New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சங்க இலக்கியத்தில் மணச் சடங்குகள்


Guru

Status: Offline
Posts: 24625
Date:
சங்க இலக்கியத்தில் மணச் சடங்குகள்
Permalink  
 


 சங்க இலக்கியத்தில் மணச் சடங்குகள் March 25, 2019  முனைவர் க. இராஜா
இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர், ஸ்ரீ வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி காட்டேரி, ஊத்தங்கரை, கிருட்டிணகிரி (மா.)

சடங்கு நிகழ்த்தப்படும் இடம், காலம், சூழல், தேவை, நோக்கம் போன்ற காரணங்களை முன்வைத்து அவற்றின் தன்மைகள் வேறுபடுகின்றன. சடங்குகள் செயல், நிகழ்த்துதல், நனவு, தன்னார்வம், கருவி, பகுத்தறிவு, கூட்டுத்தன்மை, சமூகம், சமூக உறவுகள், புனைவு, குறியீடு, வெளிப்பாடு, நடத்தை, அழகியல், புனிதம் ஆகியவற்றோடு தொடர்புடையதாக அமைகின்றது.

சடங்குகள் வாழ்க்கை வட்டச் சடங்குகள், வளமைச் சடங்குகள், வழிபாட்டுச் சடங்குகள், திருவிழாச் சடங்குகள், மந்திரச் சடங்குகள், பிற சடங்குகள் என வகைப்படுத்தப்படுகின்றன. அவற்றுள் நிச்சயதார்த்தம், சிலம்பு கழித்தல், மணநாள் குறித்தல் போன்றன வாழ்க்கை வட்டச் சடங்குகளாகும். மணநாளில் நிகழும் சடங்குகள் மணச் சடங்குகள் எனப்படும்.

‘மணம்’ என்ற சொல் நிறைந்த பொருளுடையது. மணம் என்பதன் வேர்ச்சொல் மண், மண்ணின் நலன்களைப் பெருமளவில் நுகர்வதற்கு வாய்ப்பளிப்பது ஆகும். எனவேதான் நல்லறமாக இல்லறத்தை மண வாழ்க்கை என்றனர் (நாஞ்சில் ஆனந்தன், சங்க இலக்கியத்தில் மனித உரிமைகள், பக்.27-28).

திருமணமும் அதற்குரிய சடங்குகளும் சமுதாயத்தில் எக்காலத்தில் தோன்றி வளம் பெற்றன என்பதை அறுதியிட்டுக் கூற முடியவில்லை. இருப்பினும் திருமணச் சடங்கு என்பது பொய்யிலிருந்து, வழுவிலிருந்து சமுதாயத்தைக் காப்பாற்றியது என்பதை,

பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப (தொல். கற்.4)

என்னும் தொல்காப்பியப் பொருளதிகாரச் சூத்திரம் மூலம் அறிய முடிகிறது. தொல்காப்பியம், மணத்தைக் கரணம் என்று குறிப்பிடுகின்றது. தொல்காப்பியர் காலத்தில் திருமணம் செய்யும் முறை நடைமுறையில் இருந்தது என்பது இதனால் விளங்கும்.

திருமணச் சடங்குகள் இனச் செழிப்பை வேண்டிச் செய்யப்படும் சடங்குக் கூறுகளை மிகுதியாகப் பெற்றுள்ளன. “இச்சடங்கின்போது, முளைப்பாலிகைகள், கும்பம் (விளைந்த தானியப் பயிர்களை நீர் நிரம்பிய இடத்தில் வைத்தல்) முதலியவற்றை மணமக்களுக்கு முன் வைக்கும் வழக்கம் கள்ளர், பள்ளர், பறையர் இனங்களுக்கிடையே காணப்படுகிறது முளைத்த நெல், கம்பு போன்ற தானிய விதைகளை மணமக்களின் மேல் தூவும் மரபும் நிலவுகிறது” (தே. ஞானசேகரன், மனித வாழ்வில் மந்திர சடங்குகள், ப.24).

