தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின் வாய்மை வழியுரைப்பான் பண்பு (தூது, குறள் 688)
உலகிலேயே தூதர்களுக்கான இலக்கணம் வகுத்த முதல் நாடு இந்தியாதான். தூதர்களுக்கான குண நலன்களை வகுத்ததோடு அவர்களுக்கான சட்ட திட்டங்களையும் வகுத்தது பாரதம் தான். இதற்கான சாட்சியங்கள் ராமாயணத்திலும் மகா பாரதத்திலும் இருக்கின்றன. தமிழ் வேதமான திருக்குறள் “தூது” என்ற அதிகாரத்தில் பத்து குறட் பாக்களில் தூதர்களின் லட்சணங்களை முன்வைக்கிறது. ராவணனிடம் தூது சென்ற அனுமனைக் கொல்ல ராவணன் உத்தரவிடுகிறான். உடனே விபீஷணன் அதைத் தடுத்து தூதர்கள் விஷயத்தில் பின்பற்றப்படவேண்டிய அறப் பண்புகளை நினைவு படுத்துகிறான். இதுதான் இந்தக் காலத்தில் “டிப்ளமேடிக் இம்யூனிட்டி” (diplomatic immunity) என்ற பெயரில் சர்வதேச அளவில் பின்பற்றப்படுகிறது. கவுரவர்கள் இடத்தில் தூது சென்ற கிருஷ்ணன் தன்னுயிரையும் பொருட்படுத்தாமல் தனது பணியைச் செய்ததை மகா பாரதம் எடுத்துரைக்கிறது. ஆனால் இக் கட்டுரையில் நான் சொல்ல வந்த விஷயம் பலரும் அறியாத ஒரு விஷயம். வரலாற்றுக் காலத்தில் இரண்டு பார்ப்பன தூதர்கள் படுகொலை செய்யப்பட்ட சோக நிகழ்வு அது. பிராமணர்கள் கல்வி கற்றதாலும் அந்தக் காலத்தில் ஒழுக்க சீலர்களாக இருந்ததாலும் பழங் காலத்தில் தூதர் பணியையும் செய்து வந்தனர். இப்படிப்பட்ட இரண்டு பிராமணர் பற்றி அக நானூறும் புற நானூறும் பாடுகின்றன. பாலை நிலம் வழியாக ஓலைச் சுவடியைக் கையில் ஏந்திவந்த பார்ப்பனனை தங்கம் கொண்டு செல்லும் ஆள் என்று நினைத்து பாலை நில மாக்கள் கொன்று விடுகின்றனர். அவர் ஒரு ஒல்லியான வறிய பார்ப்பனன் என்று அறிந்தவுடன் வருத்தத்துடன் கையை நொடித்துச் சென்று விடுகின்றனர். இதோ அந்தப் பாடல்: “ கண நிரை அன்ன , பல் கால், குறும்பொறை தூது ஒய்ப் பார்ப்பான் மடி வெள் ஓலைப் படையுடைக் கையர் வரு தொடர் நோக்கி உண்ணா மருங்கும் இன்னோன் கையது பொன் ஆகுதலும் உண்டு என கொன்னே தடிந்து உடன் வீழ்த்த கடுங்கண் மழவர் திறன் இல் சிதாஅர் வறுமை நோக்கி செங்கால் அம்பினர் கைந்நொடியாப் பெயர கொடிவிடு குருதித் தூங்கு குடர் கறீஇ” (அகம் 337, பாலை பாடிய பெருங் கடுங்கோ)
புறநானூறு வேறு ஒரு சித்திரத்தைக் காட்டுகிறது. ஒரு பிராமணர் நள்ளிரவு என்று கூடப் பார்க்காமல் அரண்மனைக்குள் ஓலைச் சுவடியுடன் அவசரம் அவசரமாக நுழைகிறார். அடுத்த நிமிடம் அந்த மன்னன் பயந்து போய் தனது போர்க் கால நடவடிக்கைகளைக் கைவிட்டு பணிந்து விடுகிறார். அந்த பார்ப்பனன் பேசிய சொற்களோ வெகு சில என்று வியக்கிறார் புலவர். இதோ அந்தப் பாடல்: “ வயலைக் கொடியின் வாடிய மருங்கின் உயவல் ஊர்திப், பயலைப் பார்ப்பான் எல்லி வந்து நில்லாது புக்குச் சொல்லிய சொல்லோ சிலவே; அதற்கே ஏணியும் சீப்பும் மாற்றி மாண்வினன யானையும் மணிகளைந்தனவே” (புறம் 305, புலவர் மதுரை வேளாசான்)
போர்ச்சுகீசியர்கள், ஸ்பானியர்கள், டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் ஆகியோர் சென்ற இடமெல்லாம் படு கொலை, கொள்ளைகளில் ஈடுபட்டு வணிகத்தையும் அரசாட்சியையும் நிறுவியது உலகறிந்த உண்மை. மனிதர்களை கொக்கு, குருவி போல சுட்டுக் குவித்ததையும் வரலாறு அறியும். ஆஸ்திரேலிய, அமெரிக்கப் பழங்குடிகளையும், இன்கா, மாயா, அஸ்டெக் நாகரீகத்தையும் அழித்த ரத்தக் கரை எந்தக் காலத்திலும் இவர்கள் கைகளில் நாற்றம் வீசும். இந்தியாவில் இவர்கள் இழைத்த கொடுமைகள் ஏராளம். வீரபாண்டிய கட்ட பொம்மன், மருது சகோதரர் முதல் ஜாலியன்வாலாபாக் வரை ஆயிரக் கணக்காணோர் கொல்லப்பட்டனர். போர்ச்சுகீசியர்களும் ஸ்பானிஷ்காரகளும் நயவஞ்சகத்தில் வெள்ளைக்காரர்களுக்கு ஒரு படி மேல்தான். வாஸ்கோடகாமா என்ற கிராதகன் கோழிக்கோட்டில் 1498-ல் வந்திறங்கியபோது அப்போது அரசாட்சி செய்த ஹிந்து மன்னன் (ஜாமொரின்) நல்ல வரவேற்பு கொடுத்தார். ஒரு பிராமண நம்பூதிரி காமாவுக்கு மொழிபெயர்த்தார். பின்னர் போர்ச்சுகீசிய- இந்திய உறவு சீர்கெடவே 70 போர்ச்சுகீசியர்கள் கோழிக்கோடில் கொல்லப்பட்டனர். 1502ம் ஆண்டில் இரண்டாவது முறை இந்தியாவுக்கு வந்த வாஸ்கோட காமா, பழிவாங்கும் நோக்கத்தில் 400 பேருடன் மெக்காவுக்குப் புனித யாத்திரை சென்ற கப்பலை தீயிட்டுக் கொளுத்தினார். புகையை அதிகமாக்கி கப்பலில் இருந்த ஆண்,பெண், குழந்தைகளை சித்திரைவதை செய்து கொன்றார். கோழிக்கோடு மீது குண்டு வீசித் தாக்கினார். எந்த பிராமணர் முதலில் பேச்சுவார்த்தையில் உதவினாரோ அதே பிராமணர், தூதர் என்ற முறையில், வாஸ்கோவின் கப்பலுக்குச் சென்றார். அவரைப் பிடித்து வைத்து அவரது காதுகளை வெட்டி ஒரு நாயின் காதுகளை அவர் காதுகளில் வைத்துத் தைத்தார். உதடுகளைத் தைத்து ஜாமொரின் மன்னரிடம் அனுப்பிவைத்தார். ராவணன் கூட செய்யாத காடுமிராண்டித்தனமான செயல் இது. இதற்குப் பின் பேச்சுவார்த்தைக்கு வந்த ஒரு பிராமணரைக் கண்டம் துண்டமாக வெட்டி அனுப்பினார். இபோதும் கூட எந்த ஒரு நாடும் தூதர்களை இப்படி அவமானப் படுத்துவதில்லை. கோவாவிலும் இலங்கையில் யாழ்ப்பாணத்திலும் போர்ச்சுகீசியர்கள் செய்த கொடுமைகள் தனிக் கதை. தூதர்களுக்கு இலக்கணம் வகுத்த பூமியில் இப்படி நடந்தது வருந்ததக்கது. இதில் வேடிக்கை என்னவென்றால் ஹிட்லர் செய்த கொடுமை பற்றி வாரம் தோறும் ஒரு டாக்குமெண்டரி அல்லது சினிமா அல்லது புத்தகம் வெளியிடும் வெள்ளைக்காரர்கள் அவர்கள் செய்த கொடுமைகளை அழகாக மறைத்து வருகின்றனர். முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்க முடியுமா?