தமிழின் மிகச் சிறந்த காப்பியங்களில் தலையாயதான சிலப்பதிகாரத்தையும், அதனுடைய மீளுருவாக்கமாகப் படைக்கப்பட்ட கொற்றவை என்னும் நாவலையும் ஒப்பிட்டுப் பார்க்க விழைந்ததின் வெளிப்பாடே பின்வரும் கருத்துகள். அவ்வாறு ஒப்பிட்டுப் பார்ப்பதன் நோக்கம் ஜெயமோகன் என்னும் எழுத்தாளர், கொற்றவை என்னும் நாவலைப் படைத்த அரசியல் நோக்கத்தைக் கண்டடைய ஒரு தொடக்கநிலை முயற்சி எனக் கொள்ள வேண்டும்.

பனுவல் மீட்டுருவாக்கம்

பனுவல் மீட்டுருவாக்கம் என்பது ஒரு பழம் பனுவலைத் தான் வாழும் காலத்திற்கேற்ப மீளப் படைத்தல் ஆகும். அவ்வாறும் செய்யும் போது மீளப் படைக்கும் படைப்பாளனின் அரசியல் ஆர்வங்கள் அம்மீட்டுருவாக்கத்தில் தவிர்க்க இயலாத வண்ணம் இடம்பெறும். ஒரு சமூகத்தில் உள்ளிணைந்து வாழும் பல்வேறு குழுமங்களின் வாழ்நிலை சார்ந்து பல்வித நலன்களுக்காக அக்குழுமங்களிடையே இடையறாது நடைபெறும் போராட்டத்தை அரசியல் என்கிறோம். ஒரு குறிப்பிட்ட வெளி, காலம் சார்ந்து அமைவுற்று இயங்கும் சமூக அமைப்பினுள் தம் நலன்களுக்காகப் போராடும் குழுமங்களைக் கொண்ட ஒருவிதமான சமூக-பண்பாட்டு- பொருளாதார- அரசியல் கட்டமைப்பும் தொடர்ந்து இயங்கும்.

இந்தியா என்னும் நாம் வாழும் நாடு பல மொழிக் குழுமங்களைக் கொண்டது. அம்மொழிக் குழுமங்கள் மேலும் கீழுமான படிநிலையில் அடுக்கிக் கொள்ளும் பல சாதிகளைக் கொண்ட சமூக அமைப்பு நிலையில் உள்ளன. இச்சாதி அமைப்பு இந்திய அளவில் படிநிலையைப் பேணுதல் என்னுமளவில் ஒத்தத் தன்மையும், படி நிலையில் இடம்பெறும் குழுக்கள், அவற்றின் படி நிலைத் தன்மை, அவற்றின் இயங்குதளமாக அமையும் வாழ்நிலை, பண்பாடு என்னும் பல விசயங்களில் வட்டாரத் தன்மையும் கொண்டியங்குகிறது. இச்சமூக அமைப்பினுள் ஒரு சிக்கலான வர்க்கச் சமூக அமைப்பும் இயங்குகின்றது. இந்தியாவின் உயர்குடிகள் தம் நலன்களுக்காகப் பல மொழிக் குழுமங்களையும் ஒருசேரப் பிணைக்கும் வகையில் Ôஇந்துÕ என்னும் ஒற்றை மதத்தையும், அதன் அடிப்படையில் இந்திய தேசியம் என்ற ஒற்றைத் தேசியத்தையும் 19ஆம் நூற்றாண்டி லிருந்து கட்டமைத்து, பல வாதவிவாதங்களினூடாக வளர்த்தும் வருகின்றனர். இதற்கு எதிராக மொழி சார்ந்த தேசியம் என்பதையும் பன்மைநிலை பண்பாட்டையும்  பேணும் அரசியல் போக்கு ஒன்றும் காணப்படுகின்றது. இவ்வகையானதே திராவிட, பொதுவுடைமை, தமிழ்த் தேசிய, தலித் இயக்கங்களால் முன்னெடுக்கப்படும் அரசியல் ஆகும். இந்த அரசியல் இயக்கங்கள் ஒன்றுடன் ஒன்று முரண்படுவது மட்டுமில்லாமல், ஊடாடியும், வினை புரிந்தும் ஒன்றையன்று பாதித்துக் கொள் கின்றன.  இந்த அரசியல் போக்குகள் நம் அனைத்து அறிவுத் துறைச் செயல்பாடுகளையும், படைப்புச் செயல்பாடு களையும் பாதித்துள்ளன. இந்தத் தொடக்கக் குறிப்பு களைக் கவனத்தில் கொண்டு சிலப்பதிகாரத்தை, கொற்றவை நாவல் எவ்வாறு மீட்டுருவாக்கம் செய்துள்ளது, அதன் அரசியல் என்ன என்பதை விவாதிப்போம்.

சிலப்பதிகாரம்

சிலப்பதிகாரம் தமிழில் உள்ள முதல் காப்பியம். தொடர்நிலை செய்யுள் என்று மரபாக அழைக்கப் படுகின்றது. மூன்று காண்டங்களையும் முப்பது காதைகளையும் உடையது. சிலப்பதிகாரம் அச்சுவாகனம் ஏறிய 1872 தொடங்கி இன்று வரை பண்டைய தமிழ்ப் பண்பாட்டை மீளுருவாக்கம் செய்யும் விவாதத்தில் முக்கிய இடம்பெற்றுள்ளது. சமகால அரசியல் இயக்கங்களான இந்தியத் தேசிய, திராவிட, பொது வுடைமை இயக்கங்கள் தங்கள் கருத்துநிலை விளக்க விவாதத்திலும் இக்காப்பியம் முக்கிய இடம் பிடித் துள்ளது. இக்காப்பியத்தை இயற்றியவர் இளங்கோ வடிகள் என்பதில் தொடங்கி, காலம், காப்பியக் கட்டமைப்பு, கதையின் உண்மைத்தன்மை, புனைவுத் தன்மை தொடர்பான விவாதங்கள் முற்றுப் பெற வில்லை. இளங்கோவடிகள் என்னும் ஒருவரே இக் காப்பியத்தை இயற்றினார் என்னும் கருத்து பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டது. ஆனால் அறிவுலகில் வஞ்சிக் காண்டம் பிற்சேர்க்கை என்ற கருத்து வலுவாக உள்ளது. இக்காப்பியத்தின் காலம் கி.பி. 2ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 11ஆம் நூற்றாண்டு வரை என சர்ச்சை செய்யப் படுகின்றது. இரட்டை காப்பியம் என்று மணிமேகலை யுடன் இணைத்து இக்காப்பியம் போற்றப்படுகின்றது. ஆனால் இவற்றில் எது முதலில் இயற்றப்பட்டது என்ற சர்ச்சையும் தொடர்கின்றது.  வையாபுரிப் பிள்ளை, மணிமேகலைதான் முதலில் இயற்றப்பட்டது என்று வாதாடுகிறார்.

சிலப்பதிகாரம் தொடர்பாக ஆய்வுலகில் எவ்வாறான விவாதங்கள், ஆய்வு முடிவுகளில் கருத்து மோதல்கள் இருந்த போதிலும், 19ஆம், 20ஆம் நூற்றாண்டுகளில் சிலப்பதிகாரத்தை முன்வைத்து தமிழர் பெருமை என்னும் கருத்துருவம் வலுவாகக் கட்டமைக்கப்பட்டது. அது திராவிட, தமிழ்த் தேசிய அரசியலுக்கு வலு சேர்ப்பதாக அமைந்தது. மறுபுறத்தில் தமிழர் பெருமை கருத்துருவத்தை இவ்வியக்கங்கள் வலுவாக்கின. கனக விசயர் முடித்தலை நெறித்து, கல் சுமக்க வைத்து, கண்ணகிக்குக் கோயில் எடுத்த தமிழ் மன்னர் கதையைச் சிலப்பதிகாரம் கூறுவதாக அண்ணாதுரையும்,

ம.பொ. சிவஞானமும் பெருமிதமடைந்தனர். ஆனால் இப்பெருமையை இந்தியத் தேசியத்திற்கு எதிரானதாக அண்ணாதுரை கட்டமைத்தார். ம.பொ.சிவஞானம் தமிழ் பேசும் நிலத்தின் எல்லையை வரையறை செய்யும் வரலாற்றுச் சான்றாகப் பயன்படுத்தினார். அவர் சிலப்பதிகாரத்தின் தமிழ்ப் பெருமையை இந்து/ இந்தியப் பெருமையுடன், பண்பாட்டுடன் இயைபானதாகப் பேசினார். 19ஆம், 20ஆம் நூற்றாண்டுகளில் நடை பெற்ற இவ்வாறான விவாதங்களே சிலப்பதிகாரத்திற்கு முக்கியமான பழம் இலக்கியப் பனுவல் என்ற மதிப்பைப் பெற்றுத் தந்தன. அத்துடன் பொதுமக்களிடையே கருத்துநிலை சார்ந்த கதையாடலை முன்னெடுக்கப் பலவாறு எளிமைப்படுத்திப் பதிப்பித்தல், உரை எழுதுதல் என்பவற்றுடன் பனுவல் மீட்டுருவாக்கம் என்னும் மீள்படைப்பாக்கம் செய்தலும் நிகழ்ந்தது.

கொற்றவை

கொற்றவை, ஜெயமோகன் எழுதிய நாவல். ஜெயமோகன் நன்கறியப்பட்ட புனைவு, இல்-புனைவு எழுத்தாளர். இந்நாவல் 2005 ஆம் ஆண்டில் வெளி யானது. ஜுன் 2012 வரை இரண்டு முறை மீளச்சுகள் வெளியாகி உள்ளன. 598 பக்கங்கள் கொண்ட நாவல். இக்காலத்தில் வெளியாகும் நாவல்களைப் போன்று அளவில் சற்றுப் பெரியது. இந்நாவல் கொற்றவை காப்பியம் என்று பதிப்பு விவரப் பக்கத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது. ஒருவகையில் இது புதுவகை வசனக் காப்பியம் போன்று உள்ளது. நெடிய வருணனைகள் கொண்ட கவிதை மொழி இப்படைப்பு முழுவதும் வருகின்றது. அக்கவிதை மொழியும் பழஞ் செந்தமிழைத் தழுவிய மொழிநடை. அதனால் இன்றைய வாசகர் வாசிப்பில் ஒருவிதத் தடையைச் சந்தித்தாலும், கல்கியின் வரலாற்று நாவல்களில் அவரது மொழிநடை, எப்படி வாசகரை கற்பனை வரலாற்று வெளிகளில் பயணிக்க வைத்துக் களிப்பைத் தந்ததோ அவ்வாறே கொற்றவை ஒரு புதுவகை வசனக் காப்பியம் என உணர்வை அடைய இம்மொழிநடை உதவுகிறது.

கொற்றவை காப்பியம் ஐந்து பகுதிகளாக அமைந்துள்ளது. நீர், காற்று, நிலம், எரி, வான் என ஐந்து பகுதிகளாக அமைந்துள்ளது. இந்த ஐந்து பகுதிகளின் உள்ளமைப்பு வெவ்வேறு வகையில் அமைந்துள்ளது. நிலம் என்னும் பகுதி மட்டும் நெய்தல், மருதம், குறிஞ்சி, பாலை, முல்லை என்னும் ஐந்து உள் பகுதிகளாக அமைந்து குலக்கதை சொன்னது, நீலி சொன்னது என்ற இருவகையான தலைப்புகளின் கீழ் கதை சொல்லப்படுகிறது. மற்ற பகுதிகளில் பழம் பாடல் சொன்னது, பாணர் பாடியது, காப்பியம் பாடியது, உரை வகுத்தது என்ற தலைப்புகளின் கீழ் கதை விவரிக்கப் படுகின்றது.  இவ்வாறு தலைப்புகளின் கீழ் கதை சொல்லப் படுவதற்குக் காரணங்கள் என்னவென்று தெரியவில்லை, பொருத்தப்பாடு எதனையும் உய்த்துணரவும் முடிய வில்லை. புதுவகை காப்பியம் என வாசகர் உணர்ந்து கொள்ள இதுவும் ஒருவகை உத்தி போலும். 

சிலப்பதிகாரத்தின் கதைப்போக்கை கொற்றவையும் தழுவிச் செல்கிறது என்று பொதுவாய் சொல்லி விடலாம். ஆனால் மூன்று முக்கியமான புள்ளிகளில் வேறுபட்டும், கதை நடக்கும் பின்புல வெளிகளில் புதியன புனைந்தும் கொற்றவை வேறுபடுகிறது. சிலப்பதிகாரத்தின் சில மீவியல்புகளை இயல்பாக்கிக் கொண்டு, புதிய மீவியல்புகளைக் கட்டமைக்கிறது. கண்ணகி தன் முலையைத் திருகி எறிந்து மதுரையை எரிக்கும் மீவியல்பு நிகழ்வு கொற்றவை காப்பியத்தில் இயல்பாக்கப்படுகிறது. பாண்டிய அரசின் மீது கோபம் கொண்ட எண்வகை குடிகளைச் சார்ந்த குடிமக்களின் செயல்பாடாக மதுரையை எரித்தல் கொற்றவை நாவலில் சித்தரிக்கப்படுகின்றது. ஆனால் சிலப்பதி காரத்தில் இயல்பு நிலையில் அமையும் கவுந்தி, கொற்றவை காப்பியத்தில் புன்னைக்காட்டு நீலி என்ற தெய்வத்தின் வேறுவடிவாக மீவியல்பு நிலைக்கு மாற்றப்படுகிறார்.

கொற்றவையின் முதல் பகுதியான நீர் என்னும் பகுதியில் பழம் பாடல் சொன்னது என்று ஒவ்வொரு கடவுளின் தோற்றக் கதைகளை மீவியல்பு நோக்கிலும், இயல்பு நோக்கிலும் சொல்லிச் செல்கிறார் ஜெயமோகன். இயல்பு நோக்கு என்பது போலி சமூகஅறிவியல் நோக்கு, இனப்பெருமை நோக்கு ஆகும். குமரிக் கண்டப் பழங்குடிகளிடையே முன்னோர்களின் தோற்றப்பாடு களாக சிவன், கொற்றவை, முருகன், மால், விநாயகன் ஆகிய தெய்வங்கள் தோன்றின என்பது கதையாகச் சொல்கிறது. இவற்றின் மறுபுறமாக மீவியல்பு நோக்கில் வைதீகத் தொன்மப் பின்புலத்தில் இத்தெய்வங்களின் கதை விவரிக்கப்படுகின்றது. இந்தப் பகுதி முழுக்கவும் கடவுள் வாழ்த்து என்பது போல் அமைந்து விடுகிறது.

மூன்று புள்ளிகள்

கொற்றவை காப்பியம் சிலப்பதிகாரக் கதைப் போக்கிலிருந்து மூன்று புள்ளிகளில் வேறுபடுகிறது. கோவலன் மாதவி பிரிவுக்கான காரணம், வழித் துணையான கவுந்தியை நீலியாக்கி விடுதல், மதுரை அழல்படும் நிகழ்வு ஆகிய மூன்று நிகழ்வுகள் சிலப்பதி காரத்திலிருந்து கொற்றவை வேறுபடும் புள்ளிகள் ஆகும். இம்மூன்று நிகழ்வுகளுமே சிலப்பதிகாரக் காப்பியத்தின் உயிர்நிலையான அம்சங்களாக அமைபவை. இவற்றை மாற்றுவதின் மூலம் ஜெயமோகன் எவ்வாறான நோக்கத்தைச் சாத்தியப்படுத்துகிறார் என்பதைக் காண்போம்.

கோவலன் மாதவி பிரிவுக்கான காரணம்

சிலப்பதிகாரத்தில் கோவலன் மாதவி பிரிவு கதைப் போக்கில் ஒரு முக்கியத் திருப்பம் ஆகும். இப்பிரிவே கோவலன் கண்ணகியை மதுரையை நோக்கிப் பயணிக்க வைக்கிறது. மதுரையே கதையின் மைய நிகழ்களன் ஆகும். பொதுவாகச் சிலப்பதிகாரத்தில் எந்தக் கதை மாந்தரும் குற்றமுடையவராகச் சித்தரிக்கப்படவில்லை. ஒருவர் தான் செய்யும் செயலுக்கு ஊழ்வினையே காரணம் ஆதலின், அவர் அச்செய்கைக்கு பொறுப்பாக மாட்டார். இவ்வாறே கோவலன் மாதவி பிரிந்து செல்வதற்கும் ஊழ்வினையே காரணமாகச் சிலப்பதி காரத்தில் சொல்லப்படுகிறது. இந்திர விழா முடிந்து கடலாடச் சென்ற கோவலனும் மாதவியும் கானல் வரி பாடினர். மாதவி பாடிய வரிப் பாடலைத் தவறாகப் பொருள் கொண்டு, மாதவி வேறொருவர் மீது மையல் கொண்டு பாடுகிறாள் என ஊழ்வினை காரணமாகக் கருதி, பிரிந்து செல்கிறான் கோவலன். இதனைச் சிலப்பதிகாரம் பின்வருமாறு சொல்கிறது:

எனக்கேட்டு,

Ôகானல் வரி யான் பாட, தான் ஒன்றின்

                          மேல் மனம் வைத்து,

மாயப் பொய் பல கூட்டும் மாயத்தாள் பாடினாள்  என,

யாழ்-இசை மேல் வைத்து, தன் ஊழ்வினை

                          வந்து உருத்தது ஆகலின்,

உவவு உற்ற திங்கள் முகத்தாளைக்

                     கவவுக் கை ஞெகிழ்ந்தனனாய்,

பொழுது ஈங்குக் கழிந்தது ஆகலின், எழுதும்

                              என்று உடன் எழாது

ஏவலாளர் உடன் சூழ்தர, கோவலன் -

                  தான் போன பின்னர் - (7: 52 - 58)

வரிப்பாடல் பாடி முடித்த பின்னர் கோவலன் உடனே பிரிந்து செல்கிறான். ஆனால் கொற்றவை நாவலில் கானல் வரி பாடி முடித்த பின்னர் பிரிய வில்லை. பிரிவுக்கு கானல் வரி காரணம் ஆகவில்லை. கானல் வரி பாடி முடித்த பின்னர் இருவரும் புறப் பட்டுச் செல்கின்றனர். முன்பே, கடலாடச் செல் வதற்குத் தயாரிப்பில் ஈடுபடும்போதே தன் செல்வம் அனைத்தும் கரைந்து விட்டதைக் கோவலன் உணர் கிறான். பின்பும் தன் கடை இருந்த வேங்கை மரத் தடியில் சென்று பார்க்கிறான். கானல் வரி பாடி முடித்த பின்னரான நிலையை இவ்வாறு ஜெயமோகன் சொல்கிறார். 

இசை நிலைக்கவும் ஒருகணம் தன்னுள் ஆழ்ந்து அமர்ந்து பின்பு எழுந்து Ôஇரவேறி விட்டது. நாம் மீள வேண்டிய நேரமாகி விட்டது போலும்Õ என்று அவன் எழுந்தான். அவளும் அவனும் ஒருவருக்கொருவர் ஒரு சொல்கூடச் சொல்வதற் கில்லையென உணர்ந்த சுமையேறிய கணங் களுக்குப் பின் அவன் முன்நடந்து தன் குறும்புரவி மீதேறி இருளில் தன் தலையின் சுமையைத் தானே தாங்காதவனாக நகருக்குச் சென்றான். நாளங் காடியில் காவற் பந்தங்களின் ஒளியில் தன்னை இழந்து சென்றவன் தன் கடையிருந்த வேங்கை பெருமரத்தடியில் வந்ததும் குறும்புரவி தரை யுதைத்து நின்றதை உணர்ந்தான். தன்னிடம் என்ன மிஞ்சியுள்ளது என்ற வினாவே அக்கணத்தில் அவனிடம் எழுந்தது. (ஜெயமோகன், 2012 :133)

இங்குத் தன் செல்வம் முழுவதையும் இழந்த நிலையைக் கோவலன் உணர்கிறான். அப்பகுதியிலே நான்கு நாட்கள் அலைகிறான். வயந்தமாலை மாதவியின் மடல் கொண்டு வருகிறாள். அதைக் கண்டு மகிழ்வுறும் அதே வேளையில் வெறுப்பும் அடைந்து, மாதவியின் உள்ளத்தை வேண்டுமென்றே காயப்படுத்த எண்ணி பின்வருமாறு சொல்கிறான்:

நாடகக் கணிகை நடிப்புகளை நான் அறிவேன். நான் இப்போது பெருவணிகனல்ல. ஒழிந்த பொற் சீலையும் கழிந்த நற்காலமும் கொண்ட வீணன். அவள் வீட்டுத் தாழைமடல் மஞ்சம் இனி வேறு வணிகர்களைத் தேடட்டும் (மேலது 2012 : 136)

இவ்வாறு சொல்லிவிட்டுப் பிரிந்து செல்கிறான். தன் இல்லத்தை, கண்ணகி இருந்த இல்லத்தை அடை கிறான். கதைப்போக்கில் இது முக்கியமான வேறுபாடாக அமைகிறது. இவ்வேறுபாட்டிற்கான காரணம் என்ன,  ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் என்னும் சமணக் கொள்கையை மறுப்பதற்காகவா? என்ற கேள்வி இவ்விடத்தில் எழுகின்றது.

கவுந்தியும் நீலியும்

சிலப்பதிகாரக் கதைப்போக்கின் திருப்புமுனையாக கோவலன் மாதவியின் பிரிவு அமைகிறதென்றால், அத் திருப்பத்தைக் கொண்டுசெலுத்துபவர் கவுந்தி அடிகள். மதுரைக்குச் செல்லும் கோவலன் கண்ணகிக்கு கவுந்தி அடிகள் வழித்துணையாய் அமைந்து, இருவரையும் ஆற்றுப்படுத்துகிறார். மதுரைக்குச் செல்லும் பயண வழியில் கவுந்தி ஐயை கூறும் அறவுரைகள் இருவர் மனதையும் பண்படுத்துகிறது.

கவுந்தி அடிகளுக்கு மற்றொரு முக்கியத்துவமும் உண்டு. அவர் மதுரைக்குச் செல்வதற்குக் காரணமாகக் கூறுவது,

மற உரை நீத்த மாசு அறு கேள்வியர்

அற உரை கேட்டு, ஆங்கு அறிவனை ஏத்த,

தென் தமிழ் நல்நாட்டுத் தீது தீர் மதுரைக்கு

ஒன்றிய உள்ளம் உடையேன்      (10 : 56-59) 

மதுரை சென்று சமணப் பெரியோர் உரைகளைக் கேட்டு, அறிவனைப் போற்றுவதற்கு ஆகும். சிலப்பதி காரக் காப்பியத்தில் வரும் வெளிப்படையான சமண சார்பு கதைமாந்தர் கவுந்தி அடிகள் மட்டுமே. இப்படிப் பட்ட முக்கியத்துவமுள்ள கவுந்தி அடிகளை புன்னைக் காட்டு நீலி தெய்வம் மேற்கொள்ளும் ஓர் உருவாக ஜெயமோகன் மீட்டுருவாக்கம் செய்கின்றார். புகார் நகரை விட்டு நீங்கும் போது கோவலன் சாரணரைத் தொழச் செல்கிறார். படித்துரையில் அமர்ந்திருக்கும் கண்ணகியிடம், இடைச்சி உருவம் கொண்டு ஒரு தெய்வம் நீரிலிருந்து வருகிறது.

Òநீ யார்Ó என்று கண்ணகி கேட்க Òநான் புகார் நகரத்துப் பெருவாயிலை ஒட்டிய புன்னைச் சோலையில் இருப்பவள். ஆதலால் என் பெயர் புன்னைக்காட்டு நீலி என்பர். என் பெயரும் தோற்றுவாயும் நானே அறியாதவை. எங்கிருந்து வந்தோம், ஏன் அங்கே அமர்ந்தோமென அறியாமல் இந்த நானிலங்களிலும் நாங்கள் பல்லாயிரம் தெய்வப் பெண்டிர் பரந்து வாழ் கிறோம். நாங்கள் இருக்குமிடத்தால், எங்களுக்கு ஊரார் இட்ட பெயரால் அறியப்படுகிறோம். எங்களை ஊரார் கண்ட வடிவை எங்கள் வடி வாகக் கொள்கிறோம். எங்களிடம் கோரு பவற்றை எங்கள் செயலாகக் கொள்கிறோம். குறுங்காட்டில் மேய வந்த கருங்கண் பசு ஒன்று வட்டக் கருங்கல் வடிவில் என்னை முதலில் கண்டுகொண்டது. என் மீது சொரிந்து புரந்தது. பின்பு இடையர் என்னைக் கண்டடைந்தனர். இன்று புகார் நகரில் பாலும் மோரும் விற்க வரும் இடைச்சியர் வணங்கும் தெய்வம் நான்Ó என்றாள் புன்னை நீலி. நீ இருகை கூப்பி என்னை அழைத்தால் நான் இவ்வுருவம் கொண்டு உன்னுடன் வருவேன்...

Òஆனால் என் தலைவர் உன்னை அறியமாட்டாரே?Ó என்றாள் கண்ணகி. Òஅவர் கண்களை நான் வெல்வேன். என்னை அவர் கண்கள் உங்களுக்கு வழித்துணையாக உடன்வந்த கவுந்தியடிகளாகவே காணும். கதைகளும் காப்பியமும்கூட அப்படியே அறியும். வழித்துணையாக வந்த வடிவிலாத் தெய்வமென்பதை நீ மட்டுமே அறிவாய்Ó என்றாள் புன்னை நீலி. (ஜெயமோகன், 2012 : 148)