தாடலை டாக்டர் மகாலிங்கம் ஐயப்பன் திருவள்ளுவர் கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் ஏழு குறட்பாக்களில் வீடுபேறு பெறவேண்டுமாயின் இறைவன் அடிகளைப் பற்றவேண்டும்” என்று கூறுகிறார். இறைவன் அடியென்னும் புணையைச் சேர்ந்தார், பிறவியாகிய பெருங் கடலை நீந்துவர். அதனைச் சேராதார், நீந்த மாட்டாராய், அதனுள் அழுந்துவர் என்று விளக்கம் தருகின்றார். தாடலை போல் கூடியவை தாம் நிகழா வேற்றின்பக் கூடலை நீ ஏகம் எனக் கொள். (திருவருட்பயன், 74) என்று உமாபதி சிவாச்சாரியார் திருவருட்பயன் என்னும் நூலில் கூறுகிறார். தாள், தலை என்னும் இரு சொற்கள் புணர்ந்து, தாடலை என ஒரு சொல்லாய் நிற்கின்றன. இச் சொற்புணர்ச்சி போல உயிரும் சிவமும் ஆகிய இரண்டும் தம்முள் கலந்து வேறாய் நில்லாத பேரின்பப் புணர்ச்சியையே ஒன்றாதல் ஆகிய முத்திநிலை என்று நீ கொள்வாயாக என்பது பொருள். இறைவனது அடிசேருவது பற்றி திருவள்ளுவர் கூறியதையே உமாபதி சிவம் இங்கு இறைவனுடைய தாளில் நம் தலை பொருந்த வேண்டும் என்கிறார். தாடலை என்பதில் தாள், தலை என்னும் இருசொற்கள் இணைந்துள்ளன. ஆயின் அவை வேறாகக் காணவாராமல் ஒரு சொல் போலவே நிற்கின்றன. தாடலை என்பதை ஒரு சொல் என்றும் கொள்ள முடியாது. இரு சொல் என்றும் கூற ஒண்ணாது. அதுபோல உயிர் சிவத்தோடு சேரும்போது ஒரு பொருளேயாகி விடாமலும், இரண்டு பொருளாய் நில்லாமலும் இயைந்திருக்கும். முத்தியில் இன்பத்தைத் துய்க்கின்ற உயிரும், அதற்கு அவ்வின்பத்தைக் கொடுக்கின்ற சிவமும் ஆகிய இரு பொருளும் உள்ளன. ஆயினும் அவை அங்ஙனம் பிரித்தறிய வாராமல் ஒன்றாய் உள்ளன என்பதாம். தாள் என்பது இறைவனது திருவடியைக் குறிக்கும். தலை என்பது உயிரைக் குறிக்கும். உயிர்களாகிய நம்மிடம் நான் என்ற அகங்காரம் உள்ளது. எனது என்ற மமகாரம் உள்ளது. இந்த இரண்டும் இருப்பதைக் காட்டும் அடையாளமே நமது நிமிர்ந்த தலை. நம்மிடமுள்ள இந்தச் செருக்கு அடியோடு எப்போது போகின்றதோ அப்போது இறைவனது திருவருளுக்கு உரியவர் ஆவோம். இச் செருக்கினைப் போக்க வல்லது வழிபாடு. பெருமானே, எல்லாம் என் செயலால் நடக்கிறது என்று எண்ணி இறுமாந்திருந்தேன். எனக்கென்று என்ன செயல் இருக்கிறது? நீதான் உள் நின்று இயக்குகிறாய். நீதான் செய்விக்கிறாய். எனவே எல்லாம் உன் செயலேயாகும் என ஆறு அங்கமும் தரையில் பட வீழ்ந்து இறைவனது திருவடியில் தலை வைத்து வணங்கினால் எல்லாச் செருக்கும் போய் விடும். தலையைப் பெற்ற பயன் இறைவன் தாளில் விழுந்து வணங்குவதுதான். இவ்வாறு வணங்குவதையே திருவடியைச் சூடுதல் என்றும், திருவடியைப் புனைந்து கொள்ளுதல் என்றும் குறிப்பிடுவர். சைவ சித்தாந்தக் கோட்பாட்டின்படி முத்தி என்பது துன்பம் துளியும் இல்லா நிலை மட்டுமன்றிப் பேரின்பமயமான உடன்பாட்டு நிலையும் ஆகும். இம்முத்தியாலேயே ஆன்மா இறைவனோடு இரண்டறக் கலந்தபோதும் தன் தனி இயல்பை முற்றாய் இழந்துவிடுவதில்லை. இக்கலப்புக்குத் தமிழில் ‘தாள்’, ‘தலை’ என்னும் இரு சொற்களின் புணர்ச்சியை உதாரணமாக காட்டுவது மரபு. தலை ஆன்மாவையும், தாள் இறைவனையும் குறிப்பனவாகக் கொள்ளலாம். அதாவது, இறைவனது திருவடிகளில் ஆன்மாவின் தலை பொருந்துகிறது என்பதே கருத்து. தாளும் தலையும் தமிழ் இலக்கண விதிப்படிப் புணரும் போது ‘தாடலை’*ஆகும்.’ இத்தாடலைக் கோட்பாட்டின் சிந்தனைக் கட்டிணைவைத் திருக்குறள் கடவுள் வாழ்த்தில் காணமுடிகிறது ‘ என்று முனைவர் மாதவன் கூறுகிறார். வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல (திருக்குறள், கடவுள் வாழ்த்து, 4) விருப்பு வெறுப்பு இல்லாத இறைவனின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர்க்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை. பரிமேலழகர் கூறுவது: ஒரு பொருளையும், விழைதலும் வெறுத்தலும் இல்லாதவன் அடியைச் சேர்ந்தார்க்கு; எக்காலத்தும் பிறவித் துன்பங்கள் உளவாகா. (இந்த உடல் எடுத்ததனால் உண்டாகும் துன்பங்களாவன மூன்று வகைப் படும் 1) அதியாத்மிகம், உடலுக்கு உண்டாகும் பசி, தாகம், நோய்கள் முதலிய துன்பங்கள். 2) அதிபௌதிகம் , விபத்துகள், பிற மனிதர்கள், விலங்குகள், பறவைகள் இவற்றால் உண்டாகும் துன்பங்கள். 3) அதிதெய்விகம் : நெருப்பு, வெள்ளம், நிலநடுக்கம், ஆழிப் பேறலை போன்ற இயற்கைப் பேரிடர்களால் உண்டாகும் துன்பங்கள் என மூவகையால் வரும் துன்பங்கள். அடி சேர்ந்தார்க்கு வேண்டுதலும் வேண்டாமையும் இன்மையின், அவை காரணமாக வரும் பிறவியினால் உண்டாகும் மூவகைத் துன்பங்களும் இலவாயின. 'அடிசேர்ந்தார்க்கு' என்ற தொடர்க்கு 'இறைவன் திருவடியை அடைந்தவர்க்கு' என்றும் 'இடைவிடாது நினைப்பவர்க்கு' என்றும் பொருள் கூறுவர். இச்சொற்றொடர் பற்றிய தண்டபாணி தேசிகர் குறிப்பு சிறப்பாக உள்ளது. அவர் சொல்வது: கடவுள் வாழ்த்து அதிகாரத்தில், 'அடி சேர்ந்தார்', 'தாள்தொழாஅரெனின்' எனப் பல இடங்களில் வருதலால் அதற்கு அருள் எனக் குணப்பொருள் காணாமல் கால் என்னும் உறுப்பு எனக் கொள்வோமாயின், ஏனைய முகம் முதலியனவும் உடன் எண்ணப்பட்டு ஏதாயினும் ஒரு சமயக் கடவுளைக் குறிப்பதாகப் பொதுமையின் நீங்கும். இதனானே அடி சேர்தல் என்பதற்கு இடைவிடாது நினைத்தல் எனப் பொருள் காண்பது பொருத்தம் என்றார்.. கால் என்னும் உறுப்பு எனக் கொள்வோமாயினும், இவ்விதம் சிந்திக்கலாம். குழந்தைக்குத் தன் தாயின் பாதங்கள் மிகவும் பரிச்சயமானவை. தாய் அணிந்திருக்கும் கொலுசு அவள் பாதங்கள் மேல் புரள்வது குழந்தைக்கு மகிழ்ச்சியூட்டும் காட்சி. எனவே திருவிழாக் கூட்டத்தில் தாயைத் தவறவிட்டு விட்டால், அக் குழந்தை தன் தாயின் கால்களைத்தான் அந்தக் கூட்டத்தில் தேடும். நிமிர்ந்து தலையைத் தூக்கிப் பார்த்தாலும் கூட்டத்தில் பெரியவர்களின் முகம் அதற்குத் தெரிவதில்லை. எனவே தாயின் கால்களைத்தான் அது தேடும். தாயின் பாதங்களைப் பார்த்தவுடன் ஒடிப்போய்ப் பற்றிக் கொள்ளும். இக்கருத்தில்தான் தங்களை இறைவனின் குழந்தைகளாகப் பாவித்துக் கொள்ளும் எல்லா அடியார்களும் இறைவனின் திருவடிகளைச் சேர்வதே வீடுபேறு என்கின்றனர். இறைவனுடைய வழிபாட்டில் அவனுடைய திருவடிகளைகளைத் தொழுவதே இலக்கு. எனவேதான் நம்மாழ்வார் திருவாய்மொழியை, “துயரறு சுடரடி தொழுதெழுஎன் மனனே” என்று தொடங்கினார். மணிவாசகப் பெருமான் திருவாசகத்தை, “நமச்சிவாய வாழ்க, நாதன்தாள் வாழ்க” என்று தொடங்கினார். சேக்கிழார் பெரியபுராணத்தை, “மலர் சிலம்படி வணங்கி வாழ்த்துதுமே” என்று தொடங்கினார். கி.வா. ஜ. அவர்கள் சொல்கிறார்: “இறைவனுக்கும் நமக்கும் எப்படி தொடர்பு உண்டாகும் ? ஒரு சரக்குத் தொடர் வண்டியில் பாரம் நிறைந்த பெட்டி ஒன்றை இணைக்க வேண்டுமென்றால் தொடர் வண்டியின் பக்கத்திலோ, எஞ்சினுக்கு அருகிலோ கொண்டு சென்று அதைச் சார்த்தி இணைப்பதில்லை. தொடர்வண்டியின் கடைசிப் பெட்டியில் உள்ள கொக்கியினையும் கோக்கப்பெறும் பெட்டியிலுள்ள கொக்கியினையும் சேர்த்து இணைப்பார்கள். அதுவரையில் தனியே நின்றிருந்த அப்பெட்டி அதன் பிறகு தொடர்வண்டியின் பகுதியாகச் சேர்ந்து இயங்கத் தொடங்கும். அவ்வாறே இறைவனிடம் ஒரு கொக்கியும் நம்மிடம் ஒரு கொக்கியும் உள்ளன. அவற்றை இணைக்க வேண்டும். நம்மிடம் உள்ளது தலை. அது உடம்பிலுள்ள உறுப்புக்களில் சிறந்தது. அதை வடமொழியில் உத்தமாங்கம் என்பார்கள். நம்முடைய உடம்பில் ஐந்து வகை யான இந்திரியங்கள் இருக்கின்றன. காண்பதற்கும், கேட்ப தற்கும், மணம் நுகர்வதற்கும். சுவை நுகர்வதற்கும், பரிசத் தைப் பெறுவதற்கு மாக ஐந்து இந்திரியங்களை நாம் பெற்.றிருக்கிறோம். கழுத்துக்கு மேலே இந்த ஐந்து பொறி களும் இருக்கின்றன. கழுத்துக்குக் கீழே பஞ்சேந்திரி யங்களில் ஒன்றுதான் இருக்கிறது. ஆதலின் எல்லா இந்திரியங்களும் ஒருங்கே தலையில் அமைந்திருக்கின்றன. அது மட்டுமல்ல , இந்த எல்லா இந்திரியங்களையும் இயக்குகின்ற மூளையும் அதனுள்ளே இருப்பதால் தலை சிறந்ததாயிற்று. இறைவனுடைய திருமேனியில் மிகச் சிறந்த அங்கம் எது? மனிதனைப்போல இறைவனுக்கும் தலைதான் உத்தமாங்கம் என்று சொல்லலாமா? அது பிழை. இறை வனேக் காட்டிலும் அவன் திருவடியே சிறந்தது என்பதைப் பரிபாடலில் ஒரு புலவர் பாடுகிறார். '’நின்னிற் சிறந்தநின் தாளிணையவை.” அடியார்களுக்குப் பற்றுக்கோடாக இருப்பது அவனுடைய தாள். அவன் மிக உயரமானவன். அவனைப் பற்றிக் கொள்வது என்பது எளிய காரியம் அன்று. தேவர்களுக்கு அடி பூமியில் பாவாது என்று சொல்வார்கள். தேவர் களுக்கு எல்லாம் சிறந்த தேவனான பரம்பொருளாகிய இறைவன் இந்த உலகத்தில் தன் தாள் படிய வருகிறான். அதற்குக் காரணம் நாம் இந்த உலகத்தில் பிறந்து வாழ்வது தான். நம்மை ஆட்கொள்ள வேண்டுமென்று நமக்கு அண்மையில் உள்ள திருவடியைப் பற்றிக்கொள்ளும்படி வந்து அருளுகிறான். நமக்காகவே தாள். படைத்து நம்மை அணுகி வருகிறான். ஆதலால் அவன் திருத்தாள் அடியார் களுடைய பற்றுக் கோடாக நிலவுகிறது. இறைவனுக்குப் பல வகை அங்கங்கள் இருந்தாலும், அவற்றை எல்லாம் அடியவர்கள் கண்டு இன்புற்றாலும், அவர்கள் பெரும் பயன் பெறுவது அவனுடைய திருவடியில்தான். அடியார் என்ற பெயரே அதனேக் குறிப்பிக்கிறது. ஆகலின் இறைவனுடைய உத்தமாங்கம் அவனுடைய திருவடி தான். நம்முடைய உத்தமாங்கமாகிய தலையை இறைவனுடைய உத்தமாங்கமாகிய திருவடியோடு இணைத்துவிட்டால் நமக்கும் இறைவனுக்கும் தொடர்பு உண்டாகும்.” .... அலங்கல் மதியுடன் அணிந்த பொதிஅவிழ் சடிலத்துப் பையரவு அணிந்த தெய்வ நாயக.....
நின் அருள் எனும் நலத்தார் பூட்டித் திருவடி நெடும்கரை சேர்த்துமா செய்யே. என்று திருவள்ளுவரை ஒட்டிப் பட்டினத்தடிகள். கோயில் நான்மணி மாலையில் இறைவன் திருவடிகளைப் போற்றுகின்றார்.
கவிராஜ பண்டாரத்தையா என்னும் புலவர் திருக்குற்றாலத்து இறைவனிடம் வைத்த வேண்டுகோள் புதுமையானது. கவிரசம் ததும்பும் அந்த விண்ணப்பம் என்ன ‘திரி கூடப்பெருமானே! உன் தேவி பார்வதிக்கு அன்புடன் உன் அங்கத்திலேயே சரிபாதி அளித்துவிட்டாய். நான் ஏழைப் புலவன். அந்த அளவுக்கு உன்னிடம் உரிமை கோர மாட்டேன். எனக்கு பாதியில் பாதி தந்தால் அது போதும்!’‘பாதியில் பாதி’ என்று புதிராக புலவர் கேட்பது என்ன தெரியுமா? ஒன்றில் அரைபாகம் பாதி, பாதியில் சரிபாதி கால்!எனவே உன்றன் திருவடிப்பேறான காலைக் காட்டி என்னை ஆட்கொள்வாய் என்பது தான் புலவரின் வேண்டுகோள்.
அருவித் திரிகூடத் தையா உனைநான் மருவிப் பிரிந்திருக்க மாட்டேன் - இறைவிக்கு ஆதியிலே பாதி தந்தாய்; அத்தனை வேண்டாம் எனக்குப் பாதியிலே பாதிதந்து பார்! மணிவாசகர் ஒரு குழந்தை தன் தாயின் கால்களைப் பற்றிகொண்டு, அவளை மேற்கொண்டு நடக்கவிடாமல் செய்வதுபோல் தான் சிவபெருமானின் கால்களப் பற்றிக் கொண்டதாகக் கூறுகிறார்; பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து, நீ, பாவியேனுடைய ஊனினை உருக்கி, உள் ஒளி பெருக்கி, உலப்பு இலா ஆனந்தம் ஆய தேனினைச் சொரிந்து, புறம் புறம் திரிந்த செல்வமே! சிவபெருமானே! யான் உனைத் தொடர்ந்து, சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே? என்று பாடுகிறார். திருமந்திரத்தில் ஒரு பாடலில், “மந்திர மாவதும் மாமருந்து ஆவதும் தந்திர மாவதும் தானங்கள் ஆவதும் சுந்தர மாவதும் தூய்நெறி ஆவதும் எந்தை பிரான்தன் இணையடி தானே” என்று மந்திரம், தந்திரம், தானம், சுந்தரம் மற்றும் தூய்நெறி எல்லாம் இறைவனுடைய திருவடிகள் தாம். என்று சொல்கிறார் திருமூலர். கீதையில் "சர்வ தர்மான் பரித்யஜ்ய..." என்று தொடங்கும் 18 அம் அத்தியாயம் .66வது சுலோகத்தில் ஸ்ரீகிருஷ்ணர் கூறுவதும் அதுவே. வீடு பேறு அடைவதற்கு பல வழிகள் உண்டு. அவற்றில் முக்கியமான ஒன்று இறைவனைச் சரணடைந்து, அவன் தாள் பணிந்தேத்துவது. இறைவன் திருவடிகளைப் பற்றிக் கொள்வதே வாழ்க்கையின் இலக்கு என்றிருப்பதால்தானே அடியார்களை அடியார் என்று அழைக்கிறோம்.