சில தினங்களுக்கு முன், ஒரு சுயமரியாதை திருமணத்தில், "கிறிஸ்தவர்களுக்கு அய்யா பெரியார் சுயமரியாதை திருமணம் செய்து வைக்க முனைந்த போது எவ்வளவு கஷ்டப்பட்டார். எவ்வளவோ எதிர்ப்புகளை சந்தித்தார். அதற்காக பெரியார் மீது வழக்கு தொடரப்பட்டு, பெரியாரே அந்த வழக்கை வாதாடி அந்த வழக்கில் வென்றார்" என்ற கதையை வீரமணி அவர்கள் சொன்னார்.
மேலும் அய்யா பெரியார் கிறிஸ்தவத்தில் நிலவுகிற சாதீய கொடுமைகளை மிக வன்மையாக கண்டித்தார். ஆனால் அதையெல்லாம் மறந்து ஒரு விழாவில் கி.வீரமணி அவர்கள் இப்படி பேசி இருக்கிறார். "எனக்கு முன்னாலே பேராயர் எஸ்றா சற்குணம் அவர்களும் பேசினார்கள். அதே போல பாதிரியார் ஜெகத்கஸ்பார்ராஜ் அவர்களும் பேசி னார்கள். பேராயர் எஸ்றா சற்குணம், நீங்கள் எங்களுடனேயே வந்து விடலாம் என்று என்னை அழைத்தார்கள். நான் இருந்த இடத்திலேயே இருந்தால்தான் இவ்வளவு துணிச்சலாகக் கருத்துகளைச் சொல்ல முடி கிறது. படை வீரர்களை ஓதச் சொன்னால்...!
படை வீரர்களாக இருக்கிற எங்களைப் போய் ஓதக்கூடிய இடத்தில் உட்காரச் சொன்னால் அது நாட் டிற்கும் நல்லதல்ல. சமுதாயத்திற் கும் நல்லதல்ல. நீங்கள் வெள்ளை அங்கியை அணிந்திருந்தாலும் எதிரிகள் உங்களை கருப்பு அங்கி அணிந்தவர்களாகத்தான் பார்க்கிறார்கள். நம்நாட்டிலே மனிதன் சாகிறான். ஆனால் ஜாதி சாவதில்லை. சுடுகாட்டிலும் இது பறையன் சுடுகாடு. இது உயர்ந்த ஜாதிகாரன் சுடுகாடு என்று கல்லறை வரை ஜாதியைக் கொண்டு வந்து வைத்துவிட்டான். எனவே பார்ப்பனர்களுடைய முறைப்படி கிறிஸ்தவர்களாகிய நீங்களும் நாத்திகர்கள், நாங்களும் நாத்திகர்கள். " என்று பேசி இருக்கிறார்.
ஒரு பகுத்தறிவு போர்வாளை, ஆப்பிள் நறுக்க உபயோகப் படு த்த முனைகிறது. அதாவது பகுத்தறிவாளரையே மதம் மாற்ற முனைகிறது. கிறிஸ்தவர்களை தான் நாத்திகராக்குவது கடினம். ஆனால் நாத்திகரை சுலபமாக கிறிஸ்தவராக்கிவிடலாம் என்று பேராயர் நினைத்திருக்கலாம். அந்த நினைப்பு வர நம் நேர்மையற்ற பகுத்தறிவு சிந்தனையும ஒரு காரணமாக இருக்கலாம்.
ஆனால் அதை பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல், கிறிஸ்தவர்களை நாத்திகன் என்று கண்டுபிடித்து சொன்ன அய்யாவை என்னவென்று சொல்வது. கிறிஸ்தவர்கள் நாத்திகர்கள் தான் என்றால் அமெரிக்கா பகுத்தறிவாளி இங்கர்சால் சொன்ன கிறிஸ்தவ விரோத நாத்திக கட்டுரைகளை விடுதலையில் ஏன் வெளியிட வேண்டும்.
அரசியல்வாதிகளோடு சேர்ந்து, சேர்ந்து முன்னுக்கு பின்னாக பேசலாமா. அய்யா கி.வீரமணி, பிறர் தவறாக பேசினால் இப்படி பேசுவார். "பழுது பட்ட பார்வை" என்று. பிறருக்கு பழுதுப்பட்ட பார்வை வரலாம். ஆனால் பகுத்தறிவாளருக்கு வரலாமோ. கிறிஸ்தவத்தில் நிலவுகிற சாதீயத்தை கண்டிக்காமல், கிறிஸ்தவத்தில் சாதீயமே இல்லாதது போல் பேசி பகுத்தறிவுக்கு மிக பெரிய தீங்கு இழைத்திருக்கிறார்.
மணமக்கள் தேவை விளம்பரத்தில் பாருங்கள்... கிறிஸ்தவ வன்னியர், கிறிஸ்தவ பிள்ளை, கிறிஸ்தவ ஆசாரி, கிறிஸ்தவ நாடார்... இந்துக்களையும் தூக்கி சாப்பிட்டு விட்டார்கள் சாதீயத்தை பேணுவதில். இதில் கிறிஸ்தவ பிராமணாள் என்றொரு வலைப்பூவும் உள்ளது. சாதீயத்தை வளர்க்கிற சாதீயத்தோடு சேர்ந்து கொண்டு சாதீய கொடுமை பேசலாமா.
நீங்கள் சொன்ன சுடுகாட்டில் தீண்டாமை கிறிஸ்தவத்திலும் இருக்கிறது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறாக இந்த சம்பவத்தை ஞாபகப்படுத்துகிறோம்.
திருச்சி மேலப்புதூர் வேர்ஹவுஸ் பகுதியில், கிறிஸ்தவர்களுக்கு சொந்தமான உத்திரிய மாதா கோவில் கல்லறை உள்ளது. பிள்ளைமா நகர், தர்மநாதபுரம், செங்குளம் காலனி, செந்தண்ணீர்புரம் உட்பட 32 பகுதிகளில் இறப்பவர்களை, 200 ஆண்டாக இங்கு அடக்கம் செய்கின்றனர். தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவர்களை அடக்கம் செய்ய தனி இடம் ஒதுக்கி, இடையில் மதில் சுவர் ஒன்றை, மேல்ஜாதியை சேர்ந்த கிறிஸ்தவர்கள் எழுப்பினர்.
அதை அகற்ற தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவர், பல ஆண்டாக முயற்சித்தும் முடியாததால் , தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்தால் அந்த சுவர் உடைக்கப்பட்டது.
இந்த பாகுபாட்டை அகற்ற பெரியார் 1950களிலேயே கோரிக்கை விடுத்தும் இந்த சுவர் இப்போது வரை அகற்றப்படாமல் இருந்தது என்று சுட்டிக் காட்டினர் பெரியார் திரவிடர் கழகத்தினர், தமிழகத்தில் தலித் கிறிஸ்தவர்களுக்கு திருச்சபையில் நீதி கிடைக்கவில்லை என்கிறார் கத்தோலிக பாதிரியாரும், தலித் கிறிஸ்தவ செயற்பாட்டாளருமான யேசு மரியான். இதற்கு கி.வீரமணி அவர்கள் என்ன பதில் வைத்துள்ளார். படைவீரர்கள் என்று நம்மை நாமே அழைத்து கொண்டால் போதுமா...
"பார்வை கூட பழுதாக இருக்கலாம். புத்தி தான் பழுதாக இருக்கக்கூடாது". மதவெறியை மாய்ப்போம் என்று மட்டும் சொன்னால் போதாது. "எல்லா மதவெறியையும் மாய்ப்போம்" என்று பகுத்தறிவு துணிச்சலாக பேச வேண்டும். அப்படி பேச தைரியம் இல்லாவிட்டால், பேசாமலே இருந்து விட வேண்டும்.
ஒரு மதவாதத்தை ஒழிக்க, இன்னொரு மதவாதத்தை உருவாக்க வேண்டாம். பிறகு இன்னுமொரு ஆயிரம் ஆண்டுகள் நம் பரம்பரைகள் தான் கஷ்டப்பட வேண்டும்.