New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: உலகத்தார்


Guru

Status: Offline
Posts: 24778
Date:
உலகத்தார்
Permalink  
 


உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து
அலகையா வைக்கப் படும். குறள் 850: புல்லறிவாண்மை.
மணக்குடவர் உரை:உலகத்தில் அறிவுடையார் பலர் உண்டென்பதாகிய ஒரு பொருளை இல்லையென்று சொல்லுமவன், இவ்வுலகத்தின் கண்ணே திரிவதாகிய பேயென்று எண்ணப்படுவன். இஃது உயர்ந்தோர் உண்டென்பதனை இல்லையென்றல் புல்லறிவென்றது.
பரிமேலழகர் உரை:உலகத்தார் உண்டு என்பது இல் என்பான் -உயர்ந்தோர் பலரும் உண்டு என்பதோர் பொருளைத்தன் புல்லறிவால் இல்லை என்று சொல்லுவான்; வையத்துஅலகையா வைக்கப்படும் - மகன் என்று கருதப்படான்,வையத்துக் காணப்படுவதோர் பேய் என்று கருதப்படும். (கடவுளும், மறுபிறப்பும், இருவினைப் பயனும் முதலாக அவர் உள என்பன பலவேனும், சாதி பற்றி உண்டு என்றும், தானே வேண்டியகூறலால் ஒப்பும், வடிவால் ஒவ்வாமையும் உடைமையின் தன் யாக்கை கரந்து மக்கள் யாக்கையுள் தோன்றுதல்வல்ல 'அலகை' என்றும் கூறினார். இவை நான்கு பாட்டானும்உறுதிச்சொல் கொள்ளாமையது குற்றம் கூறப்பட்டது.).
மு. வரதராசன் உரை:உலகத்தார் உண்டு என்று சொல்வதை இல்லை என்று கூறுகின்ற ஒருவன், உலகத்தில் காணப்படும் ஒரு பேயாகக் கருதி விலக்கப்படுவான்.
மு. கருணாநிதி உரை:ஆதாரங்களைக் காட்டி இதுதான் உண்மை என்று தெளிவாகக் கூறப்படுகிற ஒன்றை, வேண்டுமென்றே இல்லை என மறுத்துரைப்பவரைப் பயபேய்களின் பட்டியலின்தான் வைக்க வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:இருக்கிறது என்று உயர்ந்தோர் சொல்லும் ஒரு பொருளை இல்லை என்று மறுக்கும் அறிவற்றவன், இப்பூமியில் காணப்படும் பேயாகக் கருதப்படுவான்.
Translation:Who what the world affirms as false proclaim,
O'er all the earth receive a demon's name.
Explanation:He who denies the existence of what the world believes in will be regarded as a demon on earth.

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும். குறள் 260:புலான்மறுத்தல்.
மணக்குடவர் உரை:கொல்லானுமாய்ப் புலாலையுண்டலையுந் தவிர்த்தவனைக் கை குவித்து எல்லாவுயிருந் தொழும். மேல் எல்லாப்புண்ணியத்திலும் இது நன்றென்றார்; அது யாதினைத் தருமென் றார்க்குக் கொல்லாதவன் தேவர்க்கும் மேலாவனென்று கூறினார்.
பரிமேலழகர் உரை:கொல்லான் புலாலை மறுத்தானை - ஓர் உயிரையும் கொல்லாதவனுமாய்ப் புலாலையும் உண்ணாதவனை, எல்லா உயிரும் கைகூப்பித் தொழும் - எல்லா உயிரும் கை குவித்துத் தொழும். (இவ்விரண்டு அறமும் ஒருங்கு உடையார்க்கு அல்லது ஒன்றே உடையார்க்கு அதனால் பயன் இல்லை ஆகலின், கொல்லாமையும் உடன் கூறினார். இப்பேரருள் உடையான் மறுமைக்கண் தேவரின் மிக்கான் ஆம் என அப் பயனது பெருமை கூறியவாறு. இவை மூன்று பாட்டானும் ஊன் உண்ணாமையது உயர்ச்சி கூறப்பட்டது.).
மு. வரதராசன் உரை:ஓருயிரையும் கொல்லாமல் புலால் உண்ணாமல் வாழ்கின்றவனை உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் கைகூப்பி வணங்கும்.
மு. கருணாநிதி உரை:புலால் உண்ணாதவர்களையும், அதற்காக உயிர்களைக் கொல்லாதவர்களையும் எல்லா உயிரினங்களும் வணங்கி வாழ்த்தும்.
சாலமன் பாப்பையா உரை:எந்த உயிரையும் கொல்லாதவனாய், இறைச்சியைத் தின்ன மறுத்தவனாய் வாழ்பவனை எல்லா உயிர்களும் கை குவித்துத் தொழும்.
Translation:Who slays nought,- flesh rejects- his feet before
All living things with clasped hands adore.
Explanation:All creatures will join their hands together, and worship him who has never taken away life, nor eaten flesh.

தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய
மன்னுயி ரெல்லாந் தொழும். குறள் 268: தவம்.
மணக்குடவர் உரை:தன்னுயிரானது தானென்று கருதுங் கருத்து அறப்பெற்றவனை, ஒழிந்தனவாகிய நிலைபெற்ற உயிர்களெல்லாம் தொழும். உயிரென்றது சலிப்பற்ற அறிவை; தானென்றது சீவனாகி நிற்கின்ற நிலைமையை; தானறுதலாவது அகங்கார மறுதல்.
பரிமேலழகர் உரை:தன் உயிர் தான் அறப்பெற்றானை - தன் உயிரைத் தான் தனக்கு உரித்தாகப் பெற்றவனை, ஏனைய மன் உயிர் எல்லாம் தொழும் - பெறாதனவாகிய மன் உயிர்கள் எல்லாம் தொழும். (தனக்கு உரித்தாதல் - தவம் ஆகிய தன் கருமம் செய்தல். அதனின் ஊங்குப் பெறுதற்கு அரியது இன்மையின், 'பெற்றானை' என்றார். 'அது பெறாதன' என்றது ஆசையுட் பட்டு அவம் செய்யும் உயிர்களை. சாபமும் அருளும் ஆகிய இரண்டு ஆற்றலும் உடைமையின் 'தொழும்' என்றார்.).
மு. வரதராசன் உரை:தவ வலிமையால் தன்னுடைய உயிர், தான் என்னும் பற்று நீங்கப் பெற்றவனை மற்ற உயிர்கள் எல்லாம் (அவனுடைய பெருமையை உணர்ந்து) தொழும்.
மு. கருணாநிதி உரை:தனது உயிர் என்கிற பற்றும், தான் என்கிற செருக்கும் கொள்ளாதவர்களை உலகம் புகழ்ந்து பாராட்டும்.
சாலமன் பாப்பையா உரை:தன் உயிர், தான் என்னும் எண்ணம் முற்றும் இல்லாதவனைப் பிற உயிர்கள் எல்லாம் தொழும்.
Translation:Who gains himself in utter self-control,
Him worships every other living soul.
Explanation:All other creatures will worship him who has attained the control of his own soul.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

உலகத்தோ டொட்ட ஒழுகல் பலகற்றுங்
கல்லா ரறிவிலா தார். குறள் 140 : ஒழுக்கமுடைமை.
கலைஞர் மு.கருணாநிதி உரை:உயர்ந்தோர் ஏற்றுக் கொண்ட ஒழுக்கம் எனும் பண்போடு வாழக் கற்காதவர்கள் பல நூல்களைப் படித்திருந்தும்கூட அறிவில்லாதவர்களே ஆவார்கள்.
மு.வரதராசனார் உரை:உலகத்து உயர்ந்தவரோடு பொருந்த ஒழுகும் முறையைக் கற்காதவர், பல நூல்களைக் கற்றிருந்த போதிலும் அறிவில்லாதவரே ஆவர்.
சாலமன் பாப்பையா உரை:முந்திய அறநூல்கள் கூறியவற்றுள் இன்றைக்குப் பொருந்தாதவற்றை விலக்கியும், கூறாதனவற்றுள் பொருந்துவனவற்றை ஏற்றும் வாழக் கல்லாதவர், பல்வேறு நூல்களைக் கற்றவரே என்றாலும் அறிவில்லாதவரே.
பரிமேலழகர் உரை:உலகத்தோடு ஒட்ட ஒழுகல் கல்லார் - உலகத்தோடு பொருந்த ஒழுகுதலைக் கல்லாதார், பல கற்றும் அறிவிலாதார் - பல நூல்களையும் கற்றாராயினும் அறிவிலாதார். (உலகத்தோடு பொருந்த ஒழுகுதலாவது, உயர்ந்தோர் பலரும் ஒழுகிய ஆற்றான் ஒழுகுதல். அறநூல் சொல்லியவற்றுள் இக்காலத்திற்கு ஏலாதன ஒழிந்து, சொல்லாதனவற்றுள் ஏற்பன கொண்டு வருதலான் அவையும் அடங்க 'உலகத்தோடு ஒட்ட' என்றும் அக்கல்விக்குப் பயன் அறிவும், அறிவிற்குப் பயன் ஒழுக்கமும் ஆகலின், அவ்வொழுகுதலைக் கல்லாதார் 'பல கற்றும் அறிவிலாதார்' என்றும் கூறினார்.ஒழுகுதலைக் கற்றலாவது, அடிப்படுதல். இவை இரண்டு பாட்டானும், சொல்லானும், செயலானும் வரும் ஒழுக்கங்கள் எல்லாம் தொகுத்துக் கூறப்பட்டன.)
மணக்குடவர் உரை:அறிவிலாதார் பல நூல்களைக் கற்றாலும் உயர்ந்தாரோடு பொருந்த ஒழுகுதலை அறியார். இஃது ஒழுக்கமாவது உயர்ந்தாரொழுகின நெறியில் ஒழுகுதலென்பதூஉம் அவ்வொழுக்கம் கல்வியினும் வலி யுடைத்தென்பதூஉம் கூறிற்று.
ஞா.தேவநேயப் பாவாணர்
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் கல்லார் - உயர்ந் தோரொடு பொருந்த வொழுகுதலைக் கல்லாதார் ; பல கற்றும் அறிவிலாதார் - பல நூல்களைக் கற்றவரேனும் அறிவிலாதாரே . உலகம் என்றது வரையறைப்பட்ட இடவாகுபெயர் . அறநூல்களில் எல்லா வொழுக்க முறைகளும் சொல்லப்படாமையானும் , காலந்தோறும் பழையன கழிதலும் புதியன புகுதலும் நிகழ்தலானும் , ஒழுக்க வகையில் உயர்ந்தோரைப் பின்பற்றுதல் இன்றியமையாததாயிற்று . கல்வியால் அறிவும் அறிவால் ஒழுக்கமும் பயனாதலின் , உயர்ந்தோரொடு பொருந்த வொழுகலைக் கல்லாதார் பல நூல்களைக் கற்றும் அறிவில்லாதவரேயாவர் . ஒழுகுதலைக்கற்றலாவது பின்பற்றி யொழுகுதல் .
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:உலக மக்களோடு பொருந்துமாறு நடந்துகொள்ள வேண்டியதைக் கல்லாதவர்கள் பல நூல்களைக் பெற்றிருந்தாலும் அறிவில்லாதவர்களே யாவார்கள்.
Translation:
Who know not with the world in harmony to dwell,
May many things have learned, but nothing well.
Explanation:
Those who know not how to act agreeably to the world, though they have learn many things, are still ignorant.
உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும்
கூம்பலும் இல்ல தறிவு. குறள் 425: அறிவுடைமை.
கலைஞர் மு.கருணாநிதி உரை:உயர்ந்தோரே உலகோர் எனப்படுவதால் அவர்களுடன் நட்பு கொண்டு இன்பம் துன்பம் ஆகிய இரண்டையும் ஒரே நிலையாகக் கருதுவதே அறிவுடைமையாகும்.
மு.வரதராசனார் உரை:உலகத்து உயர்ந்தவரை நட்பாக்கி கொள்வது சிறந்த அறிவு, முன்னே மகிழ்ந்து விரிதலும் பின்னே வருந்திக் குவிதலும் இல்லாத அறிவு.
சாலமன் பாப்பையா உரை:உலகை நட்பாக்கிக் கொள்வது அறிவு; நட்பின் ஆரம்பத்தில் பெரிதாக மகிழ்வதும், நாளடைவில் வாடுவதும் இல்லாது. எப்போதும் ஒரே சீராக இருப்பது அறிவு.
பரிமேலழகர் உரை:உலகம் தழீஇயது ஒட்பம் - உலகத்தை நட்பாக்குவது ஒருவனுக்கு ஒட்பமாம், மலர்தலும் கூம்பலும் இல்லது அறிவு - அந்நட்பின்கண் முன் மலர்தலும் பின் கூம்புதலும் இன்றி ஒரு நிலையனாவது அறிவாம்.
('தழீஇயது', 'இல்லது' என்பன அவ்வத் தொழில்மேல் நின்றன. உலகம் என்பது ஈண்டு உயர்ந்தோரை. அவரோடு கயப்பூப்போல வேறுபடாது கோட்டுப் பூப்போல ஒரு நிலையே நட்பாயினான்,எல்லா இன்பமும் எய்தும் ஆகலின், அதனை அறிவு என்றார்.காரியங்கள் காரணங்களாக உபசரிக்கப்பட்டன.இதனைச் செல்வத்தில் மலர்தலும் நல்குரவில் கூம்பலும்இல்லது என்று உரைப்பாரும் உளர்.).
மணக்குடவர் உரை:ஒருவனுக்கு ஒள்ளிமையாவது உலகத்தோடு பொருந்தினது: அதனை நீர்ப்பூப்போல மலர்தலுங் குவிதலுமின்றி யொருதன்மையாகச் செலுத்துதல் அறிவு. இஃது உயர்ந்தாரோடு நட்புப் பண்ணுதலும் அறிவென்றது.
ஞா.தேவநேயப் பாவாணர்: உலகம் தழீஇயது ஒட்பம் -உயர்ந்தோரை நட்பாகத் தழுவிக் கொள்ளுதல் நல்லறிவாம்; மலர்தலும் கூம்பலும் இல்லது அறிவு -அந்நட்பொழுக்கத்தில் வளர்தலுந்தளர்தலுமின்றி ஒருநிலைப்பட்டு உறுதியாய் நிற்றல் அறிவுடைமையாம். கோட்டுப்பூ, கொடிப்பூ, நிலப்பூ. நீர்ப்பூ என்னும் நால்வகைப் பூக்களுள், நீர்ப்பூ ஒருவேளை மலர்வதும் ஒருவேளைகுவிவதுமாக நிலைமாறுந் தன்மையது. ஏனைமூன்றும் மலர்ந்தபின் மீண்டுங்குவியாது ஒரே நிலையின வாவன. இங்ஙனம் ஒரு நிலைப்பட்டிருப் பதையே 'மலர்தலுங் கூம்பலுமில்லது' என்றார். 'உலகம் ' வரையறைப்பட்ட இடவாகுபெயர். 'தழீஇயது' இன்னிசையளபெடை. இதில் வந்துள்ளது ஒருமருங் குருவகம். மலர்தற்கும் கூம்பற்கும் செல்வ வறுமைகளும் கரணியமாகலாம். "கோட்டுப்பூப் போல மலர்ந்துபிற் கூம்பாது வேட்டதே வேட்டதாம் நட்பாட்சி-தோட்ட கயப்பூப்போல் முன்மலர்ந்து பிற்கூம்பு வாரை நயப்பாரும் நட்பாரும் இல்". (நாலடி. 215).
திருக்குறளார் வீ. முனிசாமி உரை: உயர்ந்தோர்களை நட்பாக்கிக் கொள்ளுவது ஒருவனுக்கு அறிவுடைமையாகும். உலகத்தினைத் தழுவி நடப்பதும் அதுவேயாகும். அந்நட்பின்கண் முன் மலர்தலும், பின் குவிதலும் இல்லாமல் ஒரே நிலையில் நிற்பது அறிவாகும்.
Translation:
Wisdom embraces frank the world, to no caprice exposed;
Unlike the lotus flower, now opened wide, now petals strictly closed.
Explanation: To secure the friendship of the great is true wisdom; it is (also) wisdom to keep (that friendship unchanged, and) not opening and closing (like the lotus flower).

எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு
அவ்வ துறைவ தறிவு. குறள் 426:
மணக்குடவர் உரை:யாதொருவாற்றா லொழுகுவது உலகம். அதனோடு கூடத்தானும் அவ்வாற்றா னொழுகுதல் அறிவாவது. அறிவாவாது எத்தன்மைத்து என்றார்க்கு முற்பட உயர்ந்தாரோடு பொருந்த ஒழுகுதல் அறிவு என்றார்.
பரிமேலழகர் உரை:உலகம் எவ்வது உறைவது - உலகம் யாதொருவாற்றான் ஒழுகுவதாயிற்று, உலகத்தோடு அவ்வது உறைவது அறிவு - அவ்வுலகத்தோடு மேவித் தானும் அவ்வாற்றான் ஒழுகுவது அரசனுக்கு அறிவு. ('உலகத்தையெல்லாம் யான் நியமித்தலான் என்னை நியமிப்பாரில்லை,' எனக் கருதித் தான் நினைத்தவாறே ஒழுகின், பாவமும் பழியும் ஆம் ஆகலான். அவ்வாறு ஒழுகுதல் அறிவு அன்று என விலக்கியவாறு ஆயிற்று. இவை ஐந்து பாட்டானும் அதனது இலக்கணம் கூறப்பட்டது.).
மு. வரதராசன் உரை:உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ, உலகத்தோடு பொருந்திய வகையில் தானும் அவ்வாறு நடப்பதே அறிவாகும்.
மு. கருணாநிதி உரை:உயர்ந்தோர் வழியில் உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ அதற்கேற்ப நடந்து கொள்வதே அறிவாகும்.
சாலமன் பாப்பையா உரை:உலகத்துப் பெரியோர் எவ்வாறு வாழ்கின்றார்களோ, அவரோடு சேர்ந்து, தானும் அப்படியே வாழ்வது அறிவு.
ஞா.தேவநேயப் பாவாணர்: உலகம் எவ்வது உறைவது - உயர்ந்தோர் எவ்வாறு ஒழுகுகின்றாரோ; அவ்வது உலகத்தோடு உறைவது அறிவு - அவ்வாறே அவரொடு பொருந்தியொழுகுதல் அறிவுடைமையாம். உயர்ந்தோரைப் பின்பற்றுவது பொதுமக்கட்கு ஒழுக்கவுயர்வாம்; அரசர்க்கு அதனொடு புகழும் பதவிப்பாதுகாப்புமாம்.
Translation:
As dwells the world, so with the world to dwell
In harmony- this is to wisely live and well.
Explanation: To live as the world lives, is wisdom.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர். குறள் 1033: உழவு.
கலைஞர் மு.கருணாநிதி உரை:உழுதுண்டு வாழ்பவர்களே உயர்ந்த வாழ்வினர்; ஏனென்றால், மற்றவர்கள் அவர்களைத் தொழுதுண்டு வாழ வேண்டியிருக்கிறது.
மு.வரதராசனார் உரை:உழவு செய்து அதனால் கிடைத்ததைக் கொண்டு வாழ்கின்றவரே உரிமையோடு வாழ்கின்றவர், மற்றவர் எல்லோரும் பிறரைத் தொழுது உண்டு பின் செல்கின்றவரே.
சாலமன் பாப்பையா உரை:பிறர்க்காகவும் உழுது தாமும் உண்டு வாழ்பவரே வாழ்பவர். மற்றவர் எல்லாரும் பிறரைத் தொழுது அவர் தருவதை உண்டு தருபவர் பின்னே செல்பவர் ஆவர்.
பரிமேலழகர் உரை:உழுது உண்டு வாழ்வாரே வாழ்வார் - யாவரும் உண்ணும் வகை உழுதலைச் செய்து அதனால் தாமும் உண்டு வாழ்கின்றாரே, தமக்குரியராய் வாழ்கின்றவர்; மற்றெல்லாம் தொழுது உண்டு பின் செல்பவர் - மற்றையாரெல்லாம் பிறரைத் தொழுது, அதனால் தாம் உண்டு அவரைப் பின்செல்கின்றவர். ['மற்று' என்பது வழக்குப்பற்றி வந்தது. தாமும் மக்கட்பிறப்பினராய் வைத்துப் பிறரைத் தொழுது அவர் சில கொடுப்பத் தம் உயிரோம்பி அவர் பின் செல்வார் தமக்குரியரல்லர் என்பது கருத்து.).
மணக்குடவர் உரை: உலகின்கண் வாழ்வாராவார் உழுதுண்டு வாழ்பவரே; மற்று வாழ்கின்றா ரெல்லாரும் பிறரைத் தொழுது உண்டு அவரேவல் செய்கின்றவர். இது செல்வமானது உழவினால் வருஞ் செல்வமென்றது.
Translation:
Who ploughing eat their food, they truly live:
The rest to others bend subservient, eating what they give.
Explanation: They alone live who live by agriculture; all others lead a cringing, dependent life.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்து ளெல்லாம் உளன். குறள் 294: வாய்மை.
கலைஞர் மு.கருணாநிதி உரை:மனத்தால்கூடப் பொய்யை நினைக்காமல் வாழ்பவர்கள், மக்கள் மனத்தில் நிலையான இடத்தைப் பெறுவார்கள்.
மு.வரதராசனார் உரை:ஒருவன் தன் உள்ளம் அறியப் பொய் இல்லாமல் நடப்பானானால் அத்தகையவன் உலகத்தாரின் உள்ளங்களில் எல்லாம் இருப்பவனாவான்.
சாலமன் பாப்பையா உரை:உள்ளம் அறியப் பொய் சொல்லாமல் ஒருவன் வாழ்ந்தால் அவன் உயர்ந்தவர் உள்ளத்துள் எல்லாம் குடி இருப்பான்.
பரிமேலழகர் உரை:உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் - ஒருவன் தன்னுள்ளத்திற்கேற்பப் பொய் கூறாது ஒழுகுவானாயின், உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் உளன் - அவன் உயர்ந்தோர் உள்ளத்தின்கண் எல்லாம் உளனாம். ('உள்ளத்தால்' என்பது வேற்றுமை மயக்கம். பொய் கூறாது ஒழுகுதலாவது மெய் கூறி ஒழுகுதல் அவனது அறத்தினது அருமை நோக்கி உயர்ந்தோர் எப்பொழுதும் அவனையே நினைப்பர் என்பதாம். இதனான் இம்மைப்பயன் கூறப்பட்டது.).
மணக்குடவர் உரை:தன்னெஞ்சினாற் பொய்யை நினையாது ஒழுகுவனாயின் உலகத்தார் நெஞ்சினுளெல்லாம் உளனாவான் இது பொய்யை நினையாதாரை எல்லாரும் போற்றுவாரென்றது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை: ஒருவன் தனது மனதறியப் பொய் கூறாமல் நடந்து கொள்வானானால், அவன் உயர்ந்தோர் உள்ளங்களில் எல்லாம் உள்ளவனாவான்.
ஞா.தேவநேயப் பாவாணர் :உள்ளத்தால் பொய்யாது ஒழுகின்-ஒருவன் நெஞ்சாரப் பொய் சொல்லாது ஒழுகுவனாயின்; உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் உளன்-அவன் உயர்ந்தோ ருள்ளத்திலெல்லாம் உளனாவன். உயர்ந்தோர் உள்ளத்தில் உளனாதலாவது அவரால் மதிக்கப்படுதலும் என்றும் நினைக்கப்படுதலுமாம். 'உள்ளத்தான்' என்பது வேற்றுமை மயக்கம்.
Translation:
True to his inmost soul who lives,- enshrined He lives in souls of all mankind.
Explanation: He who, in his conduct, preserves a mind free from deceit, will dwell in the minds of all men.
அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard