New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஆபிரகாம் பண்டிதர் பேராசிரியர். க.பூரணச்சந்திரன்


Guru

Status: Offline
Posts: 24601
Date:
ஆபிரகாம் பண்டிதர் பேராசிரியர். க.பூரணச்சந்திரன்
Permalink  
 


ஆபிரகாம் பண்டிதர்  பேராசிரியர். க.பூரணச்சந்திரன்   Nov 26, 2016


யார் இந்த ஆபிரகாம் பண்டிதர்?

siragu-abraham-pandidhar2

தமிழிசை சாகித்தியங்களின் முன்னோடிகளாகக் கருதப்படுகின்ற முத்துத் தாண்டவர் முதலிய மூவரைப் போல, தமிழிசை இலக்கணத்தைத் தெளிவுபடுத்துவதற்கென வாய்த்த வல்லுநர்கள் மூவர். கருணாமிர்த சாகரம் எழுதிய ஆபிரகாம் பண்டிதர், யாழ் நூல் எழுதிய விபுலாநந்தர், சிலப்பதிகார இசை நுணுக்கம் எழுதிய டாக்டர் எஸ். ராமநாதன் ஆகியோர்தான் அந்த மூவர்.

“தமிழக முழுமைக்கும் உதவிய நற்பெரும் மருத்துவர்; கடல் போன்ற கருணாமிர்த சாகரம் என்னும் இசை நூல் எழுதியவர்; வீணை வித்தகர்; அறிஞர் போற்றிய இசை ஆராய்ச்சி அன்பர்; பெரும்புலவர்களைப் புரிந்து பேணிய வள்ளல்; இசை மாநாடுகள் இனிது நடத்தியவர்; பரோடா இந்திய இசை மாநாட்டில் 24 சுருதி பற்றிச் சொற் பெருக்கு ஆற்றிய ஆய்வாளர்; சுருளிமலைத் துறவியார் கருணானந்தர்பால் அரிய மருந்து முறைகளைக் கற்றுக்கொண்ட அறிஞர்; சிலப்பதிகார இசை நுணுக்கங்களையும் சங்க இலக்கிய இசையியலையும் முதன் முதலில் ஆராய்ந்து பிற ஆய்வாளர்களுக்கு வழிகாட்டியாய் நின்றவர்; மேற்கு நாட்டினர்க்குத் தென்னக இசையியல் பற்றிக் கட்டுரைகள் எழுதியும், கருணாமிர்த சாகரத்தை ஆங்கிலத்தில் எழுதியும் ஐரோப்பிய இசையியலையும் தமிழ் இசையியலையும் ஒப்பீடு செய்து பணியாற்றியவர்; பழம் இசை நூல்களைத் திரட்டி அச்சிட்டு அளித்து, மறைந்துபோகாமல் காத்த இசைப்புரவலர்.”

தமிழிசை வளம்:

தமிழிசைக் களஞ்சியத்தை உருவாக்கிய முனைவர் வீ. ப. கா. சுந்தரம், ஆபிரகாம் பண்டிதரை அறிமுகப்படுத்தும் முறை இது. வரலாற்று வல்லுநர், பறவையியல் வல்லுநர் (ஆர்னிதாலஜிஸ்ட்), புகைப்படக் கலைஞர், ஓவியர், சோதிடர், இசைத்தமிழ் வல்லுநர், இசைப்பாடல் ஆசிரியர் எனப் பல்வேறு ஆற்றல்கள் பெற்றுத் தமிழுக்குத் தொண்டாற்றிய ஆபிரகாம் பண்டிதரை இதைவிடச் சிறப்பான முறையில் அறிமுகப்படுத்த முடியாது. எல்லாக் கலைகளும் ஒன்றுக்கொன்று தமக்குள் கொண்டிருக்கும் தொடர்பினை நன்றாக உணர்ந்தவர். இவை யாவினுக்கும் மேலாக, இசைத் தமிழ் ஆய்வின் முன்னோடி ஆபிரகாம் பண்டிதர்.

வாழ்க்கை வரலாறு

திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகே சாம்பவர் வடகரை என்னும் சிற்றூரில், 1859ஆம் ஆண்டு ஆகஸ்டு 24ஆம் நாள், முத்துச்சாமி நாடார், அன்னம்மாள் தம்பதியர்க்கு மகனாகத் தோன்றியவர். மிக எளிய குடும்பம். முத்துச்சாமி நாடார், சாம்பவர் வடகரையை விட்டு பங்களாச் சுரண்டை என்னும் ஊருக்கு வந்து அங்கிருந்த ஆங்கிலப் பாதிரியாரிடம் தோட்டக்காரனாகப் பணியாற்றினார். அன்னம்மாள் ஆலயப் பணிகளைச் செய்துவந்தார். பண்டிதர், தமது ஆரம்பக் கல்வியைப் பன்றிகுளம் என்னும் ஊரில் முடித்தார். 14 வயதிலேயே திருமலாபுரம் என்னும் சிற்றூரில் ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். 1874இல் திண்டுக்கல் சென்று நார்மல் பள்ளியில் ஆசிரியர் பயிற்சி மேற்கொண்டார். அவரது திறமையாலும் அறிவாற்றலாலும் அப்பள்ளியை நடத்திவந்த யார்க் துரையின் நன்மதிப்பைப் பெற்றார். அவரிடமிருந்தே புகைப்படக் கலையையும் கற்றார்.

திண்டுக்கல் கந்தசாமிப் பிள்ளை என்பாரிடம் அச்சுத் தொழிலைக் கற்றார். சோதிடக் கலையையும் பயின்றார். வயலின் வித்துவான் சடையாண்டிப்பத்தர் என்பாரிடம் வயலின் வாசிக்கக் கற்றுக்கொண்டார். திண்டுக்கல் வழியாகப் பழநி செல்லும் சித்தர்கள், சாதுக்கள், பரதேசிகளிடம் சித்த மருத்துவக் கூறுகளைப் பயின்றார். திண்டுக்கல்லுக்கு அருகே ஆனைமலைப் பட்டியில் வசித்துவந்த பொன்னம்பல நாடார்க்கும் இவருக்கும் தொடர்பு ஏற்பட்டது. பொன்னம்பல நாடார் ஒரு மருத்துவர். 1887இல் அவர் சுருளிமலைக்குப் பண்டிதரை அழைத்துச் சென்றார். அங்கு கருணானந்த மகரிஷியைக் கண்டு அவருடைய சீடர் ஆனார். தமது மருந்துகளுக்கெல்லாம் கருணானந்த சஞ்சீவி என்றே பெயரிட்டிருந்தார். (அக்காலத்தில் மருத்துவர்களைப் பண்டிதர் என்று அழைப்பது வழக்கம். மருத்துவத்தையும் பண்டுவம் என்பார்கள். பிரசவம் பார்க்கும் மருத்துவச்சிகளையும் பண்டுவச்சி என்பது மரபு.)

1882இல் பொன்னம்மாள் என்பாரை மணந்தார். கணவன் மனைவி இருவரும் ஆசிரியப் பணி புரிந்தனர். 1890இல் மருத்துவ அலுவல்கள் மிகுந்ததால், ஆசிரியப் பணியைத் துறந்து இருவரும் சொந்த மருந்துகள் தயாரிப்பில் ஈடுபட்டனர்.

மருந்துகளை விற்கக் கும்பகோணம் செல்வது இவரது வழக்கம். தஞ்சை நகருக்கு மேற்கிலிருந்த நிலத்தை வாங்கிக் கருணானந்தபுரம் என்ற பண்ணையை அமைத்தார். 1894இல் ஒரு வீட்டையும் வாங்கினார். இங்கிலாந்து லிவர்பூல் நகரிலிருந்து நீர் இறைக்கும் குழாயையும் காற்றாலையையும் வாங்கிப் பெரிய கிணறுகளை வெட்டி நிலத்தைப் பண்படுத்தினார். பிறகு தமக்குத் தேவையான மூலிகைகளை அங்கேயே பயிரிட்டார். வேளாண்மை ஆய்வுகளிலும் ஈடுபட்டார். (1899இல் ஆவானிக் என்னும் தொற்றுநோய் பரவியபோது, பண்டிதரின் மருந்துகள் தான் சமயசஞ்சீவியாகப் பயன்பட்டன என்பர்.) தஞ்சையில் ஆசிரியராகப் பணிபுரிந்துவந்த கோயில் பாக்கியம் அம்மையார் என்பாரின் இசைத்திறமையில் ஈடுபட்டு அவரை இரண்டாம் திருமணம் புரிந்துகொண்டார்.

siragu-abraham-pandidhar1

கரும்பில் இவர் கண்டுபிடித்த ஒரு புதிய வகைக்கு ராஜாக் கரும்பு எனப் பெயரிட்டார். அது அக்கால அரசுக் கண்காட்சிகள் அனைத்திலும் பரிசு பெற்றது. அரசு ஆய்வுப் பண்ணைகளில் பயிரிடப்பட்டது. புதுவிதமான பட்டுப்பூச்சிகளை உருவாக்குவதிலும் கவனம் செலுத்தினார். வேளாண்துறையிலும் சித்தமருத்துவத் துறையிலும் பண்டிதர் ஆற்றிய பணிகளைப் பாராட்டி அக்கால பிரிட்டிஷ் அரசு ராவ் சாகிப்பட்டத்தை 1909இல் வழங்கி கௌரவித்தது.

தஞ்சையில் முதன்முதலில் மின்சாரம் இவர் வீட்டில் தான் பயன்படுத்தப்பட்டது. 1911இல் அவரது மனைவி பொன்னம்மாள் மறைந்தார். பின்னர் பாக்கியம் என்பவரைப் பண்டிதர் திருமணம் செய்துகொண்டார்.

சுருளிமலைக் கருணானனந்த முனிவர்தான் இவருக்கும் தமிழிசையின் நுட்பங்களையும் சொல்லிக் கொடுத்தவர். எனவே இசைத்தமிழில் இவருக்கு ஈடுபாடு ஏற்பட்டது. இதற்கேற்ப கோயில்பாக்கியம் அம்மையாரும் இசைவல்லுநராக வாய்த்தார்.

சங்கீத மும்மூர்த்திகளான தியாகராஜர், முத்துசாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரி ஆகியோரின் கீர்த்தனைகளும் வர்ணங்களும் தெலுங்கிலும் சமஸ்கிருதத்திலும் மட்டுமே இருந்தன. சங்கீதம் கற்கும்போது பாடல்கள் தாய்மொழியில் எளிதில் புரியும் வண்ணம் இருக்கவேண்டும் என்பது ஆபிரகாம் பண்டிதரின் கருத்து. தெரியாத மொழியில் பாடும்போது அதன் முழுப்பயனும் கிட்டாமல் போய்விடுகிறது. பொருள் புரிந்து அர்த்த பாவத்தோடு பாடுவதே சிறப்பு என்பதும் அவர் கருத்து.

தமிழிசை ஆய்வில் ஈடுபடுவதற்காகப் பழைய இசை நூல்களைத் திரட்டி அச்சிட்டார். தஞ்சாவூரில் இசை ஆய்வுக்கென சங்கீத வித்யாமகாஜன சங்கம் என்ற அமைப்பை உண்டாக்கினார். 1912 முதல் 1914 வரை மூன்றாண்டுகள் சங்கீத வித்யாமகாஜன சங்கம் இசை மாநாடுகளைச் சிறப்பாக நடத்தியது. இம்மாநாடுகளில் பங்கேற்றவர்களின் நிழற்படங்கள், பெயர்கள், கட்டுரைகள், இவை பற்றிய செய்தித்தாள் விமரிசனங்கள் ஆகிய யாவற்றையும் முறையாகக் கருணாமிர்த சாகரத்தில் வெளியிட்டார். இதனால் பண்டிதருடைய வரலாற்றுக் கண்ணோட்டம் புலனாகிறது. தாமே ஒரு புகைப்பட வல்லுநர் என்பதால், தாமே சொந்தமாக நடத்திய இந்த மாநாடுகளில் பங்கேற்றவர்களின் நிழற்படங்களைப் பாதுகாத்ததன் வழி, அக்கால இசை வல்லுநர்களை அவர்களது பெயர்களுடன் நாம் இன்றும் கண்டு மகிழ முடிகிறது.

1909இல் லண்டன் அரசுக் கலைச் சங்கத்தின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அச்சுத்தொழிலையும் கற்றவர் என்பதால், தஞ்சையில் லாலி அச்சகத்தை நிறுவினார். மின்விசையால் அங்கு இயங்கிய முதல் அச்சகம் இதுவே.

தஞ்சைக் கந்தசாமிப் பிள்ளை என்பவரிடம் சோதிடம் கற்றார். சோதிட விமரிசினி என்ற சபையை ஏற்படுத்தி அதற்குத் தலைமை வகித்துத் திறம்பட நடத்தினார். இசைக் கலைக்கும் சோதிடக் கலைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பது பண்டிதர் கருத்து.

siragu-abraham-pandidhar3

பரோடா மகாராஜாவைக் கொண்டு 1916ஆம் ஆண்டு பரோடாவிலும் ஓர் இசை மாநாட்டினை மார்ச் 20 முதல் 24 வரை நடத்தினார். கர்நாடக இசையிலும் இந்துஸ்தானி இசையிலும் வல்ல பேரறிஞர்கள் பலர் கலந்துகொண்ட நிகழ்ச்சி இது. இதில் ஐரோப்பிய இசையியலோடு தமிழ் இசையியலை ஒப்பிட்டுக் கட்டுரை வழங்கினார். இம்மாநாட்டில், இவரது புதல்வியர் கனகவல்லி, மரகதவல்லி இருவரும் 24 சுரங்களை வீணையில் வாசித்துக் காட்டிப் பண்டிதரின் கருத்தை உறுதிசெய்தார்கள். இந்த 24 சுர முறையை பரோடா திவான் மட்டுமின்றி, வீணை சேஷண்ணா, எல். முத்தையா பாகவதர் போன்றவர் ஏற்றுப் பெரிதும் பாராட்டினர். (கர்நாடக இசையில் 22 சுரவரிசை முறையே கையாளப்படுகிறது.)

வாழ்க்கையின் முதற்பகுதியை மருத்துவ ஆய்வுக்கும், இரண்டாம் பகுதியை இசை ஆய்வுக்கும் அர்ப்பணித்த பண்டிதர், தமது 59ஆம் வயதில் 1918 ஆகஸ்டு 31 அன்று இயற்கை எய்தினார்.

தாம் வாழ்ந்த காலத்தின் ஆட்சியாளர்கள், அறிஞர்கள், புலவர்கள், இசைவல்லுநர்கள் பலரோடும் நெருங்கிய தொடர்பும் கடிதப் போக்குவரத்தும் வைத்திருந்தார். சோழ வந்தான் அரசஞ் சண்முகனார், உ. வே. சாமிநாதையர், ஹரிஹர பாரதி, ஹரிகேச நல்லூர் முத்தையா பாகவதர், வீணை வேங்கட ரமணதாசர், திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிகர், தஞ்சை எல். உலகநாத பிள்ளை, மு. இராகவையங்கார், ஜே. எஸ். சாண்ட்லர், செல்வக் கேசவராயர், திரு. வி. க., போன்றோர் அவருடன் தொடர்பு கொண்டிருந்த சிலர்.

இசை ஆய்வு முன்னோடி

சமஸ்கிருதத்தையும் விஞ்சிய செம்மொழி என்று தலைமைபூண்டு உலாவரவேண்டிய இந்தியாவின் மிகப்பழைய மொழியாகிய தமிழ், தன்னிடம் எத்தனையோ வளமிருந்தும் அயலார் ஆட்சிக் காரணத்தாலும் ஆதரவின்மையாலும் மெலிந்து சூம்பிக் காணப்படுகிறது. இதற்கு நல்ல உதாரணம் தமிழிசை.

தமிழில் தொல்காப்பியம் சங்க இலக்கியம் தொட்டு இசையிலக்கணம் விரிவாகக் காணப்படுகிறது. சங்க இலக்கியத்திலும், சிலப்பதிகாரத்திலும், நாயன்மார்கள், ஆழ்வார்கள் பாடல்களிலும் ஏராளமான பண்கள் இடம்பெற்றிருக்கின்றன. ஆனால் இன்றைக்குத் தமிழிலே பாடுவதென்பது இன்னும் அரசியல் சார்ந்த விவகாரமாகவும் ஒரு சாதிக்கு எதிரான விவகாரமாகவுமே பார்க்கப்படுகின்ற நிலை பரிதாபத்திற்குரியது. மிகக் குறைந்த அளவே இசையிலக்கணம் தெரிந்த ஒருவனுக்கும்கூட, சிலப்பதிகாரத்திலும் சங்க இலக்கியத்திலும் வரும் இசைக்குறிப்புகளைப் படித்தால் அக்காலத் தமிழிசைதான் இன்றைய கர்நாடக, இந்துஸ்தானி இசைகளுக்கு முன்னோடி என்பதைப் புரிந்துகொள்ள முடியும். ஆயினும் இந்த எளிய விஷயத்தைச் சொல்வதற்கும், தமிழ்நாட்டில் தமிழில் பாடுவதுதான் முறை என்பதை வலியுறுத்துவதற்கும் 1930கள் தொடங்கி ஒரு பெரிய இயக்கமே (தமிழிசை இயக்கம்) தேவைப்பட்டிருக்கிறது.

தமிழ் இலக்கியத்தில் காணப்படும் இசைப்பகுதிகளைத் தமிழ்ப் புலவர்கள் பல நூற்றாண்டுகளாக ஆராயவில்லை. 14ஆம் நூற்றாண்டு முதல் தெலுங்கு, சமஸ்கிருதம் முதலிய மொழிகள் தமிழ் நாட்டில் வளர்ந்தனவே ஒழிய தமிழ் வளரவில்லை. தெலுங்கர் ஆட்சியில் வேறென்ன நடக்கும்? தமிழில் இசையே கிடையாது என்று சொல்லும் நிலை நானூறாண்டுகளில் ஏற்பட்டுவிட்டது. இதுபற்றி ஆபிரகாம் பண்டிதர் எழுதுகிறார்:

சங்கீதத்திற்கு சங்கீத ரத்னாகரர் எழுதிய நூலே முதல் நூல் என்றும், அது சிறந்த தென்றும், தமிழ் மக்களுக்குச் சங்கீதமே தெரியாதென்றும் சொல்லுகிறார்கள்.

(கருணாமிர்த சாகரம், ப.916)

14ஆம் நூற்றாண்டு முதல் 20ஆம் நூற்றாண்டு வரையிலான காலம், தமிழிசை அறவே இல்லாத இருண்ட காலம் என்றால், இருபதாம் நூற்றாண்டின் இடைப்பகுதி முதல் இன்றுவரை போராட்டக்காலமாகவே இருக்கிறது. வேறெந்த நாட்டிலாவது, வேறெந்த மொழியிலாவது அந்தந்த மொழியில் பாடக்கூடாது என்று சொல்ல முடியுமா? கேட்டாலே வயிறு வலிக்கச் சிரிப்பார்கள். நமக்கு உண்மையிலேயே இது வயிற்றுவலி.

பண்டைக்காலம் முதல் வழங்கிவந்த தமிழிசையை சாரங்கதேவர் என்னும் ஆசிரியர் படித்துப் பின்பற்றி, அதன் வாயிலாக இந்துஸ்தானி இசையை விளக்க, சங்கீத ரத்னாகரம் என்னும் நூலை எழுதினார். அவர் 14ஆம் நூற்றாண்டினர். காஷ்மீரிகளும், தென்னிந்தியரும் ஒன்றுபோல அவரைத் தங்களைச் சேர்ந்தவர் என்கிறார்கள். (க.சா.ப. 1088). பிறகு வந்த வேங்கடமகி என்பார் அந்நூல் கருத்துகளைக் கர்நாடக இசைக்குப் பொருந்துமாறு செய்தார். பிறகுவந்த புரந்தரதாசர்தான் தமிழிசையையே கர்நாடக இசை என்று சொல்லிப் பிரபலப்படுத்தினார். மேலும் மாயாமாளவ கௌள இராகத்தை அடிப்படையாக வைத்து ஸ்வராவளி, ஜண்டை, தாட்டு, அலங்கார வரிசைகளைக் கற்பிக்கும் இன்றைய முறையை உருவாக்கிய வரும் அவரே.

சிலப்பதிகார இசை நுணுக்கங்களை முதலில் ஆராய்ந்தவர் ஆபிரகாம் பண்டிதர். இசை நுணுக்கங்களை ஆழமாக அறியவேண்டுமானால் வீணை, புல்லாங்குழல் இவற்றுள் ஒன்றையேனும் திறம்பட இசைக்கும் அறிவு தேவை என்பதை அறிந்தார். தஞ்சை அரண்மனையில் வீணை பயின்றார். பின்னர் தம் மகள்களுக்கும் வீணை ஆசிரியர்களை அமர்த்தினார். பல நீண்ட ஆண்டுகள் இரவுபகலாக இசைநூல்களைக் கற்றும், கலந்துரையாடியும், பழைய இசைப்பனுவல்களைத் திரட்டியும் உருவாக்கிய ஆய்வு நூலுக்குத் தமது அருட்குருவாகிய கருணானந்தர் பெயரால், கருணாமிர்த சாகரம் என்றே பெயரிட்டார். 1917இல் அந்நூல் வெளியாயிற்று.

கருணாமிர்த சாகரம்

தமிழிசை இயக்கத்திற்கு உத்வேகம் அளித்த ஒரே நூல், கருணாமிர்த சாகரம்தான். 1940களில்தான் யாழ்நூல் அரங்கேற்றப்பட்டது. அதற்குப் பிறகு குடந்தை ப. சுந்தரேசன், வெள்ளை வாரணன் ஆகியோர் யாழ்நூல் கருத்துகளைப் பரப்பிவந்தனர். எம். எம். தண்டபாணி தேசிகர் முதலியோர் தமிழில் மட்டுமே பாடும் உறுதிபூண்டு அதைச் செயல்படுத்தியதால், அவர்கள் பிற வித்வான்களால் ஏற்றுக்கொள்ளப்படவோ புகழப்படவோ இல்லை. ஒரு காலத்தில் தியாகராஜ பாகவதர், எஸ். ஜி. கிட்டப்பா, கே. பி. சுந்தராம்பாள் போன்றவர்களால் நாடகங்களிலும் திரைப்படங்களிலும் வளர்ந்துவந்த தமிழிசை இப்போது அடியோடு இல்லாமல் போய்விட்டது. ஒரே லட்சிய வேகத்தோடு தமிழிசைப்பாடல்கள் எழுதிய இலக்குமணப் பிள்ளை, மதுரகவி பாஸ்கர தாஸ், பாபநாசம் சிவன் போன்றோர் இன்று இல்லை. இவ்வளவெல்லாம் இருந்தாலும் தமிழிசை உணர்வு ஓரளவு பரவுவதற்குக் காரணமாக, தமிழிசை இலக்கணம் தொடர்ந்து ஆராயப்பட்டு வருகிறது. எஸ். இராமநாதனுடைய Music in Cilappathikaram (அவரது முனைவர் பட்ட ஆய்வேடு) 1960களில் வெளிவந்தது. இவற்றின் காரணமாக தலித் மக்கள் தனி இசைவிழா நடத்துகின்ற நிலை வரை இன்று வளர்ந்துள்ளது. பிறகு வீ.ப.கா. சுந்தரம், சேலம் ஜெயலட்சுமி போன்றோர் தமிழிசையிலும் அதன் இலக்கணத்திலும ஆர்வம் காட்டி வந்தனர். இவை எல்லாவற்றிற்கும் ஆதிகாரணமாக இருந்த நூல் கருணாமிர்த சாகரம்.

கருணாமிர்த சாகரம் என்பது ஆபிரகாம் பண்டிதரின் வாழ்க்கைப் பணிநூல் (magnum opus). இது ஏ4 அளவிலான தாள் அமைப்பில் 1346 பக்கங்கள் கொண்டது. நான்கு பாகங்களாக அமைந்தது இப்பெருநூல். இந்நூல் சுருதிகளைப் பற்றியது என்று குறிப்பிடுகிறார் பண்டிதர்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
RE: ஆபிரகாம் பண்டிதர் பேராசிரியர். க.பூரணச்சந்திரன்
Permalink  
 


கருணாமிர்த சாகரத்தின் அமைப்பு

இந்நூலின் முதல் பாகத்தில் இசைத்தமிழின் தொன்மையும், தோற்றமும், வளர்ச்சியும் விளக்கமாகச் சொல்லப்படுகின்றன. பண்டைத் தமிழகம் பற்றியும், அதில் நிலவிய முத்தமிழ் என்னும் கருத்தாக்கம் பற்றியும், இசையிலக்கணம் பற்றியும் முதற்பகுதி சொல்கின்றது. ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வழங்கிய சங்க இலக்கியம், சிலப்பதிகாரம் போன்றவற்றிலிருந்து இசைக்குறிப்புகளைத் தொகுத்துச் சொல்கிறது. குறிஞ்சி, விளரி, செம்பாலை, படுமலை முதலிய பண்கள் சங்க இலக்கியத்தில் காணப்படுகின்றன. ஏழிசை நரம்புப் பெயர்களாலும் பாட்டும் தொகையும் கூறும் பறை வகைகளாலும் யாழின் அமைப்புப் பற்றிய செய்திகளாலும் தமிழ் இசையிலக்கணத்தின் தொன்மையும் வளமும் அறியலாகும். இவற்றுக்குச் சான்றுகள் காட்டி நூலினுள் விளக்கியுள்ளார் ஆபிரகாம் பண்டிதர். இப்பாகம், இசைப் புலவர்களின் பெயர் அகராதியையும் கொண்டுள்ளது.

இரண்டாம் பாகத்தில் ஒரு ஸ்தாயியில் (இயக்கில்) இடம்பெறும் சுருதிகளைப் பற்றிய வடமொழி நூல்களின் கருத்துகளைக் கணித முறையில் அட்டவணைப்படுத்தி விளக்குகிறார். சாரங்கதேவர் உள்ளிட்டோர் கொண்ட 22 சுருதி முறை வழக்கிற்கு ஒவ்வாதது என்பதும் விளக்கப்படுகிறது.

மூன்றாம் பாகத்தில் சிலப்பதிகார அடிப்படையில் பழந்தமிழரது இசைமுறை விளக்கப்படுகிறது. இப்பாகம் நூலின் மிகச் சிறந்த பகுதி. பெரும்பண்கள், திறப்பண்கள், பண்ணுப் பெயர்த்தல், ஆலாபனம், முற்காலப் பிற்கால நூல்களில் கூறியுள்ள இராகங்களின் தொகை, இணை, கிளை, பகை, நட்பு என்னும் பொருந்திசைச் சுரங்களைக் கண்டுகொள்ளும் முறைகள் இதில் விளக்கப்பட்டுள்ளன.

நான்காம் பாகம், ஆயம், சதுரம், திரிகோணம், வட்டமாகிய பாயப் பாலைகள் நான்கு, யாழ் வகைகள், மாந்தனுடலும் யாழ்வடிவமும் முதலியவற்றை விளக்குகிறது. பண்டைத் தமிழ் மக்களின் இசைக் குறிப்புகள், பல்வேறு பாலைகள், அம்மக்கள் உபோயகித்த யாழ் வகைகள், அவர்களுடைய இராகங்கள் பண்கள் முதலியன பற்றி விளக்குகிறார். சரிகமபதநி என வரும் ஏழு சுரங்களின் பெயர்கள் தமிழ் மூலங்களையே கொண்டவை என்பதையும் விளக்கியுள்ளார். சிலப்பதிகார உரை முதலிய பல்வேறு ஆதாரங்கள் வழி, 24 சுருதிகளே பழந்தமிழர் இசைமுறைக்கு உகந்தது என்பது நிலைநாட்டப்படுகிறது. பாலைகளைப் பற்றிக் கூறுவதோடு சுருதிகளைப் பற்றியும் நுட்பச் சுருதிகளைப் பற்றியும் விளக்கியுள்ளார். செங்கோட்டி யாழே தற்கால வீணை என்பது இவர் கருத்து.

இரண்டாம் புத்தகம்

இதுவரை கூறியவை கருணாமிர்த சாகரம் முதற் புத்தகத்தில் உள்ளவை. கருணாமிர்த சாகரம் இரண்டாம் புத்தகம், 1946ஆம் ஆண்டு அவருடைய மூத்தமகன் சுந்தர பாண்டியனால் வெளியிடப்பட்டது. தென்னிந்திய சங்கீதத்தின் இராகங்களைப் பற்றிய முக்கியக் குறிப்புகளையே முதற்புத்தகமாக எழுதி வெளியிட நினைத்ததாகவும், ஆனால் சுருதிகளைப் பற்றிய விஷயம் அதனினும் முக்கியம் என்று கருதியதால் அதை முதற் புத்தகமாக வெளியிட்டதாகவும் குறிப்பிடுகிறார் (க.சா.1208).

இரண்டாவது புத்தகத்தில் ஓர் ஆரோகண அவரோகணத்தில் கீதங்கள் உண்டாக்கும் முறை, ஜீவசுரத்தைக் கண்டுபிடிக்கும் வழி, இராக சஞ்சாரம் செய்யும் வழிமுறை ஆகியவற்றை விளக்கியுள்ளார். இது ஸ்புடம் என்று அழைக்கப்படுகிறது. இம்முறை புதிதாக இராகங்களை உருவாக்க உதவுவதுடன், பழைய இராகங்களில் உள்ள பிழைகளைத் திருத்திக் கொள்ளவும் உதவியாக இருக்கும் என்ற பண்டிதர் கருதினார். ஆனால் இந்நூல் வெளிவரும் முன்பே அவர் மறைந்துவிட்டார். அவருடைய மனைவி கோயில் பாக்கியம், மகள் மரகதவல்லி ஆகியோர் எஞ்சிய பகுதிகளை எழுதி முடித்தனர். இந்நூல், மரகதவல்லியின் புதல்வி ஞானச் செல்வம் தவப்பாண்டியனின் உதவியோடு வெளியாயிற்று.

கருணாமிர்த சாகரம் காட்டும் இசைச்செய்திகள் சில

சிலப்பதிகாரத்தில் நிறைய இசைக்குறிப்புகள் ஆங்காங்குக் கிடக்கின்றன. அவற்றைச் சேர்த்துக் கண்டால் தமிழின் முழு இசையிலக்கணமும் கிடைக்கிறது. பன்னிரு சுரங்களை நிறுத்திக் குரல் குரலாக மாறுமுதல் (கிரகபேதம்) பண்ணுங்கால் 12 பண்கள் கிடைக்கின்றன. இதனை வட்டத்தில் 12 திசைகள் வரைந்து முதன் முதலில் விளக்கியுள்ளார். கிரகபேதம் செய்வதற்கு 12 சுரங்களுக்குரிய 12 இராசிகளை ஒரு வட்டத்திலும், 12 சுரங்களை மற்றொரு வட்டத்திலும் வரைந்து, வட்டகமாக நிற்கச் செய்து, சுற்றுவட்டகம் சுற்றிவரும்போது பாலைப் பிறப்புகளைக் காட்டுமாறு அமைத்துள்ளார். ஏழ்பெரும் பாலைகள் (இராகங்கள்) தமிழிசையில் மிகமிகத் தொன்மையானவை. இவற்றுள் ஆறு பாலைகள் அடிப்படைப் பாலையாகிய செம்பாலையிலிருந்து தோன்றியவை.

siragu-image4

இவ்வாறு இராகம் நிறுத்திய ஏழு பாலைகளும் சிலப்பதிகாரம் முழுவதிலுமுள்ள இசைநெறிகளுக்கும் பண்ணுப் பெயர்த்தல் முதலிய முறைகளுக்கும் பொருந்துகின்றன. குரல் குரலாகப் பண்ணுப் பெயர்க்கும் முறையை ஆபிரகாம் பண்டிதர் மிகத் தெளிவாகக் காட்டியுள்ளார். இவர் காட்டிய பண்ணுப் பெயர்ப்பு முறை போன்றதையே விபுலாநந்த அடிகளும் பி. சாம்பமூர்த்தியும் தமது பல நூல்களில் பின்பற்றியுள்ளனர்.

இணை, கிளை, பகை, நட்பு ஆகிய இசைபுணர் குறிநிலைகளைப் பொருந்து இசைக்கோவைகளைத் திறம்பட முதன்முதலில் விளக்கியுள்ளார். இவரது விளக்கமே சிலப்பதிகார உரையாசிரியர்களின் கருத்துகளுடன் பொருந்துகிறது. மேற்கு நாட்டு ஒத்திசை முறையோடும் ஒப்பிட்டுக் காட்டுகிறார். வலமுறைத் திரிபு, இடமுறைத் திரிபு இவற்றிற்கு வேறுபாடு காண முயற்சி செய்துள்ளார். ஆனால் முழுவெற்றி காணவில்லை. சுருங்கக் கூறின், சிலப்பதிகாரத்திலும் பாட்டிலும் தொகையிலும் காணப்படும் ஒவ்வொரு இசைக்குறிப்புக்கும் விளக்கம் கூற முயன்றுள்ளமை பெரிதும் பாராட்டுக்குரியது.

வழிகாட்டி நூல்

கருணாமிர்த சாகரம் முதன் முதல் வெளிவந்த இசை ஆய்வுப் பெருநூல் ஆதலின் பிற்கால ஆய்வாளர்களுக்கு வழிகாட்டி ஒளியூட்டி மேலும் ஆய்வுசெய்யத் தூண்டியது.

யாழ்நூல் எழுதிய விபுலாநந்த அடிகளுக்கும், பாணர் வழி என்னும் ஆய்வுநூல் எழுதிய ஆ. அ. வரகுண பாண்டியனுக்கும், சிலப்பதிகார இசை நுணுக்கம் எழுதிய எஸ். இராமநாதனுக்கும், பழந்தமிழ் இசைநூலினை எழுதிய கு. கோதண்டபாணிக்கும், யாழும் இசையும் எழுதிய மு. இராகவனுக்கும், பண்டைத் தமிழிலக்கியத்தில் இசையியல் என்னும் நூலை எழுதியவர்க்கும் வழிகாட்டியவர் மு. ஆபிரகாம் பண்டிதரே. இசை பற்றி இந்நூலில் கூறாதது இல்லை. எனவே சாகரம் அல்லது கடல் என்ற பெயர் இந்நூலுக்கு மிகவும் பொருத்தமானது.

பழங்காலத்தில் தமிழ் இசை இன்று போல் மாயமாளவ கௌளை அடிப்படையில் சொல்லித் தரப்படவில்லை. எந்த இராக (அடிப்படைப் பாலை) அடிப்படையில் சொல்லித் தரப்பட்டது என்பது பற்றிக் கருத்துவேறுபாடு நிலவுகிறது. மேற்கு நாட்டு இசையிலும் சங்கராபரண முறையே அமைந்துள்ளதால், ஆபிரகாம் பண்டிதர் அடிப்படைப் பாலை சங்கராபரணம் என்று நினைத்தார். அடிப்படைப் பாலையாக சங்கராபரணத்தைக் கொண்டதால், எழு பெரும் பாலைகளுக்குரிய இன்றைய இராகங்களைக் காணமுடியாமல் போயிற்று. ஆனால் விபுலாநந்தரும் பி. சாம்பமூர்த்தியும் அடிப்படைப் பாலை ஹரிகாம்போதி என்று கொண்டு பண்டைய ஏழ்பெரும் பாலைகளுக்கும் உரிய இன்றைய ஏழு பண்களைத் தெளிவாய்க் கண்டு பிடித்துக் காட்டியுள்ளனர்.

இவை ஒருபுறம் இருப்பினும், தமிழிசைதான் இன்றைய இந்திய இசைக்கு அடிப்படை என்பதையும் தமிழ் மக்கள் பூர்வகாலத்திலேயே 24 சுருதி முறையைத் தான் கையாண்டனர் என்பதையும் கண்டறிந்து பண்டிதர் தமிழ் உலகிற்கு அறிவித்தது அவர் தமிழ்மொழிக்கு ஆற்றிய பெரும் தொண்டு.

கருணாமிர்த சாகரத்தில் சில அடிப்படைக் கருத்துகள்

பண்களை ஆக்கும் பல்வேறு முறைகள், தாரத் தாக்கம், இடமுறைத் திரிபு முதலிய முறைகள், வலமுறை இடமுறை மெலிதல், நேர் பாலை காணல் முதலியவை உலகில் பறி நாடுகளில் முற்காலத்தில் கிடையாது. இதுபோன்ற இசைச்செய்திகள் பல சிலப்பதிகாரத்தில் உள்ளன. சிலப்பதிகாரம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தியது என்றாலும் அதற்கும் முந்திய ஆயிரம் ஆண்டு இந்திய இசையமைப்பையும் வளர்ச்சியையும் வரலாற்றையும் சுட்டிக் காட்டுவது. ஆதலால் தொன்மையான, புதுமையான இந்திய இசையிலக்கியக் கருவூலங்களுள் தலையாயது சிலப்பதிகாரமே ஆகும்.

siragu-abraham-pandidhar6

அது தரும் இசைச் செய்திகள் உலையது வழிவழி வளர்ந்து வருவன. இறந்துவிட்ட செய்திகள் அல்ல. சிலப்பதிகார நூலில் கோவை (ஸ்வர) இலக்கணம், பண் (இராக) இலக்கணம், ஆளத்தி (ஆலாபனை) இலக்கணம், தாள அடிப்படை இலக்கணம், கொட்டு முழக்குமுறை இலக்கணம், இசைக்கருவி வகை இலக்கணம் முதலிய பல்வேறு இலக்கணங்கள் அடங்கி ஈடு இணையில்லாத மிகப் பழைய இசைச் சுரங்கமாக விளங்குகிறது என்றார் ஆபிரகாம் பண்டிதர்.

சிலப்பதிகாரத்திற்கு இரண்டு உரைகள் (10, 11ஆம் நூற்றாண்டுகளில் தோன்றியவை) உள்ளன. எனவே பத்து நூற்றாண்டுக்கும் மேலாக இவ்விசை மரபு தொடர்ந்து வருவது புலனாகிறது. சங்கீத ரத்னாகரம், சிலப்பதிகார அரும்பதவுரைக்கு 200 ஆண்டுகள் பிற்பட்டது. (ப.675)

அரும்பதவுரையாசிரியர், கவிச் சக்ரவர்த்தி ஜெயங்கொண்டாரே ஆவர் என ஒரு முடிவைச் சொல்கிறார் ஆபிரகாம் பண்டிதர். (ப.612, 685). இம்முடிவுக்கு வருவதற்கான சான்றுகளை அவர் அளிக்கவில்லை.

நரம்பு என்பது ஸ்வரம். இரு நரம்புகள் தம்முள் ஒன்றுபட்டு இசைப்பதை இசைபுணர் குறிநிலை என்கிறார் இளங்கோவடிகள். தென்னக இசையிலக்கணத்தில், ஒத்திசை நரம்புகளை, இணை, கிளை, நட்பு என்று மூவகைப்படுத்திக் கூறுகிறார். இணை என்பதற்குச் சிலப்பதிகார உரையாசிரியர் கூறிய விளக்கத்தைப் பல ஆய்வாளர்கள் தவறாக விளங்கிக்கொண்டனர். ஆபிரகாம் பண்டிதர், நின்ற நரம்பிற்கு மேல் ஏழாம் நரம்பு இணை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார்.

ச    ரி    ரி    க    க    ம    ம    ப

0    1    2    3    4    5    6    7

எனவே ஷட்ஜமத்திற்குப் பஞ்சமம் ஏழாம் இணை நரம்பு. அதுதான் நின்ற நரம்புக்கு மேல் ஏழாம் நரம்பு. இதனை நிலைநாட்டக் கல்லாடத்தில் காணப்படும் ஏழாம் நரம்பு இணை என்ற மேற்கோளையும் எடுத்துக் காட்டியிருக்கிறார். (ப.587, 651, 898 முதலியன). நின்ற நரம்பை விடுத்து அதற்கு மேல் எண்ணிக்காட்டும் முறை இளங்கோவடிகள் தந்த முறை. அதைப் பின்பற்றியே கல்லாடர், இணை, கிளை, நட்பு, பகை நரம்புகளைத் தெளிவுபடுத்தியுள்ளார். இம்முறையையே நாமும் பின்பற்றினால் பழைய மரபினை விடாமல் பின்பற்றலாம்.

பின்னர் வந்த சில ஆய்வாளர்கள், தமது நூல்களில் இணை என்பது ச ரி போன்றவை, அல்லது மத்திம ச, உச்ச ச போன்றவை என்றும் பிழைபடக் காட்டியுள்ளனர். இது சிலப்பதிகார உரையாசிரியர் விளக்கத்திற்கு முரண்பட்டது.

பண்டைத் தமிழிசையில் காணப்படும் 22 அலகுகளின் கணக்கு, இணை, கிளை முதலிய ஒத்திசையால் மலர்ந்தவை. ஆனால் பண்டிதர் ஓர் இசை மண்டிலத்தில் 24 அலகுகள் உள்ளன என விரித்துரைத்த கணக்கு சமநிலைப் பகுப்பு எனப்படுகிறது. இது தென்னக இசையியலில் புதிய ஆய்வு.

22 அலகுக் கணக்கு முறையில் உள்ள பிழைகள்

ச-ப முறையில் நரம்புகள் 13 அலகுகள் கொள்ளவேண்டியுள்ளது.

ச-0, ரி-4, க-3, ம-2, ப-4 என 13 ஆகிறது.

ச-ப முறையில் இணை நரம்புகள் தொடுக்கப்பட்டுச் செம்பாலை நரம்புகள் ஆக்கப்பட்டதால் எல்லா இணை நரம்புகளும் 13 அலகுகள் கொள்ளவேண்டியதாகிறது.

நி-ம, ம-ச், ச-ப, ப-ரி, ரி-த, த-க என்னும் இணை நரம்புத் தொகுதி ஒவ்வொன்றும் முறையே 13 அலகுகள் கொள்ளவேண்டும். அவ்வாறு கொள்ளாமையால் 22 அலகு என்னும் பிழைபட்ட அமைப்புமுறை என்று ஆபிரகாம் பண்டிதர் விளக்குகிறார். அவர் விளக்கம் வருமாறு:

நி   ச    ரி    க    ம

0   4    4    3    2   =13

ம    ப    த    நி    ச

 0    4    3    2    4    =13

ச    ரி    க    ம    ப

0    3    2    4    4    =13

ப    த    நி    ச்    ரி

0    3    2    4    4    =13

ரி    க    ம    ப    த

0    3    2    4    3    =13

த    நி    ச    ரி    க

0    2    4    4    3    =13

இணை முறையில் தொடுக்கப்பட்ட ரி-த = 12 அலகு பெற்று வருவதால் 22 அலகுக் கணக்கு முறை பொருந்தாது என்று ஆபிரகாம் பண்டிதர் காட்டினார். இதனை மறுத்து இதுவரை எவரும் கருத்துரைக்கவில்லை.

ஆபிரகாம் பண்டிதர் தமிழிசை வளரக் காட்டும் வழிகள்

1. பண்களுக்குரிய சுரங்களை அவற்றின் வகையைக் குறிக்காமல் எழுதிவருவது கூடாது (ப.908) எனக்கூறி, சுவரம் எழுதும் புதிய முறையை விளக்கியுள்ளார்.

2. சுரக்குறிப்புகளை வசனம் போல் எழுதிவருகிறார்கள். இது நீக்கற்குரியது (ப.908) என்று கூறி, காலக்கணக்குடன் சுரம் எழுதும் முறை வளர வழிகாட்டியுள்ளார்.

3. தாளத்தின் பெயரை மட்டும் எழுதுகிறார்கள். அதோடு தாள அங்கங்களையும் எழுதுவது பெரிதும் உதவும் எனக்கூறித் தாளக்குறியீட்டு முறையைப் புகுத்தியுள்ளார்.

4. சங்கீதத்தைச் சுர எழுத்துகளால் குறிப்பது சுலபமாயிராது. பலவேறு நாட்டினரும் தெரிந்துகொள்ளும் வகையில் சித்திர எழுத்துகளால் (staff notation) எழுதவேண்டும் என்று கூறியிருக்கிறார்.

5. தமிழசையை எழுதுவதற்கு மேற்கு நாட்டு இசை எழுதுமுறையைப் பின்பற்ற வேண்டும் என்று வற்புறுத்தியிருக்கிறார். தாமே எழுதியும் காட்டினார் (ப.909).

இசை ஆய்வுக்குப் பண்டிதர் பயன்படுத்திய நூல்கள்

1.வேங்கடமகிக்கு முன்னர் இருந்த இசைக்குறிப்புகள், 2. சதுர்தண்டிப் பிரகாசிகை, 3. சங்கீத பாரிஜாதம், 4. சுரமேள கலாநிதி, 5. சங்கீத ரத்னாகரம், 6. ஷடராக சந்த்ரோதயம், 7. ராக விபோதம், 8. சின்னச்சாமி முதலியார் எழுதிய கீழைநாட்டு இசை, 9. வியாச கடகம், 10. திவாகரம், 11. பிங்கலம், 12. பரிபாடல், 13. தென்னிந்திய அலகுமுறை (கையெழுத்துப் பிரதி), 14. தேவாரம், 15. சீவக சிந்தாமணி, 16. கலித்தொகை, 17. கல்வெட்டுகள், 18. தண்டியலங்காரம் முதலியன.

இந்நூல்களின் அரிய செய்திகளை ஆங்காங்கு மேற்கோள்களாகக் காட்டிக் குறிப்பிடுகின்றார். இந்நூல்களில் சில இப்போது கிடைக்கவில்லை. தென்னக இசைக்கு மேற்கண்ட வடமொழி நூல்களை மூலநூல்களாக ஆபிரகாம் பண்டிதர் கொள்ளவில்லை. சிலப்பதிகாரம், அதன் இரு பெரும் உரைகள், பன்னிரு திருமுறை, நாலாயிர திவ்வியப் பிரபந்தம் முதலியவற்றில் காணப்படும் இசைச் செய்திகளையும், பத்துப்பாட்டு எட்டுத்தொகை தரும் இசைச் செய்திகளையும்தான் தென்னக இசைக்கு மூலமாகக் கொண்டு விளக்கியுள்ளார்.

கருணாமிர்த சாகரத் திரட்டு

siragu-abraham-pandidhar4

தமிழில் கீர்த்தனைகள் இல்லை என்னும் குறையைப் போக்குவதற்காக ஆபிரகாம் பண்டிதரே 96 பாடல்களை இயற்றித் தந்துள்ளார். இவற்றுள் கீதம், சுரஜதி, ஜதிஸ்வரம், வர்ணம், க்ருதி ஆகிய யாவும் அடங்கும். இப்பாடல்கள் 1907இல் கருணாமிர்த சாகரத் திரட்டு என்ற பெயரில் சுர தாளக் குறிப்புகளுடன் வெளிவந்துள்ளன. இதனுள் பல மேதைகளின் பாடல்களைத் தமிழ்ப்படுத்தியும் தந்துள்ளார். கிறித்துவராக இருந்தும் சமயக் காழ்ப்பின்றி இப்பாக்களை இயற்றியுள்ளார்.

மலம் ஆணவம் கன்மம் மாயை மலிகின்ற

உலகோர் வாதையால் நொந்துவந்தேன் ஆவலாய்…

போன்ற பாடல்களில் சைவசித்தாந்தக் கருத்துகள் இடம்பெற்றிருப்பது குறிக்கத்தக்கது.

பண்டிதரின் The Nativity of Christ என்னும் கதாகாலட்சேப நிகழ்ச்சி, சுரதாளக் குறிப்புடன் அவருடைய மகன் ஜோதிப் பாண்டியன் முயற்சியால் அச்சிட்டு வெளியிடப் பட்டுள்ளது. பண்டிதரின் பேரன் வரகுண பாண்டியன், பாணர் கைவழி எனப்படும் யாழ்நூல் வழி, தமது இசை ஆய்வுப் பணியைத் தொடர்ந்துள்ளார். பண்டிதரின் வாழ்க்கை வரலாற்றை ஆ. அ. தனபாண்டியன் எழுதியுள்ளார். இவரே நுண்ணலகுகளும் இராகங்களும் என்ற நூலையும் எழுதியிருக்கிறார்.

மேற்குநாட்டு இசையையும் தமிழ்நாட்டு இசையையும் இணைத்துப் பாடல் இசைக்கும் முறையையும் பண்டிதரே தொடங்கிவைத்தார். திருச்சபைக் கிறித்துவ இசை வளர்ச்சியில் இது ஒரு மைல்கல் ஆகும்.

முடிவுரை                    

தென்னக இசையை ஆராய்ந்து வளர்த்து வளப்படுத்தியவர் பலர். அவர்களுக்குள் காலத்தால் முந்தியவரும், உள்ளம் உடல் உயிர் அனைத்தையும் இசைக்கே என அர்ப்பணித்து வாழ்ந்தவரும், ஈடு இணையற்ற பெருநூலை ஆக்கித் தமிழிசை ஆய்வைக் காத்தவரும், பலப்பல சீர்திருத்தக் கருத்துகளைச் சொல்லிச் செந்தமிழிசை செப்பமுறச் செய்து வழிகாட்டியவரும், இல்லம் முழுவதையும் நல்லிசை மயமாக்கி விளங்கியவரும் ஆகிய ஆபிரகாம் பண்டிதர் தமிழர்தம் உள்ளத்தில் என்றும் மறையாது நிற்பார்.

கருணாமிர்த சாகரம் நூலுக்குப் பாராட்டு

உ.வே. சாமிநாதையர்

…பழைய தமிழ் நூல்களாகிய சிலப்பதிகாரம் முதலியவற்றைச் செவ்வனே ஆராய்ந்து விளக்கிய நூல்.

வ.மு. இராகவன்

கருணாமிர்த சாகரம் என்னும பெயருக்கேற்ப முற்காலத்தும் பிற்காலத்தும் உள்ள சங்கீத விஷயங்களை எல்லாம் இந்நூலிடையே பரந்துகிடத்தலால் இது தமிழ் மக்கட்கு ஒரு பெரிய நிதியே.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard