New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: புறநானூற்றில் பழக்கவழக்கங்களும் நம்பிக்கைகளும் முனைவர் ப.சுதந்திரம்


Guru

Status: Offline
Posts: 24765
Date:
புறநானூற்றில் பழக்கவழக்கங்களும் நம்பிக்கைகளும் முனைவர் ப.சுதந்திரம்
Permalink  
 


 புறநானூற்றில் பழக்கவழக்கங்களும் நம்பிக்கைகளும்

 முனைவர் ப.சுதந்திரம்,தமிழ்த்துறைத்தலைவர்,அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி),   சேலம் - 7.
  சமூகத்தின் நிலைக்களன்களாக விளங்குவன இலக்கியங்களாகும். இவ்விலக்கியங்கள் யாவும் மனிதப் பண்பாட்டைக் காட்சிப்படுத்துவனவாக அமைகின்றன. மனிதர்களைப் பண்பாட்டின் உச்சநிலைக்குக் கொண்டு செல்வன, அவர்களால் பின்பற்றப்படும் பழக்கவழக்கங்களும் நம்பிக்கைகளும் ஆகும். காலத்தின் தேவைக்கு ஏற்ப மக்களால் பழக்கவழக்கங்களும் நம்பிக்கைகளும் மாற்றியமைக்கப்பட்டாலும் அதனுள் மரபு சார்ந்த பயன்பாடுகள் இன்றளவும் உள்ளன. இக்கருத்தை அடியொற்றி நம் முன்னோர்களின் வீரப்பண்பைகளை எடுத்தியம்பும் சங்க இலக்கிய எட்டுத்தொகை நூல்களுள் புறநானூற்றில் """"பழக்கவழக்கங்களும் நம்பிக்கைகளும்"" என்னும் நோக்கில் சடங்குநிலையைக் கடந்து நிலவியவை மட்டுமே இங்குச் சுட்டப்படுகின்றன.
 பழக்கவழக்கங்கள்
                ‘பழக்கம்’ என்பது ஒரு தனிமனிதனிடம் இயல்பாக அமையும் நடத்தைப் பாங்காகும். இப்பழக்கமே மனித வளர்ச்சிக்கு இன்றியமையாததாகக் கருதப்படுகிறது. இது ஒரு செயலின் தொடக்கநிலையை உணர்த்துவதாகவும் அமைந்துள்ளது. பழக்கத்தின் தொடர்ந்த நிலை ‘வழக்கம்’ஆகும். இது சமூகம் சார்ந்த ஒன்றாகும். இதன் காரணமாகவே பழகிப்போன ஒன்று சமூகத்தில் வழங்கி வருவது வழக்கமாக கொள்ளப்படுகிறது. இதனை,
""""பழக்கங்கள் சமுதாயத்தால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றபொழுது வழக்கங்களாக மாறுகின்றன. தனி மனிதனிடம் இயல்பாக வந்தமைந்த நடத்தையைப் பழக்கம் எனவும், இனக்குழுவில் உள்ள பலருடைய மன எழுச்சி, உணர்ச்சி ஆகியவற்றுடன் இயைந்து நிற்பது ‘வழக்கம்’ எனவும் உரைக்கப்படுகிறது’’1என்று சமூகவியலார் உரைக்கின்றனர்.
 புறநானூற்றில் பழக்கவழக்கங்கள்
                தமிழர் வீரத்தின் விளைநிலமாகத் திகழும் புறநானூற்றில் வீரம் சார்ந்த பதிவுகள் மட்டுமல்லாது, பிற பண்பாட்டுக்கூறுகள் பற்றிய பதிவுகளும் காணப்படுகின்றன. புறநானூற்றில் பழக்கவழக்கங்கள் குறித்த பதிவுகளைப்,
1.             போர் சார்ந்த பழக்கவழக்கங்கள்   2.  புலவர் சார்ந்த பழக்கவழக்கங்கள்3.             பொதுவான பழக்கவழக்கங்கள்என்னும் முறையில் ஆராயலாம்.
1.போர் சார்ந்த பழக்கவழக்கங்கள்
சங்க இலக்கிய பழந்தமிழர்கள் போர் நிகழ்வுகளில் சில மரபு சார்ந்தபழக்கவழக்கங்களைப் பின்பற்றி வந்தனர். பின்நாளில் இந்தப் பழக்கவழக்கங்கள் தமிழர்கள் பின்னாளில் நன்னெறி பெறவும் காரணமாக அமைந்தன. போர்க் காலங்களில் சில பழக்கவழக்கங்களைக் கையாண்டனர். இவை :
அ. பூச்சூடுதல்ஆ. பகைநாட்டை அழித்தல்இ. மறக்குடி மாண்புஎன்ற வகையில் பிரித்தறியப்படுகிறது.
அ. பூச்சூடுதல்
                தமிழர்கள் நிரைக்கவர்தல் முதலான போர் நிகழ்வுகளின்போது ஒவ்வொரு போர்நிகழ்வுகளுக்கும் வெவ்வேறு விதமான பூக்களைச்சூடிப் போர் புரிந்துள்ளனர்.
""""போந்தே வேம்பே ஆரென வரூஉம்
மாபெரும் தானையர் மலைந்த பூவும்’’2
என்று தொல்காப்பியம் இயம்பும். பெரும்பாலாகப் பூச்சூடுதல் என்பது தத்தம் வீரர்களை அடையாளப்படுத்துவதற்கான அறிகுறியாகும். இப்பண்பு தமிழர்களின் முறைசார்ந்த போர்நெறிகளைக் குறிப்பிடுவனாவாக அமைந்துள்ளன. புறநானூறு,கௌரவர்கள் தும்பைப் பூவைச்சூடிப் பாண்டவர்களுடன் போரிட்டு இறந்ததாகக் குறிப்பிடுகிறது.
                                """"அலங்குளைப் புரவி ஐவரொடு சினைஇ
                                நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை’’ (புறம். -2: 13-14)
என்ற பாடலின் வழி வீரர்கள் பூச்சூடி போரிட்ட பழக்கவழக்கங்களை அறியமுடிகிறது.
ஆ. பகைநாட்டை அழித்தல்
                பகைநாட்டை அழித்த     சங்ககால    மன்னர்கள்  பகைநாட்டை   வென்று   பகை   மன்னனை அடிமைப்படுத்துவதோடு, அவர் நாட்டில் உள்ள செல்வ வளங்களைக் கொள்ளையிட்டும், அவர் நாட்டினைத் தீயிட்டுக் கொளுத்தியும், வளமிக்க நிலங்களைப் பாழ்படுத்தியும், பகை நாட்டினை அழிக்கவும் செய்தனர். அத்தகைய செயல்கள் வரம்பு மீறிய பேரழிவாகவும்,போர்க்குற்றமாகவும் கருதபடாமல் போருக்குரிய பழக்கவழங்கங்களாகக் கருதப்பட்டன.""""பண்டைத் தமிழகத்தில் இடையறாத போர்கட்கிடையே மக்கள் வாழ வேண்டியிருந்தது.  படையெடுத்துச் சென்றவர் பகைவர் நாட்டில் புரியும் மறச் செயல்கள் பலவாகவிருந்தன. ஊர்களையழித்தல், நீர் நிலைகளைப் பாழாக்குதல், விளை வயல்களைச் சிதைத்தல், மன்றங்களை அழித்தல் ஆகிய செயல்கள் இவற்றுள் சிலவாகும்""3
என்ற கருத்து அதனையே உணர்த்துகிறது. இத்தகைய போர்நெறி சார்ந்த பழக்கவழக்கங்களை,
ஆ.1. காவல் மரத்தை அழித்தல்ஆ.2. தற்காலிக அழிவுஆ.3.நிரந்தர அழிவுஎன்ற பான்மையில் வகைப்படுத்தலாம்.
ஆ.1. காவல் மரத்தை அழித்தல்
                                பழந்தமிழ் வேந்தர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மரத்தைப் பேணிக்காத்து வளர்த்தனர்;அம்மரமானது நாட்டையும் மக்களையும் காப்பாற்றும் என நம்பினர்; அதனைக் காவல்மரம் என்றழைத்தனர்.  அது மட்டுமல்லாமல், பழந்தமிழர் காவல் மரத்தினை வழிபடுவதற்குரிய மரமாகவும் கொண்டிருந்தனர்.  வேங்கை,வேம்பு, புன்னை முதலிய பல்வேறு மரங்களைக் காவல் மரங்களாகப் பழந்தமிழ் மன்னர்கள் போற்றி வளர்த்துள்ளனர்.  பகை மன்னனால் வெட்டி வீழ்த்தப்படாமல் காவல் மரத்தைக் காப்பது மன்னனின் இன்றியமையாத கடமையாகக் கருதப்பட்டது.  மன்னனின் காவல் மரத்தை வெட்டினால் தோல்வி உறுதியாகிவிடும். அதனால்தான், பழந்தமிழ் மன்னர் இதற்கென்றே வீரர்களை நியமித்து இரவு பகலாகக் காவல் மரத்தைக் காத்து வந்தனர்.  பகை மன்னரை அவமானப்படுத்த யானைகளை அதில் கட்டுவர்.  காவல் நிறைந்த மரமாக இருந்ததால்‘கடிமரம்’ என்றும் காவல் மரத்தை அழைத்தனர்.
""""பண்டைக் காலத்தில் பகைவரின் காவல் மரம் வீழ்த்தப் படுமானால் தோல்வி என்பது பொருள்.  காவல் காத்து நிற்பதால் அதற்குக் ‘கடிமரம்’ என்று பெயர்.  போரின் போது காவல் மரத்திற்கு ஊறு நேரா வகையில் பாதுகாப்பதில் கண்ணும் கருத்துமாய் இருந்தனர்""4
என்ற கருத்தின் வழி காவல் மரத்தினைப் பகைவர்கள் அழிக்காதவாறு பாதுகாத்துவந்த போர்சார்ந்த பழக்கவழக்கத்தினை அறியமுடிகிறது.
                                """"கடிமரம் துளங்கிய காரும் நெடுநகர்
                                வினைபுனை நல்லில் வெவ்வெரி நைப்ப’’ (புறம்.-23:9-10)
என்று கல்லாடனார் பாடலின் வழி நெடுஞ்செழியன் பகைவரது காவல் மரத்தைத் தகர்த்த செய்தியை அறியமுடிகிறது.
ஆ.2. தற்காலிக அழிவு
                சங்ககால மன்னர் பகைவரை வெற்றிகொள்ளும்போது அவர்தம் நாட்டைப் பாழ்படுத்துவது வழக்கமாகும்.  அதில் சிலர் தற்காலிகமான அழிவுகளை மட்டும் ஏற்படுத்துவர்.  தற்காலிக அழிவு என்பது, நாட்டைப் பகைவர் அழித்தாலும் மீண்டும் அவ்வளங்களை ஏற்படுத்திக் கொள்ளக் கூடிய வகையில் அமைவது, அதாவது நாட்டில் உள்ள செல்வங்களைக் கொள்ளையிடுவதும், குளங்களை அழிப்பதும் போன்றன.
                                """"குடிக்கடன் ஆகலின் குறைவினை முடிமலர்
                                  செம்புறழ் புரிசைப் பாழி நூறி""5
என்ற அகநானூற்றுப் பாடல் அடிகள்   தற்காலிக அழிவின் தன்மையைக் கூறுகின்றன.
                பல்யாகசாலை முதுகுடுமிப்பெருவழுதி பகைவர் நாட்டை வெற்றி கொண்டான்.  அவர்நாட்டு வயல்களில் குதிரைகள் பூட்டிய தேரைச்செலுத்திப் பாழாக்கினான். பகைவரின் கடுமையான காவலைத் தகர்த்து,தந்தங்களையுடைய யானைகளைக் கொண்டு குளங்களைப் பாழ்படுத்தி மக்களுக்குப் பயன்படாதவாறு செய்தான்.
                                """"புள்ளினம் இமிழும் புகழ்சால் விளைவயல்
                                  வெள்ளுலைக் கலிமான் கவிகுளம் புகளத்
                                  தேர்வழங் கினைநின் தெவ்வர் தேஎத்துத்
                                  துளங்கியலாற் பனையெருத்தின்
                                  பாவடியால் செயல் நோக்கின்
                                  ஒன்று  மருப்பின் களிறு அவர
                                  காப்புடைய கயம்  படியினை
                                  அன்ன சீற்றத்து அனைய"" (புறம்.  15:4-11)
என்ற நெட்டிமையாரின் பாடலில் பெருவழுதி பகைவர் நாட்டை அழித்த போர்ப்பழக்கவழக்கமானது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
                அதியமான் நெடுமான் அஞ்சி பகைவர் நாட்டிலுள்ள பாதுகாப்புடைய அரண்கள் பலவற்றை வென்று அழித்தான்.
                                """"கடிமதில் அரண்பல கடந்த
                                  நெடுமான் அஞ்சி"" (புறம்.92- 5-6)
என்ற ஔவையார் பாடல் அதியனின் வீரத்தன்மையின் வழி பகைநாட்டு அரண்களைத் தகர்த்த செய்தி அறியப்படுகிறது.
(ஆ)  நிரந்தர அழிவு
                பகைவர் நாடு மீண்டும் எழுச்சி பெறாவண்ணம் அழிக்கப்படுவது நிரந்தர அழிவு ஆகும்.  பகைவர் நாட்டிலுள்ள வளங்களை முழுவதும் அழித்து, வளமிக்க நிலங்களையும் மற்ற எல்லா இடங்களையும் கழுதை ஏர் பூட்டி உழுது பயிர்கள் எதுவும் விளையா வண்ணம் அழிப்பதும் ஊரை எரியூட்டி அழிப்பதும் நிரந்தர அழிகளாகும். போரின் இறுதிக்கட்டமாக செயல்படுத்தும் பழக்கவழக்கங்களாக இவை கொள்ளப்படுகின்றன.
""""கழுதை ஏர் உழுதல் என்பது வெற்றி பெற்ற மன்னன் மாற்றரசரை இழிவு படுத்தும் நோக்கில் ஏரில் கழுதைகளைப் பூட்டி உழுத செயல் முறையாகும்.  பகை வேந்தரை இழந்த நிலையினதாக அவரது நன்னிலத்தை ஒன்றுக்கும் உதவாத வன்னிலமாகக் கருதும் போக்கில் இதனை நிகழ்த்தியுள்ளனர்""6
என்ற கருத்து நிரந்தர அழிவின் தன்மையினைக் கூறுகிறது.
                பல்யாகசாலை    முதுகுடுமிப்      பெருவழுதி  பாதுகாப்பு   உடைய பகைவரது இடங்களைக் கைப்பற்றி அவ்விடங்களில் கழுதைகளைப் பூட்டிய ஏரினைக் கொண்டு அவர்களது வளமிக்க நிலங்கள் எல்லாவற்றையும் எதற்கும் பயன்படாது பாழாக்கினான்.
                                """"கடுந்தேர் குழித்த ஞெள்ளல் அரங்கண்
                                  வெள்வாய்க் கழுதை புல்லினம் பூட்டி
                                  பாழ்செய் தனைஅவர் நனைந்தலை நல்லெயில்"" (புறம் :1-3)
என்ற நெட்டிமையாரின் பாடல் வழி பெருவழுதி பகைவருக்குச் செய்த அழிவின் இயல்பை அறிய முடிகிறது.
                பகைவர் நாட்டிலுள்ள நெடிய பரந்த ஊர்களில் தங்கியிருக்கும் மகளிரும், போரில் ஈடுபடாதவர்களும் அஞ்சி அலறிக் கொண்டு ஊர்ப்பொதுவிடத்திற்குச் செல்லுமாறு, அவ் ஊர்களைத் தீயிட்டுக் கொளுத்துவது உழபுல வஞ்சி என்பதை,
                                """"நேராதார் வளநாட்டைக்
                                  கூரெரி கொளீஇ யன்று""7
என்ற புறப்பொருள் வெண்பாமாலை நூற்பா உணர்த்துகிறது. அதியமான் நெடுமான் பகைவர் நாட்டை வென்று, பகை நாட்டிற்கு எரியூட்டிய செயலானது மலையைச் சூழும் கருமுகில் போல இருந்த தன்மையினை,
                                """"முனைசுட எழுந்த மங்குல் மாப்புகை
                                மலைசூழ் மஞ்சின் மழகளிறு அணியும்’’ (புறம். 103:6-7)
என்ற பாடலின் மூலம் பகை நாட்டைத் தான் வென்றபிறகும் மீண்டெழாத வண்ணம் தீமுட்டிய போர்ப்பழக்கத்திறன் வெளிப்படுகிறது.
இ.மறக்குடி மாண்பு
                பண்டைய தமிழர்கள் அனைவரும் வீரம் பொருந்தியவர்களாய் இருந்தனர். காற்றினால் முரசு அதிருவதைப், போருக்காக முரசு அறைகிறார்கள் என்று நினைத்துப் போருக்குப் புறப்படும் வீரம் செறிந்தவர்களாக இருந்தனர். வீரம் நிறைந்து காணப்பட்டாலும் போர்க்களத்தில் வீரத்துடன் போரிட்டு முதுகுப் புறத்தில் விழுப்புண் பட்டாலும் உயிரையே விடும் இயல்பினராய் இருந்தனர்.""போர்க்களத்தில் முகத்திலும் மார்பிலும் புண்பட்ட வீரனை எல்லோரும் போற்றுவர்.  விழுப்புண் பெற்றான் என்று வியந்து  பேசுவர்,வீரக்கல் நாட்டி வணக்கம் செலுத்துவர்.  ஆனால் புறத்திலே புண்பட்ட வீரனை எல்லோரும் இகழ்வர், போர்க்களத்திலே புறங்காட்டி ஓடியதற்கு அடையாளமாகிய அப்புண்ணைப் பார்க்குந்தோறும் பழித்தும் இழித்தும் பேசுவர்.  ஆதலால் மான வீரர் ஒரு போதும் புறப்புண் தாங்கி உயிர் வாழ இசையார்""8என்பது  மறகுடி மாண்பினரரின் உண்மைத்தன்மையை விளக்குகிறது.
                சேரலாதன் வெண்ணிபறந்தலை என்னும் இடத்தில் கரிகால் பெருவளத்தானிடம் போரிட்டு, புறமுதுகில் ஏற்பட்ட புண்ணுக்கு நாணி வடகிருந்து உயிரிட்டான் என்பது கரிகாலன் பெற்ற வெற்றியை விடச் சிறப்பாகக் கருதப்பட்டது என்பதை,
                                """"கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை
                                மிகப்புகழ் உலகம் எய்திப்
                                புறப்புண் நாணி வடக்கிருந் தோனே’’ (புறம்.66:6-8)
என்னும் பாடல் விளக்குகிறது. பிறந்த குழந்தையானது சதைப் பிண்டாமாக பிறந்து இறந்தாலும், அதனை வாளால் கீறி புதைக்கும் பழக்கம் மக்களிடையே காணப்பட்டது என்பதனை,
                                """"குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்
                                ஆள்அன்று என்று வாளின் தப்பார்""(புறம்.74)
என்னும் புறப்பாடல் உணர்த்துகிறது. நோய்ப்பட்டு இறந்தவர்களையும் வாளால் வெட்டி தருப்பைப் புல்லில் கிடத்தி அந்தணர்கள் முன்னிலையில் புதைக்கும் வழக்கமும் மறக்குடி மாண்பாக திகழ்ந்தது. இத்தகைய மறப்பண்பு நிறைந்தவர்கள்,
                                """"பெரியோரை வியத்தலும் இலமே
                                சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே"" (புறம்.192)
என்னும் நற்குணத்தவர்களாகக் காணப்பட்டனர்.
