New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சங்க புறப்பாடல்களில் தமிழர் பண்பாடு க. கருப்பசாமி


Guru

Status: Offline
Posts: 24765
Date:
சங்க புறப்பாடல்களில் தமிழர் பண்பாடு க. கருப்பசாமி
Permalink  
 


சங்க புறப்பாடல்களில் தமிழர் பண்பாடு

க. கருப்பசாமி
முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியற்புலம்,
மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை - 21.

virunthombal.jpg

முன்னுரை

நம் நாட்டில் தோன்றிய இலக்கிய, இலக்கணங்களில் உண்மை வரலாற்றுக்கு வழி கோலுகின்ற செய்திகள், குறிப்புகள் எத்தனையோப் புதைந்து கிடக்கின்றன. ஆனால் பழந்தமிழ் நாட்டின் உண்மை வரலாற்றினை இதுவரை செவ்விய முறையில் எழுத முயல்வோர் எவரும் இல்லை. உள்ளதை உள்ளபடி உணர்ந்து நிரைப்படுத்திக் கோவை செய்ய எவரும் இல்லாத காரணத்தினால் தான் இதுவரை நம்மிடம் கிடைத்துள்ள கல்வெட்டுக்கள், பட்டயங்கள், நாணயங்கள், வெளிநாட்டுத் தொடர்பு ஆதாரங்கள் ஆகியவற்றுடன் மொழியாராய்ச்சி, இனவியலாராய்ச்சிகள் காட்டும் ஆதாரங்களைக் கொண்டே வரலாறுகள் எழுதப்படுகின்றன. அவ்வாறு அறியப்பட்ட ஆதாரங்களைக் கொண்டு தமிழர் பண்பாட்டை அறிய இக்கட்டுரை முன்னெடுத்துச் செல்கிறது.

தொல்காப்பிம் கூறும் தமிழ்நாடு

தொல்காப்பியம் என்பது தமிழ் மொழியின் பழைய இலக்கணம். ‘ஒல்காப் பெரும் புகழ்’ தொல்காப்பியரால் இந்நூல் எழுதப்பட்டது. பழைய தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியத்தில்,

“வடவேங்கடம் தென்குமரி
ஆயிடைத்
தமிழ்கூறு நல்லுலகத்து
வழக்குஞ் செய்யுளு மாயிரு முதலின்” (1)

எனச் சிறப்புப் பாயிரம் தொடங்குகிறது. இதில் வடக்கே வேங்கடமும், தெற்கே இமயமலையின் இடையே வாழும் மக்கள் தமிழர் என்று கூறப்பட்டுள்ளன. தமிழகத்தின் கிழக்கிலும், மேற்கிலும் கடல் சூழ்ந்துள்ளது. எனவே இவ்விரு திசைகளிலும் நாட்டின் எல்லையைப் பனம்பாரனார் எடுத்துக் கூறவில்லை. ஆனால் வடஎல்லையும், தென்னெல்லையும் மட்டும் அவர் கூறுவதில் பொருள் உண்டு. ‘கடல் கொள்வதன் முன்பு பிறநாடும் உண்மையின், மேற்கும் பிறநாடு இன்மையின் கூறப்படாவாயின’ (2) என்று இளம்பூரணர் விளக்கம் தருகின்றார். தொல்காப்பியத்தின் உரையாசிரியர்களும், இவரும் பிறர் மொழி வழங்கும் நிலப்பகுதியிலிருந்து தமிழ் வழங்கும் நிலத்திணைப் பிரித்து உணர்த்துதற் பொருட்டே ‘வடவேங்கடம் தென்குமரி’ என்று பனம்பாரனார் பாயிரம் வகுத்தார் என்பது இளம்பூரணர் கொள்கை.


சங்க இலக்கியம் கூறும் தமிழக எல்லை

சங்க காலத்திற்கு முன்பு கன்னியாகுமரிக்குத் தெற்கில் பரவியிருந்த தமிழகம் சங்க காலத்தில் ‘வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலக’மாகச் சுருங்கி விட்டது.

“வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்
தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்” (3) (புறம்.6:1-2)

என்ற பாடலில் வடதிசையில் பனிபடரும் நெடிய மலையாகிய இமயத்திற்கு வடக்கிலும், தென்திசையில் அச்சம் தரும் கன்னியாற்றிற்குத் தெற்கிலும் தமிழக எல்லையினைச் சுட்டுகிறது.

“தென்குமரி வடபெருங்கடல்
குணகுட கடலா எல்லை” (4) (மதுரை: 70-71)

என்னும் பாடலில் தென்திசையில் குமரியை எல்லையாகவும், வடதிசையில் பெரிய மேருமலையை எல்லையாகவும், கீழ்த்திசையிலும் மேற்திசையிலும் கடலை எல்லையாகவும் கொண்டு இடைப்பட்ட நிலப்பரப்பு தமிழக மக்கள் வாழ்ந்தனர் என்று கூறப்படுகின்றன. மேற்கண்ட சான்றுகளை வைத்துத் தமிழக எல்லையினை நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது. தமிழகத்தின் எல்லைக்குள் வாழும் மக்கள் தமிழ் மொழி பேசி வந்தார்கள் என்பதையும் அறிய முடிகிறது.

பண்பாடு

மக்களியல் வல்லுநர்கள் (Anthropologists) பண்பாடு எனும் சொல்லைக் கையாளும் பொருள்களைப் பற்றி நாம் குறிக்க வேண்டியதில்லை. அவர்கள் கருத்தின படி பண்டையக் கால மக்களின் வாழ்க்கைய விளக்கும் எல்லாத் துறைகளும் பண்பாடு என்னும் சொல்லில் அடங்கும். பண்பாடு என்பதை நம் முன்னோர் பண்பு, பண்புடைமை, சால்பு, சான்றாண்மை போன்ற சொற்களால் குறித்துள்ளனர். இச்சொற்கள் வெவ்வேறு இடங்களில் பண்பாட்டுடன் தொடர்புடைய வேறு சில பொருள்களைக் குறித்தாலும் பல இடங்களில் பண்பாட்டையேக் குறிக்கின்றன. கலித்தொகையில் “பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுவது” என்றும், வள்ளுவத்தில் “பண்புடையார் பட்டுண்டு உலகம்” என்றும் வருவதைக் காண முடிகிறது. ‘ஆங்கிலத்தில் Culture எனப்படும் சொல்லிற்குத் தமிழில் பண்பாடு என்று குறிப்பிடுகின்றோம். ஆங்கிலச்சொல் எவ்வாறு இலத்தீன் சொல்லாகிய நிலத்தைப் பண்படுத்துவதிலிருந்து பிறந்ததோ அதுபோலத் தமிழ்ச் சொல்லாகிய பண்பும் நிலத்தைப் பண்படுத்துவதிலிருந்து தோன்றியிருக்க வேண்டும். உழவுத் தொழில் எவ்வாறு நிலத்தைப் பண்படுத்துகிறதோ அவ்வாறே மனதையும் மக்களையும் பண்படுத்துவது பண்பு. இச்சொல்லைத் தான் பண்பாடு’ (5) என்னும் பொருளில் பண்டைத் தமிழ் இலக்கியங்களில் நூலரசிரியர்கள் பயன்படுத்துகின்றனர்.


தமிழர் பண்பாடு

தமிழர் பண்பாட்டை ஈராயிரத்து ஐந்நூறு ஆண்டுகளாகத் தமிழ் மக்கள் வளர்த்து வந்த இலக்கியங்களும் கவின்கலைகளும் எடுத்துக்காட்டுகின்றன. ஆயினும் ஒருசில நூல்களை மட்டும் தமிழர் பண்பாட்டின் களஞ்சியங்களாகக் குறிப்பிட வேண்டுமாயின் ஐந்து நூல்களைக் குறிப்பிடலாம். அவை தொல்காப்பியப் பொருளதிகாரம், குறுந்தொகை, புறநானூறு, திருக்குறள், சிலப்பதிகாரம் என்பன. தமிழர் பண்பாடு நாளடைவில் சிறிது மாறி உள்ளது. ஆனால் அதனுடைய அடிப்படைக் கொள்கைகள் இத்துணை நூற்றாண்டுகளாக மாற்றங்கள் அடையவில்லை. ஆரியர் தமிழ்நாட்டிற்கு வந்த காலத்தில், சிறப்பாக அவர்களுடைய சமய-சமூகக் கொள்கைகள், தமிழ்நாட்டிலும் பரவின. சமணர், புத்தர், ஐரோப்பியர் தமிழ்நாட்டுடன் கொண்ட தொடர்பாலும் ஒரு சில மாற்றங்கள் ஏற்பட்டன. “தமிழ்க் காப்பியமாகிய சிலப்பதிகாரத்தை இயற்றிய இளங்கோவடிகள் சமணர். தமிழொழுக்கத்தின் களஞ்சியமாகிய வள்ளுவத்தை இயற்றியவர் சமணர்” (6) என்று சிலர் கூறுகின்றனர். தொல்காப்பியரும் சமணரென்பது பேராசிரியர் வையாபுரிப் பிள்ளையின் கருத்தாகும்.

தமிழர் பண்பாட்டின் சில கோட்பாடுகள்

தமிழர் பண்பாட்டு என்பது பரந்துபட்ட உலக மனப்பான்மை கொண்டது. அதனால் தான் புறநானூற்றில்,

“யாதும் ஊரே; யாவரும் கேளிர்:
தீதும் நன்றும் பிறர் தரவாரா” (7) (புறம்.192:1-2)

என்றும், மேலும் வள்ளுவத்தில்,

“யாதானும் நாடாமல் ஊராமல் என்னொருவன்
சாந்துணையும் கல்லாத வாறு” (8) (குறள்-கல்வி-397)

என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன. தமிழர்கள் என்றாலே விருந்தோம்பல் பண்பிற்குப் பெயர் போனவர்கள். பிறரன்பு, ஈகை, தமக்கென வாழாப் பிறர்க்குரியாளர் எனும் கோட்பாடுகள். ‘என்கடன் பணி செய்து கிடப்பதே’. அகத்திணை புறத்திணை மரபு. மானமென்றால் உயிரையும் கொடுத்துக் காப்பாற்றும் வேட்கை. மனத்தூய்மை, விடாது முயலல் எனும் கொள்கை. ‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம’ என்ற நிகரற்ற மனநிலை. ‘உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்’ என்னும் உயர்ந்த இலட்சியம் என்பன தமிழர் பண்பாட்டின் அரிய சில கோட்பாடுகளென்றே கூறலாம்.

பண்பாட்டுப் பரிமாற்றங்கள்

“தமிழகத்தில் இக்காலத்தில் பல குடிகள் இருந்தன என்றும், தம்மைச் சுற்றி இருந்த பல குடிகளை வென்று தம் கட்டுப்பாட்டில் கொண்டு வரும்பொழுது, வலிமையான குடி தலைமைக் குடியாக மாறியது என்றும், இது காலச் சமூகத்தின் இயல்பு என்றும் சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. இதைப் போன்று பல குடிகள் இணைந்து வாழ்ந்தன என்பது தொல்லியல் சான்றுகளில் தெரிய வருகின்றது. இதையே கே.வி.சௌந்தராசன் அவர்கள் பெருங்கற்காலப் பண்பாடு பற்றிக் குறிப்பிடும் போது பெருங்கற்காலப் பண்பாட்டில் பல இனக்குழுக்களின் பண்பாட்டுக் கூறுகள் இணைந்து காணப்படுகின்றன என்று கூறுகிறார். (9) பல இனக்குழுக்கள் பெருங்காலத்தில் இணைந்து வாழ்ந்ததால் ஈமச்சின்னங்களும் ஒன்றையடுத்து ஒன்று காணப்படுகின்றன. இரும்புக்காலம் எனப்படும் பெருங்கற்காலப் பண்பாட்டை அடித்தளமாகக் கொண்டு வளர்ந்தது சங்ககாலம் என்பதை இனக்குழுச் சமுதாய அமைப்பு உறுதிப்படுத்துகிறது. ஒரு குடியில் பிறந்தவர்கள் குருதி உறவு கொண்டவர்கள் என்பதால் உடன் பிறந்தோர் ஆவர் என்றும், ஒரு குடியில் மணஉறவு கொள்ளாமல், பிறகுடிகளில் மணஉறவு கொண்டதால் பல புதிய குடிகள் உருவாயின. இதைப் போன்று பல குடிகள் இணைந்து வாழ்ந்ததால் இனக்குழு என்ற அமைப்பு மலர்ந்தது. பல குடிகள் ஒன்றாகக் கலந்து வாழ்ந்த ஊர் அல்லது கிராமப் பகுதியில் வாழந்தனர். இதைப் போன்றே ஈமச்சின்னங்களையும், ஒவ்வொரு குடியும் ஒவ்வொரு பகுதியில் அமைந்தது. அதே தருணம் ஏற்றத்தாழ்வு இல்லாத பொதுவுடைமைச் சமுதாயம் உருவானது.


தமிழ்ப் பண்பாடு

தமிழர்களின் நாகரீக வளர்ச்சி கிறித்துவுக்குச் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அடைந்திருக்க வேண்டும் எனக் கொள்ளலாம். நிலப்பகுதிகளை ஐந்து இயற்கைக் கூறுகளாகப் பிரிக்கப்படலாம் என்பதைத் தமிழர்கள் உணர்ந்திருந்தனர். ஒவ்வொரு நிலப்பகுதிக்கும் ‘திணை’ என்று பெயரிட்டனர். திணை என்னும் சொல் ஒரு நிலப்பரம்பு எனும் பொருள் தருவதால் “திண்” அல்லது “திட்” என்ற வேர்ச் சொல்லிலிருந்து பெறப்பட்டதாகத் தோன்றுகிறது. திணை என்ற அச்சொல் பொதுவாக நிலம் என்ற பொருளில் ஆளப்படுகிறது. பண்டைத் தமிழினம் எந்த இயற்கைச் சூழலில் வளர்ச்சி பெற்றதோ, அந்த இயற்கைச் சூழலின் இயல்புகளோடு ஒத்திருந்தன என்பதையும் அறிந்திருந்தனர்.

தமிழில் கிடைக்கப் பெறும் முதல் இலக்கண நூலான தொல்காப்பியத்தில் நிலங்கள் பற்றியும் அது தொடர்பான தெய்வங்கள் பற்றிய செய்தியும் உள்ளதை,

“மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் என
சொல்லிய முறையில் சொல்லவும் படுமே” (10) (தொல்.பொரு.அகத்.95)


என்ற தொல்காப்பிய கூற்றின்படி, பண்டைய தமிழ் மக்களின் ஐந்து நிலத்தின் கடவுள்களைப் பற்றியும், அந்நிலத்தில் பயன்படுத்தப்பட்ட பொருள்கள் பற்றியும், தமிழர்களின் வாழ்க்கைச் சிறப்பையும், வரலாற்றுச் சிறப்பையும் தொல்காப்பிய பொருளதிகாரத்தின் வழி அறிய முடிகிறது. பண்டையத் தமிழ் மக்களின் களவு, கற்பு வாழ்க்கை முறைகளைக் கொண்டு தமிழர் பண்பாடு மிகச் சிறப்பாக இருந்தது எனலாம். வேட்டைச் சமூகம், கால்நடை வளர்ப்பு போன்ற முறைகளில் தமிழ்ச் சமூகம் நன்கு வளர்ச்சி கண்டது. ஆரியர் சமூகக் கலப்பால் யாகத்தின் அடிப்படையில் பண்டைய தமிழ்ச் சமூகம் ஒடுக்கப்பட்டது. பண்டைய காலத்தில் ஆரியர் பண்பாடு கலப்பு இல்லாமல், தமிழர்கள் திருமணம் நடைபெற்றதையும், தமிழர்கள் களவு, கற்பு, ஏறுதழுவுதல், உடன்போக்கு போன்ற திருமண முறைகள் நடைபெற்றதையும் அறிய முடிகிறது. சங்ககாலம் உணவு தேடும் வாழ்க்கை முறை மாறி, உணவு உற்பத்தி செய்யும் நிலையில் மிகுந்த கவனம் செலத்தப்பட்ட காலம். இதனால் உருவான நிலைத்த குடியிருப்புகளை, வாழ்வியல் நெறிகளைச் சங்கத்திணைச் சமுதாய வாழ்வு முறைகள் காட்டுகின்றன. நான்கு வகை திணைச் சமுதாயங்களிலும், நான்கு வகையான உற்பத்தி முறைகளும், உறவு முறைகளும் உருவாகின. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்ற நால்வகைத் திணைகளில் மருதத்தை மையமாகக் கொண்டு உடைமைச் சமுதாயமாக மாறியதையும், அரசின் உருவாக்கத்தில் மருத நிலம் முக்கியத்துவம் பெற்றதையும் சங்கப் பாடல்கள் காட்டுகின்றன.

திணைச் சமுதாயம்

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்ற நான்கு வகைத் திணைச் சமுதாயங்களும், நான்கு வகையான இயற்கைச் சூழல்களை மையமாகக் கொண்டு அமைந்தவை. குறிஞ்சியின் மலை, மலையும் மலை சார்ந்த இடங்கள், மலைவளத்தையும் புன்செய் வேளாண்மையும், வேட்டைத் தொழிலையும் அடிப்படையாகக் கொண்டுள்ளன. தினையும் ஐவன் வெண்ணெல்லும், புல்லரிசியும், மூங்கிலரிசியும், அவரையும், கிழங்கும், தேனும், வேட்டைப் பொருள்களும் இச்சமுதாயத்தின் அடிப்படை உணவுகள் என்பதைப் புறநானூறு கூறுகிறது.

“உழவர் உழாதன நான்குபயன் உடைத்தே
ஒன்றே சிறியிலை வெதிர் னெல்வினை யும்மே
… … … … … … … … … … … … 
திணி நெடுங்குன்றம் தேன் சொரியும்மே” (புறம்.109: 3-8)

என்றும்,

“கருங்கால் வரகே இருங்கதிர்த் தினையே
சிறுகொடிக் கொள்ளே பொறிகள ரவரையொ
பிந்தான் கல்லது உணாவு மில்லை” (புறம்.335: 4-6)

எனும் பாடல் உணவு வகைகளைக் காட்டுகிறது.

“முல்லை நில வாழ்வு கால்நடைப் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டது. பால், மோர், தயிர், திணை, வரகு, கொள், அவரை என்பன. இந்நில உணவுப் பொருள்கள் கால்நடைப் பொருளாதாரத்தை மட்டுமல்லாமல் புன்செய் நில வேளாண்மையையும் அடிப்படையாகக் கொண்டிருந்தன என்பதையும், குறிஞ்சி, முல்லை இந்த இருவேறு வாழ்வு முறைகளிலிருந்து மருதமும், நெய்தலும் வேறுபட்டுப் பொருளாதார மேம்பாடு உடையனவாக இருந்துள்ளன. உணவு உற்பத்திக்கான அடிப்படை ஆதாரமாய் மருதநிலம் விளங்கியுள்ளதை புறநானூறு, பதிற்றுப்பத்து காட்டுகின்றன என்பதை பெ.மாதையன் அவர்கள் கூறியுள்ளார்”. (11)


தமிழர் சடங்கு முறைகள்

பண்டைய காலம் தொட்டு இன்றைய காலம் வரையில் தமிழர் வாழ்வில் சடங்குகளுக்கு மிக முக்கிய இடம் இருந்து வருகிறது. இந்தச் சடங்குகள் வேளாண்மை தொடர்பான சடங்குகள், இயற்கையைக் கட்டுப்படுத்துதல் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் வாழ்வின் முக்கிய நிகழ்வுகளில் பயன்படுத்துதல் என்பதே வளச்சடங்கு.

உணவு சேகரிக்கும் காலம், வேட்டைக் காலம், வேட்டையும் புராதன விவசாயமும் செய்த காலம். கால்நடை வளர்ப்பு ஆகிய காலங்களில் இனக்குழு மக்கள் வாழ்க்கைக்கு மந்திரத்திற்குப் பெரும்பங்கிருந்தது. அவ்வினக்குழு மக்களின் பொருளாதார வாழ்க்கையை ஊக்குவிப்பதற்கு மந்திரமே பயன்பட்டது.

மந்திரச் சடங்கு

இயற்கையின் சீற்றங்களுக்கு இரையான மனிதன் இயற்கையைக் கண்டு அஞ்சினான். இடி, மின்னல், காட்டுத்தீ, மழை, சூறாவளி, வெள்ளம், நோய் போன்ற நிகழ்வுகள் இயல்பானவை என்று அறியாததால் இயற்கையைத் தன் கட்டுப்பாட்டிற்குக் கீழ் கொண்டுவர எண்ணினான். ஏனெனில் காவிரியின் வெள்ளப் பெருக்கு சங்கப்பாடலில் சிறப்புறக் கூறப்பட்டுள்ளது.

“மன்னர் நடுங்கத் தோன்றி, பல்மாண்
எல்லை தருநன் பல்கதிர் பரப்பி,
… … … … … … … … … … 
… … … … … … … … … … 
புனல்ஆடு மகளரி கதுமெனக் குடைய” (பொரு.நூ.231-240)

மேற்கண்ட பாடலில் காவிரி ஆற்றின் வெள்ளப் பெருக்கினை பொருநராற்றுப்படையில் கூறியுள்ளதைக் காணமுடிகிறது. மேலும்,

“வசையில் புகழ் வயங்கு வெண்மீன்
திசை திரிந்து தெற்கினும்
… … … … … … … … … … 
… … … … … … … … … … 
மலைத்தலைய கடற்காவிரி
புனல் பரந்து பொன் கொழிக்கும்” (பட்டின.1-7)

எனப் பாட்டினப்பாலையும் காவிரி பற்றி எடுத்துரைக்கிறது.

சங்க காலத்தில் திருமணம் செய்வதற்கானக் காரணத்தைக் கூறும் போது தொல்காப்பியம்,

“பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப” (12) (தொல்.பொரு.கற்.1091)

என்கிறது. 

சங்க காலத்தில் தமிழர்களிடையே திருமணச் சடங்குகள் இருந்துள்ளன என்பதைச் சங்கப் பாடல்களின் மூலம் அறிய முடிகிறது. தமிழர்களின் அகநெறியாகக் கூறப்படுவன களவும் கற்புமாகும். அதாவது களவு வாழ்க்கையில் ஈடுபட்ட ஆணும், பெண்ணும் கற்பு வாழ்வுக்குச் செல்ல வேண்டும் என்பது நெறியாக வகுக்கப்பட்டது. இந்நெறியில் இருந்து பிறழ்வோர் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை அகநானூறு,

“திருநுதற் குறுமக ளனிநிலம் வவ்விய
அறளி லாளன் அறியே னென்ற
… … … … … … … … … … 
நீறுதலைப் பெய்த ஞான்றே” (13) (அகம்.256:16-20)

என்ற பாடல் காட்டுகிறது.

முடிவுரை

“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற பொருண்மையில் பண்டையத் தமிழர்களின் பண்பாடானது ஒற்றுமையுடன் ஓங்கி வளர்ந்தது என்றும், இன்றையக் காலகட்டத்தில் அனைத்து உலகத்தாராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாக விளங்குகிறது. ஆரியர்களின் வருகைக்குப் பின் தமிழ்ப் பண்பாடு பெரும் மாற்றத்தைத் தழுவியது. சடங்குகளும், சம்பிரதாய முறைகளும் தமிழர்களிடம் தோன்றியது. தமிழர்களின் களவு, கற்பு வாழ்க்கை, தெய்வ நம்பிக்கை, வேட்டைத் தொழில், மந்திரச் சடங்குகள், திருமண முறைகள் மற்றும் வேளாண்மைத் தொழில்கள் போன்றவற்றின் மூலம் தமிழர்கள் சீரும் சிறப்போடும் வாழ்ந்து வந்துள்ளனர் என்பது தெளிவாகிறது.

பயன்பட்ட நூல்கள்

1. தமிழண்ணல், தொல்காப்பியம் -பக்-5

2. மேலது, பக்-6

3. பாலசுப்பிரமணியன்கு.வெ. (உரை), புறநானூறு (மூலமும் உரையும்), பக்-16

4. நாகராசன்.வி, (உரை), பத்துப்பாட்டு (மூலமும் உரையும்), பக்-3

5. வண.பிதா, தனிநாயகம் அடிகள், தமிழர் பண்பாடும் அதன் சிறப்பியல்புகளும், பக்-23

6. மேலது, பக்-24

7. பாலசுப்பிரமணியன்கு.வெ. (உரை), புறநானூறு (மூலமும் உரையும்), பக்-464

8. புலியூர்க்கேசிகன், திருக்குறள் (புதிய உரை), பக்-87

9. சௌந்திரராஜன்,கே.வி, இந்தியப் பண்பாடு, பக்-150-155

10. தமிழண்ணல், தொல்காப்பியம், பக்-292

11. மாதையன், பெ, சங்க இலக்கியத்தில் வேளாண் சமுதாயம், பக்-12

12. தமிழண்ணல், தொல்காப்பியம், பக்-363

13. செயபால். இரா, அகநானூறு (மூலமும் உரையும்), பக்-76

(குறிப்பு: துணை நின்ற நூல்களில் நூலின் பெயர், ஆசிரியர் மட்டுமின்றி, கூடுதலாக நூலை வெளியிட்ட பதிப்பகம், ஊர், பதிப்பாண்டு போன்றவைகளையும் குறிப்பிட்டால் இன்னும் சிறப்பாக அமையும் - ஆசிரியர்)

*****

logo.jpg
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/literature/p217.html


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard