New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கீழடி அடையாளம்- அமர்நாத் ராமகிருஷ்ணன்


Guru

Status: Offline
Posts: 24601
Date:
கீழடி அடையாளம்- அமர்நாத் ராமகிருஷ்ணன்
Permalink  
 


கீழடி அடையாளம் காணப்பட்டது எப்படி? முதல் இரண்டு கட்ட ஆய்வுகள் சொல்வது என்ன?

கீழடி அகழாய்வு

மதுரைக்கு அருகில் உள்ள கீழடி தொல்லியல் மேட்டில் நடத்தப்பட்ட அகழாய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டிருக்கும் நிலையில், அந்த இடத்தை முதன்முதலில் கண்டுபிடித்து இரண்டு கட்டங்களாக ஆய்வுகளை மேற்கொண்ட இந்தியத் தொல்லியல் துறையின் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் உடன் கீழடி குறித்தும் அங்கு அவர் நடத்திய ஆய்வுகள், கிடைத்த பொருட்கள் குறித்தும் பேசினார் பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதன். பேட்டியிலிருந்து:

கே. கீழடி தொல்லியல் மேடு எப்படி அடையாளம் காணப்பட்டது?

ப. இதற்கு முன்பாக அரிக்கமேடு, காவிரிபூம்பட்டினம், ஆதிச்சநல்லூர் என மூன்று பெரிய அகழாய்வுகள்தான் நடந்திருக்கின்றன. இதைத் தவிர விரிவான ஆய்வுகள் ஏதும் நடக்கவில்லை. அந்த இடைவெளியை பூர்த்திசெய்யும்விதத்தில்தான் ஓர் ஆய்வை மேற்கொள்ள முடிவெடுத்தோம். இதற்கு முன்பாக ஆற்றங்கரையில் சில இடங்களில் அகழாய்வு நடந்திருக்கின்றன என்றாலும் பெரிய அளவில் கவனம் கொடுக்கப்படவில்லை. ஆகவே எங்களுடைய நோக்கம் ஆற்றங்கரையில், மக்கள் வாழ்ந்த இடங்களைக் கண்டறிய வேண்டும் என்பதாகவே இருந்தது.

2013-14ல் பெங்களூரில் இருந்த இந்தியத் தொல்லியல் துறையின் ஒரு சிறிய அணியைச் சேர்ந்த நாங்கள் இந்தப் பணியில் இறங்கினோம். அந்த அணியில் நான், ராஜேஷ், வீரராகவன் ஆகிய உதவி தொல்லியலாளர்கள், பேராசிரியர் வேதாச்சலம் என்ற கல்வெட்டாளர், ஆறு ஆராய்ச்சி மாணவர்கள் இருந்தோம்.

தமிழகத்தில் வைகைதான் மிகப் பழமையான நதி. 250 கி.மீ. தூரத்திற்கு ஐந்து மாவட்டங்களில் வைகை பாய்கிறது. அதில் குறிப்பாக எட்டு கி.மீ. தூரத்தை நாங்கள் தேர்வுசெய்தோம். அதில் நதியின் இருபுறங்களிலும் 293 இடங்கள் தேர்வுசெய்யப்பட்டன. இதில் மக்கள் வாழக்கூடிய பகுதிகள், பெருங்கற்கால புதைமேடுகள், முதுமக்கள் தாழிகள், கல்வெட்டுகள், நடுகற்கள், கோவில்கள், சத்திரங்கள் என பல தொல்லியல் எச்சங்கள் கிடைத்தன.

இந்த 293 இடங்களும் ஆவணப்படுத்தப்பட்டன. எங்களுடைய நோக்கம் ஒரு வாழ்விடப் பகுதியைத் தேடுவதாகத்தான் இருந்தது. இந்த 293 இடங்களில் 100க்கும் மேற்பட்ட மக்கள் வாழ்விடப் பகுதிகள் கிடைத்தன. மதுரையைப் பற்றி ஆய்வு நடத்துவது எங்கள் முக்கிய நோக்கமாக இருந்தது. ஆனால், மதுரை நகருக்குள் அந்த ஆய்வை நடத்த இடம் ஏதும் இல்லை. அங்கு தொடர்ச்சியாக மக்கள் வாழ்ந்துவருகிறார்கள். ஆகவே மதுரைக்கு வெளியில்தான் அந்த ஆய்வைச் செய்ய வேண்டியிருந்தது.

கீழடியில் கிடைத்த விரிவான கட்டடத் தொகுதிகள்.படத்தின் காப்புரிமைASIImage captionகீழடியில் கிடைத்த விரிவான கட்டடத் தொகுதிகள்.

முடிவில் மூன்று இடங்கள் இறுதிப்படுத்தப்பட்டன. ஒன்று மதுரைக்கு மேற்கே இருந்த சித்தர் நத்தம். இந்த இடம் நகரில் இருந்து 40 கி.மீ. தூரத்தில் இருக்கிறது. கீழடி மதுரைக்கு கிழக்கே 12 கி.மீ தூரத்தில் இருந்தது. மற்றொரு இடம் மாற நாடு. இது மதுரைக்குக் கிழக்கே 30 கி.மீ. தூரத்தில் இருக்கிறது. இந்த மூன்று இடங்களிலும் உள்ள தொல்லியல் மேடுகளை ஆய்வுசெய்தபோது, கீழடி சரியான இடமாகப்பட்டது. தென்னந்தோப்புகளால் சூழப்பட்டிருந்த அந்த இடம் கடந்த நாற்பதாண்டுகளாக யாராலும் சிதைக்கப்படாத ஒரு பகுதியாக இருந்தது. ஆகவே இந்த இடத்தைத் தேர்வுசெய்தோம்.

2014-15ல் மார்ச்சில் முதல் ஆய்வு தொடங்கப்பட்டது. அப்போது மக்கள் வாழ்ந்த ஒரு பகுதி (habitation site) முழுமையாக கீழடியில் கண்டுபிடிக்கப்பட்டது. இதுவரை பெரும்பாலும் புதைமேடுகளே அகழாய்வில் கிடைத்துவந்தன. கீழடி அந்த நிலையை மாற்றியது. 2014-15, 2015-16 என இரு கட்டங்களாக இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில் இரண்டாவது ஆய்வில் மிகப் பெரிய அளவில் கட்டடத் தொகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

தமிழ்நாட்டில் இதற்கு முன்பாக நடந்த ஆகழாய்வில் வாழ்விடப் பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன என்றாலும் இதுபோல பெரிய அளவில் கட்டடத் தொகுதிகள் எங்கேயும் கிடைக்கவில்லை. அதுதான் கீழடியை மிக முக்கிய இடமாகக் கருதுவதற்கு காரணமாக அமைந்தது.

கே. தமிழகத்தில் இதற்கு முன்பாக வேறு எங்கு கட்டடப் பகுதிகள் கிடைத்திருக்கின்றன?

ப. அரிக்கமேடு, காவிரிபூம்பட்டினம், திருக்காங்குடி, காஞ்சிபுரம் உள்ளிட்ட இடங்களில் கிடைத்திருக்கின்றன. ஆனால், இவை எல்லாமே சிறிய அளவிலானவை. பெரிய அளவில் கட்டடப் பகுதிகள் கிடைக்காததால், தமிழகத்தில் நகர நாகரிகமே கிடையாது என்று சொல்லிவந்தார்கள். செங்கல் பயன்பாட்டை வைத்துத்தான் ஓர் இடம் நகரப் பகுதியா, கிராமப் பகுதியா என முடிவுசெய்யப்படுகிறது. கிராமப்புற பகுதிகளில் செங்கலால் ஆன கட்டடத் தொகுதிகள் கிடைக்காது. நகர்ப்புற பகுதிகளில் செங்கலால் ஆன கட்டடத் தொகுப்பு இருக்கும். இங்கு அப்படியான கட்டடத் தொகுதிகள் கிடைத்ததால்தான் இதை நகர்ப்புறப் பகுதி என முடிவெடுத்தோம்.

இது வைகை நதி நாகரிகத்தின் முதல் எச்சம்தான். இன்னும் நூறு இடங்கள் இருக்கின்றன. அவற்றையெல்லாம் தோண்டினால்தான் மிகப் பெரிய நாகரிகம் இருந்ததா என்பது குறித்து தெரியவரும். சிந்துவெளி நாகரிகம் என்பது ஹரப்பாவை வைத்து மட்டும் சொல்லப்படவில்லை. அதைத் தொடர்ந்து பல இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டதால்தான் அது நாகரிகமாக கருதப்படுகிறது. கீழடியைத் தொடர்ந்து பல இடங்களில் தோண்டி, தொடர்புகளை உறுதிப்படுத்தும்போது இதை ஒரு நகர நாகரிகமாக அழைக்கலாம். ஆனால், கீழடி ஒரு நகரம் என்பதில் சந்தேகமில்லை.

டி. கல்லுப்பட்டியில் 1947ல் இந்தியத் தொல்லியல் துறை அகழாய்வு மேற்கொண்டது. அங்கே கிடைத்த பானை ஓடுகளும் இங்கே கிடைத்த பானை ஓடுகளும் ஒன்றுபோல இருக்கின்றன. ஆகவே இவை எல்லாம் சேர்ந்து ஒரே நாகரிகம் என்ற அனுமானத்திற்கு வருகிறோம்.

கே. 2014-15, 2015-16 ஆகிய இரண்டு தடவைகளாக நீங்கள் மேற்கொண்ட ஆய்வுகளில் உங்களுக்குக் கிடைத்த முடிவுகள் என்ன?

ப. நாங்கள் ஒரு மக்கள் வாழ்விடப் பகுதியைக் கண்டறிந்திருக்கிறோம். அந்த வாழ்விடப் பகுதியில் செங்கற்களால் ஆன விரிவான கட்டட அமைப்பு எங்களுக்குக் கிடைத்திருக்கிறது. மக்கள் வளமையாக வாழ்ந்ததற்கான தொல்பொருள் ஆதாரங்கள் எங்களுக்குக் கிடைத்திருக்கின்றன. கீழடியில் கிடைத்த அனைத்துப் பொருட்களும் முழுமைபெற்ற பொருட்கள்.

கீழடியில் கிடைத்த விரிவான கட்டடத் தொகுதிகள்படத்தின் காப்புரிமைASIImage captionகீழடியில் கிடைத்த விரிவான கட்டடத் தொகுதிகள்

கீழடி ஒரு தொழில்பகுதியாக இருக்கலாமோ என தற்போது விவாதிக்கப்படுகிறது. ஆனால், அப்படிக் கருதவதற்கான ஆதாரம் ஏதும் கிடைக்கவில்லை. தொழிற்பகுதியாக இருந்தால், மூலப் பொருட்கள், மீந்த பொருட்களின் எச்சங்கள் கிடைக்கும். அப்படி ஏதும் எங்கள் ஆய்விலும் கிடைக்கவில்லை. இப்போதைய மாநில அரசின் ஆய்விலும் கிடைக்கவில்லை. ஆகவே இன்னும் இது தொடர்பாக ஆய்வு செய்யவேண்டியிருக்கிறது.

கொடுமணலில் கட்டடத் தொகுதிகள் கிடையாது. ஆனால், நிறைய மூலப்பொருட்களும் தொழிற்சாலைகளில் எஞ்சியிருக்கும் பொருட்களும் கிடைத்தன. கீழடியில் எல்லாமே முழுமையான பொருட்களாகத்தான் (finished goods) கிடைத்திருக்கின்றன. ஆகவே இங்கு வாழ்ந்த மக்கள் அந்தப் பொருட்களை வெளியில் இருந்துதான் வாங்கி வந்துள்ளனர் என்ற முடிவுக்கு வருகிறோம்.

அப்படி வாங்கக்கூடியவர்கள், அதற்கான திறன் படைத்தவர்களாக இருந்திருக்கிறார்கள். ஆகவே கீழடி என்ற நகரத்திற்கு ஆதாரமாக விளங்கக்கூடிய பல இடங்கள் இருக்கலாம். அந்த இடங்களை எல்லாம் ஆய்வுசெய்தால், இதை ஒரு நாகரிகமாக கருதலாம்.

கே. கீழடி நெசவுத் தொழில் அதிகம் நடந்த இடம் என்றும் சொல்லப்பட்டது...

ப. சாயப்பட்டறையாக இருக்கலாம் என்று சொன்னார்கள். ஆனால், அப்படி முடிவாகவில்லை. பாபின்கள், நூல் சுற்றக்கூடிய ஸ்பின்டில்கள் கிடைத்திருக்கின்றன. அதை வைத்து முடிவாக ஏதும் சொல்ல முடியாது. இங்கே இரட்டை அடுக்குகள் கொண்ட அடுப்புகள் கிடைத்திருக்கின்றன.

"கீழடியில் பல இடங்களில் இரட்டை அடுப்புகள் கிடைத்துள்ளன. அவை எதற்காகப் பயன்படுத்தப்பட்டன என்பது தெரியவில்லை."படத்தின் காப்புரிமைASIImage caption"கீழடியில் பல இடங்களில் இரட்டை அடுப்புகள் கிடைத்துள்ளன. அவை எதற்காகப் பயன்படுத்தப்பட்டன என்பது தெரியவில்லை."

இம்மாதிரி அடுப்புகளில் வெப்பத்தைக் கட்டுப்படுத்த முடியும். அம்மாதிரி அடுப்பை எதற்காகப் பயன்படுத்தினார்கள் என்பது தெரியவில்லை.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

கே. கீழடியில் கிடைத்த தொல்பொருட்கள் என்னென்ன? அதை வைத்து என்ன முடிவுக்கு வருகிறீர்கள்?

ப. அங்கே பல தொல்பொருட்கள் கிடைத்திருக்கின்றன. குறிப்பாக மதிப்புமிக்க கற்கள் கிடைத்துள்ளன. அம்மாதிரி கற்கள் தமிழ்நாட்டில் இயற்கையாகக் கிடைக்காது. அவை குஜராத், மகாராஷ்டிரா, பலூசிஸ்தான் பகுதிகளில் இருந்துதான் வந்திருக்க வேண்டும். ஆகவே இது கண்டிப்பாக வர்த்தகம் நடந்த இடமாக இருந்திருக்கலாம். ஆனால், மேலும் பல ஆய்வுகளை நடத்தி இதை உறுதிசெய்ய வேண்டும்.

கீழடியிலிருந்து இரும்புப் பொருட்கள், செம்புப் பொருட்கள் கிடைத்தன. இவை பெரும்பாலும் வீடு மற்றும் விவசாய உபயோகத்திற்கானவை. அவற்றின் உலோகக் கலவையை சோதிக்க வேண்டும்.

நாங்கள் ஆய்வு நடத்திய பகுதிகளில் கிடைத்த கரிமப் பொருளின் கால அளவு அதிகபட்சமாக கி.மு. 280ஆக இருந்தது. ஆனால், இன்றைக்கு கி.மு. 583வரை கால அளவு சென்றிருக்கிறது. இன்னும் ஆழமாகத் தோண்டி, அங்கு கிடைக்கும் கரிமப் பொருளை ஆய்வுசெய்தால் காலம் இன்னும் பின்னோக்கிச் செல்லலாம்.

என்னைப் பொருத்தவரை கீழடி நம் வரலாற்றைக் கட்டமைப்பதற்கான ஓர் இடம். அந்த இடத்தில் கால நிர்ணயம் செய்யும் நோக்கத்திற்காக ஒரு குழியைத் தோண்ட வேண்டும். அதில் கீழே இருந்து மேல்மட்டம்வரை கிடைக்கும் அனைத்து கரிமப் பொருட்களையும் சேகரிக்க வேண்டும். அதனைப் பகுப்பாய்வு செய்தால், எந்த காலத்திலிருந்து எந்த காலம் வரை கீழடி இருந்தது என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

கே. கீழடியில் கிடைத்த பானை ஓடுகள், அதிலிருந்து கிடைத்த தகவல்கள் என்னென்ன?

ப. பானை ஓடுகளைப் பொறுத்தவரை, தமிழகத்தில்தான் பெயர்கள், எழுத்துகள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கிடைக்கும். இந்தியாவில் வேறு எங்குமே இப்படிக் கிடைக்காது. கொடுமணல், பொருந்தல், அகழன் குளம், கீழடி என எல்லா தொல்லியல் ஆய்வுகளிலும் இம்மாதிரி பானை ஓடுகள் கிடைத்திருக்கின்றன.

பானைகளில் எழுதுவது இங்கு மட்டுமே இருந்திருக்கிறது. அடிப்படையான எழுத்தறிவு இங்கே இருந்திருக்க வேண்டும். மக்கள்தான் பானைகளில் தங்கள் பெயர்களை எழுதுவார்கள். அரசன் எழுதப்போவதில்லை. இப்போதும் சாதாரண சில்வர் பாத்திரங்களில் நாம் பெயர்களை எழுதுகிறோம். இந்தியாவில் வேறு எங்கும் இந்தப் பழக்கம் இல்லை. ஆகவே, இந்தப் பழக்கத்திற்கு ஒரு தொடர்ச்சி இருந்திருக்க வேண்டும்.

அசோகனுடைய பிராமி கல்வெட்டுகள் மிகப் பெரிய சாசனங்கள். அவற்றை அரசன் சொல்ல, ஒருவர் எழுதியிருப்பார். ஒருவர் வரைந்திருப்பார், ஒருவர் வெட்டியிருப்பார். ஆனால், இங்கே சாமானியர்கள் செய்திருக்கிறார்கள்.

இங்கே கிடைத்த பானை ஓடுகள் அனைத்திலும் தமிழ் பிராமி எழுத்துகள்தான் இருந்தன. ஆனால், மொழியில் வேறுபாடுகள் உள்ளன. எங்களுக்கு திசன், குதசா போன்ற பிராகிருத மொழி சொற்கள் கிடைத்திருக்கின்றன. இவை பெரும்பாலும் கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. பிராகிருத மொழி சமணத் தொடர்புகள் மூலம் இங்கே வந்திருக்கலாம்.

தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள்படத்தின் காப்புரிமைASI

இதற்கு முன்பாக புலிமான் கொம்பையில் அந்துவன் என்ற கல்வெட்டுக் கிடைத்தது. பொருந்தலில் பிராமி எழுத்துகள் கிடைத்தன. ஆகவே இந்த பிராமி எழுத்துகள் இங்கிருந்து சென்றிருக்கலாம் என்ற வாதம் இப்போது முன்வைக்கப்படுகிறது. ஏனென்றால், எழுத்துகள் எளிமையான வடிவத்திலிருந்து கடின வடிவங்களுக்குச் செல்லும். அசோகன் பிராமி மிகச் சிக்கலானது. அதில் எல்லா வடிவங்களும் வர்க்கங்களும் உண்டு.

ஆனால், தமிழில் அப்படி இல்லை. சமீபத்தில் மாநிலத் தொல்லியல் துறை நடத்திய ஆய்வில், 'ஆதன்' என்ற பெயர் கிடைத்தது. ஆனால், அது 'அதன்' என்றுதான் எழுதப்பட்டிருந்தது. ஓர் எழுத்தை வைத்து நமக்கு வேண்டிய ஒலியை உச்சரிப்பது மிக எளிய, அடிப்படையான வடிவம். ஆகவே பேராசிரியர் ராஜன், ராஜவேலு ஆகியோர் இங்கிருந்துதான் பிராமி வடக்கே சென்றிருக்க வேண்டுமெனக் கருதுகிறார்கள். ஆனால், மேலும் பல ஆய்வுகளின் மூலம்தான் இதனை முழுமையாக நிரூபிக்க முடியும்.

கே. அசோகனுடைய கல்வெட்டு விரிவானது. ஆனால், தமிழில் கிடைத்த ஒரே ஒரு கல்வெட்டு மற்றும் பானை ஓட்டு எழுத்துகளை வைத்து தமிழ் பிராமி முன் தோன்றியதாகச் சொல்ல முடியுமா?

ப. அசோகனுடைய கல்வெட்டைப் பொறுத்தவரை அவர் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்தக் கல்வெட்டை உருவாக்கியிருக்கிறார். இங்கே மக்கள் எழுதியிருக்கிறார்கள். அசோகர் காலத்தில் வாழ்ந்த மக்கள் கல்வி அறிவு படைத்திருந்தார்கள் என்பதற்கு ஆதாரங்கள் ஏதும் கிடையாது. தவிர, அசோகருடைய பெயரைக் கொண்டு யார் வேண்டுமானாலும் அந்தக் கல்வெட்டை உருவாக்கியிருக்கலாம். அசோகர்தான் உருவாக்கினார் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது?

அந்தக் கல்வெட்டுகள் பௌத்தத்தை சொல்பவை. பௌத்தத் துறவிகள் அதை வைத்திருக்கலாம். அதேபோல, சமணத் துறவிகள் இங்கே பிராகிருத மொழிச் சொற்களை கொண்டுவந்திருக்கலாம். ஆனால், பிராமி எங்கிருந்து வந்தது என்பது முழுமையாக முடிவாகவில்லை.

சிந்துச் சமவெளியில் சித்திர குறிகள் கிடைக்கின்றன. அதிலிருந்து நேராக எழுத்துகள் வந்திருக்க முடியாது. அதற்கடுத்து, பானைக் கீறல்கள் கிடைக்கின்றன. அதிலிருந்து எழுத்துகள் வந்திருக்க முடியும்.

தமிழகத்தில் தமிழ் பிராமி எழுத்துகள் கிடைக்கின்றன. அதற்குக் கீழடுக்கில் கீறல்கள் கிடைக்கின்றன. அந்தக் கீறல்களில் இருந்துதானே ஒலியைக் குறிக்கும் எழுத்துகள் வந்திருக்க முடியும். ஆனால், இதை நிரூபிக்க ஆதாரங்களைத் திரட்ட வேண்டும்.

கே. கீழடியில் வாழ்ந்த மக்கள் என்ன தொழிலைச் செய்திருக்க முடியும்?

ப. பெரிதும் விவசாயம் சார்ந்த சமூகமாகத்தான் இருந்திருக்க வேண்டும். உற்பத்தி பெருக்கத்தின் காரணமாக வியாபாரத்தை மேற்கொண்டிருக்கலாம். அதன் மூலம் வேறு இடங்களில் இருந்து பொருட்கள் வந்திருக்கலாம். இங்கிருந்தும் பொருட்கள் போயிருக்கலாம்.

கே. இங்கு கிடைத்த கரிமப் பொருளின் காலம் கி.மு. 583 எனக் கிடைத்திருக்கிறது. அதன் முக்கியத்துவம் என்ன? சங்க காலத்தை இதோடு தொடர்புபடுத்த முடியுமா?

ப. அது ஒரு முக்கியமான கால நிர்ணயம் என நினைக்கிறேன். ஏற்கனவே பொருந்தலிலும் கொடுமணலிலும் காலம் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டாக இருந்தது. அதை உறுதிப்படுத்தும் விதமாகத்தான் இந்த கால நிர்ணயத்தை பார்க்கிறேன்.

சங்க காலத்தை கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. இரண்டாம் நூற்றாண்டுவரை என மதிப்பீடு செய்யப்பட்டிருப்பது ஒரு சார்புநிலை கால மதிப்பீடுதான் (relative dating). தவிர, பெருங்கற்காலமும் சங்க காலமும் வேறு வேறா என்ற பிரச்சனையும் இன்னும் தீரவில்லை. ஏனென்றால் காலத்தை இன்னும் நம்மால் மறுவுருவாக்கம் செய்ய முடியவில்லை.

கீழடியில் அகழ்வாராய்ச்சியில் காலப்படிநிலையைக் காட்டும் படம்படத்தின் காப்புரிமைASI

சிந்துச் சமவெளி நாகரீகத்தில் அதைச் செய்திருக்கிறார்கள். மெகார்கர் பகுதி, புதிய கற்காலத்தைச் சேர்ந்தது. இது ஹரப்பாவுக்கு முந்தைய நகரமாகக் கருதப்படுகிறது. அதன் காலகட்டம் கி.மு. 7000. இதற்குப் பிறகு முதிர்ந்த ஹரப்பா நாகரீகம். அதற்குப் பிறகு சிந்துவெளி நாகரிகத்தின் வீழ்ச்சி என இந்தக் காலவரிசை தொடர்கிறது.

ஆனால், அதுபோல ஆய்வுகள் தமிழகத்தில் நடக்கவில்லை. இங்கேயும் பழங்கற்காலம், புதிய கற்காலம், இடை கற்காலம் ஆகியவை உண்டு. இதற்கிடையில்தான் பெருங்கற்காலம் வருகிறது. இது எந்தெந்த வருடங்களை ஒட்டியது என்பது இன்னும் தெளிவாக வரையறுக்கப்படவில்லை.

மேலும் தமிழ்நாட்டில் தமிழ் பிராமி குறித்த முழுமையான ஆய்வுகள் தேவை. அப்படி நடந்தால்தான், கீறல்களில் இருந்து தமிழ் பிராமி எப்படி உருவானது என்பதை வரையறுத்துச் சொல்ல முடியும். கீறல்கள் எப்படி மெல்ல, மெல்ல எழுத்தாக மாறியது என்பதை ஆராய வேண்டும்.

கே. தமிழ் பிராமி எழுத்துகள் மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிகம் கிடைக்கின்றன..

ப. ஆமாம். இந்தியாவிலேயே தமிழ் பிராமி எழுத்துகள் அதிகம் கிடைக்கும் பகுதி இந்தப் பகுதிதான். வட இந்தியாவில் அசோகர் கல்வெட்டைத் தவிர வேறு இடங்களில் அந்த பிராமி எழுத்துடன்கூடிய கல்வெட்டுகள் கிடையாது. பானை ஓடுகளில் எழுத்துகள் கிடைக்காது. இதுபோல மக்கள் பயன்பாட்டில் எழுத்துகள் இருந்தது கிடைப்பது வைகைச் சமவெளியில் மட்டும்தான். கங்கைச் சமவெளியில் கிடையாது.

கே. உங்கள் ஆய்வு முடிவுகளை வைத்துப் பார்த்தால், கீழடியையும் சிந்துச் சமவெளியையும் தொடர்புபடுத்த முடியுமா?

ப. இல்லை. அதற்கு மேலும் ஆய்வுகள் தேவை. சிந்துச் சமவெளியில் கிடைத்தது போன்ற ஓட்டையிடப்பட்ட பானை ஓடுகள் இங்கேயும் கிடைத்துள்ளன. அவை வேறெங்கும் கிடைக்கவில்லை. பானைகளை வைக்கக்கூடிய மண்ணாலான ஸ்டாண்டுகள் சிந்துவெளியைப் போல இங்கும் கிடைத்திருக்கின்றன. மற்றபடி, மேலும் பல ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும்.

கே. நீங்கள் செய்த ஆய்வுகளில் வழிபாட்டு உருவங்கள் ஏதும் கிடைத்ததா?

ப. பொதுவாக இந்த காலகட்டத்தில் வழிபாட்டு உருவங்கள் ஏதும் கிடைக்காது. ஏனென்றால் அந்த காலகட்டத்தில் இயற்கை வழிபாடு, மூதாதையர் வழிபாடுகள்தான் இருந்தன. மதங்கள் கிடையாது. அந்த காலகட்டத்தில் இயற்கையைக் கண்டுதான் மனிதன் பயந்தான். ஆகவே வேறு உருவங்கள் கிடைக்காது.

கீழடியில் அகழாய்வு மேற்கொண்ட அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையிலான அணிபடத்தின் காப்புரிமைASI

சங்க இலக்கியங்களில் பெரும்பாலும் இயற்கை குறித்த குறிப்புகள்தான் விரிவாகக் கிடைக்கின்றன. அதில் இறைவனைக் குறிப்பதாக நாம் இன்று கருதும் சொற்கள் அந்த காலகட்டத்தில் வேறு யாரையாவது குறிக்கலாம். ஹீனயான பௌத்தத்தில் ஸ்தூபம்தான் வழிபடப்பட்டது. மஹாயான பௌத்த மதம் வரும்போதுதான் புத்தரின் உருவத்தை வழிபடுவது துவங்கியது. அசோகர் காலத்தில் ஸ்தூபமாக இருந்தது, ஹர்ஷர் காலத்தில் உருவமாக மாறியது.

கே. இங்கு கிடைத்த கட்டடத் தொகுதிகளை வைத்து அவை எம்மாதிரியான கட்டடங்கள் என்பதைச் சொல்ல முடியுமா?

ப. நமக்குக் கிடைத்திருப்பது எச்சங்கள்தான். அவற்றை வைத்துக்கொண்டு அந்த காலகட்ட கட்டங்களை மறுஉருவாக்கம் செய்ய வேண்டும் தோலேவராவில் அதைச் செய்திருக்கிறார்கள். இங்கே கூரைக்காகத் தோண்டப்பட்ட குழிகள் கிடைத்துள்ளன. ஓடுகள் கிடைத்துள்ளன. இதையெல்லாம் நுணுக்கமாக ஆராய வேண்டும்.

தவிர இந்த கட்டங்கள் ஒவ்வொன்றும் எந்த காலகட்டத்தைச் சேர்ந்தவை என கால நிர்ணயம் செய்ய வேண்டியிருக்கிறது. ஏனென்றால் ஓர் இடத்தில் கால்வாய் இருந்தால், அந்தக் கால்வாயைப் பயன்படுத்திய பிறகு, சில ஆண்டுகளுக்குப் பிறகு அதே இடத்தில் வேறொரு கால்வாயைக் கட்டுகிறார்கள். பல கட்டங்களில் இங்கே மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதைத்தான் இது காட்டுகிறது.

முதல்கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட குழிகள் - கழுகுப் பார்வையில்படத்தின் காப்புரிமைASIImage captionமுதல்கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட குழிகள் - கழுகுப் பார்வையில்

கே. எத்தனை நூற்றாண்டுகள் கீழடியில் மக்கள் வாழ்ந்திருப்பார்கள் எனக் கருதுகிறீர்கள்?

ப. இப்போது கிடைத்திருக்கும் காலக் கணிப்பின்படி கி.மு. ஆறாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. பத்தாம் நூற்றாண்டுவரை தொடர்ச்சியாக மக்கள் வாழ்ந்திருக்கலாம். பத்தாம் நூற்றாண்டுக்கான ஆதாரங்கள் மிகக் குறைவாகவே கிடைத்திருக்கின்றன. ஆனால், நிச்சயமாக கி.பி. ஆறாம் நூற்றாண்டுவரை இங்கு மக்கள் தொடர்ச்சியாக வாழ்ந்திருக்கிறார்கள்.

கே. கீழடியில் மனிதர்களின் எலும்புகள் ஏதும் கிடைக்கவில்லை..

ப. கீழடியில் கிடைக்காது. கொந்தகையில் கிடைக்கும். கீழடிக்கான புதைமேடு கொந்தகைதான். இப்போதுதான் அகரம், கீழடி, கொந்தகை என தனித்தனி ஊர்களாக இருக்கின்றன. அந்த காலகட்டத்தில் எல்லாம் ஒன்றாகத்தான் இருந்திருக்கின்றன. அதன் முக்கியமான மேடு, கீழடிதான். அன்றைக்கு கீழடியும் கொந்தகையும் என்ன பெயரில் அழைக்கப்பட்டன என்பது யாருக்கும் தெரியாது.

கே. கீழடியில் எவ்விதமான உணவுப் பழக்கம் இருந்திருக்கக்கூடும்?

ப. பிரதான உணவாக அரிசி இருந்திருக்கலாம். பல பானை ஓடுகளில் நெல்லின் உருவம் பொதியப்பட்டிருக்கிறது.

கே. கீழடிதான் பழைய மதுரையா அல்லது மதுரையின் நீட்சியா?

ப. இருக்கலாம். மதுரையில் இதுவரையில் ஆய்வு நடக்கவில்லை. மதுரையின் பழமை ஆராயப்படவில்லை. மதுரை எப்போது உருவானதென்பது யாருக்கும் தெரியாது. இன்றுள்ள மதுரை பழைய மதுரையா என்பது யாருக்கும் தெரியாது. தற்போதுள்ள மதுரை நகரில் தொடர்ச்சியாக மக்கள் வாழ்ந்துள்ளனர். ஆகவே கீழேயுள்ள பகுதி சேதமடைந்திருக்கும். அதில் ஆய்வுசெய்ய முடியாது. கைவிடப்பட்ட பகுதிகளில்தான் ஆய்வுகளை நடத்த முடியும்.

மதுரையில் ஒரே ஒரு இடத்தில் அகழாய்வு செய்யும் வாய்ப்பு இருந்தது. அதாவது, பழைய சென்ட்ரல் மார்க்கெட் இருந்த இடத்தில் தோண்டிப் பார்த்திருந்தால் ஏதாவது கிடைத்திருக்கலாம். ஆனால், அந்த வாய்ப்பும் போய்விட்டது.

கே. நீங்கள் கீழடியில் செய்த ஆய்வின் முடிவுகள் எப்போது வெளியாகும்?

ப. நான் மேற்கொண்ட ஆய்வின் இடைக்கால அறிக்கையைக் கொடுத்துவிட்டேன். முழு அறிக்கைக்காக பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன. அதற்கு பல ஆய்வுகளைச் செய்ய வேண்டும். இதற்கான அறிஞர்கள் தேவை. இதையெல்லாம் முடிக்க நாட்களாகும்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard