திண்டுக்கல் : கணவர், அவரது குடும்பத்தார் என்னையும்,எனது குழந்தையையும் வற்புறுத்தி மதமாற்றம் செய்து விட்டனர் என பெண் ஒருவர் திண்டுக்கல் எஸ்.பி., முத்துச்சாமியிடம் புகார் அளித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடியைச் சேர்ந்தவர் கலாராணி. இவர் திண்டுக்கல் எஸ்.பி., அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: எனது கணவர் ஜோசப் ரெட்சகநாதன். கணவர் குடும்பத்தார் கிறிஸ்தவர்கள். நான் இந்து மதத்தை சேர்ந்தவள். எனது கணவர் 21.09.2000ம்தேதி இந்துவாக மதம்மாறி இடைநிலை ஆசிரியர் பணி பெற்றார். அரசு சலுகை பெறுவதற்காக 2004 பிப்ரவரி 8ம் தேதி ஜம்புளியம்பட்டி நாகம்மாள் கோயிலில், என்னை அவரது குடும்பத்தார் முன்னிலையில் திருமணம் செய்தார். அந்த கோயிலில் திருமண சான்று, ரசீது எதுவும் தராததால், மறுபடியும் வி.எம்.ஆர். பட்டி காளியம்மன் கோயிலில் 26.4.2004ம் தேதி திருமணம் செய்தார். பின்னர் எனது மாமியார் அடைக்கலமேரி, மாமனார் செபஸ்தியான், கொழுந்தனார் சிரில்ராஜ், நாத்தனார் ஜெயந்தி உட்பட பலர் என்னிடம், நாங்கள் பரம்பரை கிறிஸ்தவர்கள், வேலை, அரசு சலுகைக்காகத்தான் இந்து மதத்திற்கு மாறினோம் என்றும் கூறினர்.
நீ எங்கள் குடும்பத்தில் வாழ வேண்டுமானால் கிறிஸ்தவ மதத்திற்கு மாற வேண்டும். இல்லாவிட்டால் உனது கணவருக்கு வேறு திருமணம் செய்து விடுவோம் என மிரட்டி என்னையும், குழந்தையையும் 22.6.2004ம் தேதி கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றினர். பின்பு மீண்டும் எனது கணவருக்கும்,எனக்கும் 26.6.2006ல் மரியநாதபுரத்திலுள்ள விண்ணேற்பு அன்னை ஆலயத்தில்,அவரது குடும்பத்தார் முன்னிலையில் திருமணம் நடந்தது. என்னையும், குழந்தையையும் வற்புறுத்தி,கட்டாய மதமாற்றம் செய்ததால் எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் எனது கணவர் ஜோசப் ரெட்சகநாதன், மாமியார், மாமனார் உட்பட அவர்களின் உறவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த மனு குறித்து கூடுதல் எஸ்.பி., பொன் சிவானந்தம் விசாரிக்க எஸ்.பி., முத்துச்சாமி உத்தரவிட்டுள்ளார்.