New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கொடுமணல் - பகுதி 1 Sriraman Puthucode


Guru

Status: Offline
Posts: 24636
Date:
கொடுமணல் - பகுதி 1 Sriraman Puthucode
Permalink  
 


கொடுமணல் - பகுதி 1
கொடுமணலில் 2018ல் எனது தலைமையில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியின் முடிவுகள் குறித்த சில பதிவுகள். பொதுவாக எனது தொல்லியல் சிந்தனைகளை முகனூலில் பதிவிடுவது இல்லை. திரு மாரி ராஜனின் சமீபத்திய கொடுமணலின் தமிழ்பிராமி எழுத்து பொறிக்கப்பட்ட முக்கியமான ஒரு பானை ஓட்டினைப் குறித்த பதிவு, என்னை விரிவான பதிவினை செய்ய தூண்டியது.
கொடுமணல் காவிரி ஆற்றின் கிளை ஆறான நொய்யலாற்றங்கரையின் மீது அமைந்துள்ள ஒரு முக்கியமான தொல்லியல் வாழ்விடம்.
சேரர் தலைநகரான கரூரையும் மேலைக்கடல் துறைமுகமான முசிறியினையும் இணைத்த, நொய்யலாற்றை ஒட்டிச் சென்ற, வணிகப் பாதையில் கொடுமணல் அமைந்துள்ளது. இதற்கு சான்றாக, ரோமானிய நாணயங்கள் [அகஸ்டஸ் (27 பொ.யு.மு-பொ. யு. 14.), டைபீரியஸ் (14-37 பொ. யு.), அன்டொனியஸ் பயஸ் (138-161 பொ. யு.), கொடுமணல் மேற்பரப்பில் தனியாகவும், சுற்றியுள்ள காத்தாங்கண்ணி (5 கி.மி). வெள்ளனூர், சூலூர் போன்ற இடங்களில் குவியலாகவும் கிடைத்துள்ளன.
பதிற்றுப்பத்து (67: கொடுமணம் பட்ட நெடுமொழி ஓக்கலோடு 74 : கொடுமணம் பட்ட வினைமாண் அருங்கலம்) குறிப்பிடும் அணிகலன்களுக்குப் புகழ்பெற்ற கொடுமணம், இன்றைய கொடுமணலாக இருக்கலாம்.
திரு ஸ்ரீனிவாச தேசிகன், (இந்தியத் தொல்லியல் துறை) அவர்களால் 1961இல் இவ்விடத்தின் பெருங்கற்கால நினைவுச் சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
பேரா. இராசு அவர்களின் பல களஆய்வுகளில் சேகரிக்கப்பட்ட பல்வேறு விதமான தொல்பொருட்கள், ஈரோடு கலைமகள் கல்வி நிலையத்தில் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. கொடுமணல் தொல்லியல் வாழ்விடத்தை தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகக்தினால் அகழ்வாராய்ச்சி செய்ய இச்சேகரிப்பே தூண்டுகோலாகியது. கீழ்க்கண்ட காலங்களில்/அமைப்புகளால் அகழ்வாராய்ச்சி நடத்தப்பெற்றது.
நான்கு அமைப்புகளின் அகழ்வாராய்ச்சியில் கொடுமணலின் தொல்லியல் முக்கியத்துவம் வெளிக் கொணரப் பட்டிருக்கிறது.
தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சை மற்றும் பேரா. இராஜன், புதுசேரி மத்திய பல்கலைக் கழகம் மேற்கொண்ட அகழ்வாரய்ச்சிகளின் முடிவுகள் பேரா. இராஜனின் பல வெளியீடுகளால் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. முறையான அறிக்கை விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத் தொல்லியல் துறையின் முந்தைய அகழ்வாரய்ச்சியின் கண்டுபிடிப்புகள் ஒரு சிறிய வெளியீடாக வந்துள்ளது.
பேரா. இராஜனின் பல வெளியீடுகளால் நாம் அறிவது:
அகழ்வாரய்ச்சியின் முன்கட்டத்தில், கொடுமணலில் மூன்று கலாச்சார காலகட்டங்கள் (cultural phases-Phase I A, B and C) அடையாளம் காணப்பட்டன.
பின்பு, கொடுமணலின் கலாச்சார எச்சங்கள் ஒரே கலாச்சார காலகட்டத்தினை (cultural period) சேர்ந்ததாகக் கருதப்பட்டு, எச்சங்கள் கிடைத்த ஆழம் முக்கிய காரணியாக பின்பு வந்த வெளியீடுகளில்/பகுப்பாய்வுகளில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
முந்தைய அகழ்வாரய்ச்சிகளின் முக்கிய முடிவுகள்
கொடுமணலில் மூன்று காலகட்டங்களிலும் பளிங்கு கல் (quartz), படிமம் (rock crystal), பச்சைகல் (beryl), நீலக்கல் (amethyst) ஆகிய அரிய கற்களில் மணிகள் செய்தல், இரும்பு/எஃகு உருக்குதல், செம்பினை உருக்கி பொருட்கள் செய்தல், சங்கு மற்றும் எலும்பினில் அணிகலன்கள் செய்தல், தச்சுத்தொழில், துணி நெய்தல் போன்ற கைவினைத் தொழில்கள் நடைபெற்றன.
கொடுமணலின் அருகில் உள்ள பளிங்கு, பச்சைகல் நீலக்கல் படிமங்களை அகழ்ந்து, அவற்றை வெட்டி, சமன் செய்து மற்ற பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்தது கொடுமணலின் சிறப்பாகும்.
மிக முக்கியமாக, கீறல் குறீயீடுகள் மற்றும் தமிழ்பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் அதிக அளவில் மேலிருந்து கீழ் வரை கிடைப்பது கொடுமணலின் தனிச் சிறப்பு.


__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

கொடுமணல் பகுதி 2
மணிகளின் இடுபொருள் மையமே, பெருமளவில் தயாரித்த இடம் அல்ல
முந்தைய அகழ்வாரய்ச்சிகளின் முக்கிய முடிவுகள் மூலம் கொடுமணலில் மூன்று காலகட்டங்களிலும் பளிங்கு கல் (quartz), படிமம் (rock crystal), பச்சைகல் (beryl), நீலக்கல் (amethyst) ஆகிய அரிய கற்களில் மணிகள் செய்தல் மிக முக்கிய கைவினை (lapidary craft specialization) தொழிலாக கொடுமணலில் இருந்தது என பல கட்டுரைகளில் பேரா. இராஜன் குறிப்பிடுகின்றார்.
இடுபொருட்கள் அருகில் (அரசம்பாளையம்) கிடைப்பது, அதனை அகழ்ந்தற்கான குறியீடுகள், அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பளிங்கு மற்றும் நீலக்கற்களின் இயற்கையாக கிடைக்கக் கூடிய கற்கள் (naturally occurring stones or fragments from large quarried piece ) மற்றும் வெட்டி செதுக்கப்பட்ட உருளை , தட்டை வடிவ கட்டிகள், (flaked and finished discoid, spheroids and cylindrical ), பச்சைக் கற்களின் சிறு பகுதிகள், பாதி செய்து முடிக்கப்பட்ட மணிகள்/ மணி வெற்றுகள் (unfinished beads or bead-blanks), தேய்கற்கள் (bead polishers of garnet/corundum) மற்றும் இயற்கையாக கிடைக்கக் கூடிய கற்களை, உருளை, தட்டைக் கட்டிகளாக மாற்றும் போது கிடைத்த சீவல்கள் (flakes) ஆகியவை அகழ்வாராய்ச்சியில் கிடைத்தன. இக்காரணிகளின் அடிப்படையில் மணிகள் இங்கு உற்பத்தி செய்யப்பட்டன என முடிவு கொள்ளப்பட்டன.
ஆனால், மிக அதிக அளவில் மணிகள் உற்பத்தி செய்யப்பட்டு வெளியிடங்களுக்கு அனுப்பட்டுள்ளதா (whether a production center of beads?) என்பது விவாத்திற்கு உட்பட்டது.
இவ்விடத்தில் அதிக அளவில் மணிகள் தயாரிக்கப்பட்டிருந்தால், பாதி செய்து முடிக்கப்பட்ட மணிகள், அல்லது மணி வெற்றுகளின் (bead blanks, that is stone shaped into beads in various stages of finishing like chipping, polishing and mainly the bore is undrilled) எண்ணிக்கை அதிகமாக இருந்திருக்க வேண்டும்.
2018ல் நிகழ்ந்த அகழ்வாராய்ச்சியில் அவ்வாறு இல்லை. மாறாக, பளிங்கு கல் மற்றும் நீலக்கற்களின் இயற்கையாக கிடைக்கக் கூடிய கற்களை உடைத்து, உருளை, தட்டைக் கட்டிகளே (blocks) அதிகமாக கிடைகின்றன.
2018ல் நிகழ்ந்த அகழ்வாராய்ச்சியில் கிடைத்த மணிகளில் (300+), பாதி செய்து முடிக்கப்பட்ட மணிகளின் எண்ணிக்கை (24) மிகக் குறைவு. ஆகவே, கொடுமணலில் மணிகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. ஆனால், பெருமளவில் மணிகளை தயாரித்த இடம் அல்ல (not a large manufacturing center).
பொது யுகத்தின் முன் பின்னான சில நூற்றாண்டுகளில், இந்திய –ரோமானிய – மேற்கு/கிழக்கு ஆசியாவிற்கு இடையே இருந்த பண்ட மாற்று வர்த்தகத்தில் மணிகளின் பங்கு மிக அதிகம் (குறிப்பாக இந்திய பச்சை கல் மணிகள் ரோமில் அதிகமாக விரும்பப்பட்டது) .
தென்னிந்திய மணிகளை குறித்து விரிவாக ஆய்வு செய்த பீட்டர் பிரன்சிஸ், இவ்வணிகத்தில் இடுபொருட்களை கொண்டு செல்வதில் பெருங்கற்கால ஈமச் சின்னங்களை உருவாக்கியவர்களின் பங்கு அதிகம் என்கிறார். முந்தைய அகழ்வாராய்ச்சியில், ஒரு பெருங்கற்கால கல்லறையிலிருந்து மட்டும் 3000+ சூதுபவள மணிகள் கிடைத்தது.
கொடுமணலில் இருந்தோர் பளிங்கு கல், நீலக்கல், மற்றும் பச்சைக்கல் இடுபொருட்களை கட்டிகளாக கொடுத்து சூதுபவள மணிகளை வாங்கும் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தனர் எனக் கொள்வது சிறந்தது. கொடுமணல் ஒரு இடுபொருள் ஈட்டு மையமே (raw material sourcing center).
படங்கள்: பளிங்கு கல், நீலக்கல், இடுபொருள் கட்டிகள், இயற்கையான கற்கள், மணி வெற்றுகள், தேய்கற்கள்


__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

கொடுமணல் பதிவு 3
அருங்கல அச்சு
கொடுமணம் பட்ட வினை மாண் அருங்கலம், 5
பந்தர்ப் பயந்த பலர் புகழ் முத்தம்,
அரிசில்கிழார், பதிற்றுப்பத்து 74
அரிசில் கிழார், பெருஞ்சேரல் இரும்பொறையின் அரசியார் கொடுமணத்தில் 😊 கொடுமணல்) உருவாக்கப்பட்ட சிறந்த அருங்கலங்களையும் (அணிகலன்), பந்தரிலிருந்து பெறப்பட்ட, புகழ் பெற்ற முத்துக்களையும் அணிந்திருந்ததாகக் குறிப்பிடுகிறார். மணிகளும், மணிகளை செய்ததற்கான கற்களும் கொடுமணலில் (பதிவு-2) வெகு அளவில் கிடைத்துள்ளன. ஆயினும், அணிகலன்கள் தயாரித்தற்கான எந்த ஒரு எச்சங்களும் கிடைக்கவில்லை.
2018ல் நிகழ்ந்த அகழ்வாராய்ச்சியில் கிடைத்த மென் களிக்கல்லில் (schist stone, பொதுவாக மாக்கல், வீட்டில் இருக்கும் கற்சட்டிகள் செய்யும் கல்) செய்யப்பட்ட தக்கையான ஒரு பொருள் கிடைத்தது. அகழ்வாராய்ச்சியின் காலத்தில், அது நெசவுத்தொழிலில் பயன்பட்டிருக்கலாம் என அனுமானித்தோம்.
பின்பு, ஏனைய அகழ்வாராய்ச்சி அறிக்கைகளை ஒப்பிட்ட தருணத்தில், பிஹார் மாநிலத்தில் பாகல்பூர் மாவட்டத்தில் சம்பா அகழ்வாராய்ச்சியில் இதற்கு இணையான பொருட்களை, அணிகலன்கள் தயாரித்தற்கான அச்சுகள் (jewellers mould) என அடையாளம் கண்டுள்ளனர். எனவே, இதுவும் அணிகலன்கள் தயாரிக்க பயன்படுத்திய ஒரு அச்சாகும்.
இதன் இணைப் பலகை ஒன்று இருக்க வேண்டும். அது கிடைக்கவில்லை. இரு பலகைகளையும் இணைத்து, சிறு மர ஆப்புகளைக் இரு துளைகளிலும் செலுத்தி இறுக்கமாக இணைத்த பின், ‘V’ போன்ற துளை மூலம் உருக்கிய பொன்னை உள்ளே செலுத்துவார்கள். உருகிய பொன்னும் பாதை வழி சென்று, கீழ் இருக்கும் கோள வடிவ அச்சினை அடையும். இதனால், பல கோள வடிவ மணிகளை ஒரே வார்ப்பில் உருவாக்க முடியும்.
கொடுமணத்தில் (=கொடுமணல்) சிறந்த அருங்கலங்கள் உருவக்கப்பட்டன என்ற பதிற்றுப்பத்து செய்திக்குச் சான்று கிடைத்துள்ளது.
படங்கள்: கொடுமமணலில் கிடைத்த அச்சு, சம்பாவில் கிடைத்த அச்சுகள்


__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

செம்பு-உலோகக் கலவையில் செய்த ஊசி (Copper alloy pin)
2018ல் நிகழ்ந்த அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பல தொல்பொருட்களில், மிக முக்கியமானது செம்பு அல்லது செம்பு-உலோகக் கலவையில் செய்த ஓர் ஊசி ஆகும்.
தோராயமாக 9 செ.மீ நீளமிருக்கும் இவ்வூசி, Lost wax process எனும் வார்ப்பு முறையில், திடமாக வார்க்கப்பட்டுள்ளது (solid casting).
இவ்வூசியின் தலையில், ஒரு தட்டையான பட்டியின் மீது ஒரு நாய் குட்டியின் மிக அழகான உருவம் (சுமார் 1.2 செ.மீ) உள்ளது.
சமகாலத்தை சார்ந்த, இதற்கு இணையான தொல்லியியல் சான்றுகள் எங்கும் கிடைக்கவில்லை.
செம்பு உருக்குவதற்கான உலைகL இவ்வூசி கிடைத்த குழியின் வடக்கில் 20-40மீ தூரத்தில் அடுத்த குழிகளில் பேரா. இராஜனால் கண்டறியப்பட்டது. உலோகங்களை உருக்கப் பயன்படும் மட் பாத்திரங்களும் (crucibles) அதிக எண்ணிக்கையில் இவ்விடத்தில் கிடைத்தன.
மேலும், ஈமச்சின்னங்களிலிருந்து பல செம்பு/வெண்கல பொருட்கள் கிடைத்தன என்பது குறிப்பிடத்தக்கது.
பொது யுகத்தின் துவக்கத்தில் ரோமானியத்தில் அழகிய வேலைப்பாடுடன் கூடிய, வெண்கலத்தில் செய்த ஊசிகள் தலை அலங்காரத்தில் பெருமளவில் உபயோகிக்கப்பட்டன என் அறிகிறோம்.
விலங்குகளின் உருவத்துடன் இருக்கும் ஊசிகள் (சுமார் இதே அளவில், 9 செ.மீ நீளம்) ஹரப்பா, மொகஞ்சதாரொ மற்றும் இரானின் லூரிஸ்தான் பகுதிகளில் (பொ.யு. 8-7 ஆம் நூற்றாண்டு) ஆகிய இடங்களில் கிடைத்துள்ளன.


__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

கொடுமணல் பதிவு 5
நாணயங்கள்
2018ல் நிகழ்ந்த அகழ்வாராய்ச்சியில் நான்கு நாணயங்கள் கிடைத்தன. அவற்றில் இரண்டு முத்திரை நாணயங்கள் (punch marked coins). மற்ற இரு நாணயங்களும் விஜயநகர காலத்தவை.
முதல் நாணயம்: வெள்ளி, 2.44கிராம், சதுரம், முகப்புப் பக்கம் அரை கதிரவன், மற்றும் பிற புரியாத முத்திரைகள், பின் பக்கம் புரியாத முத்திரைகள்.
இரண்டாம் நாணயம்: செம்பு, 1.67 கிராம், சதுரம், முத்திரைகள் சரியாகத் தெரியவில்லை. ஒரு பக்கத்தில் கதிரவனின் (சூரியன்) முத்திரை உள்ளது.
மூன்றாம் நாணயம்: வெள்ளி, 0.25கிராம், முகப்புப் பக்கத்தில் வட்டத்திற்குள் முன் நோக்கி செல்லும் யானை, பின் பக்கம் ‘தேவராய’ நாகரி எழுத்துக்களில். தாரா வகை நாணயம்.
நான்காம் நாணயம்: செம்பு, 3.13 கிராம், விஜயநகர பேரரசின் நரசிம்மர் / உட்கார்ந்த சிங்க காசு.
முதல் இரண்டு நாணயங்களும் மகத நாட்டு முத்திரை நாணய வகையினை சேர்ந்ததாக இருக்கலாம். இதில் செம்பு முத்திரை நாணயம் அரிதாகத்தான் கிடைக்கும். இரண்டு நாணயங்களும் ஒரே குழியில் அதே ஆழத்தில் கிடைத்தன. பொ. யு. மு. 4 ஆம் நூற்றாண்டிலிருந்து வெளியிடப்பட்ட இன் நாணயங்கள் இந்திய நிலப்பரப்பு முழுவதும் பல நூற்றாண்டுகள் சுழற்சியில் இருந்தன.
இதுவரை, அகழ்வாராய்ச்சியில் ஒன்றும், மேற்பரப்பு கள ஆய்வுகளில் ஒன்றும் என இரு வட்ட வடிவ வெள்ளி முத்திரை நாணயங்கள் கிடைத்துள்ளன. ஒரு ரோமானிய நாணயமும் மேற்பரப்பு கள ஆய்வுகளில் கிடைத்துள்ளது.
முத்திரை மற்றும் ரோமானிய நாணயங்கள் கிடைப்பது இவ்விடத்தின் வர்த்தகத் தொடர்புகளை உறுதிப்படுத்துகிறது.


__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

கொடுமணல் பதிவு 6
பிராமி/தமிழ் பிராமி/தமிழி எழுத்துக்கள் பொறித்த பானை ஒடுகள்
2018ல் நிகழ்ந்த அகழ்வாராய்ச்சியில் கிடைத்தப் பிற தொல்பொருட்களைக் குறித்தும், இவ்வாண்டு அகழப்பட்ட பெரும் கற்கால ஈமச்சின்னங்கள், அவைகளிலிருந்து கிடைத்த தரவுகள் குறித்தும் பதிவிடலாம் என்றிருந்தேன். இறுதியாக தமிழ் பிராமி/ பிராமி /தமிழி/தமிளி/ கொங்கு பிராமி இன்னும் பல (எதற்கு வம்பு) எழுத்துக்கள் பொறித்த பானை ஒடுகளையும் அதன் கால அளவீட்டினையும் குறித்துப் பல பதிவுகள் இடுவது என்றும் இருந்தேன்.
ஆயினும் முகநூல் சதுக்கத்தில் பல சதுக்க ஆய்வாளர்கள் குவிரனையும், குபீரனையும், ஆதனையும் சதுக்க பூதமாய் நின்று பெரும்/கடும் சோதனை செய்யும் காலையில், நமது நண்பர் ஒருவரிடம் தனிப்பட்ட முறையில் பெயர்கள் இருக்கும் பையினை சிறிது நேரம் கொடுத்தால், அவர் சதுக்கத்தில் நின்று இப் பெயர்களும் பையில் உள்ளது எனப் பதிவிட்டார். வேறு வழியில்லமால், நானும் அனைத்து பெயர்களையும் வெளியிட வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். Let the cats out of the bag..
இத்தொகுதியின், முதற் பதிவாக, கொடுமணலில் 2018ல் நிகழ்ந்த அகழ்வாராய்ச்சியில் பானை ஓடுகளின் மீது முழுவதுமாக கிடைத்த தனி நபர் பெயர்களின் பட்டியல் இதோ:
1. viraṉ விரன் (தனிப்பெயர். கு விடுபடவில்லை, வீ அல்ல, வி)
2. sumānaṉ ஸுமாநன்
3. ataṉ அதன்
4. campaṉ சம்பன்
5. sātaṉ ஸாதன்
6. sātantaisāaḷaṉ ஸாதந்தைஸாஅளன்
7. cataṉ சதன்
8. co/cōṟātan சொ/சோராதன் (இதிலிருந்து இருக்கும் பெயர்கள் கொடுமணலில் புதியவை)
9. māsārakaṉ மாஸாரகன்
10. matasa (#)மதஸ
11. piriyan பிரியந்
12. Sumānantai ஸுமாநந்தை
13. vaṅ(ra)kaṉ வங்(ர)கன்
14. tātaṉ தாதன்
15. sumaṉ ஸுமன்
16. piṅkacaṉ பிங்கசன்
17. tisiḷḷa திஸிள்ள
18. ..saṉiḷa..vira. ..ஸன்இள..விர.. (முழுப் பெயர் அல்ல)
19. aṭicātaṉ அடிஸாதன்
20. sampaṉ ஸம்பன்
21. Sātinan ஸாதிநன்
22. sāparanaṉ ஸாபரநன்
23. lakaraṉ லகரன்
24. cātaṉ சாதன்
25. kuvāraṉ குவாரன்/ குவிரன் (எழுதுவதில் பிழை. என்னைப் போல் 2??? ஆண்டுகளுக்கு முன்!)
இப்பெயர்களின் மொழி, வேர்ப் பெயர் ஆகியவற்றை வடமொழி, பிராகிருதம நிகண்டுகள், தமிழ் மொழியின் அணிகலங்களான சங்கத் தமிழ் இலக்கியங்களிலிருந்து கண்டுபிடிப்பதை முகநூல் சதுக்கத்தில், சதுக்க பூதமாய் நின்று பெரும்/கடும் சோதனை செய்யும் சதுக்க ஆய்வாளர்களிடம் விட்டுவிடுகிறேன். சுவையான ஆய்வுச் செய்திகளையும் வேர் இருக்கும் கற்பனைகளையும் அள்ளி வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
..saṉiḷa..vira. ..ஸன்இள..விர என்ற பெயர் சுமார் 7 அங்குலம் உயர எழுத்துக்களில் பொறிக்கப்பட்டுள்ளது. பேரா. இராஜனின் சம்பன் சுமணன் என்ற பானை பொறிப்பைப் போன்றது. இரண்டும் அருகாமையில் (10மீ இடைவெளியில்) கிடைத்தன. புகைபடம் இணைக்கப்பட்டுள்ளது.
மேலும் பல பெயர்களுக்கு பேரா. இராஜனின் Early Writing Systems அல்லது அதன் தமிழாக்கம் நூலினையும் பேரா. சுப்பராயுலுவின் கட்டுரையினையும் படிக்கவும். http://www.varalaaru.com/airavati/airavati_final_high.pdf


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard