# இரண்டாவது - குறிஞ்சிக்கலி
பாடியவர் : கபிலர்
#37
கய மலர் உண்கண்ணாய் காணாய் ஒருவன்
வய_மான் அடி தேர்வான் போல தொடை மாண்ட
கண்ணியன் வில்லன் வரும் என்னை நோக்குபு
முன்னத்தின் காட்டுதல் அல்லது தான் உற்ற
நோய் உரைக்கல்லான் பெயரும்-மன் பல் நாளும்
பாயல் பெறேஎன் படர் கூர்ந்து அவன்_வயின்
சேயேன்-மன் யானும் துயர் உழப்பேன் ஆயிடை
கண் நின்று கூறுதல் ஆற்றான் அவன் ஆயின்
பெண் அன்று உரைத்தல் நமக்கு ஆயின் இன்னதூஉம்
காணான் கழிதலும் உண்டு என்று ஒரு நாள் என்
தோள் நெகிழ்பு உற்ற துயரால் துணிதந்து ஓர்
நாண் இன்மை செய்தேன் நறு_நுதால் ஏனல்
இன கிளி யாம் கடிந்து ஓம்பும் புனத்து அயல்
ஊசல் ஊர்ந்து ஆட ஒரு ஞான்று வந்தானை
ஐய சிறிது என்னை ஊக்கி என கூற
தையால் நன்று என்று அவன் ஊக்க கை நெகிழ்பு
பொய்யாக வீழ்ந்தேன் அவன் மார்பின் வாயா செத்து
ஒய்யென ஆங்கே எடுத்தனன் கொண்டான் மேல்
மெய் அறியாதேன் போல் கிடந்தேன்-மன் ஆயிடை
மெய் அறிந்து ஏற்று எழுவேன் ஆயின் மற்று ஒய்யென
ஒண் குழாய் செல்க என கூறி விடும் பண்பின்
அங்கண் உடையன் அவன்
மேல்
#38
இமைய வில் வாங்கிய ஈர்ம் சடை அந்தணன்
உமை அமர்ந்து உயர் மலை இருந்தனன் ஆக
ஐ_இரு தலையின் அரக்கர் கோமான்
தொடி பொலி தட கையின் கீழ் புகுத்து அ மலை
எடுக்கல் செல்லாது உழப்பவன் போல
உறு புலி உரு ஏய்ப்ப பூத்த வேங்கையை
கறுவு கொண்டு அதன் முதல் குத்திய மத யானை
நீடு இரு விடர் அகம் சிலம்ப கூய் தன்
கோடு புய்க்க அல்லாது உழக்கும் நாட கேள்
ஆரிடை என்னாய் நீ அரவு அஞ்சாய் வந்த_கால்
நீர் அற்ற புலமே போல் புல்லென்றாள் வைகறை
கார் பெற்ற புலமே போல் கவின் பெறும் அ கவின்
தீராமல் காப்பது ஓர் திறன் உண்டேல் உரைத்தை காண்
இருள் இடை என்னாய் நீ இரவு அஞ்சாய் வந்த_கால்
பொருள் இல்லான் இளமை போல் புல்லென்றாள் வைகறை
அருள் வல்லான் ஆக்கம் போல் அணி பெறும் அ அணி
தெருளாமல் காப்பது ஓர் திறன் உண்டேல் உரைத்தை காண்
மறம் திருந்தார் என்னாய் நீ மலை இடை வந்த_கால்
அறம் சாரான் மூப்பே போல் அழி_தக்காள் வைகறை
திறம் சேர்ந்தான் ஆக்கம் போல் திரு தகும் அ திரு
புறங்கூற்று தீர்ப்பது ஓர் பொருள் உண்டேல் உரைத்தை காண்
என ஆங்கு
நின் உறு விழுமம் கூற கேட்டு
வருமே தோழி நன் மலை நாடன்
வேங்கை விரிவு இடம் நோக்கி
வீங்கு இறை பணை தோள் வரைந்தனன் கொளற்கே
மேல்
#39
காமர் கடும் புனல் கலந்து எம்மோடு ஆடுவாள்
தாமரை கண்புதைத்து அஞ்சி தளர்ந்து அதனோடு ஒழுகலான்
நீள் நாக நறும் தண் தார் தயங்க பாய்ந்து அருளினால்
பூண் ஆகம் உற தழீஇ போத்தந்தான் அகன் அகலம்
வரு முலை புணர்ந்தன என்பதனால் என் தோழி
அரு மழை தரல் வேண்டின் தருகிற்கும் பெருமையளே
அவனும் தான்
ஏனல் இதணத்து அகில் புகை உண்டு இயங்கும்
வான் ஊர் மதியம் வரை சேரின் அ வரை
தேனின் இறால் என ஏணி இழைத்து இருக்கும்
கான் அகல் நாடன் மகன்
சிறுகுடியீரே சிறுகுடியீரே
வள்ளி கீழ் வீழா வரை மிசை தேன் தொடா
கொல்லை குரல் வாங்கி ஈனா மலை வாழ்நர்
அல்ல புரிந்து ஒழுகலான்
காந்தள் கடி கமழும் கண்வாங்கு இரும் சிலம்பின்
வாங்கு அமை மென் தோள் குறவர் மட மகளிர்
தாம் பிழையார் கேள்வர் தொழுது எழலால் தம் ஐயரும்
தாம் பிழையார் தாம் தொடுத்த கோல்
என ஆங்கு
அறத்தொடு நின்றேனை கண்டு திறப்பட
என் ஐயர்க்கு உய்த்து உரைத்தாள் யாய்
அவரும் தெரி கணை நோக்கி சிலை நோக்கி கண் சேந்து
ஒரு பகல் எல்லாம் உருத்து எழுந்து ஆறி
இருவர் கண் குற்றமும் இல்லையால் என்று
தெருமந்து சாய்த்தார் தலை
தெரி_இழாய் நீயும் நின் கேளும் புணர
வரை உறை தெய்வம் உவப்ப உவந்து
குரவை தழீஇ யாம் ஆட குரவையுள்
கொண்டுநிலை பாடி காண்
நல்லாய்
நன்_நாள் தலைவரும் எல்லை நமர் மலை
தம் நாண் தாம் தாங்குவார் என் நோற்றனர்-கொல்
புன வேங்கை தாது உறைக்கும் பொன் அறை முன்றில்
நனவில் புணர்ச்சி நடக்குமாம் அன்றோ
நனவில் புணர்ச்சி நடக்கலும் ஆங்கே
கனவில் புணர்ச்சி கடிதுமாம் அன்றோ
விண் தோய் கல் நாடனும் நீயும் வதுவையுள்
பண்டு அறியாதீர் போல் படர்கிற்பீர்-மன்-கொலோ
பண்டு அறியாதீர் போல் படர்ந்தீர் பழம் கேண்மை
கண்டு அறியாதேன் போல் கரக்கிற்பென்-மன்-கொலோ
மை தவழ் வெற்பன் மண அணி காணாமல்
கையால் புதைபெறூஉம் கண்களும் கண்களோ
என்னை-மன் நின் கண்ணால் காண்பென்-மன் யான்
நெய்தல் இதழ் உண்கண் நின் கண் ஆக என் கண் மன
என ஆங்கு
நெறி அறி செறி குறி புரி திரிபு அறியா அறிவனை முந்துறீஇ
தகை மிகு தொகை வகை அறியும் சான்றவர் இனம் ஆக
வேய் புரை மென் தோள் பசலையும் அம்பலும்
மாய புணர்ச்சியும் எல்லாம் உடன் நீங்க
சேய் உயர் வெற்பனும் வந்தனன்
பூ எழில் உண்கணும் பொலிகமா இனியே
மேல்
#40
அகவினம் பாடுவாம் தோழி அமர் கண்
நகை மொழி நல்லவர் நாணும் நிலை போல்
தகை கொண்ட ஏனலுள் தாழ் குரல் உரீஇ
முகை வளர் சாந்து உரல் முத்து ஆர் மருப்பின்
வகை சால் உலக்கை வயின்_வயின் ஓச்சி
பகை இல் நோய் செய்தான் பய மலை ஏத்தி
அகவினம் பாடுவாம் நாம்
ஆய் நுதல் அணி கூந்தல் அம் பணை தட மென் தோள்
தேன் நாறு கதுப்பினாய் யானும் ஒன்று ஏத்துகு
வேய் நரல் விடர்_அகம் நீ ஒன்று பாடித்தை
கொடிச்சியர் கூப்பி வரை தொழு கை போல்
எடுத்த நறவின் குலை அலம் காந்தள்
தொடுத்த தேன் சோர தயங்கும் தன் உற்றார்
இடுக்கண் தவிர்ப்பான் மலை
கல்லா கடுவன் கணம் மலி சுற்றத்து
மெல் விரல் மந்தி குறை கூறும் செம்மற்றே
தொல் எழில் தோய்ந்தார் தொலையின் அவரினும்
அல்லல்படுவான் மலை
புரி விரி புதை துதை பூ ததைந்த தாழ் சினை
தளிர் அன்ன எழில் மேனி தகை வாட நோய் செய்தான்
அரு வரை அடுக்கம் நாம் அழித்து ஒன்று பாடுவாம்
விண் தோய் வரை பந்து எறிந்த அயா வீட
தண் தாழ் அருவி அர_மகளிர் ஆடுபவே
பெண்டிர் நலம் வௌவி தண் சாரல் தாது உண்ணும்
வண்டின் துறப்பான் மலை
ஒடுங்கா எழில் வேழம் வீழ் பிடிக்கு உற்ற
கடும் சூல் வயாவிற்கு அமர்ந்து நெடும் சினை
தீம் கண் கரும்பின் கழை வாங்கும் உற்றாரின்
நீங்கலம் என்பான் மலை
என நாம்
தன் மலை பாட நயவந்து கேட்டு அருளி
மெய்ம் மலி உவகையன் புகுதந்தான் புணர்ந்து ஆரா
மென் முலை ஆகம் கவின் பெற
செம்மலை ஆகிய மலை கிழவோனே
மேல்
#41
பாடுகம் வா வாழி தோழி வய களிற்று
கோடு உலக்கை ஆக நல் சேம்பின் இலை சுளகா
ஆடு கழை நெல்லை அறை உரலுள் பெய்து இருவாம்
பாடுகம் வா வாழி தோழி நல் தோழி பாடு_உற்று
இடி உமிழ்பு இரங்கிய விரவு பெயல் நடுநாள்
கொடி விடுபு இருளிய மின்னு செய் விளக்கத்து
பிடியொடு மேயும் புன்செய் யானை
அடி ஒதுங்கு இயக்கம் கேட்ட கானவன்
நெடு வரை ஆசினி பணவை ஏறி
கடு விசை கவணையில் கல் கை விடுதலின்
இறுவரை வேங்கையின் ஒள் வீ சிதறி
ஆசினி மென் பழம் அளிந்தவை உதிரா
தேன் செய் இறாஅல் துளைபட போகி
நறு வடி மாவின் பைம் துணர் உழக்கி
குலை உடை வாழை கொழு மடல் கிழியா
பலவின் பழத்துள் தங்கும் மலை கெழு வெற்பனை
பாடுகம் வா வாழி தோழி நல் தோழி பாடு_உற்று
இலங்கும் அருவித்து இலங்கும் அருவித்தே
வானின் இலங்கும் அருவித்தே தான் உற்ற
சூள் பேணான் பொய்த்தான் மலை
பொய்த்தற்கு உரியனோ பொய்த்தற்கு உரியனோ
அஞ்சல் ஓம்பு என்றாரை பொய்த்தற்கு உரியனோ
குன்று அகல் நன் நாடன் வாய்மையில் பொய் தோன்றின்
திங்களுள் தீ தோன்றி அற்று
இள மழை ஆடும் இள மழை ஆடும்
இள மழை வைகலும் ஆடும் என் முன்கை
வளை நெகிழ வாராதோன் குன்று
வாராது அமைவானோ வாராது அமைவானோ
வாராது அமைகுவான் அல்லன் மலை நாடன்
ஈரத்துள் இன்னவை தோன்றின் நிழல் கயத்து
நீருள் குவளை வெந்து அற்று
மணி போல தோன்றும் மணி போல தோன்றும்
மண்ணா மணி போல தோன்றும் என் மேனியை
துன்னான் துறந்தான் மலை
துறக்குவன் அல்லன் துறக்குவன் அல்லன்
தொடர் வரை வெற்பன் துறக்குவன் அல்லன்
தொடர்புள் இனையவை தோன்றின் விசும்பில்
சுடருள் இருள் தோன்றி அற்று
என ஆங்கு
நன்று ஆகின்றால் தோழி நம் வள்ளையுள்
ஒன்றி நாம் பாட மறை நின்று கேட்டு அருளி
மென் தோள் கிழவனும் வந்தனன் நுந்தையும்
மன்றல் வேங்கை கீழ் இருந்து
மணம் நயந்தனன் அ மலை கிழவோற்கே
மேல்
#42
மறம் கொள் இரும் புலி தொன் முரண் தொலைத்த
முறம் செவி வாரணம் முன் குளகு அருந்தி
கறங்கு வெள் அருவி ஓலின் துஞ்சும்
பிறங்கு இரும் சோலை நன் மலை நாடன்
மறந்தான் மறக்க இனி எல்லா நமக்கு
சிறந்தமை நாம் நன்கு அறிந்தனம் ஆயின் அவன் திறம்
கொல் யானை கோட்டால் வெதிர் நெல் குறுவாம் நாம்
வள்ளை அகவுவம் வா இகுளை நாம்
வள்ளை அகவுவம் வா
காணிய வா வாழி தோழி வரை தாழ்பு
வாள் நிறம் கொண்ட அருவித்தே நம் அருளா
நாண் இலி நாட்டு மலை
ஆர்வு_உற்றார் நெஞ்சம் அழிய விடுவானோ
ஓர்வு_உற்று ஒரு திறம் ஒல்காத நேர்கோல்
அறம் புரி நெஞ்சத்தவன்
தண் நறும் கோங்கம் மலர்ந்த வரை எல்லாம்
பொன் அணி யானை போல் தோன்றுமே நம் அருளா
கொன்னாளன் நாட்டு மலை
கூரு நோய் ஏய்ப்ப விடுவானோ தன் மலை
நீரினும் சாயல் உடையன் நயந்தோர்க்கு
தேர் ஈயும் வண் கையவன்
வரை மிசை மேல் தொடுத்த நெய் கண் இறாஅல்
மழை நுழை திங்கள் போல் தோன்றும் இழை நெகிழ
எவ்வம் உறீஇயினான் குன்று
எஞ்சாது எல்லா கொடுமை நுவலாதி
அஞ்சுவது அஞ்சா அறன் இலி அல்லன் என்
நெஞ்சம் பிணிக்கொண்டவன்
என்று யாம் பாட மறை நின்று கேட்டனன்
தாழ் இரும் கூந்தல் என் தோழியை கை கவியா
சாயல் இன் மார்பன் சிறுபுறம் சார்தர
ஞாயிற்று முன்னர் இருள் போல மாய்ந்தது என்
ஆய் இழை மேனி பசப்பு
மேல்
#43
வேங்கை தொலைத்த வெறி பொறி வாரணத்து
ஏந்து மருப்பின் இன வண்டு இமிர்பு ஊதும்
சாந்த மரத்தின் இயன்ற உலக்கையால்
ஐவன வெண்ணெல் அறை உரலுள் பெய்து இருவாம்
ஐயனை ஏத்துவாம் போல அணி பெற்ற
மை படு சென்னி பய மலை நாடனை
தையலாய் பாடுவாம் நாம்
தகையவர் கை செறித்த தாள் போல காந்தள்
முகையின் மேல் தும்பி இருக்கும் பகை எனின்
கூற்றம் வரினும் தொலையான் தன் நட்டார்க்கு
தோற்றலை நாணாதோன் குன்று
வெருள்பு உடன் நோக்கி வியல் அறை யூகம்
இருள் தூங்கு இறுவரை ஊர்பு இழிபு ஆடும்
வருடை மான் குழவிய வள மலை நாடனை
தெருள தெரி_இழாய் நீ ஒன்று பாடித்தை
நுண் பொறி மான் செவி போல வெதிர் முளை
கண் பொதி பாளை கழன்று உகும் பண்பிற்றே
மாறு கொண்டு ஆற்றார் எனினும் பிறர் குற்றம்
கூறுதல் தேற்றாதோன் குன்று
புணர் நிலை வளகின் குளகு அமர்ந்து உண்ட
புணர் மருப்பு எழில் கொண்ட வரை புரை செலவின்
வயங்கு எழில் யானை பய மலை நாடனை
மணம் நாறு கதுப்பினாய் மறுத்து ஒன்று பாடித்தை
கடுங்கண் உழுவை அடி போல வாழை
கொடும் காய் குலை-தொறூஉம் தூங்கும் இடும்பையால்
இன்மை உரைத்தார்க்கு அது நிறைக்கல் ஆற்றா_கால்
தன் மெய் துறப்பான் மலை
என ஆங்கு
கூடி அவர் திறம் பாட என் தோழிக்கு
வாடிய மென் தோளும் வீங்கின
ஆடு அமை வெற்பன் அளித்த_கால் போன்றே
மேல்
#44
கதிர் விரி கனை சுடர் கவின் கொண்ட நனம் சாரல்
எதிரெதிர் ஓங்கிய மால் வரை அடுக்கத்து
அதிர் இசை அருவி தன் அம் சினை மிசை வீழ
முதிர் இணர் ஊழ் கொண்ட முழவு தாள் எரிவேங்கை
வரி நுதல் எழில் வேழம் பூ நீர் மேல் சொரிதர
புரி நெகிழ் தாமரை மலர் அம் கண் வீறு எய்தி
திரு நயந்து இருந்து அன்ன தேம் கமழ் விறல் வெற்ப
தன் எவ்வம் கூரினும் நீ செய்த அருள் இன்மை
என்னையும் மறைத்தாள் என் தோழி அது கேட்டு
நின்னை யான் பிறர் முன்னர் பழி கூறல் தான் நாணி
கூரும் நோய் சிறப்பவும் நீ செய்த அருள் இன்மை
சேரியும் மறைத்தாள் என் தோழி அது கேட்டு ஆங்கு
ஓரும் நீ நிலையலை என கூறல் தான் நாணி
நோய் அட வருந்தியும் நீ செய்த அருள் இன்மை
ஆயமும் மறைத்தாள் என் தோழி அது கேட்டு
மாய நின் பண்பு இன்மை பிறர் கூறல் தான் நாணி
என ஆங்கு
இனையன தீமை நினைவனள் காத்து ஆங்கு
அனை அரும் பண்பினான் நின் தீமை காத்தவள்
அரும் துயர் ஆர் அஞர் தீர்க்கும்
மருந்து ஆகி செல்கம் பெரும நாம் விரைந்தே
மேல்
#45
விடியல் வெம் கதிர் காயும் வேய் அமல் அகல் அறை
கடி சுனை கவினிய காந்தள் அம் குலையினை
அரும் மணி அவிர் உத்தி அரவு நீர் உணல் செத்து
பெரும் மலை மிளிர்ப்பு அன்ன காற்று உடை கனை பெயல்
உருமு கண்ணுறுதலின் உயர் குரல் ஒலி ஓடி
நறு வீய நனம் சாரல் சிலம்பலின் கதுமென
சிறுகுடி துயில் எழூஉம் சேண் உயர் விறல் வெற்ப
கால் பொர நுடங்கல கறங்கு இசை அருவி நின்
மால் வரை மலி சுனை மலர் ஏய்க்கும் என்பதோ
புல் ஆரா புணர்ச்சியால் புலம்பிய என் தோழி
பல் இதழ் மலர் உண்கண் பசப்ப நீ சிதைத்ததை
புகர் முக களிறொடு புலி பொருது உழக்கும் நின்
அகல் மலை அடுக்கத்த அமை ஏய்க்கும் என்பதோ
கடை என கலுழும் நோய் கைம்மிக என் தோழி
தடையின திரண்ட தோள் தகை வாட சிதைத்ததை
சுடர் உற_உற நீண்ட சுரும்பு இமிர் அடுக்கத்த
விடர் வரை எரிவேங்கை இணர் ஏய்க்கும் என்பதோ
யாமத்தும் துயில் அலள் அலமரும் என் தோழி
காமரு நல் எழில் கவின் வாட சிதைத்ததை
என ஆங்கு
தன் தீமை பல கூறி கழறலின் என் தோழி
மறையில் தான் மருவு_உற மணந்த நட்பு அருகலான்
பிறை புரை நுதல் அவர் பேணி நம்
உறை வரைந்தனர் அவர் உவக்கும் நாளே
மேல்
#46
வீ அகம் புலம்ப வேட்டம் போகிய
மாஅல் அம் சிறை மணி நிற தும்பி
வாய் இழி கடாத்த வால் மருப்பு ஒருத்தலோடு
ஆய் பொறி உழுவை தாக்கிய பொழுதின்
வேங்கை அம் சினை என விறல் புலி முற்றியும்
பூ பொறி யானை புகர் முகம் குறுகியும்
வலி மிகு வெகுளியான் வாள்_உற்ற மன்னரை
நயன் நாடி நட்பு ஆக்கும் வினைவர் போல் மறிதரும்
அயம் இழி அருவிய அணி மலை நன் நாட
ஏறு இரங்கு இருள் இடை இரவினில் பதம் பெறாஅன்
மாறினென் என கூறி மனம் கொள்ளும் தான் என்ப
கூடுதல் வேட்கையான் குறி பார்த்து குரல் நொச்சி
பாடு ஓர்க்கும் செவியோடு பைதலேன் யான் ஆக
அரும் செலவு ஆரிடை அருளி வந்து அளி பெறாஅன்
வருந்தினென் என பல வாய்விடூஉம் தான் என்ப
நிலை உயர் கடவுட்கு கடம் பூண்டு தன் மாட்டு
பல சூழும் மனத்தோடு பைதலேன் யான் ஆக
கனை பெயல் நடுநாள் யான் கண்மாற குறி பெறாஅன்
புனை_இழாய் என் பழி நினக்கு உரைக்கும் தான் என்ப
துளி நசை வேட்கையான் மிசை பாடும் புள்ளின் தன்
அளி நசைஇ ஆர்வு_உற்ற அன்பினேன் யான் ஆக
என ஆங்கு
கலந்த நோய் கைம்மிக கண்படா என்_வயின்
புலந்தாயும் நீ ஆயின் பொய்யானே வெல்குவை
இலங்கு தாழ் அருவியோடு அணி கொண்ட நின் மலை
சிலம்பு போல் கூறுவ கூறும்
இலங்கு ஏர் எல் வளை இவள் உடை நோயே
மேல்
#47
ஒன்று இரப்பான் போல் எளிவந்தும் சொல்லும் உலகம்
புரப்பான் போல்வது ஓர் மதுகையும் உடையன்
வல்லாரை வழிபட்டு ஒன்று அறிந்தான் போல்
நல்லார்_கண் தோன்றும் அடக்கமும் உடையன்
இல்லோர் புன்கண் ஈகையின் தணிக்க
வல்லான் போல்வது ஓர் வன்மையும் உடையன்
அன்னான் ஒருவன் தன் ஆண்தகை விட்டு என்னை
சொல்லும் சொல் கேட்டீ சுடர்_இழாய் பல் மாணும்
நின் இன்றி அமையலேன் யான் என்னும் அவன் ஆயின்
அன்னான் சொல் நம்புண்டல் யார்க்கும் இங்கு அரிது ஆயின்
என் உற்ற பிறர்க்கும் ஆங்கு உள-கொல்லோ நறு_நுதால்
அறியாய் நீ வருந்துவல் யான் என்னும் அவன் ஆயின்
தமியரே துணிகிற்றல் பெண்டிர்க்கும் அரிது ஆயின்
அளியரோ எம் போல ஈங்கு இவன் வலைப்பட்டார்
வாழலேன் யான் என்னும் நீ நீப்பின் அவன் ஆயின்
ஏழையர் என பலர் கூறும் சொல் பழி ஆயின்
சூழும்_கால் நினைப்பது ஒன்று அறிகலேன் வருந்துவல்
சூழும்_கால் நறு_நுதால் நம்முளே சூழ்குவம்
அவனை
நாண் அட பெயர்த்தல் நமக்கும் ஆங்கு ஒல்லாது
பேணினர் எனப்படுதல் பெண்மையும் அன்று அவன்
வௌவினன் முயங்கும் மாத்திரம் வா என
கூறுவென் போல காட்டி
மற்று அவன் மேஎ_வழி மேவாய் நெஞ்சே
மேல்
#48
ஆம் இழி அணி மலை அலர் வேங்கை தகை போல
தே மூசு நனை கவுள் திசை காவல்கொளற்கு ஒத்த
வாய் நில்லா வலி முன்பின் வண்டு ஊது புகர் முகம்
படு மழை அடுக்கத்த மா விசும்பு ஓங்கிய
கடி_மர துருத்திய கமழ் கடாம் திகழ்தரும்
பெரும் களிற்று இனத்தொடு வீங்கு எருத்து எறுழ் முன்பின்
இரும் புலி மயக்கு_உற்ற இகல் மலை நன் நாட
வீழ் பெயல் கங்குலின் விளி ஓர்த்த ஒடுக்கத்தால்
வாழும் நாள் சிறந்தவள் வருந்து தோள் தவறு உண்டோ
தாழ் செறி கடும் காப்பின் தாய் முன்னர் நின் சாரல்
ஊழ்_உறு கோடல் போல் எல் வளை உகுபவால்
இனை இருள் இது என ஏங்கி நின் வரல் நசைஇ
நினை துயர் உழப்பவள் பாடு இல் கண் பழி உண்டோ
இனையள் என்று எடுத்து அரற்றும் அயல் முன்னர் நின் சுனை
கனை பெயல் நீலம் போல் கண் பனி கலுழ்பவால்
பல் நாளும் படர் அட பசலையால் உணப்பட்டாள்
பொன் உரை மணி அன்ன மாமை கண் பழி உண்டோ
இன் நுரை செதும்பு அரற்றும் செவ்வியுள் நின் சோலை
மின் உகு தளிர் அன்ன மெலிவு வந்து உரைப்பதால்
என ஆங்கு
பின் ஈதல் வேண்டும் நீ பிரிந்தோள் நட்பு என நீவி
பூ கண்படுதலும் அஞ்சுவல் தாங்கிய
அரும் துயர் அவலம் தூக்கின்
மருங்கு அறிவாரா மலையினும் பெரிதே
மேல்
#49
கொடு_வரி தாக்கி வென்ற வருத்தமொடு
நெடு வரை மருங்கின் துஞ்சும் யானை
நனவில் தான் செய்தது மனத்தது ஆகலின்
கனவில் கண்டு கதுமென வெரீஇ
புதுவது ஆக மலர்ந்த வேங்கையை
அது என உணர்ந்து அதன் அணி நலம் முருக்கி
பேணா முன்பின் தன் சினம் தணிந்து அ மரம்
காணும் பொழுதின் நோக்கல் செல்லாது
நாணி இறைஞ்சும் நன் மலை நன் நாட
போது எழில் மலர் உண்கண் இவள் மாட்டு நீ இன்ன
காதலை என்பதோ இனிது மற்று இன்னாதே
மின் ஓரும் கண் ஆக இடி என்னாய் பெயல் என்னாய்
இன்னது ஓர் ஆரிடை ஈங்கு நீ வருவதை
இன்புற அளித்தனை இவள் மாட்டு நீ இன்ன
அன்பினை என்பதோ இனிது மற்று இன்னாதே
மணம் கமழ் மார்பினை மஞ்சு இவர் அடுக்கம் போழ்ந்து
அணங்கு உடை ஆரிடை ஈங்கு நீ வருவதை
இருள் உறழ் இரும் கூந்தல் இவள் மாட்டு நீ இன்ன
அருளினை என்பதோ இனிது மற்று இன்னாதே
ஒளிறு வேல் வலன் ஏந்தி ஒருவன் யான் என்னாது
களிறு இயங்கு ஆரிடை ஈங்கு நீ வருவதை
அதனால்
இரவின் வாரல் ஐய விரவு வீ
அகல் அறை வரிக்கும் சாரல்
பகலும் பெறுவை இவள் தட மென் தோளே
மேல்
#50
வாங்கு கோல் நெல்லொடு வாங்கி வரு_வைகல்
மூங்கில் மிசைந்த முழந்தாள் இரும் பிடி
தூங்கு இலை வாழை நளி புக்கு ஞாங்கர்
வருடை மட மறி ஊர்வு இடை துஞ்சும்
இருள் தூங்கு சோலை இலங்கு நீர் வெற்ப
அரவின் பொறியும் அணங்கும் புணர்ந்த
உரவு வில் மேல் அசைத்த கையை ஓராங்கு
நிரை வளை முன்கை என் தோழியை நோக்கி
படி கிளி பாயும் பசும் குரல் ஏனல்
கடிதல் மறப்பித்தாய் ஆயின் இனி நீ
நெடிது உள்ளல் ஓம்புதல் வேண்டும் இவளே
பல் கோள் பலவின் பயிர்ப்பு உறு தீம் கனி
அல்கு அறை கொண்டு ஊண் அமலை சிறுகுடி
நல்கூர்ந்தார் செல்வ மகள்
நீயே வளியின் இகல் மிகும் தேரும் களிறும்
தளியின் சிறந்தனை வந்த புலவர்க்கு
அளியொடு கைதூவலை
அதனால்
கடு மா கடவு_உறூஉம் கோல் போல் எனைத்தும்
கொடுமை இலை ஆவது அறிந்தும் அடுப்பல்
வழை வளர் சாரல் வருடை நன் மான்
குழவி வளர்ப்பவர் போல பாராட்டி
உழையின் பிரியின் பிரியும்
இழை அணி அல்குல் என் தோழியது கவினே
மேல்
#51
சுடர் தொடீஇ கேளாய் தெருவில் நாம் ஆடும்
மணல் சிற்றில் காலின் சிதையா அடைச்சிய
கோதை பரிந்து வரி பந்து கொண்டு ஓடி
நோ_தக்க செய்யும் சிறு பட்டி மேல் ஓர் நாள்
அன்னையும் யானும் இருந்தேமா இல்லிரே
உண்ணு நீர் வேட்டேன் என வந்தாற்கு அன்னை
அடர் பொன் சிரகத்தால் வாக்கி சுடர்_இழாய்
உண்ணு நீர் ஊட்டி வா என்றாள் என யானும்
தன்னை அறியாது சென்றேன் மற்று என்னை
வளை முன்கை பற்றி நலிய தெருமந்திட்டு
அன்னாய் இவன் ஒருவன் செய்தது காண் என்றேனா
அன்னை அலறி படர்தர தன்னை யான்
உண்ணு நீர் விக்கினான் என்றேனா அன்னையும்
தன்னை புறம்பு அழித்து நீவ மற்று என்னை
கடைக்கண்ணால் கொல்வான் போல் நோக்கி நகை கூட்டம்
செய்தான் அ கள்வன் மகன்
மேல்
#52
முறம் செவி மறை பாய்பு முரண் செய்த புலி செற்று
மறம் தலைக்கொண்ட நூற்றுவர்_தலைவனை
குறங்கு அறுத்திடுவான் போல் கூர் நுதி மடுத்து அதன்
நிறம் சாடி முரண் தீர்ந்த நீள் மருப்பு எழில் யானை
மல்லரை மறம் சாய்த்த மால் போல் தன் கிளை நாப்பண்
கல் உயர் நனம் சாரல் கலந்து இயலும் நாட கேள்
தாமரை கண்ணியை தண் நறும் சாந்தினை
நேர் இதழ் கோதையாள் செய் குறி நீ வரின்
மணம் கமழ் நாற்றத்த மலை நின்று பலி பெறூஉம்
அணங்கு என அஞ்சுவர் சிறுகுடியோரே
ஈர் தண் ஆடையை எல்லி மாலையை
சோர்ந்து வீழ் கதுப்பினாள் செய் குறி நீ வரின்
ஒளி திகழ் ஞெகிழியர் கவணையர் வில்லர்
களிறு என ஆர்ப்பவர் ஏனல் காவலரே
ஆர மார்பினை அண்ணலை அளியை
ஐது அகல் அல்குலாள் செய் குறி நீ வரின்
கறி வளர் சிலம்பில் வழங்கல் ஆனா
புலி என்று ஓர்க்கும் இ கலி கேழ் ஊரே
என ஆங்கு
விலங்கு ஓரார் மெய் ஓர்ப்பின் இவள் வாழாள் இவள் அன்றி
புலம் புகழ் ஒருவ யானும் வாழேன்
அதனால் பொதி அவிழ் வைகறை வந்து நீ குறைகூறி
வதுவை அயர்தல் வேண்டுவல் ஆங்கு
புதுவை போலும் நின் வரவும் இவள்
வதுவை நாண் ஒடுக்கமும் காண்குவல் யானே
மேல்
#53
வறன்_உறல் அறியாத வழை அமை நறும் சாரல்
விறல் மலை வியல் அறை வீழ் பிடி உழையதா
மறம் மிகு வேழம் தன் மாறுகொள் மைந்தினான்
புகர் நுதல் புண் செய்த புய் கோடு போல
உயர் முகை நறும் காந்தள் நாள்-தோறும் புதிது ஈன
அயம் நந்தி அணி பெற அருவி ஆர்த்து இழிதரும்
பய மழை தலைஇய பாடு சால் விறல் வெற்ப
மறையினின் மணந்து ஆங்கே மருவு அற துறந்த பின்
இறை வளை நெகிழ்பு ஓட ஏற்பவும் ஒல்லும்-மன்
அயல் அலர் தூற்றலின் ஆய் நலன் இழந்த கண்
கயல் உமிழ் நீர் போல கண் பனி கலுழா_கால்
இனிய செய்து அகன்று நீ இன்னாதா துறத்தலின்
பனி இவள் படர் என பரவாமை ஒல்லும்-மன்
ஊர் அலர் தூற்றலின் ஒளி ஓடி நறு நுதல்
பீர் அலர் அணி கொண்டு பிறை வனப்பு இழவா_கால்
அஞ்சல் என்று அகன்று நீ அருளாது துறத்தலின்
நெஞ்சு அழி துயர் அட நிறுப்பவும் இயையும்-மன்
நனவினால் நலம் வாட நலிதந்த நடுங்கு அஞர்
கனவினால் அழிவு_உற்று கங்குலும் அரற்றா_கால்
என ஆங்கு
விளியா நோய் உழந்து ஆனா என் தோழி நின் மலை
முளிவு உற வருந்திய முளை முதிர் சிறுதினை
தளி பெற தகைபெற்று ஆங்கு நின்
அளி பெற நந்தும் இவள் ஆய் நுதல் கவினே
மேல்
#54
கொடியவும் கோட்டவும் நீர் இன்றி நிறம் பெற
பொடி அழல் புறந்தந்த பூவா பூ பொலன் கோதை
தொடி செறி யாப்பு அமை அரி முன்கை அணை தோளாய்
அடி உறை அருளாமை ஒத்ததோ நினக்கு என்ன
நரந்தம் நாறு இரும் கூந்தல் எஞ்சாது நனி பற்றி
பொலம் புனை மகர_வாய் நுங்கிய சிகழிகை
நலம்பெற சுற்றிய குரல் அமை ஒரு காழ்
விரல் முறை சுற்றி மோக்கலும் மோந்தனன்
நறாஅ அவிழ்ந்து அன்ன என் மெல் விரல் போது கொண்டு
செறாஅ செம் கண் புதைய வைத்து
பறாஅ குருகின் உயிர்த்தலும் உயிர்த்தனன்
தொய்யில் இள முலை இனிய தைவந்து
தொய்யல் அம் தட கையின் வீழ் பிடி அளிக்கும்
மையல் யானையின் மருட்டலும் மருட்டினன்
அதனால்
அல்லல் களைந்தனன் தோழி நம் நகர்
அரும் கடி நீவாமை கூறின் நன்று என
நின்னொடு சூழ்வல் தோழி நயம் புரிந்து
இன்னது செய்தாள் இவள் என
மன்னா உலகத்து மன்னுவது புரைமே
மேல்
#55
மின் ஒளிர் அவிர் அறல் இடை போழும் பெயலே போல்
பொன் அகை தகை வகிர் வகை நெறி வயங்கிட்டு
போழ் இடையிட்ட கமழ் நறும் பூ கோதை
இன் நகை இலங்கு எயிற்று தே மொழி துவர் செம் வாய்
நன்_நுதால் நினக்கு ஒன்று கூறுவாம் கேள் இனி
நில் என நிறுத்தான் நிறுத்தே வந்து
நுதலும் முகனும் தோளும் கண்ணும்
இயலும் சொல்லும் நோக்குபு நினைஇ
ஐ தேய்ந்தன்று பிறையும் அன்று
மை தீர்ந்தன்று மதியும் அன்று
வேய் அமன்றன்று மலையும் அன்று
பூ அமன்றன்று சுனையும் அன்று
மெல்ல இயலும் மயிலும் அன்று
சொல்ல தளரும் கிளியும் அன்று
என ஆங்கு
அனையன பல பாராட்டி பையென
வலைவர் போல சோர் பதன் ஒற்றி
புலையர் போல புன்கண் நோக்கி
தொழலும் தொழுதான் தொடலும் தொட்டான்
காழ் வரை நில்லா கடும் களிறு அன்னோன்
தொழூஉம் தொடூஉம் அவன் தன்மை
ஏழை தன்மையோ இல்லை தோழி
மேல்
#56
ஊர் கால் நிவந்த பொதும்பருள் நீர் கால்
கொழு நிழல் ஞாழல் முதிர் இணர் கொண்டு
கழும முடித்து கண்கூடு கூழை
சுவல் மிசை தாதொடு தாழ அகல் மதி
தீம் கதிர் விட்டது போல முகன் அமர்ந்து
ஈங்கே வருவாள் இவள் யார்-கொல் ஆங்கே ஓர்
வல்லவன் தைஇய பாவை-கொல் நல்லார்
உறுப்பு எலாம் கொண்டு இயற்றியாள்-கொல் வெறுப்பினால்
வேண்டு உருவம் கொண்டதோர் கூற்றம்-கொல் ஆண்டார்
கடிது இவளை காவார் விடுதல் கொடி இயல்
பல் கலை சில் பூ கலிங்கத்தள் ஈங்கு இது ஓர்
நல்கூர்ந்தார் செல்வ மகள்
இவளை சொல்லாடி காண்பேன் தகைத்து
நல்லாய் கேள்
ஆய் தூவி அனம் என அணி மயில் பெடை என
தூது_உண்_அம்_புறவு என துதைந்த நின் எழில் நலம்
மாதர் கொள் மான் நோக்கின் மட நல்லாய் நின் கண்டார்
பேது உறூஉம் என்பதை அறிதியோ அறியாயோ
நுணங்கு அமை திரள் என நுண் இழை அணை என
முழங்கு நீர் புணை என அமைந்த நின் தட மென் தோள்
வணங்கு இறை வால் எயிற்று அம் நல்லாய் நின் கண்டார்க்கு
அணங்கு ஆகும் என்பதை அறிதியோ அறியாயோ
முதிர் கோங்கின் முகை என முகம் செய்த குரும்பை என
பெயல் துளி முகிழ் என பெருத்த நின் இள முலை
மயிர் வார்ந்த வரி முன்கை மட நல்லாய் நின் கண்டார்
உயிர் வாங்கும் என்பதை உணர்தியோ உணராயோ
என ஆங்கு
பேது உற்றாய் போல பிறர் எவ்வம் நீ அறியாய்
யாது ஒன்றும் வாய்வாளாது இறந்தீவாய் கேள் இனி
நீயும் தவறு இலை நின்னை புறங்கடை
போதர விட்ட நுமரும் தவறு இலர்
நிறை அழி கொல் யானை நீர்க்கு விட்டு ஆங்கு
பறை அறைந்து அல்லது செல்லற்க என்னா
இறையே தவறு உடையான்
மேல்
#57
வேய் என திரண்ட தோள் வெறி கமழ் வணர் ஐம்பால்
மா வென்ற மட நோக்கின் மயில் இயல் தளர்பு ஒல்கி
ஆய் சிலம்பு அரி ஆர்ப்ப அவிர் ஒளி இழை இமைப்ப
கொடி என மின் என அணங்கு என யாது ஒன்றும்
தெரிகல்லா இடையின்_கண் கண் கவர்பு ஒருங்கு ஓட
வளமை சால் உயர் சிறப்பின் நுந்தை தொல் வியல் நகர்
இளமையான் எறி பந்தொடு இகத்தந்தாய் கேள் இனி
பூ தண் தார் புலர் சாந்தின் தென்னவன் உயர் கூடல்
தேம் பாய அவிழ் நீலத்து அலர் வென்ற அமர் உண்கண்
ஏந்து கோட்டு எழில் யானை ஒன்னாதார்க்கு அவன் வேலின்
சேந்து நீ இனையையால் ஒத்ததோ சின்_மொழி
பொழி பெயல் வண்மையான் அசோகம் தண் காவினுள்
கழி கவின் இள மாவின் தளிர் அன்னாய் அதன்_தலை
பணை அமை பாய் மான் தேர் அவன் செற்றார் நிறம் பாய்ந்த
கணையினும் நோய் செய்தல் கடப்பு அன்றோ கனம் குழாய்
வகை அமை தண் தாரான் கோடு உயர் பொருப்பின் மேல்
தகை இணர் இள வேங்கை மலர் அன்ன சுணங்கினாய்
மத வலி மிகு கடாஅத்து அவன் யானை மருப்பினும்
கதவவால் தக்கதோ காழ் கொண்ட இள முலை
என ஆங்கு
இனையன கூற இறைஞ்சுபு நிலம் நோக்கி
நினையுபு நெடிது ஒன்று நினைப்பாள் போல் மற்று ஆங்கே
துணை அமை தோழியர்க்கு அமர்த்த கண்ணள்
மனை ஆங்கு பெயர்ந்தாள் என் அறிவு அகப்படுத்தே
மேல்
#58
வார்_உறு வணர் ஐம்பால் வணங்கு இறை நெடு மென் தோள்
பேர் எழில் மலர் உண்கண் பிணை எழில் மான் நோக்கின்
கார் எதிர் தளிர் மேனி கவின் பெறு சுடர் நுதல்
கூர் எயிற்று முகை வெண் பல் கொடி புரையும் நுசுப்பினாய்
நேர் சிலம்பு அரி ஆர்ப்ப நிரை தொடி கை வீசினை
ஆர் உயிர் வௌவிக்கொண்டு அறிந்தீயாது இறப்பாய் கேள்
உளனா என் உயிரை உண்டு உயவு நோய் கைம்மிக
இளமையான் உணராதாய் நின் தவறு இல்லானும்
களைநர் இல் நோய் செய்யும் கவின் அறிந்து அணிந்து தம்
வளமையான் போத்தந்த நுமர் தவறு இல் என்பாய்
நடை மெலிந்து அயர்வு_உறீஇ நாளும் என் நலியும் நோய்
மடமையான் உணராதாய் நின் தவறு இல்லானும்
இடை நில்லாது எய்க்கும் நின் உரு அறிந்து அணிந்து தம்
உடைமையால் போத்தந்த நுமர் தவறு இல் என்பாய்
அல்லல் கூர்ந்து அழிவு_உற அணங்கு_ஆகி அடரும் நோய்
சொல்லினும் அறியாதாய் நின் தவறு இல்லானும்
ஒல்லையே உயிர் வௌவும் உரு அறிந்து அணிந்து தம்
செல்வத்தால் போத்தந்த நுமர் தவறு இல் என்பாய்
என ஆங்கு
ஒறுப்பின் யான் ஒறுப்பது நுமரை யான் மற்று இ நோய்
பொறுக்கலாம் வரைத்து அன்றி பெரிது ஆயின் பொலம் குழாய்
மறுத்து இ ஊர் மன்றத்து மடல்_ஏறி
நிறுக்குவென் போல்வல் யான் நீ படு பழியே
மேல்
#59
தளை நெகிழ் பிணி நிவந்த பாசடை தாமரை
முளை நிமிர்ந்தவை போலும் முத்து கோல் அவிர் தொடி
அடுக்கம் நாறும் அலர் காந்தள் நுண் ஏர் தண் ஏர் உருவின்
துடுப்பு என புரையும் நின் திரண்ட நேர் அரி முன்கை
சுடர் விரி வினை வாய்ந்த தூதையும் பாவையும்
விளையாட அரி பெய்த அழகு அமை புனை வினை
ஆய் சிலம்பு எழுந்து ஆர்ப்ப அம் சில இயலும் நின்
பின்னு விட்டு இருளிய ஐம்பால் கண்டு என் பால
என்னை விட்டு இகத்தர இறந்தீவாய் கேள் இனி
மருளி யான் மருள்_உற இவன் உற்றது எவன் என்னும்
அருள் இலை இவட்கு என அயலார் நின் பழிக்கும்_கால்
வை எயிற்றவர் நாப்பண் வகை அணி பொலிந்து நீ
தையில் நீர் ஆடிய தவம் தலைப்படுவாயோ
உருள்_இழாய் ஒளி வாட இவன் உள் நோய் யாது என்னும்
அருள் இலை இவட்கு என அயலார் நின் பழிக்கும்_கால்
பொய்தல மகளையாய் பிறர் மனை பாடி நீ
எய்திய பலர்க்கு ஈத்த பயம் பயக்கிற்பதோ
ஆய்_தொடி ஐது உயிர்த்து இவன் உள் நோய் யாது என்னும்
நோய் இலை இவட்கு என நொதுமலர் பழிக்கும்_கால்
சிறு முத்தனை பேணி சிறு சோறு மடுத்து நீ
நறு நுதலவரொடு நக்கது நன்கு இயைவதோ
என ஆங்கு
அனையவை உளையவும் யான் நினக்கு உரைத்ததை
இனைய நீ செய்தது உதவாய் ஆயின் சே_இழாய்
செய்ததன் பயம் பற்று விடாது
நயம் பற்று விடின் இல்லை நசைஇயோர் திறத்தே
மேல்
#60
சுணங்கு அணி வன முலை சுடர் கொண்ட நறு நுதல்
மணம் கமழ் நறும் கோதை மாரி வீழ் இரும் கூந்தல்
நுணங்கு எழில் ஒண் தித்தி நுழை நொசி மட மருங்குல்
வணங்கு இறை வரி முன்கை வரி ஆர்ந்த அல்குலாய்
கண் ஆர்ந்த நலத்தாரை கதுமென கண்டவர்க்கு
உள் நின்ற நோய் மிக உயிர் எஞ்சு துயர் செய்தல்
பெண் அன்று புனை_இழாய் என கூறி தொழூஉம் தொழுதே
கண்ணும் நீர் ஆக நடுங்கினன் இன் நகாய்
என் செய்தான்-கொல்லோ இஃது ஒத்தன் தன்_கண்
பொரு களிறு அன்ன தகை சாம்பி உள்ளுள்
உருகுவான் போலும் உடைந்து
தெருவின்-கண் காரணம் இன்றி கலங்குவார் கண்டு நீ
வாரணவாசி பதம் பெயர்த்தல் ஏதில
நீ நின் மேல் கொள்வது எவன்
அலர் முலை ஆய் இழை நல்லாய் கதுமென
பேர் அமர் உண்கண் நின் தோழி உறீஇய
ஆர் அஞர் எவ்வம் உயிர் வாங்கும்
மற்று இ நோய் தீரும் மருந்து அருளாய் ஒண்_தொடீ
நின் முகம் காணும் மருந்தினேன் என்னுமால்
நின் முகம் தான் பெறின் அல்லது கொன்னே
மருந்து பிறிது யாதும் இல்லேல் திருந்து_இழாய்
என் செய்வாம்-கொல் இனி நாம் பொன் செய்வாம்
ஆறு விலங்கி தெருவின்-கண் நின்று ஒருவன்
கூறும் சொல் வாய் என கொண்டு அதன் பண்பு உணராம்
தேறல் எளிது என்பாம் நாம்
ஒருவன் சாம் ஆறு எளிது என்பாம் மற்று
சிறிது ஆங்கே மாணா ஊர் அம்பல் அலரின் அலர்க என
நாணும் நிறையும் நயப்பு இல் பிறப்பு இலி
பூண் ஆகம் நோக்கி இமையான் நயந்து நம்
கேண்மை விருப்பு_உற்றவனை எதிர் நின்று
நாண் அட பெயர்த்த நயவரவு இன்றே
மேல்
#61
எல்லா இஃது ஒத்தன் என் பெறான் கேட்டை காண்
செல்வம் கடைகொள சாஅய் சான்றவர்
அல்லல் களை தக்க கேளிர் உழை சென்று
சொல்லுதல்_உற்று உரைக்கல்லாதவர் போல
பல் ஊழ் பெயர்ந்து என்னை நோக்கும் மற்று யான் நோக்கின்
மெல்ல இறைஞ்சும் தலை
எல்லா நீ முன்னத்தான் ஒன்று குறித்தாய் போல் காட்டினை
நின்னின் விடாஅ நிழல் போல் திரிதருவாய்
என் நீ பெறாதது ஈது என்
சொல்லின் மறாதீவாள்-மன்னோ இவள்
செறாஅது ஈதல் இரந்தார்க்கு ஒன்று ஆற்றாது வாழ்தலின்
சாதலும் கூடுமாம் மற்று
இவள் தந்தை காதலின் யார்க்கும் கொடுக்கும் விழு பொருள்
யாது நீ வேண்டியது
பேதாய் பொருள் வேண்டும் புன்கண்மை ஈண்டு இல்லை யாழ
மருளி மட நோக்கின் நின் தோழி என்னை
அருளீயல் வேண்டுவல் யான்
அன்னையோ மண்டு அமர் அட்ட களிறு அன்னான் தன்னை ஒரு
பெண்டிர் அருள கிடந்தது எவன்-கொலோ
ஒண்_தொடீ நாண் இலன் மன்ற இவன்
ஆயின் ஏஎ
பல்லார் நக்கு எள்ளப்படு மடல்_மா ஏறி
மல்லல் ஊர் ஆங்கண் படுமே நறு_நுதல்
நல்காள் கண்மாறிவிடின் என செல்வான் நாம்
எள்ளி நகினும் வரூஉம் இடையிடை
கள்வர் போல் நோக்கினும் நோக்கும் குறித்தது
கொள்ளாது போகா குணன் உடையன் எந்தை தன்
உள்ளம் குறைபடாவாறு
மேல்
#62
ஏஎ இஃது ஒத்தன் நாண் இலன் தன்னொடு
மேவேம் என்பாரையும் மேவினன் கைப்பற்றும்
மேவினும் மேவா_கடையும் அஃது எல்லாம்
நீ அறிதி யான் அஃது அறிகல்லேன் பூ அமன்ற
மெல் இணர் செல்லா கொடி அன்னாய் நின்னை யான்
புல் இனிது ஆகலின் புல்லினென் எல்லா
தமக்கு இனிது என்று வலிதின் பிறர்க்கு இன்னா
செய்வது நன்று ஆமோ மற்று
சுடர் தொடீ போற்றாய் களை நின் முதுக்குறைமை போற்றி கேள்
வேட்டார்க்கு இனிது ஆயின் அல்லது நீர்க்கு இனிது என்று
உண்பவோ நீர் உண்பவர்
செய்வது அறிகல்லேன் யாது செய்வேன்-கொலோ
ஐ_வாய்_அரவின் இடைப்பட்டு நைவாரா
மை இல் மதியின் விளங்கும் முகத்தாரை
வௌவி கொளலும் அறன் என கண்டன்று
அறனும் அது கண்டு அற்று ஆயின் திறன் இன்றி
கூறும் சொல் கேளான் நலிதரும் பண்டு நாம்
வேறு அல்லம் என்பது ஒன்று உண்டால் அவனொடு
மாறு உண்டோ நெஞ்சே நமக்கு
மேல்
#63
நோக்கும்_கால் நோக்கி தொழூஉம் பிறர் காண்பார்
தூக்கு இலி தூற்றும் பழி என கை கவித்து
போக்கும்_கால் போக்கு நினைந்து இருக்கும் மற்று நாம்
காக்கும் இடம் அன்று இனி
எல்லா எவன் செய்வாம்
பூ குழாய் செல்லல் அவன் உழை கூஉய்_கூஉய்
விரும்பி யான் விட்டேனும் போல்வல் என் தோள் மேல்
கரும்பு எழுது தொய்யிற்கு செல்வல் ஈங்கு ஆக
இருந்தாயோ என்று ஆங்கு இற
அவன் நின் திருந்து அடி மேல் வீழ்ந்து இரக்கும் நோய் தீர்க்கும்
மருந்து நீ ஆகுதலான்
இன்னும் கடம் பூண்டு ஒரு_கால் நீ வந்தை உடம்பட்டாள்
என்னாமை என் மெய் தொடு
இதோ அடங்க கேள்
நின்னொடு சூழும்_கால் நீயும் நிலம் கிளையா
என்னொடு நிற்றல் எளிது அன்றோ மற்று அவன்
தன்னொடு நின்று விடு
மேல்
#64
அணி முகம் மதி ஏய்ப்ப அ மதியை நனி ஏய்க்கும்
மணி முகம் மா மழை நின் பின் ஒப்ப பின்னின்_கண்
விரி நுண் நூல் சுற்றிய ஈர் இதழ் அலரி
அரவு-கண் அணி உறழ் ஆரல் மீன் தகை ஒப்ப
அரும் படர் கண்டாரை செய்து ஆங்கு இயலும்
விரிந்து ஒலி கூந்தலாய் கண்டை எமக்கு
பெரும் பொன் படுகுவை பண்டு
ஏஎ எல்லா மொழிவது கண்டை இஃது ஒத்தன் தொய்யில்
எழுதி இறுத்த பெரும் பொன் படுகம்
உழுவது உடையமோ யாம்
உழுதாய்
சுரும்பு இமிர் பூ கோதை அம் நல்லாய் யான் நின்
திருந்து இழை மென் தோள் இழைத்த மற்று இஃதோ
கரும்பு எல்லாம் நின் உழவு அன்றோ ஒருங்கே
துகள் அறு வாள் முகம் ஒப்ப மலர்ந்த
குவளையும் நின் உழவு அன்றோ இகலி
முகை மாறு கொள்ளும் எயிற்றாய் இவை அல்ல
என் உழுவாய் நீ மற்று இனி
எல்லா நல் தோள் இழைத்த கரும்புக்கு நீ கூறு
முற்று எழில் நீல மலர் என உற்ற
இரும்பு ஈர் வடி அன்ன உண்கட்கும் எல்லாம்
பெரும் பொன் உண்டு என்பாய் இனி
நல்லாய் இகுளை கேள்
ஈங்கே தலைப்படுவன் உண்டான் தலைப்பெயின்
வேந்து கொண்டு அன்ன பல
ஆங்கு ஆக அ திறம் அல்லா_கால் வேங்கை வீ
முற்று எழில் கொண்ட சுணங்கு அணி பூண் ஆகம்
பொய்த்து ஒரு_கால் எம்மை முயங்கினை சென்றீமோ
முத்து ஏர் முறுவலாய் நீ படும் பொன் எல்லாம்
உத்தி எறிந்துவிடற்கு
மேல்
#65
திருந்து_இழாய் கேளாய் நம் ஊர்க்கு எல்லாம் சாலும்
பெரு நகை அல்கல் நிகழ்ந்தது ஒரு நிலையே
மன்பதை எல்லாம் மடிந்த இரும் கங்குல்
அம் துகில் போர்வை அணி பெற தைஇ நம்
இன் சாயல் மார்பன் குறி நின்றேன் யான் ஆக
தீர தறைந்த தலையும் தன் கம்பலும்
கார குறைந்து கறைப்பட்டு வந்து நம்
சேரியின் போகா முட முதிர் பார்ப்பானை
தோழி நீ போற்றுதி என்றி அவன் ஆங்கே
பாரா குறழா பணியா பொழுது அன்றி
யார் இவண் நின்றீர் என கூறி பையென
வை காண் முது பகட்டின் பக்கத்தின் போகாது
தையால் தம்பலம் தின்றியோ என்று தன்
பக்கு அழித்து கொண்டீ என தரலும் யாது ஒன்றும்
வாய்வாளேன் நிற்ப கடிது அகன்று கைமாறி
கைப்படுக்கப்பட்டாய் சிறுமி நீ மற்று யான்
ஏனை பிசாசு அருள் என்னை நலிதரின்
இ ஊர் பலி நீ பெறாஅமல் கொள்வேன்
என பலவும் தாங்காது வாய் பாடி நிற்ப
முது பார்ப்பான் அஞ்சினன் ஆதல் அறிந்து யான் எஞ்சாது
ஒரு கை மணல் கொண்டு மேல் தூவ கண்டே
கடிது அரற்றி பூசல் தொடங்கினன் ஆங்கே
ஒடுங்கா வயத்தின் கொடும் கேழ் கடுங்கண்
இரும் புலி கொள்-மார் நிறுத்த வலையுள் ஓர்
ஏதில் குறு நரி பட்டு அற்றால் காதலன்
காட்சி அழுங்க நம் ஊர்க்கு எலாஅம்
ஆகுலம் ஆகி விளைந்ததை என்றும் தன்
வாழ்க்கை அது ஆக கொண்ட முது பார்ப்பான்
வீழ்க்கை பெரும் கரும்_கூத்து
இரண்டாவது - குறிஞ்சிக்கலி
அடிநேர் உரை
#37
குளத்திலுள்ள நீல மலரைப் போன்ற மைதீட்டிய கண்களையுடையவளே! இதைக் கேள்! ஓர் இளைஞன்
புலியின் காலடித் தடங்களை ஆராய்வான் போல, நன்றாக இறுக்கிக் கட்டிய
தலைமாலையினை அணிந்து, ஒரு வில்லுடன் வருவான், என்னை நோக்கி
முகக்குறிப்பால் ஏதோ கேட்பதை அன்றி, தான் கொண்டுள்ள
காதலை என்னிடம் சொல்லாமல் சென்றுவிடுவான், இவ்வாறு பலநாளும் நடந்தது,
அவனை எண்ணி உறக்கம் கொள்ளேன், அதனால் துன்பமடைந்து,
அவனோடு எவ்விதத் தொடர்பும் இல்லாத நானும் துயரத்தில் உழன்றேன், அந்த இடத்தில்
என் முகத்தைப் பார்த்து ஒரு மொழியும் கூறுவதற்கு துணியவில்லை அவன் என்றால்,
பெண்ணாகிவிட்ட நாமாகப் பேசுவது நமக்கு ஆகாது, இவ்வாறாக
எனது காதலை அவன் அறியாமலேபோய்விடுமோ என்று ஒருநாள் என்
தோள்கள் மெலிந்துவிட்ட துயரத்தால், துணிவுகொண்டு, ஒரு
நாணமற்ற செயலைச் செய்தேன், நறிய நுதலை உடையவளே! தினைப்புனத்தில்
கூட்டமான கிளிகளை ஓட்டிப் பாதுகாக்கும் புனத்துக்குச் சற்று வெளியே
ஊசலில் ஆடிக்கொண்டிருக்க, ஒரு சமயம் அங்கு வந்தவனை,
"ஐயனே! சிறிது என்னை வேகமாக ஆட்டிவிடு" என்று கூற,
"நல்லது பெண்ணே!" என்று அவன் ஊஞ்சலை வேகமாக ஆட்டிவிட, என் கை நெகிழ்ந்து
பொய்யாக விழுந்தேன் அவன் மார்பின் மேல், அதனை உண்மையென்று கருதி
விரைவாக அவன் என்னைத் தூக்கியவனாய்த் தன் கைகளில் இருத்திக்கொண்டான், அவன் மேல்
ஒன்றும் அறியாதவள் போல் கிடந்தேன், அந்த நேரத்தில்
உண்மையை அறிந்து மயக்கம் தெளிந்து எழுந்திருந்தால், விரைவாக,
"ஒளிவிடும் குழை அணிந்தவளே! எழுந்து செல்" என்று கூறி என்னை அனுப்பிவிடும் பண்புள்ள
நாகரிகம் உடையவன் அவன்.
