கௌடல்யரால் (கௌடில்யர் என்பது தவறு) இயற்றப்பெற்ற அர்த்த சாஸ்த்ரம் பொயுமு நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இதை பொயு மூன்றாம் நூற்றாண்டு வரை இழுத்த கால நிர்ணயத்தை டி. கணபதி சாஸ்த்ரிகள் தகுந்த ஆதாரங்களுடன் மறுத்துள்ளார். மேலும் கௌடல்யரே அந்த நூலின் அளவு, அத்யாய எண்ணிக்கை, காரிகைகளின் எண்ணிக்கை ஆகியவற்றைச் சரியாகக் குறிப்பிட்டு மேற்கொண்டு பிற்சேர்க்கை இல்லாதிருக்க வழி வகை செய்த பின்னும் அதில் பிற்சேர்க்கையிருப்பதாக வாதிடுவது சரியாகத் தோன்றவில்லை. இந்த அர்த்த சாஸ்த்ர நூலில் பலவகையான கோயில்கள் கூறப்பெற்றிருக்கின்றன. சிவபெருமான், குபேரன், அச்வினி, திருமகள், அபராஜிதா (துர்க்கை), அப்ரதிஹதர் (திருமால்), ஜயந்தன் (முருகன்) வைஜயந்தன் (இந்த்ரன்) என்று பல தெய்வங்களுக்கான கோயில்களை அவர் குறிப்பிடுகிறார். இவை பாணினி முதலிய பண்டைய ஆசிரியர் குறிப்பிடும் தெய்வங்களாக இருக்கும் தன்மையும் இந்த நூலின் பழமையை விளக்குகிறது. இவை மௌர்யர் காலத்திருந்த பல்வேறு கோயில்களைப் பற்றி அறிய சிறந்த கருவிகளாக உள்ளன