அசோகர் காலத்தில் 300 BCE அளவில் இந்தியா முழுதும் தொல்லியல் நிபுணர்களால் பிராமி என்றழைக்கப்பெறும் எழுத்துக்களில் பல்வேறு ஸ்தூபிகள், கல்வெட்டுகள் உருவாகின்றன. இந்தியா முழுதும் பிராகிருத மொழியினை பிராமி எழுத்துக்களிலியே அசோகர் கல்வெட்டுகளில் பொறிக்கிறார். அந்த பிராமியே பல்வேறு பிரதேச வேறுபடுகளால், திரிந்து, பல்வேறு உருபெற்று நவீன இந்திய எழுத்துமுறைகள் உருவாகின. அசோகரின் பிராமி எழுத்துமுறை அரமேய எழுத்துமுறையின் தாக்கத்தில் உருவானது என்று பொதுவாக கருதப்படுகிறது.
சங்க காலத்திலேயே ஜைன மதமும் பௌத்த மதமும் தமிழகத்தில் ஸ்தாபிக்கப்பட்டு, நிலைபெற்றுவிட்டன. இவ்விரு மதங்களுள் தமிழகத்தில் முதலில் ஸ்தாபனம் செய்யப்பட்ட்து ஜைன மதமாகத்தான் இருக்க வேண்டும். (சமண [ < சிரமண ] என்பது பௌத்த-ஜைன மதங்களை ஒன்றுசேர குறிக்கூடிய சொல், தமிழகத்தில் ஜைன சமயத்தை மட்டும் குறிப்பதில் இருந்தே, சிரமண சமயங்களில், முதலில் நுழைந்த்து ஜைன சமயம் என்று யூகிக்கலாம்).
அவ்வாறு ஜைன சமயத்தை வடநாட்டில் இருந்து தமிழகத்தில் ஸ்தாபனம் செய்யவந்த ஜைன முனிவர்களும் ஆச்சாரியர்களும் வடநாட்டில் வழக்கில் இருந்து பிராமி எழுத்துமுறையை தமிழகத்துக்கு கொண்டு வந்ததாக கருதப்படுகின்றது. ஜைனர்களும் பௌத்தர்களும் பொதுவாகவே மக்கள் மொழியில் போதிப்பவர்கள். எனவே, தமிழில் தங்களுடைய போதனைகளை வெளிப்படுத்த வேண்டி, பிராமியை தமிழுக்கு கொண்டுவந்திருக்க வேண்டும். ஆரம்ப கால தமிழ் பிராமி கல்வெட்டுகள் பெரும்பாலும் ஜைன முனிவர்களின் குகைகளில் காணப்படுவது இக்கருத்துக்கும் வலுசேர்ப்பதாக உள்ளது.
தமிழ் பிராமி
அவ்வாறு அவர்கள் கொண்டு வந்த பிராமி எழுத்துமுறை தமிழுக்குரியதாக இல்லை. பிராகிருதத்தின் ஒலியியலும் தமிழின் ஒலியியலும் வேறானவை. தமிழில் கூட்டெழுத்துக்கள் அதிகம் கிடையாது, சொல்லிறுதி தனிமெய்களும் அதிகம். பிராகிருத்ததில் மகரத்தை தவிர்த்து வேறு சொல்லிறுதி மெய்கள் வருவதில்லை. அதனால் அசோக பிராமியில் தனி மெய்யினை (க், ங் முதலியவை) குறிக்க இயலாது, மெய்யெழுத்துக்கூட்டுகளை வேண்டுமென்றால் கூட்டெழுத்துக்களாக எழுத இயலும் (உதாரணமாக, க்ய, க்த ஆகியவற்றை எழுதலாம், ஆனால் க் என்ற தனி மெய்யை எழுத முடியாது) . எனவே, பிராமியை தமிழுக்கு ஏற்றார்போல் செய்ய பல்வேறு முயற்சிகள் நிகழ்ந்தன.
பிராகிருதத்தில் இல்லாத தமிழுக்குரிய ற,ழ,ன,ள முதலிய எழுத்துக்களுக்கு வடிவங்கள் உருவாக்கப்பட்டன. டகரத்தை உருமாற்றி றகரமும் (அக்காலத்தில் றகரம் டகரம் போல் உச்சரிக்கப்பட்டது), நகரத்திலிருந்து னகரமும், லகரத்திலிருந்து ளகரமும், ட³(d)கரத்தில் இருந்து ழகரமும் உருவாக்கப்படடன. எ, ஒ என்ற குறில் எழுத்துக்களை ஏகார, ஓகார எழுத்துக்களின் மீது புள்ளியினை வைத்து உருவாக்கினர். [பிராகிருதத்தில் எ, ஒ கிடையாது] (தமிழில் எ, ஒ’விற்கு புள்ளி வழக்கம் வீரமாமுனிவர் காலம் வரை நீடித்தது) தமிழில் இல்லாத வர்க்க எழுத்துக்கள் பொதுவாக கைவிடப்பட்டன. அசோக பிராமியின் கூட்டெழுத்து முறையும் கைவிடப்பட்டது.
தமிழ் பிராமி மூன்று கட்டங்களை உடையாதாக அறியப்படுகிறது, முற்கால தமிழ் பிராமியில், எழுத்தில் உள்ளார்ந்த அகரம் கிடையாது. ஆகார’க்குறி அகரம், ஆகாரம் இரண்டையும் குறித்த்து. இடைக்கால தமிழ் பிராமியில், ஆகாரக்குறி நிலை பெற்றது. அனால், ஒரு எழுத்து மெய்யா, அல்லது அகர உயிர்மெய்யா என்ற தெளிவு இருக்காது. பிற்கால தமிழ் பிராமியில் மெய்யெழுத்துக்களையும் (மற்றும் எகர ஒகரங்களையும்) குறிக்க புள்ளி உருவாக்கப்பட்ட்து
அதாவது, ”நிகழ்காலம்” என்ற சொல் பின்வாறாக எழுதப்பட்டிருக்கும்:
முற்கால முறை : நிகாழகாலாம
இடைக்கால முறை : நிகழகாலம
பிற்கால முறை : நிகழ்காலம்
300 – 400 CE வரை தமிழ் பிராமியில் எழுதப்பட்டு வந்தது,
தொல்காப்பியம் புள்ளியை எகர ஒகரங்களுக்கும் மெய்யெழுத்துக்களுக்கும் குறிப்பிடுவதில் இருந்து, தொல்காப்பிய காலத்தில் புள்ளி வழக்கில் வந்திருக்க வேண்டும்.
குகைக் கல்வெட்டுகளின் மொழி தமிழ். ஆனால் அம்மொழியை எழுதப் பயன்படுத்திய எழுத்தோபிராமிவடிவம் ஆகும். இதனால் இவற்றைப்பிராமிக் கல்வெட்டுகள்என்றும் அழைத்தனர். பிராமி என்பது கி.மு. நான்காம் நூற்றாண்டு முதல் கி.மு. முதலாம் நூற்றாண்டு வரை இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் பேசப்பட்ட பல்வேறு மொழிகளை எழுதுவதற்குப் பயன்படுத்தப்பட்ட எழுத்து வடிவம் என்று கூறப்படுகிறது. இக்கால கட்டத்தில் இந்தியா முழுவதிலும் தோன்றியுள்ள கல்வெட்டுகளின் எழுத்து வடிவம் ஒன்று போல் உள்ளது. வட இந்தியாவில் அசோகர் காலத்தில் எழுதப்பட்ட பிராகிருதம் மற்றும் பாலி மொழிக் கல்வெட்டுகள், தமிழ்நாட்டுக் குகைகளில் உள்ள தமிழ்க் கல்வெட்டுகள், ஆந்திராவில் குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த பட்டிப் புரோலு என்னும் இடத்தில் புத்தபிரானின் புனித எலும்பு வைக்கப்பட்டுள்ள கற்பேழை மீது உள்ள கல்வெட்டு, அண்டை நாடான இலங்கையில் உள்ள சிங்களக் கல்வெட்டுகள் முதலிய அனைத்தும் ஏறத்தாழ ஒரே எழுத்து வடிவில் எழுதப்பட்டுள்ளன. இந்த எழுத்து வடிவே பிராமி என்று சொல்லப்படுகிறது.
குகைக் கல்வெட்டுகளை உருவாக்கிய சமண, பௌத்த துறவிகளின் தாய்மொழி முறையே பிராகிருதமும் பாலியுமாம். இம்மொழிகளின் எழுத்து பிராமியாக இருந்தது. எனவே சமயம் பரப்ப வந்த இத்துறவிகள் தமிழ்மொழி வழியாகச் சமயம் பரப்பும்போது பிராமி எழுத்துகளைத் தமிழகத்தில் பயன்படுத்தினர். இதனால் குகைக் கல்வெட்டுத் தமிழும் பிராமி வடிவில் எழுதப்பட்டது என்று கூறுவர்.