திருக்குறளை ஆன்மிக நீக்கம் செய்துவிட்டதாக கூறும் ஆளுநர் ரவி: அறிஞர்கள் என்ன சொல்கிறார்கள்?
9 அக்டோபர் 2022
பட மூலாதாரம்,YOGESH_MORE / GETTY IMAGES
படக்குறிப்பு,
கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறை மீது அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை
சில நாள்களுக்கு முன்பு அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த திருக்குறள் மாநாடு ஒன்றில் பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, திருக்குறளை ஆன்மிக நீக்கம் செய்து, அதனை வெறும் வாழ்வியல் நெறி நூலாக மட்டும் சுருக்கிவிட்டார்கள் என்றும், ஜி.யு.போப், கால்டுவெல் போன்றவர்கள் திருக்குறளின் ஆன்மிக நீக்கம் செய்யப்பட்ட மொழிபெயர்ப்புக்குக் காரணம் என்றும் கூறினார்.
12க்கு மேற்பட்ட நூல்களின் உதவியோடு தாம் ஒவ்வொரு திருக்குறளின் பொருளையும் கற்றுவருவதாக கூறிய அவர், திருக்குறள் இந்தியாவின் ஆன்மிகத்தை கொண்டிருப்பதாகவும் கூறினார்.
இதனை கடுமையாக மறுத்தார் சென்னை பல்கலைக்கழகத் தமிழ்த் துறையின் முன்னாள் தலைவர் பேராசிரியர் வீ.அரசு. பிபிசி தமிழிடம் பேசிய அவர், ஆளுநரின் பேச்சு அடிப்படை அற்ற பேச்சு என்று கூறியதுடன், மனுஸ்மிருதி, பகவத் கீதை போன்ற பாகுபாடு காட்டும் இந்திய நூல்களோடு திருக்குறளை ஒப்பிட முடியாது என்றார்.
திருக்குறளின் முதன் மூன்று அதிகாரங்கள் பிற்காலத்தில் எழுதிச் சேர்க்கப்பட்டவை என்று கூறிய அவர், அவற்றில் கூட உருவமோ, கடவுளோ இல்லை என்றும் அவர் கூறினார். அத்துடன், நீட்டலும், மழித்தலும் வேண்டாம் உலகம் பழித்தது ஒழித்துவிடின் என்ற குறளை அவர் சமய மறுப்புக்கான குறளாக அவர் எடுத்துக் காட்டினார்.
இந்த உலகில் பிச்சை எடுத்து வாழும் நிலையில் ஒருவன் இருந்தால், இந்த உலகைப் படைத்தவன் என்று இருந்தாலும்கூட அவன் கெட்டு ஒழியட்டும் என்கிறார் வள்ளுவர். அதைப் போல பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான் என்ற குறள் எல்லோரும் சமம் என்பதை வலியுறுத்துகிறது. ரவி போன்றவர்கள் குறிப்பிடும் ஆன்மிகத்துக்கு இது முரணானது என்று கூறிய பேராசிரியர் அரசு, ஆளுநரின் தொடர்ந்த இது போன்ற பேச்சு திருக்குறளை இழிவுபடுத்தும் நோக்கம் கொண்டது. திருவள்ளுவர் உருவத்துக்கு காவி நிறம் பூசினார்களே அதைப் போன்றது என்றார் அவர்.
தமிழ் ஆய்வறிஞர் புலவர் செந்தலை கவுதமன், இது குறித்துப் பேசும்போது, சிக்கலே இல்லாத சிக்கலைப் பேசிப் பேசி, உண்மையான சிக்கல்களில் இருந்து திசை திருப்பும் நோக்கத்தோடு ஆளுநர் பேசி வருவதாகக் கூறினார்.
திருக்குறள் வழியில் ஆட்சி நடத்தப்பட்டதாக கூறும் கல்வெட்டுகள் கிடைத்துள்ளன என்று கூறிய அவர், திருக்குறள் வாழ்க்கை நெறிமுறை நூலாகவே இருந்துள்ளது என்றார். திருக்குறளின் பெருமையை சிதைத்து பகவத் கீதையை முன்னிறுத்துவதே ஆளுநரின் நோக்கம் என்றும் அவர் கூறினார்.
முன்னதாக ஆகஸ்ட் மாதத்தில் டெல்லி தமிழ்க் கல்விக் கழகம் நடத்தும் லோதி சாலை பள்ளியில் அமைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலையைத் திறந்துவைத்த ஆர்.என்.ரவி திருக்குறளை ஜி.யு.போப் மொழி பெயர்த்தபோது ஆன்மிகத்தைப் பிரித்துவிட்டார் என்ற கருத்தை முதல் முதலாகப் பேசினார்.
ஆதி பகவன் என்ற சொல்லை அவர் பிரைமல் டெயிட்டி என்று மொழி பெயர்த்திருந்தார். இது தவறு என்று கூறிய அவர், ஜி.யு.போப் ஒரு கிறித்துவ மத போதகர் என்பதையும் வலியுறுத்திப் பேசியிருந்தார். அதே கருத்தைத்தான் அவர் தனது அண்ணா பல்கலைக்கழகப் பேச்சிலும் தெரிவித்திருந்தார்.
அப்போது இதற்கு எதிர்வினையாற்றிய மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்று சனாதனத்தை தோலுரித்த வள்ளுவர் பற்றியும், 40 ஆண்டுகள் தமிழ்த் தொண்டாற்றிய ஜீ யூ போப் பற்றியும் பாடம் எடுக்கும் ஆளுநரே, கடவுள் வாழ்த்தே இல்லாமல் இந்திய அரசியல் சாசனம் ஏன் உருவாக்கப்பட்டது என்பதை படித்துப்பாருங்கள். ஆன்மீகத்தின் பெயரால் வெறுப்பை விதைப்பவர்களை வள்ளுவர் மனிதனாகவே மதிப்பதில்லை என்பதை அறிந்து கொள்ளுங்கள். உளறல்களை நிறுத்துங்கள்," என்று அவர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.
திருக்குறள் - ஜி.யு.போப் சர்ச்சை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி முன்வைத்த மொழிபெயர்ப்பு குற்றச்சாட்டு சரியா?
முரளிதரன் காசி விஸ்வநாதன்
பிபிசி தமிழ்
27 ஆகஸ்ட் 2022
19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜி.யு. போப் திருக்குறளை மொழிபெயர்த்தபோது, அதிலிருந்து ஆன்மிகத்தைப் பிரித்துவிட்டார் எனக் குற்றம்சாட்டியிருக்கிறார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி. அவருடைய இந்தப் பேச்சு வழக்கம் போலவே சர்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
தில்லி தமிழ் கல்விக் கழகம் நடத்தும் லோதி சாலை பள்ளியில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி வியாழக்கிழமையன்று திறந்துவைத்தார். அதற்குப் பிறகு திருவள்ளுவர் குறித்தும் திருக்குறள் குறித்தும் பேசிய ஆளுநர், அதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்களில் ஒருவரான ஜி.யு. போப் குறித்து கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
'ஆதிபகவன்' குறித்த சர்ச்சை?
"தமிழ்நாடு ஆளுநராக நான் வெளியே போகும்போதெல்லாம் எனக்கு டஜன் கணக்கில் திருக்குறள் புத்தகங்கள், அதன் மொழிபெயர்ப்பு புத்தகங்கள் வழங்கப்படும். அதில் பெரும்பாலானவை ஜி.யு. போப் உடையது. அதை படித்தபோது, ஆதிபகவன் என்ற வார்த்தையை "முதன்மை தெய்வம்" (ப்ரைமல் டெய்ட்டி) என்று ஜி.யு.போப் மொழிபெயர்த்திருப்பார்.
'ப்ரைமல் டெய்ட்டி' என்பது பழைய சமூகங்களின் சமயத்தைக் குறிக்கும். சிலவற்றை பார்த்து அந்த சமூகத்தினர் பயப்படும்போது அதை போக்க அவர்கள் தெய்வத்தை உருவாக்கினர். அதனால் அந்த வார்த்தையை பயன்படுத்தி அவர்கள் அழைக்கப்படுகின்றனர். ஆனால், ஆதிபகவன் என்பது பழம் சமூகத்தால் கருதப்பட்ட வெறும் முதன்மை தெய்வம் மட்டும் கிடையாது. அதை விட சக்தி வாய்ந்தவர் ஆதிபகவன். அவர்தான் உலகை படைத்தார்.
ஆனால், ஜி.யு.போப் தனது மொழிபெயர்ப்பில் ஒரு அவமதிப்பை செய்திருக்கிறார். அவரது மொழிபெயர்ப்பை எப்படி பிறகு வந்தவர்கள் வழிமொழிந்து சென்றனர் என்று நினைத்து அச்சரியப்படுகிறேன். ஒட்டுமொத்த திருக்குறளையும் அவர் ஆன்மிகமற்றதாக ஆக்கியிருக்கிறார். தனது மொழிபெயர்ப்பில் திருக்குறளில் இருந்த ஆன்மிக தாக்கத்தை அவர் தவிர்த்திருக்கிறார்.
ஜி.யு. போப் யார் என்பதை உங்களுக்கு அறிமுகப்படுத்த இந்த நேரத்தை நான் பயன்படுத்திக் கொள்கிறேன். அவர் ஒரு மதபோதகர். அவர் சுவிசேஷத்தை பரப்பும் சொசைட்டியின் (எஸ்பிஜி) உறுப்பினர். 1813இல் பிரிட்டிஷ் நாடாளுமன்றம், ஒரு சட்டத்தை இந்திய சாசனம் என்ற பெயரில் நிறைவேற்றியது. அதில், இந்தியாவில் கிறிஸ்துவ இறை நம்பிக்கையை பரப்பும் நோக்கம் வலியுறுத்தப்பட்டிருந்தது. அதன்படியே ஜி.யு.போப் இந்தியாவுக்கு ஊழியம் செய்வதற்காக வந்தார், தமிழை பயின்றார், திருக்குறளை தேர்ந்தெடுத்து அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். அதில் இருந்த ஆன்மாவை பிரித்தெடுத்தார்.
ஜி.யு.போப்பின் திருக்குறள் மொழிபெயர்ப்பை பார்த்தீர்களானால், அது ஆன்மா இல்லாத ஒரு சடலம் போல இருக்கும். தடயவியல் கூடத்தில் ஒரு உடலில் எல்லா உறுப்புகளும் இருக்கும். ஆனால், ஆன்மா இருக்காது. ஆன்மா இல்லை என்றால் உடலுக்கு அர்த்தமே கிடையாது. இதைத்தான் ஜி.யு.போப் செய்தார். அவரது மொழிபெயர்ப்பை படித்தபோது இப்படித்தான் நான் உணர்ந்தேன்.
காலனித்துவ கால இறை போதகர் ஜி.யு. போப் போன்றவர்களால் 'திருக்குறள்' ஆன்மிகமற்றதாக காட்டப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டார்.
தமிழ்நாட்டில் கண்டனம்
தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என். ரவி வந்த பிறகு பொதுவெளியில் அவர் பேசிய பல பேச்சுகள் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கின்றன. அதைப்போலவேதான் அவரது இந்தப் பேச்சும் அமைந்தது.
அவருடைய பேச்சை பழ நெடுமாறன் உடனடியாகக் கண்டித்தார். "ஜி.யு.போப் கிறித்துவ பாதிரியார். எனவே, அவர் திருக்குறளை தவறான கண்ணோட்டத்துடன் மொழிபெயர்த்துள்ளார் என்று ஆளுநர் குற்றம் சாட்டியுள்ளார். ஆனால், அதே ஜி.யு. போப் அவர்கள் சைவத் திருமுறைகளில் ஒன்றான திருவாசகத்தைப் படித்து உள்ளம் உருகி அந்நூலையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார் என்ற உண்மையையும் ஆளுநர் உணரவில்லை. திருக்குறளுக்கு வைதீக அடையாளத்தைச் சூட்டுவதற்கே ஆர்.என். ரவி முயற்சி செய்துள்ளார்.
பட மூலாதாரம்,YOGESH_MORE / GETTY IMAGES
படக்குறிப்பு,
கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறை மீது அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை
ஜி.யு. போப் அவர்கள் முதன்முதலாக திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அதன் பெருமையை உலகமறியச் செய்தார். காந்தியடிகள் உள்பட பலரும் அம்மொழிபெயர்ப்பைப் படித்து திருக்குறளின் பெருமையை உணர்ந்து போற்றினர் என்பதையும் ஆளுநர் அறிந்திருக்கவில்லை.
தமிழ் இலக்கியம், தமிழர் பண்பாடு ஆகியவற்றைக் குறித்து தனது அறியாமையை வெளிப்படுத்துவதைவிட, பேசாமல் இருப்பது நல்லது என்பதை ஆளுநர் உணர வேண்டும்." என்று ஆளுநருக்குக் கண்டனம் தெரிவித்தார் நெடுமாறன்.
தி.மு.கவைச் சேர்ந்த மாநில அமைச்சர் மனோ தங்கராஜ் உடனடியாக இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார். "மதத்திற்கும், சாதிக்கும் முற்றிலும் எதிரானதும், உண்மையானதுமான ஆன்மீகத்தை பற்றி திருக்குறள் விவரிக்கிறது. ஜி.யு. போப் தமிழ் இலக்கியத்திற்கு அளித்திருக்கும் பங்களிப்பு அளப்பரியது. ஆளுநர் ரவியின் பேச்சு, தான் விரும்பும் மத உணர்வை திருக்குறள் பிரதிபலிக்கவில்லை என்ற விரக்தியின் வெளிப்பாடே ஆகும். வருணாசிரமக்காரர்களின் இத்தகைய கருத்துக்கள் ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்திற்கும், தமிழ் பண்பாட்டிற்கும் எதிராக விடுக்கப்பட்டிருக்கும் சவால்" என்று அவர் குறிப்பிட்டார்.
மதுரைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசனும் ஆளுநரின் கருத்துக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார். "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்று சனாதனத்தை தோலுரித்த வள்ளுவர் பற்றியும், 40 ஆண்டுகள் தமிழ்த் தொண்டாற்றிய ஜீ யூ போப் பற்றியும் பாடம் எடுக்கும் ஆளுநரே, கடவுள் வாழ்த்தே இல்லாமல் இந்திய அரசியல் சாசனம் ஏன் உருவாக்கப்பட்டது என்பதை படித்துப்பாருங்கள். ஆன்மீகத்தின் பெயரால் வெறுப்பை விதைப்பவர்களை வள்ளுவர் மனிதனாகவே மதிப்பதில்லை என்பதை அறிந்து கொள்ளுங்கள். உளறல்களை நிறுத்துங்கள்." என்று அவர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.
ஜார்ஜ் உக்ளோ போப் எனப்படும் ஜி.யு. போப் ஒரு ஆங்கில கிறிஸ்தவ மதப் பிரச்சாரகர். 1820ல் கனடாவின் பிரின்ஸ் எட்வர்ட் தீவில் பிறந்த இவரது குடும்பம் 1826ல் இங்கிலாந்திற்குத் திரும்பியது. 14 வயதிலேயே ஜி.யு. போப் தென்னிந்தியாவில் செயல்பட்டுவந்த மதப் பிரசாரப் பணிகளில் சேர்ந்துகொண்டார். 1839ல் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாயர்புரத்தை வந்தடைந்தார். இங்கிலாந்தில் இருந்தபோதே தமிழைப் படிக்க ஆரம்பித்திருந்த ஜி.யு. போப், சாயர்புரத்தில் ஆரியங்காவுப் பிள்ளை, ராமானுஜக் கவிராயர் ஆகியோரிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றார்.
1845ல் மனைவி இறந்துவிடவே, மற்றொரு பெண்ணைத் திருமணம் செய்த போப், 1849ல் இங்கிலாந்து திரும்பினார். பிறகு மீண்டும் 1851ல் தஞ்சாவூரை வந்தடைந்த போப், அங்கு ஏற்பட்ட சில பிரச்சனைகளால் ஊட்டியை வந்தடைந்தார். அங்கே ஐரோப்பிய மாணவர்களுக்கு இலக்கணம் கற்பித்தார். பின்னர் ஒரு பள்ளிக்கூடத்தையும் உருவாக்கினார். ஆனாலும் தொடர்ந்து பழைய தமிழ் நூல்களைக் கற்றுவந்த போப், பழைய ஏட்டுச் சுவடிகளையும் சேகரித்தார். 1871ல் பெங்களூர் சென்ற போப், பிறகு 1882ல் இங்கிலாந்து திரும்பினார். அங்கு ஆக்ஸ்பர்ட் நகரத்தில் குடியேறிய அவர், தமிழ், தெலுங்கு கற்பிக்கும் பேராசிரியரானார். 1908 வரை அந்தப் பணியில் இருந்த அவர், 87வது வயதில் உயிரிழந்தார்.
பட மூலாதாரம்,TWITTER
படக்குறிப்பு,
ஜி.யு.போப்
அவருடைய மூன்று மகன்கள் இந்தியாவில் பணியாற்றினர். தாமஸ் ஹென்றி என்ற அவருடைய ஒரு மகன் கண் மருத்துவராகப் பணியாற்றினார்.
இந்தியாவில் மதம் பரப்பவந்த பலரைப் போலவே, ஜி.யு. போப்பும் தமிழின் மீது மிகுந்த ஆர்வம் காட்டினார். திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து 1886ல் திருவள்ளுவர் அருளிச்செய்த திருக்குறள் The 'Sacred' Kurral of Tiruvalluva-Nayanar என்ற தலைப்பில் லண்டனில் வெளியிட்டார். இவரது நாலடியார் மொழிபெயர்ப்பு 'முனிவர் அருளிச்செய்த நாலடியார் (The Naladiyar, or, Four hundred quatrains in Tamil) என்ற பெயரில் ஆக்ஸ்ஃபோர்டில் 1893ல் வெளியானது. இவரது திருவாசக மொழிபெயர்ப்பு The Tiruvacagam; or, 'Sacred utterances' of the Tamil poet, saint, and sage Manikka-Vacagar: the Tamil text of the fifty-one poems, with English translation என்ற தலைப்பில் 1900ல் ஆக்ஸ்ஃபோர்டில் வெளியிடப்பட்டது.
கி.மு. முதலாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. இரண்டாம் நூற்றாண்டிற்குள் தொகுக்கப்பட்டதாகக் கருதப்படும் திருக்குறளுக்கு பலரும் உரை எழுதியிருக்கின்றனர். பரிமேலழகர், மு. வரதராசனார், தேவநேயப் பாவாணர் உள்ளிட்ட பலரும் இந்நூலுக்கு உரை எழுதியுள்ளனர். வீரமாமுனிவர் அறத்துப் பாலுக்கும் பொருட்பாலுக்கும் தமிழில் உரையெழுதியுள்ளார்.
அதேபோல, ஜி.யு போப் தவிர, கிண்டர்ஸ்லி, எஃப்.டபிள்யு. எல்லீஸ், டபிள்யு.எச். ட்ரூ, சார்லஸ் கி. கோவர், இ.ஜி. ராபின்சன், அருட்தந்தை ஜி. ராசரஸ், டி.எம். ஸ்காட், எச்.ஏ. பாப்லி உள்ளிட்டோர் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளனர். ஆனால், திருக்குறளை முழுமையாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தது ஜி.யு. போப்தான்.
இந்தப் பின்னணியில் ஜி.யு. போப்பின் தமிழ்ப் பணிகள் தமிழறிஞர்களால் தொடர்ந்து போற்றப்பட்டே வந்திருக்கிறது. "ஜி.யு. போப் தமிழர்கள் நன்றியுடன் நினைக்கக்கூடிய பெயர்களில் ஒன்று. அவருடைய திருவாசக மொழிபெயர்ப்பு உலகறிந்தது. சைவசாத்திர நூலான திருவருட்பயனையும் தமிழ் சமூகத்தின் எட்டாம் நூற்றாண்டு வாழ்வியலைக் காட்டும் புறப்பொருள் வெண்பா மாலை எனும் இலக்கண நூலையும் மொழிபெயர்த்துள்ளார்" என்று குறிப்பிடுகிறார் மறைந்த தமிழ்ப் பேராசிரியரான தொ. பரமசிவம்.
ஆனால், ஜி.யு. போப் திருக்குறளை கிறிஸ்தவமயமாக்கினார் என்ற கடந்த சில ஆண்டுகளாகவே தீவிரமாக முன்வைக்கப்பட்டிருக்கிறது. அதற்கு ஆதாரமாக, தன்னுடைய மொழிபெயர்ப்பிற்கு அவர் எழுதிய முன்னுரை சுட்டிக்காட்டப்படுகிறது. முன்னுரையின் ஓரிடத்தில் கிறிஸ்தவ சிந்தனைகளையும் உள்வாங்கி அவர் திருக்குறளை எழுதியிருக்கிறார் என்று குறிப்பிடுகிறார் ஜி.யு. போப். திருவள்ளுவர் மயிலாப்பூரில் வசித்தவர் என்று கருதப்படும் நிலையில் அருகிலேயே சாந்தோம் தேவாலயம் இருப்பதையும் அவர் தனது முன்னுரையில் சுட்டிக்காட்டுகிறார். திருக்குறளின் பல பகுதிகள் கிறிஸ்தவத்தை உள்வாங்கியதைப்போலவே இருப்பாதாகவும் போப் குறிப்பிடுகிறார்.
சமணர்களின் எழுத்திலிருந்து அவர் ஒன்றிரண்டு சொற்களைப் பயன்படுத்தியதால், அவர்கள் அவரை தம் மதத்தைச் சார்ந்தவர் என்று கருதுவதாகவும் ஆனால், கிறிஸ்தவத் தாக்கமே மிகுந்திருப்பதாகவும் போப் தனது முன்னுரையில் கூறுகிறார். ராஜீவ் மல்ஹோத்ராவும் அரவிந்தன் நீலகண்டனும் எழுதிய Breaking India என்ற புத்தகம் இந்தக் குற்றச்சாட்டை வலுவாக முன்வைக்கிறது. இந்தியாவிலிருந்து தமிழுக்கு தனித்த அடையாளம் ஒன்றை உருவாக்க போப்பும் கால்டுவெல்லும் முயன்றதாகவும் அந்தப் புத்தகம் கூறுகிறது. தமிழ்நாட்டில் உள்ள இந்துத்துவவாதிகளால் அடிக்கடி மேற்கோள்காட்டப்படும் புத்தகம் இது.
பட மூலாதாரம்,TWITTER @SUVE4MADURAI
போப்பின் முன்னுரை இப்படியிருந்தாலும்கூட, அவருடைய மொழிபெயர்ப்பு கிறிஸ்தவத்தை அடிப்படையாக வைத்துச் செய்யப்பட்டது என்ற குற்றச்சாட்டை இதுவரை யாரும் முன்வைத்ததில்லை.
ஆதி பகவன் என்றால் என்ன?
ஆளுநரின் கருத்து முழுமையாகத் தவறானது என்கிறார் தமிழறிஞரும் ஆய்வாளருமான பொ. வேல்சாமி. "அந்தக் கருத்து பொருத்தமில்லாதது. திருவள்ளுவர் பயன்படுத்தும் ஆதிபகவன் என்ற வார்த்தையை வேறு தமிழ் நூல்களில் காணமுடியாது. ஆகவே, அதன் சரியான பொருள் திருவள்ளுவரைத் தவிர யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை" என்கிறார் வேல்சாமி.
மேலும், "திருக்குறளை இந்து நூல் என்று சொல்லவே முடியாது. மாமிசம் உண்ணக்கூடாது என்று ஒரு அதிகாரம் இருக்கிறது. அப்படிச் சொல்வது சமணத்தில் மட்டும்தான் வரும். மழையை வாழ்த்துவதென்பது திருக்குறளிலும் சிலப்பதிகாரத்திலும்தான் உண்டு. இந்து மரபில் அது கிடையாது. மேலும், முதல் அதிகாரத்திலேயே "பொறிவாயில் ஐந்தவித்தான்" என்று ஒரு குறள் உண்டு. அதற்கு ஐம்பொறிகளின் எழும் ஆசைகளையும் அடக்கும் பக்குவம் கொண்டவனின் வழியில் செல்பவன் நீடூழி வாழ்வான் என்று பொருள். ஐம்புலன்களையும் அடக்குவதென்பது இந்து மரபில் கிடையாது. அதுவும் சமண மரபுதான் என்று தமிழறிஞர் திரு.வி. கல்யாணசுந்தரனார் ஆராய்ந்து கூறுகிறார்.
தமிழில் சமண சிந்தனை மரபு சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொடர்ச்சியாக இருந்திருக்கிறது. இந்து மரபு அந்த காலகட்டத்தில் உருவாகவில்லை.
திருக்குறளை மொழிபெயர்த்த கிறிஸ்தவப் பாதிரியார்கள், அந்த நூலில் பைபிளில் கூறப்பட்டுள்ள செய்திகள் திருக்குறளிலும் இருப்பதாக குறிப்பிடுவார்கள். அதை கிறிஸ்தவ நூல் என்று சொல்ல மாட்டார்கள். தவிர, அந்த சமயத்தில் திருக்குறளாக யாரும் மிகப் பெரியதாக தூக்கிப்பிடிக்கவில்லை. 1920க்கு பிறகுதான் தமிழ் நூல்களை ஒரு இனத்தின் அடையாளமாக தூக்கிப்பிடிக்கும் மரபு உருவாகிறது. 19ஆம் நூற்றாண்டில் பழந்தமிழ் நூல்களை எல்லாம் தம் ஆசிரியர் உட்பட பெரும் தமிழ்ப் புலவர்களே மறந்துபோன காலம் என்று உ.வெ.சாமிநாதய்யர் சொல்கிறார்.
இருந்தபோதும் வெளியில் இருந்து வந்த மதப் பிரச்சாரகர்களுக்கு பழைய தமிழ் நூல்களைப் பற்றித் தெரிந்திருந்தது. எல்லீசும் போப்பும்தான் திருக்குறளின் பெருமை உணர்ந்து அதனைத் தூக்கிப்பிடித்தவர்கள்" என்கிறார் பொ. வேல்சாமி.
மற்ற மொழி பெயர்ப்புகள் என்ன சொல்கின்றன?
திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பலர், ஆதிபகவன் என்பதற்கு கடவுள் என்ற சொல்லைக்கூட பயன்படுத்தாமலும் இருந்திருக்கிறார்கள். வ.வே.சு. ஐயரின் திருக்குறள் மொழிபெயர்ப்பில் 'ஆதிபகவன்' என்ற சொல்லுக்கு Great Original என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பூர்ணலிங்கம் பிள்ளையின் மொழிபெயர்ப்பில் Supreme Being என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பி.எஸ். சுந்தரத்தின் மொழிபெயர்ப்பில், God Primordial என்ற சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
திருக்குறள், திருவள்ளுவரை தமிழ்நாடு கட்சிகள், ஆளுநர் பயன்படுத்துவது அரசியல் ஆதாயத்துக்காகவா?
நந்தினி வெள்ளைச்சாமி
பிபிசி தமிழ்
26 ஆகஸ்ட் 2022
திருவள்ளுவர் குறித்தும் திருக்குறள் குறித்தும் எழும் சர்ச்சைகள் புதிதல்ல. தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து கட்சிகள் திருவள்ளுவரை தங்களின் அடையாளமாக கூறிக்கொள்வதும் அரசியல் தலைவர்கள் தங்களின் மேடைப் பேச்சை ஆரம்பிப்பதற்கு முன்பாக திருக்குறள் ஒன்றை கூறி தொடங்குவதும் தமிழ்நாட்டு அரசியலில் பெரும்பாலும் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது. தமிழ் மொழியின் தமிழ்நாட்டு மக்களின் அடையாளமாக திகழ்ந்த திருக்குறள், இன்று தேசம் முழுவதும் தேசத்தைக் கடந்தும் பயணிக்கிறது.
தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு அரசியல் கட்சியும் திருவள்ளுவரை வெவ்வேறு விதங்களில் கொண்டாடுவதை பார்க்கிறோம். திருவள்ளுவரை ஒவ்வொரு கட்சியும் அடையாளப்படுத்துவது, வாக்கு அரசியலுக்காகவே என்றும் அவர் ஒரு அரசியல் கருவியாக பயன்படுத்தப்படுகிறார் என்றும் விமர்சனங்கள் உள்ளன.
தமிழ்நாடு அரசியல் களத்தில் திருவள்ளுவரைச் சுற்றி கடந்த காலத்தில் நிகழ்ந்த நிகழ்வுகள் சிலவற்றை இங்கே வழங்குகிறோம்:
திமுக ஆட்சிக்காலத்தில் குறிப்பாக முதல்வராக கருணாநிதி இருந்தபோது திருவள்ளுவரை தமிழின் அடையாளமாக மாற்றுவதற்காக பல முயற்சிகள் நடந்தன.
1976ஆம் ஆண்டில் சென்னையில் வள்ளுவர் கோட்டம், 2000ஆம் ஆண்டில் கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமிக்கும் இடத்தில் திருக்குறளின் 133 அதிகாரங்களை குறிக்கும் வகையிலான 133 அடி திருவள்ளுவர் சிலை உள்ளிட்ட பிரமாண்ட கட்டுமானங்கள் திமுக ஆட்சியில் எழுப்பப்பட்டன. மேலும், கர்நாடக மாநிலம் பெங்களூருவிலும் 2009ம் ஆண்டு திருவள்ளுவர் சிலையை திறந்துவைத்தார் கருணாநிதி.
கட்டுமானங்களில் மட்டுமல்லாமல், திருக்குறள் தமிழ் இலக்கிய உலகிலும் பல்வேறு வடிவங்களிலும் முன்னிறுத்தப்பட்டது. 1330 குறள்களுக்கும் உரை எழுதியுள்ள கருணாநிதி, ஒவ்வொரு குறளுக்கேற்ப சிறுசிறு கதைகளை சித்தரித்து அதற்கேற்ப ஓவியம் தீட்டி குறளோவியத்தையும் உருவாக்கினார். அரசுப் பேருந்துகளில் திருக்குறள், அரசு அலுவலகங்களில் திருக்குறள் என பல்வேறு வடிவங்களில் திருக்குறளை மக்கள் மனதில் பதிப்பதற்காக ஓர் இயக்கமாக திமுக அரசு முன்னெடுத்தது.
கடந்த 7-8 ஆண்டுகளாக திருவள்ளுவரை சுற்றி நடப்பவற்றில் பல பாஜக முன்னெடுக்கும் சில சர்ச்சைகளின் அடிப்படையில் ஏற்படுவதாக விமர்சனங்கள் உள்ளன.
வட இந்தியாவில் திருவள்ளுவரை எடுத்துச் செல்வதில் பாஜகவைச் சேர்ந்த மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் தருண் விஜய் ஆர்வம் காட்டினார்.
'திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு வட இந்திய பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உள்ள இந்தி பாடத்திட்டத்தில் இடம் பெற வேண்டும். அப்போதுதான், திருவள்ளுவர் சிறப்பை அறியாமல் இந்தியாவின் ஒருமைப்பாடு முழுமை பெறாது என்று மக்கள் புரிந்து கொள்வர்". தன்னுடைய முயற்சியில் உத்தராகண்டில் திருவள்ளுவர் சிலையை நிறுவ முன்னின்ற தருண் விஜய் அச்சமயத்தில் கூறியவை இவை.
ஆனால், 2016 டிசம்பரில் இந்த திருவள்ளுவர் சிலை நிறுவப்படுவதற்கு முன்பே ஜூன் மாதத்தில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டது. இதற்கு சில மதவாத அமைப்புகள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததால், திருவள்ளுவர் சிலை ஹரித்துவாரின் பொதுப்பணித்துறை அலுவலகத்தில், பிளாஸ்டிக் துணியில் மூடப்பட்டுக் கிடந்தது. அதன்பின், அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கு கடிதம் எழுதிய நிலையில், சிலை வேறொரு இடத்திற்கு மாற்றப்பட்டு திறக்கப்பட்டது.
'காவி திருவள்ளுவர்' சர்ச்சை
அதேபோன்று, பல்வேறு உருவ மாறுதல்களுக்குப் பிறகு, வேணுகோபால் சர்மா என்பவர் உருவாக்கிய வெண்ணிற உடையில் காட்சியளிப்பது போன்ற திருவள்ளுவர் படமே இன்று வரை பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், காவி உடை அணிந்தபடி சித்தரித்து, குடியரசு முன்னாள் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தன் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் இருந்து வெளியிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதேபோன்று, தமிழ்நாடு பாஜகவின் ட்விட்டர் பக்கத்திலும் காவி உடையணிந்து திருவள்ளுவர் படம் வெளியிடப்பட்டது. அப்போதிலிருந்து பாஜக 'காவி திருவள்ளுவரை' முன்னிறுத்துவதாக விமர்சனம் எழுந்தது.
'காவி திருவள்ளுவர்' சர்ச்சைகளுக்கு மத்தியில், பிரதமர் மோதி தமிழ்நாடு வரும்போதெல்லாம், கலந்துகொள்ளும் பெரும்பாலான நிகழ்ச்சிகளில் திருவள்ளுவரையும் திருக்குறளையும் மேற்கோள் காட்டி பேசுவது வழக்கமாகவே உள்ளது.
அதன் சமீபத்திய உதாரணமாக, சமீபத்தில் நடந்த செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில், "இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு" மேற்கண்ட திருக்குறளை மேற்கோள் காட்டி பேசிய பிரதமர் மோதி, அதன் விளக்கத்தையும் கூறினார்.
அதாவது, 'ஒருவர் தனது வாழ்வில் பொருட்களை சேர்த்து, இல்வாழ்வை மேற்கொள்வது எல்லாம் விருந்தினரைப் போற்றி அவர்களுக்கான உதவிகளை செய்வதற்காகவே' என்ற திருக்குறள் விளக்கத்தையும் பிரதமர் மோதி எடுத்துரைத்தார்.
திருவள்ளுவரை பாஜக கையிலெடுப்பதை திமுக உள்ளிட்ட கட்சிகள், தமிழ் ஆர்வலர்கள் விமர்சித்து வருகின்றனர்.
இதனிடையே, நவம்பர் 2021-ல் `திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்' என்ற தலைப்பில் பேராசிரியர் தெய்வநாயகம் என்பவர் எழுதிய, நூல் வெளியீட்டு விழாவில் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், "கிறிஸ்தவராக இருந்துதான் திருக்குறள் நூலை வள்ளுவர் எழுதியுள்ளதாக நூலாசிரியர் தெய்வநாயகம் எழுதியுள்ள கருத்து ஆய்வுக்குரியது" என்றார்.
மேலும், ``திருவள்ளுவரை ஒவ்வொரு சமயத்தவரும் உரிமை கோருகின்றனர். ஆனால், மதமும் கடவுளும் வேண்டாம் என வாழ்கின்ற மனிதர்களின் எண்ணிக்கை பெருகி வருவதாக அண்மைக்கால ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. கிறிஸ்துவத்துக்கும் இஸ்லாத்துக்கும் எதிரான மத வெறுப்பு பிரசாரம் நடைபெற்று வருகிறது. சமூக நீதியை வென்றெடுப்பதற்கு திருக்குறளும் ஓர் ஆயுதமாக உள்ளது. கிறிஸ்தவர்கள் பைபிளை மட்டும் கையில் ஏந்தாமல் திருக்குறளையும் படிப்பதற்கு இந்த நூல் உந்துசக்தியாக இருக்கும்" எனவும் தெரிவித்தார்.
திருவள்ளுவர் - திருக்குறள் குறித்த சமீபத்திய சர்ச்சையாக இருப்பது, டெல்லியில் சிலை திறப்பு நிகழ்வில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதுதான்.
திருக்குறளை மொழிபெயர்த்த ஜி.யு. போப் பற்றி பேசிய அவர், "ஆதிபகவன் என்ற திருக்குறளில் 'ஆதிபகவன்' என்ற வார்த்தையை "முதன்மை தெய்வம்" (ப்ரைமல் டெய்ட்டி) என்று ஜி.யு.போப் மொழிபெயர்த்திருப்பார். ஜி.யு.போப் தனது மொழிபெயர்ப்பில் ஒரு அவமதிப்பை செய்திருக்கிறார். ஜி.யு. போப் ஒரு மதபோதகர். அவர் சுவிஷேசத்தை பரப்பும் சொசைட்டியின் (எஸ்பிஜி) உறுப்பினர்.
1813இல் பிரிட்டிஷ் நாடாளுமன்றம், ஒரு சட்டத்தை இந்திய சாசனம் என்ற பெயரில் நிறைவேற்றியது. அதில், இந்தியாவில் கிறிஸ்துவ இறை நம்பிக்கையை பரப்பும் நோக்கம் வலியுறுத்தப்பட்டிருந்தது. அதன்படியே ஜி.யு.போப் இந்தியாவுக்கு ஊழியம் செய்வதற்காக வந்தார், தமிழை பயின்றார், திருக்குறளை தேர்ந்தெடுத்து அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். அதில் இருந்த ஆன்மாவையை பிரித்தெடுத்தார்" என பேசினார்.
"தமிழர்கள் வாழ்வோடு கலந்தது திருக்குறள்"
அரசியல் கட்சிகளின் தலைவர்களின் சர்ச்சைகளின் மையமாக திருவள்ளுவர் இருக்கிறாரா என்பது குறித்தும் தமிழக கட்சிகள் வாக்கு அரசியலுக்காக திருவள்ளுவரை பயன்படுத்துகின்றதா என்பது குறித்தும் 'அறம்' இணைய இதழின் ஆசிரியர் சாவித்திரி கண்ணன் 'பிபிசி தமிழிடம்' பேசினார்.
படக்குறிப்பு,
சாவித்திரி கண்ணன்
"மதம், மொழி எல்லாவற்றையும் கடந்து பொது நிலையில் திருக்குறளை படைத்திருப்பதால்தான் அது 'உலகப் பொதுமறையாக இருக்கிறது. எந்த சார்பு நிலையும் எடுக்காமல் எல்லா காலகட்டத்திற்கும் பொதுவானதாக இருக்கிறது. எந்தவொரு மதவாதியும் அதனை கையகப்படுத்த முடியாது.
தமிழ்நாட்டில் யாருக்கும் இல்லாத ஈர்ப்பும் மரியாதையும் திருவள்ளுவர் மீது உண்டு. தமிழர்கள் வாழ்வோடு கலந்துபோனது திருக்குறள். தமிழர்களுக்கு திருக்குறள் பன்னெடுங்காலமாக ஒரு ஞான விளக்காக இருக்கிறது. அது மாயை அல்ல. வதந்தியும் அல்ல, மிக வெளிப்படையான இலக்கியம்.
இத்தகைய இலக்கியம் குறித்து ஆளுநர் கையில் எடுத்து இப்படி பேசுவது அவர்களுக்கு தோல்வியில்தான் முடியும்.
திருக்குறளை தன் வாழ்வியலாகக் கொண்டவர் ஜி.யு.போப், அவரை சந்தேகக் கண்கொண்டு பார்க்க முடியாது. தொண்டு மனப்பான்மையுடனும் தமிழை தமிழர்களைக் காட்டிலும் ஆழமாக புரிந்துகொண்டவர். சர்வதேச அரங்குக்கு திருக்குறளை கொண்டு செல்ல வேண்டும் என நினைத்தவர். அவரையே குற்றம்சொல்வது பொறுப்பற்றத்தனமாக இருக்கிறது.
எதிலெல்லாம் அரசியல் செய்யக்கூடாதோ அதிலெல்லாம் அரசியல் செய்கின்றனர்.
தமிழர்களுக்கு மொழி மீது பெரிய ஈர்ப்பு இருக்கிறது. அவர்களின் அடையாளங்களுள் ஒருவராக திருவள்ளுவர் இருக்கிறார். மொழி மீதான அபரிமிதமான ஈர்ப்பையும் திருவள்ளுவர் மீதான மரியாதையையும் தொடுவதன் மூலம் தமிழ் மக்களுக்கு நெருக்கமாகிவிடலாம் என பாஜக கருதுகிறது.
பாஜகவின் தருண் விஜய் சிறிது காலம் திருவள்ளுவரை முன்னெடுத்தார், அதன்பிறகு அவர் காணாமல் போய்விட்டார்" என தெரிவித்தார்.
திமுக ஆட்சிக்காலத்தில் திருவள்ளுவருக்கு சிலை அமைப்பது போன்ற முன்னெடுப்புகள் வாக்கு அரசியல் ஆகாதா என எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சாவித்திரி கண்ணன், "திமுகவின் வளர்ச்சிக்கும் தமிழ் வளர்ச்சிக்கும் சம்பந்தம் இருப்பதாகவே நான் கருதுகிறேன். திருக்குறளை மக்கள் இயக்கமாக கொண்டுவந்தது திமுகதான். கிராமம்தோறும் வாசிப்பு பட்டறைகளை நிறுவி வாசிப்பை இயக்கமாகக் கொண்டு வந்தது திமுக. இதன் தொடர் வெளிப்பாடாக வள்ளுவரை பொதுமைப்படுத்த வேண்டும், முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் வள்ளுவருக்கு கருணாநிதி சிலை எழுப்புகிறார். அதனுள் ஒரு வாக்கு அரசியல் இருக்கலாம், இல்லை என்று சொல்ல முடியாது. அரசியல்வாதிகளுக்கு இருக்கலாம்.
ஆனால், தமிழ்நாட்டிலேயே பிறந்து வளர்ந்து அவர்கள் செய்வது இயல்பான, தமிழர்களோடு கலந்த விஷயம்.
ஆனால், பாஜக காவி உடையணிந்து திருவள்ளுவரின் கீர்த்தியையும் புகழையும் அபகரிக்க முயற்சிக்கின்றனர். அந்த மாதிரி இல்லாமல், திமுக இயல்பாக செய்தது அவர்களின் வாக்கு அரசியலுக்கும் பயன்பட்டது" என தெரிவித்தார்.
ஆர்.நாகசாமி: தொல்லியல் துறை பங்களிப்பும், திருக்குறள் பற்றிய சர்ச்சைக் கருத்தும்
முரளிதரன் காசிவிஸ்வநாதன்
பிபிசி தமிழ்
24 ஜனவரி 2022
பட மூலாதாரம்,NAGASAMY
படக்குறிப்பு,
நாகசாமி
ஞாயிற்றுக் கிழமை சென்னையில் காலமான மூத்த தொல்லியல் அறிஞரான ஆர். நாகசாமி (91) கல்வெட்டு மற்றும் தமிழகத் தொல்லியல் துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்தவர். தனது சில கருத்துகளுக்காக கடுமையான விமர்சனங்களுக்கும் உள்ளானவர்.
1930ஆம் ஆண்டு ஆகஸ்ட் பத்தாம் தேதி சம்ஸ்கிருத அறிஞரான ராமச்சந்திரன் மகனாகப் பிறந்தவர் ஆர். நாகசாமி. சென்னைப் பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருத மொழி மற்றும் இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். பிறகு இந்தியக் கலைகள் என்ற தலைப்பில் புனே பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டமும் பெற்றார்.
1959ல் சென்னை அருங்காட்சியகத்தில் கலை மற்றும் தொல்லியல்துறையின் காப்பாட்சியராக (Curator) பணியில் சேர்ந்த அவர் 1963வரை அந்தப் பணியில் இருந்தார். இதற்குப் பிறகு, தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையில் சிறப்பு துணை அதிகாரியாகச் சேர்ந்தார். 1966ல் தொல்லியல் துறையின் முதல் இயக்குனராக பதவி உயர்வு பெற்று, ஓய்வுபெறும் வரையில் அந்தப் பணியில் இருந்தார்.
இவர் தமது காவலத்தில் தமிழ்நாட்டில் இருந்த பல்வேறு தொல்லியல் தலங்களைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்தினார். புகலூரில் இருந்த முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த சேரர் கால கல்வெட்டு, கங்கை கொண்ட சோழபுரத்தில் சோழர்களின் அரண்மனை இருந்ததாக கருதப்படும் இடம், மதுரை திருமலை நாயக்கர் மகால், தரங்கம்பாடியில் உள்ள டச்சுக் கோட்டை போன்ற தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் இவரது காலத்தில் குறிப்பிடத்தக்கக் கவனத்தைப் பெற்றன.
மதுரையில் இருக்கும் திருமலை நாயக்கர் மஹாலில் இவரது காலத்தில்தான் ஒலி - ஒளிக் காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. பூண்டியில் வரலாற்றுக் காலத்திற்கு முந்தைய காலம் குறித்த அருங்காட்சியகம் உள்ளிட்ட பல மாவட்ட அருங்காட்சியகங்கள், கல்வெட்டியலைக் கற்பிப்பதற்கென மாநில தொல்லியல் துறையின் கீழ் ஒரு நிறுவனம் ஆகியவற்றையும் நாகசாமி உருவாக்கினார்.
சிதம்பரம் நாட்டியாஞ்சலி திருவிழாவும் இவரது முயற்சியின் கீழ்தான் துவங்கப்பட்டது. புகழ்பெற்ற லண்டன் நடராஜர் சிலை வழக்கில் இவரது சாட்சியம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்பட்டது.
லண்டன் நடராஜர் வழக்கு
மண்ணில் புதைந்து கிடந்த 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால நடராஜர் செப்புத் திருமேனி ஒன்று சிலரால் கண்டெடுக்கப்பட்டு கள்ளச் சந்தையில் விற்பனைக்கு வந்தது. இதனை கனடாவைச் சேர்ந்த ஒருவர் வாங்கினார். இந்தச் சிலை 1982ல் கடத்தப்படும்போது லண்டனில் இருந்த அதிகாரிகள் அதனைக் கைப்பற்றினர்.
இந்தச் சிலையைத் திருப்பித் தரக் கோரி இந்திய அரசின் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது. 1986ல் வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்திய அரசின் சார்பில் துறைசார் நிபுணராக ஆர். நாகசாமி வாக்கு மூலம் அளித்தார். வரலாறு, கலை வரலாறு, தமிழ்நாட்டின் கோவில்கள், சடங்குகள் ஆகியவை குறித்து தமிழ் சங்கப் பாடல்கள், கல்வெட்டுகளை முன்வைத்து விளக்கமளித்தார்.
பட மூலாதாரம்,PIB
இவரது "Master Pieces of South Indian bronzes" புத்தகமும் இந்த வழக்கில் முக்கிய ஆதாரமாகப் பயன்பட்டது. இந்த வழக்கில் இந்தியாவுக்கு சார்பாக தீர்ப்பளிக்கப்பட்டது. நடராஜர் சிலை இந்தியாவிடம் திரும்பத் தரப்பட்டது. நீதிபதிகள் அவரது வாதம் குறித்து தீர்ப்பிலேயே பாராட்டி குறிப்பிட்டனர்.
திருக்குறள் குறித்த சர்ச்சைக்குரிய நூல்
இந்த நிலையில், 2018ஆம் ஆண்டில் நாகசாமி எழுதிய ஒரு புத்தகம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. "Thirukural - An Abridgement of Sastras" என்ற அந்தப் புத்தகத்தில் வேதங்களின் தாக்கத்திலேயே திருக்குறள் எழுதப்பட்டது என்று குறிப்பிட்டிருந்தார் நாகசாமி. இது தமிழறிஞர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. 2018ஆம் ஆண்டில் அவருக்கு பத்மபூஷண் விருதும் வழங்கப்பட்டது.
ஸ்டாலின் எதிர்ப்பு
2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் செம்மொழி விருது தேர்வுக் குழுவில் ஒருவராக ஆர். நாகசாமியை மத்திய அரசு நியமித்தது. அந்தத் தருணத்தில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் இந்த நியமனத்திற்குக் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தார். "செம்மொழித் தமிழ் மீது அடர்த்தியான நஞ்சைக் கக்கும் நாகசாமி செம்மொழி தமிழாய்வு விருதுகளை தேர்வு செய்யும் கமிட்டியில் இடம்பெற்றிருக்கிறார். தமிழர்களை - அவர்களின் உணர்வுகளை கிள்ளுக்கீரையாக எண்ணி மத்திய பாஜக அரசு அவமானப்படுத்துகிறது. ஒரு ஆய்வு அல்ல - பல்வேறு ஆய்வுகளை - கலப்படமான, ஆதாரமில்லாத, இட்டுக்கட்டிய தகவல்களின் அடிப்படையில் வெளியிட்டு, சமஸ்கிருதமும், வேதங்களும் தான் தமிழ் மண்ணுக்குச் சொந்தம் என்ற விஷமப் பிரச்சாரத்தில் தொடர்ந்து ஈடுபட்டிருக்கும் ஒருவர் எப்படி செம்மொழித் தமிழாய்வு விருதுகளை பாரபட்சமின்றித் தேர்வு செய்ய முடியும்?" என்று அவர் கேள்வியெழுப்பினார். வேறு சில அமைப்புகளும் அந்த நியமனத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டங்களை நடத்தின.
என்ன சொல்கிறார் ரவிக்குமார்?
ஆனால், நாகசாமியின் பங்களிப்பை ஒரு புத்தகத்தை வைத்து மட்டும் மதிப்பிட முடியாது என்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரும் மக்களவை உறுப்பினருமான து. ரவிக்குமார். அரசு மரியாதையுடன் நாகசாமியின் உடலை நல்லடக்கம் செய்ய வேண்டும் என்ற இவரது கோரிக்கை சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தையும் ஏற்படுத்தியது.
"நாகசாமி காலத்தில்தான் தமிழ்நாட்டில் மாவட்ட வாரியாக கல்வெட்டுகள் பதிப்பிக்கப்பட்டன. கல்வெட்டுகளைப் படிக்கக் கற்றுத்தரும் வகுப்புகளையும் துவங்கினார். எசாலம் செப்பேட்டைப் படித்து, பதிப்பித்தார். சோழர் கால செப்புப் படிமங்களில் மிகுந்த நிபுணத்துவம் வாய்ந்தவர் நாகசாமி" என்கிறார் ரவிக்குமார்.
ஹெர்மன் டீக்கன் சங்க இலக்கியத்தின் பழமை குறித்து கேள்வியெழுப்பியபோது, அதற்கு தகுந்த பதிலளித்தவர் நாகசாமி என்பதைச் சுட்டிக்காட்டுகிறார் ரவிக்குமார். லெய்டன் பல்கலைக்கழகப் பேராசிரியரான ஹெர்மன் டீக்கன் 2001ல் South India: Old Tamil Cankam Poetry என்ற நூலை எழுதினார். அந்த நூலில், தமிழின் சங்கப் பாடல்கள் 2 ஆயிரம் ஆண்டு பழமை கொண்டவையல்ல. மாறாக, பாண்டிய மன்னர்கள் காலத்தில் அதாவது 8 முதல் பத்தாம் நூற்றாண்டுவரையிலான காலத்தில் எழுதப்பட்டவை என்று குறிப்பிட்டிருந்தார்.
பட மூலாதாரம்,UNKNOWN
படக்குறிப்பு,
நாகசாமி
"யாரும் அதற்குப் பெரிதாக மறுப்புத் தெரிவிக்காத நிலையில், மு. கருணாநிதி முதல்வராக இருந்தபோது 2010ல் நடந்த செம்மொழி மாநாட்டில், விரிவாக அதை மறுத்துப் பேசினார் நாகசாமி. தொல்லியல் துறையில் பணியாற்றிய ஒவ்வொருக்கும் பல கருத்துகள் இருக்கும். புதிய ஆதாரங்கள் வெளிப்படும்போது அவை மாறிக்கொண்டே இருக்கும். ஒருவரது ஒரு காலகட்ட கருத்தைக் கொண்டு அவரது ஒட்டுமொத்த செயல்பாட்டை மதிப்பிட முடியாது. அந்த வகையில் ஆர். நாகசாமி தமிழக தொல்லியல் துறைக்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்தவர்" என்கிறார் ரவிக்குமார்.
ஆர். நாகசாமி இயக்குனராக இருந்த காலகட்டத்தில் கரூர், அழகன்குளம், கொற்கை, கங்கை கொண்ட சோழபுரம், பாஞ்சாலங்குறிச்சி, வசவசமுத்திரம், கொடுமணல், பொலுவம்பட்டி, கோவலன் பொட்டல் ஆகிய இடங்களில் அகழாய்வுகள் நடத்தப்பட்டன.
"Master pieces of South Indian Bronzes", "Siva Bhakti", Tantric Cult in Tamilnadu, "Facets of South Indian Art and Architecture" உள்ளிட்ட ஆங்கில நூல்களையும் தமிழ்மாலை, உத்திரமேரூர், சொல்மாலை, கங்கை கொண்ட சோழபுரம், மாமல்லை உள்ளிட்ட புத்தகங்களையும் எழுதியிருக்கிறார் நாகசாமி.