திருவள்ளுவரின் உருவம் உருவானது எப்படி? இதுவரை எத்தனை உருவங்களில் அவர் வரையப்பட்டுள்ளார்?
முரளிதரன் காசி விஸ்வநாதன்
பிபிசி தமிழ்
6 நவம்பர் 2019
பட மூலாதாரம்,YOGESH_MORE / GETTY IMAGES
படக்குறிப்பு,
கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறை மீது அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை
திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்து பாரதிய ஜனதா கட்சியினர் வெளியிட்ட படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக வாழ்ந்ததாகக் கருதப்படும் திருவள்ளுவரின் உருவம் எப்படித் தோன்றியது?
பட மூலாதாரம்,BJP TAMILNADU TWITTER PAGE
படக்குறிப்பு,
தமிழ்நாடு பாஜக நவம்பர் 2 அன்று வெளியிட்ட, காவி உடையில் இருக்கும் திருவள்ளுவர் படம்.
தமிழ்நாடு அரசு அங்கீகரித்துள்ள திருவள்ளுவரின் உருவப்படத்தில் திருவள்ளுவர் வெள்ளை உடை அணிந்து அமர்ந்திருப்பதுபோல காட்சியளிக்கிறார். 1959வாக்கில் இந்தப் படம் வெளியிடப்பட்டு, பரவலான பிறகு, பெரிதும் இந்தப் படமே பயன்படுத்தப்பட்டுவருகிறது.
தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, இந்தப் படத்தையே அதிகாரபூர்வ படமாக பயன்படுத்த வேண்டுமென அரசாணைகளும் வெளியிடப்பட்டுவிட்டன. இதற்குப் பிறகு மிக அரிதாகவே, அந்தப் படத்திற்கு மாறுபட்ட திருவள்ளுவரின் படங்கள் வரையப்பட்டுள்ளன.
ஆனால், முதன் முதலில் திருவள்ளுவருக்கு உருவம் கொடுக்கப்பட்டது எப்படி?
பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்தே திருவள்ளுவருக்கு உருவம் கொடுக்கும் முயற்சிகள் துவங்கிவிட்டன.
அந்த காலகட்டத்தில் சென்னை மாகாணத்தின் ஆட்சியராக இருந்த பிரான்சிஸ் வைட் எல்லிஸ் திருவள்ளுவரின் உருவம் பொறித்த தங்க நாணயம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். இந்த நாணயத்தின் ஒரு புறம் திருவள்ளுவரின் உருவமும் மற்றொரு புறம் நட்சத்திரமும் பொறிக்கப்பட்டுள்ளது.
படக்குறிப்பு,
வேணுகோபால் சர்மா வரைந்து, அரசு அங்கீகரித்த திருவள்ளுவர் உருவப்படம்.
இந்த நாணயத்தில் திருவள்ளுவர் ஒரு சமண முனிவரைப் போல காட்சியளிக்கிறார். முகமும் தலையும் மழிக்கப்பட்டு, தலை மேல் குடையுடன் இந்த நாணயத்தில் காணப்படுகிறார் திருவள்ளுவர்.
இந்தத் திருவள்ளுவரை உருவகப்படுத்த, எந்த உருவத்தையும் எல்லிஸ் மாதிரிக்கு எடுத்துக்கொண்டதாகத் தெரியவில்லை. "இவரை உருவகப்படுத்தியவர்கள், இவரை ஒரு சமண முனிவர் என்று கருதியுள்ளார்கள் எனத் தெளிவாகத் தெரிகிறது. திருக்குறளில் 'ஆதி பகவன்', 'மலர்மிசை ஏகினான்', 'அறவாழி அந்தணன்' என்று வரும் சொல் தொடர்கள் வள்ளுவப் பெருமான் சமண சமயத்தினர் என்று கொள்வதற்கு வலுவான சான்றுகள் ஆகும்" என்கிறார் இது குறித்து எழுதியுள்ள கல்வெட்டு ஆய்வாளரான ஐராவதம் மகாதேவன்.
இதற்குப் பிறகு, 1904ல் இந்து தியாலாஜிகல் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்ப் பண்டிதராக இருந்த கோ. வடிவேலு செட்டியார் என்பவர், 'திருக்குறள் மூலமும் பரிமேலழகருரையும்' என்ற நூலை வெளியிட்டார். இரு பாகங்களாக வெளியான இந்தப் புத்தகத்தில் திருவள்ளுவரின் படம் 'திருவள்ளுவநாயனார்' என அச்சிடப்பட்டிருந்தது.
அதில் ஜடாமுடியுடனும் தாடி மீசையுடனும் மார்புக்குக் குறுக்காக யோகப் பட்டை எனப்படும் துண்டை அணிந்தபடியும் திருவள்ளுவர் காட்சியளித்தார். ஒரு கையில் சின் முத்திரையுடன் ஜெப மாலையும் மற்றொரு கையில் ஒரு ஓலைச் சுவடியும் இருந்தது. நெற்றியில் பட்டையும் நடுவில் குங்குமமும் இருந்தது.
ஏன் இப்படி ஜடாமுடியுடன் கூடிய உருவம் கொடுக்கப்பட்டது என்பதற்கு ஒரு விளக்கமும் இந்த நூலில் இருக்கிறது. 'நாயனார் சொரூபஸ்துதி' என்ற பாடலை அடிப்படையாக வைத்தே இந்த உருவம் திருவள்ளுவருக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
படக்குறிப்பு,
கோ. வடிவேலு செட்டியார் வெளியிட்ட நூலில் இருந்த திருவள்ளுவரின் உருவப்படம்.
இதற்குப் பிறகு இந்த நூலின் ஆங்கிலப் பதிப்பு வெளியானபோது, அதிலும் ஒரு திருவள்ளுவர் படம் கோட்டுச் சித்திரமாக இடம்பெற்றிருந்தது. அதில் திருவள்ளுவர் ஒரு சைவ சமய அடியாரைப் போல காட்சியளிக்கிறார்.
கரங்களிலும் நெற்றியிலும் விபூதிப் பட்டையுடன் காட்சியளிக்கும் இவர், ஒரு மரத்தடியில் அமர்ந்திருப்பதைப் போலவும் அவரை இரு அடியார்கள் தொழுவதும்போலவும் அந்தப் படம் இடம்பெற்றிருந்தது. இதனை சம்பந்தன் என்பவர் வரைந்திருந்தார்.
இதற்குப் பிறகு சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிட்ட நூல்களில் திருவள்ளுவர் படங்கள் ஏறக்குறைய இதே தோற்றத்தில் இடம்பெற்றிருந்தன.
படக்குறிப்பு,
திருக்குறள் ஆங்கிலப் பதிப்பில் இருந்த திருவள்ளுவரின் உருவப்படம்.
இந்தப் படங்கள் தமிழ்நாட்டில் பல வீடுகளில் வைத்து வணங்கப்பட்டன. வேறு பலரும் திருவள்ளுவர் படங்களை வெளியிட்டார்கள். அதில் பல படங்களில் யோகப் பட்டைக்குப் பதிலாக மார்பின் குறுக்கே பூணூலும் இடம்பெற்றிருந்தது.
1950களில் பாலு - சீனு என்ற சகோதரர்கள் கலை என்ற இதழை நடத்தினார்கள். அந்த இதழில் ஒரு திருவள்ளுவர் படம் இடம்பெற்றிருந்தது. அந்தப் படத்தில் திருவள்ளுவர் எந்த மதச் சின்னமும் இன்றி இருந்தார்.
"1950களின் பிற்பகுதியில்தான் நாம் இப்போது காணும் வெள்ளுடை தரித்த வள்ளுவரை வரைவதற்கான முயற்சிகள் துவங்கின. இந்த முயற்சியைத் துவங்கியவர் கவிஞர் பாரதிதாசன். அவர் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த ராமச்செல்வன் என்பவருடன் சேர்ந்துவந்து, ஓவியர் வேணுகோபால் சர்மாவைச் சந்தித்தார். மூன்று பேரும் சேர்ந்து திருவள்ளுவர் படத்தை உருவாக்கும் திட்டமிட்டனர். இதற்கான செலவுகளை ராமச்செல்வன் ஏற்றுகொண்டார்" என்கிறார் திராவிட இயக்க ஆய்வாளரான க. திருநாவுக்கரசு.
படக்குறிப்பு,
தான் வரைந்த திருவள்ளுவர் படத்துடன் கே.ஆர். வேணுகோபால் சர்மா.
சென்னைப் பல்கலைக்கழகத்தின் திருக்குறள் ஆராய்ச்சிப் பகுதி இந்தப் படம் வரையப்பட்டது குறித்து 'திருக்குறள் திருவுருவப் பட விளக்கம்' என்ற ஒரு சிறிய வெளியீட்டைக் கொண்டுவந்தது. தற்போதைய திருவள்ளுவரின் படத்தை அவர் ஏன் அப்படி வரைந்தார் என்பதற்கான விளக்கம் அந்த வெளியீட்டில் இடம்பெற்றிருந்தது.
திருவள்ளுவர் கருத்துலகில், சிந்தனை வானில் வாழ்ந்தவர் என்பதால் அவரைச் சுற்றி மரம், செடி, கொடிகள், வீடுகள் ஏதும் இல்லாமல் அவரைச் சுற்றி அறிவொளி மட்டும் இருக்கும்படி இந்த உருவம் உருவாக்கப்பட்டது. தன்னுடைய சிந்தனை, செயல், ஆடை ஆகியவற்றை அழுக்குத் தீண்டாமல் இருப்பதற்காக அவர் ஒரு சிறிய மரப் பலகை மீது இருப்பது போன்று அமைக்கப்பட்டது.
'தூய்மை நிறைந்த உள்ளம், தூய்மை நிறைந்த நோக்கு, தூய்மை நிறைந்த வாக்கு' ஆகியவற்றைக் கொண்டிருப்பதால் திருவள்ளுவர் அவருக்கு வெண்ணிற ஆடை உடுத்தப்பட்டதாக அந்த வெளியீட்டில் கூறுகிறார் வேணுகோபால் சர்மா.
பின்னால் வளர்க்கப்படும் குடுமியும் வெட்டப்பட்ட சிகையும் பல இனக் குழுக்களுக்கு அடையாளமாகிவிட்டதால், திருமுடியும் நீவப்படாத தாடியும் இருப்பதுபோல வரையப்பட்டது.
படக்குறிப்பு,
தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் 1952ல் வெளியிட்ட திருக்குறள் நூல் நயம் புத்தகத்தின் அட்டையில் திருவள்ளுவர்.
"இந்தப் படம் வரைந்து முடிக்கப்பட்ட பிறகு நாகேஸ்வரபுரத்தில் ஒரு வீட்டில் இந்தப் படத்தை வைத்தார் வேணுகோபால் சர்மா. காமராஜர், சி.என். அண்ணாதுரை, மு. கருணாநிதி, நெடுஞ்செழியன், எழுத்தாளர் கல்வி உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்களும் இந்தப் படத்தைப் பார்வையிட்டு பாராட்டிச் சென்றனர்.
பிறகு இந்தப் படம், 1960ல் சி.என். அண்ணாதுரையால் காங்கிரஸ் மைதானத்தில் இந்தப் படம் வெளியிடப்பட்டது. பிறகு இதே படம், மத்திய அரசால் தபால் தலையாகவும் வெளியிடப்பட்டது.
தி.மு.க. சட்டமன்றத்திற்குள் வந்த பிறகு, திருவள்ளுவர் உருவப் படத்தை சட்டமன்றத்தில் வைக்க வேண்டுமென மு. கருணாநிதி கோரிக்கை வைத்தார். "அதற்குப் பதிலளித்த முதல்வர் பக்தவத்சலம், மு. கருணாநிதி ஒரு உருவப்படத்தை வாங்கியளித்தால், வைப்பதில் ஆட்சேபணையில்லை" என்றார்.
படக்குறிப்பு,
1964 ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில் திருவள்ளுவரின் உருவத்தை திறந்து வைக்கிறார் குடியரசு துணைத் தலைவர் ஜாகிர் ஹுசைன். உடன் முதலமைச்சர் பக்தவத்சலம்.
இதற்குப் பின் 1964 ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில் வேணுகோபால் வரைந்த திருவள்ளுவரின் உருவத்தை அன்றைய துணைக் குடியரசுத் தலைவரான சாகிர் உசேன் திறந்து வைத்தார்" என்கிறார் திருநாவுக்கரசு.
இதற்குப் பின், மு. கருணாநிதி முதல் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே இந்தப் படம் அரசுப் பேருந்துகள் அனைத்திலும் இடம்பெறச் செய்யப்பட்டது. இந்தப் படமே அரசால் அங்கீகரிக்கப்பட்ட திருவள்ளுவர் படமாக அறிவிக்கப்பட்டு தமிழக அரசால் அரசாணையும் வெளியிடப்பட்டது.
இந்தப் படத்தின் அடிப்படையிலேயே சென்னை மையிலாப்பூரில் அமர்ந்த நிலையில் திருவள்ளுவரின் சிலை உருவாக்கப்பட்டது.
தமிழ் இலக்கியம்: திருவள்ளுவரை கிறிஸ்தவராக காட்டுவது ஏன்? தமிழ் ஆர்வலர்கள் முன்வைக்கும் பின்னணி
ஆ விஜயானந்த்
பிபிசி தமிழ்
8 நவம்பர் 2021
`கிறிஸ்தவராக இருந்துதான் திருவள்ளுவர், திருக்குறளை எழுதினார்' என நூலாசிரியர் ஒருவர் தெரிவித்துள்ள கருத்து தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ` வள்ளுவரின் காலம் என்பது கி.மு. 31 ஆக உள்ளது. கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே பிறந்த வள்ளுவர், எப்படி ஞானஸ்நானம் பெற்றிருப்பார்?' எனக் கேள்வியெழுப்புகின்றனர் தமிழ் ஆர்வலர்கள். சமய வட்டத்துக்குள் வள்ளுவரை அடைப்பது சரிதானா?
திருவள்ளுவர் கிறிஸ்தவரா?
`திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்' என்ற தலைப்பில் பேராசிரியர் தெய்வநாயகம் என்பவர் எழுதிய, நூல் வெளியீட்டு விழா ஒன்று கடந்த 5 ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், ``கிறிஸ்தவராக இருந்துதான் திருக்குறள் நூலை வள்ளுவர் எழுதியுள்ளதாக நூலாசிரியர் தெய்வநாயகம் எழுதியுள்ள கருத்து ஆய்வுக்குரியது" என்றார்.
நிகழ்ச்சியில் தொடர்ந்து பேசிய திருமாவளவன், ``திருவள்ளுவரை ஒவ்வொரு சமயத்தவரும் உரிமை கோருகின்றனர். ஆனால், மதமும் கடவுளும் வேண்டாம் என வாழ்கின்ற மனிதர்களின் எண்ணிக்கை பெருகி வருவதாக அண்மைக்கால ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. கிறிஸ்துவத்துக்கும் இஸ்லாத்துக்கும் எதிரான மத வெறுப்பு பிரசாரம் நடைபெற்று வருகிறது. சமூக நீதியை வென்றெடுப்பதற்கு திருக்குறளும் ஓர் ஆயுதமாக உள்ளது. கிறிஸ்தவர்கள் பைபிளை மட்டும் கையில் ஏந்தாமல் திருக்குறளையும் படிப்பதற்கு இந்த நூல் உந்துசக்தியாக இருக்கும்" என்றார்.
மதம் மாற்றுவது சரியா?
இதையடுத்து, `திருவள்ளுவர் கிறிஸ்தவரா?' என சமூக வலைதளங்களில் விவாதம் கிளம்பியது. `` திருவள்ளுவரை, திருவள்ளுவராக ஏற்றுக் கொள்வதில் என்ன சிக்கல் இருக்கிறது? ஒருபக்கம் வலதுசாரி சிந்தனை உள்ளவர்கள் அவரை `ஸ்ரீவள்ளுவன்' என்பதும் அவருக்கு காவி ஆடையை அணிவித்து மத சின்னங்களுக்குள் கொண்டு வருவதும் எப்படி தவறோ, அதைப் போலத்தான் இதுவும்" என்கிறார், காயிதே மில்லத் ஆடவர் கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர் முனைவர் ஹாஜாகனி.
தொடர்ந்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், `` திருவள்ளுவர் என்பவர் அனைவருக்குமான சொத்தாக இருக்கிறார். அதில் அனைவருக்கும் சமஉரிமை உள்ளது. பிறப்பினால் ஏற்றத்தாழ்வு கற்பிப்பதை இஸ்லாம் எதிர்க்கிறது. திருவள்ளுவரும் அதையே வலியுறுத்துகிறார். அதேபோல், கொல்லாமையை சமணம் வலியுறுத்துகிறது. அதுவும் திருக்குறளில் இருக்கிறது. அந்த வகையில், `ஒவ்வொரு சமயத்திலும் சொல்லப்பட்டுள்ள உயர்ந்த விழுமியங்கள் எல்லாம் திருக்குறளிலும் உள்ளது' எனக் கொண்டாடலாம். அதற்காக திருவள்ளுவரை மதம் மாற்ற வேண்டிய அவசியம் இல்லை.
பட மூலாதாரம்,GETTY IMAGES
தங்கள் மதத்தில் உள்ள விழுமியங்களை வள்ளுவர் கூறியிருக்கிறார் எனப் போற்றிக் கொண்டாடுவதே சிறப்பானது. முத்தமிழ்க் காவலர் என்று அழைக்கப்பட்ட கி.ஆ.பெ.விசுவநாதம் ஒன்றைச் சொல்வார், `எதுவெல்லாம் நம்மை இணைக்கிறது என்று சிந்திப்போம். எதுவெல்லாம் பிரிக்கிறதோ அதைக் கைவிடுவோம்' என்பார். வள்ளுவர் எந்த மதம் என்று கண்டுபிடிப்பதோ, அவர் ஞானஸ்நானம் பெற்றாரா அல்லது காவி அணிந்தாரா அல்லது அவர் மதுரையில் பிறந்தாரா... மயிலாப்பூரில் பிறந்தாரா என்பதற்கெல்லாம் எந்தவித ஆதாரங்களும் இல்லை.
மதீனா லாட்ஜும் வள்ளுவர் படமும்
திருவள்ளுவரின் உருவப்படம் என்பது பாரதிதாசனின் மேற்பார்வையில் ஓவியர் வேணுகோபால் சர்மா வரைந்தார். அதையும் மயிலாடுதுறையில் உள்ள மதீனா விடுதியில் தங்கித்தான் வரைந்தார். அதற்கு ஏராளமான வரலாற்று ஆதாரங்கள் உள்ளன. வேணுகோபால் சர்மாவின் மகன் ஸ்ரீராம் சர்மாவும் இதைக் கூறியுள்ளார். `மதீனா லாட்ஜில் பிறந்த வள்ளுவர்' என்றொரு கட்டுரையும் அவர் எழுதியுள்ளார். திருவள்ளுவர் எனச் சொல்வதற்கு ஒரு குறியீட்டை உருவாக்கினார்கள். அந்தக் குறியீட்டை அனைத்து சமூகத்தினரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றாக இருக்கிறது. அவரது படத்தை வரைந்த வேணுகோபால் சர்மா, பிறப்பால் பிராமணராக இருந்தாலும் எந்தச் சின்னங்களையும் அவர் வள்ளுவர் மேல் புகுத்தவில்லை" என்கிறார்.
``வள்ளுவரை சமய பேதமற்று அனைவரும் கொண்டாட வேண்டும். அவரை தங்கள் சமயத்துக்குட்பட்டவராக பார்ப்பது என்பது சரியான ஒன்றல்ல. காற்று, நீர், நிலம், நிலவு, சூரியன் ஆகியவை எப்படி அனைவருக்கும் பொதுவானதோ, அதைப்போல திருக்குறளின் விழுமியங்களும் அனைவருக்கும் பொதுவானது. அவரைக் குறிப்பிட்ட வட்டத்துக்குள் அடைப்பது தவறானது. இறை வணக்கத்தை இஸ்லாமியர்கள்தான் `தொழுகை' என்கின்றனர். `கற்றதனால் ஆய பயன் என்கொல்' குறளில் `நற்றார் தொழார் எனின்' என வள்ளுவர் சொல்கிறார். இதற்காக அவரை இஸ்லாமியர் எனக் கூற முடியுமா? எங்கள் சமயத்தில் உள்ள ஓர் உயர்ந்த கருத்தை வள்ளுவரும் கூறியுள்ளார் என்று வேண்டுமானால் கொண்டாடலாம்.
இயேசு கிறிஸ்து காலத்துக்கும் நபிகள் நாயகம் காலத்துக்கும் முற்பட்டவராக திருவள்ளுவர் இருக்கிறார். காலத்தில் அழியாத கருத்தையும் ஒரே கடவுள் என்ற கொள்கையையும் அவர் உரத்துப் பேசியுள்ளார். உலக வாழ்க்கைக்குப் பிறகு இன்மை, மறுமை போன்றவற்றை அவர் கூறியிருந்தாலும் ஆதித் தத்துவம் என்பது ஒன்றுதான். அந்த நற்செய்தியானது காலத்துக்குக் காலம் மாறுபடும்.
ஏற்கெனவே இருந்த காலத்துக்கு ஒவ்வாத கருத்துகளை மாற்றி எழுதியவர் அவர். ஓர் உயர்ந்த வாழ்க்கைக்குப் பாதை காட்டுகிற நூலை வள்ளுவர் அளித்துள்ளார். எந்த மதத்தையும் ஏற்றுக் கொள்ளாத பெரியார், திருவள்ளுவருக்கு மாநாடு நடத்தினார். நாத்திகர்களும் ஆத்திகர்களும் இணைந்து கொண்டாடக் கூடிய நூலாக வள்ளுவம் உள்ளது. அதனை மதத்துக்குள் திணிப்பது என்பது அவசியமற்றது" என்கிறார் முனைவர் ஹாஜாகனி.
படக்குறிப்பு,
தான் வரைந்த திருவள்ளுவர் படத்துடன் கே.ஆர். வேணுகோபால் சர்மா.
"46 ஆண்டுகளாக நடக்கும் வேலை இது"
அதேநேரம், திருவள்ளுவரை கிறிஸ்தவராக முன்னிறுத்தும் வேலைகள் எல்லாம் 46 ஆண்டு காலமாக நடப்பதாக பிபிசி தமிழிடம் தெரிவித்தார் புலவர் செந்தலை ந.கவுதமன். இவர் சூலூர் பாவேந்தர் பாரதிதாசன் பேரவையின் தலைவராக இருக்கிறார். `` வள்ளுவரை கிறிஸ்தவர் என்ற அடையாளத்துக்குள் கொண்டு வரும் வேலையை 1975 ஆம் ஆண்டிலேயே பேராசிரியர் தெய்வநாயகம் தொடங்கிவிட்டார். அப்போது அவர் தனியார் கல்லூரி ஒன்றில் பேராசியராக இருந்தார். `வள்ளுவர் என்பவர் கிறிஸ்தவர்' என்பதுதான் அவரின் ஆய்வேடாகவும் இருந்தது. அப்போது இருந்த பாதிரியார் ஒருவர், தெய்வநாயகத்துக்கு உதவியாக இருந்தார்" என்கிறார் கவுதமன்.
மேலும், `` வாயில் என்றொரு பத்திரிகையையும் தெய்வநாயகம் நடத்தினார். ஏறக்குறைய 46 ஆண்டுகளுக்கு முன்னால் செய்த பணியை இப்போதும் செய்து வருகிறார். என்னிடமும், `வள்ளுவர் கிறிஸ்தவர்' என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றைக் கேட்டார். `வள்ளுவரை வள்ளுவராகத்தான் காட்ட வேண்டும், உங்கள் விருப்பத்துக்காக எழுத முடியாது' எனக் கூறிவிட்டேன். அதன்பிறகு அவர் கல்லூரி பணியை விட்டுவிட்டு காவி உடையை அணிந்து கொண்டு `திராவிட சமயம்' என்றொரு அமைப்பை நடத்தினார்" என்கிறார்.
"வள்ளுவருக்கு மதம் இல்லை"
`` கன்னியாகுமரியில் வள்ளுவர் சிலைத் திறப்பு விழாவுக்கு வந்த அவர், `வள்ளுவர் கிறிஸ்தவர்' என்ற புத்தகத்தை விநியோகித்தார். அப்போது அவரிடம் தமிழ் ஆர்வலர்கள் கோபப்பட்டனர். நானோ, `அவரிடம் இந்த வேலையை யாரோ ஒப்படைத்துள்ளனர்' என்றேன். இதை ஒரு வேலையாக அவர் செய்து வருகிறார். ஜி.யு.போப்பும், `வள்ளுவரை கிறிஸ்தவர்' என எழுதியுள்ளார். ஜி.யு.போப்பின் மொழிபெயர்ப்பு கவித்துமானது என்பதால் இதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
சிலர் வள்ளுவருக்கு விபூதி அணிய முற்பட்டனர், சிலர் நாமம் போடப் பார்த்தனர். இவர்கள் சிலுவையை அணிய வைக்க முயல்கிறார்கள். வள்ளுவர் சமணர் என்பதை நிறுவுவதற்கு கணிசமானோர் முயற்சி மேற்கொண்டனர். `வள்ளுவருக்கு மதம் இல்லை' என பாரதிதாசன் பாட்டெழுதினார். வள்ளுவரின் காலமாக கி.மு. 31 உள்ளது. கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே பிறந்தவர் எப்படி ஞானஸ்நானம் பெற்றிருப்பார்? சொல்லப் போனால், இயேசு காலத்தில் கிறிஸ்தவம் என்ற மதம் உருவாகவில்லை. இயேசுவுக்குப் பிறகு 150 ஆண்டுகளுக்குப் பிறகு புனித ஜான் பால் என்பவர், மத நிறுவனமாக மாற்றினார். ஆகவே, தெய்வநாயகம் பேசுவதை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை" என்கிறார்.
'தினமும் நூற்றுக்கணக்கான மிரட்டல் அழைப்புகள்'
தமிழ் ஆர்வலர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக பேராசிரியர் தெய்வநாயகத்திடம் விளக்கம் பெறுவதற்காக பிபிசி தமிழ் சார்பில் பலமுறை தொடர்பு கொண்டோம். அவருக்கு குறுந்தகவல் அனுப்பியும் அவரிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை.
இந்நிலையில், கட்டுரை பிரசுரமான பிறகு பிபிசி தமிழை தொடர்பு கொண்டு பேசிய முனைவர் தெய்வநாயகம், `` தினமும் நூற்றுக்கணக்கான மிரட்டல் அழைப்புகள் வருகின்றன. அதனால்தான் யாருடைய செல்போன் அழைப்பையும் நான் எடுப்பதில்லை" என விளக்கம் அளித்தார்.
தொடர்ந்து பேசுகையில், `` திருவள்ளுவர் குறித்து எனது நூலில் என்ன தெரிவித்துள்ளேன் என்பதைப் பார்க்காமல் யூகத்தின் அடிப்படையிலேயே அனைவரும் பேசி வருகிறார்கள். அதிலும் வசைபாடுகிறவர்கள்தான் அதிகம் உள்ளனர். வள்ளுவரின் காலமாக கி.மு 31 எனக் குறிப்பிடுவதே ஒரு சதியாகத்தான் பார்க்கிறேன். திருக்குறள் என்பது சங்கம் மறுவிய காலத்தைச் சேர்ந்தது. அது பதினென்கீழ் கணக்கு நூல்களுள் ஒன்று. அந்த நூல்கள் எல்லாம் கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் இருந்துதான் தொடங்குகிறது. திருக்குறளை உலகளாவிய அளவில் கிறிஸ்தவர்கள்தான் பரப்பினார்கள். அதனால் கிறிஸ்தவர்களைக் காட்டக் கூடாது என்ற தீய எண்ணத்தில் கி.மு 31ஐ வள்ளுவர் காலமாக சிலர் பேசத் தொடங்கினார்கள்" என்கிறார்.
`` வள்ளுவரின் காலமாக குறிப்பிடப்படும் ஆண்டு தவறானது என்பதை காரண, காரியங்களுடன் விளக்கி தமிழ்நாடு முதல்வருக்குக் கடிதம் எழுதியுள்ளேன். மேலும், `திருவள்ளுவரை கிறிஸ்தவராக விவரித்து கட்டுரை கொடுங்கள்' என யாரிடமும் சென்று நான் கேட்கவில்லை. 1958 ஆம் ஆண்டில் `திருவள்ளுவர்- கிறிஸ்தவரா?' என்றொரு நூல் எழுதினேன். அதன் தொடர்ச்சியாக நடந்த ஆராய்ச்சியின் பலனாக இந்த நூலை எழுதியுள்ளேன். திருவள்ளுவர் என்பவர் ஞானஸ்நானம் பெற்ற ஒரு கிறிஸ்தவர் என்ற உண்மையை உணராமல் எழுதப்பட்ட உரைகள் அனைத்தும் தவறானவை என்பதையும் இந்த நூலில் நிரூபித்துள்ளேன்" என்கிறார் தெய்வநாயகம்.
மேலும், `` என்னை விமர்சிக்கிறவர்கள், நான் எழுதிய நூலைப் படித்துவிட்டுப் பேசட்டும்" என்கிறார்.