மேல்
#38
இமையமலையாகிய வில்லை வளைத்த, கங்கை தங்கும் சடைமுடியோனாகிய சிவன்
உமையவளோடு அமர்ந்து உயர்ந்த மலையில் இருக்கும்போது,
பத்துத் தலைகளைக் கொண்ட அரக்கர் கோமானாகிய இராவணன்
தோள்வளை விளங்கும் பெரிய கையைக் கீழே நுழைத்து அந்த மலையைப்
பெயர்த்து எடுக்க முடியாமல் மனம் வருந்தியதைப் போல,
மிகப்பெரிய புலியின் நிறத்தைப் போன்று பூத்த வேங்கையைச்
சினங்கொண்டு அந்த மரத்தின் அடிப்பகுதியைக் குத்திய மதயானை
நீண்ட கரிய மலைப்பிளவுகளில் எதிரொலிக்கும்படியாக கூக்குரலிட்டுத் தன்
கொம்புகளைத் திரும்ப உருவிக்கொள்ள முடியாமல் வருந்துகின்ற நாட்டைச் சேர்ந்தவனே! கேட்பாயாக!
கடப்பதற்கு அரிய வழி என்று கருதாமல், கருநாகங்களுக்கும் அஞ்சாமல் நீ இவளைக் காண வந்தபோது,
நீர் இல்லாத நிலத்தில் பயிர் வாடுவதுபோல் வாடிக்கிடந்தவள், விடியற்காலையில்
மழையைப் பெற்ற நிலத்தைப் போல வனப்புறுவாள்; அந்த வனப்பு
இவளை விட்டு அகன்று போகாமல் காப்பதற்கு ஒரு வழி இருந்தால் அதை உரைப்பாயாக!
இருள் நிறைந்த வழியென்று கருதாமல், நீ இரவென்றும் எண்ணி அஞ்சாமல் வந்தபோது
பொருள் இல்லாதவனின் வறுமையைப் போல் பொலிவிழந்துகிடந்தவள், விடியற்காலையில்
அருள் உள்ளம் கொண்டவனின் செல்வம் நாளும் வளர்வது போல் அழகு பெற்றாள், அந்த அழகு
ஏன் வந்தது என்று எல்லாரும் அறிந்துகொள்ளாமல் காப்பதற்கு ஒரு வழி இருந்தால் அதை உரைப்பாயாக!
வழியில் கொள்ளையர்கள் கொடுஞ்செயலினின்றும் மாறவில்லை என்று கருதாமல், நீ மலைவெளியில் வந்தபோது
அறநெறியைக் கைவிட்டவன் முதுமையில் சீரழிவது போல், மனம் அழிந்துபோய்க் கிடந்தவள், விடியற்காலையில்
நல்லொழுக்கமுடையவனின் செல்வம் போல் நாளும் சீர்பெற்றுச் சிறப்புறுவாள், அந்தச் சீரினால்
அயலார் கூறும் இழிப்புரைகளை மாற்றத்தக்க ஒரு வழி இருந்தால் அதை உரைப்பாயாக,
என்று
நீ படுகின்ற பாட்டை நான் கூறக்கேட்டு
வருகின்றார், தோழியே! நல்ல மலைநாட்டைச் சேர்ந்தவர்!
வேங்கை மரங்கள் பூக்கின்ற நல்ல நாளை எதிர்நோக்கியிருந்து,
பருத்து இறங்குகின்ற இந்தப் பெருத்த தோள்காரியை மணமுடித்துச் செல்வதற்கு.
மேல்
#39
"விருப்பம் தரும் வகையில் வேகமாக வரும் வெள்ளத்தில் எங்களோடு நீராடிக்கொண்டிருந்தவள்
தன் தாமரை போன்ற கண்களை மூடியவாறு, அச்சங்கொண்டு கால்கள் தளர்ந்ததினால் வெள்ளத்தோடு செல்ல,
ஓர் இளைஞன், தன் நீண்ட சுரபுன்னையின் நறிய குளிர்ந்த மாலை அசைந்தாடப் பாய்ந்து, இரக்கத்தோடு
பூண் அணிந்த இவளின் மார்பைத் தன் மார்போடு அணைத்து வந்து கரைசேர்த்தான்; அவனது அகன்ற மார்பினை
இவளது எழுகின்ற முலைகள் தழுவின என்பதனால், என் தோழி
பெய்தற்கரிய மழை பெய்ய விரும்பினால் பெய்விக்கும் தெய்வக் கற்பினாள் ஆகிவிட்டாள்;
அவன் யாரெனில்,
தினைப்புனத்துக் காவற்பரணில் இருக்கும் மகளிர் எழுப்பும் நறுமணப்புகையால் மறைக்கப்பட்டவாறு செல்லும்
வானத்தில் நகர்கின்ற திங்கள், மலையுச்சியை நெருங்க, அதனை, அந்த மலையுச்சியில் கட்டிய
தேன்கூடு என்று எண்ணி அதற்காக ஏணியைச் செய்துவைத்திருக்கும்,
காட்டுப்புற அகன்ற நாட்டுக்குச் சொந்தக்காரனின் மகன்;
சிறுகுடியில் வாழும் மக்களே! சிறுகுடியில் வாழும் மக்களே!
வள்ளிக்கொடிகள் கிழங்கு வைக்கமாட்டா! மலையின் மேல் தேன்கூடுகள் கட்டப்பெறமாட்டா!
தினைப் புனங்களும் கதிர்களை வளைத்து ஈனமாட்டா! இந்த மலைவாழ் மக்கள்
இவளுடைய காதலை மறுக்கும் அறமில்லாத செயல்களைச் செய்து நடப்பதால்!
காந்தள் பூவின் மணம் கமழும், கண்ணைப் பறிக்கின்ற அழகுடைய பெரிய மலைச்சரிவில்
வளைந்திருக்கும் மூங்கில் போன்ற மென்மையான தோள்களையுடைய இளம் குறப்பெண்கள்,
தாம் துரோகம் செய்யாத கணவரைத் தொழுது எழும் பண்பினராதலால், அவருடைய கணவன்மாரும்
தாம் குறிதவறார் வேட்டையில் தாம் எறிந்த கோலில்,
என்று
நான் உண்மையை உரைத்ததைக் கேட்டு, நெறிப்பட
நம் தந்தைக்கும், தமையர்க்கும் எடுத்துரைத்தாள் தாய்;
அவரும் அம்புகளைத் தெரிந்தெடுத்துப் பார்ப்பார், வில்லைப் பார்ப்பார், கண் சிவந்து
ஒரு பகல் முழுதும் சினங்கொண்டு, பின்பு தணிந்து
இருவர் மீதும் ஒரு குற்றமும் இல்லை என்று
மனம் வருந்தித் தம் தலையை ஆட்டி ஒப்புதலைத் தெரிவித்தனர்;
தெரிந்தெடுத்த அணிகலன்களை அணிந்தவளே! நீயும் உன் காதலனும் ஒன்றுசேர்வதற்காக,
மலையில் வாழும் தெய்வமான முருகன் மனம் மகிழ, மனமகிழ்ச்சியுடன்
குரவைக் கூத்தைத் தழுவியவாறு நாங்கள் ஆட, அந்தக் குரவையில்
கொண்டுநிலை என்ற தலைவன், தலைவி சேர்க்கைக்கான பாடலைப் பாடுவாயாக",
"நல்லவளே!
திருமணத்துக்குரிய நல்ல நாள் கூடிவரும் வரையில், நமது சுற்றத்தார், இந்த மலையில்,
முதலில் கோபங்கொண்ட தம் செயலுக்காக நாணி, அதனைத் தாங்கி வாழ என்ன தவம் செய்தார்களோ?
தினைப்புனத்தின் வேங்கை மரம் தன் பூந்தாதுக்களை உதிர்க்கும் பொன் போன்ற பாறை உள்ள முற்றத்தில்
பலர் அறிய காதலனுடன் சேர்ந்திருப்பது நடக்கும் அல்லவா!
இவ்வாறு நனவிலேயே காதலுடன் சேர்ந்திருப்பது நடந்துவிடுவதால், இனிமேல்
கனவில் மட்டுமே அவருடன் களித்திருக்கும் நிலையைக் கைவிட்டுவிடுவேன் அல்லவா!"
"விண்ணைத் தொடுகின்ற மலைநாட்டைச் சேர்ந்தவனும், நீயும், திருமணத்தின்போது
முன்னமே ஒருவரையொருவர் பார்த்தறியாதவர் போல் நடந்துகொள்வீர்களோ?
முன்னமே ஒருவரையொருவர் பார்த்தறியாதவர் போல் நீங்கள் நடந்துகொள்ள, அந்தப் பழைய நட்பைப்
பார்த்தறியாதவள் போல் நான் மறைத்துக்கொள்வேனோ?
மேகம் தவழும் மலைநாட்டைச் சேர்ந்தவனின் அந்த மண விழாவின் அழகினைக் காணாமல்
வெட்கத்தால் தம் கண்களைக் கைகளால் மூடிக்கொள்வோரின் கண்களும் கண்களோ?"
"அதற்கென்ன? உன்னுடைய கண்களால் பார்த்துவிட்டுப்போகிறேன் நான்!"
"நெய்தல் மலர் போன்ற மைதீட்டிய கண்களான உன் கண்களாக ஆகட்டும் என் கண்கள்
என்று மாறி மாறிப் பாடி முருகனை நாம் வழிபடவே
நூல்நெறி அறிந்தவனும், நன்னாளைக் குறித்து, அது தப்புதலை அறியாதவனுமாகிய கணியனை முன் நிறுத்தி,
தகை மிக்கவரும், மணவினைகளின் வகையை அறிந்தவருமான சான்றோர் சூழ்ந்திருக்க,
மூங்கிலைப் போன்ற மென்மையான தோள்களின் பசலையும், ஊரார் பழிச்சொல்லும்,
பொய்யாகக் கனவில் காணும் சந்திப்புகளும் எல்லாம் ஒருசேர நீங்கிப்போகும்படியாக,
மிக உயர்ந்த மலைக்கு உரியவன் பெண்கேட்டு வந்தான்;
உன் பூவின் அழகைக் கொண்ட மைதீட்டிய கண்கள் பொலிவுபெறுக இனியே!"
மேல்
#40
"ஒருவரையொருவர் அழைத்துக்கொண்டு பாட்டுக்கட்டிப் பாடுவோம்"; "தோழி! பொருத்தமான கண்களையும்
சிரிப்பு மொழியையும் கொண்ட மகளிர் நாணி நிற்கும் நிலையைப் போல
அழகு கொண்ட தினைப்புனத்தில் முற்றித் தாழ்ந்த தினைக் கதிரை உருவி,
அரும்பி வளர்ந்த சந்தன மரத்தால் செய்த உரலில் இட்டு, முத்துக்கள் நிறைந்த யானைக் கொம்பினால் செய்த
சிறப்புப் பொருந்திய உலக்கைகளை மாற்றி மாற்றிக் குற்றி,
எந்த மருந்தாலும் ஆற்றமுடியாத காதல் நோயைச் செய்தவனின் பயன் தருகின்ற மலையை வாழ்த்தி
ஒருவரையொருவர் அழைத்துக்கொண்டு பாட்டுக்கட்டிப் பாடுவோம் நாம்";
"அழகிய நெற்றியும், அழகு செய்யப்பெற்ற கூந்தலும் அழகிய மூங்கில் போன்ற பருத்த மென்மையான தோள்களும்
மலர் மணம் கமழும் தலைமயிரையும் கொண்டவளே! நானும் ஒரு பாட்டு வாழ்த்திப்பாடுவேன்,
மூங்கில்கள் ஒலிக்கும் மலைப் பிளவுகள் கொண்ட அவனது மலையைப் பற்றிய பாட்டை நீ பின்னர் பாடு!
குறமகளிர் கைகூப்பி மலையைத் தொழுவதற்காக எடுத்த கைகளைப் போல்
உயர்ந்த தேனையுடைய கொத்துக்கள் அசையும் காந்தள் மலரில்
வைத்த தேன் ஒழுகும்படியாக அசைந்துகொண்டிருக்கும், தன் உற்றாரின்
வருத்தத்தைப் போக்குபவனுடைய மலை;
கற்றறிவு இல்லாத ஆண் குரங்கு ஒன்று, கூட்டமாகக் கூடியிருக்கும் சுற்றத்தாரிடம் சென்று
மெல்லிய விரல்களையுடைய மந்தியைப் பெண்கேட்டுத் தன் குறையைக் கூறும் தன்மையது,
தான் காதலித்த மங்கையரின் அழகை நுகர்ந்து பின்னர் பிரியும்போது அவர் அழகிழந்து போனால் அவரினும்
அதிகமாக வருந்தும் தலைவனுக்குரிய மலை;
முறுக்கு விரிந்த, காம்பு மறையும்படியாக நெருங்கி மலர்ந்த மலர்கள் செறிந்த தாழ்ந்த கிளையில்
தளிர் போன்ற அழகுடைய மேனியின் சிறப்பு வாடிப்போக எனக்கு நோயினைச் செய்தவனின்
ஏறமுடியாத மலையின் சரிவுகளைப் பழித்து ஒரு பாட்டுப் பாடுவோம்";
"விண்ணைத் தொடுகின்ற மலையினில் பந்து எறிந்து விளையாடிய சோர்வு தீரும்படியாக
குளிர்ச்சியாய் விழுகின்ற அருவியில் தேவ மகளிர் ஆடுகின்றனரே!
பெண்டிரின் பெண்மை நலனைத் துய்த்துவிட்டு, குளிர்ந்த மலைச்சாரலில் பூந்தாதுக்களை உண்ட
வண்டினைப்போல் துறந்து செல்கின்றவனின் மலையில்!";
"சோம்பியிருத்தலை அறியாத அழகிய ஆண்யானை, தான் விரும்பும் பெண்யானை கொண்ட
முதல் கருவுறுதலின் போதான மசக்கை நோய்க்கு, மிக்க விருப்பத்துடன் நெடிதாகக் கிளைத்த
இனிய கணுக்களைக் கொண்ட கரும்பின் கழையை வளைத்து முறிக்கும், தன்னைச் சேர்ந்தவரை
ஒருபொழுதும் நீங்கமாட்டேன் என்று கூறுகின்றவனின் மலை.
என்று நாம்
அவனுடைய மலையை நாம் பாட, அதனை விரும்பிக்கேட்டருளி,
உடல் பூரித்த உவகையனாய் வந்துவிட்டான்; தழுவத் தழுவ இன்பந்தரும்
உன்னுடைய மென்மையான முலைகளைக் கொண்ட மார்பு மிக்க அழகு பெறும்படியாக,
பண்பிற் சிறந்தவனான அந்த மலைநாட்டுக்குரியவன்!".
மேல்
#41
"பாடுவோம்! வா! வாழ்க! தோழியே! வலிமை மிக்க களிற்றின்
கொம்பே உலக்கையாகக் கொண்டு, நல்ல சேம்பின் இலையே சுளகாகக் கொண்டு,
ஆடுகின்ற மூங்கிலின் நெல்லை, பாறை உரலுக்குள் இட்டு, இருவரும்
பாடுவோம்! வா! வாழ்க! தோழியே! நல்ல தோழியே! வந்து பாடு!"
"இடியை உமிழ்ந்தவாறு பேரொலி எழுப்பிக்கொண்டு பரவலாக மழைபெய்யும் நள்ளிரவில்,
கொடி விட்டவாறு குறைவான ஒளியில் மின்னல் ஏற்படுத்திய வெளிச்சத்தில்
தன் பிடியோடு புன்செய்நிலத்தில் மேயும் ஆண்யானை
கால்களை எடுத்துவைக்கும் நடமாட்டத்தைக் கேட்ட கானவன்
உயர்ந்த மலையின் ஆசினிப் பலா மரத்தில் கட்டிய காவற்பரணில் ஏறி
மிக்க விசையுடன் கவணையிலிருந்து கல்லை வீசியெறிதலால், அந்தக் கவண்கல்
செங்குத்தான பள்ளத்தின் ஓரத்திலிருந்த வேங்கை மரத்தின் ஒளிவிடும் பூக்களைச் சிதறி,
ஆசினிப் பலாவின் மென்மையான பழத்தில் கனிந்தவற்றை உதிர்த்துவிட்டு,
தேனைச் சேமித்துவைத்திருக்கும் தேன்கூட்டினைத் துளைத்துக்கொண்டு போய்,
நறிய பிஞ்சுகளைக் கொண்ட மாமரத்தின் பசிய கொத்துக்களை உலுக்கிவிட்டு,
குலைகுலையாகக் காய்த்துத்தொங்கும் வாழை மரத்தின் கொழுத்த இலைகளைக் கிழித்துக்கொண்டு,
இறுதியில் பலாவின் பழுத்த பழத்துக்குள் சென்று தங்கும் மலையைச் சேர்ந்த மலைநாட்டினனை
பாடுவோம்! வா! வாழ்க! தோழியே! நல்ல தோழியே! வந்து பாடு!"
"ஒளிரும் அருவியை உடையது! ஒளிரும் அருவியை உடையது!
மழைநீரால் ஒளிரும் அருவியை உடையது! தான் சொன்ன
சூளுரையைக் காக்காமல் அவற்றைப் பொய்யாக்கிவிட்டவனுடைய மலை!"
"பொய்யுரைக்கக்கூடியவனோ? பொய்யுரைக்கக்கூடியவனோ?
அஞ்சுவதைத் தவிருங்கள் என்று கூறிய மகளிரிடம் பொய்யுரைக்கக்கூடியவனோ?
குன்றுகள் பரந்துகிடக்கும் நல்ல நாட்டினனின் வாய்மையில் பொய் தோன்றுவது
திங்களுக்குள் தீ தோன்றியது போலாகும்;"
"இளம் மேகங்கள் உலவிக்கொண்டிருக்கும்! இளம் மேகங்கள் உலவிக்கொண்டிருக்கும்!
இளம் மேகங்கள் எப்போதும் உலவிக்கொண்டிருக்கும்! என் முன்கையிலுள்ள
வளையல்கள் கழன்று விழும் வேளையிலும் வராமலிருப்பவனின் குன்றில்!"
"வராமல் இருந்துவிடுவானோ? வராமல் இருந்துவிடுவானோ?
வராமல் இருந்துவிட மாட்டான்! அந்த மலை நாட்டினனின்
ஈரமான நெஞ்சத்தில் இப்படிப்பட்ட எண்ணங்கள் தோன்றுவது, நிழலில் இருக்கும் குளத்தில்
நீருக்குள் இருக்கும் குவளை நீரினால் வெந்துபோவதைப் போன்றது!"
"பச்சை மரகதம் போல் தோன்றுகிறது! பச்சை மரகதம் போல் தோன்றுகிறது!
நன்கு கழுவிய பச்சை மரகதம் போல் தோன்றுகிறது! என் மேனியைத்
தழுவக் கருதாமல் துறந்துவிட்டுச் சென்றவனின் மலை;"
"துறந்துவிட்டுச் செல்லமாட்டான்! துறந்துவிட்டுச் செல்லமாட்டான்!
தொடர்ச்சியாகப் பல மலைகள் உள்ள மலைநாட்டினன் துறந்துவிட்டுச் செல்லமாட்டான்!
அவன் காட்டும் தொடர்புக்குள் இத்தகைய கொடுமைகள் தோன்றும் என்பது, வானத்தில்
ஞாயிற்றுக்குள் இருள் தோன்றியதைப் போலாகும்;"
"இவ்வாறு நாம் பாட,
நல்லதே நடந்திருக்கிறது தோழி! நம் வள்ளைப்பாட்டுக்குள்
ஒன்றிப்போய் நாம் பாட, மறைந்து நின்று அதனைக் கேட்டு, மனமிரங்கி
மென்மையான தோள்களுக்குரிய தலைவனும் வந்துவிட்டான், உன் தந்தையும்
மணவினைகளுக்குரிய வேங்கை மரத்தின் கீழிருந்து
மணத்திற்கு இசைவு தந்தான் அந்த மலைநாட்டவனுக்கு!"
மேல்
#42
"வீரங்கொண்ட பெரிய புலியுடனான தன் பழம் பகையைத் தீர்த்துக்கொண்ட
முறம் போன்ற காதுகளைக் கொண்ட யானை, தனக்கு முன்னுள்ள தழைகளை அருந்தி
ஒலிக்கின்ற வெண்மையான அருவிநீரின் ஓசையைக் கேட்டவாறு தூங்குகின்ற
அடர்ந்த பெரிய சோலையையுடைய நல்ல மலை நாட்டினைச் சேர்ந்தவன்
நம்மை மறந்துவிட்டான், அப்படி மறந்தாலும் இனி, தோழியே! நமக்குச்
சிறந்தோனாக இருக்கின்றான் என்பதை நாம் நன்கு உணர்ந்துள்ளோம், எனவே அவனுடைய சிறப்புக்களை,
கொல்லுகின்ற யானையின் கொம்பினால், மூங்கில் நெல்லைக் குற்றியவாறு நாம்,
வள்ளைப்பாடலாய்ப் பாடுவோம், வா, தோழியே! நாம்
வள்ளைப்பாடலாய்ப் பாடுவோம், வா!"
"காண்பாயாக தோழியே! மலையிலிருந்து இறங்கி
வெள்ளை நிறத்தில் விழுகின்ற அருவியைப் பெற்றுள்ளது, நம் மீது அருள்கொள்ளாத
அந்த நாணம் கெட்டவன் நாட்டு மலை!"
"தன்பால் அன்புகொண்டோரின் உள்ளம் உடைந்துபோக விடுவானோ?
நன்கு ஆராய்ந்து, ஒரு பக்கம் சாயாத துலாக்கோல் போல,
அறத்தைச் செய்கின்ற உள்ளம்படைத்தவன்!"
"குளிர்ச்சியான நறிய கோங்கம் மலர்ந்த மலை எல்லாம்
பொன்னாலான அணிகலன்கள் அணிந்த யானையைப் போல் தோன்றுகிறது, நம் மீது அருள்கொள்ளாத
பயனற்ற வாழ்க்கையை வாழ்கின்றவன் நாட்டு மலை!"
"நான் நோய்கூர்ந்து தவிக்க என்னை விடுவானோ? தன் மலையின்
சுனைநீரிலும் குளிர்ந்த அருள் உடையவன், தன்னை வேண்டிவந்தோர்க்கு
தேர்களை வாரி வழங்கும் வள்ளண்மை மிக்கவன்!"
"மலை உச்சியில் சேர்த்துவைத்த தேன் பொருந்திய துளைகளையுடைய தேன்கூடு
மேகத்தில் நுழைந்த திங்கள் போல் தோன்றுகின்றது, நம் அணிகலன்கள் கழன்று போகுமாறு
நமக்குத் துன்பத்தைக் கொடுத்தவனின் மலையில்!"
"ஓயாமல் தோழியே! அவனதுகொடுமையைப் பற்றிப் பேசாதே!
அஞ்சவேண்டியதற்கு அஞ்சாத அறங்கெட்டவன் அல்லன் என்
நெஞ்சத்தைக் கவர்ந்துகொண்டவன்!
"என்று நாங்கள் பாட, மறைந்து நின்று கேட்டவன்
தாழ்ந்து இறங்கும் கரிய கூந்தலைக் கொண்ட என் தோழியைக் கையசைத்துச் செல்லும்படி சொல்லிவிட்டு
அந்த மென்மையால் இனிய மார்பையுடையவன் என் பின்புறம் வந்து என் முதுகைத் தழுவிக்கொள்ள
பகலவன் முன்னர் பறந்து செல்லும் இருளைப் போல விட்டு விலகியது என்
அழகிய இழையணிந்த மேனியிலிருந்த பசப்பு."
மேல்
#43
"புலியைக் கொன்ற, மதம் நிறைந்த, புள்ளிகளைக் கொண்ட யானையின்
ஏந்திய கொம்பினாலும், கூட்டமான வண்டுகள் ஒலியெழுப்பிக்கொண்டே தேனைக் குடிக்கும்
சந்தன மரத்தின் கட்டையாலும் செய்யப்பட்ட உலக்கைகளால்,
ஐவனமாகிய வெண்ணெல்லைப் பாறையில் உள்ள உரலுக்குள் இட்டு நாம் இருவரும்
முருகனைப் போற்றிப் பாடுவது போல, அழகுபெற்ற
மேகம் தவழ்கின்ற உச்சிகளையுடைய பயன்தரும் மலையைச் சேர்ந்தவனை,
தையலே! பாடுவோம் நாம்!"
"அழகிய மகளிர் கைவிரலில் அணிந்த மோதிரம் போல, காந்தளின்
மொட்டின் மேல் தும்பி அமர்ந்திருக்கின்றது, பகை என்று வரும்போது
கூற்றுவனே வந்தாலும் தோல்வியடையானாய், தன்னிடம் நட்புக்கொண்டவர்க்காகத்
தோல்வியை ஏற்றுக்கொள்வதற்கு நாணாதவனாகிய நம் தலைவனின் குன்றினில்";
"அகன்ற பாறையில் அமர்ந்திருக்கும் கருங்குரங்கை, மிரட்சியுடன் பார்த்து,
கீழே இருண்டுகிடக்கும் செங்குத்தான பள்ளத்தில் ஏறியும் இறங்கியும் ஓடித்திரியும்
வருடை மானின் குட்டியையுடைய வளமிக்க மலையைச் சேர்ந்தவனை
நன்கு உணர்ந்துகொள்ளும் வண்ணம், தெரிந்தெடுத்த அணிகலன்களையுடையவளே! நீ ஒன்று பாடு!"
"நுண்ணிய புள்ளிகளைக் கொண்ட மானின் காதினைப் போல மூங்கில் முளையின்
கணுவை மூடியிருக்கும் தோடு கழன்று உகுந்துகிடக்கும் தன்மையது,
தன் மீது பகை கொண்டு, தன்னைப் பொறுக்காதவரெனினும், அவரின் குற்றத்தைப்
பிறர்க்குக் கூறுவதை அறியாதவனின் குன்று!"
"பெண்யானையுடன் சேர்ந்து, வளகுத்தழையைத் தின்ற,
இணையான கொம்புகளை அழகுடன் கொண்ட, மலை நடப்பது போல் நடக்கின்ற,
ஒளிவீசும் அழகுடைய யானைகளையுடைய பயன் மிக்க மலையைச் சேர்ந்தவனைப் பற்றி,
மணம் வீசும் கூந்தலினையுடையவளே! மீண்டும் ஒரு பாட்டுப் பாடுவாயாக!"
"கொடிய புலியின் காலடியைப் போன்று வாழையின்
வளைந்த காய்கள் குலைதோறும் தொங்குகின்றன, வறுமைத் துன்பத்தால்
இல்லையென்று சொல்வார்க்கு, அதனைப் போக்கமாட்டாத நிலை வரும்போது
தன் உடலைவிட்டு உயிர் துறப்பவனின் மலையில்!"
"என்று
நானும் அவளும் சேர்ந்து அவரின் சிறப்புகளைப் பற்றிப்பாட, என் தோழிக்கு
வாடிப்போயிருந்த மென்மையான தோள்களும் பூரிப்படைந்தன,
அசைகின்ற மூங்கிலையுடைய மலை நாட்டினன் நேரில் வந்து அன்பு காட்டியது போன்று!"
மேல்
#44
ஞாயிற்றின் விரிந்து செறிந்த கதிர்களின் அழகைத் தன்னிடம் கொண்ட அகன்ற மலைச் சாரலில்
எதிரெதிரே உயர்ந்து நின்ற பெரிய மலைகளின் சரிவுகள் சந்திக்கும் இடத்தில்
அதிர்கின்ற ஓசையுடன் விழும் அருவி, தன்னுடைய அழகிய கிளைகளின் மீது விழ,
முற்றிய பூங்கொத்துக்களைத் தீயைப் போல் வரிசையாகக் கொண்ட, முழவினைப் போன்ற அடிமரத்தையுடைய வேங்கை,
வரிகள் விளங்கும் நெற்றியையுடைய அழகிய இரு யானைகள் பூவுடன் கலந்த நீரை மேலே சொரிய
முறுக்குவிட்டு மலர்ந்த தாமரை மலரின் உள் இதழ்களில் பெருமிதத்துடன்
திருமகள் விரும்பி இருப்பதைப் போன்று தோன்றும் மலர் மணம் கமழும் சிறந்த மலைநாட்டுத் தலைவனே!
தான் துயரடைந்தாலும், நீ செய்த அருளற்ற செயலை
என்னிடமும் மறைத்துவிட்டாள் என் தோழி, சொன்னால் அதனைக் கேட்டு
உன்னை நான் பிறர் முன்னே பழி கூறுவேன் என்று அஞ்சி;
அடைந்த துன்பம் மிகுதியான போதும், நீ செய்த அருளற்ற செயலை
ஊராருக்கு மறைத்துவிட்டாள் என் தோழி, சொன்னால் அதனைக் கேட்டு
அவள் எண்ணத்தில் இருக்கும் நீ நிலையில்லாத குணம் கொண்டவன் என்று அவர்கள் கூறுவதை அஞ்சி,
துன்பம் வருத்த மிக வருந்தியும், நீ செய்த அருளற்ற செயலை
தன் தோழியரிடமும் மறைத்துவிட்டாள் என் தோழி!, அதனைக் கேட்டு
மாயக்காரனான நீ பண்பற்றவன் என்று பிறர் கூறுவதை அஞ்சி;
என்று
இவ்வாறான உனக்கு நேரவிருந்த பழிச்சொற்களான தீமைகளைப் பிறர் அறியாதவாறு நினைத்துக் காத்து,
அத்தகைய அரிய பண்பினால் உனக்கு உண்டான தீமைகளைக் காத்தவளுக்கு
அரிய துன்பத்தைச் செய்யும் கொடிய காமநோயைத் தீர்க்கும்
மருந்தாக ஆகி, திருமணத்திற்குரிய ஏற்பாடுகளோடு செல்வோம், பெருமானே! நாம் விரைவாக.
மேல்
#45
விடியலிலேயே வெம்மையாகக் கதிர்கள் காய்கின்ற, மூங்கில்கள் நெருக்கமாய் வளர்ந்த அகன்ற பாறைகளை ஒட்டி இருக்கும்
மணமிக்க சுனை அழகுபெறுமாறு, நீர் மேல் கவிழ்ந்திருக்கும் காந்தளின் அழகிய குலையினை,
அரிய மாணிக்கம் ஒளிவிடும் படத்தோடு கூடிய பாம்பு நீர் குடிப்பதாக எண்ணி,
அந்தப் பெரிய மலையையே புரட்டிவிடுவதைப் போன்று காற்றுடன் கூடிய கனத்த மழை பெய்யும் நேரத்தில்
இடியோசை எழுவதால், அந்தப் பேரொலி விரைந்து சென்று
நறிய பூக்களைக் கொண்ட அகன்ற மலைச் சரிவுகளில் எதிரொலித்ததால், விரைவாகச்
சிறுகுடி மக்கள் துயில் எழுகின்ற மிகவும் உயர்ந்த சிறப்பு வாய்ந்த மலைநாட்டினனே!
காற்று மோதும்போதும் மடங்காத, ஒலிக்கின்ற இனிய ஓசையையுடைய அருவியையுடைய உன்
பெரிய மலையில் மலிந்திருக்கும் சுனைமலர்களைப் போன்றிருப்பதால்தானோ,
தழுவினும் தீராத பிணைப்பை எண்ணித் தனிமைத் துயர்கொண்ட என் தோழியின்
பூவைப் போன்ற மலர்ந்த மைதீட்டிய கண்களைப் பசந்துபோகுமாறு நீ சிதைத்துவிட்டாய்?
புள்ளிகள் கொண்ட முகத்தையுடைய களிற்றுடன் புலி போரிட்டு வெற்றிபெறும் உன்
அகன்ற மலையின் சரிவுகளில் இருக்கும் மூங்கில்களைப் போன்றிருப்பதால்தானோ,
கடைசிக்காலம் வந்துவிட்டது என்று கலங்கிப்போகின்ற காமநோய் கைமீறிச் செல்ல, என் தோழியின்
அகன்று திரண்டு இருக்கும் தோள்களின் அழகு வாட நீ சிதைத்துவிட்டாய்?
ஞாயிறு எழ எழ உயர்ந்துகொண்டே செல்லும், வண்டுகள் ஒலியெழுப்புகின்ற மலையிடுக்குகளில் இருக்கும்
பிளவுகளையுடைய மலைகளில் இருக்கும் தீயைப் போன்ற வேங்கையின் மலர்க்கொத்தைப் போன்றிருப்பதால்தானோ,
நள்ளிரவிலும் தூக்கமில்லாதவளாய் மனங்கலங்கித் தடுமாறும் என் தோழியின்
யாவரும் விரும்பும் நல்ல பேரழகு தன் வனப்பை இழக்கும்படி சிதைத்துவிட்டாய்?
என்று
அவனுடைய கொடுமைகள் பலவற்றைச் சுட்டிக்காட்டி, இடித்துரைக்கவே, என் தோழியே!
மறைவாகத் தான் தழுவி மணந்த நட்பு இல்லாமல்போய்விடுமோ என்று
பிறை போன்ற நெற்றியையுடையவளே! அவரைப் பேணி நாம்
அவரிடத்தில் , அவர் விரும்பிய நாளில். தங்குதலை உன் உறவினரிடம் பேசிமுடித்துவிட்டார்.
மேல்
#46
தான் இருந்து தேனுண்ட மலர்களைத் தனியே விட்டுவிட்டு, வேறு பூக்களை நாடிச் சென்ற
பெரிய, அழகிய சிறகுகளைக் கொண்ட நீல மணி போன்ற நிறத்தையுடைய தும்பிகள்,
வாயிலிருந்து வடியும் மதத்தையும், வெண்மையான கொம்பையும் உடைய தலைமை யானையுடன்
அழகிய வரிகள் கொண்ட புலி தாக்கிய போது
வேங்கை மரத்தின் அழகிய கிளை என்று எண்ணி ஆற்றல் வாய்ந்த புலியைச் சூழ்ந்துகொண்டும்
நெற்றியில் புள்ளிகள் பொறித்த யானையின் புள்ளிபுள்ளியான முகத்தைச் சேர்ந்தும்,
வலி மிகும் சினத்தால் வாளை உருவிக்கொண்டு நின்ற மன்னர்களைச்
சமாதானம் செய்யும் வழியை நாடி அவர்களை நண்பர்களாக்க முயல்பவர்கள் போல மாறி மாறித் திரியும்,
சுனை மீது விழுகின்ற அருவியை உடைய, அழகிய மலையைச் சேர்ந்த நல்ல நாட்டினனே!
பெரும் இடிகள் முழங்குகின்ற இருள் நிறைந்த இரவினில் சந்திக்கின்ற வாய்ப்பை இழந்து
நான் ஏமாற்றிவிட்டதாகக் கூறி மனம் வருந்துகிறான் அவன் என்றால்,
அவனைக் கூடி மகிழவேண்டும் என்ற ஆசையால் இரவுக்குறியை எதிர்நோக்கி, அவன் வீசும் நொச்சிப்பூ
விழும் ஓசையையும் உற்றுக்கேட்கும் செவியுடன் காத்திருந்து வருந்தினேன் நான் அன்றோ!
அரிய பயணத்தை மேற்கொண்டு கடினமான வழியில் என்மீதுள்ள அருளினால் வந்து என் அன்பைப் பெறாமல்
வருத்தமுற்றதாகப் பலமுறை வாய்விட்டுக் கூறுகிறான் அவன் என்றால்,
உயர்நிலைத் தெய்வங்களுக்கு நேர்ந்துகொண்டு, அவனுக்காகப்
பலவாறாக சிந்தனைகளை ஓடவிடும் மனத்தோடு காத்திருந்து வருந்தினேன் நான் அன்றோ!
பெருமழை பெய்கின்ற நள்ளிரவில் நான் அசட்டையாய் இருந்துவிட்டதால் அவனுடைய சமிக்கையை நான் கவனிக்காமல்விட,
அணிகலன்களால் அலங்கரித்துக்கொண்டவளே! என்னுடைய குற்றத்தை உன்மேல் ஏற்றிச் சொல்கிறான் அவன் என்றால்,
மழைத்துளியை விரும்பிய வேட்கையால் வானத்தில் பாடித்திரியும் பறவையைப் போல அவனின்
அருள்பார்வையை விரும்பி ஆர்வமுள்ள நெஞ்சோடு அன்புடன் காத்திருந்தேன் நான் அன்றோ!
என்று இவள் கூறும்படியாக,
இவளிடம் கலந்துவிட்ட காமநோய் அதிகமானதினால் கண்துயிலாத என்னிடத்தில்
நீ வெறுப்புக்கொள்வதுபோல் நடந்துகொண்டால், அந்தப் பொய்யால் வெற்றிபெறுவாய்,
ஒளிர்வுடன் தாழ்ந்து இறங்குகின்ற அருவியுடன் அழகு கொண்ட உனது மலையின்
முழைஞ்சுகள் ஒருவர் சொன்னதை அப்படியே எதிரொலிப்பது போல நீ கூறுவதையே கூறும்
ஒளிர்கின்ற அழகிய பிரகாசமான வளைகளை அணிந்த இவளின் காமநோயை.
மேல்
#47
ஒருவன் என்னிடம் ஏதோ ஒரு பொருளை இரந்து கேட்பவன் போல் பணிந்து சிலவற்றைச் சொன்னான், இந்த உலகத்தைக்
காக்கின்றவன் போல் ஓர் அறிவாற்றல் உள்ளவனாய்த் தோன்றுகிறான்,
சிறந்த அறிவுள்ளவர்களை வழிபட்டு உண்மைகளை அறிந்தவன் போல்
நல்லவர்களிடத்தே காணப்படும் அடக்கமும் உடையவனாயிருக்கிறான்,
இல்லாதவர்களின் வறுமைத் துன்பத்தைத் தன் ஈகைக் குணத்தினால் துடைக்க
வல்லவன் போன்ற பொருளாற்றலும் உள்ளவனாய்த் தோன்றுகிறான்,
அப்படிப்பட்ட ஒருவன் தன் தகுதிப்பாட்டையெல்லாம் மறந்து, என்னிடம்
பல முறையும் சொல்கின்ற ஒரு சொல்லைக் கேட்பாயாக, சுடர்விடும் நகைகளை அணிந்தவளே!
"நீ இல்லாமல் உயிர்வாழேன் நான்" என்கிறான் அவன், எனினும்
அவனுடைய சொல்லை நம்புவது எவர்க்குமே இங்கு அரிதாகும், எனவே
நான் படும் சங்கடங்கள் பிறர்க்கும் இங்கு இருக்குமோ? நறிய நெற்றியை உடையவளே!
"அறியாயோ நீ? வருந்துகிறேனே நான்!" என்கிறான் அவன், எனினும்
தனியொருத்தியாய் நின்று இதைப் பற்றி முடிவெடுத்தல் பெண்களுக்கு அரிதாகும், எனவே
இரங்கத்தக்கவர், என்னைப் போல் இங்கு இவனது வலையிலே அகப்பட்டார்;
"வாழமாட்டேன் நான், நீ என்னைக் கைவிட்டால்" என்கிறான் அவன், எனினும்
இவனுக்கு இரங்குபவர் பேதை மகளிர் என்று பலரும் கூறும் சொல் நமக்குப் பழியாகும், எனவே
இதனை ஆராயும்போது நினைப்பதொன்றும் அறியாமல் வருந்துகிறேன்,
இதனை ஆராயும்போது, நறிய நெற்றியையுடையவளே! நமக்குள்ளே ஆராய்ந்துபார்ப்போம்!
அவனை,
நாணம் நம்மை வருத்துவதால், துரத்திவிடுவது நமக்கும் இங்கு இயலாது,
ஒரு அயலானை ஏற்றுக்கொண்டனர் என்று ஊரார் சொல்வது நமது பெண்மைக்கும் பொருந்தாது,
அவனோ நம்மை விரும்புகின்றான், தழுவிக்கொள்ள மட்டும் வருக என்று
கூறுவது போல் காட்டி
பின்னர் அவன் விருப்பப்படி நடந்துகொள்வாய் நெஞ்சமே!
மேல்
#48
நீர் விழும் அழகிய மலையிடத்தில் உள்ள மலர்ந்து நிற்கும் வேங்கை மரத்தின் அழகினைப் போல
வண்டுகள் மொய்க்கும், மதத்தால் நனைந்த கன்னங்களையுடைய, எட்டுத்திசைகளையும் காப்பதற்குச் சரியான
யாரும் எதிர்க்கமாட்டாத உறுதியான உடல்வலிமையுடைய, வண்டுகள் சுற்றி ஒலிக்கும் புள்ளிகளையுடைய முகத்தையுடைய,
மிகுதியான மழைபெய்யும் மலைச் சரிவுகளிலும், வானளாவ ஓங்கிய
பெருமை மிக்க மரங்களைக் கொண்ட ஆற்றிடை மணல்மேட்டிலும் வாழ்கின்ற, கமழ்கின்ற மதநீர் ஒழுகுகின்ற
பெரிய யானைக் கூட்டத்தோடு, பருத்த கழுத்தும் பெரிய உடல்வன்மையும் கொண்ட
பெரிய புலி மாறுபாடுகொண்டு போரிடுகின்ற மலையினையுடைய நல்ல நாடனே!
மழை பெய்யும் இராக்காலத்தில் உன்னுடைய சமிக்கை ஒலியை உற்றுக்கேட்கும் மனவொடுக்கத்தாலேயே
தான் வாழும் நாளை நீட்டிக்கொண்டிருப்பவளின் வருத்தமிக்க தோள்கள் மீது தவறு உண்டோ?
கதவின் தாழ்ப்பாளை நன்கு செறித்துக்கொண்டு கடுமையாகக் காவல்காக்கும் தாயின் முன்னர், உன் மலைச் சாரலில்
உதிர்ந்துவிழும் காந்தள் போல் ஒளிவிடும் வளைகள் கழன்று விழுகின்றனவே!
வருத்தம் மிக்க இருள் இது என்று ஏங்கி, உன் வரவை விரும்பி,
உன்னை நினைந்து நினைந்து துயரில் உழப்பவளின் தூக்கமற்ற கண்கள் மீது தவறு உண்டோ?
காதல்வயப்பட்டவள் இவள் என்று உரக்கவே பேசும் அயலார் முன்னர், உன் சுனையிலிருக்கும்,
மிகுதியான மழையை ஏற்ற நீலமலர் போல கண்கள் கண்ணீரைச் சிந்துகின்றனவே!
பலநாளும் நினைவு வருத்துவதினால் பசலையால் விழுங்கப்பட்டவளின்
பொன் உரைக்கும் கல்லில் உரைக்கப்பட்ட மணியினைப் போன்ற இவளின் மாநிறத்தின் மேல் தவறு உண்டோ?
மெல்லிய நுரைகளோடு சிறிதாக வழிகின்ற ஓடைநீர் ஒலிசெய்யும் இளவேனிற்பருவத்தில், உன் சோலையில் உள்ள
ஒளி இழந்த தளிரினைப் போல இவள் மேனி தளர்ந்து ஊரார்க்கு இவள் காதலை உரைக்கின்றதே!
எனவே,
உறவுகொண்டு வலுப்பட வேண்டும் நீ பிரிந்து வாழும் இவளுடன் கொண்ட நட்பு என்று வேண்டிக்கொண்டு
நிம்மதியாகப் பூப்போன்ற கண்கள் துயில்கொள்ளுதலை அஞ்சுகிறேன், ஏனெனில் இவள் தாங்கிக்கொண்டிருக்கும்
அரிய துயரத்தின் அவலத்தை எண்ணிப்பார்த்தால்
அது எல்லை காணமுடியாத மலையைக் காட்டிலும் பெரிதாகும்.
மேல்
#49
வளைந்த வரிகளையுடைய புலியைத் தாக்கி, அதனை வென்ற உடல்நோவுடன்
நீண்ட மலைச் சரிவில் துயில்கொள்ளும் யானை
நனவில் தான் செய்ததையே மனத்தில் இருத்திக்கொண்டிருந்ததால்
கனவிலும் புலியைக் கண்டு திடுக்கிட்டு வெருண்டு எழுந்து
புதிதாகப் பூத்திருக்கும் வேங்கை மரத்தை
புலி என்று நினைத்து அந்த மரத்தின் அழகிய தன்மையைக் கெடுத்து
அடக்கமுடியாத தன் உடல்வலிமையால் எழுந்த தன் சினம் தணிந்து, அந்த மரத்தைக்
காணும் பொழுதில், நிமிர்ந்து பார்க்க முடியாமல்
வெட்கப்பட்டுத் தலையைக் குனிந்துகொள்ளும் நல்ல மலையில் உள்ள நல்ல நாட்டினனே!
மலரும் பருவத்திலுள்ள அழகிய பூவைப் போன்ற, மைதீட்டிய கண்களையுடைய இவளிடம் நீ இத்தகைய
காதல் கொண்டுள்ளாய் என்பது இனிதுதான், ஆனால் கொடியது
மின்னல் வெளிச்சத்தில் வழியைக் காணும் உன் கண்களுடன், இடியென்றும் மழையென்றும் பாராமல்
இப்படிப்பட்ட ஒரு கடினமான வழியில் இங்கு நீ வருவது;
இவள் இன்புறும்படி அருள்காட்டி இவளிடத்தில் நீ இத்தகைய
பேரன்பு கொண்டுள்ளாய் என்பது இனிதுதான், ஆனால் கொடியது
மணம் வீசும் மாலையை மார்பில் அணிந்து, மேகம் தவழும் மலைகளைக் கடந்து
வருத்தும் தெய்வங்கள் வாழும் கடினமான வழியில் இங்கு நீ வருவது;
இருள் போன்ற கரிய கூந்தலையுடைய இவளிடத்தில் நீ இத்தகைய
பேரருள் கொண்டுள்ளாய் என்பது இனிதுதான், ஆனால் கொடியது
ஒளிர்கின்ற வேலை வலக்கையில் ஏந்திக்கொண்டு தனியனாய் வருகிறோம் என்று எண்ணாமல்
களிறுகள் நடமாடும் கடினமான வழியில் இங்கு நீ வருவது;
அதனால்
இரவிலே வரவேண்டாம் ஐயனே! பல நிறமுள்ள மலர்கள்
அகன்ற பாறையை மூடிக்கிடக்கும் மலைச்சாரலில்
பகலிலும் அடைவாய் இவளின் பருத்த மென்மையான தோள்களை.
மேல்
#50
மூங்கிலின் வளைகின்ற கழையை நெல்லோடு வளைத்து, விடியற்காலத்தில்,
அதனைத் தின்ற முழந்தாளையுடைய கரிய பெண்யானை
தொங்குகின்ற இலைகளையுடைய வாழை மரங்கள் செறிவாக இருக்குமிடத்தில் புகுந்து, அங்கு
வருடை மானின் இளம் குட்டி திரிகின்ற இடத்தில் துயில்கொள்ளும்
இருள் செறிந்த சோலையினையும், ஒளிவிடும் நீரினையுமுடைய மலைநாட்டினனே!
பாம்பின் பொறி போன்ற புள்ளிகளும், பகைவரை வருத்தக்கூடிய ஆற்றலும் ஒருசேரக் கொண்ட
வலிமையான வில்லின் மேல் வைத்த கையினையுடையவனே! ஒரு முறை
வரிசையாக வளையல்கள் அணிந்த முன்கையையுடைய என் தோழியைக் காதல்பார்வையுடன் பார்த்து
கதிர்களின்மேல் வந்து படியும் கிளிகள் பரவலாய்த் திரியும் பசிய கதிர்களைக் கொண்ட தினைப்புனத்தில்,
அந்தக் கிளிகளை விரட்டுவதை மறக்கச்செய்ததனால், இனி நீ
இவளையே இடைவிடாமல் நினைத்துக்கொண்டிருப்பதைக் காத்துக்கொள்வதை இவள் விரும்புவாள், இவள்
பல குலைகளையுடைய பலாவின் பிசினையுடைய இனிய பழம்
வீழ்ந்திருக்கும் பாறையில் எடுத்துண்ணும் உணவையும், திரண்ட சோறினையும் கொண்ட சிறுகுடியிலிருக்கும்
பிள்ளையில்லாதவர்களுக்குப் பிறந்த ஒரே செல்வ மகள்;
நீயோ, காற்றின் வேகத்தை மிஞ்சும் தேரையும், களிற்றையும்,
மழையினும் சிறந்தவனாக, உன்னை நாடி வந்த புலவர்க்கு
அருள் உள்ளத்தோடு கை ஓயாமல் அள்ளிக்கொடுக்கிறாய்!
அதனால்,
விரைந்து செல்லும் குதிரையை மேலும் விரைவாக செலுத்தும் தாற்றுக்கோல் போல், எவ்வளவேனும்
கொடுமை இல்லாதவன் என்பதை அறிந்திருந்தும் உன்னிடம் வற்புறுத்திக் கூறுகிறேன்,
சுரபுன்னை வளர்ந்த மலைச் சாரலில் திரியும் வருடையாகிய நல்ல மானின்
குட்டியை வளர்ப்பவர் போலப் பாராட்டி
பக்கத்திலிருந்து பிரிந்து சென்றால் நீங்கிவிடும்
மேகலை அணிந்த அல்குலையுடைய என் தோழியின் கவின்.
மேல்
#51
சுடர்விடும் வளை அணிந்தவளே! கேட்பாயாக! தெருவில் நாம் கட்டிய
மணலாலான சிறிய வீட்டைத் தன் காலால் சிதைத்துவிட்டு, நான் சூடியிருந்த
பூச்சரத்தை அறுத்துக்கொண்டு, வரியையுடைய பந்தை எடுத்துக்கொண்டு ஓடி
நம்மை நோகச் செய்யும் சிறுவன், முன்னொருநாள்
அன்னையும் நானுமாக வீட்டில் இருந்தபோது, "வீட்டிலுள்ளோரே!
உண்பதற்கு நீர் வேண்டிவந்துள்ளேன்" என்று சொல்லி வந்தவனுக்கு, அன்னை
"பொன்னாலான கலத்தில் ஊற்றிக்கொடுத்து, சுடர்விடும் அணிகலன்கள் அணிந்தவளே!
உண்பதற்கு நீரை அருந்தச் செய்து வா" என்று சொன்னாள் என்பதற்காக, நானும்
அவன் இன்னான் என்பதை அறியாமல் சென்றேன். ஆனால் அவன் எனது
வளையணிந்த முன்கையைப் பற்றி அழுத்த, மருண்டுபோய்
அன்னையே! இவன் செய்வதைப் பாரேன்" என்று கூவிவிட,
அன்னையும் அலறிப்புடைத்துக்கொண்டு ஓடிவர, அவனை, நான்
"நீர் உண்ணும்போது விக்கினான்" என்று சொல்ல, அன்னையும்
அவனது முதுகைத் தடவிக்கொடுக்க, என்னைக்
கடைக்கண்ணால் கொல்வது போல் பார்க்க, இவ்வாறு மகிழ்ச்சியான குறும்புச் செயலைச்
செய்தான் அந்த திருட்டுப்பயல்.
மேல்
#52
தன் முறம் போன்ற செவியின் மறைவிடத்தில் பாய்ந்து தாக்கிய புலியைச் சினந்து,
அறத்தை விட்டு மறத்தை மேற்கொண்ட நூற்றுவர் தலைவனான துரியோதனனின்
தொடையை முறித்திட்ட வீமசேனன் போல் தன் கூரிய கொம்புமுனையால் குத்தி, அதன்
மருமத்தைக் கிழித்துத் தன் பகையைத் தீர்த்துக்கொண்ட நீண்ட கொம்புகளையுடைய அழகிய யானை,
கஞ்சனால் ஏவப்பட்ட மல்லரின் மறத்தைச் சாய்த்த திருமால் போல் தன் சுற்றத்தின் நடுவே
பாறைகள் உயரே நிற்கும் அகன்ற மலைச்சாரலில் கூடித்திரியும் நாடனே கேட்பாயாக!
தாமரை மலர்களாற்செய்த தலை மாலையைச் சூடிக்கொண்டு, குளிர்ச்சியான நறிய சந்தனத்தைப் பூசிக்கொண்டு
ஒழுங்குபட்ட மலரிதழ்களால் கட்டிய மாலையை அணிந்தவள் குறிப்பிட்ட இடத்திற்கு நீ வந்தால்,
மணம் கமழ்கின்ற நல்ல வாசனையைக் கொண்டுள்ள மலையில் குடியிருந்து பலியுணவைக் கொள்ளும்
அணங்குகளிலே ஓர் அணங்கு என்று உன்னைக் கருதி அஞ்சுவர் இந்த ஊரினர்;
ஈரமுள்ள குளிர்ந்த ஆடையை அணிந்துகொண்டு, இரவுக்கேற்ற ஒப்பனைகளைச் செய்துகொண்டு
தளர்ந்து விழும் கூந்தலையுடையவள் குறிப்பிட்ட இடத்திற்கு நீ வந்தால்,
தீயை உண்டாக்கும் தீக்கடைகோலையுடைய, கவணையும் வில்லையும் கையில் வைத்திருக்கிற
தினைப்புனக் காவலர் உன்னை யானை என்று எண்ணிக்கொண்டு கூச்சலிடுவர்;
சந்தனம் பூசின மார்புடன், தலைமைப் பண்புடன், நெஞ்சத்தில் கனிவுடன்,
மென்மையான அகன்ற அல்குலையுடையவள் குறிப்பிட்ட இடத்திற்கு நீ வந்தால்,
மிளகுக் கொடிகள் வளரும் மலைச் சாரலில் ஓயாமல் திரியும்
புலி என்று உன்னை எண்ணிக்கொள்வர் இந்த செருக்கு பொருந்திய ஊர்மக்கள்;
இவ்வாறு
உன்னை வேறாக எண்ணாமல், உண்மையைத் தெரிந்துகொண்டால் இவள் வாழமாட்டாள், இவள் இல்லாமல்
உலகம் புகழும் ஒருவனே! நானும் வாழமாட்டேன்,
அதனால், அரும்புகள் மலரும் அதிகாலையில் வந்து நீ உன் விருப்பத்தைக் கூறி
மணம் பேசி முடிக்க வேண்டும், அப்போது
புதியவன் போல் வருகின்ற உன்னுடைய வரவையும், இவளின்
திருமண வெட்கம் கொண்ட அடக்கத்தையும் நான் பார்க்கவேண்டும்.
மேல்
#53
மழையின்மையால் வறண்டுபோவதை அறியாத சுரபுன்னை மரங்கள் வளர்ந்த நறிய சாரல் உள்ள
உயர்ந்த மலையின் அகன்ற பாறையில், தான் விரும்பும் பெண்யானை தன் பக்கத்தில் இருப்பதால்
வீர உணர்வை மிகுதியாகப் பெற்ற ஒரு வேழம் பகையுணர்வு கொண்ட வலிமையினால்
மற்ற யானைகளைக் குத்தி உருவிய இரத்தக்கரை படிந்த கொம்பினைப் போல
பெரிய அரும்புகளையுடைய நறிய காந்தள் நாள்தோறும் புதிதாகப் பூக்களைத் தோற்றுவிக்கவும்,
பள்ளங்களெல்லாம் நிறைந்து அழகுபெற, அருவி ஆரவாரத்துடன் விழ,
பெருமழை வந்து பெய்யும் பெருமை வாய்ந்த வெற்றி சிறக்கும் மலைநாட்டவனே!
யாருக்கும் தெரியாமல் இவளுடன் பழகிவிட்டு, பின்னர் அந்தப் பழக்கம் முற்றிலும் நின்றுபோகுமாறு நீ அவளைத் துறந்த பின்
தோள்வளைகள் கழன்று ஓட வருத்தத்தை இவளால் தாங்கிக்கொள்ள முடியும் - அது எப்போதெனின்
அண்டை அயலார் பழிகூறித் தூற்றுவதால், தம் அழகிய வனப்பை இழந்த கண்கள்
பெரும் மீன்கள் தம் வாயிலிருந்து நீரைப் பீச்சியடிப்பது போல இவள் கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்து வராமலிருந்தால்;
இனியவற்றை இவளுக்குச் செய்துவிட்டுப் பின்னர் அகன்று, இவளுக்குத் துன்பம் தரும்வகையில் நீ துறந்துவிட்டுப் போனதால்
இவளின் மேனி நடுக்கம் தெய்வத்தால் ஆனதென்று அத் தெய்வத்தை வணங்காமலேகூட இருந்துவிடமுடியும் - அது எப்போதெனின்
ஊரார் பழிகூறித் தூற்றுவதால் ஒளி மங்கிப்போய், இவளின் நறிய நெற்றி
பீர்க்கம்பூவைப் போல் பசலை நிறங்கொண்டு தன் பிறைத்திங்கள் போன்ற வனப்பை இழக்காமலிருந்தால்;
அஞ்சவேண்டாம் என்று சொல்லிவிட்டுப் பின்னர் அகன்று நீ இரக்கமில்லாமல் துறந்துவிட்டுப் போனதால்
நெஞ்சழிந்து போகும் வண்ணம் துயரம் வந்து வருத்தினாலும் அதைத் தடுத்து நிறுத்திவிடவும் முடியும் - அது எப்போதெனின்
பகற்காலத்திலும் தன் அழகு கெட வாட்டி நடுங்கவைக்கும் பிரிவுத்துன்பம்
கனவிலும் வந்து கெடுத்து கங்குலிலும் வருத்தமுறச்செய்யாவிட்டால்;
என்று நான் கூறும்படியாக,
சற்றும் குறையாத பிரிவுத்துன்பத்தால் வருந்தி நிற்கும் என் தோழி, உன் மலையிலுள்ள
காய்ந்து உலர்ந்து போய் வாடி நிற்கிற முளைவிட்டுப் பயிராகி நிற்கும் சிறுதினைப் பயிர்
மழையைப் பெற்றால் பொலிவுபெற்று நிற்பதைப் போல்
உன் அன்பினைப் பெற்றால் தழைத்துச் செழிக்கும் இவளின் அழகிய நெற்றியின் அழகு.
மேல்
#54
கொடியிலும் கொம்புகளிலும் நீரினால் நிறம் பெறும் பூக்களைப் போலன்றி, நீரின்றி அழகு பெற்ற
நீறு பூத்த நெருப்பினால் செய்யப்பட்ட பூவாத பூவாகிய பொன் மலர் மாலையையும்,
வளைகளைச் செறித்துக் கட்டுவடம் அமைந்த அழகிய முன்கையையும், மெல்லணை போன்ற தோள்களையும் கொண்டவளே!
உன்னிடம் அன்புகொண்டு உன் அடியின் கீழ் வாழ நீ அருள் புரியாமலிருப்பது உனக்குத் தகுமோ என்று கேட்டவாறே
நரந்தம் புல்லின் நறுமணம் கமழும் கரிய கூந்தலினை முழுவதுமாக இறுக்கப்பற்றி
பொன்னால் செய்யப்பட்ட மகரமீன் வடிவான தலைக்கோலத்தை விழுங்கிய கூந்தல் முடிப்பை
அழகுபெறச் சுற்றிய பூங்கொத்துக்கள் அமைந்த ஒரு பூச்சரத்தை
விரலில் ஒழுங்காகச் சுற்றி மோந்துபார்க்கவும் செய்தான்;
நறவம் பூ மலர்ந்தது போன்ற என் மென்மையான விரல்களைச் சேர்த்துப்பிடித்து,
சினங்கொள்ளாமல் காமத்தால் சிவந்துபோன தன் கண்கள் மறைய ஒற்றிக்கொண்டு,
பறக்காத கொக்கு எனப்படும் கொல்லன் துருத்தியின் வாய் போல பெருமூச்சுவிடவும் செய்தான்;
மேலும் தொய்யில் வரைந்த என் இளமையான முலைகளை இனிதாகத் தடவிக்கொடுத்து,
நெகிழ்வுற்ற தன் அழகிய பருத்த கைகளால், தான் விரும்பும் பெண்யானையைத் தடவிக்கொடுக்கும்
மையல் கொண்ட யானையைப் போல் எனக்கு மயக்கத்தையும் ஊட்டினான்;
அதனால்,
என் துயரத்தைத் துடைத்துப்போட்டேன் தோழி! நம் வீட்டில் என்னை அடைத்துவைத்துக் காக்கக்கூடிய
அரிய கட்டுக்காவலை நான் மீறிக்கொண்டு செல்லாமல் இவனோடே மணம் கொள்ளுமாறு நீ செய்தால் நல்லது என்று
உன்னோடு கலந்துபேச விரும்புகிறேன். இவ்வகையில் நீ எனக்குத் துணைபுரிந்து
இவ்வாறாக இந்த மணத்தை முடித்துவைத்தாள் இவள் என்று
நிலையாத இவ்வுலகத்தில் நிலைத்து நிற்கும் உன் புகழ்.
மேல்
#55
மின்னல்கள் ஒளிர்ந்து பிரகாசித்துக் கொடியாய் ஓட, அதனிடையே பிளந்துகொண்டு செல்லும் மேகத்தைப் போல,
பொன் கம்பிகளைக் கூறுகளாக்கி அழகுற வகிர்களாக வகைப்படுத்திய நெறித்த கூந்தலில் ஒளிபெறச் சூடி,
கூந்தலைப் பிளந்து உள்ளே பொதித்துவைத்த மணம் கமழும் தாழம்பூவுடன், பூச்சரமும் சூடியுள்ள
இனிய முறுவலும், ஒளிவிடும் பற்களும், இனிப்பான மொழிகளும், பவளம் போன்ற சிவந்த வாயும் கொண்ட
நல்ல நெற்றியையுடையவளே! உனக்கு ஒன்று கூறுகிறேன், இப்போது கேட்பாயாக!
ஒருவன் என்னை நில் என்று நிறுத்தினான், நிறுத்திவிட்டு நெருங்கி வந்து,
என் நெற்றியையும், முகத்தையும், தோள்களையும், கண்களையும்,
என் சாயலையும், சொல்லையும் உற்று நோக்கினான், பிறகு சிறிது சிந்தித்து
நெற்றி மிகவும் தேய்ந்திருக்கிறது, ஆனால் அதும் பிறையும் இல்லை;
முகம் மாசற்று விளங்குகிறது, ஆனால் அது முழுமதியும் இல்லை;
தோள்கள் மூங்கிலின் தன்மையை நெருங்கியுள்ளது, ஆனால் அவை இருக்குமிடம் மலையும் இல்லை;
கண்களோ பூவின் தன்மையை நெருங்கியுள்ளன, ஆனால் அவை இருக்குமிடம் சுனையும் இல்லை;
மென்மையாக நடை பயிலுகின்றாள், ஆனால் இவள் மயிலும் இல்லை;
சொல்லோ மழலை போலத் தளர்கின்றது, ஆனால் இவள் கிளியும் இல்லை;
என்று
அப்படிப்பட்டவாறு பலவாறாகப் பாராட்டி, மெதுவாக,
வலையை விரித்துக் காத்திருக்கும் வேட்டுவர் போல, அவன் சொல்வலையில் நான் சொக்கிப்போவேன் என்று எதிர்பார்த்து,
கொடுமைக்காரர் போல நான் வருத்தமடையும்படி பார்த்து,
என்னைக் கையெடுத்துக் கும்பிட்டான், கையால் தொட்டுப்பார்க்கவும் செய்தான்,
அங்குசத்திற்கு அடங்காத கடும் களிறு போன்ற அவன்
என்னைத் தொழுவதும் தொடுவதுமாக இருந்தான்; அவனுடைய இந்தக் குணம்
அறிவின்மை ஆகிய குணமாகத் தெரியவில்லை, தோழியே!
மேல்
#56
ஊரில் உயர்ந்து வளர்ந்த சோலையில், நீர் ஓடும் வாய்க்கால் ஓரத்தில் இருக்கும்
நிறைந்த நிழலையுடைய ஞாழலின் முதிர்ந்த பூங்கொத்துக்களைப் பறித்துக்கொண்டு
தலைமயிருடன் சேர்ந்துப் பின்னி வாரி முடித்த கூந்தல்
தோளின்மீது பூந்தாதுக்களோடு சரிந்து வீழ, நிறைத் திங்கள்
இனிய கதிர்களை விட்டது போல, முகம் மலர,
இங்கே வருகின்றவள் இவள் யாரோ? கொல்லி மலையில் ஒரு
வல்லவன் உருவாக்கிய கொல்லிப்பாவையோ? நல்ல அழகுள்ள மகளிரின்
உறுப்புக்களெல்லாவற்றையும் கொண்டு செய்யப்பட்டவளோ? ஆண்கள் மீதுள்ள வெறுப்பினால்
வேண்டிய பெண்வடிவம் கொண்டு வந்திருக்கும் கூற்றமோ? இவளுக்கு உரியவர் செய்த
கொடுமை இவளைத் தம் மனைக்குள் வைத்துக்கொள்ளாமல் வெளியில் விட்டது, பூங்கொடி போன்ற இயல்பும்
பல இழைகள் கொண்ட மேகலையும், சிறிய பூத்தொழில் நிரம்பிய ஆடையும் உடைய இவள், இந்த ஊரில் ஒரு
பிள்ளையில்லாதவர் பெற்ற ஒரே ஒரு மகள்;
இவளிடன் பேச்சுக்கொடுத்துப் பார்ப்பேன் இவளைத் தடுத்து நிறுத்தி!
நல்லவளே! கேட்பாயாக!
அழகிய தூவியினையுடைய அன்னமோ என்று கூறும்படியாக, அழகிய பெண்மயிலோ என்று கூறும்படியாக
கல்லுண்டு வாழும் புறா என்று கூறும்படியாகத் தோய்ந்து படிந்திருக்கும் உன் எழில் நலம்,
கண்டவர் காதல்கொள்ளும் மான் போன்ற பார்வையைக் கொண்ட இளம்பெண்ணே! உன்னைக் கண்டவரைப்
பேதலிக்கச் செய்யும் என்பதனை நீ அறிவாயோ? அறியமாட்டாயோ?
வளைந்து திரண்ட மூங்கிலோ என்று கூறும்படியாக, நுண் இழைகளால் செய்த மெல்லணை என்று கூறும்படியாக,
ஆர்ப்பரிக்கும் நீரின்மீதான அழகுத்தெப்பம் என்று கூறும்படியாக அமைந்த உன் பெரிய மென்மையான தோள்கள்,
வளைந்த முன்கையினையும் வெண்மையான பற்களையும் கொண்ட அழகிய நல்லவளே! உன்னைக் கண்டவர்க்கு
வருத்தும் தெய்வமாய் ஆகும் என்பதை நீ அறிவாயோ? அறியமாட்டாயோ?
முற்றிய கோங்கின் மொட்டு என்று கூறும்படியாக, முளைத்து வெளிவரும் தென்னங்குரும்பை என்று கூறும்படியாக,
மழைநீரின் எழும் மொக்குகள் என்று கூறும்படியாக, பெரியதாய் நிற்கும் உன் இளமையான முலைகள்,
மயிர் ஒழுகிய வரிகளையுடைய முன்கையையுடைய இளம்பெண்ணே! உன்னைக் கண்டவரின்
உயிரை வாங்கக் கூடியன என்பதனை நீ அறிவாயோ? அறியமாட்டாயோ?
என்று நான் கூற,
மனம் குழம்பியவளைப் போல், பிறருடைய வருத்தத்தை நீ அறியாதவளாய்
வேறொன்றும் கூறாமல் கடந்து போகின்றவளே! இப்போது கேட்பாயாக!
உன்மீதும் தவறில்லை; உன்னை வெளியே
போகவிட்ட உன் வீட்டார் மீதும் தவறில்லை;
தன் நிலையில் நிற்காத, கொல்லக்கூடிய யானையைக் குளிப்பாட்டச் செல்லும்போது செய்வதைப் போல்
பறை அறிவித்துச் செல்வது இல்லாமல் வெளியே செல்லவேண்டாம் என்று சொல்லாத
இறைவனே தவறுடையவன்.
மேல்
#57
மூங்கில் என்று சொல்லும்படியான திரண்ட தோளினையும், மணங்கமழும் நுனிசுருண்ட கூந்தலினையும்,
மானின் பார்வையை ஒத்த மருண்ட பார்வையையும் கொண்டு, மயில் போன்ற சாயலில் நடமாடி,
அழகிய சிலம்பின் உள்ளிருக்கும் மணிகள் ஆரவாரிக்க, ஒளிர்ந்து பிரகாசிக்கும் அணிகலன்கள் கண்சிமிட்ட,
பூங்கொடி என்னும்படி, மின்னல் என்னும்படி, தெய்வப்பெண் என்னும்படி, யாதொன்றும்
கண்ணுக்குப் புலனாகாத இடையினில் கண்கள் விரும்பிச் சேர்ந்து ஓட,
வளம் பொருந்திய உயர்ந்த சிறப்பினையுடைய உன் தந்தையின் பழமையான அகன்ற மனையில்
இளமைத் துடிப்புடன் எறிபந்து விளையாடி நடை தளர்ந்து ஒதுங்கிச் செல்பவளே! இப்போது கேட்பாயாக!
குளிர்ந்த பூமாலையினையும், புலர்ந்த சந்தனத்தையுமுடைய பாண்டியனின் உயர்ந்த கூடல்மாநகரில்
தேன் பரவும்படி மலர்ந்த நீலமலரின் மலர்ச்சியை வென்ற உன் அமைதியான கண்கள்,
ஏந்திய கொம்புகளையுடைய எழில்மிக்க யானையுடைய பகைவரை நோக்கி அந்தப் பாண்டியன் எறிந்த வேலைக் காட்டிலும்
சிவந்து வருத்த இத் தன்மையுடையவளானாய், இது உனக்குத் தகுந்ததோ? சிறுக்கப் பேசுபவளே!
பொழிகின்ற மழை போன்ற கொடையினையுடைய பாண்டியனின் அசோகமரத்துக் குளிர்ந்த சோலையில் உள்ள
மிகுந்த அழகினையுடைய இளம் மாந்தளிர் போன்றவளே! உன் கண்கள் அதற்கும் மேலே,
கொட்டில்களிலிருக்கும் பாய்கின்ற குதிரைகளைப் பூட்டிய தேர்களையுடைய பகைவரின் மார்பில் பாய்ந்த
அம்புகளைக் காட்டிலும் துன்பத்தை மிகுதியாகச் செய்கின்றனவே! பொன்னாலான காதணி அணிந்தவளே!
வகையாக அமைந்த குளிர்ந்த மாலையையுடைய பாண்டியனின் சிகரங்கள் உயர்ந்த பொதிகை மலையின் மேலிருக்கும்
அழகிய பூங்கொத்துக்களைக் கொண்ட இளைய வேங்கைப் பூவைப் போன்ற அழகுத்தேமலையுடையவளே!
மிகுந்த வலிமையையும், மிகுகின்ற மதநீரையுமுடைய, அந்தப் பாண்டியனின் யானையினுடைய கொம்புகளைக் காட்டிலும்
முனைப்பான கோபம் கொண்டனவாய் இருப்பது தகுமோ அந்த முத்துவடம் கொண்ட இள முலைகளுக்கு?
என்று
இப்படியாகக் கூற, கவிழ்ந்து நிலத்தைப் பார்த்து
நினைத்தவாறு நீண்ட நேரம் சிந்திப்பவள் போல், அங்கு
தனக்குத் துணையாக அமைந்த தோழியரைக் காணும் ஆர்வமுடைய கண்ணுடையவளாகி
தன் மனையை நோக்கிச் சென்றுவிட்டாள் என் அறிவைக் கவர்ந்துகொண்டு.
மேல்
#58
வாரி முடிக்கப்பட்டு நுனி சுருண்ட கூந்தலும், வளைந்து இறங்குதல் கொண்ட நெடிய மென்மையான தோள்களும்
பேரெழில் வாய்ந்த மலர்ந்த மைதீட்டிய கண்களும், அழகிய பெண்மானைப் போன்ற பார்வையும்,
மழையை எதிர்கொண்ட தளிர் போன்ற மேனியும், அழகுபெற்ற சுடர்விடும் நெற்றியும்,
விழுந்து கூர்மையாக முளைக்கின்ற பற்களும், மொட்டுப்போல் இன்னும் விழாத பற்களும், கொடி போன்ற இடையும் உடையவளே!
செம்மையான சிலம்பின் உள்ளே உள்ள பரல்கள் ஆரவாரிக்க, வரிசையாய் வளையல்களை அடுக்கிய கையை வீசிக்கொண்டு
என் அருமையான உயிரையும் கவர்ந்துகொண்டு அதனை அறியாமற் போகிறவளே! நான் சொல்வதைக் கேள்;
நான் உயிருடன் இருக்கும் அளவுக்கு விட்டுவிட்டு, மீதி உயிரை எடுத்துக்கொண்டு, என் காமநோய் கைமீறிச் செல்ல
அதனை உன் இளமைச் செருக்கால் உணராமல் இருப்பது உன் தவறு இல்லையென்றாலும்,
யாராலும் களையமுடியாத நோயைச் செய்யும் உன் அழகினை அறிந்தும், அதற்கு அழகூட்டி, தம்முடைய
செல்வச் சிறப்பின் செருக்கால் உன்னைத் தெருவில் போகவிட்ட உன் வீட்டாரின் தவறு இல்லை என்பாயோ?
நான் நடை மெலிந்து தளர்ந்துபோக, ஒவ்வொருநாளும் என்னை நலியச்செய்யும் காமநோயை
உன் பேதைமையினால் உணராமல் இருப்பது உன் தவறு இல்லையென்றாலும்,
இடைநில்லாமல் இளைத்துக்கொண்டுபோகும் இடையையுடைய உன் உடல்கட்டமைப்பை அறிந்தும், அதற்கு அழகூட்டி, தம்முடைய
சொத்துச் சிறப்பின் செருக்கால் உன்னைத் தெருவில் போகவிட்ட உன் வீட்டாரின் தவறு இல்லை என்பாயோ?
துயரம் மிக்கு, மனம் அழிய, வருத்தி என்னைக் கொல்லுகின்ற காமநோயை
உன்னிடம் சொல்லினும் அறியாதிருப்பது உன் தவறு இல்லையென்றாலும்,
படிப்படியாகக் கொல்லாமல், விரைவாக உயிரைக் கவரும் உன் வடிவழகினை அறிந்தும், அதற்கு அழகூட்டி, தம்முடைய
செல்வச் சிறப்பின் செருக்கால் உன்னைத் தெருவில் போகவிட்ட உன் வீட்டாரின் தவறு இல்லை என்பாயோ?
என்று
கடிந்துகொண்டால், நான் கடிந்துகொள்வது உன் வீட்டாரை; நான் இந்த நோயைப்
பொறுக்கக்கூடிய அளவையும் மீறி இது பெரியதானால், பொன்னால் செய்த குழையினையுடையவளே!
இதற்குப் பதிலாக, இந்த ஊர் மன்றத்தில் மடலேறி
உன் மேல் நிலைநாட்டுவது போல் உள்ளேன் நான், நீ எய்தும் பழியை.
மேல்
#59
முறுக்கு அவிழ்ந்து, அரும்புகள் உயர்ந்து நிற்கும் பசிய இலைகளைக் கொண்ட தாமரையின்
மொட்டுக்கள் நிமிர்ந்து நிற்பவை போல் முத்துக்கள் பதித்த திரட்சியையுடைய ஒளிவிடும் வளையலையுடைய,
மலைச் சரிவில் மணங்கமழும் மலர்ந்த காந்தளின் நுட்பமான அழகும் குளிர்ந்த எழுச்சியையும் உடைய வடிவினையுடைய
துடுப்பு என்று ஒப்புமை கூறும்படியாக உன் திரண்ட, தம்மில் ஒன்றாக அமைந்த, மென்மையான முன்கையினால்
ஒளி படரும் வேலைப்பாடு மிக்க மரத்தால் செய்த சிறு பானையாலும், பாவையாலும்
விளையாடுவதற்கு, உள்ளே பரல்கள் இட்ட அழகிய புனைந்த வேலைப்பாடு உள்ள
அழகிய சிலம்புகள் மேலெழுந்து ஆரவாரிக்க, அழகிய சில அடிகள் இட்டு நடக்கும் உன்னுடைய
பின்னல் விட்டு இருண்ட கூந்தலைக் கண்டு, என்னிடத்து இருக்கும் அறிவு முதலியன
என்னை விட்டுப் போகும்படியாகப் போகின்றவளே! இப்போது கேட்பாயாக!
நான் மயக்கமுற்றிருக்க, மனம் தடுமாற்றங்கொண்டு, இவனுக்கு என்ன நேர்ந்தது என்று கேட்கும்
அக்கறை இல்லை இவளுக்கு என்று அயலார் உன்னைப் பழிக்கும்போது
கூரிய பற்களையுடைய மகளிர் நடுவே, விதம்விதமான அணிகலன்கள் பொலிவுற்று விளங்க நீ
தை மாதத்தில் நீராடிய நோன்பின் பயனை அடைவாயோ?
தலைப்பாளை என்னும் தலைக்கோலம் உடையவளே! பொலிவிழந்து வாடும்படி இவனுக்குண்டான உள்நோய் என்ன என்று கேட்கும்
அக்கறை இல்லை இவளுக்கு என்று அயலார் உன்னைப் பழிக்கும்போது,
விளையாட்டுப் பெண்ணாய், பிறர் மனையில் பாடி நீ
இரந்து பெற்றவற்றைப் பலர்க்குக் கொடுக்கும் நோன்பு உனக்கு என்ன பயனைத் தரும்?
ஆய்ந்தெடுத்த தொடியினை அணிந்தவளே! மெல்லிதாகப் பெருமூச்சுவிட்டு, இவனுடைய உள்நோய் என்ன என்று கேட்கும்
வருத்தம் இல்லை இவளுக்கு என்று அயலார் உன்னைப் பழிக்கும்போது
ஒரு பாவைப்பிள்ளையைச் செய்து, அதனைப் பேணி, அதற்கு மணமுடிக்க விளையாட்டாகச் சோறு சமைத்து, நீ
நறிய நெற்றியையுடைய தோழியருக்கு மகிழ்ந்து பரிமாறும் நோன்பின் பயன் உனக்கு வந்து பொருந்துமோ?
என்று
இவ்வாறெல்லாம் மனம் உளைந்தவனாக நான் உனக்கு உரைத்தற்காக,
செய்த கொடுமைக்கு நீ ஓர் உதவியைச் செய்யாது போனால், சிவந்த அணிகலன் அணிந்தவளே!
நீ செய்ததன் பயன் உன்னைப் பற்றாமல் விடாது,
உன்னை விரும்புவோரிடம் காட்டவேண்டிய அருளை நீ கைவிட்டால், அது உனக்குப் பயன்தருதலும் இல்லை.
மேல்
#60
"அழகுத்தேமல் படர்ந்த வனப்பு மிக்க முலைகளையும், ஒளியியைக் கொண்ட நறிய நெற்றியினையும்,
மணங்கமழும் நறிய மாலையினைக் கொண்ட, மேகங்களும் விரும்பும் கரிய கூந்தலினையும்,
நுட்பமான அழகிய ஒளிவிடும் சிறு புள்ளிகளையும், மிகவும் சிறியதாக மெலிந்திருக்கும் இளமை ததும்பும் இடையினையும்,
வளைந்து இறங்குகின்ற, வளையல் அணிந்த முன்கையினையும், அழகு நிறைந்த அல்குலையும் உடையவளே!
கண் நிறைந்த அழகுள்ளவரை, திடீரென்று கண்டவர்களுக்கு
உள்ளே இருக்கும் காமநோய் மிகும்படி அவரின் உயிரைப் போக்கும் துயரைச் செய்தல்
பெண்தன்மை அன்று, அழகிய அணிகலன்கள் அணிந்தவளே! என்று கூறிக் கைகூப்புவான், கைகூப்பி
கண்கள் கலங்க நடுங்கினான், இனிமையாச் சிரிப்பவளே!
என்ன காரியம் செய்தான்? இவனொருத்தன் தன்னிடத்துள்ள
போரிடும் களிற்றைப் போன்ற தன்மை கெட்டு உள்ளுக்குள்
உருகுவான் போலிருக்கிறான், மனமுடைந்து";
"தெருவில் காரணமில்லாமல் கலங்குகிறவர்களைப் பார்த்து
மாற்றார் துயரத்தைத் தம் துயராகக்கொள்ளும் வாரணவாசிக்காரர்களின் குணத்தைப் பெறுதல் நமக்கு அயலானது,
நீ உன்மேல் அவற்றைக் கொள்வது எதற்காக?"
"பெரிதான முலைகளையும், ஆராய்ந்த அணிகலன்களையும் கொண்ட நல்லவளே! சடுதியில்,
பெரிதானதும், அமைதியானதுமான மைதீட்டிய கண்களையுடைய உன் தோழி எனக்கு அளித்த
பொறுக்கமுடியாத துன்பத்தைத் தரும் வேதனை என் உயிரை வாங்குகிறது,
இந்த நோய் தீரக்குடிய மருந்தை நீ எனக்கு அருள்வாய், ஒளிரும் வளையணிந்தவளே!
உன் முகத்தைக் காண்பதே எனக்கு மருந்தாகும் என்கிறான்,
உன் முகத்தை அவன் காணப்பெறுவதன்றி, சிறந்த
மருந்து வேறு ஒன்றும் இல்லையே! திருத்தமான அணிகலன்களை அணிந்தவளே!
நாம் என்ன செய்வது இனி?" "ஒன்றும் செய்ய முடியாது!
"உலக ஒழுக்கத்திலிருந்து மாறுபட்டு தெருவில் நின்றுகொண்டு ஒருவன்
கூறும் சொல்லை உண்மையென்று எடுத்துக்கொண்டு, அதன் தன்மையை உணராமல்
அவனை நம்பி எளிதாக ஏற்றுக்கொண்டுவிட்டோம் என்று சொல்லுவோம் நாம்";
"ஒருவன் நம்பொருட்டு உயிர்விடுதலும் எளிது என்று சொல்லிவிடுவோம்."
"கொஞ்சம் பொறு, இறக்கமாட்டான், இந்தச் சீர்கெட்ட ஊர்மக்கள் குசுகுசுவென்று பேசிக்கொள்வது பலரும் அறியப் பரவட்டும் என்று
நமது நாணத்தையும், நிறைவான குணங்களையும் விரும்பாதவனும் நல்ல குடியில் பிறக்காதவனுமாகிய இவன்'"
"உன்னுடைய பூண்கள் அணிந்த மார்பை நினைத்துக்கொண்டு தூக்கம் இல்லாமல் உன்மேல் ஆசைகொண்டு, நம்
நட்பைப் பெரிதும் விரும்பித் திரிகின்றவனை, அவன் முன் சென்று
நம்முடைய நாணம் கெடுமாறு அவனைப் போகச் சொல்லுதல் அவ்வளவு நயம் உள்ளதல்லவே!"
மேல்
#61
"ஏடி! பெண்ணே! இவன் ஒருத்தன்! என்னத்தை பெறுவான் இவன்? இவனுக்கு வந்த கேட்டைப் பார்!
தம் செல்வத்தை எல்லாம் இழந்து வறுமையுற்ற பண்பு நிறைந்தவர்கள்
தம் அல்லலைக் களையத்தக்க உறவினரிடம் சென்று
சொல்லத் தொடங்கி ஒன்றும் சொல்லமாட்டாதவராய் நிற்பது போல
பல முறையும் திரும்பித் திரும்பி என்னைப் பார்க்கிறான்! ஆனால் நான் அவனை நோக்கிப் பார்த்தால்
மெதுவாகத் தலையைத் தாழ்த்திக்கொள்கிறான்!"
"ஏடா! நீ உன் எண்ணத்தால் ஏதோ ஒன்றைக் கூறவிரும்புவது போல் காட்டிக்கொள்கிறாய்!
உன்னைவிட்டுப் பிரியாத நிழல் போல என் பின்னே திரிகிறாய்!
என்னிடம் நீ பெறாத குறை இது என்ன?"
"சொன்னால் மறுக்கமாட்டாளோ இவள்?
முகம் வேறுபடாமல், தம்மிடம் ஒன்றை வேண்டி நின்றவர்க்கு அதனைக் கொடுக்க இயலாமல் வாழ்வதைக் காட்டிலும்
உயிரிழந்து போவதும் நல்லது அல்லவா!"
"இவளுடைய தந்தை அன்புடன் யார்க்கும் வேண்டியதைக் கொடுப்பவர், சிறந்த பொருள்
எதனை நீ வேண்டுகிறாய்?"
"பேதையே! பொருள் வேண்டும் இழிநிலை இங்கில்லை, உண்மையில்
மருண்டு நோக்கும் மடப்பம் மிக்க பார்வையையுடைய உன் தோழி என்னை
அருள்கொள்ள வேண்டுகிறேன் நான்";
"அம்மாடியோ! நெருங்கித்தாக்கும் போரில் பகைவரைக் கொன்ற களிற்றினைப் போன்றவன், தன்னை ஒரு
பெண்பிள்ளை அருள்செய்யவேண்டும் என்று வேண்டிக்கிடக்கும் நிலைதான் என்ன?"
"ஒளிரும் வளையல்களை அணிந்தவளே! வெட்கம் இல்லாதவன் இவன்!
எனினும், ஏஏ என்று
பலரும் சிரித்து இகழ்கின்ற மடல்மாவில் ஏறி
செல்வம் கொழிக்கும் இவளின் ஊரின் நடுவில் வந்து நிற்பேன், நறிய நெற்றியையுடையவள்
எனக்கு அருள்தராமல் என்னைப் புறக்கணித்தால் என்று கூறிச் செல்கின்றவன், நாம்
இகழ்ந்து சிரித்தாலும் திரும்பத் திரும்ப வருகின்றவன், இடையிடையே
உன்னை ஒரு கள்ளப்பார்வையையும் பார்த்துக்கொள்பவன், தான் எண்ணியதை
அடையாமல் போகாத குணம் உடையவன், எம்முடைய தந்தையின்
உள்ளம் குறைபடாதபடி".
மேல்
#62
"ஏ! இவன் ஒருவன்! வெட்கம் இல்லாதவன்! தன்னுடைய
விருப்பத்திற்கு இணங்கமாட்டோம் என்று சொல்வாரையும் விரும்பிக் கையினைப் பற்றிக்கொள்வான்";
"விரும்புவது விரும்பாததும் ஆகிய எல்லாம்
உனக்குத் தெரியும், நான் அதனை அறியமாட்டேன், பூக்கள் நிறைந்த
மெல்லிய கொத்து நீங்காத கொடியைப் போன்றவளே! உன்னை நான்
தழுவுவது எனக்கு இனிமையாய் இருப்பதினால் உன்னைத் தழுவினேன்"; "ஏடா!
தமக்கு இனிமையானது என்று வலியப்போய் பிறர்க்குத் துன்பம்
செய்வது நல்லதாகுமோ?"
"ஒளிவிடும் வளையணிந்தவளே! போற்றிக் கடைப்பிடிக்காமல் கைவிடுவாயாக உன் அறிவு முதிர்ச்சியை, கவனமாகக் கேள்,
நீர்வேட்கையுள்ளோர்க்கு இனிப்பதனால்தான் அன்றி நீருக்கு இனிக்கும் என்று
குடிக்கிறார்களோ நீரைக் குடிப்பவர்கள்?
நான் செய்வது இன்னதென்று அறியேன், வேறு என்ன செய்வேன்?
ஐந்து வாய்களைக் கொண்ட பாம்பின் பார்வையில் அகப்பட்டு வருந்தி,
மாசற்ற திங்கள் போன்று விளங்கும் முகத்தையுடையவரை
வற்புறுத்திக் கவர்ந்துகொள்வதுவும் அறமே என்பது கண்டதில்லையா?"
"அறவழியும் அது என்று கண்டு, உலக ஒழுக்கமும் அப்படியானால், தன்னை அடக்கும் திறன் இன்றி
நாம் கூறுவதை கேளாதவனாய் அவன் வருந்துகிறான், முற்பிறப்பில் நாம்
வேறாக இருந்ததில்லை என்றொரு நிலை இருந்தால், அவனோடு
மாறுபாடு உண்டோ, நெஞ்சே நமக்கு?"
மேல்
#63
"பார்க்கும்போது நம்மைப் பார்த்துத் தொழுகின்றான், அதனைப் பிறர் காண்பாரே
என்று சற்றும் ஆராய்ந்துபாராதவன், ஊரார் பழி தூற்றுவர் என்று அவனை விலக்கி,
அவனை நீக்கினால், அவ்வாறு நீக்குவதால் தனக்கு ஏற்படும் வருத்தத்தை நினைந்து போகாமல் இருப்பான், மேலும், நாம்
அவனை இங்கு வராமல் காப்பது இயலாது, இனிமேல்,
ஏடி! என்ன செய்யலாம்?
பூங்குழையை அணிந்தவளே! வருந்துகின்ற அவன் அருகே, உன்னைக் கூவிக்கூவி அழைத்து
வேண்டுமென்றே நான் கொண்டுபோய் விடுவது போல் செய்கின்றேன், என் தோள் மேல்
கரும்பினை வரைவதற்கான தொய்யில் குழம்பைக் கொண்டுவரச் செல்பவள் போல் செல்கிறேன், அங்கு வந்து இங்கேயே
இருக்கின்றாயோ என்று அங்கே இருந்துகொள்,
அவன் உன் திருத்தமான பாதங்களில் விழுந்து உன்னிடம் வேண்டிக் கேட்பான், அவனது நோயைத் தீர்க்கும்
மருந்தே நீயாக இருப்பதால்;"
"வாடி வா! இன்னமும் ஒருமுறை அவனிடம் சென்று உன் விருப்பப்படி நடப்பதை தன் கடமையாகக் கொண்டு உனக்கு உடன்பட்டாள்
என்று சொல்லாமல் இருக்க என் தலையிலடித்துச் சத்தியம் செய்துதா!"
"அப்படியா! முழுவதையும் சொல்கிறேன். கேள்,
உன்னோடு கலந்து பேசிக்கொண்டிருந்தபோது நீயும் காலால் நிலத்தைக் கிளறியவாறு நின்றாய்,
அவ்வாறு என்னோடு நிற்பது உனக்கு எளிது அன்றோ! வேண்டுமானால் அவனுடன்
தான் சென்று நின்றுவிடேன்!"
மேல்
#64
"உன் அழகான முகம் மதியைப் போன்றிருக்க, அந்த மதியை மிகவும் பொருந்தியிருக்கும்
கரிய மேகங்கள் மாணிக்க அணி விளங்கும் பின்னின கூந்தலைப் போன்றிருக்க, அந்தப் பின்னலிடத்தே
விரிந்த நுண்ணிய நூலால் கட்டிய ஈரமான இதழ்களையுடைய பூக்கள்,
பின்னலைப் போன்ற கருநாகத்தின் கரிய நிறத்தினின்றும் மாறுபட்ட கார்த்திகை மீனின் அழகைப் போன்றிருக்க,
பார்த்தவர்களைக் கொடிய துன்பத்தில் ஆழ்த்துவதைப் போல் அசைகின்ற
விரிந்து தழைத்த கூந்தலையுடையவளே! ஆராய்ந்து பார்! எனக்குப்
பெரும் பொன் கொடுக்கும் கடன்பட்டாய், முன்னொரு காலத்தில், அதாவது, என்னால் மிகவும் பொலிவு பெற்றாய்!"
"ஏ! ஏடா! சொல்வதைப் பார்! இவனொருத்தன்! என் தோளில் தொய்யில்
எழுதிச் சென்றது உண்மையே! அதற்குப் பெரும் பொன்னைக் கடன் பட்டோம், அதாவது பெரிதும் பொலிவுற்றோம்,
என் முலையால் உன் மார்பை உழுதிருக்கின்றேனா நான்?"
"உழவும் செய்தாயே!
வண்டுகள் ஒலிக்கும் பூக்களைக் கொண்ட மாலையையுடைய அழகிய நல்ல பெண்ணே! நான் உனது
திருத்தமான அணிகலன் அணிந்த மென்மையான தோள்களில் வரைந்த, இதோ இங்கிருக்கிற,
கரும்புப் படங்கள் எல்லாம் உன் உழவினால் உண்டானதன்றோ? அத்துடன்
குற்றமற்ற பொலிவினையுடைய முகத்தைப் போன்று மலர்ந்த
குவளைக் கண்களின் மலர்ச்சியும் உன் உழவினால் உண்டானதன்றோ? போட்டிபோட்டுக்கொண்டு
முல்லை முட்டோடு மாறுபடுகின்ற பற்களையுடையவளே! இவை அல்லாமல்
வேறு என்னத்தை உழப் போகிறாய், இனி?"
"ஏடா! என்னுடைய நல்ல தோளில் வரைந்த கரும்புக்கு நீ சொன்னது சரி!
முற்றின அழகையுடைய நீல மலர் என்று கூறும்படியாக, வருத்தமுற்ற,
கத்தியினால் பிளந்த மா வடுவைப் போன்ற மைதீட்டிய கண்களுக்கெல்லாம்
பெரும் பொன்னிறம் உன்னால் ஏற்பட்டது என்பாயோ? இப்பொழுது!"
"நல்லவளே! தோழியே! இதைக் கேள்!
இங்கே, அரசனோடு சேர்ந்த ஒருவன் அவன் பொருளை நுகர்ந்து, முன்னேற்ற நிலையை அடைந்தால்,
அதன் பயனை அந்த அரசனே கொள்வது போல பல பயன்களையும் நான் எய்துவேன்."
"அப்படியே ஆகட்டும்"; "அப்படியாக இல்லாவிட்டால், வேங்கைப் பூவின்
முற்றின அழகைக் கொண்ட, அழகுத் தேமல் படர்ந்த, பூண் அணிந்த மார்பினால்
பொய்யாகவேணும் ஒரு முறை என்னை தழுவிவிட்டுச் செல்வாயாக!
முத்துப்போன்ற முறுவலையுடையவளே! என்னால் நீ பெற்ற பொன் கடனான பசலை அனைத்தையும்
முற்றிலும் அகற்று எறிந்துவிடுவதற்கு".
மேல்
#65
திருத்தமான அணிகலன்கள் அணிந்தவளே! கேட்பாயாக! நம் ஊர்மக்கள் எல்லாரும் சிரிப்பதற்கு ஏற்ற
பெரிய சிரிப்பைத் தரும் நிகழ்ச்சி நேற்று நடந்தது; ஒரே நிலையில்
உலகம் எல்லாம் உறங்கிவிட்ட இருட்டான நள்ளிரவில்,
அழகிய துகிலால் போர்த்திய போர்வையை அழகுபெறப் போர்த்திக்கொண்டு, நம்முடைய
இனிய வனப்புள்ள மார்பினனாகிய தலைவனின் சமிக்கையை எதிர்பார்த்து நான் நின்றிருக்க,
முற்றிலும் மொட்டையான தலையும், மேலே பொத்திய துணியும் உடையவனாய்
கரும் குட்டநோயால் கையும் காலும் குட்டையாகி, உடல் முழுதும் அழுக்கேறியவனாய் வந்து நம்
சேரியைவிட்டுப் போகாத முடமுள்ள வயதான பார்ப்பானை,
"தோழியே! நீ பேணுவாயாக" என்று சொல்வாயல்லவா! அவன் அங்கே
என்னைப் பார்த்து, குனிந்து, பணிந்து, "நேரங்கெட்ட நேரத்தில்
இங்கு நிற்கின்ற நீர் யார்" என்று கூறி, மெதுவாக,
வைக்கோலைப் பார்த்த வயதான மாட்டைப் போல என் பக்கத்திலிருந்து போகாமல்
"பெண்ணே, வெற்றிலைபாக்கு போடுகின்றாயோ?" என்று தன்
பையினைத் திறந்து "எடுத்துக்கொள்" என்று தந்தான்; நான் ஒரு வார்த்தையும்
சொல்லாமல் நின்றிருந்தேன்; அவன் சட்டென்று விலகிப்போய், முந்தைய நிலையிலிருந்து மாறி,
"என் கையில் அகப்பட்டுக்கொண்டாய், சிறுமியே நீ! நான்
மற்றொரு பிசாசு, என்னிடம் அன்புகொள், என்னை வருத்த நினைத்தால்
இந்த ஊரார் இடும் பலியை நீ பெறாமல் நான் எடுத்துக்கொள்வேன்"
என்று பலவாறாகப் பொறுக்கமுடியாதபடி வாய் பிதற்றி நிற்க,
அந்த முதிய பார்ப்பான் அஞ்சிவிட்டதை அறிந்து, நான் நிலைமையை நீடிக்கவிடாது,
ஒரு கையில் மணலை வாரி எடுத்து அவன் மேல் வீசியெறிவதைக் கண்டு
அவன் மிகவும் கதறிக்கொண்டு ஓலமிடத்தொடங்கினான் அங்கு;
அடக்கமுடியாத வலிமையினையும், வளைந்த வரிகளையும், கொடிய குணமும் கொண்ட
பெரிய புலியைப் பிடிப்பதற்கு விரித்த வலையினில், ஒரு
ஒன்றிற்கும் உதவாத குள்ள நரி மாட்டிக்கொண்டதைப் போல், காதலனுடனான
சந்திப்பு கெடும்படியாகவும், நம் ஊருக்கெல்லாம்
பெரும் பேச்சாகவும் ஆகி முடிந்துபோனது, என்றைக்கும் தனக்குத்
தொழிலாகக் கொண்ட முதிய பார்ப்பானின்
காம வேட்கை என்னும் பெரிய கேலிக்கூத்து!