விநாயகர் சதுர்த்திக்கு போட்டியாக ஜெபயாத்திரை: மதபோதகர் டேவிட்டுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்
365
UPDATED : செப் 03, 2021
பெ.நா.பாளையம் : கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு போட்டியாக ஜெபயாத்திரை நடத்த அழைப்பு விடுத்த கிறிஸ்துவ மத போதகர் 15 நாள் நீதிமன்ற காவலில் கோபிசெட்டிப்பாளையம் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டார்.
Advertisement
கோவை தடாகம் ரோடு செயின்ட் பால்ஸ் பள்ளி மற்றும் பெண்கள் கலை அறிவியல் கல்லுாரி தலைவர் போதகர் டேவிட். இவரது லெட்டர் பேடில் 'கிறிஸ்துவ சகோதர, சகோதரிகள் போதகர்கள் மிஷனரிகள் மிஷனரி இயக்கங்களின் தலைவர்களுக்கு அன்பு வேண்டுகோள்' என்ற தலைப்பில் அறிவிப்பு சமூக வலை தளங்களில் பரவி வருகிறது.
அதில் செப். 10ம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று கிறிஸ்துவர்கள் வசிக்கும் ஒவ்வொரு ஊரிலும் அவரவர் வாகனங்களில் சென்று ஜெபயாத்திரை நடத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் அதில் அவர் கூறியுள்ளதாவது: கடந்த மூன்று ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தியை விழாவையொட்டி சிறப்பு ஜெப யாத்திரைகள் நடந்தன. இதில் விநாயகர் சதுர்த்திக்கு ஒரிரு நாட்கள் முன்பாக கோவை மாநகரத்துக்கு உட்பட்ட 100 வார்டுகளிலும் வாகனங்களில் அமர்ந்து விக்கிரக வணக்கம் மாற ஜெபித்தோம். கடந்த 2017ல் கோவையில் உள்ள அனைத்து சபை பிரிவுகள் சார்பில் 200 வாகனங்களில் சென்று ஜெபித்தோம். இதேபோல 2018ல் 1000 வாகனங்களில் சென்று ஜெபித்தோம். 2019 விநாயகர் சதுர்த்தியின் போதும் இதேபோல ஜெபித்தோம்.
இதன் விளைவாக கோவை மாவட்ட கலெக்டர் 'அனுமதி இல்லாமல் யாரும் விநாயகர் சிலையை வெளியில் வைக்கக்கூடாது' என்று உத்தரவிட்டார். 'சிலை அளவு இவ்வளவுதான் இருக்க வேண்டும்; கலெக்டர் குறிப்பிடும் வழியாக சென்று குறிப்பிட்ட நேரத்துக்குள் கரைக்க வேண்டும்' உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இவையெல்லாம் நமது மூன்று ஜெபயாத்திரைகளின் விளைவாகத்தான் நடந்தது.
இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி செப். 10ல் வருவதால் அதே நாளோ அல்லது அதற்கு ஒரிரு தினங்கள் முன்பாகவோ இந்த ஜெபயாத்திரை சபைகளில் மிஷனரி பணித்தளங்களில் போதகர்கள், மூப்பர்கள், விசுவாசிகள் வாயிலாக நடத்த விரும்புகிறேன். கொரோனா காலத்தில் இது போன்ற ஜெபயாத்திரை மிகுந்த பலன் அளிக்கும்.இவ்வாறு போதகர் டேவிட் தெரிவித்துள்ளார்.
ஹிந்துக்கள் கொதிப்பு
கொரோனா காரணமாக பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட தமிழக அரசு தடை விதித்துள்ள நிலையில் போதகரின் விஷம அறிவிப்பு பொதுமக்கள் ஹிந்து இயக்கங்கள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.கோவை வடக்கு மாவட்ட ஹிந்து முன்னணி சார்பில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தம்பி சரவணன் மற்றும் நுாற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று துடியலுார் போலீஸ் ஸ்டேஷன் முன்பு கூடி மதமோதல்களை துாண்டும் வகையில் செயல்படும் போதகர் டேவிட்டை கைது செய்ய வேண்டும் என புகார் கொடுத்தனர். போதகரை கைது செய்யப்படாவிட்டால் நாளை (இன்று) காலை 10:00 மணிக்கு கோவை மேட்டுப்பாளையம் ரோடு ஜி.என்.மில்ஸ் பிரிவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக ஹிந்து முன்னணியினர் அறிவித்தனர். சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என துடியலுார் இன்ஸ்பெக்டர் ஞான சேகரன் தெரிவித்தார்.
ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறுகையில் ''விநாயகர் சதுர்த்தியன்று கலவரத்தை உண்டாக்க வேண்டும் என்ற நோக்கில் இது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதை ஹிந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.
தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் பல ஆண்டுகளாக அமைதியாக நடந்து வருகிறது. இப்போது 'போட்டி மத ஊர்வலம்' என்று சொல்லி மதக்கலவரத்தை துாண்டி விடுவது சட்டம் ஒழுங்கிற்கு பெரும் பாதிப்பினை ஏற்படுத்தும். அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த சமீபகாலமாக சில பாதிரியார்கள் இதுபோல பேசி வருகிறார்கள். தமிழக அரசு விழிப்புடன் செயல்பட்டு இதுபோன்ற செயல்களை கடுமையாக ஒடுக்க வேண்டும் என்பதே அமைதி நல்லிணக்கத்தை விரும்புவோரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
நீதிமன்ற காவல்
இந்நிலையில், மதபோதகர் டேவிட்டை, துடியலூர் போலீசார் இன்று (செப்.,2) காலை 5:30 மணியளவில் கைது செய்தனர். தொடர்ந்து, கோவை மாஜீஸ்தரேட் பிரபு முன்னிலையில் அவரை ஆஜர்படுத்தினர். விசாரணை முடிவில், 15 நாள் நீதிமன்ற காவலில் டேவிட்டை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இதனையடுத்து துடியலூர் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் தலைமையிலான போலீசார், அவரை பாதுகாப்புடன் கோபிச்செட்டிப்பாளையம் கிளைச்சிறைக்கு அழைத்து சென்று சிறையில் அடைத்தனர்.