New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சொல் உருவாக்கத்தில் சாதியம் - முனைவர் ஞா.குருசாமி


Guru

Status: Offline
Posts: 24596
Date:
சொல் உருவாக்கத்தில் சாதியம் - முனைவர் ஞா.குருசாமி
Permalink  
 


சொல் உருவாக்கத்தில் சாதியம் - முனைவர் ஞா.குருசாமி -

 

 

- முனைவர் ஞா.குருசாமி, துணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, அருள் ஆனந்தர் கல்லூரி, மதுரை -சொற்கள் ஒவ்வொன்றும் வெறும் எழுத்துகளின் கூட்டமைவு மட்டுமல்ல. அவற்றுக்குள் நுணுக்கமான வரலாறு ஒளிந்திருக்கிறது. சற்று ஆழ்ந்து உற்று நோக்கும் போது சொற்களுக்கு உள்ளான புரிதலை வரலாறு என்பதோடு மட்டும் நிறுத்தி விட முடியவில்லை. சமநிலைச் சமூகத்திற்கு எதிரான சாதிக் கட்டுமான, மேலாதிக்கச் சிந்தனாவெளி பல சொற்களுக்குள் அடங்கிக் கிடக்கின்றது. எல்லாச் சொற்களுக்குள்ளும் இருக்க வாய்ப்பிருக்கிறது என்றாலும், சொற்பகுப்பு பெயர், வினை, இடை, உரி என விரிந்த தளத்தினுடையதாக இருப்பதால் சொற்களின் பின்புலப் புரிதலை முழுமையான வகை, தொகை ஆய்வுகளுக்குப் பின்னரே வரையறுத்து இனங் காணமுடியும்.

சமூக அமைப்பு அதிகாரமும,; பொருளும் பரவலாகி விடக்கூடாது என்ற நுணுக்கமான சிந்தனைசார் சாதியத்தில் தோய்ந்து இருக்கிறது. கட்டமைக்கப்பட்ட காலம் தொட்டே அதிகாரத்தையும,; பொருளையும் பரவலாகச் செய்யவிடாமல் தடுத்தே வந்த சாதியம், காலத்திற்கேற்றவாறு தன்னை உருமாற்றிக் கொள்ளவும் தவறவில்லை. எண்ணும் எழுத்தும் (கல்வி) சமீப காலம் வரை பிராமணர்களிடமும,; ஆதிக்கச் சாதியினரிடமும் இருந்து வந்தது. இவர்களிடம் இயல்பாக இருந்த ஆதிக்கக்குணம் இவர்களின் கையில் இருந்த கல்வியிலும் இருந்தது. குருகுலக் கல்விப் போதனையை வெறுமனே கல்விப் போதனையாக மட்டுமே எடுத்துக்கொள்ள முடியாது. குறிப்பிட்ட சிலரைத் தேர்ந்து, அவர்களுக்கு மட்டும் கல்வி புகட்டிய குருக்களின் எண்ணம், புத்தி ஆகியவையும் கல்வியாகப் போதிக்கப்பட்டிருக்க வேண்டும். அதிகாரம், பொருள் ஆகியவற்றைப் பரவலாக விடாமல் தடுத்த சாதியச் சமூகத்தில் கல்வியின் மூலம் தன் சுகபோக வாழ்வைத் தக்கவைத்துக் கொண்ட குருக்கள், சொற்களின் உருவாக்கத்தில் முக்கியப் பங்காற்றியிருக்கின்றனர். இத்தகு சூழலில் தான் சாதியக் கட்டுமான, மேலாதிக்கச் சிந்தனாவெளி சொற்களுக்குள் ஏற்றப்பட்டு இருக்கிறது. இந்தப் புரிதலோடு சொற்களை அணுகும் போது சில உண்மைகள் வெளிப்படலாம்.

‘கிழக்கு’ என்ற சொல் சூரியன் உதிக்கும் திசையைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையின் சரிவே தமிழகத்தின் நிலம் என்பதால் மேற்கு மேடானதாகவும் கிழக்கு கீழானதாகவும் இருக்கிறது. மேட்டில் (மேற்கு (அ) மலை) பெய்கின்ற மழைநீர் கிழக்கு நோக்கி ஓடி கடலில் கலக்கிறது என்ற கற்பிதம் பொதுப்புத்தியில் ஏற்றப்பட்டு இருக்கிறது. ‘கிழக்கு’ என்ற சொல் சாதியப் புரிதலில் ‘தாழ்ந்த’ என்னும் பொருண்மையில் உருவாக்கப் பட்டதாகத் தெரிகிறது.

தொல்காப்பியர் உவமைக்கான நிலைக்களன் பற்றிக் குறிப்பிடும் போது சிறப்பு, நலன், காதல், வலி ஆகிய நான்கைக் குறிப்பிட்டு விட்டு ‘கிழக்கிடும் பொருளோடு ஐந்து மாகும்’ (உவமையியல். 5) என்கிறார். தாழ்ந்த பொருளைக் கிழக்கிடு பொருள் எனத் தொல்காப்பியர் தனியாகக் குறித்ததும், இளம்பூரணர் சிறப்பு விதியாகக் கொண்டதனுடைய அரசியலும் சாதியப் புரிதலில் வேறொரு தளத்திற்கு இட்டுச் செல்கின்றன.

 

தெரு அமைவுகளிலும் ‘கீழத்தெரு’ தாழ்த்தப்பட்ட வகுப்பினர் வாழும் பகுதியாகவே இருக்கிறது. கட்டுரையாளரின் வசிப்பிடப் பகுதியான விருதுநகர் மாவட்டம,; வத்திராயிருப்பு ஒன்றியப் பகுதிகளைச் சான்றாகக் கொண்டு விளக்கலாம். இவ்வொன்றியம் முழுவதும் கிராமங்கள் நிறைந்தது. வடக்கில் ஆயர்தர்மம், தெற்கில் கிருஷ்ணன்கோயில், கிழக்கில் அழகாபுரி, மேற்கில் பிளவக்கல் ஆகிய ஊர்களை எல்லையாகக் கொண்டுள்ளது. வத்திராயிருப்பு, சுந்தரபாண்டியம், புதுப்பட்டி, கூமாப்பட்டி, ஆகியவை சற்று பெரிய ஊர்கள். வத்திராயிருப்பின் கிழக்குப் பகுதி நொண்டியம்மன் கோவில் தெரு. இத்தெரு முழுமையும் பறையர் இனத்தவர் வாழுகின்றனர். சுந்தரபாண்டியம், புதுப்பட்டி, கூமாப்பட்டி ஆகிய ஊர்களின் கிழக்குப் பகுதிகள் பள்ளர்களின் வசிப்பிடப் பகுதிகளாக உள்ளன. ஆயர்தர்மம், அக்கனாபுரம், தம்பிபட்டி, கிருஷ்ணாபுரம் ஆகிய ஊர்களின் கீழத்தெரு தாழ்த்தப்பட்ட மக்களின் வசிப்பிடப் பகுதியாகவே உள்ளது.

வளையங்குளம் கிராமத்தின் அமைவு ஆதிக்கச் சாதியின் இருப்பிடம்சார் மனோபாவத்தை தெளிவாக உணர்த்தும். ஊரின் முதலில் கள்ளர், பிள்ளை, யாதவர் அவர்களுக்கு கிழக்கே பள்ளர், அவர்களை அடுத்து ஊரின் கிழக்குக் கடைக்கோடியில் அருந்ததியர் ஆகியோர் வாழ்கின்றனர். அயன் கரிசல்குளம் கிராமத்தின் கிழக்குப் பகுதியும் அருந்ததியரின் வசிப்பிடமாக உள்ளது. கோட்டையூரின் கிழக்குப் பகுதி கீழக்கோட்டையூர். இதன் ஒருபகுதி பறையர்களும், அவர்களை அடுத்து தென்மேற்கில் நாயக்கர்களும் வாழுகின்றனர். இப்பகுதியில் ஒன்றுக்கு மேற்பட்ட சாதிக்குழுக்கள் வாழும் ஊர்களில் தாழ்த்தப்பட்ட மக்களின் வசிப்பிடப் பகுதிகள் ஊரின் கிழக்கிலேயே அமைந்துள்ளன.

இம்மாதிரியான தெரு, இருப்பிட அமைவுகளைக் கவனிக்கும் போது சில விஷயங்கள் தெளிவு பெறுகின்றன. கிழக்கு நிலம் தாழ்ந்தது என்பதால் ஊரின் சாக்கடைகள் அனைத்தும் கிழக்கு நோக்கியே ஓடுகின்றன. அவை தாழ்த்தப்பட்ட மக்களின் வசிப்பிடப் பகுதிகளை ஒட்டியே தேங்குகின்றன. அங்கேயே குப்பைகளும் கொட்டப்படுகின்றன. பெரும்பாலான ஊர்களில் சுடுகாடுகள் கிழக்கிலேயே அமைந்துள்ளன. சாக்கடைகள் தேங்குமிடம், குப்பைகள் கொட்டுமிடம். சுடுகாடு, தாழ்த்தப்பட்டோர் வசிப்பிடம் ஆகியன இவ்விடத்து ஒருங்கே நோக்கத்தக்கன. ‘சூரியன் உதிக்கும் திசை கிழக்கு’ என்னும் பொதுப்புத்திக் கற்பிதத்தின் உள்ளாக ‘கிழக்கு’ என்ற சொல்லின் உருவாக்கம் ‘கீழான’, ‘தாழ்த்தப்பட்டோர் வசிப்பிடம்’ என்னும் பொருண்மையைக் குறிப்பதாகவும் இருக்கிறது. ‘நீ எந்தத் தெரு?’ என்று கேட்பதன் நோக்கம் சாதியை அறிந்து கொள்வதற்காகவே. ‘கீழத்தெரு’ என்னும் போது ‘தாழ்த்தப்பட்டவர்’ என்றும், கீழத்தெரு அல்லாத பகுதி என்னும் போது தாழ்த்தப்பட்டவர் அல்ல என்ற தெளிவையும்; அந்தக் கேள்விக்கான பதில் கட்டமைத்துவிடுகிறது. மேட்டு நிலத்தில் வாழ்கிறவர்கள் மேலானவர்கள், தாழ்ந்த நிலத்தில் வாழ்கிறவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்ற கற்பிதம் ‘கிழக்கு’ என்ற சொல்லுக்குள் ஊடாடிக் கிடக்கிறது. வாழிட அமைவுகளிலும் கூட கிழக்கு நிலம் தாழ்ந்த நிலம் என்பதால் வெள்ளப் பெருக்கு ஏற்படும் காலங்களில் தாழ்த்தப்பட்டோரின் வசிப்பிடம் நீரில் மிதக்க, மேட்டு நிலத்தில் இருக்கும் ஆதிக்கச் சாதியினரின் இருப்பிடம் பாதுகாப்பானதாக இருக்கிறது. (அதிமேடுகளில் வாழ்கின்ற மலைவாசிகளை நிலவாசிகளின் சாதிச் சமூகம் வெகுதொலைவில் விலக்கி வைத்திருக்கிறது. மலைவாசிகளுக்குச் சாலைகள், மின்வசதி, பள்ளிகள், மருந்தகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்னும் முழுமையாகப் போய் சேரவில்லை. ஆனால் தேர்தல் நேரத்தில் கழுதைகளில் ஏற்றியாவது வாக்களிக்கும் எந்திரம் கொண்டுபோய்ச் சேர்க்கப்பட்டு விடுகிறது.) நில அமைவிலான சாதிய மேல் ஒ கீழ் கட்டுமானத்தில் மலைவாசிகள் கவனத்தில் கொள்ளப்படவில்லை. ‘கிழக்கு’ என்னும் சொல் உருவாக்கத்தோடு ‘கீழோர்’, ‘கீழ்க்கை’, ‘கீழ்க்கதி’, ‘கீழுலகம்;’, ‘கீழ்மை’ என்னும் சொற்களும் ஒப்பு நோக்கத்தக்கன.

‘கீழ்’ என்பதற்கு ‘ஆதி’ என்ற பொருளும் உண்டு. இந்தப் புரிதலில் ‘ஆதிதிராவிடர்’ என்னும் சொல்லை நோக்கும் போது வேறொரு தளப் புரிதல் கிடைக்கிறது. ‘ஆதி’ என்பதற்கு ‘தொன்மை’ எனப் பொருள்கொண்டு ஆதிதிராவிடரைத் ‘தொன்மையான திராவிடர்’ என்றே வாசிக்கப்படுகிறது. ‘ஆதி’ என்பதற்கு ‘கீழ்’ எனப் பொருள்கொண்டு ‘கீழ்த்திராவிடர்’ என வாசிக்கும் போது, திராவிட மக்களில் ஆதிதிராவிட மக்கள் கீழானவர்கள் என்னும் புரிதல் கிடைக்கிறது. இந்தச் சொல்லைப் பொறுத்தமட்டில் திராவிடர்கள் வேறு, ஆதிதிராவிடர்கள் வேறு என்பது வெட்ட வெளிச்சமாகிறது. இந்நிலையில் சொல் உருவாக்கத்தின் மீதும், உருவாக்கிய சொல் தரும் பொருளின் மீதான கற்பித்தின் மீதும் சந்தேகம் வருகிறது. சாதியப் பின்புலத்தில் உருவாக்கப்பட்ட சொற்களின் மீது பொதுப்புத்திக் கற்பிதத்தை ஏற்றி பரவலாக்கி விட்டு, சொல் உருவாக்கப்பட்ட பின்புல நோக்கத்திற்கு, தேவைக்கு, உள்ளீடான அரசியலுக்கு மிக நேர்த்தியாக சாதியச் சமூகம் திரை போட்டிருக்கிறது.

‘சண்டாளன்’, ‘ஈனன்’, என்ற சொல் உருவாக்கமும் கவனத்திற்குரியன. சண்டாளன், ஈனன் என்பதன் அகராதிப் பொருள் முறையை ‘கீழ்மக்கள்’, ‘கீழ்மகன்’ என்பதாக இருக்கிறது. கீழ்மகன் என்ற சொல் சங்க இலக்கியங்கள் தொடங்கி காணக் கிடைக்கின்றது. சண்டாளன் என்பவன் இருபிறப்பாளன் எனப் பொதுப்புத்தியில் ஏற்றப்பட்டு இருக்கிறது. சண்டாளம், சண்டாளன், சண்டாளி ஆகிய சொற்கள் துரோகம், புலைத்தன்மை, துரோகி என்னும் பொருள் தருவனவாக இருக்கின்றன. ‘சண்டு’ என்பதற்கு ‘பதர்’ என்னும் பொருளும் உண்டு. இது விதைப்பதற்கும், உண்பதற்கும் பயனில்லாத தானியச் சுட்டுப் பெயராகும். ‘சண்டு’ என்பதை வேர்ச்சொல்லாகக் கொண்டு ‘சண்டாளன்’ என்னும் சொல்லை நோக்குமிடத்து ‘பயனில்லாதவன்’ என்ற பொருளைத் தருகிறது. பயனில்லாதவன், துரோகி, புலையன் என்னும் இழிவு குறித்த பொருளைத் தருவதான சண்டாளன் என்ற சொல் பார்ப்பனத்திக்கும், சூத்திரனுக்கும் பிறந்தவனைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

சாதிய அமைப்பில் பெண் கொடுத்தல் - வாங்குதல் யார் யாருக்கு இடையில் நிகழ வேண்டும் என்ற திருமண உறவுமுறை வரையறை செய்யப்பட்டு இருந்தாலும், அதைத் தாண்டிய மணவினைகள் நிகழ்ந்தே வந்திருக்கின்றன. பெண்ணின் பொருட்டு நடந்த இனக்குழு மோதல்கள் ஏராளம். சாதிக்கலப்பு ஏற்பட்டு அதனால் பிறந்த மனிதனைச் சண்டாளன் எனக் குறித்திருப்பதன் மூலம் சாதியத்தின் வக்கிரம் எத்தகையது என்பது உணரப்படுகிறது. சாதியத்தின் மீதான ஆதிக்கச் சாதியினரின் நம்பிக்கையே இத்தகைய சொல் உருவாக்கத்தில் பங்காற்றி இருக்க வேண்டும். புலையன், புலைமகள், புலைச்சேரி, புலைஞர், புலைத்தனம், புலைவினைஞர், என்னும் சொல் உருவாக்கங்கள் ‘கிழக்கு’ என்னும் சொல் உருவாக்க அரசியலில் இருந்து வேறுபட்டதாக அமைந்து இருப்பதை அவதானிக்கலாம். தனிமனிதனை இழிபிறப்பாளனாகக் சுட்டும் பொருண்மையிலான ‘புலை’ என்னும் சொல்லை வேர்ச்சொல்லாகக் கொண்ட சொல் உருவாக்க அரசியல் சாதிய வீரியமும், திடத்தன்மை மிக்கதாகவும் அமைந்து இருக்கிறது.

சாதிய அமைவைத் தக்க வைத்துக்கொள்ள சாதியப் பண்பாட்டை உருவாக்கிக் காத்தல் என்பது காலந்தோறும் இருந்து வந்தாலும் அவற்றுள் சொல் உருவாக்கம் முக்கியப் பங்காற்றி இருக்கிறது. அந்த வகையில் ‘தகனம்’ என்ற சொல் கவனத்தில் கொள்ள வேண்டியதாகும். ‘தகனம்’ என்பதற்கு ‘எரியூட்டதல்’ என்பது அகராதிப் பொருள். எரியூட்டுதலும், தீயும் பார்ப்பனப் பண்பாட்டுக்குரியது. ஆதிக்கச் சாதியினர் தாங்களை மேனிலைப்படுத்திய நெடிய வரலாற்றில் எரியூட்டுதலையும் தங்களுக்கானதாகக் கொண்டனர். ‘தகனம்’ என்ற சொல் அதிகாரத்தில் கோலோச்சியவர்களின் இறுதிச் சடங்கைக் குறிக்கவே பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. எரியூட்டுதலை உயர்பண்பாடாகக் கட்டமைத்த சாதியச் சமூகம் எரியூட்டுகிறவனை தாழ்ந்தவனாகக் கட்டமைத்திருக்கிறது. உடலை எரியூட்டி முற்றாக அழிப்பதன் மூலம் மறுமை கிடைக்கும் என்று நம்பிக்கை கொண்ட வைதீக மனப்பாங்குடைய பார்ப்பனியமும், ஆதிக்க சாதியமும் இந்தப் பிறவியில் தமக்குக் கிடைத்த அதிகாரமும், சுகபோகமும் மறுமையிலும் தொடர வாய்ப்பளிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் எரியூட்டுதலின் நோக்கத்தைக் கட்டமைத்திருக்குமோ என எண்ணத் தோன்றுகிறது.

கிராம ஆட்சிமுறைகளில் இருந்து சாதியைச் சிதைய விடாமல் காத்ததில் ஜமீன்களுக்குப் பெரும் பங்குண்டு. அதிகாரத்தைத் தன்னுடன் வைத்துக்கொண்டு பஞ்சாயத்து நடத்துல், கோவில் விழாக்களில் முதல்மரியாதை, பரிவட்டம் பெறுதல் முதலிய நடவடிக்கைகளில் தீவிர கவனம் செலுத்தியிருக்கின்றனர். இவர்களின் பஞ்சாயத்துச் செயல்பாடுகள் ஆதிக்கச் சாதியினரைச் சார்ந்தே அமைந்திருக்கின்றன. உழைப்புச் சுரண்டல் வெகுவாக நடந்திருக்கிறது. சுகபோக நீட்சியும், சாதியக் காப்பும் வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் நிகழ்ந்துள்ளன. ஊர்த் திருவிழாக்களில் கூத்து, நாடகங்களை ஏற்பாடு செய்வது ஜமீன்தார் கைகளிலேயே இருந்துள்ளன. அவர்களின் அரண்மனைகளிலேயே கலைஞர்களுக்கு உணவும், உபசரிப்பும் நடந்திருக்கின்றன. கலைகளும் ஆதிக்கச் சாதிகளின்; வசமே இருந்துள்ளன. அவர்களின் அதிகாரத்திலான இயங்குவெளிகள் சாதிசார் ஆதிக்க மனோபாவத்தை வளமுடனே வளர்த்து வந்துள்ளன.

பேரையூர் ஜமீனில், ஜமீன்தார்கள் இறந்தால் அவர்களுக்குச் சாமதி அமைக்கும் பழக்கம் இருந்துள்ளது. பேரையூரில் இருந்து உசிலம்பட்டி செல்லும் வழியில் ‘முக்குச்சாலை’ என்ற இடத்தில் இத்தகைய சாமதிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இவ்விடங்களில் ஆடி அமாவாசை அன்று அன்னதானம் செய்யப்பட்டது. விளக்கேற்றி வழிபடவும் செய்தனர். இச்சமாதிகளில் இறந்து போன ஜமீன்தார்களை அமர்ந்த நிலையில் வைத்து உப்பு, மஞ்சள் ஆகியவற்றைப் போட்டு முடிவிடுவர். இதனைத் ‘தகனம்’ எனக் குறிப்பிடுகிறார்கள் (கு.இராஜேந்திரன், 2010) இந்த ஜமீன்தார்களின் இறப்புச் சடங்கில் எரியூட்டல் இல்லை என்றாலும் உட்கார்ந்த நிலையில் புதைக்கப்பட்டு இருக்கின்றனர். ‘உட்கார்ந்து இருத்தல்’ என்பது சாதியத்தில் அதிகாரம் சார்ந்த ஒன்றாகும். இன்றைக்கும் ‘தகனம்’ என்ற சொல்லாடல், அதிகார சுகபோகிகளின் இறுதிச் சடங்கையை குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது.

‘குடி’ என்னும் சொல் பழமையான சொற்களுள் ஒன்று. சங்க இலக்கியங்களில் இச்சொல் தனித்தும் அடையோடும் காணப்படுகிறது. (எ.கா. மறக்குடி மடந்தை...) துடியன், பாணன், பறையன், கடம்பன் என்னும் நான்கு குடிகளைத் தவிர வேறுகுடிகள் இல்லை என்கிறது புறநானூறு (335). ஒருசொல் பலபொருள் தன்மையில் இச்சொல்லுக்கு அகராதி உடம்பு, ஊர்ப்பொது, மருதநிலத்தூர், மனைவி, வீடு, குடியானவன், குலம், கோத்திரம், சமுசாரம், நெற்றிப்புருவம், பட்டினம், குடியென்னேவல் என்னும் பொருளைத் தருகிறது. இன்றைய நிலையில் இச்சொல் பயன்படுத்தப்படும் சூழலையும், தேவையையும் கவனித்தல் அவசியம். பெருவாரியான பகுதிகளில் பறக்குடி, பள்ளக்குடி, சக்கிலியக்குடி எனத் தாழ்த்தப்பட்ட மக்களின் வசிப்பிடங்களையே ‘குடி’ எனச் சுட்டும் போக்கு காணப்படுகிறது. வண்ணாண்குடி என்பதும் உண்டு. பறையர், அருந்ததியர் இன மக்களின் வரலாறு ஊர்த்தொழில்களினூடாகச் செல்ல, பள்ளர் இன மக்களின் வரலாறு நிலம், வேளாண்மையினூடாகச் செல்கிறது.

பள்ளர் இனம் போதுமான அளவு நிலவுடைமையானதாக இன்று கருதப்பட்டாலும், சில நூற்றாண்டுகளுக்கு முந்தையதான அவ்வினத்தின் வரலாறு வேளாண்சார் பண்ணைத் தொழிலுக்கு உரியதாகவே காட்டப்பட்டு இருக்கிறது. ஆங்கிலய ஆட்சியில் நிலங்களைப் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டு சட்டமியற்றிய போது அவர்களின் ஆட்சியில் கல்வியறிவு பெற்ற, நிர்வாகப் பொறுப்புகளிலும், உயர்பதவிகளிலும் இருந்த ஆதிக்கச் சாதியினர் தங்கள் அதிகாரத்தின் கீழ் இருந்த நிலங்களைத் தமது பெயரில் பதிவு செய்து கொண்டனர். பண்ணைத் தொழிலில் ஈடுபட்டிருந்தவர்களாகிய பள்ளர்களும் கணிசமான அளவு நிலங்களைப் பதிவு செய்து கொண்டனர். இந்தப் பின்னணியில் பார்க்கிற போது, நிலவுடைமையாளர்களாய் இருந்த ஆதிக்கச் சாதியினருக்கு பள்ளர்களின் உழவுசார் உடல் உழைப்பு தேவைப்பட்டதால் அவர்களையும் ஊர்த்தொழில் குடிகளோடு அடக்கியிருக்கின்றனர். ‘குடி’ என்பதை பரந்துபட்ட பொதுப்பொருள் தரும் சொல்லாக் கொண்டாலும், அது சாதியப் பின்புலத்தில் கட்டமைக்கப் பட்டதாகத் தெரிகிறது.

அகராதி ‘குடிமக்கள்’ என்பதற்கு “பணி செய்யும் பதினெண்வகைச் சாதியர், அவர் இலை வாணிகன், உப்பு வாணிகன், எண்ணெய் வாணிகன், ஒச்சன், கற்றச்சன், கன்னான், குயவன், கொல்லன், கோவிற்குடியன, தச்சன், தட்டான், நாவிதன், பள்ளி, பாணன். பூமாலைக்காரன், வண்ணான், வலைஞன் என்பர்” எனப் பொருள் தருகிறது. பணி செய்யும் பதினெண் வகைச் சாதியர் என்றால் இவற்றுள் குறிப்பிடப்படாத சாதியர் பணி செய்யாதவர் என்றே பொருள்படுகிறது. இதில் குறிப்பிடப்படாத பார்ப்பனர்கள், வேளாளர்கள் யார்? அவர்கள் குடிமக்கள் இல்லையா? அவர்கள் பணி செய்யவில்லையா? பணி செய்தால் என்ன பணி? என்னும் கேள்விகள் எழுகிறது. அதாவது சமூகத்தின் அடுக்கில் ஆள்வோருக்கு அடுத்தநிலையில் இருந்தவர்களாகிய பார்ப்பனர்களும், வேளாளர்களும் குடிமக்களாகக் கருதப்படவில்லை. பணி என்பது ஆள்வோரும், அவரைச் சார்ந்தோரும், ஆள்வோர்களின் ஆதரவில் பொருளாதார உயர்நிலை அதிகாரத்தைக் கட்டமைத்துக் கொண்டோரும் சுகபோக வாழ்க்கை வாழ, அவர்களுக்காகத் தொண்டூழியம் செய்வதையே குறித்திருக்கிறது. பணிந்து செய்வதே பணி. ‘பணிவு’, ‘பணிந்து’ என்னும் சொற்பொருண்மை மீது எழும் யாருக்காக? எதற்காக? என்னும் கேள்விகள் பல்வேறு பரிணாமங்களைத் தரும். பணிந்து பணி செய்த பல்வேறு இனக்குழுக்களே குடிகள் எனப்பட்டிருக்கின்றன. துடியன், பாணன், பறையன், கடம்பன் என்னும் கலைக்குடிகள் இழிவானவர்கள் என்னும் சொல்வழிக் கற்பிதத்தை ஆதிக்கச் சாதிச்சமூகம் திறம்படக் கட்டமைத்திருக்கிறது. இவற்றினூடாக ‘அதிகாரம் குடிகள் கலைக்குடிகள்’ என்னும் அடுக்கிலும் சமூகம் இருந்ததை அவதானிக்க முடிகிறது. அதிகாரத்திற்கு பணி செய்கிறவர்கள் குடிகள், அதிகாரத்திற்கும் குடிகளுக்கும் கலைத்தொழில் செய்கிறவர்கள் கலைக்குடிகள். அதாவது அதிகாரத்தில் இருப்போர்க்கு குடிகள் தாழ்ந்தவர்கள், இவ்விருவர்களுக்கும் கலைக்குடிகள் தாழ்ந்தவர்கள் என்னும் கற்பிதம் ‘குடி’ என்ற சொல்வழி நுட்பமாக உருவாக்கம் செய்யப்பட்டு இருக்கிறது. ‘குடி’ என்னும் சொல் காலந்தோறும் சாதியக் குழுக்களுக்குள் கைமாறியே வந்துள்ளதால், நுட்பத்தை வரையறுப்பதில் சிக்கல் இருக்கிறது.

‘பிராமணர்கள் சாப்பிடும் இடம்’ என்பது மிகுந்த போராட்டத்திற்குப் பிறகு ஒழிக்கப்பட்டது என்ற கருத்து பொதுவானதாக இருந்து வருகிறது. ஒழிக்கப்பட்டது என்பதை விட மாற்றப்பட்டது என்பதே சரியானதாகத் தெரிகிறது. அத்தொடர் வழியான சாதியக் கருத்துருவாக்கம் இன்று ‘சைவம்’ என்னும் சொல் தாங்கிய உணவகங்களுக்கு இடம் பெயர்ந்திருக்கிறது. இவ்வகை உணவகங்களை நடத்துபவர்களும் பெரும்பாலும் புலால் உண்ணாதவர்களாகவே உள்ளனர். பிராமணர்கள் சாப்பிடும் இடம், பிராமணர் அல்லாதோரும் சாப்பிடும் இடமாக மாறியுள்ளதே தவிர புலால் உண்பதை ஏற்றுக்கொள்ளவில்லை. ‘புலால் தவிர்த்தல்’ என்னும் பழக்கம் சாதி மேன்மையாக்கக் கற்பிதத்தைத் தக்க வைத்துக்கொள்ள முக்கியப் பங்காற்றி இருக்கிறது. இதே வேலையைத் தான் இப்பொழுது சைவ உணவகங்கள் செய்து வருகின்றன. சைவ உணவகம் என்பது சைவர்களையும் உள்ளடக்கிய பிராமணர்கள் சாப்பிடும் இடத்தின் மாற்றுப் பெயரே தவிர சாதியத்தை முழுமையாகக் கைவிட்டதல்ல. தலித்துகளும், புலால் உண்ணும் ஏனையவர்களும் சைவ உணவகத்தில் சாப்பிடலாம். புலால் கேட்க முடியாது; கேட்டாலும் கிடைக்காது. ‘புலால் தவிர்த்தல்’ என்னும் சாதி மேன்னையாக்கக் கருத்துருவாக்கத்தை உள்ளீடாகக் கொண்ட ‘சைவம்’ என்னும் சொல், சாதியச் சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளை, கற்பிதங்களை இன்னும் பாதுகாத்துக் கொண்டேயிருக்கிறது.

சாதி மேன்மையாக்கத்தில் புலால் தவிர்த்தல் பழக்கத்தின் முக்கியத்துவம் இன்று உணரப்பட்டுவிட்டது. உணரப்பட்டவர்களில் சிலர் புலாலைத் தவிர்த்து வாழத் தொடங்கியிருக்கின்றனர். அரசு அதிகாரிகளாகப் பணி புரியம் தலித்துகளில் சிலர் பிராமண, சைவ வெள்ளாளத் தெருக்களில் குடியேறும் போது புலாலை முற்றாகத் விலக்குகின்றனர் (கட்டுரையார் களஆய்வில் கண்டது). சொல் உருவாக்கத்திலான சாதியமும், அதன் கற்பிதமும் அரசு இருக்கும் வரை இருக்கும். ஏனெனில் காலந்தோறும் சாதியத்தை அரசுகளே காப்பாற்றி வந்திருக்கின்றன. சொல்வழியாகப் பொதுப்புத்தியில் ஏற்றப்பட்ட கற்பிதம், அதனுள்ளான சாதிய அரசியல் சாதுர்யமாகவே தன் வேலையைச் செய்து வந்திருக்கிறது.

மனிதன் தன்னை மனிதனாகவே உணர்ந்து ஏற்றத்தாழ்வு எண்ணமின்றி வாழ்ந்த தொல் பழங்காலத்தில் இன்றைய எழுத்துகளின் வடிவம் குறிகளாகவே இருந்திருக்கின்றன. அந்தக் குறிகளுக்கு எந்தவிதக் கற்பிதமும் இருந்திருக்க வாய்ப்பில்லை. காலப் போக்கில் சோழர்களின் ஆதரவில் உருவான பன்னிரு பாட்டியல்;, உயிரெழுத்துப் பன்னிரெண்டையும், க,ங,ச,ஞ,ட,ண ஆகிய ஆறு எழுத்துகளையும் அந்தணர் சாதி எனவும், த,ந,ப,ம,ய,ர என்னும் எழுத்துகளை மன்னர் சாதி எனவும், ல,வ,ற,ன என்னும் எழுத்துகளை வணிகர் சாதி எனவும், ழ.ள என்னும் எழுத்துகளைச் சூத்திரச் சாதி எனவும் குறிப்பிடுகிறது (ச.வே.சுப்பிரமணியன். 2007) எழுத்துகளிலேயே சாதியைப் புகுத்தியவர்கள் எழுத்துகளின் கூட்டினைவாகிய சொற்களை வெறுமனே விட்டிருக்க வாய்ப்பில்லை.

துணை நூல்கள்
1. தொல்காப்பியம், இளம்பூரணர் உரை. முல்லை நிலையம் சென்னை -17, 2002
2. நா. கதிரைவேற்பிள்ளை, தமிழ்மொழி அகராதி, ASIAN EDUCATIONAL SERVICES, MADRAS 1998.
3. கு.இராசேந்திரன், பண்பாட்ட அடையாளம், அதிகாரம் விவாதங்கள், ஆய்வாளர் மன்றம், நாட்டுப்புறவியல் துறை வெளியீடு, மதுரை காமராசர் பல்கலைக்கழகம், 2010.
4. முனைவர் ச.வே.சுப்பிரமணியன், தமிழ் இலக்கண நூல்கள், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம் - 1, 2007.

jeyaseelanphd@yahoo.in

 

* கட்டுரையாளர் - முனைவர் ஞா.குருசாமி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, அருள் ஆனந்தர் கல்லூரி, கருமாத்தூர், மதுரை - 625 514 -



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard