சங்கத் தமிழ் இலக்கிய நூல்களில் பகவத் கீதையின் கருத்துக்கள் மிகவும் பரவலாகக் காணப்படுகிறது. மேலும் இவைகளை சம்ஸ்கிருதம் கற்று, பகவத் கீதையை நன்கு படித்து, மனதில் ஏற்றி வாய்ப்பு கிடக்கும் போதெல்லாம் பாடியுள்ளனர் என்றே சொல்லவேண்டியுள்ளது.
கீதையின் கருத்துக்கள் திருக்குறளில் எண்ணற்ற இடங்களில் வருவதை கணக்கற்ற தமிழ் அறிஞர்கள் எழுதிவிட்டார்கள். ஆனால் சங்கத் தமிழ் நூல்களை அவர்கள் மேற்கோள் காட்டவில்லை.
பத்ரம், புஷ்பம், பலம் ,தோயம்………
கீதையில் கண்ணன் கூறுகிறான்: எவன் எனக்கு பக்தியுடன் பச்சிலையோ பூவோ, பழமோ, நீரோ கொடுக்கிறானோ அதை நான் சாப்பிடுகிறேன்(9-26)
கபிலர் (புறம் 106); நல்லவும் தீயவும் அல்ல குவி இணர்ப்
புல் இலை எருக்கம் ஆயினும்,உடையவை
கடவுள் பேணேம் என்னா; ஆங்கு,
மடவர் மெல்லியர் செல்லினும்
கடவன் பாரி கை வண்மையே
அதாவது நல்லதாயினும் தீயதாயினும் அல்லாத, குவிந்த பூங்கொத்தும் புல்லிய இலையும் உடைய எருக்கம் பூவாயினும், ஒருவன் உள்ளன்புடன் சூட்டினால் அதனைத் தெய்வங்கள் விரும்பி ஏற்குமேயன்றி, யாம் அவற்றை விரும்பேம் என்று கூறா…………..
இது கீதையின் தூய மொழிபெயர்ப்பு!! இதில் மேலும் இரண்டு விஷயங்களும் உள்ளன. கபிலர் என்பது பிள்ளையாரின் மற்றொரு பெயர். பிள்ளையாருக்குப் பிடித்தது எருக்கம் பூ. சங்க காலத்தில் விநாயகர் வழிபாடு பெரிய அளவுக்கு நடைபெறவில்லை. ஆயினும் கபிலர் விநாயகரை நினைத்தே பாடினாரோ?
மற்றொரு விஷயம் “நல்லவும் தீயவும்”– இதை வட மொழியில் “த்வந்த்வம்”(இரட்டைகள்) என்று சொல்லுவர். கீதை முழுவதும் இது போல நூற்றுக் கணக்காண “இரட்டைகளை”க் காணலாம். நல்லவர்களைக் காக்கவும் தீயவர்களை அழிக்கவும் யுகம் தோறும் அவதரிப்பேன், மற்றும் சுக,துக்க, சீத உஷ்ண—இப்படி கீதை முழுவதும் இரட்டைகள் வரும். கபிலரின் பாடல் கீதையின் மொழிபெயர்ப்பு என்பதற்கு இந்த த்வந்த்வங்களும் சான்று. இதோ மேலும் ஒரு எடுத்துக் காட்டு:
அகம் 327: இன்பமும் இடும்பையும், புணர்வும் பிரிவும்
நன் பகல் அமையமும் இரவும் போல (பாகை சாத்தன் பூதனார்)
அறம், பொருள், இன்பம்
வள்ளுவரும், தொல்காப்பியரும் (சூத்திரம் 1038), புறநானூற்றுப் புலவர்களும் வடமொழியைக் கரைத்துக் குடித்தவர்கள்!! வேத, இதிஹாச, புராணங்களில் வரக்கூடிய “தானம் தவம்” என்ற சொற்களை அப்படியே கொஞ்சமும் கூசாமல் வடமொழியிலேயே பாடல்களில் பயன்படுத்துகின்றனர். இதே போல தர்ம, அர்த்த, காம, மோக்ஷ என்பதையும் வரிசை மாறாமல் அப்படியே பயன்படுத்துகின்றனர். இதில் வள்ளுவர் எல்லோரையும் மிஞ்சிவிட்டார்.முப்பால் என்பதே அறம்,பொருள் இன்பம் (தர்மார்த்தகாம).
கண்ணன் கீதையில் தர்ம (அறம்),அர்த்த (பொருள்), காம (இன்பம்) கூறிய இடங்கள்:18-34.
புறநானூற்றில் 28,31அகநானூற்றில்155,திருக்குறளில் 501,754,760.
“அதனால் அறனும்,பொருளும் இன்பமும் மூன்றும்
ஆற்றும் பெரும நின் செல்வம்;
ஆற்றாமை நிற் போற்றாமையே” (புறம் 28, முதுகண்ணன் சாத்தனார்)
“சிறப்புடை மரபின் பொருளும் இன்பமும்
அறத்து வழிப்படூஉம் தோற்றம் போல” (புறம் 31, கோவுர் கிழார்)
மேலும் சில :தொல்காப்பியம் 1038,,கலி.141,திருவள்ளுவ மாலையில் 5 இடங்கள்.
உ.வே.சாமிநாத அய்யர் புறநானூறு பாடல் முறை வைப்பு அறம்,பொருள்,இன்பம் என்ற தலைப்பில் பகுகப்பட்டுள்ளதாக்க் கருதுகிறார். ஒரு நூல் பிரதியில் அறநிலை என்ற குறிப்பு இருந்ததை வைத்து இன் நூல் அற நிலை, பொருள் நிலை,இன்ப நிலை என முப்பெரும் பகுத்யுடையதாக ஊகிக்கலாம் என உ.வே சாமிநதைய்யர் குறித்துள்ளார். (பாகம் 4, புறநானூறு, எஸ்.ராஜம் வெளியீடு)
தானம், தவம்
கண்ணன் கீதையில் 9-27, 10-5,11-48,11-53,16-1,17-7,17-24,17-27,18-3,18-5
புறநானூற்றில் 358 (வால்மீகியார்),362 (சிறு வெண்டேரையார்)-சுவர்க்கம் செல்ல தானம்
திருக்குறளில் தானம், தவம்;19, 295
கீதோபதேசம்
வல்லார் ஆயினும் வல்லுநர் ஆயினும்
புகழ்தல் உற்றோர்க்கு மாயொன் அன்ன
உரைசால் சிறப்பின் புகழ்சார் மாற! (புறம் 57, காவிரிப் பூம்பட்ட்ணத்து காரிக்கண்ணனார்)
இந்த வரிகள் பகவத் கீதை உபதேசம் செய்ததைக் குறிப்பதாகப் பல பெரியோர்கள் உரை எழுதியுள்ளனர். இதன் பொருள்: வல்லவர் ஆனாலும் அல்லாதவர் ஆனாலும் நின்னைப் புகழ்ந்து போற்றீயவர்க்கு மாயோனைப் போல துணை நின்று அருளிக் காக்கும் புகழ் அமைந்தவனே மாறனே….
பரித்ராணாய சாதூனாம்…….
கீதையில் கண்ணன் கூறுகிறான்(4-8): நல்லோரைக் காப்பதற்கும் தீயோரை அழித்தற்கும் யூகம் தோறும் அவதரிப்பேன்
கொடியோர்த் தெறுதலும், செவ்வியோர்க்கு அளித்தலும்
(புறம் 29, முதுகண்ணன் சாத்தனார்), குறள் 264, 550
நாடகமே உலகம்
கீதையில் கண்ணன் கூறுகிறான் (18-61):இயந்திரத்தில் ஏற்றிவைக்கப்பட்ட பொம்மைகள் போல எல்லாப் பிராணிகளையும் கடவுள் ஆட்டிவைக்கிறான்.
இதையே முதுகண்ணன் சாத்தனாரும் கூறுகிறார்: விழாவிலே ஆடும் கூத்தரைப் போல வகை வகையாக ஆடிக் கழிவதுதான் இவ்வுலக வாழ்வு. நாடகமே உலகம் என்பதை ஷேக்ஸ்பியரும் மாக்பெத் நாடகத்தில் கூறுகிறார்.
கோடியர் நீர்மை போல முறை முறை
ஆடுநர் கழியும் இவ்வுலகத்து, கூடிய
நகைப்புறன் ஆக நின் சுற்றம்! (புறம் 29, முதுகண்ணன் சாத்தனார்)
கீதை 18-61,குறள் 332,விவேக சூடாமணி 292
க்லைப்யம் மஸ்மகம (பேடித்தனத்தை கைவிடு)
கீதையில் கண்ணன் கூறுகிறான்(2-3): எதிரிகளை எரிப்பவனே,அர்ஜுனா! பேடித்தனத்தைக் கை விடு. உன்னிடத்தில் இது சிறிதும் பொருந்தாது.
இதற்கு முந்திய ஸ்லோகத்தில் வானவர் நாட்டிற்கான வழியை அடைக்கும் பழிக்கிடமான மனக் குழப்பம் உனக்கு எப்படி வந்தது? என்று கேட்கிறான் கண்ணன்.
அறவை ஆயின், நினது எனத் திறத்தல்
மறவை ஆயின் போரொடு திறத்தல்
அறவையும் மறவையும் அல்லையாகத்
திறவாது அடைத்த திண்ணிலைக் கதவின்
நீள்மதில் ஒருசிறை ஒடுங்குதல்
நாணுத்தக வுடைத்திது காணுங் காலே (புறம் 44, கோவுர் கிழார்)
கோவூர் கிழாரும் கண்ணன் கூறியதையே கூறுகிறார்: அறத்தை உடையவனாக இருந்தால் இது உன் கோட்டைதான் என்று திறந்து விடு. வீரம் உடையவனாக இருந்தால் போர் செய்வதற்காக கதவைத் திறந்து வெளியே வா. இரண்டும் செய்யாது மதிற்கதவுகளை அடைத்து உள்ளே உட்கார்ந்து இருப்பது வெட்கக் கேடு.
விஸ்வரூபதரிசனம்
கீதை 17-19 சந்திரனும் சூரியனும் கண்கள், ஆதியந்தம் இல்லாதவன்
புறம் 365 (மார்க்கண்டேயனார்):
மயங்கு இருங் கவிய விசும்பு முகன் ஆக
இயங்கிய இரு சுடர் கண் என, பெயரிய
வளி இடை வழங்கா வழக்கு அரு நீத்தம்”
பொருள்:வானமே முகம், சூரியன் சந்திரன் இரு கண்கள், காற்று எங்கும் நிலவும் பூமி என்னும் பெண்……………..
நல்லவர் எவ்வழி
கீதையில் கண்ணன் கூறுகிறான்(3-21): பெரியோர்கள் எதை எதை பின்பற்றுகிறார்களோ அதையே ஏனைய மக்களும் பின்பற்றுகின்றனர்.
புறம்: 186(மோசிகீரனார்), 187(அவ்வையார்)
மன்னன் உயிர்த்தே மலர்தல உலகம் (186)
எவ்வழி நல்லவர் ஆடவர்,
அவ்வழி நல்லை: வாழிய நிலனே (187)
ஆடவர் (மக்கள் )நல்லவராக இருந்தால் நிலனும் நல்ல பலன் தரும்.
நாலவரை எல்லொரும் பின்பற்றி உழைக்க நிலன் பலன் தரும் தானே.
மேலும் சில: குறள் 544, தம்ம பதம் 98, மனு 7-44
பழமொழிகள்: யத்ர கிருஷ்ண, தத்ர ஜய:, ராமன் இருக்கும் இடம் அயோத்தி, யதா ராஜா ததா ப்ரஜ:, As is the king so is the subject.
போரில் இறந்தால் சொர்க்கம்
கீதையில் கண்ணன் கூறுகிறான்(2-37): கொல்லப் பட்டாலோ சுவர்க்கத்தை அடைவாய். வெற்றி பெற்றாலோ பூமியை ஆள்வாய். போருக்கு துணிந்து எழுந்திரு. மேலும் சில-கீதை 2-2, 2-32
புறம் 62-ல் கழாத்தலையார் இதே கருதைக் கூறுகிறார்:
வாடாப் பூவின்,இமையா நாட்டத்து,
நாற்ற உணவினோரும் ஆற்ற
அரும் பெறல் உலகம் நிறைய
விருந்து பெற்றனரால்;பொலிக நும் புகழே
மேலும் சில: புறம் 27,93,287,341,362,பதிற்.52