New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பார்ப்பான் யார்-1 - இரும்பாநாடு சே.பத்மநாபன்


Guru

Status: Offline
Posts: 24603
Date:
பார்ப்பான் யார்-1 - இரும்பாநாடு சே.பத்மநாபன்
Permalink  
 


 பார்ப்பான் யார்?  -பாகம்-1

          https://sarngavarsham.blogspot.com/2020/06/1.html   தி.க.வின் ஆசான் ஈ.வே.ரா, தமிழனுக்கு(ஈ.வே.ரா-வின் தமிழனுக்கு) நன்மைதரும் இலக்கியம் எதுவும் தமிழில் இல்லை என்றும் தமிழில் உள்ள இலக்கியங்கள் அனைத்தும் ஆரியச்சார்புடையவை என்றும் கூறி தொல்காப்பியம் முதல் எல்லாத்தமிழ் இலக்கியங்களையும் புறந்தள்ளிவிட்டார்.இதற்கு முக்கியக்காரணம் என்னவேனில் ஈ.வே.ரா-வின் கொள்கைகளின் அடிநாதமான பார்ப்பன எதிர்ப்புக்கு தமிழ்ச்சங்க இலக்கியங்களில் அணு வளவும் இடமில்லாமல் இருப்பதுதான் காரணம். சமூகச் சீர்கேடுகளுக்குக்கெல்லாம் காரணம் பார்ப்பான்தான் என்று எந்தப் பார்ப்பனர்களை ஈ.வே.ரா விமர்சித்தாரோ அந்தப் பார்ர்ப்பனர்கள் தமிழ் இலக்கியங்களில் சிறப்பித்துப் போற்றப்பட்டிருக்கிறார்கள். தமிழ் இலக்கியங்கள் எல்லாவற்றையும் ஒட்டுமொத்தமாக ஈ.வே.ரா தலைமுழுகியதற்குக் காரணம் இதுதான்.இன்றுள்ள அவரது வாரிசுகள் "ஐயோ!நம் தலைவர் எல்லாவற்றையும் தலைமுழுகிவிட்டாரே, என்னசெய்வது? நமக்கென்று சொல்லிக்கொள்ள வேறு என்ன இலக்கியம் இருக்கிறது?” என்று மனதளவில் கலக்கமடைந்து “எங்கள் தந்தை அதற்காகத்தான்இப்படிச்சொன்னார்:இதற்காகத்தான் அப்படிச் சொன்னார்:அவர் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை: இந்த அர்த்தத்தில் சொல்லவில்லை” என்றெல்லாம் நொண்டிச் சமாதானங்கள் கூறி, தமிழ் இலக்கியங்கள் பற்றிய தங்கள் தலைவரின் கருத்துக்கு வியாக்யானம் செய்துகொண்டிருக்கிறார்கள். இவர்கள் என்ன வியாக்யானம் செய்தாலும் இவர்களின் தலைவர் கூறிய கருத்துக்கள் இல்லை என்று ஆகிவிடாது.

            இந்தச் சூழலில்தான் ஈ.வே.ரா-வின் வாரிசுகள் சங்க இலக்கியங்களை விட்டுக்கொடுக்க மனமில்லாமல் சங்க இலக்கியங்களில் வரும் சொற்களுக்கும் செய்திகளுக்கும் இவர்களது சாயத்தைப் பூசி மரபுக்கு முரணாகப் பொருள்கொண்டு தங்களைத் திருப்திப்படுத்திக் கொள்கிறார்கள்.பண்டைத் தமிழகத்தில் பார்ப்பனர்கள் சிறப்பாக கௌரவிக்கப்பட்டார்கள் என்ற செய்தி சங்க இலக்கியங்களில் காணக்கிடைக்கிறது.இதைப் பொறுத்துக்கொள்ள இயலாத இந்தப் “பகுத்தறிவு” வட்டாரத்தமிழ் “அறிஞர்கள்”சங்க இலக்கியங்களில் வரும் அந்தணன்,பார்ப்பனன் முதலிய சொற்களெல்லாம் ப்ராஹ்மணர்களைக் குறிக்காது என்றும் ப்ராஹ்மணர்கள் சங்க காலத்தில் உயர்ந்த இடத்தில் வைத்துப் போற்றப்படவில்லை என்றும் தங்களின் “ஆய்வுக்கருத்துக்களை”ச் சொல்லி, ப்ராஹ்மணர்களைக் கண்டு பற்றி எரிந்து கொண்டிருக்கும் தங்கள் வயிறுகளைக் குளிரச்செய்துகொண்டிருக்கிறார்கள்.

       தி.க.வில் இல்லாமல் தங்களை ஆன்மிக வாதிகளாகக் காட்டிக்கொள்ளும் சில தமிழ் இலக்கிய ஆய்வாளர்களும் பார்ப்பன வெறுப்பாளர்களாக இருக்கிறார்கள்.அவர்களும் இக்கருத்தையே ஏற்கிறார்கள். "புலவர்”, "பேராசிரியர்”,”முனைவர்” முதலிய பட்டங்களைப் பெற்றுவிட்டால் ஏதோ தமிழ் இலக்கியங்கள் அனைத்தையும் இவர்களே குத்தகைக்கு எடுத்துவிட்டது போலவும்,இவர்கள் சொல்லும் கருத்துக்கள்தான் முடிவான கருத்து என்பது போலவும் ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முனைகிறார்கள் இவர்கள். நடுநிலையோடு ஆய்வு செய்யும் ஒரு இலக்கியத் திறனாய்வாளர் இவர்கள் கருத்துக்கு முரணான ஒரு கருத்தைச் சொல்லிவிட்டால் உடனே இவர்கள் அந்த ஆய்வாளருக்கு “பார்ப்பன அடிவருடி” “தமிழின துரோகி”என்ற பட்டத்தைச் சூட்டி விடுவார்கள். நடுநிலையோடு ஆய்வுசெய்யும் ஒருவருக்கு இம்மாதிரியான பட்டங்களை இவர்கள் சூட்டினால் தற்சார்புக் கருத்துக்களை மனதில் வைத்துக்கொண்டு நடுநிலையின்றி ஆய்வு செய்து ஆதாரமற்ற கருத்துக்களை இவர்கள் கூறும்போது, இவர்களது கருத்துக்களை நாம் “பார்ப்பன விரோதிகளின் கருத்து” என்றும் “சங்கத்தமிழின துரோகிகளின் கருத்து”என்றுதான் சொல்வது தானே ஞாயமாக இருக்கமுடியும்?.

      தற்காலத்தில் “பகுத்தறிவுத் தமிழ்” வட்டாரத்தில் தி.க.வைச்சேர்ந்த சுபவீரபாண்டியனார் என்ற“பெரும்புலவர்” பிரபலமானவர்.இவர்தான் இப்படிப்பட்ட குதர்க்க ஆராய்ச்சிகள் செய்வதில் வல்லவர். “பார்ப்பான்”என்ற சொல் எந்த வேலை பார்ப்பவனையும் குறிக்குமாம். ஐயர்,அந்தணர் என்ற சொற்களெல்லாம் பிராமண சமூகத்தைக் குறிக்கும் சொற்களாகச் சங்க இலக்கியங்களில் பயன்படுத்தப்படவில்லையாம். பிராமணர்கள் சங்ககாலத்தில் உயர்வாகக் கருதப்பட வில்லையாம். சொல்கிறார்இந்தஅதிமேதாவி. இவருடைய கருத்துக்கள் பிராம்மண எதிர்ப்பு என்ற ஒரே கொள்கையை உள்ளீடாகக் கொண்டிருக்கின்றனவே யொழிய உண்மையை பிரதிபலிக்கவில்லை.இவருடைய கருத்துக்களுக்கு சங்க இலக்கியங்களில் எந்தச் சான்றும் இல்லை.

        சங்க இலக்கியங்களில் வரும் பார்ப்பான், அந்தணன்,மறையோன்,இருபிறப்பாளன்,என்ற சொற்களெல்லாம் ப்ராஹ்மணர்களைக் குறிக்கும் ஒரு பொருட்சொற்களே.”ரிஷி”என்ற சொல்லின் தமிழ்வடிவமே“பார்ப்பான்”என்பது. ப்ராஹ்மணர்களானஸப்தரிஷிகளின் கோத்ரங்களில் உதித்தவர்கள்தான் ப்ராஹ்மணர்கள்.அதனால்தான் அவர்களுக்குத்தமிழில் பார்ப்பான் என்றபெயர் கொடுக்கப்பட்டது.“பார்ப்பு” என்றசொல்லின் அடிப்படையில் இருபிறப்பாளர்களானப்ராஹ்மணர்களுக்கு அப்பெயர் கொடுக்கப்பட்டது என்றும் கொள்ளல் தகும்.”ப்ராஹ்மணன்”என்பதன் தமிழ் வடிவமே “அந்தணன்” என்பது.அதாவது “ப்ரஹ்மத்தைச் சொல்லும் வேதத்தோடு தொடர்புடையவன்” என்ற பொருளில் ப்ராஹ்மணன் என்ற சொல் வந்தது.வேதத்தின் அந்தத்தில் சொல்லப்படுவது ப்ரஹ்மம் என்பதால் அதோடு தொடர்புடையவன் என்ற பொருளில் “அந்தணன்” என்று தமிழில் வந்தது. ஆகவே இரண்டுக்கும் பொருள் ஒன்றே.”மறையோன்” என்பது வேதத்தோடு தொடர்புடையவன் என்ற பொருளில் ப்ராஹ்மணரைக் குறிக்கும் சொல்தான். வேதத்துக்கு வடமொழியில் “சந்தஸ்”என்ற ஒரு பெயர் உண்டு.சந்தஸ் என்றால் மறைப்பது என்று பொருள்.அதாவது அறிவிலிக்கு வேதம் தன் உண்மை உருவை மறைத்துவிடும் என்ற அடிப்படையில் அச்சொல்லால் வேதம் அழைக்கப்படுகிறது. அச்சொல்லின் தமிழ் வடிவம்தான் “மறை” என்பது. “த்விஜன்”என்பதன் தமிழ் வடிவம்தான் “இருபிறப்பாளன்” என்பது.

     வேதத்துடனான தொடர்பு ப்ராஹ்மணர்களுக்கு மட்டுமல்லாது அரசருக்கும் வணிகருக்கும் உண்டு என்றாலும் அவ்விரு வகுப்பினரையும் இப்பெயர்களால் அழைக்கும் வழக்கம் இருந்ததில்லை.ஏனெனில்  ப்ராஹ்மணர்களுக்கு இருப்பதுபோல் வேதத்துடனான முழுமையான தொடர்பு அவ்விரு வகுப்பினருக்கும் இல்லை.ஒரு குறிப்பிட்ட சமூகத்தைக் குறிக்காத வெறும் காரணப்பெயர்கள்தான் இவை என்று கொண்டால் வேதத்தோடு தொடர்புடைய அரசர் வணிகர் இவர்களைக்குறித்தும் பார்ப்பான் முதலிய சொற்கள் பயன்படுத்தப்பட்டிருக்கவேண்டும். ஆனால் சங்க இலக்கியங்களில் மேற்படி சொற்கள் அரசர்களைக் குறித்தோ வணிகர்களைக் குறித்தோ பயன்படுத்தப் படவில்லை என்பதுதான் உண்மை. “பார்ப்பான் என்றால் எந்த வேலை பார்ப்பவனையும் குறிக்கலாம்” என்ற சுபவீரபாண்டிய னாரின் கடைகழிந்தஆய்வுக்கருத்துக்கும் சங்கஇலக்கியங்களில் இடம்இல்லை.ஒரு சலவைத்தொழிலாளியையோ, ஒருமண்பானை செய்பவனையோ,ஒரு கொல்லனையோ,ஒருதச்சனையோ, ஒருபிணம் சுடுபவனையோ குறித்துப் பார்ப்பான் என்ற சொல்பயன்படுத்தப்பட்டதாக ஒருஇடத்தையாவது சங்கஇலக்கியங்களிலிருந்து  இவரால் காட்ட முடியுமா?வெறுப்பு என்று வந்துவிட்டால் எதை வேண்டுமானாலும் ஆய்வு என்ற பெயரில் வாய்க்குவந்தபடி உளறுவதுதான் இவர்களின் வேலை.சங்க இலக்கியங்களில் பார்ப்பன சமூகம் சிறப்பித்துச்சொல்லப்படுவதை ஜீரணிக்க முடியாமல்தான் ‘பார்ப்பான்’ என்ற சொல்லைக் காரணப் பெயர்ச்சொல்லாகப் பொருள்கொண்டு “அச்சொல் ஒரு சமூகத்தைமட்டும் குறிக்க வேண்டிய அவசியம் இல்லை.மற்றவர்களையும் குறிக்கலாம்” என்று சொல்லுமளவிற்கு இவர்களது “ஆய்வு”போய்விட்டது.

       உலகில் வழங்கப்படும் சொற்கள் எல்லாமே ஒரு காரணத்தால் உருவானவைதான். அச்சொற்களை யௌகிகம், ரூடி என்று பிரிப்பது உண்டு.ஒரு சொல் ஒரு குறிப்பிட்ட நபரையோ வஸ்துவையோ குறிக்கும் சொல் என்றால் அதை ரூடி என்பார்கள்.அதே சொல்லைக் காரணப்பெயர்ச் சொல்லாகக்கொண்டு மற்றவற்றையும் குறித்துப் பயன்படுத்தினால் அதை யௌகிகம் என்பார்கள். உதாரணமாக, ‘கண்ணன்’ என்ற சொல் கண்ணழகு உள்ளஆண்கள் எல்லோரையும் குறிக்கும்.கண்ணழகுள்ள எல்லோரையும் குறிக்கும் பட்சத்தில் அச்சொல் யௌகிகம் எனப்படுகிறது.புல்லாங்குழலைக் கையில் பிடித்த பிரசித்திபெற்ற கண்ணனை அது குறிக்கும் பட்சத்தில் அச்சொல் ரூடி என்று சொல்லப்படுகிறது. ஒரு சொல் ரூடியா யௌகிகமா என்பதை அது பயன்படுத்தப்பட்டுள்ள இடத்தை வைத்துத்தான் முடிவு செய்யமுடியும்.சங்க இலக்கியங்களில் பார்ப்பான், அந்தணன், மறையோன்,முதலிய சொற்கள் எல்லாம் ஒருகுறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களைக் குறிக்கும் ரூடிச்சொற்களாகவே பயன்படுத்தப்பட்டுள்ளனவே யொழிய மற்ற சமூகத்தினரையும் குறிக்கும யௌகிகப்பொருளில் எவ்விடத்திலும்அச்சொற்கள் பயன்படுத்தப்படவில்லை.அதனால் பிராஹ்மணன் என்ற வடமொழிச் சொல்லின் தமிழ் வடிவங்கள்தான் பார்ப்பான், மறையோர், அந்தணன்,இருபிறப்பாளர் என்ற சொற்கள் எல்லாம்.எப்படி விஷ்ணுவுக்குத் தமிழில் மாயோன்,திருமால்,துழாயோன்,என்று சொல்லப்படுகிறதோ அதைப்போல ப்ராஹ்மணன் என்பதற்குரிய தமிழ்ச்சொற்கள்தான் பார்ப்பான் முதலிய சொற்கள்.ஒரு பொருளைக்குறிக்கும் ஒரு சொல்லுக்கு வெவ்வேறு மொழிகளில் வெவ்வேறு சொற்கள் இருக்கும்.சொற்கள்தான்வேறுபடுமேயொழிய பொருள்ஒன்றாகத்தான்இருக்கும்.உதாரணமாகப் பாம்புக்கு ஆங்கிலத்தில் snake என்பார்கள்.அதனால் பாம்பு என்பது வேறு snake என்பது வேறு இரண்டும் ஒன்றல்ல என்று ஒருவன் கூறினால் அது எவ்வளவு முட்டாள்தனமான கருத்தோ அவ்வளவு முட்டாள்தனமான கருத்துத்தான் வடமொழியில் சொல்லப்படும் ப்ராஹ்மணன் என்பது வேறு தமிழில் உள்ள பார்ப்பான் என்பது வேறு என்று இவர்கள் சொல்கின்ற கருத்தும்.        



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

பார்ப்பான் யார்-பாகம்-2      

        மேலும் இந்தக் குதர்க்க அராய்ச்சியாளர்கள் “சங்க இலக்கியத்தில் சொல்லப்படும் பார்ப்பான் என்பது வேறு. அந்தணன் என்பது வேறு.இருவரும் ஒருவர் அல்லர்” என்றும் “ஐயர் என்பது பார்ப்பனர்களைக் குறிக்காது” என்றும் “பார்ப்பான் என்பது ஒரு கௌரவம் மிக்க வார்த்தையாக சங்க இலக்கியங்களில் சொல்லப்படவில்லை” என்றும் கூறுகிறார்கள் முதலில் பார்ப்பான்,அந்தணன்,ஐயர் இந்த மூன்று சொற்களும் ஒருவரையே குறிக்கும் என்பதை தக்க ஆதாரத்தோடு நிறுவிவிட்டு அடுத்த விஷயத்துக்குச்செல்வோம்.

     தொல்காப்பியத்தில் “அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும்” (தொல்-பொ-75) என்று ஆறு தொழில்கள் பார்ப்பாருக்குரியவை என்று சொல்லப்படுகிறது. அதனால் பார்ப்பாரே அறுதொழிலோர் என்பது தெளிவாகிறது.

அந்த ஆறு தொழில்கள் எவை என்பதைச் சங்க இலக்கியம் “ஓதல் வேட்டல் அவை பிறர்ச்செய்தல் ஈதல் ஏற்றல் என்று ஆறு புரிந்து ஒழுகும் அறம்புரி அந்தணர்”(பதிற்றுப்பத்து-24) என்று தெளிவாக்குகிறது.

இந்த சங்க இலக்கியவரியில் “அந்தணர்” என்று வந்துள்ளது கவனிக்கத்தக்கது.அதனால் தொல்காப்பியத்தில்  சொல்லப்படும் பார்ப்பான்தான் இந்த சங்க இலக்கிய வரியில் சொல்லப்படும் அறு தொழில் அந்தணன் என்பது தெளிவாகிறது.

அறு தொழில் அந்தணர் என்ற சொற்றொடர் சங்க இலக்கியங்களில் பல இடங்களில் காணப்படுகிறது.அந்தணர்க்குரிய ஆறுதொழில்களில் “ஏற்றல்” என்று சொல்லப்படும் தானம் வாங்குதல் என்பது ஒன்று..இது அந்தணர்க்கு மட்டுமே உரியது.அந்தணர்களைத்தவிர மற்றவர்கள் தானம் வாங்கக் கூடாது. அந்தணர்களைத்தவிர மற்றவர்களுக்குத் தானம் கொடுக்கவும் கூடாது.ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் என்ற சங்க கால மன்னன் ஒருவன் அந்தணருக்கு தானம் கொடுத்த விஷயம் “….பார்ப்பார்க்குக் கபிலையொடு குடநாட்டோரூரீத்து” என்று பதிற்றுப்பத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது. இவ்வரியில் “பார்ப்பார்” என்ற சொல்லால் அந்தணர்கள் குறிப்பிடப்படுவது  குறிப்பிடத்தக்கது.புறநாநூறு 367-ஆம் பாடலில் “ஏற்ற பார்ப்பார்க்கு ஈர்ங்கை நிறையப் பூவும் பொன்னும் புனல்படச்சொரிந்து வாழச்செய்த நல்வினை அல்லது ஆழுங்காலைப் புணை பிறிதிலையே” என்று அந்தணருக்கு தானம் வழங்குவதால் ஏற்படும் பயன் சொல்லப் படுகிறது.

இவ்வரியிலும் “பார்ப்பார்” என்று வந்துள்ளது காண்க.பதிற்றுப்பத்து ஏழாம் பத்து நான்காம் பாடலில், “உரைசால் வேள்வி முடித்த கேள்வி அந்தணர் அருங்கலமேற்ப நீர்பட்டு” என்று வேள்வி செய்த அந்தணர்களுக்கு அரசன் தானம் வழங்கிய செய்தி சொல்லப்படுகிறது.சிலப்பதிகாரத்தில் கட்டுரைக்காதையில் வரும் வலசைப் பார்ப்பான் பாராசரன் பற்றிய குறிப்பும் நடுநற்காதையில் “நான்மறை மருங்கின் வேள்விப் பார்ப்பான் அருமறை மருங்கின் அரசர்க்கு ஓங்கிய பெருநல் வேள்வி நீ செயல் வேண்டும்” என்று அந்தணன் மன்னனை வேள்வி செய்ய அறிவுறுத்திய செய்தியும், அறுதொழில் அந்தணரையே பார்ப்பார் என்ற சொல்லால் பண்டைத்தமிழர் குறிப்பிட்டனர் என்பதைத் மிகத்தெளிவாகக் காட்டுகின்றன.

குறுந்தொகை -156-ஆம் பாடல் பார்ப்பன மகனே! என்று ஆரம்பிக்கிறது.அப்பாடலில் “எழுதாக் கற்பின்  நின் சொல்..” என்ற சொற்றொடர் பார்ப்பான் வேதம் கற்பவன் என்பதைக் காட்டுகிறது. ஐங்குறுநூறு நான்காம் பாடலில் புலவர் மன்னனை வாழ்த்தும்போது “பார்ப்பார் ஓதுக!” என்று சொல்கிறார்.அதாவது “உனது நாட்டில் அந்தணர்கள் வேதங்களை விடாது ஓதட்டும்” என்று வாழ்த்துகிறார் புலவர்.புறநானூற்றில் ‘பார்ப்பன வாகை’ என்ற ஒரு துறையே உள்ளது. “கேட்கக் கடவன கேட்டு தலைமை பெற்ற அந்தணனை யாகத்தால் வெற்றியைப் பெருக்குதல்”என்று புறப்பொருள் வெண்பாமாலை இத்துறையை விளக்குகிறது.புறநாநூறு 166-ஆம்பாடல் பார்ப்பன வாகையைச்சேர்ந்தது.அப்பாடலில் அந்தணர்கள் செய்யும் வேள்வி பற்றிய குறிப்பே வருகிறது.

”மறப்பினும் ஓத்துக் கொளலாகும்” என்ற குறளால் அறுதொழில்களில் வேதம் ஓதும் தொழில் பார்ப்பானுக்கே என்பது பெறப்படுகிறது.அறு தொழில் செய்யும் அந்தணரையே அறு தொழிலோர் என்று குறிப்பிட்டு அந்தணன் என்பதும் பார்ப்பான் என்பதும் ஒன்றுதான் என்று திருக்குறள் கூறிவிட்டது. மேலும் திரிகடுகம் 70-ஆவது பாடலில் “நாவினால் வேதம் கரைகண்ட பார்ப்பானும்”என்று வேதத்தில் சிறந்த பாண்டித்யம் உள்ளவர்கள் பார்ப்பனர்கள் என்று சொல்லப்பட்டது.திரிகடுகம்-34-ஆவது பாடலில் “மூன்று கடன் கழித்த பார்ப்பானும்”என்று சொல்லியிருப்பது வேதத்தில் அந்தணர்களுக்குச் சொல்லிய தேவர் கடன்,பித்ரு கடன்.ரிஷி கடன் என்ற மூன்று கடன்களைக் குறிக்கிறது..இப்படி வேதம் ஓதுதல்.ஆறு தொழில்கள்.வேள்வி செய்தல் தானம் வாங்குதல் இவற்றைப் பற்றிக் குறிப்பிடும் இடங்களிலெல்லாம் பார்ப்பான், அந்தணன் என்ற இருசொற்களுமே பயன்படுத்தப் பட்டிருக்கின்றன.

இதுபோல் இன்னும் ஏராளமான உதாரணங்களைக் காட்டலாம்.ஆகவே பார்ப்பான் வேறு அந்தணர் வேறு என்று இவர்கள் கூறுவது ஆதாரமற்ற அபத்தக்கருத்தாகும். “பார்ப்பார்” என்ற சொல் அந்தணர்களைத் தவிர மற்ற எந்த சமூகத்தினரைக் குறித்தும் சங்க இலக்கியங்களில் பயன்படுத்தப் படவில்லை.ஆகவே தி.க “புலவர்” சுபவீயாரின் கருத்து அடிப்படை ஆதாரமற்றது என்பதுடன் வெறுப்புணர்வால் எழுந்த ஈனத்தனமான கருத்தும் ஆகும். மேலும் ஐயர்’ என்றால் அந்தணரைக்குறிக்காது என்கிறார் இந்தப் “பெரும்புலவர்”.கலித்தொகை -130-ஆம் படலில் வரும் ”இம்மாலை ஐயர் அவிர் அழல் எடுப்ப” என்ற வரி மாலை வேளையில் அந்தணர்கள் வேள்வி செய்த விஷயத்தைக் கூறுகிறது.இவ்வரியில் வரும் “ஐயர்”என்ற சொல் அந்தணரையே குறிக்கும் என்பது எல்லோர்க்கும் விளங்கும். ஆகவே சங்க இலக்கியத்தின்படி ஐயர்,பார்ப்பான்,அந்தணன் எல்லாம் ஒன்றுதான்.இவர்களின் குதர்க்க விளக்கங்களுக்கெல்லாம் சங்க இலக்கியங்களில் எவ்விதமான ஆதாரமும் இல்லை.

   மேலும் “தமிழ்நாட்டு அந்தணர் வேறு வடநாட்டு பிராமணர் வேறு”என்றும் சில அபத்த ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.இவர்களின் கூற்றுக்கும் எவ்வித ஆதாரமும் இல்லை.உலகம் முழுக்க சநாதன நெறியே ஒருகாலத்தில் பின்பற்றப்பட்டது.நமது பாரதநாட்டிலும் இமயம் முதல் குமரிவரை சனாதன நெறியே நிலவியது.நம் நாட்டில் பலமொழிகள் பேசப்படும் பகுதிகள் பண்டைக் காலம் தொட்டே இருந்து வருகின்றன.ஆனால் எப்பகுதியில் எம்மொழி பேசப்பட்டாலும் நாடு முழுவதும் வேதவைதிக நெறிகள் மட்டும் ஒரே மாதிரியாகத்தான் எல்லா இடங்களிலும் இருந்து வந்திருக்கின்றன.

தமிழ்நாட்டில் உள்ள அந்தணர் தமிழ் பேசுவார்கள்.நாட்டின் வேறு பகுதிகளில் இருப்பவர்கள் வெவ்வேறு மொழிகளைப் பேசுவார்கள்.ஆனால் வேதம்,வைதிக நெறிகள் வேள்வி என்பதெல்லாம் தமிழ் நாட்டில் உள்ளவர்களுக்கும் நாட்டில் மற்ற பகுதிகளில் உள்ளவர்களுக்கும் ஒரேமாதிரியாகத்தான் அன்று முதல் இன்றுவரை இருக்கின்றன.தமிழ் நாட்டில் வாழும் அந்தணனின் பேச்சுமொழி தமிழாக இருக்கலாம்.ஆனால் வேதம் எந்த மொழியில் உள்ளதோ அந்த மொழியில்தான் வேதம் ஓதினான் தமிழ்நாட்டு அந்தணன். வைதிகச் சடங்குகளையும் வைதிக வேள்விகளையும் வேதம் எம்மொழியில் உள்ளதோ அம்மொழியில்தான் நடத்தினான்.

பண்டைக் காலம்தொட்டே இதுதான் நடைமுறை.நாட்டின் பல்வேறு பகுதிகளில் வாழும் அந்தணர்கள் தாங்கள் வாழும் பகுதிக்குத் தகுந்த நடை உடை பாவனை உருவம் இவற்றில் வேறு பட்டிருந்தாலும் அவர்கள் எல்லோருக்கும் ஒரே வேதம் தான்.ஒரே வைதிக நெறிதான்.ஒரே வேள்விமுறைதான்.அக்காலம் முதல் இக்காலம் வரை வடநாட்டில் உள்ள அந்தணன் எந்த வேதத்தை ஓதுகிறானோ அதே வேதத்தைத்தான் தமிழ் நாட்டில் உள்ள அந்தணனும் ஓதுகிறான்.நம் பாரத நாட்டில் எந்தப்பகுதியில் வாழும் அந்தணர்களாக இருந்தாலும் அவர்கள் எல்லோருமே சப்த ரிஷிகளின் கோத்ர வழியில் வந்தவர்கள்தான்.சங்க இலக்கியங்களில் சில கோத்ர ரிஷிகளின் பெயர்களும் இடம்பெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

புறநாநூறு 2-ஆம் பாடலில் உள்ள “அந்தி அந்தணர் அருங்கடனிறுக்கும் முத்தீ விளக்கில் துஞ்சும் பொற்கோட்டிமயமும்”என்ற வரி இமய மலையில் வாழும் அந்தணரும் வேள்வி செய்தனர் என்று செய்தியைக் குறிப்பிடுகிறது.

சிலப்பதிகாரமும் வஞ்சிக்காண்டம்-காட்சிக்காதையில் “புன் மயிர்ச்சடைமுடி புலரா உடுக்கை முந்நூல் மார்பின் முத்தீச் செல்வத்து இருபிறப்பாளரொடு பெருமலை அரசன்”என்று வேள்வி செய்யும் அந்தணர்கள் இமயமலையில் இருந்ததாகக் குறிப்பிடுகின்றது.இமயமலை வடநாட்டில் உள்ளது.அதற்காக அங்கு வாழும் அந்தணர்களுக்கு வேறு அடையாளத்தைச் சங்க இலக்கியம் காட்டவில்லை.தமிழ்நாட்டில் உள்ள அந்தணர்களை எந்த அடையாளத்தோடு குறிப்பிடுகிறதோ அதே அடையாளத்தோடுதான் இமயத்தில் வாழும் அந்தணர்களையும் குறிப்பிடுகிறது சங்க இலக்கியம்.

இமயத்தில் வாழும் அந்தணர்களையும் இருபிறப்பாளர்,அந்தணர் என்றே சங்க இலக்கியம் அழைக்கிறது.வடபுலம் வாழ்பவர்கள் என்பதற்காக வேறு பெயர்களால் அவர்களைக் குறிப்பிடவில்லை.அந்த அடிப்படையில் இமயம் முதல் குமரிவரை நாடுமுழுவதும் பரவியிருந்த ப்ராஹ்மணர்கள் எல்லோருமே சப்த ரிஷிகளின் கோத்ர வரிசையில் வந்த ஒரே வகுப்பினர்தான். ப்ராஹ்மணன் என்ற வடமொழிச்சொல்லின் தமிழ் வடிவமே பார்ப்பான், அந்தணன் என்பதெல்லாம்.அதனால் தமிழ்நாட்டில் உள்ள அந்தணர்கள் வேறு.தமிழ்நாட்டு அந்தணர்களுக்கு வேதம் வேறு வேள்விமுறை எல்லாம் வேறு என்று சிலர் சொல்வதெல்லாம் ஆதாரமற்ற வெறும் பிதற்றல்கள்தான்.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
RE: பார்ப்பான் யார்-1
Permalink  
 


பார்ப்பான் யார்-பகுதி-3

       பார்ப்பனன்  என்ற சொல் மரியாதைக்குரிய சொல் இல்லை என்றும் பார்ப்பனர்கள் சங்க காலத்தில் மதிப்புக்குரியவர்களாகக் கருதப்படவில்லை என்றும் இந்தப் “பெரும்புலவர்” சுபவீயார் கூறுகிறார்.இவருடைய இந்தக் கருத்து இவரது அடிவயிற்றில் எரிந்து கொண்டிருக்கும் பார்ப்பன வெறுப்புத்தீயின் வெளிப்பாடுதான்.

       தொல்காப்பியத்தில் “ஓதலும் தூதும் உயர்ந்தோர் மேன” என்று சொல்லப்படுகிறது. அதாவது வேதம் ஓதுதலும் தூது செல்வதும் உயர்ந்தவர்களுக்கு உரியது என்று கூறி பார்ப்பனர்களே உயர்ந்தவர்கள் என்று கூறுகிறது தொல்காப்பியம்.தூது செல்வது என்பது சாதாரண விஷயமன்று.நல்ல சொல்லாற்றல்,விஷயங்களைச் சரியாக உள்வாங்கிக்கொள்ளும் புத்திக்கூர்மை. முடிந்தவரை காரியசித்தி ஏற்படுவதற்கான முயற்சி, நம்பகத்தன்மை இவைஎல்லாம் ஒரு தூதுவனுக்குரிய முக்கியமான இலக்கணங்கள்.

அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்

பண்புடைமை தூதுரைப்பான் பண்பு. என்ற குறட்பா தூதனின் இலக்கணத்தைச் சொல்கிறது. சங்க காலத்தில் அரசர்களுக்கிடையில் பார்ப்பனர்கள் தூது சென்ற விஷயம் சங்க இலக்கியங்களில் பல இடங்களில் சொல்லப்படுகிறது.பெருமை மிகுந்த காதலர்களுக்கிடையிலும் உயர்ந்த குடும்பக்களுக்கிடையில் திருமண உறவுக்காகவும் அந்தணர்கள் தூது சென்றிருக்கின்றனர்,ருக்மணி பகவான் ஸ்ரீக்ருஷ்ணருக்குத் தன் காதலை ஒரு அந்தணர் மூலமாகவே தெரிவித்தாள் என்பதும் நளனுக்கும் தமயந்திக்கும் இடையில் ஒரு அந்தணரே தூதுவராகச் சென்றார் என்பதும் இதிஹாசங்கள் மூலம் நாம் அறிகிறோம்.சங்க இலக்கியங்களிலும் இவ்வகையான தூதுவர்களாக அந்தணர்கள் செயல்பட்டதாகச் சொல்லப்படுகிறது.இதற்குக் காரணம் என்னவென்றால் அந்தணர்கள் நாவன்மை மிக்கவர்களாகவும் நம்பிக்கைக் குரியவர்களாகவும் சத்தியம் தவறாதவர்களுமாக இருந்ததால்தான்.

        தொல்காப்பியம் மரபியல் சூத்திரம்- 83 “அந்தணாளர்க் கரசுவரை வின்றே” என்பதாகும்.அதாவது,அரசர்க்குரிய மரியாதை அந்தணருக்குமுண்டு  என்று சொல்லப்படுகிறது. மேற்படி மரபியல் சூத்திரம் -74-ல் “நெடுந்தகை செம்மல் என்றிவை பிறவும் பொருந்தச்சொல்லுதல் அவர்க்குரித்தன்றே” என்று சொல்லப்பட்டிருக்கிறது.அதாவது நெடுந்தகை ,செம்மல் போன்ற மரியாதையைக்குறிக்கும் சொற்களும் அந்தணருக்கு உரியைவையே என்று அந்தணரின் உயர்ந்த நிலையைப் பறைசாற்றுகின்றது தொல்காப்பியம். “பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப” என்பது ஒரு தொல்காப்பிய சூத்திரம் திருமணச்சடங்குகளை ஏற்படுத்தியவர்கள் அந்தணர்களே என்பது இந்த சூத்திரத்தில் சொல்லப்படுகிறது.இங்கு ‘ஐயர்’ என்ற சொல் அந்தணரையே குறிக்கும். திருமணச்சடங்குகள் அடங்கிய தர்ம சூத்திரங்களைச் செய்த போதாயனர், ஆபஸ்தம்பர்,ஆச்வலாயனர்  என்ற பார்ப்பனர்களையே இந்த ‘ஐயர்’ என்ற சொல்லால் குறிப்பிடுகிறார் தொல்காப்பியர்.இவ்விடத்தில் வரும் ஐயர் என்பதற்கு ஆன்றோர், சான்றோர்,அறிவுடையோர் என்றெல்லால் யௌகிகமாகப் பொருள்கொள்ள இயலாது.ஏனெனில் வேதத்தோடு தொடர்புடைய அந்தணர்கள்தான் வைதிகச்சடங்குகளை வரையறை செய்யமுடியும்.ஆகவே இவ்விடத்தில் வரும் ‘ஐயர்’ என்பது அந்தணர்களைத்தான் குறிக்கும்.ஆன்றோர்,சான்றோர் என்றெல்லாம் இவ்விடத்துக்குப்பொருள் கொண்டாலும் அந்த ஆன்றோரும் சான்றோரும் அந்தணர்கள்தான் என்பதே இறுதியில் தேறிநிற்கும் பொருள்.மேலும் “மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம் கீழோர்க்காகிய காலமும் உண்டே” என்பது ஒருசூத்திரம்.அதாவது அந்தணர்,அரசர்,வணிகர் என்ற மேலோர்களான இம்மூவருக்கும் உரிய சடங்குகளுடன் கூடிய திருமணமுறையைக் கீழோரான நான்காமவர்களும் ஒரு காலத்தில் பின்பற்றினர் என்பது அச்சூத்திரத்தின் கருத்து.முதல் மூவரை மேலோர் என்று குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த மூவரிலும் “அறுவகைபட்ட பார்ப்பனப் பக்கமும் “ என்ற இடத்தில் அந்தணரை முதன்மைப்படுத்தியதால் அம்மூவருள்ளும் அந்தணர் முதன்மைச்சிறப்புடையவர் என்பது தெளிவாகிறது. ”மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிட தீவலம் செய்வது” என்று கண்ணகியின் திருமணம் அந்தணரின் வைதிகச்சடங்குகளொடு நடை பெற்றது என்கிறது சிலப்பதிகாரம்.அதனால் ஸமூஹத்தின் நன்மைகருதி சடங்கு சம்ப்ரதாயங்களை உருவாக்கி அவற்றின்வழி மக்களை ஒழுகச்செய்த பெருமை பார்ப்பனர்களையே சாரும் என்பதை இவற்றால் அறியமுடிகிறது.

      சங்க இலக்கியங்களும் பார்ப்பனரை பெருமைப்படுத்தியேபேசுகின்றன.பார்ப்பனர்களைக்கொண்டு பல வேள்விகள் செய்து கீர்த்திபெற்ற மன்னர்கள் பார்ப்பனர்களுக்கு பொன்னும் பொருளும் பூமியும் அணிகலங்களும் தானமாக வாரிவழங்கிய செய்திகள் சங்க இலக்கியத்தில் கொட்டிக் கிடக்கின்றன.பரிபாடல்-2-ல் “வடு இல் கொள்கையின் உயர்ந்தோர் ஆய்ந்த கெடு இல் கேள்வி” என்ற இடத்தில் அந்தணர்களை “குற்றமற்ற கொள்கையுடைய உயர்ந்தவர்கள்” என்று சொல்வது குறிப்பிடத்தக்கது. மதுரைக்காஞ்சியில் “சிறந்த வேதம் விளங்கப்பாடி,விழுச்சீர் எய்திய ஒழுக்கமொடு புணர்ந்து நிலம் அமர்வையத்து ஒருதாம் ஆகி உய்ர்நிலை உலகம் இவண்நின்றி எய்தும்,அறநெறி பிழையா அன்புடை நெஞ்சின் பெரியோர் “ என்று அந்தணரின் ஒழுக்கத்தையும், பண்பு நலனையும், அன்புடைமையையும்,உயர்வையும்  கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.”அந்தணர் என்போர் அறவோர் “ என்ற திருக்குறளுக்கு விளக்கம்தான் இந்த மதுரைக்காஞ்சி வரிகள்.பட்டினப்பாலையில் “அமரர்ப்பேணியும் ஆவுதி அருத்தியும் நல் ஆனொடு பகடு ஓம்பியும் நான்மறயோர் புகழ்பரப்பியும் பண்ணியம் அட்டியும் பசும்பதம் கொடுத்தும் புண்ணியம் முட்டாத தண்ணிழல் வாழ்க்கை”என்று அந்தணரின் புகழைப்பரப்பும்படியான வைதிக வாழ்க்கையையே பண்டைத் தமிழ்மக்கள் சிறந்த வாழ்க்கையாகக் கருதினார்கள் என்று சொல்வதிலிருந்து பண்டைத்தமிழகத்தில் மக்கள் மத்தியில் அந்தணர்களுக்கு இருந்த பெருமதிப்பைப் புரிந்துகொள்ள முடிகிறது.  புறநானூறு-6ஆம் பாடலில் “இறைஞ்சுக பெரும நின் சென்னி நான்மறை முனிவர் ஏந்துகை எதிரே” என்று ஒரு புலவர் மன்னனை நோக்கிக் கூறுகிறார்.அதாவது “அந்தணர் உன்னை ஆசீர்வதிக்கக் கையை உயர்த்துவதற்குமுன் அவர்களை வணங்குவதற்கு உன் தலை குனியட்டும்”என்பது இவ்வரிக்குப்பொருள்.இதனால் அந்தணர்களின் உயர்வு புலனாகிறது..பதிற்றுப்பத்து ஏழாம் பத்து மூன்றாம் பாடலில் “பார்ப்பார்க்கு அல்லது பணிபறி யிலையே” என்றுசொல்லப்படுகிறது.அதாவது மன்னன் பார்ப்பனர்களைத் தவிர வேறு யாரையும் வணங்குவதில்லை என்பது இவ்வரி சொல்லும் கருத்து.இதனால் மன்னரும் வணங்கும்படியான உயர்நிலையில் பார்ப்பனர்கள் இருந்தார்கள் என்பது புலப்படுகிறது. ஒரு மன்னன் தான் செய்த தவறுக்காக ஒரு பார்ப்பானின் காலில் விழுந்து வணங்கிய செய்தி சிலப்பதிகாரத்தில் கூறப்படுகிறது, சிலப்பதிகாரம் கட்டுரைக்காதையில் “கார்த்திகைக் கணவன் வார்த்திகன் முன்னர்,இருநில மடந்தைக்கு திருமார்பு நல்கியவள் தணியா வேட்கையும் சிறிது தணித்தனனே”என்று அந்த செய்தி கூறப்படுகிறது.அரசர்கள் யாரையும் தரையில் விழுந்து வணங்கமாட்டார்கள்.அப்படி வணங்குவது அரசர்களின் மரபன்று.அதனால் அவர்களின் உடல் தன்மீது படவில்லையே என்று ஏங்கிக்கொண்டிருந்தாளாம் பூமிதேவி.அரசன் அந்தணனை வணங்கும் போது பூமியில் விழுந்து வணங்கியதால் நிலமகளின் நீண்டநாள் ஆசை அந்தணனால் நிறைவேறியது என்று அழகாகக் குறிப்பிடுகிறார்இளங்கோவடிகள். இன்னோரிடத்தில் (காடுகாண் காதை) கவுந்தியடிகள் அரு அந்தணனைப்பார்த்து “நலம்புரி கொள்கை நான் மறையாள”என்று விளிப்பதாக சிலப்பதிகாரத்தில் வருகிறது.அதாவது “அடுத்தவர்க்கு நன்மை செய்வதையே கொள்கையாக உடைய அந்தணனே”என்பது இவ்வரிக்குப் பொருள்.கோவலன் கண்ணகியைப் பிரிந்து விட்டதால் கண்ணகியால் சில அறங்கள் செய்யமுடியாமற் போயிற்று என்பதை கூறுமிடத்து,”அறவோர்க்களித்தலும் அந்தணர் ஓம்பலும் துறவோர்க்கெதிர்தலும் தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை” என்றுகண்ணகி கூறுவதாக வருகிறது.இதனால் அந்தணரை அரவணைத்துப் பாதுகாப்பது தொன்மையான மரபு என்பதும் அதைப் பண்டைத்தமிழ் மக்கள் சிறப்பாகக் கடைப்பிடித்தனர் என்பதும் தெளிவாகிறது. புறநாநூறு-பாடல்-9-ல் “ஆவு மானியற் பார்ப்பான மாக்களும் பெண்டிரும் பிணியுடையீரும் பேணித் தென்புல வாழ்நர்க் கருங்கடனிறுக்கும் பொன்போற் புதல்வர் பெறாஅதீரும்…” என்று சொல்லப்படுகிறது. அதாவது இரண்டு மன்னர்களுக்குஇடையில் போர்மூளும் சூழல் உருவாகிறது.அச்சமயத்தில் அவர்களிள் ஒரு மன்னன் தன் நாட்டில் வாழும்,பசுக்கள்,அந்தணர்கள்,பெண்கள்,நோயாளிகள்,குழந்தையில்லாதவர்கள் இவர்களெல்லாம் போரால் பாதிக்கப்படக்கூடாது என்று கருதி இவர்களையெல்லாம் ஒரு பாதுகாப்பான இடத்தில் மாற்றிவைக்க நினைக்கிறான்.இதுதான் அப்பாடல் வரிகள் சொல்லும் கருத்து.இங்கு பார்ப்பனர்களைக் குறிப்பிடும்போது “ஆனியற் பார்ப்பன மாக்கள்” என்று சொல்வது குறிப்பிடத் தக்கது.அதாவது பார்ப்பனர்கள் பசுவின் குணத்தைப்போன்ற ஸாத்விக குணமுடையவர்கள் என்பதோடு பசு பால்வழங்குவதுபோல அவர்கள் சமூஹத்துக்கு ஞானத்தையும் பல நன்மைகளையும் வழங்குகிறார்கள் என்பதால்தான் “ஆனியற் பார்ப்பன மாக்கள்” என்று சொல்லப்பட்டது. பார்ப்பனர்களின் அவ்விதப்பண்பு கருதியே அரசன் அவர்களைப் பாதுகாக்கக் கருதினான் என்பது தெளிவாகிறது.கண்ணகி மதுரையை எரிக்க முற்படும்போது “பார்ப்பார் அறவோர் பசுப்பத்தினிப்பெண்டிர் மூத்தோர் குழவி எனுமிவரைக்கைவிட்டு தீத்திறத்தார் பக்கமே சேர்” என்று அக்னிபகவானுக்குக் கட்டளையிட்டாள் என்று சொல்லப்படுகிறது. அதாவது “பார்ப்பனர்கள்.துறவிகள்,பசு,கற்புள்ள பெண்கள், வயதானவர்கள், குழந்தைகள் இவர்களைத் தவிர தீயவர்களான மற்றவர்களை எரிப்பாயாக” என்பது இவ்வரிகள் சொல்லும் கருத்து. பார்ப்பனர்கள் பாதுகாக்கப் படவேண்டியவர்கள் என்பதை அக்காலத்தோர் உணர்ந்திருந்தனர் என்பதை இந்தச்செய்தி புலப்படுத்துவது குறிப்பிடத்தக்கது.  சங்க காலத்தில் பார்ப்பனர் உயர்ந்த இடத்தில் வைத்துப் போற்றப்பட்டனர் என்பதற்கும் பார்ப்பனர்கள் சிறந்த பண்பாளர்களாகவும் அன்புள்ளம் கொண்டவர்களாகவும் திகழ்ந்தார்கள் என்பதற்கும் இப்படி இன்னும் ஏராளமான உதாரணங்களை சங்க இலக்கியத்திலிருந்து என்னால் காட்டமுடியும்.நாக்கூசாமல் பார்ப்பனர்கள் சங்க காலத்தில் மதிப்புக்குரியவர்களாகக் கருதப்படவில்லை என்று தி.க. “புலவர்” சுபவீயார் கூறுவது பச்சைத்தனமான பார்ப்பன வெறுப்பின் வெளிப்பாடுதான். “இந்த சுபவீயார் தன் வயிற்றெரிச்சலை தீர்த்துக்கொள்ள வழியில்லாமல்“பார்ப்பான் என்ன பெரிய யோக்கியனா?”என்று ஒரு கேள்வியை யோசிக்காமல் கேட்கிறார்.  .சங்க இலக்கியம் முழுவதும் பார்ப்பனர்களை யோக்கியர்கள் என்றுதான் கூறுகின்றன.பார்ப்பான் சமூகத்தில் உயர்ந்தவனாகவும் பண்புள்ள யோக்கியனாகவும் பண்டுதொட்டு இருந்து வந்திருக்கிறான் என்பதற்குப் பல உதாரணங்களை சங்க இலக்கியங்களிலிருந்து எடுத்துக் காட்டியுள்ளேன்.இங்கு நான் காட்டிய உதாரணங்களைத்தவிர இன்னும் ஏராளமாக என்னால் காட்டமுடியும் என்பதை சுபவீயாருக்கு உணர்த்த விரும்புகிறேன்.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

பார்ப்பான் யார்?- நிறைவுப்பகுதி   

        தி.க.காரர்கள் மட்டுமல்லாது ஆன்மிக வாதிகள்  என்று அறியப்படும் சில தமிழ் “அறிஞர்களும்” பார்ப்பானின் உயர்வைப் பொறுத்துக்கொள்ளமுடியாத, பார்ப்பன வெறுப்பாளார்களாக இருக்கிறார்கள். அவர்களிடம் காணப்படும் இந்த வெறுப்பு உணர்வு தமிழ் இலக்கியம் தொடர்பான அவர்களின் கருத்துக்களில் பிரதிபலிப்பதை நாம் தெளிவாகக் காணமுடியும்.தொல்காப்பியம்-பொருளதிகாரம் கற்பியலில் “மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம் கீழோர்க் காகிய காலமும் உண்டே”என்று சூத்திரம். “உயர்ந்தவர்களான அந்தணர்,அரசர்,வணிகர் ஆகிய மூவர்க்கும் உரிய திருமணச்சடங்குகள் பின்பு கீழ்ப்பட்டவர்களான நான்காமவருக்கும் உரித்தான காலமும் இருந்தது” என்பதே இந்தச் சூத்திரத்துக்கு மரபு வழியிலான பொருள்.பார்ப்பன வெறுப்பாளர்களாக உள்ள தமிழ் ஆர்வலர்களுக்கு இப்[பொருள் பிடிக்காது. அதற்குக் காரணம் என்னவெனில் அந்தணர்,அரசர்.,வணிகர் மூவரையும் உயர்ந்தோர் என்று குறிப்பிட்டிருப்பதும் அதிலும் அந்தணரை முதன்மைச்சிறப்புடையவர்களாக முதலில் சொல்லியிருப்பதும்தான்.

      ஒரு பார்ப்பன வெறுப்பாளாரான ஒரு “தமிழறிஞர்”தொல்காப்பியத்துக்குத் தான் எழுதிய உரையில் இந்த சூத்திரத்துக்கு “சேர,சோழ,பாண்டியர் என்ற பேரரசர் மூவர்க்கும் உரிய வதுவைச்சடங்குகள் பின்பு மக்களுக்கும் ஆகிய காலமும் உண்டு” என்று உரைஎழுதியிருக்கிறார்.அந்தணர்,அரசர்,

வணிகர் என்பதற்கு பதிலாக இவர் சேர,சோழ,பாண்டியர் என்று உரை எழுதியிருப்பது இவரது பார்ப்பன வெறுப்புணர்வையே காட்டுகிறது.மேலும் மரபியலில் வரும் “பரிசில் பாடாண் திணைத்துறைக் கிழமைப் பெயர் நெடுந்தகை, செம்மல்,என்றிவை பிறவும் பொருந்தச் சொல்லுதல் அவர்க்குரித்தன்றே.” என்ற சூத்திரத்திற்கு “நெடுந்தகை,செம்மல் முதலிய அரசர்க்குரிய மரியாதைச்சொற்கள் அந்தணருக்கும் உண்டு” என்பதே மரபுவழியான பொருள். இதற்கு உரைசெய்த மேற்படி “தமிழறிஞர்” மரபுவழிப் பொருளைக்கொண்டால் அப்பொருள் அந்தணருக்குப் பெருமையாகிவிடுமே என்ற எண்ணத்தில், மேற்படி “அரசர்க்குரிய  மரியாதைச் சொற்களால் அந்தணரை அழைக்கக் கூடாது” என்று பொருள் எழுதியிருக்கிறார். “அன்றே” என்பது ஒரு அசைச்சொல் என்ற விஷயம்கூடத் தெரியாமல் அதற்கு “இல்லை” என்ற எதிர்மறைப் பொருள்கொண்டு உரை எழுதும் இவரது “தமிழறிவை” என்னென்றுரைப்பது! அதேநேரத்தில் மற்ற இடங்களில் வரும் இந்த “அன்றே” என்பதை அசைச்சொல்லாகவே கொண்டு பொருள் எழுதியிருக்கிறார். இதெல்லாம் எதைக் காட்டுகிறதென்றால் இவரது மனதில் நன்றாக ஊறியிருக்கும் பார்ப்பன வெறுப்புணர்வையே காட்டுகிறது. இந்த உரையாசிரியர் தமிழ் இலக்கியத்தில் “முனைவர்” பட்டம் பெற்றவராம்.இவரது மேற்பார்வையில் நாற்பதுக்கும் மேற்பட்டோர் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்களாம்.இவரது மேற்பார்வையில் முனைவர் பட்டம் பெற்றவர்களின் “ஆய்வறிவு” எந்த லட்சணத்தில் இருக்கும் என்பது சொல்லாமலே விளங்கும்.

  ஆன்முலை யறுத்த அறனிலோர்க்கும்

மாணிழை மகளிர் கருச்சிதைத்தோர்க்கும்

பார்ப்பார்த்தப்பிய கொடுமையோர்க்கும்

வழுவாய் மறுங்கிற் கழுவாயுமுளாவன

நிலம்புடைப் பெயர்வதாயினும் ஒருவன்

செய்தி கொன்றோர்க்குய்தி இல்லென

அறம்பாடிற்றே… என்ற வரிகள் புறநாநூறு 34-ஆம் பாடலில் உள்ளவை. “பசுவைக் கொல்லுதல். பெண்களின் கருச்சிதைத்தல்,பார்ப்பனரைக் கொல்லுதல் முதலிய கொடிய பாவங்கள் செய்தவர்களுக்குக் கூட கழுவாய் (பிராயிச்சித்தம்) உண்டு.ஆனால் செய்நன்றி கொன்றவர்களுக்கு எப்போதும் கழுவாயே கிடையாது” என்பது மேற்படி வரிகளின் கருத்து.இப்பாடலில் வரும் “பார்ப்பார்த்தப்பிய”என்பதை சில வருடங்களுக்கு முன்தான் சில பதிப்பாசிரியர்கள் “குரவர்த்தப்பிய”என்று மாற்றியிருக்கிறார்கள். “பார்ப்பார்த்தப்பிய” என்பது ஒரு குறிப்பிட்ட சமூஹத்தை மட்டும் குறிக்கும் சொல்லாக இருப்பதால், “பார்ப்பாரைக் கொல்வது பெரிய பாவம்” என்பது பார்ப்பனருக்குப் பெருமையாகிவிடும் என்று கருதித்தான் அரசர்,தந்தை,ஆசிரியர்,முதியவர் என்ற பொருள்கொண்ட “குரவர்” என்ற பொதுச்சொல்லை அவ்விடத்தில் நுழைத்தார்கள்.இதுவும் பார்ப்பன வெறுப்புணர்வால் செய்யப்பட்ட வேலைதான்.பரிமேலழகர் தனது திருக்குறள் உரையில் “எந்நன்றி கொன்றார்க்கும்” என்ற குறளுக்கு உரையிடும்போது மேற்படி புறநானூற்று வரியை மேற்கோள் காட்டுகிறார்.அவ்விடத்தில் அவர் “பார்ப்பார்த்தப்பிய” என்றே குறிப்பிட்டிருக்கிறார். சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம் என்ற பெயரில் பதிப்பகம் ஒன்று நம் நாட்டில் இருப்பது அனைவரும் அறிந்ததே.இப்பதிப்பகத்தார் தமிழ்நூல்களை    எல்லாம் பதிப்பித்திருக் கிறார்கள்.இப்பதிப்பகத்தார் பதிப்பித்த புறநாநூற்றுப் பதிப்பில் மேற்படி பாடலில் “குரவர்த்தப்பிய” என்றே காணப்படுகிறது.அவ்விடத்தில்,அடிக்குறிப்பில் இது “பார்ப்பார்த்தப்பிய”என்று பரிமேலழகர் காலத்திலேயே திருத்தப்பட்டுவிட்டது”.என்ற குறிப்புக் காணப்படுகிறது.எவ்வளவு சாமர்த்யம் பாருங்கள்.! பரிமேலழகரின் காலத்தில்தான் திருத்தப்பட்டது என்று இவர்கள் சொல்வதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை.பல மூலச்சுவடிகளை ஒப்பீடு செய்து ஆராய்ந்து பதிப்பிக்கப்பட்ட உ.வே.சா அவர்களின் பதிப்புகளிலெல்லாம் “பார்ப்பார்த்தப்பிய”என்றே காணப்படுகிறது.கா.நமச்சிவாய முதலியார் அவர்களின் தொல்காப்பியம்-இளம்பூரணர் உரை-பதிப்பில் உள்ள மேற்கோளில் “பார்ப்பார்த்தப்பிய” என்றே காணப்படுகிறது.சை.சி,நூ.ப.க வெளியிட்ட தொல்காப்பியப் பதிப்பில் உள்ள மேற்கோளில் “குரவர்த்தப்பிய”என்பதே அசல் பாடமென்றும் “பார்ப்பாத்தப்பிய”என்பது பாடபேதம் என்றும் குறிப்பிட்டிருகிறார்கள்.இதற்கிடையில் தி,க-வைச்சேர்ந்த “புலவர்கள்”, “குரவர்த்தப்பிய” என்பதை “பார்ப்பார்த்தப்பிய”என்று மாற்றியது பார்ப்பனரான உ.வே.சா தான் என்று கூறினார்கள்.பரிமேலழகரே “பார்ப்பார்த்தப்பிய” என்று குறிப்பிடிருக்கும்போது ஊ.வே.சாதான் அப்படி மாற்றினார் என்று கூறும் இந்த தி.க. “புலவர்கள்”கூறுவதில் என்ன அர்த்தம் உள்ளது?

          அதாவது ஓலைச்சுவடிகளின் ஆயுள் சுமார் 150-லிருந்து 200 வருடம் வரைதான்.அதனால் 150 வருடத்திற்கு ஒருமுறை பின் வருவோர் அவற்றை பிரதி எடுத்துவிடுவார்கள்..அந்த வகையில் பரிமேலழகர் காலம் வரை “பார்ப்பார்த்தப்பிய” என்ற பாடம் உள்ள சுவடிகளே இருந்திருக்கின்றன.அவருக்குப் பின்வந்த பார்ப்பான வெறுப்பாளர்கள் சிலர்தான் அவ்விடத்தில் “குரவர்த்தப்பிய”என்று மாற்றியிருக்கிறார்கள்.இவர்களே இந்த ஈனத்தனமான வேலையைச்செய்துவிட்டு இவர்கள் புகுத்திய புதியபாடமான “குரவர்த்தப்பிய”என்பதுதான் தொன்மையான பாடமாகவும் “பார்ப்பார்த்தப்பிய” என்ற தொன்மையான பாடத்தை பரிமேலழகர் காலத்தில் மாற்றப்பட்ட புதியபாடமாகவும் காண்பிப்பது பச்சைத்தனமான அயோக்யத்தனமில்லையா? இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் பார்ப்பன வெறுப்புதான்.பெரும்பாலும் சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகத்தில் பதிப்பிக்கும் ஆசிரியர்கள் அனைவரும் பார்ப்பன வெறுப்புணர்வு கொண்டவர்கள்தான்.அதனால்தான், தங்களின் எண்ணத்துக்குத்தக்கபடி மூலத்தில் உள்ள அசல் பாடங்களை மாற்றுவது, சில இடங்களுக்கு மரபு வழிப் பொருள்களைப் புறக்கணித்துவிட்டுத் தங்கள் எண்ணப்படி பொருள்கொள்வது என்ற ஈனச்செயல்களை எல்லாம் செய்கிறார்கள்.இங்கு நான் எடுத்துக்காட்டிய உதாரணங்கள் மிகக் குறைவு.ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறே பதம் என்பது போல் இங்கு நான் எடுத்துக்காட்டிய உதாரணங்களைக்கொண்டே தமிழ் இலக்கியங்கள் மீதான பார்ப்பன வெறுப்பாளர்களின் பார்வை எப்படிப்பட்டது என்பதைத்தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.

       இந்தத் தி.க.”புலவர்களும்” பார்ப்பன வெறுப்பாளர்களான தமிழ் ஆர்வலர்களும் தாங்கள் விரும்புகின்ற சமுதாய நிலைதான் சங்ககாலத்தில் இருந்தது என்று காட்டவேண்டும் என்பதற்காகவே தமிழ் இலக்கியங்களின் மீது தங்களின் எண்ணம் என்னும் வண்ணத்தைப் பூச நினைக்கிறார்கள்.அது என்றும் நடக்காத காரியம்.சங்க காலத்தில் ஜாதிவேறுபாடு, மனிதர்களுக்கிடையிலான உயர்வு, தாழ்வு இவையெல்லாம் இல்லை என்று இவர்கள் கூறுகிறார்கள்.இவர்களின் கூற்றுக்குச் சங்க இலக்கியத்தில் ஆதாரம் இல்லை.மாறாக உயர்வு தாழ்வு மனிதர்களுக்கிடையில் இருந்ததற்கான ஆதாரங்கள்தான் சங்க இலக்கியத்தில் கிடைக்கின்றன.தொல்காப்பியத்திலேயே மேலோர்,கீழோர் என்ற சொற்கள் இடம்பெறுகின்றன.சமுதாயத்தில் மனிதர்களுக்கிடையில் ஒவ்வொரு படிநிலைகளுக்குத்தக்கபடி உயர்வு,தாழ்வு இருந்திருக்கிறது என்பதைத்தான் இது காட்டுகிறது,புறநாநூறு-363-ஆம் பாடலில் சுடுகாட்டில் பிணம் சுடும் புலையனைக் குறிப்பிடுமிடத்தில் “இழிபிறப்பினோன்” என்றே சொல்லப்பட்டுள்ளது.அதாவது “இழிவான பிறப்பை உடையவன்” என்று பொருள்.இதைவைத்துப் பார்க்கின்றபோது சங்ககாலத்தில் பிறப்பின் அடிப்படையிலான ஜாதி வேறுபாடு கடுமையாகப் பின்பற்றப்பட்டிருக்கிறது என்பதுதான் தெளிவாகத் தெரிகிறது. அதனால் இந்தத் தி.க மற்றும் பார்ப்பன வெறுப்பாளர்களின் எண்ணத்திற்கு சங்க இலக்கியங்களில் இடமில்லை.சங்ககாலத்தில் அந்தணர்கள் பூணூல் அணிந்தும் குடுமிவைத்துக்கொண்டும்தான் இருந்திருக்கிறார்கள்.இவர்கள் இன்று செய்வதுபோல் பார்ப்பானின் பூணூலையும் குடுமியையும் சங்கத்தமிழர்கள் யாரும் அறுக்கவில்லை.ஒருமன்னனும் ஒரு அந்தணனும் சொக்கட்டான் விளையாடிகொண்டிருந்தபோது, விளையாட்டில் அவ்வந்தணன் தவறு செய்ததாக சந்தேகித்து சிறு கோபத்தால் அவ்வரசன் அந்த அந்தணனை சொக்கட்டான் காயால் அடித்துவிடுகிறான்.அப்போது அந்த அந்தணர் நடந்ததை அவ்வரசனுக்குப் புரியவைத்து “நின் முன்னோரெல்லாம் பார்ப்பார் நோவன செய்யலர் மற்றிது” என்று சொன்னார்.அதாவது “உன் முன்னோரெல்லாம் பார்ப்பார் மனம் நோகும் படியான காரியத்தைச் செய்யமாட்டார்கள்.உனக்கு இது ஏற்றசெயலா?”என்று அவ்வந்தணர் அவ்வரசனை நோக்கிக் கேட்கிறார்.உடனே அரசன் தன் தவறுக்கு வருந்தி நாணமுற்றான்.இச்செய்தி புறநாநூறு-43-ஆம் பாடலில் சொல்லப்படுகிறது.பார்ப்பனர்கள் மனம் நோகும்படியாகச் சங்கத்தமிழர் நடந்துகொண்டதில்லை என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.அதனால் பூணூல் அறுக்கும் கும்பலின் எண்ணங்களுக்கெல்லாம் சங்க இலக்கியத்தில் அணுவளவும் இடமில்லை.

      பார்ப்பனர்களை சங்கத்தமிழர்கள் போற்றியிருக்கிறார்கள், நேசித்திருக்கிறார்கள். வணங்கியிருக்கிறார்கள். பார்ப்பனர்களின் சொல்கேட்டுத் தங்களின் வாழ்க்கையைச் செம்மைப் படுத்திக்கொண்டிருக் கிறார்கள்.பார்ப்பான் சங்கத்தமிழரின் வாழ்வில் தவிர்க்க முடியாத ஒரு உறவாக மக்களோடு இணைந்து வாழ்ந்திருக்கிறான். பார்ப்பான் சங்கத் தமிழகத்தின் தொல்குடியாவான். இவை எல்லாம் சங்க இலக்கியங்களின் மூலம் நாம் அறிந்துகொள்ளும் செய்திகள். அதனால் பார்ப்பானை வெறுப்பவர்களோ பார்ப்பானுக்குத் தொந்தரவு கொடுப்பவர்க்ளோ பார்ப்பனை மதிக்காதவர்களோ பண்டைய சங்கத்தமிழனின் வாரிசுகள் அல்லர்.அவர்கள் எல்லாம் சங்கத்தமிழின விரோதிகள்தான்.

          சங்க இலக்கியங்களில் சொல்லப்பட்ட பார்ப்பானின் இவ்வளவு பெருமைகளையும் ஏற்றத்தையும் பொறுத்துக்கொள்ள முடியாமால், சொற்களுக்கு மரபு வழியை விலக்கித் தவறாகப் பொருள் கொள்வது, மூலத்தில் உள்ள அசல் பாடங்களை மாற்றுவது, தங்கள் எண்ணத்துக்கு இடையூறாக உள்ள இடங்களை இடைச்செறுகல் என்பது இம்மாதிரி ஈனத்தன்னமான காரியங்களை “ஆய்வு” என்ற பெயரில் செய்து உண்மையை மறைக்கப்பார்க்கிறார்கள் இவர்கள்.இவர்களின் இந்த ஈனத்தனமான இவ்வித ஆராய்ச்சிகளால் உண்மையை மறைக்கப்பார்ப்பது சூரியனை கைகொண்டு மறைப்பதற்கு ஒப்பாக்கும்.ஆகவே  தி.க.”புலவரான”சுபவீரபாண்டியனாருக்கு ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்:--உங்கள் கொள்கைகளான கடவுள் மறுப்பு,ஜாதி மறுப்பு,பார்ப்பன வெறுப்பு இவற்றுக்கெல்லாம் சங்க இலக்கியங்களில் அணுவளவும் இடம் இல்லை.அதனால்தான் உங்கள் ஆசான் ஈ.வே.ரா தமிழ் இலகியங்கள் அனைத்தையும் தலைமுழுகினார்.அதனால் நீங்களும் தேவையில்லாமால் சங்க இலக்கியங்கள் பற்றி ஆய்வு என்ற பெயரில் அபத்தக் கருத்துக்களை உதிர்த்துக்கொண்டிருக்காமல் உங்களின் தலைவர் வழியைப் பின்பற்றி சங்கத்தமிழ் இலக்கியங்களைத்தலை முழுகுவதுதான் உங்களுக்கு நல்லது..”பார்ப்பான் என்ன பெரிய யோக்கியனா? என்று கேட்கிறீர்கள்.பார்ப்பான் யோக்கியன்தான் என்பதை சங்க இலக்கியத்தின் மூலம் நிரூபித்திருக்கிறேன்.நீங்கள் பிறந்த நகரத்தார் குலம் அரிய அறச்செயல்கள் பல செய்தும் அந்தணரைப் போற்றியும் வாழ்ந்த பெருமை மிக்க குலம்.அக்குலத்தில் பிறந்த உங்களை இந்தக் கீழ்த்தரமான கொள்கை எப்படிப் பற்றிக்கொண்டது என்பதுதான் புரியவில்லை.

நிலத்தில் கிடந்தமை கால் காட்டும் காட்டும்

குலத்தில் பிறந்தார் வாய்ச்சொல்

என்ற குறள் உங்கள் விஷயத்தில் நினைவுக்கு வருகிறது.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard