சிவன் திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவன்; காளை வாகனன்; கங்கையைச் சடையில் கொண்டவன்; நெற்றியில் பிறைச் சந்திரனைத் தரித்தவன்; உமையொருபாகன்; நீலகண்டன்; திரிபுரம் எரித்தவன்; முக்கண்ணன்; மழுப்படையை உடையவன்; கொடுகொட்டி, பாண்டுரங்கம், கபாலம் முதலிய கூத்துக்களை ஆடுபவன்” என்பவைகள் சங்க இலக்கியங்களில் குறிக்கப் பட்டுள்ளமையினை இங்கு காண்போம்.
திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவன்
அரும்பெறல் ஆதிரையான் அணிபெற மலர்ந்க . கலி 150 : 20
ஆதிரை முதல்வனின் கிளந்த நாதர் பன்னொருவரும் - பரிபாடல் 8:6-7
காளை வாகனன்
காளை மாட்டை வாகனமாகக் கொண்டு ஊர்ந்து வருவபவன்.
ஊர்தி வால் வெள்ளேறே - புறநானூறு 1 : 3
புங்கவம் ஊர்வோனும் ( புங்கவம்-காளை) - பரிபாடல் 8 , 2
உருவ ஏற்று ஊர்தியான் - கலி 150 : 13
கங்கையினைச் சடையில் வைத்திருப்பவன்
விரி சடைப் பொறை ஊழ்த்து
விழுநிகர் மலர் ஏய்ப்பத்
தனிவுற தாங்கிய தனி
நிலைச் சலதாரி
மணி மிடற்று அண்ணற்கு - பரிபாடல் 9 : 5 - 7
தேறுநீர் சடைக் கரத்து திரிபுரம் தீமடுத்து - கலி : 1 -2
இமைய வில் வாங்கிய ஈர்ஞ்சடை யந்தணன் - கலி: 38 : 1
பிறங்குநீர் சடைக் கரந்தான் ” - கலி 150 : 9
நெற்றியில் பிறைச்சந்திரனைச் சூடியவன்
கொலைவன் சூடிய குழவித் திங்கள் போல - கலி 103 : 15
“ கோடுவாய் கூடாப் பிறையைப் பிறிதொன்று
நாடுவேன் கண்டனென் சிற்றிலுட் கண்டாங்கே
ஆடையான் மூஉ யகப்படுப்பேன் சூடிய
காணான் றிரி தருங்கொல்லோ மணிமிடற்று
மாண்மலர்க் கொன்றையவன் - கலி : 142 : 24-28
புதுத்திங்கள் கண்ணியான் பொற்பூண் ஞான் றன்னநின் - கலித்தொகை 150 : 17
தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்
பிறைநுதல் வண்ணம் ஆகின்று அப்பிறை - புறநானூறு 1 : 8 – 9
கறை மிடற்று அண்ணல் காமர் சென்னிப்
பிறைநுதல் விளங்கும் ஒருகண் போல - புறநானூறு 55 : 4 – 5
உமாதேவியை இடப்பாகத்தில் கொண்டவன்:
உமையமர்ந்து விளங்கும் இமையா முக்கண் - திருமுருகாற்றுப்படை 153
பெண்ணுரு வொருதிறன் ஆகின்றது ; அவ்வுருத்
தன்னுள் அடக்கின் கரக்கினும் கரக்கும் - புறநானூறு 1 : 7-8
நீலகண்டன்
தேவர்களும் - அசுரர்களும் மேருமலையை மத்தாகவும், வாசுகி என்ற பாம்பை நாணாகவும் கொண்டு அமிர்தம் வேண்டிக் கடல்கடைந்த போது, வாசுகி என்ற அந்தப் பாம்பானது வலி பொறுக்க மாட்டாது நஞ்சைத் திரண்டுவரும் அமிர்தத்தில் கக்கி விட்டது. அதுகண்ட தேவர்கள் கலங்கினர். சிவன் அந்த விஷத்தை எடுத்து உண்டான். உமாதேவி அதுகண்டு பயந்து ஓடிப்போய், அவனது கண்டத்தினைப் பிடித்தாள். அதனால் அந்த நஞ்சானது கண்டத்திலேயே நின்றுவிட்டது. இதன் காரணமாக சிவன் நீலகண்டன் என்று பெயர் பெற்றான் என்பது புராணக் கதை.
நீலமணிமிடற்று ஒருவன் போல - புறநானூறு : 91 -6
மறுமிடற்று அண்ணற்கு மாசிலோள் தந்த - பரி பாடல் 8 : 127
மணி மிடற்று அணி போல - கலித்தொகை : 105 , 13
மணிமிடற்று மாண்மலர்க் கொன்றையவன் - கலித்தொகை : 142 : 27-28
கறைமிட றணியலு மணிந் தன்றக் கறை
மறைநவி லந்தணர் நுவலவும் படுமே - புறநானூறு : 1 : 5 - 6
திரிபுரம் எரித்தவன்
பொன், வெள்ளி, இரும்பு ஆகியவற்றால் ஆகிய மதிற் சுவரைக் கொண்ட மூன்று கோட்டை களையுடைய அவுணர்கள் தேவர்களை துன்புறுத்தினர். தேவர்கள் எல்லாம் பிரம்மாவினிடம் சென்று முறையிட, பிரம்மா தேவர்களை கூட்டிக்கொண்டு சிவனிடம் சென்று முறையிட்டான்.
அப்போது சிவன் பூமியை இரதமாகவும், தேவங்களை குதிரைகளாகவும், பிரம்மாவைத் தேரோட்டியாகவும், விஷ்ணுவை அம்பாகவும், மேரு மலையை வில்லாகவும், வாசுகி என்ற பாம்பை நாணாகவும் கொண்டு ஒரே அம்பினால் மூன்று கோட்டைகளையும் தகர்த்து, அவுணர்களையும் அழித்தானென்பது புராணக்கதை. இதுவும் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றது.
ஆதியந்தணனறிந்து பரிகொளுவ
வேதமாபூண் வையத்தேரூர்ந்து
நாகம் நாணா மலை வில்லாக
மூவகை ஆரெயில் ஓரழல் அம்பின்முளிய
மாதிரம் அழவவெய் தமரர் வேள்வி - பரிபாடல் 5 : 22-26
ஓங்குமலைப் பெருவிற்பாம்பு ஞான்கொளீஇ
ஒருகனை கொண்டு மூவெயிலுடற்றிப்
பெருவிற லமரர்க்கு வென்றி தந்த
கறைமிடற்றண்ணல்………” தியந்தணனறிந்து பரிகொளுவ - புறநானூறு 55 : 1-4
மூன்று கண்களை உடையவன்
முக்கட் செல்வர் நகர்வலம் செயற்கே - புறநானூறு 6 : 18
உமையமர்ந்து விளங்கும் இமையா முக்கண்- திருமுருகாற்றுப்படை 153
மிக்கொளிர் தாழ்சடை மேவரும் பிறைநுதன்
முக்கண்ணா னுருவேபோன் - கலித்தொகை 104 : 11-12
இது மட்டுமல்லாமல் கலித்தொகை என்னும் சங்க இலக்கிய நூலுக்குக் கடவுள் வாழ்த்தாகக் கூறப்பட்ட பாட்டில் சிவன் ஆடியதாகக் கூறப்படும் கொடுகொட்டி, பாண்டரங்கம், கபாலம் ஆகிய கூத்துக்கள் கூறப்பட்டு உள்ளன.
கொடு கொட்டி- இது சிவன் உலகை எல்லாம் அழித்து நின்று கை கொட்டி ஆடும் கூத்தாகும்.
படுபறை பல வியம்பப் பல்லுருவம் பெயர்த்து நீ
கொடுகொட்டி யாடுங் காற் கொடுய ரகல் குறிக்
கொடிபுரை நுசுப்பினாள் கொண்ட சீா தருவாளோ - கலித்தொகை ; கடவுள் வாழ்த்து 5:7
பாண்டரங்கம் கூத்தாடல்- இது சிவன் திரிபுரங்களையும் அழித்து நின்று, எரிந்த சாம்பலைப் பூசிக்கொண்டு ஆடிய கூத்தாகும்.
மண்டமர் பல கடந்து மதுகையானீறணிந்து
பண்டரங்கம் ஆடுங்காற்பணை யெழி லணைமென்றோள்
வண்டரற்றுங் கூந்தலாள் வளர் தூக்குத் தருவாளோ- கலித்தொகை ; கடவுள் வாழ்த்து 8 -10
கபாலக் கூத்தாடல் - இது சிவன் எல்லாவற்றையும் அழித்து மண்டையோட்டைக் கையில் ஏந்தி அடிய கூத்தாகும்.
கொலையுழுவைத் தோலைசக்இக் கொன்றைத்தார் சுவற்புரளத்
தலையங்கை கொண்டு நீ காபால மாடுங்காண்
முலையணிந்த முறுவலான் முற்பாணி தருவாளோ - கலித்தொகை ; கடவுள் வாழ்த்து 11 – 13