New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சிலம்பில் கோவில் வழிபாட்டு முறைகள்


Guru

Status: Offline
Posts: 24709
Date:
சிலம்பில் கோவில் வழிபாட்டு முறைகள்
Permalink  
 


சிலம்பில் கோவில் வழிபாட்டு முறைகள்
April 3, 2020  முனைவர் மூ.சிந்து உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை
டாக்டர் என்.ஜி.பி கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) காளப்பட்டி, கோவை – 6410428 மின்னஞ்சல் – sindujasms@gmail.com

முன்னுரை

ஐம்பெருங்காப்பியங்களில் முதன்மையாகப் போற்றப்படுவது சிலப்பதிகாரம். சிலம்பை மையமாகக் கொண்டு எழுந்த காரணத்தால் இப்பெயர் பெற்றமையை உணரமுடிகிறது. சிலப்பதிகாரம் அறம், பொருள். இன்பம் என்ற மூன்று நிலைகளில் அறத்தினை உட்புகுத்தி மக்களிடையே அறவுணர்வினை உட்புகுத்தும் நோக்கில் அமைத்தமையை உணரலாம். வழிபாட்டு முறைகளைப் பகுத்தும் விரித்தும் கூறுவதாக இவ்வாய்வு அமைகிறது.

நோக்கம்

சிலப்பதிகாரம் அகம் , புற நிகழ்வுகளைச் சுட்டினாலும் ஊழ்வினை நிலையை வெளிப்படுத்தும் போக்கில் அமையப் பெற்றும் அதில் அறம் சார்ந்த வழிபாட்டு நிலையில் இறைவனை வழிபட்ட நிலையையும் எடுத்துக் கூறுவதாக அமைகிறது.

வழிபாடு

சங்ககாலத்தில் வாழ்ந்த மக்கள் இயற்கையோடு இயைந்த வாழ்க்கையை வாழ்ந்தனர் என்பதும், இயற்கையானது மாறும் போது அதனோடு போராடும் சூழலில் தனக்கு மேலான சக்தி ஒன்று உள்ளது என்பதை உணர்ந்து அதை நம்பினர். அந்த சக்தியே பின்னாளில் தெய்வமாக மாறி அவற்றைப் பின்பற்றி வந்த முறையானது வழிபாடாக மாறியது.

வழிபாடு என்பது தெய்வத்தையோ அல்லது இயற்கை சக்தியை நோக்கி முறையான அல்லது முறைசாராத குழுக்கள் அல்லது அதற்கென நியமிக்கப்பட்டவரால் மேற்கொள்ளப்பட்ட முறை வழிபாடாகும்.

வழிபாடு என்பது வணங்குதல், பூசை செய்தல் என்பதாம். இது வழக்கமாகச் செய்தல் என்னும் பொருள்களில் வழங்கப்படுகிறது.

வழிபாட்டு முறை

வழிபாடானது பாடல்கள் பாடியோ, மந்திரங்கள் கூறியோ பொருட்களைப் படைத்தோ நடைபெறுகிறது. மனிதன் தன் தேவைக்காகவும், சுயநலத்துக்காகவும் இறைவனை நாடிச்செல்லும் நிலையே வழிபாடாக மேற்கொள்ளப்படுகிறது. மனிதனின் இன்பமான வாழ்க்கைக்கும் தன் சிக்கல்கள் தீரவும் வழிபாடானது அவரவர் விருப்பத்திற்கு இணங்க மாற்றம் கொண்டமையைக் காணமுடிகிறது.

இலக்கியங்கள் போற்றும் வழிபாடு

வழிபாடானது பழக்கங்களில் தோன்றியமை என்பதைப் புலப்படுத்தும் வகையாக தொன்மையான இலக்கண நூலானத் தொல்காப்பியம்,

வழிபடு தெய்வம் நிற்புறம் காப்பப்
பழிதீர் செல்வமொடு வழிவழிழச் சிறந்து
பொலிமின்.. தொல் .1367

என்னும் வரிகளால் வழிபாட்டு நிலையினை உணர்த்துகிறது. வழிபாட்டினால் வாழ்க்கை வளம்பெறும் என்பதை மக்கள் நம்பிக்கையாகக் கொண்டனர் என்பதும், பண்டைத் தமிழ் மன்றங்களிலும்,மரங்களிலும்,கற்களிலும் தெய்வம் உறைவதாக நம்பி அவற்றை வழிபட்டனர் என்பதைத் தொல்காப்பியம் உணர்த்துகிறது.

எட்டுத்தொகை நூல்களில் அகம், புறம் சார்ந்த நூலான பரிபாடலில்,

……….. யாம் இரப்பவை
பொருளும் பொன்னும் போகமுமல்ல நின்பால்
அருளும் அன்பும் அறனும் மூன்றும்
உருளிணர்க் கடம்பின் ஒலிதாராயோ பரி.5.78-81

என்னும் வரிகளால் மனிதன் தன் வாழ்க்கை நிலையை உயர்த்தும் பொருட்டும், நிலைப்படுத்தும் பொருட்டும் வழிபாட்டை மேற்கொண்டான் என்பதை உணர்த்துகிறது.

சிலப்பதிகாரத்தில் கோயில் வழிபாட்டு நிலையானது பல்வேறு நிலைகளாக மேற்கொண்டமையையும், அவற்றின் சிறப்புகளையும் பின்வரும் நிலைகள் விவரிக்கின்றன.

கோயில் வழிபாடு
நன்னீராட்டு
மந்திரம் உச்சரித்தல்
பாடல்கள் பாடுதல்
புண்ணிய நதிகளில் நீராடுதல்
பலியிடுதல்
தெய்வ அருள் பெறல்
கோயில் வழிபாடு

சிலம்பில் கோயில் வழிபாட்டு முறையில் முதலில் பலிபீடத்தை மலரிட்டு வழிபடுதல் பின்பற்றப்படுகிறது. கொற்றவையின் உருவமாகக் கொண்ட பெண்ணை வணங்கும் முன்,

விலைப்பலி யுண்ண மலர்ப்பலி பீடிகைக்
கலைப்பா யூர்தியைக் கைதொழுது சிலம்பு. 12.43-44
பலிபீடத்தை வணங்கிய வழிபாட்டினைக் கூறுகிறது. பலிபீடத்திற்கு பிறகு தெய்வ வாகனத்தை வழிபடும் நிலையானது இருந்தமையைச் சிலம்பு குறிப்பிட்டுச் சொல்கிறது.

கோட்டம் என்ற சொல்லானது கோயில் என்னும் பொருளில் வழங்கப்படுகிறது. கோட்டம் கட்டிடங்கள் இல்லாமல் திறந்த வெளியில் வேல், வச்சிரம் போன்றவற்றை நட்டுச் சுற்றிலும் வேலியமைத்த பகுதியானது கோட்டம் என்றழைக்கப்படுகிறது.

அமரர் தருக்கோட்டம் வெள்யானைக் கோட்டம்
………………
நிக்கந்தக் கோட்டம் நிலாக்கோட்டம் புக்குஎங்கும் சிலம்பு. 9..9-13
என்று பல்வேறு வகையான கோயில்களைச் சிலம்பில் எடுத்துரைத்துச் செல்கிறார் இளங்கோ.

பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும்
அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயிலும்
………..
கொடித்தேர் வேந்தனொடு கூடா மன்னர் சிலம்பு. 5.169-181

என்னும் வரிகள் கோயில் வழிபாட்டின் சிறப்பினை உணர்த்துகிறது.

நன்னீராட்டு

கோயிலில் செய்யப்படும் அபிடேக முறையானது ”நீரணி விழா” என்று சிலம்பில் வழங்கப்படுகிறது.

நீர்அணி விழவினும் நெடுந்தேர் விழவனும் சிலம்பு. 10.22

திருமஞ்சனநீரைப் பொன்னாலாகிய குடத்தில் ஏந்தி மண்ணில் வாழ்வோர் அதிசியிக்கவும், விண்ணுலகத்தார் வியப்புறும் வகையிலும் தேவர் கோமானாகிய இந்திரனின் திருவுருவத்திற்கு திருமஞ்சனம் நீராட்டல் நடைபெற்றமையை,

புண்ணிய நல்நீர் பொன்குடத்து ஏந்தி
மண்ணகம் மருள வானகம் வியப்ப
விண்ணவர் தலைவனை விழுநீர ஆட்டி சிலம்பு. 10.166-168

கண்ணகியின் உருவக் கல்லை சேரமன்னன் கங்கையின் புனித நீரிலே கற்றறிந்தோர் கூறியநெறியுடனும், முறையுடனும் நீராட்டித் தூய்மை செய்ததை,

கங்கைப் பேர்யாற்றுக் கரை அகம் புகுந்து
பால்படு மரபிற் பத்தினிக் கடவுளை
நூல்திறன் மாக்களின் நீர்ப்படை செய்து சிலம்பு. 27.14-16

என்பதைச் சிலப்பதிகார வரிகள் உணர்த்துகிறது.

மந்திரம் உச்சரித்தல்

இறைவனது நாமத்தைப் பலமுறை உச்சரிப்பதால் நன்மை என்பதை மக்கள் நம்பினர். இறைவனது வழிபாட்டில் மந்திரம் உச்சரித்தல் முக்கிய இடம் வகுத்தமையை உணரமுடிகிறது.

மறைமொழிதானே மந்திரம் என்ப தொல்.1434

இறைவனது நாமம், மந்திரம் என்பதைத் தொல்காப்பியம் எடுத்துக்கூறுகிறது.

துன்னிய மந்திரம் துணைஎனக் கொண்டு
வாயி லாளரை மயக்குதுயில் உறுத்து சிலம்பு. 16.143-144

விழித்துக் கொண்டிருப்போரை மந்திரத்தால் தூங்கச் செய்யும் கள்வர்களின் செயலைச் சிலம்பில் இளங்கோகூறுகிறார்.

மந்திரம் நாவிடை வழுதுத்துவராயின்
இந்திரகுமரரின் யாங்காண் குவமோ சிலம்பு. 27.172-173

இந்திரனின் ஆபரணத்தைக் களவாடும் ஆற்றல் பெறுவர் என்னும் செய்திகள் வாயிலாக மந்திரம் உச்சரித்தல் தீமைக்கும் பயன்படுத்தியமையை அறியமுடிகிறது.

பாடல் பாடுதல்

வழிபாட்டு நிலையில் பாட்டுப்பாடி வழிபாடு செய்தல் என்னும் நிலையானது ஒரு அங்கமாக அமைகிறது.

மாயோன் பாணியும் வருணப்பூதர்
நால்வகைப் பாணியும் நலம்பெறு கொள்கை
வான்ஊர் மதியமும் பாடிப் பின்னர் சிலம்பு. 6.35-37

என்னும் வரிகளில் குறத்தியரின் குறிஞ்சிப்பாணி, ஓதைப்பாணி, குழலின் பாணி போன்றவை நீர்படைக்காதையில் பாடியமைக் காணலாகிறது.

……………….அணங்குமுன் நிறீஇ
விலைப்பலி உண்ணும் மலர்ப்பலி பீடிகைக்
கலைப்பரி ஊர்தியைக் கைதொழு தேத்தி சிலம்பு.12.42-44

என்னும் வரிபாடலில் மானுடரை வாழ்த்தியும், தெய்வத்தைப் போற்றியும் அமைந்த வேட்டு வரிப்பாடல்கள் சான்றாகும்.

புண்ணிய நீராடல்

திருத்தலங்களில் உள்ள நீர் புனிதநீராடல் போற்றப்படுகிறது. அத்தகைய நீரின் சிறப்புகள் சிலம்பில் எட்டு இடங்களில் பேசப்படுகின்றது.

குமரியும் பெருந்துறை கொள்கையிற் படிந்து சிலம்பு.15.15

என்னும் பாடல்வரி மாடலன் குமரியில் நீராடியதையும்,

என்வாய்க் கடெடார் இறந்தேர்ர் உண்மையின்
நன்னீர்க் கங்கை ஆடப் போந்தேன் சிலம்பு.27.109-110

என்னும் பாடல்வரிகள் மாடலன் கங்கையில் நீராடியதையும்,
ஆர்த்த கணவன் அகன்றன்ன் போய் எங்கும்
தீர்த்த்த் துறைபடிவேன் சிலம்பு.9.37-38

என்னும் வரிகள் தேவந்தியானவள் தான் பிரிந்த கணவனைச் சேரும் பொருட்டு புண்ணிய நீரில் நீராடியமையை எடுத்துரைக்கிறது.இறைவனை வழிபடும் முன்பு அங்குள்ள புண்ணிய தலத்தில் நீராடல் என்பது முக்கிய அங்கமாக அமைந்தமையைக் காணமுடிகிறது.

பலியிடுதல்

வழிபாட்டில் இறைவனுக்கு பலியிட்டு வழிபடல் என்ற நிலையானது நன்றியை செலுத்தும் வகையிலும் தன் வழிபாட்டின் குறைகளையும் போக்கும் பொருட்டும் இந்நிகழ்வு நடைபெற்றது. பலியீட்டு முறையில் இறைவனுக்கு விலங்குகள், பறவைகள், கனிகள், மலர்கள் படைத்து வழிபாடானது நடைபெற்றதை அறியமுடிகிறது.

உயிர்ப்பலி யுண்ணும் உருமுக்குரல் முழக்கத்து
மயிர்க்கண் முரசமொடு மாதிரம் அதிர சிலம்பு 26.195-196
என்னும் சிலப்பதிகார வரிகள் உயிர்ப்பலி கொடுத்தமையை உணர்த்துகிறது.

புறத்திணையில் வெட்சித்திணை ஆநிரைக் கவருதலை எடுத்துரைக்கிறது. அந்நிலையில் ஆநிரையைக் கவரச் செல்லும் வெட்சி வீரருக்கு வெற்றி தெய்வமான கொற்றவை துணை நிற்பதை,

அடல்வலி எயினர் நின்னடிதொடு கடனிது
மிடறுகு குருதிகொள் விரல்தரு விலையே ………….

என்னும் வரிகள் வெற்றிக்குப் பின் கொற்றவைக்கு உயிர்ப்பலியிட்டு வெற்றியைக் கொண்டாடியமையை எடுத்துரைக்கிறது.

அருள் பெறல்
மக்களின் நிறைகுறைகளையும் அவர்களது தீமைகளையும் எடுத்துக்கூறுபவர் தெய்வத்தின் அருள் பெற்றவர். அவர் வழிபாட்டின் போது மக்களுக்கு அருள்கூறி வழிசெய்வர்.

பழங்கடன் உற்ற முழங்குவாய்ச் சாலினி
தெய்வம் உற்று மெய்ம்மயிர் நிறுத்தி சிலம்பு 12.7-8
என்னும் வரியில் சாலினி தெய்வ அருள்பெற்ற நிலையை எடுத்துரைக்கிறது.

…………….. உயர்மொழி கூறித்
தெய்வம்உற்று எழுந்த தேவந்திகைதான் சிலம்பு 30.44-45
பாசாண்டன்யான் பார்ப்பனி தன்மேல்
மாடல மறையோடு வந்தேன் சிலம்பு 30.69-70
என்னும் வரிகளில் தேவந்தி தெய்வ அருள் பெற்ற நிலையினை எடுத்துரைக்கிறது.

முடிவுகள்
சங்ககால மக்கள் இயற்கை சத்திகளைத் தெய்வமாக வழிபட்டனர்.
வழிபாட்டு நிலையில் பூசை,பாடல்கள்,மந்திரங்கள் கட்டாயமாக அமைந்தமையைக் காணமுடிகிறது.
வழிபாடானது பழக்கத்தின் அடிப்படையில் தோன்றியமை என்பது புலப்படுகிறது.
கோயில் வழிபாட்டு நிலையில் பலியிடல் நிகழும் இடம் முதலில் வழிபட்டதன் மூலமாக சக்தி நிறைந்த பீடமாக அமைந்தமையை உணரமுடிகிறது.
நீரணிவிழா வாயிலாக திருவுருவங்களுக்கு நீராட்டல் அமைந்தன.
மந்திரம் என்பது நன்மை, தீமை இரண்டிற்கும் உச்சரித்த நிலையைக் காணமுடிகிறது.
வழிபாட்டில் தன் வேண்டுதல் நிறைவேற அல்லது நிறைவேறிய பின்பு கடவுளுக்கு பலியிடதல் என்பது வழக்கமாகக் கொள்ளப்பட்டது.
வழிபாட்டின் உச்சநிலை தெய்வத்தின் அருள்பெற்று அதனடிப்படையில் மக்கள் நன்முறையில் வாழ்ந்த நிலையைக் காணமுடிகிறது.
வழிபாட்டு நிலையானது ஒன்றன் தொடர்ச்சியாக மன்றொன்று இந்தமையைக் காணமுடிகிறது.
துணைநின்ற நூல்கள்

சிலம்பொலி சு.செல்லப்பன், சிலப்பதிகாரம், பாரதி நிலையம், சென்னை
சுப்பிரமணியன் ச.வே, சிலப்பதிகாரம், கங்கை புத்தக நிலையம், சென்னை
தமிழண்ணல், புதிய நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு, மீனாட்சி புத்தக நிலையம், மதுரை
தொல்காப்பியம் பொருளதிகாரம், இளம்பூரணார் உரை,சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை
பரிபாடல் , சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.

ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):
வழிபாட்டு முறைகள் தொன்றுதொட்டு இன்றுவரை தொடர்ந்து வரும் நிலையில், இடம் காலத்துக்கு ஏற்ப அவை மாறுபட்டும் விளங்குகின்றன. இக்கட்டுரை, சிலம்பில் கோவில் வழிபாட்டு முறைகளைப் பன்முகங்களில் தொகுத்து வழங்குகிறது.
சிலம்பின் மையப்புள்ளயான ‘ஊழ்வினை’ சார்ந்து விளங்கும் வழிபாட்டுமுறை எனச் சுட்டியிருப்பது மிகவும் பொருத்தமானதாகும். தொல்காப்பியம் விளக்கும் வழிபாட்டுமுறையை மேற்கோள் காட்டி, சிலம்பில் வழிபட்டதை விளக்கியிருப்பது சிறப்பு.
வழிபாட்டு விளக்கம், முறை, இலக்கியங்களில் வழிபாடு இவை தகுந்த சான்றுகளுடன் விளக்கப்பட்டுள்ளன. அவை சிலம்பின் கதையோட்டத்துடன் பொருந்தியிருப்பதை
இக்கட்டுரையில் சுட்டியிருப்பது சிறப்பு.
ஏழு குறுந்தலைப்புகளில் தொகுக்கப்பட்டுள்ள இக்கட்டுரை கோவில் அமைப்பு, அபிடேக முறை, பாடல்முறை, பலியிடுதல் முதலியனவற்றைத் திறம்பட எடுத்தியம்புகிறது. மக்கள் வாழ்வியலை ஒட்டி வாழிபாட்டுமுறை இருந்ததைப் புரிந்துகொள்ள முடிகின்றது.
வழிபாட்டின் சிறப்பு அம்சங்களை ஆராய்ந்து கூறும் முடிவுரைக் கருத்துகள் குறுகத் தரித்த, செழிப்பான தன்மையுடன் விளங்குகின்றது.
சிலம்பு வழிபாடு குறித்த கருத்துகளை, பிற இலக்கியங்களில் கூறப்பட்ட வழிபாட்டு முறைகளுடன் ஒப்பிட்டு விரிவான ஆய்வுத் தொகுப்பாக வழங்க முயற்சி செய்யலாம். குறுந்தலைப்பின் கீழ்வரும் கருத்துகளை விரிவாக்கிப் பெரிய அளவில் ஆய்வுத்தொகுப்பாக வழங்கலாம்.
படிக்கப் படிக்க வியக்க வைக்கும், சிலம்பில் கொட்டிக்கிடக்கும் ஆழமான வாழ்வியலின் ஒரு துளியாக இக்கட்டுரை தரும் வழிபாட்டுச் செய்திகள் சிலம்பு அனுபவத்துக்கு மேலும் நயம் கூட்டுகின்றது.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard