New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: புறநானூற்றில் கல்விச் சிந்தனைகள்


Guru

Status: Offline
Posts: 24765
Date:
புறநானூற்றில் கல்விச் சிந்தனைகள்
Permalink  
 


 புறநானூற்றில் கல்விச் சிந்தனைகள்

 


புறநானூற்றில் கல்விச் சிந்தனைகள்

முனைவர்உ.பிரபாகரன்,இணைப் பேராசிரியர், அயல்நாட்டுத் தமிழ்க்கல்வித் துறை,தமிழ்ப் பல்கலைக்கழகம்,தஞ்சாவூர் -613 010.
முன்னுரை
                தமிழ் மொழியில் படைக்கப்பட்ட இலக்கியங்கள் தொன்மையானவைபண்பட்டவைவரலாற்றுச் சிறப்புமிக்கவை என்று தோன்றி என்று வளர்ந்தது என்று இயம்ப முடியாத அளவுக்குப் பழமையானவை;  பிற நாட்டினர் நாகரிக நிலையை எட்டாத காலத்திலேயே தனக்கேயுரிய கலப்பற்ற தூய இலக்கியப் போக்கினைக் கொண்டு தமிழ் இலங்கியது. இத்தகைய சிறப்புமிக்க தமிழ்மொழியை பெஸ்கி பாதிரியார்  குறிப்பிடும்பொழுது, """"தமிழ்ப் புலவர்கள் ஆற்றல் சார்ந்த மொழியினைக் கையாண்டனர்"" என்று கூறியுள்ளார். இவ்வாற்றல் மிக்க தமிழில்  தோன்றிய சங்க இலக்கியம் ஒரு பெருநிலம்;உழுது பயன்கொளவும் அகழ்ந்து பொன்னும் மணியும் கரியும் எரிநெய்யும் பெறவும் அமைந்த பெரும் பரப்புடைய நிலம் போலப் புதுப்புதுப் பொருள் விளைவிக்கவும்ஆழ்ந்து ஆழ்ந்து உண்மைகளை வெளிக்கொணரவும் பயன்படும் இலக்கியப்புலம். இப்புலத்தினை அக்காலச் சூழல் கொண்டு கல்வியியல் பார்வையில் ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
கல்வி
                கல்வியைக் கண் என்றும் கற்பித்தலைக் கண்திறந்து விடுதல்’ எனவும் வழங்குவர். நுனரஉயவந’  என்ற ஆங்கிலச் சொல் வெளிக்கொணர்தல் என்னும் பொருளுடைய இத்தாலிய மூலத்திலிருந்து பெறப்பட்ட தென்பார் பாஸ்கல் கிஸ்பர்ட் உறங்கும் நிலையில் உள்ள அறிவை விழிக்கச் செய்தலே சங்ககாலச் சூழலில் ஏற்பட்ட கல்வியாகும். பல்வேறு தொழில்களை மேற்கொண்டிருந்த புலவர்கள் பாடிய பனுவல்கள் அவர்கள் பெற்றிருந்த கல்விக்கு நற்சான்றாகும். சங்க காலத்தில் கல்விக்கும் கற்ற புலவர்களுக்கும் பெரும் மதிப்பு இருந்தது. அக்காலத்தில் ஏழைகளுக்கும்செல்வர்களும் ஆடவரும் பெண்களும் கல்வியிற் சிறப்பெய்தி இருந்தனர். மாணவர்கள் பல காலம் முறையாகக் கல்வி பயின்றனர். சங்க காலத்தில் கல்வியில் சிறப்பெய்தி விளங்கும் ஒருவனையே தாய் விரும்பியுள்ளாள். அதுபோலவே ஒருகுடியில் பிறந்த பலராயினும் அரசன் அவர்களுள் அறிவுடைய ஒருவனையே தேர்ந்தெடுத்து அவன் அறிவுரைப்படியே ஒழுகுவான். கீழ்க்குலத்துப் பிறந்த ஒருவன் கல்வியறிவு நிரம்பியனவாய்த் திகழ்வானாயின் மேற்குலத்தைச் சார்ந்த ஒருவனும் கல்வியின் பொருட்டு அவனை வழிபட்டு தனது கல்வியறிவை வளர்த்துக்கொள்வான். மேலும் உதவி செய்தும் மிகுந்த பொருளைக் கொடுத்தும் கல்வி கற்கவேண்டும் என ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் கல்வியின் மேன்மையைப் (புறம் 183) போற்றிப் பாடுகிறான்.
கல்வியின் நோக்கம்
                கல்வியின் இன்றியமையா நோக்கம் மனிதனுடைய சிந்தனை ஆற்றலை வளர்த்தலே என்பதைக் கல்வி வல்லுநர் அனைவரும் வற்புறுத்துகின்றனர். சிந்தனையாற்றலை வளர்க்காமல் வெறும் செய்தியறிவை மட்டும் தருகின்ற கல்வியறிவை மட்டும் தருகின்ற கல்வியை அறிஞர் பாராட்டுவதில்லை. அத்தகைய கல்வியால் விளையும் பயன் மிகச் சிறியதாகும். இது உயர்ந்தது. இது தாழ்ந்தது. இது நன்மை பயப்பது. இது தீமை பயப்பது என்று பகுத்தறியும் ஆற்றலே சிந்தனையாற்றலாகும். இச்சிந்தனையாற்றலோடு செய்தியறிவும் இணைந்து கற்பனையாற்றல் வளர்கின்றது. கற்பனையில்லாவிட்டால் அறிவின் பெருக்கம் இல்லை. இதனைச் சங்க இலக்கியங்கள் நமக்கு அளித்துள்ளன. உலகம் தோன்றிய நாள் முதல் எத்தனையோ கோடி மக்கள் உலகில் பிறந்துவளர்ந்துவாழ்ந்துமறைந்து இருக்கின்றனர். ஆனால் அத்தனை பேருமே உலக முன்னேற்றத்திற்குக் காரணமானவர்கள் என்று கூறமுடியாது. அவர்களுள் அவ்வப்போது தோன்றிய அறிஞர் சிலரே இன்று நாம் அடைந்திருக்கம் எல்லா முன்னேற்றத்திற்கும் காரணமாய் இருந்தார்கள். அவ்வறிஞர்கள் நுண்ணறிவு மட்டுமன்றி,சிந்தனையாற்றலும்கற்பனையாற்றலும் பெற்றவர்கள். மிக உயர்ந்த நுண்ணறிவைப் பலர் பெற்றிருக்கக்கூடும். ஆனால் அவர்கள் கல்வியறிவு பெறுகின்ற போதுதான் அந்நுண்ணறிவின் பயனையெல்லாம் அடையமுடியும். எனவேநுண்ணறிவுள்ள மக்கள் கல்வியறிவு பெறுவதன் மூலம் தங்களுடைய சிந்தனையாற்றலைப் பெருக்கிக் கொள்கிறார்கள். இதனையே, ‘தொட்டனைத்தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத்தூறும் அறிவு’ என்று திருவள்ளுவர் இயம்புகிறார்.
சங்க காலக் கல்வி
                சங்க காலத்தில் கல்வி மதித்துப் போற்றப்பட்டது. பல்வேறு தொழிலினராய் புலவர்கள் பாடிய பாடல்கள் அவர்கள் பெற்றிருந்த கல்விக்கு நற்சான்றாகும். கீழ்ப்பால் ஒருவன் கற்பின் மேற்பால் ஒருவனும் அவன்கட் படுமேஎன வருணப் பாகுபாட்டையே புறந்தள்ளும் ஆற்றல் சங்ககாலக் கல்விக்குண்டு. தூது முயற்சிக்கும்,கொலையன்ன கொடுஞ்செயல் களைதற்கும்பரிவுதப வரிதண்டும் செயல் நாணத்தக்கதென அறிவுறுத்தற்கும் கொடை நேர்க எனச் செம்மாந்து  (184) (புறம்)  செப்பற்கும்,அற்றைக் கல்வியாளர்களின் கல்வி பயன்பெற்றது. அறுவை வாணிகள் இளவேட்டனும்ஆசிரியன் பெருங்கண்ணனும்,கொல்லன் அழிசியும் குறமகள் இளவெயினியும் மருத்துவன் தாமோதரனும் வாணிகள் சாத்தனுமெனத் தொழில் வேறுடையார்  கல்வி வாய்ந்த புலமைச் செல்வராயிருந்தனர். பெற்ற கல்வியாற் பிழைப்பு நடத்த வேண்டாது. அறிவு பெறற்கெனவே கல்வி அமைந்த அற்றைச் சூழல் போற்றத்தக்கது. கல்வி அறிவுக்கென அமையாது வயிற்றுப்பாட்டுக்கென நிலை இழியுங்கால் இதனை ஒரு சமூக மதிப்பாகக் கருதும் நிலையும் மாறும் என சங்ககாலத்தில் கருதினார்கள்.
சங்ககால ஆசிரியர்கள்
                சங்க காலத்தில் கல்விக்கும் கற்ற புலவர்களுக்கும் பெரும் மதிப்பு இருந்தது. அக்காலத்தில் ஏழைகளும்,செல்வர்களும் ஆடவரும் பெண்களும் கல்வியில் சிறப்பெய்தி இருந்தனர். மாணவர்கள் புலமைசான்ற ஆசிரியர்களிடம் பல காலம் முறையாகக் கல்வி பயின்றனர். மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார் (நற்.273, அகம் 102, 348), மதுரைப் பாலாசிரியன் சேந்தன் கொற்றனார் (நற்.322) என்பவர்கள் சங்கப் புலவர்களுள் இருவராவார். இவர்கள் பெற்ற அடைமொழியின் அடிப்படையில் சங்க காலக் கல்வியின் தன்மையை ஈண்டு நோக்குதல் இன்றியமையாதது. இளம்பாலாசிரியன் என்பது குழந்தைகளுக்கு (இளம் பாலகர்களுக்கு) பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களைக் குறிப்பதாகும். தொடக்கக் கல்வியைத் தொடரும் இன்றைய மாணவர்கள் பெரும்பாலோர் பாலர் பள்ளியில் (டுமுழுருமுழு) படித்தவர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இது போன்ற ஒரு நிலை சங்க காலத்தே நிலவியிருந்தது. அக்காலச்சூழலில் இளம் பாலர்களுக்கு தனி ஆசிரியர் கல்விக் கற்பித்து வந்துள்ளார் என்பது இப்பாடல் ஆசிரியரின் அடைமொழிவழி அறியமுடிகிறது.  பிறந்த குழந்தைகள் சில ஆண்டுகள் கடந்த பின்னர் பாலர் பள்ளியில்  சேர்க்கப்பட்டு அன்று பாலர்களுக்கு வகுப்பெடுக்கும் ஆசிரியர்களிடம் ஒப்படைக்கப்பட்டு பாடம் படித்தனர் என்பதற்கு  இது ஒரு சான்றாகும். மேலும் இளம் பாலர் படிப்பை முடித்தவுடன் பாலர் படிப்பை அல்லது கல்வியைத் தொடர்ந்து கற்றுவந்தது இப்பாடல்வழி அறியமுடிகிறது. மதுரைப் பாலாசிரியர் சேந்தன் கொற்றனார் தொடக்ககல்வி பயிலும் மாணவர்களுக்கு ஆசிரியராக இருந்து கல்வியைப் புகட்டியுள்ளார். எனவே சங்க காலத்தில் இளம் பாலர்,பாலர்இளைஞர் என வயது அடிப்படையில் கல்வி கற்பிக்கப்பட்டது. இத்தகைய நோக்கு உளவியல்  தன்மை அல்லது பார்வை சங்ககாலக் கல்வியாளர்களிடம் (ஆசிரியர்கள்) இருந்ததைப் பாடல்வழி அறியமுடிகிறது.
 


__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
Permalink  
 

கல்வியின் சிறப்பு
                சங்க காலத்தில் கல்வியில் சிறப்பெய்தி விளங்கும் ஒருவனையே தாய் விரும்பியுள்ளாள். அது போல ஒரு குடியில் பிறந்த பலராயிலும் அரசன் அவர்களுள் அறிவுடைய ஒருவனையே தேர்ந்தெடுத்து அவன் அறிவுரைப்படியே ஒழுகுவான்.  கீழ்க்குலத்துப் பிறந்த ஒருவன் கல்வியறிவு நிரம்பியவனாய்த் திகழ்வானாயின் மேற்குலத்தைச் சார்ந்த ஒருவனும் கல்வியின் பொருட்டு அவனை வழிபட்டுத் தனது கல்வியறிவை வளர்த்துக் கொள்வான். மேலும் உதவிசெய்தும் மிகுந்த பொருளைக் கொடுத்தும் கல்வி கற்கவேண்டும் என ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் கல்வியின் மேன்மையைப் (புறம் 183)போற்றிப் பாடுகிறான். பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் பேராண்மையுடன் நாவன்மையும் உடையவன். அவன் பாடியது இது. சிலப்பதிகாரத்துள் குறிப்பிடப்படுவோனான நெடுஞ்செழியன் இவனே என்பர். தமிழகத்துள் அந்நாள் புகுந்த ஆரியப்படையினரை வென்று துரத்திய ஆண்மை பற்றி இவன் இப்பெயர் பெற்றனன்.
     உற்றுழி உதவியும்உறுபொருள் கொடுத்தும்,
    பிற்றைநிலை முனியாதுகற்றல் நன்றே;
   பிறப்பு ஓர் அன்ன உடன்வயிற்று உள்ளும்
சிறப்பின் பாலால்தாயும் மனம் திரியும்;
ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும்,
மூத்தோன் வருக’ என்னாதுஅவருள்
அறிவுடை யோன்ஆறு அரசும் செல்லும்;
வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும்,
கீழ்பால் ஒருவன் கற்பின்,
மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே.                  (புறம் -183)
 
ஒரு தாய் ஒரு வயிற்றுப் பிறந்தவருள்ளும்அவரவர் சிறப்பின் காரணமாகத் தாயும் தன் பாசத்திலே ஓரளவிற்கு வேறுபடுவளாவாள். ஒரு குடி வந்த பலருள்ளும், ‘மூத்தோனை வருக’ என்று அழையாது,அறிவுடையோனையே, ‘வருக’  என்று அரசனும் சென்று கேட்பான். வேற்றுமைப்பட்ட நால்வேறு வகையான மக்களுக்குள்ளும் கீழ் நிலையிலுள்ளான் ஒருவன் கல்வி கேள்விகளிலே வல்லான் ஆயின்,மேல்நிலையிலுள்ளவனும் அவனுக்கு ஆட்படுவான். இதனால்ஊறுபாடு நேர்ந்த விடத்து உதவியும்மிக்க பொருளைக் கொடுத்தும்அதனால் நேரும் இழப்புவருத்தம் முதலிய நிலைகளைக் கண்டு வேறுபடாதும் முயற்சியுடன் அனைவரும் கற்று அறிவுடையவராகி மேம்படுதலே நன்றாகும். அதனால் சிறப்பும்அறிவும்நூற்பயிற்சியும் பெற்று இவ்வுலகத்து வாழ்விலும் உயரலாம். மக்கட்பண்பு வளர கல்வி வேண்டும் கல்வியுடையான் சிந்தனையும்,செயலும் தனக்கும் பிறருக்கும் ஒருங்கே நன்மை பயப்பதாக அமைய வேண்டும். இதனையே சங்க காலச் சான்றோர் நன்னடை’ என்றார்கள். நன்னடையுடைய தனிமனிதன் தன்னுடைய சிந்தனை ஆற்றலையும் கற்பனையாற்றலையும் சமுதாய நலன் கருதிப் பயன்படுத்த விரும்புவான். அதனால்   எல்லா மக்களுக்கும் நன்மை உண்டாகும். இதனை நன்னடை நல்கல் வேந்தர்க்குக் கடனே’ (புறம் 312) என்று அறிவுறுத்துகிறது.
  ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே;
 சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே;
 வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே;
நன்னடை நல்கல் வேந்தர்க்குக் கடனே;
ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக்,
களிறு எறிந்து பெயர்தல் களைக்குக் கடனே.
 
கல்வியறிவு பெற்ற ஒருவனது நன்னடையினால் சமூகம் பயனடையவேண்டும். அதற்குரிய சூழ்நிலையை வகுத்துத் தருவது அக்கால அரசின் கடமையாகும் எனச் சங்ககாலக் கவிஞர்கள் காவலருக்கு ஆணையிட்ட அரிய காலமாகும். சங்ககாலச் சமுதாயம் வேந்துவழி ஒழுகிய சமுதாயம் எனினும் அறிவார்ந்த பெரியோரை அமைச்சராகவும்,நண்பராகவும் உறுதிச் சுற்றமாகவும் பெற்ற சமூகமாக இருந்தது.  காதல்போர்வெற்றிபுகழ் எனப் பொழுது போக்கி மகிழாது இளவேனிற் காலத்துச் சொற்புதிதுண்டு மகிழும் கலை மயங்கிற் களித்தனர்.
 
                நிலவினால் திரிதருஉம் நீண்மாடக் கூடலலாரர்
                புலனாவிற் பிறந்தசொற் புதிதுண்ணும் பொழுதன்றோ (கலி.35:17-18)
 
என்பதிலிருந்து  அச்சமுதாயத்தில் கவிதைக் கலை பெற்றிருந்த மதிப்பும் புலனாகும். வீரமும் வெற்றியும் புலவரால் பாடப்பெறுகின்ற அளவிலேயே நிறைவுபெறும் என்ற நம்பிக்கை சங்க காலத்தில் இருந்தது.
 
                செறுத்த செய்யுட் செய்செந் நாவின்
                வெறுத்த கேள்வி விளங்¦குபுகழ்க் கபிலன்
                இன்றுள வாயின் நன்றுமன்                       (புறம் :     53:11-13)
 
கல்வியில் சிறந்தோர் பிறந்த இந்நாட்டிலே நாடும் வாழோம்’ என்று போய்விடவும் கூடாது. பல பொருள்களையும் அடக்கிய செய்யுட்களை விரைந்து பாடும் செந்நாவும்மிக்க அறிவும்விளங்கிய புகழும் உடைய கபிலன் இன்றிருந்தால்  நல்லது என்று நீ சொன்னாய்அது நன்று. அவரில்லாததால்நின் பகைவரை வெற்றி கொண்ட சிறப்பை என்னால் இயன்றவரை யானே பாடுவேன் கேட்பாயாக! என யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் கருதியதாகப் பொருந்தி இளங்கீரன் பாடுவர். புலவர் பாடும் புகழ் என்பது சமூகம் ஏற்பளித்த ஒரு பெரும் பதிப்பாகவே அமைந்தது.
பாற்கல்வி
                அன்னை மகளுக்கு  அறிவுறுத்திய  பாற்கல்வியின் பாங்கு சங்க இலக்கியத்தில்
காட்டப்பட்டுள்ளது.  நற்றிணைப் பாடல் ஒன்றில் (172) புன்னைக்காய் மூலம் ஒழுக்க  நெறிக் கல்வியை மறைமுகமாக  ஊட்டப்பட்டுள்ளது. இதனை,
 
விளையாடு  ஆயமொடு   வெண்மணல் அழுத்தி
மறத்தனம் துறந்த காழ்முளை அகைய
நெய்பெய் தீம்பால் பெய்தினிது வளர்ப்ப
நும்மினும்  சிறந்தது நுவ்வை   ஆகுமென்று
அன்னை கூறினள் புன்னையது  சிறப்பே
அம்ம நாணுதும்  நும்மோடு   நகையே
விருந்திற்  பரணர்  விளரிசை கடுப்ப
வலம்புரி  வான்கொடு நரலும் இலங்குநீர்
துறைகெழு கொண்கநீ நல்கின்
நிறைபடு நீழல் பிறவுமா  ருளவே                 (நற்.172)
 
 இப்பாடலை வெறும் புனைக்காய்  பொதிந்து வளர்த்த கதை கூறும்  பாட்டெனக்   கருத முடியுமா  எனில் முடியாது. இது அன்னை மகளுக்கு அறிவுறுத்திய பாற் கல்வியாகும்.  அகவாழ்வியலை மனதில் கொண்டு நாணம் முதலிய நாற்பண்புகளுக்கு  வேலியிட்டுள்ளார் கவிஞர்.   இது மகளிர்க்குரிய  நிறைகாக்கும் பண்பை இப்பாடல்  அழகுறக் காட்டுகிறது.  கல்வி நிறுவனங்கள் தத்தம் பாடத்தின் ஊடே இத்தகைய ஒழுக்கநெறிக் கல்வியை மறைமுகமாக ஊட்டக்கூடும்.  எனினும் சமூகமே  இதனைப்  பெரிய அளவில்  செய்ய இயலும் என்பதை   இப்பாடல் காட்டுகிறது.   அவ்வாறு ஒழுக்க  நெறியோடு  சமூகக் கட்டுக்குலையாது காக்கும் நெறியாளர்களாகச் சங்க கால மக்கள்  வாழ்ந்திருந்தனர்.   """" ஆன்றிவிந்  தடங்கிய கொள்கைச் சான்றோர் பலர்யான்  வாழு மூரே""  எனப் பெருமை  கொள்ளும் இனமே  சங்கத் தமிழினமாகும்.
 
சான்றாண்மைக் கல்வி
                நாகரிகத்தையும் பண்பாட்டையும்  உலக அமைதியையும்  காக்கும் சான்றாண்மைக் கல்வியினைச் சங்ககாலப் புலவர் வேந்தர்க்குச் சமயம் வாய்த்த  இடத்திலெல்லாம்  செவியறுவுறூஉவென மொழிந்தனர்.  சந்து செய்வித்தும்நாணும்  தகவிடைத்து என விலக்கியும்,   குடிப்பொருள்   அன்று  நும் செய்கை  எனத் தடுத்தும்இன்றே போல்கநும்  புணர்ச்சி  என நட்புக் கூட்டியும் சான்றோர் உலகம் பண்டைத்  தமிழ் உலகின் அமைதி  காத்தது.   புலவோரின் கல்வி ஆளுமை பறைசாற்றுகிறது. 
 
அன்னாய்  இவனோர்   இளமாணாக்கன்
தன்னூர்  மன்றத் தென்னன்   கொல்லோ
இரந்தூ  ணிரம்பா  மேனியோடு
விருந்தினூரும் பெரும்செம் மiனே                 (குறுந்.33)
 
எனப்படுமரத்து மோசிகீரனாரின்   பாடல் தலைவி  தன்னை வருத்திக் கொண்டு கல்வி   கற்கும் மாணவனின்  பெருமை கூறுகின்றாள். கல்வி கற்பதற்காகப் பிரிதல்  ஏனையப் பிரிவுகளினும்  உயர்ந்ததாகக்  கருதப்பெறுகிறது.   வாழ்நாள் முழுவதும் கல்விகற்கும்  முயற்சி  சங்ககாலத்தில் இருந்தமை  இதன்மூலம்  அறியப்படுகிறது. 
 
போர்க்கல்வி
                சங்க காலச்     சமுதாயம்       மறப்பண்பையும்     மானத்தையும்     அரிய   சமூக 
மதிப்புகளாகப்  போற்றியது. வேந்தர் நிலையிலிருந்து பொருளாதார நிலையில் மிகக் கீழ்த்தட்டில்   வாழ்வோர் வரையில் மான உணர்ச்சிடையவர்களாக  இருந்தார்கள்.  சங்க காலத்தில்  போர் வாழ்வை   விரும்பியேற்றுக்  கொண்ட சமூகச் சூழலில் நிலவியது.   போர் வேண்டாம்  என்ற அறிவுரை   ஒருபுறம்  இருந்தாலும் மன்னரும் மைந்தரும்,   மறவரும் உடற்சினஞ்  செருக்கியுரைக்கும் வஞ்சின  உரைகளும்   கேட்காமல் இல்லை. 
 
படையழிந்து  மாறின னென்றுபலர் கூற
மண்டமர்க் குடைந்தன  னாயின் உண்டவென்
முலையறுத்திடுவென்  யானெச் சினைஇக்
கொண்டவாளொடு  படுபிணம்  பெயராச்
செங்களந் துழவுவோள்  சிதைந்துவே  றாகிய
படுமகன் கிடக்கை காணுஉ
ஈன்ற ஞான்றிலும் பெரிதுவந்தனளே          (புறம்.278) 
 
                இப்பாடலைத் தாயொருத்தியின் மறவுணர்வு வெளிப்படுமாறு   காக்கைபாடினியார் பாடியுள்ளார். சமூகத்தில் அரசனுக்கு  ஆதரவாகப் போருணர்வு அவிந்து போகாமல்  பாடிய பாடல் என்று கொண்டாலும்,இப்பாடலில்  உள்ள வீர உணர்வை அக்காலச் சமுதாயத்திற்கு அப்பாற்பட்ட கற்பனை என்று சொல்லுவதற்கில்லை.   தம் அரசனுக்குப்   போரில் தோல்வி   வரக்கூடாது என்ற உணர்வே  இதற்கு அடிப்படையாகும்.   தான் வாழும்  நாடுஅரசு  என்ற உயர் மதிப்புகளின்  அடிப்படையிலேயே  வீரமும்  உயர் மதிப்பாக எண்ணப்பட்டது.   தனிப்பட்ட சண்டைகளில் ஏற்படும் உயிரிழப்பு கொலையாகக் கருதப்பட்டுத்  சண்டைகளில் ஏற்படும் உயிரிழப்பு கொலையாகக் கருதப்பட்டுத் தொடர்புடையவருக்குத் தண்டனை  வழங்க அரசு முற்படுகிறது.   ஆனால் மண்ணுரிமை   என்ற அடிப்படையில்  போர்வினையும்  மறவுணர்வும் மதிக்கத்தக்க  செயலாகின்றன.  வீரத்தின் அடிப்படையில் பெறுகின்ற களச்சாவும்    தியாகமாக  மதிக்கப்படுகின்றன. இவ்வாறு வீரம்  நிறைந்த  வாழ்வாக சங்ககால  வாழ்வு அமைந்தது. இத்தகைய  வீரம் அதனால்  கிடைக்கப்பெறும்  வெற்றி ஒரு போர்க்கல்வியாக  அக்காலத்தில் நிலவி வந்துள்ளது.
முடிவுரை
                சங்க   காலச்  சமூகச்  சூழலில்  கல்வி ஒரு தகவாக மதித்துப்  போற்றப்பெற்றது.  
பல்வேறு   தொழில்கள்  புரிந்த புலவர்கள்  பாடிய பாடல்கள் அவர்கள் பெற்றிருந்த கல்விக்கு  நற்சான்றாகும்.   அறிவு பெறற்கெனவே  கல்வி அமைந்த   அற்றைச் சூழல் போற்றத்தக்கது. கல்வி  அறிவுக்கென  அமையாது வயிற்றுப்பாட்டுக்கென  நிலை இழியுங்கால்  அதனை ஒரு சமூக மதிப்பாகக் கருதும்  நிலையும் மாறும். ஆங்கில ஆட்சியும்  ஆங்கிலேயேரின்  கல்வியும் நாட்டில்  புகுந்த பின் வேலைக்காகவே கல்வி  என்னும் கேடான  நிலை உருவாகியது.   அதன் வாயிலாக  அறிவுத் தளர்ச்சி துறைதோறும்   ஏற்பட்டது.   இன்று கல்விக்கூடங்களில் பயிலும் மாணவர்கள்  குற்றஞ்சாட்டப் படுகின்றனர்.  ஒழுக்கநெறி   குறைவிற்கும்  மக்கள் வரிப்பணம் வீணாக்கப்படுதற்கும்  அவர்கள் பயிலும்  பள்ளிகளே காரணம் என்று குற்றம்  சுமத்தப்படுகிறது. சங்க காலத்தில் கல்வி திட்டமிடப்படாததாகவும்முறை சாராததாகவும் அமைந்தது.   ஆனால் இன்று கல்வி வேறாகவும்,  படிப்பு வேறாகவும்  அமைந்துவிட்டது.   இவ்வாறு  சமூகத்தின் பல வாயில்கள் வழியாகப் பெற்ற சங்ககாலக் கல்வி எண்ணறிவிற்கும்  எழுத்தறிவிற்கும் அப்பாற்பட்டதாகும். எனினும் இளம்பாலர் கல்விபாலர்கல்விபெண்கல்வி என்னும் குடும்பக் கல்வி பாற்கல்விசான்றாண்மைக் கல்வி,போர்க்கல்வி என மதித்துப் போற்றப்பட்டது.
 
பயன்பட்ட நூல்கள்
அகத்தியலிங்கம்.  ச.      சங்கத்தமிழ். அனைத்திந்தியத் தமிழ் மொழியியற் கழகம்,
அண்ணாமலை நகர், 1983.
இராசமாணிக்கனார் மா. தமிழ்மொழி இலக்கிய வரலாறு,பாரி நிலையம்,சென்னை. 1969.
கைலாசபதி. க. சமூகவியலும் இலக்கியமும்நியூசெஞ்சுரி புக் ஹவுஸ்சென்னை 1988.
சுப்பிரமணியன்ந. சங்ககால வாழ்வியல்நியூசெஞ்சுரி புக் ஹவுஸ்சென்னை 1986.
பாலசுப்பிரமணியன்கு.வெ. சங்க இலக்கியத்தில் சமூக அமைப்புகள்மதராஸ் ரிப்பன் பிரஸ்புதுக்கோட்டை. 1995.


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard