New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: அரசியல் நெறி காட்டும் திருக்குறள் முனைவர் ச. தமிழரசன்


Guru

Status: Offline
Posts: 24765
Date:
அரசியல் நெறி காட்டும் திருக்குறள் முனைவர் ச. தமிழரசன்
Permalink  
 


அரசியல் நெறி காட்டும் திருக்குறள்

முனைவர் ச. தமிழரசன்
உதவிப்பேராசிரியர் (சுயநிதிப்பிரிவு), தமிழ்த்துறை,
தியாகராசர் கல்லூரி, மதுரை - 625009.

arasiyalneri.jpg

முன்னுரை

அரசியல் என்ற சொல் அரசு இயங்கும் முறையையும், ஆள்வோரையும், அவர் செயல்பாட்டையும் பற்றி கூறிய நிலைமாறி பொதுவாழ்வில் அதிகம் பயன்பாடு உடைய ஒன்றாக மாறிவிட்டது. அரசியலில் இருப்போர் பொதுவாக அதிகாரம் படைத்தவர்களாக இருக்கிறார்கள். அந்த அதிகாரத்தின் துணையோடு தனக்கு வேண்டியவற்றைத் தற்சார்பாய் செய்து கொள்ளுகின்றனர். இத்தகைய சுயசார்பான நடுநிலையற்ற செயல்பாடுகள் எங்கெல்லாம் நடைபெறுகின்றனவோ அங்கெல்லாம் அதிகாரத்தை மையமிட்ட அரசியல் நடக்கிறது என மக்கள் பேசத் துவங்கி விட்டனர் . இது காலத்தின் மாற்றம் என்பர் சிலர். ஆனால், காலங்காலமாகச் செய்யப்பட்ட அரசியல் என்பது யாவருக்கும் பொதுவானதாக நடுநிலையோடு இல்லை என்பதை, இலக்கியங்கள் அரசியல் இன்னதென வரையறுத்துச் சொன்ன பாங்கை வைத்து அறிந்து கொள்ள முடிகிறது. இலக்கியக் காலங்களிலே அரசியலை வரையறுத்து வலியுறுத்திச் சொல்லும் பாங்கு இருந்துள்ளது. இதை அரசியல் உருவாக்கமாகவும், உருவாக்கிய அரசுகளுக்கு வழங்கப்படும் அறிவுரைகளாகவும் எடுத்துக் கொள்ள இடமுண்டு. அரசானது இவ்வாறுதான் இருக்க வேண்டும் என அறிவுறுத்தும் பாங்கு ஏன் ஏற்பட்டது என்பதை ஆராய வேண்டும். இங்கு நாம் திருக்குறள் கூறும் அரசியல் நெறிகளை ஆராயப்புகும் முன் அரசியல் குறித்த பொருண்மைகளை அறிந்து கொள்வது அவசியம். அரசியல் (Politics) என்பதற்கு ஆட்சி, அதிகாரம் பற்றிய கோட்பாடுகளும் நடைமுறைகளும் என க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி குறிப்பிடுகிறது. அரசியல் என்பதனுள், அரசு, அரசாட்சி, அரசை ஆளும் அரசன், நாடு, நாட்டில் வாழும் மக்கள், மக்களின் வாழ்க்கைத்தரம் போன்ற உட்கூறுகள் பொதிந்திருக்கின்றன. நீதி இலக்கியங்களுள் திருக்குறள் அரசியல் நெறி பற்றி பேசும் பொழுது, அரசு இன்னது என்பதன் பொருளை அறிவுறுத்தல்கள் வழி முன்னிறுத்துகிறது. அவ்வறிவுறுத்தல்கள் அரசியல் நெறிகளாக இருப்பதோடு சார்பற்ற மொழி, இனம், மதம், நாடு கடந்தவைகளாக இருப்பது தமிழனின் பொதுமறை தகுதிப்பாட்டை உயர்த்திப் பிடிக்கிறது.

அரசியல் பொருண்மை

அரசியல் என்பதற்கு “நாடு ஒன்றினை ஆட்சி புரிந்திடும் முறை, ஆட்சி புரிவது பற்றிய பல்வேறு கட்சிகளின் கொள்கைகள் மற்றும் நடைமுறைகள்” எனவும், அரசாங்கம் என்பதற்கு “நாடு ஒன்றினை நிர்வகிப்பதற்காக அதற்கென்றே அதிகாரங்கள் வரையறுக்கப்பட்ட ஒரு அமைப்பு (Government)” எனவும், அரசியல் சட்டம் என்பதற்கு “அரசாங்கத்தின் அதிகாரம் கடமைகள் ஆகியவற்றோடு குடிமக்களுடைய உரிமைகள் போன்றவற்றையும் வரையறை செய்யும் அடிப்படைச் சட்டம்” எனவும் நர்மதாவின் தமிழ் அகராதி குறிப்பிடுகிறது.

அரசன் என்பது “நாடாள்வான்” (அரசு) எனும் “தலைமையையும்”, இராச்சியம் என்பது ஆளப்படும் பகுதி என்ற “இடத்தை” (நிலைத்தை)யும், அரசாட்சி என்து “அரசு நிருவாகம்” என்ற (தலைமையின்) கருவியையும் குறிப்பன” (பக்.33) எனப் பேராசிரியர் இராஜமுத்திருளாண்டி குறிப்பிடுகிறார்.

“பல சமூகங்கள் அல்லது வர்க்கங்களை உள்ளடக்கிய ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியானது மைய அமைப்புடைய அரசாங்கத்தின் மூலம் வரிவிதித்தல், படைத்திறன் கொண்டிருத்தல், சட்டங்களை இயற்றி அவற்றின்படி அனைவரையும் நடக்கச் செய்தல், குற்றமிழைப்போருக்கு நீதித்துறை மூலம் தண்டனை விதித்தல் முதலான பணிகளைக் கொண்டது ஒரு முற்றுரிமை வாய்ந்தது அரசு என அரசின் பணிகளைப் பக்தவத்சலபாரதி விளக்குகிறார்.

திருக்குறள் கூறும் அரசியல் நெறிகள்

திருக்குறளில் சொல்லப்பட்ட அரசியல் அறநெறிகள் அக்காலத் தேவை கருதி சொல்லப்பட்டாலும் எக்காலத்துக்கும் எந்நாட்டு அரசியல் அணுகுமுறைக்கும் எடுத்துக்காட்டாய் விளங்கி, அரசு செயல்படவேண்டிய முறைகளின் நுட்பங்களை எடுத்தியம்புகின்றன. படை, குடி, கூழ், நட்பு, அமைச்சு, அரண் ஆகிய உறுப்புக்களை உடையதாகத் திருக்குறள் அரசியலை விவரிக்கிறது.

அரசியல் அதிகாரங்களில் அரசனின் இயல்புகள், மேற்கொள்ள வேண்டிய நெறிமுறைகள், அவன் ஆற்ற வேண்டிய கடமைகள், நாட்டின் சிறப்பு, நாட்டில் வாழும் மக்களின் சிறப்பு போன்ற செய்திகளை, இறைமாட்சி, கல்வி, கல்லாமை, கேள்வி, அறிவுடைமை, குற்றங்கடிதல், பெரியாரைத் துணைக்கோடல், சிற்றினம் சேராமை, தெரிந்து செயல்வகை, வலியறிதல், காலம் அறிதல், இடன் அறிதல், தெரிந்து தெளிதல், தெரிந்து வினையாடல், சுற்றம் தழால், பொச்சாவாமை, செங்கோன்மை, கொடுங்கோன்மை, வெருவந்த செய்யாமை, கண்ணோட்டம் ஒற்றாடல், ஊக்கம் உடைமை, மடியின்மை, ஆள்வினை உடைமை, இடுக்கண் அழியாமை ஆகிய இருபத்தைந்து அதிகாரங்களில் திருக்குறள் அரசியல் பற்றியும் ஆட்சிமுறை பற்றியும் உரைக்கிறது.

நாட்டை ஆளும் அரசு

நாட்டை ஆளும் அரசு எப்படி இயங்க வேண்டும். அரசு எவ்வாறு செலுத்தப்படவேண்டும் என்பதை வள்ளுவர் கீழ்வருமாறு உரைக்கிறார். அரசுக்குப் பொருள் சேரும் வழிகளை மேலும் உருவாக்குதலும், அப்படிச் சேர்த்த பொருளை முறையாகத் தொகுத்தலும், அவற்றைத் தகுந்த முறையில் காத்தலும், காத்தவற்றைத் தக்க செலவினங்களுக்குச் செய்தலுமே வல்லமையான அரசு என்கிறார்.

“இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு” (குறள். 385)

அரசின் கீழ் இயங்கும் நாடு

அரசின்கீழ் இயங்கும் நாடானது, பசியில்லாமலும், பிணியில்லாமலும், அயல்நாட்டின் பகையில்லாமலும் இருத்தலே நலமாக அமையும். நாட்டினது அரசு நாட்டுப்பொருளால் பாரபட்சமின்றி அனைவருக்கும் பசி தீர்க்கும் அரசாகவும், பற்பலத் திட்டங்களின் வழி நாட்டு மக்களின் சுகாதாரத்தைப் பேணும் அரசாகவும், மற்றைய நாடுகளுடன் பகைகொள்ளாது அமைதியை விரும்பும் நாடாகவும் இருப்பதையே சிறந்த நாடென திருக்குறளானது நாடு இருக்கவேண்டிய இயல்பினை எடுத்துரைக்கிறது.

”உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு” (குறள்.734)


ஆட்சி செய்வோருக்கு இனியது

சமுதாயத்திலுள்ள குடிமக்கள் வாழ்க்கை நன்னிலை பெற செம்மையான நெறிகளை வகுத்து ஆட்சி புரிதல் அரசின் கடமையாகும். மக்களின் இயல்பையும், தேவைகளையும் உணர்ந்து செயல்படும் செங்கோன்மையாக அறம் தவறாது, அல்லவை நீக்கி அரசானது சமுதாயத்தினை மேன்மையுறச் செய்தல் வேண்டும் என்கிறது கீழ்வரும் குறள்.

“அறனிழுக்கா தல்லவை நீக்கி மறன்இழுக்கா
மானம் உடையது அரசு” (குறள்.384)

அரசியல் நெறி

குடிமக்களுக்கு வேண்டியவற்றைச் செய்து கொடுத்துச் சமுதாயத்தை மேன்மையுறச் செய்யும் அரசையும் அரசனையும் இவ்வுலக உயிர்கள் அடைக்கலமாகக் கொண்டு வாழும் என திருக்குறள் அரசியல் நெறியினை நயம்பட உரைக்கிறது.

“குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு” (குறள்.544)

அரசின் தொழில்

குடிமக்களை வருந்தவிடாமலும் தானும் வருந்தாமலும் மக்களைக் காத்து மக்களுக்குத் துன்பம் விளைவிப்பவரை அடையாளங்கண்டு அவருக்குத் தண்டனையளித்துத் தன் பணியைச் செவ்வனே செய்பவரே நல்ல ஆட்சியாளர் எனவும், குற்றத்தைக் கடிந்துரைத்தல் ஆள்பவருக்கு வடுவாகாது. மாற்றாக அது ஆள்பவரின் தொழிலே ஆகும் என்கிறது இக்குறள்.

“குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில்” (குறள்.549)

அரசுக்குத் துணையாவன

நாட்டை ஆளும் அரசுக்கு துணை நிற்பவர்கள் அமைச்சர்கள். இம்மரபு அக்காலம் தொட்டே ஆட்சி மரபாக இருக்கின்றமையைக் காணமுடிகிறது. நாட்டை ஆள்பவர் முதல்வராகிறார். முதல்வருக்குத் துணையாக அமைச்சர்கள் இருக்கிறார்கள். இவ்வமைச்சர்கள் எங்ஙனம் தேர்ந்தெடுக்கப்படுதல் நலம் என்பதை அமைச்சு அதிகாரத்தின் வழி வள்ளுவர் சுட்டுகிறார்.

“அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான் எஞ்ஞான்றுந்
திறனறிந்தான் தேர்ச்சித் துணை” (குறள்.635)

அறநெறியினை நன்கு உணர்ந்தவராகவும், சொற்திறன் கொண்டவராகவும், செயல்திறன் உடையவராகவும் இருப்பவரே ஆலோசனைகள் கூறக்கூடிய துணையாக அரசுக்கு விளங்க முடியும் என்கிறது மேற்காணும் குறள்.


