New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: Leidon cheppedu சிறிய லெய்டன் செப்பேடு


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Leidon cheppedu சிறிய லெய்டன் செப்பேடு
Permalink  
 


Leidon cheppedu

 
சிறிய லெய்டன் செப்பேடு


முனைவர் மா.பவானி
உதவிப் பேராசிரியர் 
கல்வெட்டியல் துறை

Dr.MBAVANI
Assistant Proffessor,
Department of Epigraphy and Archaeology,
Tamil University
Thanjavur
 
நோக்கீடு- Epigraphia Indica, Vol., 22/ no: 35
                        ஆனைமங்கலம்,- நாகப்பட்டினம் மாவட்டம்
அரசன்-      முதலாம் குலோத்துங்கன்
ஆட்சியாண்டு- 20ஆண்டு- பொ.ஆ. 1090
எழுத்து- தமிழ்
மொழி- தமிழ்

 

ஹாலண்டு நாட்டில் லெய்டன் நகரில் உள்ள பொருட்காட்சியகத்தில் தமிழகச்செப்பேடுகள் 2 இருக்கின்றன. அவற்றுள் ஒன்று அளவில் பெரியது. மற்றொன்று சிறியது. இதில் பெரியது முதலாம் இராஜராஜனது காலத்தில் வெளியிடப்பட்டது. இவரது காலத்தில் ஆனைமங்கலம் என்ற ஊரை, நாகப்பட்டினத்தில் பௌத்தவிகாரம் எடுப்பதற்காகக் கடாரத்து மன்னன் சூளாமணிபன்மனுக்குத் தானமாகக் கொடுத்ததால் இது ஆனைமங்கலம் செப்பேடு என்று அழைக்கப்படுகிறது. சிறியது முதலாம் குலோத்துங்கனால் வெளியிடப்பட்டுள்ளது. இச்செப்பேடு மொத்தம் 3 ஏடுகளையும் 52 வரிகளையும் கொண்டுள்ளது. 1முதல் 11 வரிகள் வரை இங்கு தரப்பட்டுள்ளது.

3 செப்பேடுகளும் ஓரு வளையத்தில் கோர்க்கப்பட்டுள்ளது. வளையத்தின் முனையில் பெரிய லெய்டன் செப்பேட்டில் இருப்பது போலவே முத்திரையில் எழுத்து உள்ளது. "குலோத்துங்க சோழஸ்ய ராஜகேஸரிவர்மனஹ புண்யம் க்ஷோணீஷ்வர - சபா - சூடாரத்னாயாய ஸாஸனம்"
கல்வெட்டு பாடம் :

1. புகழ்மாது விளங்க ஜயமாது விரும்ப நிலமகள் நிலவ மலர் மகள் புணர உரிமையிற் சிறந்த மணிமுடி
2. சூடி வில்லவர் மீனவர் நிலை கெட விக்கலர் சிங்கணர் மேல் கடல் பாயத்திக்கனைத்துந் தன் சக்கர நடாத்
3. தி வீரசிம்ஹாஸநத்து புவனமுழுதுடையாளொடும் வீற்றிருந்தருளிய கோவிராஜகேசரி பன்மரான சக்க
4. ரவர்த்திகள் ஸ்ரீ குலோத்துங்கசோழ தேவர்க்கு யாண்டு இருபதாவது ஆயிரத்தளியான ஆகவமல்ல
5. குலகால புரத்து கோயின் உள்ளால் திரு மஞ்சன சாலையில் பள்ளிபீடம் காலிங்கராயனில் எழுந்தருளி இருக்க கிடாத்
6. தரையன் ஜெயமாணிக்க வளநாட்டுப் பட்டணக்கூற்றத்து சோழ குலவல்லி பட்டனத்து எடுப்பித்த ராஜேந்திர சோ
7. ழப் பெரும் பள்ளிக்கும் ராஜராஜப் பெரும்பள்ளிக்கும் பள்ளிச்சந்தமான ஊர்கள் பழம்படி அந்தராயமும் வீர
8. சேஷையும் பன்மை பண்டைவெட்டியும் குந்தாலியும் சுங்கமேராமும் உள்ளிட்டனவெல்லாம் தவிர்ந்
9. தமைக்கும் முன்பு பள்ளிச் சந்தங்கள் காணி உடைய காணி ஆளரைத் தவிரப் பள்ளிச் சங்கத்தார்க்கே காணி
10. யாகப் பெற்றமைக்கும் தாமர சாஸனம் பண்ணித்தர வேண்டும் என்று கிராடத்தரையர் தூதன் ராஜவி
11. த்யாதர ஸ்ரீ ஸாமந்தனும் அபிமானோத்துங்க ஸ்ரீ ஸாமந்தனும் விண்ணப்பம் செய்ய.
செய்தி :
கடாரமன்னனின் தூதர்களான ஸ்ரீ வித்யாதர ஸாமந்தன், அபிமானோதுங்க ஸ்ரீ ஸாமந்தன் இருவரும், ராஜராஜனால் கொடையாக வழங்கப்பட்ட ஆனைமங்கலத்திற்கு, முதலாம் குலோத்துங்கனிடம் சில வரிகளை (பழம்படி, அந்தராயம், பன்மை, பண்டைவெட்டி) நீக்கக்கோரியும், முன்பிருந்த காணியாளர்களை நீக்கி, அதன் காணி உரிமை முழுவதையும் பள்ளிச்சங்கத்தார்க்கே வழங்கும்படியும் அதற்குச் சாசனம் வடித்துத் தரும்படியும் விண்ணப்பிக்கின்றனர். எனவே, இதை நிறைவேற்றும் பொறுப்பு அரசு ஆணையின் மூலம் அதிகாரி இராஜேந்திரசிங்க மூவேந்தவேளானிடம் ஒப்படைக்கப்படுகிறது. சாசனத்தை எழுதியவர் - உட்கோடி விக்கிரமாபரணத் தெரிந்த வலங்கை வேளைக்காரரில் ஒருவரான நிலையுடைய பனையன் நிகரிழிச்சோழன் மதுராந்தகன். பள்ளிச்சந்தங்களைப் பட்டியலிட்டபின்பு அதற்கான வரிநீக்கங்கள் அதிகப்படுத்தப்படுகின்றன. இதில் காணிக்கடன், நிச்சயித்த நெல்லு என்ற இரண்டு பேசப்படுகிறது. காணிக்கடன் என்பது அரசுக்குச் செலுத்த வேண்டிய நிலவரி . நிச்சயித்த நெல்லு என்பதும் ஒரு வரியினமே. வரிநீக்கம் செய்யப்பட்ட பின்புள்ளதை இவ்வாறாக குறிப்பிட்டிருக்கலாம். பள்ளிச்சந்தங்கள் பட்டியலிட்ட பின்பு அதற்கான வரிநீக்கங்கள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. தானமாக வழங்கப்பட்ட அவ்விடத்திற்குப் பணமாகவும் பண்டமாகவும் பெறும் வரிகளனைத்தும் அப்பள்ளிச்சங்கத்தார்க்கே வழங்கப்பட்டுள்ளன. அப்பள்ளிச்சந்த நிலத்தில் குடியிருந்தோர் அனைவரும் அங்கிருந்து நீக்கப்பட்டு அவ்விடம் முழுவதும் பள்ளிச்சங்கத்தார்க்கே வழங்கப்பட்டுள்ளது. எல்லைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. மொத்தமாக 31 3/4 வேலி, 2மா, 1 முந்திரிகை என்பது தெரியவருகிறது. இதில் மற்ற ஊர்களுக்கு இறையிலிக்கப்பட்டதற்குப் பின்புள்ள நிச்சயித்த நெல்லு குறைந்துள்ளது. ஆனால் பிரம்மதேய ஊர்களுக்கு (எண்.2, 7) நிச்சயித்த நெல் அதிகரிக்கப்பட்டுள்ளதுபோல் தெரிகிறது. இந்த மாற்றம் ஏற்கெனவே இவ்வூர்களுக்கு அதிக அளவில் சலுகைகள் வழங்கப்பட்டு வரி குறைக்கப்பட்டுள்ளதால் இருக்கலாம். அப்படி அதிகரிக்கப்பட்ட வரிநெல்லும் மற்றைய ஊர்களைக்காட்டிலும் பாலையூர் பிரம்மதேயத்திற்குக் குறைந்தே வருவதை அட்டவணையில் காணலாம் (எண். 7).
காணிக்கடன் மற்றும் நிச்சயித்த நெல்லுக்கான விபரங்கள்
வ.
எண்
கிராமம்
அமைவிடம்
மொத்த நிலஅளவு (வேலி-மா- காணி- முந்திரிகை)
காணிக்கடன் நெல்லு (கலம்-குறுணி- நாழி)
நிச்சயித்த நெல்லு (கலத்தில்)
1வேலிக்கான காணிக்கடன் நெல்
1
ஆனைமங்கலம்
பட்டனக்கூற்றம் ஜெயமாணிக்க வளநாடு
97- 2/20 - 1/80+ 1/160
8943-9-3
4500
46.39
2
ஆனைமங்கல பிரம்மதேயம்
பட்டனக்கூற்றம் ஜெயமாணிக்க வளநாடு
12 3/4
400
560
46.6
3
முஞ்சிக்குடி
பட்டனக்கூற்றம் ஜெயமாணிக்க வளநாடு
27 - 3/20+1/40
2779 - 4 – 4
1800
66.66
4
ஆமூர்
திருவாரூர் கூற்றம்
106 1/16
10600 - 9 - 6
5850
100
5
வடக்குடியான நாணலூர்
அலநாடு
70 3/4 - 4/20 + 1/40
6514 - 5 - 1
2840
40
6
கீழ் சந்திரப்பாடி
அலநாடு
10 - 2/20 - 1/80+ 1/160 + 1/320 ஙீ3/4
101-5
 
 
7
பாலையூர் பிரம்மதேயம்
 
60 3/4
1000
1500
22.14
8
புத்தக்குடிகுறும்பு நாடு
ஜெயகொண்ட சோழ வளநாடு
87 1/4
8720 -4 - 4
6107
99.65
9
உதயமார்த்தாண்ட நல்லூர்
இடைக்கை நாடு
3-3
135- 3 - 3
78-5
26
தான நிலத்தின் எல்லை :
கிழக்கு: கடற்கரையின் மேற்கிலுள்ள அனைத்து மணல் குன்றுகளும்
தெற்கு: புகையுண்ணிக் கிணற்றின் வடக்கு, திரு வீராட்டநமுடைய மஹாதேவர் கோயிலுக்கு சொந்தமான நிலத்தின் வடக்கு கரையில் பறவைக்குளத்து மாறாயனால் வெட்டப்பட்ட மேற்கு நோக்கிச் செல்லும் பெருவழி
மேற்கு: காரைக்காலுக்குச் செல்லும் பெருவழியின் கிழக்கு
வடக்கு: சோழகுலவள்ளிப் பட்டினத்திலுள்ள வட காடன் பாடியின் தென்னெல்லை முழுவதும்.
பொருள் விளக்கம் :
அந்தராயம் -} நிலவரி தவர்த்த பற வரிகள்
பன்மை -}
பண்டவெட்டி -} ஒரு வித வரி
பழம்படி -}
சுங்கமேரா -} விற்பனைப் பொருட்களுக்கு ஏற்றுமதி, இறக்குமதிக்காக போக்குவரத்தில் வசூல் செய்யப்படும் ஒரு வித வரி
வீரசேஷை -} வீரர் பொருட்டு வசூலிக்கும் ஒரு வரி
குந்தாலி -} ஓரு வரி
மெய்கீர்த்தி :
குலோத்துங்க சோழனின் மெய்கீர்த்தி பலவகைப்பட்டது. இவரது முந்தைய கால கல்வெட்டுக்களில் "திரு மன்னி விளங்கும்" என்ற மெய்கீர்த்தியுடன் இவரது கல்வெட்டுக்கள் துவங்கும். இவரது 4 ஆம் ஆட்சியாண்டு வரை இவர் "இராசமேசரிவர்மன் இராஜேந்திர சோழ தேவா" என்றேப் புகழப்படுகின்றான். 6ஆவது ஆட்சியாண்டு கல்வெட்டொன்று " பூ மேல் அரிவை" எனத்துவங்குகிறது. பெரும்பாலான கல்வெட்டுக்கள் "புகழ் சூழ்ந்த புணரி" என்று துவங்கும். ஆயினும் இச்சாசனத்தில் "புகழ்மாது விளங்க" என்று துவங்கி அவர் சேரரையும், பாண்டியரையும், ஆறாம் விக்ரமாதித்தனையும், ஜெயசிம்மனையும் வெற்றிக்கொண்டதையறிய முடிகிறது. (பில்ஹனரின் விக்ரமாங்க தேவசரிதத்திலிருந்து விக்ரமாதித்தனை தோற்கடித்த செய்தியை ஹூல்ட்ஸ் குறிப்பிடுகின்றார்) .


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard