New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: துக்ளக் இதழ் - சுஜாதா பேட்டி:


Guru

Status: Offline
Posts: 24811
Date:
துக்ளக் இதழ் - சுஜாதா பேட்டி:
Permalink  
 


எழுத்தாளர் சுஜாதா ரசிகருக்கு

👇🏾👇🏾👇🏾👇🏾👇🏾👇🏾👇🏾👇🏾

துக்ளக் இதழ் - சுஜாதா பேட்டி:  Visitor Ananth

ஏப்ரல் / மே 1979 ல் வந்த துக்ளக் இதழ் ஒன்றில் சுஜாதாவின் பேட்டி வந்தது.

​இந்தப் (துக்ளக்) பேட்டியை சோ எடுக்கவில்லை. எடுத்தவர் யார் என்ற தகவல் இல்லை.

​துக்ளக்​ : சுஜாதா என்ற புனைபெயரில் எழுதிவரும் திரு எஸ்​.​ ரெங்கராஜன் எலக்ட்ரானிக் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். அவரை பேட்டி கண்டபோது…..

துக்ளக் : நீங்கள் விரும்பிப் படிக்கிற எழுத்தாளர்கள் யார்?

சுஜாதா நான் விரும்பிப் படிக்கிற எழுத்தாளர்கள் பலர். ஒரே பெரிய பட்டியலையே தர முடியும். அவர்களது படைப்புகள் வெகுஜன பத்திரிக்கைகளில் அதிகம் வருவதில்லை. சிறு இலக்கியப் பத்திரிகைகளில் தான் வெளிவருகின்றன.

துக்ளக் : உங்களுடைய ரசனை அந்தத் தரமான இலக்கியத்தின் பக்கம் இருக்கும்போது உங்கள் படைப்புகளை அந்தத் தரம் பிரதிபலிக்கவில்லையே? துப்பறியும், மர்மக் கதைகளை தானே எழுதுகிறீர்கள்?

சுஜாதா: நான் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதி இருக்கிறேன். என்னுடைய சிறுகதைகள் தான் என்னுடைய உண்மையான திறமையை வெளிப்படுத்துகின்றன என்று நான் கருதுகிறேன். கல்கி, சுதேசமித்திரன் தீபாவளி மலர், ஆனந்த விகடன், தினமணிக்கதிர் போன்ற பத்திரிக்கைகளில் வெளிவந்த என் சிறுகதைகளில் பல தரமானவை என்று நினைக்கிறேன். பிரபல பத்திரிக்கைகளில் வெளியாகும் என்னுடைய தொடர் கதைகளின் உரைநடையில் புதுமைகளைச் செய்ய நான் முயற்சிக்கிறேன்.

துக்ளக் : ஆரம்பத்தில் உங்கள் எழுத ஆரம்பிக்கும்போது இருந்த உங்கள் மனோநிலைக்கும், எண்ணங்களுக்கும் இப்போது பலரும் அறிந்த எழுத்தாளராக உள்ள மனோநிலைக்கும் வித்தியாசம் ஏதாவது இருக்கிறதா?

சுஜாதா: வித்தியாசம் என்பதை எந்த அர்த்தத்தில் சொல்லுகிறீர்கள் என்று தெரியவில்லை... அதை முன்னேற்றம் என்றோ மாறுதல் என்றோ சொல்லலாம். நிச்சயமாக என் மனோநிலையில் குறிப்பிடத்தக்க மாறுதல் இருக்கிறது என்று நம்புகிறேன். நான் எவ்வளவு படிக்கிறேனோ அந்த அளவுக்கு எழுதிக் கொண்டிருக்கிறேன்.

துக்ளக் : இலக்கியம் என்றால் எப்படி இருக்க வேண்டும், அதன் தரத்தைப் பற்றி எல்லாம் நீங்களே கூட எழுதுகிறீர்கள், விமர்சனம் செய்கிறீர்கள். ஆனால் உங்களுக்கு அது மாதிரியெல்லாம் வாய்ப்பு இருந்தும் ஏன் எழுதவில்லை?

சுஜாதா: வெகுஜனப் பத்திரிகைகளில் எழுதுவதில் குறிப்பிட்ட வரையறைகள் இருக்கின்றன என்பது உங்களுக்கும் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். உதாரணத்திற்கு வெகுஜனப் பத்திரிக்கைகளில் எழுதும்போது ஜாதிப் பெயர்களை குறிப்பிடக் கூடாது என்ற நிலை இருந்து வருகிறது. பிராமண ஜாதியைச் தவிர மற்ற ஜாதியை பற்றி எழுதினால் எடுத்துவிடுகிறார்கள். ஜனங்கள் தாங்கள் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் சில வார்த்தைகளைக் கூட பயன்படுத்தக்கூடாது என்கிறார்கள். இதுபோன்ற எல்லைகளுக்குட்பட்டுதான் வெகுஜனப் பத்திரிகையில் எழுத முடிகிற நிலை இருந்து வருகிறது. சாதாரணமாக வெளியே தாங்கள் பயன்படுத்தும் திட்டுகிற வார்த்தைகளை கதைகளில் பயன்படுத்தக்கூடாது என்றெல்லாம் கூட பல வரையறைகள் இருக்கின்றன. சமீபத்தில் நான் எழுதிய தொடர்கதை ஒன்றில் ஒரு மந்திரி பிரஸ்காரர்களை கூட்டி தன் கட்சியினர் பேசும் பாணியிலேயே பேசுவதாகச் சித்தரித்து மூன்று பக்கங்கள் வரை எழுதி இருந்தேன். அதை அந்த பத்திரிக்கையின் ஆசிரியர் நீக்கிவிட்டார். கொஞ்சம் யதார்த்தமாக எழுதினாலே அதை எடிட் செய்து விடுகிறார்கள். இந்த மாதிரியான நிலையில், எனக்கு பிரபலம் இருந்தாலும் கூட நான் நினைப்பதையெல்லாம் பிரபல பத்திரிக்கைகளில் எழுத முடிவதில்லை.

துக்ளக் : அப்படியிருக்கும்போது உங்கள் பெயருக்கு இருக்கிற பிரபலத்தை வைத்து தனி புத்தகங்கள் எழுதலாமே?

சுஜாதா: பிரபல பத்திரிக்கைகளில் வெளிப்படையாக கிடைக்கிற பேரும் புகழும் தனிப் புத்தகங்கள் மூலம் கிடைக்காது.

துக்ளக் : உங்களுக்கு இலக்கிய மரபில் நம்பிக்கை இருக்கிறதா?

சுஜாதா: மரபில் எனக்கு நம்பிக்கை இல்லை. இப்போது எழுதப்படுகிற இலக்கியம் இரண்டு வகைகளாகப் பிரிக்கிறது. ‘ சிவப்பு இலக்கியம்’ என்கிற கம்யூனிச அடிப்படையை வலியுறுத்துவது ஒன்றாகவும், 'எக்சிஸ்டென்ஷியலிசம்' அடிப்படையாகக் கொண்ட பிரிவாகவும் பிரிகின்றன. இந்த இரண்டு பிரிவினரிடையே தான் தமிழின் தரமான படைப்புகள் எழுதப்படுகின்றன. இதுபோன்ற படைப்புகள் துரதிர்ஷ்டவசமாக சிறுபத்திரிகைகளில் தான் வெளியிடப்படுகின்றன. அவர்கள் சமரசம் செய்துகொள்ள விரும்புவதில்லை. அவர்களிடம் ஒரு பிடிவாதம் இருக்கிறது. அவர்கள் எல்லாம் வெகுஜனப் பத்திரிகைகளிலும் எழுத வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

துக்ளக் : சிலர் இப்படி சமரசம் (compromise) செய்து கொண்டு தானே எழுதுகிறார்கள்?

சுஜாதா: சமரசம் ஆகி விடுவது என்பது எந்த அளவுக்கு என்று இருக்கிறது. பத்திரிக்கைக்காரர்கள் விரும்புவதை தருவது என்று ஆகிவிடக்கூடாது. உதாரணமாக நான் லாண்டரி கணக்கு எழுதினால் கூட அதை பிரசுரித்து விட தயாராக இருக்கிறார்கள். அதில் ஏதோ இருக்கிறது; புதுமையாக எழுதி இருக்கிறார் என்று நினைத்து பிரசுரித்து விட நினைக்கும் நிலை இங்கு இருக்கிறது.

துக்ளக் : ஸ்ரீரங்கம் எஸ் ஆர், ரங்கராஜன் என்ற பெயர்களில் நீங்கள் எழுதி வந்தீர்கள். அந்தப் பெயர்களில் நீங்கள் எழுதிய போது ஏன் அவ்வளவு பிரபலமாகவில்லை?

சுஜாதா: அந்தப் பெயரில் இருந்த பிராமணத் தன்மையினாலோ என்னவோ? ஒருவேளை அந்தப் பெயரை பார்த்துவிட்டு இவர் வயதான ஆள் என்று நினைத்துவிட்டார்களோ என்னவோ?

துக்ளக் : திடீரென்று ‘ சுஜாதா’ என்ற பெண் பெயருக்குள் ஒளிந்து கொண்டது ஏன்? உங்களுக்கு சொந்தப் பெயரிலேயே எழுதும் தைரியம், தன்னம்பிக்கை இல்லையா?

சுஜாதா: ஒளிந்து கொண்டிருக்கிறேன் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ‘ சாகே’ என்ற பெயரில் ஒரு வெளிநாட்டு எழுத்தாளர் எழுதினார். ‘ சாகே’ என்றாள் மது ஊற்றி தருகிற பெண் என்று அர்த்தம். புனைப்பெயரில் செக்ஸ் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ‘ கரிச்சான் குஞ்சு’ என்றுகூட புனைபெயர் இருக்கிறது.

துக்ளக் : நீங்கள் அந்த மாதிரி நினைத்து இந்த புனைப்பெயரில் எழுதவில்லை என்று கருதுகிறேன்?

சுஜாதா: இல்லை. அந்த மாதிரி நினைத்து தான் இந்தப் பெயரில் எழுதுகிறேன். அதுபோல ஒளிந்து கொள்ள விரும்பியிருந்தால் என் படங்களை பிரசுரிக்க வேண்டியதில்லை.

துக்ளக் : ‘நைலான் கயிறு’ எழுதும்போது நீங்கள் ஒரு ஆண் என்று எவ்வளவு பேருக்குத் தெரியும்?

சுஜாதா: இதுபோல பலருக்கு சந்தேகம் வந்தது. எனவேதான் 1969 யிலேயே என் போட்டோ பிரசுரிக்கப்பட்டு விட்டது. குமுதத்தில் ரங்கராஜன் என்ற பெயரில் எழுதி வந்த போது அங்கே ஏற்கனவே இருந்த ரா கி ரங்கராஜன் பெயரும், என் பெயரும் வாசகர்களைக் குழப்புகிறது என்று சொன்னார்கள். அதற்குப்பின் தான் ‘ சுஜாதா’ என்று வைத்துக்கொண்டேன். நான் பெண் பெயரில் ஒளியவும் இல்லை செக்ஸுக்காக இந்தப் பெயரை பயன்படுத்தவும் இல்லை. மேலும் நான் ஒழுங்காக வருமான வரி கட்டி வருகிறேன்.

துக்ளக் : சுஜாதா என்ற பெயருக்கும், உங்களுக்கும் என்ன சம்பந்தம்?

சுஜாதா: அது என் மனைவியின் பெயர்

துக்ளக் : எழுத்தாளராகிய சுஜாதா நடிகை சுஜாதாவை பேட்டி ​(குமுதம் பத்திரிக்கையில் வந்தது) ​ கண்டதை ஒரு சாதனை என்று கருதுகிறீர்களா?

சுஜாதா: இல்லை. அது ஒரு பப்ளிசிட்டி ஸ்டண்ட் தான். அந்தப் பத்திரிக்கையின் சர்குலேஷனுக்குப் பயன்படும் என்று அந்த பத்திரிக்கை ஆசிரியர் கருதியிருக்கலாம்

துக்ளக் :அப்படி என்றால் நீங்கள் சமரசம் செய்திருக்கிறீர்கள் என்று தானே அர்த்தம் ?

சுஜாதா: கிடையவே கிடையாது

துக்ளக் : இல்லை. காம்ப்ரமைஸ் தான்.

சுஜாதா: நீங்கள் ‘ எழுத்து என்பது ஒரு தவம்,’ 'எழுத்து என் மூச்சு’ என்கிறது போல பார்க்கிறீர்கள். எழுத்தை நான் ஒரு Craft ஆகத் தான் பார்க்கிறேன். மொழியை விஞ்ஞான பூர்வமான ஒன்று என்றுதான் நான் நினைக்கிறேன். மொழியை கலையாகத்தான் நான் பயன்படுத்துகிறேன்.

துக்ளக் : அப்படி என்றால் பரத நாட்டியமும், ரெக்கார்ட் டான்ஸும் ஒன்றா?

சுஜாதா: நான் அப்படிச் சொல்லவில்லை. பரபரப்புக்காக பத்திரிக்கைகளில் இதுபோல ஏதாவது ஸ்டன்ட் அடிப்பார்கள். அவ்வளவுதான்

துக்ளக் : பெண் பெயரில் எழுதுகிற நீங்கள், பெண்களைப் பற்றி நிறைய வர்ணிப்பதால் தான் உங்களுக்கு மவுசு ஏற்படுகிறது என்கிறேன்?

சுஜாதா: அப்படி இல்லை. ‘ சுஜாதா’ என்பவர் பெண் அல்ல என்று எல்லோருக்கும் தெரிந்ததுதான். ரயிலில் பார்த்து அடையாளம் கண்டு கொள்கிற அளவுக்கு எனது முகம் - சுஜாதா என்பவர் யார் என்பது - எல்லோருக்கும் தெரிகிறது.

துக்ளக் : எழுத்தில் உங்களுடைய சாதனைகள் என்ன?

சுஜாதா: நீங்கள் பேட்டி காணுகின்ற அளவுக்கு நான் வளர்ந்து இருப்பதே ஒரு சாதனை தானே?

துக்ளக் : உங்கள் சாதனைகளை குறித்து நீங்கள் பெருமை படுகிறீர்களா?

சுஜாதா: சில கதைகளை குறித்து நான் பெருமைப்படுகிறேன். ‘ கரையெல்லாம் செண்பகப்பூ’ கதையில் நான் ஏராளமான உத்திகளைக் கையாண்டிருக்கிறேன். அதற்காக நாட்டுப் பாடல்களைப் பற்றி நிறையப் படித்தேன். அவற்றை ஆய்வு செய்து அந்தத் தொடரில் பயன்படுத்தினேன்.

துக்ளக் : சிறுகதைகளில் தான் உங்கள் திறமை பூரணமாக வெளிப்படுகிறது என்று நம்புகிறேன். இப்படி இருக்கும் போது தொடர் கதைகள் ஏன் அதிகமாக எழுத வேண்டும்?

சுஜாதா: சிறுகதைகள் நானாக எழுதுவது. தொடர் கதைகள் அவர்களுக்காக அவர்கள் கேட்டு எழுதுவது.

துக்ளக் : உங்கள் தமிழ் நடை படிப்பதற்கு அழகாக இருக்கிறது. அதற்கு ஒரு வரவேற்பும் இருக்கிறது. அப்படி இருக்கும்போது இந்த நடையை இதுபோன்ற செக்ஸ், கிரைம் திரில்லர் கதைகளை எழுதப் பயன்படுத்துவது ஏன்?

சுஜாதா: நீங்கள் நான் எழுதிய நல்ல படைப்புகள் பக்கமே பார்க்க மாட்டேன் என்கிறீர்கள். ‘ரோஜா’ என்று ஒரு சிறுகதை எழுதி இருக்கிறேன். அதைப் படியுங்கள். ‘ நகரம்’ என்று ஒரு சிறுகதை ஆஸ்பத்திரியில் நடப்பதாக எழுதியிருக்கிறேன். அதைப் படியுங்கள் அந்தக் கதை வந்த பிறகு அந்த ஆஸ்பத்திரி டீன் எனக்கு கடிதம் எழுதி விசாரித்தார். நான் மட்டுமே எழுதிவிடவில்லை. நல்ல படைப்புகளை தருவதற்கு சிறுகதைகளில் முயற்சிக்கிறேன்.

துக்ளக் : உங்களுக்கு ஒரு demand இருக்கிறது. இந்த demand ஐப் பயன்படுத்தி நீங்கள் சிறந்தவற்றை தரலாமே?

சுஜாதா: ‘கரையெல்லாம் செண்பகப்பூ’ போல நானும் சிறந்த படைப்புகளை தராமல் இல்லை.

துக்ளக் : ஆமாம் அதேசமயம் சில மாத புத்தகங்களில் வரும் உங்களுடைய பெரும்பாலான படைப்புகள் தரமாக இல்லையே?

சுஜாதா: அதற்குரிய வாசகர்களை நீங்கள் கவனிக்க வேண்டும். பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டு பத்திரிக்கை எட்டாக மறைத்து வைத்துக் கொண்டு படிக்கிற வாசகர்களுக்கு நான் எப்படி சாகாத இலக்கியம் மணக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? நல்ல படைப்புகளை நான் விரும்புகிற மாதிரி எழுதும் படைப்புகளை சிறுபத்திரிகைகளில் தான் நான் எழுத முடியும்.

துக்ளக் : நீங்கள் உங்கள் படைப்புகளுக்கு என்னதான் நியாயம் கற்பிக்க பார்த்தாலும், அந்தக் காலத்தில் மேதாவி, சிரஞ்சீவி போன்றவர்கள் எழுதிய துப்பறியும் கதைகளை தானே நீங்களும் தருகிறீர்கள்.

சுஜாதா: ஆமாம். அதையே கொஞ்சம் புத்திசாலித்தனமாக எழுதுகிறேன்

துக்ளக் : இதனால் என்ன பிரயோஜனம்?

சுஜாதா: நான் உரைநடையை அது ஒரு craft என்கிற அளவில் தொடர்ந்து பரிட்சை செய்து பார்க்கிறேன். நான் ஏற்கனவே சொன்னபடி க்ரைம் திரில்லர்ஸ் மட்டும் எழுதுவதில்லை. எனக்கு கவிதையின் அளவுகடந்த ஈடுபாடு உண்டு. கவிதைகள் நிறைய எழுதியிருக்கிறேன். குறிப்பிடத்தகுந்த சில சிறுகதைகள் எழுதி இருக்கிறேன்.

துக்ளக் : அப்படி என்றால் நீங்கள் பாம்புக்கு வாலுமாக, மீனுக்குத் தலையுமாக இருக்கிறீர்கள்?

சுஜாதா: இதுபோல இருந்தால் தான் வசதி என்று நினைக்கிறேன்.

துக்ளக் : உங்கள் கதைகளில் எல்லாம் ஆங்கில நாவல்களின் பாதிப்பு அதிகம் காணப்படுகிறதே ?

சுஜாதா: ஆமாம் பாதிப்பு இருக்கத்தான் செய்கிறது. பாதிப்பு இருப்பது தப்பு என்று நினைக்கிறீர்களா?

துக்ளக் : இல்லை. ஆங்கில எழுத்தாளர்களின் நடையை அப்படியே காப்பியடிக்கிறீர்கள் என்று சொல்லலாம் இல்லையா?

சுஜாதா: இந்த மாதிரி நாவல்கள் எழுதுவதற்கு அவர்களை எல்லாம் காப்பியடிக்கவேண்டிய அவசியமில்லை. அப்படி காப்பியடித்து எழுதினால் நான் சுலபமாக கண்டுபிடிக்கப்பட்டு விடுவேன். கதை சொல்லும் உத்தியில்தான் நீங்கள் இதுபோன்ற பாதிப்பை பார்த்திருக்க முடியும்.

துக்ளக் : தொடர்கதையை ஆரம்பிக்கும்போது நன்றாக ஆரம்பம் செய்கிறீர்கள். ஆனால் முடிவை ஏதோ மாதிரி திடீரென்று முடித்து விடுகிறீர்கள். இதற்கு தனிப்பட்ட காரணம் ஏதாவது உண்டா?

சுஜாதா: சாதாரணமாக தொடர்கதைகளை இத்தனை இதழ்களுக்கு என்று முடிவு செய்து கொண்டுதான் எழுத ஆரம்பிக்கிறேன். மர்மக் கதைகள் அவ்வளவு பயனுள்ள விஷயம் அல்ல. அதனால் சொன்ன கதையை திருப்பிச் சொல்லுவதில் அலுத்து விடுகிறது. மரத்துவிடுகிறது இவர் இன்னமும் எழுத மாட்டாரா என்று எண்ணிக்கொண்டிருக்கும் போதே நிறுத்தி விடுவது தான் நல்லது. என்னுடைய வெற்றிக்கு அதுவே கூட ரகசியமாக இருக்கலாம்.

துக்ளக் : அதனால் வாசகர்கள் ஏமாற்றம் அடைய மாட்டார்களா?

சுஜாதா: ஏமாந்து விட்டு அடுத்த தடவை வருகிறார்களே?

துக்ளக் : உங்களுடைய படைப்புகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தால் அதில் இந்தியத்தன்மை இருக்குமா?

சுஜாதா: நீங்கள் கருதுகிற மாதிரி அதில் இந்தியத் தன்மை ஓரளவுக்கு குறைந்துதான் காணப்படும்.

துக்ளக் : சினிமாவுக்குப் போன உங்கள் கதைகள் பல சரியான வரவேற்பு பெறாததற்குக் காரணம் உங்கள் கதைகளில் அழுத்தம் இல்லாததுதானே?

சுஜாதா: நீங்கள் சொல்வது போல எதுவும் பெரிய அளவில் தோல்வி அடையவில்லை. இதுவரை காயத்ரி, ப்ரியா, அனிதா இளம் மனைவி ( இது எப்படி இருக்கு) ஆகிய படங்கள் வெளிவந்துள்ளன, இதில் காயத்ரி மற்றும் ப்ரியா நல்ல வெற்றியைப் பெற்றுள்ளன. இன்னும் படங்கள் வரவிருக்கின்றன. அவைகளையும் பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்.

​(பேட்டி எடுத்தவர் மிகவும் முயற்சி செய்து சுஜாதாவைத் தூண்டிவிடுகிற மாதிரி விஷமத்தனமாகக் கேள்விகள் கேட்டும் சுஜாதா வலையில் சிக்காது திறமையாக பதிலளித்த விதம் அற்புதம். நீங்க நிக்கிறீங்க !!)​.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard