New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பரிமேலழகரின் பருந்துப் பார்வை


Guru

Status: Offline
Posts: 24778
Date:
பரிமேலழகரின் பருந்துப் பார்வை
Permalink  
 


 பரிமேலழகரின் பருந்துப் பார்வை புலவர் முனைவர் கோ.சுந்தராம்பாள் May 1, 2020

முன்னுரை :

திருக்குறளுக்கு உரைகாண்பதில் இருவகை நெறிகள் பின்பற்றப்படுவதாகத் தெரிகிறது. ஒன்று நூல் முழுமையையும் ஓரலகாகக் கொண்டு உரை காண்பது. ஆயிரத்து முந்நூற்றுப் முப்பது குறட்பாக்களையும் தனித்தனிக் குறட்பாக்களாகக் கொண்டு (உதிரிப்பூக்கள்போல) உரை காண்பது மற்றொன்று. மரபுசார்ந்த உரையாசிரியர் எவரும் பிந்தைய நெறியைப் பின்பற்றியதாகத் தெரியவில்லை. திருக்குறள் தனிப்பாடல்களின் தொகுப்பன்று என்பதால் திருக்குறளை ஓரலகாகக் கொண்டே உரை காணவேண்டும் என்னும் கொள்கையை உடையவர் அழகர். அதாவது ஏதாவது ஒரு குறட்பாவை எடுத்துக் கையில் வைத்துக் கொண்டு தம் அறிவுக்கும் கருத்திற்கும் கொள்கைக்கும் மொழிப்புலமைக்கும் ஏற்ப உரைசொல்லித் தமக்குத் தாமே மகிழ்ந்து பாராட்டிக் கொள்ளும் உரைக் கொள்கை அழகருக்கு உடன்பாடன்று. ‘திருக்குறள்’ என்னும் தொடரியில் (சங்கிலியில்) 1330 கண்ணிகள் இருக்கின்றன என்பதே அழகர் நோக்கு. இதனை உறுதி செய்வதற்குப் பல சான்றுகளைக் காட்ட இயலும். அளவு கருதியும் படிப்பார் காலம் கருதியும் சுருக்கமாக ஒன்றினைக் காணலாம்.

ஆய்வுத் தலைப்பு

‘பரிமேலழகரின் பருந்துப் பார்வை’ என்னுந் தலைப்பில் இவ்வாய்வு நிகழ்த்தப் பெறுகிறது.

ஆய்வுக்களமும் எல்லையும்

“படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு” 1

என்னும் குறட்பாவும் அதற்கான பரிமேலழகர் உரைப்பகுதி மட்டுமே இவ்வாய்வுக்கான களமும் எல்லையுமாகக் கொள்ளப்படுகிறது.

ஆய்வு நோக்கம்

மூலநூலில் ஒரு குறிப்பிட்ட குறட்பாவில் பதிவு செய்யப்பட்டிருக்கும் உறுப்புக்களின் நிரலுக்கான காரணத்தைக் கண்டறிவதில் உரையாசிரியர் ஒருவருக்குள்ள பொறுப்புணர்வைப் பரிமேலழகர் உரைவழி அறிவதையே இக்கட்டுரை தனது தலையாய நோக்கமாகக் கொண்டு அமைகிறது.

ஆய்வுப் பயன்

ஆழம், வலிமை கொண்ட அடிப்படைத் தரவுகள் ஏதுமின்றி தமிழிலக்கிய ஆய்வுலகத்தால் பெரிதும் புறக்கணிப்புக்கு ஆளாகியிருக்கும் அழகரின் உரைத்திறனை இனிவரும் தமிழ்த் தலைமுறையாவது அவருடைய திருக்குறள் உரைவழி உணர்ந்து மகிழ வேண்டும் என்பதையே இக்கட்டுரை தனது பயனாகக் கருதுகிறது.

கட்டுரை அமைப்பு

1. குறட்பாக்கள் தனிப்பாக்களா?
2. திருக்குறள் ஓரலகா?
3. காமத்துப்பாலின் கதி
4. பரிமேலழகரின் பருந்துப் பார்வை

என்னும் குறுந்தலைப்புக்களில் இக்கட்டுரை வடிவமைக்கப்படுகிறது.

1. குறட்பாக்கள் தனிப்பாக்களா?

யாப்பியல் அடிப்படையில் பாக்களில் மிகக் குறுகிய வடிவம் கொண்டது குறள் வெண்பா. ‘திருக்குறள்’ என்பது அடையடுத்த ஆகுபெயராய்த் திருக்குறள் என்னும் நூலுக்குப் பெயராகி நிற்கிறது. நூல் என்ற அளவில் பால், இயல், அதிகாரம் என்னும் பகுப்புக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. திருக்குறளின் இந்தப் பகுப்பே அதன் உள்ளடக்க உணர்நெறியையும் உரைகாண் நெறியையும் தீர்மானிக்கிறது. அதாவது இந்தப் பகுப்புக்குள் வரும் குறட்பாக்கள் தங்களுடைய பகுப்புக்கான அடிப்படைப் பொருளையே தங்களது மையக்கருத்துக்களாகக் கொண்டிருக்கின்றன என்பது பெறப்படும். சான்றாக

“உணர்வ துடையார்முன் சொல்லல் வளர்வதன்
பாத்தியுள் நீர்சொரிந் தற்று” 2
என்பது ‘அவையறிதல்’ என்னும் அதிகாரத்தில் அமைந்துள்ள பத்துக் குறட்பாக்களில் ஒன்று. இவ்வதிகாரப் பொருண்மையை அழகர்,

1. அவையறிந்து சொல்லுதல்

2. அவையறியாக்கால் வரும் குற்றம்

3. அவையளவு அறிந்தார் செய்யும் திறம்

4. மிக்கார் அவைக்கண் செய்யும் திறம்

5. அவையிழுக்கால் வரும் குற்றம்

6. ஒத்தார் அவையில் மட்டும் பேசுதல்

7. தாழ்ந்தார் அவைக்கண் எதுவும் பேசாமை

என ஏழு உட்பிரிவுக்குள் கொண்டு வருகிறார். இந்தப் பகுப்பில் மற்றவை ஒரு பக்கம் இருப்பினும் இறுதி நான்கு குறட்பாக்களை இரண்டு பொருண்மைகளை விளக்குவதாக அழகர் கருதுகிறார். ஒன்று ஒத்தார் அவையில் மட்டுமே பேசுதல் வேண்டும். தாழ்ந்தார் அவையில் வாயே திறக்கக்கூடாது. இவற்றுள் 717, 718 ஆகிய இரண்டு குறட்பாக்களையும் ஒத்தார் அவையில் மட்டுமே பேசவேண்டும் என்பதை வலியுறுத்துவதாக அமைந்துள்ளது எனக் கருதி அவற்றுள் மேலே காட்டிய குறட்பாவிற்குப்,

“பிறர் உணர்த்தலின்றிப் பொருள்களைத் தாமே உணரவல்ல அறிவினையுடையவர் அவைக்கண், கற்றார் ஒன்றனைச் சொல்லுதல்; தானே வளர்வதொரு பயிர் நின்ற பாத்திக்கண் நீரினைச் சொரிந்தாற்போலும்” 3

என்று பொழிப்பெழுதிக் காட்டுகிறவர், பத்து குறட்பாக்களையம் எழு கருத்துக்களுக்கானவை எனக் கொள்கிறார். இந்த ஏழு கருத்துக்களும் ஒன்றையொன்று நோக்கியவை. தழுவியவை. ஒரே நிகழ்வின்கண் கடைப்பிடிக்க வேண்டியவை. இத்தகைய பன்முகப் பொருண்மையோடு தொடர்புடைய இக்குறட்பாவைத் தனியாகக் கொண்டு உரைகண்டால் ஏதோ வழியிற் கண்ட ஒருவனோடு உரையாடுவதைப் பற்றி வள்ளுவர் சொல்லுவதாகக் கருதுவதற்கு வாய்ப்புண்டு. அங்ஙனம் உரைகண்டால் குறட்பாவின் பொருளாழம் புலப்படாது, முன்னும் பின்னுமான கருத்துக்கள் அதனை அணிசெய்யாது. அதிகாரத்தின் மற்ற குறட்பாக்கள் உணர்த்தும் பொருட்களைப் பிரித்தறிய இயலாது. ‘அவையறிதல்’ என்பது அவை கூடும் கட்டடத்தை அறிவதன்றி, அவையில் அமர்ந்துள்ள சான்றோர்களின் பெருமையையும் நிலையையும் தன்மையையும் அறிந்து நடந்துகொள்ள வேண்டிய முறைமையையும் பற்றியது என்னும் பொருண்மை வெளிப்படுதற்கு வாய்ப்பின்றிப் போய்விடும் என்பது அறிதல் வேண்டும்.

1.1 திருக்குறள் சிக்கலுக்குக் காரணம்

இந்நாள் வரை திருக்குறளில் உரைச் சிக்கல் எழுந்தமைக்கான காரணங்களுள் தலையாயது அதனை உதிர்ப்பூக்களாகக் கொண்டு உரை சொன்னதுதான். திருக்குறள் திட்டமிட்டுக் கட்டமைக்கப்பட்ட நூல் என்பதையும் சங்க இலக்கியம் போலத் தொகுப்பு நூல் அல்ல என்பதையும் புரிந்து கொண்டாலொழிய இந்நிலை தொடரவே செய்யும். சொல்லுக்குள் எழுத்துப் போலத் திருக்குறளில் குறுட்பாக்கள். தனியலகாகக் கொண்டு உரை சொல்லக்கூடாது என்பதன்று. அவ்வாறு சொல்கிறபோது சொல்வார் கருத்தினும் அதிகாரம், இயல், பால் ஆகியவை கவனத்திற் கொள்ளப்பட வேண்டும் என்பது கருத்து. திருக்குறள் பொருட்பால் கருத்துக்களைத் தனிமனிதனுக்கு வள்ளுவர் சொன்னதாகக் கொண்டு உரைசொல்லப்புகின் தோன்றும் உரைமயக்கம் களையமுடியாத மயக்கமாகிவிடும்.

2. ஓரலகாகக் கொள்வதால் உண்டாகும் பயன்கள்

திருக்குறளை ஒரே அலகாகக் கொண்டு உரை காண்பதால் பல சிறப்புக்களை அறிந்து கொள்ள முடிவதோடு எந்தப் புள்ளியிலும் முரணில்லாத நூலின் ஆற்றொழுக்கு அமைப்பு புலப்படும். கூறியது கூறலுக்கான காரணம் புலப்பட்டு அது அனுவாதமாக அமைந்துவிடும். இயலுக்கு இயலும் பாலுக்குப் பாலும் அதிகாரத்திற்கு அதிகாரமும் குறட்பாவிற்குக் குறட்பாவும் தம்முள் இயைந்து நிற்கும் கட்டுமானச் சிறப்பு புலனாகும். இவற்றுள் சிலவற்றை அழகர் உரையடிப்படையில் நிறுவவும் முடியும்.
1. ‘மங்கலம் என்ப மனைமாட்சி’ 4 என்னும் குறட்பாவைப் பின்வரும் அதிகாரத்தோடு ஒப்பு நோக்கிய அழகர் முன்னதிகார இறுதிப்பாவிற்கும் பின்னதிகாரப் பொருண்மைக்கும் இயைபு கூறுவான் “வாழ்க்கைத் துணைக்கு ஆவதோர் அணிநலம் கூறி வருகின்ற அதிகாரத்திற்குத் தோற்றுவாய் கூறப்பட்டது” 5 என்று கூறமுடிகிறது.
2. ‘பணிவுடையன் இன்சொலன்’6 என்னும் குறட்பாவுரையில் ‘இம்மைப்பயனையும்’7 “அல்லவை தேய அறம் பெருகும்”8 என்னும் குறட்பாவுரையில் ‘மறுமைப் பயனையும்’9 கூறுவதற்கு ஓரலகு உரை நெறியே உதவுகிறது.
3. ‘உண்மை அறிவே மிகும்’10 என்பதற்கும் ‘கற்றனைத்தூறும் அறிவு’ 11 என்பதற்குமான முரணை “இஃது ஊழ் மாறு கொள்ளாவழியாகலின் மேல் ‘உண்மையறிவே மிகும்’ (குறள்.373) என்றதனோடு மலையாமை அறிக” 12 என்னும் அழகர் விளக்கம் களைகிறது.
4. ‘அறத்தினூங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு’ 13 என முன்னர்க் கூறிப் பின்னர் ‘அறத்தினூங்கு ஆக்கமும் இல்லை” 14 என்பது கூறியது கூறல் ஆகாது அநுமதித்தலானது என்பதை ‘அதனால் (மறத்தலால்) கேடு வருதற் கூறுதல் பயன் நோக்கி’ 15 என்னும் உரையால் அறியலாம். காட்டுக்கள் விரிக்கின் பெருகும்.

3. காமத்துப்பாலின் கட்டமைப்பு

திருக்குறளை உதிரிப்பூக்களாகக் கொள்வதால் பெரிதும் பாதிப்புக்கு ஆளாவது காமத்துப்பாலே. நேரடியாகத் தமது கருத்துக்களைச் சொல்வதைக் ‘கயமை’ என்னும் அதிகாரத்தோடு நிறைவு செய்து கொள்ளும் திருவள்ளுவர் காமத்துப்பாலின் கட்டமைப்பை அகப்பொருள் மரபிற்கிணங்க நாடகப் பாங்கில் அமைத்துக் கொள்கிறார். அதனுள் அமைந்த இருநூற்று ஐம்பது குறட்பாக்களில் ஒன்றுகூட ஆசிரியர் கூற்றாக இல்லை என்பதைப் புரிந்து கொண்டால் திருக்குறளை உதிரிப்பூக்களாகக் கொள்வதால் உண்டாகும் பொருளிடர் புரியக்கூடும். அகப்பொருள் மாந்தருள் தலைமகன், தலைமகள், தோழி என்னும் மூவர் கூற்றாகவே காமத்துப்பால் கட்டமைக்கப்பட்டுள்ளது. எனவே தொட்டதற்கெல்லாம் திருவள்ளுவர் கூறினார் என்னும் முனைப்புடையார் காமத்துப்பாலை அங்ஙனம் அவ்வளவு எளிதாக பயன்படுத்திக் கொள்ள இயலாது.

3.1 கற்பனைக்கும் எட்டாத குழப்பம்

காமத்துப்பால் பதிவுகளைத் திருவள்ளுவர் கூறியதாகக் கொண்டு பொருள் காண முற்படின் உண்டாகும் ஏதம் பலவாம். எள்ளலும் பலவாம். என்னை?,

“அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும்என் நெஞ்சு!” 16

என்று திருவள்ளுவரைத் தலைமகனாக்க வேண்டி வரும்.

“நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்
அஞ்சுதும் வேபாக்கு அறிந்து” 17

வள்ளுவர் ஆணா பெண்ணா என்னும் ஐயம் ஏற்படாதா?

“துனியும் புலவியும் இல்லாயின் காமம்
கனியும் கருக்காயும் அற்று” 18

என்று திருவள்ளுவர் சொன்னால் சுவைக்குமா? தலைமகன் சொல்லக் கேட்டால் இனிக்குமா?

“வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினீர் என்று” 19

என்பது வள்ளுவருக்கும் வாசுகிக்கும் பொருந்தினாலும் சுவைக்காதல்லவா? திருக்குறளை ஓரலகாகக் கொண்டு அதன் உள்ளடக்கத்தை அதிகாரம், இயல் மற்றும் பால் பகுப்புப் பொருண்மைக்கேற்ப உரை கண்டால் இத்தகைய சிக்கல்களோ குழப்பங்களோ வர வாய்ப்பில்லை. திருக்குறளின் பெருமையும் திருவள்ளுவரின் பெருமையும் ஒருசேரக் காக்கப்படும். அகத்திணை உணர்வு பிறர்க்குப் புலப்படுமாறு வெளிப்படுவதில்லை. அதனாலேயே அது அகம் எனப்படும் என்னும் நுண்ணியம் திருவள்ளுவர் அறிந்ததால்தான் முதலிரண்டு பால்களை ஆசிரியர் கூற்றாகவும் காமத்துப்பாலை தலைமக்கள் கூற்றாகவும் வடிவைமைத்தார் என்பதாம்.

“ஒத்த அன்பால் ஒருவனும் ஒருத்தியும் கூடுகின்ற காலத்துப் பிறந்த பேரின்பம் அக்கூட்டத்தின் பின்னர் அவ்விருவரும் ஒருவருக்கொருவர் தத்தமக்குப் புலனாக இவ்வாறு இருந்தது எனக் கூறப்படாததாய் யாண்டும் உள்ளத்துணர்வே நுகர்ந்து இன்பமுறுவது ஒரு பொருள் ஆதலின் அதனை அகம் என்றார். எனவே அகத்தே நிகழ்கின்ற இன்பத்திற்கு அகம் என்பது ஒரு ஆகுபெயராம்” 20

என்னும் நச்சினார்க்கினியரின் விளக்கத்தை நோக்கினால் தலைமக்களுக்கே மீளக் கொணர முடியாததோர் உணர்வு படைப்பாளனாகிய திருவள்ளுவருக்கு எப்படிக் கொணரவியலும் என்பது புலனாகலாம். எனவேதான் காமத்துப்பாலில் வெளிப்படுத்தப்பட்டிருக்கும் காதலுணர்வு தலைமக்களுக்கு உரியதேயன்றித் திருவள்ளுவருக்கு உரியதன்று. அவ்வுணர்வு வெளிப்பாட்டில் ஏதேனும் ஐயம் தோன்றின் காமத்துப்பால் தலைமக்களை வினவ முடியாது என்பது நுண்ணியம். சங்க இலக்கிய அகப்பாடல்களைப் பாடிய சான்றோர் அனைவரும் தாமே நேரடியாக உணர்ச்சிகளை வெளிப்படுத்தாது அகப்பொருள் மாந்தர் கூற்றுவழி வெளிப்படுத்தியிருப்பதும் இது பற்றியே. ‘சுட்டி ஒருவர் பெயர் கொளப்பெறாஅர்’ என்னும் விதியை அவர்கள் புரிந்து கொண்ட பாங்கு இத்தகையது. பெயருக்கே உரிமையில்லை என்னும்போது உணர்வுக்கு உரிமை கோர இயலுமா?




__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

4. பரிமேலழகரின் பருந்துப் பார்வை

அடிப்படைக் கட்டமைப்பில் கவனம் செலுத்தும் பெரிய நிறுவனமொன்றின் மேலாண் அலுவலரைப் போலத் திருக்குறளுக்கு உரைகண்டவர் அழகர். ஒருபக்கம் நிரலாகப் படித்துக் கொண்டே வர மறுபக்கம் உரையெழுதிக் கொண்டே போகும் பொழுதுபோக்கு அவர் அறியாதது. பொறுமை, கவனம், நிதானம், பரந்த புலமை, ஆழ்ந்த சிந்தனை, பொறுப்புணர்வு முதலிய உயரிய பண்புகளை அவர் இயல்பாகக் கொண்டிருந்ததால் அவர் உரையில் முரண்பாடு என்பது சிறிதும் கிடையாது என்பதை யாரும் மறுக்கவியலாது. திருக்குறளை ஓரலகாகக் கொண்டு நோக்கி உரையெழுதிய காரணத்தால் அழகரால் குறளும், குறட்பாக்களால் அழகரும் பெருமையுற்ற பாங்கு பின்வரும் ஆய்வுப்பகுதியால் ஓரளவு துலக்கமுறக்கூடும்.

4.1 அங்க நிரலும் அழகர் அறிந்த நிரலும்

இறைமாட்சி என்னும் அதிகாரத்தின் முதற்குறட்பா இப்படி அமைகிறது.

“படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு” 21

குறட்பாவில் சொல்லப்பட்ட ஆறு உறுப்புக்களையும் (ஒன்றிலும் குறைவில்லாமல்) உடையவன் அரசருள் அரிமாவாகத் திகழ்வான்” என்பது குறட்பாவின் உள்ளடக்கம். இந்த உள்ளடக்கத்தை எழுதிவிட்டுப் பேசாமல் அழகர் சென்றிருக்கலாம். குறட்பாவில் உள்ள உறுப்புக்களின் (அங்கங்களின்) நிரலை அவர் நோக்குகிறார். அந்த நிரல் அவர்க்கு உடன்பாடில்லை. ‘அமைச்சு, நாடு, அரண், பொருள், படை, நட்பு’ என்ற நிரலில்தான் (ORDER) அமைந்திருக்க வேண்டும். ‘மாறி அமைந்திருக்கிறதே’ என்று சிந்திக்கிறார். அதனால்,

“அமைச்சு நாடு அரண் பொருள் படை நட்பு என்பதே முறையாயினும் செய்யுள் நோக்கிப் பிறழ வைத்தார்” 22

என்று குறட்பாவின் நிரல் மாறியிருப்பதற்கான காரணத்தைக் கண்டறிந்து பதிவிடுகிறார். செய்யுள் நோக்கிப் பிறழ்தல் என்றால் என்ன? ஒன்றுமில்லை. எதுகைச் சுவை. ‘உடையான் அரசருள் ஏறு’ எனப் பின்னடியில் அமைவதால் ‘உடை’ என்பதற்கேற்பப் ‘படை’ என முதலடியின் முதற்சீரை அடிஎதுகையாக அமைத்தார் என்பது அழகர் கருத்து. மேலும்,

“படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு”

என்னும் கட்டுமானமே வெண்பா யாப்பு நெறி காத்து நிற்கிறது என்பதுமாம். செய்யுள் நோக்கி என்பது யாப்பினையும் உள்ளடக்கியதாதலின். இதனால் ‘உடையான்’ என்னும் ஈற்றடி முதற் சொல்லோடு இயையுமாறு இறையுறுப்புக்களில் படைதவிர்த்த வேறு ஏதேனும் ஒன்றினை முதலடியின் தொடக்கச் சீராக அமைத்துக் குறள் வெண்பாவின் கட்டுமானத்தைக் காக்க இயலாது என்னும் யாப்புண்மையையும் அழகர் அறிந்திருக்கிறார் எனவும் கருதமுடியும். இனி,

“அமைச்சு நாடு அரண் பொருள் படை நட்பு என்பதே முறை” 23

என்னும் அழகர் கூற்றுக்குச் சான்று எங்கே இருக்கிறது? குறளிலேயே இருக்கிறது. திருக்குறள் உரைக்களத்தில் ஏனைய உரையாசிரியர் அனைவரையும் புறமுதுகிட்டு ஓடச் செய்கின்ற இடங்களில் இதுவும் ஒன்றாகத் திகழ்கிறது.

1. 64 ஆம் அதிகாரத்திலிருந்து 73 ஆம் அதிகாரம் முடிய பத்து அதிகாரங்கள் அமைச்சு பற்றியும், (அமைச்சு)

2. 74 ஆம் அதிகாரம் நாடு பற்றியும் (நாடு)

3. 75 ஆம் அதிகாரம் அரண் பற்றியும் (அரண்)

4. 76 ஆம் அதிகாரம் பொருள் பற்றியும் (பொருள்)

5. 77, 78 ஆகிய இரண்டு அதிகாரங்களும் படைமாட்சி பற்றியும் (படை)

6. 79 முதல் 95 வரையிலான பதினேழு அதிகாரங்கள் நட்பு பற்றியும் (நட்பு)

திருக்குறளில் ஆராயப்படுகின்றன. இந்த அமைப்பு திருவள்ளுவரால் அமைக்கப்பட்டது. அழகரால் அமைக்கப்பட்டதன்று. இந்த அதிகார நிரலை நோக்கிய பின்பே 381வது குறட்பாவிற்கு உரையெழுதுகிறார். எழுதவே குறட்பாவில் கண்ட வைப்புமுறை நிரலுக்குப் பொருத்தமான அமைதி கூற முடிகிறது. இத்தகைய நிரலமைதியை மற்ற உரைகளில் காண்பது அரிது.

இதனால் முப்பத்தொன்பதாம் அதிகாரத்தின் முதற்குறளின் முதலடியின் தொடை அமைப்பு ‘செய்யுளுக்காகத்தான் செய்யப்பட்டது’ என்னும் தனது கருத்தினை அதற்குப் பின்னாலே அமைந்திருக்கும் இருபத்து நான்கு அதிகாரங்களைத் தாண்டித் தொடர்ந்து அமைந்த முப்பத்திரண்டு அதிகாரங்களையும் உற்று நோக்கிக் கண்டறிந்து உறுதி செய்திருக்கிறார் அழகர் என்பதை அறியலாம்.

இன்னும் தெளிவாகச் சொன்னால் முப்பத்தொன்பதாவது அதிகாரத்தின் முதற் குறட்பாவின் தொடையமைப்புக் கட்டுமானத்திற்குத் தான் சொல்லும் காரணத்தை நிலைநாட்டுதற்குரிய தரவுகளை, இருபத்தைந்து அதிகாரங்கள் பின்னாலே சென்று அங்கிருந்து தொடர்ந்து தேடித் தந்திருக்கிறார் அழகர். பருந்து தன் ‘இரைக்காக’ மேலிருந்து கீழ் நோக்கிப் பாயும்! அழகர் தன் ‘உரைக்காக’ அப்படிப் பாய்ந்திருக்கிறார் (படித்திருக்கிறார்).

நிறைவுரை

நூற்பொருள் தெளிவு, சொற்பொருள் தெளிவு, இலக்கியச்சுவை, இலக்கண நுட்பம், உரைநடைத் திட்பம், வெளிப்பாட்டு உத்தி, சொற்சுருக்கம் என்னும் பன்முகச் சிறப்பு வாய்ந்த பரிமேலழகரின் திருக்குறள் உரை தமிழியல் உலகத்தின் புறக்கணிப்புக்கு ஆளாகியிருப்பது தமிழ்ப் புலமையை நிறைவு செய்ய உதவாது என்பதும் (மறுதலையாக) அதனைத் திட்டமிட்டு நிரலாக ஓதுதல் மேற்சொன்ன திறன்களைப் பெற ஏதுவாகும் என்பதும் திருக்குறளை உதிரிப்பூக்களாகக் கொள்வது பல உரைச்சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என்பதும் காமத்துப்பால் பொருண்மை பெருங்குழப்பத்துள் மூழ்கிவிடும் என்பதும் திருக்குறள் பனுவலை ஓரே அலகாகக் கொள்வதால் விளையும் நன்மைகள் பல என்பதும் அத்தகைய நெறியைப் பின்பற்றிய அழகர் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட ‘படைகுடி’ என்னும் குறளுக்கு எழுதிக்காட்டிய உரைச்சிறப்பு வியப்புக்குரியது என்பதும் விளக்கப்பட்டுத், தொல்காப்பியம், சங்க இலக்கியம், திருக்குறள் என்பவற்றின் அடிப்படையில் அமையும் த்மிழ்ப்புலமை, பரிமேலழகர் உரைப்புலமை இன்றிச் செறிவோ சீர்மையோ பெறாது என உறுதியுடன் முன்னெடுத்து இக்கட்டுரை தன்னை நிறைவுசெய்து கொள்கிறது.

சான்றெண் விளக்கம்

1. திருவள்ளுவர் திருக்குறள் கு.எண். 381

2. மேலது கு.எண். 718

3. பரிமேலழகர் மேலது உரை

4. திருவள்ளுவர் திருக்குறள் கு.எண். 60

5. பரிமேலழகர் மேலது உரை

6. மேலது கு.எண். 95

7. மேலது கு.எண். 96



8. திருவள்ளுவர் திருக்குறள் கு.எண். 96

9. பரிமேலழகர் மேலது உரை

10. திருவள்ளுவர் திருக்குறள் கு.எண். 373

11. மேலது கு.எண். 396

12. பரிமேலழகர் மேலது உரை

13. திருவள்ளுவர் திருக்குறள் கு.எண். 31

14. மேலது கு.எண். 32

15. பரிமேலழகர் மேலது உரை கு.எண். 32

16. திருவள்ளுவர் திருக்குறள் கு.எண். 1081

17. மேலது கு.எண். 1128

18. மேலது கு.எண். 1306

19. மேலது கு.எண். 1317

20. நச்சினார்க்கினியர் தொல்.பொருள்.அகம்.உரை நூ.எண். 1

21. திருவள்ளுவர் திருக்குறள் கு.எண். 381

22. பரிமேலழகர் மேலது உரை

23. மேலது

துணைநூற் பட்டியல்

1. நச்சினார்க்கினியர்
தொல்காப்பியம் பொருளதிகார உரை
தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம், சென்னை.
மறுபதிப்பு – 1967

2. திருக்குறள் பரிமேலழகர் உரை
வை.மு.கோபால கிருஷ்ணமாச்சாரியார் அவர்கள் எழுதிய குறிப்புரையுடன்
உமா பதிப்பகம், சென்னை – 600 001.
முதற்பதிப்பு – 2009

3. எஸ்.வையாபுரிப்பிள்ளை
தமிழ்ச்சுடர் மணிகள்
குமரி மலர்க் காரியாலயம்
தேனாம்பேட்டை, சென்னை – 600 018.
முதற்பதிப்பு – 1949

4. புலவர் ச.சீனிவாசன்,
திருக்குறள் பரிமேலழகர் உரை அகர நிரல்
மெய்யப்பன் தமிழாய்வு மையம்,
53, புதுத்தெரு, சிதம்பரம் – 608 001.
முதற்பதிப்பு 2002

5. முனைவர் நா.பாலுசாமி
பன்முகப் பார்வையில் பரிமேலழகர்
அன்னம், நிர்மலா நகர், தஞ்சை – 613 007.
முதற்பதிப்பு – 2005

6. மு.வை.அரவிந்தன்
உரையாசிரியர்கள்
8/7 சிங்கர் தெரு,
பாரிமுனை, சென்னை – 600 108.
முதற்பதிப்பு – 1968

ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):
1. பரந்துபட்ட களத்தில் விரிந்த நிலையில் செய்யப்படும் ஆய்வுகளைவிட, குறிப்பிட்ட சிறிய களத்தில் நிகழ்த்தப்படும் நுண்ணாய்வுகள் சிறக்கும். மறைமலையடிகளாரின் ‘முல்லைப்பாட்டாராய்ச்சி’ அறிஞர் வே.வேங்கடராசுலு செட்டியார் எழுதிய ‘புனையா ஓவியம்’ அறிஞர் மு.வ. அவர்களின் ‘ஓவச்செய்தி’ ‘கொங்கு தேர்வாழ்க்கை’ முதலியன இக்கூற்றை உறுதிசெய்யக் கூடும். இக்கட்டுரை அத்தகையது!.

2. ‘பொருளுக்கேற்ற மொழி நடை’ என்பது உரைநடைக்கானது. ‘பொருளுக்கேற்ற யாப்பு’ என்பது கவிதைக்கானது. இக்கட்டுரையின் மொழிநடை பொருண்மைக்கேற்ப அமைந்துள்ளது சிறப்பு.

3. குறட்பாக்களை ‘உதிரிப்பூக்களாகக்’ கொள்வதால் ஏற்படும் ‘பொருள்’ இழப்புகளைச் சில சான்றுகளுடன் கட்டுரையாளர் நிறுவியிருப்பது நேர்முகமாகவோ எதிர்முகமாகவோ மேலும் சில தொடராய்வுகளுக்கு வழிவகுக்கக் கூடும். வழிவகுக்க வேண்டும். ஆய்வு ஒரு தொடரோட்டம்’ என்பார் அறிஞர் தமிழண்ணல்.

4. காமத்துப்பாலின் நாடகப் பாங்கு குறித்து ஆய்வாளர் தரும் விளக்கம் நுட்பமானது. மரபு சான்றது. ஏனைய இரண்டு பால்களும் நூலாசிரியரின் கருத்துகளால் நிரம்ப, காமத்துப்பால் அகத்துறை மாந்தர்களின் உணர்வுகளால் நிரம்பி வழிகிறது. இதற்கு ஆசிரியர் நச்சினார்க்கினியரின் அகத்திணையியல் உரைவிளக்கத்தைத் துணையாக்கிக் கொண்டிருப்பது இவர்தம் ஆய்வுத் திறனுக்குச் சான்று.

5. திருக்குறளை ஓரலகாகக் கொள்வதால் உண்டாகும் நன்மைகளை உறுதிப்படுத்த கட்டுரையாளர் அழகர் உரையிலிருந்து காட்டியிருக்கும் சான்றுகள் போற்றத்தகுந்தவை. குறிப்பாக ‘அனுவாதம்’ பற்றிய பதிவு, கட்டுரையாளரின் ‘நுண்ணியம் அளக்கும் கோலாக’ அமைந்திருக்கிறது.

6. பின்னால் நிற்கும் அதிகாரப் பொருண்மைகள் அத்தனையையும் நோக்கியபின் ‘செய்யுள் நோக்கிப் பிறழவைத்தார்’ என்னும் அழகரின் ‘ஒரு தொடர் (தொடை) அமைதி’ அவருடைய உரைக்கோட்பாட்டையும் பொறுப்புணர்வையும் ஒருங்கே சுட்டுகிறது. ‘திருக்குறள் ஓரலகு முறை உரை’ என்னும் கருதுகோளுக்குப் பொருத்தமான குறளுரையைத் தெரிவு செய்திருப்பது ஆய்வாளரின் உழைப்பைக் காட்டுகிறது.

7. எதையெதையோ இலக்கியம் எனக் கருதி மயங்கும் தமிழியல் உலகம் இலக்கியத்தின் எலலாக் கூறுகளையும் தன்னகத்தே கொண்டு விளங்கும் அழகர் உரையைக் கற்றறியாமல் போனதால் ஏற்பட்டிருக்கும் புலமை இழப்பு இனியும் தொடர்தலாகாது எனக் கட்டுரையின் பயனாகக் கூறியிருப்பது கவனத்திற்குரியது.

8. ஆய்வுக்கான கருதுகோள், நோக்கம், களம், எல்லை, நெறி முதலியவற்றை ஆய்வேட்டுச் சுருக்கம் (SYNOPSIS) போலல்லாது மேற்கண்ட அனைத்தும் அடங்க, சுருக்கமாக ஒரே பத்தியில் கூறுவது கட்டுரையின் புறக்கட்டுமானத்தை இன்னும் செறிவாக்கும்.

9. “ஒரு சாதாரண உரையாசிரியர் ‘படைகுடி’ (381) எனத் திருவள்ளுவரே நிரலாகச் சொல்லிவிட்டதால் ‘பின்னாலே உள்ள அதிகார வைப்புமுறையே தவறு’ என்று இவரே அனைத்து அதிகாரங்களையும் மாற்றியமைத்து ‘இதுதான் வள்ளுவர் கருதியமைத்தது’ எனச் சாதித்திருக்கக்கூடும். என்று ஆய்வாளர் குறிப்பிடாமல் போனது பண்பாடு கருதி போலும்!

இத்தகைய உள்ளடக்க ஆய்வுகள் மனத்திற்கு அமைதியளிக்கின்றன. எனக்குக் கிட்டிய அமைதியும் மகிழ்ச்சியும் ஆய்வாளர், பதிப்பாளர், படிப்பாளர் என அனைவருக்கும் கிட்டும் என்பது எனது நம்பிக்கை! ஆய்வாளருக்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும்!



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

பரிமேலழகரின் உரைமறுப்புக் கொள்கைகள்
May 25, 20200

புலவர் முனைவர் கோ.சுந்தராம்பாள்
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை
பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி,
விளார் புறவழிச்சாலை,
தஞ்சை மாவட்டம் – 613006.
மின்னஞ்சல் முகவரி – egowrisss@gmail.com

முன்னுரை

சில நூற்றாண்டுகளுக்கு முன் மேனாட்டில் வடிவமைக்கப்பட்ட இலக்கியத் திறனாய்வுக் கொள்கைகளைக் கற்றறிந்த சிலர் திறனாய்வு துறையே தமிழில் இல்லையென்றும் இருந்தாலும் அது வளரவில்லை என்றும் ஆய்வுக்கட்டுரைகளிலும் நூற்களிலும் பயிலரங்கங்களிலும் முன்னெடுத்தனர். ஒரு துறைக்குத் தனித்த குறியீடு இல்லாத காரணத்தினாலேயே அக்கால இலக்கியச் சமுதாயத்திற்கு அது பற்றிய கருத்தியல் அறவே கிடையாது என்னும் முடிவுக்கு வருவது ஆய்வு நெறியன்று. தமிழையொத்த இலக்கிய வளமிக்க மொழிகளில் திறனாய்வு ஏதோ ஒரு கோணத்தில் இருந்திருக்க வேண்டும் என்னும் குறைந்த அளவு அனுமானமும் இல்லாது போனதும் வியப்பிற்குரியதே. தமிழறிஞர் சிலர் உரையாசிரியர்களின் உரைநுட்பத்தைக் கண்டறிந்த பிறகுதான் மேற்கண்ட ‘கொள்கைச் சோர்வு’ புலப்படத் தொடங்கியது. மூலத் தமிழிலக்கியங்களுக்கு உரைகண்ட சான்றோர்களின் உரைக்கொள்கைகளில் ‘உரைமறுப்பு’ என்பதும் ஒன்று. தற்காலத்தில் நிலவுவதைப் போல எடுத்தவுடன் பிழைகாணும் போக்கோ உரையினை மறுக்கும் போக்கோ பழந்தமிழ் உரையாசிரியர்களிடம் காண்பது அரிது. அதற்கென சில நெறிகளை அவர்கள் பின்பற்றியதை அறிந்து கொள்ள முடிகிறது. ‘திருக்குறள்’ என்னும் தமிழ் மறைக்கு ஆசிரியர் பரிமேலழகர் எழுதிய அரிய உரையில் தமக்கு முன் இருந்த உரைக்கருத்துக்களை அவர் மறுக்கும் பான்மையை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

1. ‘உரைமறுப்பு’ என்றால் என்ன?

மூலத்திற்கு உரைகாண் நெறிகள் அனைத்தும் மூலத்தின் உண்மையறியும் முயற்சியாகவே பழந்தமிழ் உரையாசிரியர்களிடம் கருதப்பட்டது. அவ்வுரைகாண் நெறிகள் பல. அவற்றுள் சில,

1. தொடரமைப்பு நோக்கி உரைகாண்பது

2. உலக வழக்கு நோக்கி உரைகாண்பது

3. இலக்கண அமைதி நோக்கி உரைகாண்பது

4. பிற இலக்கியங்களை ஒப்பு நோக்கி உரைகாண்பது

5. மூலத்தின் பிறபகுதிகைள ஒப்பிட்டு உரை காண்பது

6. சொற்பொருள் அமைதி கொண்டு உரைகாண்பது

7. திணை, துறை, கொளு, இயல், அதிகாரம் முதலியவற்றின் அமைதி துலங்க உரை காண்பது

8. பொருத்தமான பாடங்களைக் கண்டறிந்து உரைகாண்பது

9. பிறமொழிப் புலமை கொண்டு உரைகாண்பது

10. பிறதுறை அறிவு கொண்டு உரைகாண்பது

என்பனவாம். இத்தனை நெறிகளும் குறிப்பிட்ட மூலத்தின் உண்மையறியும் முயற்சியே. இம்முயற்சிக்குப் பங்கம் விளைவிப்பதாகவோ மூலப்பொருளைத் துலக்கம் செய்வதில் போதுமான வலிமை பெறவில்லை என உரையாசிரியர் ஒருவர் கருதினாலோ தமது புலமையின் பன்முக ஆழத்தை முன்னிறுத்தித் தனக்குச் சரியெனப்படும் உரையைத் தக்க காரணங்காட்டி முன்னிறுத்துவதும் முந்தைய உரையை மறுப்பதுமே உரைமறுப்பாகக் கருதப்படும். இவ்வாறு முந்தைய உரையினை மறுப்பதற்கான காரணங்கள் பலவாம். அக்காரணங்களே ‘கொள்கைகள்’ என்னும் சொல்லால் குறிக்கப்படுகின்றன. மூலப்பொருளைக் காப்பதையும் மூலத்திற்கு எதிரான முந்தைய உரையின் குறைபாட்டைக் களைவதுமாகிய நோக்கமன்றி, மூலநூலாசிரியரையோ முந்தைய உரையாசிரியரையோ தனிப்பட்ட முறையில் நோக்கிச் சாடுவதன்று என்பதைக் கருத்திருத்துதல் வேண்டும்.

2. கட்டுரை உள்ளடக்கம்

‘பரிமேலழகரின் உரைமறுப்புக் கொள்கைகள்’ என்னும் கருதுகோளையே தலைப்பாகக் கொண்டு இக்கட்டுரை அமைகிறது. பழந்தமிழ் மூலநூலுக்கு உரைகாண் நெறிகளுள் ஒன்றான உரைமறுப்பிலும் வரையறுக்கப்பட்ட சில கொள்கைகள் முன்னிறுத்தப்பட்டன. அழகரின் திருக்குறள் உரைமறுப்புக்களில் காணப்படும் சில கொள்கைகளைப் பணிவுடன் அடையாளப்படுத்துவதையே இவ்வாய்வு தனது நோக்கமாகக் கொள்கிறது. பரிமேலழகரின் உரைத்திறனை முழுமையாக அறிவதைப் பொதுப்பயனாகவும் அவரது உரைமறுப்புக் கொள்கைகளின் வலிமையையும் செறிவையும் அறிவதைச் சிறப்புப் பயனாகவும் கொள்கிறது.

2.1. ஆய்வுக்களம்

உரையெழுதப் புகுமுன் அதிகாரப் பொருண்மையில் தெளிவு காண்பதில் மிகுந்த எச்சரிக்கை உணர்வையும் பொறுமையையும் கொண்டிருந்திருக்கிறார். அதிகாரத் தலைப்புக்கான பொருள் மயக்கம் குறட்பாக்களின் பொருள் மயக்கத்திற்கு ஏதுவாகும் என்பது அவர் கொள்கை. அதிகாரப் பொருண்மையிலேயே தமது புலமையையும் புலமை சார்ந்த மறுப்பினையும் பதிவு செய்திருக்கிறார்.

இலக்கணங் காட்டி மறுத்தல்
அதிகாரப் பொருண்மைக்கு இயைபின்மை காட்டி மறுத்தல்
சொற்பொருள் காட்டி மறுத்தல்
பாட பேதம் காட்டி மறுத்தல்
எனப் பலவகைகளில் அழகருடைய உரைமறுப்பு அமைந்திருக்கிறது. இந்தப் பின்புலத்தில் இலக்கண அடிப்படையில் பிற உரைகளின் பொருந்தாமையைச் சுட்டி அவர் எழுதியிருக்கும் மறுப்புரைகள் சுருக்கமாக ஆய்வுக்குட்படுத்தப்படுகின்றன.

2.2. இலக்கணங் காட்டி மறுத்தல்

அழகரின் உரை ‘இலக்கண உரை’ என்றே வழங்கப்பட்டு வந்திருக்கிறது. தமிழாசிரியர்கள், தமிழ்ப் பேராசிரியர்கள் முதலியோரின் புறக்கணிப்புக்கு இதுவும் ஒரு காரணமாகலாம். ‘இலக்கணம் காட்டி மறுத்தல்’ என்னும் பகுதி கணிதம் போன்றது. கணிதத்தில் இரண்டு விடை கிடையாது. அதுபோல, அழகரின் இலக்கணப் புலமை தொல்காப்பியம், நன்னூல் முதலியவற்றின் அடிப்படையில் அமைந்ததாதலின் இந்நெறி அமைந்த மறுப்புரைகள் இன்றைக்கும் மறுப்புரைகளாகவே இருக்கின்றன.

2.2.1. உவம வகை முரண் காட்டி மறுத்தல்

படைப்புக்குக் கருத்தாழம், கற்பனை வளம், உணர்ச்சி, வடிவ ஆளுமை ஆகியன அமைதல் வேண்டும். திறனாய்வுக்கும் உரையெழுதுவதற்கும் அவைகள் பயன்படா. திறனாய்வு என்பது முழுமையும் ஏரணத்தின் (LOGIC) அடிப்படையில் காரண காரிய அணுகுமுறையில் அமைதல் வேண்டும். படைப்பில் வேண்டாத சொல் பயன்பாட்டுக்கு விளக்கம் கூறமுடியும். ஆனால் உரையில் அவ்வாறு கூற இயலாது. நுண்ணியமும் தெளிவும் ஆழமும் உடையதுதான் உரை. அத்தகைய உரையால் அழகர் சிறக்குமிடங்களில் இதுவும் ஓன்று.

“அங்கணத்து உக்க அமிழ்து அற்றால் தங்கணத்தார்
அல்லார் முன் கோட்டி கொளல்”1

என்பது ஒரு குறட்பா. இந்தக் குறட்பாவிற்கு,

“நல்லார் தம் இனத்தார் அல்லாதார் அவைக்கண் ஒன்றனையும் சொல்லற்க. சொல்லின் அது தூயதல்லாத முற்றத்தின் கண் உக்க அமிழ்தினை ஒக்கும்.”2

என உரையெழுதும் அழகர், ‘கோட்டி கொளல்’ என்பதை எதிர்மறை வியங்கோளாக்கிச் ‘சொல்லற்க’ என உரை காண்கிறார்.

2.2.2. ‘கொளல்’ என்னும் சொல்லாய்வு

‘கொளல்’ என்பதற்குத் தான் கொண்ட எதிர்மறை வியங்கோள் பொருளிற்கு ஏற்ற வகையில் சொல்லாய்வில் ஈடுபடும் அழகர்,

“‘கொள்’ என்னும் முதனிலைத் தொழிற்பெயர் முன்நின்று (கொள்) பின் எதிர்மறை ‘அல்’ விகுதியோடு கூடி ‘மகனெனல்’ என்பது போல் நின்றது” 3



என்று எழுதுகிறார். இங்கே அழகர் வியங்கோளுக்காகக் காட்டும் எடுத்துக்காட்டுக்கான குறட்பா,

“பயனில் சொல் பாராட்டுவானை மகன் எனல்
மக்கட் பதடி எனல்”4

என்பதாகும். இக்குறளில் இரண்டிடத்துப் பயின்று வரும் ‘எனல்’ என்னும் வியங்கோளைப் பற்றிய தனது கருத்தினை இப்படிப் பதிவிடுகிறார் அழகர்.

“‘அல்’ விகுதி வியங்கோள் முன் எதிர்மறையிலும் பின் உடன்பாட்டிலும் வந்தது”5


என்று அங்கே எழுதிய உரை விளக்கத்தை ஐந்நூறு பாக்கள் கடந்தும் நினைவிற் கொண்டு உரையெழுதுகிறார். ‘மகன் எனல்’ என்பதில் ‘எனல்’ என்பது எதிர்மறை (மகனென்று சொல்லாதே). ‘பதடி எனல்’ என்பதில் ‘எனல்’ என்பது உடன்பாடு (பதடி என்று சொல்). இந்த நுட்பம் இல்லையென்றால் குறளுக்குப் பொருள் காண்பது அரிதாகிவிடும் அல்லவா? இரண்டிடத்தும் ‘எனல்’ என்றால் என்ன ஆகும்?

2.2.3. முந்தையோர் நோக்கத் தவறியது

இந்த விளக்கத்தை எழுதிய அழகர், தொடர்ந்து இந்தக் குறட்பாவிற்குப் (720) பிறர் எழுதும் உரையினைச் சுட்டி அதன் பொருத்தமின்மையை மிக இலாவகமாக மறுக்கிறார். இங்கே ‘இலாவகம்’ என்பது முந்தைய உரைகளின் சாதாரணக் கவனக்குறைவு. தன்னுரையை விளக்கும் பரிமேலழகர் எந்தவிடத்தும் தனது கொள்கைதான் சரி என்றாரில்லை. ‘தானாஅட்டித் தனது நிறுத்தல்’ என்பது அழகர் கொள்கையன்று. இந்தக் குறட்பாவில் முன்னோர் கவனிக்கத் தவறியதைப் பண்பாடு குறையாமல் சுட்டிக்காட்டுகிறார்.

(அ) ‘மலர்போன்ற முகம்’ என்றால் பொருளுவமை.
இங்கு மலராகிய பொருள் உவமம்.


(ஆ) ‘மலர்போல முகம் மலர்ந்தாள்’ என்றால் வினையுவமை.
இங்கு ‘மலர்தல்’ ஆகிய வினை உவமம்.

முன்னது பொருள் பற்றியது. பின்னது வினை பற்றியது. இந்தத் தெளிவு இல்லாமல் உரையெழுதியவர்களைப் பக்குவமாகச் சாடுகிறார் அழகர்.

“பிறரெல்லாம் ‘கொளல்’ என்பதனைத் தொழிற்பெயராக்கி உரைத்தார். அவர் அத்தொழில் ‘அமிழ்து’ என்னும் பொருளுவமையோடு இயையாமை நோக்கிற்றிலர்.” 6

என்று விளக்கிக் காட்டுகிறார். அழகர் சொல்ல வருவது இதுதான்.

1. ‘சாக்கடையில் ‘அமிழ்தத்தைக் கொட்டுவது போல’ என்று குறட்பாவில் இல்லை.

2. ‘சாக்கடையில் ‘கொட்டப்பட்ட அமிழ்தம்’ என்றுதான் இருக்கிறது.

எனவே பொருளுவமத்தை வினையுவமமாகக் கொள்ளுதற்குச் சொற்கிடக்கை இடந்தரவில்லை என்பதை மற்ற உரையாசிரியர்கள் நோக்கவில்லையே என ஆதங்கப்படுகிறார். அவர் ஆதங்கம் சரிதானே?

‘அமிழ்தத்தை உக்கினாற் போல’ என்றில்லை.

‘உக்கப்பட்ட அமிழ்தம்’ என்றுதான் இருக்கிறது.

எனவே குறட்பாவில் பயின்ற உவமம் பொருளுவமமேயன்றி வினையுவமம் ஆகாது எனத் தெளிவுபடுத்துகிறார். ‘சொல்லற்க’ என வினைமுடித்து, அவ்வாறு சொன்னால் அப்படிச் சொல்லுவது எதனைப் போன்றது? என்னும் வினாக்களை அவராகவே எழுப்பிக் கொண்டு எழுதுகிறார் இப்படி?

“சொல்லின்’ ‘அது’ என்பன (இரண்டு சொற்களும்) அவாய் நிலையான் வந்தது ‘சாவா மருந்தாதல்’ அறிந்து நுகர்வார் கையினும் படாது அவ்வங்கணத்துக்கும் இயைபின்றிக் கெட்டவாறு தோன்ற ‘உக்க அமிழ்து’ என்றார். அச்சொல் ‘பயனில்’ சொல் என்பதாயிற்று.” 7

‘அவையறிதல்’ என்னும் அதிகாரத் தலைப்புக்கான பொருளைக் கருத்திற் கொண்டு, உரையெழுதிப் பிறர் உரையினை மறுக்கும் அழகருக்கு மூலத்தின் உவம நுட்பத்தைப் புரிந்து கொண்டு உரையெழுத வேண்டும் என்பது கொள்கையாகத் தெரிகிறது.

2.2.3.1. வள்ளுவர் உள்ளத்தை அறிந்தர் எவர்?

எந்தக் கருத்தினையும் மறுப்பதற்கு எப்படி யாருக்கும் உரிமை இருக்கிறதோ அதுபோலவே எந்தக் கருத்தினையும் சொல்வதற்கு அனைவருக்கும் உரிமை இருக்கிறது. பொதுவாக ‘உரைமறுப்பு’ என்பது தங்களது கருத்துக்கு எதிரானது என்ற அளவில்தான் பார்க்கப்படுகிறது. இது ஒரு இரங்கத்தக்க நிலை. உரையாசிரியர் தனது கொள்கைக்கு ஏற்பத்தான் உரையெழுதுவார். அழகர் அவர் கருத்திற்கேற்ப உரையெழுதுகிறார். மணக்குடவர் அவர் கருத்துக்கு ஏற்ப உரையெழுதினார். பாரதிதாசன் அவர் கருத்துக்கு ஏற்ப உரையெழுதினார். பாவாணர் ஐயா அவர் கருத்துக்கு ஏற்ப உரையெழுதினார். மாணிக்கனார் அவர் கருத்துக்கு ஏற்ப உரையெழுதினார். ஆக இந்த உரைகளில் சொல்லப்படும் கருத்துக்கள் எல்லாமே குறட்பாக்களைப் பார்த்தவர்களின் ‘பார்வைப் பதிவே’ தவிர திருவள்ளுவர் கருத்து என்று சொல்வதற்கு யாருக்கும் எந்த உரிமையும் இல்லை. இது ஒரு சாதாரண உண்மை. இதில் மாறுபட ஏதுமிருப்பதாகத் தெரியவில்லை.

2.2.3.2. மாறுபாடு காண வேண்டிய இடம்

எங்கே மாறுபட வேண்டுமெனின் உரையாசிரியர் ஒருவர் தன்னுடைய கருத்துக்கே தான் மாறுபட்டால்தான், முரண்பட்டால்தான் நாம் வினா தொடுக்க இயலும். அல்லது பொருத்தமற்ற உண்மைக்கு மாறான, முன்னோர் மரபுசார்ந்த இலக்கணத்துக்கு முரணாக உரையெழுதினால் மறுக்கலாம். நம்முடைய கருத்துக்கு மாறுபடுவதனாலேயே குறட்பாவின் உரை மறுப்பிற்கு உரியதாகாது. நம்முடைய கருத்தினையே மற்ற உரையாசிரியர்களும் எழுத வேண்டுமென்றால் அவர்கள் எதற்கு? குறட்பாவிற்கான அழகர் உரையை மறுப்பவர் அழகர் தன்னுடைய உரையில் எங்காவது முரண்படுகிறாரா? அவர் காட்டுகிற இலக்கணக் குறிப்பு தொல்காப்பியம், நன்னூல் முதலிய நூல்களில் இல்லையே? என்று கண்டு சொன்னால் அது வரவேற்கத்தக்க ஆய்வு. இருபதாம் அல்லது இருபத்தோராம் நூற்றாண்டு தமிழ்வல்லாரைக் கேட்டுக் கொண்டு பரிமேலழகரோ அடியார்க்கு நல்லாரோ அரும்பத உரையாசிரியரோ நச்சினார்க்கினியரோ சேனாவரையரோ குணசாகரரோ உரையெழுத இயலாது. அவரவர் கருத்துக்கு இசைந்தவாறு எழுதுவதுதான் உரை நெறி. தற்போது உரை சொல்லுகிற எல்லாரும் இந்த நெறியைத்தான் பின்பற்றுகிறார்கள். அதனைவிடக் கொடுமை உரை எழுதிவிட்டு “இதுதான் திருவள்ளுவர் கருத்து” என்று கற்பூரம் கொளுத்தாத குறையாக அடித்துச் சத்தியம் செய்கிறார்கள். இப்படிச் சொல்வதற்கு யாருக்கும் உரிமையோ தகுதியோ இல்லை என்னும் சாதாரண உண்மை கூட அறியாமற் போனது தமிழியல் ஆய்வுலகின போகூழ் காலமே!




__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

 2.2.3.3. மாறுபாடு காண்கிற நெறியும் முறையும்


முன்னர்க் கூறியதுபோலப் பிற உரையாசிரியர் தனக்குத் தானே முரண்படுவதை ஆழமாக நோக்கி நிரலாகச் சொல்லி வன்மையாக ஆனால் எளிமையாக, போகிற போக்கில் மறுக்கும் அழகர் உரைத்திறன் காட்டும் குறட்பா,

“கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல்.” 8

இது அமைச்சியலில் ‘சொல்வன்மை’ என்ற அதிகாரத்தின் கீழ் வருவது.

“நட்பாய் ஏற்றுக் கொண்டாரைப், பின் வேறுபடாமல் பிணிக்கும் குணங்களை அவாவி, மற்றைப் பகையாய் ஏற்றுக் கொள்ளாதாரும் பின் அப்பகைமையை யொழிந்து நட்பினை விரும்பும் வண்ணம் சொல்லப்படுவதே அமைச்சர்க்குச் சொல்லாகும்”9

எனப் பதசாரம் எழுதிய அழகர்,

“அக்குணங்களாவன: வழுவின்மை, சுருங்குதல், விளங்குதல், இனிதாதல், விழுப்பயன் தருதல் முதலாயின. அவற்றை அவாவுதலாவது ‘சொல்லுவான் குறித்தனவேயன்றி வேறு நுண்ணுணர்வு உடையோர் கொள்பவற்றின் மேலும் நோக்கு உடைத்தாதல்’.10

அமைச்சரின் சொல் தழுவி நிற்கவேண்டிய குணங்களைப் பட்டியலிடுகிறார்.

“கேட்டார் என்பதற்கு நூல்கேட்டார், வினவியார் எனவும் கேளாதார் என்பதற்கு நூல் கேளாதார், வினவாதார்”11

எனப் பிறர் கூறும் உரைகளை மதிக்கிறார். ஆனால் ‘தகை அவாய்’ என்பதற்கு அழகர் ‘தகையினை அவாவி’ என உரை காணப், பிறர் ‘தகையவாய்’ என ஒரு சொல்லாய் அதாவது பலவின்பால் குறிப்பு வினையாலணையும் பெயராய் உரை கண்டனர்.

‘சொல் என்பது மேற்சொன்ன குணங்களைத் தழுவி’ என்பது அழகர் கண்ட உரை.
‘கேட்டாரைப் பிணித்தலே தகைமை’ என்பது பிறர் கண்ட உரை.
இந்த உரையை அழகர் மறுக்கவில்லை. ஆனால் இந்த உரை சொன்னவர்கள் கவனிக்கத் தவறியதைச் சுட்டிக்காட்டுகிறார்.

2.2.3.4. அழகர் சுட்டும் மிகச் சாதாரண இலக்கணம்

‘தகைத்து’ என்பது ஒருமை. ‘தகைய’ என்பது பன்மை. ‘து’ ஒருமை விகுதி. ‘அ’ பன்மை விகுதி. அப்படி உரைப்பதால் ஏற்படும் உரைப்பிழை என்னவென்று தெரியுமா? ‘தகையவாய்’ என்பதற்குத் ‘தகுதிகளையுடையவாய்’ எனப் (பன்மை) பொருள் கொண்டால் அப்பன்மை, ‘மொழிவது’ என்னும் (செயப்பாட்டு வினையாகிய) ஒருமையோடு இணையவில்லையே?. பிறர் சொல்லுகிற கருத்து சரியென்றால் குறட்பா ‘மொழிவன’ என்றல்லவா இருந்திருக்க வேண்டும்? இது அழகரின் அசைக்க முடியாத வினா.

“‘அவாய்’ என்னும் செய்தென் எச்சம் ‘மொழிவது’ என்னும் செயப்பாட்டு வினை கொண்டது. (‘மொழிவது’ என்னும் செய்வினை செயப்பாட்டு வினைப் பொருளில் வந்தது என்பது அறிக) ‘தகையவாய்’ என்பதற்கு எல்லாரும், தகுதியையுடையவாய்’ என்று உரைத்தார். அவர், அப்பன்மை ‘மொழிவது’ என்னும் ஒருமையோடு இயையாமை நோக்கிற்றிலர்.”12



‘தகையினை அவாவி’ என்பதற்கும் ‘தகைய ஆய்’ என்னும் பலவின்பால் குறிப்பு வினையாலணையும் பெயராகக் கொள்வதற்கும் எது அடிப்படைக் காரணம் என்றால் ‘தகை’ என்னும் ஒருமை ‘மொழிவது’ என்னும் ஒருமையோடு சேரும். ‘தகையவாய்’ என்னும் பன்மை மொழிவது என்னும் ஒருமையோடு சேராது. தற்கால உரைசிரியர் ஒருவர் இந்த உரையை எழுதியிருந்தால் ‘ஒருமை பன்மை தெரியாதவரெல்லாம் உரையெழுத வந்தால் இதுதான் நிலை என்று கூறியிருப்பார். அழகர் கூறவில்லை. அவருடைய புலமையடக்கம் அத்தகையது.

2.3. சொல்வான் குறிப்பும் சுட்டுப்பெயரும்

‘அவர்வயின் விதும்பல்’ (127) என்பது காமத்துப்பாலில் உள்ள ஓர் அதிகாரத் தலைப்பு. சிலர், வேறுபட்ட புலமை காரணமாகத் தலைவனை எண்ணித் தலைவி கலங்குதல் என்பதே இவ்வாதிகாரத். தலைப்பிற்கான பொருள் என அமைதியடைவர். பரிமேலழகரின் பெருமதிப்புக்கு உரியவரான மணக்குடவரும் இந்த நிலைக்கு ஆட்பட்டவர்தாம். ‘அவர்’ என்பது சுட்டுப்பெயர். பொதுவாகச் சுட்டுப்பெயர் தனக்கென்று குறிப்பிட்ட பொருளைக் குறிப்பதற்கு இலக்கணம் கிடையாது. உயர்திணைக்கும் அஃறிணைக்கும் பொதுவாக வரும். மேய்ச்சலுக்குச் சென்ற பசுமாட்டை ‘அவர் காலையில் போனார் மாலைதான் வருவார்’ என்று அதனைப் பாசத்தோடு வளர்க்கின்றவர் சொல்வார். இங்கே அவர் என்னும் உயர்திணைச் சுட்டு அஃறிணைக்கு வந்தது. உங்க வீட்டுக்காரர் எப்போது வருவார் என்னும் வினாவிற்கு, ‘அது ஊரெல்லாம் சுற்றிவிட்டு பொழுது சாஞ்சு வரும்’ என்று சொல்லுகிற மனைவியும் உண்டு. இங்கே அது என்னும் அஃறிணைச் சுட்டு உயர்திணையைக் குறித்தது. எனவே சுட்டுப்பெயர் சொல்வான் குறிப்போடு கூடிய பொருளுணர்த்தும் பாங்கினது.

2.3.1. ‘அவர்வயின் விதும்பல்’ — அதிகாரப் பொருண்மை

கற்பியலில் இவ்வதிகாரம் வரையில் தலைவனது பிரிவும் தலைமகளது ஆற்றாமையும் தொடர்ச்சியாய்ச் சொல்லப்பட்டு வரும் நிலையில், இவ்வதிகாரத்தும் தலைமகனைக் காணவேண்டும் என்னும் தனது விதும்பலைத் தலைவி ஏழு குறட்பாக்களிலும், தலைமகளைக் காணவேண்டும் என்னும் தனது விதும்பலைத் தலைவன் மூன்று குறட்பாக்களிலும் கூறியிருக்கின்றனர். இனிக் ‘காமத்துப்பால்’ இருபத்தைந்து தலைப்புக்களில் எந்தவிடத்தும் திருவள்ளுவர் தலைவனை ‘அவர்’ என்னும் சுட்டால் சுட்டவில்லை. இவற்றையெல்லாம் முன்னும் பின்னும் ஆழ்ந்தும் அகன்றும் நோக்கிய அழகர் ‘அவர்வயின் விதும்பல்’ என்னும் தலைப்புக்கு (அவர்வயின் விதும்பல் என்றால்),

“சேயிடைப் பிரிவின்கண் தலைமகனும் தலைமகளும் வேட்கை மிகவினான் ஒருவரை யொருவர் காண்டற்கு விழைதல்”13

எனப் பொருள் விளக்கம் எழுதித்,

“தலைமகன் பிரிவும் தலைவி ஆற்றாமையும் அதிகாரப்பட்டு வருகின்றமையின் இருவரையும் சுட்டிப் பொதுவாகிய பன்மைப்பாலாற் கூறினார்”14

என ‘அவர்’ என்னும் சுட்டுப்பெயர் இருவரையுமே குறிக்கும் என்பதற்கான காரண காரியத்தையும் விளக்கிப்,

“பிறரெல்லாம் இதனைத் தலைமகனை நினைத்துத் தலைமகள் விதுப்புறல் என்றார். சுட்டுப்பெயர் சொல்லுவான் குறிப்பொடு கூடிய பொருளுணர்த்துமல்லது தான் ஒன்றற்குப் பெயராகாமையானும், கவிக்கூற்றாய அதிகாரத்துத் தலைமகன் உயர்த்தற் பன்மையான் கூறப்படாமையானும் அஃது உரையன்மை அறிக”.15

என ‘அவர்’ என்பது தலைமகனையே குறிக்கும் என்பார்தம் கருத்தினைப் பண்பாட்டோடு மறுத்தும் உரையெழுதுகிறார். பொருள்விளக்கம், அதற்கான காரணம், மாற்றுக் கருத்தினைப் பண்பாட்டோடு மறுக்கும் புலமைச் சதுரப்பாடு என்னும் அழகரின் உரைப்பரிமாணத்தின் அனைத்துக் கூறுகளையும் இந்த மறுப்புரையில் காணலாம்.

நிறைவுரை

இதுவரை திருக்குறள், அழகரின் உரைத் தரவுகள் ஆகியனவற்றைக் கொண்டு ஆராய்ந்த அவர்தம் மறுப்புரையில் பலநெறிகளைப் பின்பற்றுகிறார் என்பதையும் அவற்றுள் இலக்கணக் கூறுகள் இன்றியமையாத இடத்தைப் பெறுகின்றன என்பதையும், முன்னர்க் கூறிய இலக்கண விளக்கத்தைத் தேவைக்கேற்பப் பின்னரும் நினைவூட்டுகிறார் என்பதையும், வினை, பயன், மெய், உரு உவம வகைகளின் பொருத்தப்பாட்டின் நுண்ணியத்தையும் அவர் கவனத்திற் கொள்கிறார் என்பதையும், ஒருமை, பன்மை முதலிய எளிய இலக்கணமும் இவருடைய மறுப்புரைக்குத் தாங்குதளமாக இருக்கிறது என்பதையும், அதிகாரப் பொருண்மையைத் தொடக்கத்திலேயே தெளிவுபடுத்திக் கொள்வதிலும் அதனடிப்படையில் பிறர் உரையை மறுதலிப்பதிலும் இலக்கணம் இவருக்குக் கைகொடுக்கிறது என்பதையும் சுருக்கமாக அறிந்து கொள்ள முடிகிறது. அழகர் உட்பட யாரும் வள்ளுவர் கருத்தினை முழுமையாக அறிந்து கொள்ள இயலாது. அனுமானிக்கலாம். வேண்டுமானால் இலக்கணப் புலமை உட்படப் பல்வேறு கருவிகள் கொண்டு அவரை அருகிருந்து பார்க்க முயலலாம். அந்த முயற்சியில் அழகர் மற்றவரைக் காட்டிலும் நெருங்கி வருகிறார் என்பதே உண்மை. கற்பாருக்குப் பெரிதும் வியப்பளிக்கும் அவரது இலக்கணப்புலமை உரைமறுப்புக்குப் பயன்படுகிறது. அவர் காட்டுகிற இலக்கணம் அவருடையதன்று. முன்னோர்களுடையது. அந்த இலக்கணத்தை இந்த இலக்கியத்திற்குப் பொருத்திக் காட்டும் அவரது புலமைச் சதுரப்பாட்டில் யாரும் அவ்வளவு எளிதாக ஐயம் கொள்ள முடியாது. இருந்தாலும் அழகர் தமது இலக்கணப் புலமையை வெளிப்படுத்தும் எந்த இடத்திலும் தன்முனைப்பு என்பதைக் காணவியலவில்லை. ‘ஆன்று அவிந்து அடங்கிய இந்தக் கொள்கையைத்’ தற்கால உரை மறுப்பாளரிடம் காண்பதரிது என்பதை முன்னெடுத்து இக்கட்டுரை தன்னை நிறைவு செய்து கொள்கிறது.

சான்றெண் விளக்கம்

1. திருவள்ளுவர் திருக்குறள் கு.எண். 720
2. பரிமேலழகர் மேலது உரை
3. மேலது
4. திருவள்ளுவர் திருக்குறள் கு.எண். 196
5. பரிமேலழகர் மேலது உரை
6. மேலது கு.எண். 720
7. மேலது .
8. திருவள்ளுவர் திருக்குறள் கு.எண். 643
9. பரிமேலழகர் மேலது உரை
10. மேலது
11. மேலது
12. மேலது
13. திருவள்ளுவர் திருக்குறள் அதி.எண். 127
14. பரிமேலழகர் மேலது உரை
15. மேலது

துணைநூற் பட்டியல்

1. நச்சினார்க்கினியர்
தொல்காப்பியம் பொருளதிகார உரை
தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம், சென்னை
மறுபதிப்பு – 1967

2. திருக்குறள் – பரிமேலழகர் உரை
வை.மு.கோபால கிருஷ்ணமாச்சாரியார் அவர்கள் எழுதிய குறிப்புரையுடன்
உமா பதிப்பகம், சென்னை – 600 001
முதற்பதிப்பு – 2009

3. எஸ்.வையாபுரிப்பிள்ளை
தமிழ்ச்சுடர் மணிகள்
குமரி மலர்க் காரியாலயம்
தேனாம்பேட்டை, சென்னை – 600 018
முதற்பதிப்பு – 1949

4. புலவர் ச.சீனிவாசன்,
திருக்குறள் பரிமேலழகர் உரை அகர நிரல்
மெய்யப்பன் தமிழாய்வு மையம்,
53, புதுத்தெரு, சிதம்பரம் – 608 001
முதற்பதிப்பு – 2002

5. முனைவர் நா.பாலுசாமி
பன்முகப் பார்வையில் பரிமேலழகர்
அன்னம், நிர்மலா நகர், தஞ்சை – 613 007
முதற்பதிப்பு – 2005

6. மு.வை.அரவிந்தன் – உரையாசிரியர்கள்
8/7 சிங்கர் தெரு,
பாரிமுனை, சென்னை – 600 108
முதற்பதிப்பு – 1968

7. நாவலர்.ந.மு.வேங்கடசாமி நாட்டார்
இலக்கியக் கட்டுரைகள்
நாவலர்.ந.மு.வேங்கடசாமி நாட்டார் கல்வி, கலை, பண்பாட்டு அறக்கட்டளை, கபிலர் நகர், வெண்ணாற்றங்கரை,
தஞ்சாவூர் – 613 003

ஆய்வறிஞர் மதிப்புரை (Peer Review):

“பரிமேலழகரின் உரைமறுப்புக் கொள்கைகள்” என்னும் தலைப்பில் அமைந்த இக்கட்டுரையைப் பலமுறை பயின்று கட்டுரையின் அனைத்துக் கூறுகளையும் உள்வாங்கி ‘வல்லமை’ முன்மதிப்பீட்டு விதிகளைக் முழுமையாகக் கருத்திற்கொண்டு செய்யப்படும் முன் மதிப்பீடு

1. நீதி இலக்கியம் ஒன்றுக்கு உரைகாண் நெறிகளை அழகர்வழி நின்று பட்டியலிட்டிருக்கும் ஆய்வாளர், பிறர் உரைகளை மறுப்பதற்கு அழகர் பின்பற்றியிருக்கும் நெறிமுறைகளை நிரல்படுத்தியிருக்கிறார்.

2. இலக்கியங்களுக்கு உரைகாண்பதில் இலக்கணப் பங்களிப்பின் இன்றியமையாமையைப் புலப்படுத்தி அதனையே கட்டுரைப் பொருளாக்கியிருக்கிறார்.

3. அழகரின் ஆழமான இலக்கணப் புலமையை உணர்ந்தார் எவரும் இந்த நெறியில் அழகரை எதிர்ப்பதில்லை. நீர்த்துப் போன இலக்கணப் புலமை மட்டும் அழகர் உள்ளிட்ட வல்லாளர்களை மறுப்பதற்கு அவ்வளவாகப் பயன்படாது என்பதைக் கட்டுரையாளர் குறிப்பாகக் காட்டியிருக்கிறார்.

4. வினை, பயன், மெய் உரு என்னும் நால்வகை உவமங்களும் நால்வகை வேறுபட்ட நோக்கிற்குரியன. பொருளுவமையை வினையுவமையாகக் கருதிச் சொல்லும் உரையால் ஏற்படும் அதிகாரப் பொருட்குழப்பத்தையும் திரிபையும் அழகருடைய மறுப்புரை மிக எளிதாக நீக்கியிருப்பதை ஆய்வாளர் அழகுற விளக்கியிருக்கிறார்.

5. ‘கொளல்’ (720) என்னும் சொல்லுக்கான இலக்கண அமைதியை ஐந்நூறு பாக்களுக்கு முன்சென்று ‘எனல்’ (196) என்பதனோடு பொருத்திக் காட்டும் அழகரின் அளப்பரிய நினைவாற்றலைக் கட்டுரையாசிரியர் எடுத்துக் காட்டியிருப்பது சிறப்பு.

6. “‘தகைய ஆய்’ எனப் பன்மையாகக் கொள்ளும் பிற உரைகாரர்கள் அது ‘மொழிவது’ என்னும் ஒருமையோடு இயையாமையை நோக்கிலர்” என்பதில் அழகரின் அங்கதம் புலப்படுகிறது.

7. சுட்டுப்பெயர் சொல்வான் குறிப்பொடு புணர்ந்தே பொருளுணர்த்தும் இலக்கண நுண்ணியம். ‘அவர்வயின் விதும்பல்’ என்னும தொடர் திருவள்ளுவருடையது என்பதையும் அவர் தன் கூற்றாய் யாண்டும் தலைமகனை ‘அவர்’ என்னும் உயர்த்தற்பன்மையால் கூறவில்லை என்பதையும் மிக நுட்பமாக எடுததுக்காட்டி மறுத்திருக்கும் அழகரின் உரைமறுப்புத் திறன் போற்றக் கூடியது. பிறரெல்லாம் தலைமகள் ‘அவர்’ என்று தலைமகனை அழைக்கின்ற குறட்பகுதிகளை (காதலவர் — காதலர் — கலந்தார்) நினைவிற்கொணடாரேயன்றி மேற்கண்ட இருவகை நிலைகளையும் (சுட்டுப்பெயர் மற்றும் கவிக்கூற்று) கருத்திற் கொண்டாரிலர்.

8. இவ்வளவு சிந்தனைகளையும் உள்ளடக்கிய இக்கட்டுரை ஆய்வாளருக்கும் அழகருக்கும் திருவள்ளுவருக்கும் ஒரு சேரப் பெருமை சேர்க்கிறது.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

 அடுத்தவர் பார்வையும் அழகர் நோக்கும் (உரையாசிரியர் பரிமேலழகரின் உரைப்பண்பாடு பற்றியதோர் ஆய்வு)

May 18, 20200

புலவர் முனைவர் கோ.சுந்தராம்பாள்
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை
பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி,
விளார் புறவழிச்சாலை,
தஞ்சை மாவட்டம் – 613006.
மின்னஞ்சல் முகவரி – egowrisss@gmail.com

முன்னுரை

தமிழிலக்கண, இலக்கிய உரைகள் படைப்பிலக்கியங்களுக்கு நிகரான அகப்புறக் கட்டமைப்பைக் கொண்டவை அவற்றை ஒருமுறை ஓதியறிந்தாரும் இந்த உண்மையை உணர்வர், ஒப்புவர். பரிமேலழகரின் திருக்குறள் உரையும் அவற்றுள் ஒன்று. வலிமையான தரவுகளோ சான்றுகளோ இல்லாத நிலையிலும் தமிழியல் உலகத்தின் மாபெரும் மறுதலிப்புக்கு ஆளானவர். இதனால் புலமையுலகுக்கு ஏற்பட்டிருக்கும் இழப்பு பெரிது. ஒரு மாபெரும் இலக்கியச் செல்வத்தின் அருமை பெருமைகளை மீட்டெடுத்து ஆய்வுலகத்தின் பார்வைக்கு வைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகவே இந்தக் கட்டுரை வடிவமைக்கப்படுகிறது. அழகரின் உரைகாணும் நெறிகளில் ‘பண்பாடு காத்தல்’ என்பதும் ஒன்று. மாறுபட்ட கருத்துக்களை அவர் கையாளும் முறை பற்றி இந்தக் கட்டுரை சுருக்கமாக ஆராய்கிறது.

உரைவேற்றுமையும் அழகர் பண்பாடும்
அழகர் திருக்குறள் உரையில் எந்தக் குறட்பாவிற்கான உரையிலும் தனது கருத்தே சரி என்னும் வாதத்தை முன்வைத்தார் என்பதற்கு வலிவான சான்றேதும் இருப்பதாகத் தெரியவில்லை.

தன்னுடைய கருத்தினைப் பதிவு செய்வார்.
தன்னுடைய கருத்திற்கேற்ற பாடங்களையே ஏற்பார்.
மூலத்திற்கு நெருங்கி வராத கருத்துக்களைச் சுட்டுவார்.
உரைநெறி பிறழ்வை இலக்கண, இலக்கியச் சான்றுகளால் மறுப்பார்.
பிற உரையாசிரியர்களின் இருவகைப் புலமைச் சோர்வை எடுத்துக் காட்டுவார்.
மறுக்கவும் முடியாமல் ஏற்றுக் கொள்ளவும் இயலாத நிலையில் ‘இவ்வாறு உரைப்பாரும் உளர்’ என்று சுட்டிக்காட்டி அமைவார்.
இவற்றுள் இறுதியாக அமைந்த ‘உரைப்பாரும் உளர்’ என்னும் தொடருக்குள் அமைந்திருக்கும் உரைநிலைப் பண்பாட்டை அறிவதையே இக்கட்டுரை தனது நோக்கமாகக் கொள்கிறது.

1.1. பார்வையும் நோக்கும்

பார்வையும் நோக்குமாகிய இரண்டும் கண்களின் வினையே. எனினும் ‘பார்வை’ என்பது மனத்தோடும் மூளையோடும் பொருந்தாத நிலையிலும் நிகழக்கூடும். ஆனால் நோக்கு அத்தகையதன்று. ஒரு குறிக்கோளோடு பார்ப்பதைத்தான் நோக்கு என்ற சொல் குறிக்கும்.

‘அரிமா நோக்கு’ 1
‘நோக்குதற் காரணம்’ 2
‘கோல்நோக்கி வாழும் குட’ 3
‘நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள்’ 4
‘இருநோக்கு இவள் உண்கண்’ 5
‘கண்களவு கொள்ளும சிறுநோக்கம்’ 6
‘நோக்கரிய நோக்கே!’ 7
‘பருகிய நோக்கெனும்’ 8
‘மீன் நோக்கு நீள்வயல்’ 9

முதலிய இலக்கியத் தொடர்களும் நோக்கம், பார்வையின் வேறுபட்டிருப்பதைப் புலப்படுத்தக் கூடும்.

1.2. உரைப்பாரும் உளர்

பழந்தமிழிலக்கண, இலக்கிய உரைகளில் ‘உரைப்பாரும் உளர்’ என்னும் தொடர் பெருவழக்கு. பிற உரையாசிரியர்களின் கருத்துக்களுக்கான மாறுபாட்டை எடுத்துக் காட்டுகின்ற நெறியினும் இது வேறானது. ‘மூலத்திற்கான என் கருத்து இது. ஆனால் இவர் இப்படிச் சொல்கிறார். எதனை ஏற்பது என்பது கற்பார் கடன்’ என்பதே ‘உரைப்பாரும் உளர்’ என்னும் தொடர் உணர்த்தும் பொருளாகும். இத்தகைய நேர்வுகளில் பிற உரையாசிரியர்கள் அவ்வாறு உரைகொள்வதற்கான காரணத்தையும் சுட்டிச் செல்கிறாரேயன்றி அக்காரணமே தவறு என்று அவர் சொல்ல மாட்டார்.

1.3. ‘உரைப்பினும் அமையும்’ என்பது வேறு

உரைப்பாரும் உளர்’ என்னும் தொடரால் பரிமேலழகர் உரைப்பது ‘உரைப்பினும் அமையும்’ என்பதனினும் வேறானது. ‘உரைப்பினும் அமையும்’ என்றால் குறிப்பிட்ட குறட்பாவிற்குத் தன்னளவிலேயே பொருத்தமான வேறொரு உரையினைக் காணமுடியும் என்பதைச் சுட்டுவதாகும். ஒரு குறட்பாவின் அமைப்பு ஒன்றிற்கும் மேற்பட்ட கருத்துக்களைத் தனக்கே தோன்றும் அளவுக்கு அமைந்திருக்கிறது என்றால் பிறருக்குத் தோன்றுதல் சொல்ல வேண்டாவாயிற்று. இந்தப் பண்பின் அடிப்படையில்தான் அவர் உரைப்பாரும் உளர் என்னும் தொடரைக் கையாள்கிறார். இத்தகைய உயர்பண்பு தற்காலத்தில் காண்பதற்கு அரியது என்பதன்று. யாண்டும் இல்லையென்றே கூறலாம்.

“ஒற்றினான் ஒற்றிப் பொருள் தெரியா மன்னவன்
கொற்றம் கொளக்கிடந்தது இல்”10

என்னும் குறட்பாவிற்கு,

“ஒற்றினானே எல்லார் கண்ணும் ஒற்றுவித்து அவற்றான் எய்தும் பயனை அறியாத அரசன் வென்றியடையக் கிடந்த வேறொரு நெறியில்லை”11

என்று பொழிப்புரை எழுதி,

“இதற்குக் கொளக்கிடந்ததொரு வென்றி இல்லை என்று உரைப்பினும் அமையும்.”12

என்று மற்றொரு உரை எழுதுகிறார். மேற்கண்ட உரைகளில் முன்னதில் ‘கிடந்தது’ என்பதற்கு ‘வெற்றிக்கான வழி’ என்று உரைகாணும் அழகர், பின்னதில் ‘வெற்றியே’ என்று உரைகாண்கிறார். இரண்டு உரைகளும் குறட்பாவின் சொற்கிடக்கையால் அழகர் ஒருவருக்கே தோன்றியனவாம்.

“மதியும் மடந்தை முகனும் அறியா
பதியிற் கலங்கிய மீன்”13

என்னும் குறட்பாவிற்கு,

“வானத்து மீன்கள் வேறுபாடு பெரிதாகவும் தம் மதியினையும் எம் மடந்தை முகத்தினையும் இது மதி இது முகம் என்று அறியமாட்டாது தம் நிலையினின்றும் கலங்கித் திரியா நின்றன”14

எனப் பொழிப்புரை எழுதி,

“இரண்டனையும் பதியிற் கலங்காத மீன்கள் அறியுமல்லது கலங்கின் மீன்கள் அறியா என்று உரைப்பினும் அமையும்.”15

என்று மற்றொரு உரை எழுதுகிறார். இவ்விரண்டு உரைகளுள் முன்னதில் மீன்களின் கலக்கமாகிய செயல் முதன்மைப்படுத்தப்படுகிறது. பின்னதில் மீன்கள் படர்க்கையாக்கப்பட்டு “இவை அறியும் இவை அறியா” என வினைமுடிபு காணப்பட்டுள்ளது. இரண்டு உரைகளும் குறட்பாவின் சொற்கிடக்கையால் அழகர் ஒருவருக்கே தோன்றியனவாம். இதிலிருந்து மாற்றுரை காண்பதிலும், மாற்றுரையை மறுக்கும் போதும் அழகர் கொண்டிருந்த பொறுப்புணர்வும் அச்சமும் சிந்திக்கற்பாலன. எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எடுத்தெறிந்து உரையெழுதும் போக்கு அவர் அறியாதது. தனது கருத்து இது என்று சொல்லுவார். பிறருடைய கருத்துக்கு மூலத்தின் அடிப்படையிலேயே மறுப்புச் சொல்வாரேயன்றித் தனது கருத்தினை மையமாக வைத்து அவர் மறுப்புச் சொன்னதாகத் தகவல் இல்லை. சுய முரண்பாடு இல்லாத உரையாசிரியர் அழகர். இனிச், சில குறட்பாக்களுக்குப் பிறர் கூறும் கருத்துக்களை அவர் மதிக்கின்ற பாங்கு சுட்டும் ‘உரைப்பாரும் உளர்’ என்னும் தொடருக்கு ஆளான சில குறட்பாக்களை ஆராயலாம்.

1.3.1. செய்யாமையா? செய்யாமலா?

இருக்கின்ற பாடத்தை வைத்து உரை சொல்கிறார் அழகர். அதாவது தான் கூறும் உரைக்கேற்ற பாடத்தைக் கொள்கிறார். அதுதான் பாடமாக இருத்தல் வேண்டும் என்று நம்புகிறார். உரை எழுதுகிறார்.

“செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது”16

என்னும் குறட்பாவிற்குத்,

“தனக்கு முன் உதவி செய்யாதிருக்க ஒருவன் பிறனுக்குச் செய்த உதவிக்கு மண்ணுலகும் விண்ணுலகும் கைம்மாறாகக் கொடுத்தாலும் ஒத்தல் அரிது”17

எனப் பொழிப்புரை எழுதுகிறார். எழுதிக்,

“கைம்மாறெல்லாம் காரணமுடையவாகலின் காரணம் இல்லாத உதவிக்கு ஆற்றாவாயின.”18

என விளக்கவுரை தருகிறார். ‘கைம்மாறெலலாம் காரணமுடையன’ என்றால் செய்கிற உதவியெல்லாம் திரும்பிவரும் நாள் (பிரதிபலன்) எதிர்பார்த்து’ (தற்காலத் திருமணத்தில் மொய் எழுதுவதுபோல) என்பதாம். ஆனால் அதிகாரம் ‘செய்ந்நன்றி அறிதல்’ ஆதலின் செய்த நன்றியைப் பற்றித்தான் அதிகாரப் பொருண்மை இருத்தல் வேண்டும். இருக்கிறது. செய்வாரின் தகுதி பற்றியோ அவன் செய்வானா மாட்டானா என்னும் ஐயம் பற்றியோ செய்ய இயலாத அவன் நிலைமை பற்றியோ சிந்திக்குமாறு அவ்வதிகாரப் பொருண்மை அமையவில்லை. ‘செய்’ந்நன்றி என்பதாலேயே ‘செய்யாமல் செய்’த உதவி என்பது பாடமாயிற்று என்பது அழகர் கருத்து. ஆனால்,

“செய்யாமைச் செய்த உதவி எனப் பாடம் ஓதி மதித்து உதவ மாட்டாமை உள்ள இடத்துச் செய்த உதவி” என்று உரைப்பாரும் உளர்”19

பிற உரையாசிரியர்கள் செய்திருக்கும் உரையினைச் சுட்டிக்காட்டி அமைகிறார். இங்கே நோக்க வேண்டியவை,

அதிகாரப் பொருண்மையை உள்வாங்கித் தான் கொண்ட
பாடத்தின் அடிப்படையில் உரை எழுதுகிறார்.

பிறர் கொள்ளும் பாடத்தையும் அதனடிப்படையில்
அவர் சொல்லும் உரையையும் காட்சிப்படுத்துகிறார்.

அவ்வுரை பற்றிய எந்தக் கருத்தினையும்
பதிவு செய்யாமல் விடுகிறார்.

அவர் கொண்ட பாடம் பற்றிய தமது கருத்தினையும்
பதிவு செய்யாமல் விடுகிறார்.

‘செய்யாமை’ என்னும் மற்றவர் கொண்ட பாடமும் ‘செய்யாமல்’ என்னும் அழகர் கொண்ட பாடமும் பாடபேதங்களாக மட்டும் நிற்காமல், மற்றவரின் பார்வையையும் அழகரின் நோக்கினையும் அறிந்து கொள்ள உதவும் கருவிகளாகவும் பயன்படுகிறது.

1.3.2. ‘ஈதல்’ பண்பா? பொருட்பன்மையா?

மேல் அதிகாரப் பொருண்மையினை உள்வாங்கிச் ‘செய்தற்கு இயலாத வறியவர்கள்’ என்னும் பொருள் தரும் செய்யாமையைப் பாடபேதமாகக் கொண்டு எழுதப்பட்ட உரையினை எடுத்தோதிய அழகர் மற்றொரு இடத்தில் முந்தைய குறட்பாக்களின் சாரத்தை உள்வாங்கி உரையெழுதிய குறட்பாவையும் பிறர் தமது புலமையாற்றலால் எழுதிய பல உரைகளையும் காட்சிப்படுத்துகிறார்.

“இலன் என்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலன் உடையான் கண்ணே உள”20



என்பது குறட்பா. ஈகை என்னும் அதிகாரத்தில் மூன்றாவதாக இடம்பெற்றிருக்கும் இந்தக் குறட்பாவிற்கு,

“யான் வறியன் என்று இரப்பான் சொல்லும் இளிவரவைத் தான் பிறர்க்கண் சொல்லாமையும் அதனைத் தன் கண் சொன்னார்க்கு மாற்றாது ஈதலும் இவ்விரண்டும் குலன் உடையான் கண்ணே உளவாவன” 21

எனப் பொழிப்புரை எழுதுகிறார்.

1.3.2.1. பிறருடைய பார்வையில் ஈதல்

உரையாமை, ஈதல் என்னும் இரண்டும் தொழிலடியாகப் பிறந்த பண்புச் சொற்கள். அவ்விருவகைப் பண்புகளும் நல்ல குடியிலே பிறந்தவரிடத்தில் உளவாகும் என்பது அழகர் கொண்ட இலக்கணத்திற்கான கருத்து. ஆனால் ‘இலன் என்னும் எவ்வம் உரையாமை ஈதல்’ என்பதற்கு மற்றவர் கூறும் உரைகளைப் பின்வருமாறு தொகுத்துக் கூறுகிறார்.

1. அவ்விளிவரவை ஒருவன் தனக்குச் சொல்வதற்கு முன்னே அவன் குறிப்பறிந்து கொடுத்தல் எனவும்22

2. அதனைப் பின்னும் பிறனொருவன் சென்று அவன் உரையாவகைக்
கொடுத்தல் எனவும்23

3. யான் இதுபொழுது பொருளுடையன் அல்லேன் எனக் கரப்பான்
சொல்லும் இளிவரவைச் சொல்லாது கொடுத்தல் எனவும்24



உரைப்பாரும் உளர். அவர், ’ஈதல்’ என்பதனைப் பொருட்பன்மை பற்றி வந்த பன்மையாக உரைப்பர்.25

இந்தக் குறட்பாவில் தன்னுடைய உரைக்கு ‘ஈதல்’ என்பதை வினையடியாகப் பிறந்த பண்பாகக் கொள்கிறார் அழகர். உரையாமையும் ஈதலுமாகிய இவையிரண்டும்” (இவ்விரண்டு உயர்பண்புகளும்) என்னும் உரைப்பகுதி காண்க.

1.3.2.2. பொருட்பன்மை என்றால் என்ன?

ஈதலாகிய தொழில் ஒன்று. ஈவார்க்குப் பயன்படும் பொருள்கள் பல. எனவே தொழில் ஒன்றாயினும் ஈயப்படும் பொருள்கள் பலவாதலால் ‘ஈதல்’ என்பது பொருட்பன்மையாயிற்று. ‘தானம்’ ஒன்றுதான். அன்னதானம், சொன்னதானம், கன்னிகாதானம், பூதானம், வித்யாதானம் எனப் பல்வகைப்படுதலின் ‘ஈதல்’ என்னும் சொல்லுக்குள் அடங்கும் தானங்கள் பலவாம். இந்தக் கருத்தினை அழகர் ஏற்றுக் கொள்கிறாரா என்பது இங்கே கருத்தில்லை. இப்படிச் சொல்கிறார்கள் என்று ‘உரைப்பந்தி’ வைப்பதோடு அமைதியடைகிறார்.

1.3.2.3. அழகர் உரையின் ஆழமும் பொருத்தமும்

‘ஈகை’ என்னும் அதிகாரத்தில் ஈகையது இலக்கணம் (221), ஈதலின் சிறப்பு (222), பெறுதலின் இழிவு (222) என நிரல்பட ஆசிரியர் கூறுகிறார்.

“மேல் தீது என்றது ஒழிதற்கும் நன்று என்றது செய்தற்கும் உரியவை உணர்த்தியது”26

என்னும் மூலக்கொடுமுடியில் நிற்கிறார் அழகர். அதாவது இதற்கு முந்தைய குறட்பாவில் குறிப்பிட்ட தீதினை ஒழிக்க வேண்டுமல்லவா? எது தீது? எவ்வம் உரைத்தல் தீது! அதனால் ‘உரையாமை’ என்றார். இனி நன்மையைச் செய்ய வேண்டுமல்லவா? எது நன்மை? ஈதல் நன்மை! அதனால் ஈதல் என்றார். இலன் என்னும் எவ்வம் உரையாமையும் பண்பு. தொடர்ந்து ஈதலும் பண்பு. இவ்விரண்டு பண்புகளும். நற்குடிப் பிறந்தார் மாட்டு உளவாம் எனக் கருத்துரைத்தார். ஈதல் என்பதற்கான பல்வகை அறச்செயல்கள் என்னும் பொருள் பற்றிக் கருத்துரைக்காமல் தானுண்டு தன் உரையுண்டு’ என அடக்கமாகிவிடுவதைக் காணமுடிகிறது.

1.3.3. பெருமைச் சிதைவா? நம்பிக்கைத் துரோகமா?

பிறனுக்குரிய மனையாளை விரும்புவதை வடநூல்கள் ‘பரகீயம்’ என வழங்கும். அதாவது அவளுடைய ஒப்புதலோடு நடப்பதால் பிழையில்லை என்பது கருத்து. ஆனால் திருக்குறள் அதனை அறத்துப்பாலில் வைத்து ஆராய்வதால் பாவம் என்றே வலியுறுத்துகிறது. நடப்பியலில் அது ஒருவனுக்கான பெருமையைச் சீர்குலைத்துவிடும் என்றும் சுட்டுகிறது.

“எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்
தேரான் பிறனில் புகல்” 27

என்னும் குறட்பாவிற்குக்,

“காமமயக்கத்தால் தினையளவும் தம் பிழையை ஓராது பிறனுடைய இல்லின்கண் புகுதல் எத்துணைப் பெருமையுடையார் ஆயினும் ஒருவர்க்கு யாதாய் முடியும்?” 28

என வினாவடிவில் அமைந்த குறட்பாவிற்கு வினா வடிவிலேயே உரையெழுதியிருக்கிறார். எழுதியவர்,



‘தேரான் பிறன்’ என்பதனைத் ‘தம்மை ஐயுறாத பிறன் என்று உரைப்பாரும் உளர்”29

எனப் பிறர் கூறும் உரைப்பகுதியினைச் சுட்டிச் செல்கிறார்.




__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

1.3.3.1. அழகரின் அரிய நோக்கு

அதிகாரம் அறத்துப்பாலில் அமைந்துள்ளதாலும் ‘பிறனில்’ என்பதற்குப் பிறன் ஒருவனுடைய மனைவி இருக்கும் இல்லம் என்னும் பொருளே சிறத்தலாலும் ‘தேரான்’ என்பதற்குத் தாம் செய்யும் பிழையை உணராதவன் என்னும் பொருள் பொருத்தமுடையது என்பதாலும் அவ்வாறு தேராமைக்குக் காமமே காரணம் என்பதாலும் ‘தம்மை ஐயுறாத பிறன்’ என்பதில் பொருட்சிறப்பு ஏதுமில்லையாதலாலும் பிறனை ஏமாற்றுதல் என்பதனினும் கணநேரக் காமத்திற்காக ‘அறவழு’ உண்டாக்கும் வடு பெரிது என்பதாலும் அழகருக்கு இவ்வாறு உரைகூற நேர்ந்தது. மேலும் இலக்கிய நுகர்வு அடிப்படையிலும் ‘எனைத்துணை’ என்பதற்கேற்பத் ‘தினைத்துணை’ என்னும் முரண் தரும்பொருள் நுட்பத்தை அழகர் சிந்தித்து உரையெழுதுவதாகக் கருதலாம். தினைத்துணையும் தேரான் (ஆகி) பிறனில் புகல் (செய்யின்) எனைத்துணையார் ஆயினும் என்னாம்? என்னும் உரைநடை நிரலை ‘என்னாத்த படிச்சு என்னாத்த செய்யறது?” என்னும் வழக்கோடு ஒப்புநோக்குக.

‘பிறனில் புகல்’ என்னும் காரியத்திற்குத் ‘தேராமையைக் காரணமாக்கினால்தான் அறம் சிறக்க ஏதுவாகும். ‘தேராதவனாகிய பிறன்’ என்பதனினும் ‘அறக்கழிவு’ என்பதனைத் தான் தேராமல்’ என்பது வலிமையுடைத்து. அதிகாரம் பிறனில் விழைபவனுடைய ஒழுக்கம் பற்றியதேயன்றித் ‘தம்மை ஐயுறாத பிறனைப் பற்றியதன்று’. அழகர் இந்த அளவுக்குச் செல்லவில்லை. ‘இப்படியும் உரை அமைந்திருக்கிறது’ அப்படிச் சொல்வதற்கு இடமிருக்கிறது என்ற அளவில் சுட்டி அமைதியடைகிறார்.

1.3.4. ஆவது அறிதல் என்றால் என்ன?

திருவள்ளுவர் அடையாளப்படுத்தும் பத்து உடைமைகளில் அறிவுடைமை என்பதும் ஒன்று. இவ்வதிகாரத்தில் ஐந்து பாடல்களில் அறிவின் இலக்கணம் கூறிய வள்ளுவர், தொடர்ந்து அவ்வறிவினை உடையாரது இலக்கணத்தைக் கூறுகிறார். அறிவு நுண்பொருளாதலின் அதன் உடைமையை உடையார் செய்யும் செயல்வழியேயன்றிப் பிறவழி அறிதல் இயலாதாம். எனவே எதிர்வருவதை அறியும் ஆற்றலுடையாரும் அஞ்ச வேண்டியதற்கு அஞ்சுபவருமே அறிவுடையார் என இலக்கணம் வகுப்பர் (427, 428). அவ்விலக்கணம் கூறும் குறட்பாக்களுள்,

“அறிவுடையார் ஆவது அறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர்”30

என்பதும் ஒன்று. இக்குறட்பாவிற்கு,

“அறிவுடையராவார் வரக்கடவதனை முன் அறிய வல்லார் அறிவிலராவார் அதனை முன் அறிய மாட்டாதார்”

முன் அறிதல்: முன்னே எண்ணி அறிதல். அஃது அறிகல்லாமையாவது; வந்தால் அறிதல்”31

என்னும் விளக்கத்தினை அழகர் எழுதுகிறார். எழுதி,

“இனி, ‘ஆவது அறிவார்’ என்பதற்குத் ‘தமக்கு நன்மையறிவார்’ என்று உரைப்பாரும் உளர்”32

என ஆவது அறிதல் என்னும் தொடருக்குப் பிறர் காணும் உரையினைப் பதிவிடுகிறார். ஆவது என்னும் தொடருக்குச் செயப்படுபொருளாகத் தமக்கு ஆவது எனக்கொள்ளுமம் பிறருடைய உரைக்கருத்துப் பற்றி எதுவும் தெரிவிக்காது அப்படியே பதிவு செய்து விடுகிறார்.

1.3.4.1. அழகரின் அரிய நோக்கு

பிறிதின் நோய் தன்நோய்போல் போற்றாத நிலையில் அறிவினால் உண்டாகும் பயனேதும் இல்லையாதலால் அறிவின் பயன் பிறர் நலம் பேணுதலே என்பது சொல்லாமல் பெறப்படும். தனக்கு மட்டுமன்றிப் பிறருக்கும் கேடு வரும் செயல்ளைத் தன் இருவகை அறிவாலும் உய்த்துணர்ந்து காப்பதே அறிவுடையாருக்கு இலக்கணமாக இருத்தல் இயலும்; ‘எதிரதாக் காக்கும் அறிவினார்’ என்பதும் ‘வருமுன்னர் காவாதான் வாழ்க்கை’ என்பதும் அக்கருத்தின் சாரமே! ‘ஆவது அறிவது’ என்பதற்குத் தமக்கு வரும் நன்மை என உரைகொள்வது அறிவுடைமையின் முழுப்பயனைச் சுட்டுவதாகத் தெரியவில்லை. மேலும் அவ்வுரைப்பொருள் அழகரின் உரைப்பொருளிலேயே அடங்கிவிடுகிறது என்பதையும் நோக்கினால் அழகர் உரையின் மாண்பு விளங்கும். இருப்பினும் இவற்றில் எதனையும் முன்னெடுக்காது ‘தமக்கு நன்மை அறிவார்” என்று பிறர் கூறுகின்றனர்’ என வாளா அமைந்துவிடுகிறார்.

1.3.5. அகத்திணை நுட்பம்

முப்பெரும் பொருண்மைகளுக்கு உரையெழுதியவர் அழகர். அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கனுள் தொடக்கத்திலேயே ‘வீட்டை’த் தவிர்த்துவிடுகிறார். அவருடைய உரை யாண்டும் முரண்பாடு இல்லாமல் அமைந்ததற்கு இது ஒரு தலையாய காரணம். அந்த வகையில் காமத்துப் பாலுக்கு உரையெழுதுகிறபோது அகத்திணைத் தலைமக்களாகவே அவர் மாறிவிடுகிறார். அகத்திணையின் தலைமைப் பாத்திரம் தோழியே என்பது அறிஞர் முடிவு. தோழிக்கும் காதல் உண்டு. தோழி தலைவியாகிறபோது தலைவி தோழியாவாள். சுட்டி ஒருவர் பெயர்கொளாமைக்குக் காரணம் இதுதான். கண்ணகிக்குத் தேவந்தி தோழியாகலாம். ஆனால் தேவந்திக்குக் கண்ணகி தோழியாக முடியாது. இந்த அகப்பொருள் மரபை உள்வாங்கிக் கொண்டாலேயொழிய அகத்திணை இலக்கியங்களைச் சுவைப்பது கடினம்.

1.3.5.1. அழகர் செய்துகொள்ளும் அதிகாரப் பொருளமைதி

ஏனைய பால்களில் உள்ள அதிகாரங்களைப் பொருண்மை நிலைக்கு ஏற்பப் பகுத்து உரையெழுதும் அழகர் காமத்துப்பாலின் அதிகாரப்பகிர்வை அகத்துறைகளின் அடிப்படையில் கொள்கிறார். சான்றாக, ‘அவர் வயின் விதும்பல்’ என்னும் அதிகாரப் பொருண்மையைக் கீழ்க்கண்டவாறு பகுத்துக் கொள்கிறார்.

தலைமகள் காண்டல் விதுப்பினாற் சொல்லியது (1261)
ஆற்றாமை மிகுதலின் இடையீடின்றி நினைக்கற்பாலையல்லை, சிறிது மறக்கல் வேண்டும் என்ற தோழிக்குச் சொன்னது (1262-1264)
தலைமகன் வரவு கூற “ஆற்றாயாய்ப் பசக்கற் பாலையல்லை” என்ற தோழிக்குச் சொல்லியது (1265 -1267)
வேந்தற்கு உற்றுழி பிரிந்த தலைமகன் வினைமுடிவு நீட்டித்துழித் தலைமகளை நினைந்து தன்னுள்ளே சொல்லியது. (1270)
இந்தப் பாகுபாடு அதிகாரப் பொருண்மையை நன்கு உள்வாங்குதற்கும் ‘கூற்று யாருக்கு உரியது’ என்பதை அறிந்து கொள்வதற்கும் அதனால் வெளிப்படும் உணர்ச்சியினைத் துல்லியமாக உணர்ந்து கொள்வதற்கும் பயன்படலாம் என்பது அழகர் கருத்து. இந்த அதிகாரத்தில் வந்த ஒரு குறட்பா இப்படி அமைகிறது,

“புலப்பேன்கொல்? புல்லுவேன் கொல்லோ? கலப்பேன்கொல்?

கண் அன்ன கேளிர் வரின்”33

இந்தக் குறட்பாவிற்கு,

கண்போற் சிறந்த கேளிர் வருவராயின், அவர் வரவு நீட்டித்தமை நோக்கியான் புலக்கக் கடவேனோ? அன்றி என் ஆற்றாமை நோக்கிப் புல்லக் கடவேனோ? அவ்விரண்டும் வேண்டுதலான் அவ்விரு செயல்களையும் விரவக்கடவேனோ? யாது செய்யக் கடவேன்?34

என்று உரையெழுதிப்,

“புலவியும் புல்லலும் ஒரு பொழுதின் கண் விரவாமையின் ‘கலப்பேன்கொல்’ என்றாள். மூன்றனையும் செய்தல் கருத்தாகலின் விதுப்பாயிற்று.” 35

என்ற விளக்கத்தையும் தருகிறார். தந்து,

“இனிக் கலப்பேன்கொல் என்பதற்கு “ஒரு புதுமை செய்யாது
பிரியாத நாட்போலக் கலந்து ஒழுகுவேனோ? என்று
உரைப்பாரும் உளர்.” 36

எனப் பிறர் கூறும் உரையைப் பதிவு செய்கிறார் அழகர்.




__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

1.3.5.2. அழகரின் அரிய நோக்கு

தலைவியின் விதும்பலுக்குக் காரணம் தலைவனின் வரைவு நீட்டிப்பே. நீட்டித்து வந்ததால் புலப்பதா? நீட்டித்தாலும் வந்துவிட்டானே என்பதால் புல்லுவதா? புலத்தலையும் புல்லலையும் ஒரே காலத்தில் செய்ய இயலாதே? புலக்குங்கால் புல்லல் ஆகாது. புல்லுங்கால் புலத்தல் ஆகாதே என்னும் தலைவியின் தடுமாற்றத்தையும் வாராத் தலைவன் வந்துழி அவள் வெளிப்படுத்தும் உணர்ச்சி மெய்ப்பாடுகளையெல்லாம் உள்வாங்கிக் கொண்டு அழகர் உரையெழுதுகிறார். பிறர் புலத்தல், புல்லல் ஆகிய இரண்டு செயல்களின் வேறாய் இயல்பான செயலொன்றே இருப்பதாக எண்ணி உரையெழுதினர். இலக்கணம் அறியாமையைப் போக்குவது. இலக்கியம் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வது. அவ்வனுபவங்களை அழகர் தம் கற்பனையில் முழுமையாக்கித் தருகிறார். இருந்தும் பிறருடைய கருத்தினைப் பதிவு செய்வதோடு அமைந்துவிடுகிறார்.

1.3.6. ‘எனக்கு’ என்றவர் தலைவியா? தோழியா?

அழகர் தமிழ் மரபறிந்தவர். அவருடைய உரை பலவிடங்களில் இலக்கிய மரபு தழுவி அமைந்துள்ளது. திருக்குறள் ஓர் இலக்கியம். அதற்கு இலக்கிய மரபுசார்ந்த உரை பொருத்தமே. சான்றாகக் ‘கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை’ என்பதைச் சிலர் அறிவியல் கண்கொண்டு திறனாய்வு செய்வர். பத்தினிப்பெண்கள் மழைவேண்டின் உடன் மழை வரும் என்பது அந்நாள் சமுதாய நம்பிக்கை. இந்த நம்பிக்கை அவள் கற்பின் வலிமை பற்றிய கற்பனை மதிப்பீடு. வான்மழை பெறல் வேண்டின் தருகிற்கும் பெருமையளே! என்பது இலக்கிய மரபு. அந்தக் குறட்பாவின் இறுதியில் ‘இதனால் கற்புடையாளது ஆற்றல் கூறப்பட்டது’ என்னும் அழகர் குறிப்பினைப் பலரும் நோக்குவதில்லை. இது கட்டுரைப் பொருளுக்கு நேரடித் தொடர்பு இல்லையெனினும் அழகரின் உரை, மரபு சார்ந்த உரை என்பதற்காகச் சுட்டப்பட்டது. அகத்திணை மரபில் தோழி என்பவள் செவிலியின் மகள். ‘ஒன்றித் தோன்றும் தோழி’ என்பது தொல்காப்பியம். எனவே தலைவியுடன் இருவகைக் கைகோளில் உடனிருக்கும் தோழியே கூற்றுக்கு உரியவள். தலைவியைத் தோழி ஆற்றுவதுதான் புலனெறி வழக்கமேயன்றித் தோழியைத் தலைவி ஆற்றியதற்குப் புலனெறி வழக்கம் இன்று. பிரிவின் கண் தலைமகனைத் தலைவியது ஆற்றாமை கூறித் தடுப்பது தோழியின் பணியேயன்றித் தலைவி தன் ஆற்றாமையைத் தானே வெளிப்படுத்தல் இலக்கண மரபன்று. மரபை மறக்காத அழகர்,

“செல்லாமை உண்டேல் எனக்கு உரை மற்று நின்
வல்வரவு வாழ்வார்க்கு உரை”37

என்னும் குறட்பாவைப்,

‘பிரிந்து கடிதின் வருவல் என்னும் தலைமகனுக்குத் தோழி சொல்லியது”38

என்னும் துறையின் கீழ்க் கொண்டுவந்து,

“நீ எம்மைப் பிரியாமை உண்டாயின் (அதனை) எனக்குச் சொல்., அஃதொழிய (பிரிந்து போய்) நின் விரைந்து வருதல் (சொல்வையாயின்), (அதனை) (அதுபொழுது) வாழ்வார்க்குச் சொல்)!”39

என்னும் பொழிப்புரை எழுதுகிறார். எழுதி,

“தலைமகளையொழித்து எனக்கு என்றாள் “தான் அவள்” என்னும் வேற்றுமையன்மையின், ………………………

இதனைத் தலைமகள் கூற்றாக்கி உரைப்பாரும் உளர்”40

என இலக்கண மரபு சுட்டுகிறார். இந்தக் கூற்றினைத் தலைவிக்கு ஆக்குவதால் ‘உரைப்புரட்சி’ எதற்கும் வாய்ப்பில்லை, தலைவிக்கும் தோழிக்குமான உரிமை ஒத்திருப்பதால். ஆனால் ‘அவர் அப்படிச் சொல்கிறார்., நான் இப்படிச் சொல்லுகிறேன். அவர் பார்வை அத்தகையது., என் பார்வை இத்தகையது’ எனப் பிற உரையாசிரியர்களைச் சுட்டுவதோடு அமைகிறார். அழகர் இதனைத் தோழி கூற்றாக்கியதற்குக் காரணம் என்ன என்பதைச் சிந்தித்தால் சில இலக்கண மரபு. இலக்கிய மரபுகள் புலனாகும்.

“தலைவரும் விழுமம் நிலையெடுத் துரைப்பினும்
போக்கற் கண்ணும் விடுத்தற் கண்ணும்
………………………………………………………………………………………………
………………………………………………………………………………………………
ஒன்றித் தோன்றும் தோழி மேன” 41

என்னும் அகத்திணை இலக்கண மரபும்,

“எந்நாளோ நெடுந்தகாய் நீ செல்வதுஅந்நாள்
கொண்டிறக்கம் இவள் அரும்பெறல் உயிரே” 42

என்னும் இலக்கிய மரபும் அகத்திணையின் தலைமை உறுப்பினராகிய தோழியின் கூற்றுப் பகுதிகளாகக் காட்டுவது அழகரின் நினைவுக்கு வந்திருக்கக் கூடும். இவ்வாறு பொருத்தமான கூற்றுக்குரியாரை அடையாளப்படுத்துவதில் அழகருக்கு இருக்கும் ஆர்வம் அக்குறட்பாவின் இலக்கியச் சுவையை மிகுவிப்பதற்கேயன்றி வேறெதுவாயிருக்க இயலும்?

நிறைவுரை

உரையாசிரியர் ஒருவர் தமது உரையை வலியுறுத்துங்கால் ‘ஒரு நெறியையே’ கடைப்பிடிக்கும் உரையுலகில் பண்பாட்டு அடிப்படையிலான உரைநெறியை அழகர் கடைப்பிடித்திருக்கிறார் என்பதே இதுவரை இக்கட்டுரையில் விளக்கப்பட்டவையின் சாரமாகும். ‘தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்’ என்னும் முனைப்பு பழந்தமிழ் உரையாசிரியர்களிடம் காண்பது அரிது. அழகரிடம் அது அறவேயில்லை. ‘எனக்கு இப்படித் தோன்றுகிறது’. அவருக்கு அப்படித் தோன்றுகிறது., ‘அதற்கு அது காரணம்’ என்று கூறுகிற உயர்ந்த பண்பாட்டைக் காணமுடிகிறது. ஒன்றுக்கு மேற்பட்ட வேறுபட்ட உரைகள் தனக்கே தோன்றுவதையும் பதிவு செய்கிறார். தனக்கான உரிமை பிறர்க்கும் உண்டு என நம்புகிறார். அவர்க்கான உரிமையை மதிக்கிறார். கவிஞர்களைச் சான்றோர்கள் என்று அழைக்கும் மரபு கிடையாது. ஆனால் சங்கப் புலவர்கள் ‘சங்கச் சான்றோர்கள்’ என அழைக்கப்படும் அந்தப் பெருமையைப் பெற்றிருந்தார்கள். அவர்களுடைய புலமைக்கு அவர்களுடைய சான்றாண்மை தாங்கு தளமாயிருந்ததே காரணம். சங்கச் சான்றோர்களைத் தாங்கிய அதே சான்றாண்மை உரையாசிரியராகிய அழகருடைய புலமையையும் தாங்கியிருப்பதைச் சுட்டிக் காட்டுவதற்கு இக்கட்டுரை பயன்படக் கூடும். “பண்டைச் செந்தமிழ்ப் பனுவல்களுக்கு உரையியற்றிய பேரறிஞர் பலருள்ளும் தம் உரையோவிய நுட்ப வினைத்திறத்தால் எம் உள்ளங்கவர்ந்து நிற்பவர் பரிமேலழகரேயாவார்” 43 என்னும் நாவலர் ந.மு.வே. நாட்டார் ஐயா அவர்களின் புகழுரையோடு இக்கட்டுரை தன்னை நிறைவு செய்து கொள்கிறது.

சான்றெண் விளக்கம்

பவணந்தி முனிவர் நன்னூல் நூ.எண். 19
தொல்காப்பியர் தொல்காப்பியம் நூ.எண். 1361
திருவள்ளுவர் திருக்குறள் கு.எண். 542
மேலது கு.எண். 1068
பரிமேலழகர் மேலது உரை கு.எண். 1093
திருவள்ளுவர் திருக்குறள் கு.எண். 1092
மாணிக்க வாசகர் திருவாசகம் (சிவ.பு) வரி. 76
கம்பர் கம்பராமாயணம் பா.எண். 516
குலசேகர ஆழ்வார் பெருமாள் திருமொழி பா.எண். 690
திருவள்ளுவர் திருக்குறள் கு.எண். 583
பரிமேலழகர் மேலது உரை
மேலது
திருவள்ளுவர் திருக்குறள் கு.எண். 1116
பரிமேலழகர் மேலது உரை
மேலது
திருவள்ளுவர் திருக்குறள் கு.எண். 101
பரிமேலழகர் மேலது உரை
மேலது
மேலது
திருவள்ளுவர் திருக்குறள் கு.எண். 223
பரிமேலழகர் மேலது உரை
மேலது
மேலது
மேலது
மேலது
மேலது
திருவள்ளுவர் திருக்குறள் கு.எண். 144
பரிமேலழகர் மேலது உரை
மேலது
திருவள்ளுவர் திருக்குறள் கு.எண். 427
பரிமேலழகர் மேலது உரை
மேலது
திருவள்ளுவர் திருக்குறள் கு.எண். 1267
பரிமேலழகர் மேலது உரை
மேலது
மேலது
திருவள்ளுவர் திருக்குறள் கு.எண். 1151
பரிமேலழகர் மேலது துறைவிளக்கம்
பரிமேலழகர் திருக்குறள் உரை கு.எண். 1151
மேலது
தொல்காப்பியர் தொல்காப்பியம் நூ.எண். 985
பெருங்கடுங்கோ கலித்தொகை. பா.க. பா.எண். 5.18—19
ந.மு.வேங்கடசாமி நாட்டார் இலக்கியக் கட்டுரைகள் ப185
துணைநூற் பட்டியல்

1. நச்சினார்க்கினியர்
தொல்காப்பியம் பொருளதிகார உரை
தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம், சென்னை
மறுபதிப்பு – 1967

2. திருக்குறள் பரிமேலழகர் உரை
வை.மு.கோபால கிருஷ்ணமாச்சாரியார் அவர்கள் எழுதிய குறிப்புரையுடன்
உமா பதிப்பகம் சென்னை – 600 001
முதற்பதிப்பு – 2009



3. எஸ்.வையாபுரிப்பிள்ளை
தமிழ்ச்சுடர் மணிகள்
குமரி மலர்க் காரியாலயம்
தேனாம்பேட்டை, சென்னை – 600 018
முதற்பதிப்பு – 1949

4. புலவர் ச.சீனிவாசன்,
திருக்குறள் பரிமேலழகர் உரை அகர நிரல்
மெய்யப்பன் தமிழாய்வு மையம்,
53, புதுத்தெரு, சிதம்பரம் – 608 001
முதற்பதிப்பு – 2002

5. முனைவர் நா.பாலுசாமி
பன்முகப் பார்வையில் பரிமேலழகர்
அன்னம், நிர்மலா நகர், தஞ்சை – 613 007
முதற்பதிப்பு – 2005

6. மு.வை.அரவிந்தன்
உரையாசிரியர்கள்
8/7, சிங்கர் தெரு
பாரிமுனை, சென்னை – 600 108
முதற்பதிப்பு – 1968

7. நாவலர். ந.மு.வேங்கடசாமி நாட்டார்
இலக்கியக் கட்டுரைகள்
நாவலர். ந.மு.வேங்கடசாமி நாட்டார் கல்வி, கலை, பண்பாட்டு அறக்கட்டளை,
கபிலர் நகர், வெண்ணாற்றங்கரை,
தஞ்சாவூர் – 613 003

ஆய்வறிஞர் மதிப்புரை (Peer Review):

‘அடுத்தவர் பார்வையும் அழகர் நோக்கும்’ என்னும் தலைப்பில் அமைந்த இக்கட்டுரையைப் பலமுறை பயின்று கட்டுரையின் அனைத்துக் கூறுகளையும் உள்வாங்கி ‘வல்லமை’ முன்மதிப்பீட்டு விதிகளைக் முழுமையாகக் கருத்திற்கொண்டு செய்யப்படும் முன் மதிப்பீடு

1. படைப்புப் பற்றிய ஆய்வினைத் தவிர்த்துப் படைப்பாளர் மற்றும் திறனாய்வாளன் முதலியோரின் புலமை நலன்களையும் பண்புநலன்களையும் அவர்தம் படைப்புக்களைக் கொண்டே ஆராய்வது என்பது ‘அரைத்தமாவையே அரைக்கும்’ ஆய்வுலகில் ஒரு புதிய முயற்சி. பாரியைப் பாடிய கபிலரின் பாடலகளைக் கொண்டு கபிலரின் பண்புகளை ஆராய்வது போன்றது இது.

2. ‘உரை வேற்றுமையும் அழகர் பண்பாடும்’ என்னுங் குறுந்தலைப்பில் ஆய்வாளர் நிரல்படுத்தியிருப்பன பாராட்டுக்குரியன.

3. ‘உரைப்பினும் அமையும்’ என்னுந் தொடர்கொண்டு அழகர் குறட்பாவிற்கு ஒன்றுக்கு மேற்பட்ட உரைகாண் நெறியை வரவேற்பவர் என்பதை ஆய்வாளர் நிறுவியுள்ளார்.

4. ‘செய்யாமல்’ செய்யாமை என்னும் இருவேறு பாடங்களில் ‘செய்யாமல்’ என்பதையே தான் பாடமாகக் கொண்டதற்கான அழகர் கூறும் காரணத்தைக் கட்டுரையாளர் குறிப்பாகப் பெறவைத்துள்ளார்.

5. ‘ஈதல்’ என்பதைப் பிறர் பொருட்பன்மையாகக் கொணடதானாலேயே அவ்வாறு உரைத்தனர்” என்று காட்டும் அழகர் முந்தைய குறட்பாவை நோக்கி (தீது) ஒழிதற்குரியவனையும் (நன்று) செய்தற்குரியவனையும் (குலனுடையான்) என அடையாளப்படுத்துவதற்காகவே தான் தொழில் பண்பாகக் கொண்டதை ஆய்வாளர் புலப்படுத்தியுள்ளார்.

6. ‘கலப்பேன் கொல்? என்பதனுள் கலப்புக்குரியவனவாக அழகர் சொல்லியிருப்பதையும் பிறர் கூறியிருப்பதையும எடுத்துக் காட்டும் ஆய்வாளர் (தலைவியின்) செயலமைதியின் புரிதல் திறனைக் கற்பாருக்கே விட்டுவிடுகிறார்.

7. இலக்கிய ஆராய்ச்சி பண்பாட்டு ஆராய்ச்சியாகவும் அமையலாம் என்பதற்கும் இலக்கிய உரைக்குள் இத்தகைய பண்பாடடுக் கூறுகளும் அமைந்துள்ளன என்பதற்கும் இக்கட்டுரை ஒரு எடுத்துக்காட்டாகக் கருதப்படலாம்.

8. ‘பார்வையும் நோக்கும் என்னும் தலைப்பில் ‘நோக்கு’ என்பதன் பொருள் விளக்கத்திற்காக ஒன்றுக்கும் மேற்பட்ட சான்றுகளைத் தந்திருக்கும் ஆய்வாளர் அவற்றைப் பத்தியிலேயே நிரல்படச் சொல்லி, ‘முதலிய இலக்கண இலக்கியப் பதிவுகளிலும்’ என் அடக்கியிருக்கலாம். தரவுகளின் பெருமை (சானறுகளின்) எண்ணிக்கையால் அல்ல. தரத்தால் தன்மையால்.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

அதிகார முறைமையும் அழகர் திறனும்
April 10, 2020

புலவர் முனைவர் கோ.சுந்தராம்பாள்
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை
பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி,
விளார் புறவழிச்சாலை,
தஞ்சை மாவட்டம் – 613006.
மின்னஞ்சல் முகவரி – egowrisss@gmail.com

முன்னுரை

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றாக வைத்து எண்ணப்படினும் தமிழிலக்கிய உலகில் தனித்தும் தலைமை சான்றும் விளங்குவது திருக்குறளே. நூற்று முப்பத்து மூன்று அதிகாரங்களைத் தன்னகத்தே கொண்டு திகழும் தமிழின் தலைமைப் பனுவலான அதற்கு உரைகண்ட சான்றோருள் பரிமேலழகரும் ஒருவர். அவருடைய உரையழகை அவர் மேல் ஏற்றி இக்கட்டுரையில் இனி அவர் ‘அழகர்’ என்றே குறிக்கப்படுவார். திருக்குறளின் முதல் உரையாசிரியர்கள் பதின்மருள் காலத்தால் பிற்பட்ட அழகரின் உரை ஏனைய உரைகளை எல்லா உரைக்கூறுகளிலும் விஞ்சிக், காலத்தை வென்றும் கடந்தும் நிற்கும் சிறப்பினை உடையதாக விளங்குகிறது. அத்தகைய சிறப்புக் கூறுகளுள் ஒன்றான திருக்குறள் அதிகார முறைவைப்பினுக்கு அழகர் கூறும் விளக்கத்தினைச் சுருக்கமாக எடுத்துரைப்பதையே இக்கட்டுரை தனது முதன்மை நோக்கமாகக் கொண்டு அமைகிறது.

1. அழகரின் உரை மாண்பு

எப்பொருளைப் பற்றியும் எழுதுவதற்கு முன்னால் அதுபற்றிய முந்தைய அறிஞர்தம் கருத்துக்களை அறிந்து கொள்ள முயல்வது ஆய்வு நெறிகளுள் தலையாயதாகும். செந்நெறியாகிய அந்நெறியைப் பின்பற்றிய அறிஞருள் அழகரும் ஒருவர். இவர் உரைக்கு முன்னோடியாக இருந்த உரை மணக்குடவர் திருக்குறளுக்கு எழுதிய உரையே ஆகும். தமிழ் மரபார்ந்த அவ்வுரை ‘செந்தமிழ்ச் செம்மல்’ வ.உ.சி. அவர்களால் பதிப்பிக்கப் பெற்ற சிறப்பினையுடையது. “பரிமேலழகருக்குச் சிறந்த வழிகாட்டியாய் இருந்தவர் மணக்குடவரே. இவர் அமைத்துச் செப்பனிட்ட பாதையிலேயே பரிமேலழகர் முன்னேறிச் செல்கிறார்” என்னும் கருத்து அழகர் உரை ஆதரவாளரும் எதிர்ப்பாளரும் சிந்தனையுள் இருத்த வேண்டிய ஒன்றாகும்.

1.1. அழகரின் உரை நெறி

தமிழிலக்கிய உரை வரலாற்றில் அழகரின் திருக்குறள் உரை தனிச்சிறப்பினைப் பெற்று நிலைத்திருப்பதற்குப் புறக்காரணங்களைவிட அவ்வுரையின் கட்டுமானமாகிய அகக்காரணமே தலையானதாகும். வேறு எந்த இலக்கிய உரைகளிலும் காண்பதற்கு அரியனவாகிய அக்கட்டுமானச் சிறப்புக்கள் எளிய புரிதலுக்காகப் பின்வருமாறு பட்டியலிடப்படுகின்றன.

குறட்பாவுக்கு உரையெழுங்கால் ஏனையோர் எழுதிய உரைகளை நினைவிற் கொள்கிறார்.
பாடவேறுபாடுகளைக் குறித்துக் காட்டுகிறார்.
பொருத்தமற்ற பாடங்களை விலக்குகிற இவர் தவறான உரையைக் காரணம் காட்டி மறுக்கின்றார்.
மதிக்கத்தக்க பிற உரைகளை ‘என்பாரும் உளர்’ எனச் சுட்டிச் செல்கிறார்.
மாறுபட்ட கொள்கைகளையும் மதிக்கும் பண்பாளரான இவர், போற்றத்தகுந்த வேறுபாடுகளைப் போற்றுகின்றார்.
மேற்சொல்லப்பட்ட அழகரின் இத்தகைய உரை மாண்புகள், அவ்வுரையில் காணப்படும் இலக்கண மற்றும் இலக்கிய சிறப்புக்கள் உள்ளிட்ட அனைத்தும் தனித்தனித் தொகுப்புக்கும் ஆய்வுக்கும் உட்படும் சிறப்புக்குரியன. அவற்றுள் ஒன்றான அதிகார முறைவைப்புக்கான விளக்கம் பற்றிய ஆய்வு பின்வரும் பத்திகளில் தொடர்கிறது.

1.2. அழகர் நோக்கில் இயல்களுக்குள் அதிகாரங்கள்

மானுடத்திற்கான நெறிமுறைகளை மூன்று பகுதிகளாகப் பிரித்துணர்த்தும் திருக்குறளில் அறத்துப்பால், ‘பாயிரம், இல்லறவியல், துறவறவியல், ஊழியல்’ என நான்காகவும், பொருட்பால், ‘அரசியல் அங்கவியல், ஒழிபியல்’ என மூன்றாகவும், காமத்துப்பால், ‘களவியல், கற்பியல்’ என இரண்டாகவும் அமைந்து நூல் நிறைகிறது. தொல்காப்பியத்தில் ஒவ்வொரு அதிகாரமும் ஒன்பது இயல்களைக் கொண்டிருப்பதும் திருக்குறள் தன்னுள் ஒன்பது இயல்களைக் கொண்டிருப்பதுமான ஒற்றுமை வியப்பானதாகக் கருதப்படலாம். அழகர் திருக்குறள் அதிகாரங்களை ஒன்றிலிருந்து இறுதிவரை நிரலாக நோக்குவதில்லை. ஒவ்வொரு இயலையும் தனித்தனிப் பொருண்மை கூறும் பகுதிகளாகக் கொண்டு அவற்றுள் அடங்கியிருக்கிற அதிகாரங்களுக்கேற்றபடியே வைப்புமுறை கூறி விளக்குவதை அறிய முடிகிறது.

1.2.1 இயலுக்குள் அதிகாரங்கள் ஒரு சிந்தனை

இயலுக்குள் ‘அதிகாரம்’ என்னும் வரையறையால் தமது உரையில் பொருட்சிதைவோ மயக்கமோ ஏற்படுவதற்கான வாய்ப்பினை அழகர் தவிர்த்து விடுகிறார். அதாவது இல்லறவியல் அதிகாரக் கருத்துக்கள் அவ்வியலுக்கு உரியன, துறவறவியலில் உரைக்கப்பட்ட கருத்துக்கள் துறவறவியலுக்குரியன என்னும் தெளிவை முன்னிறுத்திக் கொள்கிறார். இந்தத் தெளிவு ஒவ்வொரு பாலிலும் அவர் பிரித்தமைத்துக் கொண்ட இயலிலும் இயலுக்குள் அமைந்த அதிகாரங்களுக்குள்ளும் புலனாவதை அறியலாம். சான்றாகத் திருக்குறளில் ஒரே அதிகாரம் ஒரு இயலாக அமைந்திருப்பது ‘ஊழ்’ என்னும் அதிகாரமாகும். இது துறவறவியலின் இறுதியாக அமைந்திருப்பது. இது அவ்வியலோடு இணையாது தனித்ததொரு இயலாக அமைந்ததன் காரணத்தை அறிய முயல்கிறார் அழகர். ‘ஊழ்’ என்பது அறத்தோடு தொடர்புடையது என்பதும் பொருளுக்கோ இன்பத்திற்கோ தனித்தனியான தொடர்பற்றது என்பதும் அவருக்குத் தெரிந்த உண்மை. இந்த உண்மையைத் தெரிந்து கொண்டதாலேயே,

“இது பொருள் இன்பங்கள் இரண்டற்கும் பொதுவாய் ஒன்றனுள்
வைக்கப்படாமையானும் அறத்தொடு இயைபுடைமையானும் அதனது இறுதிக்கண் வைக்கப்பட்டது.”
என அதிகார வைப்பு முறைக்கு விளக்கம் கூற முடிகிறது. வேறுவகையாகச் சொன்னால் 38ஆவது அதிகாரமாக உள்ள ஊழ் என்பது 109ஆவது அதிகாரமாக அமைக்கப்படாததற்கான காரணத்தைக் கண்டறிய முயல்கிறார் என்பதாம். ‘ஊழ்’ தனி இயலானதற்கும் அது அறத்துப்பாலின் இறுதியில் வைக்கப்பட்டதற்கும் அழகரின் இந்த விளக்கமே துணை புரிகிறது. ஓர் இயலின் தொடக்கமாகவும் இறுதியாகவும் அமைந்துள்ள ‘ஊழ்’ என்னும் அதிகாரத்தின் வைப்புமுறை பெரிதும் நுட்பமானது., சிந்திகக்கத்தக்கது. இத்தகைய நுட்பமான சிந்தனை சார்ந்த அதிகார வைப்புமுறைகள் ஒருசில எடுத்துக்காட்டுக்களால் விளக்கப்படுகின்றன.

1.3. அழகரின் அதிகார வைப்புமுறைக் கோட்பாடுகள்

பொதுவாக ஒவ்வொரு அதிகாரத் தொடக்கத்தில் அதிகாரத் தலைப்புக்கான விளக்கத்தைக் கூறி அதற்கும் அதற்கு முந்தைய அதிகாரத்திற்கும் உள்ள பொருள் தொடர்பால் வைப்புமுறையை விளக்குவது அழகருக்கு இயல்பு. ஆனால் ஒருசில நேர்வுகளில் முற்றிலும் மாறுபட்டுப் பெரிதும் நுட்பமாக வைப்புமுறை கூறுவது அவர்க்கேயுரிய தனிச்சிறப்பாகும்.

அதிகாரத் தலைப்புக்கான பொருளை விளக்குவதன் மூலம் இரண்டு அதிகாரங்களின் வைப்புமுறைப் பொருத்தத்தை விளக்குதல்
முந்தைய அதிகாரத்தின் இறுதியிலேயே பின்வரும் அதிகாரத்திற்கான வைப்புமுறையை விளக்குதல்
பொருள் விளக்கத்தை மட்டுமே கூறி வைப்புமுறையைக் கற்பாரே உணரச் செய்தல்
இரண்டுக்கும் மேற்பட்ட முந்தைய அதிகாரப் பொருளை விளக்குவதன் மூலம் அதிகார வைப்புமுறைக்கான பொருத்தத்தை விளக்குதல்.
இயலின் இறுதியில் வைப்புமுறைக்கான காரணத்தை விளக்குதல்
என்னும் ஐந்து முறைகளில் திருக்குறள் அதிகார வைப்புமுறைக்கான காரணங்களைப் அழகர் விளக்குவதாகக் கொள்ளலாம்.

1.4. அதிகாரத் தொடக்கத்தில் வைப்புமுறைப் பொருத்தம்

அதிகார வைப்புமுறையை விளக்குவதில் அழகர் பெரிதும் இம்முறையையே பின்பற்றியுள்ளார். சான்றாக,

“இது பெரும்பாலும் அறிவைத் திரித்து இருமையும் கெடுக்கும் இயல்பிற்றாய
அதனைப் (சிற்றினத்தைப்) பொருந்தின், பெரியாரைத் துணைக்கோடல்
பயனின்று என்பது உணர்த்தற்கு இஃது அதன் (பெரியாரைத்
துணைக்கோடலின்) பின் வைக்கப்பட்டது”

எனச் சிற்றினம் சேராமை (46) என்னும் அதிகார வைப்பிற்குக் காரணம் சுட்டுவதும்,

“தகை அணங்குற்ற தலைமகன் இது (குறிப்பறிதல்)
வேண்டுமாகலான் அணங்குறுத்தலின் பின் வைக்கப்பட்டது”

எனக் காமத்துப்பாலின் குறிப்பறிதல் (110) அதிகார வைப்பிற்குக் காரணம் காட்டுவதும் சில எடுத்துக்காட்டுக்கள் ஆகலாம்.

1.5. முந்தைய அதிகாரத்தின் இறுதியில் வைப்பு முறை பொருத்தம்

திருக்குறள் அறத்துப்பால் ஆறாவது அதிகாரம் ‘வாழ்க்கைத் துணைநலம்’ ஏழாவது அதிகாரம் ‘புதல்வரைப் பெறுதல்’ (இதனை ‘மக்கட்பேறு’ என்றே அழைக்கவேண்டும் என்று பெண்ணியச் சிந்தனையாளர் பலரும் கூறுவர். ஆனால் இந்த மாற்றத்தைப் பரிமேலழகருக்கு முன்பே பரிதியார் முதலியோர் உரைகளிலும் காணமுடிகிறது) (419) ‘புதல்வரைப் பெறுதல் என்னும் அதிகாரத் தொடக்கத்தில்,

“இறுபிறப்பாளர் மூவரானும் இயல்பாக இறுக்கப்படும் கடன்
மூன்றனுள் முனிவர் கடன் கேள்வியானும் தேவர்கடன்
வேள்வியானும் தென்புலத்தார் கடன் புதல்வரைப் பெறுதலானும்
அல்லது இறுக்கப்படாமையின் அக்கடன் இறுத்தற் பொருட்டு நன்
மக்களைப் பெறுதல்”

எனப் பொருள் விளக்கம் கூறிய அழகர், ‘அதிகார முறைமை மேலே பெறப்பட்டது’ என முந்தைய அதிகாரத்தின் இறுதியில் அமைந்த அவர்தம் உரைப்பகுதியை அவரே சுட்டிக்காட்டுகிறார். ‘வாழ்க்கைத் துணைநலம்’ என்னும் முந்தைய அதிகாரத்தில் அமைந்த இறுதிக் குறளான,

“மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்
நன்கலம் நன்மக்கட் பேறு”

என்னும் குறட்பாவிற்குச் சிறப்புரை எழுதிய அழகர்,

“வாழ்க்கைத் துணைக்கு ஆவதோர் அணிநலம் கூறி
வருகின்ற அதிகாரத்திற்குத் தோற்றுவாய்
செய்யப்பட்டது”

என அதிகாரங்களின் அமைப்பு முறைக்கு விளக்கமளிப்பதைக் காண முடிகிறது. இவ்வாறு அழகர் உரையெழுதுவதற்குக் காரணமே திருக்குறள் கட்டமைப்பை அவர் ஊன்றி நோக்கியதேயாகும். அதாவது ‘வாழ்க்கைத் துணைநலம்’ என்னும் அதிகாரத்தின் ஏனைய ஒன்பது குறட்பாக்களும் மனைவியின் மாட்சிமையைப் பேச, இவ்வொரு குறட்பா மட்டும் தனித்துநின்று மக்களைப் பற்றிப் பேசுகிறது என்னும் நுட்பத்தை அழகர் புரிந்து கொள்ளுகிறார். கொண்டு, இல்வாழ்க்கையின் நலம் மக்கட்பேறே என்னும் முடிவுக்கு வந்து அடுத்த அதிகாரம் அதனைப் பற்றியே பேசுகிறது என்பதைப் பெறவைத்து விடுகிறார். வாழ்க்கைத் துணை, துணையின் நலம், (இல்வாழ்க்கையின் நலம்) மக்கட்பேறு என்னும் கருத்து நிரலும், ‘வாழ்க்கைத் துணைநலம்’ என்னும் அதிகாரத்தின் இறுதிக் குறட்பா அமைப்பும் அடுத்து நின்ற ‘புதல்வரைப் பெறுதல்’ என்னும் அதிகாரத் தலைப்பும் அழகரின் நுண்மாண் நுழைபுலமும் ஒரே இழையில் ஊடாடுவதை இதனால் புரிந்து கொள்ள இயலும். இவ்வாறு எதிர்வரும் அதிகாரத்தின் வைப்புமுறைக்கு முந்தைய அதிகாரத்தின் இறுதியில் வைப்புமுறை விளக்கம் கூறும் இவர்தம் உரைப்போக்கினை நன்றியில் செல்வம் (101), நல்குரவு (105) முதலிய அதிகாரங்களிலும் பின்பற்றியிருப்பதைக் காணலாம்.

1.6. வைப்புமுறை அமைதியைக் கற்பாரே உணரச் செய்தல்

அதிகாரத் தலைப்பிற்குப் பொருள் விளக்கம் கூறி, வைப்புமுறைக்கான காரணத்தைக் கூறும் நெறிக்கு அடுத்த நிலையில் பெரும்பான்மையான இடங்களில் அழகர் பின்பற்றும் நெறி இதுதான். வைப்புமுறைக்கான காரணம் தெளிவாகுமாறு விளக்கம் அமைந்து விடுதலின் அதற்கான காரணத்தை அவர் தனித்துச் சுட்டாதிருந்திருக்கலாம். மேலும் கற்பாரின் ‘புரிதிறனை’ உயர்வாகக் கருதும் அவரது உயர்பண்பாட்டின் வெளிப்பாடாகவும் கருதலாம். கல்வியின் சிறப்பை முதலில் உடன்பாட்டால் கூறித் தொடர்ந்து ‘கல்லாமை’ என அதன் சிறப்பையே எதிர்மறை முகத்தால் பெறவைத்த திருவள்ளுவர் கேள்வியினால் கல்விச்சிறப்பை நிறைவு செய்கிறார். இவைகளின் விளைவாக அமைவது செயற்கை அறிவு. இச்செயற்கை அறிவுடன் இயற்கையில் அமையும் உண்மையறிவு இணைந்தாலேயே அறிவுடைமை முழுமை பெறும். கல்வி, கல்லாமை, கேள்வி என்னும் நிரலில் அமைந்திருக்கும் ‘அறிவுடைமை’ (43) என்னும் அதிகாரம் உண்மையறிவின் இன்றியமையாமையை வற்புறுத்துவது.

“கல்வி கேள்விகளின் ஆய அறிவோடு உண்மையறிவு
உடையனாதல். அதிகார முறைமையும் இதனானே விளங்கும்”

எனக் கூறி விடுக்கிறார் அழகர். வான்சிறப்பு (2), அறன்வலியுறுத்தல் (4), வாழ்க்கைத் துணைநலம் (6), அன்புடைமை (8), துறவு (35), அவா அறுத்தல் (37), பெரியாரைத் துணைக்கோடல் (45), வலியறிதல் (48), காலமறிதல் (49), இடமறிதல் (50), தெரிந்து வினையாடல் (52), இடுக்கண் அழியாமை (63), வினைத்திட்பம் (67), வினைசெயல்வகை (68), அவையஞ்சாமை (73), நாடு (74), படைமாட்சி (77), படைச்செருக்கு (78), நட்பு (79), நட்பாராய்தல் (80), பண்புடைமை (100), நாணுடைமை (102), இரவு (106), இரவச்சம் (107), புணர்ச்சி மகிழ்தல் (111), படர்மெலிந்திரங்கல் (117), நெஞ்சொடு புலத்தல் (130), புலவி (131), புலவி நுணுக்கம் (132), ஊடலுவகை (133) என்னும் அதிகாரங்களில் எல்லாம் ‘அதிகார முறைமையும் இதனானே விளங்கும்’ என்ற தொடரின் மூலம் வைப்புமுறை அமைதியைக் கற்பாரை உணரச் செய்யும் வகையில் உரையெழுதியுள்ளார் அழகர்.

1.7. ஒன்றுக்கும் மேற்பட்ட அதிகாரங்களின் அடிப்படையில் வைப்புமுறை

இன்னதற்குப் பின் இது என்பது நிரலான வைப்புமுறை. இன்னவைகளுக்குப் பின் இன்னது என்பது கூடுதல் நிரலாகக் கொள்ளப்படலாம் அழகர் ஒரு குறிப்பிட்ட அதிகாரத்திற்கான வைப்புமுறையைப் பதிவு செய்கிற போது அதற்கு முந்தைய அதிகாரத்தை மட்டும் கணக்கில் கொள்ளாது ஒன்றுக்கு மேற்பட்ட முந்தைய அதிகாரப் பொருண்மைகளைக் கருத்திற் கொண்டு வைப்புமுறைக்குப் பொருத்தம் காண்பதை அறிய முடிகிறது. இது பற்றிய விளக்கம் ஒருசில சான்றுகளால் பின்வரும் பத்தியில் ஆராயப்படுகிறது.




__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

1.7.1. அழுக்காறாமை, வெஃகாமை, புறங்கூறாமை

அழுக்காறாமை, வெஃகாமைக்குப் பின் புறங்கூறாமை வைத்தது பற்றிய விளக்கத்தை அழகர் இப்படிப் பதிவு செய்திருக்கிறார். அழுக்காறு, வெஃகுதல், புறங்கூறுதல் ஆகியன மனம், மொழி, மெய் என்னும் களங்களில் தோன்றும் பாவங்களாகும். மனக்குற்றம் ஏனைய குற்றங்களுக்குக் காரணமாகிறது. புறங்கூறுதல் மொழிக்குற்றம். பிறர் ஆக்கம் கண்டவழி அழுக்கறுத்தல், தனக்குரியதல்லாத பொருளை வெஃகுதல் முதலியன மனக்குற்றங்கள். ‘புறங்கூறாமை’ (19) என்னும் அதிகாரத்திற்கு வைப்புமுறை எழுதும் அழகர், இதனைக் கருத்திற் கொண்டு,

“மொழிக்குற்றம் மனக்குற்றம் அடியாக வருதலான், அஃது
அழுக்காறாமை, வெஃகாமைகளின் பின் வைக்கப்பட்டது.”
என எழுதும் உரைப்பகுதியால் குற்றங்களைக் காரண காரியத்தோடு பகுத்து நோக்கும் அழகர் திறம் புலப்படுவதை அறிய முடிகிறது.

1.7.2. இனியவை கூறல் புறங்கூறாமை, பயனில சொல்லாமை

அறத்துப்பாலில் இனியவை கூறல் (18), புறங்கூறாமை (19) என்னும் அதிகாரங்களை அடுத்துப் பயனில சொல்லாமை (20) என்னும் அதிகாரம் அமைந்துள்ளது. இந்த அதிகாரத்தின் இட வைப்புமுறை பற்றிச் சிந்திக்கும் அழகர், அறத்துப்பால் முழுமையையும், அதன்கண் அமைந்துள்ள இயல் அனைத்தையும் ஓரலகாகக் கொள்கிறார். கொண்டு,

“பொய், குறளை, கடுஞ்சொல், பயனில சொல்லாமை என வாக்கின்கண்
நிகழும் பாவம் நான்கனுள் பொய், துறந்தார்க்கல்லது ஒருதலையாக்
கடியலாகாமையின் அஃதொழித்து, இல்வாழ்வாரால் கடியப்படும் ஏனை
மூன்றனுள், கடுஞ்சொல், இனியவை கூறலானும் குறளை
புறங்கூறாமையானும் விலக்கி நின்ற பயனில சொல் இதனால்
விலக்குகின்றார் ஆகலின் இது புறங்கூறாமையின் பின்
வைக்கப்பட்டது.”

என வைப்புமுறை கூறுவதைக் காணமுடிகிறது. இதனால் பாவங்களை அதிகாரப்படுத்துங்கால் திருவள்ளுவர் கொண்டிருந்த நோக்கத்தையும் கருத்தையும் அறியும் அழகரின் ஆர்வம் புலப்படுவதை உணர முடியும்.

1.7.3. பெரியாரைத் துணைக்கோடல், சிற்றினம் சேராமை, தெரிந்து செயல்வகை.

தீ நெறி விலக்கி நன்னெறி செலுத்தும் பெரியாரைத் துணைக்கோடல் (45) என்னும் அதிகாரத்தில் நேர்முகமாகவும் சிற்றினம் சேராமை (46) என்னும் அதிகாரத்தில் எதிர்முகமாகவும் கூறிய திருவள்ளுவர், தெரிந்து செயல்வகை (47) என்னும் அதிகாரத்திற்கு வைப்புமுறை கூறும்பொழுது,

“அச்செயல் (தெரிந்து செயல்வகை) பெரியாரைத் துணைக்கோடல்
பயனுடைத்தாயவழி அவரோடும் செய்யப்படுவது ஆகலின் இது
சிற்றினஞ்சேராமையின் பின் வைக்கப்பட்டது”
என விளக்கிக் காட்டுகிறார். ‘சிற்றினம் சேராமை’ என்னும் அதிகாரத்தை அடுத்துள்ள ஓர் அதிகாரப் பொருளை (47) அதற்கு இரண்டு அதிகாரங்கள் முன்னதாக உடைய ‘பெரியாரைத் துணைக்கோடல்’ (45) என்னும் அதிகாரப் பொருண்மையோடு இயைபு கண்டு வைப்புமுறை உரைக்கும் அழகரின் சதுரப்பாடு அறியத்தக்கது.

1.7.4. புணர்ச்சி மகிழ்தல், நலம்புனைந்துரைத்தல், காதற்சிறப்புரைத்தல்

தமிழ் அகத்திணை மரபின் நுட்பமான பகுதிகளை அழகர் சிந்தித்திருப்பதற்குக் காமத்துப்பாலுக்கான அவரது உரையே கரியாகிறது. காதலைத் தலைவனுக்கு வெளிப்படையாகக் கூறுவதோ, காதல் மீக்கூரும் நிலையில் மடலேறுவதோ தலைவிக்கு மரபன்று. ஆயினும் தலைவனோடு புணர்ச்சி நிகழ்ந்துழித் தலைவன்மீது தான் கொண்டிருந்த காதலை வெளிப்படுத்தும் உரிமை அவளுக்கு உண்டு. இதனைத்தான் திருவள்ளுவர் காதற்சிறப்புரைத்தல் (113) என்னும் அதிகாரத்தில் விளக்கிக் காட்டுகிறார். இந்த அதிகாரம் புணர்ச்சி மகிழ்தல் (111), நலம்புனைந்துரைத்தல் (112) ஆகிய அதிகாரங்களின் பின் வைக்கப்பட்டதற்கான காரணத்தை,

“இது புணர்ச்சியும் நலனும் பற்றி நிகழ்வதாகலின், புணர்ச்சி
மகிழ்தல், நலம்புனைந்துரைத்தல்களின் பின் வைக்கப்பட்டது”

என முறைவைப்பு விளக்கமாகக் கூறி அமைகிறார்.

1.8. இயல் இறுதியில் அதிகார வைப்புமுறை

நூல் பாலாகவும் பால் இயல்களாகவும் இயல் அதிகாரங்களாகவும் அதிகாரம் குறட்பாக்களாகவும் தன்னிறைவு பெறுகின்றன. இயலின் உள்ளடக்க இறுதியாக அதிகாரம் அமையும். அழகர் இயல் இறுதியைப் பால் இறுதியாகக் கணித்து அதிகார அமைப்பு முறை வகுத்திருப்பதையும் காணமுடிகிறது. பொருட்பாலில் அரசியலையும் அங்கவியலையும் தொடர்ந்து ஒழிபியல் அமைந்திருக்கிறது. ஒழிபியலின் இறுதி அதிகாரமாக அமைந்திருப்பது ‘கயமை’ என்பதாகும். ‘கயமை’ என்பது பண்பாகுபெயராய்க் கீழோரைக் குறித்தது. இந்த அதிகாரத்திற்கு முன்பாக அமைந்த ‘இரவச்சம்’ என்னும் அதிகாரத்திற்கும் ‘கயமை’ என்னும் அதிகாரத்திற்கும் ஏற்புடைய இயைபு காண அழகர் பொருட்பால் முழுமையையும் ஒருசேர நோக்கிப் பொருட்பாலின் ஏனைய இயல்களாகிய அரசியலையும் அங்கவியலையும் கருத்திற் கொண்டு ‘கயமை’ என்னும் அதிகாரத் தலைப்பிற்கான பொருள் விளக்கத்தையும் அதிகார வைப்புமுறையையும் சுட்டிக்காட்டுவது பெரு வியப்பளிப்பதாக அமைந்திருக்கிறது. அதிகார நிரலாக வைப்புமுறை, ஒன்றுக்கு மேற்பட்ட அதிகாரங்கள் நோக்கிய வைப்புமுறை முதலியவற்றினின்றும் இம்முறை பெரிதும் வேறுபாடு உடையது என்பதை அறியலாம்.

“மேல் அரசியலுள்ளும் அங்கவியலுள்ளும் சிறப்பு வகையால்
கூறப்பட்ட குணங்களுள் ஏற்புடையன குறிப்பினால் யாவர்க்கும்
எய்த வைத்தமையின், ஆண்டுக் குறிப்பால் கூறியனவும் ஈண்டு
ஒழிபியலுள் வெளிப்படக் கூறியனவுமாய குணங்கள் யாவும்
இலராய கீழோரது தன்மை. அதனால் இது எல்லாவற்றிற்கும் பின்
வைக்கப்பட்டது”

பால், இயல், அதிகாரம், குறட்பா என ஒவ்வொரு கூறுகளையும் தனித்தும் இணைத்தும் நோக்கி உரையெழுதும் பேராற்றல் உடைய பேராசிரியராகவே அழகர் திகழ்ந்திருக்கிறார். இனிக், ‘கயமை’ என்னும் அதிகாரம் காமத்துப்பாலைத் தவிர்த்த ஏனை பொருட்பகுதியின் இறுதியில் அமைந்திருப்பதற்கு அழகர் குறிக்கும் ‘’எல்லாவற்றிற்கும்’ என்னும் சொல்லின் நுட்பத்தை உணர்தல் வேண்டும். காமத்துப்பால் இருக்கவும் ‘எல்லாவற்றிற்கும் பின்’ என்பதற்கான காரணம் சிந்தித்தற்குரியதே. இதனால் அதிகார வைப்புமுறையைப் பாலின் அடிப்படையிலும் சிந்தித்திருக்கிறார் என்ற முடிவுக்கு வரவேண்டியுள்ளது. மேலும் இறைவனில் தொடங்கி கயவரில் நிறைவு செய்திருக்கும் திருவள்ளுவரின் சதுரப்பாடும் பெரிதும் வியப்பளிப்பதாகவே உள்ளது.

முடிவுரை

அழகர் திருக்குறளுக்கு உரையெழுதுவதற்கு முன் பன்முறை அதனை நன்கு ஊன்றிப் பயின்றுள்ளார் என்பதற்கு அதிகார வைப்புமுறை பற்றிய அவர் கொள்கையும் ஒரு வலிமையான சான்றாகத் திகழ்கிறது. நிரலாகப் படித்துக் கொண்டே எழுதியிருந்தால் இவ்வாறு பல்வகை முறைமைகள் தோன்றியிருக்க வாய்ப்பில்லை. திருவள்ளுவரின் உள்ளத்தை அறிந்து கொள்ள அவர் செய்திருக்கும் முயற்சி ‘நிலத்தினும் பெரிது, வானினும் உயர்ந்தன்று, நீரினும் ஆரளவின்று’ என்றே கூறலாம். அதிகாரத்தின் இருப்பிடத்தையோ தலைப்பையோ அவர் மாற்ற எண்ணியிருந்தாலோ மாற்றியிருந்தாலோ இவ்வாறு பல்வகை வைப்புமுறைகளைக் கூறியிருக்க வேண்டிய நிலை வந்திருக்காது. நூல் அமைந்திருந்த அதிகார முறையிலேயே வைப்புமுறை கூறவேண்டிய நெறிக்கு அவர் கட்டுப்பட்டதால்தான் அவ்வதிகார வைப்புக்கான காரணத்தைச் சிந்திக்க வேண்டிய கடப்பாடு அவருக்கு நேர்ந்தது. அந்தக் காரணங்களைத் தம் புலமைத்திறம் தோன்ற அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். உரையாசிரியர் பெருமக்களுள் அழகரைப் போல பெருமையுற்றோர் பலர். ஆனால் அவரைப் போலப் பன்முகத் தாக்குதலுக்கு ஆளானவர் யாருமிலர். அவருடைய உரை மாண்புகளை வகைமாதிரிகளாகக் (GENRE) கொண்டு அவற்றின் அடிப்படையில் ஆய்வு செய்யப்படல் வேண்டும். ஏனைய உரையாசிரியர்களின் உரைகளோடு ஒப்பிட்டுக் காணும் முயற்சி பல்க வேண்டும். தமிழிலக்கிய வரலாற்றில் திருக்குறள் தனித்து விளங்குவது போலவே அழகர் உரையும் தனிச்சிறப்புடன் விளங்குவது உண்மை. “காரிருளால் சூரியன்தான் மறைவதுண்டோ? கறைசேற்றால் தாமரையின் வாசம் போமோ?”

“பரிமேலழகரின் உரையை மறுக்கும் முயற்சிகள் பரிமேலழகர்
புலமைப் பாறையைச் சுற்றியடிக்கும் அலைமோதல்களாக
அமைந்தனவேயன்றி அப்பாறையின் உருக்கோட்டம் கண்டு செப்பம்
செய்யும் சிற்றுளிகளாகக் கூட அமையவில்லை”.

இது திராவிட இயக்கக் கொள்கைச் சார்பாளரும் பன்மொழிப் புலவருமான உயர்திரு க. அப்பாத்துரையார் அழகர் உரைக்குத் தந்திருக்கும் சான்றிதழ். இந்தச் சான்றிதழைக் கற்பார் பார்வைக்கு வைப்பதையே தனது தலையாய கடனாகக் கொண்டு இக்கட்டுரை தன்னை நிறைவு செய்து கொள்கிறது.

துணைநூற் பட்டியல்

1. திருக்குறள் பரிமேலழகர் உரை, வை.மு.கோபால கிருஷ்ணமாச்சாரியார் அவர்கள் எழுதிய குறிப்புரையுடன், உமா பதிப்பகம், சென்னை – 600 001, முதற்பதிப்பு – 2009

2. திருக்குறள் பரிமேலழகர் உரை அகர நிரல், புலவர் ச.சீனிவாசன், மெய்யப்பன் தமிழாய்வு மையம், 53, புதுத்தெரு, சிதம்பரம் – 608 001, முதற்பதிப்பு – 2002

3. பன்முகப் பார்வையில் பரிமேலழகர், முனைவர் நா.பாலுசாமி, அன்னம், நிர்மலா நகர், தஞ்சை – 613 007, முதற்பதிப்பு – 2005

4. உரையாசிரியர்கள், மு.வை.அரவிந்தன், 8/7, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை – 600 108, முதற்பதிப்பு – 1968

ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

தமிழ் இலக்கிய இலக்கண வல்லாளர்களால் வலுவான அடிப்படைக் காரணம் இல்லாது புறக்கணிப்புக்கு ஆளான பேரறிஞர் நிரலில் வரும் இருவரில் ஒருவர் பரிமேலழகர். மற்றொருவர் நச்சினார்க்கினியர். எழுதப்பட்ட ஏனைய உரைகளெல்லாம் தமிழ் மரபை மட்டுமே சார்ந்திருப்பது போலவும் பரிமேலழகர் ஒருவர்தான் வடமொழிச் சார்ந்த உரையெழுதினார் என்பது போலவும் கருக்கொண்ட எண்ணம் பலருடைய புலமை இழப்பிற்கே பெரிதும் காரணமாயிற்று. அழகரை ஆய்வுப் பொருளாகத் தேர்ந்த ஆய்வாளரின் புலமைத் துணிச்சல் பாராட்டுக்குரியது.

திருக்குறள் அதிகார வைப்புக்கான அழகர் தரும் காரணங்களைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் குழப்பம் ஏதுமில்லாமலும் நிரல்பட விளக்குவது எடுத்துக்கொண்ட பொருள் பற்றிய ஆய்வாளரின் சிந்தனைத் தெளிவைக் காட்டுவதாக உள்ளது.
பகுப்புக்கேற்ற தரவுகள் எண்ணிக்கையில் பல இருப்பினும் அளவு கருதி வரையறுத்துக் கொண்டது கட்டுரையைச் செறிவாக்கும் முயற்சியாகவே கருதப்படலாம்.
‘புறங்கூறாமை’ என்னும் அதிகார வைப்பிற்கு அழகர் தாம் சொல்ல வந்த விளக்கத்திற்கு எடுத்துக் கொண்ட முயற்சியும் அதனைக் கண்டறிந்து ஆய்வுலகப் பார்வைக்கு வைப்பதற்கு ஆய்வாளர் எடுத்துக் கொண்ட முயற்சியும் ஒன்றையொன்று விஞ்சுவதாக அமைந்துள்ளது.
‘அதிகார வைப்பிற்கான விளக்கம்’ எனக் கருதுகோளைத் தெளிவாக அமைத்துக் கொண்டதால் கருதுகோளை விளக்கி உறுதிப்படுத்துவதற்கான தரவுகளைத் தொகுப்பதில் கட்டுரையாளர் தமது இடர்ப்பாடுகளைக் குறைத்துக் கொண்டிருப்பது தெரிகிறது. ஏனைய ஆய்வாளர்கள் கருத்திற் கொள்ள வேண்டிய கருதுகோள் பற்றிய உண்மை இது. அடிப்படையான தரவுகளையும் சான்றுகளையும் மனத்தளவில் பதித்துச் சிந்தித்துப் பார்த்தாலொழிய வலிமையான கருதுகோள் அமைவது கடினம். கருதுகோள் தெளிவானால் கட்டுரை தெளிவாகும்.
“காமத்துப்பால் இருக்கவும் ‘எலலாவற்றிற்கும் பின்’ என்பதற்கான காரணம் சிந்தித்தற்குரியதே.” என்னும் கட்டுரையாளரின் பதிவு சரியே. காமத்துப்பாலில் திருவள்ளுவரின் கருத்தேதும் இல்லை. இருபத்தைந்து அதிகாரங்களும் அகப்பொருள் மாந்தர் கூற்றாகவே அமைந்து போனதே அழகரின் (ஆசிரியர் கூற்றாக அமைந்த) ‘எல்லாவற்றிற்கும்’ என்பதற்கான காரணம் என் பணிவான கருத்து.
“அதிகாரத்தின் இருப்பிடத்தையோ தலைப்பையோ அவர் மாற்ற எண்ணியிருந்தாலோ மாற்றியிருந்தாலோ இவ்வாறு பல்வகை வைப்பு முறைகளைக் கூறியிருக்க வேண்டிய நிலை வந்திருக்காது. நூல் அமைந்திருந்த அதிகார முறையிலேயே வைப்பு முறை கூறவேண்டிய நெறிக்கு அவர் கட்டுப்பட்டதால்தான் அவ்வதிகார வைப்புக்கான காரணத்தைச் சிந்திக்க வேண்டிய கடப்பாடு அவருக்கு நேர்ந்தது.” என முடிவுரைப் பதிவு மிகவும் ஆற்றல் வாய்ந்த பதிவு. இதனால் திருக்குறள் அதிகாரவைப்புக்களைப பரிமேலழகரே உண்டாக்கினார் என்னும் வாதம் வேர்பிடிக்காப் பயிராகிவிடுவதைக் காணலாம்.
கட்டுரையாளர் சான்றெண் பதிவுகளுக்கான எண்களையோ நூல்களையோ குறிப்பிடாது துணைநூற்பட்டியல் மட்டும் கூறியிருப்பதற்கான காரணம் புலப்படவில்லை.
வைப்புமுறையில் அழகரோடு மாறுபடும் தற்கால உரையாசிரியர்களின் பதிவுகளையும் ஒப்பிட்டு உண்மையைச் சொல்லியிருந்தால் கட்டுரையின் ஆய்வுச்செறிவு கூடியிருக்கக்கூடும்.
கருதுகோள் அமைப்பு, கருதுகோளுக்கிணங்க, தரவுகள் மற்றும் குறுந்தலைப்புகள் பகுப்பு என முப்பரிமாணத்திலும் தெளிவே முன்னிற்பதால் கட்டுரை சிறக்கிறது. அறிவு தெளிவின் மேற்று! ‘தெளிவு பெற்ற மதியினாய்’ என்பது மகாகவி வாக்கு. இதுபோன்ற கட்டுரைகள் வல்லமையின் கொள்கைக் ‘குரலை’ முழக்கமாக்கும் என்பதில் எனக்கு ஐயமில்லை!



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard