New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: புறநானூறு 61-70 -முனைவர். பிரபாகரன்


Guru

Status: Offline
Posts: 24769
Date:
புறநானூறு 61-70 -முனைவர். பிரபாகரன்
Permalink  
 


61. மலைந்தோரும் பணிந்தோரும்!

 
பாடியவர்: கோனாட்டு எறிச்சிலுர் மாடலன் மதுரைக் குமரனார். இவரைப் பற்றிய குறிப்புகளை பாடல் 54-இல் காண்க.
பாடப்பட்டோன்:
 சோழன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி. இச்சோழ மன்னன், சோழன் நலங்கிள்ளியின் மகன் என்று கருதப்படுகிறான். இலவந்திகை என்றால் குளத்தருகே உள்ள சோலை என்று பொருள். குளத்தருகே இருந்த சோலை ஒன்றில் இருந்த பள்ளியில் (படுக்கை அறையில்) இறந்ததால், இச்சோழமன்னன் சோழன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி என்று அழைக்கப்பட்டான்.
பாடலின் பின்னணி: கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார் சேட்சென்னியின் நாட்டின் வளங்களையும் அவன் போர் புரியும் ஆற்றலையும் இப்பாடலில் விரிவாகக் கூறுகிறார்.

திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தலைப் பற்றிய பாடல்கள் வாகைத் திணையில் அடங்கும்.

துறை: அரசவாகை. அரசனது இயல்பை எடுத்துரைப்பது அரச வாகையாகும்.

கொண்டைக் கூழைத் தண்தழைக் கடைசியர்
சிறுமாண் நெய்தல் ஆம்பலொடு கட்கும்
மலங்குமிளிர் செறுவின் தளம்புதடிந் திட்ட
பழன வாளைப் பரூஉக்கண் துணியல்
5 புதுநெல் வெண்சோற்றுக் கண்ணுறை ஆக
விலாப்புடை மருங்கு விசிப்ப மாந்தி
நீடுகதிர்க் கழனிச் சூடுதடு மாறும்
வன்கை வினைஞர் புன்தலைச் சிறாஅர்
தெங்குபடு வியன்பழம் முனையின், தந்தையர்
10 குறைக்கண் நெடும்போர் ஏறி விசைத்தெழுந்து
செழுங்கோள் பெண்ணைப் பழந்தொட முயலும்
வைகல் யாணர் நன்னாட்டுப் பொருநன்
எஃகுவிளங்கு தடக்கை இயல்தேர்ச் சென்னி
சிலைத்தார் அகலம் மலைக்குநர் உளர்எனில்
15 தாமறி குவர்தமக்கு உறுதி; யாம்அவன்
எழு திணிதோள் வழுவின்றி மலைந்தோர்
வாழக் கண்டன்றும் இலமே; தாழாது
திருந்துஅடி பொருந்த வல்லோர்
வருந்தக் காண்டல் அதனினும் இலமே!

அருஞ்சொற்பொருள்:
1. கொண்டை = மயிர் முடிச்சு; கூழை = தலை மயிர்; தழை = பச்சிலை; கடைசியர் = உழத்தியர், மருத நிலப் பெண்கள். 2. நெய்தல் = வெள்ளாம்பல்; கட்கும் = களைந்து எறியும். 3. மலங்கு = ஒரு வகை மீன்; மிளிர்தல் = ஒளிசெய்தல்; செறு = வயல்; தளம்பு = சேற்றைக் குழப்பிக் கட்டிகளை உடைத்து செம்மைப் படுத்தும் கருவி; தடிதல் = அறுத்தல், வெட்டல். 4. பழனம் = வயல்; வாளை = வாளை மீன்; பரூஉ = பருமை; துணியல் = துண்டு (சதை). 5. கண்ணுறை = மேலே தூவுவது. 6. விசித்தல் = விம்முதல், வீங்குதல்; மாந்தல் = உண்ணுதல், வருந்துதல். 7. சூடு = நெற்கதிர்க் கட்டு. 8. வினைஞர் = மருத நில மக்கள் (உழவர்கள்). 9. தெங்கு = தென்னை. 10. விசை = விரைவு. 11. செழுமை = வளமை; கோள் = குலை; பெண்ணை = பனைமரம். 12. வைகல் = நாள்; யாணர் = புதிய வருவாய். 13. எஃகு = வேல்; தடக்கை = பெரிய கை; சென்னி = நலங்கிள்ளி சேட்சென்னி. 14. சிலை = ஒளி; அகலம் = மார்பு; மலைத்தல் = போரிடுதல். 15. உறுதி = உறப்போவது (நேரப்போவது). 16. எழு = கணையமரம்; உறழ் = ஒத்தல்; திணி = வலிமை; வழு = தவறு. 17. தாழாது = விரைந்து. 18. திருந்துதல் = ஒழுங்குகாகுதல்.

உரை: கொண்டையாக முடிந்த முடியும், முடியில் செருகிய தழையும் உடைய மருதநிலப் பெண்கள், சிறிய வெள்ளாம்பலுடன் ஆம்பலையும் களைவர். வயல்களில் மலங்கு மீன்கள் ஒளிருகின்றன. அந்த வயல்களில் தளம்பைப் பயன்படுத்தியதால், பருத்த வாளை மீன்கள் துண்டிக்கப் படுகின்றன. புதுநெல்லைக் குத்தி ஆக்கிய வெண்மையான சோற்றின் மேல் அந்த வாளைமீன் துண்டுகளைத் தூவி, விலாப் புடைக்க உண்ட மயக்கத்தால், நெடிய நெற்கதிர்களின் கட்டுகளை வைக்கும் இடம் தெரியாமல் உழவர்கள் தடுமாறுவர். வலிய கைகளையுடைய உழவர்களின் இளஞ்சிறுவர்கள் தென்னை மரங்கள் தரும் தேங்காய்களை வெறுத்துத், தம் தந்தையரின் குறுகிய இடங்களில் உள்ள நெடிய வைக்கோற் போரில் விரைந்து ஏறி பனம்பழத்தைப் பறிக்க முயல்வர். நாள்தோறும் புதிய வருவாயையுடைய நல்ல நாட்டிற்கு அரசனாகிய நலங்கிள்ளி சேட்சென்னி, வேல் ஒளிரும் பெரிய கையினையும் நன்கு செய்யப்பட்ட தேரையும் உடையவன். ஒளி நிறைந்த மலர் மாலைகளை அணிந்த மார்பையுடைய சேட்சென்னியுடன் போர்புரிபவர்கள் இருப்பார்களானால், அவர்களுக்கு நேரப் போவதை அவர்கள் மட்டுமே அறிவார்கள். நாங்கள் கணையமரம் போன்ற வலிய தோள்களையுடைய அவனோடு போரிட்டவர்கள் வாழக்கண்டதில்லை. விரைந்து சென்று அவனது நல்லடியை அடைய வல்லோர் வருந்தக் கண்டது அதனினும் இல்லை.


__________________


Guru

Status: Offline
Posts: 24769
Date:
Permalink  
 

62. போரும் சீரும்!

 
பாடியவர்: கழாத்தலையார் (62, 65, 270, 288, 289, 368). இவர் பெயர் கழார்த்தலையார் என்றும் கூறப்படுகிறது. கழார் என்னும் ஊரைச் சார்ந்ததவராக இருந்ததால் கழார்த்தலையார் என்ற பெயர் பெற்றிருக்கலாம். கழாத்தலையார் என்பது இவர் பெயராக இருந்திருக்குமானால், இவர் கழாத்தலை என்ற ஊரினராக இருந்திருக்கலாம். இவரை இருங்கோவேள் என்னும் குறுநிலமன்னனின் முன்னோர்களுள் ஒருவன் இகழ்ந்ததால், அந்நாட்டில் இருந்த அரையம் என்னும் ஊர் அழிந்ததாகக் கபிலர் புறநானூற்றுப் பாடல் 202-இல் குறிப்பிடுகிறார். இவர் சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன், சோழன் வேற்பஃறடக்கை பெருவிறற்கிள்ளி, சேரமான் பெருஞ்சேரலாதன் ஆகியோரைப் பாடியவர்.
பாடப்பட்டோர்: சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன்; சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி.
சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன்: இவன் போர்வன்மையும் கொடைச் சிறப்பும் மிகுந்தவன் என்று அவ்வை சு. துரைசாமிப் பிள்ளை அவர்கள் தம் நூலில் கூறுகிறார். மற்றும், பதிற்றுப்பத்தில் ஆறாம் பத்தின் பதிகத்தில் கூறப்பட்டிருபபவன் இவனாக இருந்தால் இவனுக்குப் பிறகு சேர நாட்டை ஆட்சி செய்தவன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனாவான் என்றும் கூறுகிறார். அவ்வை சு. துரைசாமிப் பிள்ளை அவர்களின் கருத்து வரலாற்று ஆசிரியர்களின் கருத்துகளிலிருந்து மாறுபடுகிறது. வரலாற்று ஆசிரியர்கள் (N. சுப்பிரமணியன், K. A. நீலகண்ட சாஸ்திரி) உதியஞ் சேரலாதன் என்ற சேர மன்னனின் மகனாகிய இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் என்னும் சேரமன்னனுக்கும் சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளிக்கும் இடையே நடந்த போரில் இருவரும் இறந்ததாகக் கூறுகின்றனர். ஆகவே, சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதனும் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனும் ஒருவனே என்று தோன்றுகிறது.

கரிகால் வளவனுக்கு இரண்டு மகன்கள் இருந்ததாக சில வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். அந்த இரண்டு மகன்களுள் ஒருவன் பெயர் மணக்கிள்ளி, மற்றொருவன் பெயர் வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி. மணக்கிள்ளி என்பவனின் மகள் நற்சோனை என்பவளை இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் மணம் புரிந்தான். கண்ணகிக்குச் சிலையெடுத்த சேரன் செங்குட்டுவனும் சிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோவடிகளும் இமயவரம்பனுக்கும் நற்சோனைக்கும் பிறந்த மகன்கள் என்று கூறப்படுகிறது. தேவி என்பவள் இமயவரம்பனின் மற்றொரு மனைவி. களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரலும் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனும் இமயவரம்பனுக்கும் அவனது மனைவி தேவிக்கும் பிறத்த இரு மகன்கள்.

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் இறந்த பிறகு, சேர நாட்டை, அவன் தம்பி பல்யானை செல்குழுக் குட்டுவன் என்பவன் ஆண்டதாகவும், அவனுக்குப் பிறகு, களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் சேர நாட்டை ஆண்டதாகவும் வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரலுக்குப் பிறகு, கண்ணகிக்குச் சிலையெடுத்த சேரன் செங்குட்டுவன் சேர நாட்டை ஆண்டதாகக் கூறப்படுகிறது. அவனுக்குப் பிறகு, ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் சேர நாட்டை ஆண்டதாகவும் கூறப்படுகிறது.

வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி: இவன் கரிகால் வளவனின் இரு மகன்களுள் ஒருவன். கரிகால் வளவன் இறந்த பிறகு, இவன் புகார் நகரத்தைத் தலைநகராகக் கொண்டு சோழ நாட்டின் ஒரு பகுதியை ஆண்டான். கிள்ளிவளவன், நலங்கிள்ளி மற்றும் மாவளத்தான் என்ற மூவரும் இவனுடைய மகன்கள் என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

பாடலின் பின்னணி: சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதனுக்கும் சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளிக்கும் இடையே நடந்த போரில் இரு மன்னர்களும் விழுப்புண்பட்டு இறந்தனர். போர்க்களத்தில், சேரமான் உயிர் நீங்கும் தறுவாயில் இருப்பதைக் கண்ட கழாத்தலையார் அவனைப் புகழ்ந்து பாடினார். சேரன் தன் கழுத்திலிருந்த மாலையைக் கழற்றி கழாத்தலையாருக்கு அணிவித்துப் பின்னர் இறந்தான். மன்னர்கள் இருவரும் இறப்பதைக் கண்ட புலவர் கழாத்தலையார் மிகுந்த வருத்தமுற்றார். “போரில் மன்னர்கள் இருவரும் இறந்தனர். அவர்களுடைய வெற்றியை அறைகூவும் முரசு ஓய்ந்தது. மன்னர்களின் மனைவியர் கைம்மை நோன்பை மேற்கொள்வதை விரும்பாது தம் கணவரைத் தழுவி உயிர் துறந்தனர். விண்ணுலகத்தில் உள்ள தேவர்கள் இந்த இரு மன்னர்களையும் விருந்தினராகப் பெற்றனர்” என்று இப்பாடலில் கூறுகிறார்.

திணை: தும்பை. பகைவரோடு போர் செய்வதற்கு ஆயத்தமாகும் பொழுது தும்பைப் பூவைச் சூடிக் கொள்ளல்.
துறை: தொகை நிலை. போர்க்களத்தில் அனைவரும் ஒருங்கே மாய்ந்ததைக் கூறுதல்.

வருதார் தாங்கி அமர்மிகல் யாவது?
பொருதுஆண்டு ஒழிந்த மைந்தர் புண்தொட்டுக்
குருதிச் செங்கைக் கூந்தல் தீட்டி
நிறம்கிளர் உருவின் பேஎய்ப் பெண்டிர்
5 எடுத்துஎறி அனந்தற் பறைச்சீர் தூங்கப்
பருந்து அருந்துற்ற தானையொடு செருமுனிந்து
அறத்தின் மண்டிய மறப்போர் வேந்தர்
தாம்மாய்ந் தனரே; குடைதுளங் கினவே;
உரைசால் சிறப்பின் முரசு ஒழிந்தனவே;
10 பன்னூறு அடுக்கிய வேறுபடு பைஞ்ஞிலம்
இடம்கெட ஈண்டிய வியன்கண் பாசறைக்
களங்கொளற்கு உரியோர் இன்றித், தெறுவர
உடன்வீழ்ந் தன்றால் அமரே; பெண்டிரும்
பாசடகு மிசையார் பனிநீர் மூழ்கார்
15 மார்பகம் பொருந்தி ஆங்கமைந் தனரே;
வாடாப் பூவின் இமையா நாட்டத்து
நாற்ற உணவி னோரும் ஆற்ற
அரும்பெறல் உலகம் நிறைய
விருந்துபெற் றனரால் பொலிகநும் புகழே!

அருஞ்சொற்பொருள்:
1. வரு = வருகின்ற; தார் = தூசிப்படை, படை; அமர் = போர்; மிகல் = வெற்றி; யாவது = எது, எவ்விதம். 2. ஆண்டு = அங்கு; மைந்தர் = வீரர். 4 நிறம் = ஒளி; கிளர்தல் = மிகுதல். 5. அனந்தல் = மந்த ஓசை; பறைச் சீர் = பறைக்குரிய தாளம்; தூங்கல் = ஆடல். 6. உற்ற = பொருந்திய; செரு = போர்; முனிந்து = வெகுண்டு. 7. மண்டல் = மிகுதல். 8. துளங்கல் = கலங்கல், அசைதல். 9. உரை = புகழ். 10. பைஞ்ஞிலம் = படைத்தொகுதி. 12. தெறு = அச்சம். 14 பாசடகு = பாசு + அடகு; பாசு = பசுமை; அடகு = கீரைக்கறி; மிசைதல் = உண்ட. 16. நாட்டம் = பார்வை. 17. ஆற்ற = மிக. 19. பொலிதல் = மிகுதல்.

உரை: இனி, எதிர்த்து வரும் தூசிப்படையத் தடுத்துப் போரில் வெற்றி பெறுவது எப்படி? அப்போர்க்களத்தில் சண்டையிட்டு அங்கே புண்பட்ட வீரர்களின் புண்ணைத் தோண்டிக், குருதி தோய்ந்த சிவந்த கையால் தமது தலைமயிரைக் கோதிய, ஓளிமிக்க உருவத்தையுடைய பேய்ப்பெண்கள், மேன்மேலும் கொட்டுகின்ற மந்தமான தாளத்திற்க்கேற்ப ஆடுகின்றனர். இறந்த படைவீரர்களின் உடலைப் பருந்துகள் உண்ணுகின்றன. அத்தகைய படையோடு, சினந்து அறவழியில் போர்புரிந்த வீரமுடைய மன்னர்கள் இருவரும் இறந்தனர். அவரது குடைகள் தளர்ந்தன. அவர்களுடைய புகழ் மிகுந்த சிறப்புடைய முரசுகள் வீழ்ந்தன. நூற்றுக்கணக்கான படைவீரர்கள் அடங்கிய பலவகைப் படைகளும் இருக்க இடமில்லாதபடி நெருங்கி இருக்கும் அகன்ற பாசறைகளில், போர்க்களத்தைத் தம்முடையதாக்கிக் கொள்வோர் இல்லாமல், காண்போர்க்கு அச்சம் தரும் வகையில் போர் உடனே முடிந்தது. மன்னர்களின் மனைவியர் பசுமையான கீரைக்கறியை உண்டு, குளிர்ந்த நீரில் மூழ்கும் கைம்மை நோன்பை விரும்பாதவராய் தம் கணவரைத் தழுவி உடன் கிடந்தனர். வாடாத பூக்களையும், இமைகளைச் சிமிட்டாத பார்வையையும், நறுமணமுள்ள அவியாகிய உணவையும் உடைய தேவர்கள் பெறுதற்கரிய விருந்து பெற்றனர். உங்கள் புகழ் விளங்குவதாக.

சிறப்புக் குறிப்பு: இரு வேந்தர்களும் ஒருங்கே இறந்ததைக் கூறுவதால் இப்பாடல் தொகைநிலையைச் சார்ந்ததாயிற்று.


__________________


Guru

Status: Offline
Posts: 24769
Date:
Permalink  
 

63. என்னாவது கொல்?

 
பாடியவர்: பரணர். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 4-இல் காண்க.
பாடப்பட்டோர்: சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி; சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன். இவர்களைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 62-இல் காண்க.
பாடலின் பின்னணி: சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளியும் சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதனும் போரில் ஒருங்கே இறந்ததைக் கண்டு வருந்திய பரணர், “யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை மற்றும் தேர்ப்படை எல்லாம் அழிந்தன. இரு மன்னர்களும் இறந்தனர். இனி இந்நாடுகள் என்ன ஆகுமோ?” என்று இப்பாடலில் தம் வருத்தத்தை வெளிபடுத்துகிறார்.

திணை: தும்பை. பகைவரோடு போர் செய்வதற்கு ஆயத்தமாகும் பொழுது தும்பைப் பூவைச் சூடிக் கொள்ளல்.
துறை : தொகை நிலை. போர்க்களத்தில் அனைவரும் ஒருங்கே மாய்ந்ததைக் கூறுதல்.

எனைப்பல் யானையும் அம்பொடு துளங்கி
விளைக்கும் வினையின்றிப் படைஒழிந் தனவே;
விறற்புகழ் மாண்ட புரவி எல்லாம்
மறத்தகை மைந்தரொடு ஆண்டுப்பட் டனவே;
5 தேர்தர வந்த சான்றோர் எல்லாம்
தோல்கண் மறைப்ப ஒருங்குமாய்ந் தனரே;
விசித்துவினை மாண்ட மயிர்க்கண் முரசம்
பொறுக்குநர் இன்மையின் இருந்துவிளிந் தனவே;
சாந்தமை மார்பின் நெடுவேல் பாய்ந்தென
10 வேந்தரும் பொருதுகளத்து ஒழிந்தனர்; இனியே
என்னா வதுகொல் தானே; கழனி
ஆம்பல் வள்ளித் தொடிக்கை மகளிர்
பாசவல் முக்கித் தண்புனல் பாயும்
யாணர் அறாஅ வைப்பின்
15 காமர் கிடக்கைஅவர் அகன்றலை நாடே?

அருஞ்சொற்பொருள்:
1. எனை = எவ்வளவு; பல் = பல; துளங்கல் = கலங்கல். 2. விளைதல் = உண்டாதல். 3. விறல் = வெற்றி; மாண்ட = பெருமைக்குரிய; புரவி = குதிரை. 4. மறம் = வலிமை; தகை = தகுதி, தன்மை. 5. சான்றோர் = வீரர். 6. தோல் = கேடயம். 7. விசித்தல் = இறுகக் கட்டுதல். 8 பொறுக்கல் = தாங்குதல்; விளிதல் = அழிதல், கெடுதல். 11. கழனி = வயல். 12. வள்ளி = கொடி; தொடி = கைவளை. 13. பாசவல் = பாசு + அவல்; பாசு = பசுமை(நல்ல); முக்கி = உண்டு. 14. யானர் = புதிய வருவாய்; அறா = குறயாத; அறல் = இல்லாமற் போதல்; அறா என்பது அறல் என்பதின் எதிர்மறை; வைப்பு = நிலப்பகுதி (ஊர்). 15. காமர் = அழகு; கிடக்கை = குடியிருப்பு.

உரை: எத்தனை யானைகள் அம்பால் தாக்கப்பட்டுத் தொழிலின்றி இறந்தன! வெற்றிப் புகழ் கொண்ட பெருமைக்குரிய குதிரைகள் எல்லாம் வலிமை வாய்ந்த படைவீரர்களுடன் போர்க்களத்தில் மாண்டன. தேரில் வந்த வீரர்கள் எல்லாம் தாம் பிடித்த கேடயம் தங்கள் கண்களை மறைக்க ஒருங்கே இறந்தனர். இறுகக்கட்டப்பட்ட, மயிருடன் கூடிய முரசுகள் அவற்றைத் தாங்குவோர் இல்லாமல் கிழே கிடந்தன. சந்தனம் பூசிய மார்பில் நெடிய வேல் பாய்ந்ததால் இரு வேந்தர்களும் போர்க்களத்தில் இறந்தனர். வயலில் விளைந்த ஆம்பல் தண்டால் செய்த வளையலணிந்த கையினை உடைய மகளிர் பசிய (வளமான) அவலை உண்டு குளிர்ந்த நீரில் பாய்ந்து விளையாடும், புது வருவாய் குறையாத அழகிய குடியிருப்புகள் அடங்கிய அகன்ற இடங்களை உடைய நாடு இனி என்ன ஆகுமோ?

சிறப்புக் குறிப்பு: அறவழியில் போர் செய்யும் குணங்களை உடைய வீரர்களைச் “சான்றோர்” என்பது மரபு.

தோலில் உள்ள மயிரை நீக்காமல் செய்யபட்ட முரசு “மயிர்க்கண் முரசு” என்று அழைக்கப்பட்டது.


__________________


Guru

Status: Offline
Posts: 24769
Date:
Permalink  
 

64. புற்கை நீத்து வரலாம்!

 
பாடியவர்: நெடும்பல்லியத்தனார்(64). புறநானூற்றில் இவர் இயற்றிய பாடல் இது ஒன்றுதான். பல்லியம் என்று சொல்லுக்கு பலவகையான இசைக்கருவிகள் என்று பொருள். இவர் பல வகையான இசைக்கருவிகளை இயக்குவதில் வல்லவராக இருந்ததால் இப்பெயர் பெற்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
பாடப்பட்டோன்: பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி. இவனைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 6-இல் காண்க.
பாடலின் பின்னணி: இப்பாடலில், வறுமையில் வாடும் விறலி ஒருத்தியைப், பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியிடம் சென்றால் அவள் வறுமை தீரும் என்று சொல்லி, அவளைப் புலவர் நெடும்பல்லியத்தனார் பாண்டியன் முதுகுடுமிப் பெருவழுதியிடம் ஆற்றுப்படுத்துகிறார்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: விறலியாற்றுப்படை. அரசன் புகழ்பாடும் விறலியை வழிப்படுத்துதல்.

நல்யாழ் ஆகுளி பதலையடு சுருக்கிச்
செல்லா மோதில் சில்வளை விறலி!
களிற்றுக்கணம் பொருத கண்ணகன் பறந்தலை
விசும்புஆடு எருவை பசுந்தடி தடுப்பப்
5 பகைப்புலம் மரீஇய தகைப்பெருஞ் சிறப்பின்
குடுமிக் கோமாற் கண்டு
நெடுநீர்ப் புற்கை நீத்தனம் வரற்கே?

அருஞ்சொற்பொருள்:
1. ஆகுளி = சிறுபறை; பதலை = மாக்கிணைப்பறை; சுருக்குதல் = கட்டுதல். 2. தில் - விருப்பத்தை உணர்த்தும் அசைச்சொல். 3. கணம் = கூட்டம்; அகன் = அகன்ற; பறந்தலை = போர்க்களம்; கண் = இடம். 4. எருவை = பருந்து; தடி = ஊன். 5 மரீஇய = பொருந்திய. 6. கோமான் = அரசன். 7. புற்கை = கஞ்சி, கூழ்; நீத்தல் = விட்டுவிடுதல்.


கொண்டு கூட்டு: சில்வளை விறலி, குடுமிக் கோமாற் கண்டு வரற்கே, செல்லாமோ எனக் கூட்டுக.

உரை: சில வளையல்களை மட்டுமே அணிந்த விறலியே! யானைக் கூட்டங்கள் போரிட்ட அகன்ற இடங்கள் உள்ள போர்க்களத்தில், ஆகாயத்தில் பறக்கும் பருந்துகளைப் பசுமையான ஊன் துண்டங்கள் தடுக்கும் பகைவர் நாட்டில் பொருந்திய முதுகுடுமிப் பெருவழுதியைக் கண்டு, கஞ்சி குடிக்கும் வறுமையான வாழ்க்கையிலிருந்து விடுதலை பெறுவதற்கு, நல்ல யாழையும், சிறுபறையையும், ஒருதலை மாக்கிணையும் எடுத்துக் கட்டிக்கொண்டு செல்லுவோமா?


__________________


Guru

Status: Offline
Posts: 24769
Date:
Permalink  
 

65. நாணமும் பாசமும்!

 
பாடியவர்: கழாத்தலையார். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 62-இல் காண்க.
பாடப்பட்டோன்: சேரமான் பெருஞ்சேரலாதன். கரிகால் வளவன், வெண்ணி என்ற ஊரில் நடைபெற்ற போரில் சேரமான் பெருஞ்சேரலாதனையும், பாண்டிய மன்னன் ஒருவனையும் பதினொரு வேளிர்குலச் சிற்றரசர்களையும் வென்றான். சேரமான் பெருஞ்சேரலாதனைப் பற்றி வேறு செய்திகள் எதுவும் காணப்படவில்லை.
பாடலின் பின்னணி: வெண்ணியில் நடைபெற்ற போரில் சேரமான் பெருஞ்சேரலாதனின் மார்பில் பாய்ந்த வேல் அவன் மார்பைத் துளைத்து முதுகையும் புண்ணாக்கியது. தன் முதுகில் புண்பட்டதால் அவன் நாணமுற்று வடக்கிருந்து உயிர் துறந்தான். அவனுடைய மரணத்தால் பெருந்துயருற்ற கழாத்தலையார், தம் வருத்தத்தை இப்பாடலில் வெளிப்படுத்துகிறார்.

திணை:
 பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவது.
துறை: கையறு நிலை. தலைவன் இறந்த பின்னர் அவன் பெருமையைக் கூறி வருந்துதல்.

மண்முழா மறப்பப் பண்யாழ் மறப்ப
இருங்கண் குழிசி கவிழ்ந்துஇழுது மறப்பச்
சுரும்பூஆர் தேறல் சுற்றம் மறப்ப
உழவர் ஓதை மறப்ப விழவும்
5 அகலுள் ஆங்கண் சீறூர் மறப்ப
உவவுத்தலை வந்த பெருநாள் அமையத்து
இருசுடர் தம்முள் நோக்கி ஒருசுடர்
புன்கண் மாலை மலைமறைந் தாங்குத்
தன்போல் வேந்தன் முன்புகுறித்து எறிந்த
10 புறப்புண் நாணி மறத்தகை மன்னன்
வாள்வடக்கு இருந்தனன் ஈங்கு
நாள்போல் கழியல ஞாயிற்றுப் பகலே!

அருஞ்சொற்பொருள்:
1. மண் = முரசுக்குத் தடவப்படும் கருஞ்சாந்து; முழா = முழவு = முரசு. 2. இரு = பெரிய; கண் = இடம்; குழிசி = பானை; இழுது = வெண்ணெய். 3. சுரும்பு = வண்டு; ஆர்த்தல் = ஒலித்தல்; தேறல் = மது. 4. ஓதை = ஓசை. 5. அகலுள் = தெரு, ஊர், நாடு; சீறூர் = மலை நாட்டுச் சிற்றூர். 6. உவவு = முழுநிலா; அமையம் = சமயம். 8. புன்கண் = பொலிவு இழத்தல். 10. தகை = தகுதி, தன்மை.

உரை: முரசு முழங்கவில்லை. யாழ் வாசிக்கப்படவில்லை. அகன்ற தயிர்ப்பானை கவிழ்த்து வைக்கப்பட்டு, வெண்ணெய் கடையாமல் உள்ளது. வண்டுகள் மொய்க்கும் மதுவை சுற்றத்தார் அருந்தவில்லை. உழவர் உழவுத் தொழிலைச் செய்யவில்லை. சிறிய ஊர்களின் தெருக்களில் விழாக்கள் நடைபெறவில்லை. முழுமதி தோன்றும் பெருநாளில், ஞாயிறும் திங்களும் ஆகிய இரண்டு சுடர்களும் ஒன்றையொன்று எதிர்நின்று பார்த்து, அவற்றுள் ஒருசுடர் ஒளி குறைந்து மாலைப்பொழுதில் மலையில் மறைந்தது போல், தன்னைப் போன்ற ஒருவேந்தன், மார்பைக் குறிவைத்து எறிந்த வேலால் முதுகில் உண்டாகிய புண்ணால் நாணமுற்று, வீரப்பண்புடைய சேரன் தன் வாளோடு வடக்கிருந்தான். அதனால், இங்கே. முன்பு இருந்ததுபோல் பகல் பொழுதுகள் கழிய மட்டா.

சிறப்புக் குறிப்பு: ”மண்முழா மறப்ப”, ”பண்யாழ் மறப்ப”, ”குழிசி கவிழ்ந்து இழுது மறப்ப” ”சுரும்பூஆர் தேறல் சுற்றம் மறப்ப”,” உழவர் ஓதை மறப்ப”, ”சீறூர் அகலுள் ஆங்கண் விழவும் மறப்ப” என்பவை முறையே, ”முரசு முழங்கவில்லை”, “ யாழ் வாசிக்கப்படவில்லை”, ”தயிர்ப்பானை கவிழ்த்து வைக்கப்பட்டு, வெண்ணெய் கடையாமல் உள்ளது”, ”வண்டுகள் மொய்க்கும் மதுவை சுற்றத்தார் அருந்தவில்லை”, ”உழவர் உழவுத் தொழிலைச் செய்யவில்லை”, ”சிறிய ஊர்களின் தெருக்களில் விழாக்கள் நடைபெறவில்லை” என்பவற்றைக் குறிக்கின்றன.


__________________


Guru

Status: Offline
Posts: 24769
Date:
Permalink  
 

66. நின்னினும் நல்லன் அல்லனோ!

 
பாடியவர்: வெண்ணிக் குயத்தியார்(66). வெண்ணி என்பது திருவாரூர் மாவட்டத்தில், நீடாமங்கலம் என்னும் ஊருக்கு அருகே உள்ள ஓரூர். இவ்வூர் வெண்ணில் என்று இக்காலத்தில் வழங்கப்படுகிறது. சங்க காலத்தில் மண்பாண்டங்கள் செய்தவர்கள் வேட்கோவர் என்று அழைக்கப்பட்டனர். அவர்களில் சிறந்தவர்களுக்கு “குயம்” என்ற பட்டம் அரசர்களால் வழங்கப்பட்டது என்றும் இப்பழக்கம் பத்தாம் நூற்றண்டு வரை இருந்ததாகவும் அவ்வை சு. துரைசாமிப் பிள்ளை  அவர்கள் தம் நூலில் குறிப்பிடுகிறார். ஆகவே, இப்புலவர் குயக்குலத்தைச் சார்ந்த பெண் என்பது இவருடைய பெயரிலிருந்து தெரியவருகிறது.
பாடப்பட்டோன்: சோழன் கரிகாற் பெருவளத்தான். இவனைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 7- இல் காண்க.
பாடலின் பின்னணி: கரிகால் வளவன், வெண்ணி என்ற ஊரில் நடைபெற்ற போரில் சேரமான் பெருஞ்சேரலாதனையும், பாண்டிய மன்னன் ஒருவனையும், வேளிர்குலத்தைச் சார்ந்த பதினொரு சிற்றரசர்களையும் வென்றான். அப்போரில் சேரமான் பெருஞ்சேரலாதனின் மார்பில் பாய்ந்த வேல் அவன் மார்பைத் துளைத்து முதுகையும் புண்ணாக்கியது. தன் முதுகில் புண்பட்டதால் அவன் நாணமுற்று வடக்கிருந்து உயிர் துறந்தான். அதைக் கேள்வியுற்ற வெண்ணிக் குயத்தியார், இப்பாடலில், சேரமான் பெருஞ்சேரலாதனின் செயலை வியந்து, கரிகாலனை நோக்கி, “வேந்தே, போரில் வெற்றி பெற்றதால் நீ வெற்றிக்குரிய புகழ் மட்டுமே அடைந்தாய். ஆனால், சேரமான் பெருஞ்சேரலாதன் உனக்கு வெற்றியை அளித்தது மட்டுமல்லாமல், உன்னால் உண்டாகிய புண்ணுக்கு நாணி, அவன் வடக்கிருந்து பெரும்புகழ் பெற்றான். ஆகவே, அவன் உன்னைவிட நல்லவன் அல்லனா?” என்று கேட்கிறார்.


திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தலைப் பற்றிய பாடல்கள் வாகைத் திணையில் அடங்கும்.
துறை: அரசவாகை. அரசனது இயல்பை எடுத்துரைப்பது அரச வாகையாகும்.

நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி
வளிதொழில் ஆண்ட உரவோன் மருக!
களிஇயல் யானைக் கரிகால் வளவ!
சென்றுஅமர்க் கடந்தநின் ஆற்றல் தோன்ற
5 வென்றோய், நின்னினும் நல்லன் அன்றே
கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை
மிகப் புகழ் உலகம் எய்திப்
புறப்புண் நாணி, வடக் கிருந்தோனே.

அருஞ்சொற்பொருள்:
1. நளி = செறிதல், குளிர்ச்சி; இரு = பெரிய; முந்நீர் = கடல்; நாவாய் = கப்பல். 2. வளி = காற்று; உரவோன் = வலியவன்; மருகன் = வழித்தோன்றல். 3. களி = செருக்குறுதல். 4. அமர் = போர்; கடந்த = அழித்த. 6. கலி = தழைத்தல்; பறந்தலை = போர்க்களம்.

கொண்டு கூட்டு: உரவோன் மருக, கரிகால் வளவ,வென்றோய்,வெண்ணிப் பறந்தலைப்பட்ட புறப்புண் நாணி, உலகத்துப் புகழ் மிக எய்தி வடக் கிருந்தோன், நின்னினும் நல்லன் அன்றே எனக் கூட்டுக.

உரை: காற்றின் இயல்பை அறிந்து, நீர் நிறைந்த பெரிய கடலில் மரக்கலத்தை ஓட்டிய வலியவர்களின் வழித்தோன்றலே! செருக்குடைய யானைகளையுடைய கரிகால் வளவனே! போருக்குச் சென்று உனது வலிமை தோன்றுமாறு வெற்றி கொண்டவனே! மிகுந்த அளவில் புதிய வருவாய் உள்ள வெண்ணி என்னும் ஊரில் நடைபெற்ற போரில், முதுகில் புண்பட்டதற்கு நாணி, வடக்கிருந்து மிக்க புகழுடன் விண்ணுலகம் எய்திய சேரமான் பெருஞ்சேரலாதன் உன்னைவிட நல்லவன் அல்லனோ?

சிறப்புக் குறிப்பு: காற்றைப் பயன்படுத்திக் கப்பலைச் செலுத்தும் முறையைச் சங்க காலத்திலேயே தமிழர்கள் அறிந்திருந்தார்கள் என்பது இப்பாடலிலிருந்து தெரிய வருகிறது.


__________________


Guru

Status: Offline
Posts: 24769
Date:
Permalink  
 

67. அன்னச் சேவலே!

 
பாடியவர்: பிசிராந்தையார் (67, 184, 191, 212). பிசிர் என்பது பாண்டிய நாட்டில் இருந்த ஓரூர். ஆந்தையார் என்பது இப்புலவரின் இயற்பெயர். இவர் காலத்தில் பாண்டிய நாட்டை ஆண்ட மன்னன் பாண்டியன் அறிவுடை நம்பி. இப்புலவர், சோழ மன்னன் கோப்பெருஞ்சோழனிடம் மிகுந்த அன்புடையவர். மிகுந்த அன்புடையவராக இருந்தாலும் இவரும் கோப்பெருஞ்சோழனும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்ததில்லை. சந்திக்காமலேயே அவர்கள் நட்பு வளர்ந்து கொண்டிருந்தது, “ புணர்ச்சிப் பழகுதல் வேண்டா; உணர்ச்சிதாம் நட்பாம் கிழமை தரும் (குறள் - 785).” என்ற வள்ளுவரின் குறளுக்கு எடுத்துக் காட்டாக இவர்களுடைய நட்பு இருந்தது. தன் புதல்வர்களுடன் ஏற்பட்ட பகையின் காரணத்தால் மனம் வருந்திக் கோப்பெருஞ் சோழன் வடக்கிருந்து உயிர் நீத்தான். அதைக் கேட்ட பிசிராந்தையார் சோழ நாட்டிற்குச் சென்று கோப்பெருஞ்சோழன் இறந்தவிடத்திலேயே தானும் வடக்கிருந்து உயிர் நீத்தார்.

இவர் புறநானூற்றில் நான்கு பாடல்களையும், அகநானூற்றில் 308-ஆம் செய்யுளையும், நற்றிணையில் 91-ஆம் செய்யுளையும் இயற்றியவர். இவர் செய்யுட்கள் சிறந்த கருத்தாழமும் இலக்கிய நயமும் உடையவை.
பாடப்பட்டோன்: கோப்பெருஞ் சோழன் (67, 212, 213, 219, 221, 222, 223).
கரிகாலனுக்குப் பிறகு சோழநாட்டை ஆண்ட மன்னர்களில் கிள்ளிவளவன் என்பவனும் ஒருவன் என்று வரலாறு கூறுகிறது. ஆனால், கிள்ளிவளவனுக்கும் கரிகாலனுக்கும் இருந்த உறவுமுறை என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை. சில வரலாற்று ஆசிரியர்கள், கரிகால் வளவனுக்குப் பிறகு, அவன் மகன் வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி என்பவன் சோழ நாட்டின் ஒரு பகுதிய ஆண்டதாகவும், அவனுடைய மூன்று மகன்களுள் ஒருவன் கிள்ளிவளவன் என்றும் கூறுகின்றனர். கிள்ளி வளவனுக்குப் பிறகு சோழநாட்டை ஆண்ட மன்னர்களில் ஒருவன் கோப்பெருஞ் சோழன். கிள்லிவளவனுக்கும் கோப்பெருஞ்சோழனுக்கும் இருந்த உறவுமுறை தெரியவில்லை. கோப்பெருஞ்சோழன் சிறந்த தமிழ்ப் புலமை உடையவனாக இருந்தான் என்பது இவன் புறநானூற்றில் இயற்றிய மூன்று பாடல்களிலிருந்தும் (214, 215, 216), குறுந்தொகையில் இவன் இயற்றிய நான்கு பாடல்களிலிருந்தும் (20, 53, 129, 147) தெரியவருகிறது. இவனுக்கும் இவனுடைய இருமகன்களுக்கும் இடையே பகை மூண்டது. பகையின் காரணத்தால், தன் மக்களை எதிர்த்துப் போருக்குப் புறப்பட்டான். புல்லாற்றூர் எயிற்றியனார் முதலிய புலவர் பெருமக்கள் கூறிய அறிவுரைக்கேற்ப கோப்பெருஞ்சோழன் போர் செய்யும் எண்ணத்தைக் கைவிட்டான். தன் மக்களுடன் தோன்றிய பகையால் வருத்தமடைந்த கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து உயிர் நீத்தான்.
பாடலின் பின்னணி: புலவர் பிசிராந்தையார், கோப்பெருஞ்சோழனக்கும் தனக்கும் உள்ள நட்பையும், அவனுடைய வீரம், நாட்டைக் காக்கௌம் பண்பு, அன்பு போன்ற நற்குணங்களையும் வடதிசை நோக்கிச் செல்லும் ஒரு சேவலிடம் கூறுவதுபோல் அமைந்துள்ளது. மற்றும், அச்சேவல், உறையூருக்குச் சென்று கோப்பேருஞ்சோழனைக் கண்டு ”நான் பிசிராந்தையின் அடியேன்” என்று சொன்னால் கோப்பெருஞ்சோழன் சேவலின் பெட்டை அணிவதற்கு நல்ல அணிகலன்களைத் தருவான் என்றும் இப்படலில் கூறுகிறார்

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: இயன் மொழி. இயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும்.

அன்னச் சேவல்! அன்னச் சேவல்!
ஆடுகொள் வென்றி அடுபோர் அண்ணல்
நாடுதலை அளிக்கும் ஒண்முகம் போலக்
கோடுகூடு மதியம் முகிழ்நிலா விளங்கும்
5 மையல் மாலையாம் கையறுபு இனையக்
குமரிஅம் பெருந்துறை அயிரை மாந்தி
வடமலைப் பெயர்குவை ஆயின் இடையது
சோழ நன்னாட்டுப் படினே கோழி
உயர்நிலை மாடத்துக், குறும்பறை அசைஇ
10 வாயில் விடாது கோயில் புக்கு எம்
பெருங்கோக் கிள்ளி கேட்க இரும்பிசிர்
ஆந்தை அடியுறை எனினே, மாண்ட நின்
இன்புறு பேடை அணியத்தன்
நன்புறு நன்கலம் நல்குவன் நினக்கே.

அருஞ்சொற்பொருள்:
2. ஆடு = கொல்லுதல், வெற்றி; அடுபோர் = வெல்லும் போர். 3. தலையளித்தல் = காத்தல், கருணையோடு நோக்குதல்; ஓள் = ஒளி. 4. கோடு = பக்கம்; முகிழ் = குவியும். 5. மையல் = மயக்கம்; கையறுதல் = செயலற்றிருத்தல்; இனைதல் = வருந்தல். 6. மாந்துதல் = உண்ணுதல். 8. கோழி = உறையூர். 9. குறும்பறை = பேடை (பெண் பறவை); அசைதல் = தங்குதல். 10. விடுதல் = நிறுத்துதல். 11. கிள்ளி = சோழன் (சோழ மன்னர்களின் சிறப்புப் பெயர்); இரு = பெரிய. 12. அடியுறை = அடியேன். 13. பேடை = பெட்டை.

உரை: அன்னச் சேவலே! அன்னச் சேவலே! கொல்லும் போரில் வெற்றி பெற்று, நாட்டை அருள் செய்து காக்கும் மன்னனின் ஒளிதிகழும் முகம் போல், இரண்டு பக்கங்களும் ஒன்று கூடி, முழுமதி ஒளியுடன் விளங்கி மயக்கம் தரும் மாலைப் பொழுதில், நான் செயலற்று வருந்துகிறேன். நீ குமரி ஆற்றின் பெரிய துறையில் அயிரை மீன்களை உண்டு, வடதிசையில் உள்ள இமயத்தை நோக்கிச் சென்றாயாயின், இடையே சோழ நாடு உள்ளது. அங்கே, உறையூரில் உள்ள உயர்ந்த மாடத்தில் உனது பெட்டையோடு தங்கி, வாயில் காவலரைக் கடந்து, அரண்மனைக்குள் புகுந்து, கோப்பெருஞ்சோழனின் காதுகளில் கேட்குமாறு, “ நான் பெருமைக்குரிய பிசிராந்தையாரின் அடியேன்” என்று சொன்னால், பெருமைக்குரிய உன் இனிய பெட்டை அணிவதற்குத் தன்னுடைய நல்ல அணிகலன்களைக் கோப்பெருஞ்சோழன் தருவான்.


__________________


Guru

Status: Offline
Posts: 24769
Date:
Permalink  
 

68. பிறன்கடை மறப்ப நல்குவன் செலினே!

 
பாடியவர்: கோவூர் கிழார். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 31- இல் காண்க.
பாடப்பட்டோன்: சோழன் நலங்கிள்ளி. இவனைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 27- இல் காண்க.
பாடலின் பின்னணி: சோழன் நலங்கிள்ளி உறையூரிலிருந்து ஆட்சி செய்த பொழுது, கோவூர் கிழார் அவனைக் காணச் சென்றார். அவன் உயர்ந்த அணிகலன்களை அணிந்து, மகளிரிடம் இனிமையாகப் பழகுவதையும், வீரர்கள் அவனைப் பணிந்து வாழ்வதையும், தன் நாட்டு மக்களை அவன் அன்போடு பாதுகாப்பதையும், அவனுடைய வீரர்கள் போர்மீது மிகுந்த விருப்பமுடையவர்களாக இருப்பதையும் அவர் நேரில் கண்டார். தான் கண்ட காட்சிகளைக், கோவூர் கிழார், பாணன் ஒருவனிடம் கூறுவதுபோல் இப்பாடல் அமைந்துள்ளது.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: பாணாற்றுப்படை. பரிசு பெற்ற பாணன் பரிசு பெற வரும் பாணனைப் புரவலரிடம் ஆற்றுப்படுத்துவது.


உடும்புஉரித்து அன்ன என்புஎழு மருங்கின்
கடும்பின் கடும்பசி களையுநர்க் காணாது
சில்செவித்து ஆகிய கேள்வி நொந்துநொந்து
ஈங்குஎவன் செய்தியோ? பாண! பூண்சுமந்து
5 அம்பகட்டு எழிலிய செம்பொறி ஆகத்து
மென்மையின் மகளிர்க்கு வணங்கி வன்மையின்
ஆடவர்ப் பிணிக்கும் பீடுகெழு நெடுந்தகை
புனிறுதீர் குழவிக்கு இலிற்றுமுலை போலச்
சுரந்த காவிரி மரங்கொல் மலிநீர்
10 மன்பதை புரக்கும் நன்னாட்டுப் பொருநன்
உட்பகை ஒருதிறம் பட்டெனப் புட்பகைக்கு
ஏவான் ஆகலின் சாவேம் யாம்என
நீங்கா மறவர் வீங்குதோள் புடைப்பத்
தணிபறை அறையும் அணிகொள் தேர்வழிக்
15 கடுங்கண் பருகுநர் நடுங்குகை உகுத்த
நறுஞ்சேறு ஆடிய வறுந்தலை யானை
நெடுநகர் வரைப்பின் படுமுழா ஓர்க்கும்
உறந்தை யோனே குருசில்
பிறன்கடை மறப்ப நல்குவன் செலினே.

அருஞ்சொற்பொருள்:
1. என்பு = எலும்பு; மருங்கு = பக்கம் (விலா). 2 கடும்பு = சுற்றம். 3. சில் = சில. 4. பூண் = அணிகலன். 5 அம் = அழகிய; பகடு = பெரிய, பெருமை; எழில் = அழகு, இளமை; பொறி = புள்ளி. ஆகம் = மார்பு. 7. பிணித்தல் = கட்டுதல், சிறைப்படுத்தல்; பீடு = பெருமை. 8. புனிறு = ஈன்ற அணிமை; இலிற்றுதல் = சுரத்தல். 9. மலிதல் = மிகுதல். 10 மன்பதை = மக்கட் கூட்டம்; புரத்தல் = காத்தல். 11. திறம் = பகுதி. 14. தணிபறை = தணிவதற்குக் காரணமாகிய பறை. 15 கடுங்கள் = முதிர்ந்த கள்; உகுத்தல் = சிதறுதல்.16. வறுமை = வெறுமை; வறுந்தலை = பாகர் ஏறாத வெறுந்தலை. 17. வரைப்பு = எல்லை; ஓர்த்தல் = கேட்டல். 18. குருசில் = குரிசில் = அரசன்.

கொண்டு கூட்டு: பாண, நீ செலின், நெடுந்தகை, பொருநன் குருசில், உறந்தையோன், அவன் பிறன் கடை மறப்ப நல்குவன்; நீ ஈங்கு எவன் செய்தியோ எனக் கூட்டுக.

உரை:பாண! உடும்பை உரித்ததுபோல் எலும்புகள் எழும்பிய விலாப் பக்கங்களை உடைய சுற்றத்தின் மிகுந்த பசியைத் தீர்ப்பாரைக் காணாமல், உன் பாடல்களைக் கேட்பவர்கள் சிலரே என்று நொந்துகொண்டு இங்கு என்ன செய்துகொண்டிருக்கிறாய்? அணிகலன்களை அணிந்த, அழகிய, பெரிய, மார்பில் சிவந்த புள்ளிகளை (தேமல்) உடையவன் நலங்கிள்ளி. அவன் மென்மையான மகளிரிடம் பணிவாகவும், வலிமை மிகுந்த பகைவர்களைச் சிறைப்படுத்தும் பெருமையும் பொருந்தியவன். அவன், குழந்தை பிறந்தவுடன் பால் சுரக்கும் முலைபோல், நீர்ப் பெருகிய காவிரி, வெள்ளப் பெருக்கெடுத்து கரையிலுள்ள மரங்களை அழிக்கும் சோழ நாட்டுக்குத் தலைவன். தன்னுடைய படையில் ஒரு பகுதியில் உட்பகை தோன்றினால், பறவைகளால் நிகழும் தீய நிமித்தங்கள் நடைபெறும் பொழுது, அப்படையைப் போருக்குச் செலுத்துவதை நிறுத்திவிடுவான். போருக்குச் செல்ல இயலாதலால், அந்தப் படைவீரர்கள், “ செத்து விடுவோம்” என்று கூறித் தங்கள் பருத்த தோளைத் தட்டுவர். அவர்கள் ஆத்திரம் தணிவதற்குத் தேரோடும் தெருக்களில், தாழ்ந்த ஒலியில் பறையை முழக்குவர். அவர்களில் சிலர், நன்கு முதிர்ந்த கள்ளைப் பருகியதால் நடுங்கும் கைகளால் அக்கள்ளைச் சிந்துவர். கள் சிந்தியதால், சேறாகிய தெருக்களில் பாகர்கள் இல்லாமல் திரியும் யானைகள் பெரிய நகரில் ஒலிக்கும் முரசொலியைக் காது கொடுத்துக் கேட்கும். அத்தகைய உறையூரில், சோழன் நலங்கிள்ளி உள்ளான். நீ அவனிடம் சென்றால், அதற்குப் பிறகு வேறு யாரிடத்தும் செல்வதை மறக்கும் அளவுக்கு பரிசளிப்பான்.


__________________


Guru

Status: Offline
Posts: 24769
Date:
Permalink  
 

69. பொற்றாமரை பெறுவாய்!

 
பாடியவர்: ஆலத்தூர் கிழார். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 34- இல் காண்க.
பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன். இவனைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 34- இல் காண்க.
பாடலின் பின்னணி: ஒருகால், ஆலத்தூர் கிழார் கிள்ளி வளவனைக் காணச் சென்றார். அவனுடைய படைச் சிறப்பும், கொடைச் சிறப்பும் அவரை மிகவும் கவர்ந்தன. அவனுடைய சிறப்பியல்புகளை எடுத்துக் கூறி, ஒரு பாணனை கிள்ளி வளவனிடம் ஆற்றுப்படுத்துவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: பாணாற்றுப்படை. பரிசு பெற்ற பாணன் பரிசு பெற வரும் பாணனைப் புரவலரிடம் ஆற்றுப்படுத்துவது.


கையது கடன்நிறை யாழே; மெய்யது
புரவலர் இன்மையின் பசியே; அரையது
வேற்றிழை நுழைந்த வேர்நனை சிதாஅர்
ஓம்பி உடுத்த உயவற் பாண!
5 பூட்கை இல்லோன் யாக்கை போலப்
பெரும்புல் என்ற இரும்பேர் ஒக்கலை;
வையகம் முழுதுடன் வளைஇப், பையென
என்னை வினவுதி ஆயின், மன்னர்
அடுகளிறு உயவும் கொடிகொள் பாசறைக்
10 குருதிப் பரப்பின் கோட்டுமா தொலைச்சிப்
புலாக்களம் செய்த கலாஅத் தானையன்
பிறங்குநிலை மாடத்து உறந்தை யோனே!
பொருநர்க்கு ஓக்கிய வேலன் ஒருநிலைப்
பகைப்புலம் படர்தலும் உரியன் தகைத்தார்
15 ஒள்ளெரி விரையும் உருகெழு பசும்பூண்
கிள்ளி வளவற் படர்குவை ஆயின்
நெடுங்கடை நிற்றலும் இலையே; கடும்பகல்
தேர்வீசு இருக்கை ஆர நோக்கி
நீஅவற் கண்ட பின்றைப் பூவின்
20 ஆடும்வண்டு இமிராத் தாமரை
சூடாய் ஆதல் அதனினும் இலையே.

அருஞ்சொற்பொருள்:
1. கடன் = முறை. 2. அரை = இடுப்பு. 3. வேர் = வேர்வை; சிதாஅர் = சிதார் = கந்தை. 4. ஓம்பி = பாதுகாத்து; உயவல் = வருத்தம். 5. பூட்கை = எழுச்சி, கொள்கை. 6 புல் = அற்பம், இழிவு (பொலிவற்ற); ஒக்கல் = சுற்றம். 7. பையென = மெல்ல. 10. கோட்டுமா = யானை; தொலைச்சி = கொன்று. 11. கலாம் = போர். 12. பிறங்கல் = உயற்சி. 14 படர்தல் = செல்லுதல்; தகை = பெருமை, மேம்பாடு. 15. உரு = நிறம்; புரை = ஒப்பு; பூண் = அணிகலன். 18. வீசுதல் = வரையாது கொடுத்தல். 20. இமிர்தல் = மொய்த்தல்.

கொண்டு கூட்டு: பாண, ஒக்கலையாய், வளைஇ, வினவுதியாயின், தானையை உடையவன், உறந்தையோன், அவன்பாற் படர்குவையாயின், நின் கையது யாழாதலானும், மெய்யது பசியாதனாலும் நெடுங்கடை நிற்றலுமில்லை; நீ அவற்கண்ட பின்றைத் தாமரை சூடாயாதல் அதனினும் இல்லை எனக் கூட்டுக.

உரை: உன் கையில் இருப்பது முறைப்படி செய்த யாழ். உன் உடல், உதவுவோர் இல்லாமையால் பசியால் வாடுகிறது. உன் இடுப்பில் இருப்பது, வியர்வையால் நனைந்த, கிழிந்த கந்தைத் துணி. அந்தத் துணியில் உள்ள கிழிசல்கள் வேறுவேறு நிறமுடைய நூல்களால் தைக்கப்பட்டிருக்கின்றன. நீ அதைப் பாதுகாத்து உடுத்திக் கொண்டிருக்கிறாய். வருத்தத்தில் உள்ள பாண, நீ எழுச்சி இல்லாதவனின் உடல்போலப் பொலிவற்ற பெரிய சுற்றத்தாரை உடையவன். இந்த நிலையில், நீ உலகம் முழுவதும் சுற்றி வந்து, “ என் வறுமையைத் தீர்ப்பவர் யார்?” என்று என்னிடம் மெல்லக் கேட்கின்றாயாயின், நான் கூறுவதைக் கேள்.

கிள்ளிவளவனின் கொடி பறக்கும் பாசறையில், பகை வேந்தர்களது யானைகள் புண்பட்டு வருந்தும். அவன், குருதிப் பரப்பில் யானைகளைக் கொன்று புலால் நாறும் போர்க்களத்தை ஏற்படுத்திய படையை உடையவன்; உயர்ந்த மாடங்களை உடைய உறையூரில் உள்ளான்; போரிடுவோரைத் தாக்குவதற்காக வேல் எடுத்தவன்; சில சமயங்களில் பகைவர் நாடுகளுக்கும் சென்று போர் புரிபவன்; பெருமைக்குரிய மாலையை உடையவன்; ஓலியுடன் கூடிய தீயைப் போன்ற நிறம் பொருந்திய பசும்பொன்னால் செய்யப்பட்ட அணிகலன்களை அணிந்தவன். அத்தகைய கிள்ளி வளவனிடம் சென்றாயானல், அவனுடைய நெடிய வாயிலில் நீ நெடுநேரம் காத்திருக்க மாட்டாய்; நண்பகல் நேரத்தில், அவன் பரிசிலர்க்குத் தேர்களை வழங்குவதை உன் கண்ணாரக் காண்பாய். நீ அவனைக் கண்ட பின்பு, பூக்களில் புகுந்து ஆடும் வண்டுகள் மொய்க்காத பொற்றாமரைப் பூவைச் சூடாது இருப்பது அதனினும் இல்லை. அதனால் அங்கு செல்வாயாக.


__________________


Guru

Status: Offline
Posts: 24769
Date:
Permalink  
 

PuRanaanuuRu - Poem 70

 
70. குளிர்நீரும் குறையாத சோறும்

பாடியவர்: கோவூர் கிழார்: (கோவூர் அழகியார் எனவும் பாடம்). இவர் கோவூரைச் சார்ந்தவர். வேளாண் மரபினர். இவர் புறநானூற்றில் 15 பாடல்களை இயற்றியவர். சோழன் நலங்கிள்ளிக்கும் சோழன் நெடுங்கிள்ளிக்கும் இடையே போர் மூண்ட பொழுது, கோவூர் கிழார், “ ஒருவீர் தோற்பினும், தோற்ப நும் குடியே; இருவீர் வேறல் இயற்கையும் அன்றே; அதனால், குடிப்பொருள் அன்று, நும் செய்தி” என்று கூறி அவர்களைச் சமாதானப்படுத்திப் போரைத் தடுத்தி நிறுத்தினார் (புறம்- 45). பின்னர், ஒரு சமயம் நலங்கிள்ளி, நெடுங்கிள்ளியை ஆவூரில் முற்றுகையிட்ட பொழுது நெடுங்கிள்ளி போரிடாமல் அரண்மனையில் அடைபட்டுக் கிடந்தான். அவ்வமயம், “அறவை யாயின்,’நினது’ எனத் திறத்தல்! மறவை யாயின், போரொடு திறத்தல்; அறவையும் மறவையும் அல்லை யாகத் திறவாது அடைத்த திண்ணிலைக் கதவின் நீள்மதில் ஒருசிறை ஒடுங்குதல் நாணுத்தக வுடைத்திது காணுங் காலே “ என்று அறிவுரை கூறினார். மற்றும், சோழன் நெடுங்கிள்ளி, இளந்தத்தன் என்னும் புலவனை ஒற்றன் எனத் தவறாகக் கருதிக் கொல்ல நினைத்தான். அப்போது, புலவர் கோவூர் கிழார், “இளந்தத்தன் ஒற்றன் அல்ல; அவர் ஒரு புலவர்” என்று எடுத்துரைத்து அப்புலவரைக் காப்பாற்றினார் (புறம் - 47). சோழன் கிள்ளி வளவன், மலையமான் என்பவனின் மக்களை யானையின் காலிலிட்டுக் கொல்ல முயன்ற பொழுது, அச்சிறுவர்களின் இயல்புகளைக் கூறி, அவர்களைக் காப்பாற்றினார் (புறம் - 46). புலவர் கோவூர் கிழார், சிறந்த அறிவும், ஆழ்ந்த புலமையும், மன்னர்கள் தவறு செய்தால் தட்டிக் கேட்கும் மன உரமும் கொண்ட சான்றோர் என்பது அவர் இயற்றிய பாடல்களிலிருந்து தெரிகிறது.

பாடப்பட்டவன்: கிள்ளி வளவன். இவன் படை வலிமை, கொடைத்தன்மை, தமிழ்ப் புலமை ஆகியவற்றில் சிறந்தவன். புறநானூற்றில் 19 பாடல்கள் இவனைப் புகழ்கின்றன. இவனைப் பாடிய புலவர் பெருமக்கள் பலர். புறநானூற்றில் இவன் இயற்றிய பாடல் ஒன்றும் உள்ளது (புறம் 173).

பாடலின் பின்னணி: கோவூர் கிழார் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனைப் பாடிப் பரிசு பெற்றவர். அவன் மீது மிகுந்த அன்பு கொண்டவர். சிறுகுடி என்னும் ஊரில் பண்ணன் என்னும் வள்ளல் ஒருவன் இருந்தான். கிள்ளி வளவனும் பண்ணனும் நெருங்கிய நண்பர்கள். “தனக்கென வாழாப் பிறர்க்குரியாளன், பண்ணன் சிறுகுடி” என்று அகநானூற்றுப் பாடல் 54-இல் பண்ணன் சிறப்பிக்கப்படுகிறான். பண்ணனை “பசிப்பிணி மருத்துவன்” என்று புறநானூற்றில் உள்ள 173 -ஆம் பாடலில் கிள்ளி வளவன் புகழ்கின்றான். கோவூர் கிழார் பண்ணன் மீதும் மிக்க அன்பு கொண்டவர். இப்பாடலில், கோவூர் கிழார், கிள்ளி வளவனின் நாட்டு வளத்தையும் பண்ணனின் ஈகையையும் புகழ்ந்து பாடிப் பாணன் ஒருவனை கிள்ளி வளவனிடமும் பண்ணனிடமும் ஆற்றுப்படுத்துகிறார்.

திணை : பாடாண். துறை: பாணாற்றுப்படை.

தேஎம் தீந்தொடைச் சீறியாழ்ப் பாண!
கயத்து வாழ் யாமை காழ்கோத் தன்ன
நுண்கோல் தகைத்த தெண்கண் மாக்கிணை
இனிய காண்க; இவண் தணிக எனக் கூறி;
5 வினவல் ஆனா முதுவாய் இரவல!
தைத் திங்கள் தண்கயம் போலக்,
கொளக்கொளக் குறைபடாக் கூழுடை வியனகர்,
அடுதீ அல்லது சுடுதீ அறியாது;
இருமருந்து விளைக்கும் நன்னாட்டுப் பொருநன்,
10 கிள்ளி வளவன் நல்லிசை யுள்ளி,
நாற்ற நாட்டத்து அறுகாற் பறவை
சிறுவெள் ளாம்பல் ஞாங்கர்,ஊதும்
கைவள் ஈகைப் பண்ணன் சிறுகுடிப்
பாதிரி கமழும் ஓதி, ஒண்ணுதல்,
15 இன்னகை விறலியடு மென்மெல இயலிச்
செல்வை ஆயின், செல்வை ஆகுவை;
விறகுஒய் மாக்கள் பொன்பெற் றன்னதோர்,
தலைப்பாடு அன்று, அவன் ஈகை;
நினைக்க வேண்டா; வாழ்க, அவன் தாளே!

அருஞ்சொற்பொருள்
1. தேம் = தேன்; தீ = இனிமை; தொடை = யாழின் நரம்பு. 2. கயம் = குளம்; காழ் = வலிய கம்பி. 3. தெண் = தெளிந்த. 5. ஆனாமை = நீங்காமை; முதுவாய் = முதிய வாய்மையுடைய. 7. கூழ் = உணவு; வியல் = அகலம். 12. ஆம்பல் = அல்லி; ஞாங்கர் = மேலே. 14. பாதிரி = ஒரு மரம்; ஓதி = பெண்களின் கூந்தல். 15. இயலுதல் = நடத்தல். 17. ஓய்தல் = அழிந்து ஒழிதல் (வெட்டுதல்). 18. தலைப்பாடு = தற்செயல் நிகழ்ச்சி

உரை: தேன் போன்ற இனிய இசையை அளிக்கும் சிறிய யாழையுடைய பாண! குளத்தில் வாழும் ஆமையை வலிய கம்பியில் கோத்ததைப் போல் நூண்ணிய குச்சிகளால் பொருத்தப்பட்ட தெள்ளிய கண்ணையுடைய பெரிய கிணையைக் காட்டி “இதை இனிதே காண்க; இங்கே சற்று இருந்து செல்க” என்று கூறும் முதுமையும் வாய்மையும் உடைய இரவலனே!

கிள்ளி வளவனின் நாடு, தை மாதத்தில் தெளிந்த குளிர்ந்த நீரையுடைய குளம் போல் கொள்ளக் கொள்ளக் குறையாத உணவுப் பொருட்களுடைய அகன்ற பெரிய நகரங்களுடையது. அந்நாடு, பகைவர்களால் தீக்கிறையாக்கப்பட்டதில்லை. அங்கு சமைப்பதற்குப் பயன்படுத்தப்படும் தீயை மட்டுமே காணமுடியும். கிள்ளி வளவன், பசிப்பணியை நீக்குவதற்குத் தேவையான நீர் வளமும் நில வளமும் மிகுந்த நல்ல நாட்டுக்கு அரசன். அவன் புகழை நினைவுகொள். நீ கிள்ளி வளவனை நோக்கிச் செல்லும் வழியில், நறுமணத்தை விரும்பும் வண்டுகள் வெண்ணிற ஆம்பல் மலர்களின் மேலே ஒலிக்கும் சிறுகுடி என்ற ஊரில், வள்ளல் தன்மை உடைய கையையும் ஈகையில் சிறந்தவனுமான பண்ணன் என்ற ஒருவன் உள்ளான். பாதிரி மணம் கமழும் கூந்தலும் ஒளிபொருந்திய நெற்றியும் உடைய உன் விறலியுடன் மெல்ல மெல்ல நடந்து சிறுகுடிக்குச் செல்வாயானால், நீ செல்வந்தன் ஆவாய். பண்ணன் உனக்குப் பரிசுகளை அளிப்பான். பண்ணனின் ஈகை, விறகு வெட்டப் போனவனுக்குப் பொன்கிடைத்ததைப்போல் தற்செயலாக நடைபெறும் நிகழ்ச்சி அல்ல; நீ அவனிடம் பரிசு பெறுவது உறுதி. பரிசு கிடைக்குமா என்று நீ ஐயப்படத் தேவையில்லை. வாழ்க பண்ணனின் தாள்கள்!


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard