ஆதி பகவன் முதற்றே உலகு, இறைவனிடம் இவ்வுலகம் தொடங்குகிறது, என முழுமுதற் கடவுளை வாழ்த்தியபடி தான் குறள் அமைந்துள்ளது.
பிறவிப் பெருங் கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடி சேராதார் (அதிகாரம்:கடவுள் வாழ்த்து குறள் ௰)
இறைவனுடைய திருவடிகளைப் பற்றி இணைந்தவர் மீண்டும் மீண்டும் பிறந்து வாழும் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும்; மற்றவர் கடக்க முடியாது. பிறவிப் பெருங் கடல் என்பது மீண்டும் மீண்டும் பிறந்து வாழும் வாழ்க்கையை குறிப்பது என்ற தமிழர் மரபினை, ஏற்க பல அன்னிய மதவாத நுகர்ச்சி வழியின் தாக்கத்தால் சிலர் மறுக்கின்றனர்.
திருக்குறளை வள்ளுவர் மனம் அறிந்து வள்ளுவர் உள்ளத்தின் நோக்கில் நாம் பொருள் கொள்ள வேண்டும்.
நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்துஇவ் வுலகு. குறள் 336: நிலையாமை மணக்குடவர் உரை: ஒருவன் நேற்றுளனாயிருந்தான், இன்றில்லையாயினா னென்று சொல்லும் பெருமையை இவ்வுலகம் உடைத்து. இது யாக்கை நிலையாமை கூறிற்று.
உறங்கு வதுபோலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு (அதிகாரம்:நிலையாமை குறள் எண்:339) மணக்குடவர் உரை: உறங்குவதனோடு ஒக்கும் சாக்காடு: உறங்கி விழிப்பதனோடு ஒக்கும் பிறப்பு. இது போன உயிர் மீண்டும் பிறக்கு மென்பதூஉம், இறத்தலும் பிறத்தலும் உறங்குதலும் விழித்தலும் போல மாறிவருமென்பதூஉம் கூறிற்று. உயிர்கள் சாவதும் பிறப்பதும் தூங்குவது-விழிப்பது போன்று இயல்பான நிகழ்வுகள் உயிர்கள் தூங்காமல் இருக்க முடிவதில்லை. உறங்கச் செல்லும் உயிர்கள் தூங்கிக்கொண்டே இருப்பதில்லை. அதுபோலவே உயிர்களுக்கு இவ்வுலகில் இறத்தலும், பிறத்தலும் இயல்பாகவே நடந்து வருகின்றன. சாக்காடு-பிறப்பு என்பது உறங்குவதும் பின் உறக்கத்தினின்றும் விழித்தலும் போலவே இருக்கின்றன.
மனிதன் பூவுலகில் உறங்குவதும் விழிப்பதும் இயல்பாய் அமைவது போல உயிருக்கு (ஆத்மாவிற்கு) சாக்காடும் பிறப்பும் மாறி மாறி வருகின்றன.
நிலையாமை அதிகாரம் துறவரவியலில் உள்ளது எனப் பார்த்தால், வள்ளுவர் பாயிரம் (முகவுரை) நான்காம் அதிகாரமாய் அறன் வலியுறுத்தலே நூலின் அடிப்படை என உள்ள அதிகாரப் பாடல்கள்
வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன் வாழ்நாள் வழியடைக்கும் கல் (அதிகாரம்:அறன் வலியுறுத்தல் குறள் எண்:38) பொழிப்பு : ஒருவன் அறம் செய்யத் தவறிய நாள் ஏற்படாதவாறு அறத்தைச் செய்வானானால் அதுவே அவன் உடலோடு வாழும் நாள் வரும் பிறவி வழியை அடைக்கும் கல்லாகும். மணக்குடவர் உரை: ஒருவன் ஒரு நாளிடைவிடாமல் நன்மையைச் செய்வானாயின் அச்செயல் அவனது பிறப்பும் இறப்புமாகிய நாள் வருகின்ற வழியை யடைப்பதொரு கல்லாம். இது வீடு தருமென்றது.
அன்றறிவாம் என்னாது அறம்செய்க மற்றது பொன்றுங்கால் பொன்றாத் துணை (அதிகாரம்:அறன் வலியுறுத்தல் குறள் எண்:36) பொழிப்பு: பிற்காலத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணாமல் அறம் செய்யவேண்டும். அதுவே உடல் அழியும் காலத்தில் அழியாத் துணையாகும். மணக்குடவர் உரை: பின்பே அறிந்து செய்வோமென்னாது முன்பே அறத்தைச் செய்க. அது சாங்காலத்தினுஞ் சாகாதே நின்று பிறக்கு மிடத்திற்குத் துணையாம். இஃது அறஞ்செய்யுங்கால் விரைந்து செய்யவேண்டு மென்பதும் அது மறுமைக்குத் துணையாமென்பதும் கூறிற்று.
இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக் கண்நிறை நீர்கொண் டனள். குறள் 1315: புலவி நுணுக்கம். மணக்குடவர் உரை: இப்பிறப்பிலே யாம் பிரியோமென்று சொன்னேனாக, அதனால் மறுபிறப்பின்கண் பிரிவுண்டென்று கருதிக் கண்ணிறைய நீர் கொண்டாள். மு. வரதராசன் உரை: இப்பிறப்பில் யாம் பிரிய மாட்டோம் என்று காதலியிடம் சொன்னேனாக, இனி வரும் பிறப்பில் பிரிவதாக உணர்ந்து கண் நிறையக் கண்ணீர் கொண்டாள்.
மனையாளை அஞ்சும் மறுமையி லாளன் வினையாண்மை வீறெய்த லின்று. குறள் 904:பெண்வழிச்சேறல் மணக்குடவர் உரை:மனையாளை அஞ்சுகின்ற மறுமைப் பயனெய்தாதவன் ஒரு வினையை ஆளுந்தன்மை, பெருமை எய்துதல் இல்லை. இது பொருள் செய்ய மாட்டானென்றது. மு. வரதராசன் உரை: மனைவிக்கு அஞ்சி நடக்கின்ற மறுமைப் பயன் இல்லாத ஒருவன், செயல் ஆற்றுந்தன்மை பெருமை பெற்று விளங்க முடிவதில்லை. இன்றைய ஆசிரியர்கள் 'மனைவிக்கு அஞ்சுபவன் மறுமை இழந்தவன்', 'தன் மனைவியை அஞ்சி நடக்கும் மறுமைப்பயன் இல்லாதவன்', 'மனைவிக்கு அஞ்சி அடங்குகின்ற மறுமைப் பயனும் இல்லாதவன்', 'மனையாளை அஞ்சி நடக்கின்ற மறுமைப் பயன் இல்லாதான்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
மனையாளை அஞ்சி நடக்கின்ற புகழ் இல்லாதான் என்பது இப்பகுதியின் பொருள்.
இறைவன் வணக்கம் என்பதை திருவடி பற்றி கொள்வது என்றும், இறைவனை வணங்காத தலை (மனித பிறவி) பொறிகள் இருந்தும் புலன்கள் அற்றவை போல உணர்வில்லாதவை என்கிறார். உலகைப் படைத்த இறைவனை முழுமையாய் உணர்ந்து பற்றிக் கொள்வதே கல்வியின் பயன், திருவடி கொண்டால் மட்டுமே என மிகத் தெளிவாய் இறை வணக்கத்தை வலியுறுத்துகிறார்.
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை. (குறள்-9 ) கேட்காத செவி பார்க்காத கண் முதலியனபோல் எண் குணங்களை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவரின் தலைகள் பயனற்றவைகளாம்.
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால் பிறவாழி நீந்தல் அரிது. (குறள்-8 ) அறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர்க்கு அல்லாமல், மற்றவர் பொருளும் இன்பமுமாகிய மற்றக் கடல்களைக் கடக்க முடியாது.
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது. (குறள்-7 ) தனக்கு ஒப்புமை இல்லாத தலைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர்க்கு அல்லாமல், மற்றவர்க்கு மனக்கவலையை மாற்ற முடியாது.
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார்(குறள்-10)
வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது. குறள் 377: ஊழ். மணக்குடவர் உரை:விதானம் பண்ணினவன் விதானம் பண்ணின வகையினானல்லது கோடி பொருளை யீட்டினவர்க்கும் அதனால் வரும் பயன்கோடல் அருமையுடைத்து. இது பொருள் பெற்றாலும் நுகர்தற்கு ஊழ்வேண்டுமென்றது. சாலமன் பாப்பையா உரை: கோடிப்பொருள் சேர்ந்திருந்தாலும் , இறைவன் விதித்த விதிப்படிதான் நாம் அதை அனுபவிக்க முடியுமே தவிர, நம் விருப்பப்படி அனுபவிப்பது கடினம்.
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு. குறள் 350: துறவு மணக்குடவர் உரை:பற்றறுத்தானது பற்றினைப் பற்றுக; அதனைப் பற்றுங்கால் பயன் கருதிப் பற்றாது பற்று விடுதற்காகப் பற்றுக. பற்றற்றான் பற்றாவது தியான சமாதி. பின் மெய்யுணர்தல் கூறுதலான், இது பிற்படக் கூறப்பட்டது. மு. வரதராசன் உரை: பற்றில்லாதவனாகிய கடவுளுடைய பற்றை மட்டும் பற்றிக் கொள்ள வேண்டும், உள்ள பற்றுக்களை விட்டொழிப்பதற்கே அப் பற்றைப் பற்ற வேண்டும்.
இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றி யான். குறள் 1062:இரவச்சம். மணக்குடவர் உரை:துப்புரவு இல்லாக்கால் இறந்துபடாதே பிறர்மாட்டு இரந்து கொண்டும் உயிர் வாழ்தல் வேண்டுமாயின், உலக நடையை இவ்வாறாகக் கற்பித்த முதல்வன் மிகக் கெடுவானாக வேண்டும். இஃது இரக்குமதனின் இறத்தல் அமையு மென்றது. மு. வரதராசன் உரை: உலகத்தைப் படைத்தவன் உலகில் சிலர் இரந்தும் உயிர்வாழுமாறு ஏற்படுத்தியிருந்தால், அவன் இரப்பவரைப் போல் எங்கும் அலைந்து கெடுவானாக!
-- Edited by Admin on Thursday 18th of June 2020 07:16:20 PM