கீழடியில் 6ஆம் கட்ட அகழ்வில் பூந்தொட்டி வடிவில் 6 தொட்டிகள் கண்டுபிடிப்பு!
தமிழ் நாகரிகத்தின் சீராகக் கட்டமைக்கப்பட்ட தொன்மையை இன்னும் பின்னோக்கிக் கொண்டு செல்ல ஆதாரமாக விளங்கிய கீழடியில் ஆறாம் கட்ட அகழாய்வில் ஏராளமான தொல்பொருட்கள் கிடைத்து வருகின்றன. தற்போது பூந்தொட்டி வடிவில் 6 மண் தொட்டிகள் கண்டறியப்பட்டுள்ளன.
கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 இடங்களில் 6ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.
குறித்த பகுதிகளில் இதுவரை, முதுமக்கள் தாழிகள், மனித மற்றும் விலங்கு எலும்புக் கூடுகள், பாசி மணிகள், சங்கு வளையல்கள், அம்மிக் குளவி, கொள்கலன்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட தொன்மையான பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.
இந்நிலையில் மணலுரில் 2 வாரங்களுக்கு முன்பு கண்டறியப்பட்ட மட்பாண்டங்களை சூடு செய்யப் பயன்படும் சுமார் ஒன்றரை மீட்டர் சுற்றளவிலான உலை கலனிலிருந்து பூந்தொட்டி வடிவில் 6 மண் தொட்டிகள் கண்டறியப்பட்டுள்ளன.
இவை தொழில் கூடங்களில் பயன்படுத்தப்பட்டவையா அல்லது வீட்டில் பயன்படுத்தப்பட்டவையா என தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதேவேளை, கீழடியில் நடத்தப்பட்ட 4ஆம் கட்ட அகழாய்வின் முடிவுகள் வெளியானபோது தமிழகத்தில் கீழடியைத் தவிர வேறு ஒரு பேசுபொருள் இல்லாமல் போனது. குறிப்பாக, அதன்பிறகு 5ஆம் கட்ட அகழாய்வு முடிந்து இன்னும் முடிவுகள் வெளியிடப்படாத நிலையில், 6ஆம் கட்ட அகழாய்வுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
கீழடியில் அகழாய்வு பணி- புதிதாக 2 மண் பானைகள், மனித மண்டை ஓடு கண்டெடுப்பு.! திருப்புவனம்:
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் யூனியனை சேர்ந்த கீழடியில் தற்போது 6-வது கட்ட அகழாய்வு பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி கீழடி மட்டுமின்றி அதன் அருகே உள்ள கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது.
கீழடியில் ஏற்கனவே தோண்டப்பட்ட குழிகளில் அகழாய்வு பணிகள் நடைபெற்றன. இதில் நேற்று 2 மண் பானைகள் கண்டெடுக்கப்பட்டன. இதுதவிர புதிதாக மீண்டும் ஒரு குழி தோண்டும் பணியும் நடைபெற்றது. கொந்தகையில் நடந்த பணியில் நேற்று புதிதாக மனித மண்டை ஓடு பாகங்கள் கிடைத்துள்ளன. மொத்தம் இதுவரை 12-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டன. ஒவ்வொரு முதுமக்கள் தாழியையும் மாநில தொல்லியல் துறை துணை இயக்குனர் சிவானந்தம் தலைமையில் தொல்லியல் அலுவலர் பாஸ்கரன் உள்ளிட்ட ஆய்வாளர்கள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். இதுவரை 3 முதுமக்கள் தாழிகள் ஆய்வு செய்யப்பட்டு அதன் உள்ளே உள்ள மனித எலும்புகள் மற்றும் சிறிய பொருட்கள் எடுக்கப்பட்டன.
அகரத்தில் கவிழ்ந்த நிலையில் பானை மற்றும் அதன் அருகே உடைந்த நிலையில் மற்றொரு பானை, நத்தை ஓடுகள், சங்குவளையல்கள் உள்பட பல்வேறு பொருட்கள் கிடைத்துள்ளன. மணலூரில் சுடுமண் உலை, மண் திட்டு பகுதி ஆகியவை இருந்தது தெரியவந்தது.
எனவே 4 இடங்களிலும் கூடுதலாக குழிகள் தோண்டி அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது.