New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திருவள்ளுவரின் சமயக் கொள்கை (T.C.S.ராமச்சங்குப் பாண்டியன்)


Guru

Status: Offline
Posts: 24765
Date:
திருவள்ளுவரின் சமயக் கொள்கை (T.C.S.ராமச்சங்குப் பாண்டியன்)
Permalink  
 


சிவமயம்

திருச்சிற்றம்பலம்

 

திருவள்ளுவரின் சமயக் கொள்கை

 

(T.C.S.ராமச்சங்குப் பாண்டியன்)

 

 

திருவள்ளுவரை ஒவ்வொரு சமயத்தவரும் தத்தம் சமயத்தைச் சேர்ந்தவராகக் கூறுகின்றனர்.

 

"மலர்மிசை ஏகினான்" என்பது பற்றிப் புத்தனைக் குறிக்கும் என்று பெளத்தரும், அருகனைக் குறிக்கும் என்று சமணரும் கூறுவர். மேலும் சமணர் எண்குணத்தான் என்புழி எட்டுக் குணங்களும் அருகனுக்குரிய கடையிலாவறிவு, கடையிலார் காட்சி, கடையிலா வீரியம், கடையிலா வின்பம், நாமமின்மை, கோத்திரமின்மை, ஆயுவின்மை, அழியாவியல்பு என்பனவேயாகும் என்பர். சமணர் உலகம் நித்தியம் என்னும் கொள்கையர். "மூவா முதலா உலகம் ஒரு மூன்றும்" என்பது அவர் கொள்கை.

ஆயின் வள்ளுவர் உலகமும் அழிவதே என்னுங் கொள்கையர் அதனை "ஒறுத்தார்க்குகாருநாளை யின்பம் பொறுத்தார்க்குப்

பொன்றுந் துணையும் புகழ்" (156) என்றார்.

எனவே உலகம் அழியும்வரை நிற்பது புகழ் என்பது பெறப்படும்.

ஈண்டுப் "பொன்றுந் துணையும் புகழ்" என்று மட்டுமே கூறியதால் உலகம் பொன்றுந் துணையும் புகழ் எனக் கொண்டால் என்னை? எனின்; உடம்பு உள்ளளவும் உள்ளது ஒளி (உபசாரம்) எனவும், உடம்பு அழிந்த பின்னரும் நிற்பதே புகழ் என்பதே மரபு. நாலடியாருள்,

 

"உண்ணான் ஒளிநிறான் ஓங்குபுகழ் செய்யான்

துன்னருங் கேளிர்துயர் களையான் - கொன்னே

வழங்கான் பொருள்காத் திருப்பானேல் ஆஅ

இழந்தா னென்றெண்ணப் படும்"

 

என்று ஒளி இறக்கு மட்டும் நிற்பது என்றும் புகழ் இறந்தபின் வருவது என்றும் கொள்ளப்பட்டது பெறப்படும். அம்முறையே வள்ளுவரும், ஒளியொருவற் குள்ள வெறுக்கை யிளியொருவற்

 

கஃதிறந்து வாழ்து மெனல் (971) என்றும்

நிலவரை நீழ்புக ழாற்றுற் புலவரைப்

 

போற்றாது புத்தே னாலகு (234)

என்றும்

கூறுமாற்றான் ஒளி என்பதற்கும் புகழ் என்பதற்கும் உள்ள பொருள் வேறுபாட்டை மரபுப்படி கொண்டு பாடியுள்ளார் என்பது பெறப்படும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
RE: திருவள்ளுவரின் சமயக் கொள்கை (T.C.S.ராமச்சங்குப் பாண்டியன்)
Permalink  
 


எனவே "பொன்றுந் துணையும் புகழ்" என்பதற்கு உலகம் அழியும் வரை நிற்பது புகழ் எனக் கொள்ள வேண்டும். அங்ஙனமாக உலகத்தின் நிலையாமையை உடன்பட்டவர் என்பது பெறப்படும். அவ்வாறு கொண்டது "மூவாமுதலாவுலகம்" என்ற சமணக் கொள்கையை மறுக்குமாகலின் சமணர் ஆகார் என்பது பெறப்படும்.

 

பெளத்தருள் மாத்தியமிகர் எல்லாஞ் சூனியம் என்பவர். யோகாசாரர் புறப்பொருள் சூனியம் என்பர். செளந்திராந்திகரும் வைபாடிகரும் நான்கு புதங்களை மட்டுமே உடன்படுவர். ஆயின் வள்ளுவர்

 

"சுவையொளி யூறோசை நாற்றமென் றைந்தின்

வகைதெரிவான் கட்டே யுலகு" (27) என்று

 

ஐம்பூதங்களையும் உடன்படுதலால் பெளத்தரும் ஆகார் என்பது பெறப்படும்.

 

ஏகான்மவாதிகள் பரப்பிமத்தோடு கூடுதலே - அஃதாவது குடம் உடைந்தவழிக் குடாகாயமும் மகாகாயமும் கூடுமாறு போலக் கூடுதலே - முத்தி என்பர். ஆயின் வள்ளுவர், "நற்றாள் தொழாஅர்" (2) என்றும் "மாணடி சேர்ந்தார்" (3) "வேண்டுதல் வேண்டாமையிலானடி சேர்ந்தார்" (4); "தனக்குவமை யில்லாதான் தாள் சேர்ந்தார்" (7) "அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்" (8), "எண்குணத்தான் தாளை வணங்காத் தலை (9), "இறைவனடி சேராதார்" (10) என்றும் அடி சேர்தலையே முத்தி எனக் கொள்கின்றார். பரப்பிரமத்திற்கு அடி முதலிய உறுப்புக்கள் இல்லாததால் ஏகான்மவாதியும் ஆகார் என்பது பெறப்படும். மேலும் "வகுத்தான் வகையல்லால்" (377) என்றும் "பற்றுக பற்றற்றான் பற்றினை" (350) என்றும் கடவுளும் உயிர்களும் வெவ்வேறு என்னும் கொள்கையர் என்பதால் ஏகான்மவாதியில்லை என்பது வலியுறுத்தப்படும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
Permalink  
 

 இனி வள்ளுவரை வைணவர் எனலாமோ எனின் அதுவும் பொருந்தாது. ஏனெனில் வைணவ ஆகமங்களில் விண்டுவிற்கு எட்டுக் குணங்கள் கூறப்படவில்லை. அன்றியும் வள்ளுவர் காமத்துப் பாலில் புணர்ச்சி மகிழ்தல் என்னும் அதிகாரத்துள்

 

தாழ்வீழ்வார் மென்றோட் டுயிலினிது கொள்

தாமரைக் கண்ணா னுலகு (1103)

 

என்று வைகுண்டத்தைக் காட்டிலும் மொன்றொட்டுயில் இனிது என்று கூறுமாற்றான் வைகுண்டத்தைத் தாழ்த்திக் காட்டினார். வைணவராயின் அவ்வாறு கூறியிருக்கமாட்டார். எனவே வள்ளுவர் வைணவராகார் என்பது பெறப்படும்.

 

இனி எண்குணம் என்பதை அணிமாவை முதலாக வுடையன வெனவும் உரைபாருமுளர் என்று பரிமேலழகர் காட்டியுள்ளார். அணிமா முதலிய எட்டாவன:- அணிமா, மகிமா, கரிமா, லகிமா, பிராப்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம் என்பன. அணிமா முதலியன மக்களாலும் முயன்று பெறப்படுதலின் குணமாக முடியாது. ஏனெனில் குணமாவது குணியோடு ஒற்றித்து. நிற்பதாகலின் அவ்வாறு ஒற்றித்து நில்லாது முயன்று பெறப்படும் சித்தியாகலின் அவற்றைக் குணமெனக் கொள்ள இயலாது.



__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
Permalink  
 

 

  • ArumugaNavalar
  • கருத்துக்கள உறவுகள்
  •  23
  • 1,373 posts
  • Gender:Male

எனவே பரிமேலழகர் "இவ்வாறு சைவாகமத்திற் கூறப்பட்டது" என்றார். எண்குணங்களாவன;_

 

1. தன்வயத்தனாதல் - சுவதந்திரத்துவம்

2. தூயஉடம்பினனாதல் - விசுத்ததேகம்

3. இயற்கை உணர்வினனாதல் - நிராமயான்மா

4. முற்றுமுணர்தல் - சருவஞ்ஞத்துவம்

5. இயல்பாகவே பாசங்களினீங்குதல் - அனாதிபோதம்

6. பேரருளுடைமை - அலுப்த சத்தி

7. முடிவிலாற்றலுடைமை - அநந்த சத்தி

8. வரம்பிலின்பமுடைமை - திருப்தி.

 

"எட்டுவான் குணத் தீசனெம் மானை" என்று திருநாவுக்கரசரும், "இரும்புயர்ந்த மூவிலைய சூலத்தினானை யிறையவனை மறையவனை எண்குணத்தினானை" என்று சுந்தரமூர்த்தி சுவாமிகளும் அருளிச் செய்தவாற்றானும் "இறைவனுக்கு எண்குணமுண்மை சிவாகம நூற்றுணி வென்றறிக" என்று நாவலர் கூறுமாற்றானும் அறியப் படும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
Permalink  
 

சைவாகமத்திற் கூறப்பட்டது என்னுமாற்றான், ஒரு நூலை முன்னிட்டு கொள்ள வேண்டும் என்னுங் கொள்கையர் என்பது "சாதலறாய் கூறுமாக்கந்தரும்" (83) என்றும் "நூலோர் தொகுத்தவற்றாள் எல்லாந் தலை" (322) என்றும் கூறுமாற்றான் அறியப்படும். ஆயின் எண்குணம் என்புழி எந்நூலை முன்னிட்டுக் கூற வேண்டும்? "பொறிவாயிலைந்தவித்தான் பொய்தீ ரொழுக்க நெறி" என்றும் அந்நெறி நின்றார். "நீடுவாழ்வார்" என்றும் வள்ளுவர் கூறுகின்றார்.

 

"கற்க கசடறக் கற்பவை கற்றபின்

` நிற்க அதற்குத் தக" (391)

 

என்றும் கூறுகின்றார். நிற்க என்ற தனால் ஒழுகு தலையும் கற்க என்றதனால் நூலையும் குறிக்கும் என்பது அறியப்படும். எனவே பொய்தீர் ஒழுக்க நெறி என்பது பொறிவாயில் ஐந்துவித்தானான் கூறப்பட்டது என்பது பெறப்படும். அது பற்றியே பரிமேலழகரும் "ஒழுக்கநெறி ஐந்த வித்தாறாற் சொல்லப்பட்டமையின் ஆண்டை யாறனுருபு செய்யுட் கிழமைக்கண் வந்தது" என்றார். அவ்வாறு ஒழுக்கநெறிக்கண் நின்றார். நீடுவாழ்வார் என்று சாதனமும் பயனும் கூறப்பட்டமையின் ஒழுக்க நெறி என்பது நூலையே குறித்து வற்புறுத்தும் என்பது பெறப்பட்டது. எனவே அந்நூலுள் மேற்கண்ட எண்குணமும் கூறப்பட்டிருத்தல் வேண்டும். அவ்வாறான நூல் சைவாகம் ஆகலின் சைவாகமத்திற் கூறப்பட்டது என்க.

 

மேலும் வள்ளுவர் "நற்றாள்" (2) என்றும் "மாணடி சேர்ந்தார்" (3) என்றும் "வேண்டுதல் வேண்டாமை யிலானடி சேர்ந்தார்" (4) என்றும் "தனக்குவமை யில்லாதான் தாள் சேர்ந்தார்" (7) என்றும் "அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்" (8) என்றும் "எண்குணத்தான் தாளை வணங்காத் தலை" (9) என்றும் "இறைவனடி சேராதார்" (10) என்றும் அடிசேர் முத்தியையே விதந்து கூறினார். அடிசேர் முத்தி சைவ சித்தாந்தத்திற்கே ஏற்புடையதாகலின் அதனானும் வள்ளுவர் சைவ சித்தாந்தி என்பது பெறப்படும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
Permalink  
 

 ஆயினும் அவரைச் சைவர் என்பதைச் சகித்துக்கொள்ள இயலாதார் தற்போது ஒரு புதுக் கொள்கையைப் புகுத்துகின்றனர். முதல் எட்டுக் குறளில் கூறப்பட்ட ஆதிபகவன், வாலறிவன், மலர்மிசை ஏகினான், வேண்டுதல் வேண்டாமையிலான், இறைவன், பொறிவாயிலைந்தவித்தான், தனக்குவமையில்லாதான், அறவாழி யந்தணன் என்பனவே, ஒன்பதாவது குறளில் கூறப்பட்ட எண்குணங்களாகும் என்பர். ஆயின் அவர் அதிகாரத் தலைப்பாகக் கூறப்பட்ட கடவுள் என்பது ஒரு குணமாகலின் அதனைக் காணாததுபோல் விட்டனர். அதனைக் கூட்டினால் குணம் ஒன்பதாகுமாகலின் விட்டனர் போலும். அவ்வாறு மறைந்து குன்றக் கூறலாகுமே என்பதை மறந்தனர்.

 

மேலும் பொய்தீர் ஒழுக்க நெறி என்பது பொறி வாயிலைந்தவித்தானாற் சொல்லப்பட்டது என்பதை மறந்தனர். அந்த ஒழுக்க நெறி நின்றாரே. நீடுவாழ்வார் என்று கூறியதையும் மறந்தனர். எனவே பொய்தீர் ஒழுக்க நெறியுட் கூறப்பட்ட எண்குணங்களே கொள்ளப் படுவதென்பதையும் மறந்தனர். எனவே ஒன்பது குணங்களை எட்டாக வெட்டி இழுக்கப்பட்டனர். அதனானும் அவர் சைவர் என்பதே வலியுறுத்தப்படும்.

 

ஆயின் கோ.வடிவேலுச் செட்டியார் "இவ்வதிகாரத்தின் 1,2,4,5,7,10 வது எண்ணுள்ள குறள் முதற் கடவுளையும் 3வது எண்ணுள்ள குறள் அயனையும், 6,8 வது எண்ணுள்ள குறள்கள் அரியையும், 9வது குறள் அரனையும் வாழ்த்துதலாம்" என்று கூறியுள்ளாரே எனிற் காணலாம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
Permalink  
 

பரிமேலழகர் முதற்குறளின் இறுதியில் "முதற்கடவுளதுண்மை கூறப்பட்டது" என்றபின் அதனைத் தொடர்ந்து வரும் மற்றக் குறட்பாக்களும் முதற்கடவுளைப் பற்றியே கூறுவதாகத்தான் அமையும். அது பற்றியே பரிமேலழகர் 2வது குறளில் "ஆகம வறிவற்குப் பயன் அவன்றாளைத் தொழுது பிறவியறுத்த லென்பது இதனாற் கூறப்பட்டது" என்றும் 6வது குறளுரையில் "இவை மூன்றுபாட்டானும் அவனை நினைத்தலும் வாழ்த்தலும் வணங்கலும் செய்யா வழிப்படுங் குற்றங் கூறப்பட்டது" என்றும் 10 வது குறள் உரையில் "உலகியல்பை நினையாது இறைவனடியையே நினைப்பார்க்குப் பிறவி யறுதலும் அவ்வாறன்றி மாறி நினைப்பார்க்கு அஃதருமையுமாகிய இரண்டும் இதனால் நியமிக்கப்பட்டன என்றும் கூறினார். மேலும் இடையிடையே தொடர்புப் பொருத்தம் இல்லாமல் அயன் அரி அரன் என்பவரையும் வாழ்த்தினார் என்பது பொருந்தாது. மேலும் அவ்வாறு வள்ளுவர் கருதியிருந்தால் அக்கருத்துக்களையும் ஆங்காங்கே பரிமேலழகர் எடுத்துக் காட்டியிருப்பார். மேலும் அயனையும் அரனையும் ஒவ்வொரு செய்யுளானும் அரியை மட்டுமே இருசெய்யுட்களால் வாழ்த்தினார் எனச் செட்டியார் கூறுவது பொருந்தாது. அவ்வாறு கொள்வது அரியை உயர்த்தியும் மற்ற இருவரையும் தாழ்த்திக் கூறுவதாக அமையும், அவ்வாறு வள்ளுவர் செய்யுள் செய்திருக்க முடியாது. எனவே வடிவேல் செட்டியார் வலிந்து பொருள் கூறியது வள்ளுவரின் கருத்துக்கு மாறுபட்டது என்பது பெறப்படும். எனவே வள்ளுவர் சைவசித்தாந்தி என்பது நாட்டப்படும்.

 

திருச்சிற்றம்பலம்



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard