கார்த்திகை மாதம் இன்று பிறக்கிறது. பொதுவாக, கார்த்திகை என்றாலே தீபத்திருவிழா மனதில் தோன்றும். மற்றொன்று இன்னும் முக்கியமானது. அதுதான் சபரிமலை ஐயப்பனுக்கு மாலையிட்டு விரதம் துவக்கும் நிகழ்ச்சி. அந்தவகையில் கார்த்திகை மாத முதல் நாளான இன்று முதல் ஐயப்பனுக்கு, பல லட்சம் பக்தர்கள் மாலையிட்டு விரதத்தை துவக்குவர். ஏன் ஐயப்பனுக்கு கார்த்திகையில் மாலையிட வேண்டும்? இது ஒரு நல்ல கேள்வி. பொதுவாக, சபரிமலை ஐயப்பன் தரிசனத்தில் மகரஜோதி தரிசனம் மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது.
இதற்கு கார்த்திகை முதல் தேதியில் விரதம் துவக்குவதே சரியாக இருக்கும் என்ற அடிப்படையிலே துவக்கப்பட்டது என்கின்றனர் ஆன்மிக பெரியவர்கள். சரி... விரதம் பற்றி விபரமாக பார்ப்போம். ஐயப்ப விரதம் இருப்பவர்கள் ஒரு மண்டல விரதம் இருக்க வேண்டும். சபரிமலை கணக்கின் படி, இது 41 நாட்கள். சாஸ்திரத்தின் படி 45 நாட்கள். சித்தர்கள், ஞானிகள் கூற்றின்படி 48 நாட்கள் என கூறுகின்றார். ஆனால், 41 நாட்களாவது கட்டாயம் விரதம் இருப்பது மிகச்சிறந்தது. இன்று மாலையிடுபவர்கள், முதலாவதாக, குருசாமியை பற்றிப் தெரிந்து கொள்வது முக்கியம்.
இடைவிடாமல் 18 ஆண்டுகள் சபரிமலை செல்பவர் குருசாமி ஆவார். இவர்தான் தன்னை சபரிமலை அனுபவத்தில் இளைய சாமிகளுக்கு மாலை அணிவிப்பார். சாமிகள் அணிந்து கொள்ளும் மாலையானது 54 அல்லது 108 என்ற துளசி அல்லது ருத்திராட்ச மணியை கொண்டது. இதில் ஒன்று கூடவோ, குறையவோ கூடாது. அடுத்ததாக கன்னி சாமி. முதன்முதலில் மாலை அணிபவரை இவ்வாறு அழைக்கின்றனர். இவர் ‘கன்னிசாமி’ அடையாளத்திற்காக கருப்பு வேட்டி கட்டவேண்டும். இவர் சபரிமலை செல்ல குடும்பத்தினரின் சம்மதம் கட்டாயம் வேண்டும்.
அதன் பிறகு, கோயிலுக்கு சென்று, குருசாமியை வணங்கி, இறைவனிடம் வைத்த மாலையை பெற வேண்டும். இந்த இருவரை தாண்டி, தொடர்ந்து செல்பவர்களும் உண்டு. 18 ஆண்டுகள் தொடர்ந்து சென்றால் நற்பலன்கள் உண்டு. மாலை அணிந்ததும், பார்க்கும் நபர்களிடம் சாமி சரணம் சொல்லியே பேச்சைத் துவங்க வேண்டும். விரதத்தில் சைவம் மிக மிக கட்டாயம். கேக் கூட தொடக்கூடாது. கடினமான இந்த ஐயப்ப விரதத்தை, கடைபிடித்தல், விரதம் விடும் முறைகளை இனி விரிவாக பார்க்கலாம். தரிசனம் தொடரும்
-- Edited by Admin on Wednesday 3rd of December 2025 01:14:35 PM
ஐயப்பன் அவதாரம் குறித்து பார்த்தோம். அடுத்ததாக சபரிமலை ஐயப்பன் கோயிலை பற்றி பார்ப்போமா? கேரளா... கடவுள் விரும்பி வாழும் இயற்கை வளம் கொண்ட அற்புத பூமி என்பார்கள். அம்மாநிலத்தில் அடர்ந்த காடுகள், நீர்வீழ்ச்சி, பசுமை சூழ்ந்த மலைப்பரப்பு என கண்கொள்ளா காட்சிகளால், உள்ளத்தை கொள்ளையடிக்கும் பத்தனம்திட்டா மாவட்டத்தில்தான் சபரிமலை அமைந்துள்ளது.
பெரியாறு புலிகள் காப்பகத்தில் அமையப் பெற்றுள்ள இக்கோயிலானது, கடல் மட்டத்திலிருந்து 1,260 மீ (4,134 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. 18 மலைகளுக்கு மத்தியில் ஒரு குன்றின் மீது அமைக்கப்பட்ட இக்கோயிலை பார்த்தாலே மனம் பரவசமடையும். ஆண்டுதோறும் சுமார் 4 கோடி முதல் 5 கோடி வரை பக்தர்கள் வந்து தரிசனம் செய்யும் இடமென்கின்றனர். சில நேரங்களில் கூடுகிறதே தவிர குறையவில்லை.
உலகம் முழுவதும் இருந்து சபரிமலைக்கு வந்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில் உலக அளவில் அதிகம் பேர் வந்து செல்லும் ஆலயங்களுள் சபரிமலைக்கும் முக்கிய இடமுண்டு. குறிப்பாக, கார்த்திகை, மார்கழி, தை - இந்த 3 மாதங்களில் வருவோர் எண்ணிக்கை மிகவும் அதிகரிக்கும். கோயிலின் மேலே நான்கு தங்க கோபுரங்கள், இரண்டு மண்டபங்கள், பலி பீடம் மற்றும் கொடிக்கம்பம் ஆகியவற்றைக் கொண்ட கருவறை உள்ளது.
இங்குள்ள ஐயப்பன் சிலை பஞ்சலோகத்தால் ஆனது என்கின்றனர். பஞ்சலோகம் என்பது ஐந்து உலோகங்கள் என பொருள்படும். சபரிமலையில் அமைக்கப்பட்டுள்ள 18 படிகளுக்கு மேல் ஏறி சென்றால் ஐயப்பன் சன்னதியை அடையலாம். அங்கு ஐயப்பன் அறிவில் சிறந்தோரை கை விரல்களால் அடையாளம் காட்டும் சின் முத்திரையோடு, ஒரு துண்டு போன்ற ஆடையால் முழங்காலை சுற்றி கட்டி, குத்துக்காலிட்ட நிலையில் காட்சியளிக்கிறார்.
இதுபோன்ற நிலையில் அமர்ந்திருப்பது மிக மிக அரிதான நிலையாகும். ஏனிந்த கோலம் என்பதை பின்னர் விரிவாக பார்ப்போம். கோயில் வளாகத்தில் எந்த ஆலயத்திலும் முதன்மையானவராக திகழும் கன்னிமூல கணபதிக்கு தனி சன்னதி உள்ளது. அருகில் மஞ்சள்மாதா எனப்படும் மாளிகைபுரத்தம்மனுக்கு தனி சன்னதி இருக்கிறது. சபரிமலைக்கு மாலை அணிந்தும், அணியாமலும் செல்பவர்கள் பலர் இருக்கின்றனர்.
ஆனால், முறையாக விரதமிருந்து இருமுடி கட்டிச் செல்லும் பக்தர்களே 18 படிகளின் மீதேறி செல்ல முடியும். மற்றவர் 18 படிகளின் வழியாக ஏறிச் செல்ல அனுமதியில்லை. 18 படி என்பது ஐயப்பனை தரிசிக்க செல்லும் பாதை மட்டுமல்ல... ஒவ்வொரு படியும் ஒவ்வொருவிதமான அர்த்தங்கள், தத்துவங்களை கொண்டிருக்கிறது. அதனைப்பற்றி பார்ப்போமா? தரிசனம் தொடரும்
ஐயப்பன் அறிவோம் 14: எருமேலியில் இருந்து ஆரம்பிக்கலாங்களா?
