சுருக்கமாக, இதன் பொருள்: குவளை மலரானது என் காதலியைக் கண்டால் நாணித் தலை கவிழ்ந்து நிலம் நோக்கும்.
(ஒரு முக்கியமான முன்முடிவு என்னவென்றால், வள்ளுவர், நம் தமிழர்களைப் போலல்லாமல், தான் பேசிய அறத்தை, லோகாயத விஷயங்களை, தன் சொந்த வாழ்க்கையிலும் கடைப் பிடித்திருக்கவேண்டும் என்பதுதான். ஆகவே, அல்லது அதாவது, காதலி எனக் குறிப்பிடப்படும், கோடிகாட்டப்படும், குரல்வளையுடைத்த குறள் பெண், அவரது மனைவியாகத்தானே இருந்திடல் வேண்டும்?)
எவ்வளவோ ஆம்பல், இருள்நாறி, கரந்தை, குறிஞ்சி, கொன்றை, தாமரை என ஆயிரம் மலர்களைக் குறிப்பிட்டுப் புளகாங்கிதமடைந்து நம்மையும் புல்லரிக்கச் செய்யும் சங்க இலக்கியங்களில்…
…இந்த வள்ளுவர் ஏன் குவளை மலரை இங்கே குறிப்பிடுகிறார்? இங்கேதான் சூக்குமம் இருக்கிறது.
வள்ளுவர் குறிப்பிடும் குவளை மலர் நீல நிற மலர். தம் மனைவி (+துணைவி) வாசுகியின் கண்களைக் குறிக்கும் போது, வள்ளுவருக்கு நீலக்குவளை மலர்தாம் நினைவுக்கு வருகிறது.
ஆனானப் பட்ட விக்கீபீடியாவிலேயே இந்த நீலமலர் குறித்து பலப்பல விஷயங்கள் வந்திருப்பதை நாம் அறிவோமன்றோ?
சங்கப்பாடல்களில் இந்தக் நீல நிறம் வாய்ந்த குவளை மலர் குறித்த பலப்பல குறிப்புகள் காணப்படுகின்றன என்பதும் வெள்ளிடைமலை.
“பைஞ்சுனைப் பாசடை நிவந்த பனிமலர்க் குவளை” (ஐங்குறுநூறு, வரி 225 : 1-2) “கயத்துவளர் குவளை” (ஐங்குறுநூறு, வரி 277 : 5) “மா இதழ்க் குவளை” (பட்டினப்பாலை, வரி 241)
சிலபல நிறங்களில் இந்தக் குவளை மலர் இருந்தாலும், காலைவேளையின் நீல நிறக் குவளை மலர்ந்திருப்பதாவது, பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும். இதனை நன்கு அனுபவித்து உணர்ந்த நம் மூதாதையர்கள்தாம் இப்படிப்பட்ட உவமான உவமேய படிமானப் படிமங்களை தடுத்தாட்கொண்ட ஆளுமைகளாக உருவகங்களை உபயோகிக்கமுடியுமன்றோ?
…தேவாரம், திருப்புகழ், திருமந்திரம் என பலப்பல தமிழ்ப் புனைவுகள் அனைத்திலும் பாடப்பட்ட குவளை மலர் இது. பெரும்பாணாற்றுப்படை, பட்டினப்பாலை போன்ற சங்க இலக்கியங்களிலும் குவளை குறிந்த குறிப்புகள் குவளைகுவளையாகக் காணக் கிடைக்கும்.
குவளை மலர் ஏன் உவமையாகச் சொல்லப்பட்டது?
பெண்களின் கண்ணைக் குளிர்ச்சியும் அழகும் பொருந்திய குவளை மலரோடு ஒப்பிட்டுக் கூறுவது புலவர் மரபு. பழம் இலக்கியங்களில் பெண்களின் கண்ணுக்கு உவமையாகக் குவளை கூறப்பட்டது. இப்பூ பெண்களின் கண்ணை நினைவூட்டக்கூடிய தன்மையது. இது குளத்தில் பூப்பது. நீல நிறமானது. நீலஅல்லி என்றும் கூறுவர். தலைவியின் கண்கள் நீலநிறமாக இருந்திருக்கும் போலும். மலர்கள் பலவற்றுள்ளும் குவளையின் வடிவமும் பெண்கள் கண்ணோடு மிக நெருக்கமானது. வள்ளுவரும் குவளை மலரின் அழகில் ஈடுபட்டு அதைத் தலைவியின் கண்ணுக்கு உவமையாக்கினார். இம்மலர் மிகுதியான இதழ்களை உடையதாதலால் அதைப் ‘பல்லிதழ்’ என்று அழைத்தனர்.
கண்கள் குவளை மலர்களைப் போல் உள்ளது என்றுதான் சொல்வார்கள். ஆனால் குவளை மலரை விட அழகான கண்கள் என்றும் அம்மலர்க்கு பார்க்கும் திறம் இருந்தால், ஒருமுறை கண்டாலும் போதும். உடனே காதலியின் கண்களின் அழகுக்குத் தோற்று வெட்கத்தால் நிலத்தை நோக்கிக் கவிழும் என்றும் தலைவன் தன் காதலியின் கண்களை உவமித்துப் பாராட்டுகின்றான்.
….குவளை மலர்கள் என் காதலியைக் கண்டால், சிறந்த அணியை உடையவளது கண்களுக்கு யாம் இணையாக மாட்டோம் என்று, நாணித் தலை கவிழ்ந்து நிலம் நோக்கும் என்பது இக்குறட்கருத்து.
மேற்கண்டவை மட்டுமல்ல, வெள்ளைக்கார ஆராய்ச்சியாளினியும் என் பெருமதிப்புக்கு உரிய தமிழ்ச் சான்றோராளினியுமான மகாமகோ கேப்ரியலா ஐஷிங்கர் ஃபெர்ரொ-லுஸ்ஸி அவர்களும் வாசுகியின் இந்த நீலக்கண் விவகாரத்தைக் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார்.
மேற்கத்திய, ஆரிய உலகில் இது பரவலாக இருப்பதையும் குறிப்பிடுகிறார்!
If Whorf Had Known Tiruvalluvar? Universalism and Cultural Relativism in a Famous Work of Ancient Tamil Literature Author: Gabriella Eichinger Ferro-Luzzi. Source: Anthropos, Bd. 87, H. 4./6. (1992), pp. 391-406
-0-0-0-0-0-
இவையெல்லாம் ஒருபுறமிருக்க, நமக்கு இன்னொரு முக்கியமான தரவும் இருக்கிறது.
2008ல் டென்மார்க்கின் கொபென்ஹேகன் பல்கலைக்கழகச் சான்றோர்கள் வெளியிடப்பட்ட ஆராய்ச்சி ஒன்றிலிருந்து நமக்குத் தெரிவது என்னவென்றால்:
இப்பூவலகில் தற்போது நீலக்கண்களுடைய அனைவருக்கும் சுமார் 6000 முதல் 10000 வருடங்களுக்கு முந்தைய ஒரு பொது மூதாதையர் இருந்திருக்கவேண்டும் என்பது OCA2 மரபணுக்கூறில் அச்சமயத்தில் ஏற்பட்ட ஒரு மரபணுப் பிறழ்வு/ம்யுடேஷன் மூலத்தை அவர்கள் கண்டுகொண்டதால் தெளிவடைந்திருக்கிறது.
இதற்காக அவர்கள் துருக்கி, ஜார்டன், டென்மார்க் பிரதேச நீலக்கண்ணிகளையும் நீலக்கண்ணர்களையும் ஆய்ந்திருக்கிறார்கள்.