New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பௌத்தம் இந்தியாவில் தேய்ந்தது, வலுவிழந்தது ஏன்? (3)


Guru

Status: Offline
Posts: 24614
Date:
பௌத்தம் இந்தியாவில் தேய்ந்தது, வலுவிழந்தது ஏன்? (3)
Permalink  
 


பௌத்தம் இந்தியாவில் தேய்ந்தது, வலுவிழந்தது ஏன்? (3)

மே 10, 2017

பௌத்தம் இந்தியாவில் வலுவிழந்தது ஏன்? (3)

வேதபிரகாஷ்

 “ஆரம்ப காலங்களில் புத்தரை மையமாக வைத்துக் கொண்டு சந்நியாசிகளாக அலைந்து திரிந்த பிக்குகள், எவ்வாறு அவர்கள் ஒன்றுகூடி, ஆசிரமங்கள் அல்லது ஒரு இடத்தில் தங்கி வசிக்கும் நிலையில் மடங்கள் / பள்ளிகள் உருவாக்கி வாழ ஆரம்பித்தனர், இதுதானே பிறகு இஸ்லாமின் முதல் ஆண்டுகளில், முஸ்லீம் படையெடுப்புகளினால் அழிக்கப்பட்டு, இந்தியாவிலேயே பௌத்தத்திற்கு ஒரு நாசத்தைத் தேடித்தந்தது? இந்த வினாவிற்குத்தான் பாட்ரிக் ஓலிவெல் (Patrick  Polivelle) இந்த புத்தகத்தில் பதில் அளிக்கிறார்”, என்று ஆர். சி. ஜாஹ்னர் (R. C. Zaehner) என்ற ஆக்ஸ்ஃபார்ட் பல்கலைக்கழக பேராசிரியர் “பௌத்த மடங்கள் அமைப்பின் ஆரம்பம் மற்றும் வளர்ச்சி” என்ற நூலில் தமது முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.
R. C. Zaehner in his FOREWORD to “The origin and Early development of Buddhist Monachism”, M. D. Gunasena & Co. Ltd, Colombo, 1974, p.v.

Paharpur, Somapur, Bangladesh - Buddhist monastary-ruins-5

“அத்தகைய அலைந்து திரியும் வாழ்க்கை மழைகாலத்தில் முடியாது, ஆகையால் அத்தகைய சந்நியாசத்தை முறித்துக் கொள்வர் என்று எந்த தேரவாத பௌத்தத்தின் மாணவனுக்கும் தெரியும். ஆனால் அதுவே பிறகு எப்படி மடங்கள் / மடாலங்கள் ஒருவாகி அத்தகைய தங்கி வசிக்கும் வாழ்க்கையினை (Sedentary interlude) சந்நியாசிகளுக்கு ஏற்படுத்திக் கொடுத்தது, அத்தகைய “மடங்கள் / பள்ளிகளின் கலாச்சாரம்” உருவெடுத்தது” என்று பாட்ரிக் ஓலிவெல் விளக்குகிறார்.

“பரிவிராஜக” [பரி = சுற்று; வ்ராஜ = செல், திரி (சமஸ்கிருதம்); எல்லா திசைகளிலிலும் அலைந்து திரிந்து வாழும் சந்நியாசி] முறையானது முற்றும் துறந்த நிலையினைக் காட்டுகிறது. புத்தர் காட்டிய வழி அதுதான். ஆனால் நவீனகாலத்தில் அதன் அர்த்தத்தை / பொருளைத் தவறாக கொள்கின்றனர். உதாரணத்திற்கு அம்பேத்கரே, “புத்தர் ஒரு இறந்த மனிதன், நோயாளி மற்றும் ஒரு வயதானவன் முதலியோரைக் கண்டவுடன் “பரிவிராஜக”த்தை ஏற்றுக் கொண்டார் என்பது, அது அபத்தம் என்று பார்க்கும் போதே தெரிகிறது” என்று குறிப்பிடுகின்றார் (That Buddha took Parivraja after seeing a dead person, a sick person and an old person is absurd on the face of it).
B. R. Ambedkar, The Buddha and his Dhamma, Dr Babasaheb Ambedkar Writings and Speeches, Vol.11, Government of Maharastra, 1992, in introduction.

Buddha head - thailand

“பரிவிராஜக” சந்நியாச முறை முற்றும் துறந்த முறையாகும். தனக்கென்று எதையும் வைத்துக் கொள்ளக்கூடாது, இருக்கக்கூடாது. உலகில் எல்லா திசைகளிலிலும் செல்லும்போது, மக்களே அவர்களது தேவைகளை பூர்த்தி செய்வார்கள். அதாவது உணவு அளிப்பார்கள். இரவுகளில் மரங்கள் அடியில் தூங்கி, இயற்கையில் காலைக்கடன்களை முடித்துக் கொண்டு, பிறகு மறுபடியும் தமது பணிகளைத் தொடங்குவர். உடல், மனம், ஐம்புலன்கள் அனைத்தையும் அடக்கி அதற்கேற்ற முறையில் அடக்கத்துடன், பக்குவத்துடன், நெறிமுறைகளுடன் இருக்கும் துறவு நிலை.

மழைக்காலங்களில், சந்நியாசிகள் அவ்வாறு திரிய முடியாது என்பதனால், ஆசாட (ஜூன்-ஜூலை நடுவில்) மாதத்திலிருந்து நான்கு மாதங்கள் விலக்கு அளிக்கப்பட்டது. மேலும் சாலைகளும் சேறும், சகதியாக இருக்கும். இத்தகைய முறை ஜைனர்களிடமிருந்து பெறப்பட்டிருக்கலாம் எனத்தெரிகிறது. ஆனால், ஜைனர்கள் ஈரத்தைக்கூட மிதிக்கக்கூடாது, ஏனெனில் அதில் சில புழுக்கள், பூச்சிகள் மற்ற சிறிய உயிரினங்கள் இருக்கும் அவற்றை பாதிக்கக்கூடாது, கொல்லக்கூடாது என்ற முறையில் மேற்கொண்டனர். இது ஜைனர்களால் பஜ்ஜுஸான், பௌத்தர்களால் வஸ்ஸ (வருஸ = மழை) எனப்பட்டது.

Paharpur, Somapur, Bangladesh - Buddhist monastary

பௌத்தர்கள் அவ்வாறு தங்கி வாழும் சந்நியாச முறையை மூன்றாகக் கொண்டனர்: ஆவாஸா, ஆராம மற்றும் விஹார என்ற மூன்று வகை தங்கி வசிக்கும் சந்நியாசி நிலை வாழ்க்கைகள் ஏற்படுத்தப்படுகின்றன.

1. ஆவாஸா: ஆவாஸா = ஆ + வாஸா = வாசத்திற்கு உகந்தது அல்ல அதாவது வசிப்பதற்கு எற்றது இல்லை. அதாவது அவ்வாறு அமைக்கப் பட்ட இடங்கள் குறுகிய காலத்திற்கான, மழைக்காலத்தில் தங்குவதற்கேற்றவாறு அமைக்கப்பட்ட சிறிய ஓலைக்குடில்கள் ஆகும்.

2. ஆராம: சிறப்பான ஆவாஸா ஆராம எனப்படும், ஏனெனில் “ரம்” என்றால் வசதி, மகிழ்ச்சி, ஆனந்தம் என்று பொருள். ஆகவே இது சந்தோசம் அளிக்கும் ஒரு பூங்கா, தோட்டம் அல்லது தோப்பு ஆகும். அத்தகையவை பௌத்த பிக்குகளுக்கு அரசர்கள், தனவான்கள், வியாபாரிகளால் தானமாக அளிக்கப்பட்டன. அவர்களுக்கு வசதியாக சமைக்கும் இடம், கழிவறைகள் முதலியன இருக்கும். ஆகவே இவை வசதிகளுடன் ஓய்வெடுக்கும் இடங்களாக இருந்தன.

3. விஹார: விஹார என்பது அனைத்தையும் அடக்கியது அதாவது எல்லா வசதிகளையும் கொண்டது. அதில் “பரிவேன” என்பது ஒரு பிக்கு தூங்கும் அறை. விஹாரத்தில் பல “பரிவேன”ங்கள் இருக்கும். விஹார என்றால் சந்தோசமாக நடப்பது, உலவுவது என்பதாகும். ஆகவே, இந்த “விஹார” கட்டிடங்கள் மிகப் பெரிதாக அனத்து வசதிகளையும் கொண்டு இருக்கும்.

Paharpur, Somapur, Bangladesh - Buddhist monastary-ruins-2

சுல்லவக்க (VI,15.2) உரிமையை ஒரு இடத்திலிருந்து மறு இடத்திற்கு மாற்ற முடியாத பொருள்களை ஐந்து வகையாகப் பிரிக்கிறது:

1. ஆராம அல்லது “ஆராம”விற்கு அளிக்கப் பட்ட இடம்.
2. விஹார அல்லது “விஹார”த்திற்கு அளிக்கப் பட்ட இடம்.
3. உட்காரும் ஆசனங்கள், நாற்காலிகள், மெத்தைகள், விரிக்கும் படுக்கைகள் /
பாய்கள்.
4. தாமிர பாத்திரங்கள், தாமிரப் பெட்டிகள், தாமிர ஜாடிகள் / கருவிகள், கத்திகள்,கோடாளிகள், பெரிய கத்திகள், அரிவாள்
5. காட்டில் உபயோகப்படுத்தும் கயிறு, மூங்கில் கொம்பு, தடித்த நாணல், புற்கள், களிமண், மரப்பொருள்கள், மண்பாத்திரங்கள்

இதிலிலிருந்து, பிக்குகள் உபயோகப்படுத்திய பொருட்களைப் பற்றி அறியலாம். பிறகு, பிக்குகள் பல வேலைகளுக்குக் குறிப்பாக நியமித்தனர் என்பதிலிருந்து, மற்ற பொருட்வகைகள் பிக்குகளுக்கு கிடைத்ததும் தெரிய வருகிறது:

1. பாண்டகாரிக: பண்டகசாலையின் அதிகாரி
2. பட்டுதேஸக: பங்கிட்டு அளிக்கும் அதிகாரி
3. சீவரபாஜக: துணிககளை விநியோகிக்கும் அதிகாரி
4. யாகுபாஜிக: அரிசி கஞ்சியை விநியோகிக்கும் அதிகாரி
5. பலபாஜிக: பழங்களை விநியோகிக்கும் அதிகாரி
6. கஜ்ஜபாஜிக: திட உணவை விநியோகிக்கும் அதிகாரி
7. சேனாசனபன்னாபக: இடத்தை / அறைகளை அளிக்கும் அதிகாரி
8. வீவார-பதிக்காஹக: மக்களிடமிருந்து துணிகளை பெரும் அதிகாரி
9. சாதிய-காஹாபக: மேலாடைகள் / உள்ளாடைகள் / மழைக்கால ஆடைகள்
விநியோகிக்கும் அதிகாரி
10. பட்ட-காஹபக: உண்ண உணவை தருமமாக பெற அளிக்கப்படும் பிச்சா பாத்திரம்
விநியோகிக்கும் அதிகாரி
11. அப்பமட்டகவிசஜக: ஊசிகள், நூல், கத்தரி முதலியவற்றை விநியோகிக்கும்
அதிகாரி
12.ஆராமிகபேஸக: இடத்தை நிவகிக்க வேண்டிய பொருட்களை பெற கவனிக்குக்
அதிகாரி.
13.சாமனேர்பேஸக: புதிய பிக்குகளுக்கு வேண்டிய பொருட்களை விநியோகிக்கும் அதிகாரி
14. நவகாம்மிக: புதிய கட்டிடங்களை நிவகிக்கும் அதிகாரி.

இதிலிருந்து, எப்படி நிலையற்ற சந்நியாசம் நிலைகொண்டு, வசதிகளோடு வாழ
ஆரம்பித்தது என்பதனை அறியலாம்.
Chullavagga of Vinayapiitika (English translation), London, 1952

முதலில் மழைக்காக ஒதுங்கியவர்கள், ஒதுங்கிய இடங்கள் வசதிகளோடு மாற்றப்பட்டன. வசதிகள் பெருகியதும், பாதுகாப்பு குறித்து அச்சம் எழுந்தது. அதற்கான அதிகாரிகள் நியமிக்கப் பட்டனர். பிறகு பணமும் தானமாக வரத் தொடங்கியதும், இன்னும் பாதுகாப்பு எண்ணம் வளர்ந்தது. அச்சம் பெருகியது. விஹாரங்கள் செல்வசெழிப்பொடு இருக்க ஆரம்பித்தன. “மழைக்கால வாழ்க்கை”, முழுகாலவாழ்க்கையாக மாறியது.

Paharpur, Somapur, Bangladesh - Buddhist monastary-ruins-3

சங்கத்தில் அனுமதி என்பதும் மிகவும் கட்டுப்பாட்டுடன் இருந்தது, நடந்தது. “உபசம்பத” என்பது வெறும் “அனுமதி சடங்கு” அல்ல. “பப்பஜ்ஜ/ப்ரவிரஜ்ய” முறைக்கு அனுமதி பதினைந்து வருடங்கள் கழித்து அளிக்கப்ப்படும். ஒரு துறவி பத்து வருட அனுபவம், திறமை மற்றும் தகுதி இருந்தால்தான் “உபசம்பத” நிலை / பட்டம் அளிக்கப்படும். பிறகு “இபஜ்ஜய” / “ஆசார்ய” நிலையை அடையலாம்.

பிக்குகளின் நிலை / கட்டுபாடுகளில் சில:

1. பம்சுகுலிக: குப்பைகளிலிருந்து பொரிக்கி எடுத்தத் துணிகளைத் தைத்து
உருவாக்கப் பட்ட ஆடைகளை அணிவது.
2. தேசீவாரரக: ஒரே நேரத்தில் மூன்று ஆடைகளை மட்டும் வைத்திருக்கும் நிலை.
3. பிண்டபாதிக: பிச்சையெடுத்து உண்ணும் நிலை.
4. சபதான-சாரிக: ஒவ்வொறு வீடாக சென்று  பிச்சையெடுத்து உண்ணும் நிலை.
5. எகாசனிக: ஒரே வேளை உணவு உண்ணும் பிக்கு.
6. பட்டபிண்டக: ஒரு பிச்சைப் பாத்திரத்திலிருந்து மட்டு உண்ணும் பிக்கு.
7. கலுபச்சபட்டிக: காலந்தவறிய பிறகு உணவு மறுக்கும் பிக்கு.
8. ஆரண்யக: காட்டில் வாழும் பிக்கு.
9. ருக்கமுலிக: மரத்தடியில் இருக்கும் / வசிக்கும் நிலை.
10. அபோகாசிக: திறந்த வெளியில் இருக்கும் / வசிக்கும் நிலை.
11. சசானிக: மயானத்தில் இருக்கும் / வசிக்கும் நிலை.
12. யஹாசந்ததிக: இரவு பொழுது எந்த இடமாகிலும், அந்நிலை மறந்து தனது பாயை விரிக்கும் பிக்கு.
13. நேசஜ்ஜிக: உட்கார்ந்து கொண்டே தூங்கும் நிலை.

Patrick, Olivelle, Ascetics and Brahmins: Studies in Ideologies and Institutions, Florence: University of Florence Press, 2007.
Sukumar Dutt, Buddhist monks and monasteries of India: their history and their Contribution to Indian Culture, Motilal Banarasidas, New Delhi, 2008.

இத்தகைய கட்டுபாடுகள், மனம்-உடல் இவற்றை தமதிச்சைக்குள் வைத்திருக்க உதவியாக இருந்தது. ஆனால், கட்டுப்பாடுகள் தளர-தளர, பிக்குகள் வசதிகளால் வளர்ந்தனர். அறை, படுக்கை, தோட்டம் என வசதிகள் பெருகியதும், மனம்-உடல் கட்டுப்பாடுகள் தளர்ந்தன. சங்கம் சீரழிய ஆரம்பித்தது.

இதிலிருந்து, எப்படி புத்தரின் “பரிவிராஜக” கட்டுப்பாட்டுமுறை, படிபடியாக தேய்ந்து, மாறி, பல விலக்குகள் அளிக்கப்பட்டு, “மழைக்கால ஒழுங்குமுறை சந்நியாசம்” என்ற நிலை போய் வசதிகளுடன் வாழும் “விஹார” வாழ்க்கையானது என்று தெரிகிறது.

வேதபிரகாஷ்
16-09-2009

குறிப்பு: இத்தொடர் கட்டுரை 2009ல் மின் தமிழ் என்ற தளத்தில் வெளியிடப்பட்டது, விவாடிக்கப்பட்டது. ஆனால், சில காலத்திற்கு பிறகு, இக்குழுவினர் என்னை நீக்கி விட்டனர். இப்பொழுது, அதை அப்படியே கிடைக்கும் வரை, இங்கு மறு பதிவு செய்கிறேன்.

10-05-2017

புத்த பூர்ணிமா.

Paharpur, Somapur, Bangladesh - Buddhist monastary-ruins-4

 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard