச் சென்று டி.சி.யைச் சந்தித்துக் கேட்டேன். எங்கள் நாடகப் பிரதியை எடுத்து வைத்துக் கொண்டு, நீங்கள்தானே ‘முட்டை’ நாடகம் போட்டது, நீங்கள்தானே ‘பலூன்’ நாடகம் போட்டது... இதில் நிறைய வெட்டவேண்டியிருக்கிறது," என்று ஆரம்பித்தார். அதிலெல்லாம் வெட்டவில்லையே," என்றேன். படிக்காமலே லைசன்ஸ் குடுத்துட்டாங்க," என்று சிரித்தார். இதை 21 நாள் முன்பே கொடுத்துவிட்டோமே, ஏன் முன்பே படித்து எங்களிடம் சொல்லவில்லை," என்று கேட்டேன். வேற வேலை இருக்கு இல்ல, மெதுவாத்தான் படிப்போம்," என்றார். இப்போது கமலாவில் பத்துப் பதினைந்து வெட்டுகளைச் சொன்னார். எல்லாம் சாதாரண வரிகள். வாதிட்டு அவற்றை மூன்றாகக் குறைத்தேன். அப்போது மாலை மணி 6.45. பின் நாளை காலை வந்து ரப்பர் ஸ்டாம்ப் சீல் போட்டு லைசன்ஸ் வாங்கிக்கொண்டு போங்கள். குமாஸ்தா வீட்டுக்குப் போய்விட்டார்," என்றார் அந்தக் காவல் அதிகாரி. இன்று நாடகம் நடத்த வேண்டுமே," என்றேன். அதைப் பற்றி தமக்குக் கவலையில்லை," என்றார். எனக்குப் பெரும் கோபம் வந்தது. ஸ்க்ரிப்ட்டை அவர் மேசை மீதே வீசிவிட்டு, இப்போதே சீல் போட்டுத் தருவது உங்கள் பொறுப்பு. இல்லாவிட்டாலும் நாடகம் நடக்கும்," என்று கடுமையாகச் சொன்னேன். அவரே வந்து சீல் எடுத்துப் போட்டுக் கொடுத்தார், நாங்கள் நாடகம் தொடங்கும் போது அன்று இரவு எட்டு மணி. பார்வையாளர்கள் 400 பேரும் காத்திருந்தார்கள். தாமதம் ஏன் என்று அவர்களுக்கு விளக்கிச் சொல்லிவிட்டு நாடகம் நடத்தினோம். இது போன்ற அனுபவங்கள் என் நண்பர்கள் சிலருக்கும் உண்டு.இவையெல்லாம் நாடக நடிகனாக இருந்து சினிமாவுக்குப் போய் முதலமைச்சரான எம்.ஜி.ஆர் ஆட்சியில் நடந்தவை.நம் நாடகத்தை முன் தணிக்கைக்கு உட்படுத்துவது என்பதே எங்களுக்குப் பிடிக்காத நிலையில் சென்னையில் எந்த முக்கிய நாடக அரங்கிலும் எங்களால் நாடகம் நடத்த முடியவில்லை. மாக்ஸ் முல்லர் பவன், பிரிட்டிஷ் கவுன்சில், அலையன்ஸ் பிரான்சேஸ் முதலிய ஜெர்மன், பிரிட்டிஷ், பிரெஞ்ச் நாட்டு கலாசார நிலையங்களின் அரங்கில் தான் லைசன்ஸ் பெறாமல் நாடகம் நடத்த முடியும். ஏனென்றால் அவை அன்னிய அரசுகளின் இடங்கள் என்பதால், நம் நாட்டு சட்டங்களிலிருந்து அவற்றுக்கு விலக்கு (டிப்ளமேட்டிக் இம்யூனிட்டி) உண்டு. எனவே, கடந்த சில வருடங்களாகவே அலையன்ஸ் பிரான்சேஸ் அரங்கில் நாடகம் நடத்தி வந்திருக்கிறோம்.
சபாக்களில் எங்களை நாடகம் நடத்த அழைத்தாலும் இந்த முன்தணிக்கை லைசன்ஸ் முறைக்கு நாங்கள் உடன்பட விரும்பாததால் எந்த முக்கிய அரங்கிலும் நாடகம் போட முடிவதில்லை.இந்த நாடகத்துக்கான முன் தணிக்கைச் சட்டம் 1954ல் (காமராஜரின்) காங்கிரஸ் ஆட்சியால் கொண்டு வரப்பட்டதன் அசல் நோக்கம் அப்போது அந்த ஆட்சிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய எம்.ஆர்.ராதாவை ஒடுக்குவதுதான். ராதாவின் நாடகங்கள் மூட நம்பிக்கைகளை மட்டுமன்றி சமகால அரசியலை நையாண்டி செய்யும் விதத்திலும் இருந்தன.முன் தணிக்கையும் லைசன்ஸ் வாங்கும் முறையும் வந்ததும் ராதா அதைப் பல விதங்களில் சமாளித்தார். லைசன்ஸ் வாங்கி வைத்திருக்கும் நாடகத்தின் பெயரிலேயே வேறு நாடகத்தை நடத்தினார். உளவு பார்க்க வரும் போலீஸ் சி.ஐ.டி.கள் குறிப்பெடுக்க வசதியாக உட்கார விரும்பிய முன் வரிசை டிக்கட் விலையைப் பல மடங்கு உயர்த்தி அரசிடம் அபராதம் வசூலித்தார். இப்போதைய என் வழக்கு எம்.ஆர். ராதாவின் நூற்றாண்டில் அவருக்கு என் அஞ்சலி.காங்கிரஸ் ஆட்சி, சோவின் ‘சம்பவாமி யுகே யுகே’வுக்கு அனுமதி மறுத்தது. அவர் அதை எதிர்த்து வழக்குதொடுக்க முற்பட்ட போது, அட்வகேட் ஜெனரலின் ஆலோசனைப்படி தடையை நீக்கியது. திராவிட இயக்கமான தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் நியாயப்படி நாடக நிகழ்ச்சிகள் சட்டத்தை ரத்து செய்திருக்க வேண்டும். செய்யவில்லை. சோவின் ‘துக்ளக்’ நாடகத்துக்கும் இன்னும் பல நாடகங்களுக்கும் எதிராகத் தொல்லை கொடுத்தது.இந்தச் சட்டம் சுதந்திர இந்தியாவின் கண்டுபிடிப்பு அல்ல. இது பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்க எடுத்த பல நடவடிக்கைகளில் ஒன்று. பத்திரிகைகளை ஒடுக்குவதற்கான சட்டமும் நாடகத் தணிக்கைச் சட்டமும் அடுத்தடுத்து போடப்பட்டவை. இந்தச் சட்டத்தால் பாதிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியே இதைத் தமிழ்நாட்டில் புதுப்பித்தது. இதனால் பாதிக்கப்பட்ட திராவிட இயக்கமே இதை நீக்காமல் இன்னும் தொடர்கிறது. காரணம் அதிகாரத்துக்கு வந்ததும் தங்களுக்கு எதிராக எந்தக் கருத்தும் உருவாகி விடக்கூடாது என்ற பயம்தான்.இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் இந்தச் சட்டம் இப்போது இல்லை.
மக்கள் முன்னால் நேரடியாக நிகழ்த்தக் கூடிய கலைகள் பல. தெருக்கூத்து, பரதநாட்டியம், கர்நாடக இசைக் கச்சேரி முதல் மெல்லிசைக் கச்சேரிகள் வரை. இவற்றில் நாடகமும் ஒன்று. ஆனால், முன்தணிக்கை பாரபட்சமாக நாடகத்துக்கு மட்டுமே விதிக்கப்பட்டிருக்கிறது. ஆட்சேபத்துக்குரியது என்று ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டரும் ஒரு கலெக்டர் ஆபீஸ் குமாஸ்தாவும் கருதக் கூடியவை நாடகத்தில் மட்டும்தான் இருக்கமுடியுமா என்ன? கச்சேரிக்கு நடுவே அரசுக்குப் பிடிக்காத ஒரு சாகித்யத்தைப் பாட முடியாதா என்ன? நடன அபிநயத்தில் ஆபாசமாக என்னவெல்லாம் சாத்தியம் உண்டு என்பது சினிமா பார்க்கும் எல்லாருக்கும் தெரியுமே? மேடையில் இவற்றுக்கெல்லாம் முன் தணிக்கை லைசன்ஸ் விதிகள் இல்லாத போது ஏன் நாடகம் மட்டும் நசுக்கப்படுகிறது?உலகெங்கும் வீதி நாடகம் என்பது முன் கூட்டி எழுதிய அல்லது எழுதாத நாடகப் பிரதியைக் கொண்டு நடத்தப்படுவதாகும். பெரும்பாலும் அவை எழுதப்பட்டதில்லை. நடிகர்கள் கூடிப் பேசி அப்படியே மனோ தர்மப்படி நடத்தும் படைப்பாற்றல் உடையவை வீதி நாடகங்கள். அவ்வாறு நாங்கள் ‘வீதி’ என்ற இயக்கத்தை உருவாக்கி பல தெருநாடகங்களை 1978-79களில் சென்னை மெரீனா கடற்கரையில் நடத்தியிருக்கிறோம். இன்று அவ்வாறு எந்தக் கடற்கரையிலும் பூங்காவிலும் தெரு நாடகம் நடத்த இயலாது. போலீஸ் அனுமதிப்பதில்லை. கருணாநிதி ஆட்சியில் எல்லா பூங்காக்களும் சங்கமத்துக்காகத் திறந்து விடப்பட்டன. ஆனால் தெருநாடகம் நடத்துவோருக்கு அனுமதியில்லை.அண்மையில் 2000மாவது ஆண்டில் நாதுராம் கோட்சே நாடக வாசிப்புக்கு விதித்த தடையை எதிர்த்துப் போடப்பட்ட வழக்கில் மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி சந்திரசூட் அளித்த தீர்ப்பில் - அரசியல் சட்டத்தின் 21வது பிரிவு உயிர் வாழ்வதற்கான உரிமையை மட்டும் அளிக்கவில்லை. அப்படி வாழ்வது என்பது உடலளவில் ஜீவித்திருப்பது மட்டுமாகாது. அர்த்தமுள்ள பூரண மகிழ்ச்சியுடனான வாழ்க்கைக்கே சட்டம் உறுதியளிக்கிறது. அதற்குத் தேவையான எல்லா நடவடிக்கைகளையும் இந்தப் பிரிவு காப்பாற்றவேண்டும். கலை, இலக்கியச் செயல்பாடுகள் எல்லாம் அதற்கு உட்பட்டவை. தகவலறியும் உரிமையும் கருத்துச் சுதந்திரமும், மாறுபட்ட கருத்துகளைச் சொல்லவும் கேட்கவும் இருக்கும் உரிமையும் எல்லாமே இதே பிரிவினால் உறுதி செய்யப்பட்டுள்ளன. இவற்றைத் தடுத்தால் ஒரு படைப்பாளியின் படைப்பு சாரமிழந்து சக்கையாகிவிடும்" என்று கூறி தடையை ரத்து செய்தார்.
கருத்துச் சுதந்திரத்துக்கும் சிவில் அரசியல் உரிமைகளுக்கும் அரசியல் சட்டம் கொடுத்திருக்கும் உரிமைகளான பிரிவுகள் 14, 19 முதலியவற்றுக்கெல்லாம் விரோதமான நாடக நிகழ்ச்சிகள் சட்டத்தை ரத்து செய்யவேண்டுமென்று கோரி இப்போது வழக்கு தொடுத்திருக்கிறேன். முப்பதாண்டு காலக்கனவு இந்த முறை நனவாகும் என்று நம்புகிறேன்