01:16 AM Nov 30, 2025
ஓரு பயணத்தை துவக்குகிறோம். அதில் துவக்க இடம் என்று ஒன்று இருக்கும் அல்லவா? அதுபோல ஒரு ஐயப்ப பக்தர், தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உட்பட எந்த மாநிலத்தை சேர்ந்தவராக இருந்தாலும் சரி... அவர் சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா உட்பட எந்த வெளிநாடாக இருந்தாலும் சரி... அவர் இருமுடி கட்டி எந்த இடத்தில் இருந்து சபரிமலைக்கு புறப்பட்டு சென்றாலும் பிரச்னையில்லை. ஆனால், ஐயப்ப பக்தர்களை ஒருங்கிணைக்கும் ஒரு இடம் இருக்கிறது. அதுதான் எருமேலி.
எருமேலி கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில், மணிமாலா நதிக்கரையில் அமைந்துள்ளது. வளர்ப்புத்தாய் மகாராணிக்காக புலிப்பாலை தேடி ஐயப்பன், வனத்திற்கு சென்றபோது எருமேலியில்தான் மகிஷியை வாள் உட்பட 18 விதமான ஆயுதங்களை கொண்டு அழித்ததாக கூறப்படுவதுண்டு. மகிஷி எருமை தலையை உருவமாக கொண்டவர். ஆகையால், எருமையை கொன்ற இடம் என்பதை குறிக்கும்படி ‘எருமைக்கொல்லி’ என துவக்கத்தில் இந்த இடம் அழைக்கப்பட்டது. பிறகு எருமேலி என மாறியதாகவும் கூறப்படுவதுண்டு.
எருமேலியில் மகிஷியை வதம் செய்த ஐயப்பன் தங்கி சென்ற இடத்தை ‘புத்தன் வீடு’ என்று அழைக்கின்றனர். இங்கு வதம் செய்ய ஐயப்பன் பயன்படுத்திய வாள் தரிசனத்திற்காக வைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் பிப்ரவரியில் 10 நாட்கள் திருவிழா விசேஷமாக நடக்கும். மேலும், எருமேலியில்தான் பந்தள நாட்டின் மன்னனும், ஐயப்பனின் வளர்ப்பு தந்தையுமான மன்னர் ராஜசேகரனால், பார்த்து, பார்த்து கட்டப்பட்ட தர்மசாஸ்தா கோயில் ரம்மியமான சூழலில் அமைந்துள்ளது.
இங்கு வேட்டைக்கு செல்வது போல வில், அம்புவை ஏந்தி நிற்கும் கோலத்தில் ஐயப்பன் அருள்பாலிக்கிறார். மேலும், பகவதி, நாகராஜர் சிலைகளும் உள்ளன. சபரிமலை ஐயப்பனை தரிசிக்க எருமேலியிலிருந்து வனப்பகுதி வழியாகவே பெரும்பாலான ஐயப்ப பக்தர்கள் சென்று வந்துள்ளனர். எருமேலியில் இருந்து சபரிமலை சன்னிதானம் வரையுள்ள பாதையை பெருவழிப்பாதை என்கின்றனர்.
இந்தப்பாதை வழியாகவே ஐயப்பனை ஒரு பக்தராக தரிசிக்க மன்னர் ராஜசேகரன் நடந்து சென்றதாகவும் கூறுவதுண்டு. அவ்வளவு சிறப்புமிக்க இடமாக இருப்பதாலேயே ஐயப்ப தரிசனத்தில் எருமேலி முக்கிய பங்காற்றுகிறது. ஐயப்பனுக்கு சரண கோஷம் மட்டுமே கூறி, பயபக்தியுடன் அமைதியான முறையில் தரிசனத்திற்கு வரும் கன்னி சாமிகள் எருமேலி வந்ததும் வேற லெவலுக்கு மாறுவார்கள்... அது மிக மிக முக்கியமானதும் கூட. அப்படி என்ன மாற்றம் அது என்கிறீர்களா...? பேட்ட பராக்...! தரிசனம் தொடர்வோம்
தா யின் நோயை குணப்படுத்த புலியை தேடி வனத்துக்குள் சென்ற மணிகண்டனுக்கு சிவபெருமான் தரிசனம் அளித்தார். மணிகண்டனின் அவதார நோக்கம் திட்டமிட்டபடியே நடப்பதை உணர்ந்து கொண்டாலும், திருவிளையாடல் நிகழ்த்துவதில் மன்னர் அல்லவா? ஆகையால், எதுவுமே அறியாதது போல மணிகண்டனை பார்த்து, ‘நீ வனத்துக்குள் வந்த நோக்கம் என்ன’ என்றார். அதற்கு மணிகண்டன், ‘‘எனது தாய் தீராத தலைவலியால் அவதிப்படுகிறார்.
அவருக்கு புலிப்பால் அவசியம் வேண்டும். அதற்கு தாங்கள் உதவ முடியுமா’’ என்றான் மணிகண்டன். உடனே சிவபெருமான், ‘‘நிச்சயமாக. உனக்கு இந்திரனும், தேவர்களும் கட்டாயம் உதவுவார்கள்’’ என்று கூறிச் சென்றார். சிறிது நேரத்தில் இந்திரன் பெண் புலியாக உருமாறி வந்தார். அதன் மேல் அமர்ந்து கொண்டான் மணிகண்டன். தேவர்கள் ஆண் புலிகளாகவும் மாறி பின்தொடர்ந்து வந்தனர். புலிகளோடு பந்தளம் அரண்மனை நோக்கிச் சென்ற மணிகண்டனை கண்டு மக்கள் அலறியடித்து ஓடினர்.
தகவலை கேள்விப்பட்ட மன்னர் ராஜசேகரன் உட்பட அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். மன்னரை கண்ட மணிகண்டன், ‘‘தாயின் தலைவலி மற்றும் நோய் தீர்க்க பெண் புலியோடு வந்துள்ளேன். புலிப்பாலை சேகரித்து தாயை குணப்படுத்தி விடலாம். கலங்காதீர்கள்’’ என்றான். தனக்காக வனத்துக்குள் சென்று புலியுடன் வந்த மணிகண்டனை கண்ட மகாராணி மனம் கலங்கினார். மன்னரிடம் தான் நாடகம் நடத்திய உண்மையை கூறினார். அமைச்சரின் சூழ்ச்சியால் இப்படி நடந்து கொண்டதாகவும் தெரிவித்தார்.
இதனால் மனம் உடைந்த மன்னர், அமைச்சருக்கு தண்டனை தர முடிவு செய்தார். தடுத்த மணிகண்டன், ‘‘அமைச்சரை தண்டிக்க வேண்டாம். இறைவன் ஆணையிட்டபடியே அனைத்தும் நிகழ்ந்திருக்கிறது. நான் உங்களுடன் இருக்க வேண்டியது 12 ஆண்டுகள் மட்டுமே. அந்த வயதை எட்டி விட்டேன். என் பிறப்பிற்கான தேவையையும் நிறைவேற்றி விட்டேன். இனி இந்த அரண்மனை என் இருப்பிடம் அல்ல.
நான் தேவலோகம் செல்ல வேண்டும். என்னை வழியனுப்பி வையுங்கள் தந்தையே’’ என்றான். மகன் பிரிந்து செல்வதை அறிந்த மன்னர் ராஜசேகரன், மனம் கலங்கி கண்ணீர் விட்டார். அதனை கண்ட மணிகண்டன், ‘‘என் மீது நீங்கள் செலுத்திய அன்பு, பாசத்தை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன். நீங்கள் என்னிடம் வரம் கேளுங்கள். தருகிறேன்’’ என்றார்.
மணிகண்டனை முதன்முதலாக கையில் தூக்கியபோது, முனிவர் கூறியது போலவே அனைத்தும் நடப்பதையும், தன் மகன் தெய்வீக அம்சமாக காட்சி தருவதையும் கண்டு மெய்சிலிர்த்தார் மன்னர் ராஜசேகரன். இறைவன் நிலையை அடைந்த மணிகண்டனிடம், மன்னர் ராஜசேகரன் ஒரேயொரு வரம் கேட்டார். அந்த ஒரு வரம்....? தரிசனம் தொடர்வோம்
திருச்சி நீதி மன்ற வளாகம் அருகே ஐயப்பன் ஆலயம் உள்ளது. 27 நட்சத்திரங்களுக்கான மரங்கள் நடப்பட்டு பராமரிக்கப்படுகின்றன; இந்திய புண்ணியத் தலங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட 444 புனிதக் கற்கள் ஆலயத்தில் ஓரிடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு வணங்கப்படுகின்றன.சிதம்பரம் நடராஜப் பெருமான் ஆலயத்தில் மகாசாஸ்தா, ஜகன்மோகன சாஸ்தா, பாலசாஸ்தா, கிராத சாஸ்தா, தர்ம சாஸ்தா, விஷ்ணு சாஸ்தா, பிரம்ம சாஸ்தா, ருத்ர சாஸ்தா என எட்டு சாஸ்தாக்கள் திசைக்கொருவராக அருள்கின்றனர்.
சென்னை அம்பத்தூர் அருகே கள்ளிக்குப்பத்தில் ஐயப்பா சாஸ்தா ஆலயம் உள்ளது. இவர் திருவுரு முன் ஒரு வாழையிலையில் அரிசியைப் பரப்பி அதன்மீது தேங்காய் மூடி நெய்தீபமேற்றி வழிபட நல்ல வேலை கிடைப்பதாக நம்பிக்கை.சென்னை ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன் ஆலயம் வடசபரி என போற்றப்படுகிறது. இந்த ஆலயத்தில் தங்கத்தேரில் ஐயன் உலா வரும் அழகைக் காணக் கண்கோடி வேண்டும்.திருத்துறைப்பூண்டு அருகே காடந்தேதத்தியில் ஐயப்பன் ஐயனாராக அருளாட்சிபுரிகிறார். இவரை சுகப்பிரம்ம ரிஷி வழிபட்டு பேறு பெற்றதாக தல வரலாறு கூறுகிறது.
சீர்காழி தென்பாதியில் யானை வாகனத்தில் பூரணா, புஷ்கலாவோடு சாஸ்தா வீற்றருள்கிறார். தேவேந்திரனிட மிருந்து இந்திராணி பிரியாமல் காத்ததால் இவர் கைவிடேலப்பர் என போற்றப்படுகிறார்.கையில் பூச்செண்டுடனும், இருபுறமும் தேவிருடனும் அமர்ந்த நிலையில் அருளும் சாஸ்தாவை காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயப் பிராகாரத்தில் தரிசிக்கலாம்.கன்னியாகுமரி, ஆச்ராமம் தலத்தில் உச்சிக்கொண்டை போட்டு, திருமார்பில் பூணூல் தவழ, கழுத்தில் பதக்கம் மின்ன, நெற்றியில் திருநீற்றுப்பட்டை யுடன் ‘அஞ்சனம் எழுதிய சாஸ்தா’ எனும் பெயரில் ஐயப்பன் காட்சி தருகிறார்.
சபரிமலையில் ஐப்பன் யோகாசன முறையில், மூலாதாரத்து குண்டலினி சக்தி மேலெழ உதவும் ஆசனத்தில் வீற்றருள்கிறார். அறிவின் அடையாளமான சின்முத்திரை ஜீவாத்மா, பரமாத்மா ஐக்கிய நிலையையும், ஹரிஹர ஐக்கியத்தில் பிறந்ததை கால்களை இணைக்கும் பட்டையும் உணர்த்துகிறது.விழுப்புரம் அருகே நேமூர் பாதையில் எண்ணாயிரம் கிராமத்தில் செம்மணேரி ஆண்டவர் எனும் பெயரில் சாஸ்தா அருள்கிறார். தன்னைக் குலதெய்வமாகக் கொண்டவர்கள் தன்னை மறந்தால் அவர்கள் கனவில் தோன்றி தான் இருக்கும் இடத்தை தெரிவிக்கும் அற்புதத்தை
நிகழ்த்துபவர் இவர்.
திருவையாறு& திருக்காட்டுப்பள்ளி பாதையில், கூத்தூரில், கேரள வியாபாரிகள் கொணர்ந்த ஐயப்பன் விக்ரகம், வழியில் இங்கே நிலை கொண்டு விட்டார். கருவறையில் தேவியருடன் ஐயப்பனும், விநாயகப் பெருமானும் அருள்கிறார்கள்.பூத கணங்கள் புடைசூழ தன் நாயகியருடன் ஐயன் அருளும் தலம் சொரிமுத்தையனார் ஆலயம். தென் திசையை சமன் செய்ய வந்த அகத்தியருக்கு ஐயன் காட்டிய அருட்கோலம் இது.
பாற்கடலில் கிடைத்த அமிர்தம் தான் சாஸ்தாவான ஐயப்பனின் அவதாரத்திற்கு ஆரம்பப் புள்ளியாக அமைகிறது. அமிர்தம் கிடைத்ததும், வலிமையாக இருந்த அரக்கர்கள் அமிர்தத்தை முழுமையாக அபகரித்து, முழுவதும் அருந்த எண்ணி, தேவர்களை தாக்குகின்றனர். இதனை அறிந்து கொண்ட சிவன், திருமாலை மோகினி தோற்றத்தில் சென்று, அரக்கர்களை மயக்கி தேவர்களுக்கு வாழ்வு அளிக்கும்படி கூறுகிறார். பேரழகு தோற்றமுடைய மோகினி அவதாரம் எடுக்கிறார் திருமால். பாற்கடலுக்குச் செல்கிறார் மோகினி. ஆவேசமாக இருந்த அரக்கர்களை மோகினி சமாதானம் செய்து, சமமாக பிரித்து வழங்குவதாக கூறுகிறார். மோகினியின் அழகில் மயங்கிய அரக்கர்கள், மோகினி சொல்வதை கேட்கத் தொடங்குகின்றனர்.
முதலில் தேவர்களிடம் இருந்து வருகிறேன் எனக்கூறி, முழுமையான அமிர்தத்தையும் தேவர்களுக்கே வழங்கி முடிக்கிறார். அரக்கர்களுக்கு பிறகே தெரிந்தது தாங்கள் ஏமாற்றப்பட்டிருப்பது. அமிர்தத்தை முழுவதும் அருந்திய தேவர்களுக்கு வலிமையும், இழந்த சக்தியும் மீண்டும் கிடைக்கிறது. இதனால் அரக்கர்களை அடித்து விரட்டி விட்டு, மீண்டும் தேவலோகத்தை கைப்பற்றி, அரியணை ஏறுகிறார் தலைவன் இந்திரன். தோல்வியுற்று பயந்தோடிய அரக்கர்கள், தங்களின் அரசியான மகிஷியை தேடி அலைகிறார்கள். பூலோகத்தில் சுந்தர மகிஷனுடன், மகிஷி இல்லற வாழ்க்கையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைகின்றனர். பிறகு மகிஷியை சந்தித்து, நடந்த அனைத்தையும் கூறி, தேவர்கள் சூழ்ச்சி செய்து, உங்களை சுகபோக வாழ்விற்கு அடிமையாக்கி, பாற்கடல் அமுதத்தை அருந்தி மீண்டும் அரியாசனத்தில் அமர்ந்துவிட்டார் இந்திரன் என விளக்கி கூறுகின்றனர்.
இதில் ஏதோ மறைமுக சூழ்ச்சி இருக்கிறது என அறிந்து கொண்ட மகிஷி, சுந்தர மகிஷத்தை ஒதுக்கிவிட்டு, தனது வரத்தின் பலத்தால் அசுர பலத்துடன் கூடிய படையை உற்பத்தி செய்து, மீண்டும் தேவலோகத்தை அடைகிறாள். சுந்தர மகிஷம் மும்மூர்த்திகள் தனக்கு கொடுத்த கடமை முடிந்ததை எண்ணி மகிழ்ந்து, தனது உருவத்தை துறந்து மீண்டும் மூல சக்திகளான மும்மூர்த்திகளிடம் தத்தாத்ரேயராக சரணாகதி அடைகிறார்.நேரடியாக இந்திரனை நோக்கி போரை துவங்குகிறாள் மகிஷி. தேவர்களும் எதிர்தாக்குதல் நடத்துகின்றனர். ஆனால் அசுர பலம் பொருந்திய மகிஷியை வெல்ல முடியவில்லை. மகிஷியை வெல்வதற்கு, தர்மசாஸ்தாவின் அவதார நோக்கம் நிறைவேற வேண்டி, சாஸ்தாவின் தலை பகுதியான ‘பிரம்மாந்திரம்’ அமைந்துள்ள காந்தமலை பொன்னம்பல மேட்டில் சாஸ்தாவை நோக்கி பிரார்த்தனையில் ஈடுபடுகின்றனர் தேவர்கள். சுவாமியே சரணம் ஐயப்பா... நாளையும் தரிசிப்போம்.