வேளாண்மையில் நேரடியாகப் பங்குபெறும் சமுதாயத்தினரிடம் இச்சடங்கு முறைகள் வேரூன்றிக் காணப்படுகின்றன. “கண்ணகி கோவலன் திருமணத்தில், பெண்கள் முளைப்பாலிகைகளைக் கையிலேந்தி, முளைத்த விதைத் தானியங்களை மக்களின் மேல் தூவி வாழ்த்துக் கூறுவதை இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார்” (தே. ஞானசேகரன், மனித வாழ்வில் மந்திர சடங்குகள், ப.25).

முளைப்பாலிகைகளிலும், தானிய விதைகளிலும் பயிர்கள் எவ்வாறு செழித்து வளர்கிறதோ அதேபோன்று மணமகளும் விரைவில் குழந்தைப் பேற்றை அடைந்து, மானிடச் செழிப்பைப் பெருக்க வேண்டும் என்ற வளமைச் சடங்கின் சாயலாக இல்வாழ்வியல் சடங்கு அமைந்துள்ளது.

மணமக்களுக்குக் கட்டப்படும் தாலியைத் திருமணத்தில் கலந்துகொள்ளும் அனைத்துப் பெரியோர்களும் குறிப்பாகப் பெண்களும் தொட்டு வணங்குவர். இச்சடங்கு முடிந்த பின்புதான் மணமகன், மணமகளுக்குத் தாலி கட்டுவார். தாலியைத் தொட்டு வணங்குகின்ற அனைத்துப் பெண்களின் வளமை ஆற்றலும் மணமகளுக்குச் சென்று சேரும் என்ற நம்பிக்கைக் கூறுகள் இதில் காணப்படுகின்றன.

நிச்சயதார்த்தம்

சங்க காலத்தில் திருமணத்தை வதுவை, வரைவு, மணம், மன்றல் எனக் குறிப்பிட்டனர். திருமணத்தின் முதல் சடங்காகக் கொடுப்போர், கொள்வோர் ஆகியோரின் பரிமாற்றம், மன நிம்மதி ஆகியவை அமைகின்றன. இதனை,

கற்பெனப் படுவது கரணமொடு புணர
கொளற்குரி மரபின் கிழவன் கிழத்தியை
கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வதுவே (தொல். கற்.1)

என்னும் நூற்பா விளக்குகிறது. மணமகளின் வீட்டார், தம் மகளைத் திருமணம் செய்ய எண்ணியதன் பின்னர் மனம் உவந்து மணமகனுக்கு வதுவை செய்து தரவேண்டும் என்பதை,

யானுங் காதலென் யாயும்நனி வெய்யள்
எந்தையுங் கொடீஇயர் வேண்டும் (குறுந்.51)

என்னும் குறுந்தொகை அடிகள் விளக்குகின்றன. இப்பாடலில் தலைவி ஒருத்தியை அவள் விரும்பிய தலைவனுக்குத் தந்தையும் தாயும் திருமணம் செய்து கொடுக்க முன்வருகின்றனர்.

திருமணம் நடைபெறும் முன்னர் நிச்சயதார்த்தம் என்னும் முறைமையும் நடைபெற்றது. இந்நிச்சயதார்த்தம் என்பது கொடுப்போர், கொள்வோர் இருவரின் எண்ணங்களையும் உறுதி செய்துகொள்ளுதல் என்னும் மரபாகும். சங்க காலத் திருமணங்கள் பெரும்பான்மையாகக் கொடுப்போர், கொள்வோர் சம்மதத்துடன் நடைபெற்றவை என்பதை அறிய முடிகிறது.

திருமணம் நிச்சயிக்கப் பெண் கேட்டு வரும் தலைவன் வீட்டாரைத் தலைவி வீட்டார் வரவேற்று உபசரிக்கும் பண்பு அக்காலத்தில் இருந்தே நிலைபெற்று வருகிறது. அதனை,

தண்டுடைக் கையர் வெண்டலைச் சிதலவர்
நன்றுநன் றென்று மாக்களோ
டின்றுபெரி தென்னு மாங்கன தவையே (மேலது, ப.146)

என்னும் குறுந்தொகைப் பாடலடிகள் விளக்குகின்றன.

சிலம்பு கழித்தல்

திருமணம் ஆகாத பெண்கள், காலில் சிலம்பு அணியும் வழக்கம் நடைமுறையில் இருந்தது. திருமணத்தின்பொழுது காலில் உள்ள அச்சிலம்பினைச் சடங்கு நிமித்தமாகக் கழற்றுவது மரபாக இருந்தது. இம்மரபு மணமகளின் வாழ்வில் பூப்புச் சடங்கினைப் போன்று ஒரு புனிதத் திருவிழாவாகக் கொண்டாடப்பட்டது. இதனைச் ‘சிலம்பு கழி நோன்பு’ என்று கூறுவர்.

“திருமணத்திற்கு முன்பு இளமை தொட்டே தலைவி அணிந்திருந்த காற்சிலம்பைக் கழற்றுதலை மரபாகக் கொண்ட செய்தி தெரிகின்றது. இதனை ஒரு விழாவாகவே பெற்றோர் கொண்டாடினர் எனலாம்” (அ. தட்சிணாமூர்த்தி, தமிழர் நாகரிகமும் பண்பாடும், ப.78).

தலைவனும் தலைவியும் உடன்போக்கின்போது தலைவியின் காலில் அணிந்துள்ள சிலம்பைக் காணும் கண்டோர்கள், இவர்களின் நிலையை நினைத்து அச்சமுறுகின்றனர். இவள் காலில் சிலம்பணிந்துள்ளாள். அதனால் இன்னும் திருமணம் முடியவில்லை என்பதைத் தெரிந்து, எப்படித் தனியே வாழப் போகிறாள் என்று ஐயம் கொள்கின்றனர். இதனை,

வில்லோன் காலன கழலே தொடியோள்
மெல்லடி மேலவுஞ் சிலம்பே (குறுந்.7)

என்னும் அடிகளால் அறியமுடிகின்றது. இங்ஙனம் இளமை வாழ்வு கழிய ஆடவர் வீரக்கழல் அணிந்து போர்ப் பயிற்சி முதலியன பெறுதலும் பெண்கள் சிலம்பு அணிதலும் அதனை கழித்தலும் சடங்குகளாகப் பின்பற்றப்பட்டன.

மணநாள்
அக்காலத்தில் திருமணம் நல்ல நாளும் நேரமும் கணிக்கப்பட்டே நடைபெற்றது. வேங்கை மலர்கள் மலரும் இளவேனிற் காலமே மணத்திற்குரிய காலமாகக் கருதப்பட்டது. இதனை,

வேங்கை தந்த வெற்பணி நன்னாள் (நற்.336)

என்றும், ‘நன்னாள் வேங்கை, ‘கணிவாய் வேங்கை’ என்றும் குறிப்பிடுகின்றது நற்றிணை. சந்திரன் உரோகிணியைக் கூடிய நாள் திருமணத்திற்குச் சிறந்த நாளாகக் கருதப்பட்டது. இதனை அகநானூறு (அகம்.86, 136), சிலப்பதிகாரம் (சிலம்பு.50-53) வாயிலாக அறிய முடிகிறது.

பரத்தையிற் பிரிந்த தலைமகன் விடுத்த தூதைக் கண்டு ஒரு தலைவி பேசும் பேச்சிலிருந்து மணக்காலத்தில் தீ வேட்டனர் என்பதை அறிய முடிகின்றது. தலைவனுடைய தூதுவனைக் கண்ட தலைவி, அவன் என்னை மணந்த காலத்தில் இருந்த அன்புடைய நிலையில் சிறிதும் மாறாமல் நாம் இருக்கின்றோம். நாங்கள் மணந்த காலத்தில் நெய் பெய்த தீ முன்னர் எப்படி விருப்பத்துடன் இருந்தோமோ அதேபோன்று இப்பொழுதும் நான் இருக்கின்றேன் என்று பேசுகிறாள்.

நெய்பெய் தீயி னெதிர்கொண்டு
தான்மணந் தனையமென விடுகந் தூதே (குறுந்.106)

மணக்காலத்து நிலைமையில் தான் உள்ளமையைக் கூறி, நெய்பெய் தீயின் எதிர்கொள்வோம் என்பதால் இது மனைவியின் பகுதியாக அமைந்த எரிவேட்டல் எனப்படுகிறது.

தெறல்அருங் கடவுள் முன்னர் தேற்றி
மெல் இறைமுன்கை பற்றிய சொல் இறந்து
ஆர்வ நெஞ்சம் தலைத்தலைச் சிறப்ப நின்
மார்பு தருகல்லாய் (அகம்.396)

என வரும் அகநானூற்றுத் தலைவியின் பேச்சை நோக்கும்போது, தீக்கடவுள் முன்னர் நின்று, என்றும் பிரியாமல் இருப்பதாக உறுதி உரைத்து ஏற்றுக்கொள்வதாகத் தலைவியின் கையைப் பற்றுதல் அக்கால வழக்கம் என்பது தெரியவருகிறது.

மணக்கும் பொழுது தீயில் நெய் பெய்து யாகம் வளர்ப்பது, பண்டைக் காலமுறை. தீயில் நெய் பெய்யப்பட்டபோது அத்தீயானது மேல்நோக்கி எழுந்து நெய்யை ஏற்றுக்கொண்டு தான் அவியாது நிற்றலைப்போலத் தலைவன் தலைவியை ஏற்றுக்கொண்டு செம்மையடைய வேண்டுதல் என்பது வழக்கு.

நெருப்பு என்பது தூய்மையானது. மங்களம் சார்ந்தது. எண்ணெய் நிலையிலிருந்து தீ என்னும் நிலைக்கு வேள்வி மாற்றம் அடைவதைப் போல ஆண், பெண் இருவரையும் அந்நிலையிலிருந்து கணவன் மனைவி என்னும் நிலைக்கு மாற்றம் செய்கிறது.

சங்க காலத்தில் மணமுரசு ஒலித்தலைப் பற்றி,

படுமண முழவொடு பரூஉப்பணை இமிழ,
வதுவை மண்ணிய மகளிர் விதுப்புற்று (அகம்.7-8)
என்று அகநானூறு உறுதி செய்கிறது. சங்க காலத்தைவிட அதனை அடுத்த சங்கம் மருவிய சிலப்பதிகாரக் காலத்தில் பல்வேறு இசைக் கருவிகள் முழங்கப்பட்டன.

தமிழகத்தில் திருமணம் எனத் தாம் எழுதிய கட்டுரையில் எஸ். வையாபுரிப்பிள்ளை, “பாணிக் கிரகணம், ஓமம், தீ வலம் வருதல், சப்தபதி முதலியன சங்க காலத்தில் நிகழ்ந்தன அல்ல. புரோகிதர்கள் மந்திரம் ஓதுதலும் மணவினையில் இல்லை என்றே கூறலாம். தாலி கட்டும் சடங்கும் காணப்படவில்லை” (மு. சண்முகம் பிள்ளை, சங்கத் தமிழரின் வழிபாடுகளும் சடங்குகளும், ப.264) என்று எழுதியுள்ளார். எனினும் குறுந்தொகைப் பாடலில் (குறுந்.106) யாகம் வளர்த்துத் தீயின் முன்னர் திருமணம் நடைபெற்றது என்ற செய்தியால் தீ வலம் வருதல் அக்காலத்தில் இருந்திருக்க வாய்ப்புண்டு என்பதைத் தெரியப்படுத்துகிறது. அவர் சுட்டிய சடங்குகளில் மற்ற சடங்குகள் ஏதும் சங்க காலத்தில் இல்லை என்பது உறுதியாகிறது.

திருமணம் நிகழ்வதற்கு முன்னதாக நிச்சயதார்த்தம் நிகழ்த்தப்பெறுதல் வழக்கத்தில் இருந்துள்ளது. ஆண், பெண் இருவரும் சிலம்பு அணியும் வழக்கம் இருந்தாலும் மணநாள் அன்று பெண்ணுக்குச் சிலம்பு கழித்தலைச் சங்க காலத்தில் காண முடிகின்றது. அதனைச் சிலம்பு கழி நோன்பு என்று வழங்குகிறோம். அவை தவிர ஒரு சிறந்த நாளை மணநாளாகக் குறித்து, அன்று சில சடங்குகள் நிகழ்த்தி மணம் முடித்துத் தரும் வழக்கம் சங்க காலத்தில் இருந்தமையை அறிய முடிகின்றது.

பயன்பட்ட நூல்கள்
ஆனந்தன். நாஞ்சில். 1999. சங்க இலக்கியத்தில் மனித உரிமைகள், திருச்சிராப்பள்ளி: கண்மணி பதிப்பகம்.
இளம்பூரணர் (உ.ஆ). 2011. தொல்காப்பியம் பொருளதிகாரம், சென்னை: சாரதா பதிப்பகம்.
சண்முகம்பிள்ளை. மு. 2003. சங்கத் தமிழரின் வழிபாடுகளும் சடங்குகளும், சென்னை: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.
சாமிநாதையர். உ.வே. 2000. குறுந்தொகை மூலமும் உரையும், சென்னை: உ.வே. சாமிநாதையர் நூல்நிலையம்.
ஞானசேகரன். தே. 1990. நாட்டார் சமயம், சென்னை: கிரியா பப்ளிகேஷன்ஸ்.
தட்சிணாமூர்த்தி. ஆ. 2005. தமிழர் நாகரிகமும் பண்பாடும், சென்னை: யாழ் வெளியீடு.
நாகராசன். வி. 2004. குறுந்தொகை (தொகுதி 1,2), சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.
பாலசுப்பிரமணியன். கு.வெ. (உ.ஆ). 2004. நற்றிணை, சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.
விசுவநாதன். அ (உ.ஆ). 2007. கலித்தொகை, சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.
வேங்கடசாமி நாட்டார். ந.மு. 1884. சிலப்பதிகாரம், சென்னை: திருநெல்வேலி, தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், (பி) லிமிடெட்.
ஜெயபால். இரா (உ.ஆ). 2004. அகநானூறு (தொகுதி 1,2), சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.
=========================================================
ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):
தமிழரின் வாழ்வியலோடு இரண்டறக் கலந்தது, சடங்கு. இச்சடங்கு, மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை பல நிலைகளில் நிகழ்த்தப்படுகின்றது. இவற்றைப் பண்டைய இலக்கண, இலக்கியங்கள் மிகத் தெளிவாகப் பதிவு செய்துள்ளன. ‘சங்க இலக்கியத்தில் மணச் சடங்குகள்’ என்னும் இக்கட்டுரை, தமிழரின் திருமணம் சார்ந்து மேற்கொள்ளப்படும் சடங்குகளை முறையாக அறிமுகம் செய்கின்றது. தொல்காப்பியத்தின் நூற்பாவையும், குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு முதலிய சங்கச் செய்யுட்களையும் ஆதாரமாகக் கொண்டு இக்கட்டுரை நகர்கின்றது. சங்க காலத்தில் திருமணத்திற்கு முன் நிகழும் நிச்சயதார்த்தம், வதுவைச் சடங்கு, சிலம்பு கழித்தல், மணநாள் பார்த்தல் உள்ளிட்ட சடங்குகளைப் பண்டைய தமிழர்கள் எவ்வாறு மேற்கொண்டனர் என்பதைச் சங்கப் பாடல்களின் சான்றுகளோடு கட்டுரையாளர் விளக்கிச் செல்வது பாராட்டத்தக்கது.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard