1990 - களின் ஆரம்பத்தில் நான் பாளையங்கோட்டை சித்தமருத்துவக் கல்லூரியில் பயின்றுகொண்டிருந்தபோது என் அறை நண்பர்களை சித்த மருத்துவ தத்துவத்தின் முதுகெலும்பாக கட்டமைக்கப்பட்டுள்ள வாத, பித்த, கபத்தின் (முக்குற்றம்) அடிப்படையில் வகைப்பாடு செய்து ஒருவரையொருவர் கிண்டல் செய்துகொள்வதுண்டு. அதாவது, இத்தத்துவத்தின் படி மனிதர்கள் இயல்பாகவே மூன்று குணங்களாகப் பிரிக்கப்படுவர் - சத்துவம், ரஜம், தமம் என்பவையே அந்த மூன்று குணங்கள்; சத்துவம் என்பது மிக உயர்ந்த குணம், தமச குணம் மிகக் கீழான குணம். வாதத் தன்மையை மிகுதியாகக் கொண்டவர்கள் தமச குணம் கொண்டவராகயிருப்பர்; மேலும் அவர்கள் நடந்தால் மூட்டுகளிலிருந்து நெட்டி ஒலி கேட்கும், சற்று உயரமாகயிருப்பர், தூங்கும்போது அரைக்கண் திறந்திருக்கும், கெட்ட சொப்பனம் காண்பர் என்பன போன்று மிக நுணுக்கமான விவரிப்புகள் சித்தமருத்துவப் புத்தகங்களில் காணக்கிடைக்கும். ஒருவரை அவர் வாதத் தன்மை மிகுந்தவரா, பித்தத் தன்மை மிகுந்தவரா அல்லது கபத்தன்மை மிகுந்தவரா என்பதை இத்தகைய சித்தரிப்புகள் மூலம் ஒரளவு விளங்கிக்கொள்ளலாம் எனினும், நாடி பிடித்துப் பார்த்து இதை உறுதிசெய்து கொள்ள வேண்டுமென சித்தமருத்துவ நூல்கள் கூறும். அவ்வாறு நாடி பிடித்து ஆய்வதற்கும் - எந்தெந்த நேரங்களில் பார்க்கவேண்டும், எவ்வாறு பார்க்கவேண்டும் எனப் பல விதிமுறைகளுண்டு.
இயற்கையைப் புரிந்து கொள்வதற்கு இவ்வாறு வகைப்பாடு செய்துகொள்ளுதல் இன்றியமையாதது. அதுவே பகுத்தறிவின் முதல்படி எனக் கொள்ளலாம். காட்டாக வானியலில் நாம் கோள்கள், நட்சத்திரங்கள், வால் நட்சத்திரங்கள் என்று பிரித்து வைத்திருக்கிறோம். உயிரியலில் தாவரங்களுக்கு பெந்தம்-ஹூக்கர் வகைப்பாடு உள்ளது. வாத, பித்த, கபம் போன்றே நவீன மருத்துவத்திலும் A வகைப்பிரிவினர் (Type A personality), B வகைப்பிரிவினர், C வகையினர் என ஆளுமையின் அடிப்படையில் மனிதர்களை வகை செய்வதுண்டு. இன்னின்ன வகையினருக்கு இன்னின்ன நோய்கள் வருவதற்கு சாத்தியக்கூறுகள் அதிகம் என்றளவில் அந்தக் கருதுகோள் செல்லும். இவ்வாறு வகைப்பாடு செய்வதில் ஒவ்வொரு பொருட்களுக்கும்/உயிரினத்திற்கும் உரிய தனித்தன்மைகள் இழக்கப்பட்டாலும் இயற்கைப் பொருட்களைப் புரிந்துகொள்வதில் இது இன்றியமையாதது. ஆனால், சித்த மருத்துவத்தில் வாதம், பித்தம், கபம் சார்ந்து சொல்லப்பட்டுள்ள வகைப்பாடும், நவீன அறிவியல் கைக்கொள்ளும் வகைப்பாடும் ஒன்றிற்கொன்று முரணானவை; முன்னது அகவயமானது (subjective), மேலும் மீப்பொருண்மையியல் (Metaphysical) சார்ந்தது. ஆனால், பின்னது பெரிதும் புறவயமானதும் (Objective), பொருண்மையியல் (Materialistic) சார்ந்ததுமாகும்.
மருத்துவ அறிவியல் ஒரு பருந்துப் பார்வை
சித்த மருத்துவத்தின் இன்றைய பயன்பாட்டைப் புரிந்துகொள்வதற்கு உயிரியல் குறித்த சமகால அறிவும் அவசியம். உயிரியலை / மருத்துவத்தைக் குறுக்கினால் அது இயற்பியலாகவும், வேதியியலாகவும்தான் இருக்கும். நமக்கு மிகவும் புதிராகவுள்ள உயிர் என்பது என்ன? நம் சிந்தனைகள் என்பவை யாவை? என்பவை குறித்து அறிவியல் ஒரு திட்டவட்டமான முடிவுக்கு வந்துவிட்டது. அதாவது இவைகளும் பொருண்மைத் தன்மை வாய்ந்தவைதான் என்பதே அது. ஆயினும் இன்றைய அறிவியலால் சடப்பொருள்களிருந்து வேதிவினைகள் மூலம் ஒரு உயிரையோ அல்லது சிந்தனைகளையோ உருவாக்க முடியவில்லை. ஒரு உயிரியிலிருந்து இன்னொரு உயிரியைப் போலச் செய்யமுடியும் (Cloning), ஆனால் வெறும் சடப்பொருளிலிருந்து முற்றிலும் புதிதாக ஒரு உயிரியை உருவாக்க இன்னும் நம்மால் முடியவில்லை.
அதேபோல ஒரு நோய் எவ்வாறு ஏற்படுகிறது என்பதற்கான முழுமுற்றான அறிவு இன்னும் புலப்படவில்லை. நோய்கள் குறித்த எல்லா அறிதல்களும் பல்வேறு சாத்தியக்கூறு மாதிரிகளைக் (Probabilistic models) கொண்டு உருவாக்கப்பட்டவைதாம். நவீன அறிவியல் / மருத்துவம் எல்லா நோய்களுக்கும் தீர்வு கண்டுவிட்டது என நாம் பொதுவாக நம்புவது ஒரு மாயைதான்; உண்மையல்ல. உண்மையில் அது எந்த நோய் குறித்தும் முடிந்தமுடிவான தீர்வு எதையும் இன்னும் கண்டுபிடிக்கவில்லை; கண்டுபிடிக்குமா என்று ஊகிக்கவும் முடியாது. தடுப்பூசிகளும், ஆன்டிபயாட்டிக் மருத்துகளும் பல்வேறு நோய்களைக் கட்டுப்படுத்துவதில் பெருமளவு வெற்றி பெற்றிருந்தாலும் அவை முழுத்தீர்வாகாது. நம் எல்லோருக்கும் தெரியும் எய்ட்ஸ் நோயை HIV வைரஸ் கிருமிதான் உண்டாக்குகிறது என. நாம் நினைப்பதுபோல் HIV வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானவர் அனைவருக்கும் எய்ட்ஸ் வந்துவிடாது. அதாவது உங்கள் உடலில் HIV வைரஸை நீங்கள் கொண்டிருந்தாலும் உங்களுக்கு எய்ட்ஸ் வராமலேயே இருக்கலாம். வேறுவகையில் சொல்வதானால் வைரஸ் உடலிலிருப்பது எய்ட்ஸ் வருவதற்கான சாத்தியக்கூறுகளை அதிகரிக்கிறதே தவிர அதுமட்டுமே நோயை உண்டாக்குவதில்லை. இன்னொரு சிறந்த உதாரணம் சொல்லவேண்டுமானால் காச நோயை எடுத்துக்கொள்ளலாம். நம்மில் பலரும் காசநோயை உண்டாக்கும் கிருமியான மைக்கோ பாக்டீரியம் டியூபர்குலோசிஸை உடம்பில் கொண்டிருப்போம். ஏனெனில், இந்நோய் இந்தியா போன்ற வெப்பமண்டல நாடுகளில் எப்பொழுதுமே சிலருக்கு இருக்கும் (Endemic), ஆனாலும் நம்மில் பலருக்கும், அக்கிருமியை நாம் உடம்பில் கொண்டிருந்தாலும், அந்நோய் வருவதில்லை. காரணம் அக்கிருமியால் நோயை முழுவீச்சில் உருவாக்குவதில் தொழிற்படும் பிறகாரணிகள், காட்டாக குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி போன்றவை, பலருக்கு அமையப்பெறாததே. கிருமியும் மற்ற புறக்காரணிகளும் பொருந்திவரும் சாத்தியக்கூறுகள் கூடிவரும்போது காசநோய் முழுவீச்சில் ஒருவருக்கு ஏற்படுகிறது. அதே சமயம் மற்ற புறக்காரணிகள் இருந்தாலும் கிருமி இல்லாவிட்டால் காசநோய் ஒருவருக்கு ஏற்படாது. வேறுவகையில் சொல்வதானால் கிருமியை இன்றியமையாத காரணியாகவும் (Necessary cause), மற்ற காரணிகளை போதுமான காரணிகளாகவும் (Sufficient cause) கொள்ளலாம்.
இவ்வாறே இன்றியமையாத காரணிகளும், போதுமான காரணிகளும் சேர்ந்தால் உண்டாகும் பல்வேறு சாத்தியக்கூறுகளினாலேயே எல்லா நோய்களுக்கும் உண்டாகின்றன என்பதே தற்போதைக்கு அறிவியலாளர்கள் வந்துள்ள முடிவு. இதை நோய்க்காரணிகளின் வலைப்பின்னல் (Web of disease causation) என்பர். இன்னும் பல நோய்களுக்கு, குறிப்பாக கிருமிகளில்லாமல் (Non-infectious) ஏற்படும் நோய்களுக்கு, இன்றியமையாத காரணிகள் என்னவாக இருக்கலாம் என்ற புரிதல் சரிவர இல்லை. அதுபோன்றே போதுமான காரணிகள் பல புதிதாகக் கண்டுபிடிக்கப் பட்டுக்கொண்டிருக்கின்றன.
தடுப்பூசிகளின் பயன்பாடும் மேற்கூறியவாறு சாத்தியக்கூறுகளின் அடிப்படையிலேயே அமைந்துள்ளது. திரள் நோய் எதிர்ப்பு சக்தி (Herd immunity) என்ற அடிப்படையில் தடுப்பூசிகள் பயன்படுகின்றன. அதாவது, ஒரு குமுகாயத்தில் உள்ள மக்கள் கூட்டத்தின் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தினர் (குறைந்த பட்சம் - 80%) மனிதனிலிருந்து மனிதனுக்குப் பரவும் ஒரு குறிப்பிட்ட நோய்க்கெதிரான எதிர்ப்பு சக்தியைப் பெறும்போது அந்நோய் அச்சமூகத்தில் மேலும் பரவாமல் தடுக்கப்படுகிறது. ஆனால் அச்சமூகத்தில் மேலும் புதிய நபர்கள் சேரும்போது, அதாவது, புதிதாகப் பிறக்கும் குழந்தைகள் அல்லது வேறு இடங்களிலிருந்து வந்து குடிபெயர்ந்தோரின் காரணமாக நோய் எதிர்ப்பு சக்தி கொண்டோரின் சதவிகிதம் குறையும்போது மீண்டும் அந்நோய் அச்சமூகத்தில் பெருமளவில் (Epidemic) ஏற்படுகிறது. இங்கு கவனிக்கப்படவேண்டியது என்னவெனில், அக்குறிப்பிட்ட நோய்க்குக் காரணமான கிருமி எப்போதும் அச்சமூகத்தில் இருந்துகொண்டேயிருக்கும் (Endemic); தடுப்பூசிகள் மூலம் நாம் செய்வதெல்லாம் அக்கிருமிகள் மேலும் பரவுவதற்குத் தேவையான தொடர் சங்கிலிகளில் ஒன்றான அந்நோய்க்கெதிரான எதிர்ப்பு சக்தியற்றோரின் சதவிகிதத்தைப் பெருமளவில் குறைப்பதேயாகும். இதனால் அந்நோய்க்கிருமி முழுதாக அழிந்துவிடுவதில்லை, மாறாக அக்கிருமி நோயைப் பெருமளவில் தோற்றுவிப்பதற்குத் தேவையான சங்கிலியின் கண்ணி அறுக்கப்பட்டுவிடுகின்றது. இவ்வாறுதான் சின்னம்மை ஒழிக்கப்பட்டது. இளம்பிள்ளைவாதத்திற்கெதிரான போரும் இவ்வடிப்படையிலேயே நடந்துவருகிறது. சின்னம்மைக் கிருமிக்கு மனித உடம்பைத் தவிர வேறு உறைவிடம் இல்லாததால் சின்னம்மை ஒழிப்பு சாத்தியப்பட்டது. ஆனால் கிருமிகளால் பரவும் மற்ற நோய்களை முற்றிலும் ஒழிப்பது சற்று கடினம்தான்.
இவ்வாறாக உயிரியல் எண்ணற்ற சாத்தியக்கூறுகளினால் (Infinite probability), பரிமாண இயங்கியலில் மனிதன் தோன்றியது உட்பட, கட்டமைக்கப்பட்டுள்ளது. நாம் நினைப்பது போலல்லாமல், அது மிகவும் நுட்பமும், சிக்கலும் உடையது. இவ்வகையில் அது குவாண்டம் இயற்பியலோடு ஒப்பிடத்தக்கது. குறிப்பாக ஒன்றைமட்டும் வலியுறுத்த வேண்டுமென்றால், அது, நோய்கள் நாம் நினைப்பது போல் ஒரு திட்டவட்டமான ஒழுங்கான வழிமுறையில் காரணிகள் வினைபுரிவதால் ஏற்படுவதில்லை; மாறாக முடிவற்ற காரணிகளின் தீர்மானிக்கமுடியாத (Random/Unpredictable) தொடர்ச்சியான வினைகளினால் விளையும் எண்ணற்ற சாத்தியக்கூறுகளில் ஒன்றாகவே ஏற்படுகின்றன. வேறுமுறையில் சொல்வதானால், நிச்சயிக்கமுடியாத ஒழுங்கற்ற இந்தத் தொடர்ச் சங்கிலியில் ஒரு ஒழுங்கமைவை உருவகித்துக்கொண்டு (Assuming a pattern in the unpredictable chaotic chain of events) நோய்களுக்கு நாம் மருந்துகள் கொடுக்கிறோம்; பல நேரங்களில் அம்மருந்துகள் வேலை செய்வது, குருவி உட்காரப் பனம்பழம் விழுவதைப் போன்ற, தற்செயல் நிகழ்வாகவுமிருக்கலாம். ஒரு நிகழ்வு காரண-காரிய விளைவால் ஏற்பட்டதா (அ) தற்செயலலாக நடந்ததா என்பதைக் கண்டறிய அந்நிகழ்வு காரண-காரிய உறவுகளைக் கண்டறியும் சில வரையறைகளைத் (AB Hill’s Causal criteria) திருப்திப்படுத்தவேண்டும்.
ஒரு காலகட்டத்தில் அறிவியல் எல்லா நிகழ்வுகளையும் ஒரு திட்டவட்டமான, தீர்மானிக்கமுடிந்த, காரண-காரிய வகைகளுக்குள் அடக்கிவிடலாம் எனக் கருதியது. ஆனால், குவாண்டம் இயற்பியல் இந்த நம்பிக்கையைக் கலைத்துப்போட்டது. ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் புகழ்பெற்ற கூற்றுகளில் ஒன்று “கடவுள் பகடையாடமாட்டார்” (God does not play dice) என்பது. இது அவர் குவாண்டம் இயற்பியல் குறித்துச் சொன்னது. ஆனால் அவர் நம்பியதற்கு மாறாக குவாண்டம் இயற்பியல் அவரது வாழ்நாளிலேயே தன்னை நிலைநிறுத்திக்கொண்டது. குவாண்டம் இயற்பியலின் வரவிற்குப் பிறகு நம் எல்லா அறிவியல் துறைகளும், மருத்துவ அறிவியல் உட்பட, தீர்மானிக்க முடிந்த திட்டவட்டமான மாதிரிகளினால் (Deterministic models) ஆன அறிவுப்புலத்திலிருந்து, பல்வேறு சாத்தியக்கூறுகளின் அடிப்படையில் (Probabilistic models) இயங்கும் அறிவுப்புலத்தை வந்தடைந்துள்ளன. எப்படி பாரம்பரிய இயற்பியலின் (Classical physics) விதிகள் குவாண்டங்களின் தளத்தில் (நுண்ணிய அளவில் - micro level) செயலற்றுவிடுகின்றனவோ, அதுபோன்றே உயிரியலிலும் நுண்தளத்தில் நடக்கும் எல்லா செயல்களும் நிச்சயமற்ற தன்மையுடையவை (Uncertain). மேலோட்டமாகப் பார்ப்பதற்கு அவை நூல்பிடித்தாற்போன்று ஒரு ஒழுங்கான லயத்துடன் செயல்படுவதுபோல் தோன்றினாலும் அது நமது கற்பிதமே.
சுருக்கமாகச் சொன்னால் மற்ற அறிவியல் துறைகளைப் போன்றே உயிரியலிலும் ஆன்டிபயாட்டிக்குகள், தடுப்பூசிகள், மரபியல் தொகுப்புகள் எனப் பெரும் பாய்ச்சல்கள் நிகழ்த்தப்பட்டிருப்பினும், நோய்களை வெல்வதில் மனிதன் செல்லவேண்டிய தூரம் இன்னும் நிறையவுள்ளது. அதை என்றாவது நாம் அடைவோமா என்பதற்கு அறிவியலிடம் பதிலில்லை. ஆருடம் தான் கணிக்கவேண்டும்!!