விரிவுரையாளர், கேரளப் பல்கலைக்கழகம், திருவனந்தபுரம்.
முன்னுரை
சங்கப் பாடல்கள் முன் வைத்துள்ள சமூக வாழ்வில் பாணர்கள் மிக முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளனர். இசைக் கலைஞர்களான இவர்கள் பல உரிமைகளைப் பெற்று வாழ்ந்தனர். அரசர்களின் இல் வாழ்வில் தலையிட்டு அதை நெறிப்படுத்தும் துணிவும் அவர்களுக்கு இருந்தது. சங்கப் பாடல்கள் பரத்தமையோடும் அவர்களைத் தொடர்புப் படுத்துகின்றன. பாணர்களின் உயர்வையும் தாழ்வையும் சங்கப் பாடல்கள் துலக்குகின்றன. பாணர்கள் கையாண்ட பண்களைக் குறித்தும் விரிவாகவே அறிந்து கொள்ள முடிகின்றது. ஆனால் அவர்கள் பாடிய பாடல்களில் வரி வடிவம் மட்டும் சமகாலத்தை வந்தடையவில்லை. பாணர்களின் உயர்வுக்கு அவர்களின் களித்திறன் மட்டுமின்றி சமய பின்புலமும் காரணம் என்பதை உணர முடிகின்றது. ஆனால் பாடல்களில் வரி வடிவம் இல்லாத நிலையில் பாணர்களின் சமயம் இன்றும் ஆய்வுப் பொருளாக மட்டுமே மிஞ்சுகிறது.
பாணர்களும் சமயமும்
மு. அருணாச்சலம் பாணர்கள் சமணத்திற்கு எதிரிடையானவர்கள் என்னும் தோற்றத்தினை எழுப்பியுள்ளனர். களப்பிரர்கள் சமண சமயத்தவர். ஆதலால் பாணர்களின் அழிவிற்கு காரணமாக அமைந்தனர் என்கின்றார்கள். “அல்லாமலும் இவர்கள் தழுவியிருந்த திகம்பர சைனசமயம் காரணமாக இவர்கள் இரண்டு கொள்கைகளைக் கடைப்பிடித்திருந்தார்கள். ஒன்று மனிதன் ஆன்மநெறியில் முன்னேறுவதற்குப் பெண்கள் இடையூறு என்பது. இரண்டு இசையால் மனிதன் கெடுவான் என்பது. இந்த போதனைகளால் இவர்கள் இசையை ஒடுக்குவதை தங்கள் அச்சிக்கடமையாக கருதினார்கள்.” (1) (மு.அருணாச்சலம் தமிழ் இசை இலக்கிய வரலாறு (2009) பக்-24) அருணாசலம் சமணர்களான களப்பிரர் காலத்தில் நலிவுற்றிருந்த பாணர்கள் சைவ நாயன்மார்கள் காலகட்டத்தில் மீண்டும் உயர்நிலையை அடைந்தார்கள் என்கிறார்கள்.”களப்பிரர் காலத்தில் தொழிலையே மறந்திருந்த பாணர் குலத்தார் சம்பந்தர் காலத்தில் பின்னும் மீண்டும் தலையெடுத்தர்கள் “ (மு .அருணாசலம் தமிழ் இசை இலக்கிய வரலாறு (2009) பக். 25) மு. அருணாசலம் தன் கருத்துக்கு ஆதாரமாக திரு. நீலகண்ட பெரும் பெரும்பாணாரைச் சுட்டுகின்றார். அடுத்த கட்டமாக இரண்டு இசைப்பாணர் வரலாறுகள் நன்கு தெரிகின்றன. அவர்கள் திருஞான சம்பந்தருடைய பாடலுக்கு யாழ் வாசித்த திருநீலகண்ட பெரும்பாணரும், ஆழ்வாருள் ஒருவராகிய திருப்பாணாழ்வாரும் ஆவர். இவர்கள் காலம் கி. பி. ஏழாம் நூற்றாண்டு. (மு .அருணாசலம் தமிழ் இசை இலக்கிய வரலாறு (2009) பக்.565). பக்தி இலக்கிய இசை தமிழ் இசை மறுமலர்ச்சி அடைந்ததது என்பது மு. அருணாச்சலத்தோடு உள்ள கருத்துக்கு உடன்பாடு கொள்ள முடியும். ஆனால், பாணர்கள் சைவ சமயத்தை சார்ந்திருந்தனர் என்னும் கருத்தோடு உடன்பாடு கொள்ள இயலாதாகிறது. தமிழிசை குறித்த குறிப்புகளைச் சமய பெரும்புலவர்களால் பாடப்பட்ட சிலப்பதிகாரத்திலிருந்தும் சீவகசிந்தாமணியிலிருந்துமே பெற முடிகின்றது. சமணர்கள் இசையை வெறுத்தார்கள் எனும் கருத்தை இது நொறுக்கி விடுகின்றது. சமணர்கள் பாணர்கள் தொடர்பு கொண்டிருந்த பரத்தமையை வெறுத்திருக்கக்கூடும். அதே சமயம் இசையை வெறுத்தார்கள் என்றாகிவிடாது. சங்கப்பாடல்கள் வேத சமயம் மட்டுமின்றி சமணம், புத்தம், ஆசிவகம் எனும் மூன்று சமயங்களும் செழித்திருந்ததை உணர்த்துகின்றன. பாணர்களை இச்சமயங்கள் ஏதாவது ஒன்றின் அடக்கிவிடும்படியான சான்றுகளைச் சங்கப்பாடல்களிளிருந்து பெற இயலவில்லை. சங்கப்பாடல்கள் இருந்த காலப்பகுதியில் எழுந்தவை. எனவே சமூக மாற்றங்கள் இயல்பாக நிகழ்ந்திருக்க வேண்டும். கலித்தொகையில் சுட்டப்படும் ஏறு தழுவுதல் பிறத்தொகைப் பாடல்களில் இடம் பெறவே இல்லை. கலித்தொகைப் பாடல்கள் பெரும்பாலும் பாணர்களை இழிவுபடுத்துகின்றன. பரிபாடலில் கணிகை எனும் சொல் இடம் பெற்றுவிட்டது. கணிகையர் முறையாக மணம் செய்து வாழும் தகுதியற்றவர். சங்கப்பாடல்கள் பெரும்பாலும் யாழ் பாணர்களால் மட்டுமே இசைக்கப்படுகின்றது. முதற் காப்பியங்களில் யாழ் வணிகர்களின் கையில் தழுவுகிறது. சமூகத்தில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்து விட்டதை இது உணர்த்துகின்றன. எனவே சங்கப் பாடல்களிலிருந்து மட்டுமே பெறமுடிகின்ற சான்றுகளை முன் வைத்தே பாணர்களின் சமயத்தைத் துலக்கியாக வேண்டும்.
யாழுறை தெய்வம்
பாணர்களின் கையிலிருந்த யாழில் தெய்வம் உறைந்திருந்தது எனும் நம்பிக்கையைச் சங்கப்பாடல்கள் உணர்த்துகின்றன. பிற்கால நூற்கள் யாழுறைத் தெய்வத்தின் பெயரைச் சுட்டியுள்ளன. ஆனால் சங்கப் பாடல்களில் யாழுறை தெய்வம் இருந்தது என்பதை மட்டுமே உய்த்துணர முடிகின்றது. அகம் 115 வது பாடல் களத்தில் எவ்வீ வீழ்ந்தபோது பாணர்களின் எதிர் வினையைப் பதிவு செய்துள்ளது.
பாணர்கள் முன்பு கைதொழுத யாழின் வளைந்த கோட்டினை முறித்து எறிந்தனர். யாழுறை தெய்வம் தங்கள் புலவரான எவ்வியைக் களத்தில் காப்பாற்றாது போனபோது பாணர்கள் அத்தெய்வத்தையே துறந்ததின் குறியீடு இது. கிணையில் தெய்வம் உறைவதான மரபு உள்ளது. இதனால்தான், விடியலின் போது அரசனைத் துயில் எழுப்பும் கடமை கிணைவருக்கும் யாழ்ப்பாணருக்கும் இருந்துள்ளது. பாணர்களில் கிணைப்பாணனே காலத்தால் முந்தியவன். கிணைவன் அரசனைத் துயில் எழுப்பும் காட்சி புறம் 397ல் சித்தரிக்கப்பட்டுள்ளது. பாணன் இக்கடமையை நிறைவேற்றுவது புறம் 398 ல் சித்தரிக்கப்பட்டுள்ளது. பிற்காலத்தில் இவ்வாறு துயில் எழுப்புவது பெரும் தெய்வக் கோயில்களில் நெறியாக அமைந்தது. ஒரு வகையில் இது சடங்கு. விடியலின் போது பாணனின் வாழ்த்தினைப் பெறுவது நல்ல நாளாக அமையும். இந்த நம்பிக்கையில் தோன்றிய சடங்கு. கிணையிலும் யாழிலும் உறையும் தெய்வம் இதற்குக் காரணமாகின்றது. கிணையும் யாழும் எழுப்பும் இசையில் இத்தெய்வம் உறைந்திருக்கும்.
பாணின் இல்புகும் வாயில் என்னும் கடமையில் யாழுறை தெய்வம் என்னும் கருத்து ஊடாடிச் செல்கின்றது. கிணைவன், யாழ்ப்பாணன் தங்கள் இசைக்கருவிகள் உறையும் தெய்வத்தை வணங்கி விட்டு இசைக்கத் துவங்குகின்றான்.
“இடனுடைப் பேர்யாழ் முறையுழிகழிப்பி, கடன் அறி மரபின் கைதொழூஉப் பழிச்சி நின் நிலை தெரியா அளவை அந்நிலை” (பெரு 462 - 464)
யாழினை முறையாக இசைக்கத் துவங்கும் முன் முன்னோர்கள் வழிபட்ட முறையில் வழிபடுகின்றனர். எனவே யாழுறை தெய்வத்தைக் குறிப்பிட்ட முறையில் வணங்கியாக வேண்டும். இம்முறை வழிவழியாகத் தொடர்ந்து வருவது கிணைவனுக்கும் இது பொருந்தும். இது பாணர்களின் இயக்கத்தின் ஒரு பரிமாணமாக அமைகின்றது. இசை ஒரு பரிமாணமாக அமையும் போது இத்தெய்வ நம்பிக்கை மற்றொரு பரிமாணமாக அமைகின்றது. கலையும் சமயமும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப்போல் இல்புகும் வாயில் உட்படப் பாணர்களின் எல்லாக் கடமைகளுக்கும் இதுவே அடிப்படையாகின்றது.
“மாலையும் உள்ளார் ஆயின் காலை யாங்கு ஆகுவம் கொல்? பாண ! என்ற மனையோள் சொல் எதிர் சொல்லல் சொல்லேன் செவ்வழி நல்யாழ் இசையினேன் பையென கடவுள் வாழ்த்தி பையுள் மெய்ந் நிறுத்து அவர் திறம் செல்வேன் கண்டனென் யானே” (அகம் 14)
இப்பாடலில் தலைவனைப் பிரிந்திருக்கும் தலைவியை ஆற்றுப்படுத்தும் கடமையைப் பாணன் நிறைவேற்றுகிறான். தலைவியின் நிலையை உணர்ந்து எதிர் சொல் சொல்லாது நிற்கின்றான். தலைவியின் துயரை முழுமையாக உணர்ந்ததினால் தோன்றும் நிலை இது. செவ்வழி பண்ணை இசைத்து யாழுறை தெய்வத்தைத் தொழுகின்றான். செவ்வழி பண் அவளை ஆறுதல் படுத்தக்கூடும். கூடவே யாழுறை தெய்வம் அவள் துயரைப் போக்கும் எனும் நம்பிக்கை பாணனுக்கு இருந்தது.
பாண் கடன்
சங்கப்படல்களில் பயின்று வரும் சொல் இது. பாணர்களைப் பாதுகாக்கும் கடன் அரசனுக்குள்ளது.
“ஆண்கடன் உடைமையின் பாண்கடன் ஆற்றிய ஒலியற் கண்ணிப் புலிகடிமா அல்” (புறம் 201)
புறம் 201வது பாடல் பாண் கடன் அரசனின் கடமைகளில் ஒன்றாகவேச் சித்தரிக்கின்றது. கொடுப்பது என்பது கொடுப்பவனின் வள்ளல் தன்மையைச் சார்ந்தது. கடன் என்பது கட்டாயம் செய்தாக வேண்டியதைக் குறிப்பது. புறம் 203வது பாடலும் இதை வலியுறுத்துகின்றது. இது போன்ற கடன் பாணனுக்கும் உள்ளது. போரில் வீழ்ந்த அரசனுக்குப் பாணன் இறுதிக்கடன் ஆற்றியாக வேண்டும். பாண் பாட்டு என்னும் இச்சாக்கடனைப் புறம் 291, 285வது பாடல்கள் உணர்த்துகின்றன. பாணர்களுக்கும் அரசர்களுக்கும் இடையேயான உறவை மேலும் சிந்தித்தாக வேண்டும். இருவரும் புலால் உணவின் மீது விருப்பம் கொண்டவர். இணைந்திருந்து உண்பதைப் பல பாடல்கள் சித்தரிக்கின்றன. பார்ப்பனன் இச்சிறப்பைப் பெறுவதில்லை.
இனக்குழு சமூகத்தின் துவக்கக்தில் பூசாரியும் தலைவனும் ஒருவனே. அரசால் தலைமை பிரிந்த போது இவர்கள் வெவ்வேறு கடமையை ஆற்றினர். இனக்குழு மக்களின் சமய நம்பிக்கையைப் பூசாரி கவனித்துக் கொண்ட போது, சமூக பாதுகாப்பைத் தலைவன் நிறைவேற்றுகிறான். தலைவனே பின் அரசனான். பூசாரியின் பரிமாண வளர்ச்சி பாணனாக வடிவெடுத்துள்ளது. பூசாரியும் தலைவனும் இணைந்தே செயல்பட்டிருக்க வேண்டும்.
முடிவுரை
பாணனுக்குத் தெய்வ நம்பிக்கை இருந்ததைச் சங்கப்பாடல்கள் உணர்த்துகின்றன. பாணனின் தெய்வம் அவன் இசைக்கும் கருவியில் உறைகின்றது. அவன் இசைப்பது அவன் சமயச் செயல்பாட்டின் வெளிப்பாடாகும் என்பதை இக்கட்டுரை மூலம் அறிய முடிகின்றது
ஆய்வுக்குப் பயன்பட்ட நூற்கள்
1. அருணாச்சலம் . மு, தமிழ் இசை இலக்கிய வரலாறு, கடவு பதிப்பகம், மதுரை.