சொற்பிறப்பியல் வழி தமிழுயர்த்த நினைப்போர், குமுக மிடையத்தில் அரசியற் பார்வை கொள்ளாது, பாவாணர் புகழை மட்டும் பாடாது, அருள் கூர்ந்து பாவாணர், ப.அருளி, கு.அரசேந்திரன் போன்றோரின் கட்டுரைகளை ஆழ்ந்து படித்துப் புரிந்து கொள்ளுங்கள். கொஞ்சம் புலமை கொள்ளுங்கள்.
”முந்தையோர் எந்த அளவிற்குச் சலித்துப் பார்த்துக் கவனத்தோடு பொருள் சொன்னார்? சொற்பிறப்பியல் என்பது எப்படி நகர்கிறது? எவ்வொலி எப்படித் திரியும்?, எது முறை, எது முறையற்றது? நாம் சொல்வதன் ஏரணமென்ன?, மக்கள் பயன்பாடென்ன? முற்படுத்தும் கருத்துகளுக்கு இலக்கிய, கல்வெட்டு, பிறமொழி, பிறபுல ஆதாரங்களுண்டா?” எனப் பாருங்கள்.
தோன்றியபடி 4 எழுத்துகளைத் திருத்திப் போட்டு, அதன் வழி உன்னித்து Folk etymology காட்டுவது, முறையற்றது. (நான்சொல்லும் சொற்பிறப்பியலைக் கூட ஏற்கமறுப்போர் இணையத்திலுண்டு. அது கண்டு நான் சினமுற முடியுமோ?). இதுபோற் கூற்றை எல்லா மொழியியலாரும் சட்டென ஏற்கார்.
சொற்பிறப்பியல் என்பது நம்முன் நடக்கும் ”அந்தர சால” மாகை (magic) அல்ல. மீறிச் செய்ய நாம் அடம் பிடித்தால், people would not take us seriously. ”Non-sensical arguments” என்று கூறி நகர்வர்.