அரசின் செங்கோன்மைப் பாங்கு

குற்றங்களை ஆராய்ந்து எவரிடத்திலும் பாரபட்சம் காட்டாமல், இவர் வேண்டியவர், இவர் வேண்டாதவர் எனப் பாராது நடுநிலையோடு குற்றத்தினை அறிந்து தண்டனை வழங்கச் சொல்லும் மன்னனின் செங்கோன்மையை வள்ளுவர் பின்வருமாறு உணர்த்துகிறார்.

“ஓர்ந்து கண்ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்து செய்வதே முறை” (குறள்.541)

இக்கருத்தினை அடியொற்றிய நான்மணிக்கடிகையின் பாடலொன்று, மன்னன் என்பவன் எத்தகையவரிடமும் ஒரு சார்பின்றி ஆட்சி புரிவதே நீதிமுறை எனவும், நடுநிலையோடு இருந்து ஆராய்ந்து நடப்பவனே அரசாளும் இயல்புடையவனாவான் எனவும் அரசாளும் தகைமையினைச் செப்புகிறது.

“கண்ணோட்டம் இன்மை முறைமை தெரிந்து ஆள்வான்
உண்ணோட்டம் இன்மையும் இல்” (நான்மணிக்கடிகை.96)

எது நல்ல நாடாகும்?

நாடானது குறைவில்லாத விளைச்சலைப் பெற்று விளங்குதலும், அதன் வழி குறைவிலாது அறநெறி அறிந்தவர் வாழ்தலுமாகிய பண்புகளைக் கொண்டநாடு செல்வமிக்கோர் நாடாகச் சேரும் என நாட்டினுடைய இயல்பினை இயம்புகிறது. இங்கு அறநெறிக்கு அடிப்படை விளைச்சலால் நாடு செழிப்படைதலே. நாடு வறுமையுறின் அறநெறிக்குக் கேடு விளைந்து மக்களும் துன்பம் நேரும் என்பது மறைபொருளாக உரைக்கப்பட்டுள்ளதைக் காணமுடிகிறது.

“தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வரும் சேர்வது நாடு” (குறள்.731)

வள்ளுவர் சுருங்கச் சொன்ன இக்கருத்தை சிறுபஞ்சமூலத்தின் பாடலொன்று சற்றே விரித்துச் சொல்லுகிறது. வயலில் நீர் உயரவே நெல் உயரும். நெல் உயர்ந்து வளங்கொழித்தால், அதனை நம்பி வாழும் சீர்பெற்ற குடிகள் உயரும். பல்வேறு குடிகளாகிய மக்கள் உயர்ந்தால் அரசர் உயர்வடைவார் என உலகு உரைக்கும் என்கிறது.

“நீர்சான்று உயரவே நெல் உயரும் - சீர்சான்ற
தாவாக் குடிஉயரத் தாங்கு அருஞ்சீர்க் கோ உயர்தல்
ஓவாது உரைக்கும் உலகு” (சிறுபஞ்சமூலம்.44)

அரசுக்குக் கூடாதன

நாட்டை ஆள்வோர் தன்னலத்தைப் பெரிதாகக் கொண்டு நாட்டு வளங்களைச் செழிக்கச் செய்யாமல், கிடைத்த பொருளை வீணாய்ச் செலவிட்டு பொருளனைத்தும் தீர்ந்த பின்பு, அரசை நடத்த மீண்டும் மக்களிடமே பொருள் வேண்டி நிற்கும் நிலையை மிகக் கடுமையாக வள்ளுவர் சாடுகிறார். செங்கோல் ஏந்திய மன்னன் மக்களிடத்தில் பொருள் வேண்டுதல் என்பது வழிப்போக்காகச் செல்பரிடம் வழிப்பறி செய்பவன் வேல் எனும் ஆயுதம் கொண்டு பொருள் பறிப்பது போன்றதாகும் என்கிறார் வள்ளுவர்.

“வேலோடு நின்றான் இடுஎன்றது போலும்
கோலோடு நின்றான் இரவு” (குறள்.552)

இங்கு இரவு என்பது மக்களிடம் மன்னன் வேண்டி நிற்பதைக் குறிக்கிறது.

முறைசெய்து காக்கும் அரசுக்குப் புகழ்

நாட்டையாளும் ஆட்சியாளனாகிய மன்னவன் கற்றறிந்து, செங்கோலாட்சி புரிந்து, பகிர்ந்துண்டு, தக்கநெறியில் பொருள் சேர்த்து, சீரிய திட்டங்கள் வகுத்து, நல்லியல்புடைய அமைச்சரவையோடு கூடியிருந்து தம் ஆட்சித்திறத்தால் பொருள் வழங்கி நல்லாட்சி தருபவனாக இருத்தலே நலமுடையதாகும். இத்தகைய நெறிமுறைகளை உணர்ந்து ஆட்சி செய்பவரை மக்கள், நல்லாட்சியாளர் எனக் கருதுவதோடு மட்டுமல்லாமல் ஒரு படி மேலே சென்று இறைவனுக்கு இணையாக வைத்துப் போற்றுவர் என்கிறது திருக்குறளின் அரசியல் நெறி.

“முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும்” (குறள்.388)

திருக்குறள் கூறும் இத்தகைய அரசியல் நெறிகள் எக்காலத்திற்கும் பொருந்துவனவாக இருப்பதே இதன் தனித்தன்மையாகும். ”திருவள்ளுவர் வாழ்ந்த காலம் முடியாட்சி காலம். அந்தக் காலத்தில் அவர் அரசருக்குச் சொன்னவையாக அமைந்த அறிவுரைகள் இன்று குடியாட்சி முறையில் உள்ள தலைவர்களுக்கும் பொருந்தும் மொழிகளாக உள்ளன” (ப.77) என மு. வரதராசன் அவர்கள் வள்ளுவரின் அரசியல் தொலைநோக்குப் பார்வையை குறிப்பிடுகிறார்.

நிறைவுரை

திருக்குறளில் அரசியல் உட்கூறுகளான நாடு, நாட்டின் அரசு, அரசின் ஆட்சிமுறை, அமைச்சு, இவற்றின் கீழ் வாழும் குடிமக்கள் என அரசியலுக்குள் அங்கம் வகிக்கும் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே சொல்லப்பட்ட அறநெறிமுறைகள் நேர்மை, சார்பின்மை, ஒழுங்கு, நியாயம், சமநீதி, தற்சார்பின்மை போன்ற பண்புகள் அரசுக்கு வேண்டியவை என அறிவுறுத்தி நிற்கின்றன. இவை தமிழ்மொழி நூலான திருக்குறளில் முகிழ்த்திருந்தாலும் எந்நாட்டவருக்கும் எம்மொழிக்குரிய அரசுகளுக்கும் ஏற்றுக் கொள்ளும்படியான பொதுமறைத் தகுதிப்பாட்டில் உகந்தவையாக இருக்கின்றன. திருக்குறள் கூறும் அரசியல் நெறிகள் செவ்வியல் தன்மையால் உயர்ந்து நிற்கின்றன. அவற்றைக் கடைபிடிப்பவர் செம்மைத் தன்மையால் இறையென்று வைக்கப்படுவர்.

துணைநூல்கள்

1. இலக்கியத்தில் மனித உரிமைகள், இராஜமுத்திருளாண்டி, குமரன் பதிப்பகம், தி.நகர், சென்னை-17. (2008)

2. க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி, சென்னை. (2008)

3. தமிழ் இலக்கிய வரலாறு, மு. வரதராசன், சாகித்ய அகாதெமி, புதுதில்லி-1. (2010)

4. திருக்குறள் (பரிமேலழகர் உரை)

5. நர்மதாவின் தமிழ் அகராதி, நர்மதா பதிப்பகம், 10, நானா தெரு, தி.நகர், சென்னை-600017. (2005)

6. பண்பாட்டு மானுடவியல், பக்தவத்சலபாரதி, மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம்-608001. (2009)

7. பதினெண்கீழ்க்கணக்கும் தமிழர் வாழ்வும், சாமி சிதம்பரனார், அறிவு பதிப்பகம், சென்னை-14. (2007)

*****

logo.jpg
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/literature/p189.html


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard