நீதிக்கட்சி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பாடுபட்டதா? -‘அண்ணல்’ அம்பேத்கர்
அண்மைக் காலமாக தமிழ்த்தேசிய இயக்கங்கள் நீதிக்கட்சியை ஆந்திரத் தெலுங்கர்களுக்கான கட்சியாக திறனாய்வு செய்து ஆய்வுகளை வெளியிட்டு வருகின்றன. அதே போல் அண்ணல் அம்பேத்கரும் நீதிக்கட்சி குறித்து மாறுபாடான கருத்துகளையே தன் வாழ்நாளில் வெளியிட்டு வந்துள்ளார். பார்ப்பனரல்லாதார் கட்சியாகிய நீதிக்கட்சி உருவானது ஒரு வரலாற்றுச் சிறப்பு என்று அம்பேத்கர் கருதினாலும், அக்கட்சியின் கொள்கைகள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பலனளிக்க வில்லை என்பதை வெளிப்படையாகவே குற்றம் சாட்டிப் பேசியுள்ளார்.
23.9.1944இல் கன்னிமரா உணவு விடுதியில் ‘சண்டே அப்சர்வர்’ பி.பாலசுப்பிரமணியன் கொடுத்த ஒரு வரவேற்பு விருந்தில் பேசிய போது நீதிக்கட்சியின் போக்கு, அதன்பிற்போக்குத் தன்மை ஆகியவற்றைச் சுட்டிக் காட்டினார். அவர் பேசியது பின்வருமாறு:
“பார்ப்பனரல்லாதார் நடத்துகிறார் என்பதால் மட்டுமே அது சிறந்தது என்று ஆகிவிடாது; ஒரு கட்சியை யார் நடத்துகிறார் என்பது முக்கியமல்ல, என்னென்ன கொள்கை- இலட்சியங்களை வைத்துக் கட்சி இயங்குகிறது என்பது தான் முக்கியம்.
1937இல் நடந்த தேர்தலில் அக்கட்சி ஏன் தோற்றது என்பதற்கான காரணங்களை அக்கட்சியின் தலைவர்கள் சிந்திக்க வேண்டும். 1937க்கு முன் சுமார் 20 ஆண்டுகள் தமிழகத்தில் அக்கட்சி செல்வாக்குடன் இருந்தது. நீண்டகாலம் ஆட்சியிலும் இருந்தது. பிறகு ஏன் அந்தக் கட்சி வீழ்ந்தது? பார்ப்பனக் கொள்கைகளிலிருந்து தாங்கள் எப்படி வேறுபடுகிறோம் என்று அக்கட்சியின் தலைவர்களுக்கே சரிவரத் தெரியவில்லை.
பார்ப்பனர்களைத் தாக்கினார்களே யொழியப் பார்ப்பனக் கொள்கைகளை அவர்கள் விடவில்லை. நாமம், பூணூல் இவற்றைப் போட்டுக் கொண்டு பார்ப்பனர்களின் எதிரொலியாகத் திகழும் இவர்கள் எப்படிப் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை வீழ்த்த முடியும்? யாருடைய அதர்மக் கொள்கைகளை அழிக்க வேண்டுமென்கிறார்களோ, அதே அதர்மத்தில் இவர்களும் திழைத்துக் கிடந்தால், அது என்ன நியாயம்?
பார்ப்பனரல்லாதாருக்கு வேலை தேடுவதுதான் இக்கட்சியின் நோக்கம் என்று சிலர் கூறுகிறார்கள். பார்ப்பனர்களே ஆதிக்கம் செலுத்தும் உத்தியோக மண்டலத்தை உடைக்க வேண்டுமென முயற்சிப்பது தவறல்ல, ஆனால், அது மட்டுமே ஒரு கட்சியின் கொள்கையாக இருக்க முடியாது. சமூகத்தில் நிலவும் பல்வேறு ஏற்றத் தாழ்வுகளைக் களைய நீதிக்கட்சி முயற்சிக்க வில்லை. நீண்டகாலம் ஆட்சியதிகாரத்தில் இருந்த நீதிக்கட்சி சமூகத்தில் நிலவும் தீண்டாமைக் கொடுமை, வறுமை, வேலையின்மை, மூடநம்பிக்கை, ஏழை எளிய விவசாயிகள், பாட்டாளி மக்கள் வாழ்க்கை ஆகியவை பற்றி கவலைப்பட்டதாக தெரியவில்லை.
மக்கள் நலம் பற்றிக் கவலைப்படாமல் ஒரு சாராரின் சுயநலத்திற்காக மட்டுமே இயங்கும் எந்தக் கட்சியும் அதிக நாள் நிலைத்து நிற்க முடியாது. தாழ்த்தப்பட்ட மக்கள் நலன் பற்றியும் அவர்களின் முன்னேற்றம் பற்றியும் அது கவலைப்படாத காரணத்தால் காங்கிரசு கட்சி மிக எளிதில் அதை வீழ்த்தி விட்டது”
நன்றி: தங்கராசு எழுதிய “அண்ணல் அம்பேத்கரின் அரும்பணி- ஓர் ஆய்வு” நூலிலிருந்து.