2. புலவர் சார்ந்த பழக்கவழக்கங்கள்
                புலவர்கள் பெரும்பாலும் தான் மட்டும் வாழாது,தன்னைச் சார்ந்தவர்களையும் வாழவைக்கும் எண்ணம் கொண்டவர்களாகவும் நாட்டையாளும் மன்னனுக்கும் நல்லறிவு புகட்டியும் வாழ்ந்த பெருந்தகையாளர்கள் ஆவார்.     கொடுமையில் மிகப் பெரிய கொடுமை பசிக்கொடுமை. அதனால்தான் புலவர்கள் மன்னர்களிடம் உணவு வளத்தின் இன்றியமையாமையை அதிகம் வற்புறுத்துகின்றனர். குறுங்கோழியூர் கிழார், மாந்திரஞ்சேரல் இரும்பொறையிடம் படைபலத்தைப் பெருக்கும் மன்னனே, நாட்டு மக்களைப் பசியின்றிக் காக்கும் சோற்று வளத்தையும் பெருக்குக என்று அறிவுறுத்தியதனை,
                                """"வேறு  புலத்து  இறுக்கும்  தானையொடு
                                  சோறுபட  நடத்தீ  துஞ்சாய்  மாறே"" (புறம்.22:37-38)என்ற பாடல் அடிகளால் அறியலாம்.               உணவுப் பஞ்சத்தைப் போக்க வற்புறுத்தியதுடன் முறையறிந்து மக்களிடம் வரிவசூலிக்கும் தன்மையைக் குறித்தும் விளக்கியுள்ளதை,
                                """"அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே,
                                கோடி யாத்து, நாடு பெரிது நந்தும்’’ (புறம்.184: 5-6)
என்னும் பாடலடியால் புலவர்களின் பொதுநலப்போக்கு அறியப்படுகிறது.
3.பொதுவான பழக்கவழக்கங்கள்
                பழந்தமிழ் மக்கள் சில பொதுவான பழக்கவழக்கங்களை தம் வாழ்க்கையில் மேற்கொண்டுள்ளனர். அவற்றில் இன்றியமையாததாகக் கருதப்படுவது,
அ. விருந்தோம்பல்
ஆ. கொடை
என்பனவாகும்.


__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
RE: புறநானூற்றில் பழக்கவழக்கங்களும் நம்பிக்கைகளும் முனைவர் ப.சுதந்திரம்
Permalink  
 


அ.விருந்தோம்பல்
                                சங்ககாலச் சமுதாய பழக்கவழக்கங்களில் விருந்தோம்புதல் மிக உயர்ந்த அறமாகத்திகழ்ந்தது. மனிதர்களுக்கு மிகக் கொடியதாக விளங்குவது‘பசிக்கொடுமை’. அதனைக் களைவதற்கே விருந்தோம்புதல் அறம் தோற்றுவிக்கப்பட்டது. சங்ககால.  ‘விருந்து தானே புதுவது மேற்றே’ என்ற அடியின் வழி முற்றிலும் புதியதாக வந்தவர்களுக்கு உணவளித்து மகிழ்வதே விருந்தோம்பலாகும்.
                                """"செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
                                  நல்விருந்து வானத் தவர்க்கு""9
என்ற குறள் விருந்தோம்பலின் தன்மையினைக் குறிப்பிட்டுள்ளது.
                செல்வகடுங்கோ வாழியாதன் விருந்தோம்பும் அறத்தைச் சிறப்பாகக் கடைப்பிடித்து வாழ்ந்தவன்.  கபிலர் அவனைக் காணச்சென்ற போது அவருக்குப் பல்வேறு உணவுகளைப் படைத்தான்.
                                """"கறிசோறு உண்டு வருந்து தொழில் அல்லது
                                  பிறதொழில் அறியா"" (புறம்.14: 14-15)
என்ற அடிகளில் கபிலரின் கைகள் உணவினை உண்பதைத் தவிர வேறொன்றையும் அறியாத நிலையில் கடுங்கோவின் விருந்தோம்பல் இயல்பு அமைந்திருந்த திறத்தை அறிய முடிகிறது.
                சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனின் நாடு மிக்க வளமிக்கதாக விளங்கியது.  பல்வேறு பயிர் வகைகள் அவன் நாட்டில் விளைந்தன.  அதனால், அந்நாடு விருந்தோம்பலில் சிறந்து விளங்கியது.  அவனைக் காணச்சென்ற பாணர்கள் காலையும், மாலையும் புறாவின் முட்டையை ஒத்த வரகு அரிசியைப் பாலில் பொங்கித் தேன் சேர்த்து உண்டனர்.  அதனுடன் முயல் இறைச்சியையும் உண்டனர்.
                                """"காலை அந்தியும் மாலை அந்தியும்
                                  புறவுக் கருவன்ன புன்புல வரகின்
                                  பாற்பெயல் புன்கம் தேனொடு மயக்கித்
                                  குறுமுயல் கொழுஞ்சூடு கிழித்த ஒக்கல்"" (புறம்.34: 8-11)
என்ற ஆலந்தூர் கிழாரின் பாடல் அடிகள் கிள்ளி வளவனின் விருந்தோம்பும் இயல்பினைக் குறிப்பிட்டுள்ளன. காரியாதியைக் காண வந்த இரவலர்கள் பலரும்,பன்றித்தசையோடு பனையோலைக் குடையில் கொடுத்த சோற்றைப் பெற்று வயிறு நிரம்ப உண்டனர்.  அதற்கு ஈடாக, மற்ற நாட்டு மன்னனிடம் சென்று வருந்திப் பாடிப் பெற்ற யானைகளும் ஈடாகாது இருந்த திறத்தை,
                                """"எயினர்  தந்த  எய்ம்மான்  எறிதசைப்
                                  பைஞ்ஞினம்  பெருத்த  பசுவெள்  அமலை
                                  வருநர்க்கு  வரையாது  தருவினர்  சொரிய
                                  இரும்பனங்  குடையின்  மிசையும்
                                  பெரும்புலவர்  வைகறைச்  சீர்  சாலதே!"" (புறம்.177:13-17)
என்ற ஆவூர் மூலங்கிழாரின் பாடல் அடிகள் காரியாதியின் விருந்தோம்பும் இயல்பைப் பதிவு செய்துள்ளன. கரும்பனூர் கிழான் வேங்கடமலை நாட்டை ஆண்ட குறுகிய மன்னன். இயல்பாகவே விருந்தினர்கள் விருந்துக்கு வந்த ஓரிரு நாள்களிலேயே சென்று விடுவர்.  ஆனால் கரும்பனூர் கிழான் அரண்மனைக்கு வந்த விருந்தினர்கள் இறைச்சியும்,சோறும் பல நாள் உண்டனர்.  அஃது தெவிட்டியதால் பால் கலந்தும், வெல்லப்பாகு கலந்தும் செய்த இனிப்புகளை பல நாள் உண்டு பசி என்ற சொல்லையே மறந்து, இனிதாக அவன் அரண்மனையிலே வீற்றிருந்தனர்.
                                """"ஊனும் ஊனும் முனையின் இனிதெனப்
                                  பாலிற்  பெய்தவும்,  பாகிற்  கொண்டவும்
                                  அளவுபு  கலந்து,  மெல்லிது  பருகி
                                  விருந்து  உறுத்து,  ஆற்றி  இருந்தெனமாக!"" (புறம்.381: 1-4)
என்ற நன்னாகரின் பாடல் அடிகள் பலநாள் இன்முகத்தோடு விருந்து உபசரித்த கரும்பனூர் கிழானின் விருந்தோம்பல் இயல்பைக் குறிப்பிட்டுள்ளன.   சங்க காலத்தில் மன்னர்கள் மட்டுமல்லாது கொடை அறத்தில் பரிசிலர்களும் சிறப்புற்று விளங்கினர்.  இமயவரம்பனிடம் பெற்ற பொருட்களைக் கொண்டு சோற்றைச் சமைத்தும், இறைச்சியைக் சமைத்தும் விருந்தினர்க்கு இடையறாது வழங்கினர்.
                                """"உண்மின் கள்ளே!  அடுமின்  சோறே
                                  எறிக  திற்றி  ஏற்றுமின்  புழுக்கே
                                  வருநர்க்கு  வரையாது  பொலங்கலம் தெளிர்ப்ப!""10
என்ற குமட்டூர் கண்ணனாரின் பாடலால் மன்னர்கள் மட்டுமின்றி அவர்களிடமிருந்து பெற்ற பொருட்களைக் கொண்டு, தமக்கு மட்டும் என்று எண்ணாது மற்றவர்களுக்கும் கொடுத்த பரிசிலரின் விருந்தோம்பல் இயல்பை அறிய முடிகிறது.
ஆ.கொடை
                சங்ககால மன்னர்கள் தங்களை நாடி வந்த பரிசிலர்களின் விருப்பத்தினை அறிந்தவராக விளங்கினர். செல்வ நிலையாமையை உணர்ந்த மன்னர்கள், அவர்களுக்கு இவ்வளவுதான் கொடுக்க வேண்டும் என்று வரையறை கொள்ளாது அளவில்லாமல் அள்ளிக் கொடுத்தனர்.  கொடை கொடுப்பதைச் சிறந்த பழக்கமாகவும் அதனையே அறமாகவும் கருதினர். ஆதலால், அவர்கள் கொடை மடம் பட்டவர்களாக,""""செல்வத்து பயனே ஈதல்""(புறம்.189) எனும் நல்லியல்பு உடையவர்களாய் விளங்கினர்.
                சேரமான் செல்வகடுங்கோ வழியாதன் மறத்தை விட அறத்தைப் போற்றியவன்.  அதிலும் கொடை அறத்தை உயிரெனக் கொண்டவன்.  தன்னை நாடி வந்த பரிசிலரின் விருப்பம் பொய்யாகும்படிச் செய்யாதவன்.  அவர்களின் வறுமை நிலையை அறிந்து இப்பிறப்பு மட்டுமன்று மறுபிறப்பிலும் வறுமையை அறியாத வகையில் வாழ்வதற்குத் தேவையான செல்வத்தை வாரி வழங்கிய வள்ளல் தன்மை உடையவன்.
                                """"ஒடுங்கா உள்ளத்து ஓம்பா ஈகை"" (புறம்.8: 4)
என்ற கபிலரின் பாடல் அடியால் செல்வகடுங்கோ வரையாது வழங்கிய கொடை இயல்பை அறிய முடிகிறது.     சங்ககாலப் புலவர்கள் வள்ளல்களை நாடிச் சென்று அவர்களது புகழினைப் பாடிப்பரிசில் பெறுவர்.  அத்தன்மை உடையவர்கள் சேரன் மாந்தரஞ்சேரல் இரும்பொறையைக்காணச் சென்றனர்.  அவனது புகழைப் பாடினர்.  அவன் அவர்களின் வறுமை தீரப்பொருள்களை அளவில்லாது வழங்கினான்.  அதனைக் கண்ட பரிசிலர்கள் அவனைத் தவிர வேறு யாரையும் பாட மறந்தனர்.
                                """"நின்பாடிய அலங்கு செந்நாப்
                                  பிறர்இசை நுவலாமை
                                  ஓம்பாது ஈயும் ஆற்றல் எங்கோ!"" (புறம்.22:31-33)
என்ற குறுங்கோழியூர் கிழாரின் பாடல், பரிசிலர்கள் வேறு யாரையும் பாடாத அளவிற்குக் கொடையை அளவில்லாது வழங்கிய சேரனின் கொடை இயல்பைக் குறிப்பிட்டுள்ளது.
                சோழன் கிள்ளிவளவனைப், பாணர்கள் காணச் சென்றனர்.  அவர்களின் வரவறிந்த வளவன் அவர்களை இன்முகத்துடன் வரவேற்றான். நடந்த களைப்பின் மிகுதியால் உண்டான பசித்துன்பத்தைப் போக்கப் பாண்சுற்றம் முழுமைக்கும் உண்ணும் அளவிற்குச் சோற்றை அளித்தான்.  அவர்கள் வறுமையில்லாது இனிது வாழச் செல்வங்களை அளவில்லாது வழங்கினான்.
                                """"அமலைக் கொழுஞ்சோறு ஆர்த்த பாணர்க்கு
                                  அகலாச் செல்வம் முழுவதும் கொடுத்தான்"" (புறம்.34: 14-15)
என்ற ஆலந்தூர் கிழாரின் பாடலால் பாண் சுற்றத்தின் வறுமையினைக் களைந்த கிள்ளி வளவனின் கொடை இயல்பை அறிய முடிகிறது.    இசுலாம், கிறித்துவம் முதலான சமயங்கள் அச்சமயத்தைச் சார்ந்தவர்கள் தம் வருவாயில் 25ரூ ஐ அறக்காரியங்களுக்கு அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளன.  வைதிக சமயத்தில் அத்தகைய விதிகள் இல்லாத போதும் அவற்றைப் பின்பற்றி வாழ்ந்த சங்க மன்னர்கள் தமது பொருளின் குறிப்பிட்ட அளவைக் கொடையாக அளிக்காமல், குறிப்பிட்ட விழுக்காடு அளவிற்குச் சேமித்து வைத்து கொள்ளாமல் தம் செல்வம் முழுவதையும் கொடடையாகக் கொடுத்தானர். இதிலிருந்து கொடையின் இயல்பு புலனாகிறது.
                சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி சிறந்த வள்ளல் தன்மை உடையவன்.  இரவலர்களை எந்நேரமும் எதிர்பார்த்து வாழ்ந்தவன்.  மிக்க வறுமையில் வாடிய பாணன் ஒருவன், அவனுடைய வாயிலில் நின்று தடாரிப் பறையை வாசித்தான்.  அதனைக் கேட்ட சோழன்,தன்னை நாடி இரவலன்தான் வந்துள்ளான் என்று உறுதிபட எண்ணி, வாயிலில் சென்று அவனை அழைத்து வந்தான். அப்பாணனின் குறிப்பறிந்து வறுமைத்துயர் நீங்க பல்வேறு அணிகலன்களையும், பல்வேறு பொருட்களையும் கொண்டு செல்ல முடியாத அளவிற்கு வழங்கினான்.
                                """"எஞ்சா மரபின் வஞ்சி பாட
                                  எமக்கென வகுத்த அல்ல, மிகப்பல
                                  மேம்படு சிறப்பின் அருங்க வெறுக்கை
                                  தாங்காது பொழிதந் தோனே"" (புறம்.378: 9-12)
என்ற ஊன்பொதி பசுங்குடையாரின் பாடல் அடிகள், சோழன் இரவலர்களை எதிர்பார்த்து,  அவர்களை வாயில் வரை வந்து அழைத்துச் சென்று, வேண்டியதைக் குறிப்பறிந்து அளவில்லாது வழங்கிய கொடை இயல்பைக் குறிப்பிட்டுள்ளன.       சங்ககாலத்தில்  மன்னர்களும், புலவர்களும்  செல்வம்  படைத்தவர்களும்  மட்டும்  வள்ளல் தன்மையில் சிறந்து விளங்கவில்லை.  மகளிரும் வள்ளல் தன்மையில் சிறந்து விளங்கியுள்ளனர்.  ஆடவர்கள் கொடுத்த கொடையை விஞ்சுகின்ற வகையில் மகளிரின் கொடைத் தன்மை சங்ககாலச் சமுதாயத்தில் அமைந்திருந்தது.""""புறநானூற்றுக்காலச் சமுதாயத்தில் இல்லறம் சிறப்படைய கணவனும், மனைவியும் ஒன்றுபட்டு வீடு தேடி வரும் இரவலரைப் பேணுவது இல்லறத்திற்கே அடிப்படைப் பண்பாக, உயர்ந்த அறநெறியாகப் போற்றப்பட்டது.  மகளிர் கொடைப் பண்பில் ஆடவரை விடச் சிறந்து விளங்கினர்.  தம்மைத் தேடி வந்த இரவலர்களிடம் இனிய சொற்களை மனம் குளிரப்பேசினர். தம் கணவன் வெகு தொலைவில் சென்றிருந்த போதிலும்,இரவலர்க்கு இல்லையென்று கூறாமல் பரிசு வழங்கினர்""11 என்ற கருத்தால் மகளிரும் கொடை வழங்குவது தம் குடிக்குச் சிறப்பென கருதியதை அறிய முடிகிறது.    கணவன் பொருள் மற்றும் போரின் காரணமாக நெடுந்தொலைவு சென்ற சமயம், அவன் வீட்டிற்குப்பரிசிலன் ஒருவன் வருகிறான். கணவன் இல்லாவிட்டாலும் கொடை அறத்தைச் செய்வதே சிறந்த பண்பு என்று கருத்தில் கொண்டு, அவன் மனைவி பரிசிலனின் மனம் குளிர, பல பெண் யானைகளைப் பரிசிலாகக் கொடுத்துச் சிறப்பிக்கிறாள்.
                                """"பண்டும்  பண்டும் பாடுநர்  உவப்ப
                                  விண்தோய்  சிமைய  விறல்வரைக் கவாசன்
                                  புன்தலை  மடப்படி  பரிசி  லாகப்
                                  கிழவன்  சேட்புலம்  படரின்  இழைஅணிந்து
                                  பெண்டிரும்  தம்பதம்  கொடுக்கும்"" (புறம்.151:1-5)
என்ற பெருந்தலைச் சாத்தனாரின் பாடல் மகளிரும் கொடை வளத்தில் சிறந்து விளங்கியதைக் குறிப்பிட்டுள்ளது.
புறநானூற்றில் நம்பிக்கைகள்
                பண்டைய காலம் முதல் இன்றளவுள்ள பெரும்பாலான நம்பிக்கைகள் அச்ச உணர்வின் காரணமாகத்தான் தோன்றியது. இயற்கைக்கு அப்பாற்பட்ட செயல்களை உணராதபொழுது, அதற்கு மனித மனம் காரணம் கற்பிக்க முயலும்பொழுது அது நம்பிக்கையாக தோற்றம் பெறுகிறது. மனித மனத்தின் விளைவாக தோன்றும் இந்நம்பிக்கைகள் நாளடைவில் மனித வாழ்வில் இன்றியமையாத மற்றும் மனித வாழ்வினை இயக்கும் அளவிற்குப் பெரும் இடத்தினைப் பெற்றுவிடுகிறது.
                பண்டைய தமிழரின் நம்பிக்கைகளை,
1.             சொல் பற்றிய நம்பிக்கைகள்
2.     பேய் பற்றிய நம்பிக்கைகள்
3.             வழிபாடு பற்றிய நம்பிக்கைகள்
4.     கோள்கள் பற்றிய நம்பிக்கைகள்
5.    புள்கள் பற்றிய நம்பிக்கைகள்என்னும் முறைகளில் புறநானூற்றில் உள்ள நம்பிக்கைகள் பற்றிய செய்திகள் வகைப் படுத்தப்பட்டுள்ளன.
1.சொல் பற்றிய நம்பிக்கைகள்
                சொல் பற்றிய நம்பிக்கை என்பது இங்கு விரிச்சிக்கேட்டல் என்பதைக் குறிக்கிறது. இதனை தொல்காப்பியர் பாக்கத்து விரிச்சி என்பார். மேலும் நற்சொல், வாய்ச்சொல், விரிச்சி, வாய்ப்புள், பறவாப்புள் என்றும் அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். சங்க காலத்தில் வாழ்ந்த மக்கள் ஒரு செயலை செய்யும் முன் பொதுஇடத்தில் கூடி நின்று வழிபாடு செய்து அமைதியாக நின்றிருப்பர். அப்போது அவ்வழியே செல்வோரின் வார்த்தைகளை நற்சொல் (அ) விரிச்சியாக கொள்வார்கள்.
                                """"வேண்டிய பொருளின் விளைவுநன்கு அறிதற்கு
                                ஈண்டு இருண்மாலைச் சொல்வோர்த் தன்று’’12
என்ற நூற்பா வழி இதனை அறியமுடிகிறது.
                தலைவனின் மார்பில் விழுப்புண் ஏற்பட்டதால்,அவன் உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என்று எண்ணிய தலைவியின் வாட்டத்தைப் போக்கும் பொருட்டு, முதுபெண்டீர் நெல்லும் நீரும் வைத்து பொதுஇடத்தில் நின்று விரிச்சி கேட்கின்றனர். இதனை,
                                """"நெல்நீர் எரிந்து விரிச்சி யோக்கும்
                                செம்முது பெண்டீன் சொல்லும் நிரம்பா’’ (புறம்.280: 6-7)
என்ற மாறோகத்து நப்பச்சலையாரின் பாடல் வழி பழந்தமிழரின் விரிச்சிக்கேட்ட மாண்பினை அறியமுடிகிறது.
2.பேய்கள் பற்றிய நம்பிக்கைகள்
                பழந்தமிழர் இடையே பேய்கள் பற்றிய நம்பிக்கை மிகுதியாகக் காணப்பட்டது. புறநானூறும் இதனை சிறப்பாக எடுத்துரைக்கிறது. போரில் புண் ஏற்பட்ட மறவனைப் பேய் தீண்டிவிடும் என்பதற்காக, அவனை பேய் தீண்டாவண்ணம்,அவனது சுற்றத்தார்கள் சிலமுறைகளின் அடிப்படையில் காத்த நிலைதனைப் பண்டைய தமிழரிடையேக் காணலாம். இதனை தொல்காப்பியம்,
                                """"ஏமஞ் சுற்றம் இன்றி புண்ணோன்
                                பேஎய் ஓம்பிய பேஎய் பக்கமும்’’13
என்றும், புறப்பொருள் வெண்பாமாலை தொட்டகாஞ்சி,தொடாக்காஞ்சி, பேய்க்காஞ்சி என்ற நிலையிலும் பதிவுசெய்துள்ளன.
                போர்க்களத்தில் பகைவரால் புண்பட்ட வீரன் ஒருவனை அவனது சுற்றத்தார், பேய் தீண்டாத வண்ணம் வீட்டுமுகப்பில் இரவம் மற்றும் வேம்புமரத்தின் இலைகளைச் செருகினர். பேயை விரட்டுவதற்காக யாழோடு பல வாத்தியங்களை இசைக்கச்செய்தனர். வீரனது கண்ணுக்கு மை வைத்தும் வீடுமுழுவதும் வெண்சிறுகடுகையும் தூவினர். ஆம்பல் குழலையும் ஊதினர். பேய்களை விரட்டக்கூடிய காஞ்சிப்பண்ணை இசைத்துப்பாடினர். வீட்டைப் பேய் அணுகாதபடி நறுமணம் மிக்கப் பொருள்களின் புகைகளைப் பரவச்செய்தனர். இத்தன்மையை,
                                """"தீங்கணி இரவமொடு வேம்புமனைச் செரிஇ
                                வாங்குமருப்பு யாழொடு பல்இதயம் கறங்கக்
                                கைபயப் பெயர்த்து மைஇழுது இழுகி’’ (புறம்.281: 1-3)
என்ற அரிசில்கிழாரின் பாடலின் வழி அறியமுடிகிறது.
 


__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
Permalink  
 

 3.வழிபாடு பற்றிய நம்பிக்கைகள்
                ஆதிமனிதன் இயற்கையின் சீற்றத்தையும் அழிவையும் கண்டு பயந்தான். அதிலிருந்து தன்னைக் காத்துக்கொள்ள இயற்கையை வழிபட ஆரம்பித்தான். அன்று முதல் இன்று வரை தமிழ்ப்பண்பாட்டில் வழிபாடு நீங்கா இடம் பெற்றுள்ளன. வழிபாட்டின் மூலம் மக்கள் தாம் நினைத்தது நிறைவேறும் என்றும் அது மட்டுமல்லாமல் அழிவுகள் ஏற்படாது என்றும் நம்பினர். காலப்போக்கில் வழிபாட்டோடு பல்வேறு செயல்களையும் வேண்டுதல் வைத்து வழிபட ஆரம்பித்தனர். இந்த வேண்டுதலானது சங்க காலம் தொட்டே இருந்துவந்துள்ளது. இத்தகைய வழிபாட்டுமுறையானது புறநானூற்றில் நடுகல் வழிபாடாகக் காட்டப்படுகிறது. இவ்வழிபாட்டுமுறையை பின்னாளில் முன்னோர் வழிபாடாகத் தோற்றம் பெற்றது.
நடுகல் வழிபாடு
                நடுகல் வழிபாடானது தமிழர்களின் மிகப் பழமையான நம்பிக்கை சார்ந்த வழிபாட்டு முறையாகும். போர்க்களத்தில் மிகுந்த வீரம் கொண்டு போரிட்டு இறந்த மறவனுக்கு நடப்படும் ஒரு கல் ‘நடுகல்’ ஆகும். இதற்கு‘வீரக்கல்’ என்றும் பெயர். நடுகல் வழிபாடு பற்றிக்
                                """"காட்சி கல்கோள் நீர்படை நடுதல்
சீர்த்தகு சிறப்பின் பெரும்படை வாழ்த்தல்""14
என்று தொல்காப்பியம் இயம்புகிறது. இந்த வீரக்கல்லிற்கு மயிற்பீலி சூட்டியும் கள் மற்றும் மாமிசம் வைத்தும் வழிபடுவர். மேலும் இக்கல்லை வழிபாட்டால் தங்கள் குழந்தைகளுக்கு எவ்விதத் துன்பமும் ஏற்படாது என்று மக்கள் நம்பினார்கள்.
                                ஆநிரை கவர்ந்து வீரத்துடன் போரிட்டு இறந்த வீரனுக்கு நடுகல் நடப்பட்டது. ‘இரவலனே ! நீ செல்லும் பாதை கொடியதாக இருப்பதால் இந்த வீரனனின் நடுகல்லைத் தொழுது செல்வாயானால் நீ அச்சமின்றிச் செல்லலாம்’ என்று ஒருவன் கூறுகின்ற நிலையைப் புறநானூறு,
                                """"பெருங்களிற்று அடியின் தோன்றும் ஒருகண்
                                இரும்பறை இரவல! சேறி ஆயின்
                                தொழாதனை கழிதல் ஓம்புமதி’’ (புறம்.263:1-3)
என்ற வழி உரைக்கிறது.
4.கோள்கள் பற்றிய நம்பிக்கைகள்
சங்க கால மக்கள் கோள்கள் குறித்து நம்பிக்கைக் கொண்டிருந்தனர். வானில் தோன்றும் கோள் நிலைகளை வைத்து நன்மை, தீமைகளைக் கணித்தனர். இதனை,
அ. எரிகொள்ளிஆ. வடமீன்இ. வெள்ளிமீன்
என்னும் நிலையில் சகுனம் (அ) நிமித்தம் பார்த்தலாக இங்குக் காணலாம்.
அ. எரிகொள்ளி
                எரிகொள்ளி வீழ்வது தீ நிமித்தமாகக் கருதப்பட்டது. எரிகொள்ளி வீழ்ந்தால் நாட்டுமக்களுக்கு அழிவு ஏற்படுவதோடு அல்லாமல், நாட்டு வளங்களும் அழிந்துவிடும் என்ற நம்பிக்கை சங்க மக்களிடையே நிலவிவந்தது.
                கிள்ளிவளவனது பகைநாட்டில் எரிகொள்ளி விழுந்ததைக் கண்ட கோவூர் கிழார் ‘நின் பகைவர் முற்றிலும் அழிவர்’ என்று கூறுவதை,
                                """"திசையிரு நான்கும் உற்கம் உற்கவும்
                                ---------------------------
                                எரிநிகழ்ந் தன்ன செலவின்
                                செருமிகு வளவ! நின் சினைஇயோர் நாடே’’ (புறம்.41)
என்ற பாடல் மூலம் எரிகொள்ளி விழுவதால் நாடு அழிவுறும் என்ற நம்பிக்கை நிலவியதை அறியமுடிகிறது.
ஆ. வடமீன்
                வடக்கில் தோன்றுவதால் இக்கோள்க்கு வடமீன் என்று பெயர். இக்கோள் தீப்பரக்க கீழே விழுந்தால் அந்நாட்டு மன்னருக்கு அழிவு ஏற்படும் என்று நம்பிக்கைக் கொண்டிருந்தனர். யானைகட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை நாட்டில் வடமீன் விழுந்தது. அன்றிலிருந்து ஏழாம் நாள் அவன் இறந்துபட்டான். இதனை,
                                """"தலைநாள் மீன் நிலை திரிய,
                                நிலைநாள் மீன் அதன்எதிர் ஏர்தரத்
                                தொல்நாள் மீன் துறைபடியப்
                                பாசிச் செல்லாது, ஊசி முன்னாது
                                அளக்கர்த்திணை விளக்கமாகக்
                                கனைஎரி பரப்பக் கால் எதிர்பு பொங்கி
                                ஒருமீன் விழுந்தன்றால், விசும்பின் னானே
                                ---------------------------
                                மேலோர் உலகம் எய்தினன்’’ (புறம்.229:6-23)
என்ற பாடல் உணர்த்துகிறது.
இ. வெள்ளிமீன்
                வெள்ளிமீன் வடதிசையில் தோன்றினால் மழை பெய்யும் என்றும் தென்திசையில் தோன்றினால் பஞ்சம் ஏற்படும் என்றும் சங்க கால மக்கள் நம்பினார்கள். இக்கோள் விடியற்காலையில் தோன்றுவதால் ‘விடிவெள்ளி’என்றும் பெயர் பெற்றது.
                சிறுகுடிகிழான் பண்ணனை மதுரை அளக்கர் ஞாழர் மகனார் மள்ளனார் புகழ்ந்து பாடும் போது, அவன் நாட்டில் வெள்ளி மீன் தென்திசையில் தோன்றியதால் மழையின்றி நாடு துன்புற்றநிலையைச் சுட்டிகாட்டுகிறார்.
                                """"வெள்ளி தென்புலத்து உறைய,விளைவயல்
                                பள்ளம் வாடிய பயன்இல் காலை’’ (புறம்.388: 1-2)
என்று புறநானூறு கூறுகிறது.
5.புள்கள் பற்றிய நம்பிக்கைகள்
                சங்க தமிழரிடையில் புள்கள் பற்றிய நம்பிக்கைகள் செறிந்துத் தோன்றின. இதனை, தொல்காப்பியரும் ‘நாளும் புள்ளும் பிறவற்றின் நிமித்தமும்’ என்று உரைக்கிறார்.
                                """"நாளன்று போகிப் புள்ளிடைத் தட்பப்
                                பதனன்று புக்குத் திறனன்று மொழியினும்’’ (புறம்.124: 1-2)
என்னும் காரியினது கொடைப்பெருமை கூறுமிடத்து புள்சகுனம் குறித்து கூறப்படுகிறது. பெரும்பாலும் புள் பறத்தல் தீச்சகுனமாகவே கருதப்படுகிறது.
முடிவுரை
·               சங்க தமிழர்களின் வாழ்வில் பழக்கவழக்கங்களும் நம்பிக்கைகளும் சிறப்பிடம்பெற்று விளங்கின என்பதை அறியமுடிகிறது.·    போர் சார்ந்த பழக்கவழக்கங்களில் பூச்சூடிப் போரிடுவது வழக்கமாக கொண்டிருந்தனர் மற்றும் ஒருவன் மீது பகைக்கொண்டால் அவனது நாட்டின் காவல் மரங்களை அழித்தும், வெற்றி பெற்ற பின் அவனது நாட்டிற்கு அடிப்படையாக விளங்கும் இயற்கை வளங்களை முற்றுமாகச் சிதைப்பதையும் முதன்மை நோக்கமாகக் கொண்டிருந்தனர் என்பது புலப்படுகிறது.·               மேலும் போரில் விழுப்புண் பெறுவதனை வீரமாகக் கருதி மார்பின் வழித்துளைத்து புறப்புண் அடைந்தாலும் அதனை இழுக்கெனக் கருதி உயிர்விட்ட சிறப்பையும் அறியமுடிகிறது.   புலவர்கள் மன்னர்களைப் பாடிப் பரிசில் பெறுவதை மட்டும் தம் தொழிலாகக் கொள்ளாமல் மன்னன் நெறி தவறும் போது,அவனை நல்வழிபடுத்தி மக்களைக் காத்த தன்மையையும் உணரமுடிகிறது.
·               சங்க காலத் தமிழர்கள் விரும்தோம்பல் மற்றும் கொடை தருவதனைத் தம் உயிராக கருதியது குறிப்பிடத்தக்கது. மன்னன் மட்டும் அல்லாது மக்களும் கொடைக்கொடுக்கும் மாண்பினராய்த் திகழ்ந்துள்ளதை இக்கட்டுரை வழி அறியமுடிகிறது.
·               சங்க கால மக்கள் விரிச்சிக்கேட்டல் மூலம் நற்செயல் செய்யத் தளைப்பட்டனர் என்பது உணரமுடிகிறது. பேய்கள் குறித்த நம்பிக்கைகளையும் மக்கள் கொண்டிருந்தனர்.
·               சங்க கால மக்கள் பின்பற்றிய நடுகல் வழிபாடு இன்றுள்ள முன்னோர் வழிபாடாக வளர்ந்துள்ளதைப் பகுத்தறியமுடிகிறது.·  கோள்கள் மற்றும் புள்கள் சார்ந்த நம்பிக்கைகள் சகுனம் பார்த்தலாக இங்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் புறநானூற்றில் கோள்கள் மற்றும் புள்கள் பற்றிய  கூற்றுகள் தீச்சகுனம் சார்ந்து அமைந்துள்ளதை இக்கட்டுரை வழி அறியமுடிகிறது.
 
சான்றெண்விளக்கம்
1. செ.பழனிசாமி, புறநானூற்றில் தமிழர் பண்பாடு, ப – 91. 2.தொல்.பொருள்.63:4-5.
3. அ.தட்சிணாமூர்த்தி, சங்க இலக்கியம் உணர்த்தும் மனித உறவுகள்,  ப-208.
4. அரங்க. இராமலிங்கம், சங்க இலக்கியத்தில் வேந்தர்,  ப-156.
5. அகம் - 344.    6. க.காந்தி, தமிழர் பழக்க வழக்கங்களும் நம்பிக்கைகளும்,   பக்-347-348.
7. புறப்பொருள் வெண்பாமாலை, வஞ்சிப்படலம்,  கொளு-13.
8. ரா.பி. சேதுபிள்ளை, தமிழர் வீரம்,    ப-29.9. குறள் - 86.   10.பதிற்றுப்பத்து,18:1-3.
11. இரா. மோகன் முதலிய நால்வர் (ப.ஆ), ஆய்வுக் கோவை– 2006, முதல் தொகுதி, ப-28.
12. புறப்பொருள் வெண்பாமாலை, வெட்சித்திணை,கொளு-2.13. தொல்.பொருள்.77.14. தொல்.பொருள்.63:11.
புறநானூற்றில் பழக்கவழக்கங்களும் நம்பிக்கைகளும்
 
 

 


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard